அத்தியாயம் – 11
தேவேந்திரன் அசுரர்களை அழித்தல்
பதம் 8.11.1
ஸ்ரீ-சுக உவாச
அதோ ஸுரா: ப்ரத்யுபலப்த-சேதஸ:
பரஸ்ய பும்ஸ: பரயானுகம்பயா
ஜக்னுர் ப்ருசம் சக்ர-ஸமீரணாதயஸ்
தாம்ஸ் தான் ரணே யைர் அபிஸம்ஹதா: புரா

ஸ்ரீ-சுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அதோ—அதன்பிறகு; ஸுரா:—எல்லா தேவர்களும்; ப்ரத்யுபலப்த-சேதஸ:—அவர்களின் உணர்வைப் புதுப்பித்ததன் மூலமாக மீண்டும் புத்துணர்வு ஊட்டப்பட்டு; பரஸ்ய—பரமனின்; பும்ஸ:—முழுமுதற் கடவுளின்; பரயா—பரம; அநுகம்பயா—கருணையால்; ஜக்னு:—அடிக்கத் துவங்கினர்; ப்ருசம்—மீண்டும் மீண்டும்; சக்த—இந்திரன்; ஸமீரண—வாயு; ஆதய:—முதலானவர்கள்; தான் தான்—அந்த அசுரர்களுக்கு; ரணே—போரில்; யை:—எவரால்; அபிஸம்ஹதா:—அவர்கள் அடிக்கப்பட்டனர்; புரா—முன்பு.

சுகதேவ கோஸ்வாமி கூறினார். அதன்பிறகு, முழுமுதற் கடவுளான ஹரியின் பரம கருணையால், இந்திரன் மற்றும் வாயு முதலான தேவர்கள் அனைவரும் உயிர்ப்பிக்கப்பட்டனர். புத்துணர்வு பெற்ற தேவர்கள், ஏற்கனவே தங்களைத் தோற்கடித்த அதே அசுரர்களைக் கடுமையாக அடிக்க ஆரம்பித்தனர்.

பதம் 8.11.2
வைரோசனாய ஸம்ரப்தோ பகவான் பாக-சாஸன:
உதயச்சத் யதா வஜ்ரம் ப்ரஜா ஹா ஹேதி சுக்ருசு:

வைரோசனாய—பலி மகாராஜனை (அவரைக் கொல்ல); ஸம்ரப்த:—மிகவும் கோபம் கொண்டு; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; பாக-சாஸன:—இந்திரன்; உதயச்சத்—தனது கையிலெடுத்து; யதா—அச்சமயத்தில்; வஜ்ரம்—வஜ்ராயுதத்தை; ப்ரஜா:—அசுரர்கள் அனைவரும்; ஹாஹா—ஐயோ, ஐயோ; இதி—இவ்வாறாக; சுக்ருசு:—ஓசையெழுப்பத் துவங்கினர்.

மிகவும் சக்தி வாய்ந்தவரான இந்திரன் கோபமடைந்து பலி மகாராஜனைக் கொல்வதற்காக, தனது வஜ்ராயுதத்தைக் கையிலெடுத்த போது, அசுரர்கள் “ஐயோ, ஐயோ!” என்று புலம்பினர்.

பதம் 8.11.3
வஜ்ர-பாணிஸ் தம் ஆஹேதம் திரஸ்க்ருத்ய புர:-ஸ்திதம்
மனஸ்வினம் ஸுஸம்பன்னம் விசரந்தம் மஹா-ம்ருதே

வஜ்ர-பாணி:—வஜ்ராயுதத்தை எப்பொழுதும் கையில் எடுத்துச் செல்பவரான இந்திரன்; தம்—பலி மகாராஜனிடம்; ஆஹ:—கூறினார்; இதம்—இவ்விதமாக; திரஸ்க்ருத்ய—அவரைக் கண்டித்து; புர:-ஸ்திதம்—அவர் முன் நின்றவாறு; மனஸ்வினம்:—மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும்; ஸு-ஸம்பன்னம்—யுத்தம் செய்வதற்கான ஆயுதங்களால் நன்கு பொருத்தப்பட்டு; விசரந்தம்—அசையும்; மஹா-ம்ருதே—பெரும் போர்க்களத்தில்.

யுத்தத்திற்கான ஆயுதங்களால் நன்கு பொருத்தப்பட்டவராய், பலி மகாராஜன் நிதானமாகவும், பொறுமையுடனும், பெரும் யுத்தகளத்தில் இந்திரனின் முன் சென்றார். எப்பொழுதும் தனது கரத்தில் வஜ்ராயுதத்தை வைத்திருப்பவரான தேவேந்திரன் பலி மகாராஜனைப் பின்வருமாறு திட்டினார்.

பதம் 8.11.4
நடவன் மூட மாயாபிர் மாயேசான் நோ ஜிகீக்ஷஸி
ஜித்வா பாலான் நிபத்தாக்ஷான் நடோ ஹரதி தத்-தனம்

நட-வத்—ஒரு மோசக்காரனை அல்லது அயோக்கியனைப் போல்; மூட—அடே அயோக்கியனே; மாயாபி:—மாயாஜாலம் செய்வது; மாயா-ஈசான்—அத்தகைய மாயா ஜாலத் தோற்றங்களை எல்லாம் கட்டுப்படுத்தக் கூடியவர்களான தேவர்களிடம்; ந:—எங்களிடம்; ஜிகீஷஸி—நீ வெற்றிபெற முயற்சிக்கிறாய்; ஜித்வா—வென்று; பாலான்—சிறு குழந்தைகளை; நிபத்த-அக்ஷான்—கண்களைக் கட்டுவதன் மூலமாக; நட:—மோசக்காரன்; ஹரதி—அபகரித்துக் கொள்கிறான்; தத்-தனம்—ஒரு குழந்தையிடம் உள்ள சொத்தை.

இந்திரன் கூறினார்: அடே அயோக்கியனே, சில சமயங்களில் மோசக்காரனொருவன் ஒரு குழந்தையின் கண்களைக் கட்டிவிட்டு அதன் உடைமைகளை அபகரித்துக் கொள்வதைப்போல், இத்தகைய மாய சக்திகள் அனைத்திற்கும் நாங்கள் எஜமானர்கள் என்பதை நீ அறிந்திருந்தும், சில மாய சக்திகளைக் கூட்டி நீ எங்களை வெற்றி கொள்ள முயற்சிக்கிறாய்.

பதம் 8.11.5
ஆருருக்ஷந்தி மாயாபிர் உத்ஸிஸ்ருப்ஸந்தி யே திவம்
தான் தஸ்யூன் விதுனோமி அக்ஞான் பூர்வஸ்மாச் ச பதாத் அத:

ஆருருக்ஷந்தி—உயர் கிரக அமைப்புகளுக்குச் செல்லும் ஆசை கொண்டவர்கள்; மாயாபி:—பெயரளவேயான யோக சக்தியாலும், பௌதிக விஞ்ஞான முன்னேற்றத்தாலும்; உத்ஸிஸ்ருப்ஸந்தி—அல்லது அத்தகைய பொய்யான முயற்சிகளால் முக்தியடைய விரும்பும்; யே—அத்தகையவர்கள்; திவம்—சுவர்க்க லோகம் எனப்படும் உயர்கிரக அமைப்பிற்கு; தான்—அத்தகைய அயோக்கியர்களும், துஷ்டர்களும்; தஸ்யூன்—இத்தகைய திருடர்கள்; விதுநோமி—நான் வலுக்கட்டாயமாக கீழே அனுப்பிவிடுவேன்; அக்ஞான்—அயோக்கியர்கள்; பூர்வஸ்மாத்—முந்திய; ச—கூட; பதாத்—நிலையிலிருந்து; அத:—கீழ்நோக்கி.

யோக சக்தியாலோ, அல்லது இயந்திரங்களின் மூலமாகவோ, உயர்கிரக அமைப்பிற்கு ஏற்றம் பெற விரும்பும் மூடர்களும், அயோக்கியர்களும், அல்லது உயர்கிரகங்களையும் கடந்துசென்று ஆன்மீக உலகையோ அல்லது முக்தியையோ அடைய விரும்புபவர்களை, நான் பிரபஞ்சத்தின் மிகத்தாழ்ந்த பிரதேசத்திற்கு அனுப்பிவிடுவேன்.

பதம் 8.11.6
ஸோ ‘ஹம் துர்மாயினஸ் தே ‘த்ய வஜ்ரேண சத-பர்வணா
சிரோ ஹரிக்ஷ்யே மந்தாத்மன் கடஸ்வ ஞாதிபி: ஸஹ

ஸ:—நான் சக்தி வாய்ந்த அதே நபர்தான்; அஹம்—நான்; துர்மாயின:—மாயைகளினால் மிகவும் அதிகமான மாயாஜாலங்களைச் செய்யக்கூடிய உனது; தே—உன்னுடைய; அத்யா—இன்று; வஜ்ரேண—வஜ்ராயுதத்தினால்; சத-பர்வணா—நூற்றுக்கணக்கான கூரிய முனைகளைக் கொண்ட; சிர:—தலையை; ஹரிஷ்யே—நான் துண்டித்துவிடுவேன்; மந்த-ஆத்மன்—அறிவு பற்றாக்குறையாக உள்ளவனே; கடஸ்வ—இப்போர்க்களத்தில் உயிர் வாழ முயற்சி செய்; ஞாதிபி: ஸஹ—உன்னுடைய உறவினர்களுடனும், உதவியாளர்களுடனும்.

இன்று நூற்றுக்கணக்கான கூரிய முனைகளைக் கொண்ட எனது வஜ்ராயுதத்தினால், அதே சக்திவாய்ந்த நபராகிய நான், உனது உடலிலிருந்து உன் தலையைத் துண்டித்து விடுவேன். இவ்வளவு அதிகமான மாயாஜாலங்களை உன்னால் செய்ய முடிந்தபோதிலும், உனக்கு அறிவு குறைவாகவே உள்ளது. இப்போது, உனது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இப்போர்க்களத்தில் உயிர்வாழ முயற்சிசெய்.

பதம் 8.11.7
ஸ்ரீ-பலிர் உவாச
ஸங்ராமே வர்தமானானாம் கால-சோதித-கர்மணாம்
கீர்திர் ஜயோ ‘ஜயோ ம்ருத்யு: ஸர்வேஷாம் ஸ்யுர் அனுக்ரமாத்

ஸ்ரீ-பலி: உவாச—பலி மகாராஜன் கூறினார்; ஸங்ராமே—போர்க்களத்தில்; வர்தமானானாம்—இங்கு கூடியுள்ள அனைவரின்; கால-சோதித—காலத்தால் உந்தப்பட்டு; கர்மணாம்—போரிலோ அல்லது மற்ற செயல்களிலோ ஈடுபட்டு உள்ளவர்களுக்கு; கீர்த்தி:—புகழ்; ஜய:—வெற்றி; அஜய:—தோல்வி; ம்ருத்யு:—மரணம்; ஸர்வேஷாம்—அவர்கள் அனைவரின்; ஸ்யு:—செய்யப்பட வேண்டும்; அனுக்ரமாத்—ஒன்றன்பின் ஒன்றாக.

பலி மகாராஜன் கூறினார்: இப்போர்க்களத்தில் இடம் பெற்றவர்கள் அனைவரும் நிச்சயமாக நித்திய காலத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். அவர்களுடைய விதிக்கப்பட்ட செயல்களுக்கேற்ப, அவர்கள் புகழ், வெற்றி, தோல்வி மற்றும் மரணம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக அடைய வேண்டியவர்கள் ஆவர்.

பதம் 8.11.8
தத் இதம் கால-ரசனம் ஜகத் பஸ்யந்தி ஸூரய:
ந ஹ்ருக்ஷ்யந்தி ந சோசந்தி தத்ர யூயம் அபண்டிதா:

தத்—ஆகவே; இதம்—இந்த முழு ஜட உலகமும்; கால-ரசனம்—நித்திய காலத்தினால்தான் அசைகின்றது; ஜகத்—முன்னேறிச் செல்கிறது (இந்த முழு பிரபஞ்சமும்); பஸ்யந்தி—காண்பவர்; ஸூரய:—புத்திசாலியாக இருந்து உண்மையை ஒப்புக் கொள்பவர்கள்; ந—இல்லை; ஹ்ருஷ்யந்தி—மகிழ்ச்சியடைவது; ந—அல்லது; சோசந்தி—ஆக்கப்படுவதோ; தத்ர—இத்தகைய; யூயம்—தேவர்களாகிய நீங்கள் அனைவரும்; அபண்டிதா:—சிறந்த பண்டிதர்களல்ல (நித்திய காலத்தின் கீழ் நீங்கள் செயற்படுகிறீர்கள் என்பதை மறந்ததால்).

நிஜ உண்மையை அறிந்தவர்கள், காலத்தின் போக்கை அறிந்து, வேறுபட்ட சூழ்நிலைகளுக்காக இன்புறுவதோ அல்லது வருந்துவதோ இல்லை. எனவே, உனது வெற்றியைக் குறித்து நீ மகிழ்ச்சி அடைவதால், உன்னைச் சிறந்த அறிவாளியல்ல என்றுதான் நான் கருதவேண்டும்.

பதம் 8.11.9
ந வயம் மன்யமானானாம் ஆத்மானம் தத்ர ஸாதனம்
கிரோ வ: ஸாது-சோச்யானாம் க்ருஹ்ணீமோ மர்ம-தாடனா:

ந—இல்லை; வயம்—நாங்கள்; மன்யமானானாம்—கருதுபவர்கள்; ஆத்மானாம்—ஆத்மாவை; தத்ர—வெற்றி அல்லது தோல்வியில்; ஸாதனம்—காரணம்; கிர:—சொற்களை; வ:—உனது; ஸாது-சோச்யானாம்—சான்றோர்களால் அனுதாபப்பட வேண்டியவர்கள்; க்ருஹ்ணீம—ஏற்க; மர்ம-தாடனா:—இதயத்தை வருத்துகின்ற.

உங்களுடைய புகழுக்கும், வெற்றிக்கும் நீங்களே காரணம் என்று தேவர்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களுடைய அறியாமையைக் கண்டு சான்றோர்கள் அனுதாபப்படுகின்றனர். ஆகவே, உங்களுடைய வார்த்தைகள் இதயத்தைத் துன்புறுத்துவதாக இருப்பினும், அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

பதம் 8.11.10
ஸ்ரீ-சுக உவாச
இதி ஆக்ஷிப்ய விபும் வீரோ நாராசைர் வீர-மர்தன:
ஆகர்ண-பூர்ணைர் அஹனத் ஆக்ஷேபைர் ஆஹ தம் புன:

ஸ்ரீ-சுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; ஆக்ஷிப்ய—கடிந்து கொண்டு; விபும்—இந்திரனை; வீர:—துணிவு கொண்டவரான பலி மகாராஜன்; நாராசை—நாராசம் எனப்படும் அம்புகளால்; வீர-மர்தன:—சிறந்த வீரர்களையும் வெல்லக் கூடியவரான பலி மகாராஜன்; ஆகர்ண-பூர்ணை:—அவரது செவிவரை இழுக்கப்பட்டு; அஹனத்—தாக்கினார்; ஆக்ஷேபை:—கண்டிப்பு வார்த்தைகளால்; ஆஹ—கூறினார்; தம்—அவரை; புன:—மீண்டும்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக சுவர்க்க ராஜனான இந்திரனை கூரிய வார்த்தைகளால் திட்டிய பின், வேறெந்த வீரனையும் வெல்லக் கூடியவரான பலி மகாராஜன், நாராசம் எனப்படும் அம்புகளைத் தனது செவிப்பக்கமாக இழுத்தார். பிறகு இந்த அம்புகளால் இந்திரனைத் தாக்கினார். அதன்பிறகு இந்திரனை அவர் மீண்டும் கடினமான வார்த்தைகளால் கண்டித்தார்.

பதம் 8.11.11
ஏவம் நிராக்ருதோ தேவோ வைரிணா தத்ய-வாதினா
நாம்ருஷ்யத் தத்-அதிக்ஷேபம் தோத்ராஹத இவ த்விப:

ஏவம்—இவ்வாறாக; நிராக்ருத:—வெற்றி கொள்ளப்பட்டு; தேவ:—இந்திர ராஜன்; வைரிணா—அவரது எதிரியால்; தத்ய-வாதினா—உண்மையைப் பேசும் தகுதி கொண்டவரான; ந—இல்லை; அம்ருஷ்யத்—வருந்தினார்; தத்—அவரது (பலி); அதிக்ஷேபம்—தண்டனை; தோத்ர—அங்குசத்தால்; ஆஹத:—அடிக்கப்பட்ட; இவ—அதைப்போலவே; த்விப:—ஒரு யானை.

பலி மகாராஜனின் கண்டனங்கள் உண்மையானவை என்பதால், யானைப்பாகனின் அங்குசத்தால் அடிக்கப்பட்ட யானையொன்று கிளர்ச்சியடையாமல் இருப்பது போலவே, தேவேந்திரனும் கொஞ்சங்கூட வருத்தப்படவில்லை.

பதம் 8.11.12
ப்ராஹரத் குலிசம் தஸ்மா அமோகம் பர-மர்தன:
ஸயானோ ஞயபதத் பூமௌ சின்ன—பக்ஷ இவாசல:

ப்ராஹரத்—தண்டித்த போது; குலிசம்—வஜ்ராயுதக் கோலை; தஸ்மை—அவரிடம் (பலி மகாராஜன்); அமோகம்—தவறாத; பர-மர்தன:—எதிரியை வெல்லுவதில் நிபுணரான இந்திரன்; ஸ-யான:—அவரது விமானத்துடன்; ன்யபதத்—வீழ்ந்தார்; பூமௌ—பூமியின் மீது; சின்ன-பக்ஷ:—இறக்கைகள் பறித்துக் கொள்ளப்பட்ட; இவ—போன்று; அசல:—ஒரு மலை.

எதிரியை வெல்பவரான இந்திரன், பலி மகாராஜனைக் கொல்லும் நோக்கத்துடன் குறிதவறாத தமது வஜ்ராயுதக் கோலை அவரை நோக்கிப் பிரயோகித்தார். பலி மகாராஜனும் இறக்கைகள் துண்டிக்கப்பட்ட ஒரு மலையைப் போல், அவரது விமானத்துடன் தரையில் வீழ்ந்தார்.

பதம் 8.11.13
ஸகாயம் பதிதம் த்ருஷ்ட்வா ஜம்போ பலி-ஸகா: ஸுஹ்ருத்
அப்யயாத் ஸௌஹ்ருதம் ஸக்யுர் ஹதஸ்யாபி ஸமாசரன்

ஸகாயம்—அவனது நெருங்கிய நண்பன்; பதிதம்—விழுந்து விட்டதை; த்ருஷ்ட்வா—கண்ட பின்; ஜம்ப:—ஜம்பன் எனும் அசுரன்; பலி-ஸக:—பலி மகாராஜனின் மிக நெருங்கிய ஒரு நண்பனும்; ஸுஹ்ருத்—என்றும் அவர் நலத்தில் அக்கறை கொண்டவனுமான; அப்யயாத்—அங்கு தோன்றினான்; ஸௌஹ்ருதம்—மிகவும் கருணை கொண்ட நட்பு; ஸக்யு:—அவனது நண்பனின்; ஹதஸ்ய—காயமடைந்து விழுந்து கிடக்கும்; அபி—என்றாலும்; ஸமாசரன்—சிநேகமான கடமைகளை நிறைவேற்றுவதற்காகவே.

தனது நண்பனான பலி விழுந்துவிட்டதை அசுரனான ஜம்பாசுரன் கண்டபோது பலிமகாராஜனுக்குச் சினேகமான முறையில் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்திரனின் முன் தோன்றினான்.

பதம் 8.11.14
ஸ ஸிம்ஹ-வாஹ ஆஸாத்ய கதாம் உத்யம்ய ரம்ஹஸா
ஜத்ராவ் அதாடயச் சக்ரம் கஜம் சா ஸுமஹா-பல:

ஸ:—ஜம்பாசுரன்; ஸிம்ஹ-வாஹ:—ஒரு சிங்கத்தால் தூக்கிச் செல்லப்பட்டு; ஆஸாத்ய—இந்திர தேவனின் முன் வந்து; கதாம்—அவனது கதையை; உத்யம்ய—எடுத்து; ரம்ஹஸா—பெரும் பலத்துடன்; ஜத்ரௌ—கழுத்துக்கு அடியில்; அதாடயத்—அடித்தான்; சக்ரம்—இந்திரனை; கஜம் சா—மற்றும் அவரது யானையையும்; ஸுமஹா-பல:—மிகவும் சக்திவாய்ந்த ஜம்பாசுரன்.

ஒரு சிங்கத்தால் தூக்கிச் செல்லப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்தவனான ஜம்பாசுரன் இந்திரனை அணுகித் தனது கதையால் பெரும் பலத்துடன் அவரது தோளில் அடித்தான். இந்திரனின் யானையையும் அவன் தாக்கினான்.

பதம் 8.11.15
கதா-ப்ரஹார-வ்யதிதோ ப்ஹ்ருசம் விஹ்வலிதோ கஜ:
ஜானுப்யாம் தரணீம் ஸ்ப்ருஷ்ட்வா கஸ்மலம் பரமம் யயௌ

சுதா-ப்ரஹார-வ்யதித:—ஜம்பாஸுரனின் கதையால் அடிப்பட்டதால் வருத்தமடைந்து; ப்ஹ்ருசம்—மிகவும்; விஹ்வலித:—குழப்பமடைந்தது: கஜ:—அந்த யானை; ஜானுப்யாம்—அதன் இரு முழங்கால்கள்; தரணீம்—பூமியில்; ஸ்ப்ருஷ்ட்வா—தொட; கஸ்மலம்—உணர்வற்று; பரமம்—முடிவான; யயௌ—புகுந்தது (நிலையடைந்தது).

இந்திரனின் யானை ஜம்பாசுரனின் கதையால் அடிபட்டு, குழப்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆளானது. இவ்வாறாக அதன் முழங்கால்கள் பூமியைத் தொட அது உணர்வற்று விழுந்தது.

பதம் 8.11.16
ததோ ரதோ மாதலினா ஹரிபிர் தச-சதைர் வ்ருத:
ஆனீதோ த்விபம் உத்ஸ்ருஜ்ய ரதம் ஆருருஹே விபு:

தத:—அதன்பிறகு; ரத:—இரதம்; மாதலினா—மாதலி எனும் அவரது சாரதியால்; ஹரிபி:—குதிரைகளுடன்; தச-சதை:—பத்து நூறு (ஆயிரம்); வ்ருத:—பூட்டப்பட்ட; ஆனீத:—கொண்டு வரப்பட்டு; த்விபம்—யானையை; உத்ஸ்ருஜ்ய—ஒருபுறம் விட்டுவிட்டு; ரதம்—இரதத்தில்; ஆருருஹே—ஏறிக்கொண்டார்; விபு:—பெரும் வீரரான இந்திரன்.

அதன்பிறகு, மாதலி எனும் இந்திரனின் சாரதி, ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட இந்திரனின் இரதத்தைக் கொண்டு வந்தார். இந்திரன் பிறகு தனது யானையை விட்டுவிட்டு இரதத்தில் ஏறிக் கொண்டார்.

பதம் 8.11.17
தஸ்ய தத் பூஜயன் கர்ம யந்துர் தானவ-ஸத்தம:
சூலேன ஜ்வலதா தம் து ஸ்மயமானோ ‘ஹனன் ம்ருதே

தஸ்ய—மாதலியின்; தத்—அந்த சேவையை (இந்திரன் முன் இரதத்தைக் கொண்டு வந்த); பூஜயன்—பாராட்டி; கர்ம—எஜமானரிடம் செய்த அத்தகைய சேவை; யந்து:—சாரதியின்; தானவ-ஸத்-தம:—அசுரர்களின் சிறந்தவனான ஜம்பாசுரன்; சூலேன—அவனது திரிசூலத்தினால்; ஜ்வலதா—நெருப்பைக் கக்கும்; தம்—மாதலி; து—உண்மையில்; ஸ்மயமான:—புன்னகை செய்து; அஹனத்—அடித்தான்; ம்ருதே—போரில்.

அசுரரில் சிறந்தவனான ஜம்பாசுரன், மாதலியின் சேவையைப் பாராட்டும் வகையில் புன்னகை செய்த போதிலும், போரில் அவன் மாதலியை நெருப்பைக் கக்கும் திரிசூலத்தினால் தாக்கினான்.

பதம் 8.11.18
ஸேஹே ருஜம் ஸுதுர்மர்ஷாம் ஸத்வம் ஆலம்ப்ய மாதலி:
இந்ரோ ஜம்பஸ்ய ஸங்க்ருத்தோ வஜ்ரேணாபஹரச் சிர:

ஸேஹே—பொறுத்துக் கொண்டார்; ருஜம்—வலியை; ஸு-துர்மஷாம்—பொறுக்க முடியாத; ஸத்வம்—பொறுமை; ஆலம்ப்ய—புகலிடம் கொண்டு; மாதலி:—சாரதியான மாதலி; இந்ர:—இந்திரன்; ஜம்பஸ்ய—பெரிய அசுரனான ஜம்பன்; ஸங்க்ருத்த:—அவனிடம் பெருங்கோபம் கொண்டு; வஜ்ரேண—அவரது வஜ்ராயுதத்தால்; அபாஹரத்—துண்டித்தார்; சிர:—தலையை.

வலி மிகவும் கடுமையாக இருந்தபோதிலும், மாதலி அதை மிகவும் பொறுமையோடு பொறுத்துக் கொண்டார். ஆனால் இந்திரனோ, ஜம்பாசுரனிடம் பெருங்கோபம் கொண்டார். அவர் ஜம்பாசுரனை தமது வஜ்ராயுதத்தினால் தாக்கி அவன் தலையை அவனது உடலிலிருந்து துண்டித்தார்.

பதம் 8.11.19
ஜம்பம் ஸ்ருத்வா ஹதம் தஸ்ய ஞாதயோ நாரதாத் ரிஷே:
நமுசிஸ் ச பல: பாகஸ் தத்ராபேதூ த்வரான்விதா:

ஜம்பம்—ஜம்பாசுரன்; ஸ்ருத்வா—கேள்விப்பட்ட பின்; ஹதம்—கொல்லப்பட்டதை; தஸ்ய—அவனது; ஞாதய:—நண்பர்களும், உறவினர்களும்; நாரதாத்—தகவல் அறிவித்த நாரதர்; ரிஷே:—பெரும் முனிவரிடம் இருந்து; நமுசி:—நமுசி எனும் அசுரன்; ச—மற்றும்; பல:—பலன் எனும் அசுரன்; பாக:—பாகன் எனும் அசுரன்; தத்ர—அங்கு; ஆபேது:—உடனடியாக வந்து சேர்ந்தனர்; த்வரா-அன்விதா:—மிகவும் வேகத்துடன்.

நாரத முனிவர், ஜம்பாசுரன் கொல்லப்பட்டதை ஜம்பாசுரனின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவித்த போது, நமுசி, பலன் மற்றும் பாகன் எனும் மூன்று அசுரர்கள் மிகவும் வேகமாக போர்க்களத்திற்கு வந்து சேர்ந்தனர்.

பதம் 8.11.20
வசோபி: பருஷர் இந்ரம் அர்தயந்தோ ‘ஸ்ய மர்மஸு
சரைர் அவாகிரன் மேகா தாராபிர் இவ பர்வதம்

வசோபி:—கொடூரமான வார்த்தைகளால்; பருஷை:—மிகவும் முரட்டுத்தனமும், கொடூரமுமான; இந்ரம்—இந்திரனை; அர்தயந்த:—கண்டிக்கும், துளைக்கும்; அஸ்ய—இந்திரனின்; மர்மஸு—இதயத்தில்; சரை:—அம்புகளாலான; அவாகிரன்—சுற்றிலும் மூடப்பட்ட; மேகா:—மேகங்களால்; தாராபி:—பெருமழையால்; இவ—போலவே; பர்வதம்—ஒரு மலை.

இந்த அசுரர்கள் இதயத்தைத் துளைக்கும் முரட்டுத்தனமான, கொடூரமான வார்த்தைகளால் இந்திரனைத் திட்டியவாறு, பெருமழை பிரம்மாண்டமான ஒரு மலையை முழுவதும் நீராட்டுவது போல், அவரை நோக்கி அம்பு மழை பொழிந்தனர்.

பதம் 8.11.21
ஹரீன் தச-சதானி ஆஜெள ஹர்யஸ்வஸ்ய பல: சரை:
தாவத்பிர் அர்தயாம் ஆஸ யுகபல் லகு-ஹஸ்தவான்

ஹரீன்—குதிரைகளை; தச-சதானி—பத்து நூறு (ஆயிரம்); ஆஜௌ—போர்க்களத்தில்; ஹர்யஸ்வஸ்ய—இந்திரனின்; பல:—பலன் எனும் அசுரன்; சரை:—அம்புகளால்; தாவத்பி—அதிக எண்ணிக்கை கொண்டவைகளால்; அர்தயாம் ஆஸ—பெருந்துன்பத்தில் ஆழ்த்தினான்; யுகபத்—ஒரே சமயத்தில்; லகு-ஹஸ்தவஆன்—விரைவாகக் கையாண்டு.

போர்க்களத்தின் சூழ்நிலையை பலன் எனும் அசுரன், விரைவாக சமாளித்துக் கொண்டான். பின் இந்திரனின் ஆயிரம் குதிரைகளையும் சம எண்ணிக்கைக் கொண்ட அம்புகளால் துளைத்து, அவற்றைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தினார்.

பதம் 8.11.22
சதாப்யாம் மாதலிம் பாகோ ரதம் ஸாவயவம் ப்ருதக்
ஸக்ருத் ஸந்தான-மோக்ஷேண தத் அத்புதம் அபூத் ரணே

சதாப்யாம்—இருநூறு அம்புகளால்; மாதலிம்—மாதலி எனும் சாரதியை; பாக:—பாகன் எனும் அசுரன்; ரதம்—இரதத்தை; ஸ-அவயவம்—எல்லா உபகரணங்களுடனும்; ப்ருதக்—தனியாக; ஸக்ருத்—ஒருமுறை, ஒரே சமயத்தில்; ஸந்தான—வில்லில் அம்புகளைப் பொறுத்தி; மோக்ஷேண—விடுவித்து; தத்—அத்தகைய ஒரு செயல்; அத்புதம்—அற்புதமானது; அபூத்—ஆகியது; ரணே—போர்க்களத்தில்.

பாகன் எனும் மற்றொரு அசுரன் இருநூறு அம்புகளைத் தனது வில்லில் பொருத்தி, அவற்றை ஒரே சமயத்தில் எய்து, இரு இரதங்களையும் அதன் உபகரணங்களையும் மற்றும் சாரதியான மாதலியையும் தாக்கினான். இது உண்மையிலேயே போர்க்களத்தில் ஓர் அற்புதச் செயலாகத்தான் இருந்தது.

பதம் 8.11.23
நமுசி: பஞ்ச-தசபி: ஸ்வர்ண-புங்கைர் மஹேஷுபி:
ஆஹத்ய வ்யனதத் ஸங்க்யே ஸதோய இவ தோயத:

நமுசி:—நமுசி என்ற அசுரன்; பஞ்ச-தசபி:—பதினைந்து எண்ணிக்கையைக் கொண்ட; ஸ்வர்ண-புங்கை—தங்கத்தாலான இறகுகளுடன் கூடிய; மஹா-இஷுபி:—மிகவும் சக்தி வாய்ந்த அம்புகளால்; ஆஹத்ய—துளைத்து; வ்யனதத்—ஓசை எழுப்பிய; ஸங்க்யே—போர்க்களத்தில்; ஸ-தோய:—நீரைத் தாங்கிய; இவ—போல்; தோய-த:—மழை மேகம்.

பிறகு மற்றொரு அசுரனான நமுசி, இந்திரனைத் தாக்கி, அவரைத் தங்கத்தாலான இறகுகளைக் கொண்ட, ஒரு மழை மேகத்தைப் போல் முழங்கிய, பதினைந்து மிகவும் சக்திவாய்ந்த அம்புகளால் அவரைக் காயப்படுத்தினான்.

பதம் 8.11.24
ஸர்வத: சர-கூடேன சக்ரம் ஸரத-ஸாரதிம்
சாதயாம் ஆஸுர் அஸுரா: ப்ராவ்ருட்-ஸூர்யம் இவாம்புதா:

ஸர்வத:—சுற்றிலும்; சர-கூடேன—ஓர் அடர்ந்த அம்பு மழையால்; சக்ரம்—இந்திரனை; ஸ-ரத—அவரது இரதத்துடன்; ஸாரதிம்—மற்றும் அவரது சாரதியுடனும்; சாதயாம் ஆஸு:—மூடினர்; அஸுரா:—எல்லா அசுரர்களும்; ப்ராவ்ருட்—மழைக்காலத்தில்; ஸூர்யம்—சூரியன்; இவ—போல்; அம்பு-தா:—மேகங்கள்.

மற்ற அசுரர்கள் இந்திரனையும், அவரது இரதத்தையும், சாரதியையும், மழைக்காலத்தில் மேகங்கள் சூரியனை மறைத்துவிடுவதைப் போல், இடைவிடாத அம்பு மழையால் மறைத்தனர்.

பதம் 8.11.25
அலக்ஷயந்தஸ் தம் அதீவ விஹ்வலா
விசுக்ருசுர் தேவ-கணா: ஸஹானுகா:
அநாயகா: சத்ரு-பலேன நிர்ஜிதா
வணிக்-பதா பின்னா-நவோ யதார்ணவே

அலக்ஷயந்த:—காண முடியாததால்; தம்—இந்திரனை; அதீவ—கடுமையான; விஹ்வலா:—குழப்பமடைந்து; விசுக்ருசு:—புலம்ப ஆரம்பித்தனர்; தேவ-கணா:—எல்லா தேவர்களும்; ஸஹ-அனுகா:—அவர்களது ஆட்களுடன்; அனாயகா:—தலைவன் இல்லாமல்; சத்ரு-பலேன—அவர்களுடைய எதிரிகளின் உயர்ந்த பலத்தால்; நிர்ஜிதா:—கொடுமையாக துன்புறுத்தப்பட்டு; வணிக்-பதா:—வணிகர்கள்; பின்ன-நவ:—உடைந்து போன அவர்களது கப்பல்; யதா அர்ணவே—கடலுக்கு நடுவே உள்ளதைப் போன்ற.

தேவர்கள், எதிரிகளால் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாலும், போர்க்களத்தில் இந்திரனைக் காண முடியாததாலும், மிகவும் கவலைக்கு உள்ளாயினர். தலைவன் இல்லாததால், கடல் நடுவே உடைந்து போன கப்பலிலுள்ள வணிர்களைப் போல், அவர்கள் புலம்ப ஆரம்பித்தனர்.

பதம் 8.11.26
ததஸ் துராஷாட் இஸு-பத்த-பஞ்ஜராத்
வினிர்கத: ஸாஸ்வ-ரத-த்வஜாக்ரணீ:
பபெள திச: கம் ப்ருதிவீம் ச ரோசயன்
ஸ்வ-தேஜஸா ஸூர்ய இவ க்ஷபாத்யயே

தத:—அதன்பிறகு; துராஷாட்—இந்திரனின் மற்றொரு பெயர்; இஷு-பத்த-பஞ்சராத்—அம்புப் பின்னல் எனும் கூண்டுக்குள்ளிருந்து; வினிர்கத:—விடுவித்துக்கொண்டு; ஸ—உடன்; அஸ்வ—குதிரைகள்; ரத—இரதம்; த்வஜ—கொடி; அக்ரணி:—மற்றும் சாரதி; பபௌ—ஆனார்; திச—எல்லாத் திசைகளையும்; கம்—ஆகாயத்தையும்; ப்ருதிவீம்—பூமி; ச—மேலும்; ரோசயன்—எல்லா இடங்களிலும் இன்பமூட்டுபவராக; ஸ்வ-தேஜஸா—அவரது சுயப்பிரகாசத்தால்; ஸுர்ய:—சூரியன்; இவ—போல்; க்ஷபா-அத்யயே—இரவு முடிவில்.

அதன்பிறகு, அம்புகளாலான கூண்டிலிருந்து இந்திரன் தம்மை விடுவித்துக் கொண்டார். இவ்வாறாக அவர் தமது இரதம், கொடி, குதிரைகள் மற்றும் சாரதி ஆகியவற்றுடன் தோன்றி, ஆகாயத்தையும், அனைத்து திசைகளையும், பூமியையும் சந்தோஷப்படுதினார். உதய சூரியனைப் போல் அவர் பிரகாசமாக ஒளி வீசினார். எல்லோருடைய பார்வையிலும் இந்திரன் பிரகாசமாகவும், அழகாகவும் தோன்றினார்.

பதம் 8.11.27
நிரீக்ஷ்ய ப்ருதனாம் தேவ: பரைர் அப்யர்திதாம் ரணே
உதயச்சத் ரிபும் ஹந்தும் வஜ்ரம் வஜ்ர-தரோ ருஷா

நிரீக்ஷ்ய—கவனித்த பிறகு; ப்ருதனாம்—அவரது சொந்த படைவீரர்கள்; தேவ:—இந்திர தேவன்; பரை:—எதிரிகளால்; அப்யர்திதாம்—மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தப்பட்டிருப்பதை; ரணே—போர்க்களத்தில்; உத்யச்சத்—எடுத்து; ரிபும்—எதிரிகளை; ஹந்தும்—கொல்ல; வஜ்ரம்—வஜ்ராயுதத்தை; வஜ்ர-தர:—வஜ்ராயுதத்தை எடுத்துச் செல்பவர்; ருஷா—பெருங்கோபத்துடன்.

வஜ்ரதரர் எனப்படுபவரும், வஜ்ராயுதத்தை எடுத்துச் செல்பவருமான இந்திரன், தமது சொந்த வீரர்கள் போர்க்களத்தில் எதிரிகளால் பெரும் துயரில் ஆழ்த்தப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் கோபமடைந்தார். இவ்வாறாக எதிரிகளை கொல்வதற்காக அவர் தமது வஜ்ராயுதத்தை எடுத்தார்.

பதம் 8.11.28
ஸ தேனைவாஷ்ட-தாரேண சிரஸீ பல-பாகயோ:
ஞாதீனாம் பஸ்யதாம் ராஜஞ் ஜஹார ஜனயன் பயம்

ஸ:—அவர் (இந்திரன்); தேன—அதன் மூலமாக; ஏவ—உண்மையில்; அஷ்ட-தாரேண—வஜ்ராயுதத்தால்; சிரஸீ—இரு தலைகளையும்; பல-பாகயோ:—பலன் மற்றும் பாகன் எனப்படும் இரு அசுரர்களின்; ஞாதினாம் பஸ்யதாம்—அவர்களுடைய உறவினர்களும் வீரர்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே; ராஜன்—ராஜனே; ஜஹார—(இந்திரன்) துண்டித்து விட்டார்; ஜனயன்—உருவாக்கினார்; பயம்—பயத்தை (அவர்களுக்கிடையில்).

பரீட்சித்து மகாராஜனே, இந்திரன் தமது வஜ்ராயுதத்தை உபயோகித்து, பலன், பாகன் ஆகிய இருவரின் தலைகளையும், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் முன்னிலையில் துண்டித்தார். இவ்விதமாக போர்க்களத்தில் அவர் மிகவும் பயங்கரமான ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்.

பதம் 8.11.29
நமுசிஸ் தத்-வதம் த்ருஷ்ட்வா சோகாமர்ஷ-ருஷான்வித:
ஜிக்ஹாம்ஸுர் இந்ரம் ந்ருபதே சகார பரமோத்யமம்

நமுசி:—நமுச்சி எனும் அசுரன்; தத்—அவ்விரு அசுரர்களின்; வதம்—படுகொலையை; த்ருஷ்ட்வா—கண்டபின்; சோக-அமர்ஷ—துக்கத்தையும், புலம்பலையும்; ருஷா-அன்வித:—இதனால் மிகவும்; ஜிக்ஹாம்ஸு:—கொல்ல விரும்பினான்; இந்ரம்—இந்திரனை; ந்ரு-பதே—பரீட்சித்து மகாராஜனே; சகார—செய்தான்; பரம—ஒரு பெரிய; உத்யமம்—முயற்சியை.

ராஜனே, மற்றொரு அசுரனான நமுசி, பலனும், பாகனும் கொல்லப்பட்டதை கண்டு பெருந்துயருக்கு உள்ளானான். இவ்வாறாக அவன் இந்திரனைக் கொல்ல கோபத்துடன் பெரியதொரு முயற்சியை மேற்கொண்டான்.

பதம் 8.11.30
அஸ்மஸாரமயம் சூலம் கண்டாவத் தேம-பூஷணம்
ப்ரக்ருஹ்யாப்யத்ரவத் க்ருத்தோ ஹதோ ‘ஸீதி விதர்ஜயன்
ப்ராஹிணோத் தேவ-ராஜாய நினதன் ம்ருக-ராட் இவ

அஸ்மஸார-மயம்—இரும்பாலான; சூலம்—ஒரு சூலத்தை; கண்டா-வத்—மணிகளைக் கொண்ட; ஹேம-பூஷணம்—தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட; ப்ரக்ருஹ்ய—கையிலெடுத்து; அப்யத்ரவத்—ஆவேசமாகச் சென்றான்; க்ருத்த:—கோபாவேசத்துடன்; ஹத: அஸி இதி—நீ இப்போது கொல்லப்பட்ட; விதர்ஜயன்—அவ்வாறு கர்ஜித்துக் கொண்டு; ப்ராஹிணோத்—தாக்கினான்; தேவ-ராஜாய—தேவராஜனை; நினதன்—முழக்கமிட்டவாறு; ம்ருக-ராட்—ஒரு சிங்கத்தை; இவ—போன்று.

அசுரனான நமுச்சி ஒரு சிங்கத்தைப் போல் கர்ஜித்தவாறு கோபத்துடன், மணிகள் பொருத்தப்பட்டதும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஓர் இரும்பு சூலத்தைக் கையால் எடுத்தான். ‘இப்போது நீ கொல்லப்பட்டாய்!” என்று உரக்கக் கூவினான். இவ்வாறு இந்திரனைக் கொல்வதற்காக அவர்முன் வந்த நமுசி தனது ஆயுதத்தைப் பிரயோகித்தான்.

பதம் 8.11.31
ததாபதத் ககன-தலே மஹா-ஜவம்
விசிச்சிதே ஹரிர் இஷுபி: ஸஹஸ்ரதா
தம் ஆஹனன் ந்ருப குலிசேன கந்தரே
ருஷான்விதஸ் த்ரிதச-பதி: சிரோ ஹரன்

ததா—அச்சமயத்தில்; அபதத்—எரிநட்சத்திரத்தைப் போல் விழும்; ககன-தலே—ஆகாயத்திற்கு அடியில் அல்லது பூமிமீது; மஹா-ஜவம்—மிகவும் சக்திவாய்ந்த; விசிச்சிதே—கண்டதுண்டமாக வெட்டினார்; ஹரி—இந்திரன்; இஷுபி:—அவரது அம்பினால்; ஸஹஸ்ரதா—ஆயிரக்கணக்கான துண்டுகளாக; தம்—அந்த நமுச்சியின்; ஆஹனத்—தாக்கினார்; ந்ருபா—ராஜனே; குலிசேன—தமது வஜ்ராயுதத்தினால்; கந்தரே—அவனுடைய தோளின் மீது; ருஷா-அன்வித:—மிகவும் கோபமடைந்து; த்ரிதச-பதி:—தேவர்களின் அரசனான இந்திரன்; சிர:—தலையை; ஹரன்—துண்டிப்பதற்காக.

ராஜனே, சுவர்க்க ராஜனான இந்திரன், மிகவும் சக்தி வாய்ந்த இச்சூலம் ஓர் எரி நட்சத்திரத்தைப் போல் சுடர்விட்டுக் கொண்டு பூமியை நோக்கி விழுவதைக் கண்டு உடனே அதைத் தமது அம்புகளால் கண்டந்துண்டமாக வெட்டித் தள்ளினார். பிறகு மிகவும் கோபத்துடன் நமுச்சியின் தலையைத் துண்டித்துவிடுவதற்காக தமது வஜ்ராயுதத்தினால் நமுச்சியின் தோளைத் தாக்கினார்.

பதம் 8.11.32
ந தஸ்ய ஹி த்வசம் அபி வஜ்ர ஊர்ஜிதோ
பிபேத ய: ஸுர-பதினௌஜஸேரித:
தத் அத்புதம் பரம் அதிவீர்ய-வ்ருத-பித்
திரஸ்க்ருதோ நமுசி-சிரோதர-த்வசா

ந—இல்லை; தஸ்ய—அவனது (நமுசி); ஹி—உண்மையில்; த்வசம் அபி—தோலைக்கூட; வஜ்ர:—வஜ்ராயுதம்; ஊர்ஜித:—மிகவும் சக்தி வாய்ந்த; பிபேத—துளைக்க முடிந்தது; ய:—எந்த ஒரு ஆயுதம்; ஸுர-பதினா—தேவராஜனின்; ஒஜஸா—பெரும் வலிமையுடன்; ஈரித:—விடுவிக்கப்பட்ட; தத்—ஆகவே; அத்புதம் பரம்—அது அசாதாரணமான அற்புதம் வாய்ந்ததாக இருந்தது; அதி-வீர்ய-வ்ருத்ர-பித்—மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அதனால் மிகவும் சக்தி வாய்ந்த விருத்ராசுரனின் உடலைக்கூட துளைக்க முடிந்தது; திரஸ்க்ருத:—(அதன் பிறகு இப்போது) எதிர்க்கப்பட்டுள்ள; நமுசி-சிரோதர-த்வசா—நமுச்சியினுடைய கழுத்தின் தோலால்.

தேவேந்திரன் நமுச்சியை நோக்கித் தமது வஜ்ராயுதத்தை பெரும் சக்தியுடன் வீசி எறிந்த போதிலும், அதனால் அவனுடைய தோலைக் கூட துளைக்க முடியவில்லை. விருத்ராசுரனின் உடலைத் துளைத்த பெருமைக்குரிய வஜ்ராயுதத்தினால் நமுசியினுடைய கழுத்தின் தோலைச் சிறிதும் காயப்படுத்த முடியவில்லை என்பது மிகவும் அற்புதமாகத்தான் இருக்கிறது.

பதம் 8.11.33
தஸ்மாத் இந்ரோ ‘பிபேச் சத்ரோர் வஜ்ர: ப்ரதிஹதோ யத:
கிம் இதம் தைவ-யோகேன பூதம் லோக-விமோஹனம்

தஸ்மாத்—ஆகவே; இந்ர:—சுவர்க்க ராஜன்; அபிபேத்—மிகவும் அச்சத்திற்குள்ளானார்; சத்ரோ:—எதிரியிடமிருந்து (நமுசி); வஜ்ரஹ—வஜ்ராயுதம்; ப்ரதிஹத:—தாக்கமுடியாமல் திரும்பியது; யத:—ஏனெனில்; கிம் இதம்—என்ன இது; தைவ-யோகேன—ஏதோ உயர்ந்த சக்தியால்; பூதம்—இது நிகழ்ந்துள்ளது; லோக-விமோஹனம்—மக்களுக்கு மிகவும் அற்புதமான.

எதிரியிடமிருந்து வஜ்ராயுதம் திரும்பி வருவதைக் கண்ட இந்திரன் மிகவும் அச்சமடைந்தார். இது ஏதேனும் உயர் சக்தியினால் விளைந்திருக்கக் கூடுமோ என்று ஆச்சரியப்படத் துவங்கினார்.

பதம் 8.11.34
யேன மே பூர்வம் அத்ரீணாம் பக்ஷ-ச்சேத: ப்ரஜாத்யயே
க்ருதோ நிவிசதாம் பாரை: பதத்ரை: பததாம் புவி

யேன—இதே வஜ்ராயுதத்தால்தான்; மே—என்னால்; பூர்வம்—முன்பு; அத்ரீணாம்—மலைகளின்; பக்ஷ-ச்சேத:—இறக்கைகளை வெட்டியதை; ப்ரஜா-அத்யயே—மக்கள் கொல்லப்பட்டபோது; க்ருத:—செய்யப்பட்டது; நிவிசதாம்—நுழைந்த அம்மலைகளின்; பாரை:—பெரும்பாரத்தினால்; பதத்ரை:—இறக்கைகளால்; பததாம்—விழுந்து; புவி—பூமியின் மேல்.

இந்திரன் எண்ணினார்: முன்பு, பல மலைகள் இறக்கைகளுடன் ஆகாயத்தில் பறக்கும் போது பூமியில் விழுந்து மக்களைக் கொன்றன. அப்போது இதே வஜ்ராயுதத்தால்தான் அவற்றின் இறக்கைகளை நான் துண்டித்தேன்.

பதம் 8.11.35
தப:-ஸாரமயம் த்வாஷ்ட்ரம் வ்ருத்ரோ யேன விபாடித:
அன்யே சாபி பலோபேதா: ஸர்வாஸ்த்ரைர் அக்ஷத த்வச:

தப:—தவங்கள்; ஸார-மயம்—மிகவும் சக்திவாய்ந்த; த்வாஷ்ட்ரம்—துவஷ்டனால் இயற்றப்பட்ட; வ்ருத்ர:—விருத்ராசுரன்; யேன—எதனால்; விபாடித:—கொல்லப்பட்டான்; அன்யே—மற்றவர்கள்; ச—கூட; அபி—உண்மையில்; பல-உபேதா:—மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்; ஸர்வ—எல்லா வகையான; அஸ்த்ரை:—ஆயுதங்களாலும்; அக்ஷத—காயம் அடையாத; த்வச:—அவர்களின் தோல்.

விருத்ராசுரன், துவஷ்டனால் இயற்றப்பட்ட தவங்களின் சாராம் சமாக இருந்தான். அவனையும் கூட வஜ்ராயுதம் கொன்று விட்டது. உண்மையில், அவன் மட்டுமல்லாமல் எல்லா வகையான ஆயுதங்களாலும் காயப்படுத்தவும் முடியாத தோலையுடைய, பலம் வாய்ந்த பல்வேறு வீரர்களும் கூட, இதே வஜ்ராயுதத்தினால் கொல்லப்பட்டனர்.

பதம் 8.11.36
ஸோ ‘யம் ப்ரதிஹதோ வஜ்ரோ மயா முக்தோ ‘ஸுரே ‘ல்பகே
நாஹம் தத் ஆததே தண்டம் ப்ரஹ்ம-தேஜோ ‘பி அகாரணம்

ஸ: அயம்—ஆகவே இந்த வஜ்ராயுதத்தை; ப்ரதிஹத:—எதிர்த்தது: வஜ்ர:—வஜ்ராயுதம்; மயா—என்னால்; முக்த:—விடுவிக்கப்பட்ட; அஸுரே—அசுரனை நோக்கி; அல்பகே—மதிப்பு குறைந்த; ந—இல்லை; அஹம்—நான்; தத்—அந்த; ஆததே—வைத்துக் கொண்டு; தண்டம்—இது இப்போது சாதாரண தடியைப் போல் தான் இருக்கிறது; ப்ரஹ்ம-தேஜ:—பிரம்மாஸ்திரத்தைப் போல் சக்தி வாய்ந்ததாக; அபி—இருப்பினும்; அகாரணம்—இப்போது பயனற்றதாகி விட்டது.

ஆனால் இப்போது, இதே வஜ்ராயுதம் ஓர் அற்ப அசுரனுக்கெதிராகப் பிரயோகிக்கப்பட்ட போதிலும், இது பலனற்றதாகிவிட்டது. ஆகவே, இது ஒரு பிரம்மாஸ்திரத்திற்கு ஈடாக இருந்தது என்றாலும், இப்போது இது சாதாரண ஒரு தடியைப் போல் பயனற்றதாகி விட்டது. எனவே இனிமேல் இதை நான் வைத்திருக்கப் போவதில்லை.

பதம் 8.11.37
இதி சக்ரம் விஷீதந்தம் ஆஹ வாக் அசரீரிணீ
நாயம் கஷ்கைர் அதோ நார்த்ரைர் வதம் அர்ஹதி தானவ:

இதி—இவ்வாறாக; சக்ரம்—இந்திரனிடம்; விஷீதந்தம்—வருத்தமடைந்து; ஆஹ—பேசியது; வாக்—ஒரு குரல்; அசரீரிணீ—எந்த உருவமும் இல்லாமல், அல்லது ஆகாயத்திலிருந்து; ந—இல்லை; அயம்—இந்த; கஷ்கை:—உலர்ந்துள்ள எதனாலும்; அதோ—தவிரவும்; ந—அல்லது; ஆர்த்ரை:—ஈரமாக உள்ள எதனாலும்; வதம்—அழிவு; அர்ஹதி—பொருத்தமாக இருக்கிறது; தானவ:—இந்த அசுரன் (நமுசி).

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: வருத்தத்திற்குள்ளான இந்திரன் இவ்வாறு கவலைப்படும்போது, கெட்ட நிமித்தங்களுள்ள, உருவமற்ற குரலொன்று ஆகாயத்திலிருந்து கூறியது, “அசுரனான இந்த நமுசியை உலர்ந்த அல்லது ஈரமான எப்பொருளாலும் அழிக்க முடியாது.”

பதம் 8.11.38
மயாஸ்மை யத் வரே தத்தோ ம்ருத்யுர் நைவார்த்ர-சுஷ்கயோ:
அதோ ‘ன்யஸ் சிந்தனீயஸ் தே உபாயோ மகவன் ரிபோ:

மயா—என்னால்; அஸ்மை—அவனுக்கு; யத்—என்பதால்; வர:—ஒரு வரம்; தத்த:—அளிக்கப்பட்டுள்ளது; ம்ருத்யு:—மரணம்; ந—இல்லை; ஏவ—உண்மையில்; ஆர்த்ர—ஈரமானதாலோ; சுஷ்கயோ:—அல்லது உலர்ந்த ஒன்றாலோ; அத:—எனவே; அன்ய:—வேறொன்றை, மற்றொரு; சிந்தனீய:—பற்றி சிந்திக்கப்பட வேண்டும்; தே—உன்னால்; உபாய:—வழி; மகவந்—இந்திரனே; ரிபோ:—உனது எதிரியின்.

அசரீரி மேலும் கூறியது, ‘இந்திரனே, உலர்ந்த அல்லது ஈரமான ஆயுதம் எதனாலும் ஒருபோதும் கொல்லப்படமாட்டான் என்ற வரத்தை இந்த அசுரனுக்கு நான் கொடுத்திருக்கிறேன். ஆகவே அவனைக் கொல்வதற்கான வேறொரு வழியைப் பற்றி நீ யோசிக்க வேண்டும்.”

பதம் 8.11.39
தாம் தைவீம் கிரம் ஆகர்ணய மகவான் ஸுஸமாஹித:
த்யாயன் ஃபேனம் அதாபஸ்யத் உபாயம் உபயாத்மகம்

தாம்—அந்த; தைவீம்—கெட்ட நிமித்தமுள்ள; கிரம்—குரலை; ஆகர்ண்ய—கேட்டபின்; மகவான்—இந்திரதேவன்; ஸு-ஸமாஹித:—மிகவும் கருத்துடையவராகி; த்யாயன்—தியானித்து; ஃபேனம்—நுரையின் தோற்றம்; அத—அதன்பிறகு; அபஸ்யத்—அவர் கண்டார்; உபாயம்—வழி; உபய-ஆத்மகம்—ஒரே சமயத்தில் உலர்ந்ததும், ஈரமாகவும்.

அசரீரியின் குரலைக் கேட்டபின், இந்திரன் எப்படி அசுரனைக் கொல்வது என்பதைப் பற்றி மிக்க கவனத்துடன் சிந்திக்கத் துவங்கினார். பிறகு நுரைதான் இதற்கு வழி என்பதை அவர் கண்டார். ஏனெனில் அது ஈரமானதுமல்ல, உலர்ந்ததுமல்ல.

பதம் 8.11.40
ந கஷ்கேண ந சார்த்ரேண ஜஹார நமுசே: சிர:
தம் துஷ்டுவுர் முனி-கணா மால்யைஸ் சாவாகிரன் விபும்

ந—எதுவுமில்லை; கஷ்கேண—உலர்ந்த வழியால்; ந—அல்லது; ச—கூட; ஆர்த்ரேண—ஒரு ஈரமான ஆயுதத்தால்; ஜஹார—அவர் துண்டித்தார்; நமுசே:—நமுசியின்; சிர:—தலையை; தம்—அவரை (இந்திரன்); துஷ்டுவு:—திருப்தி செய்தனர்; முனி-கணா:—எல்லா முனிவர்களும்; மால்யை:—மலர் மாலைகளால்; ச—மேலும்; அவாகிரன்—மூடினர்; விபும்—அச்சிறந்த புருஷரை.

இவ்வாறாக, சுவர்க்க ராஜனான இந்திரன், உலர்ந்ததாகவோ அல்லது ஈரமாகவோ இல்லாத, நுரையாலான ஓர் ஆயுதத்தால் நமுசியின் தலையைத் துண்டித்து விட்டார். பிறகு கிட்டத்தட்ட இந்திரனை மூடிவிடும் அளவிற்கு மாலைகளையும், மலர்களையும் அவர் மீது பொழிந்து, முனிவர்கள் அனைவரும் உயர்ந்த புருஷராகிய இந்திரனை திருப்திப்படுத்தினர்.

பதம் 8.11.41
கந்தர்வ-முக்யௌ ஜகதுர் விஸ்வாவஸு-பராவஸூ
தேவ-துந்துபயோ நேதுர் நர்தக்யோ நன்ருதுர் முதா

கந்தர்வ-முக்யௌ—கந்தர்வர்களின் இரு தலைவர்கள்; ஜகது:—இனிய பாடல்களை பாடத் துவங்கினர்; விஸ்வாவஸு—விஸ்வாவஸு எனப்படும்; பராவஸூ—பராவஸூ எனப்படும்; தேவ-துந்து பய:—தேவர்களால் அடிக்கப்பட்ட பேரிகைகள்; நேது:—ஓசை எழுப்பின; நர்தக்ய:—அப்ஸரர்கள் எனப்படும் நாட்டியக்காரர்கள்; நன்ருது:—நடனமாடத் துவங்கினர்; முதா—பெருமகிழ்ச்சியுடன்.

விஸ்வாவஸு மற்றும் பராவஸு எனும் கந்தர்வர்களின் இரு தலைவர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் பாடினர். தேவர்களின் பேரிகைகள் முழங்கின. அப்ஸரர்கள் ஆனந்தத்துடன் நடனமாடினர்.

பதம் 8.11.42
அன்யே ‘பி ஏவம் ப்ரதித்வந்வாந் வாயு-அக்னி-வருணாதய:
ஸூதயாம் ஆஸுர் அஸுரான் ம்ருகான் கேஸரிணோ யதா

அன்யே—மற்றவர்கள்; அபி—கூட; ஏவம்—இவ்வாறாக; ப்ரதித்வந்வான்—யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எதிரிகளை; வாயு—வாயு தேவன்; அக்னி—அக்னிதேவன்; வருண-ஆதய:—வருண தேவனும் மற்றவர்களும்; ஸூதயாம் ஆஸு:—பெரும் பலத்துடன் கொல்ல ஆரம்பித்தனர்; அஸுரான்—எல்லா அசுரர்களையும்; ம்ருகான்—மான்; கேஸரிண:—சிங்கங்கள்; யதா—போலவே.

வாயு, அக்னி, வருணன் மற்றும் பிற தேவர்கள் ஆகியோர், ஒரு காட்டில் சிங்கங்கள் மானைக் கொல்வதைப் போல், தங்களை எதிர்த்த அசுரர்களைக் கொல்ல ஆரம்பித்தனர்.

பதம் 8.11.43
ப்ரஹ்மணா ப்ரேஷிதோ தேவான் தேவர்ஷிர் நாரதோ ந்ருப
வாரயாம் ஆஸ விபுதான் த்ருஷ்ட்வா தானவ-ஸங்க்ஷயம்

ப்ரஹ்மணா—பிரம்ம தேவரால்; ப்ரேஷித:—அனுப்பினார்; தேவான்—தேவர்களுக்கு; தேவ-ரிஷி:—சுவர்க்க லோகங்களின் சிறந்த முனிவரை; நாரத:—நாரத முனிவரை; ந்ருப—ராஜனே; வாரயாம் ஆஸ—தடுத்தார்; விபுதான்—எல்லாத் தேவர்களையும்; த்ருஷ்ட்வா—கண்டபின்; தானவ-ஸங்க்ஷயம்—அசுரர்களின் மொத்த அழிவை.

ராஜனே, நேரிடப்போகும் அசுரர்களின் மொத்த அழிவைக் கண்ட பிரம்ம தேவர், நாரதருடன் ஒரு செய்தியை அனுப்பினார். நாரதரும் தேவர்களின் போரை நிறுத்துவதற்காக அவர்கள் முன் சென்றார்.

பதம் 8.11.44
ஸ்ரீ-நாரத உவாச
பவத்பிர் அம்ருதம் ப்ராப்தம் நாராயண-புஜாஸ்ரயை:
ஸ்ரியா ஸமேதிதா: ஸர்வ உபாரமத விக்ரஹாத்

ஸ்ரீ-நாரத: உவாச—நாரத முனி தேவர்களை வேண்டினார்; பவத்பி:—உங்கள் அனைவராலும்; அம்ருதம்—அமிர்தம்; ப்ராப்தம்—அடையப்பட்டது; நாரயண—பரமபுருஷ பகவானின்; புஜ-ஆஸ்ரயை:—கரங்களால் பாதுகாக்கப்பட்டிப்பதால்; ஸ்ரியா—எல்லா அதிர்ஷ்டத்தாலும்; ஸமேதிதா:—செழிப்பு அடைந்திருக்கிறீர்கள்; ஸர்வே—நீங்கள் அனைவரும்; உபாரமத—இப்போது நிறுத்துங்கள்; விக்ரஹாத்—இப்போரை.

மகா முனிவரான நாரதர் கூறினார்: தேவர்களாகிய நீங்கள் அனைவரும் முழுமுதற் கடவுளான நாராயணரின் கரங்களால் பாதுகாக்கப்படுகிறீர்கள். அவரது கருணையால் அமிர்தத்தையும் நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். ஸ்ரீதேவியின் கருணையால் எல்லா விதத்திலும் நீங்கள் பெருமைக்குரியவர்களாக விளங்குகிறீர்கள். ஆகவே, தயவு செய்து இப்போரை நிறுத்திவிடுங்கள்.

பதம் 8.11.45
ஸ்ரீ-சுக உவாச
ஸம்யம்ய மன்யு-ஸம்ரம்பம் மானயந்தோ முனேர் வச: உபகீயமானானுசரை யயு: ஸர்வே த்ரிவிஷ்டபம்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸம்யம்ய—கட்டுப்படுத்தி; மன்யு—கோபத்தின்; ஸம்ரம்பம்—அதிகரிப்பை; மானயந்த:—ஏற்று; முனே: வச:—நாரத முனிவரின் வார்த்தைகளை; உபகீயமான—போற்றப்பட்டு; அனுசரை:—அவர்களின் ஆதரவாளர்களால்; யயு:—திரும்பினர்; ஸர்வே—தேவர்கள் அனைவரும்; த்ரிவிஷ்டபம்—சுவர்க்க லோகங்களுக்கு.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நாரதரின் வார்த்தைகளை ஏற்று, தேவர்கள் தங்களுடைய கோபத்தைக் கைவிட்டு போரை நிறுத்தினர். தங்களுடைய ஆதரவாளர்களால் போற்றப்பட்டவாறு, அவர்களுடைய சுவர்க்கலோகங்களுக்கு அவர்கள் திரும்பிச் சென்றனர்.

பதம் 8.11.46
யே ‘வசிஷ்டா ரணே தஸ்மின் நாரதானுமதேன தே
பலிம் விபன்னம் ஆதாய அஸ்தம் கிரிம் உபாகமன்

யே—அசுரர்களில் சிலர்; அவசிஷ்டா:—எஞ்சியிருந்த; ரணே—போரில்; தஸ்மின்—அந்த; நாரத-அனுமதேன—நாரதரின் கட்டளையால்; தே—அவர்கள் அனைவரும்; பலிம்—பலி மகாராஜனை; விபன்னம்—ஆபத்தான நிலையில்; ஆதாய—தூக்கிக் கொண்டு; அஸ்தம்—அஸ்தம் எனும்; கிரிம்—மலைக்கு; உபாகமன்—சென்றனர்.

போர்க்களத்தில் எஞ்சியிருந்த அசுரர்கள், நாரத முனிவரின் கட்டளையைப் பின்பற்றி, ஆபத்தான நிலையிலிருந்த பலி மகாராஜனை அஸ்தகிரி எனும் மலைக்கு தூக்கிச் சென்றனர்.

பதம் 8.11.47
தத்ராவிநஷ்டாவயவான் வித்யமான-சிரோதரான்
உசனா ஜீவயாம் ஆஸ ஸஞ்ஜீவன்யா ஸ்வ-வித்யயா

தத்ர—அந்த மலை மீது; அவினஷ்ட-அவயவான்—கொல்லப்பட்ட ஆனால் தங்களின் உடல் உறுப்புக்களை இழந்துவிடாத அசுரர்களை; வித்யமான-சிரோதரான்—அவர்களின் உடல்களிலேயே தலைகள் இருக்கப்பெற்றவர்களை; உசனா:—சுக்ராசார்யர்; ஜீவயாம் ஆஸ—உயிர்ப்பித்தார்; ஸஞ்ஜீவன்யா—சஞ்ஜீவினி மந்திரத்தால்; ஸ்வ-வித்யயா—அவரது சுய சாதனையின் மூலமாக.

அங்கு அந்த மலையின் மீது, தங்களது தலைகளையும், முண்டங்களையும் மற்ற அங்கங்களையும் இழந்து விடாத உயிரற்ற அசுர வீரர்கள் அனைவரையும் சுக்ராசார்யர் உயிர்ப்பித்தார். இதை அவர் சஞ்சீவினி எனப்படும் தனது சொந்த மந்திரத்தினால் அடைந்தார்.

பதம் 8.11.48
பலிஸ் சோசனஸா ஸ்ப்ருஷ்ட: ப்ரத்யாபன்னேந்ரிய-ஸ்ம்ருதி:
பராஜிதோ ‘பி நாகித்யல் லோக-தத்வ-விசக்ஷண:

பலி:—பலி மகாராஜன்; ச—மேலும்; உசனஸா—சுக்ராசார்யரால்; ஸ்ப்ருஷ்ட:—தொடப்பட்டு; ப்ரத்யாபன்ன—திரும்ப கொண்டு வரப்பட்டது; இந்ரிய-ஸ்ம்ருதி:—புலன் இயக்கங்களின் உணர்வும், ஞாபக சக்தியும்; பராஜித:—அவர் தோற்கடிக்கப்பட்டார்; அபி—எனினும்; ந அகித்யத்—அவர் வருந்தவில்லை; லோக-தத்வ-விசக்ஷண:—பிரபஞ்ச விவகாரங்களில் அவர் மிகுந்த அனுபவம் பெற்றிருந்ததால்.

பலி மகாராஜன் பிரபஞ்ச விவகாரங்களின் மிகுந்த அனுபவம் பெற்றிருந்தார். அவர் சுக்ராச்சார்யரின் கருணையால் தனது புலன்களின் உணர்வையும், ஞாபக சக்தியையும் மீண்டும் பெற்ற போது, நடந்ததையெல்லாம் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆகவே, அவர் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அதற்காக அவர் வருத்தப்படவில்லை.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “தேவேந்திரன் அசுரர்களை அழித்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare