அத்தியாயம் – 6
தேவாசுரர்களின் இடைக்கால
சமாதான அறிவிப்பு
பதம் 8.6.1
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் ஸ்துத: ஸுர-கணைர் பகவான் ஹரிர் ஈஸ்வர:
தேஷாம் ஆவிரபூத் ராஜன் ஸஹஸ்ரார்கோதய-த்யுதி:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இந்த விதமாக; ஸ்துத:—பிரார்த்தனைகள் மூலமாய் வழிபடப்பட்டு; ஸுர-கணை:—தேவர்களால்; பகவான்—பரமபுருஷ பகவான்; ஹரி:—அமங்களத்தை அழிப்பவரான; ஈஸ்வர:—பரம ஆளுனர்; தேஷாம்—பிரம்ம தேவர் மற்றும் அனைத்து தேவர்களின் முன்னிலையில்; அவிரபூத்—அங்கு தோன்றினார்; ராஜன்—ராஜனே (பரீட்சித்து); ஸஹஸ்ர—ஆயிரக்கணக்கான; அர்க—சூரியன்களின்; உதய—உதயத்தைப் போல்; த்யுதி:—அவரது பிரகாசம்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, இவ்வாறாக தேவர்களாலும், பிரம்ம தேவராலும் பிரார்த்தனைகளால் வழிபடப்பட்ட முழுமுதற் கடவுளாகிய, ஹரி, அவர்கள் முன் தோன்றினார். அவருடைய தேகத்தின் பிரகாசம் ஒரே சமயத்தில் உதிக்கும் ஆயிரக்கணக்கான சூரியன்களுக்கு ஒத்திருந்தது.

பதம் 8.6.2
தேனைவ ஸஹஸா ஸர்வே தேவா: ப்ரதிஹதேக்ஷணா:
நாபஸ்யன் கம் திச: க்ஷெளணீம் ஆத்மானம் சகுதோ விபும்

தேன ஏவ—இதனால்; ஸஹஸா—திடீரென்று; ஸர்வே—எல்லா; தேவா—தேவர்களும்; ப்ரதிஹத-ஈக்ஷணா:—அவர்களது காட்சி தடைபட்டு; ந—இல்லை; அபஸ்யன்—காண முடிந்தது; கம்—ஆகாயம்; திச—திசைகள்; க்ஷௌணீம்—நிலம்; ஆத்மானம் ச—தங்களையும்; குத:—மேலும் பார்ப்பதெனும் கேள்விக்கு இடமேது; விபும்—பரமபுருஷரை.

எல்லாத் தேவர்களின் பார்வையும் பகவானின் பிரகாசத்தால் தடைபட்டுவிட்டது. இவ்வாறாக அவர்களால் ஆகாயத்தையோ, திசைகளையோ, நிலத்தையோ, அல்லது தங்களையோ கூட காண முடியவில்லை. அவர்களின் முன்னால் இருந்த பகவானைக் காண்பதைப் என்னவென்று சொல்வது.

பதங்கள் 8.6.3 – 8.6.7
விரிஞ்சோ பகவான் த்ருஷ்ட்வா ஸஹ சர்வேண தாம் தனும்
ஸ்வச்சாம் மரகத-ஸ்யாமாம் கஞ்ச-கர்பாருணேக்ஷணாம்

தப்த-ஹேமாவதாதேன லஸத்-கௌசேய-வாஸஸா
ப்ரஸன்ன-சாரு-ஸர்வாங்கீம் ஸுமுகீம் ஸுந்தர-ப்ருவம்

மஹா-மணி-கிரீடேன கேயூராப்யாம் ச பூஷிதாம்
கர்ணாபரண-நிர்பாத-கபோல-ஸ்ரீ-முகாம்புஜாம்

காஞ்சீகலாப-வலய-ஹாரா-நூபுர-சோபிதாம்
கௌஸ்துபாபரணாம் லக்ஷ்மீம் பிப்ரதீம் வன-மாலினீம்

ஸுதர்சனாதிபி: ஸ்வாஸ்த்ரைர் மூர்திமத்பிர் உபாஸிதாம்
துஷ்டாவ தேவ-ப்ரவர: ஸசர்வ: புருஷம் பரம்
ஸர்வாமர-கணை: ஸாகம் ஸர்வாங்கைர் அவனிம் கதை:

விரிஞ்ச:—பிரம்ம தேவர்; பகவான்—சக்தி வாய்ந்த அவரது பதவியின் காரணத்தால் பகவான் என்று அழைக்கப்படுபவர்; த்ருஷ்ட்வா—காண்பதன் வழியாக; ஸஹ—உடன்; சர்வேண—சிவபெருமான்; தாம்—பரமபுருஷருக்கு; தனும்—அவரது தெய்வீக வடிவம்; ஸ்வச்சாம்—ஜடக்களங்கம் இல்லாமல்; மரகத-ஸ்யாமாம்—நீல நிற இரத்தினத்தின் ஒளியைப் போன்ற பளபளப்பான ஒருடலுடன்; கஞ்ச-கர்ப-அருண-ஈக்ஷணாம்—ஒரு தாமரை மலரின் உட்பாகத்தைப் போல் சிவந்த; தப்த-ஹேம-அவதாதேன—உருக்கிய தங்கம் போன்ற காந்தியுடன்; லஸத்—ஒளிவீசும்; கௌசேய-வாஸஸா—மஞ்சள் நிறபட்டாடையை அணிந்து; ப்ரஸன்ன-சாரு-ஸர்வ-அங்கீம்—அவரது உடலின் அங்கங்கள் அனைத்தும் நேர்த்தியாகவும், மிகவும் அழகாகவும் இருந்தன; ஸுமுகீம்—புன்னகை பூத்த ஒரு முகத்துடன்; ஸுந்தர-ப்ருவம்—புருவங்கள் மிகவும் அழகாக அமையப் பெற்றிருந்த; மஹா-மணிகிரீடேன—விலை உயர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு கிரீடத்துடன்; கேயூராப்யாம் ச பூஷிதாம்—எல்லா வகையான ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட; கர்ண-ஆபரண-நிர்பாத—அவரது செவிகளின் மீதுள்ள இரத்தினக்கற்களின் கிரணங்களால் ஒளிமயம் ஆக்கப்பட்டு; கபோல—கன்னங்களுடன்; ஸ்ரீ-முக-அம்புஜாம்—யாருடைய தாமரை போன்ற அழகிய முகம்; காஞ்சீ-கலாப-வலய—இடுப்பில் அணியும் வார் மற்றும் கரங்களில் அணியும் காப்பு போன்ற ஆபரணங்கள்; ஹார-நூபுர—மார்பின் மீது ஒரு அரம் மற்றும் கால்களில் கொலுசுகள் ஆகியவற்றுடன்; சோபி தாம்—அனைத்தும் அழகாக பொருத்தப்பட்டு; கௌஸ்துப-ஆபரணாம்—அவரது மார்பு கௌஸ்துப மணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது; லக்ஷ்மீம்—லக்ஷ்மி தேவி; பிப்ரதீம்—அசையும்; வனமாலினீம்—மலர் மாலைகளுடன்; ஸுதர்சன-ஆதிபி:—சுதர்சன சக்கரத்தையும் மற்றவைகளையும் ஏந்தியவாறு; ஸ்வ-அஸ்த்ரை:—அவரது ஆயுதங்களுடன்; மூர்திமத்பி:—அவரது சுய ரூபத்தில்; உபாஸிதாம்—வழிபடப்படும்; துஷ்டாவ—திருப்தியடைந்தார்; தேவ-ப்ரவர:—தேவர்களின் தலைவர்; ஸ-சர்வ:—சிவபெருமானுடன்; புருஷம் பரம்—பரமபுருஷர்; ஸர்வ-அமர- கணை:—எல்லா தேவர்களாலும் சூழப்பட்டவராய்; ஸாகம்—உடன்; ஸர்வ-அங்கை:—உடலின் எல்லா அங்கங்களுடனும்; அவனிம்—நிலத்தின் மேல்; கதை:—விழுந்து வணங்கினார்.

மரகத மணியையொத்த கரு நிற மேனியுடனும், தாமரை மலரின் உட்புறத்தைப் போன்ற சிவந்த கண்களுடனும், உருக்கிய தங்கத்தைப் போன்ற மஞ்சள் நிற ஆடைகளுடனும், மற்றும் முழு உடலும் கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்டும் விளங்கிய பரமபுருஷ பகவானின் பளிங்கு போல் தெளிந்த சுய அழகை பிரம்ம தேவரும், சிவ பெருமானும் கண்டனர். விலை உயர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தைத் தலையில் அணிந்தவாறு, தாமரையைப் போன்ற, புன்னகை பூத்த அவரது அழகிய முகத்தை அவர்கள் கண்டனர். பெருமானுக்கு கவர்ச்சியான புருவங்கள் இருந்தன. அவரது கன்னங்கள் குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பிரம்மதேவரும், சிவ பெருமானும் பகவானின் இடுப்பிலிருந்த வாரையும், அவரது கரங்களிலிருந்த காப்புகளையும், மார்பின் மீதிருந்த ஆரத்தையும் மற்றும் கால்களில் இருந்த கொலுசுகளையும் கண்டனர். பகவான் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் லக்ஷ்மி தேவியை உடன் வைத்திருந்தார். அத்துடன் அவர் சக்கரத்தையும், கதையையும் போன்ற அவருக்குச் சொந்தமான ஆயுதங்களையும் ஏந்தியவாறு இருந்தார். இவ்வாறாக பகவானின் ரூபத்தைக் கண்டதும் பிரம்ம தேவர், சிவபெருமான் மற்றும் பிற தேவர்கள் ஆகிய அனைவரும் உடனடியாக தரையில் விழுந்து அவர்களது வணக்கங்களைச் சமர்ப்பித்தனர்.

பதம் 8.6.8
ஸ்ரீ-ப்ரஹ்மோவாச
அஜாத-ஜன்ம-ஸ்திதி-ஸம்யமாயா-
குணாய நிர்வாண-ஸுகார்ணவாய
அணோர் அணிம்னே ‘பரிகண்ய-தாம்னே
மஹானுபாவாய நமோ நமஸ் தே

ஸ்ரீ-ப்ரஹ்மா உவாச—பிரம்ம தேவர் கூறினார்; அஜாத-ஜன்ம-ஸ்திதி-ஸம்யமாய—ஒருபோதும் பிறப்பெடுக்காதவரும், பல்வேறு அவதாரங்களில் முடிவின்றி தோன்றிக் கொண்டே இருப்பவருமான முழுமுதற் கடவுளுக்கு; அகுணாய—ஜட இயற்கைக் குணங்களால் (ஸத்வ-குணம், ரஜோ-குணம் மற்றும் தமோ-குணம்) ஒரு போதும் பாதிப்படையாதவரான; நிர்வாண-ஸுக-அர்ணவாய—பௌதிக வாழ்வுக்கு அப்பாற்ப்பட்ட, நித்தியமான ஆனந்தக் கடலுக்கு; அணோ: அணிம்னே—அணுவிலும் சிறிய; அபரிகண்ய-தாம்னே—ஜடக் கற்பனையால் ஒருபோது உணர்ந்தறிய முடியாத தேக அம்சங்களைக் கொண்ட; மஹா-அனுபாவாய—நினைத்தற்கரிய அவரது இருப்பு; நம:—எங்களது வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம்; நம:—மீண்டும் எங்களது வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம்; தே—உமக்கு.

பிரம்ம தேவர் கூறினார்: நீர் பிறப்பற்றவராய் இருந்தும், அவதாரமாக வரும் உமது தோற்றமும், மறையும் ஓய்வதேயில்லை. நீர் எப்போதும் பெளதிக குணத்திலிருந்து விடுபட்டிருக்கிறீர். மேலும் கடலையொத்த உன்னதமான ஆனந்தத்தின் புகலிடமும் நீரே. உமது தெய்வீகமான உருவில் நீர் நித்திய வாசம் புரிகிறீர். மிகப்பெரிய சூட்சுமங்களுக்கெல்லாம் நீரே பரம சூட்சுமமாவீர், ஆகவே யாருடைய இருப்பைக் கற்பனையாலும் அறிய முடியாதோ, அந்த பரமனாகிய உமக்கு எங்களது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம்.

பதம் 8.6.9
ரூபம் தவைத்த புருஷர்ஷபேஜ்யம்
ஸ்ரேயோ ‘ர்திபிர் வைதிக-தாந்த்ரிகேண
யோகேன தாத: ஸஹ நஸ் த்ரி-லோகான்
பஸ்யாமி அமுஷ்மின் உஹ விஸ்வ மூர்த்தௌ

ரூபம்—உருவம்; தவ—உமது; ஏதத்—இந்த; புருஷம்-ரிஷப—புருஷர்களில் மிகச் சிறந்தவரே; இஜ்யம்—வழிபாட்டுக்குரிய; ஸ்ரேய:—முடிவான மங்களம்; அர்திபி:—ஆசைப்படுபவர்களால்; வைதிக—வேத உபதேசங்களின் வழிகாட்டலின் கீழ்; தாந்த்ரிகேண—நாரத பஞ்சாரத்திரத்தைப் போன்ற ‘தந்திரங்களைப்’ பின்பற்றுபவர்களால் உணரப்படுகிறது; யோகேன—அஷ்டாங்க யோகத்தைப் பயில்வதன் மூலமாக; தாத:—பரம ஆளுனரே; ஸஹ—உடன்; ந:—எங்களால் (தேவர்கள்); த்ரி-லோகான்—மூவுலகங்களையும் ஆளும்; பஸ்யாமி—நாங்கள் நேரடியாகக் காண்கிறோம்; அமுஷ்மின்—உமக்குள்; உ—ஓ; ஹ—பூரணமாக தோற்றுவிக்கப்பட்ட; விஸ்வ-மூர்த்தௌ—விஸ்வரூபம் கொண்ட உம்முள்.

புருஷர்களில் சிறந்தவரே, பரம இயக்குனரே, பரமான நல்லதிர்ஷ்டத்தை உண்மையாகவே விரும்புபவர்கள், உம்முடைய இந்த ரூபத்தை வேத தந்திரங்களுக்குகேற்ப வழிபடுவர். எம்பெருமானே, உமக்குள் மூவுலகங்களையும் எங்களால் காண முடிகிறது.

பதம் 8.6.10
த்வய் அக்ர ஆஸித் த்வய மத்ய ஆஸித்
த்வய் அந்த ஆஸீத் இதம் ஆத்ம-தந்த்ரே
த்வம் ஆதீர் அந்தோ ஜகதோ ‘ஸ்ய மத்யம்
கடஸ்ய ம்ருத்ஸ்னேவ பர: பரஸ்மாத்

த்வயி—முழுமுதற் கடவுளாகிய தங்களுக்கு; அக்ரே—ஆரம்பத்தில்; ஆஸீத்—இருந்தது; த்வயி—தங்களுக்கு; மத்யே—மத்தியில்; அஸீத்—இருந்தது; த்வயி—தங்களுக்கு; அந்தே—முடிவில்; ஆஸீத்—இருந்தது; இதம்—இப்பிரபஞ்ச தோற்றம் முழுவதும்; ஆத்ம-தந்த்ரே—முற்றிலும் உமது கட்டுப்பாட்டின் கீழ்; த்வம்—தாங்கள்; ஆதி:—ஆரம்பம்; அந்த:—முடிவு; ஜகத—பிரபஞ்ச தோற்றத்தின்; அஸ்ய—இதன்; மத்யம்—மத்திய; கடஸ்ய—ஒரு மண்பாண்டத்தின்; ம்ருத்ஸ்னா இவ—மண்ணைப் போல்; பர:—உன்னதமான; பரஸ்மாத்—தலைவராக இருப்பதால்.

எம்பெருமானே, நீர் எப்பொழுதும் பூரண சுதந்திரம் உள்ளவராவீர். இப்பிரபஞ்ச தோற்றம் முழுவதும் உம்மிடமிருந்தே எழுகின்றது, உம்மிடம் அடைக்கலம் கொண்டுள்ளது, உமக்குள்ளேயே முடிவடைகின்றது. ஒரு மண் பாத்திரத்திற்குக் காரணமாக இருப்பதுவும், பாத்திரத்தைத் தாங்குவதும், அது உடைந்துவிடும் போது, பாத்திரம் இறுதியாக திரும்பிச் செல்லும் இடமும் மண்ணே தான். இதைப்போலவே பகவானாகிய நீரே எல்லாவற்றிற்கும் ஆரம்பமும், ஆதாரமும், முடிவுமாக இருக்கிறீர்.

பதம் 8.6.11
த்வம் மாயயாத்மாஸ்ரயயா ஸ்வயேதம்
நிர்மாய விஸ்வம் தத்-அனுப்ரவிஷ்ட:
பஸ்யந்தி யுக்தா மனஸா மனீஷிணோ
குண-வ்யவாயே ‘பி அகுணம் விபஸ்சித:

த்வம்—தாங்கள்; மாயயா—உமது நித்திய சக்தியால்; ஆத்ம-ஆஸ்ரயயா—உமது புகலிடத்தின் கீழ் இருப்பவரின் வாழ்வு; ஸ்வயா—உம்மிடமிருந்து வெளிவந்த; இதம்—இந்த; நிர்மாய—படைக்க வேண்டும் என்பதற்காக; விஸ்வம்—பிரபஞ்சம் முழுவதும்; தத்—அதனுள்; அனுப்ரவிஷ்ட:—நீர் நுழைகிறீர்; பஸ்யந்தி—அவர்கள் காண்கின்றனர்; யுக்தா:—உம்முடன் தொடர்பு கொண்டு உள்ளவர்கள்; மனஸா—முன்னேற்றமடைந்த ஒரு மனதால்; மனீஷிண:—முன்னேற்றமடைந்த உணர்வு கொண்டுள்ள மக்கள்; குண—பௌதிக குணங்களின்; வ்யவாயே—உருமாற்றத்தில்; அபி—ஆயினும்; அகுணம்—இன்னும் பௌதிக குணங்களால் தொடப்படாமலே; விபஸ்சித:—சாஸ்திர உண்மையைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பவர்கள்.

பரமபுருஷரே, நீர் பிறருடைய உதவியை ஏற்காதவரும், சுய சுதந்திரம் உள்ளவருமாவீர். உமது சுய ஆற்றலின் மூலமாக, இப்பிரபஞ்ச தோற்றத்தை நீர் படைத்து, அதனுள் பிரவேசிக்கிறீர்கள். பெளதிக குணங்களின் மாற்றங்களுக்குள் நீர் இருப்பினும், உமது இருப்பு இக்குணங்களால் தொடப்படுவதே இல்லை என்பதை, கிருஷ்ண உணர்வில் முன்னேறியவர்களும், அதிகாரப் பூர்வமான சாஸ்திர அறிவை முழுமையாகப் பெற்றவர்களும், மற்றும் பக்தி யோகப் பயிற்சியின் மூலமாக எல்லா ஜடக்களங்ககளிலிருந்து தூய்மை அடைந்தவர்களும் தெளிந்த மனங்களுடன் காண்கின்றனர்.

பதம் 8.6.12
யதாக்னிம் ஏதஸி அம்ருதம் ச கோஷு
புவி அன்னம் அம்பூத்யமனே ச வ்ருத்திம்
யோகைர் மனுஷ்யா அதியந்தி ஹி த்வாம்
குணேஷு புத்யா கவயோ வதந்தி

யதா—அதுபோல்; அக்னிம்—நெருப்பு; ஏதஸி—விறகில்; அம்ருதம்—அமிர்தத்தைப் போன்ற பால்; ச—மேலும்; கோஷு—பசுக்களில் இருந்து; புவி—நிலத்தின் மேல்; அன்னம்—உணவுத்தானியங்கள்; அம்பு—நீர்; உத்யமானே—வியாபாரத்தில்; ச—தவிரவும்; வ்ருத்திம்—வாழ்க்கைத் தேவை; யோகை:—பக்தியோகப் பயிற்சியின் மூலமாக; மனுஷ்யா:—மனிதர்கள்; அதியந்தி—அடைகின்றனர்; ஹி—உண்மையில்; த்வாம்—நீர்; குணேஷு—ஜட இயற்கைக் குணங்களில்; புத்யா—புத்தியால்; கவய:—சிறந்த புருஷர்கள்; வதந்தி—கூறுகின்றனர்.

ஒருவன் விறகிலிருந்து நெருப்பையும், பசுவின் மடியிலிருந்து பாலையும், நிலத்திலிருந்து உணவுத் தானியம், நீர் ஆகியவற்றையும், தொழில் வியாபாரங்களிலிருந்து வாழ்க்கைத் தேவைகளையும் பெறுவதைப் போலவே, பக்தியோகப் பயிற்சியினால், அது இந்த ஜட உலகினுள் செய்யப்படுவதாயினும், அதனால் உமது அனுக்கிரகத்தை ஒருவரால் அடைய முடியும் அல்லது புத்திசாலித்தனமாக ஒருவரால் உம்மை அணுக முடியும். புண்ணிய புருஷர்கள் அனைவரும் இதை ஊர்ஜிதப்படுத்துகின்றனர்.

பதம் 8.6.13
தம் த்வாம் வயம் நாத ஸமுஜ்ஜிஹானம்
ஸரோஜ-நாபாதிசிரேப்ஸிதார்தம்
த்ருஷ்ட்வா கதா நிர்வ்ருதம் அத்ய ஸர்வே
கஜா தவார்தா இவ காங்கம் அம்ப:

தம்—பகவானே; த்வாம்—தாங்கள்; வயம்—நாங்களனைவரும்; நாத—நாதனே; ஸமுஜ்ஜிஹானம்—எல்லாப் பெருமைகளுடனும் இப்போது எங்கள் முன் தோன்றும்; ஸரோஜ-நாப—தாமரைப் பூவை ஒத்த நாபியைக் கொண்டவர், அல்லது யாருடைய நாபியிலிருந்து ஒரு தாமரைப் பூ வளர்கின்றதோ அந்த பகவானே; அதி-சிர—மிகமிக நீண்ட காலமாக; ஈப்ஸித—ஆசைப்பட்டோம்; அர்தம்—வாழ்வின் இறுதி நோக்கத்திற்காக; த்ருஷ்ட்வா—கண்டு; கதா:—எங்களுடைய காட்சியில்; நிர்வ்ருதம்—தெய்வீக ஆனந்தம்; அத்ய—இன்று; ஸர்வே—நாங்களனைவரும்; கஜா:—யானைகள்; தவ-அர்தா:—காட்டுத்தீயில் துன்புற்று; இவ—போன்ற; காங்கம் அம்ப:—கங்கை நீரால்.

காட்டுத் தீயினால் பெருந்துன்பத்திற்கு ஆளான யானைகளுக்கு கங்கையிலிருந்து நீர் கிடைக்கும்போது அவை பெருமகிழ்ச்சி அடைகின்றன. அதைப்போலவே, யாருடைய நாபியிலிருந்து ஒரு தாமரைப் பூ மலர்கின்றதோ அந்த பகவானாகிய நீரே எங்கள் முன் இப்போது தோன்றியிருப்பதால், நாங்கள் தெய்விக ஆனந்தத்தைப் பெற்றவர்களாக இருக்கிறோம். மிகவும் நீண்ட காலமாக உம்மைக் காண வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த நாங்கள், பெருமானாகிய உம்மைக் காண்பதன் மூலமாக, வாழ்வின் முடிவான நோக்கத்தை அடைந்துவிட்டோம்.

பதம் 8.6.14
ஸ த்வம் விதத்ஸ்வாகில-லோக-பாலா
வயம் யத் அர்தாஸ் தவ பாத-மூலம்
ஸமாகதாஸ் தே பஹிர்-அந்தர்-ஆத்மன்
கிம் வான்ய-விக்ஞாப்யம் அசஷ-ஸாக்ஷிண:

ஸ:—அந்த; த்வம்—தாங்கள்; விதத்ஸ்வ—தயவு செய்து தேவையானதைச் செய்வீராக; அகில-லோக-பாலா:—இப்பிரபஞ்சத்தினுடைய பல்வேறு இலாக்காக்களின் நிர்வாகஸ்தர்களாகிய தேவர்கள்; வயம்—நாங்கள் எல்லோரும்; யத்—எது; அர்தா:—நோக்கம்; தவ-பாத-மூலம்—உமது தாமரைப் பாதங்களில்; ஸமாகதா:—நாங்கள் வந்திருக்கிறோம்; தே—உமக்கு; பஹி-அந்த:-ஆத்மன்—அனைவரிலும் பரமாத்மாவாக இருப்பவரே, உள்ளும் புறமும் எப்பொழுதும் சாட்சியாக இருப்பவரே; கிம்—என்ன; வா—இரண்டிலொன்று; அன்ய விக்ஞாப்யம்—நாங்கள் உங்களுக்குக் கூறவேண்டும்; அசேஷ-ஸாக்ஷிண:—அனைத்தையும் அறிபவரும், அவற்றிற்கு சாட்சியாக இருப்பவரும்.

பெருமானே, அநேக தேவர்களும், இப்பிரபஞ்சத்தின் நிர்வாகிகளுமாகிய நாங்கள் உமது திருவடிகளை நோக்கி வந்திருக்கிறோம். எங்களது, வரவின் நோக்கத்தை தயவுசெய்து, நிறைவேற்றுவீராக. நீரே அனைத்திற்கும் உள்ளும், புறமுமாக உள்ள சாட்சியாவீர். உமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆகவே எதைப்பற்றியும் உமக்கு மீண்டும் தெரிவிப்பதற்கு அவசியமில்லை.

பதம் 8.6.15
அஹம் கிரித்ரஸ் ச ஸுராதயோ யே
தக்ஷாதயோ ‘க்னேர் இவ கேதவஸ் தே
கிம் வா விதாமேச ப்ருதக்-விபாதா
விதத்ஸ்வ சம் நோ த்விஜ-தேவ-மந்த்ரம்

அஹம்—நான் (பிரம்ம தேவர்); கிரித்ர:-சிவபெருமான்; ச—தவிரவும்; ஸுர-ஆதய:—தேவர்கள் எல்லோரும்; யே—நாங்கள் இருப்பதைப் போல்; தக்ஷ-ஆதய:—தட்ச மகாராஜனை தலைமையாகக் கொண்ட; ஆக்னே:—நெருப்பின்; இவ—போன்று; கேதவ:—பொறிகள்; தே—உம்மிடமிருந்து; கிம்—என்ன; வா—இரண்டிலொன்று; விதாம—எங்களால் புரிந்து கொள்ள முடியும்; ஈச—எம்பெருமானே; ப்ருதக்-விபாதா:—உம்மிடமிருந்து சுதந்திரமாக; விதத்ஸ்வ—அன்புடன் எங்களுக்கு வழங்குவீராக; சம்—நல் அதிர்ஷ்டம்; ந:—எங்களுடைய; த்விஜ-தேவ-மந்த்ரம்—பிராமணர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோரின் முக்திக்குப் பொருத்தமான உபாயம்.

நான் (பிரம்மதேவர்); சிவபெருமான் மற்றும் தட்சனைப் போன்ற ப்ரஜாபதிகளால் சூழப்பட்ட தேவர்கள் ஆகியோர், மூல நெருப்பாகிய உம்மால் ஒளியூட்டப்பட்ட பொறிகளேயன்றி வேறொன்றுமில்லை. நாங்கள் உமது பின்னப் பகுதிகள் என்பதால் எங்களது நலனைப் பற்றி எதைத்தான் எங்களால் புரிந்து கொள்ள முடியும்? பரமபுருஷரே, தயவுசெய்து பிராமணர்கள் மற்றும் தேவர்களின் முக்திக்குப் பொருத்தமான உபாயத்தை எங்களுக்கு வழங்குவீராக.

பதம் 8.6.16
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் விரிஞ்சாதிபிர் ஈடிதஸ் தத்
விக்ஞாய தேஷாம் ஹ்ருதயம் யதைவ
ஜகாத ஜீமூத-கபீரயா கிரா
பக்தாஞ்ஜலீன் ஸமவ்ருத-ஸர்வ-காரகான்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறாக; விரிஞ்ச-ஆதிபி:—பிரம்ம தேவரை தலைமையாகக் கொண்ட எல்லா தேவர்களாலும்; ஈடித:—வழிபடப்பட்டு; தத்விக்ஞாய—எதிர்ப்பார்ப்பை அறிந்து; தேஷாம்—அவர்கள் எல்லோருடைய; ஹ்ருதயம்—இதயத்தின் மையம்: யதா—அதுபோல்; ஏவ—உண்மையில்; ஜகாத—பதிலளித்தார்; ஜீமூத-கபீரயா—மேகங்களின் ஓசையைப் போல்; கிரா—வார்த்தைகளால்; பக்த-அஞ்சலீன்—கூப்பிய கரங்களுடன் நின்றிருந்த தேவர்களுக்கு; ஸம்வ்ருத—கட்டுப்படுத்தப்பட்ட; ஸர்வ—எல்லா; காரகான்—புலன்கள்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக பிரம்ம தேவரை தலைமையாகக் கொண்ட தேவர்கள் பெருமானுக்கு பிரார்த்தனைகளை சமர்ப்பித்தனர். அவர்கள் தம்மை அணுகியுள்ள நோக்கத்தை பகவான் புரிந்து கொண்டார். ஆகவே, மேகங்களின் ‘கட கட’ வென்ற ஓசையை ஒத்ததோர் ஆழமான குரலில், கூப்பிய கரங்களுடன் கவனத்துடன் நின்றிருந்த தேவர்களுக்கு பகவான் பின்வருமாறு பதில் கூறினார்.

பதம் 8.6.17
ஏக ஏவேஸ்வரஸ் தஸ்மின் ஸுர-கார்யே ஸுரேஸ்வர:
விஹர்து-காமஸ் தான் ஆஹ ஸமுத்ரோன்மதனாதிபி:

ஏக:—தாமாகவே; ஏவ—உண்மையில்; ஈஸ்வர:—முழுமுதற் கடவுள்; தஸ்மின்—அதில்; ஸுர-கார்யே—தேவர்களின் நடவடிக்கைகளை; ஸுர-ஈஸ்வர:—தேவர்களின் இறைவனான முழுமுதற் கடவுள்; விஹர்து—லீலைகளை அனுபவிப்பதற்காக; காம:—விருப்பங்கொண்டு; தான்—தேவர்களுக்கு; ஆஹ—கூறினார்; ஸமுத்ர-உன்மதன-ஆதிபி:—கடலைக் கடையும் செயல்களினால்.

தேவர்களின் இறைவனாகிய முழுமுதற் கடவுள், தேவர்களால் செய்யப்படும் காரியங்களைத் தாமே இயற்றும் வல்லமை படைத்தவராவார். ஆனாலும் கடலைக் கடைவதிலுள்ள லீலைகளை அனுபவிக்க அவர் விரும்பினார். ஆகவே அவர் பின்வருமாறு கூறினார்.

பதம் 8.6.18
ஸ்ரீ-பகவான் உவாச
ஹந்த ப்ரஹ்மன் அஹோ சம்போ ஹேதேவா மம பாஷிதம்
ஸ்ருணுதாவஹிதா: ஸர்வே ஸ்ரேயோ வ: ஸ்யாத் யதா ஸுரா:

ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; ஹந்த—அவர்களிடம் கூறும் முகமாக; ப்ரஹ்மன் அஹோ—பிரம்ம தேவரே; சம்போ—சிவபெருமானே; ஹே—ஒ; தேவா:—தேவர்களே; மம—எனது; பாஷிதம்—கூற்றை; ஸ்ருணுத—கேளுங்கள்; அவஹிதா:—மிகவும் கவனத்துடன்; ஸர்வே—நீங்கள் அனைவரும்; ஸ்ரேய:—நல்லதிர்ஷ்டம்; வ:—உங்கள் எல்லோருக்கும்; ஸ்யாத்—ஏற்படுமாக; யதா—அவ்வாறு; ஸுரா:—தேவர்களுக்கு.

பரமபுருஷ பகவான் கூறினார்: பிரம்ம தேவரே, சிவபெருமானே மற்றும் பிற தேவர்களே, நான் கூறப்போவது உங்கள் அனைவருக்கும் நல்லதர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்பதால், தயவு செய்து மிகவும் கவனத்துடன் கேளுங்கள்.

பதம் 8.6.19
யாத தானவ-தைதேயைஸ் தாவத் ஸந்திர் விதீயதாம் காலேனானுக்ருஹீதைஸ் தைர் யாவத் வோ பவ ஆத்மன:

யதா—நிறைவேற்றுங்கள்; தானவ—அசுரர்களுடன்; தைதேயை:—மற்றும் அசுரர்களுடன்; தாவத்—இருக்குமளவும்; ஸந்தி:—இடைக்கால சமாதானம்; விதீயதாம்—நிறைவேற்றுங்கள்; காலேன—அனுகூலமான காலத்தால் (அல்லது காவ்யேன-சுக்ரார்யரால்); அனுக்ருஹீதை:—அனுக்கிரகங்களைப் பெறும்; தை:—அவர்களுடன்; யாவத்—அதுவரை; வ:—உங்களின்; பவ:—நல்லதிர்ஷ்டம்; ஆத்மன:—உங்களுடைய.

நீங்கள் செழிப்புடன் இல்லாதிருக்கும்வரை, காலத்தின் அனுகூலத்தைப் பெற்றுள்ள துர்த்தேவதைகளுடனும், அசுரர்களுடனும் நீங்கள் ஓர் இடைக்கால சமாதானத்தைச் செய்துகொள்ள வேண்டும்.

பதம் 8.6.20
அரயோ ‘பி ஹி ஸந்தேயா ஸதி கார்யார்த-கெளரவே
அஹி-மூஷிகவத் தேவா ஹி அர்தஸ்ய பதவீம் கதை:

அரய:—எதிரிகள்; அபி—ஆயினும்; ஹி—உண்மையில்; ஸந்தேயா:—ஓர் இடைக்கால சமாதானத்திற்குத் தகுதியுள்ள; ஸதி—அவ்வாறு இருப்பதால்; கார்ய-அர்த-கௌரவே—முக்கிய கடமையெனும் விவகாரத்தில்; அஹி—பாம்பு; மூஷிக—எலி; வத்—போன்ற; தேவா:—தேவர்களே; ஹி—உண்மையில்; அர்தஸ்ய—நலத்தின்; பதவீம்—பதவி; கதை:—அவ்வாறு இருந்து.

தேவர்களே, ஒருவன் தனது சொந்த நலன்களை நிறைவேற்றிக் கொள்வது மிகவும் முக்கியம் என்பதால், அவன் தனது எதிரியுடன் கூட தற்காலிகமாக சமாதானத்தைச் செய்து கொள்ளலாம். ஒருவர் தனது சொந்த நலனுக்காக, எலியுடன் அகப்பட்ட பாம்பின் நியாயத்திற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

பதம் 8.6.21
அம்ருதோத்பாதனே யத்ன: க்ரியதாம் அவிலம்பிதம்
யஸ்ய பீதாஸ்ய வை ஐந்துர் ம்ருத்யு-க்ரஸ்தோ ‘மரோ பவேத்

அம்ருத-உத்பாதனே—அமிர்தத்தை உற்பத்தி செய்வதில்; யத்ன:—முயற்சி; க்ரியதாம்—செய்யுங்கள்; அவிலம்பிதம்—தாமதமின்றி; யஸ்ய—எந்த அமிர்தத்தின்; பீதஸ்ய—அருந்துபவர் யாராயினும்; வை—உண்மையில்; ஜந்து:—ஜீவராசி; ம்ருத்யு-க்ரஸ்த:—உடனடியாக சம்பவிக்குப்போகும் மரண ஆபத்தில் இருந்தாலும்; அமர:—அமரராக (சிரஞ்சீவியாக); பவேத்—ஆகலாம்.

இறக்கும் தறுவாயிலுள்ள ஒருவன் அருந்தி, சிரஞ்சீவி ஆகக்கூடிய அமிர்தத்ததை உற்பத்தி செய்வதில் உடனடியாக முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

பதங்கள் 8.6.22 – 8.6.23
க்ஷிப்த்வா க்ஷுரோததெள ஸர்வா வீருத்-த்ருண-லதெளஷதீ:
மந்தானம் மந்தரம் க்ருத்வா நேத்ரம் க்ருத்வா து வாஸுகிம்

ஸஹாயேன மயா தேவா நிர்மந்தத்வம் அதந்ரிதா:
க்லேச-பாஜோ பவிஷ்யந்தி தைத்யா யூயம் பல-க்ரஹா:

க்ஷிப்த்வா—போட்டு; க்ஷுர-உததெள—பாற்கடலில்; ஸர்வா:—எல்லா வகையான; வீருத்—கொடிகள்; த்ருண—புல்; லதா—காய்கறிகள்; ஒளஷதீ:—மற்றும் மூலிகைகள்; மந்தானம்—மத்தாக; மந்தரம்—மந்தர மலையை; க்ருத்வா—செய்து; நேத்ரம்—கடையும் கயிறாக; க்ருத்வா—செய்து; து—ஆனால்; வாஸுகிம்—வாசுகி பாம்பை; ஸஹாயேன—ஓர் உதவியாளருடன்; மயா—என்னால்; தேவா:—எல்லா தேவர்களும்; நிர்மந்தத்வம்—கடைந்து கொண்டே இருங்கள்; அதந்ரிதா:—வழி தவறிவிடாமல், மிகவும் கவனத்துடன்; க்லேச-பாஜ:—துக்கத்தில் பங்கேற்பவர்கள்; பவிஷ்யந்தி—இருக்கும்; தைத்யா:—அசுரர்கள் தான்; யூயம்—ஆனால் நீங்களனைவரும்; ஃபல-க்ரஹா:—உண்மையான பலனைப் பெறுபவர்கள்.

தேவர்களே, எல்லா வகையான காய்கறிகள், புற்கள், கொடிகள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைப் பாற்கடலில் எறிந்து விடுங்கள். அதன்பின் என் உதவியுடன், மந்தர மலையை மத்தாகவும், வாசுகியைக் கடையும் கயிறாகவும் கொண்டு, வழி பிறழாத கவனத்துடன் பாற்கடலைக் கடையுங்கள். இவ்வாறாக அசுரர்கள் உழைப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால், தேவர்களாகிய நீங்களே, கடலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் அமிர்தத்தின் உண்மையான பலனைப் பெறுவீர்கள்.

பதம் 8.6.24
யூயம் தத் அனுமோதத்வம் யத் இச்சந்தி அஸுரா: ஸுரா:
ந ஸம்ரம்பேண ஸித்யந்தி ஸர்வார்தா: ஸாந்த்வயா யதா

யூயம்—நீங்களனைவரும்; தத்—அதை; அனுமோதத்வம்—ஏற்றுக் கொள்ள வேண்டும்; யத்—எதுவாக இருப்பினும்; இச்சந்தி—அவர்கள் விரும்புவது; அஸுரா:—அசுரர்கள்; ஸுரா:—தேவர்களே; ந—இல்லை; ஸம்ரம்பேண—கோபத்தில் சலனமடைவதால்; ஸித்யந்தி—மிகவும் வெற்றிகரமானவை; ஸர்வ-அர்தா:—விரும்பிய முடிவுகள் அனைத்தும்; ஸாந்த்வயா—அமைதியாக நிறைவேற்றுவதால்; யதா—அவ்வாறு.

எனக்குப் பிரியமான தேவர்களே, பொறுமையுடனும், அமைதியுடனும் அனைத்தையும் செய்துவிட முடியும். ஆனால் கோபத்தால் ஒருவன் சலனமடைவானாயின், நோக்கம் நிறைவேறாது. ஆகவே, அசுரர்கள் எதைக் கேட்டாலும், அதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்.

பதம் 8.6.25
ந பேதவ்யம் காலகூடாத் விஷாஜ் ஜலதி-ஸம்பவாத்
லோப: கார்யோ ந வோ ஜாது ரோஷ: காமஸ் து வஸ்துஷு

ந—கூடாது; பேதவ்யம்—அஞ்ச; காலகூடாத்—காலகூட; விஷாத்—விஷத்திலிருந்து; ஜலதி—பாற்கடலில் இருந்து; ஸம்பவாத்—தோன்றவிருப்பவை; லோப:—பேராசை; கார்ய:—காரியம்; ந—கூடாது; வ:—உங்களுக்கு; ஜாது—எந்த நேரத்திலும்; ரோஷ:—கோபம்; காம:—காமம்; து—மேலும்; வஸ்துஷு—உற்பத்திப் பொருட்களில்.

பாற்கடலிலிருந்து காலகூடம் எனப்படும் விஷம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் அதைக்கண்டு நீங்கள் அஞ்சக் கூடாது. மேலும் பல்வேறு பொருட்கள் கடலிலிருந்து கடைந்து எடுக்கப்படும் போது, அவற்றிற்காக நீங்கள் பேராசை கொள்ளவோ, அவற்றை அடைய முயற்சிக்கவோ அல்லது கோபப்படவோ கூடாது.

பதம் 8.6.26
ஸ்ரீ-சுக உவாச
இதி தேவான் ஸமாதிஸ்ய பகவான் புருஷோத்தம:
தேஷாம் அந்தர்ததே ராஜன் ஸ்வச்சந்த-கதிர் ஈஸ்வர:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; தேவான்—தேவர்கள் எல்லோரும்; ஸமாதிஸ்ய—அறிவுறுத்திய; பகவான்—பரமபுருஷ பகவான்; புருஷ-உத்தம:—உத்தம புருஷர்; தேஷாம்—அவர்களிடமிருந்து; அந்தர்ததே—மறைந்தார்; ராஜன்—ராஜனே; ஸ்வச்சந்த—சுதந்திரமான; கதி:—போக்குடைய; ஈஸ்வர:—முழுமுதற் கடவுள்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்தார்: பரீட்சித்து மகாராஜனே, இவ்விதமாக தேவர்களுக்கு அறிவுரை கூறியபின், அனைத்து ஜீவராசிகளிலும் மிகச் சிறந்தவரான, சுதந்திரம் வாய்ந்த பரமபுருஷ பகவான், அவர்களின் முன்னிலையிலிருந்து மறைந்தார்.

பதம் 8.6.27
அத தஸ்மை பகவதே நமஸ்க்ருத்ய பிதாமஹ:
பவஸ் ச ஜக்மது: ஸ்வம் ஸ்வம் தாமோபேயுர் பலிம் ஸுரா:

அத—இதன்பிறகு; தஸ்மை—அவருக்கு; பகவதே—பரமபுருஷ பகவானுக்கு; நமஸ்க்ருத்ய—வணக்கம் செய்து; பிதா-மஹ:—பிரம்ம தேவர்; பவ: ச—மற்றும் சிவபெருமான்; ஜக்மது:—திரும்பிச் சென்றனர்; ஸ்வம் ஸ்வம்—அவர்களின் சொந்த; தாம—வசிப்பிடங்களுக்கு; உபேயு:—அணுகினர்; பலிம்—பலிமகாராஜனை; ஸுரா:—மற்றெல்லா தேவர்களும்.

அதன்பிறகு பிரம்ம தேவரும், சிவ பெருமானும் பகவானிடம் தங்களது பணிவான வணக்கங்களைச் சமர்பித்தபின், தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றனர். பிறகு தேவர்கள் அனைவரும் பலி மகாராஜனை அணுகினார்.

பதம் 8.6.28
த்ருஷ்ட்வாரீன் அபி அஸம்யத்தாஞ்
ஜாத-க்ஷோபான் ஸ்வ-நாயகான்
ன்யஷேதத் தைத்ய-ராட் ஸ்லோக்ய:
ஸந்தி-விக்ரஹ-காலவித்

த்ருஷ்ட்வா—கண்டு; அரீன்—எதிரிகள்; அபி—இருப்பினும்; அஸம்யத்தான்—சண்டை செய்யும் எவ்விதமான முயற்சியும் இல்லாமல்; ஜாத-க்ஷோபான்—சலனமடைந்த அவர்கள்; ஸ்வ-நாயகான்—தனது சொந்த இராணுவத் தலைவர்களும், சேனாதிபதிகளும்; னயஷேதத்—தடுத்துவிட்டார்; தைத்ய-ராட்—தைத்யர்களின் சக்கரவர்த்தியாகிய பலிமகாராஜன்; ஸ்லோக்ய:—பெரும் மரியாதைக்கும், பிரசித்திக்கும் உரிய; ஸந்தி—பேச்சு வார்த்தை நடத்துவதற்காக; விக்ரஹ—அத்துடன் போரிடுவதற்கும்; கால—காலம்; வித்—பற்றி நன்கறிந்து.

பெரும் புகழ் பெற்றவரும், அசுரர்களின் அரசருமான பலி மகாராஜன், எப்போது சமாதானம் கொள்வது, எப்போது சண்டை செய்வது என்பதை நன்கு அறிந்திருந்தார். எனவே அவரது சேனாதிபதிகளும், படைத்தலைவர்களும் சலனமடைந்து தேவர்களைக் கொல்ல முயன்றபோது, தேவர்கள் போர் தொடுக்கும் மனோபாவத்தில் வராததைக் கண்ட பலி மகாராஜன், அவர்களைக் கொல்ல வேண்டாமென தனது சேனாதிபதிகளைத் தடுத்துவிட்டார்.

பதம் 8.6.29
தே வைரோசனிம் ஆஸீனம் குப்தம் சாஸுர-யூத-பை:
ஸ்ரியா பரமயா ஜுஷ்டம் ஜிதாசேஷம் உபாகமன்

தே—எல்லாத் தேவர்களும்; வைரோசனிம்—விரோசனரின் புதல்வராகிய பலிராஜனுக்கு; ஆஸீனம்—கீழே அமர்ந்து; குப்தம்—நன்கு பாதுகாக்கப்பட்டு; ச—மேலும்; ஆஸீர-யூத-பை:—அசுரர் சேனாதிபதிகளால்; ஸ்ரியா—ஐசுவரியத்தால்; பரமயா—மிகவுயர்ந்த; ஜுஷ்டம்—ஆசீர்வதிக்கப்பட்டு; ஜித-அசேஷம்—எல்லா உலகங்களுக்கும் உரிமையாளராக மாறிய; உபாகமம்—அணுகி.

தேவர்கள், விரோசனரின் புதல்வராகிய பலி மகாராஜனை அணுகி, அவருக்கருகே கீழே அமர்ந்தார். அசுர சேனாதிபதிகளால் பாதுகாக்கப்பட்டிருந்த பலி மகாராஜன், எல்லாப் பிரபஞ்சங்களையும் கைப்பற்றி பெரும் ஐசுவரியத்துடன் விளங்கினார்.

பதம் 8.6.30
மஹேந்ர: ஸ்லக்ஷ்ணயா வாசா ஸாந்த்வயித்வா மஹா-மதி:
அப்யபாஷத தத் ஸர்வம் சிக்ஷிதம் புருஷோத்தமாத்

மஹா-இந்ர:—சுவர்க்க ராஜனான இந்திரன்; ஸ்லஷ்ணயா—மிகவும் அடக்கமான; வாச—சொற்களால்; ஸாந்த்வயித்வா—பலிமகாராஜனை மிகவும் திருப்திபடுத்தி; மஹா-மதி:—மகா புத்திசாலியான; அப்யபாஷத—எண்ணத்தைத் தெரிவித்தார்; தத்—அந்த; ஸர்வம்—அனைத்தையும்; சிக்ஷிதம்—கற்றுக் கொள்ளப்பட்ட; புருஷ-உத்தமாத்—பகவான் விஷ்ணுவிடமிருந்து.

மிகவும் அடக்கமான வார்த்தைகளால் பலி மகாராஜனை திருப்திப்படுத்திய பின், தேவர்களின் அரசனும், பெரும் புத்திசாலியுமான இந்திரதேவன், முழுமுதற் கடவுளாகிய பகவான் விஷ்ணுவிடமிருந்து தாம் கற்ற திட்டங்கள் அனைத்தையும் மிகவும் பணிவுடன் சமர்ப்பித்தார்.

பதம் 8.6.31
தத் து அரோசத தைத்யஸ்ய தத்ரான்யே யே ‘ஸுராதிபா:
சம்பரோ ‘ரிஷ்டனேமிஸ் ச யே ச த்ரிபுர-வாஸின:

தத்—அவ்வார்த்தைகள் அனைத்தையும்; து—ஆனால்; அரோசத—மிகவும் திருப்தி அளிப்பனவாய் இருந்த; தைத்யஸ்ய—பலி மகாராஜனிடம்; தத்ர—அதுமட்டுமின்றி; அன்யே—மற்றவர்களும்; யே—இருந்தவர்களும்; அஸுர-அதிபா:—அசுரர் தலைவர்களும்; சம்பர:—சம்பரன்; அரிஷ்டனேமி—அரிஷ்டனேமி; ச—தவிரவும்; யே—மற்றவர்கள்; ச—மேலும்; த்ரிபுர-வாஸின:—திரிபுரவாசிகள் அனைவரும்.

தேவேந்திரனால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை பலி மகாராஜனும், சம்பரம் மற்றும் அரிஷ்டனேமி அவரது உதவியாளர்களும், முதலான மற்றெல்லா திரிபுர வாசிகளும் உடனடியாக ஏற்றுக் கொண்டனர்.

பதம் 8.6.32
ததோ தேவாஸுரா: க்ருத்வா ஸம்விதம் க்ருத- சௌஹ்ருதா:
உத்யமம் பரமம் சக்ருர் அம்ருதார்தே பரந்தப

தத:—அதன்பின்; தேவ-அஸுரா:—தேவாசுரர்கள்; க்ருத்வா—நிறைவேற்றும்; ஸ்ம்விதம்—குறிப்பிடும்; க்ருத-ஸௌஹ்ருதா:—அவர்களுக்கிடையில் ஒரு தற்காலிகமான சமாதானம்; உத்யமம்—சாகச முயற்சி; பரமம்—மிகப்பெரும்; சக்ரு:—அவர்கள் செய்தனர்; அம்ருத அர்தே—அமிர்தத்திற்காக; பரந்தப—எதிரிகளை தண்டிப்பவரான பரீட்சித்து மகாராஜனே.

எதிரிகளை தண்டிப்பவராகிய பரீட்சித்து மகாராஜனே, பிறகு தேவர்களும், அசுரர்களும் தங்களுக்கிடையில் ஒரு தற்காலிக சமாதானத்தைச் செய்து கொண்டனர். பிறகு தேவேந்திரனால் திட்டமிடப்பட்டவாறு, மிகப்பெரும் சாகச முயற்சியுடன், அமிர்தத்தை உற்பத்தி செய்ய அவர்கள் ஏற்பாடுகளைச் செய்தனர்.

பதம் 8.6.33
ததஸ் தே மந்தர-கிரிம் ஓஜஸோத்பாட்ய துர்மதா:
நதந்த உததிம் நின்யு: சக்தா: பரிக-பாஹவ:

தத:—அதன்பிறகு; தே—அனைத்து தேவர்களும், அசுரர்களும்; மந்தர-கிரிம்—மந்தர மலையை; ஓஜஸா—பெரும் பலத்துடன்; உத்பாட்ய—பிடுங்கி; துர்மதா:—மிகவும் சக்திவாய்ந்தவர்களும், தகுதி படைத்தவர்களுமான; நதந்த—பெரும் கோஷமிட்டனர்; உததிம்—கடலை நோக்கி; நின்யு:—தூக்கிச் சென்றனர்; சக்தா:—சக்தி வாய்ந்த; பரிக-பாஹவ:—நீண்ட, உறுதியான கரங்களுடைய.

அதன்பிறகு, பெரும் சக்தி படைத்தவர்களும், நீண்ட பலம் வாய்ந்த கரங்களை உடையவர்களுமான தேவர்களும், அசுரர்களும் பெரும் பலத்துடன் மந்தர மலையைப் பிடுங்கினர். பெருங்கோஷத்துடன் அதை அவர்கள் பாற்படலை நோக்கிக் கொண்டு சென்றனர்.

பதம் 8.6.34
தூர-பாரோத்வஹ-ஸ்ராந்தா: சக்ர-வைரோசனாதய:
அபாரயந்தஸ் தம் வோடும் விவசா விஜஹு: பதி

தூர—மிகவும் நீண்ட தூரத்திற்கு; பார-உத்வஹ—பெரும் பாரத்தை தூக்கிச் சென்றதால்; ஸ்ராந்தா:—களைப்புற்று; சக்ர—தேவேந்திரன்; வைரோசன-ஆதய:—மற்றும் பலிமகாராஜனும் (விரோசனரின் புதல்வர்), மற்றவர்களும்; அபாரயந்த:—முடியாமல்; தம்—மலையை; வோடும்—தாங்கிக் கொள்ள; விவசா:—முடியாததால்; விஜஹு:—கைவிட்டனர்; பதி—செல்லும் வழியில்.

மிகப்பெரிய அந்த மலையை நீண்ட தூரத்திற்கு தூக்கிச் சென்றதால், இந்திரனும், பலி மகாராஜனும் மற்றும் பிற தேவர்களும், அசுரர்களும் களைப்படைந்தனர். மலையைத் தூக்க முடியாததால், அதை அவர்கள் வழியிலேயே விட்டுவிட்டனர்.

பதம் 8.6.35
நிபதன் ஸ கிரிஸ் தத்ர பஹூன் அமர-தானவான்
சூர்ணயாம் ஆஸ மஹதா பாரேண கனகாசல:

நிபதன்—கீழே விழுந்து; ஸ:—அந்த; கிரி:—மலை; தத்ர—அங்கு; பஹூன்—பலரை; அமர-தானவான்—தேவர்களும், அசுரர்களும்; சூர்ணயாம் ஆஸ—நசுக்கப்பட்டனர்; மஹதா பாரேண—மிகப்பெரிய பாரத்தால்; கனக-ஆசல:—மந்தரம் எனப்படும் தங்கமலை.

தங்கத்தால் ஆனதாக இருந்ததால், மிகவும் அதிகமான பாரம் கொண்டதான மந்தர மலை விழுந்து பல தேவர்களையும், அசுரர்களையும் நசுக்கி விட்டது.

பதம் 8.6.36
தாம்ஸ் ததா பக்ன-மனஸோ பக்ன-பாஹூரு-கந்தரான்
விக்ஞாய பகவாம்ஸ் தத்ர பபூவ கருட-த்வஜ:

தான்—எல்லா அசுரர்களும், தேவர்களும்; ததா—அதன்பிறகு; பக்ன-மனஸ:—மனமுடைந்து போனதால்; பக்ன-பாஹு—உடைந்த கரங்களுடனும்; ஊரு—தொடைகளுடனும்; கந்தரான்—மற்றும் தோள்களுடனும்; விக்ஞாய—அறிந்து; பகவான்—பரமபுருஷ பகவானாகிய விஷ்ணு; தத்ர—அங்கு; பபூவ—தோன்றினார்; கருட-த்வஜ:—கருடன் மீது தூக்கிச் செல்லப்பட்டு.

தேவர்களும், அசுரர்களும், ஏமாற்றமும், அதைரியமும் அடைந்தனர். அவர்களது கைகளும், தொடைகளும் மற்றும் தோள்களும் உடைந்துபோயிருந்தன. ஆகவே அனைத்தையும் அறிபவரான பரமபுருஷ பகவான், தமது கருட வாகனத்தின் மீது அமர்ந்தவராய் அங்கு தோன்றினார்.

பதம் 8.6.37
கிரி-பாத-வினிஷ்பிஷ்டான் விலோக்யாமர-தானவான்
ஈக்ஷயா ஜீவயாம் ஆஸ நிர்ஜரான் நிர்வ்ரணான் யதா

கிரி-பாத—மந்தர மலை விழுந்ததனால்; வினிஷ்பிஷ்டான்—நசுக்கப்பட்டுவிட்டதை; விலோக்ய—கண்டு; அமர—தேவர்களும்; தானவான்—மற்றும் அசுரர்களும்; ஈக்ஷயா—அவரது பார்வையாலேயே; ஜீவயாம் ஆஸ—உயிர்ப்பித்தார்; நிர்ஜரான்—வருத்தமில்லாமல்; நிர்வ்ரணான்—நசுக்குக் காயங்கள் இல்லாமல்; யதா—அவ்வாறு.

மலை விழுந்ததனால் பெரும்பான்மையான அசுரர்களும், தேவர்களும் நசுக்கப்பட்டதைக் கண்ட பகவான், அவர்கள் மீது பார்வையைச் செலுத்தி, அவர்களை உயிர்ப்பித்தார். இவ்வாறாக அவர்கள் வருத்தத்திலிருந்து விடுபட்டதுடன், நசுக்குக் காயங்களும் கூட அவர்களது உடல்களில் காணப்படவில்லை.

பதம் 8.6.38
கிரிம் சாரோப்ய கருடே ஹஸ்தேநைகேன லீலயா
ஆருஹ்ய ப்ரயயாவ் அப்திம் ஸுராஸுர-கணைர் வ்ருத:

கிரிம்—மலையை; ச—கூட; ஆரோப்ய—வைத்து; கருடே—கருடனின் மீது; ஹஸ்தேன—கையால்; ஏகேன—ஒரு; லீலயா—அவரது லீலையைப் போல் மிகச் சுலபமாக; ஆருஹ்ய—ஏறிக் கொண்டு; ப்ரயயௌ—அவர் சென்றார்; அப்திம்—பாற்கடலுக்கு; ஸுர-அஸுர-கணை:—தேவர்களாலும், அசுரர்களாலும்; வ்ருத:—சூழப்பட்டவாறு.

பகவான் ஒரு கையால் மிகச் சுலபமாக மலையைத் தூக்கி அதை கருடனின் மீது வைத்தார். பிறகு, அவரும் கருடனின் மீதேறி, தேவர்களும், அசுரர்களும் புடைசூழ பாற்கடலுக்குச் சென்றார்.

பதம் 8.6.39
அவரோப்ய கிரிம் ஸ்கந்தாத் ஸுபர்ண: பததாம் வர:
யயௌ ஜலாந்த உத்ஸ்ருஜ்ய ஹரிணா ஸ வியர்ஜித:

அவரோப்ய—சுமையை இறக்கி; கிரிம்—மலையை; ஸ்கந்தாத்—அதன் தோளிலிருந்து; ஸுபர்ண:—கருடன்; பததாம்—அனைத்து பறவைகளிலும்; வர:—மிகப்பெரிய அல்லது மிகவும் சக்தி வாய்ந்த; யயெள—சென்று; ஜல-அந்தே—நீர் உள்ள இடத்திற்கு; உத்ஸ்ருஜ்ய—வைத்து; ஹரிணா—பரமபுருஷ பகவானால்; ஸ:—அது (கருடன்); விஸர்ஜித:—அவ்விடத்தில் இருந்து வெளியேறியது.

அதன்பிறகு, பறவைகளுக்கெல்லாம் முதன்மை வகிக்கும் கருடன், மந்தர மலையை அதன் தோளிலிருந்து இறக்கி அதை நீருக்கருகில் கொண்டுவந்தது. பிறகு அங்கிருந்து சென்றுவிடுமாறு பகவான் கூறியதும், அது அவ்விடத்திலிருந்து வெளியேறியது.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “தேவாசுரர்களின் இடைக்கால சமாதான அறிவிப்பு” எனும் தலைப்பை கொண்ட ஆறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare