அத்தியாயம் – 17
புரூரவஸ் புத்திரர்களின் வம்சங்கள்
பதங்கள் 9.17.1 – 9.17.3 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: புரூரவஸ்ஸிலிருந்து ஆயு என்ற ஒரு மகன் வந்தார். அவருடைய சக்திவாய்ந்த மகன்கள்: நஹுஷன், க்ஷத்ரவிருத்தன், ரஜீ, ராபன் மற்றும் அனேனர் ஆகியோராவர். பரீட்சித்து மகாராஜனே, இப்பொழுது க்ஷத்ரவிருத்தனின் வம்சத்தைப் பற்றிக் கேளும். க்ஷத்ரவிருத்தனின் மகன் சுஹோத்ரன். அவருக்கு காஸ்யர், குசன், கிருத்ஸமதன் என்று மூன்று மகன்கள் இருந்தனர். கிருத்ஸமதனிலிருந்து சுனகர் வந்தார். அவரிலிருந்து சௌனகர் வந்தார். இவர் மாமுனிவரும், ரிக்வேதப் புலமையுள்ளவர்களில் மிகச் சிறந்தவருமாவார்.

பதம் 9.17.4 : காஸ்யரின் மகன் காசி. அவரது மகன் தீர்கதமரின் தந்தையான ராஷ்டிரர் தீர்கதமருக்கு தன்வந்தரி என்ற ஒரு மகன் இருந்தார். அவர் யாகப் பலன்களை அனுபவிப்பவரான பகவான் வாசுதேரின் ஓர் அவதாரமும், மருத்துவ விஞ்ஞானத்தை ஆரம்பித்து வைத்தவருமாவார். தந்வந்தரியின் பெயரை நினைப்பவர் எல்லா வகையான நோய்களிலிருந்தும் விடுபடுவார்.

பதம் 9.17.5 : தன்வந்தரியின் மகன் கேதுமான். அவரது மகன் பீமரதன். பீமரதனின் மகன் திவோதாஸர். மேலும் திவோதாஸரின் மகன் பிரதர்தனன் என்றும் அறியப்படும் தியுமான்.

பதம் 9.17.6 : தியுமான் என்பவர், சத்ருஜித், வத்ஸன், ருதத்வஜர் மற்றும் குவலயாஸ்வர் என்றும் அறியப்பட்டார். அவரிலிருந்து அலர்கனும் மற்ற மகன்களும் பிறந்தனர்.

பதம் 9.17.7 : பரீட்சித்து மகாராஜனே, தியுமானின் மகனான அலர்கன் அறுபதாயிரம் ஆண்டுகள் பூமியை ஆண்டு வந்தார். ஒரு வாலிபனாக வேறெவரும் பூமியை இவ்வளவு நீண்ட காலம் ஆண்டதில்லை.

பதம் 9.17.8 : அலர்கனிலிருந்து சந்ததி என்றொரு மகன் வந்தார். அவரது மகன் சுனீதர். சுனீதரின் மகன் நிகேதனர். நிகேதனரின் மகன் தர்மகேது மேலும் தர்மகேதுவின் மகன் சத்யகேது.

பதம் 9.17.9 : பரீட்சித்து மகாராஜனே, சத்யகேதுவிலிருந்து திருஷ்டகேது என்ற ஒரு மகன் வந்தார். மேலும் திருஷ்டகேதுவிலிருந்து உலகச் சக்கரவர்த்தியான சுகுமாரர் வந்தார். சுகுமாரரிலிருந்து வீதிஹோத்ரர் என்ற ஒரு மகன் வந்தார்; வீதிஹோத்ரரிலிருந்து பர்கரும்; மற்றும் பர்கரிலிருந்து பார்கபூமியும் வந்தனர்.

பதம் 9.17.10 : பரீட்சித்து மகாராஜனே, இந்த அரசர்கள் அனைவரும் காசி வம்சத்தவர்களாவர். இவர்களை க்ஷத்ரவிருத்தரின் வம்சத்தவர்கள் என்றும் அழைக்கலாம். ராபரின் மகன் ரபஸர். ரபஸரிலிருந்து கம்பீரர் வந்தார் மற்றும் கம்பீரரிலிருந்து அக்ரியர் என்ற ஒரு மகன் வந்தார்.

பதம் 9.17.11 : அரசே, அக்ரியரின் மகன் பிரம்மவித் எனப்பட்டார். இப்பொழுது அனேனரின் வம்சத்தினரைப் பற்றி கேளும். அனேனரிலிருந்து சுத்தன் என்ற ஒரு மகன் வந்தார். அவரது மகன் சுசி. சுசியின் மகன் சித்ரக்ருத் என்றும் அழைக்கப்படும் தர்மசாரதி.

பதம் 9.17.12 : சித்ரகிருத்திலிருந்து சாந்தரஜர் என்ற ஒரு மகன் பிறந்தார். தன்னுணர்வு பெற்ற ஓராத்மாவான இவர், எல்லா வகையான வேதக் கிரியைகளையும் நிறைவேற்றினார். எனவே இவருக்குச் சந்ததி இல்லை. ரஜீயின் மகன்கள் ஐநூறு பேர்கள். இவர்களனைவரும் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாவர்.

பதம் 9.17.13 : தேவர்களுடைய வேண்டுகோளின்படி, ரஜீ அசுரர்களைக் கொன்று சுவர்க்க இராஜ்யத்தை தேவேந்திரனிடம் திருப்பித் தந்தார். ஆனால் பிரகலாதரைப் போன்ற அசுரர்களுக்கஞ்சிய இந்திரன், சுவர்க்கலோக இராஜ்யத்தை ரஜீயிடமே திருப்பிக் கொடுத்து, ரஜீயின் தாமரைப் பாதங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

பதம் 9.17.14 : ரஜீயின் மரணத்திற்குப்பின், சுவர்க்க லோகத்தைத் திருப்பித்தரும்படி இந்திரன் ரஜீயின் மகன்களிடம் யாசித்தார். ஆனால் யக்ஞங்களின் போது இந்திரனின் பாகத்தைக் கொடுக்க அவர்கள் சம்மதித்திருந்த போதிலும் அதை அவர்கள் கொடுக்கவில்லை.

பதம் 9.17.15 : அதன்பிறகு, தேவர்களின் குருவான பிருஹஸ்பதி, ரஜீயின் புத்திரர்கள் அறநெறியிலிருந்து வழுவ வேண்டும் என்பதற்காக அக்னியில் நிவேதம் செய்தார். இவ்வாறு அவர்கள் இழிவடைந்த காரணத்தால், தேவேந்திரன் அவர்களை சுலபமாகக் கொன்று விட்டார். அவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.

பதம் 9.17.16 : க்ஷத்ரவிருத்தரின் பேரனான குசனிலிருந்து பிரதி என்ற ஒரு மகன் பிறந்தார். பிரதியின் மகன் சஞ்சயன். மேலும் சஞ்சயனின் மகன் ஜயன். ஜயனிலிருந்து கிருதன் பிறந்தார். மேலும் கிருதரிலிருந்து மன்னர் ஹர்யபலர் பிறந்தார்.

பதம் 9.17.17 : ஹர்யபலனிலிருந்து சஹதேவர் என்ற ஒரு மகன் வந்தார். சஹதேவரிலிருந்து ஹீனர் வந்தார். ஹீனரின் மகன் ஜயசேனர். ஜயசேனரின் மகன் சங்க்ருதி. சங்க்ருதியின் மகனான ஜயன், சக்திமிக்கவரும், திறமையான போர் வீரருமாவார். இந்த அரசர்கள் க்ஷத்ரவிருத்தரின் வம்சத்தவர்களாவர். இப்பொழுது நஹுஷரின் வம்சத்தைப் பற்றி உமக்கு நான் விவரிக்கப் போகிறேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare