அத்தியாயம் – 8
பாற்கடலைக் கடைதல்
பதம் 8.8.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சிவபெருமான் விஷத்தைக் குடித்ததும், தேவர்களும், அசுரர்களும் மிகவும் திருப்தியடைந்து, புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்துடன் கடலைக் கடைய ஆரம்பித்தனர். இதன் பயனாய், சுரபி எனப்படும் பசு ஒன்று தோன்றியது.

பதம் 8.8.2 : பரீட்சித்து மகாராஜனே, வேதச் சடங்குகளை முற்றும் அறிந்திருந்த பெரும் முனிவர்கள் அந்த சுரபிப் பசுவிற்குப் பொறுப்பேற்றனர். அப்பசு யாகத் தீயில் நிவேதம் செய்வதற்கு அவசியம் தேவையான தயிர், பால் மற்றும் நெய் ஆகியவற்றை உற்பத்தி செய்தது. தூய நெய்யைப் பெறுவதற்காகவே இவ்வாறு அவர்கள் செய்தனர். யாகத்தை நிறைவேற்றி, அதன் மூலமாக பிரம்ம லோகம் வரையுள்ள உயர்கிரக அமைப்புகளுக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக நெய்யை அவர்கள் நாடினர்.

பதம் 8.8.3 : அதன்பிறகு, நிலவைப்போல் வெள்ளை நிறம் கொண்ட, உச்சைஹ்ஸ்ரவா எனும் பெயருடன் கூடிய ஒரு குதிரை உற்பத்தியானது. பலி மகாராஜன் இக்குதிரையை அடைய விரும்பினார். சுவர்க்க ராஜனான இந்திரன் இதை ஆட்சேபிக்கவில்லை. ஏனெனில், பரமபுருஷ பகவானால் அவர் ஏற்கனவே அவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

பதம் 8.8.4 : கடலைக் கடைந்ததன் அடுத்த பலனாக, ஐராவதம் எனும் பெயர் கொண்ட, யானைகளின் அரசன் உற்பத்தியானது. இந்த யானை வெள்ளை நிறம் கொண்டதாகும். அதன் நான்கு தந்தங்களால் அது கைலாய மலையின் மகிமைகளுக்கும் போட்டியாக நின்றது. அம்மலை சிவபெருமானின் மகிமைமிக்க வசிப்பிடமாகும்.

பதம் 8.8.5 : அதன்பிறகு, ராஜனே, எந்த திசையிலும் செல்லக்கூடிய எட்டு பெரும் யானைகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவை ஐராவணம் எனும் யானையை தலைமையாகக் கொண்டிருந்தன. அப்ரமு எனும் யானையை தலைமையாகக் கொண்ட எட்டு பெண் யானைகளும் கூட உற்பத்தியாயின.

பதம் 8.8.6 : அதன்பிறகு, புகழ்பெற்ற கௌஸ்துப இரத்தினமும், பத்மராக மணியும் அப்பெருங்கடலிலிருந்து உற்பத்தியாயின, பகவான் விஷ்ணு தமது மார்பை அலங்கரிப்பதற்காக அவற்றை அடைய விரும்பினார். அடுத்ததாக பாரிஜாத மலர் உற்பத்தி செய்யப்பட்டது. அது சுவர்க்க லோகங்களை அலங்கரிக்கிறது. ராஜனே, இவ்வுலகிலுள்ள அனைவரது விருப்பங்களையும் நீர் நிறைவேற்றுவதைப் போலவே பாரிஜாத மலரும் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்றுகிறது.

பதம் 8.8.7 : அடுத்து அப்ஸரஸ்கள் தோன்றினர். (இவர்கள் சுவர்க்க லோகங்களில் விலை மாதர்களாக உபயோகிக்கப்படுபவர்களால்). அவர்கள் தங்க ஆபரணங்களாலும், பதக்கங்களாலும் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், கவர்ச்சியான சிறந்த ஆடைகளையும் அணிந்திருந்தனர். அப்ஸரஸ்கள் மிகவும் கவர்ச்சியான முறையில், மிகவும் மெதுவாக அசைந்து செல்வது சுவர்க்க லோகவாசிகளை மயங்கச் செய்கிறது.

பதம் 8.8.8 : பிறகு திருமகளாகிய ரமா தேவி தோன்றினாள். தாம் பரமபுருஷ பகவானால் அனுபவிக்கப்பட வேண்டும் என்று தம்மை அவரிடம் பரிபூரணமாக அர்ப்பணித்துக் கொண்டாள். கலவைக் கல்லாலான ஒரு மலையையும் பிரகாசிக்கச் செய்யக்கூடிய, மின்னலையும் மிஞ்சிவிடும், மின்சாரத்தைப் போல் அவள் தோன்றினாள்.

பதம் 8.8.9 : அவளது கண்ணைக் கவரும் அழகு, தேக அம்சங்கள், இளமை, நிறம் மற்றும் மகிமைகள் ஆகியவற்றின் காரணத்தால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் உட்பட அனைவரும் அவளை அடைய விரும்பினர். அவள் எல்லாச் செல்வங்களுக்கும் பிறப்பிடமாக இருந்ததால், அனைவரும் அவளால் கவரப்பட்டனர்.

பதம் 8.8.10 : சுவர்க்க ராஜனான இந்திரன், திருமகள் அமர்வதற்கு ஏற்றதோர் ஆசனத்தைக் கொண்டு வந்தார். கங்கை மற்றும் யமுனையைப் போன்ற புனித நதிகளனைத்தும் உருவங்களை ஏற்று, திருமகளாகிய லக்ஷ்மி தேவிக்கு தங்கக் குடங்களில் தூய நீரைக் கொண்டு வந்தனர்.

பதம் 8.8.11 : பூமி, பூமிதேவியாக மாறி, மூர்த்திப் பிரதிஷ்டைக்குத் தேவையான அனைத்து மருந்து சாமான்களையும், மூலிகைகளையும் சேகரித்தாள். பசுக்கள் பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோஜலம் ஆகிய பஞ்ச கவ்யங்களை அளித்தன. மற்றும் வசந்த சொரூபம், வசந்த காலத்தில், அல்லது சைத்ர மற்றும் வைசாக (ஏப்ரல் மே) மாதங்களில் உற்பத்தியாகும் அனைத்தையும் சேகரித்தது.

பதம் 8.8.12 : அதிகாரப்பூர்வமான சாஸ்திர விதிகளுக்கேற்ப, மாமுனிவர்கள் திருமகளுக்கு அபிஷேகச் சடங்கை நிறைவேற்றினர். சர்வ மங்களகரமான வேத மந்திரங்களை ஓதினர். நாட்டிய சிரோமணிகளாகிய பெண்கள் வேத விதிகளுக்குட்பட்ட பாடல்களைப் பாடியவாறு, மிகவும் நன்றாக நடனமாடினர்.

பதம் 8.8.13 : உருவை ஏற்ற மேகங்கள், மிருதங்கம், பணவம், முரஜம் மற்றும் ஆனகம் எனப்படும் பல்வேறு வகையான மத்தளங்கள் ஆகியவற்றை வாசித்தன. அவை சங்குகளையும், கோமுகம் எனப்படும் ஊது கொம்புகளையும் ஊதியதுடன், புல்லாங்குழல்களையும், வீணைகளையும் கூட வாசித்தன. இவ்வாத்தியக் கருவிகள் இணைந்து பேரொலியை எழுப்பின.

பதம் 8.8.14 : அதன்பிறகு, கற்றறிந்த பிராமணர்கள் வேத மந்திரங்களை ஓத, எல்லாத் திசைகளிலிருந்தும் வந்த மிகப்பெரிய யானைகள் கங்கை நீரால் நிரப்பப்பட்ட பெரிய கலசங்களால், திருமகளுக்கு அபிஷேகம் செய்தன. அவ்வாறு அபிஷேகம் செய்விக்கப்படும்போது, திருமகள், கரத்தில் ஒரு தாமரை மலருடன்கூடிய தமது சுய தோற்றத்துடன் மிகவும் அழகாக காணப்பட்டாள். பரமபுருஷ பகவானையன்றி வேறொருவரையும் அறிந்திராததால், திருமகள் கற்புக்கரசியாக விளங்கினாள்.

பதம் 8.8.15 : எல்லா வகையான விலையுயர்ந்த ஆபரணங்களுக்கும் பிறப்பிடமாகிய சமுத்திரம், ஒரு மஞ்சள் நிற பட்டாலான மேல் மற்றும் கீழ் அங்க வஸ்திரங்களைப் பரிசாக அளித்தது. வருணதேவன், தேன் உண்டு மயங்கிய, ஆறு கால்களையுடைய தேனீக்களால் சூழப்பட்ட மலர் மாலைகளை வெகுமதியாக அளித்தார்.

பதம் 8.8.16 : பிரஜாபதிகளில் ஒருவராகிய விஸ்வகர்மா, பலவகையான அலங்கார ஆபரணங்களை அளித்தார். கல்வித் தேவதையாகிய சரஸ்வதி ஓர் ஆரத்தை வழங்கினாள். பிரம்ம தேவர் ஒரு தாமரைப் பூவையும், நாகலோக வாசிகள் காதணிகளையும் வழங்கினர்.

பதம் 8.8.17 : அதன்பிறகு, திருமகளாகிய லக்ஷ்மி தேவி, மங்களகரமான ஒரு சடங்குடன் ஒழுங்காக பூஜிக்கப்பட்டதும், இங்குமங்குமாக நடக்கத் துவங்கினாள். அப்போது தாமரைப் பூக்களாலான ஒரு மாலையைக் கரத்தில் ஏந்தியிருந்தாள். அம்மாலை ரீங்காரம் செய்யும் தேனீக்களால் சூழப்பட்டிருந்தது. அவளது கன்னங்களைக் காதணிகள் அலங்கரிக்க, வெட்கத்துடன் கூடிய புன்சிரிப்பு முகத்தில் தவழ, அவள் மிகமிக அழகாகக் காணப்பட்டாள்.

பதம் 8.8.18 : அவளது இரு மார்பகங்களும் ஒரே சீராகவும், நன்றாகவும் அமைந்திருந்தன. அவற்றின் மீது சந்தனமும், குங்குமமும் பூசப்பட்டிருந்தது. அவளது இடை மிகவும் மெல்லியதாக இருந்தது. அவள் இங்குமங்குமாக நடந்தபோது, அவளது பாதக்கொலுசுகள் மென்மையாக ஜிலு ஜிலுக்க, அவளொரு பொற்கொடியைப்போல் காணப்பட்டாள்.

பதம் 8.8.19 : கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சித்தர்கள், சாரணர்கள் மற்றும் சுவர்க்கலோக வாசிகள் ஆகியோருக்கிடையில் நடந்து செல்லும்போது, திருமகளாகிய லக்ஷ்மிதேவி, அவர்களை ஆழ்ந்து பரிசோதனை செய்தாள். ஆனால் இயற்கையாகவே எல்லா நற்குணங்களையும் கொண்ட ஒருவரையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களில் ஒருவர்கூட குறைகள் இல்லாமல் இருக்கவில்லை.

பதம் 8.8.20 : கூடி இருந்தவர்களைப் பரிசோதனை செய்த திருமகள் பின்வருமாறு அபிப்பிராயம் கொண்டாள்: கடுந்தவங்களை மேற்கொண்ட ஒருவர் இன்னும் கோபத்தை வெற்றி கொள்ளவில்லை. ஒருவர் அறிவைப் பெற்றுள்ளார், ஆனால் பெளதிக ஆசைகளை அவர் வெற்றி கொள்ளவில்லை. ஒருவர் மிகச்சிறந்த புருஷராக இருக்கிறார், ஆனால் சிற்றின்ப ஆசைகளை அவரால் வெல்ல முடியவில்லை. மிகச்சிறந்த புருஷராக உள்ள ஒருவர் கூட வேறொன்றின் உதவியை நம்பியுள்ளார். அப்படியானால், அவர் எப்படி பரம ஆளுனராக இருக்க முடியும்?

பதம் 8.8.21 : ஒருவர் மதத்தைப் பற்றிய முழு அறிவைப் பெற்றிருந்தும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்புடையவராக இல்லாதிருக்கக்கூடும். மனிதராகவோ, தேவராகவோ உள்ள ஒருவரிடம் துறவு இருக்கக் கூடும். ஆனால் அதுவே முக்திக்குக் காரணமாவது இல்லை. ஒருவர் பெரும் சக்தியைப் பெற்றிருந்தும், அவர் நித்திய காலத்தின் சக்தியைத் தடுக்க இயலாதவராக இருக்கக் கூடும். வேறொருவர் ஜட உலக பற்றைத் துறந்தவராக இருக்கக்கூடும், இருப்பினும் அவரைப் பரம புருஷ பகவானோடு ஒப்பிட முடியாது. ஆகவே, ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்திலிருந்து ஒருவரும் முற்றிலும் விடுபட்டவரல்லர்.

பதம் 8.8.22 : ஒருவருக்கு நீண்ட ஆயுள் இருக்கக்கூடும். ஆனால் மங்களத் தன்மையோ அல்லது நன்நடத்தையோ இருக்காது. ஒருவருக்கு மங்களத் தன்மை, நன்நடத்தை ஆகிய இரண்டுமே இருக்கக்கூடும், ஆனால் ஆயுள் நிலையற்றதாக இருக்கும். சிவபெருமானைப் போன்ற தேவர்களுக்கு நித்திய வாழ்வு இருந்தாலும், அவர்களிடம் சுடுகாட்டில் வாழ்வதைப் போன்ற தீய பழக்கங்கள் உள்ளன. மேலும் மற்றவர்கள் எல்லா விதத்திலும் நல்ல தகுதிகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் பரமபுருஷ பகவானின் பக்தர்களாக இருப்பதில்லை.

பதம் 8.8.23 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக, முகுந்தன் சுதந்திரமானவராகவும், திருமகளின் தேவை இல்லாதவராகவும் இருப்பினும், அனைத்து தெய்வீக குணங்களையும், யோக சித்திகளையும் உடையவராக இருந்ததால், மிகவும் விரும்பத்தக்கவராகவும் இருந்தார். இக்காரணத்தினால், ஆழ்ந்த யோசனைக்குப்பின் திருமகள் முகுந்தனைத் தமது கணவராக ஏற்றுக் கொண்டாள்.

பதம் 8.8.24 : பரமபுருஷ பகவானை அணுகிய திருமகள், புதிதாக மலர்ந்த தாமரைப் பூ மாலையை அவருக்குச் சூட்டினாள். அம்மாலை, ரீங்காரம் செய்து கொண்டு தேனைத் தேடியலையும் தேனீக்களால் சூழப்பட்டிருந்தது. பிறகு, பெருமானின் மார்பின் மீது ஓரிடம் கிடைக்குமென எதிர்பார்த்து, அவளது முகத்தில் வெட்கப் புன்சிரிப்பு தவழ, அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்தாள்.

பதம் 8.8.25 : பரமபுருஷ பகவானே மூவுலகங்களுக்கும் தந்தையாவார். அவரது மார்பு, அனைத்துச் செல்வங்களுக்கும் உரிமையாளரும், திருமகளுமாகிய, லக்ஷ்மிதேவியின் வசிப்பிடமாகும். திருமகள், தமது அனுகூலமும், கருணையும் கொண்ட பார்வையால், மூவுலகங்களின் ஐசுவரியங்களையும், மூவுலக வாசிகள் மற்றும் அவர்களின் நிர்வாகிகளாகிய தேவர்கள் ஆகியோருடைய ஐசுவரியங்களையும் அதிகரிக்கக் கூடியவளாவாள்.

பதம் 8.8.26 : பிறகு கந்தர்வலோக மற்றும் சாரணலோக வாசிகள் தக்க சமயத்தை பயன்படுத்திக் கொண்டு, சங்குகள், ஊதுகொம்புகள் மற்றும் மத்தளங்களைப் போன்ற அவர்களது வாத்தியக் கருவிகளை வாசித்தனர். அவர்கள் தங்களின் மனைவிகளுடன் பாடிக் கொண்டு ஆடத்துவங்கினர்.

பதம் 8.8.27 : பிரம்மதேவர், சிவபெருமான், மாமுனிவரான அங்கிரர் முதலிய பிரபஞ்ச நிர்வாகத்தின் இயக்குனர்கள் ஆகியோர், பரமபுருஷ பகவானின் பெருமைகளைக் குறிப்பிடும் வகையில் மந்திரங்களை ஓதி, பெருமழையைப் போல் மலர்களைத் தூவினர்.

பதம் 8.8.28 : எல்லா தேவர்களும், அவர்களுடன் பிரஜாபதிகளும் அவர்களது சந்ததியினரும் லக்ஷ்மியின் பார்வையால் ஆசீர்வதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் நன்நடத்தையுடனும், தெய்வீக குணங்களுடனும் உடனடியாக வளர்க்கப்பட்டு மிகுந்த திருப்தியடைந்தனர்.

பதம் 8.8.29 : ராஜனே, திருமகளால் அலட்சியம் செய்யப்பட்டதால், அசுரர்களும் இராட்சஸர்களும் தாழ்த்தப்பட்டதுடன், குழப்பமும், ஏமாற்றமும் அடைந்து அவமானத்திற்கு ஆளாயினர்.

பதம் 8.8.30 : அடுத்து, குடிப்பழக்கம் உள்ளவர்களை ஆள்பவளும், தாமரைக் கண்களையுடைய தேவதையுமான வாருணீ தோன்றினாள். முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் அனுமதியுடன், பலி மகாராஜனை தலைமையாகக் கொண்ட அசுரர்கள் அந்த இளம் பெண்ணை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர்.

பதம் 8.8.31 : ராஜனே, அதன்பிறகு, கஸ்யபரின் புத்திரர்களாகிய அசுரர்களும், தேவர்களும், பாற்கடலைக் கடைவதில் ஈடுபட்டிருந்தபோது, அதியற்புதமான புருஷர் ஒருவர் தோன்றினார்.

பதம் 8.8.32 : அவர் பலம் பொருந்திய தேகம் கொண்டிருந்தார்; அவரது கரங்கள் நீண்டும், பருத்தும், பலம் வாய்ந்தவையாகவும் இருந்தன; மூன்று கோடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது கழுத்து, ஒரு சங்கை ஒத்திருந்தது; அவரது கண்கள் சிவந்திருந்தன; மேலும் அவரது வர்ணம் கருநிறமாக இருந்தது. அவர் மிகவும் இளமையானவராகவும், மலர் மாலை சூட்டப்பட்டவராகவும் இருந்தார். அவரது உடல் முழுவதும் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பதம் 8.8.33 : அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்து, முத்துக்களாலான பளபளப்பு செய்யப்பட்ட குண்டலங்கள் அணிந்திருந்தார். அவரது கேசத்தின் முனைகளுக்கு எண்ணெய் பூசப்பட்டிருந்தது. அவரது மார்பு மிகவும் அகலமாக இருந்தது. அவரது உடலுக்கு எல்லா நல்ல அம்சங்களும் இருந்தன. அவர் ஒரு சிங்கத்தைப்போல் பருத்து பலம் வாய்ந்தவராக இருந்தார். மேலும் அவர் கைவளைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அவர் தமது கரத்தில் உச்சிவரை நிரப்பப்பட்டிருந்த ஓர் அமிர்த கலசத்தை ஏந்தியிருந்தார்.

பதம் 8.8.34 : அவர் பகவான் விஷ்ணுவின் ஓர் அம்சத்தின் அம்சமாகிய, தன்வந்தரி ஆவார். அவர் மருத்துவ விஞ்ஞானத்தில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவராக இருந்தார். மேலும் தேவர்களில் ஒருவர் என்ற முறையில், யாகங்களில் ஒரு பங்கை எடுத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பதம் 8.8.35 : தன்வந்தரி அமிர்த கலசத்தை ஏந்தியிருப்பதைக் கண்டதும், கலசத்தையும், அதிலுள்ள பொருளையும் அடைய விரும்பிய அசுரர்கள், உடனடியாக அதை பலவந்தமாக பிடுங்கிக் கொண்டனர்.

பதம் 8.8.36 : அமிர்த கலசம் அசுரர்களால் அபகரித்துச் செல்லப்படுவதைக் கண்ட தேவர்கள் வருத்தமடைந்தனர். இவ்வாறாக அவர்கள் பரமபுருஷ பகவானாகிய ஹரியின் தாமரைப் பாதங்களில் அடைக்கலம் புகுந்தனர்.

பதம் 8.8.37 : தமது பக்தர்களின் நோக்கங்களை எப்பொழுதும் நிறைவேற்ற விரும்புபவரான பரமபுருஷர், தேவர்களின் மனவருத்தத்தைக் கண்டு, அவர்களிடம் கூறினார், “வருத்தம் வேண்டாம்”, எனது சுயசக்தியால், அசுரர்களுக்கிடையில் ஒரு சண்டையை விளையவைத்து, அவர்களை நான் குழப்பிவிடுகிறேன். இவ்விதமாக அமிர்தத்தை அடையும் உங்களுடைய ஆசையை நான் நிறைவேற்றுவேன்.

பதம் 8.8.38 : ராஜனே, பிறகு யார் முதலில் அமிர்தத்தைப் பெறுவது என்பதைப் பற்றிய ஒரு சச்சரவு அசுரர்களுக்கிடையில் எழுந்தது. அவர்களில் ஒவ்வொருவரும், “நீ அதை முதலில் பருகக் கூடாது. நான்தான் முதலில் அதைப் பருக வேண்டும். நான் முதலில், நீயல்ல” என்று கூறிக்கொண்டனர்.

பதங்கள் 8.8.39 – 8.8.40 : அசுரர்களில் சிலர் கூறினர். “பாற்கடலைக் கடைவதில் எல்லா தேவர்களும் பங்கேற்றுள்ளனர். இப்போது, எந்த பொது யாகத்திலும் பங்கு எடுத்துக் கொள்ளும் சம உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆகவே அழிவற்ற சமயக் கொள்கைக்கேற்ப, தேவர்களும், அமிர்தத்தில் அவர்களுடைய பாகத்தை இப்போது எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். ‘ராஜனே, இவ்விதமாக சக்திவாய்ந்த அசுரர்கள், அமிர்தத்தை எடுத்துக் கொள்வதிலிருந்து பலம் குறைந்த அசுரர்களைத் தடுத்து
விட்டனர்.

பதங்கள் 8.8.41 – 8.8.46 : எத்தகைய எதிரிடையான சூழ்நிலையையும் தடுத்துவிடக் கூடியவரான பரமபுருஷ பகவான் விஷ்ணு, பிறகு மிக மிக அழகானதொரு பெண்ணின் உருவத்தை மேற்கொண்டார். பெண்ணாகத் தோன்றிய இந்த அவதாரம், மோஹினி மூர்த்தியாவாள். இவள் மனதுக்கு மிகவும் இன்பம் தருபவளாக இருந்தாள். அவளது நிறம், புதிதாக மலர்ந்ததொரு கருமைநிற தாமரையின் நிறத்தை ஒத்திருந்தது. அவளது உடலின் ஒவ்வொரு பாகமும் அழகாக அமைந்திருந்தது. அவ்வாறே அவளது செவிகளும் தோடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவளது கன்னங்கள் மிகவும் அழகாக இருந்தன. அவளது மூக்கு கவர்ச்சியாக இருந்தது. அவளது முகம் இளமை வேகம் கொண்ட ஒளி நிறைந்ததாக இருந்தது. அவளது பெரிய மார்பகம் அவளது இடையை மிகவும் மெல்லியதாக தோன்றச் செய்தன. அவளது முகம் மற்றும் உடல் ஆகியவற்றின் நறுமணத்தினால் கவரப்பட்ட தேனீக்கள் அவளைச் சுற்றி ரீங்கார மிட்டன. இதனால் அவளது கண்கள் அமைதியற்று இருந்தன. மிகவும் அழகாக இருந்த அவளது கூந்தல், மல்லிகைப் பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கவர்ச்சியாக அமைக்கப்பட்டிருந்த அவளது கழுத்து ஓர் அட்டிகையாலும், மற்ற ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவளது கரங்கள் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவளது உடல் சுத்தமான ஒரு புடவையால் மறைக்கப்பட்டிருந்தது. மேலும் அவளது மார்பகங்கள், அழகெனும் கடலிலுள்ள இரு தீவுகளைபோல் காணப்பட்டன. அவளது கால்கள் கொலுசுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவள் வெட்கத்துடன் புன்னகை செய்து, அசுரர்களின் மீது பார்வையைச் செலுத்திய போது ஏற்பட்ட அவளது புருவங்களின் அசைவினால், அசுரர்கள் அனைவரும் காம ஆசைகளில் மூழ்கி, அவர்களில் ஒவ்வொருவரும் அவளை அடைய விரும்பினர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare