அத்தியாயம் – 16
க்ஷத்திரிய வம்சத்தை பரசுராமர் அழித்தல்
பதம் 9.16.1
ஸ்ரீ-சுக உவாச
பித்ரோபசிக்ஷிதோ ராமஸ் ததேதி குரு-நந்தந
ஸம்வத்ஸரம் தீர்த்த-யாத்ராம் சரித்வாஸ்ரமம் ஆவ்ரஜத்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பித்ரா—அவரது தந்தையால்; உபசிக்ஷித:—இவ்வாறு அறிவுரை கூறப்பட்ட; ராம:—பகவான் பரசுராமர்; ததா இதி—அப்படியே ஆகட்டும்; குரு-நந்தன—குரு வம்சத்தின் புத்திரரான பரீட்சித்து மகாராஜனே; ஸம்வத்ஸரம்—ஓராண்டு காலம்; தீர்த்த-யாத்ராம்—தீர்த்த யாத்திரையை; சரித்வா—நிறைவேற்றிய பின்; ஆஸ்ரமம்—அவரது சொந்த வசிப்பிடத்திற்கு; ஆவ்ரஜத்—திரும்பினார்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: குரு வம்சத்தின் புத்திரரான பரீட்சித்து மகாராஜனே, தந்தை இட்ட கட்டளையை “இப்படியே ஆகட்டும்” என்று உடனே ஏற்றுக்கொண்ட பகவான் பரசுராமர் ஒரு வருஷம் தீர்த்தயாத்திரை செய்து முடித்து தந்தையின் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

பதம் 9.16.2
கதாசித் ரேணுகா யாதா கங்காயாம் பத்ம-மாலினம்
கந்தர்வ-ராஜம் க்ரீடந்தம் அப்ஸரோபிர் அபஸ்யத

கதாசித்—ஒரு சமயம்; ரேணுகா—ஜமதக்னியின் மனைவி; பகவான் பரசுராமரின் தாய்; யாதா—சென்றாள்; கங்காயாம்—கங்கை நதிக்கரைக்கு; பத்ம-மாலினம்—ஒரு தாமரைப்பூ மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த; கந்தர்வ-ராஜம்—கந்தர்வ ராஜன்; க்ரிடந்தம்—விளையாடிக் கொண்டிருப்பதை; அப்ஸரோபி:—சுவர்க்க லோகப் பெண்களுடன் (அப்ஸரஸ்களுடன்); அபஸ்யத—அவள் கண்டாள்.

ஒரு சமயம் ஜமதக்னியின் மனைவியான ரேணுகா நீர் கொண்டு வருவதற்காக கங்கை நதிக்கரைக்குச் சென்றாள். அங்கு தாமரை மாலை அணிந்திருந்த கந்தர்வராஜன் சுவர்க்கலோகப் பெண்களுடன் (அப்ஸரஸ்த்ரீகளுடன்) கங்கையில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

பதம் 9.16.3
விலோகயந்தீ க்ரீடந்தம் உதகார்தம் நதீம் கதா
ஹோம-வேலாம் ந ஸஸ்மார கிஞ்சித் சித்ரரத-ஸ்ப்ருஹா

விலோகயந்தீ—பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது; க்ரீடந்தம்—அத்தகைய செயல்களில் ஈடுபட்டிந்த கந்தர்வ ராஜனை; உதக-அர்தம்—நீர் கொண்டுவர; நதீம்—நதிக்கு; கதா—சென்ற போது; ஹோம-வேலாம்—யாகம் (ஹோமம்) செய்வதிற்குரிய வேளை; ந ஸஸ்மார—நினைவிற் கொள்ளவில்லை; கிஞ்சித்—சிறிதளவு; சித்ரரத—சித்திரரதன் என்ற கந்தர்வ ராஜனின்; ஸ்ப்ருஹா—உறவை விரும்பினாள்.

கங்கையிலிருந்து நீர் கொண்டுவருவதற்காகச் சென்றவள், கந்தர்வ ராஜனான சித்திரரதன் சுவர்க்கலோகப் பெண்களுடன் விளையாடுவதைக் கண்டு, அவனிடம் சபலங்கொண்டவளாய், யாகத்திற்குரிய நேரம் கடப்பதையும் மறந்துவிட்டாள்.

பதம் 9.16.4
காலாத்யயம் தம் விலோக்ய முனே: சாப-விசங்கிதா
ஆகத்ய கலசம் தஸ்தௌ புரோதாய க்ருதாஞ்சலி:

கால-அத்யயம்—காலம் கடந்துவிட்டதை; தம்—அந்த; விலோக்ய—கண்டு; முனே:—மாமுனிவரான ஜமதக்னியின்; சாப-விசங்கிதா—சாபத்திற்கு அஞ்சி; ஆகத்ய—திரும்பிவந்து; கலசம்—கலசத்தை; தஸ்தௌ—நின்றாள்; புரோதாய—முனிவர்முன் வைத்து; க்ருத-அஞ்சலி:—கூப்பிய கரங்களுடன்.

பிறகு யாக காலம் கடந்துவிட்டதை உணர்ந்து, கணவர் சபித்துவிடுவாரோ என்றஞ்சிய ரேணுகா, திரும்பி வந்ததும் கலசத்தை அவர் முன் வைத்து கரம்கூப்பி நின்றாள்.

பதம் 9.16.5
வ்யபிசாரம் முனிர் ஞாத்வா பத்ன்யா: ப்ரகுபிதோ ‘ப்ரவீத்
க்னதைனாம் புத்ரகா: பாபாம் இதி உக்தாஸ் தே ந சக்ரிரே

வ்யபிசாரன்—விபச்சாரத்தை; முனி:—ஜமதக்னி; ஞாத்வா—உணர்ந்தார்; பத்ன்யா:—தன் மனைவியின்; ப்ரகுபித:—அவர் கோபங்கொண்டவராய்; அப்ரவீத்—அவர் கூறினார்; க்னத—கொல்லுங்கள்; ஏனாம்—இவளை; புத்ரகா:—புத்திரர்களே; பாபாம்—பாவமிழைத்த; இதி உக்தா:—இவ்வாறு அறிவுரை கூறப்பட்டதும்; தே—அப்புத்திரர்கள் அனைவரும்; ந—இல்லை; சக்ரிரே—அவரது உத்தரவை நிறைவேற்றினர்.

தன் மனைவியின் மனம் சஞ்சலமடைந்ததை உணர்ந்த மாமுனிவரான ஜமதக்னி, “புத்திரர்களே பாவமிழைத்த இவளை கொல்லுங்கள்!” என்று கோபத்துடன் தன் புத்திரர்களிடம் கூறினார். ஆனால் அவரது கட்டளையை மகன்கள் நிறைவேற்றவில்லை.

பதம் 9.16.6
ராம: சஞ்சோதித: பித்ரா ப்ராத்ரூன் மாத்ரா ஸஹாவதீத்
ப்ரபாவ-க்ஞோ முனே: ஸம்யக் ஸமாதேஸ் தபஸஸ் ச ஸ:

ராம:—பகவான் பரசுராமர்; ஸஞ்சோதித:—(அவரது தாயையும், சகோதரர்களையும் கொல்ல) தூண்டப்பட்டு; பித்ரா—அவரது தந்தையால்; ப்ராத்ரூன்—அவரது எல்லா சகோதரர்களையும்; மாத்ராஸஹ—தாயுடன்; அவதீத்—உடனே கொன்றார்; ப்ரபாவ-க்ஞ:—சக்தியை அறிந்து; முனே:—மாமுனிவரின்; ஸம்யக்—முற்றும்; ஸமாதே:—தியானத்தாலும்; தபஸ:—தவத்தாலும்; ச—மேலும்; ஸ:—அவர்.

பிறகு, இக்கட்டளையை மீறிய சகோதரர்களையும், மனதால் விபச்சாரம் செய்த தாயையும் கொல்லும்படி, ஜமதக்னி தம் இளைய மகனான பரசுராமருக்கு உத்தரவிட்டார். தியானத்தாலும், தவத்தாலும் தம் தந்தை பெற்றிருந்த சக்தியை அறிந்திருந்த பகவான் பரசுராமர் உடனே தம் தாயையும், சகோதரர்களையும் கொன்றார்.

பதம் 9.16.7
வரேண ச்சந்தயாம் ஆஸ ப்ரீத: ஸத்யவதீ-ஸுத:
வவ்ரே ஹதானாம் ராமோ ‘பி ஜீவிதம் சாஸ்ம்ருதிம் வதே

வரேண ச்சந்தயாம் ஆஸ—விரும்பிய வரத்தைக் கேள் என்று கூறினார்; ப்ரீத:—(அவரிடம்) மிகவும் மகிழ்ந்து; ஸத்யவதீ-ஸுத:—சத்தியவதியின் புத்திரரான ஜமதக்னி; வவ்ரே—கூறினார்; ஹதானாம்—மரணமடைந்த என் தாய் மற்றும் சகோதரர்களின்; ராம:—பரசுராமர்; அபி—மேலும்; ஜீவிதம்—உயிர் பெறட்டும்; ச—கூட; அஸ்ம்ருதிம்—ஞாபகமே இல்லாமல்; வதே—என்னால் அவர்கள் கொல்லப்பட்ட.

பரசுராமரிடம் மகிழ்ந்த சத்தியவதியின் புத்திரரான ஜமதக்னி, வேண்டிய வரத்தைக் கேட்கும்படி கூற, பகவான் பரசுராமர் கேட்டார், “என் தாயும், சகோதரர்களும் என்னால் கொல்லப்பட்ட ஞாபகமே இல்லாமல் உயிர் பெறட்டும். இதுதான் நான் கேட்கும் வரம்”.

பதம் 9.16.8
உத்தஸ்துஸ் தே குசலினோ நித்ராபாய இவாஞ்சஸா
பிதுர் வித்வாம்ஸ் தபோ-வீர்யம் ராமஸ் சக்ரே ஸுஹ்ருத்-வதம்

உத்தஸ்து:—உடனே எழுந்தனர்; தே—பகவான் பரசுராமரின் தாயும், சகோதர்களும்; குசலின:—மகிழ்ச்சியுடன் உயிர்பெற்று எழுந்ததால்; நித்ரா-அபாயே—ஆழ்ந்த உறக்கத்தின் முடிவில்; இவ—போல்; அஞ்சஸா—மிக விரைவில்; பிது:—அவரது தந்தையின்; வித்வான்—அறிந்திருந்ததால்; தப:—தவ; வீர்யம்—வலிமையை; ராம:—பகவான் பரசுராமர்; சக்ரே—நிறைவேற்றினார்; ஸுஹ்ருத்-வதம்—அவரது குடும்பத்தினரைக் கொல்வதை.

அதன்பிறகு, ஜமதக்னியின் வரத்தால், பகவான் பரசுராமரின் தாயும், சகோதரர்களும், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுவதைப் போல் உடனே மகிழ்ச்சியுடன் உயிர் பெற்றெழுந்தனர். பகவான் பரசுராமர் தம் தந்தையின் தவவலிமையுயம், புலமையையும் நன்கு அறிந்திருந்ததால், தந்தையின் கட்டளைப்படி உறவினர்களைக் கொன்றார்.

பதம் 9.16.9
யே ‘ர்ஜுனஸ்ய ஸுதா ராஜன் ஸ்மரந்த: ஸ்வ-பிதுர் வதம்
ராம-வீர்ய-பராபூதா லேபிரே சர்ம ந க்வசித்

யே—அவர்கள்; அர்ஜுனஸ்ய—கார்த்தவீர்யார்ஜுனனின்; ஸுதா:—மகன்கள்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; ஸ்மரந்த:—எப்பொழுதும் நினைந்து; ஸ்வ-பிது: வதம்—தங்கள் தந்தை (பரசுராமரால்) கொல்லப்பட்டதை; ராம-வீர்ய-பராபூதா:—பகவான் பரசுராமரின் பராக்கிரமத்தால் தோற்கடிக்கப்பட்டு; லேபிரே—அடைந்தனர்; சர்ம—மகிழ்ச்சி; ந—இல்லை; க்வசித்—எச்சமயத்திலும்.

பரீட்சித்து மகாராஜனே, கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள், பரசுராமரால் தங்கள் தந்தை கொல்லப்பட்டதை மனதிற் கொண்டு, அவரது பராக்கிரமத்திற்கஞ்சி எப்போதும் நிம்மதியற்று இருந்தனர்.

பதம் 9.16.10
ஏகதாஸ்ரமதோ ராமே ஸப்ராதரி வனம் கதே
வைரம் ஸிஷாதயிஷவோ லப்த-சித்ரா உபாகமன்

ஏகதா—ஒரு சமயம்; ஆஸ்ரமத:—ஜமதக்னியின் ஆசிரமத்திலிருந்து; ராமே—பகவான் பரசுராமர்; ஸ-ப்ராதரி—அவரது சகோதரர்களுடன்; வனம்—வனத்திற்கு; கதே—சென்றிருந்த பொழுது; வைரம்—விரோதத்திற்கு பழிதீர்த்துக் கொள்ள; ஸிஷாதயிஷவ:—சாதித்துக் கொள்ள விரும்பி; லப்த-சித்ரா:—வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு; உபாகமன்—ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு அருகில் அவர்கள் வந்தனர்.

ஒருசமயம், பரசுராமர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி வசுமானுடனும், மற்ற சகோதரர்களுடனும் வனத்திற்குச் சென்றார். அச்சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள், விரோதத்தை பழிதீர்த்துக் கொள்வதற்காக ஜமதக்னியின் ஆசிரமத்தை அணுகினார்.

பதம் 9.16.11
த்ருஷ்ட்வாக்னி-ஆகார ஆஸீனம் ஆவேசித-தியம் முனிம்
பகவதி உத்தமஸ்லோகே ஜக்னுஸ் தே பாப-நிஸ்சயா:

த்ருஷ்ட்வா—கண்டு; அக்னி-ஆகாரே—யாக சாலையில்; ஆஸீனம்—அமர்ந்திருப்பதை; ஆவேசித—முற்றிலும் செலுத்தியிருந்த; தியம்—புத்தியை; முனிம்—மாமுனிவரான ஜமதக்னி; பகவதி—பரம புருஷரிடம்; உத்தம-ஸ்லோகே—உத்தமமான சுலோகங்களால் போற்றப்படுபவர்; ஜக்னு:—கொன்றனர்; தே—கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள்; பாப-நிஸ்சயா:—பெரும் பாவத்தைச் செய்ய உறுதிகொண்டு.

கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள் பாவம் செய்வதில் உறுதியாக இருந்தனர். எனவே உத்தமமான சுலோகங்களால் போற்றப்படுபவரான பரமபுருஷரை தியானித்தவாறு, யாகம் செய்ய யாக சாலையில் ஜமதக்னி அமர்ந்திருப்பதைக் கண்ட அவர்கள், அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரைக் கொன்று விட்டனர்.

பதம் 9.16.12
யாச்யமானா: க்ருபணயா ராம-மாத்ராதிதாருணா:
பீரஸஹ்ய சிர உத்க்ருத்ய நின்யுஸ் தே க்ஷத்ர-பந்தவ:

யாச்யமானா:—தன் கணவரின் உயிருக்காக மன்றாடிய; க்ருபணயா—பாதுகாப்பற்ற அப்பெண்ணால்; ராம-மாத்ரா—பகவான் பரசுராமரின் தாயால்; அதி-தாருணா:—மிகவும் கொடூரமாக; ப்ரஸஹ்ய—ஆவேசத்துடன்; சிர:—ஜமதக்னியின் தலையை; உத்க்ருத்ய—துண்டித்து; நின்யு:—எடுத்துச் சென்றனர்; தே—கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள்; க்ஷத்ர-பந்தவ:—அவர்கள் க்ஷத்திரியர்களல்ல, க்ஷத்திரியர்களின் மிகவும் வெறுக்கத்தக்க மகன்களாவர்.

பரசுராமரின் தாயும், ஜமதக்னியின் மனைவியுமான ரேணுகா, தன் கணவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி இரங்கத்தகுந்த முறையில் மன்றாடினாள். ஆனால் க்ஷத்திரிய குணமில்லாத கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள் இரக்கமின்றி ஆவேசத்துடன் அவரது தலையைத் துண்டித்து அதை எடுத்துச் சென்றார்.

பதம் 9.16.13
ரேணுகா துஹ்க-சோகார்தா நிக்னந்தி ஆத்மானம் ஆத்மனா
ராம ராமேதி தாதேதி விசுக்ரோசோச்சகை: ஸதீ

ரேணுகா—ரேணுகா; துஹ்க-சோக-அர்தா—(கணவரை இழந்த) சோகத்தால் துக்கம் மேலிட; நிக்னந்தீ—அடித்துக் கொள்பவளாய்; ஆத்மானம் ஆத்மனா—தன்னைத்தானே; ராம—ஓ பரசுராம; ராம—ஒ பரசுராம; இதி—இவ்வாறு; தாத—அருமைப் புதல்வனே; இதி—இவ்வாறாக; விசுக்ரோச—அழத்துவங்கினாள்; உச்சகை:—உரத்தகுரலில்; ஸதீ—பதிவிரதை.

பதிவிரதையான ரேணுகா தன் கணவரைப் பறிகொடுத்த துக்கத்தாலும், சோகத்தாலும் பீடிக்கப்பட்டவளாய் தன்னைத்தானே அடித்துக் கொண்டு, “அருமைப் புதல்வனே ராமா, ஓ ராமா!” என்று உரத்த குரலில் கதறினாள்.

பதம் 9.16.14
தத் உபஸ்ருத்ய தூரஸ்தா ஹா ராமேதி ஆர்தவத் ஸ்வனம்
த்வரயாஸ்ரமம் ஆஸாத்ய தத்ருசு: பிதரம் ஹதம்

தத்—ரேணுகாவின் அழுகுரலை; உபஸ்ருத்ய—கேட்டதும்; தூர-ஸ்தா:—நீண்ட தூரத்தில் இருந்த போதிலும்; ஹா ராம—ஆ ராமா, ஆ ராமா; இதி—என்ற; ஆர்த-வத்—துன்பம் மிகுந்த; ஸ்வனம்—ஓசை; த்வரயா—விரைவாக; ஆஸ்ரமம்—ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு; ஆஸாத்ய—வந்து; தத்ருசு:—கண்டார்; பிதரம்—தந்தை; ஹதம்—கொல்லப்பட்டுவிட்டதை.

ஜமதக்னியின் புத்திரர்களான பகவான் பரசுராமர் முதலானவர்கள் ஆசிரமத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்த போதிலும், “அருமைப் புதல்வனே, ஓ ராமா” என்ற ரேணுகாவின் துன்பம் மிகுந்த குரலைக் கேட்டு, விரைவாக ஆசிரமத்திற்குத் திரும்பி, தந்தை கொல்லப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

பதம் 9.16.15
தே துஹ்க-ரோஷாமர்ஷார்தி-சோக-வேக-விமோஹிதா:
ஹா தாத ஸாதோ தர்மிஷ்ட த்யக்த்வாஸ்மான் ஸ்வர்—கதோ பவான்

தே—ஜமதக்னியின் புத்திரர்கள்; துஹ்க—துக்கத்தால்; ரோஷ—கோபம்; அமர்ஷ—அவமானம்; ஆர்தி—வருத்தம்; சோக—சோகம்; வேக—வேகத்துடன்; விமோஹிதா:—திகைத்து; ஹா தாத—ஆ தந்தையே; ஸாதோ—மாமுனிவரே; தர்மிஷ்ட—சிறந்த புண்ணிய புருஷரே; த்யக்த்வா—விட்டு; அஸ்மான்—எங்களை; ஸ்வ-கத:—சுவர்க்க லோகங்களுக்குச் சென்று விட்டீர்கள்; பவான்—தாங்கள்.

துக்கம், கோபம், அவமானம், வருத்தம் மற்றும் சோகம் ஆகியவற்றினால் உண்மையாகவே திகைப்புற்ற ஜமதக்னியின் புத்திரர்கள், “ஒ தந்தையே, மகா முனிவரே, புண்ணிய புருஷரே, எங்களை விட்டுவிட்டு நீங்கள் சுவர்க்க லோகங்களுக்குச் சென்றுவிட்டீரா” என்று கதறினர்.

பதம் 9.16.16
விலப்யைவம் பிதுர் தேஹம் நிதாய ப்ராத்ருஷு ஸ்வயம்
ப்ரக்ருஹ்ய பரசும் ராம: க்ஷத்ராந்தாய மனோ ததே

விலப்ய—விசனப்பட்ட; ஏவம்—இவ்வாறு; பிது:—அவரது தந்தையின்; தேஹம்—உடலை; நிதாய—ஒப்படைத்து; ப்ராத்ருஷு—தம் சகோதர்களிடம்; ஸ்வயம்—தாமாகவே; ப்ரக்ருஹ்ய—எடுத்தக் கொண்டு; பரசும்—கோடரியை; ராம:—பகவான் பரசுராமர்; க்ஷத்ர-ஆந்தாய—எல்லா க்ஷத்திரியர்களுக்கும் ஒரு முடிவுகட்டும்; மன:—எண்ணத்தில்; ததே—உறுதிகொண்டு.

இவ்வாறு விசனப்பட்ட பகவான் பரசுராமர், தம் தந்தையின் உயிரற்ற உடலை சகோதரர்களிடம் ஒப்படைத்து விட்டு, உலகிலுள்ள எல்லா க்ஷத்திரியர்களுக்கும் ஒரு முடிவு கட்டும் எண்ணத்துடன் தமது கோடரியைக் கையிலெடுத்தார்.

பதம் 9.16.17
கத்வா மாஹிஷ்மதீம் ராமோ ப்ரஹ்ம-க்ன-விஹத-ஸ்ரியம்
தேஷாம் ஸ சீர்ஷபீ ராஜன் மத்யே சக்ரே மஹா-கிரிம்

கத்வா—சென்று; மாஹிஷ்மதீம்—மாஹிஷ்மதி என்ற இடத்திற்கு; ராம:—பகவான் பரசுராமர்; ப்ரஹ்ம-க்ன—பிராமணரைக் கொன்றதால்; விஹத-ஸ்ரியம்—எல்லா ஐசுவரியங்களையும் இழந்து நாசமைடைந்துவிட்ட; தேஷாம்—அவர்கள் அனைவரின் (கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள் மற்றும் பிற க்ஷத்திரியவாசிகள்); ஸ:—அவர், பகவான் பரசுராமர்; சீர்ஷபி:—அவர்களது உடல்களிலிருந்து துண்டிக்கப்பட்ட தலைகளால்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; மத்யே—நகர மத்தியில்; சக்ரே—செய்தார்; மஹா-கிரிம்—பெரியதொரு மலையை.

அரசே, ஒரு பிராமணரைக் கொன்ற பாவத்தால் ஐசுவரியத்தை இழந்து நாசமடைந்து போயிருந்த மாஹிஷ்மதிக்குச் சென்ற பகவான் பரசுராமர், கார்த்தவீர்யார்ஜுனனுடைய மகன்களின் தலைகளைக் கொய்து, நகர மத்தியில் மலைபோல் குவித்தார்.

பதங்கள் 9.16.18 – 9.16.19
தத்-ரக்தேன நதீம் கோராம் அப்ரஹ்மண்ய-பயாவஹாம்
ஹேதும் க்ருத்வா பித்ரு-வதம் க்ஷத்ரே ‘மங்கள-காரிணி

த்ரி:-ஸப்த-க்ருத்வ: ப்ருதிவீம் க்ருத்வா நிஹ்க்ஷத்ரியாம் ப்ரபு:
ஸமந்த-பஞ்சகே சக்ரே சோணிதான் ஹ்ரதான் நவ

தத்-ரக்தேன—கார்த்தவீர்யார்ஜுனனுடைய மகன்களின் இரத்தத்தால்; நதீம்—ஒரு நதியை; கோராம்—கோரமான; அப்ரஹ்மண்ய-பய-ஆவஹாம்—பிராமணப் பண்பாட்டை மதிக்காத அரசர்களுக்கு பயத்தை விளைவித்து; ஹேதும்—காரணம்; க்ருத்வா—ஏற்று; பித்ரு-வதம்—அவரது தந்தையைக் கொன்ற; க்ஷத்ரே—க்ஷத்திரிய குலம்; அமங்கள-காரிணி—மிகவும் அமங்களமான முறையில் செயற்பட்டு; த்ரி:-ஸப்த-க்ருத்வ:—இருபத்தொரு தடவை; ப்ருதிவீம்—உலக முழுவதையும்; க்ருத்வா—செய்து; நிஹ்க்ஷத்ரியாம்—க்ஷத்திரிய வம்சமே இல்லாமல்; ப்ரபு:—பரமபுருஷரான பரசுராமர்; ஸமந்த-பஞ்சகே—சியமந்த பஞ்சகம் என்ற இடத்தில்; சக்ரே—அவர் செய்தார்; சோணித-உதான்—நீருக்குப் பதிலாக இரத்தத்தால் நிரப்பப்பட்ட; ஹ்ரதான்—ஏரிகளை; நவ—ஒன்பது.

இம்மகன்களின் உடல்களிலிருந்து பெருக்கெடுத்த இரத்தத்தினால் பகவான் பரசுராமர் கோரமான ஒரு நதியை உண்டாக்கினார். பிராமண பண்பாட்டை மதிக்காத அரசர்களுக்கு இது பெரும் பயத்தை ஏற்படுத்தியது. அரசாங்க பொறுப்பை வகித்த க்ஷத்திரியர்கள் பாவங்களைச் செய்ததால், பகவான் பரசுராமர் அவர்கள் தம் தந்தையைக் கொன்றதை ஒரு சாக்காகக் கொண்டு, பழிவாங்கும் எண்ணத்துடன், பூமியில் க்ஷத்திரிய குலமே இல்லாது போகும்படி அவர்களை இருபத்தொரு தடவைகள் நாசம் செய்தார். சியமந்த-பஞ்சகம் என்ற இடத்தில் ஒன்பது ஏரிகளை உருவாக்கிய அவர் அவற்றை அவர்களுடைய இரத்தத்தால் நிரப்பினார்.

பதம் 9.16.20
பிது: காயேன ஸந்தாய சிர ஆதாய பர்ஹிஷி
ஸர்வ-தேவமயம்தேவம் ஆத்மானம் அயஜன் மகை:

பிது:—அவரது தந்தையின்; காயேன—உடனுடன்; ஸந்தாய—பொருத்தி; சிர:—தலையை; ஆதாய—வைத்து; பர்ஹிஷி—நாணல் புல்லின் மேல்; ஸர்வ-தேவ-மயம்—தேவர்களுக்கெல்லாம் தலைவரான, எங்கும் பரவியுள்ள பரமபுருஷர்; தேவம்—பகவான் வாசு தேவன்; ஆத்மானம்—பரமாத்மாவாக எங்கும் பரவியிருப்பவர்; அயஜத்—அவர் வழிபட்டார்; மகை:—யாகங்கள் செய்து.

அதன்பிறகு, தந்தையின் தலையை அவரது உடலுடன் பொருத்திய பரசுராமர் முழு உடலையும் நாணல் புல்லின் மேல் வைத்தார். பிறகு யாகங்களைச் செய்து, அனைத்து தேவர்களுக்கும், ஜீவராசிகளுக்கும் எங்கும் பரவிய பரமாத்மாவாக விளங்கும் பகவான் வாசுதேவரை வழிபடத் துவங்கினார்.

பதங்கள் 9.16.21 – 9.16.22
ததெள ப்ராசீம் திசம் ஹோத்ரே ப்ரஹ்மணே தக்ஷிணாம் திசம்
அத்வர்யவே ப்ரதீசீம் வை உத்காத்ரே உத்தராம் திசம்

அன்யேப்யோ ‘வாந்தர-திச: கஸ்யபாய ச மத்யத:
ஆர்யாவர்தம் உபத்ரஷ்ட்ரே ஸதஸ்யேப்யஸ் தத: பரம்

ததௌ—பரிசாகக் கொடுத்தார்; ப்ராசீம்—கிழக்கு; திசம்—திசையை; ஹோத்ரே—ஹோதா என்ற புரோகிதருக்கு; ப்ரஹ்மணே—பிரம்மா என்ற புரோகிதருக்கு; தக்ஷிணாம்—தெற்கு; திசம்—திசையை; அத்வர்யவே—அத்வர்யு என்ற புரோகிதருக்கு; ப்ரதீசீம்—மேற்குப் புறத்தை; வை—உண்மையில்; உத்காத்ரே—உத்காதா என்ற புரோகிதருக்கு; உத்தராம்—வடக்கு; திசம்—திசையை; அன்யேப்ய:—மற்றவர்களுக்கு; அவாந்தர-திச:—வெவ்வேறு மூலைகளை (வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு மற்றும் தென்மேற்கு); கஸ்யபாய—கஸ்யப முனிவருக்கு; ச—மேலும்; மத்யத:—நடுப்பகுதியை; ஆர்யாவர்தம்—ஆர்யாவர்தம் என்ற பகுதியை; உபத்ரஷ்ட்ரே—முறையாக மந்திரங்கள் ஒதப்படுவதை கண்காணிக்கும் உபத்ரஷ்டா புரோகிதருக்கு; ஸதஸ்யேப்ய:—உதவியாளர்களான ஸதஸ்யர்களுக்கு; தத: பரம்—எஞ்சியுள்ளதை.

யாகத்தை நிறைவேற்றி முடித்த பகவான் பரசுராமர் கிழக்குத் திசையை ஹோதா என்ற புரோகிதருக்கும், தென்திசையை பிரம்மா என்ற புரோகிதருக்கும், மேற்குத்திசையை அத்வர்யுவிற்கும், வடதிசையை உக்காதாவுக்கும், மேலும் வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு மற்றும் தென்மேற்கு ஆகிய நான்கு மூலைகளை மற்ற புரோகிதர்களும் பரிசாகக் கொடுத்தார். மேலும் நடுப்பகுதியை கஸ்யபருக்கும், ஆர்யாவர்தம் என்ற இடத்தை உபத்ரஷ்டாவுக்கும் அவர் கொடுத்தார். எஞ்சியதை உதவியாளர்களான ஸதஸ்யர்களுக்கு பகிர்ந்தளித்தார்.

பதம் 9.16.23
ததஸ் சாவப்ருத-ஸ்நான-விதூதாசேஷ-கில்பிஷ:
ஸரஸ்வத்யாம் மஹா-நத்யாம் ரேஜே வ்யப்ர இவாம்சுமான்

தத:—அதன்பிறகு; ச—மேலும்; அவப்ருத-ஸ்நான—யாகத்தை முடித்த பிறகு குளித்ததன் மூலம்; விதூத—தூய்மையடைந்தார்; அசஷே—எண்ணிலடங்காத; கில்பிஷ:—யாருடைய பாவ விளைவுகள்; ஸரஸ்வத்யாம்—சரஸ்வதி நதிக்கரையில்; மஹா-நத்யாம்—இந்தியாவின் மிகப் பெரிய நதிகளுள் ஒன்றான; ரேஜே—பகவான் பரசுராமர் காட்சியளித்தார்; வ்யப்ர:—மேகமற்ற; இவ-அம்சுமான்—சூரியனைப் போல்.

அதன்பிறகு, யாகச் சடங்குகளைச் செய்து முடித்த பரசுராமர், அவப்ருத-ஸ்நானம் எனப்படும் ஸ்நாதனத்தை மேற்கொண்டார். பாவங்களெல்லாம் தீர்ந்தவராய், சரஸ்வதி நதிக்கரையில் நின்றிருந்த பகவான் பரசுராமர், மேகமற்ற ஆகாயத்திலுள்ள சூரியனைப்போல் காணப்பட்டார்.

பதம் 9.16.24
ஸ்-தேஹம் ஜமதக்னிஸ் து லப்த்வா ஸம்க்ஞான-லக்ஷணம்
ரிஷீணாம் மண்டலே ஸோ ‘பூத் ஸப்தமோ ராம-பூஜித:

ஸ்வ-தேஹம்—அவரது சொந்த உடல்; ஜமதக்னி—மாமுனிவரான ஜமதக்னி; து—ஆனால்; லப்த்வா—திரும்பப்பெற்று; ஸமக்ஞான—லக்ஷணம் உயிர், அறிவு மற்றும் ஞாபகசக்தி ஆகியவற்றிற்குரிய முழுமையான அறிகுறிகளைக் காட்டி; ரிஷீணாம்—மகாரிஷிகளின்; மண்டலே—ஏழு நட்சத்திரக் கூட்டங்களில்; ஸ:—அவர், ஜமதக்னி; அபூத்—பிறகு ஆனார்; ஸப்தம:—ஏழாவது; ராம-பூஜித:—பகவான் பரசுராமரால் ஆராதிக்கப்பட்டதால்.

இவ்வாறு பகவான் பரசுராமரால் ஆராதிக்கப்பட்டு, முழு ஞாபக சக்தியுடன் உயிர் பெற்றெழுந்த ஜமதக்னி, ஏழு நட்சத்திர மண்டலங்களிலுள்ள ஸப்த ரிஷிகளில் ஏழாவது ரிஷியானார்.

பதம் 9.16.25
ஜாமதக்ன்யோ ‘பி பகவான் ராம: கமல-லோசன:
ஆகாமினி அந்தரே ராஜன் வர்தயிஸ்யதி வை ப்ரஹத்

ஜாமதகன்ய:—ஜமதக்னியின் புத்திரர்; அபி—கூட; பகவான்—பரமபுருஷர்; ராம:—பகவான் பரசுராமர்; கமல-லோசண:—கமலக் கண்களையுடைய; ஆகாமினி—வந்து; அந்தரே—மன்வந்தரத்தில், ஒரு மனுவின் காலம்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; வர்தயிஷ்யதி—எடுத்துக் கூறுவார்; வை—உண்மையில்; ப்ருஹத்—வேத ஞானத்தை.

பரீட்சித்து மகாராஜனே, அடுத்த மன்வந்ததரத்தில், கமலக் கண்களையுடைய பரமபுருஷரும், ஜமதக்னி புத்திரருமான பகவான் பரசுராமர், வேத ஞானத்தை எடுத்துக் கூறுபவராக விளங்குவார். அதாவது, அவர் ஏழு ரிஷிகளில் ஒருவராக விளங்குவார்.

பதம் 9.16.26
ஆஸ்தே ‘த்யாபி மஹேந்ராத்ரௌ ன்யஸ்த-தண்ட: ப்ரஸாந்த-தீ:
உபகீயமான-சரித: ஸித்த-கந்தர்வ-சாரணை:

ஆஸ்தே—இன்னமும் வாழ்கிறார்; அத்ய-அபி—இப்பொழுது கூட; மஹேந்ர-அத்ரௌ—மகேந்திர பர்வதம் என்ற மலைப் பிரதேசத்தில்; ன்யஸ்த-தண்ட:—ஒரு க்ஷத்திரியருக்குரிய ஆயுதங்களை (வில், அம்புகள் மற்றும் கோடரி) கைவிட்டு; ப்ரஸாந்த—இப்பொழுது ஒரு பிராமணராக பூரண திருப்தியுடன்; தீ:—மதிநுட்பம் உள்ளவராக; உபக்யமான-சரித:—அவரது உயர்ந்த ஒழுக்கத்திற்காகவும், செயல்களுக்காகவும் ஆராதிக்கப்பட்டும், போற்றப்பட்டும் வருகிறார்; ஸித்த-கந்தர்வ-சாரணை:—சுவர்க்கலோக வாசிகளான கந்தர்வர்களாலும், சித்தர்களாலும் மற்றும் சாரணர்களாலும்.

மகேந்திர பர்வதம் என்ற மலைப் பிரதேசத்தில், பகவான் பரசுராமர் மதிநுட்பமுள்ள ஒரு பிராமணராக இன்றும் வாழ்ந்து வருகிறார். க்ஷத்திரியருக்குரிய ஆயுதங்களை எல்லாம் துறந்து, பூரண திருப்தியடைந்தவராக வாழ்ந்து வரும் அவர், அவருடைய உயர்ந்த ஒழுக்கத்திற்காகவும், செயல்களுக்காகவும், சுவர்க்கலோக வாசிகளான சித்தர்களாலும், சாரணர்களாலும் மற்றும் கந்தர்வர்களாலும் துதித்துப் போற்றப்படுகிறார்.

பதம் 9.16.27
ஏவம் ப்ருகுஷு விஸ்வாத்மா பகவான் ஹரிர் ஈஸ்வர:
அவதீர்ய பரம் பாரம் புவோ ‘ஹன் பஹுசோ ந்ருபான்

ஏவம்—இவ்விதமாக; ப்ருகுஷு—பிருகு வம்சத்தில்; விஸ்வ-ஆத்மா—பரமாத்மா; பகவான்—பரமபுருஷர்; ஹரி:—பகவான்; ஈஸ்வர:—பரம ஆளுனரான; அவதீர்ய—ஓரவதாரமாகத் தோன்றி; பரம்—பெரிய; பாரம்—பாரத்தை; புவ:—பூமியின்; அஹன்—கொன்றார்; பஹுச:—பலமுறைகள்; ந்ருபான்—அரசர்களை.

இவ்விதமாக பரமாத்மாவும், பரமபுருஷரும், பரம ஆளுனருமான பகவான், பிருகு வம்சத்தில் அவதரித்து, விரும்பத்தகாத அரசர்களைப் பலமுறைகள் கொன்று பிரபஞ்சத்தின் பாரத்தைப் போக்கினார்.

பதம் 9.16.28
காதேர் அபூன் மஹா-தேஜா: ஸமித்த இவ பாவக:
தபஸா க்ஷாத்ரம் உத்ஸ்ருஜ்ய யோ லேபே ப்ரஹ்ம-வர்சஸம்

காதே:—காதி மகாராஜனிடமிருந்து; அபூத்—பிறந்தார்; மஹா:-தேஜா:—மிகவும் சக்திவாய்ந்தவராக; ஸமித்த:—கொழுந்துவிட்டெரியும்; இவ—போல்; பாவக:—தீ; தபஸா—தவ, விரதங்களால்; க்ஷாத்ரம்—ஒரு க்ஷத்திரியரின் நிலையை; உத்ஸ்ருஜ்ய—கைவிட்டு; ய:—அவர் (விஸ்வாமித்திரர்); லேபே—அடைந்தார்; ப்ரஹ்ம-வர்சஸம்—ஒரு பிராமணரின் நிலையை.

காதி மகாராஜனின் புத்திரரான விஸ்வாமித்திரர் தீச்சுடர்களைப் போல் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். அவர் ஒரு க்ஷத்திரியரின் அந்தஸ்திலிருந்து, கடுந்தவங்களையும், விரதங்களையும் மேற்கொண்டு, ஒரு சக்திவாய்ந்த பிராமணரின் அந்தஸ்தை அடைந்தார்.

பதம் 9.16.29
விஸ்வாமித்ரஸ்ய சைவாஸன் புத்ரா ஏக-சதம் ந்ருப
மத்யமஸ் து மதுச்சந்தா மதுச்சந்தஸ ஏவ தே

விஸ்வாமித்ரஸ்ய—விஸ்வாமித்திரரின்; ச—மேலும்; ஏவ—உண்மையில்; ஆஸன்—இருந்தனர்; புத்ரா:—புத்திரர்கள்; ஏக-சதம்—101; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே; மத்யம:—நடுவில் உள்ளவர்; து—உண்மையில்; மதுச்சந்தா:—மதுசந்தஸ் என்றும் அறியப்பட்டார்; மதுச்சந்தஸ:—மதுச்சந்தர்கள் எனப்பட்டனர்; ஏவ—உண்மையில்; தே—அவர்களனைவரும்.

பரீட்சித்து மகாராஜனே, விஸ்வாமித்திரருக்கு 101 மகன்கள் இருந்தனர். அவர்களுள் நடுவராக இருந்தவர் மதுச்சந்தஸ் எனப்பட்டார். அவர் பெயரைக் கொண்டே மற்றெல்லா மகன்களும் மதுச்சந்தர்கள் என்று புகழ்பெற்றனர்.

பதம் 9.16.30
புத்ரம் க்ருத்வா கனஹ்சேஃபம் தேவராதம் ச பார்கவம்
ஆஜீகர்தம் ஸுதான் ஆஹ ஜ்யேஷ்ட ஏஷ ப்ரகல்ப்யதாம்

புத்ரம்—ஒரு மகனை; க்ருத்வா—ஏற்று; கனஹ்சேபம்—சுனச்சேபன் என்ற பெயருடைய; தேவராதம்—தேவர்களால் காப்பாற்றப்பட்டவரான, தேவராதன்; ச—தவிரவும்; பார்கவம்—பிருகு வம்சத்தில் பிறந்த; ஆஜீகர்தம்—அஜீகர்தரின் புத்திரரான; ஸுதான்—அவரது சொந்த புத்திரர்களுக்கு; ஆஹ—உத்தரவிட்டார்; ஜ்யேஷ்ட:—மூத்தவர்; ஏஷ:—சுனச்சேபனை; ப்ரகல்ப்யதாம்—அவ்வாறு ஏற்றுக் கொள்ளும்படி.

பிருகு வம்சத்தில் பிறந்தவரும், அஜீகர்தரின் புத்திரருமான சுனச்சேபனை விஸ்வாமித்திரர் தமது மகன்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டார். அவர் தேவராதன் என்றும் அறியப்பட்டார். சுனச்சேபனைத் தங்களது மூத்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி, தம்முடைய மற்ற மகன்களுக்கு விஸ்வாமித்திரர் உத்தரவிட்டார்.

பதம் 9.16.31
யோ வை ஹரிஸ்சந்தர-மகே விக்ரீத: புருஷ: பசு:
ஸ்ருத்வா தேவான் ப்ரஜேசாதீன் முமுசே பாச-பந்தனாத்

ய:—அவர் (சுனச்சேபன்); வை—உண்மையில்; ஹரிஸ்சந்ர-மகே—ஹரிச்சந்திர மகாராஜனால் செய்யப்பட்ட யாகத்தில்; விக்ரீத:—விலைக்கு விற்கப்பட்டார்; புருஷ:—மனித; பசு:—யாகப் பசு; ஸ்ருத்வா—பிரார்த்தனை செய்து; தேவான்—தேவர்களுக்கு; ப்ரஜா-ஈசு-ஆதீன்—பிரம்ம தேவரை தலைமையாகக் கொண்ட; முமுசே—விடுவிக்கப்பட்டார்; பாச-பந்தனாத்—ஒரு மிருகத்தைப் போல் கயிறுகளால் பிணைக்கப்படுவதிலிருந்து.

சுனச்சேபனை ஹரிச்சந்திரனின் யாகத்தில் ஒரு யாகப் பசுவாக பலி கொடுப்பதற்காக, சுனச்சேபனின் தந்தை அவரை விலைக்கு விற்றுவிட்டார். யாக அரங்கிற்குள் கொண்டுவரப்பட்ட சுனச்சேபன், விடுதலைகோரி தேவர்களிடம் வேண்டியதால், அவர்களின் கருணையால் விடுவிக்கப்பட்டார்.

பதம் 9.16.32
யோ ராதோ தேவ-யஜனே தேவைர் காதிஷு தாபஸ:
தேவ-ராத இதி க்யாத: சுனஹ்சேஃபஸ் து பார்கவ:

ய:—அவர் (சுனச்சேபன்); ராத:—காப்பாற்றப்பட்டார்; தேவ-யஜனே—தேவ வழிபாட்டுக்குரிய அரங்கில்; தேவை:—அதே தேவர்களால்; காதிஷு—காதி வம்சத்தில்; தாபஸ:—ஆன்மீக வாழ்வை நிறைவேற்றுவதில் முன்னேறியவர்; தேவ-ராத:—தேவர்களால் காப்பாற்றப்பட்டார்; இதி—இவ்வாறு; க்யாத:—புகழப்பட்டார்; சுனஹ்சேப: து—மேலும் சுனச்சேபனும்; பார்கவ:—பிருகு வம்சத்தில்.

சுனச்சேபன் பார்கவ வம்சத்தில் பிறந்தவர் என்றபோதிலும், ஆன்மீக வாழ்வில் அவர் மிகவும் முன்னேறியவராக இருந்தார். எனவே யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அவரைக் காப்பாற்றினர். இதனால் தேவராதன் என்று பெயர்பெற்ற அவர் காதி வம்சத்தவர் என்றும் புகழப்பட்டார்.

பதம் 9.16.33
யே மதுச்சந்தஸோ ஜ்யேஷ்டா: குசலம் மேனிரே ந தத்
அசபத் தான் முனி: க்ருத்தோ ம்லேச்சா பவத துர்ஜனா:

யே—அவர்கள்; மதுச்சந்தஸ:—மதுச்சந்தர்கள் என்று புகழ்பெற்ற விஸ்வாமித்திரரின் மகன்கள்; ஜ்யேஷ்டா:—மூத்தவர்கள்; குசலம்—மிகவும் நல்லவர்கள்; மேனிரே—ஏற்று; ந—அல்ல; தத்—அதை (அவர் மூத்த சகோதரனாக ஏற்கப்பட வேண்டும் என்ற ஏற்பாட்டை); அசபத்—சபித்தார்; தான்—எல்லா மகன்களையும்; முனி:—விஸ்வாமித்திர முனி; க்ருத்த:—கோபங்கொண்டு; ம்லேச்சா:—தேவக் கொள்கைகளை மீறியவர்களாக; பவத—நீங்கள் எல்லோரும் ஆகுங்கள்; துர்ஜனா:—மிகவும் கெட்ட மகன்களான.

சுனச்சேபனை மூத்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி தந்தையால் உத்தரவிடப்பட்டபோது, விஸ்வாமித்திரரின் மகன்களான மதுச்சந்தர்களில், மூத்தவர்களாக இருந்த ஐம்பது பேரும் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் கோபங் கொண்ட விஸ்வாமித்திரர், “கெட்ட மகன்களான நீங்கள், வேதப் பாண்பாட்டை மீறியதால் மிலேச்சர்கள் ஆகக் கடவீர்” என்று அவர்களைச் சபித்தார்.

பதம் 9.16.34
ஸ ஹோவாச மதுச்சந்தா: ஸார்தம் பஞ்சாஸதா தத:
யன் நோ பவான் ஸஞ்ஜானீதே தஸ்மிம்ஸ் திஷ்டாமஹே வயம்

ஸ:—விஸ்வாமித்திரரின் மகன்களில் நடுவானவன்; ஹ—உண்மையில்; உவாச—கூறினார்; மதுச்சந்தா:—மதுச்சந்தஸ்; ஸார்தம்—உடன்; பஞ்சாசதா—மதுச்சந்தர்கள் எனப்படும் இரண்டாவது ஐம்பது மகன்கள்; தத:—முதல் ஐம்பது பேர்கள் இவ்வாறு சபிக்கப்பட்ட பின்; யத்—எதை; ந:—எங்களிடம்; பவான்—தந்தையே; ஸஞ்ஜாநீதே—உங்கள் விருப்பப்படியே; தஸ்மின்—அவ்வாறே; திஷ்டாமஹே—இருப்போம்; வயம்—நாங்களெல்லோரும்.

மூத்த மதுச்சந்தர்கள் சபிக்கப்பட்டபோது, இளையவர்களான ஐம்பது பேரும், மதுச்சந்தஸ்ஸும் தங்கள் தந்தையிடம் சென்று, “தந்தையே உங்கள் ஏற்பாடு எதுவானாலும் அதற்கு நாங்கள் உடன்படுகிறோம்” என்று கூறினர்.

பதம் 9.16.35
ஜ்யேஷ்டம் மந்த்ர-த்ருசம் சக்ருஸ்த்வாம் அன்வஞ்சோ வயம் ஸ்ம ஹி
விஸ்வாமித்ர: ஸுதான் ஆஹ வீரவந்தோ பவிஷ்யத
யே மானம் மே ‘நுக்ருஹ்ணந்தோ வீரவந்தம் அகர்த மாம்

ஜ்யேஷ்டம்—மூத்தவர்; மந்திர-த்ருசம்—மந்திரங்களை அறிந்தவரான; சக்ரு—அவர்கள் ஏற்றுக்கொண்டனர்; த்வம்—நீங்கள்; அன்வஞ்ச:—ஏற்கச் சம்மதித்தீர்கள்; வயம்—நாங்கள்; ஸ்ம—உண்மையாகவே; ஹி—நிச்சயமாக; விஸ்வாமித்ர:—விஸ்வாமித்திரர்; ஸுதான்—கீழ்ப்படிந்த மகன்களிடம்; ஆஹ—கூறினார்; வீர-வந்த:—மகன்களுக்குத் தந்தைகளாக; பவிஷ்யத:—எதிர்காலத்தில் ஆவிர்கள்; யே—நீங்கள் அனைவரும்; மானம்—மேன்மையை; மே—எனது; அனுக்ருஹ்ணந்த:—ஏற்றீர்கள்; வீர-வந்தம்:—நல்ல மகன்களுக்குத் தந்தைகளாக; அகர்த—நீங்கள் செய்திருக்கிறீர்கள்; மாம்—என்னை.

இவ்வாறாக சுனச்சேபனைத் தங்களது மூத்த சகோதரனாக ஏற்றுக் கொண்ட இளைய மதுச்சந்தர்கள், “உங்களுடைய உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுவோம்” என்று தந்தையிடம் கூறினர். பிறகு விஸ்வாமித்திரர் தன் கீழ்ப்படிந்த மகன்களிடம் கூறினார், “நீங்கள் சுகச்சேபனை உங்களுடைய மூத்த சகோதரனாக ஏற்றுக் கொண்டதால், நான் மிகவும் திருப்தியடைகிறேன். என் உத்தரவை ஏற்றதன் மூலம், தகுதியுள்ள மகன்களுக்கு என்னை நீங்கள் தந்தையாக்கினீர்கள். எனவே நீங்களும் மகன்களுக்குத் தந்தைகள் ஆக வேண்டுமென்று நான் ஆசிர்வதிக்கிறேன்.”

பதம் 9.16.36
ஏஷ வ: குசிகா வீரோ தேவராதஸ் தம் அன்வித
அன்யே சாஷ்டக-ஹாரீத-ஜய-க்ரதுமத்-ஆதய:

ஏஷ:—இந்த (சுனச்சேபன்); வ:—உங்களைப் போலவே; குசிகா:—குசிகர்களே; வீர:—என் மகன்; தேவராத:—இவன் தேவராதன் என்பவனாவான்; தம்—இவனது; அன்வித—சொற்படி நடந்து கொள்ளுங்கள்; அன்யே—மற்றவர்கள்; ச—கூட; அஷ்டக—அஷ்டகன்; ஹாரீத—ஹாரீதன்; ஜய—ஜயன்; க்ரதுமத்—கிரதுமான்; ஆதய:—மேலும் மற்றவர்கள்.

விஸ்வாமித்திரர் கூறினார், “குசிகர்களே (கெளசிக வம்சத்தினரே) இந்த தேவராதன் என் மகனும், உங்களில் ஒருவனுமாவான். இவனுடைய உத்தரவுப்படி நடந்து கொள்ளுங்கள்.” பரீட்சித்து மகாராஜனே, விஸ்வாமித்திரருக்கு அஷ்டகன், ஹரீதன், ஜயன் மற்றும் கிரதுமான் போன்ற வேறு பல மகன்களும் இருந்தனர்.

பதம் 9.16.37
ஏவம் கெளசிக-கோத்ரம் து விஸ்வாமித்ரை: ப்ருதக்-விதம்
ப்ரவராந்தரம் ஆபன்னம் தத் தி சைவம் ப்ரகல்பிதம்

ஏவம்—இவ்வாறாக (மகன்களில் சிலர் சபிக்கப்பட்டும், சிலர் ஆசீர்வதிக்கப்பட்டும்); கெளசிக-கோத்ரம்—கெளசிக வம்சம்; து—உண்மையில்; விஸ்வாமித்ரை:—விஸ்வாமித்திரரின் மகன்களால்; ப்ருதக்-விதம்—வெவ்வேறு விதங்களில்; ப்ரவர-அந்தரம்—அவர்களுக்கிடையில் வேறுபாடுகளை; ஆபன்னம்—அடைந்தனர்; தத—அந்த; ஹி—உண்மையில்; ச—மேலும்; ஏவம்—இவ்வாறாக; ப்ரகல்பிதம்—கருதப்பட்டார்.

விஸ்வாமித்திரர் தமது மகன்களில் சிலரைச் சபித்து, மற்றவர்களை ஆசீர்வதித்தார். மேலும் ஒரு மகனைத் தத்தும் எடுத்துக் கொண்டார். இவ்வாறாக, கெளசிக வம்சத்தில் வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அவரது மகன்களுக்கிடையில் தேவராதன் மூத்தவராக கருதப்பட்டார்.


ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “க்ஷத்திரிய வம்சத்தை பரசுராமர் அழித்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare