அத்தியாயம் – 9
பகவானின் மோஹினி:மூர்த்தி அவதாரம்
பதம் 8.9.1
ஸ்ரீ-சுக உவாச
தே ‘ன்யோன்யதோ ‘ஸுரா: பாத்ரம்
ஹரந்தஸ் த்யக்த-ஸௌஹ்ருதா:
க்ஷிபந்தோ தஸ்யு-தர்மாண
ஆயாந்தீம் தத்ருசு: ஸ்த்ரியம்

ஸ்ரீ சுக:உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; தே—அசுரர்கள்; அன்யோன்யத:—தங்களுக்கிடையில்; அஸுரா:—அசுரர்கள்; பாத்ரம்—அமிர்த கலசத்தை; ஹரன்த:—ஒருவருக்கொருவர் பறித்துக் கொண்டு; த்யக்த-ஸௌஹ்ருதா:—ஒருவரோடொருவர் விரோதம் கொண்டனர்; க்ஷிபந்த—சில சமயங்களில் வீசி எறிந்தும்; தஸ்யு-தர்மாண:—சில சமயங்களில் கொள்ளைக்காரர்களைப் போல் வெடுக்கென பிடுங்கியும்; ஆயாந்தீம்—முன்வந்து; தத்ருசு:—கண்டனர்; ஸ்த்ரியம்—மிகவும் கவர்ச்சியும், அழகும் கொண்ட ஒரு பெண்ணை.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அதன்பிறகு, அசுரர்கள் ஒருவரோடொருவர் விரோதம் கொண்டனர். தங்களுடைய சிநேகத்தைக் கைவிட்டு அமிர்த கலசத்தை எறிவதும் பறிப்பதுமாக இருந்தனர். இதற்கிடையில் அழகியதோர் இளம் மங்கை தங்களை நோக்கி வருவதை அவர்கள் கண்டனர்.

பதம் 8.9.2
அஹோ ரூபம் அஹோ தாம அஹோ அஸ்யா நவம் வய:
இதி தே தாம் அபித்ருத்ய பப்ரச்சுர் ஜாத-ஹ்ருச்-சயா:

அஹோ—என்ன அற்புதம்; ரூபம்—இவளது அழகு; அஹோ—என்ன அற்புதம்; தாம—இவளது தேகத்தின் காந்தி; அஹோ—என்ன அற்புதம்; அஸ்யா:—இவளது; நவம்—புதிய; வய:—அழகிய வயது; இதி—இவ்வாறாக; தே—அந்த அசுரர்கள்; தாம்—அழகு மங்கையிடம்; அபித்ருத்ய—வேகமாக அவள் முன் சென்று; பப்ரச்சு:—அவளிடம் விசாரித்தனர்; ஜாத-ஹ்ருத்-சயா:—அவளை அனுபவிக்க வேண்டுமெனும் காமம் அவர்களது இதயத்தில் நிரம்பியவர்களாய்.

அந்த அழகிய பெண்ணைக் கண்டதும் அசுரர்கள் கூறினர். ஐயோ, இவளது அழகு எவ்வளவு அற்புதமாக இருக்கிறது, இவளது தேகத்தின் ஒளி எவ்வளவு அற்புதமாக இருக்கிறது. இவளது இளம் வயதின் அழகு எவ்வளவு அற்புதமாக இருக்கிறது!” இவ்வாறு பேசிக் கொண்டு, அவளை அனுபவிக்க வேண்டுமெனும் காம ஆசை நிரம்பியவர்களாய், அவர்கள் வேகமாக அவளை அணுகி, பலவிதமாக அவளிடம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

பதம் 8.9.3
கா த்வம் கஞ்ச-பலாசாக்ஷி குதோ வா கிம் சிகீர்ஷஸி
கஸ்யாஸி வத வாமோரு மத்னதீவ மனாம்ஸி ந:

கா—யார்; த்வம்—நீ; கஞ்ச-பலாச-அக்ஷி—தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய; குத:—எங்கிருந்து; வா—எது; கிம் சிகீர்ஷஸி—நீ இங்கு வந்ததன் நோக்கமென்ன; கஸ்ய—யாருக்கு; அஸி—நீ சொந்தமானவள்; வத—தயவுசெய்து எங்களிடம் சொல்; வாம ஊரு—அசாதாரணமான அழகிய தொடைகளைக் கொண்டவளே; மத்னதீ—சஞ்சலப்படுத்தும்; இவ—போன்று; மனாம்ஸி—எங்களது மனங்களில்; ந:—எங்களது.

அதியற்புத அழகுடைய மங்கையே, உனக்கு ஒரு தாமரைப் பூவின் இதழ்களையொத்த எவ்வளவு அழகிய கண்கள் உள்ளன! யார் நீ? எங்கிருந்து வருகிறாய்? நீ இங்கு வந்ததன் நோக்கமென்ன? நீ யாருக்குச் சொந்தமானவள்? அசாதாரணமான அழகு வாய்ந்த தொடைகளை உன்னைக் காண்பதாலேயே எங்களது மனங்கள் சஞ்சலம் அடைகின்றன.

பதம் 8.9.4
ந வயம் த்வாமரைர் தைத்யை: ஸித்த-கந்தர்வ-சாரணை:
நாஸ்ப்ருஷ்ட-பூர்வம் ஜானீமோ லோகேசைஸ் ச குதோ ந்ருபி:

ந—அல்ல; வயம்—நாங்கள்; த்வா—உன்னிடம்; அமரை:—தேவர்களாலும்; தைத்யை:—அசுரர்களாலும்; ஸித்த—சித்தர்களாலும்; கந்தர்வ—கந்தர்வர்களாலும்; சாரணை:—மற்றும் சாரணர்களாலும்; ந—இல்லை; அஸ்ப்ருஷ்ட-பூர்வம்—ஒருபோதும் எவராலும் அனுபவிக்கப்பட்டவளோ அல்லது தொடப்பட்டவளோ அல்ல; ஜானீம:—சரியாக அறிந்த; லோக-ஈசை:—பிரபஞ்சத்தின் பல்வேறு நிர்வாகிகளாலும்; ச—கூட; குத:—அதைப்பற்றி என்னவென்று சொல்வது; ந்ருபி:—மனித சமூகத்தால்.

மனிதர்களைப் பற்றி என்னவென்று சொல்வது, தேவர்கள், அசுரர்கள், சித்தர்கள், கந்தவர்கள், சாரணர்கள் மற்றும் பிரபஞ்சத்தின் அநேக நிர்வாகஸ்தர்களாகிய பிரஜாபதிகளும்கூட, இதற்குமுன் உன்னை ஒருபோதும் தொட்டதில்லை. உன்னைப் பற்றி நாங்கள் எதுவும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்ல.

பதம் 8.9.5
நூனம் த்வம் விதினா ஸுப்ரூ: ப்ரேஷிதாஸி சரீரிணாம்
ஸர்வேந்ரிய-மன:-ப்ரீதிம் விதாதும் ஸக்ருணேன கிம்

நூனம்—உண்மையில்; த்வம்—உன்னை; விதினா—விதியால்; ஸு-ப்ரூ:—அழகிய புருவங்களைக் கொண்டவளே; ப்ரேஷிதா—அனுப்பியிருக்கிறார்; அஸி—நிச்சயமாக இதுதான் உண்மை; சரீரிணாம்—உடல்பெற்ற அனைத்து ஜீவராசிகளின்; ஸர்வ—எல்லா; இந்ரிய—புலன்களின்; மன:—மனதின்; ப்ரீதிம்—திருப்தி செய்வது; விதாதும்—ஆட்சி செய்வதற்கு; ஸ-க்ருணேன—உமது அகாரணமான கருணையால்; கிம்—அல்லவா.

அழகிய புருவங்களைக் கொண்ட அழகு மங்கையே, எங்களுடைய புலன்களையும், மனங்களையும் திருப்திபடுத்துவதற்காகவே, நிச்சயமாக பகவான் அவரது அகாரணமான கருணையால் உன்னை இங்கு அனுப்பியுள்ளார். இதுதான் உண்மை, அல்லவா?

பதம் 8.9.6
ஸா த்வம் ந: ஸ்பர்தமானானாம் ஏக-வஸ்துனி மானினி
ஞாதீனாம் பத்த-வைராணாம் சம் விதத்ஸ்வ ஸுமத்யமே

ஸா—அப்படியிருக்க நீதான்; த்வம்—நீயே; ந:—அசுரர்களாகிய எங்களின்; ஸ்பர்தமானானாம்—இன்னும் அதிக விரோதம் கொண்டவர்களாக மாறிக் கொண்டு இருப்பவர்களின்; ஏக-வஸ்துனி—ஒரு விஷயத்தில் (அமிர்த கலசம்); மானினி—உன்னுடைய பெருமைக்குரிய நிலையில் மிகவும் அழகு வாய்ந்தவளே; ஞாதீனாம்—எங்களுடைய குடும்ப அங்கத்தினருக்கிடையில்; பத்த-வைராணாம்—இன்னும் பெரிய எதிரிகளாக மாறிக்கொண்டு இருக்கிறோம்; சம்—மங்களம்; விதத்ஸ்வ—செய்ய வேண்டும்; ஸு-மத்யமே—மெல்லிய இடையுடைய அழகிய பெண்ணே.

அமிர்த கலசமெனும் இந்த ஒரு விஷயத்தினால், நாங்களனைவரும் இப்போது எங்களுக்கிடையில் விரோதம் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பினும் எங்களுடைய விரோதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. மெல்லிய இடையைக் கொண்ட மங்கையே நீ போற்றத்தக்க பெரும் அழகு வாய்ந்தவளாக இருக்கிறாய். ஆகவே எங்களுடைய வாக்குவாதத்தைத் தீர்த்து எங்களுக்கு உதவ வேண்டுகிறோம்.

பதம் 8.9.7
வயம் கஸ்யப-தாயாதா ப்ராதர: க்ருத-பௌருஷா:
விபஜஸ்வ யதா-ன்யாயாம் நைவ பேதோ யதா பவேத்

வயம்—நாங்கள் அனைவரும்; கஸ்யப-தாயாதா:—கஸ்யபமுனியின் சந்ததியினர்; ப்ராதர:—நாங்களனைவரும் சகோதரர்களாவோம்; க்ருத-பௌருஷா:—நாங்களனைவரும் ஆற்றலும், தகுதியும் உள்ளவர்கள்; விபஜஸ்வ:—பகிர்ந்தளிக்க வேண்டும்; யதா-ன்யாயம்—நியாயமாக; ந—இல்லாமல்; ஏவ—நிச்சயமாக; பேத:—பாரபட்சம்; யதா—அவ்வாறு; பவேத்—அவ்வாறு ஆக வேண்டும்.

அசுரர்களும், தேவர்களுமாகிய நாங்கள் அனைவரும் ஒரே தந்தையாகிய கஸ்யபருக்குக் பிறந்தவர்களாவோம். இவ்வாறாக நாங்கள் சகோதரர்கள் எனும் உறவு கொண்டுள்ளோம். ஆனால் இப்போது ஒரு சச்சரவில் எங்களுடைய சொந்த திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே எங்களது சச்சரவைத் தீர்த்து, அமிர்தத்தை எங்களுகிடையில் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டுகிறோம்.

பதம் 8.9.8
இதி உபாமந்த்ரிதோ தைத்யைர் மாயா-யோஷித்-வபுர் ஹரி:
ப்ரஹஸ்ய ருசிராபாங்கைர் நிரீக்ஷன் இதம் அப்ரவீத்

இதி—இவ்வாறு; உபாமந்த்ரித:—ஆர்வத்துடன் வேண்டிக்கொள்ளப்பட்டதால்; தைத்யை:—அசுரர்களால்; மாயா-யோஷித்—அந்த மாயப் பெண்; வபு: ஹரி:—பரமபுருஷ பகவானின் அவதாரமான; ப்ரஹஸ்ய—புன்னகை செய்து; ருசிர—அழகிய; அபாங்கை:—பெண்மைக்குரிய கவர்ச்சியான அம்சங்களைக் காட்டி; நிரீக்ஷன்—அவர்களைப் பார்த்து; இதம்—இச்சொற்களை; அப்ரவீத்—கூறினாள்.

இவ்வாறு அசுரர்களால் வேண்டிக்கொள்ளப்பட்டதும், ஓரழகிய பெண்ணுருவை ஏற்ற பரமபுருஷ பகவான், புன்னகை செய்யத் துவங்கினார். கவர்ச்சியான பெண்மைக்குரிய அபிநயங்களுடன் அவர்களைப் பார்த்தவாறு, அவர் பின்வருமாறு பேசினார்.

பதம் 8.9.9
ஸ்ரீ-பகவான் உவாச
கதம் கஸ்யப-தாயாதா: பும்ஸ்சல்யாம் மயி ஸங்கதா:
விஸ்வாஸம் பண்டிதோ ஜாது காமினீஷு ந யாதி ஹி

ஸ்ரீ-பகவான் உவாச—மோஹினி மூர்த்தியின் உருவிலிருந்த பரமபுருஷ பகவான் கூறினார்; கதம்—அதெப்படி; கஸ்யப-தாயாதா:—நீங்கள் எல்லோரும் கஸ்யப முனிவரின் சந்ததியினராவீர்; பும்ஸ்சல்யாம்—மனிதரின் மனங்களை சலனமடையச் செய்யும் ஒரு விலைமாதிடம்; மயி—என்னிடம்; ஸங்கதா:—என்னுடைய சகவாசத்தைத் தேடி வந்திருக்கிறீர்கள்; விஸ்வாஸம்—விசுவாசம்; பண்டித:—கற்றவர்கள்; ஜாது—எந்த நேரத்திலும்; காமினீஷு—ஒரு பெண்ணிடம்; ந—ஒருபோதும்; யாதி—நிகழ்கிறது; ஹி—உண்மையில்.

மோஹினி வடிவத்திலிருந்த பரமபுருஷ பகவான் அசுரர்களிடம் கூறினார்: கஸ்யப முனிவரின் மைந்தர்களே, சாதாரண ஒரு விலைமாது நான். என்னிடம் உங்களுக்கு எப்படி இவ்வளவு நம்பிக்கை ஏற்பட்டது? அறிவுள்ளவன் ஒருபோதும் ஒரு பெண்ணிடம் நம்பிக்கை வைக்கமாட்டான்.

பதம் 8.9.10
ஸாலாவ்ருகாணாம் ஸ்த்ரீணாம் ச ஸ்வைரிணீனாம் ஸுர-த்விஷ:
ஸக்யானி ஆஹுர் அநித்யானி நூத்னம் நூத்னம் விசின்வதாம்

ஸாலாவ்ருகாணாம்—குரங்குகள், குள்ள நரிகள் மற்றும் நாய்களின்; ஸ்த்ரீணாம் ச—மேலும் பெண்களின்; ஸ்வைரிணீனாம்—குறிப்பாக சுதந்திரமுள்ள பெண்கள்; ஸுர-த்விஷ:—அசுரர்களே; ஸக்யானி—சினேகம்; ஆஹு:—கூறப்படுகிறது; அனித்யானி—நிரந்தரமற்றதென்று; நூத்னம்—புது நண்பர்கள்; நூத்னம்—புது நண்பர்கள்; விசின்வதாம்—அவர்கள் நினைக்கின்றனர்.

அசுரர்களே, குரங்குகள், குள்ள நரிகள் மற்றும் நாய்கள் ஆகியவை தங்களின் பாலுறவில் ஒழுக்கமின்றி, ஒவ்வொரு நாளும் புதுப்புது நண்பர்களைத் தேடுவதைப் போலவே, சுதந்திரமாக வாழும் பெண்களும் தினமும் புதுப்புது நண்பர்களைத் தேடுகின்றனர். இத்தகைய ஒரு பெண்ணுடனான சிநேகம் ஒருபோதும் நிரந்தரமானதல்ல. இதுவே கற்றறிந்த பண்டிதர்களின் கருத்தாகும்.

பதம் 8.9.11
ஸ்ரீ-சுக உவாச
இதி தே க்ஷ்வேலிதைஸ் தஸ்யா ஆஸ்வஸ்த-மனஸோ ‘ஸுரா:
ஜஹஸுர் பாவ-கம்பீரம் ததுஸ் சாம்ருத-பாஜனம்

ஸ்ரீ சுக:உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; தே—அந்த அசுரர்கள்; க்ஷ்வேலிதை:—கேலி செய்வது போல் பேசி; தஸ்யா:—மோஹினி-மூர்த்தியின்; ஆஸ்வஸ்த—நம்பிக்கையுடனும், நன்றியுடனும்; மனஸ:—அவர்களின் மனங்கள்; அஸூரா:—எல்லா அசுரர்களும்; ஜஹஸு:—நகைத்தனர்; பாவ-கம்பீரம்—மோஹினி-மூர்த்தி கடுமை நிறைந்தவளாக இருந்த போதிலும்; தது:—கொடுத்தனர்; ச—கூட; அம்ருத-பாஜனம்—அமிர்த கலசத்தை.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: கேலி செய்வதைப் போல் பேசிய மோஹினி-மூர்த்தியின் வார்த்தைகளைக் கேட்ட அசுரர்கள் அவளிடம் பெரும் நம்பிக்கை கொண்டனர். அவர்கள் வெற்றியுடன் நகைத்து, இறுதியில் அமிர்த கலசத்தை அவளது கைகளில் ஒப்படைத்தனர்.

பதம் 8.9.12
ததோ க்ருஹீத்வாம்ருத-பாஜனம் ஹரிர்
பபாஷ ஈஷத்-ஸ்மித-சோபயா கிரா
யதி அப்யுபேதம் க்வ ச ஸாது அஸாது வா
க்ருதம் மயா வோ விபஜே ஸுதாம் இமாம்

தத:—அதன்பிறகு; க்ருஹீத்வா—பெற்றுக்கொண்டு; அம்ருத-பாஜனம்—அமிர்த கலசத்தை; ஹரி:—மோஹினி-ரூபத்திலிருந்த, முழுமுதற் கடவுளாகிய ஹரி; பபாஷ—கூறினார்; ஈஷத்—இலேசாக; ஸ்மித-சோபயா கிரா—புன்னகையுடன் கூடிய அழகுடனும், வார்த்தைகளாலும்; யதி—எனில்; அப்யுபேதம்—ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி செய்தால்; க்வ-ச—அது என்னவாயினும்; ஸாது அஸாது வா—நேர்மையானதாகவோ அல்லது நேர்மையற்றதாகவோ இருப்பினும்; க்ருதம் மயா—என்னால் செய்யப்படுவது; வ:—உங்களுக்கு; விபஜே—உங்களுக்கு சேர வேண்டிய பாகத்தை நான் கொடுப்பேன்; ஸுதாம்—அமிர்தத்தை; இமாம்—இந்த.

அதன்பிறகு, அமிர்த கலசத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட பரமபுருஷ பகவான், புன்முறுவல் செய்து, கவர்ச்சியான வார்த்தைகளால் பின்வருமாறு கூறினார்: என்னருமை அசுரர்களே, நான் எதைச் செய்தாலும், அது நேர்மையாகவோ அல்லது நேர்மையற்றதாகவோ இருப்பினும், அதை நீங்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அமிர்தத்தை உங்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன்.

பதம் 8.9.13
இதி அபிவ்யாஹ்ருதம் தஸ்யா ஆகர்ண்யாஸுர-புங்கவா:
அப்ரமாண-விதஸ் தஸ்யாஸ் தத் ததேதி அன்வமம்ஸத

இதி—இவ்வாறு; அபிவ்யாஹ்ருதம்—பேசப்பட்ட வார்த்தைகள்; தஸ்யா—அவளது; ஆகர்ண்ய—கேட்டபின்; அஸுர-புங்கவா:—அசுரர்களின் தலைவர்கள்; அப்ரமாண-வித:—அவர்கள் அனைவரும் மூடர்களாக இருந்ததால்; தஸ்யா:—அவளின்; தத்—அவ்வார்த்தைகளை; ததா—அவ்வாறே ஆகட்டும்; இதி—இவ்வாறாக; அன்வமம்ஸத—ஏற்க ஒப்புக் கொண்டனர்.

அசுரத் தலைவர்கள் முடிவெடுப்பதில் அவ்வளவு திறமைசாலிகளாக இருக்கவில்லை. மோஹினி-மூர்த்தியின் இனிமையான வார்த்தைகளைக் கேட்டதும், உடனே அவர்கள் சம்மதித்தனர். “ஆம், நீ கூறியது சரிதான்” என்று பதில் கூறி அவளது முடிவை ஏற்க அசுரர்கள் சம்மதித்தனர்.

பதங்கள் 8.9.14 – 8.9.15
அதோபோஷ்ய கிருத-ஸ்னானா ஹுத்வா ச ஹவிஷானலம்
தத்வா கோ-விப்ர-பூதேப்ய: க்ருத-ஸ்வஸ்த்யயனா த்விஜை

யதோபஜோஷம் வாஸாம்ஸி பரிதாயாஹதானி தே
குசேஷு ப்ராவிசன் ஸர்வே ப்ராக்-அக்ரேஷு அபிபூஷிதா:

அத—அதன்பிறகு; உபோஷ்ய—உபவாசமிருந்து; க்ருத-ஸ்னானா:—குளித்து; ஹுத்வா—நிவேதனங்களை அர்ப்பணம் செய்து; ச—கூட; ஹவிஸா—நெய்யால்; அனலம்—தீயினுள்; தத்வா—தான தருமங்கள் செய்து; கோ-விப்ர-பூதேப்ய:—பசுக்கள்; பிராமணர்கள் மற்றும் ஜீவராசிகளுக்கும்; க்ருத-ஸ்வஸ்த் யயனா:—மதச் சடங்குகளைச் செய்து; த்விஜை:—பிராமணர்களால் உத்தரவிடப்பட்டவாறு; யதா-உபஜோஷம்—ஒருவரது சுவைக்கேற்ப; வாஸாம்ஸி—ஆடைகளை; பரிதாய—அணிந்து; ஆஹதானி—முதல் தரமானதும், புதியதுமான; தே—அவர்கள் எல்லோரும்; குசேஷு—நாணல் புற்களாலான ஆசனங்களின் மீது; ப்ராவிசன்—அவற்றின் மீது அமர்ந்து; ஸர்வே—அவர்கள் அனைவரும்; ப்ராக்-அக்ரேஷு—கிழக்கு நோக்கியவாறு; அபிபூஷிதா:—ஆபரணங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு.

தேவர்களும், அசுரர்களும் பிறகு உபவாசம் மேற்கொண்டனர். குளித்தபின், அவர்கள் யாகத்தீயில் நெய் வார்த்து நிவேதனங்களை அர்ப்பணம் செய்தனர். பிறகு பசுக்கள், பிராமணர்கள் மற்றும் சமூகத்தின் மற்ற பிரிவினர்களாகிய க்ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோருக்கு தான தருமங்களைச் செய்தனர். அவரவர் தகுதிகளுக்கேற்ப அனைவருக்கும் வெகுமானம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு, பிராமணர்களின் தலைமையின் கீழ் தேவர்களும், அசுரர்களும் மதச் சடங்குகளை நிறைவேற்றினர். பிறகு அவர்கள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப, புத்தாடைகளாலும், ஆபரணங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டனர். பிறகு நாணல் புற்களாலான ஆசனங்களின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்தனர்.

பதங்கள் 8.9.16 – 8.9.17
ப்ரான்-முகேஷூபவிஷ்டேஷு ஸுரேஷு திதிஜேஷு ச
தூபாமோதித-சாலாயாம் ஜுஷ்டாயாம் மால்ய-தீபகை:

தஸ்யாம் நரேந்ர கரபோருர் உசத்-துகூல-
ஸ்ரோணீ-தடாலஸ-கதிர் மத-விஹ்வலாக்ஷீ
ஸா கூஜதீ கனக-நூபுர-சிஞ்சிதேன
கும்ப-ஸ்தனீ கலஸ-பாணிர் அதாவிவேச

ப்ரான்-முகேஷு—கிழக்கு நோக்கியவாறு; உபவிஷ்டேஷு—முறையே அவரவர் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்; ஸுரேஷு—தேவர்களனைவரும்; திதி-ஜேஷு—அசுரர்களும்; ச—கூட; தூப-ஆமோதித-சாலாயாம்—தூபப்புகையால் மூடப்பட்டிருந்த அரங்கத்தில்; ஜுஷ்டாயாம்—முற்றிலும் அலங்கரிக்கப்பட்டு; மால்ய-தீபகை:—மலர் மாலைகளாலும், விளக்குகளாலும்; தஸ்யாம்—அந்த அரங்கத்தில்; நர-இந்ர—ராஜனே; கரப-ஊரு:—யானைகளின் தும்பிக்கைகளை ஒத்த தொடைகளைக் கொண்ட; உசத்-துகூல—மிகவும் அழகிய சேலையொன்றை உடுத்திக் கொண்டு; ஸ்ரோணீ-தட—பெரிய இடுப்புகளின் காரணத்தால்; அலஸ-கதி:—மிகவும் மெதுவாக அடி வைத்து; மத-விஹ்வல-அக்ஷு—இளமை வேகத்தினால் அவளது கண்கள் அமைதியிழந்து காணப்பட்டன; ஸா—அவள்; கூஜதீ—ஒலிக்கும்; கனக-நூபுர—தங்கக் கொலுசுகளின்; சிஞ்சிதேன—ஓசையுடன்; கும்ப-ஸ்தனீ—நீர் ஜாடிகளைப் போன்ற மார்பகங்களைக் கொண்ட ஒரு பெண்; கலஸ-பாணி:—அவளது கரத்தில் ஒரு நீர்க்குடத்தை ஏந்தியவாறு; அத—இவ்வாறாக; ஆவிவேச—அரங்கத்திற்குள் நுழைந்தாள்.

ராஜனே, தேவர்களும், அசுரர்களும், மலர் மாலைகளால், முற்றிலும் அலங்கரிக்கப்பட்டு, தீபங்களும், தூபப் புகைகளின் நறுமணமும் சூழ்ந்த ஓர் அரங்கத்தில் கிழக்கு நோக்கியவாறு அமர்ந்திருந்தனர். அச்சமயத்தில், மிகவும் அழகியதொரு சேலையை உடுத்திக் கொண்டு, கால் கொலுசுகள் சலங்கையொலி எழுப்ப, அப்பெண், அவளுடைய பெரிய தாழ்வான இடுப்புகளின் காரணத்தால் மிகவும் மெதுவாக நடந்தவாறு அரங்கத்தினுள் பிரவேசித்தாள். இளமை வேகத்தின் காரணத்தால் அவளது கண்கள் அமைதியற்றிருந்தன. அவளது மார்பகங்கள் நீர் ஜாடிகளைப் போல் காட்சியளித்தன. அவளது தொடைகள் யானைகளின் தும்பிக்கைகளை ஒத்திருந்தன. மேலும் நீர்க்குடம் ஒன்றை அவள் தனது கரத்தில் ஏந்தியிருந்தாள்.

பதம் 8.9.18
தாம் ஸ்ரீ-ஸகீம் கனக-குண்டல-சாரு-கர்ண
நாஸா-கபோல-வதனாம் பர-தேவதாக்யாம்
ஸம்வீக்ஷ்ய ஸம்முமுஹுர் உத்ஸ்மித வீக்ஷணேன
தேவாஸுரா விகலித-ஸ்தன-பட்டிகாந்தாம்

தாம்—அவளிடம்; ஸ்ரீ-ஸகீம்—திருமகளின் ஒரு தோழியைப் போல் காணப்பட்ட; கனக-குண்டல—தங்கத் தோடுகளுடன்; சாரு—மிகவும் அழகிய; கர்ண—செவிகள்; நாஸா—மூக்கு; கபோல—கன்னங்கள்; வதனாம்—முகம்; பர-தேவதா-ஆக்யாம்—அவ்வுருவில் தோன்றிய பரமபுருஷராகிய முழுமுதற் கடவுள்; ஸம்வீக்ஷ்ய—அவளைப் பார்த்து; ஸம்முமுஹு:—அவர்கள் அனைவரும் வசீகரிக்கப்பட்டனர்; உத்ஸ்மித—இலேசாக புன்னகை செய்தவாறு; வீக்ஷணேன—அவர்கள் மீது பார்வையைச் செலுத்தி; தேவ-அஸுரா:—தேவாசுரர்கள் அனைவரும்; விகலித-ஸ்தன-பட்டிகாந்தாம்—மார்பகங்களின் மீதிருந்த சேலைக் கரை இலேசாக விலகியது.

அவளது கவர்ச்சியான மூக்கும், கன்னங்களும், தங்கத் தோடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது செவிகளும், அவளது முகத்திற்கு அழகூட்டின. அவள் அசைந்து வரும்போது அவளுடைய மார்பகங்களின் மேலிருந்த சேலையின் கரை இலேசாக விலகியது. தங்களைப் பார்த்து இலேசாகப் புன்னகை செய்த மோஹினி-மூர்த்தியின் அழகிய இந்த அம்சங்களைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் அவற்றால் முற்றிலும் வசீகரிக்கப்பட்டனர்.

பதம் 8.9.19
அஸுராணாம் ஸுதா-தானம் ஸர்பாணாம் இவ துர்னயம்
மத்வா ஜாதி-ந்ருசம்ஸானாம் ந தாம் வ்யபஜத் அச்யுத:

அஸுராணாம்—அசுரர்களின்; ஸுதா-தானம்—அமிர்தம் கொடுத்தல்; ஸர்பாணாம்—பாம்புகளை; இவ—போல்; துர்னயம்—தப்புக் கணக்கு; மத்வா—அவ்வாறெண்ணி; ஜாதி-ந்ருசம்ஸானாம்—இயற்கையாகவே மிகவும் விரோதம் கொண்டவர்களின்; ந—இல்லை; தாம்—அமிர்தம்; வ்யபஜத்—பங்கைக் கொடுத்தார்; அச்யுத:—ஒரு போதும் வீழ்ச்சி அடையாதவரான பரமபுருஷர்.

அசுரர்கள் இயற்கையாகவே பாம்புகளைப்போல் யோக்கியம் இல்லாதவர்கள். ஆகவே, அமிர்தத்தில் ஒரு பாகத்தை அவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்பது நடைமுறைக்குச் சிறிதும் ஏற்றதல்ல. ஏனெனில் இது ஒரு பாம்புக்கு பாலை வார்ப்பது போல் ஆபத்தானதாகும். இதைக் கருத்திற்கொண்டு ஒருபோதும் வீழ்ச்சி அடையாதவரான பரமபுருஷர், அமிர்தத்தின் ஒரு பாகத்தை அசுரர்களிடம் ஒப்படைக்கவில்லை.

பதம் 8.9.20
கல்பயித்வா பிருதக் பங்க்தீர் உபயேஷாம் ஜகத்-பதி:
தாம்ஸ் சோபவேசயாம் ஆஸ ஸ்வேஷு ஸ்வேஷு ச பங்க்திஷு

கல்பயித்வா—ஏற்பாடு செய்த பின்; ப்ருதக் பங்கதீ:—வெவ்வேறு ஆசனங்கள்; உபயேஷாம்—தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவரின்; ஜகத்-பதி:—பிரபஞ்சத்தின் எஜமானர்; தான்—அவர்கள் அனைவரையும்; ச—மேலும்; உபவேசயாம் ஆஸ—அமரச் செய்தார்; ஸ்வேஷு ஸ்வேஷு—அவர்களது சொந்த இடங்களில்; ச—கூட; பங்க்திஷு—அனைவரையும் சரியாக.

மோஹினி-மூர்த்தியாகத் தோன்றியவரும் பிரபஞ்சத்தின் எஜமானருமாகிய முழுமுதற் கடவுள், ஆசனங்களை வெவ்வேறு வரிசைகளில் அடுக்கி வைத்து, தேவர்களையும், அசுரர்களையும் அவரவர் அந்தஸ்துக்கு ஏற்றவாறு அமரச் செய்தார்.

பதம் 8.9.21
தைத்யான் க்ருஹீத-கலஸோ வஞ்சயன்ஸஞ் உபஸஞ்சரை:
தூர-ஸ்தான் பாயயாம் ஆஸ ஜரா-ம்ருத்யு-ஹராம் ஸுதாம்

தைத்யான்—அசுரர்களை; க்ருஹீத-கலஸ:—அமிர்த கலசத்தை ஏந்தியவரான பகவான்; வாஞ்சயன்—ஏமாற்றி; உபஸஞ்சரை:—இனிய வார்த்தைகளால்; தூர-ஸ்தான்—தூரமான ஓரிடத்தில் அமர்ந்திருந்த தேவர்களை; பாயயாம் ஆஸ—அவர்களை பருகச் செய்தாள்; ஜரா-ம்ருத்யு-ஹராம்—பலவீனம், மூப்பு மற்றும் மரணம் ஆகியவற்றை நிஷ்பலமாக்கக் கூடிய; ஸுதாம்—அத்தகைய அமிர்தத்தை.

அமிர்த கலசத்தைத் தமது கரங்களில் எடுத்துக் கொண்டு, முதலில் அவள் அசுரர்களை அணுகி, இனிய வார்த்தைகளால் அவர்களை திருப்திப்படுத்தினாள். இவ்வாறாக அவர்களுக்குச் சேர வேண்டிய அமிர்தத்தின் பாகத்தை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை ஏமாற்றினாள். பிறகு தூரமான ஓரிடத்தில் அமர்ந்திருந்த தேவர்களை பலவீனம், முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து விடுவிப்பதற்காக, அமிர்தத்தை அவள் தேவர்களுக்குக் கொடுத்தாள்.

பதம் 8.9.22
தே பாலயந்த: ஸமயம் அஸுரா: ஸ்வ-க்ருதம் ந்ருப
தூஷ்ணீம் ஆஸன் க்ருத-ஸ்னேஹா: ஸ்த்ரீ-விவாத-ஜுகுப்ஸயா

தே—அசுரர்கள்; பாலயந்த:—காப்பாற்றி; ஸமயம்—சம நிலையை; அஸுரா:—அசுரர்கள்; ஸ்வ-க்ருதம்—அவர்களால் செய்யப்பட்ட; ந்ருப—ராஜனே; தூஷ்ணீம் ஆஸன்—மௌனமாக இருந்து விட்டனர்; க்ருத-ஸ்னேஹா:—மோஹினி மூர்த்தியிடம் பற்றுக் கொண்டதன் காரணத்தால்; ஸ்த்ரீ-விவாத—ஒரு பெண்ணிடம் விவாதம் செய்வது; ஜுகுப்ஸயா—அத்தகைய ஒரு செயல் வெறுக்கத்தக்கது என்று எண்ணியதால்.

ராஜனே, அப்பெண் எதைச் செய்தாலும், அது நியாயமானதோ அல்லது நியாயமற்றதோ, அதை ஏற்றுக் கொள்வதாக அசுரர்கள் வாக்குறுதி செய்திருந்ததால், இப்போது அவ்வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகவும், தங்களுடைய சமநிலையை காட்டிக் கொள்வதற்காகவும் மேலும் ஒரு பெண்ணுடன் சண்டை செய்வதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அவர்கள் மௌனமாக இருந்துவிட்டனர்.

பதம் 8.9.23
தஸ்யாம் க்ருதாதிப்ரணயா: ப்ரணயாபாய-காதரா:
பஹு-மானேன சாபத்தா நோசு: கிஞ்சன விப்ரியம்

தஸ்யாம்—மோஹினி-மூர்த்தியின்; க்ருத-அதி-ப்ரணயா:—உறுதியான சிநேகத்தின் காரணத்தால்; ப்ரணய-அபாய-காதரா:—அவளுடன் அவர்களுக்கிருந்த சிநேகம் முறிந்துவிடுமோ என்றஞ்சி; பஹு-மானேன—பெரும் மரியாதையாலும், கௌரவத்தாலும்; ச—கூட; ஆபத்தா:—அவளிடம் அளவுக்கதிகமான பற்றுக்கொண்டதால்; ந—இல்லை; ஊசு:—அவர்கள் கூறினர்; கின்சன—மிகச்சிறியது கூட; விப்ரியம்—மோஹினி மூர்த்தி அவர்களிடம் அதிருப்தி அடையக்கூடிய ஒன்றினால்.

அசுரர்கள் மோஹினி-மூர்த்தியின் மீது பற்றையும், ஒரு வகையான நம்பிக்கையும் பெருக்கிக் கொண்டனர். மேலும் அத்தகைய உறவுமுறையை கெடுத்துக்கொள்ள அவர்கள் அஞ்சினர். ஆகவே அவளது வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்து, அவளிடம் தங்களுக்கிருந்த சினேகத்தை குலைத்துவிடக்கூடிய எதையுமே கூறாமல் மௌனமாக இருந்து விட்டனர்.

பதம் 8.9.24
தேவ-லிங்க-ப்ரதிச்சன்ன: ஸ்வர்பானுர் தேவ-ஸம்ஸதி
ப்ரவிஷ்ட: ஸோமம் அபிபச் சந்ரார்காப்யாம் ச ஸூசித:

தேவ-லிங்க-ப்ரதிச்சன்ன:—தேவர் ஒருவரின் உடையால் தன்னை மறைத்துக் கொண்டு; ஸ்வர்பானு:—ராகு (தீங்கிழைப்பவன், சந்திர சூரிய கிரகணங்களை ஏற்படுத்துபவன்); தேவ-ஸம்ஸதி—தேவர்களின் குழுவில்; ப்ராவிஷ்ட:—பிரவேசித்து; ஸோமம்—அமிர்தத்தை; அபிபத்—பருகிவிட்டான்; சந்ர-அர்காப்யாம்—சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இருவராலும்; ச—மேலும்; ஸூசித:—கண்டு பிடிக்கப்பட்டான்.

சூரிய, சந்திர கிரகணங்களை விளைவிப்பவனாகிய ராகு எனும் அசுரன், ஒரு தேவரின் உடையால் தன்னை மறைத்துக் கொண்டு, தேவர்களின் கூட்டத்தினுள் நுழைந்து, அமிர்தத்தைக் குடித்து விட்டான். ஒருவரும் இதை கவனிக்கவில்லை. பகவானும் கூட இதை கவனிக்கவில்லை. ஆனால் ராகுவிடம் தங்களுக்கிருந்த நிரந்தர விரோதத்தின் காரணத்தால், சந்திரனும் சூரியனும் நிலைமையைப் புரிந்துகொண்டனர். இவ்வாறாக, ராகு கண்டுபிடிக்கப்பட்டான்.

பதம் 8.9.25
சக்ரேண க்ஷுர-தாரேண ஜஹார பிபத: சிர:
ஹரிஸ் தஸ்ய கபந்தஸ் து ஸுதயாப்லாவிதோ ‘பதத்

சக்ரேண—சக்கரத்தால்; க்ஷுர-தாரேண—சவரக் கத்தியைப் போல் கூர்மையாக இருந்த; ஜஹார—துண்டித்தார்; பிபத:—அமிர்தத்தைப் பருகும் போது; சிர:—தலையை; ஹரி:—பரமபுருஷர்; தஸ்ய—அந்த ராகுவின்; கபந்த: து—ஆனால் அந்த முண்டம்; ஸுதயா—அமிர்தத்தால்; அப்லாவித—தொடப்படாததால்; அபதத்—உடனே பிணமாக விழுந்தது.

பரமபுருஷரான, ஹரி சவரக் கத்தியைப் போலிருந்த தமது கூரிய சக்கரத்தை உபயோகித்து, ராகுவின் தலையை உடனே துண்டித்து விட்டார். இராகுவின் சிரம் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டதும், அவனது உடல் அமிர்த்ததால் தொடப்படாததால் அதனால் ஜீவித்திருக்க முடியவில்லை.

பதம் 8.9.26
சிரஸ் து அமரதாம் நீதம் அஜோ க்ரஹம் அசீக்லுபத்
யஸ் து பர்வணி சந்ரார்காவ் அபித்தாவதி வைர-தீ:

சீர:—தலை; து—நிச்சயமாக; அமரதாம்—அமரத்துவம்; நீதம்—அடையப்பெற்று; அஜ:—பிரம்ம தேவர்; க்ரஹம்—கிரகங்களில் ஒன்றாக; அசீக்லுபத்—ஏற்றுக் கொண்டார்; ய:—அதே ராகு; து—உண்மையில்; பர்வணி—பௌர்ணமி மற்றும் அமாவாசைக் காலங்களில்; சந்ர-அர்கௌ—சந்திரனையும், சூரியனையும்; அபிதாவதி—விரட்டுகிறான்; வைர-தீ:—பகையின் காரணத்தால்.

ஆயினும், இராகுவின் தலை அமிர்தத்தால் தொடப்பட்டதால் அது அழிவற்றதானது. இவ்வாறாக பிரம்ம தேவர் இராகுவின் தலையைக் கிரகங்களில் ஒன்றாக ஏற்றுக் கொண்டார். ராகு சந்திர, சூரியர்களுக்கு நித்தியமான விரோதி என்பதால், அவன் எப்பொழுதும் பெளர்ணமி மற்றும் அமாவாசை இரவுகளில் அவர்களைத் தாக்க முயல்கிறான்.

பதம் 8.9.27
பீத ப்ராயே ‘ம்ருதே தேவைர் பகவான் லோக-பாவன:
பஸ்யதாம் அஸுரேந்ராணாம் ஸ்வம் ரூபம் ஜக்ருஹே ஹரி:

பீத-ப்ராயே—கிட்டத்தட்ட பருகி முடிந்ததும்; அம்ருதே—அமிர்தம்; தேவை:—தேவர்களால்; பகவான்—மோஹினி-மூர்த்தியாக உள்ள பரமபுருஷர்; லோக-பாவன:—மூவுலகங்களையும் பராமரிப்பவரான; பஸ்யதாம்—முன்னிலையில்; அஸுர-இந்ராணாம்—தங்களது தலைவர்களுடன் கூடிய, எல்லா அசுரர்களின்; ஸ்வம்—சுய; ரூபம்—ரூபத்தை; ஜக்ருஹே—வெளிப்படுத்தினார்; ஹரி:—பரமபுருஷ பகவான்.

பரம்புருஷ பகவானே மூவுலகங்களுக்கும் நண்பரும், அவற்றைப் பராமரிப்பவருமாவார். இவ்வாறாக தேவர்கள் அமிர்தத்தைப் பருகி முடிக்கப் போகும் வேளையில், பகவான் அசுரர்களின் முன்னிலையில், தமது சுய ரூபத்தை வெளிப்படுத்தினார்.

பதம் 8.9.28
ஏவம் ஸுராஸுர-கணா: ஸம-தேச-கால-
ஹேது-அர்த-கர்ம-மதயோ ‘பி ஃபலே விகல்பா:
தத்ராம்ருதம் ஸுர-கணா: ஃபலம் அஞ்சஸாபுர்
யத்-பாத-பங்கஜ-ரஜ:-ஸ்ரயணான் ந தைத்யா:

ஏவம்—இவ்வாறாக; ஸுர—தேவர்கள்; அஸுர-கணா—மற்றும் அசுரர்கள்; ஸம—சமமான; தேச—இடம்; கால—காலம்; ஹேது—காரணம்; அர்த்த—நோக்கம்; கர்ம—செயல்கள்; மதய—குறிக்கோள்; அபி—ஒன்றேயாயினும்; ஃபலே—பலன்; விகல்பா:—சமமானதல்ல; தத்ர—அதன் காரணமாக; அம்ருதம்—அமிர்தம்; ஸுர-கணா:—தேவர்கள்; ஃபலம்—பலன்; அஞ்சஸா—சுலபமாக, மொத்தமாக அல்லது நேரடியாக; ஆபு:—அடைந்தனர்; யத்—எனும் காரணத்தால்; பாத-பங்கஜ—பரமபுருஷ பகவானுடைய தாமரைப் பாதங்களின்; ரஜ:—சிவந்த தூசியின்; ஸ்ரயணாத்—கருணையைப் பெறுவதன் அல்லது புகலிடம் கொள்வதன் காரணத்தால்; ந—இல்லை; தைத்யா:—அசுரர்கள்.

இடம், காலம், காரணம், நோக்கம், செயல் மற்றும் குறிக்கோள் ஆகியவை தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவருக்கும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் தேவர்கள் பெற்ற பலன் ஒன்று, அசுரர்கள் பெற்ற பலன் வேறு, தேவர்கள் எப்பொழுதும் பகவானுடைய தாமரைப் பாதங்களின் தூசுகளிடம் சரணாகதி அடைந்திருப்பதால், அவர்களால் சுலபமாக அமிர்தத்தைப் பருகி அதன் பலனை அடைய முடிந்தது. ஆனால் பகவானுடைய தாமரைப் பாதங்களில் புகலிடம் கொள்ளாத அசுரர்களால், தாங்கள் விரும்பிய பலனை அடைய முடியவில்லை.

பதம் 8.9.29
யத் யுஜ்யதே ‘ஸு-வஸு-கர்ம-மனோ-வசோபிர்
தேஹாத்மஜாதிஷு ந்ருபிஸ் தத் அஸத் ப்ருதக்த்வாத்
தைர் ஏவ ஸத் பவதி யத் க்ரியதே ‘ப்ருகக்த்வாத்
ஸர்வஸ்ய தத் பவதி மூல-நிஷேசனம் யத்

யத்—எதெல்லாம்; யுஜ்யதே—செய்யப்படுகிறதோ; அஸு—ஒருவரின் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக; வஸு—செல்வத்தின் பாதுகாப்புக்காக; கர்ம—செயல்கள்; மன:—மனதின் செயல்களினால்; விசோபி:—வார்த்தைகளின் செயல்களினால்; தேஹ-ஆத்ம-ஜ-ஆதிஷு—ஒருவரின் சொந்த உடல் அல்லது குடும்பம் முதலியவைகளின் பொருட்டு; ந்ருபி:—மனிதர்களால்; தத்—அந்த; அஸத்—நிலையற்ற, தோன்றி மறைகிற; ப்ருதக்த்வாத்—பரமபுருஷ பகவானை விட்டுப் பிரிந்ததனால்; தை:—அதே செயல்களினால்; ஏவ—நிச்சயமாக; ஸத் பவதி—உண்மையானதாகவும், நிலையானதாகவும் ஆகிறது; யத்—எது; க்ரியதே—செய்யப்படுகிறது; அப்ருதக்த்வாத்—பிரிவற்ற காரணத்தால்; ஸர்வஸ்ய—ஒவ்வொருவருக்கும்; தத் பவதி—நன்மை உடையதாகிறது; மூல-நிஷேசனம்—ஒரு மரத்தின் வேருக்கு நீரூற்றுவதைப் போன்றதாகும்; யத்—எது.

மனித சமூகத்தில் ஒருவரின் செல்வத்தையும், உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பல்வேறு செயல்கள் நிறைவேற்றப்படுகின்றன. இச்செயல்கள் ஒருவரின் வார்த்தைகளாலும், மனதாலும், கருமங்களாலும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் இவையனைத்தும் ஒருவரின் சொந்த அல்லது விரிவடைந்த புலன் நுகர்வை நோக்கமாகக் கொண்டவையும், சரீரத்தை அடிப்படையாகக் கொண்டவையும் ஆகும். இச்செயல்கள் அவருக்குத் தோல்வியை உண்டாக்குகின்றன. ஆனால் அதே செயல்கள் பகவானின் திருப்திக்காக செய்யப்படும் போது, நன்மையளிக்கும் பலன்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இது, ஒரு மரத்தின் வேருக்கு ஊற்றப்படும் நீர், மரத்தின் எல்லாப் பாகங்களுக்கும் விநியோகிக்கப்படுவதற்கு ஒப்பானதாகும்.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பகவானின் மோஹினி-மூர்த்தி அவதாரம்” எனும் தலைப்பை கொண்ட ஒன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare