அத்தியாயம் – 11
தேவேந்திரன் அசுரர்களை அழித்தல்
பதம் 8.11.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார். அதன்பிறகு, முழுமுதற் கடவுளான ஹரியின் பரம கருணையால், இந்திரன் மற்றும் வாயு முதலான தேவர்கள் அனைவரும் உயிர்ப்பிக்கப்பட்டனர். புத்துணர்வு பெற்ற தேவர்கள், ஏற்கனவே தங்களைத் தோற்கடித்த அதே அசுரர்களைக் கடுமையாக அடிக்க ஆரம்பித்தனர்.

பதம் 8.11.2 : மிகவும் சக்தி வாய்ந்தவரான இந்திரன் கோபமடைந்து பலி மகாராஜனைக் கொல்வதற்காக, தனது வஜ்ராயுதத்தைக் கையிலெடுத்த போது, அசுரர்கள் “ஐயோ, ஐயோ!” என்று புலம்பினர்.

பதம் 8.11.3 : யுத்தத்திற்கான ஆயுதங்களால் நன்கு பொருத்தப்பட்டவராய், பலி மகாராஜன் நிதானமாகவும், பொறுமையுடனும், பெரும் யுத்தகளத்தில் இந்திரனின் முன் சென்றார். எப்பொழுதும் தனது கரத்தில் வஜ்ராயுதத்தை வைத்திருப்பவரான தேவேந்திரன் பலி மகாராஜனைப் பின்வருமாறு திட்டினார்.

பதம் 8.11.4 : இந்திரன் கூறினார்: அடே அயோக்கியனே, சில சமயங்களில் மோசக்காரனொருவன் ஒரு குழந்தையின் கண்களைக் கட்டிவிட்டு அதன் உடைமைகளை அபகரித்துக் கொள்வதைப்போல், இத்தகைய மாய சக்திகள் அனைத்திற்கும் நாங்கள் எஜமானர்கள் என்பதை நீ அறிந்திருந்தும், சில மாய சக்திகளைக் கூட்டி நீ எங்களை வெற்றி கொள்ள முயற்சிக்கிறாய்.

பதம் 8.11.5 : யோக சக்தியாலோ, அல்லது இயந்திரங்களின் மூலமாகவோ, உயர்கிரக அமைப்பிற்கு ஏற்றம் பெற விரும்பும் மூடர்களும், அயோக்கியர்களும், அல்லது உயர்கிரகங்களையும் கடந்துசென்று ஆன்மீக உலகையோ அல்லது முக்தியையோ அடைய விரும்புபவர்களை, நான் பிரபஞ்சத்தின் மிகத்தாழ்ந்த பிரதேசத்திற்கு அனுப்பிவிடுவேன்.

பதம் 8.11.6 : இன்று நூற்றுக்கணக்கான கூரிய முனைகளைக் கொண்ட எனது வஜ்ராயுதத்தினால், அதே சக்திவாய்ந்த நபராகிய நான், உனது உடலிலிருந்து உன் தலையைத் துண்டித்து விடுவேன். இவ்வளவு அதிகமான மாயாஜாலங்களை உன்னால் செய்ய முடிந்தபோதிலும், உனக்கு அறிவு குறைவாகவே உள்ளது. இப்போது, உனது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இப்போர்க்களத்தில் உயிர்வாழ முயற்சிசெய்.

பதம் 8.11.7 : பலி மகாராஜன் கூறினார்: இப்போர்க்களத்தில் இடம் பெற்றவர்கள் அனைவரும் நிச்சயமாக நித்திய காலத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். அவர்களுடைய விதிக்கப்பட்ட செயல்களுக்கேற்ப, அவர்கள் புகழ், வெற்றி, தோல்வி மற்றும் மரணம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக அடைய வேண்டியவர்கள் ஆவர்.

பதம் 8.11.8 : நிஜ உண்மையை அறிந்தவர்கள், காலத்தின் போக்கை அறிந்து, வேறுபட்ட சூழ்நிலைகளுக்காக இன்புறுவதோ அல்லது வருந்துவதோ இல்லை. எனவே, உனது வெற்றியைக் குறித்து நீ மகிழ்ச்சி அடைவதால், உன்னைச் சிறந்த அறிவாளியல்ல என்றுதான் நான் கருதவேண்டும்.

பதம் 8.11.9 : உங்களுடைய புகழுக்கும், வெற்றிக்கும் நீங்களே காரணம் என்று தேவர்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களுடைய அறியாமையைக் கண்டு சான்றோர்கள் அனுதாபப்படுகின்றனர். ஆகவே, உங்களுடைய வார்த்தைகள் இதயத்தைத் துன்புறுத்துவதாக இருப்பினும், அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

பதம் 8.11.10 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக சுவர்க்க ராஜனான இந்திரனை கூரிய வார்த்தைகளால் திட்டிய பின், வேறெந்த வீரனையும் வெல்லக் கூடியவரான பலி மகாராஜன், நாராசம் எனப்படும் அம்புகளைத் தனது செவிப்பக்கமாக இழுத்தார். பிறகு இந்த அம்புகளால் இந்திரனைத் தாக்கினார். அதன்பிறகு இந்திரனை அவர் மீண்டும் கடினமான வார்த்தைகளால் கண்டித்தார்.

பதம் 8.11.11 : பலி மகாராஜனின் கண்டனங்கள் உண்மையானவை என்பதால், யானைப்பாகனின் அங்குசத்தால் அடிக்கப்பட்ட யானையொன்று கிளர்ச்சியடையாமல் இருப்பது போலவே, தேவேந்திரனும் கொஞ்சங்கூட வருத்தப்படவில்லை.

பதம் 8.11.12 : எதிரியை வெல்பவரான இந்திரன், பலி மகாராஜனைக் கொல்லும் நோக்கத்துடன் குறிதவறாத தமது வஜ்ராயுதக் கோலை அவரை நோக்கிப் பிரயோகித்தார். பலி மகாராஜனும் இறக்கைகள் துண்டிக்கப்பட்ட ஒரு மலையைப் போல், அவரது விமானத்துடன் தரையில் வீழ்ந்தார்.

பதம் 8.11.13 : தனது நண்பனான பலி விழுந்துவிட்டதை அசுரனான ஜம்பாசுரன் கண்டபோது பலிமகாராஜனுக்குச் சினேகமான முறையில் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்திரனின் முன் தோன்றினான்.

பதம் 8.11.14 : ஒரு சிங்கத்தால் தூக்கிச் செல்லப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்தவனான ஜம்பாசுரன் இந்திரனை அணுகித் தனது கதையால் பெரும் பலத்துடன் அவரது தோளில் அடித்தான். இந்திரனின் யானையையும் அவன் தாக்கினான்.

பதம் 8.11.15 : இந்திரனின் யானை ஜம்பாசுரனின் கதையால் அடிபட்டு, குழப்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆளானது. இவ்வாறாக அதன் முழங்கால்கள் பூமியைத் தொட அது உணர்வற்று விழுந்தது.

பதம் 8.11.16 : அதன்பிறகு, மாதலி எனும் இந்திரனின் சாரதி, ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட இந்திரனின் இரதத்தைக் கொண்டு வந்தார். இந்திரன் பிறகு தனது யானையை விட்டுவிட்டு இரதத்தில் ஏறிக் கொண்டார்.

பதம் 8.11.17 : அசுரரில் சிறந்தவனான ஜம்பாசுரன், மாதலியின் சேவையைப் பாராட்டும் வகையில் புன்னகை செய்த போதிலும், போரில் அவன் மாதலியை நெருப்பைக் கக்கும் திரிசூலத்தினால் தாக்கினான்.

பதம் 8.11.18 : வலி மிகவும் கடுமையாக இருந்தபோதிலும், மாதலி அதை மிகவும் பொறுமையோடு பொறுத்துக் கொண்டார். ஆனால் இந்திரனோ, ஜம்பாசுரனிடம் பெருங்கோபம் கொண்டார். அவர் ஜம்பாசுரனை தமது வஜ்ராயுதத்தினால் தாக்கி அவன் தலையை அவனது உடலிலிருந்து துண்டித்தார்.

பதம் 8.11.19 : நாரத முனிவர், ஜம்பாசுரன் கொல்லப்பட்டதை ஜம்பாசுரனின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவித்த போது, நமுசி, பலன் மற்றும் பாகன் எனும் மூன்று அசுரர்கள் மிகவும் வேகமாக போர்க்களத்திற்கு வந்து சேர்ந்தனர்.

பதம் 8.11.20 : இந்த அசுரர்கள் இதயத்தைத் துளைக்கும் முரட்டுத்தனமான, கொடூரமான வார்த்தைகளால் இந்திரனைத் திட்டியவாறு, பெருமழை பிரம்மாண்டமான ஒரு மலையை முழுவதும் நீராட்டுவது போல், அவரை நோக்கி அம்பு மழை பொழிந்தனர்.

பதம் 8.11.21 : போர்க்களத்தின் சூழ்நிலையை பலன் எனும் அசுரன், விரைவாக சமாளித்துக் கொண்டான். பின் இந்திரனின் ஆயிரம் குதிரைகளையும் சம எண்ணிக்கைக் கொண்ட அம்புகளால் துளைத்து, அவற்றைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தினார்.

பதம் 8.11.22 : பாகன் எனும் மற்றொரு அசுரன் இருநூறு அம்புகளைத் தனது வில்லில் பொருத்தி, அவற்றை ஒரே சமயத்தில் எய்து, இரு இரதங்களையும் அதன் உபகரணங்களையும் மற்றும் சாரதியான மாதலியையும் தாக்கினான். இது உண்மையிலேயே போர்க்களத்தில் ஓர் அற்புதச் செயலாகத்தான் இருந்தது.

பதம் 8.11.23 : பிறகு மற்றொரு அசுரனான நமுசி, இந்திரனைத் தாக்கி, அவரைத் தங்கத்தாலான இறகுகளைக் கொண்ட, ஒரு மழை மேகத்தைப் போல் முழங்கிய, பதினைந்து மிகவும் சக்திவாய்ந்த அம்புகளால் அவரைக் காயப்படுத்தினான்.

பதம் 8.11.24 : மற்ற அசுரர்கள் இந்திரனையும், அவரது இரதத்தையும், சாரதியையும், மழைக்காலத்தில் மேகங்கள் சூரியனை மறைத்துவிடுவதைப் போல், இடைவிடாத அம்பு மழையால் மறைத்தனர்.

பதம் 8.11.25 : தேவர்கள், எதிரிகளால் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாலும், போர்க்களத்தில் இந்திரனைக் காண முடியாததாலும், மிகவும் கவலைக்கு உள்ளாயினர். தலைவன் இல்லாததால், கடல் நடுவே உடைந்து போன கப்பலிலுள்ள வணிர்களைப் போல், அவர்கள் புலம்ப ஆரம்பித்தனர்.

பதம் 8.11.26 : அதன்பிறகு, அம்புகளாலான கூண்டிலிருந்து இந்திரன் தம்மை விடுவித்துக் கொண்டார். இவ்வாறாக அவர் தமது இரதம், கொடி, குதிரைகள் மற்றும் சாரதி ஆகியவற்றுடன் தோன்றி, ஆகாயத்தையும், அனைத்து திசைகளையும், பூமியையும் சந்தோஷப்படுதினார். உதய சூரியனைப் போல் அவர் பிரகாசமாக ஒளி வீசினார். எல்லோருடைய பார்வையிலும் இந்திரன் பிரகாசமாகவும், அழகாகவும் தோன்றினார்.

பதம் 8.11.27 : வஜ்ரதரர் எனப்படுபவரும், வஜ்ராயுதத்தை எடுத்துச் செல்பவருமான இந்திரன், தமது சொந்த வீரர்கள் போர்க்களத்தில் எதிரிகளால் பெரும் துயரில் ஆழ்த்தப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் கோபமடைந்தார். இவ்வாறாக எதிரிகளை கொல்வதற்காக அவர் தமது வஜ்ராயுதத்தை எடுத்தார்.

பதம் 8.11.28 : பரீட்சித்து மகாராஜனே, இந்திரன் தமது வஜ்ராயுதத்தை உபயோகித்து, பலன், பாகன் ஆகிய இருவரின் தலைகளையும், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் முன்னிலையில் துண்டித்தார். இவ்விதமாக போர்க்களத்தில் அவர் மிகவும் பயங்கரமான ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்.

பதம் 8.11.29 : ராஜனே, மற்றொரு அசுரனான நமுசி, பலனும், பாகனும் கொல்லப்பட்டதை கண்டு பெருந்துயருக்கு உள்ளானான். இவ்வாறாக அவன் இந்திரனைக் கொல்ல கோபத்துடன் பெரியதொரு முயற்சியை மேற்கொண்டான்.

பதம் 8.11.30 : அசுரனான நமுச்சி ஒரு சிங்கத்தைப் போல் கர்ஜித்தவாறு கோபத்துடன், மணிகள் பொருத்தப்பட்டதும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஓர் இரும்பு சூலத்தைக் கையால் எடுத்தான். ‘இப்போது நீ கொல்லப்பட்டாய்!” என்று உரக்கக் கூவினான். இவ்வாறு இந்திரனைக் கொல்வதற்காக அவர்முன் வந்த நமுசி தனது ஆயுதத்தைப் பிரயோகித்தான்.

பதம் 8.11.31 : ராஜனே, சுவர்க்க ராஜனான இந்திரன், மிகவும் சக்தி வாய்ந்த இச்சூலம் ஓர் எரி நட்சத்திரத்தைப் போல் சுடர்விட்டுக் கொண்டு பூமியை நோக்கி விழுவதைக் கண்டு உடனே அதைத் தமது அம்புகளால் கண்டந்துண்டமாக வெட்டித் தள்ளினார். பிறகு மிகவும் கோபத்துடன் நமுச்சியின் தலையைத் துண்டித்துவிடுவதற்காக தமது வஜ்ராயுதத்தினால் நமுச்சியின் தோளைத் தாக்கினார்.

பதம் 8.11.32 : தேவேந்திரன் நமுச்சியை நோக்கித் தமது வஜ்ராயுதத்தை பெரும் சக்தியுடன் வீசி எறிந்த போதிலும், அதனால் அவனுடைய தோலைக் கூட துளைக்க முடியவில்லை. விருத்ராசுரனின் உடலைத் துளைத்த பெருமைக்குரிய வஜ்ராயுதத்தினால் நமுசியினுடைய கழுத்தின் தோலைச் சிறிதும் காயப்படுத்த முடியவில்லை என்பது மிகவும் அற்புதமாகத்தான் இருக்கிறது.

பதம் 8.11.33 : எதிரியிடமிருந்து வஜ்ராயுதம் திரும்பி வருவதைக் கண்ட இந்திரன் மிகவும் அச்சமடைந்தார். இது ஏதேனும் உயர் சக்தியினால் விளைந்திருக்கக் கூடுமோ என்று ஆச்சரியப்படத் துவங்கினார்.

பதம் 8.11.34 : இந்திரன் எண்ணினார்: முன்பு, பல மலைகள் இறக்கைகளுடன் ஆகாயத்தில் பறக்கும் போது பூமியில் விழுந்து மக்களைக் கொன்றன. அப்போது இதே வஜ்ராயுதத்தால்தான் அவற்றின் இறக்கைகளை நான் துண்டித்தேன்.

பதம் 8.11.35 : விருத்ராசுரன், துவஷ்டனால் இயற்றப்பட்ட தவங்களின் சாராம் சமாக இருந்தான். அவனையும் கூட வஜ்ராயுதம் கொன்று விட்டது. உண்மையில், அவன் மட்டுமல்லாமல் எல்லா வகையான ஆயுதங்களாலும் காயப்படுத்தவும் முடியாத தோலையுடைய, பலம் வாய்ந்த பல்வேறு வீரர்களும் கூட, இதே வஜ்ராயுதத்தினால் கொல்லப்பட்டனர்.

பதம் 8.11.36 : ஆனால் இப்போது, இதே வஜ்ராயுதம் ஓர் அற்ப அசுரனுக்கெதிராகப் பிரயோகிக்கப்பட்ட போதிலும், இது பலனற்றதாகிவிட்டது. ஆகவே, இது ஒரு பிரம்மாஸ்திரத்திற்கு ஈடாக இருந்தது என்றாலும், இப்போது இது சாதாரண ஒரு தடியைப் போல் பயனற்றதாகி விட்டது. எனவே இனிமேல் இதை நான் வைத்திருக்கப் போவதில்லை.

பதம் 8.11.37 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: வருத்தத்திற்குள்ளான இந்திரன் இவ்வாறு கவலைப்படும்போது, கெட்ட நிமித்தங்களுள்ள, உருவமற்ற குரலொன்று ஆகாயத்திலிருந்து கூறியது, “அசுரனான இந்த நமுசியை உலர்ந்த அல்லது ஈரமான எப்பொருளாலும் அழிக்க முடியாது.”

பதம் 8.11.38 : அசரீரி மேலும் கூறியது, ‘இந்திரனே, உலர்ந்த அல்லது ஈரமான ஆயுதம் எதனாலும் ஒருபோதும் கொல்லப்படமாட்டான் என்ற வரத்தை இந்த அசுரனுக்கு நான் கொடுத்திருக்கிறேன். ஆகவே அவனைக் கொல்வதற்கான வேறொரு வழியைப் பற்றி நீ யோசிக்க வேண்டும்.”

பதம் 8.11.39 : அசரீரியின் குரலைக் கேட்டபின், இந்திரன் எப்படி அசுரனைக் கொல்வது என்பதைப் பற்றி மிக்க கவனத்துடன் சிந்திக்கத் துவங்கினார். பிறகு நுரைதான் இதற்கு வழி என்பதை அவர் கண்டார். ஏனெனில் அது ஈரமானதுமல்ல, உலர்ந்ததுமல்ல.

பதம் 8.11.40 : இவ்வாறாக, சுவர்க்க ராஜனான இந்திரன், உலர்ந்ததாகவோ அல்லது ஈரமாகவோ இல்லாத, நுரையாலான ஓர் ஆயுதத்தால் நமுசியின் தலையைத் துண்டித்து விட்டார். பிறகு கிட்டத்தட்ட இந்திரனை மூடிவிடும் அளவிற்கு மாலைகளையும், மலர்களையும் அவர் மீது பொழிந்து, முனிவர்கள் அனைவரும் உயர்ந்த புருஷராகிய இந்திரனை திருப்திப்படுத்தினர்.

பதம் 8.11.41 : விஸ்வாவஸு மற்றும் பராவஸு எனும் கந்தர்வர்களின் இரு தலைவர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் பாடினர். தேவர்களின் பேரிகைகள் முழங்கின. அப்ஸரர்கள் ஆனந்தத்துடன் நடனமாடினர்.

பதம் 8.11.42 : வாயு, அக்னி, வருணன் மற்றும் பிற தேவர்கள் ஆகியோர், ஒரு காட்டில் சிங்கங்கள் மானைக் கொல்வதைப் போல், தங்களை எதிர்த்த அசுரர்களைக் கொல்ல ஆரம்பித்தனர்.

பதம் 8.11.43 : ராஜனே, நேரிடப்போகும் அசுரர்களின் மொத்த அழிவைக் கண்ட பிரம்ம தேவர், நாரதருடன் ஒரு செய்தியை அனுப்பினார். நாரதரும் தேவர்களின் போரை நிறுத்துவதற்காக அவர்கள் முன் சென்றார்.

பதம் 8.11.44 : மகா முனிவரான நாரதர் கூறினார்: தேவர்களாகிய நீங்கள் அனைவரும் முழுமுதற் கடவுளான நாராயணரின் கரங்களால் பாதுகாக்கப்படுகிறீர்கள். அவரது கருணையால் அமிர்தத்தையும் நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். ஸ்ரீதேவியின் கருணையால் எல்லா விதத்திலும் நீங்கள் பெருமைக்குரியவர்களாக விளங்குகிறீர்கள். ஆகவே, தயவு செய்து இப்போரை நிறுத்திவிடுங்கள்.

பதம் 8.11.45 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நாரதரின் வார்த்தைகளை ஏற்று, தேவர்கள் தங்களுடைய கோபத்தைக் கைவிட்டு போரை நிறுத்தினர். தங்களுடைய ஆதரவாளர்களால் போற்றப்பட்டவாறு, அவர்களுடைய சுவர்க்கலோகங்களுக்கு அவர்கள் திரும்பிச் சென்றனர்.

பதம் 8.11.46 : போர்க்களத்தில் எஞ்சியிருந்த அசுரர்கள், நாரத முனிவரின் கட்டளையைப் பின்பற்றி, ஆபத்தான நிலையிலிருந்த பலி மகாராஜனை அஸ்தகிரி எனும் மலைக்கு தூக்கிச் சென்றனர்.

பதம் 8.11.47 : அங்கு அந்த மலையின் மீது, தங்களது தலைகளையும், முண்டங்களையும் மற்ற அங்கங்களையும் இழந்து விடாத உயிரற்ற அசுர வீரர்கள் அனைவரையும் சுக்ராசார்யர் உயிர்ப்பித்தார். இதை அவர் சஞ்சீவினி எனப்படும் தனது சொந்த மந்திரத்தினால் அடைந்தார்.

பதம் 8.11.48 : பலி மகாராஜன் பிரபஞ்ச விவகாரங்களின் மிகுந்த அனுபவம் பெற்றிருந்தார். அவர் சுக்ராச்சார்யரின் கருணையால் தனது புலன்களின் உணர்வையும், ஞாபக சக்தியையும் மீண்டும் பெற்ற போது, நடந்ததையெல்லாம் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆகவே, அவர் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அதற்காக அவர் வருத்தப்படவில்லை.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare