அத்தியாயம் – 1
சுத்யும்ன மகராஜன் ஒரு பெண்ணாக மாறுதல்
பதம் 9.1.1 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: என் பிரபுவே சுகதேவ கோஸ்வாமி, தாங்கள் பல்வேறு மனுக்களின் ஆட்சிக் காலங்களைப் பற்றிய அனைத்தையும் தெளிவாக விளக்கினீர்கள். மேலும் அந்த ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த, எல்லையற்ற ஆற்றல் படைத்தவரான பரமபுருஷ பகவானின் அற்புதமான செயல்களைப் பற்றியும் விளக்கினீர்கள். இவைகளைப் பற்றிய அனைத்தையும் தங்களிடமிருந்து கேட்க நான் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருந்திருக்க வேண்டும்.

பதங்கள் 9.1.2 – 9.1.3 : சத்தியவிரதன் திராவிட தேசத்தின் சீரிய மன்னராவார். அவர் கடந்த யுகத்தின் முடிவில் பரமபுருஷரின் கருணையால் ஆன்ம ஞானத்தைப் பெற்றார். பிறகு அவர், அடுத்த மன்வந்தரத்தில் (மனுவின் ஆட்சிக் காலத்தில்), விவஸ்வானின் மகனான வைவஸ்வத மனுவானார். இந்த அறிவை நான் தங்களிடமிருந்து பெற்றேன். தாங்கள் ஏற்கனவே விளக்கியதைப்போல், இக்ஷ்வாகுவைப் போன்ற மன்னர்கள் அவருடைய புத்திரர்களாக இருந்தனர் என்பதையும் நான் அறிவேன்.

பதம் 9.1.4 : மகா பாக்கியசாலியும், சிறந்த பிராமணருமான சுகதேவ கோஸ்வாமியே, அவ்வெல்லா அரசர்களின் வம்சங்களையும், வம்ச சரித்திரங்களையும் தனித்தனியாக எங்களுக்கு விளக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். ஏனெனில், இத்தகைய விஷயங்களைத் தங்களிடமிருந்து கேட்பதில் நாங்கள் எப்பொழுதும் ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம்.

பதம் 9.1.5 : வைவஸ்வத மனுவின் வம்சத்தில் ஏற்கனவே தோன்றியவர்கள், எதிர்காலத்தில் தோன்றவிருப்பவர்கள் மற்றும் இப்போது தோன்றி இருப்பவர்கள் ஆகியோர் உட்பட, இவ்வம்சத்தில் பிறந்துள்ள எல்லா புகழ்பெற்ற அரசர்களின் ஆற்றல்களைப் பற்றியும் அன்புடன் எங்களுக்குக் கூறுவீராக.

பதம் 9.1.6 : சூத கோஸ்வாமி கூறினார்: மதக் கொள்கைகளை அறிந்தவர்களில் மிகச்சிறந்தவரான சுகதேவ கோஸ்வாமியிடம், வேத வல்லுனர்களின் கூட்டத்தில், இவ்வாறு பரீட்சித்து மகாராஜனால் விண்ணப்பிக்கப்பட்டதும், அவர் பேசுவதற்குத் தயாரானார்.

பதம் 9.1.7 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: எதிரிகளை அடக்குபவரான அரசே, மனு வம்சத்தைப் பற்றி இப்போது என்னிடமிருந்து மிகவும் விவரமாகக் கேளும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் கூறினாலும், அதைப்பற்றிய அனைத்தையும் ஒருவரால் கூறி முடிக்க முடியாது என்றபோதிலும், என்னால் இயன்றளவு அதை நான் விளக்குகிறேன்.

பதம் 9.1.8 : வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உயர்ந்தும், தாழ்ந்தும் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாகிய உன்னத பரமபுருஷர் மட்டுமே யுகத்தின் முடிவில் எஞ்சியிருந்தார். அப்போது, தோற்றுவிக்கப்பட்ட இப்பிரபஞ்சமோ அல்லது வேறெதுவோ இருக்கவில்லை. ஆனால் அவர் மட்டுமே இருந்தார்.

பதம் 9.1.9 : பரீட்சித்து மகாராஜனே, பரமபுருஷ பகவானின் நாபியிலிருந்து உற்பத்தியான ஒரு தங்கத் தாமரையின் மீது, நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவர் பிறந்தார்.

பதம் 9.1.10 : பிரம்ம தேவரின் மனதிலிருந்து மரீசி பிறந்தார். மரீசியினுடைய விந்தின் மூலமாக, தட்சனின் புத்திரிக்கு கசியபர் தோன்றினார். கசியபரின் மூலமாக அதிதிக்கு விவஸ்வான் பிறந்தார்.

பதங்கள் 9.1.11 – 9.1.12 : பாரத வம்சத்தில் மிகச் சிறந்தவரான மகாராஜனே, விவஸ்வானுக்கு சம்ஞாவின் மூலமாக சிராத்ததேவ மனு பிறந்தார். புலன்களை வென்றவரான சிராத்ததேவ மனு, அவரது மனைவியான சிரத்தையின் மூலமாக பத்து மகன்களைப் பெற்றெடுத்தார். இம்மகன்களின் பெயர்கள் இக்ஷ்வாகு, நிரகன், சர்யாதி, திஷ்டன், த்ருஷ்டன், கரூஷகன், நரிஷ்யந்தன், பிருஷத்ரன், நபகன் மற்றும் கவி என்பனவாகும்.



பதம் 9.1.13 : மனுவிற்கு முதலில் மகன்கள் இல்லை. ஆகவே, மித்ரா மற்றும் வருணன் ஆகிய தேவர்களை திருப்திப்படுத்தி, அவருக்கு ஒரு மகனை பெற்றுத் தருவதற்காக, ஆன்மீக அறிவில் மிகவும் முதிர்ந்தவரான மாமுனிவர் வஸிஷ்டர் ஒரு யாகத்தை நடத்தினார்.

பதம் 9.1.14 : அந்த யாகத்தின்போது, பாலை மட்டுமே பருகி உயிர்வாழும் விரதத்தை மேற்கொண்டிருந்த மனுவின் மனைவியான சிரத்தை யாகத்தை நடத்தும் புரோகிதரை அணுகி, அவரை வணங்கி, தனக்கு ஒரு மகன் வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள்.

பதம் 9.1.15 : “இப்போது யாகத்தில் நிவேதனம் செய்யவும்” என்று தலைமைப் புரோகிதர் கூறியதும், யாகப் பொறுப்பை ஏற்றிருந்தவர் நிவேதனம் செய்வதற்காக நெய்யை எடுத்தார். பிறகு மனுவினுடைய மனைவியின் விண்ணப்பத்தை அவர் நினைவிற்கொண்டு, வஷட் எனும் சொல்லை உச்சரித்து யாகத்தை நிறைவேற்றினார்.

பதம் 9.1.16 : ஒரு புத்திரனை பெறுவதற்காகத்தான் மனு அந்த யாகத்தைத் துவங்கினார். ஆனால் மனுவின் மனைவியால் புரோகிதர் வழி திருப்பப்பட்டதால், இளை எனும் பெயர் கொண்ட ஒரு மகள் பிறந்தாள். மகளைக் கண்ட மனு மிகவும் அதிருப்தி அடைந்து, தமது குருவான வஸிஷ்டரிடம் பின்வருமாறு கூறினார்.

பதம் 9.1.17 : பிரபுக்களே, நீங்கள் அனைவரும் வேத மந்திரங்களை உச்சரிப்பதில் நிபுணர்கள். அப்படி இருக்கும்போது, விருப்பத்திற்கு எதிரான பலன் எப்படி கிடைத்தது? இது வருந்தத்தக்க ஒரு விஷயம். வேத மந்திரங்களின் பலன்களில் இத்தகைய நேர் எதிரான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கக் கூடாது.

பதம் 9.1.18 : நீங்கள் அனைவரும் சுயக் கட்டுப்பாடு உள்ளவர்களும், சமமான மனநிலை கொண்டவர்களும், பரம சத்தியத்தை அறிந்தவர்களும் ஆவீர். தவத்தாலும், விரத்தாலும் நீங்கள் எல்லா பௌதிக களங்கத்திலிருந்தும் முழுவதுமாக தூய்மை அடைந்திருக்கிறீர்கள். உங்களுடைய வார்த்தைகள், தேவர்களுடையதைப் போல், ஒரு போதும் ஏமாற்றத்தை அளிக்காதவையாகும். பிறகு எப்படி உங்களுடைய மனவுறுதி தோல்வியடைந்தது ?

பதம் 9.1.19 : மனுவின் இச்சொற்களைக் கேட்டபின், மிகவும் சக்திவாய்ந்த முப்பாட்டனாராகிய வஸிஷ்டர், புரோகிதரின் முரண்பாடான செயலைப் புரிந்து கொண்டார். இவ்வாறாக அவர் சூரியதேவனின் புதல்வரிடம் பின்வருமாறு பேசினார்.

பதம் 9.1.20 : உமது புரோகிதர்கள் மூல நோக்கத்திலிருந்து விலகியதுதான் நோக்கத்தில் ஏற்பட்ட முரண்பாட்டுக்குக் காரணம். ஆயினும், எனது சொந்த திறமையினால் உங்களுக்கு ஒரு நல்ல புதல்வனை நான் அளிக்கப் போகிறேன்.

பதம் 9.1.21 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, மிகவும் சக்திவாய்ந்தவரும், புகழ்பெற்றவருமான வஸிஷ்டர் இம்முடிவைச் செய்தபின், இளையை ஓர் ஆணாக மாற்றிவிடுவதற்காக பரமபுருஷரான விஷ்ணுவிடம் பிரார்த்தனைகள் செய்தார்.

பதம் 9.1.22 : பரம ஆளுனரான பரமபுருஷ பகவான், வஸிஷ்டரிடம் திருப்தியடைந்து, அவருக்கு அவர் விரும்பிய வரத்தை அளித்தார். இவ்வாறாக இளை, சுத்யும்னன் எனும் பெயர் கொண்ட ஓர் அழகிய ஆணாக மாற்றப்பட்டாள்.

பதங்கள் 9.1.23 – 9.1.24 : பரீட்சித்து மகாராஜனே, ஒரு சமயம் வீரரான அந்த சுத்யும்னன், சில மந்திரிகளாலும், சகாக்களாலும் சூழப்பட்டவராய், சிந்துபிரதேசத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு குதிரைமீது சவாரி செய்து, வேட்டையாட காட்டிற்குச் சென்றார். அவர் கவசம் அணிந்திருந்ததுடன், அம்புகளாலும், விற்களாலும் அலங்கரிக்கப்பட்டு, மிகவும் அழகாகவும் இருந்தார். மிருகங்களைப் பின் தொடர்ந்து செல்லும் வேளையில், காட்டின் வடக்குப் பகுதியை அவர் அடைந்தார்.

பதம் 9.1.25 : வட திசையிலுள்ள மேரு மலையின் அடிவாரத்தில், சுகுமாரம் எனப்படும் வனம் ஒன்றுள்ளது. அங்கு உமாவுடன் சிவபெருமான் எப்பொழுதும் இன்பத்தில் ஈடுபட்டிருந்தார். அக்காட்டினுள் சுத்யும்னன் புகுந்தார்.

பதம் 9.1.26 : பரீட்சித்து மகாராஜனே, எதிரிகளை அடக்குவதில் வல்லவரான சுத்யும்னன் காட்டிற்குள் நுழைந்தவுடனேயே, அவர் ஒரு பெண்ணாக மாறியதையும், அவரது குதிரை ஒரு பெண் குதிரையாக மாறிவிட்டதையும் கண்டார்.

பதம் 9.1.27 : அவரைப் பின் தொடர்ந்தவர்களும், தங்களுடைய இனம் எதிரினமாக மாறிவிட்டதைக் கண்டு வருத்தம் தோய்ந்த முகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

பதம் 9.1.28 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: மிகவும் சக்திவாய்ந்த பிராமணரே, இந்த இடம் ஏன் இவ்வளவு சக்திவாய்ந்ததாக உள்ளது? இதை இவ்வளவு சக்திவாய்ந்ததாக மாற்றியவர் யார்? இதைப்பற்றி கேட்டறிய நான் மிகவும் ஆவலாக இருப்பதால், தயவுசெய்து இக்கேள்விக்கு பதில் கூறுங்கள்.

பதம் 9.1.29 : சுகதேவ கோஸ்வாமி பதில் கூறினார்: ஒரு சமயம், ஆன்மீக கட்டுப்பாட்டு விதிகளை முறையாகப் பின்பற்றிய சிறந்த முனிவர்கள், தங்களது உடல்களின் சுயப்பிரகாசத்தினால் எல்லாத் திசைகளின் இருளையும் போக்கியவாறு, அவ்வனத்தில் சிவபெருமானை காணச் சென்றனர்.

பதம் 9.1.30 : அம்பிகை நிர்வாணமாக இருந்ததால், மாமுனிவர்களைக் கண்டு மிகவும் வெட்கமடைந்தவளாய், உடனே தம் கணவரின் மடியிலிருந்து எழுந்து, தன் ஸ்தனங்களை மூடிக்கொள்ள முயன்றாள்.

பதம் 9.1.31 : சிவபெருமானும், பார்வதியும் உடலுறவு விவகாரங்களில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட பெரும் முனிவர்கள் அனைவரும் முன்னேறிச் செல்வதை உடனடியாக நிறுத்திக்கொண்டு, நர—நாராயணரின் ஆசிரமத்தை நோக்கிப் புறப்பட்டனர்.

பதம் 9.1.32 : அக்காரணத்தினால், தமது மனைவியை சந்தோஷப்படுத்துவதற்காகவே, சிவபெருமான் பின்வருமாறு கூறினார், “இந்த இடத்திற்குள் நுழையும் எந்த ஆணும் உடனே ஒரு பெண்ணாக மாறிவிடுவார்.

பதம் 9.1.33 : அன்று முதல், எந்த ஆணும் அந்த வனத்திற்குள் புகுந்ததில்லை. ஆனால் இப்போது ஒரு பெண்ணாக உருமாற்றப்பட்ட சுத்யும்ன மகாராஜன், தனது சகாக்களுடன் ஒரு வனத்திலிருந்து மற்றொன்றிற்கு நடக்க ஆரம்பித்தார்.

பதம் 9.1.34 : சுத்யும்னன், காம இச்சையைத் தூண்டும் அழகிய மங்கையரில் மிகச் சிறந்தவளாக உருமாற்றப்பட்டு, மற்ற பெண்களால் சூழப்பட்டிருந்தார். அழகுமிக்க இப்பெண் தனது ஆசிரமத்திற்கு அருகில் சுற்றித் திரிவதைக் கண்ட சந்திர குமாரனான புதன், உடனே அவளை அனுபவிக்க விரும்பினார்.

பதம் 9.1.35 : அழகு மங்கையாகிய அவளும் சோமராஜ புத்திரரான புதனைத் தன் கணவனாக அடைய விரும்பினாள். இவ்வாறாக புதன் அவளிடத்தில் புரூரவஸ் என்ற மகனைப் பெற்றார்.

பதம் 9.1.36 : இவ்வாறு பெண் தன்மையடைந்த, மனு புத்திரராகிய சுத்யும்ன மகாராஜன் தனது குலகுருவாகிய வசிஷ்டரை நினைத்துக் கொண்டார் என்பதை நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பதம் 9.1.37 : சுத்யுமனனின் பரிதாபமான அந்நிலையைக் கண்ட வசிஷ்டர் மிகவும் வருந்தினார். சுத்யுமனன் தனது ஆண்மையை திரும்பப் பெறுவதற்காக, வசிஷ்டர் மீண்டும் சங்கரரை (சிவபெருமான்) வழிபடத் துவங்கினார்.

பதங்கள் 9.1.38 – 9.1.39 : பரீட்சித்து மகாராஜனே, சிவபெருமான் வசிஷ்டரிடம் திருப்தியடைந்தார். எனவே அவரை மகிழ்விக்கவும், தமது சொந்த மனைவியான பார்வதிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும், சிவபெருமான் அம்முனிவரிடம் பின்வருமாறு கூறினார்: “உமது சீடனான சுத்யும்னன் ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் இருக்கட்டும். இவ்வாறு இஷ்டப்படி அவன் உலகை ஆளலாம்”.

பதம் 9.1.40 : சிவபெருமானின் வார்த்தைகளுக்கேற்ப, குருவின் அனுக்கிரகத்தினால், ஆண்மையைத் திரும்பப்பெற்ற சுத்யும்னன் ஒன்றுவிட்ட மாதங்களில் உலகை இவ்வாறு ஆண்டு வந்தார். ஆனால் பிரஜைகள் இதில் திருப்தியடையவில்லை.

பதம் 9.1.41 : அரசே, சுத்யும்னனுக்கு உத்கலன், கயன், விமலன் என்ற மூன்று குமாரர்கள் இருந்தனர். அவர்கள் தட்சிணா-பதத்தின் அரசர்களாயினார்.

பதம் 9.1.42 : அதன்பிறகு, காலம் கனிந்ததும், போதிய அளவு முதுமையை அடைந்த உலகப் பேரரசரான சுத்யும்னன், இராஜ்யம் முழுவதையும் தன் மகனான புரூரவஸ்ஸிடம் ஒப்படைத்துவிட்டு வனம் சென்றார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare