அத்தியாயம் – 14
புரூரவஸ் மகாராஜன் ஊர்வசிக்கு
வசியமாதல்
பதம் 9.14.1 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜனிடம் கூறினார்: அரசே! இதுவரை ஆரிய வம்ச வர்ணணையை நீர் கேட்டீர், இனி பெரும் புகழ் பெற்ற சந்திர வம்சத்தின் புண்ணிய கதையைக் கேளும். இவ்விவரணையில், ஐலனைப் (புரூரவஸ்) போன்ற புனித அரசர்கள் இடம் பெறுகின்றனர்.

பதம் 9.14.2 : பகவான் விஷ்ணு (கர்போதகசாயி விஷ்ணு) சஹஸ்ர-சீர்ஷ புருஷர் என்று அழைக்கப்படுகிறார். அவரது நாபியாகிய மடுவில் தோன்றிய தாமரையில் பிரம்ம தேவர் பிறந்தார். பிரம்ம தேவரின் புத்திரரான அத்ரி தந்தையைப் போலவே தகுதி பெற்றிருந்தார்.

பதம் 9.14.3 : அத்ரியின் ஆனந்தக் கண்ணீரிலிருந்து சோமன் என்று சந்திரதேவன் பிறந்தார். அவர் குளுமையான ஒளிக்கதிர்கள் நிறைந்தவராக இருந்தார். பிரம்மதேவர் அவரை பிராமணர்களுக்கும், மூலிகைகளுக்கும் மற்றும் நட்சத்திரங்களுக்கும் அதிபதியாக்கினார்.

பதம் 9.14.4 : மூவுலகங்களையும் வென்ற பின், சந்திர தேவனான சோமன், ராஜ சூய யக்ஞம் எனப்படும் பெரும்யாகம் ஒன்றைச் செய்தார். அவர் மிகவும் திமிர்பிடித்தவராக இருந்ததால், பிருஹஸ்பதியின் மனைவியான தாரையை பலாத்காரமாக தூக்கிச் சென்றார்.

பதம் 9.14.5 : தேவ குருவான பிருஹஸ்பதி, தாரையை திருப்பிக் கொடுத்துவிடும்படி திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்ட போதிலும், பொய் அகங்காரத்தினால் சோமன் அதைச் செய்யவில்லை. அதன் விளைவாக தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது.

பதம் 9.14.6 : பிருஹஸ்பதியிடம் கொண்ட விரோதத்தால் சுக்கிரன் சந்திர தேவனின் பக்கம் சேர்ந்தார். அசுரர்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர். ஆனால் தன் குரு புத்திரனிடமிருந்த பாசத்தால், சிவபெருமான், பூத கணங்களால் சூழப்பட்டவராய் பிருஹஸ்பதியின் பக்கம் சேர்ந்து கொண்டார்.

பதம் 9.14.7 : தேவேந்திரன் எல்லா வகையான தேவர்களாலும் சூழப்பட்டவராய் பிருஹஸ்பதியின் பக்கம் சேர்ந்து கொண்டார். இவ்வாறாக பிருஹஸ்பதியின் மனைவியான தாரையின் பொருட்டு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டு இரு பிரிவினரும் சேதமடைந்தனர்.

பதம் 9.14.8 : முழு சம்பவமும் அங்கிரரால் பிரம்மதேவருக்கு முழுமையாக அறிவிக்கப்பட்டபோது, அவர் சந்திர தேவனான சோமனைக் கடுமையாக தண்டித்தார். இவ்வாறாக பிரம்மா தாரையை அவளது கணவரிடம் ஒப்படைத்தார். அவரும் அவள் கர்ப்பிணியாக இருப்பதை பிறகு புரிந்து கொண்டார்.

பதம் 9.14.9 : பிருஹஸ்பதி கூறினார்: முட்டாள் பெண்ணே, நான் கருத்தரிக்கச் செய்வதற்காக இருந்த உன் கர்ப்பப்பை வேறொருவனால் கருத்தரிக்கச் செய்யப்பட்டது. உடனடியாக குழந்தையைப் பெற்றுவிடு! உடனடியாக அதைப் பெற்றுவிடு! குழந்தை பிறந்ததும் உன்னை நான் எரித்துச் சாம்பலாக்க மாட்டேன். இதை நீ நம்பலாம். ஒரு மகனுக்கு ஆசைப்பட்டு நீ கற்பை இழந்தாய் என்பதை நானறிவேன். எனவே உன்னை நான் தண்டிக்கப் போவதில்லை.

பதம் 9.14.10 : சுகதேவ தொடர்ந்து கூறினார்: பிருஹஸ்பதியின் கட்டளையால் மிகவும் வெட்கமடைந்த தாரை, தங்க நிற மேனியுடன் கூடிய மிகவும் அழகான ஒரு குழந்தையை உடனே பெற்றெடுத்தாள். பிருஹஸ்பதி, சந்திரதேவனான சோமன் ஆகிய இருவருமே அழகிய அக்குழந்தையை அடைய விரும்பினர்.

பதம் 9.14.11 : பிருஹஸ்பதியும், சந்திர தேவனும், “இது என் குழந்தை, உன்னுடையதல்ல!” என்று இருவருமே உரிமை கொண்டாடினர். எல்லா ரிஷிகளும், தேவர்களும் தாரையைப் பார்த்து இது உண்மையில் யாருடைய குழந்தை என்று கேட்டனர். ஆனால் வெட்கத்திற்குள்ளான அவளாள் உடனே பதில் கூற இயலவில்லை.

பதம் 9.14.12 : குழந்தை பிறகு மிகவும் கோபப்பட்டு, தன் தாயிடம் உடனே உண்மையைக் கூறும்படி கேட்டது. குழந்தை கூறியது, “கற்பிழந்த பெண்ணே தேவையற்ற உன்னுடைய வெட்கத்தினால் என்ன பயன்? உன் குற்றத்தை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறாய்? உன்னுடைய ஒழுக்கக்கேட்டைப் பற்றி உடனே என்னிடம் சொல்.”

பதம் 9.14.13 : பிரம்ம தேவர் பிறகு தாரையை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, அவளைச் சாந்தப்படுத்திய பின், குழந்தை உண்மையில் யாருக்குச் சொந்தம் என்று கேட்டார். அவளும், “இவன் சந்திர தேவனான சோமனின் மகன்” என்று மெதுவாக பதிலளித்தாள். சந்திரதேவனும் உடனே குழந்தையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.

பதம் 9.14.14 : பரீட்சித்து மகாராஜனே, குழந்தை ஆழ்ந்த புத்திசாலியாக இருப்பதைக் கண்ட பிரம்ம தேவர், குழந்தைக்கு புதன் என்று பெயர் சூட்டினார். நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரதேவன் இம்மகனால் ஆனந்தக் களிப்படைந்தார்.

பதங்கள் 9.14.15 – 9.14.16 : அதன்பிறகு, புதனிலிருந்து இளையின் கர்பத்தில் புரூரவஸ் என்ற ஒரு மகன் பிறந்தார். இவரைப் பற்றி ஒன்பதாம் காண்டத்தின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அவரது அழகு, இயல்புகள், தாராள குணம், ஒழுக்கம், செல்வம் மற்றும் சக்தி ஆகியவை நாரதரால் இந்திரனின் சபையில் விவரிக்கப்பட்டபோது, தேவ மங்கையான ஊர்வசி அவரால் கவரப்பட்டாள். இவ்வாறாக அவள் காமனின் கணைகளால் துளைக்கப்பட்டு அவரை அணுகினாள்.

பதங்கள் 9.14.17 – 9.14.18 : மித்திர, வருணர்களின் சாபத்தால் தேவ மங்கையான ஊர்வசி மானிட இயல்புகளைப் பெற்றாள், எனவே, மன்மதனின் அழகையொத்த, மிகச்சிறந்த ஆண்மகனான புரூரவஸ்ஸைக் கண்டதும் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரை அணுகினாள். புரூரவஸ் மகாராஜன் ஊர்வசியைக் கண்டதும், ஆனந்தப் பரவசத்தால் அவரது கண்கள் ஜொலித்தன, மெய் சிலிர்த்தது. இன்பமூட்டும் சாந்தமான வார்த்தைகளால், பின்வருமாறு அவளிடம் அவர் பேசலானார்.

பதம் 9.14.19 : புரூரவஸ் மகாராஜன் கூறினார்: பேரழகுப் பெண்மணியே, உன்னை வரவேற்கின்றேன். தயவுசெய்து இங்கமர்ந்து, உனக்காக நான் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் சொல், உன் விருப்பம்போல் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னுடன் நீ சுகம் அனுபவிக்கலாம். சிற்றின்ப உறவில் நாம் சந்தோஷமாக வாழ்வைக் கழிப்போம்.

பதம் 9.14.20 : ஊர்வசி பதிலளித்தாள்: ஆணழகனே, எந்த பெண்ணின் மனமும், பார்வையும் உம்மால் கவரப்படாமல் இருக்க முடியும்? உமது மார்பைப் புகலிடம் கொள்ளும் ஒரு பெண்ணால் உம்முடன் சிற்றின்ப சுகத்தை அனுபவிக்காமல் இருக்க முடியாதே!

பதம் 9.14.21 : அன்புள்ள புரூரவஸ் மகாராஜனே, என்னுடன் கீழே விழுந்த இவ்விரு செம்மறி ஆட்டுக் குட்டிகளுக்கும் நீங்கள் அடைக்கலம் தந்தருள வேண்டுகிறேன். நான் சுவர்க்க லோகங்களைச் சேர்ந்தவளாகவும், நீங்கள் மண்ணுலகைச் சேர்ந்தவராகவும் இருந்த போதிலும், உங்களுடன் நான் சிற்றின்ப சுகத்தை நிச்சயமாக அனுபவிப்பேன். எல்லா வகையிலும் நீங்கள் உயர்ந்தவராக இருப்பதால், உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை.

பதம் 9.14.22 : ஊர்வசி கூறினாள்: “எனதன்பிற்குரிய வீரரே, நெய்யால் சமைக்கப்பட்டவை மட்டுமே என் உணவாக இருக்கும். மேலும் புணரும் நேரத்தைத் தவிர வேறெந்த நேரத்திலும் உங்களை நிர்வாணமாகக் காண நான் விரும்பவில்லை.” மகா மனம் படைத்தவரான புரூரவஸ் மகாராஜனும் இத்தீர்மானங்களை ஏற்றுக்கொண்டார்.

பதம் 9.14.23 : புரூரவஸ் பதிலளித்தார்: அழகு மங்கையே, உன்னுடைய அழகு அற்புதம். உன் தோரணைகளும் அற்புதம். உண்மையில் மனித குலத்திற்கே நீ கவர்ச்சி மிக்கவளாக விளங்குகிறாய். எனவே, உன் சொந்த விருப்பத்தினால் நீ சுவர்க்க லோகத்திலிருந்து வந்திருப்பதால், உன்னைப் போன்ற ஒரு தேவதைக்குப் பணிவிடை செய்ய பூமியில் யார்தான் சம்மதிக்க மாட்டார்?

பதம் 9.14.24 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: மனிதரிலேயே மிகச் சிறந்தவரான புரூரவஸ் ஊர்வசியுடன் சுதந்திரமாக சுகம் அனுபவிக்கத் துவங்கினார். ஊர்வசியும், தேவர்கள் சுகம் அனுபவிக்கும் சைத்ரரதம் மற்றும் நந்தனகானம் முதலான பல சுவர்க்கம் போன்ற இடங்களில் அவருடன் சிற்றின்பச் செயல்களில் ஈடுபட்டு வந்தாள்.

பதம் 9.14.25 : ஊர்வசியின் உடல் தாமரையின் குங்குமப் பொடிபோல் நறுமணம் வீசியது. அவளது முகம் மற்றும் தேகத்தின் நறுமணத்தால் உற்சாகமடைந்த புரூரவஸ், பெரும் ஆனந்தத்துடன் பல நாட்களாக அவளுடன் சுகம் அனுபவித்து வந்தார்.

பதம் 9.14.26 : சுவர்க்க ராஜனான இந்திரன் தன் அரண்மனையில் ஊர்வசியைக் காணாது, “ஊர்வசி இல்லாமல் என் அரண்மனை பொலிவிழந்து கிடக்கிறது.” என்று கூறினார். இதனால் அவளை மீண்டும் சுவர்க்க லோகத்திற்கு அழைத்து வரும்படி கந்தர்வர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

பதம் 9.14.27 : இவ்வாறாக பூமிக்கு வந்த கந்தவர்கள், இருளடர்ந்து நள்ளிரவு நேரத்தில், புரூரவஸ்ஸின் வீட்டிற்குள் தோன்றி, அரசரின் மனைவியான ஊர்வசியால் ஒப்படைக்கப்பட்ட இரு செம்மறி ஆட்டுக் குட்டிகளையும் திருடிச் சென்றனர்.

பதம் 9.14.28 : இரு செம்மறி ஆட்டுக் குட்டிகளையும் ஊர்வசி தன் சொந்த மகன்களைப் போல் பாவித்தாள். எனவே, கந்தர்வர்களால் தூக்கிச் செல்லப்படும்போது அவை கத்தத் துவங்கின. அதைக் கேட்ட ஊர்வசி பின்வருமாறு தன் கணவரைத் திட்டினாள், “ஒரு கோழையாகவும், ஓர் அலியாகவும் இருந்தாலும் தன்னை ஒரு சிறந்த வீரர் என்று நினைக்கும் தகுதியற்ற ஒரு கணவரின் பாதுகாப்பிலுள்ள நான் இப்பொழுது கொல்லப்படுகிறேன்.”

பதம் 9.14.29 : “அவரையே நான் நம்பியிருந்ததால், கொள்ளைக்காரர்கள் என் இரு மகன்களாக உள்ள ஆட்டுக் குட்டிகளை தூக்கிக் கொண்டு போய்விட்டனர். எனவே இப்பொழுது என்னையே நான் இழந்தேன். பகலில் என் கணவர் ஓர் ஆணைப்போல் காணப்பட்டாலும், இரவில் அவர் ஒரு பெண்ணைப் போல் அச்சத்துடன் படுத்துக் கிடக்கிறார்.

பதம் 9.14.30 : யானை, ஒரு யானைப்பாகனால் அங்குசத்தைக் கொண்டு குத்தப்படுவதைப் போலவே, ஊர்வசியின் கூர்மையான சொற்களால் குத்தப்பட்ட புரூரவஸ் கடுங்கோபமடைந்தார். உடைகூட அணியாமல், வாளை எடுத்துக் கொண்டு நிர்வாணமாக இரவில், ஆட்டுக் குட்டிகளை திருடிச்சென்ற கந்தர்வர்களைப் பின்தொடர்ந்து வெளியே சென்றார்.

பதம் 9.14.31 : இரு ஆட்டுக்குட்டிகளையும் கீழே விட்டதும், கந்தவர்கள் மின்னலைப் போல் பிரகாசித்து, புரூரவஸ்ஸின் வீட்டை ஒளிமயமாக்கினர். பிறகு தன் கணவர் ஆட்டுக்குட்டிகளுடன் திரும்பி வருவதையும், ஆனால் நிர்வாணமாக இருப்பதையும் கண்டதால் ஊர்வசி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

பதம் 9.14.32 : கட்டிலில் ஊர்வசியைக் காணாததால் புரூரவஸ் மிகவும் வருந்தினார். அவளிடம் கொண்ட பெரும் கவர்ச்சியின் காரணத்தால், மிகவும் மனவருத்தமடைந்தார். இவ்வாறு வருத்தப்பட்ட அவர், ஒரு பித்தனைப்போல் பூமியில் சஞ்சரிக்கத் துவங்கினார்.

பதம் 9.14.33 : உலக முழுவதிலும் பிரயாணம் செய்தபோது, ஒருமுறை குருட்சேத்திரத்திலுள்ள சரஸ்வதி நதிக்கரையில், ஐந்து தோழிகளுடன் ஊர்வசி இருந்ததைக் கண்டார். பிறகு அவர் முகத்தில் ஆனந்தம் தவழ, இனிய வார்த்தைகளால் அவளிடம் பின்வருமாறு பேசலானார்.

பதம் 9.14.34 : எனதன்புள்ள மனைவியே, இரக்கமற்றவளே, தயவுசெய்து பொறுத்திரு, பொறுத்திரு. இன்றுவரை உன்னை நான் மகிழ்ச்சிப்படுத்தியதே இல்லை என்பதை நான் அறிவேன். ஆனால் அக்காரணத்திற்காக என்னை நீ கைவிட்டு விடக் கூடாது. அது சரியல்ல. என்னுடைய உறவையே விட்டுவிடுவதென நீ முடிவு செய்திருந்தாலும், நாம் சிறிது நேரம் பேசலாமே.

பதம் 9.14.35 : ஓ தேவதையே, இப்பொழுது நீ என்னை ஏற்க மறுத்துவிட்டாய். இதனால் என்னுடைய அழகிய உடல் இங்கேயே விழுந்துவிடும். இவ்வுடல் உன் சுகத்திற்குப் பொருத்தமற்றதாக இருப்பதால், இது நரிகளாலும், கழுகுகளாலும் தின்னப்படும்.

பதம் 9.14.36 : ஊர்வசி கூறினாள்: அன்புள்ள அரசே, நீங்கள் ஓர் ஆண், வீரர். பொறுமையிழந்து உயிர் துறக்க வேண்டாம். நிதானமாக இருங்கள். நரிகளைப் போல், உமது புலன்களே உம்மை வென்றுவிட அனுமதிக்க வேண்டாம். நரிகள் உம்மைத் தின்றுவிடும்படி செய்யாதீர். மாறாக, பெண்ணின் இதயம் நரியைப் போன்றது என்பதை நீர் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களுடன் நட்புக் கொள்வதில் பயனில்லை.

பதம் 9.14.37 : பெண்கள் பிரிவினர் இரக்கமற்றவர்களும், கபடமுள்ளவர்களுமாவர். சிறு பிழையையும் அவர்களால் பொறுக்க முடியாது. தங்களுடைய சொந்த சுகத்திற்காக அவர்கள் எந்த அதர்மத்தையும் செய்யக் கூடியவர்கள் என்பதால், விசுவாசமுள்ள ஒரு கணவனையோ அல்லது சகோதரனையோ கூட அவர்கள் கொல்லத் தயங்கமாட்டார்கள்.

பதம் 9.14.38 : ஆண்களால் பெண்கள் மிகவும் சுலபமாக நெறிதவறச் செய்யப்படுகின்றனர். எனவே நெறி கெட்ட பெண்கள், அவர்களுடைய நலனில் அக்கறை கொண்டுள்ள ஒருவனின் நட்பைத் துறந்து, முட்டாள்களுக்கிடையில் பொய்யான நட்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில் அவர்கள் ஒவ்வொருவராக புதுப்புது நண்பர்களை தேடிச் செல்கின்றனர்.

பதம் 9.14.39 : அரசே, ஒவ்வோராண்டின் இறுதியிலும், ஓரிரவு மட்டுமே என்னுடைய கணவராக என்னுடன் நீங்கள் சுகம் அனுபவிக்க இயலும். இவ்வாறாக, ஒருவர் பின் ஒருவராக மற்ற குழந்தைகளும் உங்களுக்குக் கிடைப்பார்கள்.

பதம் 9.14.40 : ஊர்வசி கர்ப்பிணியாக இருப்பதைப் புரிந்து கொண்ட புரூரவஸ் தன் அரண்மனைக்குத் திரும்பினார். ஆண்டுக் கடைசியில், குருட்சேத்திரத்தில், மீண்டும் ஊர்வசியின் சகவாசத்தை அவர் பெற்றார். அப்போது அவள் ஒரு வீர மகனுக்குத் தாயாக இருந்தாள்.

பதம் 9.14.41 : வருடக் கடைசியில் ஊர்வசியை மறுபடியும் அடைந்த புரூரவஸ் மகாராஜன் பெரு மகிழ்ச்சியடைந்து, ஓரிரவு அவளுடன் சிற்றின்ப உறவை அனுபவித்தார். ஆனால் அவளது பிரிவைப்பற்றி எண்ணியதும் அவர் மனவருத்தமடைந்தார். எனவே ஊர்வசி அவரிடம் பின்வருமாறு பேசினாள்.

பதம் 9.14.42 : ஊர்வசி கூறினாள்: “அன்புள்ள அரசே, கந்தர்வர்களால் என்னை மீண்டும் உங்களிடம் ஒப்படைக்க முடியும் என்பதால் அவர்களைத் தஞ்சமடையுங்கள்.” இவ்வார்த்தைகளுக்கேற்ப, அரசரும் பிரார்த்தனைகளால் கந்தர்வர்களைத் திருப்திப்படுத்தினார். அவரிடம் திருப்தியடைந்த கந்தர்வர்கள், ஊர்வசியைப் போலவே காணப்பட்ட ஓர் அக்னிஸ்தாலிப் பெண்ணை அவருக்குக் கொடுத்தனர். அவள் ஊர்வசி தான் என்ற நினைப்புடன் அரசர் அவளுடன் வனத்தில் நடக்கத் துவங்கினார். ஆனால் பிறகு அவள் ஊர்வசியல்ல, அக்னிஸ்தாலி என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

பதம் 9.14.43 : பிறகு அக்னிஸ்தாலியை வனத்திலேயே விட்டுவிட்டு வீடு திரும்பிய புரூரவஸ் மகாராஜன் இரவு முழுவதும் ஊர்வசியைப் பற்றியே தியானித்தார். இவ்வாறு அவர் தியானம் செய்து வந்த நேரத்தில், திரேதாயுகம் துவங்கியது. இதனால் பலன்கருதும் செயல்களை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய யாகத்தைச் செய்யும் முறை உட்பட, மூவேதக் கோட்பாடுகளும் அவருடைய இதயத்தில் தோன்றின.

பதங்கள் 9.14.44 – 9.14.45 : கர்ம-காண்டத்தைச் செய்யும் முறை தன் இதயத்தில் தோன்றியதும், புரூரவஸ் மகாராஜன், தான் அக்னிஸ்தாலியை விட்டுச் சென்ற அதே இடத்திற்குச் சென்றார். அங்குள்ள ஒரு சமீ மரத்தின் கர்ப்பத்திலிருந்து, ஓர் அஸ்வத்த மரம் முளைத்திருப்பதை அவர் கண்டார். பிறகு அவர் அம்மரத்திலிருந்து ஒரு குச்சியை எடுத்து அதை இரு அரணிகளாகச் செய்தார். ஊர்வசி வசிக்கும் கிரகத்திற்குச் செல்ல விரும்பிய அவர், ஊர்வசியைக் கீழே உள்ள குச்சியாகவும், தன்னை மேலே உள்ள குச்சியாகவும், இரண்டிற்கும் நடுவிலுள்ள குச்சியை தன் மகனாகவும் தியானித்து மந்திரங்களை உச்சரித்தார். இவ்விதமாக அவர் ஒரு தீயை மூட்டத் துவங்கினார்.

பதம் 9.14.46 : புரூரவஸ்ஸால் தேய்க்கப்பட்ட அரணிகளிலிருந்து ஒரு தீ வந்தது. அத்தகைய ஒரு தீயால் பெளதிக சுகபோகத்தில் சர்வ வெற்றியை அடைய முடியும். மேலும் பௌதிக, ஆன்மீக பிறப்புகளில் தூய்மையடைய முடியும். அத்துடன் அ-உ-ம் என்ற அக்ஷரங்களின் சேர்க்கையால் ஆரம்பிக்கப்படும் யாகத்தைச் செய்வதிலும் வெற்றி பெற முடியும்.

பதம் 9.14.47 : ஊர்வசி வசிக்கும் கிரகத்திற்குச் செல்ல விரும்பிய புரூரவஸ், அத்தீயினால் ஒரு யாகத்தைச் செய்து, யாகப் பலன்களை அனுபவிப்பவரான பரமபுருஷ பகவான் ஹரியை திருப்திப்படுத்தினார். இவ்வாறாக, புலன்களால் உணர முடியாதவரும், அனைத்து தேவர்களுக்கும் பிறப்பிடமுமான பகவானை அவர் வழிபட்டார்.

பதம் 9.14.48 : முதல் யுகமான சத்திய யுகத்தில், எல்லா வேத மந்திரங்களும் ஒரே பிரணவ மந்திரத்தில் அடங்கியிருந்தன. எல்லா வேத மந்திரங்களுக்கும் வேர் இப்பிரணவ மந்திரமே அதாவது, அதர்வ வேதம் மட்டுமே எல்லா வேத அறிவிற்கும் மூலமாகும். பரமபுருஷரான நாராயணர் மட்டுமே வழிபாட்டுக்குரிய தெய்வமாக இருந்தார்; தேவர்களின் வழிபாடு சிபாரிசு செய்யப்படவில்லை. நெருப்பும் ஒன்றாகவே இருந்தது. மேலும் மனித சமுதாயத்திலிருந்த ஒரே பிரிவு ஹம்ஸம் எனப்பட்டது.

பதம் 9.14.49 : பரீட்சித்து மகாராஜனே, திரேதா யுகத்தின் ஆரம்பத்தில், புரூரவஸ் மகாராஜன் ஒரு கர்ம-காண்ட யாகத்தைத் துவக்கி வைத்தார். இவ்வாறாக யாகத்தீயை தன் மகனாகக் கருதிய புரூரவஸ்ஸால், அவரது விருப்பப்படியே கந்தர்வ லோகத்திற்குச் செல்ல முடிந்தது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare