அத்தியாயம் – 16
க்ஷத்திரிய வம்சத்தை பரசுராமர் அழித்தல்
பதம் 9.16.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: குரு வம்சத்தின் புத்திரரான பரீட்சித்து மகாராஜனே, தந்தை இட்ட கட்டளையை “இப்படியே ஆகட்டும்” என்று உடனே ஏற்றுக்கொண்ட பகவான் பரசுராமர் ஒரு வருஷம் தீர்த்தயாத்திரை செய்து முடித்து தந்தையின் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

பதம் 9.16.2 : ஒரு சமயம் ஜமதக்னியின் மனைவியான ரேணுகா நீர் கொண்டு வருவதற்காக கங்கை நதிக்கரைக்குச் சென்றாள். அங்கு தாமரை மாலை அணிந்திருந்த கந்தர்வராஜன் சுவர்க்கலோகப் பெண்களுடன் (அப்ஸரஸ்த்ரீகளுடன்) கங்கையில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

பதம் 9.16.3 : கங்கையிலிருந்து நீர் கொண்டுவருவதற்காகச் சென்றவள், கந்தர்வ ராஜனான சித்திரரதன் சுவர்க்கலோகப் பெண்களுடன் விளையாடுவதைக் கண்டு, அவனிடம் சபலங்கொண்டவளாய், யாகத்திற்குரிய நேரம் கடப்பதையும் மறந்துவிட்டாள்.

பதம் 9.16.4 : பிறகு யாக காலம் கடந்துவிட்டதை உணர்ந்து, கணவர் சபித்துவிடுவாரோ என்றஞ்சிய ரேணுகா, திரும்பி வந்ததும் கலசத்தை அவர் முன் வைத்து கரம்கூப்பி நின்றாள்.

பதம் 9.16.5 : தன் மனைவியின் மனம் சஞ்சலமடைந்ததை உணர்ந்த மாமுனிவரான ஜமதக்னி, “புத்திரர்களே பாவமிழைத்த இவளை கொல்லுங்கள்!” என்று கோபத்துடன் தன் புத்திரர்களிடம் கூறினார். ஆனால் அவரது கட்டளையை மகன்கள் நிறைவேற்றவில்லை.

பதம் 9.16.6 : பிறகு, இக்கட்டளையை மீறிய சகோதரர்களையும், மனதால் விபச்சாரம் செய்த தாயையும் கொல்லும்படி, ஜமதக்னி தம் இளைய மகனான பரசுராமருக்கு உத்தரவிட்டார். தியானத்தாலும், தவத்தாலும் தம் தந்தை பெற்றிருந்த சக்தியை அறிந்திருந்த பகவான் பரசுராமர் உடனே தம் தாயையும், சகோதரர்களையும் கொன்றார்.

பதம் 9.16.7 : பரசுராமரிடம் மகிழ்ந்த சத்தியவதியின் புத்திரரான ஜமதக்னி, வேண்டிய வரத்தைக் கேட்கும்படி கூற, பகவான் பரசுராமர் கேட்டார், “என் தாயும், சகோதரர்களும் என்னால் கொல்லப்பட்ட ஞாபகமே இல்லாமல் உயிர் பெறட்டும். இதுதான் நான் கேட்கும் வரம்”.

பதம் 9.16.8 : அதன்பிறகு, ஜமதக்னியின் வரத்தால், பகவான் பரசுராமரின் தாயும், சகோதரர்களும், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுவதைப் போல் உடனே மகிழ்ச்சியுடன் உயிர் பெற்றெழுந்தனர். பகவான் பரசுராமர் தம் தந்தையின் தவவலிமையுயம், புலமையையும் நன்கு அறிந்திருந்ததால், தந்தையின் கட்டளைப்படி உறவினர்களைக் கொன்றார்.

பதம் 9.16.9 : பரீட்சித்து மகாராஜனே, கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள், பரசுராமரால் தங்கள் தந்தை கொல்லப்பட்டதை மனதிற் கொண்டு, அவரது பராக்கிரமத்திற்கஞ்சி எப்போதும் நிம்மதியற்று இருந்தனர்.

பதம் 9.16.10 : ஒருசமயம், பரசுராமர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி வசுமானுடனும், மற்ற சகோதரர்களுடனும் வனத்திற்குச் சென்றார். அச்சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள், விரோதத்தை பழிதீர்த்துக் கொள்வதற்காக ஜமதக்னியின் ஆசிரமத்தை அணுகினார்.

பதம் 9.16.11 : கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள் பாவம் செய்வதில் உறுதியாக இருந்தனர். எனவே உத்தமமான சுலோகங்களால் போற்றப்படுபவரான பரமபுருஷரை தியானித்தவாறு, யாகம் செய்ய யாக சாலையில் ஜமதக்னி அமர்ந்திருப்பதைக் கண்ட அவர்கள், அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரைக் கொன்று விட்டனர்.

பதம் 9.16.12 : பரசுராமரின் தாயும், ஜமதக்னியின் மனைவியுமான ரேணுகா, தன் கணவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி இரங்கத்தகுந்த முறையில் மன்றாடினாள். ஆனால் க்ஷத்திரிய குணமில்லாத கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள் இரக்கமின்றி ஆவேசத்துடன் அவரது தலையைத் துண்டித்து அதை எடுத்துச் சென்றார்.

பதம் 9.16.13 : பதிவிரதையான ரேணுகா தன் கணவரைப் பறிகொடுத்த துக்கத்தாலும், சோகத்தாலும் பீடிக்கப்பட்டவளாய் தன்னைத்தானே அடித்துக் கொண்டு, “அருமைப் புதல்வனே ராமா, ஓ ராமா!” என்று உரத்த குரலில் கதறினாள்.

பதம் 9.16.14 : ஜமதக்னியின் புத்திரர்களான பகவான் பரசுராமர் முதலானவர்கள் ஆசிரமத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்த போதிலும், “அருமைப் புதல்வனே, ஓ ராமா” என்ற ரேணுகாவின் துன்பம் மிகுந்த குரலைக் கேட்டு, விரைவாக ஆசிரமத்திற்குத் திரும்பி, தந்தை கொல்லப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

பதம் 9.16.15 : துக்கம், கோபம், அவமானம், வருத்தம் மற்றும் சோகம் ஆகியவற்றினால் உண்மையாகவே திகைப்புற்ற ஜமதக்னியின் புத்திரர்கள், “ஒ தந்தையே, மகா முனிவரே, புண்ணிய புருஷரே, எங்களை விட்டுவிட்டு நீங்கள் சுவர்க்க லோகங்களுக்குச் சென்றுவிட்டீரா” என்று கதறினர்.

பதம் 9.16.16 : இவ்வாறு விசனப்பட்ட பகவான் பரசுராமர், தம் தந்தையின் உயிரற்ற உடலை சகோதரர்களிடம் ஒப்படைத்து விட்டு, உலகிலுள்ள எல்லா க்ஷத்திரியர்களுக்கும் ஒரு முடிவு கட்டும் எண்ணத்துடன் தமது கோடரியைக் கையிலெடுத்தார்.

பதம் 9.16.17 : அரசே, ஒரு பிராமணரைக் கொன்ற பாவத்தால் ஐசுவரியத்தை இழந்து நாசமடைந்து போயிருந்த மாஹிஷ்மதிக்குச் சென்ற பகவான் பரசுராமர், கார்த்தவீர்யார்ஜுனனுடைய மகன்களின் தலைகளைக் கொய்து, நகர மத்தியில் மலைபோல் குவித்தார்.

பதங்கள் 9.16.18 – 9.16.19 : இம்மகன்களின் உடல்களிலிருந்து பெருக்கெடுத்த இரத்தத்தினால் பகவான் பரசுராமர் கோரமான ஒரு நதியை உண்டாக்கினார். பிராமண பண்பாட்டை மதிக்காத அரசர்களுக்கு இது பெரும் பயத்தை ஏற்படுத்தியது. அரசாங்க பொறுப்பை வகித்த க்ஷத்திரியர்கள் பாவங்களைச் செய்ததால், பகவான் பரசுராமர் அவர்கள் தம் தந்தையைக் கொன்றதை ஒரு சாக்காகக் கொண்டு, பழிவாங்கும் எண்ணத்துடன், பூமியில் க்ஷத்திரிய குலமே இல்லாது போகும்படி அவர்களை இருபத்தொரு தடவைகள் நாசம் செய்தார். சியமந்த-பஞ்சகம் என்ற இடத்தில் ஒன்பது ஏரிகளை உருவாக்கிய அவர் அவற்றை அவர்களுடைய இரத்தத்தால் நிரப்பினார்.

பதம் 9.16.20 : அதன்பிறகு, தந்தையின் தலையை அவரது உடலுடன் பொருத்திய பரசுராமர் முழு உடலையும் நாணல் புல்லின் மேல் வைத்தார். பிறகு யாகங்களைச் செய்து, அனைத்து தேவர்களுக்கும், ஜீவராசிகளுக்கும் எங்கும் பரவிய பரமாத்மாவாக விளங்கும் பகவான் வாசுதேவரை வழிபடத் துவங்கினார்.

பதங்கள் 9.16.21 – 9.16.22 : யாகத்தை நிறைவேற்றி முடித்த பகவான் பரசுராமர் கிழக்குத் திசையை ஹோதா என்ற புரோகிதருக்கும், தென்திசையை பிரம்மா என்ற புரோகிதருக்கும், மேற்குத்திசையை அத்வர்யுவிற்கும், வடதிசையை உக்காதாவுக்கும், மேலும் வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு மற்றும் தென்மேற்கு ஆகிய நான்கு மூலைகளை மற்ற புரோகிதர்களும் பரிசாகக் கொடுத்தார். மேலும் நடுப்பகுதியை கஸ்யபருக்கும், ஆர்யாவர்தம் என்ற இடத்தை உபத்ரஷ்டாவுக்கும் அவர் கொடுத்தார். எஞ்சியதை உதவியாளர்களான ஸதஸ்யர்களுக்கு பகிர்ந்தளித்தார்.

பதம் 9.16.23 : அதன்பிறகு, யாகச் சடங்குகளைச் செய்து முடித்த பரசுராமர், அவப்ருத-ஸ்நானம் எனப்படும் ஸ்நாதனத்தை மேற்கொண்டார். பாவங்களெல்லாம் தீர்ந்தவராய், சரஸ்வதி நதிக்கரையில் நின்றிருந்த பகவான் பரசுராமர், மேகமற்ற ஆகாயத்திலுள்ள சூரியனைப்போல் காணப்பட்டார்.

பதம் 9.16.24 : இவ்வாறு பகவான் பரசுராமரால் ஆராதிக்கப்பட்டு, முழு ஞாபக சக்தியுடன் உயிர் பெற்றெழுந்த ஜமதக்னி, ஏழு நட்சத்திர மண்டலங்களிலுள்ள ஸப்த ரிஷிகளில் ஏழாவது ரிஷியானார்.

பதம் 9.16.25 : பரீட்சித்து மகாராஜனே, அடுத்த மன்வந்ததரத்தில், கமலக் கண்களையுடைய பரமபுருஷரும், ஜமதக்னி புத்திரருமான பகவான் பரசுராமர், வேத ஞானத்தை எடுத்துக் கூறுபவராக விளங்குவார். அதாவது, அவர் ஏழு ரிஷிகளில் ஒருவராக விளங்குவார்.

பதம் 9.16.26 : மகேந்திர பர்வதம் என்ற மலைப் பிரதேசத்தில், பகவான் பரசுராமர் மதிநுட்பமுள்ள ஒரு பிராமணராக இன்றும் வாழ்ந்து வருகிறார். க்ஷத்திரியருக்குரிய ஆயுதங்களை எல்லாம் துறந்து, பூரண திருப்தியடைந்தவராக வாழ்ந்து வரும் அவர், அவருடைய உயர்ந்த ஒழுக்கத்திற்காகவும், செயல்களுக்காகவும், சுவர்க்கலோக வாசிகளான சித்தர்களாலும், சாரணர்களாலும் மற்றும் கந்தர்வர்களாலும் துதித்துப் போற்றப்படுகிறார்.

பதம் 9.16.27 : இவ்விதமாக பரமாத்மாவும், பரமபுருஷரும், பரம ஆளுனருமான பகவான், பிருகு வம்சத்தில் அவதரித்து, விரும்பத்தகாத அரசர்களைப் பலமுறைகள் கொன்று பிரபஞ்சத்தின் பாரத்தைப் போக்கினார்.

பதம் 9.16.28 : காதி மகாராஜனின் புத்திரரான விஸ்வாமித்திரர் தீச்சுடர்களைப் போல் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். அவர் ஒரு க்ஷத்திரியரின் அந்தஸ்திலிருந்து, கடுந்தவங்களையும், விரதங்களையும் மேற்கொண்டு, ஒரு சக்திவாய்ந்த பிராமணரின் அந்தஸ்தை அடைந்தார்.

பதம் 9.16.29 : பரீட்சித்து மகாராஜனே, விஸ்வாமித்திரருக்கு 101 மகன்கள் இருந்தனர். அவர்களுள் நடுவராக இருந்தவர் மதுச்சந்தஸ் எனப்பட்டார். அவர் பெயரைக் கொண்டே மற்றெல்லா மகன்களும் மதுச்சந்தர்கள் என்று புகழ்பெற்றனர்.

பதம் 9.16.30 : பிருகு வம்சத்தில் பிறந்தவரும், அஜீகர்தரின் புத்திரருமான சுனச்சேபனை விஸ்வாமித்திரர் தமது மகன்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டார். அவர் தேவராதன் என்றும் அறியப்பட்டார். சுனச்சேபனைத் தங்களது மூத்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி, தம்முடைய மற்ற மகன்களுக்கு விஸ்வாமித்திரர் உத்தரவிட்டார்.

பதம் 9.16.31 : சுனச்சேபனை ஹரிச்சந்திரனின் யாகத்தில் ஒரு யாகப் பசுவாக பலி கொடுப்பதற்காக, சுனச்சேபனின் தந்தை அவரை விலைக்கு விற்றுவிட்டார். யாக அரங்கிற்குள் கொண்டுவரப்பட்ட சுனச்சேபன், விடுதலைகோரி தேவர்களிடம் வேண்டியதால், அவர்களின் கருணையால் விடுவிக்கப்பட்டார்.

பதம் 9.16.32 : சுனச்சேபன் பார்கவ வம்சத்தில் பிறந்தவர் என்றபோதிலும், ஆன்மீக வாழ்வில் அவர் மிகவும் முன்னேறியவராக இருந்தார். எனவே யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அவரைக் காப்பாற்றினர். இதனால் தேவராதன் என்று பெயர்பெற்ற அவர் காதி வம்சத்தவர் என்றும் புகழப்பட்டார்.

பதம் 9.16.33 : சுனச்சேபனை மூத்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி தந்தையால் உத்தரவிடப்பட்டபோது, விஸ்வாமித்திரரின் மகன்களான மதுச்சந்தர்களில், மூத்தவர்களாக இருந்த ஐம்பது பேரும் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் கோபங் கொண்ட விஸ்வாமித்திரர், “கெட்ட மகன்களான நீங்கள், வேதப் பாண்பாட்டை மீறியதால் மிலேச்சர்கள் ஆகக் கடவீர்” என்று அவர்களைச் சபித்தார்.

பதம் 9.16.34 : மூத்த மதுச்சந்தர்கள் சபிக்கப்பட்டபோது, இளையவர்களான ஐம்பது பேரும், மதுச்சந்தஸ்ஸும் தங்கள் தந்தையிடம் சென்று, “தந்தையே உங்கள் ஏற்பாடு எதுவானாலும் அதற்கு நாங்கள் உடன்படுகிறோம்” என்று கூறினர்.

பதம் 9.16.35 : இவ்வாறாக சுனச்சேபனைத் தங்களது மூத்த சகோதரனாக ஏற்றுக் கொண்ட இளைய மதுச்சந்தர்கள், “உங்களுடைய உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுவோம்” என்று தந்தையிடம் கூறினர். பிறகு விஸ்வாமித்திரர் தன் கீழ்ப்படிந்த மகன்களிடம் கூறினார், “நீங்கள் சுகச்சேபனை உங்களுடைய மூத்த சகோதரனாக ஏற்றுக் கொண்டதால், நான் மிகவும் திருப்தியடைகிறேன். என் உத்தரவை ஏற்றதன் மூலம், தகுதியுள்ள மகன்களுக்கு என்னை நீங்கள் தந்தையாக்கினீர்கள். எனவே நீங்களும் மகன்களுக்குத் தந்தைகள் ஆக வேண்டுமென்று நான் ஆசிர்வதிக்கிறேன்.”

பதம் 9.16.36 : விஸ்வாமித்திரர் கூறினார், “குசிகர்களே (கெளசிக வம்சத்தினரே) இந்த தேவராதன் என் மகனும், உங்களில் ஒருவனுமாவான். இவனுடைய உத்தரவுப்படி நடந்து கொள்ளுங்கள்.” பரீட்சித்து மகாராஜனே, விஸ்வாமித்திரருக்கு அஷ்டகன், ஹரீதன், ஜயன் மற்றும் கிரதுமான் போன்ற வேறு பல மகன்களும் இருந்தனர்.

பதம் 9.16.37 : விஸ்வாமித்திரர் தமது மகன்களில் சிலரைச் சபித்து, மற்றவர்களை ஆசீர்வதித்தார். மேலும் ஒரு மகனைத் தத்தும் எடுத்துக் கொண்டார். இவ்வாறாக, கெளசிக வம்சத்தில் வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அவரது மகன்களுக்கிடையில் தேவராதன் மூத்தவராக கருதப்பட்டார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare