அத்தியாயம் – 18
குள்ள:அவதாரமான
பகவான் வாமனதேவர்
பதம் 8.18.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக பரமபுருஷரின் செயல்களையும், மகத்துவங்களையும் பிரம்மதேவர் புகழ்ந்து பேசியபின், சாதாரண ஒரு ஜீவராசியைப் போல் மரணத்திற்கு ஒருபோதும் உட்படாதவரான முழுமுதற் கடவுள், அதிதியின், கருவிலிருந்து தோன்றினார். அவரது நான்கு கரங்கள் சங்கு, கதை, தாமரை மற்றும் சக்கரம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தார். அவரது கண்கள் மலரும் தாமரை இதழ்களைப் போல் காணப்பட்டன.

பதம் 8.18.2 : கருமை நிறமுடைய முழுமுதற் கடவுளின் உடல் எல்லாக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டதாகும். தாமரை போன்ற அவரது முகம் சுறா மீன்களைப் போன்ற குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாகக் காட்சியளித்தது. அவரது மார்பின் மீது ஸ்ரீவத்ஸ அடையாளம் இருந்தது. அவர் தமது மணிக்கட்டுகளில் காப்புகளையும், கரங்களில் கடங்களையும், தலையில் ஒரு கிரீடத்தையும், இடுப்பில் ஒரு கச்சையையும், அவரது மார்பிற்கு குறுக்கே ஒரு பூணூலையும், அவரது தாமரைப் பாதங்களை அலங்கரிக்கும் கொலுசுகளையும் அணிந்திருந்தார்.

பதம் 8.18.3 : ஓர் அசாதாரணமான அழகிய மலர்மாலை அவரது மார்பை அலங்கரித்தது. மேலும் அம்மலர்கள் மிக மிக நறுமணம் உடையவையாக இருந்ததால், பெரிய தேனீக்களின் கூட்டமொன்று அவற்றின் இயல்பான ரீங்கார ஓசைகளை எழுப்பியவாறு, தேனுக்காக அம்மலர்களைச் சூழ்ந்து கொண்டன. கழுத்தில் கௌஸ்துப மணியை அணிந்தவாறு பகவான் தோன்றியபோது, அவரது பிரகாசமானது, பிரஜாபதியான கஸ்யபரின் இல்லத்திலிருந்து இருளைப் போக்கியது.

பதம் 8.18.4 : அச்சமயத்தில், எல்லாத் திசைகளிலும் மகிழ்ச்சி பொங்கியது, நதிகளையும், சமுத்திரங்களையும் போன்ற நீர்த் தேக்கங்களிலும், அனைவரது இதயத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. வெவ்வேறு பருவ காலங்கள் அவற்றிற்குரிய குணங்களை முறையாக வெளிப்படுத்தின. உயர் கிரக அமைப்பிலும், வான வெளியிலும், பூமியின் மேல்பரப்பிலும் உள்ள ஜீவராசிகள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தேவர்கள், பசுக்கள், பிராமணர்கள், குன்றுகள், மற்றும் மலைகள் கூட மகிழ்ச்சியில் மூழ்கின.

பதம் 8.18.5 : ஸ்ரவண-துவாதசியன்று (பாத்ர மாதத்து வளர்பிறையின் பன்னிரண்டாம் நாள்), அபிஜித் எனும் மங்கள முகூர்த்தத்தில், சந்திரன் ஸ்ரவணம் என்ற வீட்டிற்கு வந்தபோது, பகவான் இப்பிரபஞ்சத்தில் தோன்றினார். பகவானுடைய தோற்றம் மிகவும் மங்களகரமானது எனக் கருதிய, சூரியனிலிருந்து சனிவரையுள்ள எல்லாக் கிரகங்களும், நட்சத்திரங்களும் மிகவும் சாதகமான நிலையில் இருந்தன.

பதம் 8.18.6 : ராஜனே, சந்திரனின் பன்னிரண்டாவது நாளான துவாதசியன்று பகவான் தோன்றினார். அப்போது, கற்றறிந்த அறிஞர்கள் அனைவருக்கும் தெரிந்திருப்பது போல், சூரியன் தீர்க்க ரேகையில் (உச்சியில்) இருந்தது. இந்த துவாதசி, விஜயா என்று அழைக்கப்படுகிறது.

பதம் 8.18.7 : சங்குகள், பேரிகைகள், மத்தளங்கள், பணவங்கள் மற்றும் ஆனகங்கள் ஆகியவை பொருத்தமாக முழங்கின. இவற்றின் ஓசையும், வேறு பல கருவிகளின் ஓசையும் பேரொலியாக எழுந்தது.

பதம் 8.18.8 : மிகவும் திருப்தியடைந்த சுவர்க்க லோக நடன மங்கைகள் (அப்ஸரஸ்கள்) மகிழ்ச்சியுடன் நடனமாடினர். மிகச் சிறந்த கந்தர்வர்கள் பாட்டிசைத்தனர். மேலும் பெரும் முனிவர்கள், தேவர்கள், மனுக்கள், பிதாமகர்கள் மற்றும் அக்னி தேவர்கள் ஆகியோர் பகவானை திருப்திப்படுத்த பிரார்த்தனைகள் செய்தனர்.

பதங்கள் 8.18.9 – 8.18.10 : சித்தர்கள், வித்யாதரர்கள், கிம்புருஷர்கள், கின்னரர்கள், சாரணர்கள், யக்ஷர்கள், இராட்சஸர்கள், சுபர்ணர்கள், மிகச் சிறந்த நாகர்கள் மற்றும் தேவர்களின் ஆதரவாளர்கள் ஆகிய அனைவரும், பகவானைப் போற்றிப் புகழ்ந்து நடனமாடும் வேளையில், மலர்களைப் பொழிந்து அதிதியின் வீடு முழுவதையும் மூடிவிட்டனர்.

பதம் 8.18.11 : பரமபுருஷ பகவான் தமது சுய ஆன்மீக சக்தியினால், தெய்வீகமான ஒருடலை ஏற்று, தனது சொந்த கர்பத்திலிருந்து தோன்றியதைக் கண்டு, அதிதி ஆச்சரியம் மேலிட பேரானந்தம் அடைந்தாள். குழந்தையைக் கண்ட பிரஜாபதியான கஸ்யபர் பேரானந்தத்துடனும், ஆச்சரியத்துடனும் “ஜெய்! ஜெய்!” என்று கூவினார்.

பதம் 8.18.12 : பகவான் ஆபரணங்களுடனும், கரங்களில் ஆயுதங்களுடனும் தமது சுயரூபத்தில் தோன்றினார். நித்தியமான இந்த ரூபம் ஜட உலகில் காணப்படாதது என்ற போதிலும், அதே ரூபத்திலேயே அவர் தோன்றினார். பிறகு, அவரது தாய் தந்தையரின் முன்னிலையில், ஒரு நாடக நடிகனைப்போல், ஒரு பிரம்மச்சாரியும், குள்ள பிராமணருமாகிய வாமன ரூபத்தை அவர் மேற்கொண்டார்.

பதம் 8.18.13 : பகவானை குள்ள பிரம்மச்சாரி வாமனராகக் கண்ட பெரும் முனிவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இவ்வாறாக பிரஜாபதியான கஸ்யபரைத் தங்கள் முன் இறுத்தி, பிறந்த நாள் சடங்கைப் போன்ற எல்லாச் சடங்குகளையும் அவர்கள் நிறைவேற்றினர்.

பதம் 8.18.14 : வாமனதேவரின் பூணூல் அணிவிக்கும் சடங்கின்போது, சூரிய தேவன் தாமாகவே முன்வந்து காயத்ரீ மந்திரத்தை ஓதினார். பிருஹஸ்பதி பூணூலை அணிவித்தார். மேலும் கஸ்யப முனிவர் ஒரு வைக்கோல் கச்சையை அணிவித்தார்.

பதம் 8.18.15 : பூமிதேவி ஒரு மான் தோலை அவருக்கு அளித்தாள். மேலும் வனராஜனான சந்திரதேவன் அவருக்கு ஒரு பிரம்ம-தண்டத்தை (பிரம்மச்சாரிக்குரிய தடியை) வழங்கினார். அவரது தாயான அதிதி கோவணத்துக்குரிய துணியை அளித்தாள். மேலும் சுவர்க்க லோகத்தின் அதிபதி அவருக்கு ஒரு குடையை வழங்கினார்.

பதம் 8.18.16 : மகாராஜனே, முடிவற்றவரான பரமபுருஷ பகவானுக்கு பிரம்மதேவர் ஒரு கமண்டலத்தை அளித்தார். சப்த-ரிஷிகள் அவருக்கு நாணல் புல்லையும், சரஸ்வதி தேவி அவருக்கு ஒரு ருத்ராட்ச மாலையையும் அளித்தனர்.

பதம் 8.18.17 : இவ்வாறாக வாமன தேவருக்குப் பூணூல் அளிக்கப்படும்போது, யக்ஷ ராஜனான குபேரன் அவருக்கு ஒரு பிச்சைப் பாத்திரத்தை (திருவோட்டை) வழங்கினார். மேலும் சிவபெருமானுடைய மனைவியும், அகில லோக மாதாவுமாகிய பகவதீ தேவி அவருக்கு முதல் பிச்சையை அளித்தாள்.

பதம் 8.18.18 : இவ்வாறு, அனைவராலும் வரவேற்கப்பட்ட, பிராமண சிரேஷ்டரான பகவான் வாமனதேவர், தமது பிரம்ம ஜோதியை வெளிப்படுத்தி, மிகச்சிறந்த பிராமணர்களால் நிரப்பப்பட்டிருந்த அந்த சபையின் அழகையும் மிஞ்சியவரானார்.

பதம் 8.18.19 : பகவான் ஸ்ரீ வாமன தேவர் யாகக் குண்டத்தில் ஒரு யாகத் தீயை ஏற்படுத்தியபின், அதை வழிபட்டு யாகத்தை நிறைவேற்றினார்.

பதம் 8.18.20 : பிருகு வம்சத்தைச் சேர்ந்த பிராமணர்களின் ஆதரவில் பலி மகாராஜன் அஸ்வமேத யாகம் செய்வதை பகவான் கேள்விப்பட்டார். எல்லா விதத்திலும் பூரணமானவராகிய பரமபுருஷர், பலி மகாராஜனுக்கு அருள் புரிவதற்காக அவ்விடத்தை நோக்கிச் சென்றார். தமது நடையினால், ஒவ்வொரு அடிக்கும் அவர் பூமியைக் கீழே அழுத்தினார்.

பதம் 8.18.21 : நர்மதா நதியின் வடக்குக் கரையிலுள்ள பிருகு கச்சம் எனுமிடத்தில், யாகம் செய்வதில் ஈடுபட்டுள்ள வேளையில், வாமனதேவர், அருகில் உதயமாகும் சூரியனைப் போல் அங்கு காட்சியளிப்பதை, பிருகு வம்சத்தைச் சேர்ந்த பிராமண வேதியர்கள் கண்டனர்.

பதம் 8.18.22 : ராஜனே, வாமனதேவரின் பிரகாசமான தேஜஸின் முன், வேதியர்கள், பலி மகாராஜன் மற்றும் சபையிலுள்ளோர் ஆகிய அனைவரும் தங்களின் சொந்த தேஜஸைப் பறிகொடுத்தனர். இவ்வாறாக யாகச் சடங்கை காண்பதற்காக சூரியதேவன், சனத் குமாரர் அல்லது அக்னி தேவனே நேரில் வந்திருக்கிறாரோ என்று அவர்கள் ஒருவரையொருவர் விசாரிக்கத் துவங்கினர்.

பதம் 8.18.23 : பிருகு வம்சத்தைச் சேர்ந்த வேதியர்களும், அவர்களது சீடர்களும் பலவிதமாக பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கும் வேளையில், பரமபுருஷ பகவானாகிய வாமனதேவர், தமது கரங்களில் தடி, குடை மற்றும் நீரால் நிரப்பப்பட்ட ஒரு கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியவாறு, அஸ்வமேத யாக சாலைக்குள் புகுந்தார்.

பதங்கள் 8.18.24 – 8.18.25 : ஒரு வைக்கோல் கச்சை, ஒரு பூணூல், மான் தோலாலான மேலாடை மற்றும் ஜடா முடி ஆகியவற்றுடன் ஒரு பிராமண சிறுவனாகத் தோன்றிய பகவான் வாமனதேவர், யாக சாலைக்குள் நுழைந்தார். அவரது ஒளி மிகுந்த பிரகாசம், வேதியர்கள் மற்றும் அவர்களது சீடர்களின் பொலிவை மங்கச் செய்தது. இவ்வாறாக அவர்கள் தங்களுடைய ஆசனங்களிலிருந்து எழுந்து, பகவானை வணங்கி, அவரை முறையாக வரவேற்றனர்.

பதம் 8.18.26 : பகவான் வாமனதேவரின் அழகிய அங்கங்கள், அவரது முழு உடலின் அழகிற்குச் சமமான அழகைச் சேர்த்தன. அதைக் கண்டு ஆனந்தமடைந்த பலி மகாராஜன், மிகவும் திருப்தியுடன் அவருக்கு ஓர் ஆசனத்தை அளித்தார்.

பதம் 8.18.27 : இவ்வாறாக, முக்தியடைந்த ஆத்மாக்களுக்கு எப்பொழுதும் அழகாக இருப்பவரான முழுமுதற் கடவுளுக்கு முறையான வரவேற்பளித்த பலி மகாராஜன், அவரது தாமரைப் பாதங்களைக் கழுவி அவரை வழிபட்டார்.

பதம் 8.18.28 : தேவர்களில் சிறந்தவரும், தமது நெற்றியில் பிறையைச் சூடியவருமான சிவபெருமான், விஷ்ணுவின் திருப்பாத விரலிலிருந்து ஊற்றெடுக்கும் கங்கை நீரைத் தமது தலை மீது பெரும் பக்தியுடன் ஏற்றுக் கொள்கிறார். மதக் கொள்கைகளை அறிந்திருந்த பலி மகாராஜன் இதையும் அறிந்திருந்தார். இதன் விளைவாக, சிவபெருமானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி, பகவானது தாமரைப் பாதங்களைக் கழுவிய நீரை அவரும் தமது தலைமீது தரித்துக் கொண்டார்.

பதம் 8.18.29 : பலி மகாராஜன் பிறகு வாமனதேவரை நோக்கிக் கூறினார். பிராமணரே, எனது இதயபூர்வமான வரவேற்பையும், மரியாதைக்குரிய வணக்கங்களையும் உமக்கு நான் அளிக்கிறேன். உமக்கு எங்களால் ஆகவேண்டியதை தயவுகூர்ந்து கூறுவீராக. சிறந்த பிராமண ரிஷிகளின் தவ சொரூபியாக உம்மை நாங்கள் கருதுகிறோம்.

பதம் 8.18.30 : எம்பெருமானே, எமது இல்லத்தில் நீர் அன்போடு எழுந்தருளியிருப்பதால், எனது முன்னோர்கள் அனைவரும் திருப்தியடைகின்றனர். எங்களது குடும்பமும், வம்சம் முழுவதும் புனிதமடைந்துள்ளது. மேலும் உமது வருகையினால், நாங்கள் இயற்றும் யாகமும் இப்போது நிறைவு பெறுகிறது.

பதம் 8.18.31 : பிராமண புத்திரரே, சாஸ்திர விதிகளுக்கேற்ப யாகத் தீ இன்று கொழுந்துவிட்டெரிகின்றது. மேலும் உமது தாமரைப் பாதங்களைக் கழுவிய நீரால், எனது வாழ்வின் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுபட்டுள்ளேன். எம்பெருமானே, உமது சிறிய தாமரைப் பாதங்கள் தொட்டதால் உலகம் முழுவதுமே புனிதமடைந்தது.

பதம் 8.18.32 : பிராமண புத்திரரே, என்னிடம் எதையோ கேட்கும் நோக்கத்துடன் நீர் இங்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே எதை வேண்டுமானாலும் என்னிடமிருந்து நீர் பெற்றுக் கொள்ளலாம். வழிபாட்டுக்குரியவர்களில் மிகச் சிறந்தவர் தாங்கள். என்னிடமிருந்து ஒரு பசுவையோ, தங்கத்தையோ, தேவையான பொருட்களைக் கொண்டதொரு வீட்டையோ, சுவையான உணவு மற்றும் பானத்தையோ, உமது மனைவியாக ஒரு பிராமண புத்திரியையோ, செல்வம் கொழிக்கும் கிராமங்களையோ, குதிரைகளையோ, யானைகளையோ, இரதங்களையோ அல்லது நீர் விரும்புவதையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare