அத்தியாயம் – 11
ஸ்ரீ ராம:ராஜ்யம்
பதம் 9.11.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அதன்பிறகு, பரமபுருஷரான பகவான் ராமச்சந்திரர் ஓர் ஆசார்யரை ஏற்று, செல்வச் சிறப்புள்ள கொழிக்கும் பொருட்களைக் கொண்ட யாகங்களைச் செய்தார். இவ்வாறாக அனைத்து தேவர்களுக்கும் தாம் பரமபுருஷரென்பதால், பகவான் தம்மைத் தாமே வழிபட்டார்.

பதம் 9.11.2 : பகவான் ராமச்சந்திரர் கிழக்குத் திசை முழுவதையும் ஹோதா புரோகிதருக்கும், தென்திசை முழுவதையும் ப்ரஹ்மா புரோகிதருக்கும், மேற்குத்திசையை அத்வர்யு புரோகிதருக்கும், வட திசையை சாம வேதம் ஒதுபவரான உத்காத புரோகிதருக்குமாக தமது இராஜ்யத்தையே வெகுமதியாகக் கொடுத்துவிட்டார்.

பதம் 9.11.3 : அதன்பிறகு, பிராமணர்களுக்கு பெளதிக ஆசைகள் இல்லையென்பதால், முழு உலகமும் அவர்களுக்குத்தான் உடைமையாக இருக்க வேண்டும் என்றெண்ணிய பகவான் ராமச்சந்திரர், கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு ஆகிய திசைகளுக்கு இடைப்பட்ட நிலத்தை ஆசார்யருக்குக் கொடுத்தார்.

பதம் 9.11.4 : இவ்வாறாக அனைத்தையும் பிராமணர்களுக்கு தானமாகக் கொடுத்துவிட்ட பகவான் ராமச்சந்திரர், தமது உடை, அணிகலன்களை மட்டுமே தம்முடன் வைத்திருந்தார். அதைப்போலவே ராணி சீதையும் கூட தமது மூக்குத்தியை மட்டுமே வைத்திருந்தாள்.

பதம் 9.11.5 : வெவ்வேறு யாகக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பிராமணர்கள் அனைவரும், தங்களிடம் பாசமாகவும், தங்களுக்கு ஆதரவாகவும் இருந்த பகவான் ராமச்சந்திரரிடம் மிகவும் திருப்தியடைந்தனர். இவ்வாறாக அவரிடமிருந்து பெற்ற வெகுமதிகளை எல்லாம் இளகிய மனங்கொண்டு அவரிடமே திருப்பிக் கொடுத்த அவர்கள் பின்வருமாறு பேசலாயினர்.

பதம் 9.11.6 : பகவானே, முழு பிரபஞ்சத்திற்கும் தாங்கள் ஈஸ்வரர். தாங்கள் எங்களுக்குக் கொடுக்காதது என்ன இருக்கிறது? எங்களுடைய இதய மத்தியில் புகுந்து, உங்களுடைய சுயப்பிரகாசத்தினால் எங்களுடைய அறியாமை இருளை சிதறடித்து விட்டீர்கள். இதுவே மிக உயர்ந்த பரிசாகும். பெளதிக நன்கொடை எங்களுக்குத் தேவையில்லை.

பதம் 9.11.7 : பகவானே, தாங்கள் பிராமணர்களை உங்களுடைய வழிபாட்டுக்குரியவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தங்களுடைய அறிவும், ஞாபகசக்தியும் ஒருபோதும் கவலையால் பாதிக்கப்படுவதேயில்லை. இவ்வுலகில் புகழ் பெற்றவர்கள் தாங்கள் முதலிடம் வகிக்கிறீர்கள். தங்களுடைய தாமரைப் பாதங்கள் தண்டனைகளுக்கு அப்பாற்பட்ட முனிவர்களால் வழிபடப்படுகின்றன. பகவான் ராமச்சந்திரரே, தங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்.

பதம் 9.11.8 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ஒருசமயம் பகவான் ராமச்சந்திரர், தம்மைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து வருவதற்காக, மாறு வேடம் பூண்டு யாருமறியாமல் இரவில் நடந்து செல்லும் போது, தம் மனைவி சீதாதேவிக்கு விரோதமாக ஒருவன் பேசுவதைக் கேட்டார்.

பதம் 9.11.9 : (நெறி தவறிய தன் மனைவியிடம் பேசிய அந்த மனிதன் கூறினான்) வேறொரு மனிதனின் வீட்டிற்குச் சென்றதால் நீ கற்பிழந்து தூய்மையற்றவளானாய். இனி உன்னை நான் பராமரிக்க மாட்டேன். வேறொருவரின் வீட்டிற்குச் சென்ற சீதையைப் போன்ற ஒரு மனைவியை, மனைவிக்கு அடங்கிய பகவான் ராமரைப் போன்ற ஒரு கணவர் ஏற்றுக் கொள்ளக் கூடும். அவரைப்போல் நானும் மனைவியின் கைப்பாவையல்ல. எனவே உன்னை நான் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

பதம் 9.11.10 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அறிவீனர்களும், துர்நடத்தை உள்ளவர்களும் அர்த்தமற்ற பேச்சுக்களைப் பேசுவார்கள். அத்தகைய அயோக்கியர்களுக்குப் பயந்த பகவான் ராமச்சந்திரர், மனைவி சீதை கர்ப்பிணியாயிருந்தபோதிலும் அவளைக் கைவிட்டார். இதனால் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றாள்.

பதம் 9.11.11 : நாளடைவில் கர்ப்பிணியாயிருந்த சீதாதேவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். இவர்கள் பிறகு லவன் மற்றும் குசன் என்று பிரசித்தி பெற்றனர். இவர்களுடைய பிறப்புக் கிரியைகள் வால்மீகி முனிவரால் செய்யப்பட்டன.

பதம் 9.11.12 : பரீட்சித்து மகாராஜனே, பகவான் லக்ஷ்மணருக்கு அங்கதன், சித்ரகேது என்ற இரு புத்திரர்கள் இருந்தனர். பகவான் பரதருக்கும் தக்ஷன், புஷ்கலன் என்ற இரு புத்திரர்கள் இருந்தனர்.

பதங்கள் 9.11.13 – 9.11.14 : சத்ருக்னருக்கு சுபாஹு, சுருதசேனன் என்ற இரு புத்திரர்கள் இருந்தனர். எல்லாத் திசைகளையும் வென்று வருவதற்குச் சென்ற பகவான் பரதர், பொதுவாக கந்தர்வகளைப்போல் பாசாங்கு செய்த கோடிக்கணக்கானவர்களைக் கொன்றார். அவர்களது செல்வங்களை எல்லாம் திரட்டி பகவான் ராமச்சந்திரரிடம் ஒப்படைத்தார். சத்ருக்னரும் கூட லவணன் என்ற இராட்சஸனைக் கொன்றார். இவன் மது எனும் இராட்சஸனின் மகனாவான். இவ்வாறாக மதுவனம் என்ற வனத்தில், மதுராபுரி என்ற நகரை அவர் நிர்மாணித்தார்.

பதம் 9.11.15 : தம் கணவரால் கைவிடப்பட்ட சீதாதேவி, தம் இரு புத்திரர்களையும் வால்மீகி முனிவரிடம் ஒப்படைத்தாள். பிறகு, பகவான் ராமச்சந்திரரின் தாமரைப் பாதங்களை தியானித்து, பூமிக்குள் புகுந்து மறைந்தாள்.

பதம் 9.11.16 : சீதாதேவி பூமிக்குள் பிரவேசித்த செய்தியைக் கேட்ட பகவான் உண்மையாகவே துக்கப்பட்டார். அவர் பரமபுருஷர் என்ற போதிலும், சீதாதேவியின் சீரிய குணங்களை நினைத்துப் பார்த்த அவரால், உன்னத அன்பினால் எழுந்த பிரிவுத் துயரை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

பதம் 9.11.17 : எல்லா இடங்களிலும் காணப்படும் ஆண் பெண் கவர்ச்சி; எல்லோரையும் எப்பொழுதுமே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய உணர்வுகள் பிரம்மதேவர் மற்றும் சிவபெருமானைப் போன்ற ஈஸ்வரர்களுக்கு இடையிலும் உள்ளது. இதுவே அவர்களின் பயத்திற்கும் காரணமாகும். எனவே, இந்த ஜட உலகின் குடும்ப வாழ்வில் பற்றுக் கொண்டுள்ள பிறரைப்பற்றி என்னென்று சொல்வது.

பதம் 9.11.18 : சீதாதேவி பூமிக்குள் புகுந்த பின், பகவான் ராமச்சந்திரர் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, பதின்மூன்றாயிரம் ஆண்டுகள் விடாமல் அக்நிஹோத்ர யக்ஞத்தைச் செய்தார்.

பதம் 9.11.19 : யாருடைய தாமரைப் பாதங்கள் தண்டகாரண்யத்தில் வாழ்ந்த போது சிலசமயங்களில் முட்களால் தைக்கப்பட்டனவோ, அந்த பகவான் ராமச்சந்திரர் யாகத்தைப் பூர்த்தி செய்தபின், தம்மையே எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பவர்களின் இதயங்களில் அத்தாமரைப் பாதங்களை வைத்தார். பிறகு பிரம்மஜோதிக்கும் அப்பாலுள்ள, தமது சொந்த வசிப்பிடமான வைகுண்ட லோகத்தில் புகுந்தார்.

பதம் 9.11.20 : தேவர்களின் வேண்டுகோளின்படி, அம்பு மழையால் இராவணனைக் கொன்றதாலும், சமுத்திரத்தில் பாலம் அமைத்ததாலும் பகவான் ராமச்சந்திரருக்குக் கிடைத்த புகழ், பரமபுருஷராகிய பகவான் ராமச்சந்திரருடைய உண்மையான புகழைக் குறிப்பிடுவதாகாது. அவரது ஆன்மீக உடல் எப்பொழுதும் பற்பல லீலைகளில் ஈடுபட்டுள்ளது. பகவான் ராமச்சந்திரருக்கு இணையானவரோ அல்லது அவரை விட உயர்ந்தவரோ ஒருவரும் இல்லை. எனவே இராவணனை ஜெயிக்க வானரர்களின் உதவியை ஏற்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை.

பதம் 9.11.21 : பகவான் ராமச்சந்திரரின் பெயரும், புகழும், எல்லாத் திசைகளையும் வெல்லும் பட்டத்து யானையின் அலங்காரத் துணிபோல், எல்லாத் திசைகளிலும் பிரசித்தி பெற்றவையாகும். மார்க்கண்டேய ரிஷியைப் போன்ற மாமுனிவர்கள், யுதிஷ்டிர மகாராஜனைப் போன்ற சிறந்த பேரரசர்களின் சபையில் இன்னமும் அவரது குணங்களைப் புகழ்கின்றனர். அவ்வாறே, சிவபெருமான் மற்றும் பிரம்மதேவர் உட்பட எல்லா ராஜரிஷிகளும், தேவர்களும் தங்களுடைய கிரீடங்களுடன் சிரம் தாழ்த்தி பகவானை வணங்குகின்றனர். அவரது தாமரைப் பாதங்களில் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

பதம் 9.11.22 : எந்த இடத்திற்கு பக்தி-யோகிகள் உயர்த்தப்படுகிறார்களோ, தம்முடைய அந்த வசிப்பிடத்திற்கு பகவான் ராமச்சந்திரர் திரும்பிச் சென்றார். பகவானுடைய லீலைகளின்போது, அவரை வணங்கியும், அவரது தாமரைப் பாதங்களைத் தொட்டும், தந்தையைப் போன்ற ஓரரசராக உண்மையாகவே அவரை ஏற்றும், அவருக்குச் சமமானவர்களைப் போல் அவருடன் அமர்ந்தும், படுத்துறங்கியும், நண்பனைப் போல் அவருடன் சென்றும் அவருக்குப் பணிவிடை செய்த அயோத்திவாசிகள் அனைவரும் அந்த இடத்திற்குத்தான் சென்றனர்.

பதம் 9.11.23 : பரீட்சித்து மகாராஜனே, பகவான் ராமச்சந்திரரின் லீலா விநோதங்களைப் பற்றி கேட்பவர் எவரும் இறுதியில் பொறாமை எனும் நோயிலிருந்தும், கர்ம பந்தத்திலிருந்தும் விடுபட்டு முக்தியடைவார்.

பதம் 9.11.24 : பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார். பகவான் எப்படி நடந்து கொண்டார்? மேலும் தமது சொந்த அம்சங்களான தம்பிமார்களுடன் அவர் எப்படி நடந்து கொண்டார்? அவரது தம்பிகளும், அயோத்தி வாசிகளும் அவரை எப்படி நடத்தினர்?

பதம் 9.11.25 : சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: தம்பி பரதனின் தீவிர வேண்டுகோளின்படி அரியாசனத்தை ஏற்றபின், எல்லாத் திசைகளுக்கும் சென்று உலகை வென்று வரும்படி பகவான் ராமச்சந்திரர் தம் தம்பிகளுக்குக் கட்டளையிட்டார். அச்சமயத்தில், எல்லா பிரஜைகளுக்கும். அரண்மனை வாசிகளுக்கும் தரிசனம் அளிப்பதற்காகவும், அரசாங்க விவகாரங்களைக் கண்காணிப்பதற்காகவும், பிற உதவியாளர்களுடன் பகவான் தலைநகரிலேயே தங்கினார்.

பதம் 9.11.26 : பகவான் ராமச்சந்திரரின் ஆட்சிக் காலத்தில் அயோத்தியின் வீதிகள் பன்னீராலும், வாசனைத் தைலங்களாலும், யானைகளின் தும்பிக்கைகளைக் கொண்டு தெளிக்கப்பட்டிருந்தன. நகர விவகாரங்களை பசுவானே நேரடியாக கண்காணித்து செல்வச் சிறப்புடன் நடத்துவதைக் கண்ட பிரஜைகள், இச்செல்வ மிகுதியை வெகுவாகப் போற்றினார்.

பதம் 9.11.27 : ராஜ மாளிகைகள், மாளிகை வாயில்கள், சபைக் கூடங்கள், சந்திப்பு மேடைகள், மற்றும் ஆலயங்கள் போன்ற எல்லா இடங்களும் தங்கக் கலசங்களாலும், பலவகையான கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பதம் 9.11.28 : பகவான் ராமச்சந்திரர் பார்வையிடச் சென்ற இடங்களிலெல்லாம், வாழை மரங்களுடனும், பாக்கு மரங்களுடனும், ஏராளமான மலர்களுடனும், பழங்களுடனும் கூடிய மங்களகரமான வரவேற்பு வாயில்கள் அமைக்கப்பட்டன. மேலும் அந்த வாயில்கள் பல வர்ணங்களைக் கொண்ட கொடிகளாலும், அலங்காரச் சீலைகளாலும், கண்ணாடிகளாலும் மற்றும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பதம் 9.11.29 : பகவான் ராமச்சந்திரர் பார்வையிடச் சென்ற இடங்களிலெல்லாம். மக்கள் வழிபாட்டுக்குரிய பொருட்களுடன் அவரை அணுகி, பகவானின் ஆசிர்வாதங்களை வேண்டினர். “பகவானே, தங்களுடைய வராஹ அவதாரத்தில் பூமியை கடலுக்கடியிலிருந்து தாங்கள் காப்பாற்றியதைப் போலவே, இப்பொழுதும் இதைத் தாங்கள் காத்து இரட்சித்து எங்களுக்கு அருள் புரியவேண்டும்.

பதம் 9.11.30 : அதன்பிறகு, பகவானை நீண்ட நாட்களாகக் காணாததால், ஆண்களும், பெண்களுமாகிய பிரஜைகள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி, அவரைக் காணும் ஆவலுடன் மாளிகைகளின் மேலுள்ள கூரைகளுக்கு ஏறிச் சென்றனர். தாமரைக் கண்களையுடைய பகவான் ராமச்சந்திரரின் திருமுகத்தைக் கண்டும் முற்றிலும் திகட்டப் பெறாத அவர்கள் அவர் மீது மலர்களைப் பொழிந்தனர்.

பதங்கள் 9.11.31 – 9.11.34 : அதன்பிறகு, பகவான் ராமச்சந்திரர் அவரது முன்னோர்களின் அரண்மனைக்குள் புகுந்தார். அரண்மனைக்குள் பல்வேறு பொக்கிஷங்களும், விலையுயர்ந்த அலமாரிகளும் இருந்தன. நுழைவாயிலின் இரு புறத்திலும் இருந்த இருக்கைகள் பவளத்தால் செய்யபட்டிருந்தன. முற்றங்கள் வைடூர்ய மணி பதித்த தூண்களால் சூழப்பட்டிருந்தன. தரை, மிகவும் பளபளப்பாக்கப்பட்ட மரகத மணியால் செய்யப்பட்டிருந்தது. அஸ்திவாரம் சலவைக் கல்லால் செய்யப்பட்டிருந்தது. அரண்மனை முழுவதுமே கொடிகளாலும், மாலைகளாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக ஒளி வீசியது. தூப, தீபங்களால் சூழப்பட்டிருந்த அரண்மனை, முற்றிலும் முத்துக்களாலேயே அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அரண்மனைக்குள் இருந்த ஆண்களும், பெண்களும் தேவர்களை ஒத்திருந்தனர். அவர்கள் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். அவர்களது உடல்களின் மேல் இருந்ததால் அவை அழகு பெற்று விளங்கின.

பதம் 9.11.35 : மிகச் சிறந்த மேதாவிகளில் தலைமையானவரும், பரமபுருஷருமாகிய பகவான் ராமச்சந்திரர், தமது இன்ப ஆற்றலாகிய சீதாதேவியுடன் அந்த அரண்மனையில் வாழ்ந்து, பூரண அமைதியை அனுபவித்தார்.

பதம் 9.11.36 : யாருடைய தாமரைப் பாதங்கள் பக்தர்களால் தியானிக்கப்படுகின்றனவோ, அந்த பகவான் ராமச்சந்திரர் மதக் கோட்பாடுகளை மீறாமல், தேவையான கால அளவிற்கு, உன்னத ஆனந்தத்தை அளிக்கக்கூடிய எல்லாப் பொருட்களுடனும் சுகத்தை அனுபவித்து வந்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare