அத்தியாயம் – 10
தேவசுரர்களின் போர்
பதம் 8.10.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, அசுரர்களும், தைத்யர்களும், முழுகவனத்துடனும், முயற்சியுடனும் கடலைக் கடைவதில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் பரமபுருஷ பகவானாகிய கிருஷ்ணரின் அல்லது வாசுதேவனின் பக்தர்களாக இல்லாததால், அவர்களால் அமிர்தத்தைப் பருக முடியவில்லை.

பதம் 8.10.2 : ராஜனே, கடலைக் கடைந்து, தமது பிரிய பக்தர்களாகிய தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுக்கும் விவகாரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தபின், பரமபுருஷர் அவர்கள் அனைவரது முன்னிலையிலும் கருடனால் தூக்கிச் செல்லப்பட்டவாறு அவரது சொந்த வசிப்பிடத்திற்குச் சென்றார்.

பதம் 8.10.3 : தேவர்களின் வெற்றியையும், உயர்ந்த சக்தியையும் அசுரர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இவ்வாறாக உயர்த்திய ஆயுதங்களுடன் அவர்கள் தேவர்களை நோக்கி முன்னேறிச் செல்ல ஆரம்பித்தனர்.

பதம் 8.10.4 : அதன்பிறகு, அமிர்தத்தைப் பருகி புத்துணர்வைப் பெற்றவர்களும், எப்பொழுதும் நாராயணரின் தாமரைப் பாதங்களில் புகலிடம் கொண்டவர்களுமான தேவர்கள், போர் செய்யும் உற்சாகத்துடன் தங்களது பல்வேறு ஆயுதங்களைப் பாவித்து, அசுரர்களை எதிர்த்துத் தாக்கினர்.

பதம் 8.10.5 : ராஜனே, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில், பாற்கடலின் கரையில் ஒரு பயங்கரமான போர் மூண்டது. போர் மிகவும் கடுமையாக இருந்ததால், அதைப் பற்றிக் கேட்பதுவே ஒருவரை மெய் சிலிர்க்கச் செய்யும்.

பதம் 8.10.6 : அந்த யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரு பிரிவினருமே இதயத்தில் பெரும் கோபங்கொண்டிருந்தனர். விரோதத்துடன் அவர்கள் உடைவாள்களாலும், அம்புகளாலும், பலவிதமான பிற ஆயுதங்களாலும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.

பதம் 8.10.7 : சங்குகள், ஊது கொம்புகள், மிருதங்கள், பேரிகைகள் மற்றும் டமாரங்களின் ஓசைகள் மட்டுமின்றி, யானைகள், குதிரைகள் மேலும் இரத மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோரால் எழுப்பப்பட்ட ஓசைகளும் பேரொலி எழுப்பின.

பதம் 8.10.8 : அந்த போர்க்களத்தில், இரத வீரர்கள் எதிரி இரத வீரர்களுடனும், காலாட்படை வீரர்கள் எதிரி காலாட்படை வீரர்களுடனும், குதிரைப் படைவீரர்கள் எதிரி குதிரைப் படைவீரர்களுடனும், யானைப் படைவீரர்கள் எதிரி யானைப்படை வீரர்களுடனும் போர் செய்தனர். சம அந்தஸ்து உள்ளவர்களுக்கிடையில் போர் மூண்டது.

பதம் 8.10.9 : சில வீரர்கள் ஒட்டகங்களின் மீதும், சிலர் யானைகளின் மீதும், சிலர் கழுதைகளின் மீதும், சிலர் புலிகளின் மீதும், சிலர் சிங்கங்களின் மீதும் அமர்ந்தவாறு யுத்தம் செய்தனர். இவ்விதமாக அவர்கள் எல்லோரும் போரில் ஈடுபட்டனர்.

பதங்கள் 8.10.10 – 8.10.12 : ராஜனே, சில வீரர்கள் கழுகுகள், பருந்துகள், மற்றும் பாஸ எனப்படும் பறவைகளின் மீதும் அமர்ந்து போரிட்டனர். சிலர் பெரிய திமிங்கிலங்களையே விழுங்கிவிடக்கூடிய திமிங்கிலங்களின் மீதமர்ந்து போரிட்டனர். சிலர் சரபர்கள் மீதும், மற்றும் சிலர் எருமை, காண்டாமிருகம், பசு, எருது, காட்டுப்பசு மற்றும் அருணங்கள் ஆகியவற்றின் மீதும் அமர்ந்து யுத்தம் செய்தனர். மற்றவர்கள் குள்ளநரிகள், எலிகள், பல்லிகள், முயல்கள், மனிதர்கள், ஆடுகள், கருநிற மான்கள், அன்னப்பறவைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் ஆகியவற்றின் மீதமர்ந்து யுத்தம் செய்தனர். இவ்விதமாக, நீர், நில மற்றும் ஆகாய பிராணிகளின் மீதும், உருக்குலைந்த உடல்களைக் கொண்ட மிருகங்களின் மீதும் அமர்ந்தவாறு, இரு சேனைகளும் ஒருவரையொருவர் நோக்கியவாறு முன்னோக்கிச் சென்றனர்.

பதங்கள் 8.10.13 – 8.10.15 : ராஜனே, பாண்டு மகாராஜனின் வம்சத்தவரே, தேவர் மற்றும் அசுர வீரர்கள், மேல்கட்டுகள், பலவித வர்ணங்கள் கொண்ட கொடிகள், மற்றும் விலையுயர்ந்த இரத்தினங்களும், முத்துக்களும் பதிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட குடைகள் ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள், மயிலிறகு விசிறிகளாலும், மற்ற விசிறிகளாலும் மேலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். தங்களின் மேலாடைகளும், கீழாடைகளும் இளங்காற்றில் படபடக்க, அவ்வீரர்கள் இயல்பாகவே மிகவும் அழகாகக் காணப்பட்டனர். மேலும் பிரகாசமான சூரிய ஒளியில் அவர்களின் கேடயங்களும், ஆபரணங்களும் கூரிய, சுத்தமான ஆயுதங்களும் பளபளத்தன. இவ்வாறாக போர் வீரர்களின் இருவரிசைகள், நீரினங்களின் கூட்டத்தைக் கொண்ட இரு கடல்களைப் போல் காணப்பட்டன.

பதங்கள் 8.10.16 – 8.10.18 : அப்போரில், மிகவும் புகழ்பெற்ற சேனாதிபதியும், விரோசனரின் புதல்வருமாகிய பலி மகாராஜன், வைஹாயஸம் எனும் ஓர் அற்புத விமானத்தில் வீற்றிருந்தார். ராஜனே, அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்த அவ்விமானம் மயன் எனும் அசுரனால் செய்யப்பட்டதாகும். அது எல்லா வகையான சண்டைகளுக்கும் ஏற்ற ஆயுதங்களால் பொருத்தப்பட்டிருந்தது. அது கற்பனைக்கு எட்டாததும், விவரிக்க முடியாததுமாகும். உண்மையில் அது சிலசமயங்களில் கண்ணுக்குப் புலப்படுவதாயும், சில சமயங்களில் புலப்படாததாயும் இருந்தது. அவ்விமானத்தில், ஓர் அழகிய பாதுகாப்பான குடையின் கீழ் அமர்ந்திருந்த பலி மகாராஜன் மிகச்சிறந்த சாமரங்களால் விசிறப்பட்டார். தனது இராணுவத் தலைவர்களாலும், சேனாதிபதிகளாலும் சூழப்பட்டிருந்த அவர், மாலையில் உதயமாகி எல்லாத்திசைகளையும் ஒளிமயமாக்கும் சந்திரனைப் போலவே காணப்பட்டார்.

பதங்கள் 8.10.19 – 8.10.24 : பலி மகாராஜனை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்தவாறு அசுரர்களின் சேனாதிபதிகளும், படைத்தலைவர்களும் முறையே அவரவர் இரதங்களில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கிடையில் பின் வரும் அசுரர்கள் இருந்தனர்: நமுசி, சம்பரன், பாணன், விப்ரசித்தி, அயோமுகன், துவிமூர்தன், காலநாபன், ப்ரஹேதி, ஹேதி, இல்வலன், சகுனி, பூதஸந்தாபன், வஜ்ரதம்ஷ்ட்ரன், விரோசனன், ஹயக்ரீவன், சங்குசிரன், கபிலன், மேகதுந்துபி, தாரகன், சக்ரத்ருக், சும்பன், நிசும்பன், ஜம்பன், உத்கலன், அரிஷ்டன், அரிஷ்டனேமி, திரிஹபுராதிபன், மயன், பௌலோமன் மகன்கள், காலேயர்கள் மற்றும் நிவாதகவசன். இந்த அசுரர்கள் அனைவரும் தங்களுக்குச் சேர வேண்டிய அமிர்தத்தைப் பறிகொடுத்து, கடலைக் கடையும் உழைப்பில் மட்டும் பங்கு கொண்டவர்கள். இப்போது அவர்கள் தேவர்களை எதிர்த்துப் போரிட்டனர். மேலும் அவர்களது படைகளை உற்சாகப்படுத்துவதற்காக, அவர்கள் சிங்கங்களின் கர்ஜனையைப் போன்ற பெரும் ஓசையை எழுப்பி, சங்குகளை உரத்த சப்தத்துடன் ஊதினர். தமது கொடிய எதிரிகளின் இந்நிலையைக் கண்ட பலபித் என்ற தேவேந்திரன், மிகவும் கோபமடைந்தார்.

பதம் 8.10.25 : எங்கும் செல்லக்கூடியதும், தாராளமாக பொழிவதற்காக நீரையும், சாராயத்தையும் சேமிப்பில் வைத்திருப்பதுமான ஐராவத யானையின் மீது இந்திரன் வீற்றிருந்தார். அவர், நீர்த்தேக்கங்களுள்ள உதயகிரியிலிருந்து உதிக்கும் சூரியனைப் போல் காணப்பட்டார்.

பதம் 8.10.26 : கொடிகளாலும், ஆயுதங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பலவகையான வாகனங்களின் மீது வீற்றிருந்த தேவர்கள், சுவர்க்க ராஜனான இந்திரனைச் சூழ்ந்திருந்தனர். அவர்களுக்கிடையில் வாயு, அக்னி, வருணன் மற்றும் அநேக கிரகங்களின் ஆளுனர்கள் அவர்களது சகாக்கள் ஆகியோர் இருந்தனர்.

பதம் 8.10.27 : தேவர்களும், அசுரர்களும் ஒருவரையொருவர் அணுகி, இதயத்தைத் துளைக்கும் வார்த்தைகளால் அவமானப்படுத்தினார். பிறகு அவர்கள் இன்னும் அருகில் சென்று இருவர் இருவராக நேருக்கு நேராக போரிடத்துவங்கினர்.

பதம் 8.10.28 : ராஜனே, பலி மகாராஜன் இந்திரனுடனும், கார்த்திகேயன் தாரகனுடனும், வருணன் ஹேதியுடனும், மித்திரன் ப்ரஹேதியுடனும் யுத்தம் செய்தனர்.

பதம் 8.10.29 : யமராஜன் காலநாபனுடனும், விஸ்வகர்மா மய தானவனுடனும், த்வஸ்டன் சம்பரனுடனும், போரிட்டனர். சூரிய தேவன் விரோசனனுடனும்

பதங்கள் 8.10.30 – 8.10.31 : அபராஜிதன் எனும் தேவன் நமுசியுடனும், இரு அஸ்வினி சகோதரர்கள் வ்ருஷபர்வனனுடனும் யுத்தம் செய்தனர். சூரிய தேவன் பானனை தலைமையாகக் கொண்ட பலிமகாராஜனின் நூறு மகன்களுடன் யுத்தம் செய்தார். சந்திர தேவன் ராகுவுடன் போரிட்டார். வாயு தேவன் புலோமனுடன் யுத்தம் செய்தார். மேலும் சும்ப, நிசும்பர்கள் பத்ரகாளி என்றழைக்கப்படும், மிகவும் சக்திவாய்ந்த ஜடச் சக்தியான, துர்காதேவியுடன் யுத்தம் செய்தனர்.

பதங்கள் 8.10.32 – 8.10.34 : பரீட்சித்து மகாராஜனே, எதிரிகளை அடக்குபவரே (அரிந்தம). சிவபெருமான் ஜம்பனுடனும், விபாவஸு மகிஷாசுரனுடனும் யுத்தம் செய்தார். இல்வலன், தனது சகோதரன் வாதாபியுடன் இணைந்து, பிரம்மதேவரின் புத்திர்களோடு போரிட்டான். துர்மர்ஷன் மன்மதனுடனும், உத்கலன் எனும் அசுரன் மாத்ருகா தேவதைகளுடனும், பிருஹஸ்பதி சுக்ராசார்யருடனும், சனி நரகாசுரனுடனும் யுத்தம் செய்தனர். மருக்கள் நிவாதகவசனுடனும், வசுக்கள் காலகேய அசுரர்களுடனும், விஸ்வெதேவ தேவர்கள் பெளலோம அசுரர்களுடனும், மற்றும் ருத்திரர்கள் கோபத்திற்குப் பலியான குரோதவஸ அசுரர்களுடனும் யுத்தம் செய்தனர்.

பதம் 8.10.35 : இவ்வெல்லா தேவர்களும், அசுரர்களும் போர் புரியும் உணர்வுடன் போர்க்களத்தில் கூடி, பெரும்பலத்துடன் ஒருவரையொருவர் தாக்கினர். வெற்றியை எதிர்நோக்கிய அவர்களனைவரும், தீட்டிய அம்புகளுடனும், உடைவாள்களுடனும் மற்றும் ஈட்டிகளுடனும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கியவாறு இருவர் இருவராகப் போர் புரிந்தனர்.

பதம் 8.10.36 : அவர்கள் புசுண்டி, சக்கரம், கதை, ருஷ்டி, பட்டிசம், சக்தி, உல்முகம், ப்ராஸம், பரஸ்வதம், நிஸ்த்ரிம்சம், ஈட்டி, பரிகம், முத்கரம் மற்றும் பிந்திபாலம் போன்ற ஆயுதங்களை உபயோகித்து ஒருவரையொருவர் சிரச்சேதம் செய்தனர்.

பதம் 8.10.37 : யானைகள், குதிரைகள், இரதங்கள், சாரதிகள், காலாட்படை வீரர்கள் மற்றும் பலவகைப்பட்ட வாகனங்களும் அவற்றின் சாரதிகளும் கண்டதுண்டமாக வெட்டப்பட்டனர். வீரர்களின் கரங்கள், தொடைகள், கழுத்துக்கள் மற்றும் கால்கள் ஆகியவை துண்டிக்கப்பட்டன. மேலும் அவர்களது கொடிகள், வில்கள், கவசங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவையும் கிழித்தெறியப்பட்டன.

பதம் 8.10.38 : அசுரர்கள் மற்றும் தேவர்களுடைய கால்களும், இரதங்களின் சக்கரங்களும் பூமியின் மேல் அழுந்தியதால் ஆகாயத்தில் புழுதி வேகமாகப் பரவி, ஒரு புழுதி மேகத்தை ஏற்படுத்தி சூரியன் வரையுள்ள விண்வெளியின் எல்லாத் திசைகளையும் மறைத்தது. ஆனால் புழுதியைத் தொடர்ந்து விண்வெளி எங்கும் இரத்தத் துளிகள் தெளிக்கப்பட்ட போது, புழுதி மேகத்தால் தொடர்ந்து ஆகாயத்தில் மிதக்க முடியவில்லை.

பதம் 8.10.39 : போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, போர்க்களத்தில் வீரர்களின் துண்டிக்கப்பட்ட தலைகள் இங்குமங்குமாக சிதறிக் கிடந்தன. அவற்றிலிருந்து கண்கள் இன்னமும் கடுமையாக நோக்கிய வண்ணமும், பற்கள் கோபத்தால் உதடுகளைக் கடித்தவண்ணமும், இருந்தன. துண்டிக்கப்பட்ட இத்தலைகளிலிருந்த கிரீடங்களும், குண்டலங்களும் சிதறிக் கிடந்தன. அதைப்போலவே, ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும், பல்வேறு ஆயுதங்களைப் பற்றிய வண்ணமும் இருந்த பல கரங்கள் இங்குமங்குமாக சிதறிக் கிடந்தன. அவ்வாறுதான், யானைகளின் தும்பிக்கைகளை ஒத்த பல கால்களும், தொடைகளும் கூட சிதறிக் கிடந்தன.

பதம் 8.10.40 : போர்க்களத்தில் தலைகளற்ற பல முண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. கரங்களில் ஆயுதங்களைப் பற்றியிருந்த, பேய்களைப் போன்ற அம்முண்டங்களால், விழுந்து கிடந்த தலைகளிலுள்ள கண்களின் மூலமாகக் காண முடிந்தது. இவ்வாறாக எதிரி வீரர்களை அந்த முண்டங்கள் தாக்கின.

பதம் 8.10.41 : பலி மகாராஜன் பிறகு பத்து அம்புகளால் இந்திரனையும், மூன்று அம்புகளால் இந்திரனின் வாகனமான ஐராவத யானையையும் தாக்கினார். நான்கு அம்புகளால் ஐராவதத்தின் கால்களைக் காவல் புரிந்த நான்கு குதிரை வீரர்களையும், ஒரு அம்பால் யானைப் பாகனையும் அவர் தாக்கினார்.

பதம் 8.10.42 : பலி மகாராஜனின் அம்புகள் அவரை அடையும் முன்பே, அம்புகளைக் கையாள்வதில் நிபுணராகிய தேவேந்திரன், புன்னகை செய்து மிகவும் கூரானவையும், பல்லம் எனப்படுபவையுமான மற்றொரு வகையான அம்புகளால் அவற்றை நிர்மூலமாக்கினார்.

பதம் 8.10.43 : இந்திரனின் மிகச்சிறந்த போர்த்திறமையை பலி மகாராஜன் கண்டபோது, பொங்கி எழும் கோபத்தை அவரால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வாறாக, பெரும் கொள்ளிக்கட்டையை போல் கொழுந்து விட்டெரியும், சக்தி எனப்படும் மற்றொரு ஆயுதத்தை அவர் எடுத்தார். ஆனால் அவ்வாயுதம் பலியின் கரத்தில் இருக்கும்போதே இந்திரன் அதைக் கண்ட துண்டமாக வெட்டித் தள்ளினார்.

பதம் 8.10.44 : அதன்பிறகு, பலி மகாராஜன் ஈட்டி, ப்ராஸம், தொமரம், ருஷ்டி மற்றும் பிற ஆயுதங்கள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக உபயோகித்தார். ஆனால் அவர் எடுத்த ஆயுதங்கள் அனைத்தையும் இந்திரன் உடனே கண்டதுண்டமாக வெட்டித் தள்ளினார்.

பதம் 8.10.45 : எனதருமை ராஜனே, பலி மகாராஜன் பிறகு மறைந்து, அசுரத்தனமான மாயாஜாலங்களின் உதவியை நாடினார். பிறகு மாயாஜாலத்தால் உண்டாக்கப்பட்ட பெரிய மலையொன்று தேவப் படைகளின் தலைக்கு மேல் தோன்றியது.

பதம் 8.10.46 : ஒரு காட்டுத்தீயில் கொழுந்து விட்டெரிவது போன்ற மரங்கள் அம்மலையிலிருந்து விழுந்தன. கடப்பாரையைப் போன்ற கூர்முனைகளைக் கொண்ட கல்லின் துணுக்குகளும் கூட தேவப்படைகளின் தலைகளின் மீது விழுந்து நசுக்கின.

பதம் 8.10.47 : அனைத்தையும் நொறுக்கித் தள்ளியவாறு, தேள்களும், பெரிய பாம்புகளும் மற்றும் வேறு பல விஷ மிருகங்களும், சிங்கங்கள், புலிகள், காட்டுப் பன்றிகள் மற்றும் மிகப் பெரிய யானைகள் ஆகிய அனைத்தும் தேவப்படை வீரர்களின் மீது விழத் துவங்கின.

பதம் 8.10.48 : ராஜனே, பிறகு பல நூற்றுக்கணக்கான ஆண், பெண் காட்டேரிகள், கரங்களில் திரிசூலகங்களை ஏந்தியவாறு, முற்றிலும் நிர்வாணமாகத் தோன்றி,”அவர்களைக் கண்ட துண்டமாக வெட்டு! குத்து!” என்று கூச்சலிட்டன.

பதம் 8.10.49 : பிறகு பேய்க்காற்றுகளால் அலைக்கழிக்கப்பட்ட கொடூரமான மேகங்கள், ஆகாயத்தில் தோன்றின. ‘கடகட’ வென்று மிகவும் கடுமையாக உருளும் இடி முழக்கத்துடன், அவை எரியும் நிலக்கரியைப் பொழிய ஆரம்பித்தன.

பதம் 8.10.50 : பலி மகாராஜனால் உண்டாக்கப்பட்ட, அழிவை விளைவிக்கக் கூடிய பயங்கரமான நெருப்பு ஒன்று தேவ வீரர்கள் அனைவரையும் எரிக்கத் துவங்கியது. வேகமான காற்றுகளுடன் சேர்த இந்நெருப்பு அழிவுக் காலத்தில் தோன்றும் ஸம்வர்தக நெருப்பைப் போல் பயங்கரமானதாகக் காணப்பட்டது.

பதம் 8.10.51 : அதன்பிறகு, சுழற் காற்றினால் சலனமடைந்த நீர்ச்சுழல்களும், கடலலைகளும், கொடூரமான ஒரு வெள்ளப் பெருக்குடன் எல்லா இடங்களிலும், எல்லோருடைய கண் முன்னும் தோன்றின.

பதம் 8.10.52 : கண்ணுக்குப் புலப்படாத அசுரர்கள் மாயாஜால வித்தைகளில் நிபுணர்களாவர். அவர்களால் இத்தகைய மாயா ஜாலமான சூழ்நிலை உருவாக்கப்பட்டபோது, தேவர்களின் வீரர்கள் வருத்தமடைந்தனர்.

பதம் 8.10.53 : ராஜனே, அசுரர்களின் செயல்களைத் தடுக்கக் கூடிய எந்த வழியையும் தேவர்களால் கண்டுபிடிக்க முடியாதபோது, அவர்கள் பிரபஞ்சத்தைப் படைத்தவரான பரமபுருஷ பகவானை இதய பூர்வமாகத் தியானித்தனர். பகவானும் பிறகு உடனே தோன்றினார்.

பதம் 8.10.54 : புதிதாக மலர்ந்த தாமரை இதழ்களையொத்த கண்களை உடையவரான பரம்புருஷ பகவான், தமது தாமரைப் பாதங்களை கருடனின் தோள்கள் மீது பரப்பியவாறு அமர்ந்திருந்தார். பரமபுருஷர் மஞ்சள் நிற ஆடையை அணிந்திருந்தார். அவர் கௌஸ்துப மணியாலும், ஸ்ரீ தேவியாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தார். மேலும் விலைமதிப்பற்ற கிரீடத்தையும், குண்டலங்களையும் அணிந்திருந்த பரமபுருஷர், எட்டு கரங்களில் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தியவராய் தேவர்களின் முன் காட்சியளித்தார்.

பதம் 8.10.55 : கனவு காண்பவர் விழித்தெழும்போது, கனவில் தோன்றிய ஆபத்துகள் மறைந்து விடுவதைப் போலவே, போர்க்களத்தினுள் பரமபுருஷ பகவான் புகுந்தவுடனேயே, அவரது தெய்வீகமான வீரியத்தினால், அசுரர்களால் உண்டாக்கப்பட்ட மாயா ஜாலங்கள் அழிக்கப்பட்டன.

பதம் 8.10.56 : ராஜனே, சிம்ம வாகனத்தில் ஏறிவந்த அசுரனான காலனேமி, கருடனால் தூக்கிச் செல்லப்பட்ட பரமபுருஷ பகவான் போர்க்களத்திலிருப்பதைக் கண்டதும், உடனே தனது திரிசூலத்தை எடுத்து அதைச் சுழற்றி கருடனின் தலையைக் குறிவைத்து வீசி எறிந்தான். மூவுலகங்களின் அதிபதியாகிய பரமபுருஷ பகவான் ஸ்ரீ ஹரி, உடனடியாக அந்த திரிசூலத்தைப் பற்றி, அதே ஆயுதத்தால் எதிரியான காலனேமியையும், அவனது வாகனமாகிய சிங்கத்தையும் கொன்றார்.

பதம் 8.10.57 : அதன்பிறகு, மாலீ, ஸுமாலீ எனும் இரு மிகவும் சக்தி வாய்ந்த அசுரர்கள் பரமபுருஷரால் கொல்லப்பட்டனர். பெருமான் தமது சக்கரத்தினால் அந்த அசுரர்களின் தலைகளைத் துண்டித்தார். பிறகு மால்யவான் எனும் மற்றொரு அசுரன் பகவானைத் தாக்கினான். சிங்கத்தைப் போல் கர்ஜித்துக் கொண்டிருந்த அந்த அசுரன், கூர்மையான தனது கதையால், முட்டைகளிலிருந்து பிறக்கும் பறவைகளின் அரசனாகிய கருடனைத் தாக்கினான். ஆனால் ஆதி புருஷராகிய பரம புருஷ பகவான் தமது சக்கரத்தைப் பாவித்து அந்த அசுரனின் தலையையும் துண்டித்து விட்டார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare