அத்தியாயம் – 19
பகவான் வாமனதேவர்
பலி மகாராஜனிடம் யாசித்தல்
பதம் 8.19.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பலி மகாராஜன் இன்பமூட்டும் வகையில் பேசுவதைக் கேட்ட முழுமுதற் கடவுளாகிய வாமனதேவர் மிகவும் திருப்தியடைந்தார். அவரது பேச்சு மதக் கொள்கைகளுக்கேற்ப இருந்ததுவே இதற்குக் காரணமாகும். இவ்வாறாக பகவான் அவரை புகழத் துவங்கினார்.

பதம் 8.19.2 : பரமபுருஷ பகவான் கூறினார்: ராஜனே, நீர் உண்மையாகவே உயர்ந்தவராவீர். ஏனெனில், தற்போதுள்ள உமது ஆலோசகர்கள் பிருகுவின் வம்சத்தைச் சேர்ந்த பிராமணர்கள் என்பதுடன், உமது எதிர்கால போதகராக, அமைதியே சொரூபமானவரும், வணக்கத்திற்குரியவரும், உமது பாட்டனாருமாகிய பிரகலாத மகாராஜன் இருக்கப் போகிறார். உமது கூற்றுகள் உண்மையானவையாகவும், மதக்கோட்பாடுகளுக்கு முற்றிலும் ஏற்புடையவையாகவும் உள்ளன. அவை உமது குடும்ப ஒழுக்கத்தைக் காப்பவையாக இருக்கின்றன. மேலும் உமது கீர்த்தியையும் அதிகரிக்கின்றன.

பதம் 8.19.3 : இன்றுவரை, உமது வம்சத்தில் பிறந்த எவரும் ஏழை மனம் கொண்டவராகவோ, கருமியாகவோ இருந்ததில்லை என்பதை நானறிவேன். ஒருவரும் பிராமணர்களுக்கு தானம் கொடுக்க மறுத்ததில்லை. அல்லது தானம் கொடுப்பதாக வாக்களித்து அதை நிறைவேற்றாமல் விட்டதுமில்லை.

பதம் 8.19.4 : பலிச் சக்கரவர்த்தியே, புண்ணிய தீர்த்தங்களில் பிராமணர்களாலும், போர்க்களத்தில் க்ஷத்திரியர்களாலும் யாசிக்கப்பட்டதை, தானமாகக் கொடுக்க மறுத்த ஏழை மனம் கொண்ட ஓரரசன் ஒரு போதும் உனது வம்சத்தில் பிறந்ததில்லை. மேலும், வானில் பிரகாசிக்கும் அழகிய நிலவைப் போன்றவரான பிரகலாத மகாராஜனின் இருப்பால் உமது வம்சம் இன்னும் அதிக பெருமையடைகிறது.

பதம் 8.19.5 : இரண்யாக்ஷன் பிறந்ததும் உமது வம்சத்தில்தான், அவன் தனது சொந்த கதையை மட்டுமே ஏந்தியவாறு, எல்லாத் திசைகளையும் வெற்றி கொள்வதற்காக, உதவியின்றி தனியாக பூமிமீது சுற்றித்திரிந்தான். அவன் சந்தித்த எந்த வீரனாலும் அவனுடன் போட்டியிட முடியவில்லை.

பதம் 8.19.6 : கர்போதக கடலிலிருந்து பூமியை விடுவிக்கும்போது, ஒரு பன்றியாக அவதரித்த பகவான் விஷ்ணு, தம்முன் தோன்றிய இரண்யாக்ஷனைக் கொன்றார். போர் கடுமையாக இருந்தது. பெருங்கஷ்டத்துடன் பகவான் இரண்யாக்ஷனைக் கொன்றார். பின்னர், இரண்யாக்ஷனின் அசாதாரணமான வீரத்தைப் பற்றி பகவான் எண்ணிப் பார்த்தபோது, தாம் உண்மையாகவே வெற்றி பெற்றதாக உணர்ந்தார்.

பதம் 8.19.7 : தனது சகோதரன் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட இரண்யகசிபு, தனது சகோதரனைக் கொன்றவரான பகவான் விஷ்ணுவைக் கொல்ல விரும்பி, அவரது வசிப்பிடத்தை நோக்கி பெருங்கோபத்துடன் சென்றான்.

பதம் 8.19.8 : மாயாவிகளுக்கெல்லாம் மிகச் சிறந்தவரும், காலத்தின் முன்னேற்றத்தை அறிந்தவருமான பகவான் விஷ்ணு, கையில் ஒரு சூலத்தை ஏந்தியவாறு, மரண சொரூபியைப் போல் இரண்யகசிபு தம்மை நோக்கி வருவதைக் கண்டு பின்வருமாறு எண்ணினார்.

பதம் 8.19.9 : எல்லா ஜீவராசிகளையும் மரணம் பின்தொடர்வதைப் போலவே, நான் எங்கு சென்றாலும் இரண்யகசிபு என்னைப் பின்தொடர்வான். ஆகவே அவனது இதயத்தினுள் புகுந்துவிடுவதுதான் எனக்கு நல்லது. இதனால், வெளியில் மட்டுமே காணும் சக்தியைக் கொண்ட அவனால் என்னைக் காண முடியாது.

பதம் 8.19.10 : பகவான் வாமனதேவர் தொடர்ந்து கூறினார்: அசுர ராஜனே, இந்த முடிவை எடுத்தபின் பகவான் விஷ்ணு, பெரும் ஆவேசத்துடன் தம்மை துரத்திக் கொண்டு வரும், தமது எதிரியான இரண்யகசிபுவின் உடலுக்குள் புகுந்தார். பெருங் கவலையுடனிருந்த பகவான் விஷ்ணு, இரண்யகசிபுவின் கற்பனைக்கெட்டாத ஒரு சூட்சும உடலுடன், அவனது சுவாசத்தோடு, அவனது நாசித் துவாரத்தினுள் புகுந்தார்.

பதம் 8.19.11 : பகவான் விஷ்ணுவின் வசிப்பிடம் காலியாக இருப்பதைக் கண்ட இரண்யகசிபு அவரை எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்தான். அவரைக் காணாததால் கோபம் கொண்ட இரண்யகசிபு உரக்கக் கூவினான். அவன் பூமியின் மேற்பரப்பு, உயர்கிரக அமைப்புகள், அனைத்து திசைகள், குகைகள் மற்றும் சமுத்திரங்கள் ஆகியவை உட்பட பிரபஞ்சம் முழுவதையுமே தேடினான். ஆனால் மிகச் சிறந்த வீரனான இரண்யகசிபுவால் விஷ்ணுவை எங்கும் காணமுடியவில்லை.

பதம் 8.19.12 : அவரைக் காண இயலாமல், இரண்யகசிபு கூறினான், “நான் பிரபஞ்சம் முழுவதும் தேடிவிட்டேன், ஆனால் என் சகோதரனைக் கொன்றவரான விஷ்ணுவை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, ஒருவரும் திரும்பி வராத அந்த இடத்திற்கு அவர் சென்றிருக்க வேண்டும். (அதாவது, அவர் இப்போது மடிந்து போயிருக்க வேண்டும்.)

பதம் 8.19.13 : பகவான் விஷ்ணுவின் மீதான இரண்யகசிபுவின் கோபம் அவனது மரணம் வரைக்கும் விடாப்பிடியாக இருந்தது. தேகாபிமானத்திலுள்ள மற்றவர்கள் பொய் அகங்காரத்தினாலும், அறியாமையின் பெரும் ஆதிக்கத்தினாலும் மட்டுமே கோபத்தைக் காப்பாற்றி வருகின்றனர்.

பதம் 8.19.14 : பிரகலாத மகாராஜனின் புத்திரரும், உமது தந்தையுமான விரோசனர் பிராமணர்களிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிராமணர்களின் உடையில் தன்னிடம் வந்திருப்பவர்கள் தேவர்கள் தான் என்பதை நன்கு அறிந்திருந்த போதிலும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க தனது ஆயுளையே அவர்களுக்கு அவர் கொடுத்துவிட்டார்.

பதம் 8.19.15 : பிராமண குடும்பஸ்தர்களாகிய மிகச்சிறந்த புருஷர்கள், உமது முன்னோர்கள் மற்றும் தங்களது உயரந்த செயல்களினால் பெரும் புகழ் பெற்றவர்களான மிகச்சிறந்த வீரர்கள் ஆகியோரால் பின்பற்றப்பட்ட கொள்கைகளை நீரும் பின்பற்றியிருக்கிறீர்.

பதம் 8.19.16 : தைத்ய ராஜனே, தாராளமாக தானம் கொடுக்கக் கூடிய, அத்தகையதொரு உயர் குடும்பத்திலிருந்து வருபவரான உம்மிடமிருந்து, எனது அடிகளின் அளவுக்கேற்ப, மூன்றடி நிலத்தை மட்டுமே நான் கேட்கிறேன்.

பதம் 8.19.17 : ராஜனே, பிரபஞ்சம் முழுவதையும் ஆள்பவராகிய நீர், எனக்கு எவ்வளவு நிலம் தேவைப்பட்டாலும் அதைக் கொடுக்கக் கூடிய கொடை வள்ளலாக இருப்பினும், தேவைக்கதிகமான எதையும் உம்மிடமிருந்து நான் பெற விரும்பவில்லை. கற்றறிந்த பிராமணரொருவர் தனது தேவைக்கேற்ப மட்டுமே பிறரிடமிருந்து தானங்களைப் பெறுவாரானால், பாவ விளைவுகளில் அவர் சிக்கிக் கொள்ள மாட்டார்.

பதம் 8.19.18 : பலி மகாராஜன் கூறினார்: பிராமண புத்திரரே, உமது உபதேசங்கள் கற்றறிந்த முதியோரின் உபதேசங்களுக்குச் சமமானவையாக உள்ளன. ஆயினும் நீர் சிறுவனாக இருப்பதுடன், உமது அறிவும் பற்றாக்குறையாகவே உள்ளது. ஆகவே உமது சொந்த நலத்தைப் பொறுத்த விஷயத்தில் நீர் அவ்வளவு முன் யோசனை உள்ளவராகத் தெரியவில்லை.

பதம் 8.19.19 : பிரபஞ்சத்தின் மூன்று பிரிவுகளுக்கும் நானே உரிமையாளனாக இருப்பதால், ஒரு முழு தீவையும் உமக்கு என்னால் அளிக்க முடியும். என்னிடமிருந்து எதையோ பெற்றுச் செல்வதற்காக நீர் வந்திருக்கிறீர். மேலும் இனிய வார்த்தைகளால் என்னை நீர் திருப்திபடுத்தியிருக்கிறீர். ஆனால் மூன்றடி நிலத்தை மட்டுமே நீர் யாசிக்கிறீர். ஆகவே நீர் அவ்வளவு புத்திசாலியல்ல.

பதம் 8.19.20 : சிறுவனே, என்னிடம் யாசிக்க வந்தவருக்கு வேறெதையும், எங்கும் யாசிக்க வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது. ஆகவே, நீர் விரும்பினால், உமது தேவைக்கேற்ப, உம்மைப் பராமரிப்பதற்குத் தேவையான எவ்வளவு நிலத்தை வேண்டுமானாலும் என்னிடமிருந்து கேட்கலாம்.

பதம் 8.19.21 : பரமபுருஷ பகவான் கூறினார்: எனதருமை ராஜனே, மூவுலகங்களிலும் இருக்கக்கூடிய அனைத்தையும், கட்டுப்படாத புலன்களை உடையவனுக்குக் கொடுத்தாலும், அது அவனுடைய புலன்களை திருப்திப்படுத்தாது.

பதம் 8.19.22 : மூன்றடி நிலத்துடன் நான் திருப்தியடையவில்லை என்றால், ஒன்பது வர்ஷங்களைக் கொண்ட ஏழு தீவுகளில் ஒன்று எனக்குக் கிடைத்தாலும் அதனால் நிச்சயமாக நான் திருப்தியடைய மாட்டேன். ஒரு தீவை நான் பெற்றிருந்தாலும், மற்றவைகளையும் பெற விரும்புவேன்.

பதம் 8.19.23 : பிரிது மகாராஜனையும், கய மகாராஜனையும் போன்ற சக்தி வாய்ந்த மன்னர்கள் ஏழு தீவுகளையும் பெற்றவர்களாக இருந்த போதிலும், அவர்களால் திருப்தியையோ அல்லது தங்களது பேராவல்களின் முடிவையோ அடைய இயலவில்லை என்பதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பதம் 8.19.24 : விதிப் பயனாக தான் அடைவதில் ஒருவன் திருப்தியடைய வேண்டும். ஏனெனில் அதிருப்தி ஒருபோதும் மகிழ்ச்சியைக் கொண்டு வராது. மூவுலகங்களையும் அடைந்தாலும் புலனடக்கம் இல்லாதவன் மகிழ்ச்சியடைய மாட்டான்.

பதம் 8.19.25 : ஒருவனுடைய சிற்றின்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும், இன்னும் அதிகமான பணத்தை அடைவதிலும், பெளதிக வாழ்வு அவனுக்கு அதிருப்தியை விளைவிக்கிறது. இதுவே பிறப்பு இறப்புக்களின் தொடர்ச்சியால் நிரப்பப்பட்டுள்ள ஜட வாழ்வின் தொடர்ச்சிக்குக் காரணமாகும். ஆனால் விதிப் பயனாய் அடையப்படுவதில் திருப்தியடைபவன் ஜட வாழ்விலிருந்து முக்தியடைவதற்குத் தகுதியுடையவனாவான்.

பதம் 8.19.26 : இறையருளால் அடையப்பட்டுள்ள பொருட்களில் திருப்தியடையும் பிராமணர் ஒருவர், ஆன்மீக சக்தியால் அதிகமான ஞான ஒளி பெறுகிறார். ஆனால் நெருப்பில் நீரைத் தெளிக்கும்போது அதன் ஆற்றல் குறைந்து விடுவதைப் போலவே, அதிருப்தியடைந்த பிராமணரின் ஆன்மீக சக்தியும் குறைந்து போகிறது.

பதம் 8.19.27 : ஆகவே, ராஜனே, தானம் கொடுப்பவர்களில் மிகச் சிறந்தவரான உம்மிடமிருந்து மூன்றடி நிலத்தை மட்டுமே நான் யாசிக்கிறேன். அத்தியாவசிய தேவையாக இருப்பதில் பூரண திருப்தியடைவதே மகிழ்ச்சிக்கான வழி என்பதால், இத்தகையதொரு வெகுமதியால் நான் மிகவும் திருப்தியடைவேன்.

பதம் 8.19.28 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரமபுருஷ பகவான் பலி மகாராஜனிடம் இவ்வாறு கூறியதும், பலி புன்னகை செய்து, “சரி, தங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார். வாமனதேவர் விரும்பிய நிலத்தைக் கொடுப்பதெனும் தனது வாக்கை உறுதி செய்வதற்காக, அவர் தனது கமண்டலத்தைக் கையிலெடுத்தார்.

பதம் 8.19.29 : கற்றறிந்தவர்களில் மிகச் சிறந்தவரான சுக்ராசார்யர், பகவான் விஷ்ணுவின் நோக்கத்தை அறிந்து, பகவான் வாமனதேவருக்கு அனைத்தையும் கொடுத்துவிடத் தயாராக இருந்த தனது சீடனிடம் உடனே பின்வருமாறு பேசினார்.

பதம் 8.19.30 : சுக்ராசார்யர் கூறினார்: வைரோசன புத்திரனே, குள்ள வடிவிலுள்ள இந்த பிரம்மச்சாரி அழிவற்றவரான பரமபுருஷ பகவான் விஷ்ணுவேயாவார். கஸ்யப முனிவரைத் தமது தந்தையாகவும், அதிதியைத் தமது தாயாகவும் ஏற்றுக்கொண்ட இவர், இப்போது தேவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகத் தோன்றியுள்ளார்.

பதம் 8.19.31 : அவருக்கு நிலத்தைக் கொடுப்பதாக வாக்களித்ததன் மூலமாக, எத்தகைய ஆபத்தான ஒரு நிலையை நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாய் என்பதை நீ அறியவில்லை. அந்த வாக்குறுதி உனக்கு நன்மையளிக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது அசுரர்களுக்குப் பெரும் தீங்கையே கொண்டு வரும்.

பதம் 8.19.32 : ஒரு பிரம்மச்சாரியாக பொய் வேடம் தரித்துள்ள இவர் உண்மையில் பரமபுருஷ பகவானாகிய ஹரியாவார். உன்னுடைய நிலம், செல்வம், அழகு, சக்தி, புகழ் மற்றும் கல்வி ஆகிய அனைத்தையும் பறித்துக் கொள்ளவே இந்த ரூபத்தில் அவர் வந்திருக்கின்றார். அனைத்தையும் உன்னிடமிருந்து பறித்துக் கொண்ட பின், அதை உனது எதிரியான இந்திரனிடம் ஒப்படைத்துவிடுவார்.

பதம் 8.19.33 : மூன்றடி நிலத்தை அவருக்கு தானமாகக் கொடுப்பதாக நீ வாக்களித்து விட்டாய். ஆனால் அதை நீ கொடுக்கும்போது, மூவுலகங்களையும் அவர் ஆக்கிரமித்துக் கொள்வார். நீ ஒரு மூடன்! எவ்வளவு பெரிய தவற்றை நீ செய்துவிட்டாய் என்பது உனக்குத் தெரியவில்லை. பகவான் விஷ்ணுவிடம் அனைத்தையும் கொடுத்தபின், வாழ்வை நடத்துவதற்கு உனக்கு வழியிருக்காது. பிறகு வாழ்வை எப்படி நீ நடத்தப் போகிறாய்?

பதம் 8.19.34 : வாமனதேவர் முதலாவதாக மூன்று லோகங்களையும் ஓரடியால் ஆக்ரமித்துக் கொள்வார். பிறகு இரண்டாவது அடியால் புறவெளியிலுள்ள அனைத்தையும் ஆக்ரமித்துக் கொள்வார். அதன்பிறகு அவர் அனைத்தையும் ஆக்ரமித்துக் கொள்ள தமது விஸ்வரூபத்தை விரிவடையச் செய்வார். மூன்றாவது அடிக்கான இடத்தை நீ அவருக்கு எங்கே கொடுப்பாய்?

பதம் 8.19.35 : உன்னால் நிச்சயமாக அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாது. இந்த இயலாமையின் காரணத்தால், உனக்கு கிடைக்கப்போவது நிரந்தரமான நரக வாசம்தான் என்று நான் நினைக்கிறேன்.

பதம் 8.19.36 : ஒருவரது சொந்த ஜீவனோபாயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் தானத்தை அறிஞர்கள் போற்றுவதில்லை. தனது ஜீவனோபாயத்தை முறையாக சம்பாதிக்கும் தகுதியுள்ள ஒருவனுக்குத்தான் தானம், யாகம், தவம் மற்றும் பலன்நோக்குக் கருமம் ஆகியவற்றைச் செய்வது சாத்தியமாகும். (தன்னை பராமரிக்க முடியாதவனுக்கு அவை சாத்தியமல்ல.)

பதம் 8.19.37 : ஆகவே முழு அறிவு நிலையிலுள்ள ஒருவன் தன்னால் சேமிக்கப்பட்ட செல்வத்தைச் சமயம், கீர்த்தி, தானம், புலன் நுகர்வு மற்றும் அவனுடைய குடும்ப அங்கத்தினரின் பராமரிப்பு ஆகியவற்றிற்காக ஐந்து பாகங்களாகப் பிரித்துவிட வேண்டும். அத்தகைய ஒருவன் இவ்வுலகிலும் அடுத்ததிலும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

பதம் 8.19.38 : நீ ஏற்கனவே வாக்களித்து விட்டதால், அதை நீ எப்படி மறுக்கலாம் என்று ஒருவர் விவாதிக்கக் கூடும். ஓம் எனும் சொல்லிலிருந்து துவங்கும் ஒரு வாக்குறுதி உண்மையானது இல்லையெனில் அது பொய் என்று பஹ்வ்ருச-சுருதி கூறுகின்றது. அசுரரில் சிறந்தவனே, இந்த ஆதாரத்தை நீ என்னிடமிருந்து எடுத்துக் கொள்.

பதம் 8.19.39 : உடலெனும் மரத்தின் உண்மையான பலன், அதிலிருந்து பெறப்படும் நல்ல பழங்களும், மலர்களுமேயாகும் என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால் உடலெனும் மரமே இல்லையென்றால், உண்மையான பழங்களும், மலர்களும் கிடைப்பதற்குச் சாத்தியமில்லை. உடல் பொய் என்றாலும் மரத்துக்கொப்பான அந்த பொய்யான உடலின் உதவியின்றி உண்மையான பழங்களையும், மலர்களையும் பெற முடியாது.

பதம் 8.19.40 : வேருடன் பிடுங்கப்பட்ட மரமொன்று உடனடியாக கீழே சாய்ந்து உலரத் துவங்குகிறது. அதைப்போலவே, பொய்யென்று ஒப்புக் கொள்ளப்பட்ட உடலை ஒருவன் பராமரிக்கவில்லை என்றால் அதாவது, பொய் பிடுங்கி எறியப்படுமானால் உடல் உலர்ந்து விடுவது நிச்சயம்.

பதம் 8.19.41 : “ஓம்” எனும் சொல்லை உச்சரிப்பதானது, பணம் சம்பந்தப்பட்ட ஆஸ்தியிலிருந்து ஒருவன் பிரிவதைக் குறிக்கின்றது. அதாவது, இச்சொல்லை உச்சரிப்பதால் ஒருவனுடைய பணம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுகிறது. ஆகவே பணத்தின் மீதுள்ள பற்றிலிருந்து அவன் விடுபடுகிறான். பணம் இல்லாமல் இருப்பதென்பது மிகவும் திருப்தியளிக்கக் கூடியது அல்ல. ஏனெனில் அந்நிலையில் ஒருவனால் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அதாவது, “ஓம்” எனும் சொல்லை உபயோகிப்பதால் ஒருவன் மிகவும் ஏழ்மையானவனாக ஆகிவிடுகிறான். குறிப்பாக ஒருவன் ஒரு ஏழைக்கோ அல்லது பிச்சைக்காரனுக்கோ தானம் அளிக்கும்போது, அவன் அடையவேண்டிய சுயத் தன்னுணர்வும், புலன் நுகர்வும் நிறைவேறாமல் நின்றுவிடுகின்றன.

பதம் 8.19.42 : ஆகவே, இல்லை என்று கூறுவதுதான் பாதுகாப்பான வழியாகும். அது ஒரு கபடத்தனம் என்றாலும், அது ஒருவனை முழுமையாக பாதுகாக்கிறது. பிறரது இரக்கத்தை அது தன்னை நோக்கி ஈர்க்கின்றது. மேலும் தனக்காக மற்றவர்களிடமிருந்து பணம் சேகரிப்பதற்கு அது முழு வசதியை அளிக்கிறது. ஆயினும், எப்பொழுது பார்த்தாலும் தன்னிடம் ஒன்றுமே இல்லை என்று கெஞ்சிக் கேட்பவன் நிந்திக்கப்படுகிறான். ஏனெனில், அவன் வாழ்ந்து கொண்டே நடமாடும் ஒரு பிணமாவான். அல்லது அவன் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கும்போதே அவனைக் கொன்று விட வேண்டும்.

பதம் 8.19.43 : ஒரு பெண்ணைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு, அவளை முகத்துதி செய்வதிலும், தமாஷ் செய்வதிலும், ஒரு விவாகச் சடங்கிலும், ஒருவனின் வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதிப்பதிலும், ஒருவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போதும், பசுக்கள் மற்றும் பிராமண பண்பாடு ஆகியவற்றைக் காப்பதிலும், அல்லது ஒரு எதிரியின் கையிலிருந்து ஒருவனைக் காப்பாற்றுவதிலும் கையாளப்படும் கபடத்தனம் ஒருபோதும் நிந்திக்கப்படவில்லை.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare