அத்தியாயம் – 21
பலி மகாராஜன் பகவானால்
கைது செய்யப்படுதல்
பதம் 8.21.1
ஸ்ரீ சுக உவாச
ஸத்யம் ஸமீக்ஷ்யாப்ஜ-பவோ நகேந்துபிர்
ஹத-ஸ்வதாம-த்யுதிர் ஆவ்ருதோ ‘ப்யகாத்
மரீசி-மிஸ்ரா ரிஷயோ ப்ருஹத்-வ்ரதா:
ஸனந்தனாத்யா நர-தேவ யோகின:

ஸ்ரீ-சுக:உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸத்யம்—சத்திய லோகம்; ஸமீக்ஷ்ய—கண்டு: அப்ஜ-பவ:—தாமரைப் பூவின் மேல் தோன்றிய பிரம்மதேவர்; நக-இந்துபி:—நகங்களின் பிரகாசத்தால்; ஹத—குறைக்கப்பட்டு; ஸ்வ-தாம-த்யுதி:—அவரது சொந்த வசிப்பிடத்தின் ஒளி; ஆவ்ருத:—மறைக்கப்பட்டு; அப்யகாத்—வந்தார்; மரீசி-மிஸ்ரா:—மரீசியைப் போன்ற முனிவர்களுடன்; ரிஷய:—சிறந்த புண்ணிய புருஷர்கள்; ப்ருஹத்-வ்ரதா:—அவர்கள் அனைவரும் சிறந்த பிரம்மச்சாரிகளாவர்; ஸனந்தன-ஆத்யா:—சனகர், சனாதனர், சனந்தனர் மற்றும் சனத்-குமாரரைப் போன்ற; நர-தேவ—ராஜனே; யோகின:—மிகவும் சக்திவாய்ந்த யோகிகளான.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பகவான் வாமனதேவருடைய பாதவிரல்களின் நகங்களிலிருந்து வெளியாகும், கண்களை கூசச் செய்யும் பிரகாசத்தால், அவரது வசிப்பிடமான பிரம்ம லோகத்தின் பிரகாசம் குறைந்து போனதைக் கண்டு, ஒரு தாமரை மலரிலிருந்து பிறந்தவரான பிரம்ம தேவர் பரமபுருஷ பகவானை அணுகினார். மரீசியை தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் மற்றும் சனந்தனரைப் போன்ற யோகிகள் ஆகிய அனைவரும் பிரம்மதேவருடன் சென்றனர். ஆனால் அரசே, கண்களை கூசச் செய்யும் அப்பிரகாசத்தின் முன், பிரம்மதேவரும், அவரது சகாக்களும் கூட அற்பமானவர்களாகக் காணப்பட்டனர்.

பதங்கள் 8.21.2 – 8.21.3
வேதோபவேதா நியமா யமான்விதாஸ்
தர்கேதிஹாஸாங்க-புரான-ஸம்ஹிதா:
யே சாபரே யோக-ஸமீர-தீபித-
ஞானாக்னினா ரந்தித-கர்ம-கல்மஷா:

வவந்திரே யத்-ஸ்மரணானுபாவத:
ஸ்வாயம்புவம் தாம கதா அகர்மகம்
அதாங்ரயே ப்ரோன்னமிதாய விஷ்ணோர்
உபாஹரத் பத்ம-பவோ ‘ர்ஹணோதகம்
ஸமர்ச்ய பக்த்யாப்யக்ருணாச் சுசி-ஸ்ரவா
யன்-நாபி-பங்கேருஹ-ஸம்பவ: ஸ்வயம்

வேத—பரமபுருஷரால் அளிக்கப்பட்ட மூல ஞானமாகிய நான்கு வேதங்கள் (சாம, யஜூர், ரிக் மற்றும் அதர்வ); உபவேதா:—ஆயுர்வேதம், தனுர்-வேதம் போன்ற பிற்சேர்க்கையாக அமைந்த வேத அறிவு; நியமா:—கட்டுப்பாட்டு விதிகள்; யம—கட்டுப்படுத்தும் முறைகள்; அன்விதா:—அத்தகைய விஷயங்களில் சாமர்த்தியமுள்ள; தர்க—தர்க சாஸ்திரம்; இதிஹாஸ—இதிகாசம்; அங்க—வேதக் கல்வி; புராண—புராணங்களின் கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பழங்கால சரித்திரம்; ஸம்ஹிதா:—பிரம்ம-சம்ஹிதையைப் போன்ற வேத நூல்கள்; யே—மற்றவை; ச—கூட; அபரே—பிரம்ம தேவரையும், அவரது சகாக்களையும் தவிர; யோக-ஸமீர-தீபித—அஷ்டாங்க யோகப் பயிற்சியினால் எழுப்பப்பட்ட; ஞான-அக்னினா—ஞானத் தீயினால்; ரந்தித-கர்ம-கல்மஷா:—யாருக்காக பலன் நோக்குக் கருமங்களின் எல்லா அசுத்தங்களும் நிறுத்தப்பட்டனவோ அவர்கள்; வவந்திரே—அவர்களது பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்தனர்; யத்-ஸ்மரண-அனுபாவத:—யாரை தியானிப்பதன் மூலமாகவே; ஸ்வாயம் புவம்—பிரம்ம தேவரின்; தாம—வசிப்பிடத்தை; கதா:—அடைந்தவர்கள்; அகர்மகம்—பலன் கருதும் செயல்களால் அடைய முடியாததை; அத—அதன்பிறகு; அங்ரயே—தாமரைப் பாதங்களில்; ப்ரோன்னமிதாய—வணங்கினர்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; உபாஹரத்—வழிபட்டனர்; பத்ம-பவ:—தாமரைப் பூவிலிருந்து தோன்றியவரான பிரம்ம தேவர்; அர்ஹண-உதகம்—நீரால் வழிபட்டு; ஸமர்ச்ய—வழிபட்டு; பக்த்யா—பக்தித் தொண்டால்; அப்யக்ருணாத்—அவரை திருப்திபடுத்தி; சுசி-ஸ்ரவா:—மிகவும் புகழ்பெற்ற வேத பிராமணமான; யத்-நாபி-பங்கேருஹ-ஸம்பவ:-ஸ்வயம்—யாருடைய (முழுமுதற் கடவுள்) நாபியிலுள்ள தாமரையிலிருந்து சுயமாகத் தோன்றினாரோ, அந்த பிரம்மதேவர்.

புலனடக்கம் மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் ஆகியவற்றில் பூரணத்துவம் பெற்றவர்கள், மேலும் நியாயம், சரித்திரம், பொதுக் கல்வி மற்றும் கல்பம் (புராதன சரித்திர சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டது) எனப்படும் வேத இலக்கியம் ஆகியவற்றில் வல்லுனர்கள் ஆகியோர், பகவானின் தாமரைப் பாதங்களை வழிபடுவதற்காக வந்த, புண்ணிய புருஷர்களில் அடங்குவர். மற்றவர்கள் பிரம்ம-சம்ஹிதையைப் போன்ற வேத முடிவுகளிலும், மற்றெல்லா வேதங்களைப் பற்றிய (சாம, யஜுர், ரிக் மற்றும் அதர்வ) அறிவிலும், மற்றும் பிற்சேர்க்கையாக உள்ள வேத அறிவிலும் (ஆயுர்வேதம், தனுர்வேதம் முதலானவை) வல்லுனர்களாவர். மற்றவர்கள் யோகப் பயிற்சியினால் உண்டான ஆன்மீக அறிவின் மூலமாக பலன் நோக்குக் கருமங்களின் பிரதிபலன்களிலிருந்து விடுபட்டவர்களாவர். இன்னும் சிலர் சாதாரண கருமத்தினால் அல்லாமல் வேத அறிவின் முன்னேற்றத்தினால் பிரம்மலோகத்தை அடைந்தவர்களாவர். மேல் நோக்கி உயர்த்தப்பட்ட பரமபுருஷரின் தாமரைப் பாதத்தை நீரைக் கொண்டு பக்தியுடன் வழிபட்டபின், பகவான் விஷ்ணுவின் நாபியிலிருந்து உற்பத்தியாகும் தாமரையில் பிறந்தவரான பிரம்மதேவர் பகவானை ஸ்தோதிரம் செய்தார்.

பதம் 8.21.4
தாது: கமண்டலு-ஜலம்தத் உருக்ரமஸ்ய
பாதாவனேஜன-பவித்ரதயா நரேந்ர
ஸ்வர்துனி அபூன் நபஸி ஸா பததீ நிமார்ஷ்டி
லோக-த்ரயம் பகவதோ விசதேவ கீர்த்தி:

தாது:—பிரம்ம தேவரின்; கமண்டலு-ஜலம்—கமண்டல நீர்; தத்—அந்த; உருக்ரமஸ்ய—பகவான் விஷ்ணுவின்; பாத-அவனேஜன-பவித்ரதயா—பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களைக் கழுவி; இதனால் தெய்வீகத் தூய்மையடைந்த; நர-இந்ர—ராஜனே; ஸ்வர்துனீ—சுவர்க்க லோகத்தைச் சேர்ந்த ஸ்வர்துனீ எனப்படும் நதி; அபூத்—அவ்வாறாகியது; நபஸி—விண்வெளியில்; ஸா—அந்நீர்; பததீ—கீழ்நோக்கி ஓடியது; நிமார்ஷ்டி—தூய்மைப்படுத்தியவாறு; லோக-த்ரயம்—மூவுலகங்களையும்; பகவத:—பரமபுருஷ பகவானின்; விசதா—அவ்வாறு தூய்மைப்படுத்தியது; இவ—அதைப் போலவே; கீர்த்தி:—புகழ் அல்லது பெருமைக்குரிய செயல்கள்.

ராஜனே, பிரம்மதேவரின் கமண்டலத்திலிருந்த நீரால் பகவான் வாமனதேவரின் தாமரைப் பாதம் கழுவப்பட்டது. பகவான் உருக்ரம என்றும் அறியப்படுகிறார். அற்புத நடிகர் என்பது இதன் பொருளாகும். இவ்வாறாக அந்த நீர் மிகவும் தூய்மையடைந்ததால், அது கங்கை நீராக மாற்றப்பட்டது. பரமபுருஷரின் தூய புகழ் மூவுலகங்களையும் தூய்மைப்படுத்துவதைப் போலவே, அதுவும் மூவுலகங்களையும் தூய்மைப்படுத்திக் கொண்டு ஆகாயத்திலிருந்து கீழ்நோக்கி உருண்டோடியது.

பதம் 8.21.5
ப்ரஹ்மாதயோ லோக-நாதா: ஸ்வ-நாதாய ஸமாத்ருதா:
ஸானுகா பலிம் ஆஜஹ்ரு: ஸங்க்ஷிப்தாத்ம-விபூதயே

ப்ரஹ்ம-ஆதய:—பிரம்ம தேவரை தலைமையாகக் கொண்ட சிறந்த புருஷர்கள்; லோக-நாதா:—பல்வேறு கிரகங்களை ஆளும் தேவர்கள்; ஸ்வ-நாதாய—அவர்களது உயர்ந்த தலைவருக்கு; ஸமாத்ருதா:—சிறந்த மரியாதையுடன்; ஸ-அனுகா:—அவரவர் ஆதரவாளர்களுடன்; பலிம்—வழிபாட்டுக்குரிய வெவ்வேறு பொருட்களை; ஆஜஹ்ரு:—சேகரித்தனர்; ஸங்க்ஷிப்த-ஆத்ம-விபூதயே—தமது சுய ஐசுவரியத்தை விரிவடையச் செய்தபின், இப்போது வாமன ரூபத்தின் அளவுக்கு உடலை சுருக்கிக் கொண்டவரான பகவானை.

பிரம்ம தேவர் மற்றும் பல்வேறு கிரகங்களை ஆளும்தேவர்கள் ஆகிய அனைவரும், அவர்களது உன்னத எஜமானரும், சர்வ வியாபகமுடைய உருவிலிருந்து அவரது சுய உருவிற்குத் தம்மை சுருக்கிக் கொண்டவருமான பகவான் வாமனதேவரை வழிபடத் துவங்கினர். இவ்வழிபாட்டுக்காக எல்லாப் பொருட்களையும் அவர்கள் சேகரித்தனர்.

பதங்கள் 8.21.6 – 8.21.7
தோயை: ஸமர்ஹணை: ஸ்ரக்பிர் திவ்ய-கந்தானுலேபனை:
தூபைர் தீபை: ஸுரபிபிர் லாஜக்ஷத-ஃபலாங்குரை:

ஸ்தவனைர் ஜய-சப்தைஸ் ச தத்-வீர்ய மஹிமாங்கிதை:
ந்ருத்ய-வாதித்ர-கீதைஸ் ச சங்க-துந்துபி-நிஹ்ஸ்வனை:

தோயை:—கமல பாதங்களைக் கழுவுவதற்கும், குளிப்பதற்கும் தேவைப்படும் நீரால்; ஸமர்ஹணை:—பகவானை வழிபடுவதற்குரிய பாத்தியம், அர்க்கியம் முதலான பொருட்களால்; ஸ்ரக்பி:—மலர் மாலைகளால்; திவ்ய-கந்த-அனுலேபனை:—பகவான் வாமன தேவரின் உடலின் மீது பூசுவதற்குரிய, சந்தனம் மற்றும் அகுரு முதலிய பலவகையான பசைகள்; தூபை:—தூபத்தால்; தீபை:—தீபங்களால்; ஸுரபிபி:—மிகவும் நறுமணம் வாய்ந்த அவை அனைத்தும்; லாஜ—வறுத்த நெல்லால்; அக்ஷத—உடையாத தானியங்களால்; ஃபல—பழங்களால்; அங்குரை:—வேர்கள் மற்றும் முளைகளால்; ஸ்தவனை:—பிரார்த்தனைகளால்; ஜய-சப்தை:—”ஜய், ஜய்” (போற்றி, போற்றி) என்ற கோஷங்களால்; ச—மேலும்; தத்-வீர்ய-மஹிமா-அங்கிதை:—பகவானின் பெருமைக்குரிய செயல்களைக் குறிக்கும்; ந்ருத்ய-வாதித்ர-கீதை: ச—நடனம், பல்வேறு வாத்தியக் கருவிகளை இசைத்தல், மற்றும் பாடல்களைப் பாடுதல் ஆகியவற்றால்; சங்க—சங்க நாதங்களின்; துந்துபி—மேளங்களைக் கொட்டுவதன்; நிஹ்ஸ்வனை:—ஒலி அலைகளால்.

பகவானுக்கு நறுமணமுள்ள மலர்கள், நீர், பாத்தியம், அர்க்கியம், சந்தனப்பசை மற்றும் அகுரு பசை, தூபம், தீபம், பொரி, முழு தானியங்கள், பழங்கள், வேர்கள் மற்றும் முளைகள் ஆகியவற்றை நிவேதனம் செய்து பகாவனை அவர்கள் வழிபட்டனர். அவ்வாறு செய்யும் பொழுது, பகவானின் பெருமைக்குரிய செயல்களைக் குறிக்கும் ஸ்தோத்திரங்களைப் பாடி, “ஜய்! ஜய்!” என்று கோஷமிட்டனர். மேலும் அவர்கள் நடனமாடினர், இசைக் கருவிகளை வாசித்தனர், பாடினர், சங்குகளை ஊதினர் மற்றும் மேளங்களையும் கொட்டினர். இவ்விதமாக பகவானை அவர்கள் வழிபட்டனர்.

பதம் 8.21.8
ஜாம்பவான் ரிக்ஷ-ராஜஸ் து பேரீ-சப்தைர் மனோ-ஜவ:
விஜயம் திக்ஷு ஸர்வாஸு மஹோத்ஸவம் அகோக்ஷயத்

ஜாம்பவான்—ஜாம்பவான் எனும் பெயர் கொண்ட; ரிக்ஷ-ராஜ:-து—கரடி ராஜனும் கூட; பேரீ-சப்தை:—கொம்பை ஊதுவதன் மூலம்; மன:-ஜவ:—மனப் பரவசத்தில்; விஜயம்—வெற்றி; திக்ஷு—எல்லா திசைகளிலும்; ஸர்வாஸு—எல்லா இடங்களிலும்; மஹா-உத்ஸவம்—திருவிழாவை; அகோக்ஷயத்—பிரகடனம் செய்தார்.

கரடிகளின் ராஜனான ஜாம்பவானும் கூட விழாவில் பங்கேற்றார். எல்லாத் திசைகளிலும் தனது கொம்பை ஊதி ஓசையெழுப்பிய அவர், பகவான் வாமன தேவரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக பெரியதொரு விழாவைப் பிரகடனம் செய்தார்.

பதம் 8.21.9
மஹீம் ஸர்வாம் ஹ்ருதாம் த்ருஷ்ட்வா த்ரிபத-வ்யாஜ-யாச்ஞயா
ஊசு: ஸ்வ-பர்துர் அஸுரா தீக்ஷிதஸ்யாத்யமர்ஷிதா:

மஹீம்—நிலத்தையும்; ஸர்வாம்—எல்லா; ஹ்ருதாம்—பறிகொடுத்து விட்டதை; த்ருஷ்ட்வா—கண்டபின்; திரி-பத-வ்யாஜ யாச்னயா—மூன்றடி நிலத்தை மட்டும் கேட்டதன் மூலமாக; ஊசு:—கூறினார்; ஸ்வ-பர்து:—அவர்களது எஜமானரின்; அஸூரா:—அசுரர்கள்; தீக்ஷிதஸ்ய—தியாகத்தில் மிகவும் உறுதியுடன் இருந்த பலி மகாராஜனின்; அதி—மிகவும்; அமர்ஷிதா:—அவர்களுக்கு அச்செயல் சகிக்க முடியாததாக இருந்தது.

பலி மகாராஜனின் ஆதரவாளர்களான அசுரர்கள், யாகம் செய்வதில் உறுதியாக இருந்த தங்கள் எஜமானர், மூன்றடி நிலத்தை யாசிப்பதெனும் சாக்குடன் வந்த வாமனதேவரிடம் அவரது உடைமைகள் அனைத்தையும் பறிகொடுத்து விட்டதைக் கண்டு, மிகவும் கோபத்துடன் பின்வருமாறு கூறினர்.

பதம் 8.21.10
ந வாயம் ப்ரஹ்ம-பந்துர் விஷ்ணுர் மாயாவினாம் வர:
த்விஜ-ரூப-ப்ரதிச்சன்னோ தேவ-கார்யம் சிகீர்ஷதி

ந—இல்லை; வா—அல்லது; அயம்—இந்த; ப்ரஹ்ம-பந்து:—ஒரு பிராமணரின் வடிவிலுள்ள வாமனதேவர்; விஷ்ணு:—அவர் பகவான் விஷ்ணுவேயாவார்; மாயாவினாம்—மாயாவிகளுக்கெல்லாம்; வர:—மிகப் பெரியவர்; த்விஜ-ரூப—ஒரு பிராமணரின் ரூபத்தை ஏற்று; ப்ரதிச்சன்ன:—ஏமாற்றும் நோக்கத்திற்காக வேடம் தரித்துள்ளார்; தேவ-கார்யம்—தேவர்களின் நன்மைக்காக; சிகீர்ஷதி—அதற்காக அவர் முயற்சி செய்கிறார்.

“இந்த வாமனர் நிச்சயமாக ஒரு பிராமணரல்ல. இவர் மிகப்பெரிய வஞ்சகரான பகவான் விஷ்ணுவேயாவார். ஒரு பிராமணரின் உருவை ஏற்று தமது சுயரூபத்தை மறைத்துக் கொண்டுள்ள இவர், தேவர்களின் நன்மைக்காக செயற்படுகிறார்.

பதம் 8.21.11
அனேன யாசமானேன சத்ருணா வடு-ரூபிணா
ஸர்வஸ்வம் நோ ஹ்ருதம் பர்துர் ன்யஸ்த-தண்டஸ்ய பர்ஹிஷி

அனேன—அவரால்; யாசமானேன—ஒரு யாசகரின் நிலையில் உள்ள; சத்ருணா—எதிரியால்; வடு-ரூபிணா—ஒரு பிரம்மச்சாரியின் உருவிலுள்ள; ஸர்வஸ்வம்—அனைத்தையும்; ந:—நம்முடைய; ஹ்ருதம்—பறித்துக்கொள்ளப்பட்டது; பர்து:—நமது எஜமானரின்; ன்யஸ்த—கைவிடப்பட்டது; தண்டஸ்ய—யாருடைய தண்டிக்கும் சக்தி கைவிடப்பட்டது; பர்ஹிஷி—யாக விரதத்தை மேற் கொண்டதால்.

“நமது எஜமானரான பலி மகாராஜன் யாகத்தை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருப்பதால், தண்டிக்கும் சக்தியைக் கைவிட்டுவிட்டார். நமது நிரந்தர எதிரியான விஷ்ணு, இதைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு பிரம்மச்சாரி யாசகராக உடையணிந்து, அவரது உடைமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டு விட்டார்.

பதம் 8.21.12
ஸத்ய-வ்ரதஸ்ய ஸததம் தீக்ஷிதஸ்ய விசேஷத:
நான்ருதம் பாஷிதும் சக்யம் ப்ரஹ்மண்யஸ்ய தயாவத:

ஸத்ய-வ்ரதஸ்ய—சத்தியத்தில் உறுதியானவரான பலி மகாராஜனின்; ஸததம்—எப்பொழுதும்; தீக்ஷிதஸ்ய—யாகம் செய்வதைத் துவங்கியுள்ள அவரது; விசேஷத:—குறிப்பாக; ந—இல்லை; அன்ருதம்—பொய்; பாஷிதும் சக்யம்—பேசமுடியும்; ப்ரஹ்மண்யஸ்ய—பிராமண பண்பாட்டிடம், அல்லது பிராமணரிடம்; தயா-வத:—எப்பொழுதும் அன்பாக இருப்பவரின்.

“நமது தலைவரான பலி மகாராஜன் எப்பொழுதும் சத்தியத்தில் உறுதி கொண்டவராவார். யாகம் செய்வதை அவர் துவங்கியிருப்பதால், முக்கியமாக தற்போது இது முற்றிலும் உண்மையாகும். பிராமணர்களிடம் அவர் எப்பொழுதும் அன்பும், கருணையும் கொண்டவர். மேலும் எச்சமயத்திலும் அவரால் பொய் பேச முடியாது.

பதம் 8.21.13
தஸ்மாத் அஸ்ய வதோ தர்மோ பர்து: சுஸ்ரூஷணம் ச ந:
இதி ஆயுதானி ஜக்ருஹுர் பலேர் அனுசராஸுரா:

தஸ்மாத்—ஆகவே; அஸ்ய—இந்த பிரம்மச்சாரி வாமனரை; வத:—வதம் செய்வது; தர்ம:—நமது கடமையாகும்; பர்து:—நமது தலைவரின்; சுஸ்ரூஷணம் ச—மேலும் இதுவே சேவை செய்வதற்கான வழி; ந:—நமது; இதி—இவ்வாறாக; ஆயுதானி—எல்லா வகையான ஆயுதங்களையும்; ஜக்ருஹு:—அவர்கள் கையில் எடுத்தனர்; பலே:—பலி மகாராஜனின்; அனுசர—ஆதரவாளர்களான; அஸுரா:—அசுரர்கள் அனைவரும்.

ஆகவே பகவான் விஷ்ணுவாகிய இந்த வாமனதேவரைக் கொன்று விடுவது நமது கடமையாகும். இது நமது மதக் கொள்கையும், நம் தலைவருக்கு சேவை செய்வதற்குரிய ஒரு வழியுமாகும்.” இந்த முடிவை எடுத்தபின், பலி மகாராஜனின் ஆதரவாளர்களான அசுரர்கள் வாமன தேவரைக் கொல்லும் நோக்கத்துடன், அவர்களுடைய பல்வேறு ஆயுதங்களைக் கையிலெடுத்தனர்.

பதம் 8.21.14
தே ஸர்வே வாமனம் ஹந்தும் சூல-பட்டிச-பாணய:
அனிச்சந்தோ பலே ராஜன் ப்ராத்ரவஞ் ஜாத-மன்யவ:

தே—அசுரர்கள்; ஸர்வே—அனைவரும்; வாமனம்—பகவான் வாமனதேவரை; ஹந்தும்—கொல்ல; சூல—சூலங்கள்; பட்டிச—நீண்ட ஈட்டிகள்; பாணய:—அனைத்தையும் கையிலெடுத்து; அனிச்சந்த:—விருப்பத்திற்கெதிராக; பலே:—பலி மகாராஜனின்; ராஜன்—ராஜனே; ப்ராத்வன்—அவர்கள் முன்னேறிச் சென்றனர்; ஜாத-மன்யவ:—வழக்கமான கோபத்தினால் தூண்டப்பட்டு.

ராஜனே, தங்களது வழக்கமான கோபத்தினால் தூண்டப்பட்டு, தங்களுடைய நீண்ட ஈட்டிகளையும், சூலங்களையும் கையில் எடுத்துக் கொண்ட அசுரர்கள், பலி மகாராஜனின் விருப்பத்திற்கெதிராக, பகவான் வாமனதேவரைக் கொல்ல அவரை நோக்கி முன்னேறிச் சென்றனர்.

பதம் 8.21.15
தான் அபித்ரவதோ த்ருஷ்ட்வா திதிஜானீகபான் ந்ருப
ப்ரஹஸ்யானுசரா விஷ்ணோ: ப்ரத்யஷேதன் உதாயுதா:

தான்—அவர்களை; அபித்ரவத:—இவ்வாறு முன்னேறிச் செல்வதை; த்ருஷ்ட்வா—கண்டு; திதிஜ-அனீக-பான்—அசுர வீரர்கள்; ந்ருப—ராஜனே; ப்ரஹஸ்ய—புன்முறுவல் செய்து; அனுசரா:—சகாக்கள்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ப்ரத்யஷேதன்—தடுத்தனர்; உதாயுதா:—அவர்களின் ஆயுதங்களை எடுப்பதிலிருந்து.

ராஜனே, அசுர வீரர்கள் கோபத்துடன், வருவதைக் கண்ட பகவான் விஷ்ணுவின் சகாக்கள் புன்னகை செய்தனர். பிறகு தங்களது ஆயுதங்களை எடுத்து, அசுரர்கள் தங்களது முயற்சிகளைத் தொடர முடியாதபடி அவர்களைத் தடுத்து விட்டனர்.

பதங்கள் 8.21.16 – 8.21.17
நந்த: ஸுனந்தோ ‘த ஜயோ விஜய: ப்ரபலோ பல:
குமுத: குமுதாக்ஷஸ் ச விஸ்வக்ஷேன: பதத்ரிராட்

ஜயந்த: ஸ்ருததேவஸ் ச புஷ்பதந்தோ ‘த ஸாத்வத:
ஸர்வே நாகாயுத-ப்ராணாஸ் சமூம் தே ஜக்னுர் ஆஸுரீம்

நந்த: ஸுனந்த:—நந்த, சுனந்தர்களைப் போன்ற பகவான் விஷ்ணுவின் சகாக்கள்; அத—இவ்விதமாக; ஜய: விஜய: ப்ரபல: பல: குமுத: குமுதாக்ஷ: ச விஷ்வக்ஷேன:—ஜயன் விஜயன், பிரபலன், பலன், குமுதன், குமுதாக்ஷன் மற்றும் விஷ்வக்க்ஷேனர் ஆகியோரும் கூட; பதத்ரி-ராட்—பறவை ராஜனான கருடன்; ஜயந்த: ஸ்ருத தேவ: ச புஷ்பதந்த: அத ஸாத்வத:—ஜயந்தர், ஸ்ருதேவர், புஷ்பதந்தர் மற்றும் ஸாத்வதர்; ஸர்வே—ஆகிய அனைவரும்; நாக-ஆயுத-ப்ராணா:—பத்தாயிரம் யானைகளுக்குச் சமமான பலம் கொண்டவர்களாக இருந்தனர்; சமூம்—அசுர வீரர்கள்; தே—அவர்கள்; ஐக்னு:—கொன்றனர்; ஆஸுரீம்—அசுர.

நந்த, சுனந்த, ஜயன், விஜயன், பிரபலன், பலன், குமுதன், குமுதாக்ஷன், விஸ்வக்ஷேனர், பதத்ரிராட் (கருடன்), ஜயந்தன், ஸ்ருததேவர், புஷ்பதந்தர் மற்றும் ஸாத்வதர் ஆகிய அனைவரும் பகவான் விஷ்ணுவின் சகாக்களாவர். அவர்கள் பத்தாயிரம் யானைகளுக்குச் சமமான பலம் கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்கள் அசுரர்களின் வீரர்களைக் கொல்ல ஆரம்பித்தனர்.

பதம் 8.21.18
ஹன்யமானான் ஸ்வகான் த்ருஷ்ட்வா புருஷானுசரைர் பலி:
வாரயாம் ஆஸ ஸம்ரப்தான் காவ்ய-சாபம் அனுஸ்மரன்

ஹண்யமானான்—கொல்லப்படுவதை; ஸ்வகான்—அவரது சொந்த வீரர்கள்; த்ருஷ்ட்வா—கண்டபின்; புருஷ-அனுசரை:—பரம புருஷரின் சகாக்களால்; பலி:—பலி மகாராஜன்; வாரயாம் ஆஸ—அனுமதிக்கவில்லை; ஸம்ரப்தான்—அவர்கள் கடுங்கோபம் கொண்ட போதிலும்; காவ்ய-சாபம்—சுக்ராசார்யரால் கொடுக்கப்பட்ட சாபத்தை; அனுஸ்மரன்—நினைவிற் கொண்டு.

தமது சொந்த வீரர்கள் பகவான் விஷ்ணுவின் சகாக்களால் கொல்லப்படுவதைக் கண்ட பலி மகாராஜன், சுக்ராசார்யரின் சாபத்தை நினைவிற் கொண்டு, தமது வீரர்கள் தொடர்ந்து சண்டை செய்வதை அனுமதிக்கவில்லை.

பதம் 8.21.19
ஹே விப்ரசித்தே ஹே ராஹோ ஹே நேமே ஸ்ரூயதாம் வச:
மா யுத்யத நிவர்தத்வம் நந: காலோ ‘யம் அர்த்த க்ருத்

ஹே விபர்சித்தே—ஒ விபர்சித்தி; ஹே ராஹோ—ஓ ராஹு; ஹே நேமே—ஓ நேமி; ஸ்ரூயதாம்—அன்புடன் கேளுங்கள்; வச:—என் வார்த்தைகளை; மா—வேண்டாம்; யுத்யத—சண்டை; நிவர்தத்வம்—இச்சண்டையை நிறுத்துங்கள்; ந—இல்லை; ந:—நமது; கால:—அனுகூலமான காலம்; அயம்—இது; அர்த-க்ருத்—நமக்கு வெற்றி தரக்கூடிய.

ஓ விப்ரசித்தி, ராஹு, நேமி தயவுசெய்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்! சண்டை செய்ய வேண்டாம். உடனே நிறுத்துங்கள். ஏனெனில் தற்போதைய நேரம் நமக்கு அனுகூலமாக இல்லை.

பதம் 8.21.20
ய: ப்ரபு: ஸர்வ-பூதானாம் ஸுக-துஹ்கோபபத்தயே
தாம் நாதிவர்திதும் தைத்யா: பௌருஷைர் ஈஸ்வர: புமான்

ய: ப்ரபு:—தலைவராகிய அந்த பரமபுருஷர்; ஸர்வ-பூதானாம்—எல்லா ஜீவராசிகளின்; ஸுக-துஹ்க-உபபத்தயே—இன்ப, துன்பங்களை நிர்வகிப்பதற்கு; தம்—அவரை; ந—இல்லை; அதிவர்திதும்—வெல்ல; தைத்யா:—அசுரர்களே; பெளருஷை:—மனித முயற்சியால்; ஈஸ்வர:—பரம ஆளுனரை; புமான்—ஒரு நபர்.

தைதியர்களே, எல்லா ஜீவராசிகளுக்கும் இன்ப, துன்பங்களை அளிக்கக் கூடியவரான பரம்புருஷ பகவானை, மனித முயற்சியால் ஒருவராலும் வெல்ல முடியாது.

பதம் 8.21.21
யோ நோ பவாய ப்ராக் ஆஸீத் அபவாய திவௌகஸாம்
ஸ ஏவ பகவான் அத்ய வர்ததே தத்-விபர்யயம்

ய:—முழுமுதற் கடவுளை பிரதிநிதிக்கும் காலம்; ந:—நமது; பவாய—முன்னேற்றத்திற்காக; ப்ராக்—முன்பு; ஆஸீத்—இருந்தது; அபவாய—தோல்விக்கு; திவ-ஓகஸாம்—தேவர்களின்; ஸ:—அந்த காலமானது; ஏவ—உண்மையில்; பகவான்—பரமபுருஷரின் பிரதிநிதியான; அத்ய—இன்று; வர்ததே—இருக்கிறது; தத்-விபர்யயம்—நம்முடைய அனுகூலத்திற்கு எதிராக.

பரமபுருஷரைப் பிரதிநிதிக்கும் உன்னதமான காலம் முன்பு நமக்கு ஆதரவாகவும், தேவர்களுக்கு ஆதரவற்றதாகவும் இருந்தது. ஆனால் அதே காலம் இப்பொழுது நமக்கு எதிராக நிற்கிறது.

பதம் 8.21.22
பலேன ஸசிவைர் புத்யா துர்கைர் மந்த்ரௌஷாதாதிபி:
ஸாமாதிபிர் உபாயைஸ் ச காலம் நாத்யேதி வை ஜன:

பலேன—ஜடசக்தியால்; ஸசிவை:—மந்திரிகளின் ஆலோசனையால்; புத்யா—புத்தியால்; துர்கை:—கோட்டைகளால்; மந்த்ர-ஒளஷத-ஆதிபி:—மாய மந்திரங்களால் அல்லது மருந்து, மூலிகைகளால்; ஸாம-ஆதிபி:—தந்திரத்தால் அல்லது அதைப் போன்ற பிறவழிகளால்; உபாயை: ச—இதைப் போன்ற பிற முயற்சிகளால்; காலம்—பரமபுருஷரைப் பிரதிநிதிக்கும் காலம்; ந—ஒருபோதும் இல்லை; அத்யேதி—வெல்ல முடியும்; வை—உண்மையில்; ஜன:—எவராலும்.

பரமபுருஷ பகவானின் பிரதிநிதியாகிய காலத்தை, பெளதிக சக்தியாலோ, மந்திரிகளின் ஆலோசனையாலோ, புத்தியாலோ, தந்திரத்தாலோ, கோட்டைகளாலோ, மாய மந்திரங்களாலோ, மருந்துகளாலோ, மூலிகைகளாலோ அல்லது வேறெந்த வழியாலோ ஒருவராலும் வெல்ல முடியாது.

பதம் 8.21.23
பவத்பிர் நிர்ஜிதா ஹி ஏதே பஹுசோ ‘நுசரா ஹரே:
தைவேனர்த்தைஸ் த ஏவாத்ய யுதி ஜித்வா நதந்தி ந:

பவத்பி:—அசுரர்களான உங்கள் அனைவராலும்; நிர்ஜிதா:—தோற்கடிக்கப்பட்டனர்; ஹி—உண்மையில்; ஏதே—தேவர்களின் இவ்வீரர்கள் அனைவரும்; பஹுச:—அதிக எண்ணிக்கையிலான; அனுசரா:—ஆதரவாளர்கள்; ஹரே:—பகவான் விஷ்ணுவின்; தைவேன—தெய்வாதீனமாக; ருத்தை:—ஐசுவரியம் அதிகரிக்கப் பெற்றவர்களான; தே—அவர்கள் (தேவர்கள்); ஏவ—உண்மையில்; அத்ய—இன்று; யுதி—போரில்; ஜித்வா—வென்று; நதந்தி—எண்ணி நகையாடுகின்றனர்; ந:—நம்மை.

முன்பு தெய்வாதீனமாக, அதிக எண்ணிக்கைக் கொண்ட பகவான் விஷ்ணுவின் இத்தகைய ஆதரவாளர்களை நீங்கள் தோற்கடித்தீர்கள். ஆனால் அதே ஆதரவாளர்கள் இன்று நம்மை வென்றுவிட்ட ஆனந்தத்தில் சிங்கங்களைப் போல் கர்ஜிக்கின்றனர்.

பதம் 8.21.24
ஏதான் வயம் விஜேஷ்யாமோ யதி தைவம் ப்ரஸீததி
தஸ்மாத் காலம் ப்ரதீக்ஷத்வம் யோ நோ ‘ர்தத்வாய கல்பதே

ஏதான்—தேவர்களின் இவ்வீரர்கள் அனைவரையும்; வயம்—நாம்; விஜேஷ்யாம:—அவர்களை வெல்லுவோம்; யதி—என்றால்; தைவம்—கடவுளருள்; ப்ரஸீததி—ஆதரவாக இருக்கிறது; தஸ்மாத்—ஆகவே; காலம்—அனுகூலமான அக்காலம்; ப்ரதீக்ஷத்வம்—அதுவரை காத்திருப்போம்; ய:—எது; ந:—நமது; அர்தத்வாய கல்பதே—நமக்கு ஆதரவாக கருதப்பட வேண்டும்.

கடவுளருள் நமக்கு ஆதரவாக இருந்தாலன்றி, நம்மால் வெற்றி பெற இயலாது. ஆகவே, அவர்களை வெல்லுவது சாத்தியமாகக் கூடிய அந்த அனுகூலமான காலத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும்.

பதம் 8.21.25
ஸ்ரீ-சுக உவாச
பத்யுர் நிகதிதம் ஸ்ருத்வா-தைத்ய-தானவ-யூதபா:
ரஸாம் நிர்விவிசூ ராஜன் விஷ்ணு-பார்ஷத தாடிதா:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பத்யு:—அவர்களது எஜமானரின் (பலி மகாராஜன்); நிகதிதம்—இவ்வாறு விவரிக்கப்பட்டதை; ஸ்ருத்வா—கேட்டபின்; தைத்ய-தானவ-யூதபா:—தைத்திய மற்றும் அசுரத் தலைவர்கள்; ரஸாம்—பிரபஞ்சத்தின் கீழான லோகங்களில்; நிர்விவிசு:—புகுந்தனர்; ராஜன்—ராஜனே; விஷ்ணு-பார்ஷத—பகவான் விஷ்ணுவின் சகாக்களால்; தாடிதா:—விரட்டப்பட்டனர்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ராஜனே, அவர்களது எஜமானரான பலி மகாராஜனின் உத்தரவினாலும், விஷ்ணுவின் வீரர்களால் விரட்டப்பட்டதாலும், அசுரத் தலைவர்கள் மற்றும் தைத்தியர்கள் ஆகிய அனைவரும் பிரபஞ்சத்தின் கீழான பிரதேசங்களினுள் புகுந்தனர்.

பதம் 8.21.26
அத தார்க்ஷய-ஸீதோ ஞாத்வா விராட் ப்ரபு-சிகீர்ஷிதம்
பபந்த வாருணை: பாசைர் பலிம் ஸூத்யே ‘ஹனி க்ரதௌ

அத—அதன்பிறகு; தார்க்ஷ்ய-ஸுத:—கருடன்; ஞாத்வா—அறிந்து; விராட்—பறவை ராஜன்; ப்ரபு-சிகீர்க்ஷிதம்—வாமனராகத் தோன்றிய பகவான் விஷ்ணுவின் விருப்பத்தை; பபந்த—சிறைப்படுத்தினார்; வாருணை:—வருணனுடைய; பாசை:—கயிறுகளால்; பலிம்—பலியை; ஸூத்யே—சோம-ரஸத்தைப் பருகும்; அஹனி—அந்நாளில்; க்ரதௌ—யாக நேரத்தில்.

அதன்பிறகு, சோம-பானம் பருகும் நாளில், யாகம் நிறைவேறியபின், தனது பெருமானின் விருப்பத்தை அறிந்த, பறவைகளின் ராஜனான கருடன் நாக-பாசத்தால் (வருணனின் கயிறுகளால்) பலி மகாராஜனை சிறைப்படுத்தினார்.

பதம் 8.21.27
ஹாஹாகாரோ மஹான் ஆஸீத் ரோதஸ்யோ: ஸர்வதோ திசம்
நிக்ருஹ்யமாணே ‘ஸுர-பதௌ விஷ்ணுனா ப்ரபவிஷ்ணுனா

ஹாஹா-கார:—கூக்குரல் மிகுந்த புலம்பல்; மஹான்—மிகப் பெரிய; ஆஸுத்—எழுந்தது; ரோதஸ்யோ:—உயர்ந்த மற்றும் தாழ்ந்த கிரக அமைப்புக்கள் இரண்டிலும்; ஸர்வத:—எல்லா இடங்களிலும்; திசம்—எல்லாத் திசைகளிலும்; நிக்ருஹ்யமாணே—நசுக்கப்பட்டதால்; அஸுர-பதௌ—அசுர ராஜனான பலி மகாராஜன்; விஷ்ணுனா—பகவான் விஷ்ணுவால்; ப்ரபவிஷ்ணுனா—எல்லா இடங்களிலும் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கும்.

மிகவும் சக்தி வாய்ந்தவரான பகவான் விஷ்ணுவால் பலி மகாராஜன் இவ்வாறு சிறைப்படுத்தப்பட்ட போது, பிரபஞ்சத்தின் உயர்ந்த மற்றும் தாழ்ந்த கிரக அமைப்புக்களிலுமுள்ள எல்லாத் திசைகளிலும் கூக்குரல் மிகுந்த புலம்பலொலி எழுந்தது.

பதம் 8.21.28
தம் பத்தம் வாருணை: பாசைர் பகவான் ஆஹ வாமன:
நஷ்ட-ஸ்ரியம் ஸ்திர-ப்ரக்ஞம் உதார-யசஸம் ந்ருப

தம்—அவரிடம்; பத்தம்—அவ்வாறு கைது செய்யப்பட்ட; வாருணை: பாசை:—வருணனின் கயிறுகளால் (நாக-பாசத்தால்); பகவான்—பரமபுருஷ பகவான்; ஆஹ—கூறினார்; வாமன:—வாமன தேவர்; நஷ்ட-ஸ்ரியம்—தமது உடலின் ஒளியை இழந்துவிட்டவரான பலி மகாராஜனிடம்; ஸ்திர-ப்ரக்ஞம்—ஆனால் தீர்மானத்தில் அவர் அதே உறுதியுடனேயே இருந்தார்; உதார-யசஸம்—தயாள குணம் உள்ளவரும், புகழ்பெற்றவரும்; ந்ருப—ராஜனே.

ராஜனே, யாரை பகவான் நாக பாசத்தால் சிறைப்படுத்தி இருக்கிறாரோ, அந்த தயாள குணம் கொண்டவரும், புகழ் பெற்றவருமான பலி மகாராஜனிடம் முழுமுதற் கடவுளாகிய வாமனதேவர் பிறகு பேசினார். பலி மகாராஜன் அவரது தேகத்தின் எல்லா ஒளியையும் இழந்துவிட்டபோதிலும், அவரது தீர்மானத்தில் அவர் உறுதியாக இருந்தார்.

பதம் 8.21.29
பதானி த்ரீணி தத்தானி பூமேர் மஹ்யம் த்வயாஸுர
த்வாப்யாம் க்ராந்தா மஹீ ஸர்வா த்ருதீயம் உபகல்பய

பதானி—காலடிகள்; த்ரீணி—மூன்று; தத்தானி—கொடுக்கப்பட்டது; பூமே:—கொண்ட நிலம்; மஹ்யம்—எனக்கு; த்வயா—உம்மால்; அஸுர—அசுர ராஜனே; த்வாப்யாம்—இரு அடிகளால்; க்ராந்தா—நிரப்பப்பட்டது; மஹீ—எல்லா நிலமும்; ஸர்வா—முழுமையாக; த்ருதீயம்—மூன்றாவது அடிக்கு; உபகல்பய—இப்போது வழியைக் கண்டுபிடியும்.

அசுர ராஜனே, எனக்கு மூன்றடி நிலம் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறீர். ஆனால் இரு அடிகளால் நான் பிரபஞ்சம் முழுவதையும் அளந்துவிட்டேன். எனது மூன்றாவது அடியை நான் எங்கு வைப்பது என்பதைப் பற்றி இப்போது யோசித்துப் பாரும்.

பதம் 8.21.30
யாவத் தபதி அஸௌ கோபிர் யாவத் இந்து: ஸஹோடுபி:
யாவத் வர்ஷதி பர்ஜன்யஸ் தாவதீ பூர் இயம் தவ

யாவத்—அது வரையுள்ள; தபதி—ஒளி வீசுகிறது; அஸௌ—சூரியன்; கோபி:—சூரிய ஒளியால்; யாவத்—அது வரையியுள்ள; இந்து:—சந்திரன்; ஸஹ-உடுபி:—நட்சத்திரங்களுடன் கூடிய; யாவத்—அதுவரையுள்ள; வர்ஷதி—மழை பொழிகின்றன; பர்ஜன்ய:—மேகங்கள்; தாவதீ—அவ்வளவு தூரத்திற்கு; பூ:—நிலம்; இயம்—இந்த; தவ—உமது உடைமையில்.

நட்சத்திரங்கள் மற்றும் சூரிய, சந்திரர்கள் வரையும், மழை பொழியும் மேகங்கள் வரையும் உள்ள, பிரபஞ்சத்திலுள்ள எல்லா நிலமும் உமக்குச் சொந்தமாகும்.

பதம் 8.21.31
பதைகேன மயாக்ராந்தோ பூர்லோக: கம் திசஸ் தனோ:
ஸ்வர்லோகஸ் தே த்விதீயேன பஸ்யதஸ் தே ஸ்வம் ஆத்மனா

பதா ஏகேன—ஒரே அடியால்; மயா—என்னால்; ஆக்ராந்த:—ஆக்கிரமிக்கப்பட்டது; பூர்லோக—பூர்லோகம் எனப்படும் கிரக அமைப்பு முழுவதும்; கம்—ஆகாயம்; திச:—மற்றும் எல்லாத் திசைகளும்; தனோ:—எனது உடலால்; ஸ்வர்லோக:—உயர் கிரக அமைப்பு; தே—உமது ஆதிக்கத்தில் உள்ள; த்விதீயேன—இரண்டாவது அடியால்; பஸ்யத: தே—நீர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே; ஸ்வம்—உமது சொந்த; ஆத்மனா—என்னால்.

இவ்வுடமைகளில், ஓரடியால் நான் பூர்லோகத்தை அளந்துவிட்டேன். எனது உடலால் எல்லாத் திசைகளிலும் உள்ள ஆகாயம் முழுவதையும் நான் ஆக்கிரமித்துக் கொண்டேன். உமது முன்னிலையிலேயே, எனது இரண்டாவது அடியால் உயர் கிரக அமைப்பையும் நான் அளந்துவிட்டேன்.

பதம் 8.21.32
ப்ரதிஸ்ருதம் அதாதுஸ் தே நிரயே வாஸ இஷ்யதே
விச த்வம் நிரயம் தஸ்மாத் குருணா சானுமோதித:

ப்ரதிஸ்ருதம்—வாக்களிக்கப்பட்டதை; அதாது:—கொடுக்க இயலாதவரான; தே—உமது; நிரயே—நரகத்தில்; வாஸ:—வசிப்பிடம்; இஷ்யதே—நியமிக்கப்பட்டுள்ளது; விசத்வம்—இப்பொழுது உள்ளே நுழைவீராக; நிரயம்—நரக லோகத்தின்; தஸ்மாத்—ஆகவே; குருணா—உமது ஆன்மீக குருவால்; ச—கூட; அனுமோதித:—அனுமதிக்கப்பட்டுள்ளது.

உமது வாக்குறுதிக்கேற்ப உம்மால் தானம் செய்ய இயலவில்லை. இதனால் நீர் கீழ்நோக்கி நரகலோகங்களுக்குச் சென்று அங்கு வாழ வேண்டும் என்பது விதி. எனவே, உமது ஆன்மீக குருவான சுக்ராசார்யரின் உத்தரவுக்கேற்ப, இப்போது கீழே சென்று அங்கு வாழ்வீராக.

பதம் 8.21.33
வ்ருதா மனோரதஸ் தஸ்ய தூர: ஸ்வர்க: பததி அத: ப்ரதிஸ்ருதஸ்யாதானேன யோ ‘ர்தினம் விப்ரலம்பதே

வ்ருதா—எந்த நற்பலனும் இல்லாமல்; மனோரத:—மனக் கற்பனையான; தஸ்ய—அவரின்; தூர:—தூரத்தில்; ஸ்வர்க:—உயர்கிரக அமைப்பிற்கு ஏற்றம் பெறுதல்; பததி—கீழே விழுகிறான்; அத:—நரகமான ஒரு வாழ்வு நிலைக்கு; ப்ரதிஸ்ருதஸ்ய—வாக்களிக்கப்பட்ட பொருட்களை; அதானேன—கொடுக்க இயலாததால்; ய:—ஒருவன்; அர்தினம்—ஒரு யாசகனை; விப்ரலம்பதே—ஏமாற்றும்.

யாசகர் ஒருவருக்கு அளிப்பதாக வாக்குறுதி செய்ததை முறையாக நிறைவேற்றாதவன், சுவர்க்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுவதற்குப் பதிலாக அல்லது தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பதிலாக, ஒரு நரகம் போன்ற வாழ்வு நிலைக்கு இழிவடைகிறான்.

பதம் 8.21.34
விப்ரலப்தோ ததாமீதி த்வயாஹம் சாட்ய-மானினா
தத் வ்யலீக-ஃபலம் புங்க்ஷ்வ நிரயம் கதிசித் ஸமா:

விப்ரலப்த:—இப்போது நான் ஏமாற்றப்பட்டேன்; ததாமி—உமக்கு அளிப்பதாக நான் வாக்குறுதி செய்கிறேன்; இதி—இவ்வாறு; த்வயா—உம்மால்; அஹம்—நான்; ச—மேலும்; ஆட்ய-மானினா—உமது செல்வத்தில் மிகவும் கர்வம் கொண்டதால்; தத்—ஆகவே; வ்யலீக-ஃபலம்—ஏமாற்றியதன் பலனாக; புங்க்ஷ்வ—நீர் அனுபவிக்க வேண்டும்; நிரயம்—நரக வாழ்வில்; கதிசித்—சில; ஸமா:—ஆண்டுகள்.

உமது உடைமைகளில் பொய்யான கர்வம் கொண்டு, எனக்கு நிலம் கொடுப்பதாக நீர் வாக்களித்தீர். ஆனால் அவ்வாக்குறுதியை உம்மால் நிறைவேற்ற இயலவில்லை. எனவே, உமது வாக்குறுதி பொய் என்பதால், நீர் நரக வாழ்வில் சில ஆண்டுகள் வாழவேண்டும்.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பலி மகாராஜன் பகவானால் கைது செய்யப்படுதல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare