அத்தியாயம் – 13
எதிர்கால மனுக்களின் வர்ணனை
பதம் 8.13.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஸ்ராத்ததேவர் எனும் பெயர் கொண்ட தற்போதைய மனு விவஸ்வானின் புத்திரராவார். இவர் சூரிய லோகத்தின் ஆளும் மூர்த்தியாக இருக்கிறார். ஸ்ராத்ததேவர் ஏழாவது மனுவாவார். இப்பொழுது அவரது புத்திரர்களைப் பற்றி நான் விவரிப்பதை தயவு செய்து கேட்பீராக.

பதங்கள் 8.13.2 – 8.13.3 : பரீட்சித்து மகாராஜனே, மனுவின் பத்து புதல்வர்களுக்கிடையில் இக்ஷ்வாகு, நபகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன் மற்றும் நாபாகன் ஆகியோரும் அடங்குவர். ஏழாவது புதல்வர் திஷ்டன் எனப்படுபவராவார். பிறகு தரூஷரும், ப்ருஷத்ரரும் வருகின்றனர். மேலும் பத்தாவது புதல்வர் வஸுமான் எனப்படுகிறார்.

பதம் 8.13.4 : அரசே, இந்த மந்வந்தரத்தில், ஆதித்தியர்கள், வஸுக்கள், ருத்ரர்கள், விஸ்வேதேவர்கள், மருத்கள், அஸ்வின் குமாரர்கள் மற்றும் ரிபுக்கள் ஆகியோர் தேவர்களாவர். அவர்களது தலைவர் (இந்திரன்) புரந்தரராவார்.

பதம் 8.13.5 : கஸ்யபர், அத்ரி, வஸிஷ்டர், விஸ்வாமித்திரர், கௌதமர், ஜமதாக்னி மற்றும் பரத்வாஜர் ஆகியோர் ஏழு ரிஷிகள் எனப்படுகின்றனர்.

பதம் 8.13.6 : இந்த மன்வந்தரத்தில், பரமபுருஷ பகவான் ஆதித்தியர்களுக்கெல்லாம் இளையவராகத் தோன்றினார். அவர் குள்ள வாமனர் எனப்படுகிறார். அவரது தந்தை கஸ்யபராவார். தாயார் அதிதியாவாள்.

பதம் 8.13.7 : நான் ஏழு மனுக்களின் நிலையைப் பற்றி சுருக்கமாக விளக்கினேன். இனி எதிர்கால மனுக்களைப் பற்றியும், பகவான் விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றியும் நான் விவரிக்கப் போகிறேன்.

பதம் 8.13.8 : ராஜனே, ஸம்க்ஞா மற்றும் சாயா எனும் பெயர் கொண்டவர்களும், விவஸ்வானின் முதல் இரு மனைவிகளுமான, விஸ்வகர்மானின் இரு புதல்விகளைப் பற்றி நான் ஏற்கனவே (ஆறாம் காண்டத்தில்) விவரித்திருக்கிறேன்.

பதம் 8.13.9 : வடவா எனும் ஒரு மூன்றாவது மனைவியும் சூரிய தேவனுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. மூன்று மனைவிகளில் ஸம்க்ஞா எனப்படும் மனைவிக்கு யமன், யமீ மற்றும் ஸ்ராத்ததேவர் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். இப்போது நான் சாயாவின் குழந்தைகளைப் பற்றி விவரிக்கப் போகிறேன்.

பதம் 8.13.10 : சாயாவுக்கு ஸாவர்ணி எனப்படும் ஒரு மகனும், தபதீ எனப்படும் ஒரு மகளும் இருந்தனர். பிற்காலத்தில் தபதீ ஸம்வரண ராஜனின் மனைவியானாள். சாயாவின் மூன்றாவது குழந்தை சனீஸ்வரன் (சனி) எனப்படுகிறார். வடவா, அஸ்வினி சகோதரர்கள் எனப்படும் இரு புத்திரர்களை ஈன்றாள்.

பதம் 8.13.11 : ராஜனே, எட்டாவது மனுவின் ஆட்சிக் காலம் வரும்போது, ஸாவர்ணி மனுவாக இருப்பார். அவரது மகன்களுக்கிடையில் நிர்மோகரும், விரஜஸ்கரும் இருப்பார்கள்.

பதம் 8.13.12 : எட்டாவது மனுவின் ஆட்சிக் காலத்தில், தேவர்களுக்கிடையில் ஸுதபர்கள், விரஜர்கள் மற்றும் அம்ருதபிரபர்கள் ஆகியோர் இருப்பார்கள். விரோசனரின் மகனான பலி மகாராஜன், தேவர்களின் அரசனான இந்திரனாக இருப்பார்.

பதம் 8.13.13 : பலி மகாராஜன் பகவான் விஷ்ணுவுக்கு மூன்றடி நிலத்தை தானமாகக் கொடுத்தார். இந்த தானத்தால் மூவுலகங்களையும் அவர் இழந்தார். பிறகு, பலி மகாராஜன் அனைத்தையும் பகவானிடம் கொடுத்து, அதனால் பகவான் விஷ்ணு திருப்தியடையும்போது, பலி மகாராஜன் வாழ்வின் பூரணத்துவத்தை அடைவார்.

பதம் 8.13.14 : முழுமுதற் கடவுள் மிகுந்த அன்பினால் பலியை அடக்கியாண்டு, சுவர்க்க லோகங்களை விடச் செல்வம் மிகுந்ததான ஸுதல் இராஜ்யத்தின் அரியாசனத்தில் அவரை அமர்த்தினார். பலி மகாராஜன் இப்போது அந்த கிரகத்தில் இந்திரனை விட அதிக சுகபோகமான நிலையில் வாழ்கிறார்.

பதங்கள் 8.13.15 – 8.13.16 : ராஜனே, எட்டாவது மன்வந்தரத்தின் போது, மகா புருஷர்களாகிய காலவர், தீப்திமான், பரசுராமர், அஸ்வத்தாமன், கிருபாசார்யர், ரிஷ்யஸ்ருங்க மற்றும் எமது தந்தையும், நாராயணரின் அவதாரமுமாகிய வியாசதேவர் ஆகியோர் ஏழு ரிஷிகளாக இருப்பார்கள். இப்போதைக்கு அவர்களனைவரும் அவரவர் ஆசிரமங்களில் வாழ்கின்றனர்.

பதம் 8.13.17 : எட்டாவது மன்வந்தரத்தில், முழுமுதற் கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவரான ஸார்வபௌமராகப் பிறப்பார். தேவகுஹ்யர் அவரது தந்தையாக இருப்பார். ஸரஸ்வதீ அவரது தாயாக இருப்பாள். அவர் புரந்தரரிடம் (இந்திரன்) இருந்து இராஜ்யத்தைப் பறித்து அதை பலி மகாராஜனிடம் ஒப்படைப்பார்.

பதம் 8.13.18 : ராஜனே, வருணனுக்குப் பிறக்கும் தக்ஷ-ஸாவார்ணி ஒன்பதாவது மனுவாக இருப்பார். அவரது மகன்களுள் பூதகேது மற்றும் தீபகேது ஆகியோரும் அடங்குவர்.

பதம் 8.13.19 : இந்த ஒன்பதாவது மன்வந்தரத்தில், தேவர்களுக்கிடையில் பாரர்களும், மரீசிகர்பர்களும் அடங்குவர். சுவர்க்க ராஜனான இந்திரன் அத்புதன் என்று பெயரிடப்படுவார். தியுதிமான், ஏழு ரிஷிகளுள் ஒருவராக இருப்பார்.

பதம் 8.13.20 : பரமபுருஷ பகவானின் அம்ச அவதாரமாகிய ரிஷப தேவர், ஆயுஷ்மான் எனும் தந்தைக்கும், அம்புதாரா எனும் தாய்க்கும் பிறப்பார். அவர் அத்புதன் எனும் பெயர் கொண்ட இந்திரனுக்கு, மூவுலக ஐசுவரியங்களையும் அனுபவிக்கும் அதிகாரத்தை அளிப்பார்.

பதம் 8.13.21 : பிரஹ்ம-ஸாவர்ணி எனப்படும் உபஸ்லோகரின் புதல்வர் பத்தாவது மனுவாக இருப்பார். அவரது மகன்களுள் பூரிஷேணரும் அடங்குவார். மேலும் ஹவிஷ்மான் முதலான பிராமணர்கள் ஏழு ரிஷிகளாக இருப்பார்கள்.

பதம் 8.13.22 : ஹவிஷ்மான், சுக்ருதர், ஸத்யர், ஜயன், மூர்த்தி ஆகியோரும், மற்றவர்களும் ஏழு ரிஷிகளாக இருப்பர். தேவர்களுள் சுவாஸனர்களும், விருத்தர்களும் அடங்குவர். மேலும் சம்பு அவர்களுடைய அரசனான இந்திரனாக இருப்பார்.

பதம் 8.13.23 : விஸ்வசிரஷ்டரின் வீட்டில், பரமபுருஷர், பகவானின் ஒரு அம்சமாக விஷூசியின் கருவிலிருந்து தோன்றுவார். இந்த அவதாரம் ஷ்வக்ஷேனர் எனப்படுவார். இவர் சம்புவுடன் சினேகம் கொள்வார்.

பதம் 8.13.24 : பதினொன்றாவது மன்வந்தரத்தில், தர்ம-ஸாவர்ணி மனுவாக இருப்பார். இவர் ஆன்மீக அறிவில் மிகவும் புலமை வாய்ந்தவராக இருப்பார். இவரிடமிருந்து ஸத்யதர்மர் முதலான பத்து மகன்கள் வருவார்கள்.

பதம் 8.13.25 : விஹங்கமர்கள், காமகமர்கள், நிர்வாணருசிகள் மற்றும் பிற தேவர்களாக இருப்பர். வைத்ருதர், தேவர்களின் ராஜனான இந்திரனாக இருப்பார். மேலும் ஏழு ரிஷிகள் அருணரை தலைமையாகக் கொண்டிருப்பர்.

பதம் 8.13.26 : ஆர்யகரின் புதல்வரான தர்மஸேது பரமபுருஷ பகவானின் ஓர் அம்சமாவார். அவர் ஆர்யகரின் மனைவியான வைத்ருதாவின் கருவில் தோன்றி மூவுலகங்களையும் ஆள்வார்.

பதம் 8.13.27 : ராஜனே, பன்னிரண்டாவது மனு ருத்ர-ஸாவர்ணி என்று பெயரிடப்படுவார். தேவவான், உபதேவர் மற்றும் தேவஸ்ரேஷ்டர் ஆகியோர் அவரது புத்திரர்களுள் அடங்குவர்.

பதம் 8.13.28 : இந்த மன்வந்தரத்தில், ரிததாமர் என்பது இந்திரனின் பெயராக இருக்கும். மேலும் தேவர்கள் ஹரிதர்களை தலைமையாகக் கொண்டிருப்பர். ரிஷிகளுக்கிடையில் தபோமூர்த்தி, தபஸ்வீ மற்றும் ஆக்னீத்ரகர் ஆகியோரும் அடங்குவர்.

பதம் 8.13.29 : சுன்ருதா எனும் தாயிலிருந்தும், ஸத்யஸஹா எனும் தந்தையிலிருந்தும் ஸ்வதாமர் வருவார். இவர் முழுமுதற் கடவுளின் ஓர் அம்சமாவார். அந்த மன்வந்தரத்தை இவர் ஆட்சி புரிவார்.

பதம் 8.13.30 : பதின்-மூன்றாவது மனு தேவ-ஸாவர்ணி என்று பெயரிடப்படுவார். ஆன்மீக அறிவில் அவர் தேர்ச்சி பெற்றவராக விளங்குவார். அவரது புத்திரர்களுள் சித்ரஸேனரும், விசித்ரரும் அடங்குவர்.

பதம் 8.13.31 : பதின்மூன்றாம் மன்வந்தரத்தில், தேவர்களுள் சுகர்மர்களும், சுத்ராமர்களும் அடங்குவர். சுவர்க்க ராஜனாக திவஸ்பதி இருப்பார். நிர்மோகரும், தத்வதர்சரும் ஏழு ரிஷிகளுள் அடங்குவர்.

பதம் 8.13.32 : யோகேஸ்வரர் எனப்படும் தேவஹாத்ரரின் புத்திரர் பரமபுருஷ பகவானின் ஓர் அம்சமாகத் தோன்றுவார். ப்ருஹதீ என்பது அவரது தாயாரின் பெயராக இருக்கும். அவர் திவஸ்பதியின் நன்மைக்காக செயலாற்றுவார்.

பதம் 8.13.33 : இந்ர-ஸாவர்ணி என்பது பதினான்காவது மனுவின் பெயராக இருக்கும். உரு, கம்பீரர் மற்றும் புதர் ஆகியோரைப் போன்ற மகன்கள் அவருக்கு இருப்பார்கள்.

பதம் 8.13.34 : பவித்ரர்களும், சாக்ஷுஷர்களும் தேவர்களுக்கிடையில் இருப்பர், சுசி, சுவர்க்க ராஜனான இந்திரனாக இருப்பார். பெரும் தபஸ்விகளான அக்னி, பாஹு, சுசி, சுத்தர், மாகதர் ஆகியோரும், மற்றவர்களும் ஏழு ரிஷிகளாக இருப்பர்.

பதம் 8.13.35 : பரீட்சித்து மகாராஜனே, பதினான்காவது மன்வந்தரத்தில் பரமபுருஷ பகவான் விதானாவின் கருவில் தோன்றுவார். மேலும் ஸத்ராயணர் என்பது அவரது தந்தையின் பெயராக இருக்கும். இந்த அவதாரம் பிருஹத்பானு என்று போற்றப்படுவார். அவர் ஆன்மீகச் செயல்களை கவனித்து நடத்துவார்.

பதம் 8.13.36 : ராஜனே, கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களில் தோன்றும் பதினான்கு மனுக்களைப் பற்றி இப்போது உமக்கு நான் விளக்கினேன். இம் மனுக்களின் மொத்த ஆட்சிக்காலம் ஆயிரம் சதுர் யுகங்களாகும். இது ஒரு கல்பம், அல்லது பிரம்ம தேவரின் ஒரு நாள் என்று அழைக்கப்படுகிறது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare