அத்தியாயம் – 23
தேவர்கள் சுவர்க்க லோகங்களை
திரும்பப் பெறுதல்
பதம் 8.23.1
ஸ்ரீ-சுக உவாச
இதி உக்தவந்தம் புருஷம் புராதனம்
மஹானுபாவோ ‘கில-ஸாது-ஸம்மத:
பத்தாஞ்சலிர் பாஷ்ப-கலாகுலேக்ஷணோ
பக்தி-உத்கலோ கத்கதயா கிராப்ரவீத்

ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; உக்தவந்தம்—பரமபுருஷ பகவான் உத்தரவிட்டதும்; புருஷம்—பரமபுருஷருக்கு; புராதனம்—புராதனமானவரான; மஹா-அனுபாவ:—மகாத்மாவான பலி மகாராஜன்; அகில-ஸாது-ஸம்மத:—எல்லா புண்ணிய புருஷர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது போல்; பத்த-அஞ்சலி:—கூப்பிய கரங்களுடன்; பாஷ்ப-கல-ஆகுல-ஈக்ஷண:—அவரது கண்களில் கண்ணீர் ததும்ப; பக்தி-உத்கல:—பக்திப் பரவசத்துடன்; கத்கதயா—பக்திப் பரவசத்தில் தடுமாற்றமடைந்த; கிரா—அத்தகைய சொற்களால்; அப்ரவீத்—கூறினார்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரமனும், புராதனமானவரும், நித்தியமானவருமான முழுமுதற் கடவுள் பலி மகாராஜனிடம் இவ்வாறு பேசியபோது, பகவானின் தூய பக்தரென பிரபஞ்சம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவரும், இதனால் ஒரு மகாத்மாவென்று போற்றப்பட்டவருமான பலி மகாராஜன், தமது கண்களில் கண்ணீர் மல்க, பக்திப் பரவசத்தில் அவரது குரல் தழுதழுக்க, கூப்பிய கரங்களுடன் பின்வருமாறு பதிலளித்தார்.

பதம் 8.23.2
ஸ்ரீ-பலிர் உவாச
அஹோ ப்ரணாமாய க்ருத: ஸமுத்யம:
ப்ரபன்ன-பக்தார்த-விதௌ ஸமாஹித:
யல் லோக-பாலைஸ் த்வத்-அனுக்ரஹோ ‘மரைர்
அலப்த-பூர்வோ ‘பஸதே ‘ஸுரே ‘ர்பித

ஸ்ரீ-பலி: உவாச—பலி மகாராஜன் கூறினார்; அஹோ—அந்தோ; ப்ரணாமாய—எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்க; க்ருத:—நான் செய்தேன்; ஸமுத்யம:—ஒரு முயற்சியை மட்டுமே; ப்ரபன்ன-பக்த-அர்த-விதெள—தூய பக்தர்களால் அனுஷ்டிக்கப்படும் கட்டுப்பாட்டு விதிகளில்; ஸமாஹித:—திறமையுள்ள; யத்—அந்த; லோக-பாலை:—வெவ்வேறு கிரகங்களின் தலைவர்களால்; த்வத்-அனுக்ரஹ:—தங்களது அகாரணமான கருணை; அமரை:—தேவர்களால்; அலப்த-பூர்வ:—முன்பு அடையப்பட்டதில்லை; அபஸதே—என்னைப் போன்ற இழிவடைந்த ஒருவனுக்கு; அஸுரே—அசுர இனத்தைச் சேர்ந்த; அர்பித:—பேறு அளிக்கப்பட்டது.

பலி மகாராஜன் கூறினார்: தங்களுக்கு பணிவான வணக்கங்களை செலுத்த முயல்வதில் கூட என்ன அற்புதமான பயன் உள்ளது! தங்களுக்கு வணக்கங்களைச் செலுத்த மட்டுமே நான் முயன்றேன், ஆயினும் என் முயற்சி தூய பக்தர்களுடையதைப் போல் வெற்றி அளிப்பதாயிற்று. இழிவடைந்த ஓரசுரனாகிய என்னிடம் தாங்கள் காட்டிய அகாரணமான கருணை, தேவர்களாலோ அல்லது பல்வேறு கிரகங்களின் தலைவர்களாலோ கூட ஒருபோதும் அடையப்படாததாகும்.

பதம் 8.23.3
ஸ்ரீ-சுக உவாச
இதி உக்த்வா ஹரிம் ஆனத்ய ப்ரஹ்மாணம் ஸபவம் தத:
விவேச ஸுதளம் ப்ரீதோ பலிர் முக்த: ஸஹாஸுரை:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி உக்த்வா—இதைக் கூறி; ஹரிம்—முழுமுதற் கடவுளான ஸ்ரீ ஹரிக்கு; ஆனத்ய—வணக்கம் செய்து; ப்ரஹ்மாணம்—பிரம்ம தேவருக்கும்; ஸ-பவம்—சிவபெருமானுடன்; தத:—அதன்பிறகு; விவேச—அவர் புகுந்தார்; ஸூதளம்—சுதள லோகத்தில்; ப்ரீத:—பூரண திருப்தியடைந்து; பலி:—பலி மகாராஜன்; முக்த:—இவ்வாறு விடுதலை பெற்று; ஸஹ அஸுரை:—அவரது சக அசுரர்களுடன்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறு பேசிய பின், பலி மகாராஜன் முதலில் பரமபுருஷ பகவான் ஹரிக்கும், அதன் பிறகு பிரம்ம தேவர் மற்றும் சிவபெருமானுக்கும் அவரது வணக்கங்களைச் சமர்ப்பித்தார். இப்படியாக நாக-பாசத்தின் (வருணனின் கயிறுகளின்) பந்தத்திலிருந்து விடுபட்டு, முழு திருப்தியுடன் சுதளம் எனப்படும் கிரகத்தினுள் நுழைந்தார்.

பதம் 8.23.4
ஏவம் இந்ராய பகவான் ப்ரத்யானீய த்ரிவிஷ்டபம்
பூரயித்வாதிதே: காமம் அசாஸத் ஸகலம் ஜகத்

ஏவம்—இவ்வாறு; இந்ராய—இந்திரனுக்கு; பகவான்—பரமபுருஷ பகவான்; ப்ரத்யானீய—திருப்பிக் கொடுத்து; த்ரி-விஷ்டபம்—சுவர்க்க லோகங்களின் தலைமைப் பதவியை; பூரயித்வா—நிறைவேற்றி; அதிதே:—அதிதியின்; காமம்—ஆசையை; அசஸாத்—ஆண்டார்; ஸகலம்—முழு; ஜகத்—பிரபஞ்சத்தையும்.

சுவர்க்க லோகங்களின் ஆட்சியை இந்திரனிடம் ஒப்படைத்து, தேவர்களின் தாயான அதிதியின் ஆசையை நிறைவேற்றிய பரமபுருஷர் பிரபஞ்ச விவகாரங்களை இவ்வாறு நிர்ணயித்தார்.

பதம் 8.23.5
லப்த-ப்ரஸாதம் நிர்முக்தம் பௌத்ரம் வம்ச-தரம் பலிம்
நிசாம்ய பக்தி-ப்ரவண: ப்ரஹ்ராத இதம் அப்ரவீத்

லப்த-ப்ரஸாதம்—பகவானின் ஆசிர்வாதங்களைப் பெற்ற; நிர்முக்தம்—பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்ட; பௌத்ரம்—அவரது பேரன்; வம்ச-தரம்—வம்சத்தவரான; பலிம்—பலி மகாராஜன்; நிசாம்ய—கேள்விப்பட்டபின்; பக்தி-ப்ரவண:—முழுமையான பக்திப் பரவசத்தில்; ப்ரஹ்ராத:—பிரகலாத மகாராஜன்; இதம்—இதை; அப்ரவீத்—பேசினார்.

தமது வம்சத்தவரும், பேரனுமான பலி மகாராஜன் பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பகவானின் ஆசியைப் பெற்றார் என்பதைக் கேட்ட பிரகலாத மகாராஜன், பெரும் பக்திப் பரவசமான குரலில் பின்வருமாறு பேசலானார்.

பதம் 8.23.6
ஸ்ரீ-ப்ரஹ்லாத உவாச
நேமம் விரிஞ்சோ லபதே ப்ரஸாதம்
ந ஸ்ரீர் ந சர்வ: கிம் உதாபரே ‘ன்யே
யன் நோ ‘ஸுராணாம் அஸி துர்க-பாலோ
விஸ்வாபிவந்யைர் அபிவந்திதாங்ரி:

ஸ்ரீ-ப்ரஹ்லாத: உவாச—பிரகலாத மகாராஜன் கூறினார்; ந—இல்லை; இமம்—இந்த; விரிஞ்ச:—பிரம்மதேவரும் கூட; லபதே—அடையமுடியும்; ப்ரஸாதம்—வரத்தை; ந—அல்லது; ஸ்ரீ:—ஸ்ரீதேவி; ந—அல்லது; சர்வ:—சிவபெருமான்; கிம் உத—என்னவென்று சொல்வது; அபரே அன்யே—மற்றவர்களை; யத்—எந்த ஆசிர்வாதத்தை; ந:—எங்களை; அஸுராணாம்—அசுரர்களான; அஸி—தாங்கள் ஆகியிருக்கிறீர்கள்; துர்க-பால:—பராமரிப்பவராக; விஸ்வ-அபிவந்யை:—பிரபஞ்சம் முழுவதிலும் வணங்கப்படுபவர்களான பிரம்மதேவர் மற்றும் சிவபெருமானைப் போன்ற புருஷர்களால்; அபிவந்தித-அங்ரி:—யாருடைய மலர்ப்பாதங்கள்; வணங்கப்படுகின்றனவோ.

பிரகலாத மகாராஜன் கூறினார்: பரமபுருஷ பகவானே, தாங்கள் பிரபஞ்சம் முழுவதிலும் வழிபடப்படுகிறீர்கள்; பிரம்ம தேவரும், சிவபெருமானும் கூட தங்களது தாமரைப் பாதங்களை வழிபடுகின்றனர். தாங்கள் இத்தகைய ஒரு மகா புருஷராக இருந்தபோதிலும், அசுரர்களான எங்களைக் காப்பதாக அன்புடன் வாக்களித்திருக்கிறீர்கள். இத்தகைய அன்பு பிரம்மதேவராலோ, சிவபெருமானாலோ அல்லது ஸ்ரீதேவியான லக்ஷ்மியாலோ கூட ஒருபோதும் அடையப்படுவில்லை என்று நான் நினைக்கிறேன். மற்ற தேவர்களையோ அல்லது சாதாரண மக்களையோ பற்றி என்னவென்று சொல்வது.

பதம் 8.23.7
யத்-பாத-பத்ம-மகரந்த-நிஷேவணேன
ப்ரஹ்மாதய: சரணதாஸ்னுவதே விபூதீ:
கஸ்மாத் வயம் குஸ்ருதய: கல-யோனயஸ் தே
தாக்ஷிண்ய-த்ருஷ்டி-பதவீம் பவத: ப்ரணீதா:

யத்—எவரின்; பாத-பத்ம—தாமரைமலர் போன்ற பாதங்களின்; மகரந்த—தேனின்; நிஷேவணேன—தொண்டு செய்வதெனும் இனிமையைச் சுவைப்பதால்; ப்ரஹ்ம-ஆதய:—பிரம்ம தேவரைப் போன்ற மகாபுருஷர்கள்; சரண-த—அனைவருக்கும் பரம புகலிடமான, எம்பெருமானே; அஸ்னுவதே—அனுபவிக்கின்றனர்; விபூதீ:—தங்களால் அளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை; கஸ்மாத்—எப்படி; வயம்—நாங்கள்; கு—ஸ்ருதய:—அயோக்கியர்களும், திருடர்களுமான; கல-யோனய:—அசுரர்களின் பொறாமை மிகுந்த வம்சத்தில் பிறந்த; தே—அந்த அசுரர்கள்; தாக்ஷிண்ய-த்ருஷ்டி-பதவீம்—கருணைமிக்க பார்வையால் அளிக்கப்பட்ட பதவியை; பவத:—பெருமானாகிய தங்களின்; ப்ரணீதா:—அடைந்திருக்கிறோம்.

அனைவருக்கும் பரம புகலிடமாக இருப்பவரே, தங்களது தாமரைப் பாதங்களில் செய்யப்படும் தொண்டு எனும் தேனைச் சுவைப்பதாலேயே பிரம்மாவைப் போன்ற மகா புருஷர்கள் அவர்களது பூரணத்துவத்தை அனுபவிக்கின்றனர். ஆனால் பொறாமை மிக்க அசுர குடும்பத்தில் பிறந்த அயோக்கியர்களும், சிற்றின்ப வெறியர்களுமான எங்களைப் பொறுத்தவரை, தங்களது கருணையை நாங்கள் எப்படிப் பெற்றோம்? தங்களது கருணை காரணமற்றது என்ற ஒரே காரணத்தால்தான் இது சாத்தியமாகியுள்ளது.

பதம் 8.23.8
சித்ரம் தவேஹிதம் அஹோ ‘மித-யோகமாயா-
லீலா-விஸ்ருஷ்ட-புவனஸ்ய விசாரதஸ்ய
ஸர்வாத்மன: ஸமத்ருசோ ‘விஷம: ஸ்வபாவோ
பக்த-ப்ரியோ யத் அஸி கல்பதரு-ஸ்வபாவ:

சித்ரம்—மிகவும் அற்புதமானவை; தவ ஈஹிதம்—தங்களது செயல்கள் அனைத்தும்; அஹோ—அந்தோ; அமித—எல்லையற்ற; யோகமாயா—தங்களது ஆன்மீக சக்தியின்; லீலா—லீலைகளால்; விஸ்ருஷ்ட-புவனஸ்ய—எல்லாப் பிரபஞ்சங்களையும் படைத்தவரான தங்களின்; விஸாரதஸ்ய—எல்லா விவகாரங்களிலும் நிபுணரான தங்களின்; ஸர்வ-ஆத்மன:—எங்கும் பரவியிருப்பவரான தங்களின்; ஸம-த்ருச:—மேலும் அனைவரிடமும் சமமாக இருப்பவரான; அவிஷம:—வேறுபாடில்லாமல்; ஸ்வபாவ:—அதுவே தங்களது சுபாவமாகும்; பக்த-ப்ரிய:—சூழ்நிலைகளின் கீழ் பக்தர்களுக்கு தாங்கள் ஆதரவு காட்டுகிறீர்கள்; யத்—ஏனெனில்; அஸி—தாங்கள் இருக்கிறீர்கள்; கல்பதரு-ஸ்வபாவ:—கற்பக விருட்சத்தின் சுபாவத்தைக் கொண்டவராக.

எம்பெருமானே, தங்களுடைய திருவிளையாடல்கள் அனைத்தும் தங்களது ஆன்மீக சக்தியினால் அற்புதமாக நிகழ்த்தப்படுகின்றன; மேலும் அச்சக்தியின் தீய பிரதிபலிப்பான ஜட சக்தியின் மூலமாக எல்லாப் பிரபஞ்சங்களையும் தாங்கள் படைத்திருக்கிறீர்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாகையால், தாங்கள் அனைத்தையும் அறிந்திருக்கிறீர்கள். ஆகவே அனைவரிடமும் தாங்கள் சமமானவராக இருப்பதில் சந்தேகமில்லை. ஆயினும் தங்களுடைய பக்தர்களுக்குத் தாங்கள் ஆதரவு காட்டுகிறீர்கள். இருந்தாலும், இது பாரபட்சமல்ல. ஏனெனில், தங்களது சுபாவம், ஒருவரது விருப்பத்திற்கேற்ப அனைத்தையும் அளிக்கக்கூடிய ஒரு கற்பக விருட்சத்தைப் போன்றதாகும்.

பதம் 8.23.9
ஸ்ரீ-பகவான் உவாச
வத்ஸ ப்ரஹ்ராத பத்ரம் தே ப்ரயாஹி ஸுதலாலயம்
மோதமான: ஸ்வ-பௌத்ரேண ஞாதீனாம் ஸுகம் ஆவஹ

ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; வத்ஸ—எனதருமை மகனே; ப்ரஹ்ராத—பிரகலாத மகாராஜனே; பத்ரம் தே—உமக்கு சர்வ மங்களம் உண்டாகட்டும்; ப்ரயாஹி—தயவுசெய்து செல்வீராக; ஸுதல-ஆலயம்—சுதளம் என்ற இடத்திற்கு; மோதமான:—ஆனந்தமாக; ஸ்வ-பௌத்ரேண—உமது பேரனுடன் (பலி மகாராஜன்); ஞாதீனாம்—உமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின்; ஸூகம்—சுகத்தை; ஆவஹ—அனுபவியுங்கள்.

பரமபுருஷ பகவான் கூறினார்: எனதன்பு மகனாகிய பிரகலாதரே, உமக்கு சர்வ மங்களம் உண்டாகட்டும். இப்போதைக்கு, தயவுசெய்து சுதளம் எனும் இடத்திற்குச் சென்று, அங்கு உமது பேரனுடனும், மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் சுகத்தை அனுபவிப்பீராக.

பதம் 8.23.10
நித்யம் த்ரஷ்டாஸி மாம் தத்ர கதா-பாணிம் அவஸ்திதம்
மத்-தர்சன-மஹாஹ்லாத-த்வஸ்த-கர்ம-நிபந்தன:

நித்யம்—எப்பொழுதும்; த்ரஷ்டா—காண்பீர்; அஸி—நீர்; மாம்—என்னை; தத்ர—அங்கு (சுதள லோகத்தில்); கதா-பாணிம்—என் கையில் ஒரு கதையுடன்; அவஸ்திதம்—அங்கிருக்கும்; மத்-தர்சன—அந்த உருவத்தில் என்னைக் காண்பதால்; மஹா-ஆஹ்லாத—சிறந்த தெய்வீக ஆனந்தத்தால்; த்வஸ்த—அழிக்கப்படும்; கர்ம-நிபந்தன:—பலன் கருதும் செயல்களால் விளைந்த பந்தம்.

பரமபுருஷ பகவான் பிரகலாத மகாராஜனுக்கு உறுதியளித்தார்: சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றைக் கரத்திலேந்தியுள்ள எனது வழக்கமான தோற்றத்தில் உம்மால் என்னை அங்கு காணமுடியும். எப்பொழுதும் என்னை நேரடியாகக் காண்பதால் ஏற்படும் உமது தெய்வீக ஆனந்தத்தினால், பலன் கருதும் செயல்களிடம் உமக்கு இனிமேலும் பந்தம் ஏற்படாது.

பதங்கள் 8.23.11 – 8.23.12
ஸ்ரீ-சுக உவாச
ஆக்ஞாம் பகவதோ ராஜன் ப்ரஹ்ராதோ பலினா ஸஹ
பாடம் இதி அமல-ப்ரக்ஞோ மூர்த்னி ஆதாய க்ருதாஞ்ஜலி:

பரிக்ரம்யாதி-புருஷம் ஸர்வாஸுர-சமூபதி:
ப்ரணதஸ் தத்-அனுக்ஞாத: ப்ரவிவேச மஹா-பிலம்

ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஆக்ஞாம்—ஆணையை; பகவத:—பரமபருஷ பகவானின்; ராஜன்—ராஜனே (பரீட்சித்து மகாராஜன்); ப்ரஹ்ராத:—பிரகலாத மகாராஜன்; பலினா ஸஹ—பலி மகாராஜன் பின்தொடர; பாடம்—சரி, தாங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்; இதி—இவ்வாறு; அமல-ப்ரக்ஞ:—தெளிந்த புத்தியுடையவரான பிரகலாத மகாராஜன்; மூர்த்னி—அவரது தலைமீது; ஆதாய—ஏற்று; க்ருத-அஞ்ஜலி:—கூப்பிய கரங்களுடன்; பரிக்ரம்ய—வலம் வந்தபின்; ஆதி-புருஷம்—ஆதி புருஷராகிய பகவானை; ஸர்வ-அஸுர-சமூபதி:—அசுரத் தலைவர்களுக்கெல்லாம் தலைவரான; ப்ரணத:—வணக்கம் செலுத்திபின்; தத்-அனுக்ஞாத:—அவரால் (பகவான் வாமனர்) அனுமதியளிக்கப்பட்டு; ப்ரவிவேச—பிரவேசித்தார்; மஹா-பிலம்—சுதள லோகத்தில்.

ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார்: எனதருமை பரீட்சித்து மகாராஜனே, எல்லா அசுரத் தலைவர்களுக்கும் எஜமானராகிய பிரகலாத மகாராஜன், பலி மகாராஜனால் பின்தொடரப்பட்டவராய் பரம புருஷரின் ஆணையைக் கூப்பிய கரங்களுடன் சிரமேற்கொண்டார். பகவானிடம் சரி என்று கூறி, அவரை வலம் வந்து, அவருக்கு வணக்கம் செலுத்தியபின், சுதளம் எனப்படும் கீழான கிரக அமைப்பினுள் அவர் பிரவேசித்தார்.

பதம் 8.23.13
அதாஹோசனஸம் ராஜன் ஹரிர் நாராயணோ ‘ந்திகே
ஆஸீனம் ரித்விஜாம் மத்யே ஸதஸி ப்ரஹ்ம-வாதினாம்

அத—அதன்பிறகு; ஆஹ—கூறினார்; உசனஸம்—சுக்ராசார்யரிடம்; ராஜன்—ராஜனே; ஹரி:—பரமபுருஷ பகவான்; நாராயண:—பகவான்; அந்திகே—அருகில்; ஆஸீனம்—அமர்ந்திருந்த; ரித்விஜாம்-மத்யே—எல்லா புரோகிதர்களுக்கும் மத்தியில்; ஸதஸி—கூட்டத்தில்; ப்ரஹ்ம-வாதினாம்—வேதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களின்.

அதன்பிறகு பரமபுருஷ பகவானாகிய, நாராயணர், (ப்ரஹ்ம, ஹோதா, உத்காதா மற்றும் அத்வர்யு ஆகிய) புரோகிதர்களுடன் அருகே அக்கூட்டத்தின் மத்தியில் அமர்ந்திருந்த சுக்ராசார்யரைப் பார்த்து பேசலானார். பரீட்சித்து மகாராஜனே, இப்புரோகிதர்கள் அனைவரும் யாகம் செய்வதற்காக ஏற்பட்ட வேதக் கொள்கைகளைப் பின்பற்றும் பிரம்ம-வாதிகளாவர்.

பதம் 8.23.14
ப்ரஹ்மன் ஸந்தனு சிஷ்யஸ்ய கர்ம-ச்சித்ரம் விதன்வத:
யத் தத் கர்மஸு வைஷம்யம் ப்ரஹ்ம-த்ருஷ்டம் ஸமம் பவேத்

ப்ரஹ்மன்—பிராமணரே; ஸந்தனு—தயவுசெய்து விளக்கவும்; சிஷ்யஸ்ய—உமது சீடரின்; கர்ம-சித்ரம்—பலன் நோக்குக் கருமங்களில் உள்ள முரண்பாடுகளை விதன்வத:—யாகங்களை இயற்றிய அவரின்; யத் தத்—அதை; கர்மஸு—பலன் நோக்குக் கருமங்களில்; வைஷம்யம்—முரண்பாடுகளை; ப்ரஹ்ம-த்ருஷ்டம்—பிராமணர்களால் அது தீர்மானிக்கப்படும் போது; ஸமம்-பவேத்—சமநிலை செய்யப்படுகிறது.

பிராமண சிரேஷ்டரான சுக்ராசார்யரே, யாகங்களைச் செய்வதில் ஈடுபட்ட உமது சீடரான பலி மகாராஜனின் குற்றத்தை அல்லது முரண்பாட்டை தயவுசெய்து விளக்கிக் கூறுவீராக. தகுதியுள்ள பிராமணர்களின் முன்னிலையில் தீர்மானிக்கப்படும் பொழுது இக்குற்றம் செல்லாததாகிவிடும்.

பதம் 8.23.15
ஸ்ரீ-சுக்ர உவாச
குதஸ் தத்-கர்ம-வைஷம்யம் யஸ்ய கர்மேஸ்வரே பவான்
யக்ஞேசோ யக்ஞ-புருஷ: ஸர்வ-பாவேன பூஜித:

ஸ்ரீ-சுக்ர: உவாச—ஸ்ரீ சுக்ராசார்யர் கூறினார்; குத:—எங்கே உள்ளது; தத்—அவரின் (பலி மகாராஜன்); கர்ம-வைஷம்யம்—பலன் கருதும் செயல்களை நிறைவேற்றியதில் முரண்பாடு; யஸ்ய—எவரின் (பலி மகாராஜன்); கர்ம-ஈஸ்வர:—பலன் கருதும் செயல்களுக்கெல்லாம் எஜமானரான; பவான்—பெருமானாகிய தாங்கள்; யக்ஞ-ஈச:—தாங்கள்தான் எல்லா யாகங்களையும் அனுபவிப்பவர்; யக்ஞ-புருஷ:—தங்களுடைய இன்பத்திற்காகத்தான் எல்லா யாகங்களும் அர்ப்பணிக்கப்படுகின்றன; ஸர்வ-பாவேன—எல்லா விதங்களிலும்; பூஜித:—வழிபட்டு.

சுக்ராசார்யர் கூறினார்: எம்பெருமானே, தாங்கள் எல்லா யாகங்களையும் அனுபவிப்பவரும், அவற்றுக்கான விதிகளை அளிப்பவருமாவீர். யாருக்கு எல்லா யாகங்களும் அர்ப்பணிக்கப்படுகின்றனவோ அந்த யக்ஞ-புருஷரும் தாங்கள்தான். ஒருவர் தங்களை முழுமையாக திருப்திப்படுத்தியிருந்தால், அவர் நிறைவேற்றிய யாகத்தில் முரண்பாடுகளோ அல்லது குறைகளோ இருப்பதற்கு வாய்ப்பேது?

பதம் 8.23.16
மந்த்ரதஸ் தந்த்ரதஸ் சித்ரம் தேச-காலார்ஹ-வஸ்துத:
ஸர்வம் கரோதி நிஸ்சித்ரம் அனுஸங்கீர்த்தனம் தவ

மந்த்ரத:—வேத மந்திரங்களை முறைகேடாக உச்சரிப்பதில்; தந்த்ரத:—கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுவதற்கான அறிவு பற்றாக்குறையில்; சித்ரம்—முரண்பாடு; தேச—தேசத்தைப் பொறுத்த விஷயத்தில்; கால—மற்றும் காலம்; அர்ஹ—மற்றும் பெறுபவர்; வஸ்துத:—மற்றும் உபபொருட்கள்; ஸர்வம்—இவையனைத்தையும்; கரோதி—செய்துவிடுகின்றது; நிஸ்சித்ரம்—முரண்பாடு இல்லாமல்; அனுஸங்கீர்த்தனம்—புனித நாமத்தை இடைவிடாமல் பாடுவதானது; தவ—பெருமானாகிய தங்களின்.

மந்திரங்களை உச்சரிப்பதிலும், கட்டுப்பாட்டு விதிகளை அனுஷ்டிப்பதிலும் முரண்பாடுகள் இருக்கக்கூடும். மேலும் காலம், தேசம், நபர் மற்றும் உபபொருட்கள் ஆகியவற்றின் விஷயத்திலும் கூட முரண்பாடுகள் இருக்கக்கூடும். ஆனால் பெருமானாகிய தங்களது புனித நாமத்தைப் பாடும்போது, அனைத்தும் குறையற்றவையாக மாறிவிடுகின்றன.

பதம் 8.23.17
ததாபி வததோ பூமன் கரிஷ்யாமி அனுசாஸனம்
ஏதச் ச்ரேய: பரம் பும்ஸாம் யத் தவாக்ஞானுபாலனம்

ததாபி—பலி மகாராஜனிடம் குற்றமில்லை என்ற போதிலும்; வதத:—தங்களுடைய ஆணையின் காரணத்தால்; பூமன்—பரமபுருஷரே; கரிஷ்யாமி—நான் நிறைவேற்ற வேண்டும்; அனுசாஸனம்—இது தங்களுடைய கட்டளை என்பதால்; ஏதத்—இதுதான்; ஸ்ரேய:—மிகவும் மங்களகரமானது; பரம்—உயர்ந்தது; பும்ஸாம்—அனைவரின்; யத்—ஏனெனில்; தவ அக்ஞா-அனுபாலனம்—தங்களது கட்டளைக்குக் கீழ்ப்படிவதென்பது.

பகவான் விஷ்ணுவே, நான் தங்களது கட்டளைப்படிதான் நடக்கவேண்டும். ஏனெனில், தங்களது கட்டளைக்குக் கீழ்ப்படிவதென்பது மிகவும் மங்களகரமானதும், எல்லோருடைய முதற்கடமையுமாகும்.

பதம் 8.23.18
ஸ்ரீ-சுக உவாச
ப்ரதினந்ய ஹரேர் ஆக்ஞாம் உசனா பகவான் இதி
யக்ஞ-ச்சித்ரம் ஸமாதத்த பலேர் விப்ரர்ஷிபி: ஸஹ

ஸ்ரீ-சுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ப்ரதிநந்ய—எல்லா வணக்கங்களையும் செலுத்தி; ஹரே:—பரமபுருஷ பகவானின்; ஆக்ஞாம்—கட்டளை; உசனா:—சுக்ராசார்யர்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்தவரான; இதி—இவ்வாறாக; யக்ஞ-சித்ரம்—யாகம் இயற்றியதிலுள்ள முரண்பாடுகளை; ஸமாதத்த—நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டார்; பலே:—பலி மகாராஜனின்; விப்ர-ரிஷிபி:—மிகச்சிறந்த பிராமணர்கள்; ஸஹ—உடன்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக, மிகவும் சக்திவாய்ந்தவரான சுக்ராசார்யர் பரமபுருஷ பகவானின் கட்டளையைப் பூரண மரியாதையுடன் ஏற்றுக் கொண்டார். மிகச்சிறந்த பிராமணர்களுடன் அவர் பலி மகாராஜனால் இயற்றப்பட்ட யாகத்தில் விளைந்த குறைகளுக்கு ஈடுசெய்ய ஆரம்பித்தார்.

பதம் 8.23.19
ஏவம் பலேர் மஹீம் ராஜன் பிக்ஷித்வா வாமனோ ஹரி:
ததௌ ப்ராத்ரே மஹேந்ராய த்ரிதிவம் யத் பரைர் ஹ்ருதம்

ஏவம்—இவ்வாறு; பலே:—பலி மகாராஜனிடமிருந்து; மஹீம்—நிலத்தை; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; பிக்ஷித்வா—யாசித்தபின்; வாமன:—பெருமானாகிய வாமனதேவர்; ஹரி:—பரமபுருஷ பகவான்; ததெள—ஒப்படைத்தார்; ப்ராத்ரே—அவரது சகோதரரிடம்; மஹா-இந்ராய—சுவர்க்க ராஜனான இந்தரனிடம்; த்ரிதிவம்—தேவர்களின் கிரக அமைப்பை; யத்—எது; பரை:—பிறரால்; ஹ்ருதம்—பறிக்கப்பட்டதோ.

பரீட்சித்து மகாராஜனே, இவ்வாறு பலி மகாராஜனின் எல்லா நிலத்தையும் யாசித்துப் பெற்ற முழுமுதற் கடவுளாகிய பகவான் வாமனதேவர், இந்திரனின் எதிரியால் அபகரிக்கப்பட்ட நிலத்தைத் தமது சகோதரரான இந்திரனிடம் ஒப்படைத்தார்.

பதங்கள் 8.23.20 – 8.23.21
ப்ரஜாபதி-பதிர் ப்ரஹ்மா தேவர்ஷி-பித்ரு-பூமிபை:
தக்ஷ- ப்ருகு-அங்கிரோ-முக்யை: குமாரேண பவேன ச

கஸ்யபஸ்யாதிதே: ப்ரீத்யை ஸர்வ-பூத-பவாய ச
லோகானாம் லோக-பாலானாம் அகரோத் வாமனம் பதிம்

ப்ரஜாபதி-பதி:—அனைத்து பிரஜாபதிகளுக்கும் தலைவரான; ப்ரஹ்மா—பிரம்மதேவர்; தேவ—தேவர்களுடனும்; ரிஷி—மிகச் சிறந்த ரிஷிகளுடனும்; பித்ரு—பித்ருலோக வாசிகளுடனும்; பூமிபை:—மனுக்களுடனும்; தக்ஷ—தட்சனுடனும்; ப்ருகு—பிருகு முனிவருடனும்; அங்கிர:—அங்கிர முனியுடனும்; முக்யை:—பல்வேறு கிரக அமைப்புக்களின் தலைவர்களுடனும்; குமாரேண—கார்த்திகேயருடனும்; பவேன—சிவபெருமானுடனும்; ச—மேலும்; கஸ்யபஸ்ய—கஸ்யப முனிவரின்; அதிதே:—அதிதியின்; ப்ரீத்யை—மகிழ்ச்சிக்காகவும்; ஸர்வ-பூத-பவாய—அனைத்து ஜீவராசிகளின் சுபத்திற்காகவும்; ச—மேலும்; லோகானாம்—அனைத்து கிரக அமைப்புக்களின்; லோக-பாலானாம்—அனைத்து லோகங்களிலும் உள்ள அதிபதிகளின்; அகரோத்—செய்தார்; வாமனம்—பகவான் வாமனர்; பதிம்—உயர்ந்த தலைவரான.

அனைத்து தேவர்கள், சிறந்த ரிஷிகள், பித்ருலோக வாசிகள், மனுக்கள், முனிவர்கள், மற்றும் தட்சன், பிருகு, அங்கிரர் போன்ற தலைவர்கள், அத்துடன் கார்த்திகேயன் மற்றும் சிவபெருமான் ஆகியோரால் பின்தொடரப்பட்டவரான பிரம்ம தேவர் (தட்ச ராஜனுக்கும், மற்றெல்லா பிரஜாபதிகளுக்கும் தலைவர்), பகவான் வாமனதேவரை எல்லோரையும் காத்து இரட்சிப்பவராக ஏற்றுக்கொண்டார். கஸ்யப முனிவர் மற்றும் அவரது மனைவியான அதிதி ஆகியோரின் மகிழ்ச்சிக்காகவும், அனைத்து பிரபஞ்ச வாசிகள் மற்றும் அவர்களின் பல்வேறு தலைவர்கள் ஆகியோரின் நன்மைக்காக பிரம்மா இதைச் செய்தார்.

பதங்கள் 8.23.22 – 8.23.23
வேதானாம் ஸர்வ-தேவானாம் தர்மஸ்ய யசஸ: ஸ்ரிய:
மங்களானாம் வ்ரதானாம் ச கல்பம் ஸ்வர்காபவர்கயோ:

உபேந்ரம் கல்பயாம் சக்ரே பதிம் ஸர்வ-விபூதயே
ததா ஸர்வாணி பூதானி ப்ருசம் முமுதிரே ந்ருப

வேதானாம்—அனைத்து வேதங்களின் (பாதுகாப்புக்காக); ஸர்வ-தேவானாம்—அனைத்து தேவர்களுக்கும்; தர்மஸ்ய—அனைத்து மதக்கொள்கைகளுக்கும்; யசஸ:—எல்லாப் புகழும்; ஸ்ரிய:—எல்லாச் செல்வங்களுக்கும்; மங்களானாம்—சகல மங்களத்துக்கும்; வ்ரதானாம் ச—மற்றும் அனைத்து விரதங்களுக்கும்; கல்பம்—மிகப்பெரிய நிபுணர்; ஸ்வர்க-அபவர்கயோ:—சுவர்க்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுவதற்கும் அல்லது பெளதிக பந்தத்திலிருந்து முக்தியடைவதற்கும்; உபேந்ரம்—பகவான் வாமனதேவர்; கல்பயாம் சக்ரே—அதையே அவர்கள் திட்டமாகச் செய்தனர்; பதிம்—எஜமானர்; ஸர்வ-விபூதயே—எல்லா நோக்கங்களுக்கு; ததா—அச்சமயம்; ஸர்வாணி—எல்லா; பூதானி—ஜீவராசிகளும்; ப்ருசம்—மிகவும்; முமுதிரே—மகிழ்ச்சி அடைந்தன; ந்ருப—ராஜனே.

பரீட்சித்து மகாராஜனே, இந்திரன் பிரபஞ்சம் முழுவதற்கும் ராஜனாக கருதப்பட்டார். ஆனால் பிரம்ம தேவரை தலைமையாகக் கொண்டிருந்த தேவர்கள், உபேந்திரரான, பகவான் வாமனதேவரை வேதங்களின் தலைவராகவும், மதக்கொள்கைகள், புகழ், செல்வம், மங்களம், விரதங்கள், உயர்கிரக அமைப்புக்கு ஏற்றம் பெறுதல், மற்றும் முக்தி ஆகியவற்றிற்கு காவலராகவும் பெற விரும்பினர். இவ்வாறாக பகவான் வாமனதேவரை அனைத்திற்கும் மிகவுயர்ந்த தலைவராக அவர்கள் ஏற்றனர். இம்முடிவு அனைத்து ஜீவராசிகளையும் மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.

பதம் 8.23.24
ததஸ்-து இந்தர: புரஸ்க்ருத்ய தேவ-யானேன வாமனம்
லோக-பாலைர் திவம் நின்யே ப்ரஹ்மணா சானுமோதித:

தத:—அதன்பிறகு; து—ஆனால்; இந்ர:—சுவர்க்க ராஜன்; புரஸ்க்ருத்ய—முன்புறத்தில் இருத்தி; தேவ-யானேன—தேவர்களால் உபயோகிக்கப்படும் ஒரு விமானத்தால்; வாமனம்—பகவான் வாமனரை; லோக-பாலை:—மற்றெல்லா கிரகங்களின் தலைவர்களுடன்; திவம்—சுவர்க்க லோகங்களுக்கு; நின்யே—அழைத்துச் சென்றார்; ப்ரஹ்மணா—பிரம்மதேவரால்; ச—மேலும்; அனுமோதித:—அனுமதிக்கப்பட்டு.

அதன்பிறகு, சுவர்க்க ராஜனான இந்திரன், பிரம்மதேவரின் அனுமதியுடன், ஒரு தேவலோக விமானத்தில் பகவான் வாமனதேவரை தன் முன் இருத்தி, சுவர்க்க லோகங்களின் எல்லாத் தலைவர்களுடனும் அவரை சுவர்க்க லோகத்திற்கு அழைத்துச் சென்றார்.

பதம் 8.23.25
ப்ராப்ய த்ரி-புவனம் சேந்ர உபேந்ர-புஜ-பாலித:
ஸ்ரீயா பரமயா ஜுஷ்டோ முமுதே கத-ஸாத்வஸ:

ப்ராப்ய—பெற்றபின்; த்ரி-புவனம்—மூவுலகங்களையும்; ச—மேலும்; இந்ர:—சுவர்க்கராஜன்; உபேந்ர-புஜ-பாலித:—உபேந்திரரின், வாமனதேவரின் கரங்களால் காக்கப்பட்டு; ஸ்ரியா—செல்வத்தால்; பரமயா—உயர்வால்; ஜுஷ்ட:—இவ்வாறு மகிழ்விக்கப்பட்டு; முமுதே—அனுபவித்தார்; கத-ஸாத்வஸ:—அசுரர்களின் பயம் இல்லாமல்.

இவ்வாறாக, பரமபுரஷ பகவானாகிய வாமனதேவரின் கரங்களால் பாதுகாக்கப்பட்டு, சுவர்க்கராஜனான இந்திரன் தனது மூவுலகங்களின் ஆட்சியை திரும்பப் பெற்றார். பழைய பதவியில் மறுபடியும் வைக்கப்பட்ட அவர் செல்வச் செழிப்புடன் விளங்கியதுடன், பயமில்லாதவராகவும், முழு திருப்தியுடையவராகவும் ஆனார்.

பதங்கள் 8.23.26 – 8.23.27
ப்ரஹ்மா சர்வ: குமாரஸ் ச ப்ருகு-ஆத்யா முனயோ ந்ருப
பிதர: ஸர்வ-பூதானி ஸித்தா வைமானிகாஸ் ச யே

ஸுமஹத் கர்ம தத் விஷ்ணோர் காயந்த: பரம் அத்புதம்
திஷ்ண்யானி ஸ்வானி தே ஜக்முர் அதிதிம் ச சசம்ஸிரே

பிரஹ்மா—பிரம்ம தேவர்; சர்வ:—சிவபெருமான்; குமார: ச—கார்த்திகேயரும் கூட; ப்ருகு-ஆத்யா:—ஏழு ரிஷிகளில் ஒருவரான பிருகு முனியின் தலைமையிலான; முனய:—முனிவர்கள்; ந்ருப—ராஜனே; பிதர:—பித்ருலோக வாசிகள்; ஸர்வ-பூதானி—மற்ற ஜீவராசிகள்; ஸித்தா:—சித்தலோக வாசிகள்; வைமானிகா: ச—வானவெளி முழுவதிலும் விமானத்தால் பிராயணம் செய்யக்கூடிய மனிதர்கள்; யே—அத்தகைய நபர்கள்; ஸூமஹத்—மிகவும் போற்றத்தக்க; கர்ம—செயல்களை; தத்—அவ்வெல்லா (செயல்களையும்); விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவால் செய்யப்பட்ட; காயந்த:—போற்றி; பரம் அத்புதம்—அசாதாரணமும்; அற்புதமுமான; திஷ்ண்யானி—அவரவர் கிரகங்களுக்கு; ஸ்வானி—சொந்த; தே—அவர்கள் அனைவரும்; ஜக்மு:—புறப்பட்டுச் சென்றனர்; அதிதிம் ச—அதிதியும் கூட; சசம்ஸிரே—பகவானின் இச்செயல்களை எல்லாம் புகழ்ந்தனர்.

பிரம்ம தேவர், சிவபெருமான், கார்த்திக்கேயர், மாமுனிவரான பிருகு, மற்ற முனிவர்கள், பித்ருலோக வாசிகள், மற்றும் சித்தலோக வாசிகள், விமானத்தினால் வானவெளியில் பிரயாணம் செய்யக் கூடிய ஜீவராசிகள் உட்பட, அங்கு கூடியிருந்த மற்றெல்லா ஜீவராசிகளும், பகவான் வாமனதேவரின் அசாதாரணமான செயல்களைப் புகழ்ந்தனர். ராஜனே, அவர்கள் பகவானைப் பற்றி பாடிக்கொண்டும், அவரைப் புகழ்ந்தவாறும், அவரவருடைய சுவர்க்க லோகங்களுக்கு திரும்பிச் சென்றனர். அதிதியின் நிலையையும் அவர்கள் புகழ்ந்தனர்.

பதம் 8.23.28
ஸர்வம் ஏதன் மயாக்யாதம் பலத: குல-நந்தன
உருக்ரமஸ்ய சரிதம் ஸ்ரோத்ரீணாம் அக மோசனம்

ஸர்வம்—எல்லா; ஏதத்—இச்சம்பவங்கள்; மயா—என்னால்; ஆக்யாதம்—விவரிக்கப்பட்டன; பவத:—உமது; குல நந்தன—உமது குலத்திற்கே பெருமை அளிக்கும் பரீட்சித்து மகாராஜனே; உருக்ரமஸ்ய—பரமபுருஷ பகவானின்; சரிதம்—செயல்களை; ஸ்ரோத்ரீணாம்—சபையோரின்; அக-மோசனம்—பகவானுடைய அத்தகைய செயல்களைப் பற்றி கேட்பதானது நிச்சயமாக எல்லாப் பாவ விளைவுகளையும் அழித்துவிடும்.

உமது வம்சத்திற்கே பெருமை சேர்க்கும் பரீட்சித்து மகாராஜனே, பரமபுருஷ பகவானாகிய வாமனதேவரின் அற்புதமான செயல்களை பற்றிய அனைத்தையும் உமக்கு நான் இப்போது விவரித்தேன். இதைப் பற்றி கேள்விப்படுபவர்கள் எல்லாப் பாவ விளைவுகளில் இருந்தும் நிச்சயமாக விடுபடுவார்கள்.

பதம் 8.23.29
பாரம் மஹிம்ன உருவிக்ரமதோ க்ருணானோ
ய: பார்திவானி விமமே ஸ ரஜாம்ஸி மர்த்ய:
கிம் ஜாயமான உத ஜாத உபைதி மர்த்ய
இதி ஆஹ மந்த்ர-த்ருக் ரிஷி: புருஷஸ்ய யஸ்ய

பாரம்—அளவை; மஹிம்ன:—பெருமைகளின்; உருவிக்ரமத:—அற்புதமாக செயற்படுபவரான பரமபுருஷ பகவானின்; க்ருணான:—எண்ண முடியும்; ய:—ஒருவர்; பார்திவானி—பூமி முழுவதிலும் உள்ள; விமமே—எண்ண முடியும்; ஸ:—அவர்; ரஜாம்ஸி—அணுக்களை; மர்த்ய:—மரணத்திற்கு உட்பட்ட ஒரு மனிதன்; கிம்—என்ன; ஜாயமான:—எதிர்காலத்தில் பிறக்கப் போகும் ஒருவன்; உத—அல்லது; ஜாத:—ஏற்கனவே பிறந்துவிட்ட ஒருவன்; உபைதி—செய்ய முடியும்; மர்த்ய:—மரணத்திற்கு உட்பட்ட ஒருவன்; இதி—இவ்வாறாக; ஆஹ—கூறினார்; மந்த்ர-த்ருக்—வேத மந்திரங்களை முன்னதாகவே கண்டறியக் கூடியவர்; ரிஷி:—புண்ணிய புருஷரான வஸிஷ்ட முனி; புருஷஸ்ய—உயர்ந்த புருஷரின்; யஸ்ய—எவரின்.

மரணத்திற்கு உட்பட்டவர்களால் பூமி முழுவதிலுமுள்ள அணுக்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது. அதைப் போலவே, திரி விக்ரமர் எனப்படும் பரமபுருஷ பகவானாகிய விஷ்ணுவின் பெருமைகளையும் அவர்களால் அளவிட முடியாது. ஏற்கனவே பிறந்துவிட்டவர்களாலோ அல்லது இனி பிறக்கப் போகின்றவர்களாலோ இதைச் செய்யமுடியாது. இது மாமுனிவரான வஸிஷ்டரால் பாடப்பட்டு உள்ளது.

பதம் 8.23.30
ய இதம் தேவ-தேவஸ்ய ஹரேர் அத்புத-கர்மண:
அவதாரானுசரிதம் ஸ்ருண்வன் யாதி பராம் கதிம்

ய:—யாராயினும் ஒருவர்; இதம்—இந்த; தேவ-தேவஸ்ய—தேவர்களின் வழிபாட்டுக்கு உரியவரான பரமபுருஷ பகவானின்; ஹரே:—ஹரியின், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; அத்புத-கர்மண:—அவரது செயல்கள் அனைத்தும் அற்புதமானவையாகும்; அவதார-அனுசரிதம்—அவரது பல்வேறு அவதாரங்களில் செய்யப்படும் செயல்கள்; ஸ்ருண்வன்—ஒருவர் தொடர்ந்து கேட்பாரானால்; யாதி—அவர் செல்கிறார்; பராம் கதிம்—பரம கதியான பகவானிடம்

பரமபுருஷ பகவான் தமது பல்வேறு அவதாரங்களில் நிகழ்த்தும் அசாதாரணமான செயல்களைப் பற்றி ஒருவர் கேட்பாரானால், நிச்சயமாக அவர் உயர்கிரக அமைப்பிற்கு உயர்த்தப்படுவோர் அல்லது வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.

பதம் 8.23.31
க்ரியமோணே கர்மணீதம் தைவே பித்ருயே ‘த மானுஷே
யத்ர யத்ரானுகீர்த்யேத தத் தேஷாம் ஸுக்ருதம் விது:

க்ரியமாணே—செய்யப்படும் போது; கர்மணி—ஒரு வேதச் சடங்கின்; இதம்—வாமனதேவரின் இயல்புகளைப் பற்றிய இந்த வர்ணனை; தைவே—தேவர்களை திருப்திபடுத்துவதற்காகவோ; பித்ருயே—அல்லது ‘ஸ்ரத்தா’ சடங்கில் உள்ளதைப் போல், முன்னோர்களை திருப்திப்படுத்துவதற்காகவோ; அத—அல்லது; மானுஷே—திருமணங்களில் உள்ளதைப் போல், மனித சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவோ; யத்ர—எங்கெல்லாம்; யத்ர—எப்போதெல்லாம்; அனுகீர்த்யேத—விவரிக்கப்படுகிறதோ; தத்—அது; தேஷாம்—அவர்களுக்கு; ஸுக்ருதம்—மங்களம்; விது:—அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம் ஒரு வேதச் சடங்கின் போது வாமனதேவரின் செயல்கள் விவரிக்கப்படுகின்றனவோ, அச்சடங்கு தேவர்களை திருப்திப்படுத்துவதற்காகவோ, பித்ருலோகத்திலுள்ள ஒருவரது முன்னோர்களை திருப்திபடுத்துவதற்காகவோ அல்லது திருமணத்தைப் போன்ற ஒரு சமூக நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காகவோ செய்யப்படுவதாக இருந்தாலும், அச்சடங்கு மிகவும் மங்களகரமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare