அத்தியாயம் – 8
பகவான் நரசிம்மர்
அசுரராஜனை வதம் செய்தல்
பதம் 7.8.1
ஸ்ரீ-நாரத உவாச
அத-தைத்ய-ஸுதா ஸர்வே ஸ்ருத்வா தத்-அனுவர்ணிதம்
ஜக்ருஹுர் நிரவத்யத்வான் நைவ குரு-அனுசிக்ஷிதம்

ஸ்ரீ-நாரத: உவாச-ஸ்ரீ நாரத முனி கூறினார்; அத-பிறகு ; தைத்ய- ஸுதா:-அசுர குமாரர்கள் (பிரகலாதரின் வகுப்புத்தோழர்கள்) ; ஸர்வே – எல்லோரும்; ஸ்ருத்வா-கேட்டு; தத்—அவரால் (பிரகலாதரால்); அனுவர்ணிதம்—பக்தி வாழ்வின் நெறிமுறைகளை; ஜக்ருஹு:- ஏற்றுக்கொண்டனர்; நிரவத்யத்வாத்— அவ்வுபதேசங்களின் மேலான உபயோகத்தினால்; ந-இல்லை; ஏவ – நிச்சயமாக; குரு-அனுசிக்ஷிதம் —அவர்களது ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டவை.

நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: அசுர குமாரர்கள் அனைவரும் பிரகலாத மகாராஜனின் திவ்யமான உபதேசங்களை சிரமேற் கொண்டு அவர்களுடைய ஆசிரியர்களான சண்டன் மற்றும் அமர்க்கனின் பௌதிக போதனைகளை நிராகரித்தனர்.

பதம் 7.8.2
அதாசார்ய-ஸுதஸ் தேஷாம் புத்திம் ஏகாந்த-ஸம்ஸ்திதாம்
ஆலக்ஷ்ய பீதஸ் த்வரிதோ ராஜ்ஞா ஆவேதயத் யதா

அத – பிறகு: ஆசார்ய-ஸுத:- சுக்ராசாரியரின் மகன்; தேஷாம் -அவர்களின் (அசுர குமாரர்களின்); புத்திம்-புத்தியை; ஏகாந்த – ஸம்ஸ்திதாம் – பக்தித்தொண்டாகிய ஒரே விஷயத்தில் ஸ்தாபித்தனர்; ஆலக்ஷ்ய—உணர்ந்து அல்லது அனுபவப்பூர்வமாகக் கண்டு: பீத:- அச்சமடைந்து; த்வாரித:- விரைவாக; ராஜ்ஞே -அரசனிடம் (இரண்யகசிபுவிடம்); ஆவேதயத் தெரிவித்தனர்; யதா-முறைப்படி.

அசுர குமாரர்களான எல்லா மாணவர்களும் பிரகலாத மகாராஜனின் சகவாசத்தினால் கிருஷ்ண உணர்வில் முன்னேறி வருவதைக் கண்ட சுக்ராசாரியரின் மகன்களான சண்டனும் அமர்க்கனும், அச்சமடைந்து, அசுரராஜனிடம் சென்று நிலைமையை உள்ளபடி தெரிவித்தனர்.

பதங்கள் 7.8.3 – 7.8.4
கோபாவேச-சலத்-காத்ர புத்ரம் ஹந்தும் மனோ ததே
க்ஷிப்த்வா புருஷயா வாசா ப்ரஹ்ராதம் அதத்-அர்ஹணம்

ஆஹேக்ஷமான: பாபேன திரஸ்சீனேன சக்ஷுஷா
ப்ரஸ்ரயாவனதம் தாந்தம் பத்தாஞ்ஜலிம் அவஸ்திதம்
ஸர்ப: பதாஹத இவ ஸ்வஸன் ப்ரக்ருதி-தாருண:

கோப – ஆவேச- கோபாவேசத்தினால்; சலத்-நடுங்க; காத்ர:- முழு உடலும்: புத்ரம்-தன் மகனை; ஹந்தும்-கொன்றுவிட; மன:— மனதில்; ததே-தீர்மானித்து; க்ஷிப்த்வா-திட்டி; பருஷயா_மிகவும் கடுமையான; வாசா—வார்த்தைகளால்; ப்ரஹ்ராதம்- பிரகலாதரை; அ-தத்—அர்ஹணம்—(அவரது உயர்ந்த குணம் மற்றும் இளவயதின் காரணத்தால்) தண்டிக்கத் தகாதவரான; ஆஹ— கூறினான்; ஈக்ஷமாண:- கோபத்துடன் பார்த்துக் கொண்டு; பாபேன—அவனது பாவங்களின் காரணத்தால்; திரஸ்சீனேன—வக்கிரமான; சக்ஷுஷா—கண்களால்; ப்ரஸ்ரய—அவனதம்— அமைதியாகவும்; மென்மையாகவும்; தாந்தம்— அடக்கமாகவும்; பத்த—அஞ்ஜலிம் கைகளைக் கூப்பியப்படி; அவஸ்திம்- இருந்தார்; ஸர்ப:பாம்பு; பத-ஆஹத:-காலால் மிதிபட்ட; இவ-போல்; ஸ்வஸன்-சீறிக் கொண்டு; பிரக்ருதி-இயல்பாகவே; தாருண:-கொடுமை மிக்கவனாக.

நிலைமையைப் புரிந்து கொண்ட இரண்யகசிபு, உடலே நடுங்கும் அளவுக்கு கோபாவேசமடைந்து முடிவில் தன் மகனான பிரகலாதரைக் கொன்றுவிட முடிவு செய்தான். இயற்கையாகவே கொடுமை மிக்கவனாக இரண்யகசிபு, அவமானமடைந்து, காலால் மிதிப்பட்ட பாம்புபோல் சீறத் துவங்கினான். அவனுடைய மகனான பிரகலாதரோ அமைதியாகவும், அடக்கமாகவும், மரியாதையுடனும், புலனடக்கத்துடனும் கைகளைக் கூப்பியபடி இரண்யகசிபுவின் முன் நின்று கொண்டிருந்தார். பிரகலாதரின் வயதுக்கும், நடத்தைக்கும் ஏற்ப அவர் தண்டிக்கப்படக்கூடாதவர் ஆவார். இருப்பினும் இரண்யகசிபு கொடுமைமிக்க வக்கிரக்கண்ணால் பார்த்துக் கொண்டு, பின்வரும் கடுஞ் சொற்களால் அவரைத் திட்டினான்.

பதம் 7.8.5
ஸ்ரீ-ஹிரண்யகசிபுர் உவாச
ஹே துர்வினீத மந்தாத்மன் குல-பேத-காராதம
ஸ்தப்தம் மச்-சாஸனோத்வ்ருத்தம் நேஷ்யே த்வாத்ய யம-க்ஷயம்

ஸ்ரீ ஹிரண்யகசிபு- உவாச இரண்யகசிபு கூறினான்; ஹே-அடே; துர்வினீத விவேகமற்ற; மந்த-ஆத்மன் மூடனே; குல-பேத- கர—குலத்தை அழிக்கப் பிறந்தவனே; அதம- மனிதரில் கடைப்பட்டவனே; ஸ்தப்தம்- மிகவும் பிடிவாதமுள்ளவனே; மத்- சாஸன— என் ஆட்சியிலிருந்து; உத்வ்ருத்தம் -நெறி தவறிச் செல்பவனே; நேஷ்யே—அழைத்துச் செல்வேன்; த்வா-உன்னை; அத்ய—இன்று; யம-க்ஷயம்—மரண தேவனான யமராஜனின் இடத்திற்கு.

இரண்யகசிபு கூறினான்: விவேமற்றவனே, மதி மழுங்கியவனே, குலத்தை அழிக்கப் பிறந்த பதரே, மனிதரில் கடைப்பட்டவனே, என் கட்டளையை மீறியவனான நீ பிடிவாதமுள்ள மூடனாவாய். உன்னை இன்றே யமபுரிக்கு அனுப்பி வைக்கிறேன்.

பதம் 7.8.6
க்ருத்தஸ்ய யஸ்ய கம்பந்தே த்ரயோ லோகா: ஸஹேஸ்வரா:
தஸ்ய மே ‘பீதவன் மூட சாஸனம் கிம் பலோ ‘த்யகா:

க்ருத்தஸ்ய-கோபமடையும்பொழுது; யஸ்ய -எவன்; கம்பந்தே- நடுங்கும்; த்ரய—லோகா:-மூவுலகங்களும்; ஸஹ-ஈஸ்வரா:- அவற்றின் அதிபதிகளுடன்; தஸ்ய-அவனுடைய; மே- என்னுடைய; அபீத—வத்—பயப்படாதவனாக; மூட-மூடனே; சாஸனம்- அதிகாரத்தை ; கிம்—என்ன; பல:-பலம்; அத்யகா:- மீறினாய்.

மூடனே பிரகலாதா, நான் கோபப்படும்பொழுது மூவுலகங்களும் அவற்றின் அதிபதிகளும் நடுங்குகின்றனர் என்பதை நீ அறிவாய். யாருடைய பலத்தினால் அயோக்கியனான நீ, பயமற்றவனாகி என் அதிகாரத்தையும் மீறும் அளவிற்கு இவ்வளவு புத்தியற்றவன் ஆனாய்?

பதம் 7.8.7
ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச
ந கேவலம் மே பவதஸ் ச ராஜன்
ஸ வை பலம் பலினாம் சாபரேஷாம்
பரே ‘வரே ‘மீ ஸ்திர-ஜங்கமா யே
ப்ரஹ்மாதயோ யேன வசம் ப்ரணீதா:

ஸ்ரீ – ப்ரஹ்ராத: உவாச-பிரகலாத மகாராஜன் கூறினார்; ந—இல்லை: கேவலம்- மட்டுமே; மே – என்னுடைய; பவத- தங்களுடைய; ச – மேலும்; ராஜன்—பேரரசே; ஸ:-அவன்; வை—உண்மையில்; பலம் – பலம்; பலினாம்—பலவான்களின்; ச-மேலும்; அபரேஷாம்— மற்றவர்களின்; பரே-உயர்ந்தவர்; அவரே-தாழ்ந்தவர்; அமீ- அவர்கள்; ஸ்திர-ஜங்கமா:-அசையும் அல்லது அசையாத ஜீவராசிகள்; யே-எவர்கள்;ப்ரஹ்ம-ஆதய:-பிரம்மா முதலான; யேன-எவரால்; வசம்- கட்டுப்பாட்டின்கீழ்; ப்ரணீதா:- கொண்டுவரப்படுகின்றனர்.

பிரகலாத மகாராஜன் கூறினார்: அரசே, என்னுடைய பலத்திற்கு மூலம் எதுவோ, அதுவே தங்களுடைய பலத்திற்கும் மூலமாகும். உண்மையில், எல்லா வகையான பலத்திற்கும் ஆதிமூலம் ஒன்றுதான். அவரே எனக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும், மற்றுமுள்ள எல்லா பலசாலிகளுக்கும் ஒரே பலமாக விளங்குகிறார். அவரன்றி எவராலும் எந்த சக்தியையும் பெற முடியாது. பிரம்மதேவர் உட்பட, அசைவன, அசையாதன. உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய அனைவருமே பரமபுருஷரின் பலத்தினால்தான் ஆளப்படுகின்றனர்.

பதம் 7.8.8
ஸ ஈஸ்வர: கால உருக்ரமோ ‘ஸாவ்
ஒஜ: ஸஹ ஸத்வ-பலேந்ரியாத்மா
ஸ ஏவ விஸ்வம் பரம: ஸ்வ-சக்திபி:
ஸ்ருஜதி அவதி அத்தி குண-த்ரயேச:

ஸ:-அவர் (பரமபுருஷர்); ஈஸ்வர:-பரம ஆளுனரான; கால:- கால தத்துவமான; உருக்ரம:-அசாதாரணமான செயல்களைப் புரியும் பகவான்; அஸௌ—அந்த ஒருவர்; ஒஜ -இந்திரிய சக்தியாகவும்; ஸஹ:-மனோ பலமாகவும்; ஸத்வ-உறுதியான; பல- தேக பலமாகவும்; இந்ரிய-புலன்களாகவும்; ஆத்மா-ஆத்மா; ஸ:—அவர்; ஏவ-உண்மையில்; விஸ்வம்-முழு பிரபஞ்சத்தையும்;பரம: பரமானவர்; ஸ்வ-சக்திபி:-அவரது பலவகையான உன்னத சக்திகளினால்; ஸ்ருஜதி-படைக்கிறார்; அவதி-காக்கிறார்; அத்தி- அழிக்கிறார்; குண—த்ரய -ஈச:—பௌதிக குணங்களை ஆள்பவர்.

எவர் பரம ஆளுனராகவும், கால சொரூபமாகவும் இருக்கிறாரோ, அந்த பரமபுருஷரே இந்திரிய சக்தியாவும், மனோபலமாகவும், சரீர பலமாகவும், புலன்களின் உயிர்ச்சக்தியாகவும் இருக்கிறார். அவருடைய செல்வாக்கு எல்லையற்றதாகும். அவரே அனைத்து ஜீவராசிகளிலும் மிகச் சிறந்தவரும், ஜட இயற்கையின் முக்குணங்களை ஆள்பவருமாவார். அவர் தமது சொந்த சக்திகளால் இப்பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்து, காத்து, அழிக்கிறார்.

பதம் 7.8.9
ஜஹி ஆஸுரம் பாவம் இமம் த்வம் ஆத்மன:
ஸமம் மனோ தத்ஸ்வ் ந ஸந்தி வித்விஷ:
ருதே ‘ஜிதாத் ஆத்மன உத்பதே ஸ்திதாத்
தத் தி ஹி அனந்தஸ்ய மஹத் ஸமர்ஹணம்

ஜஹி-விட்டுவிடுங்கள்;ஆஸுரம்— அசுர; பாவம்- மனோபாவத்தை; இமம்-இந்த; த்வம்- நீங்கள்; ஆத்மன:-உங்களுடைய; ஸமம்- சமத்துவமாக; மன:-மனதை; தத்ஸ்வ-செய்து கொள்ளுங்கள்; ந-இல்லை; ஸந்தி-இருக்கிறார்கள்; வித்விஷ:- எதிரிகள்; ருதே-தவிர; அஜிதாத்—கட்டுப்படுத்தாத;ஆத்மன:-மனதை; உத்பதே-விரும்பத்தகாத சுபாவமுடைய தவறாக வழியில்; ஸ்திதாத்-இருப்பதால்; தத் ஹி-அந்த (மனோபாவத்தை); ஹி-உண்மையில்:அனந்தஸ்ய— எல்லையற்ற பகவானின்; மஹத்- மிகச் சிறந்த; ஸமர்ஹணம் -வழிபாட்டு முறையாகும்.

பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: அன்புத் தந்தையே, தயவுசெய்து உங்களுடைய அசுர மனோபாவத்தை விட்டுவிடுங்கள். உங்களுடைய இதயத்தில் நண்பனென்றும், பகைவனென்றும் வித்தியாசம் பாராட்ட வேண்டாம்; அனைவரிடமும் சமநோக்கு உடையவராக இருங்கள். கட்டுப்படுத்தாத, தவறாக வழிநடத்தப்பட்ட மனதைத் தவிர வேறு பகைவன் இவ்வுலகில் இல்லை. அனைவரையும் சமத்துவ நிலையில் காணும்பொழுது, ஒருவன் பகவானைப் பரிபூரணமாக வழிபடும் நிலையை அடைகிறான்.

பதம் 7.8.10
தஸ்யூன் புரா ஷண் ந விஜித்ய லும்பதோ
மன்யந்த ஏகே ஸ்வ-ஜிதா திசோ தச
ஜிதாத்மனோ க்ஞஸ்ய ஸமஸ்ய தேஹினாம்
ஸாதோ: ஸ்வ-மோஹ-ப்ரபவா: குத: பரே

தஸ்யூன்—கள்வர்கள்; புரா -முன்காலத்தில்; ஷட்-ஆறு; ந -இல்லை; விஜித்ய—வென்று; லும்பத:-எல்லா உடைமைகளையும் கவர்ந்து செல்லும்; மன்யந்தே -எண்ணினர்; ஏகே-சிலர்: ஸ்வ- ஜிதா:-வென்றுவிட்டதாக; திச: தச-பத்துத் திசைகளையும்; ஜித -ஆத்மன:-புலன்களை வென்றவன்; ஞஸ்ய- சுற்றறிந்த: ஸமஸ்ய -சமத்துவ நிலையில் இருந்து கொண்டு; தேஹினாம்—எல்லா ஜீவன்களிடமும்; ஸாதோ;-இத்தகைய ஒரு சாதுவின்; ஸ்வ-மோஹ— ப்ரபவா:- சொந்த மாயையினால் உருவாக்கப்படுகின்றனர்; குத:- எங்கு; பரே-எதிரிகள் அல்லது தீய சக்திகள்.

முற்காலத்தில், உடலெனும் செல்வத்தைக் கவர்ந்து செல்லும் ஆறு எதிரிகளை வெல்ல முடியாத, உம்மைப் போன்ற பல முட்டாள்கள் இருந்தனர். அந்த முட்டாள்கள், “பத்துத் திக்குகளிலும் உள்ள எல்லா எதிரிகளையும் நான் வென்றுவிட்டேன்” என்றெண்ணி மிகவும் கர்வம் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவன் ஆறு எதிர்களை வென்று, எல்லா ஜீவன்களிடமும் சமத்துவம் உடையவனாக இருப்பானாயின், அவனுக்கு எதிரிகளே இல்லை. எதிரிகள் அறியாமையிலுள்ள ஒருவனின் கற்பனையில்தான் உருவாகின்றனர்.

பதம் 7.8.11
ஸ்ரீ-ஹிரண்யகசிபுர் உவாச
வ்யக்தம் தீவம் மர்து-காமோ ‘ஸி யோ ‘திமாத்ரம் விசுத்தஸே
முமூர்ஸூணாம் ஹி மந்தாத்மன் நனு ஸ்யுர் விக்லவா கிர:

ஸ்ரீ – ஹிரண்யகசிபு: உவாச-அதிர்ஷ்டசாலியான இரண்யகசிபு கூறினான்; வ்யக்தம்-தெளிவாக; த்வம்- நீ; மர்து—காம:-மரணத்தை விரும்புபவனாக; அஸி-இருக்கிறாய்; ய:-எவனொருவன்; அதிமாத்ரம் -அளவில்லாமல்; விகத்தஸே—(புலன்களைக் கட்டுப்படுத்துவதில் நீ என்னை விடச் சிறந்தவன் என்பது போல்) ஜம்பமடித்துக் கொள்கிறாய்; முமூர்ஷூணாம்- மரண வாயிலில் இருப்பவனின்; ஹி- உண்மையில்; மத்த-ஆத்மன்-அறிவற்ற மூடனே; நனு—நிச்சயமாக; ஸ்யு:—ஆவார்கள்; விக்லவா:-குழப்பமடைந்த; கிர:-வார்த்தைகள்.

இரண்யகசிபு பதிலளித்தான்: கயவனே, நீ புலன்களைக் கட்டுப்படுத்துவதில் என்னைவிடச் சிறந்தவன் என்பது போல், என்னுடைய மதிப்பைக் குறைக்க முயற்சிக்கிறாய். இது அதிகப் பிரசங்கித்தனமாகும். மரண வாயிலில் இருப்பவன்தான் இதுபோன்ற அர்த்தமற்ற பேச்சில் ஈடுபடுவான் என்பதால், நீ என் கைகளால் மடிய விரும்புகிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

பதம் 7.8.12
யஸ் த்வயா மந்த-பாக்யோக்தோ மத்-அன்யோ ஜகத்-ஈஸ்வர:
க்வாஸௌ யதி ஸ ஸர்வத்ர கஸ்மாத் ஸ்தம்பே ந த்ருஸ்யதே

ய:-எவரொருவர்; த்வயா-உன்னால்; மந்த-பாக்ய- துர்பாக்கியசாலியே; உக்த:-விவரிக்கப்பட்ட; மத்-அன்ய:-என்னைத் தவிர ஜகத்–ஈஸ்வர:-பிரபஞ்சத்தின் பரம ஆளுனராக; க்வ-எங்கே; அஸௌ-அந்த ஒருவர்; யதி- என்றால்; ஸ:-அவர்; ஸர்வத்ர- எங்கும் நிறைத்தவர்; கஸ்மதாஸ்-ஏன்; ஸ்தம்பே-என் முன்னுள்ள இத்தூணில்; ந த்ருஸ்யதே-காணப்படவில்லை.

மிகவும் துர்பாக்கியசாலியான பிரகலாதனே, என்னைத் தவிர வேறொரு உயர்ந்த ஜீவன் இருப்பதாகவும், அவர் அன்னத்திற்கும் மேலானவர் என்றும், அனைவரையும் ஆள்பவர் என்றும், எங்கும் நிறைந்திருப்பவர் என்றும் நீ எப்பொழுதும் கூறி வந்துள்ளாய். ஆனால் அவர் எங்குள்ளார்? அவர் எங்கும் நிறைந்திருப்பவராயின் அவர் ஏன் என் முன்னுள்ள இத்தூணில் இருக்கவில்லை?

பதம் 7.8.13
ஸோ ‘ஹம் விகத்தமானஸ்ய சிர: காயாத் தராமி தே
கோபாயேத ஹரிஸ் த்வாத்ய யஸ் தே சரணம் ஈப்ஸிதம்

ஸ:-அவர்; அஹம்-நான்; விகத்தமானஸ்ய-அர்த்தமில்லாமல் பிதற்றும்; சிர:-தலையை; காயாத்—உடலிலிருந்து ; ஹராமி- துண்டித்து விடப் போகிறேன்; தே-உன்னுடைய; கோபாயேத-அவர் காப்பாற்றட்டும்; ஹரி:- அந்த பரமபுருஷர்; த்வா-உன்னை; அத்யா- இப்பொழுது; ய:-எவரொருவர்; தே-உன்னால் ; சரணம்-காவலரை; ஈப்ஸிதம்- விரும்பப்பட்ட.

இவ்வளவு அதிகமாக நீ பிதற்றுவதால், உன் உடலிலிந்து உன் தலையை இப்போது நான் துண்டித்து விடப்போகிறேன். உன்னால் மிகவும் வணங்கப்படும் கடவுள் இப்பொழுது உன்னைக் காப்பாற்றட்டும். அதை நான் காண விரும்புகிறேன்.

பதம் 7.8.14
ஏவம் துருக்தைர் முஹுர் அர்தயன் ருஷா
ஸுதம் மஹா-பாகவதம் மஹாஸுர:
கட்கம் ப்ரக்ருஹ்யோத்பதிதோ வராஸனாத்
ஸ்தம்பம் ததாடாதிபல: ஸ்வ-முஷ்டினா

ஏவம்- இவ்வாறு; துருக்தை:-கடுஞ் சொற்களால்; முஹு:- இடைவிடாமல்; அர்தயன்- திட்டிக் கொண்டு; ருஷா-தேவையற்ற கோபத்துடன்; ஸுதம்- தன் மகனை; மஹா-பாகவதம்- பரம பக்தரான; மஹா-அஸுர:—பெரிய அசுரனான இரண்யகசிபு: கட்கம்- வாளை; ப்ரக்ருஹ்ய-எடுத்துக் கொண்டு; உத்பதித:-எழுந்து; வர- ஆஸனாத் அவனது சிம்மாசனத்திலிருந்து; ஸ்தம்பம்-தூணை;ததாட- குத்தினான்; அதி- பல:-பலமாக; ஸ்வ- முஷ்டினா- தன் முஷ்டியால்.

பெரும் தேகபலமுடைய இரண்யகசிபு கோபத்தினால் ஆவேசமடைந்து, மகா பாகவதரான தன் மகன் பிரகலாதரைக் கடுஞ்சொற்களால் திட்டினான். அவன் திரும்பத் திரும்ப பிரகலாதரைச் சபித்தபடி, தன் வாளை எடுத்துக் கொண்டு சிம்மாசனத்திலிருந்து பாய்ந்து வந்து, கடுங்கோபத்துடன் தன் முஷ்டியால் தூணில் குத்தினான்.

பதம் 7.8.15
ததைவ தஸ்மின் நினதோ ‘திபீஷணோ
பபூவ யேனாண்ட-கடாஹம் அஸ்ஃபுடத்
யம் வை ஸ்வ-திஷ்ண்யோகபகதம் து அஜாதய:
ஸ்ருத்வா ஸ்வ-தாமாத்யயம் அங்க மேனிரே

ததா—அப்பொழுது; ஏவ-சரியாக; தஸ்மின்—அதற்குள் (தூணுக்கள்); நினத:- சப்தம்; அதி-பீஷண:-அதிபயங்கரமான; பபூவ- இருந்தது; யேன—எதனால்; அண்ட—கடாஹம்—அண்ட கடாகமே; அஸ்ஃபுடத்—பிளந்துவிடுவது போல் காணப்பட்டது; யம்- எதை: வை – உண்மையில்;ஸ்வ-திஷ்ணய— உபகதம்—அவரவர் வசிப்பிடங்களை எட்டியது; து-ஆனால்; அஜ-ஆதய:-பிரம்மதேவர் முதலான தேவர்கள்; ஸ்ருத்வா-கேட்டு; ஸ்வ-தாம- அத்யயம்-தங்களுடைய இருப்பிடங்களின் அழிவோ: அங்க-அன்பிற்குரிய புதிஷ்டிரரே; மேனிரே-என்று எண்ணினர்.

பிறகு அத்தூணிலிருந்து அதி பயங்கரமான சப்தம் உண்டாயிற்று. அது அண்ட கடாகத்தையே பிளந்து விடுவதுபோல் காணப்பட்டது. அன்பிற்குரிய யுதிஷ்டிரரே, அந்த சப்தம் பிரம்மதேவரைப் போன்ற தேவர்களின் உலகங்களையும் எட்டியது. அதைக்கேட்ட தேவர்கள், ‘நம்முடைய கிரகங்களெல்லாம் இப்பொழுது அழிக்கப்படுகின்றனவோ!” என்று எண்ணினர்.

பதம் 7.8.16
ஸ விக்ரமன் புத்ர-வதேப்ஸுர் ஓஜஸா
நிசம்ய நிர்ஹ்ராதம் அபூர்வம் அத்புதம்
அந்த:- ஸபாயாம் ந ததர்ச தத்-பதம்
விதத்ரஸுர் யேன ஸுராரி-யூத-பா:

ஸ:- அவன் (இரண்யகசிபு); விக்ரமன்-தன் வீரத்தைக் காட்டி; புத்ர -வத-ஈப்ஸு:-தன் மகனைக் கொல்ல விரும்பிய: ஓஜஸா- பெரும் பலத்துடன்; நிசம்ய-கேட்டு; நிர்ஹ்ராதம்—அதிபயங்கரமான ஓசையை; அபூர்வம்- இதற்கு முன் கேட்டிராத; அத்புதம்- மிகவும் அற்புதமான; அந்த: – ஸபாயாம்- பேரவையினுள்; ந- இல்லை; ததர்ச -கண்டான்; தத்-பதம்— அப்பேரொலியின் பிறப்பிடத்தை; விதத்ரஸு:—அச்சமடைந்தனர்; யேன-எந்த ஓசையால்; ஸுர—அரி- யூத-பா:- (இரண்யகசிபு மட்டுமின்றி) மற்ற அசுரத் தலைவர்களும்.

தன் அசாதாரணமான வீரத்தைக் காட்டி, தன் சொந்த மகனையே கொல்ல விரும்பிய இரண்யகசிபு, இதுவரை தான் கேட்டிராத அதி அற்புதமான அந்த பயங்கர ஓசையைக் கேட்டான். அதைக் கேட்ட மற்ற அசுரத் தலைவர்களும் அச்சமடைந்தனர். ஆனால் அச்சபையில் உண்டான அவ்வோசையின் காரணத்தை அவர்களால் அறிய இயலவில்லை.

பதம் 7.8.17
ஸத்யம் விதாதும் நிஜ-ப்ருத்ய பாஷிதம்
வ்யாப்திம் ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அதிருஸ்யதாத்யத்புத-ரூபம் உத்வஹைன்
ஸ்தம்பே ஸபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்

ஸத்யம்—உண்மையை; விதாதும்-நிரூபிப்பதற்கு; நிஜ-ப்ருத்ய- பாஷிதம்–(தனது பகவான் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று கூறிய பிரகலாதரின் வார்த்தைகளின்) தமது சேவகனின் வார்த்தைகளின்; வ்யாத்ம்-வியாபித்துள்ள; ச-மேலும்; பூதேஷு-பஞ்ச பூதங்களிலும், ஜீவராசிகளிலும்; அகிலேஷு-எல்லா; ச-மேலும்; ஆத்மன:- தன்னுடைய; அத்ருஸ்யத- காணப்பட்டது; அதி-மிகவும்; அத்புத— அற்புதமான: ரூபம்-ரூபம்; உத்வஹன்-எடுத்துக் கொண்டு; ஸ்தம்பே -தூணில்; ஸபாயாம்-சபையிலுள்ள; ந-இல்லை; ம்ருகம் – ஒரு மிருகம்; ந -இல்லை; மானுஷம்-ஒரு மனிதனும்.

பரமபுருஷர் தமது சேவகரான பிரகலாத மகாராஜனின் கூற்றை உண்மையென்று நிரூபிப்பதற்காக, அதாவது, பரமபுருஷர் எங்கும் நிறைந்திருக்கிறார், சபை நடுவிலுள்ள தூணிலும் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காக, இதற்குமுன் கண்டிராத அற்புதமான ஒரு ரூபத்தைக் காட்டியருளினார். இவ்விதமாக பகவான் மனிதருமல்லாத, சிங்கமுமல்லாத அதியற்புதமான வடிவம் கொண்டு சபை நடுவில் தோன்றினார்.

பதம் 7.8.18
ஸ ஸத்வம் ஏனம் பரிதோ விபஸ்யன்
ஸ்தம்பஸ்ய மத்யாத் அனுனிர்ஜிஹானம்
நாயம் மிருகோ நாபி நரோ விசித்ரம்
அஹோ கிம் ஏதன் ந்ரு- ம்ருகேந்தர- ரூபம்

ஸ:—அவன் (அசுர ராஜனான இரண்யகசிபு); ஸத்வம்-ஜீவராசி; ஏனம்- அந்த; பரித: சுற்றிலும்; விபஸ்யன்- பார்த்துக் கொண்டு: ஸ்தம்பஸ்ய-தூணின்; மத்யாத் மத்தியிலிருந்து: அனுனிர்ஜிஹானம்- வெளியே வந்தது; ந -இல்லை; அயம்—இந்த; ம்ருக:-மிருகம்; ந – இல்லை: அபி-உண்மையில்;

அந்த போரொலியின் காரணத்தை அறிய இரண்யகசிபு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, மனிதனா சிங்கமா என்று அறிய முடியாத பகவானின் அந்த அற்புதமான ரூபம் தூணிலிருந்து வெளிப்பட்டது. அந்த ரூபத்தைக் கண்ட இரண்யகசிபு, “பாதி மனிதன் பாதி சிங்கமாக உள்ள இது என்ன ஜீவன்?” என்று ஆச்சரியப்பட்டான்.

பதங்கள் 7.8.19 – 7.8.22
மீமாம்ஸமானஸ்ய ஸமுத்திதோ ‘க்ரதோ
ந்ருஸிம்ஹ -ரூபஸ் தத் அலம் பயானகம்

ப்ரதப்த-சாமீகர-சண்ட-லோசனம்
ஸ்ஃபுரத்-ஸடா-கேசர- ஜ்ரும்பிதானனம்
கரால தம்ஷ்ட்ரம் கரவால-சஞ்சல-
க்ஷுராந்த-ஜிஹ்வம் ப்ருகுடீ-முகோல்பணம்

ஸ்தப்தோர்த்வ்-கர்ணம் கிரி கந்தராத்புத-
வ்யாத்தாஸ்ய-நாஸம் ஹனு-பேத-பீஷணம்
திவி-ஸ்ப்ருசத் காயம் அதீர்க-பீவர-
க்ரீவோரு-வக்ஷ:-ஸ்தலம் அல்ப-மத்யமம்

சந்ராம்சு-கௌரைஸ் சரிதம் தனூருஹைர்
விஷ்வக் புஞ்ஜானீக-சதம் நகாயுதம்
துராஸதம் ஸர்வ-நிஜேதராயுத-
ப்ரவேக-வித்ராவித-தைத்ய-தானவம்

மீமாம்ஸமானஸ்ய-பகவானுடைய அற்பத ரூபத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த இரண்யகசிபுவின்;ஸமுத்தித:- தோன்றினார்; அக்ரத:-முன்னே; ந்ருஸிம்ஹ-ரூப:-(பாதி சிங்கம், பாதி மனித) நரசிம்ம ரூபம்; தத்-அந்த; அலம்—அசாதாரணமான; பயானகம் — பயங்கரமான; ப்ரதப்த-உருக்கிய; சாமீகர-தங்கம்; சண்ட- லோசனம்-கொடூரமான கண்களுடன்; ஸ்ஃபுரத்-பிரகாசிக்கும்; ஸ்டா-கேசர—அவரது படரி மயரினால்; ஜ்ரும்பித-ஆனனம்— பரந்த முகமுடைய; கரால-கொடிய; தம்ஷ்டரம்- பல்வரிசையுடன்; கரவால-சஞ்சல-ஒரு கூரிய வாள் போல் அசையும்; க்ஷுர—அந்த-கத்திபோல் கூர்மையான; ஜிஹ்வம்- யாருடைய நாக்கு; ப்ருகும-முக- கோபங் கொண்ட முகத்தினால்; உல்பணம்- பயங்கரமாக இருந்த; ஸ்தப்த—அசைவின்றி; ஊர்த்வ- மேல் நோக்கி நீண்ட; கர்ணம்- யாருடைய காதுகள்; கிரி -கந்தர—மலைக்குகைகள் போல்; அத்புத— அற்புதமான; வ்யாத்தாஸ்ய-அகலத் திறந்த வாயுடனும்; நாஸம்- நாசிகளுடனும்; ஹனு-பேத-பீஷணம்- தாடைகள் பிரிந்திருப்பதால் பயத்தை உண்டாக்கிக் கொண்டு; திவி-ஸ்ப்ருசத்—ஆகாயத்தைத் தொட்டது; காயம்-யாருடைய உடல்; அதீர்க-குறுகியதும்; பீவர- பருத்ததுமான; க்ரீவ—கழுத்து; உரு-அகன்ற; வக்ஷ:-ஸ்தலம்-மார்பு; அல்ப-சிறிய; மத்யமம்-இடையும்; சந்ர-அம்சு-சந்திர ஒளி போல் ; கௌரை:-வெண்மையான; சுரிதம்-மறைக்கப்பட்டது; தனூருறை:- உரோமங்களால்; விஷ்வக்- எல்லாத் திசைகளிலும்; புஜ-கைகளின்; அனீக—சதம் -நூறு வரிசைகளுடைய; நக-நகங்களைக் கொண்ட; ஆயுதம்- கொடிய ஆயுதங்களைப் போன்ற; துராஸதம்-செல்வதற்குக் கடினமான; ஸர்வ-எல்லா; நிஜ—தன்னுடைய; இதர-மற்ற; ஆயுத- ஆயுதங்களில்; ப்ரவேக-சிறந்ததை உபயோகிப்பதால்; வித்ராவித- விரட்டி அடிக்கப்பட்ட; தைத்ய -யாரால் அந்த அகரர்கள்; தானவம்-மற்றும் கயவர்கள் (நாஸ்திகர்கள்).

தன்முன் நிற்கும் நரசிம்ம ரூபம் யாராக இருக்கக்கூடும் என்று முடிவு செய்யும் முயற்சியில், இரண்யகசிபு பகவானின் ரூபத்தை ஆராய்ந்தான். உருக்கிய தங்கத்தையொத்த அவரது கோபக் கண்களின் காரணத்தால் பகவானுடைய ரூபம் மிகவும் பயங்கரமாக இருந்தது. மேலும் அவரது தோற்றத்தின் பயங்கரத்தை அதிகரிப்பது போல், ஜொலிக்கும் அவரது பிடரி மயிர் கோரமான அவரது முகத்தில் பரவிக் கிடந்தது; அவரது பற்கள் கோரமாக இருந்தன; கத்திபோல் கூர்மையான அவரது நாக்கு, சுழலும் வாள் போல் அசைந்தாடியது; அவரது காதுகள் நிமிர்ந்து அசைவற்றிருந்தன. அவரது நாசிகளும், பிளந்த வாயும் மலைக் குகைகள் போல் காணப்பட்டன. அவரது தாடைகள் பயங்கரமாகப் பிரிந்திருந்தன. அவரது முழு உடலும் ஆகாயத்தைத் தொட்டது. அவரது கழுத்து குறுகியும், பருத்தும் இருந்தது, அவரது மார்பு அகன்றும், இடை மெல்லியதாகவும் இருந்தன. அவரது உடலிலிருந்த உரோமம் சந்திர கிரணங்களைப் போல் வெண்மையாக இருந்தது. படை அணிகளைப் போலிருந்த அவரது கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை முதலான இயற்கையான ஆயுதங்கள் இருந்தன. அசுரர்களையும், கயவர்களையும், நாஸ்திகர்களையும் அவர் கொல்லும்பொழுது, அவரது கைகள் எல்லாத் திசைகளிலும் பரவிக்கிடந்தன.

பதம் 7.8.23
ப்ராயேண மே ‘யம் ஹரிணோமாயினா
வத: ஸம்ருதோ ‘னேன ஸமுத்யதேன கிம்
ஏவம் ப்ருவம்ஸ் து அப்யபதத் கதாயுதோ
நதன் ந்ருஸிம்ஹம் ப்ரதி தைத்ய-குஞ்ஜர:

ப்ராயேண—அனேகமாக; மே -என்னுடைய; அயம்-இந்த;ஹரிணா -பரமபுருஷரால்; உரு-மாயினா— பெரிய மாயாவி சக்தியுடைய; வத: வதம்; ஸ்ம்ருத: -திட்டமிடப்பட்டுள்ளது; அனேன – இதனால்; ஸமுத்யதேன- முயற்சியினால்; கிம்- என்ன பயன்; ஏவம்-இவ்வாறு; ப்ருவன்-முணுமுணுத்துக் கொண்டு; து—நிச்சயம்; அப்யபத்யத்- தாக்கினான்; கதா-ஆயுத:-கதாயுதத்தை எடுத்துக் கொண்டு; நதன்- உரக்க கர்ஜித்தபடி; ந்ரு-ஸிம்ஹம்—பாதி சிங்கம், பாதி மனித வடிவில் தோன்றிய பகவான்; ப்ரதி- நோக்கி; தைத்ய-குஞ்ஜர:-யானை போலிருந்த இரண்யகசிபு.

“சிறந்த மாயாவி சக்தியுடைய பகவான் விஷ்ணு, என்னைக் கொல்வதற்காக இவ்வாறு திட்டமிட்டுள்ளார். ஆயினும் இத்தகைய ஒரு முயற்சியால் என்ன பயன்? என்னுடன் யாரால் போரிட முடியும்?” என்று தனக்குள் முணுமுணுத்த இரண்யகசிபு, இந்த எண்ணத்துடன் தன் கதையை எடுத்துக் கொண்டு, ஒரு யானைபோல் பகவானைத் தாக்கினான்.

பதம் 7.8.24
அலக்ஷிதோ ‘க்னெள பதித: பதங்கமோ
யதா ந்ருஸிம்ஹௌஜஸி ஸோ ‘ஸுரஸ் ததா
ந தத் விசித்ரம் கலு ஸத்வ-தாமனி
ஸ்வ-தேஜஸா யோ நு புராபிபத் தம:

அலக்ஷித:- மறைந்து; அக்னௌ—தீயில்;பதித-விழுந்த; பதங்கம: -ஒரு பூச்சி; யதா- எப்படி: ந்ருஸிம்ஹ-பகவான் நரசிம்மரின்; ஓஜஸி-ஜோதியில்; ஸ:-அவன்; அஸுர:-இரண்யகசிபு: ததா- அப்பொழுது; ந-இல்லை; தத்—அந்த: விசித்ரம்- விசித்திரமான; கலு—உண்மையில்; ஸத்வ-தாமனி—சுத்த சத்வ (தூய தற்குண) நிலையிலுள்ள பரமபுருஷரில்; ஸ்வ-தேஜஸா—தமது ஜோதியால்; ய:-அவர் (அந்த பகவான்); நு—உண்மையில்; புரா-முன்பு: அபிபத்— விழுங்கிவிட்டார்; தம-ஜட சிருஷ்டியின் இருளை.

எப்படி ஒரு சிறு பூச்சி பலவந்தமாக நெருப்பில் விழுந்து மறைந்து போகிறதோ, அப்படியே பகவானைத் தாக்கிய இரண்யகசிபு அவரது பெருஞ் ஜோதியில் மறைந்து போனான். பகவான் எப்பொழுதும் சுத்த சத்வ நிலையில் இருக்கிறார். எனவே இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. முன்பு சிருஷ்டியின்போது, பகவான் இருண்ட பிரபஞ்சத்தினுள் நுழைந்து, தமது ஆன்மீக ஜோதியினால் அதை பிரகாசப்படுத்தினார்.

பதம் 7.8.25
ததோ ‘பிபத்யாப்யஹனன் மஹாஸுரோ
ருஷா ந்ருஸிம்ஹம் கதயோருவேகயா
தம் விக்ரமந்தம் ஸகதம் கதாதரோ
மஹோரகம் தார்க்ஷ்ய-ஸுதோ யதாக்ரஹீத்

தத:- அதன்பிறகு: அபிபத்ய -எதிர்த்து: அப்பஹனத்- தாக்கினான்;மஹா—அஸுர:- அப்பெரிய அசுரன்; ருஷா-கோபத்துடன்; ந்ருஸிம்ஹம்- பகவான் நரசிம்மதேவரை; கதயா -தன் கதையால்; உரு- வேகயா- வேகமாகப் பாய்ந்து வந்து; தம்-அவனை; விக்ரமந்தம்- தன் வீரத்தைக் காட்டியபடி; ஸ-கதம்- கதையுடன்; கதா-தர:- எவர் தானும் கையில் கதையை வைத்திருக்கிறாரோ அந்த பகவான் நரசிம்ம தேவர்; மஹா-உரகம்—ஒரு பெரிய பாம்பை; தார்க்ஷ்ய- ஸுத:-தார்க்ஷ்யனின் மகனான கருடன்; யதா-போல்; அக்ரஹீத்- கைப்பற்றினார்.

அதன்பிறகு, கோபாவேசமடைந்த பெரிய அசுரனான இரண்யகசிபு, வேகமாகப் பாய்ந்து வந்து, தன் கதையால் நரசிம்மதேவரைத் தாக்கத் துவங்கினான். ஆனால் பகவான் நரசிம்மதேவர் ஒரு பெரிய பாம்பைப் பிடிப்பதுபோல் அந்த பெரிய அசுரனைப் பிடித்தார்.

பதம் 7.8.26
ஸ தஸ்ய ஹஸ்தோக்கலிதஸ் ததாஸதேரா
விக்ரீடதோ யத்வத் அஹிர் கருத்மத:
அஸாது அமன்யந்த ஹ்ருதௌகஸோ ‘மரா
கன-ச்சதா பாரத ஸர்வ-திஷ்ண்ய-பா:

ஸ:-அவன் (ரெண்யகசிபு); தஸ்ய- அவருடைய (நரசிம்ம தேவரின்); ஹஸ்த-கைகளிலிருந்து; உத்கலித-நழுவினான்; ததா— அப்பொழுது; அஸுர:-இரண்யகசிபு: விக்ரீடத:- விளையாடும்; யத்வத் -போல; அஹி:-பாம்பு; கருத்மத:-கருடனிடமிருந்து; அஸாது- அது நல்லதல்ல; அமன்யந்த—என்று கருதினர்; ஹ்ருத-ஓகஸ்:— யாருடைய இருப்பிடங்கள் இரண்யகசிபுவால் பறிக்கப்பட்டனவோ அந்த: அமரா:-தேவர்கள்;கன-ச்சதா:- மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த; பாரத-சிறந்த பரத புத்திரரே: ஸர்வ-திஷ்ணய-பா:- சுவர்க்க லோகங்களை ஆள்பவர்கள்.

யுதிஷ்டிரரே, சிறந்த பரத புத்திரரே, கருடன் சில சமயங்களில் விளையாட்டாக பாம்பைத் தன் வாயிலிருந்து நழுவ விடுவதுபோல், பகவான் நரசிம்ம தேவரும் இரண்யகசிபு தமது கையிலிருந்து நழுவிச் செல்ல ஒரு வாய்ப்பளித்தார். அப்பொழுது, தங்கள் இருப்பிடங்களை இழந்து, அந்த அசுரனிடமுள்ள பயத்தினால் மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த தேவர்கள், பகவானுடைய அச்செயல் நல்லதுக்கல்ல என்றெண்ணி கலக்கமடைந்தனர்.

பதம் 7.8.27
தம் மன்யமானோ நிஜ-வீர்ய-சங்கிதம்
யத் தஸ்த-முக்தோ ந்ருஹரிம் மஹாஸுர:
புனஸ் தம் ஆஸஜ்ஜத கட்க-சர்மணீ
ப்ரக்ருஹ்ய வேகேன கத-ஸ்ரமோ ம்ருதே

தம்—அவரை (பகவான் நரசிம்மரை); மன்யமான:-என்றெண்ணி; நிஜ- வீர்ய-சங்கிதம்-தன் வீரத்தைக் கண்டு அஞ்சினார்; யத் -காரணத்தால்;ஹஸ்த-முக்த:- பகவானின் பிடியிலிருந்து விடுபட்ட: ந்ரு-ஹரிம்-பகவான் நரசிம்மதேவர்; மஹா-அஸுர;— அப்பெரிய அசுரன்; புன:-மீண்டும்; தம்-அவரை; ஆஸஜ்ஜத- தாக்கினான்; கட்க- சர்மணீ-அவனது கத்தியையும், கேடயத்தையும்; ப்ரக்ருஹ்ய-எடுத்துக்கொண்டு; வேகேன- மிக வேகமாக; கத- ஸ்ரம:—களைப்பு நீங்கியவனாய்; ம்ருதே-போரில்.

நரசிம்மதேவரின் கைகளிலிருந்து இரண்யகசிபு விடுவிக்கப்பட்ட பொழுது, தன் வீரத்தைக் கண்டு பகவான் பயந்து விட்டதாகத் தவறாக அவன் எண்ணினான். எனவே அவன் சிறிது களைப்பாறிய பின், தன் கத்தியையும், கேடயத்தையும் எடுத்துக்கொண்டு, பெரும் பலத்துடன் மீண்டும் பகவானைத் தாக்கினான்.

பதம் 7.8.28
தம் ஸ்யேன-வேகம் சத-சந்ர-வர்த்மபிஸ்
சரந்தம் அச்சித்ரம் உபரி-அதோ ஹரி:
க்ருத்வாட்ட-ஹாஸம் கரம் உத்ஸ்வனோல்பணம்
நிமீலிதாக்ஷம் ஜக்ருஹே மஹா-ஜவ:

தம் — அவனை; ஸ்யேன- வேகம் ஒரு பருந்தின் வேகத்தையுடைய; சத—சந்ர-வர்த்மபி:-ஆயிரம் சந்திரன்களைப் போல் அடையாளம் பொறிக்கப்பட்ட அவனது கேடயம் மற்றும் கத்தி ஆகியவற்றின் திறமையான பிரயோகத்தினால்; சரந்தம்—அசைந்து கொண்டு; அச்சித்ரம்- எந்த பலவீனமும் இல்லாது; உபரி – அத:- மேலும், கீழும்; ஹரி:-பரமபுருஷர்; க்ருத்வா- செய்துவிட்டு; அட்ட-ஹாஸம்- அட்டகாசமான சிரிப்பை; கரம்—கிரீட்சிடும்; உத்ஸ்வன உல்பனம்-அதன் பேரொலியினால் பயந்துபோய்; நிமீலித-மூடியபடி; அக்ஷம்— கண்களை; ஜக்ருஹே-பிடித்தார்;மஹா-ஜவ:-மகா பலசாலியான பகவான்.

பரமபுருஷரும், மகா பலசாலியுமான பகவான் நாராயணர் கிரீச்சிடும் அட்டகாசமான சிரிப்பொலியைச் செய்தார். பிறகு எந்த இடைவெளியும் இல்லாதபடி, கத்தியாலும், கேடயத்தாலும் தன்னைப் பாதுகாத்து வந்த இரண்யகசிபுவை பகவான் பிடித்தார். நரசிம்ம தேவருடைய சிரிப்பொலியின் பயத்தினால் கண்களை மூடிக் கொண்டபடி இரண்யகசிபு சிலசமயம் ஆகாயத்திலும், சிலசமயம் பூமியிலும் சஞ்சரித்தான்.

பதம் 7.8.29
விஷ்வக் ஸ்ஃபுரந்தம் க்ரஹணாதுரம் ஹரிர்
வ்யாலோ யதாகும் குலிசாக்ஷத-த்வசம்
த்வாரி ஊரும் ஆபத்ய ததார லீலயா
நகைர் யதாஹிம் கருடோ மஹா-விஷம்

விஷ்வக்- எல்லாப் பக்கங்களிலும்; ஸ்ஃபுரந்தம்- தன் அங்கங்களை அசைத்தப்படி; க்ரஹன—ஆதுரம்-பிடிப்பட்டதால் வருத்தமடைந்து; ஹரி:-பரமபுருஷராகிய நரசிம்மதேவர்; வ்யால:-பாம்பு: யதா -போல்; ஆகும்- எலியை; குலிச-அக்ஷத -இந்திரனின் வஜ்ராயு தத்தாலும் வெட்டுப்படாத; த்வசம்- யாருடைய தோல்; த்வாரி- வாயிற்படியில்; ஊரும்- அவரது தொடைமேல்; ஆபத்ய-வைத்து; ததார-கிழித்தார்; லீலயா-விளையாட்டாக; நகை:- நகங்களால்; யதா—போல்; அஹிம்-பாம்பை; கருட :- பகவான் விஷ்ணுவின் வாகனமாக கருடன்; மஹா-விஷம் – கொடிய விஷமுள்ள.

பாம்பு எலியைப் பிடிப்பது போல் அல்லது கருடன் கொடிய விஷமுள்ள பாம்பைப் பிடிப்பது போல், பகவான் நரசிம்மதேவர், இந்திரனின் வஜ்ராயுதத்தாலும் துளைக்க முடியாத இரண்யகசிபுவைப் பிடித்தார். பிடிப்பட்டதனால் துன்புற்று நாற்றிசையிலும் அவனது அங்கங்கள் சுழல, பகவான் நரசிம்மதேவர் சபா மண்டபத்தின் வாயிற்படியில் அந்த அசுரனைத் தமது தொடை மேல் கிடத்தித் தமது விரல் நகங்களால் விளையாட்டாகக் கிழித்துத் தள்ளினார்.

பதம் 7.8.30
ஸம்ரம்ப-துஷ்ப்ரேக்ஷ்ய-கரால- லோசனோ
வ்யாத்தானனாந்தம் விலிஹன் ஸ்வ-ஜிஹ்வயா
அஸ்ருக்-லவாக்தாருண- கேசரானனோ
யதாந்த்ர-மாலீ த்விப- ஹத்யயா ஹரி:

ஸம்ரம்ப -கடுங்கோபம் காரணமாக; துஷ்ப்ரேக்ஷ்ய-பார்ப்பதற்கு மிகக் கடினமான; கரால-மிகவும் பயங்கரமான; லோசன:-கண்கள்; வ்யாத்த-பரந்து விரிந்திருந்த; ஆனன-அந்தம்-வாயின் நுனிவரை; விலிஹன்- நக்கிக்கொண்டு; ஸ்வ -ஜிஹ்வயா—அவரது தாக்கினால்; அஸ்ருக்—லவ-இரத்தத் துளிகள்; ஆக்த-பூசப்பட்ட; அருண— சிவந்த; கேசர—பிடரிமயிர்: ஆனை:-மற்றும் முகம்; யதா- எப்படி; அந்தர-மாலீ- குடல்களாலான மாலையால் அலங்கரிக்கப்பட்டவராய்; த்விப-ஹத்யயா-ஒரு யானையைக் கொன்றதனால்; ஹரி – சிங்கம்.

பகவான் நரசிம்மதேவரின் வாயும், பிடரி மயிரும் இரத்தம் தோய்ந்திருந்தன. கோபம் பொங்கிய அவரது கொடூரமான கண்களைக் காண்பது சாத்தியமற்றதாக இருந்தது. பரமபுருஷராகிய நரசிம்மதேவர் தமது நாக்கினால் வாயின் நுனிப் பாகத்தை நக்கிக்கொண்டும், இரண்யகசிபுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குடல்களாலான ஒரு மாலையால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த காட்சியானது, அப்பொழுதுதான் ஒரு சிங்கம் யானையைக் கொன்றது போல் காட்சியளித்தது.

பதம் 7.8.31
நகாங்குரோத்பாடித-ஹ்ருத்- ஸரோருஹம்
விஸ்குஜ்ய-தஸ்யானுசரான் உதாயுதான்
அஹன் ஸமஸ்தான் நக-சஸ்த்ர-பாணிபிர்
தோர்தண்ட-யூதோ ‘நுபதான் ஸஹஸ்ரச:

நக- அங்குர- கூரிய நகங்களால்; உத்பாடித-இழிக்கப்பட்ட; ஹ்ருத்- ஸரோருஹம்-தாமரை போன்ற இதயத்தை; விஸ்ருஜ்ய- ஒருபுறம் வைத்துவிட்டு; தஸ்ய-அவனுடைய; அனுசரான்- ஆதரவாளர்களையும் (சேனைகள் மற்றும் காவலர்கள்); உதாயுதான்- உயர்த்திய ஆயுதங்களுடைய; அஹன்—அவர் கொன்றார்; ஸமஸ்தான் – எல்லா: நக- சஸ்த்ர-பாணிபி:-அவருடைய நகங்களாலும், பிற ஆயுதங்களாலும், தோர்தண்ட— யூத:- எண்ணற்ற கைகளுடைய; அனுபதான்—இரண்யகசிபுவின் சேவகர்களை; ஸஹஸ்ரச:- ஆயிரக்கணக்கில்.

பற்பல கைகளையுடைய பரமபுருஷர், முதலில் இரண்யகசிபுவின் இதயத்தைப் பிடுங்கிவிட்டு அவனை ஒருபுறம் எறிந்தபின், அந்த அசுரனுடைய சேனைகளின் பக்கம் திரும்பினார். அந்த சேனைகள் பகவானுடன் யுத்தம் செய்ய, உயர்த்திய ஆயுதங்களுடன் ஆயிரக் கணக்கில் வந்தனர். ஆனால் இரண்யகசிபுவிடம் விசுவாசம்மிக்க அந்த சேனைகளையெல்லாம் பகவான் நரசிம்மதேவர் தமது நகங்களின் நுனிகளாலேயே கொன்று போட்டார்.

பதம் 7.8.32
ஸடாவதூதா ஜலதா: பராபதன்
க்ரஹாஸ் ச தத்- த்ருஷ்டி- விமுஷ்ட-ரோசிஷ:
அம்போதய: ஸ்வாஸ்-ஹதா விசுக்ஷுபுர்
நிர்ஹ்ராத-பீதா திகிபா விசுக்ருசு:

ஸ்டா—பகவான் நரசிம்மதேவரின் தலையிலுள்ள மயிர்களால்; அவதூதா:-உதறித் தள்ளப்பட்ட: ஜலதா:-மேகங்கள்; பராபதன்- சிதறடிக்கப்பட்டன; க்ரஹா: -ஒளிவீசும் கிரங்கள்; ச-மேலும்; தத்— திருஷ்டி-அவரது பிரகாசமான பார்வையால்; விமுஷ்ட-பறிக்கப் பட்டது: ரோசிஷ:-அவற்றின் பிரகாசம்; அம்போதய:-கடல் மற்றும் சமுத்திர நீர்; ஸ்வாஸ-ஹதா:-பகவான் நரசிம்மதேவரின் சுவாசத்தினால் பீடிக்கப்பட்டு; விசுக்ஷுப – கொந்தளித்தது; நிர்ஹ்ராத- பீதா:- நரசிம்மதேவரின் கர்ஜனையால் பயந்து; திகிபா:-குடியிருப்புகளைக் காக்கும் எல்லா யானைகளும்; விசுக்ருக:-கதறின.

நரசிம்மதேவரின் தலையிலுள்ள மயிர்களால் உதறித் தள்ளப்பட்ட மேகங்கள் இங்குமங்கும் சிதறடிக்கப்பட்டன. அவரது பிரகாசமான கண்கள், ஆகாயத்தில் ஒளிரும் கிரகங்களின் பிரகாசத்தையும் கவர்ந்து சென்றன. அவரது சுவாசம் கடல்களையும், சமுத்திரங்களையும் கொந்தளிக்கச் செய்தது. அவரது கர்ஜனையின் காரணத்தால், உலகிலுள்ள எல்லா யானைகளும் பயந்து அலறத் துவங்கின.

பதம் 7.8.33
த்யௌஸ் தத்-ஸடோத்க்ஷிப்த- விமான-ஸங்குலா
ப்ரோத்ஸர்பத க்ஷ்மா ச பதாபிபீடிதா
சைலா: ஸமுபேதுர் அமுஷ்ய ரம்ஹஸா
தத்-தேஜஸா கம் ககுபோ ந ரேஜிரே

த்யௌ:-விண்வெளியில்; தத்—ஸடா—அவரது மயிர்களால்; உத்க்ஷிப்த- வீசி எறியப்பட்டன; விமான-ஸங்குலா-விமானங்கள் நிறைந்த; ப்ரோத் ஸர்பத-இடத்தை விட்டு நழுவியது: க்ஷ்மா-பூமி; ச – கூட; பத—அபிபீடிதா- பகவானுடைய தாமரைப் பாதங்களின் பெரும்பளுவினால் பீடிக்கப்பட்டு; சைலா:-குன்றுகளும், மலைகளும்; ஸமுத்பேது:-மேலெழும்பின; அமுஷ்ய- அவருடைய (பகவானுடைய); ரம்ஹஸா-பொறுக்க முடியாத சக்தியினால்; தத்-தேஜஸா- அவரது காந்தியினால்; கம்-ஆகாயம்; ககுப:—பத்துத் திசைகளும்; ந ரேஜிரே -பிரகாசிக்கவில்லை.

ஆகாய விமானங்கள் நரசிம்மதேவரின் தலை மயிர்களால் விண்வெளியிலும், உயர் கிரக அமைப்புகளிலும் வீசியெறியப்பட்டன. பகவானுடைய தாமரைப் பாதங்களின் அழுத்தத்தின் காரணத்தால், பூமியானது அதன் நிலையிலிருந்து நழுவிவிடுவது போல் காணப்பட்டது. பொறுக்க முடியாத அவரது பளுவினால் எல்லாக் குன்றுகளும், மலைகளும் மேலே எழும்பின. பகவானுடைய தேகத்தின் காந்தியினால், ஆகாயமும், எல்லாத் திசைகளும் தங்களுடைய இயற்கையான ஒளியை இழந்தன.

பதம் 7.8.34
தத: ஸபாயாம் உபவிஷ்டம் உத்தமே
ந்ருபாஸனே ஸம்ப்ருத-தேஜஸம் விபும்
அலக்ஷித த்வைரதம் அத்யமர்ஷணம்
ப்ரசண்ட-வக்த்ரம் ந பபாஜ கஸ்சன

தத:-அதன்பிறகு; ஸபாயாம்- அரசவையில்; உபவிஷ்டம் -அமர்ந்தார்; உத்தமே-உத்தமமான; ந்ருப-ஆஸனே—(இரண்யகசிபு அமர்ந்து வந்த) சிம்மாசனத்தில்; ஸம்ப்ருத- தேஜஸம்- முழுமையான காந்தியுடன்; விபும்-பரமபுருஷர்; அலக்ஷித- த்வைரதம்- தன்னை எதிர்ப்பவர் ஒருவரும் காணப்படாததால்; அதி—மிகவும்: அமர்ஷணம்- (அவருடைய கோபத்தினால்) பயங்கரமான: ப்ரசண்ட-கொடிய; வக்த்ரம்- முகம்; ந-இல்லை; பபாஜ- வழிபட்டனர்; கஸ்சன— எவரும்.

முழுமையான காந்தியையும், பயங்கரமான முகபாவத்தையும் வெளிப்படுத்திய பகவான் நரசிம்மர், கோபாவேசத்துடன், தமது சக்திக்கும், ஐசுவரியத்திற்கும் நிகரான எவரையும் காணாது, அரசவையிலிருந்த மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்தார். பயத்தினாலும்,மரியாதையினாலும், பகவானுக்கு நேரிடையாகப் பணிவிடை செய்ய எவரும் முன்வரவில்லை.

பதம் 7.8.35
நிசாம்ய லோக-த்ரய-மஸ்தக-ஜ்வரம்
தம் ஆதி – தைத்யம் ஹரிணா ஹதம் ம்ருதே
ப்ரஹர்ஷ-வேகோத்கலிதானனா முஹு:
ப்ரஹூன-வர்ஷைர் வவ்ருஷு: ஸுர-ஸ்த்ரிய:

நிசாம்ய-கேட்டு; லோக-த்ரய -மூவுலகங்களுக்கும்; மஸ்தக- ஜ்வரம்-தலைவலியாகிய; தம் -அவனை: ஆதி-முதல்: தைத்யம்- அசுரன்; ஹரிணா:-பரமபுருஷரால்; ஹதம்- கொல்லப்பட்ட; ம்ருதே- யுத்தத்தில் ப்ரஹர்ஷ-வேக- ஆனந்தத்தின் திடீர் எழுச்சியினால்; உத்கலித- ஆனனா:- முகம் மலர்ந்தவர்களாய்; முமு-மீண்டும், மீண்டும்; ப்ரஸூன- வர்ஷை:- மலர்மாரி: வவ்ருஷு:-பொழிந்தனர்; ஸுர- ஸ்த்ரிய-தேவர்களின் மனைவிகள்.

இரண்யகசிபு, மூவுலகங்களில் தலையில் உண்டான மூளை நோயின் வலிக்கு ஒப்பாக இருந்தான். இவ்விதமாக அப்பெரிய அசுரன், பரமபுருஷரின் கைகளாலேயே கொல்லப்பட்டத்தைக் கண்ட, சுவர்க்க லோகத்து தேவ மங்கையரின் முகங்கள் ஆனந்தத்தினால் மலர்ந்தன. தேவர்களின் மனைவிகளான அவர்கள் மீண்டும், மீண்டும் பகவான் நரசிம்மர்மீது மலர்மாரி பொழிந்தனர்.

பதம் 7.8.36
ததா விமானாவலிபிர் நபஸ்தலம்
தித்ருக்ஷதாம் ஸங்குலம் ஆஸ நாகினாம்
ஸுரானகா துந்துபயோ ‘த ஜக்னிரே
கந்தர்வ-முக்யா நன்ருதுர் ஜகு: ஸ்த்ரிய:

ததா—அப்பொழுது; விமான—ஆவலிபி:- பலவகையான விமானங்களால்; நபஸ்தலம்- ஆகாயம்; தித்ருக்ஷதாம்-காண விரும்பிய; ஸங்குலம் -நிரப்பப்பட்டது; ஆஸ-ஆனது; நாகினாம்—தேவர்களின்; ஸுர—ஆனகா—தேவர்களின் முரசுகள்; துந்துபய:-துந்துபிகள்; அத- மற்றும்; ஜக்னிரே- ஒலித்தன; கந்தர்வ-முக்யா:-சுந்தர்வ லோகத்துத் தலைவர்கள்; நன்ருது:-ஆட ஆரம்பித்தனர்; ஜக:-பாடினர்; ஸ்த்ரிய:- தேவலோகத்து நடன மங்கைகள்.

அப்பொழுது, பரமபுருஷராகிய நாராயணரின் செயல்களைக் காண விரும்பிய தேவர்கள் தங்களுடைய விமானங்களால் ஆகாயத்தை நிரப்பினர். தேவர்கள் தங்களுடைய முரசுகளையும், துந்துபிகளையும் முழங்க ஆரம்பித்தனர். அதைக் கேட்ட தேவலோகத்து நடன மங்கையர் நடனமாட, கந்தர்வத் தலைவர்கள் இனிமையாகப் பாடினர்.

பதங்கள் 7.8.37 – 7.8.39
தத்ரோபவ்ரஜ்ய விபுதா ப்ரஹ்மேந்ர-கிரிசாதய:
ரிஷய: பிதர: ஸித்தா வித்யாதர-மஹோரகா:

மனவ: ப்ரஜானாம் பதயோ கந்தர்வாப்ஸர-சாரணா:
யக்ஷா: கிம்புருஷாஸ் தாத வேதாளா: ஸஹ-கின்னரா:

தே விஷ்ணு-பார்ஷதா: ஸர்வே ஸுனந்த-குமுதாதய;
மூர்த்னி பத்தாஞ்ஜலி-புடா ஆஸீனம் தீவ்ர-தேஜஸம்
ஈடிரே நர-சார்துலம் நாதிதூரசரா: ப்ருதக்

தத்ர—அங்கு (ஆகாயத்தில்); உபவ்ரஜ்ய—(அவரவர் விமானங்களில்) வந்து; விபுதா:-எல்லா தேவர்களும்; ப்ரஹ்ம-இந்ர—கிரச—ஆதய:- பிரம்மா, இந்திரன், சிவன் முதலான; ரிஷய:-சிறந்த முனிவர்கள்; பிதர:-பித்ருலோக வாசிகள்; ஸித்தா:-சித்த லோகவாசிகள்; வித்யா தர – வித்யாதர லோக வாசிகள்; மஹா-உரகா:-நாகலோக வாசிகள்; மனவ:—மனுக்கள்; ப்ரஜானாம்- (வெவ்வேறு கிரகங்களைச் சேர்ந்த) ஜீவன்களின்; பதய:- தலைவர்கள்; கந்தர்வ- கந்தவர்லோக வாசிகள்: அப்ஸர—அப்ஸரஸ்கள்; சாரணா:-சாரணலோக வாசிகள்; யக்ஷா:- யக்ஷர்கள்; கிம்புருஷா:-கிம்புருஷர்கள்; தாத-பிரியமானவரே; வேதாளா:-வேதாளங்கள்; ஸஹ-கின்னரா:கின்னரர்களுடன்; தே- அவர்கள்; விஷ்ணு -பார்ஷதா:—(வைகுண்டத்திலுள்ள) பகவான் விஷ்ணுவின் அந்தரங்க சகாக்கள்; ஸர்வே-எல்லோரும்; ஸுனந்த— குமுத- ஆதய:-சுனந்தன் மற்றும் குமுதன் முதலான: மூர்த்னி- தலைகளின் மேல்; பத்த-அஞ்சலி-புடா:-கூப்பிய கரங்களுடன்; ஆஸீனம் – சிம்மாசனத்தில் வீற்றிருந்த; தீவ்ர-தேஜஸம்—தமது சிறந்த ஆன்மீக காந்தியை வெளிப்படுத்தியபடி: ஈடிரே-மரியாதை கலந்த வணக்கத்தை அர்ப்பணித்தனர்; நா-சார்துலம்—பாதி மனித, பாதி சிங்கமாகத் தோன்றிய பகவானுக்கு; ந அதி—தூரசரா:-அருகில் வந்து: ப்ருதக்—தனித்தனியாக.

பிரியமுள்ள யுதிஷ்டிரரே, அப்பொழுது பகவானை அணுகியவர்களுள், பிரம்மதேவர், இந்திரன், சிவபெருமான் முதலான தேவர்களும், சிறந்த முனிவர்களும், பித்ருலோக, சித்தலோக, வித்யாதர லோக மற்றும் நாகலோக வாசிகளும், மனுக்களும், பல்வேறு கிரகங்களின் தலைவர்களும், தேவலோகத்து நடன மங்கையரும், கந்தர்வர்கள், சாரணர்கள் மற்றும் யக்ஷர்களும், கின்னரலோக வாசிகளும், வேதாளங்களும், கிம்புருஷலோக வாசிகளும் மற்றும் சுனந்தன், குமுதன் முதலான விஷ்ணுவின் அந்தரங்க சேவகர்களும் அடங்குவர். இவர்களனைவரும் பேரொளியுடன் பிரகாசித்த பகவானுக்கு அருகாமையில் வந்தனர். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக, தலைக்குமேல் கூப்பிய கரங்களுடன் பகவானை வணங்கி, அவரை துதித்துப் போற்றினர்.

பதம் 7.8.40
ஸ்ரீ -ப்ரஹ்மோவாச
நதோ ‘ஸ்மி அனந்தாய துரந்த-சக்தயே
விசித்ர-வீர்யாய பவித்ர-கர்மணே
விஸ்வஸ்ய ஸர்க-ஸ்திதி- ஸம்யமான் குணை:
ஸ்வ-லீலயா ஸந்தததே ‘வ்யயாத்மனே

ஸ்ரீ – ப்ரஹ்மா உவாச-பிரம்மதேவர் கூறினார்; நத: வணங்கியவனாக; அஸ்மி- நான் இருக்கிறேன்; அனந்தாய-எல்லையற்ற பகவானுக்கு; துரந்த—அதற்கு முடிவைக் காண்பது மிகக் கடினம்; சக்தயே-வெவ்வேறு சக்திகளையுடைய; விசித்ர-வீர்யாய- பல வித பராக்கிரமங்களுடன் கூடிய; பவித்ர—கர்மணே—எவருடைய செயல்களுக்குப் பிரதிபலன் இல்லையோ (அவர் எதிரிடையான விஷயங்களைச் செய்த போதிலும், பௌதிக குணங்களால் மாசுபடாமல் அப்படியே இருக்கிறார்); விஸ்வஸ்ய-பிரபஞ்சத்தின்; ஸர்க – படைத்தலையும்; ஸ்திதி- காத்தலையும்; ஸம்யமான்—அழித்தலையும்; குணை:-பௌதிக குணங்களால்; ஸ்வ-லீலயா-மிகச் சுலபமாக; ஸந்தததே- நிறைவேற்றுகிறார்; அவ்யய -ஆத்மனே-யாருடைய பண்பு குறைவதில்லையோ.

பிரம்மதேவர் பின்வருமாறு துதித்தார்: பகவானே, தாங்கள் எல்லையற்றவர், முடிவற்ற சக்திகளை உடையவர். தங்களுடைய செயல்கள் பௌதிக சக்தியினால் மாசடைவதேயில்லை என்பதால், தங்களுடைய வீரியத்தையும், அற்புதமான ஆதிக்கத்தையும் யாராலும் கணக்கிட முடியாது. பௌதிக குணங்களின் வாயிலாக தாங்கள் மிகச் சுலபமாக பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கிறீர்கள் என்றாலும், ஒரு குறைவுமின்றி அப்படியே இருக்கிறீர்கள். ஆகவே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 7.8.41
ஸ்ரீ-ருத்ர உவாச
கோப-காலோ யுகாந்தஸ் தே ஹதோ ‘யம் அஸுரோ ‘ல்பக:
தத்-ஸுதம் பாஹி உபஸ்ருதம் பக்தம் தே பக்த-வத்ஸல

ஸ்ரீ – ருத்ர: உவாச-சிவபெருமான் துதி செய்தார்; கோப-கால:- தங்களுடைய கோபத்தைக் காட்டும் சரியான நேரம் (பிரபஞ்சத்தை அழிப்பதற்கு); யுக—அந்த:-யுக முடிவாகும்; தே-தங்களால்; ஹத:- கொல்லப்பட்டான்; அயம்-இந்த; அஸுர:—பெரிய அசுரன்; அல்பக:- மிகவும் அற்பமானவன்; தத்—ஸுதம் -இவனது மகனை (பிரகலாத மகாராஜனை); பாஹி—காத்தருளுங்கள்; உபஸ்ருதம்- சரணாகதியடைந்து அருகில் நிற்கும்; பக்தம்- பக்தன்; தே – பெருமானாகிய தங்களுடைய; பக்த-வத்ஸல- தமது பக்தனிடம் மிகவும் அன்பு கொண்ட பகவானே.

சிவபெருமான் கூறினார்: யுகத்தின் முடிவே தங்களுடைய கோபத்தைக் காட்டுவதற்கான சரியான நேரம். பக்தர்களிடம் இயற்கையாகவே அன்பு கொண்டுள்ள பகவானே, இப்பொழுது அற்ப அசுரனான இந்த இரண்யகசிபு கொல்லப்பட்டு விட்டதால், இவனுடைய மகனும், பூரண சரணாகதியடைந்த பக்தனாக அருகில் நிற்பவனுமான இந்த பிரகலாதனைக் காத்தருளுங்கள்.

பதம் 7.8.42
ஸ்ரீ-இந்ர உவாச
பத்யானீதா: பரம பவதா த்ராயதா ந: ஸ்வ-பாகா
தைத்யாக்ராந்தம் ஹ்ருதய-கமலம் தத்-க்ருஹம் ப்ரத்யபோதி
கால-க்ரஸ்தம் கியத் இதம் அஹோ நாத கஸ்ருஷதாம் தே
முக்திஸ் தேஷாம் ந ஹி பஹுமதா நாரஸிம்ஹாபரை: கிம்

ஸ்ரீ – இந்ர: உவாச—இந்திரன் கூறினார்; ப்ரத்யானீதா:-திரும்பப் பெறப்பட்டது; பரம-பரமபுருஷரே: பவதா- பகவானாகிய தங்களால்; த்ராயதா—காப்பவரான; ந:- எங்களை ; ஸ்வபாகா:- யாகங்களில் எங்களுடைய பங்கு; தைத்ய—ஆக்ராந்தம்—அசுரர்களால் பீடிக்கப்பட்ட; ஹ்ருதய- கமலம் -எங்களுடைய இதய கமலங்கள்; தத்- கிருஹம்-உண்மையில் உங்களுடைய வாசஸ்தலமான; ப்ரத்ய போதி- ஒளிமயமாக்கப்பட்டது; கால-க்ரஹ்தம்- காலனால் விழுங்கப்பட்ட; கியத் – அற்பமான; இதம்-இவ்வுலகம்; அஹோ-அந்தோ; நாத- பகவானே; சுஸ்ரூஷதாம் -எப்பொழுதும் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு; தே-உங்களுடைய; முக்தி:-முக்தி; தேஷாம்-அவர்களுடைய (தூய பக்தர்களுடைய); ந-இல்லை; ஹி-நிச்சயமாக; பஹுமதா—மிகவும் முக்கியமானதாக எண்ணினோம்; நார- ஸிம்ஹ – பகவான் நரசிம்மதேவரே; அபரை: கிம்- அப்படியிருக்க பிற உடைமைகளால் என்ன பயன்.

இந்திரன் கூறினார்: பரமபுருஷரே, எங்களைக் கடைத்தேற்றிக் காத்தருள்பவர் தாங்களேயாவீர். உண்மையில் உங்களுக்கே சொந்த மானதும், எங்களால் அனுபவிக்கப்படுவதுமான அவிர் பாகங்களை இந்த அசுரனிடமிருந்து தங்களால் மீட்டுத்தரப் பெற்றோம். அசுரராஜனான இரண்யகசிபு மிகவும் கொடூரமானவன் என்பதால், தங்களுடைய நித்திய வாசஸ்தலமாகிய எங்களுடைய இதயங்கள் அவனால் அபகரிக்கப் பட்டிருந்தன. இப்பொழுது தங்களுடைய இருப்பினால், எங்களுடைய இதயங்களிலிருந்த துக்கமும், இருளும் அகன்றுவிட்டன. பகவானே, முக்தியைக் காட்டிலும் மிகவும் மேலானதான தங்களுடைய சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, பௌதிக ஐசுவரியங்கள் அனைத்தும் அற்பமானவையாகும். அவர்கள் முக்தியைப் பற்றி கூட கவலைப்படுவதில்லை. காமம், அர்த்தம், தர்மம் ஆகியவற்றின் நன்மைகளைப் பற்றிக் கூறுவானேன்!

பதம் 7.8.43
ஸ்ரீ-ரிஷய ஊசு:
த்வம் நஸ் தப: பரமம் ஆத்த யத் ஆத்ம-தேஜோ
யேனேதம் ஆதி-புருஷாத்ம-கதம் ஸஸர்க்த
தத் விப்ரலுப்தம் அமுனாத்ய சரண்ய-பால
ரக்ஷ-க்ருஹீத-வபுஷா புனர் அன்வமம்ஸ்தா:

ஸ்ரீ – ரிஷய: ஊசு:-சிறந்த முனிவர்கள் கூறினர்; த்வம் -தாங்கள்; ந:-எங்களுடைய; தப: -தவமாவீர்; பரமம்-மேலாக; ஆத்த -உபதேசித்தீர்கள்; யத் – எது; ஆத்ம -தேஜ: தங்களுடைய ஆன்மீக- சக்தி; யேன-எதனால்; இதம்-இது (ஜட உலகம்); ஆதி-புருஷ— மூல முழுமுதற் கடவுளே: ஆத்ம-கதம் -தங்களுக்குள் ஐக்கியமான; ஸஸர்க்த—(நீங்கள்) படைத்தீர்கள்; தத்—அந்த தவ விரதங்களின் முறையானது; விப்ரலுப்தம்-திருடப்பட்டது; அமுனா—இந்த அசுரனால்; அத்ய—இப்பொழுது; சரண்ய—பால- சரணடைந்தோரின் பரம காவலரே; ரக்ஷா – க்ருஹீத வபுஷா-பாதுகாப்பளிக்க நீங்கள் ஏற்றுக் கொள்ளும் உங்களுடைய உடலால்; புன:-மீண்டும்; அன்வமம்ஸ்தா:- நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள்.

அங்கு கூடியிருந்த முனிவர்கள் அனைவரும் பின்வருமாறு பகவானைத் துதித்தனர்; பகவானே, தங்களுடைய தாமரைப் பாதங்களில் சரணடைந்தோரின் பரம காவலரே மூல முழுமுதற்கடவுளே, எந்த தவ, விரத முறையானது தங்களால் எங்களுக்கு முன்பு உபதேசிக்கப்பட்டதோ, அதுவே தங்களுடைய ஆன்மீகமான ஆத்ம பலமாகும். இந்த தவத்தினால் தான் தங்களுக்குள் முடங்கிக் கிடக்கும் ஜட உலகைத் தாங்கள் படைக்கிறீர்கள். இந்த தவமானது இந்த அசுரனால் கிட்டத்தட்ட முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது, எங்களைக் காப்பதற்கென்றே உள்ள நரசிம்மதேவரின் ரூபத்தில் நீங்கள் தோன்றியதன் மூலமாக, இந்த தவ முறையை மீண்டும் தாங்கள் அங்கீகரித்திருக்கிறீர்கள்.

பதம் 7.8.44
ஸ்ரீ-பிதர ஊசு:
ஸ்ராத்தானி நோ ‘ திபுயுஜே ப்ரஸபம் தனூஜைர்
தத்தானி தீர்த்த-ஸமயே ‘பி அபிபத் திலாம்பு
தஸ்யோதரான் நக-விதீர்ண-வபாத் ய ஆர்ச்சத்
தஸ்மை நமோ ந்ருஹரயே ‘கில-தர்ம-கோப்த்ரே

ஸ்ரீ-பிதர: ஊசு:-பித்ருலோக வாசிகள் கூறினர்; ஸ்ராத்தானி- சிரார்த்த பலன்களை (ஒரு குறிப்பிட்ட முறைப்படி இறந்த நம் முன்னோர்களக்குக் கொடுக்கும் தானிய பிண்டம்); ந:-எங்களுடைய; அதிபுபுஜே -அனுபவித்து வந்தான்; ப்ரஸபம்-பலவந்தமாக; தனூஜை: -எங்கள் மகன்களாலும், பேரன்களாலும்; தத்தானி—அளிக்கப்பட்ட; தீர்தத-ஸமயே-புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பொழுது;அபி-கூட; அபிபத்-குடித்த; தில-அம்பு-எள்ளுடன் கூடிய நீர் அர்ப்பணத்தை; தஸ்ய-அந்த அசுரனின்; உதராத்-வயிற்றிலிருந்து; நக-விதீர்ண – கை நகங்களால் கிழிக்கப்பட்ட; வபாத்-யாருடைய குடல்களை; ய:- எவர் (பரமபுருஷர்); ஆர்ச்சத்-அடைந்தாரோ; தஸ்மை-அவருக்கு (பரமபுருஷருக்கு); நம:-பணிவான வணக்கங்கள்; ந்ரு- ஹரயே- பாதி சிங்கம், பாதி மனிதராகத் தோன்றிய (நரஹரி); அகில-பிரபஞ்ச; தர்ம-சமயக் கோட்பாடுகளை; கோப்த்ரே-காப்பவர்.

பித்ருலோக வாசிகள் பின்வருமாறு துதித்தனர்: பிரபஞ்சத்தின் சமயக் கோட்பாடுகளைக் காப்பவரான பகவான் நரசிம்மதேவருக்கு எங்களது பணிவான வணக்கங்கள். வருடந்தோறும் எங்களுடைய இறந்த தினத்தன்று எங்களுடைய மகன்களாலும், பேரன்களாலும் அளிக்கப்பட்ட சிரார்த்த பிண்டங்களையும், புனித ஸ்தலங்களில் எங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட எள் கலந்த நீரையும் பலவந்தமாக அனுபவித்து வந்த இரண்யகசிபு இப்பொழுது தங்களால் கொல்லப்பட்டான். பகவானே தாங்கள் இந்த அசுரனை உங்களுடைய நகங்களினால் கிழித்துக் கொன்று, இவனுடைய வயிற்றிலிருந்து, இவனால் அபகரிக்கப்பட்ட இந்த சொத்துக்களையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டீர்கள். ஆகவே தங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்.

பதம் 7.8.45
ஸ்ரீ-ஸித்தா ஊசு:
யோ நோ கதிம் யோக-ஸித்தாம் அஸாதுர்
அஹார்ஷீத் யோக-தபோ-பலேன
நானா தர்பம் தம் நகைர் விதகார
தஸ்மை துப்யம் ப்ரணதா: ஸ்மோ ந்ருஸிம்ஹ

ஸ்ரீ – ஸித்தா: ஊசு:-சித்தலோக வாசிகள் கூறினர்; ய: – எவனொருவன்; ந:-எங்களுடைய; கதிம்- பூரணத்துவத்தை; யோக- ஸித்தாம்- அஷ்டாங்க யோகத்தினால் அடைந்த; அஸாது:- சிறிதும் நாகரீகமற்ற, நேர்மையற்ற; ஆஹார்ஷீத்-அபகரித்துச் சென்றான்; யோக- யோகத்தின்; தப:-மற்றும் தவத்தின்; பலேன -பலத்தினால்; நானா தர்பம்- செல்வம், ஐசுவரியம், பலம் ஆகியவற்றினால் கர்வம் கொண்ட; தம்-அவனை; நகை:- நகங்களால்; விததார- கிழித்து; தஸ்மை-அவருக்கு; துப்யம்-தங்களுக்கு; ப்ரணதா:- வணங்குபவர்களாக; ஸ்ம:-நாங்கள் இருக்கிறோம்; ந்ருஸிம்ஹ- பகவான் நரசிம்மதேவரே.

சித்தலோக வாசிகள் பின்வருமாறு துதித்தனர்: பகவான் நரசிம்ம தேவரே, நாங்கள் சித்தலோகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தானாகவே அஷ்ட சித்திகளின் பூரணத்துவத்தை நாங்கள் பெற்றுள்ளோம். இருப்பினும் மிகவும் வஞ்சகனான இரண்யகசிபு தனது தவ வலிமையினால் எங்களுடைய அஷ்ட சித்திகளைப் பறித்துக் கொண்டு விட்டான். இதனால் தனது யோக சக்தியில் இவன் மிகவும் கர்வம் கொண்டிருந்தான். இப்பொழுது இந்த அயோக்கியன் தங்களுடைய நகங்களினால் கிழித்துக் கொல்லப்பட்டதால், தங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம்.

பதம் 7.8.46
ஸ்ரீ-வித்யாதரா ஊசு:
வித்யாம் ப்ருதக் தாரணயானுராத்தாம்
ன்யஷேதத் அக்ஞோ பல-வீர்ய- த்ருப்த:
ஸ யேன ஸங்கயே பசுவத் ததஸ் தம்
மாயா-ந்ருஸிம்ஹம் ப்ரணதா: ஸ்ம நித்யம்

ஸ்ரீவித்யாதரா: ஊசு:-வித்யாதரலோக வாசிகள் துதித்தனர்; வித்யாம்- யோக வித்தைகளை (இவற்றினால் ஒருவரால் தோன்றவோ, மறையவோ முடியும்); ப்ருதக்-தனித்தனியாக; தாரணயா-பல்வேறு மனத் தியானங்களினால்; அனுராத்தாம்—அடைந்தனர்; ன்யஷேதத்— நிறுத்திவிட்டான்; அக்ஞ:-இந்த மூடன்; பல- வீர்ய- த்ருப்த:- எவரையும் வெல்லும் சாமர்த்தியத்தாலும், தேக பலத்தினாலும் திமிர் கொண்டு; ஸ:-அவன் (இரண்யகசிபு); யேன-எவரால்; ஸங்க்யே- போரில்; பசு-வத் ஒரு மிருகம் போல்; ஹத:-கொல்லப்பட்டான்; தம்—அவருக்கு; மாயா- ந்ருஸிம்ஹம்—தமது சுய சக்தியினால் பகவான் நரசிம்மராகத் தோன்றி; ப்ரணதா: வணங்குபவர்களால்; ஸ்வ – நிச்சயமாக; நித்யம்—எப்பொழுதும்.

வித்யாதரலோக வாசிகள் பின்வருமாறு துதித்தனர்: இரண்யகசிபு பிறரை வெல்லும் சாமர்த்தியத்திலும், மேலான தேக பலத்திலும் கர்வம் கொண்டிருந்தான். இதனால், பல்வேறு வழிகளில் மனம் போல் தோன்றவும், மறையவும் நாங்கள் பெற்றிருந்த சக்தியானது அந்த மூடனால் நிறுத்தப்பட்டது. இப்பொழுது இந்த அசுரனை பரமபுருஷர் ஒரு மிருகம்போல் பாவித்துக் கொன்றுவிட்டார். பரம லீலாவதாரமாகிய அந்த பகவான் நரசிம்மதேவருக்கு எங்களது நித்தியமான, பணிவான வணக்கங்கள்.

பதம் 7.8.47
ஸ்ரீ-நாகா ஊசு:
யேன பாபேன ரத்னானி ஸ்த்ரீ-ரத்னானி ஹ்ருதானி ந:
தத்-வக்ஷ:-பாடனேனாஸாம் தத்தானந்த நமோ ‘ஸ்து தே

ஸ்ரீ-நாகா:ஊசு:-பாம்புகள் போல் காணப்படும் நாகலோகவாசிகள் கூறினர்; யேன—எவனால்; பாபேன-பெரும் பாவியான; ரத்னானி— எங்கள் தலைகளிலுள்ள இரத்தினங்களும்; ஸ்த்ரீ-ரத்னானி -அழகிய மனைவிகளும்; ஹ்ருதானி—-அபகரிக்கப்பட்டனவோ; ந:- எங்களுடைய ; தத்—அவனுடைய; வக்ஷ:-பாடனேன- மார்பைப் பிளந்ததால்; ஆஸாம்-(கடத்தப்பட்ட) எல்லாப் பெண்களுக்கும்; தத்த—ஆனந்த—பகவானே, தாங்களே ஆனந்த ஊற்றாவீர்; நம:- எங்களுடைய பணிவான வணக்கங்கள்; அஸ்து—உரித்தாகட்டும்; தே- தங்களுக்கு.

நாகலோக வாசிகள் கூறினர்: மகா பாவியான இரண்யகசிபு எங்கள் தலைகளிலுள்ள இரத்தினங்களையும், எங்களுடைய அழகிய மனைவிகளையும் அபகரித்துச் சென்றான். இப்பொழுது அவனுடைய மார்பு தங்களுடைய நகங்களால் கிழிக்கப்பட்டதால், தாங்கள் எங்களுடைய மனைவிகளுக்கு ஆனந்த ஊற்றாக மாறிவிட்டீர். இவ்விதமாக நாங்கள் இணைந்தாற்போல் தங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறோம்.

பதம் 7.8.48
ஸ்ரீ-மனவ ஊசு:
மனவோ வயம் தவ நிதேச-காரிணோ
திதிஜேன தேவ பரிபூத-ஸேதவ:
பவதா கல: ஸ உபஸம்ஹ்ருத: ப்ரபோ
கரவாம தே கிம் அனுசாதி கிங்கரான்

ஸ்ரீ-மனவ: ஊசு:-எல்லா மனுக்களும் பின்வருமாறு தங்களுடைய பணிவான வணக்கங்களைத் தெரிவித்தனர்; மனவ:-பிரபஞ்ச விவகாரங்களின் தலைவர்கள் (குறிப்பாக மனித குலத்திற்கு, பரமபுருஷருடைய பாதுகாப்பின்கீழ் வாழ்வதெப்படி என்பது பற்றிய அறிவை வழங்குபவர்கள்); வயம்- நாங்கள்; தவ-தங்களுடைய; நிதேச-காரிண:-கட்டளைகளைத் தாங்குபவர்களான; திதி-ஜேன- திதியின் மகனான இரண்யகசிபுவால்; தேவ-பகவானே; பரியூத- புறக்கணிக்கப்பட்டன; ஸேதவ:- மனித குலத்தின் வரணாஸ்ரம முறையைப் பற்றிய எங்களுடைய நீதி நெறிகள்; பவதா-பகவானாகிய தங்களால்; கல:-மிகவும் பொறாமை கொண்ட கயவனான; ஸ:- அவன்; உபஸம்ஹ்ருத:-கொல்லப்பட்டான்; ப்ரபோ-பகவானே; கரவாம-நாங்கள் செய்ய வேண்டியது: தே-தங்களுடைய; கிம்- என்ன; அனுசாதி-உத்தரவிடுங்கள்; கிங்கரான்—உங்களுடைய நித்திய சேவர்களுக்கு.

எல்லா மனுக்களும் பின்வருமாறு பிரார்த்தனை செய்தனர்: பகவானே, தங்களுடைய கட்டளைகளை அமல் படுத்துபவர்கள் என்ற முறையில், மனுக்களாகிய நாங்கள், மனித குலத்திற்குரிய சட்டங்களை அளிப்பவர்களாவோம். ஆனால் பெரிய அசுரனான இந்த இரண்யகசிபுவின் ஆதிக்கம் தற்காலிகமாக மேலோங்கியிருந்த காரணத்தால், வர்ணாசிரம தர்மத்தைப் பராமரிப்பதற்கான எங்களுடைய சட்டங்கள் அழிக்கப்பட்டன. பகவானே, தாங்கள் இக்கொடிய அகரனைக் கொன்றுவிட்டதால், நாங்கள் எங்களுடைய இயல்பான நிலையை இப்பொழுது அடைந்திருக்கிறோம். தங்களுடைய நித்திய சேவகர்களாகிய நாங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள்.

பதம் 7.8.49
ஸ்ரீ-ப்ரஜாபதய ஊசு:
ப்ஜேசா வயம் தே பரேசாபிஸ்ருஷ்டா
ந யேன ப்ரஜா வை ஸ்ருஜாமோ நிஷத்தா:
ந ஏஷ த்வயா பின்ன-வக்ஷா நு சேதே
ஜகன் மங்கலம் ஸத்வ-மூர்த்தே ‘வதார

ஸ்ரீ—ப்ரஜாபதய: ஊசு:-பல்வேறு ஜீவராசிகளைப் படைத்த பிரஜாபதிகள் பின்வருமாறு துதித்தனர்; ப்ரஜா-ஈசா: -ஜீவராசிகளின் தலைமுறைகளைப் படைத்தவரான பிரம்மாவால் படைக்கப்பட்ட பிரஜாபதிகளான; வயம்- நாங்கள்; தே- தங்களுடைய; பர- ஈச -பரமபுருஷரே ; அபிஸ்ருஷ்டா:-பிறந்த; ந-இல்லை; யேன -எவனால் (இரண்யகசிபு): ப்ரஜா:-ஜீவராசிகள்: வை—உண்மையில்; ஸ்ருஜாம:- நாங்கள் படைக்கிறோம்; நிஷித்தா:-தடுக்கப்பட்டு; ஸ: அவன்; (இரண்யகசிபு): ஏஷ:- இந்த; த்வயா -தங்களால்; பின்ன—வக்ஷா:- யாருடைய மார்பு பிளக்கப்பட்டதோ; நு-உண்மையில்; சேதே- விழுந்து கிடக்கிறான்; ஜகத்- மங்கலம் – உலக நன்மைக்காக; ஸத்வ- மூர்த்தே-தூய சத்வ குணம் பொருந்திய உன்னதமான இந்த ரூபத்தில்; அவதார:- இந்த அவதாரம்.

பிரஜாபதிகள் பின்வருமாறு துதி செய்தனர்: பரமபுருஷரே, பிரம்மாவிற்கும், சிவனுக்கும் கூட இறைவனே, தங்களுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவே பிரஜாபதிகளாகிய நாங்கள் படைக்கப்பட்டுள்ளோம். ஆனால் தொடர்ந்து நல்ல சந்ததியை உருவாக்குவதிலிருந்து நாங்கள் இரண்யகசிபுவால் தடுக்கப்பட்டோம். இப்பொழுது இந்த அசுரன் தங்களால் மார்பு பிளக்கப்பட்டு எங்கள் முன் இறந்து கிடக்கிறான். சுத்த சத்வ ரூபத்தில் வந்த இந்த அவதாரம் முழு பிரபஞ்சத்தின் நன்மைக்காகவே ஏற்பட்டது என்பதால், தங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள்.

பதம் 7.8.50
ஸ்ரீ-கந்தர்வா ஊசு:
வயம் விபோ தே நட-நாட்ய-காயகா
யேனாமஸாத் வீர்ய-பலௌஜஸா க்ருதா
ஸ ஏஷ நீதோ பவதா தஸாம் இமாம்
கிம் உத்பதஸ்த: குசலாய கல்பதே

ஸ்ரீ—கந்தர்வா: ஊச:—(சாதாரணமாக சுவர்க்க லோகங்களில் இளைஞர்களாக செயற்படும்) சுந்தர்வலோக வாசிகள் கூறினர்; வயம்- நாங்கள்: விபோ-பகவானே; தே-தங்களுடைய; நட-நாட்ய— காயகா:- நாடக நிகழ்ச்சியில் ஆடிப்பாடுபவர்கள்; யேன- எவனால்; ஆக்மஸாத்—அடக்குமுறையின் கீழ்: வீர்ய—அவனுடைய பராக்கிரமத்தின்; பல-மற்றும் தேக பலத்தின்; ஓஜஸா- ஆதிக்கத்தினால்; க்ருதா:-செய்யப்பட்டார்கள்; ஸ-அவன் (இரண்யகசிபு ) : ஏஷ:- இந்த;நீத:-கொண்டுவரப்பட்டான்; பவதா—தங்களால்; தசாம் இமாம்-இந்த நிலைக்கு; கிம்-என்ன; உத்பதஸ்த:-திடீரென பதவிக்கு வருபவன்; குசலாய- நன்மைக்கு; கல்பதே- செய்யும் திறமையுள்ளவன்.

கந்தர்வலோக வாசிகள் துதித்தனர்: பகவானே, நாங்கள் நாடக நிகழ்ச்சிகளில் ஆடியும், பாடியும் தங்களுடைய சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தோம். ஆனால் இந்த இரண்யகசிபுவின் தேகபலம் மற்றும் பராக்கிரமம் ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் அவனுடைய அடக்குமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டோம். இரண்யகசிபுவைப் போன்ற திடீர் பதவி பெற்ற ஒருவனின் செயல்களால் என்ன பயன் விளையக்கூடும்?

பதம் 7.8.51
ஸ்ரீ-சாரணா ஊசு:
ஹரே தவாங்கரி-பங்கஜம் பவாபவர்கம் ஆஸ்ரிதா:
யத் ஏஷ ஸாது-ஹ்ருச்-சயஸ் த்வாயாஸுர: ஸமாபித:

ஸ்ரீ – சாரணா: ஊக:-சாரணலோக வாசிகள் கூறினர்; ஹரே- பகவானே; தவ-தங்களுடைய; அங்ரி- பங்கஜம் -தாமரைப் பாதங்கள்: பவ—அபவர்கம்—பௌதிக வாழ்வின் களங்கத்திலிருந்து விடுபடுவதற்கரிய ஒரே புகலிடமாகும்; ஆஸ்ரிதா:- அடைக்கலம் புகுந்தோம்; யத் -ஏனெனில்; ஏஷ:-இந்த: ஸாது—ஹ்ருத்-சய:- நேர்மையானவர்களின் இதயங்களில் முள்ளாக இருந்த; த்வயா-பிரபுவான தங்களால்; அஸுர:-இந்த அகரன்; ஸமாபித:-அழிக்கப்பட்டான்.

சாரணலோக வாசிகள் கூறினர்: பகவானே, நேர்மையானவர்களின் இதயங்களில் எப்பொழுதும் முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த அசுரனான இந்த இரண்யகசிபுவைத் தாங்கள் அழித்துவிட்டதால், நாங்கள் இப்பொழுது விடுதலை பெற்றோம். பௌதிக களங்கத்திலிருந்து பந்தப்பட்ட ஆத்மாவை விடுவிக்கக் கூடிய தங்களுடைய திருவடித் தாமரைகளில் நாங்கள் நித்தியமாகத் தஞ்சமடைகிறோம்.

பதம் 7.8.52
ஸ்ரீ-யக்ஷா ஊசு:
வயம் அனுசர-முக்யா: கர்மபிஸ் தே மனோ-க்ஞைஸ்
த இஹ திதி-ஸுதேன ப்ராபிதா வாஹகத்வம்
ஸ து ஜன-பரிதாபம் தத்-க்ருதம் ஜானதா தே
நாஹர உபனீத: பஞ்சதாம் பஞ்ச- விம்ச

ஸ்ரீயக்ஷா: ஊசு:-யக்ஷலோக வாசிகள் துதித்தனர்; வயம்-நாங்கள்; அனுசர-முக்யா:—தங்களுடைய சேவகர்களுள் முக்கியமானவர்களான; கர்மபி:- சேவைகளால்; தே -தங்களுக்கு; மனோ—க்ஞை:- மகிழ்ச்சியைத் தரக்கூடிய; தே-அவர்கள்; இஹ-இச்சமயத்தில்: திதி- ஸுதேன-திதியின் மகனான இரண்யகசிபுவால்; ப்ராபிதா:-வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டோம்; வாஹகத்வம்—பல்லக்குத் தூக்குபவர்களாக; ஸ:-அவன்; து—ஆனால்; ஜன-பரிதாபம் எல்லோருடைய துன்பச் சூழ்நிலையை; தத்- க்ருதம்—அவனால் செய்யப்பட்ட; ஜானதா—அறிந்து; தே-தங்களால்; நர-ஹர-நரசிம்ம வடிவிலுள்ள பசுவானே; உபனீத:- வைக்கப்பட்டான்; பஞ்சதாம்— மரணத்தில்; பஞ்ச-விம்ச-இருபத்தைந்தாவது தத்துவமே (24 பிற பௌதிக மூலப்பொருட்களை ஆள்பவர்).

யக்ஷலோக வாசிகள் துதித்தனர்: இருபத்துநான்கு பௌதிக மூலப் பொருட்களை அடக்கியாளும் பகவானே, நாங்கள் தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் சேவைகளைச் செய்வதால், தங்களுடைய சேவகர்களுள் சிறந்தவர்களாக கருதப்படுகிறோம். இருப்பினும், திதியின் மகனான இரண்யகசிபுவின் கட்டளையினால் நாங்கள் பல்லக்குத் தூக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். நரசிம்மதேவரின் ரூபத்திலுள்ள பகவானே, இந்த அசுரன் எப்படி எல்லோரையும் துன்புறுத்தினான் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் இவனைக் கொன்று விட்டதால், இவனுடைய உடல் பஞ்ச பூதங்களுடன் கலந்து கொண்டிருக்கிறது.

பதம் 7.8.53
ஸ்ரீ-கிம்புருஷா ஊசு:
வயம் கிம்புருஷாய் த்வம் து மஹா-புருஷ ஈஸ்வர:
அயம் குபுருஷோ நஷ்டோ திக்-க்ருத: ஸாதுபிர் யதா

ஸ்ரீ-கிம்புருஷா: ஊசு:- கிம்புருஷலோக வாசிகள் கூறினர்; வயம்- நாங்கள்; கிம்புருஷா:-கிம்புருஷலோக வாசிகள், அல்லது அற்ப ஜீவராசிகள்; த்வம்-பிரபுவாகிய தாங்களே; து-ஆனால்; மஹா- புருஷ:- பரமபுருஷராவீர்; ஈஸ்வர:-பரம ஆளுனராகிய; அயம்- இந்த; கு -புருஷ:-மகாபாவியான இரண்யகசிபு: நஷ்ட:-கொல்லப் பட்டான்; திக்-க்ருத:- நிந்திக்கப்பட்ட; ஸாதுபி:-சாதுக்களால்; யதா- அப்பொழுது.

கிம்புருஷலோக வாசிகள் கூறினர்: நாங்கள் அற்ப ஜீவராசிகள், தாங்களோ அனைத்தையும் ஆளும் பரமபுருஷர். ஆகவே தங்களுக்குத் தகுதியான துதிகளை எங்களால் எவ்வாறு செய்ய இயலும்? பக்தர்களின் வெறுப்புக்கு ஆளானதால், அவர்களால் இந்த அசுரன் நிந்திக்கப்பட்டு, தங்களால் பிறகு இவன் கொல்லப்பட்டான்.

பதம் 7.8.54
ஸ்ரீ-வைதாலிகா ஊசு:
ஸபாஸு ஸத்ரேஷு தவாமலம் யசோ
கீத்வா ஸபர்யாம் மஹதீம் லபாமஹே
யஸ் தாம் அனைஷீத் வசம் ஏஷ துர்ஜனோ
த்விஷ்ட்யா ஹதஸ் தே பகவன் யதாமய:

ஸ்ரீ – வைதாலிகா: ஊசு:- வைதாலிகலோக வாசிகள் கூறினர்; ஸபாஸு-பெரும் சபைகளில்; ஸத்ரேஷு—யாக மண்டபங்களில்; தவ— தங்களுடைய; அமலம்-மாசற்ற: யச: கீர்த்தியை; கீத்வா- பாடிக்கொண்டு; ஸயர்யாம்-மரியாதைக்குரிய அந்தஸ்தை; மஹதீம்— பெரிய; லபாமஹே- நாங்கள் அடைந்தோம்; ய:-எவனொருவன்; தாம்- அதை (மரியாதைக்குரிய அந்தஸ்தை); அனைஷீத்- கொண்டு வந்தானோ; வசம்- தன் கட்டுப்பாட்டில்; ஏஷ: -இந்த: துர்ஜன:- துஷ்டன்; த்விஷ்ட்யா—பெரும் பாக்கியத்தினால்; ஹத-கொல்லப்பட்டான்; தே-தங்களால்; பகவன்—பகவானே; யதா-அதேபோல்; ஆமய:-ஒரு நோய்.

வைதாலிகலோக வாசிகள் கூறினர்: பகவானே பெரும் சபைகளிலும், யாக மண்டங்களிலும் தங்களுடைய மாசற்ற கீர்த்திகளை நாங்கள் பாடிக்கொண்டு, எல்லோருடைய மரியாதைக்கும் பாத்திரமானவர்களாக இருந்தோம். ஆனால் இந்த அசுரன் எங்களுடைய அந்த அந்தஸ்தைப் பிடுங்கிக் கொண்டான். இப்பொழுது எங்களுடைய பெரும் பாக்கியத்தினால், தீரா நோயை ஒருவன் தீர்ப்பது போல், இப்பெரும் அசுரனைத் தாங்கள் கொன்று விட்டீர்கள்.

பதம் 7.8.55
ஸ்ரீ-கின்னரா ஊசு:
வயம் ஈச கின்னர-கணாஸ் தவானுகா
திதிஜேன விஷ்டிம் அமுனானுகாரிதா;
பவதா ஹரே ஸ வ்ருஜினோ ‘வஸாதிதோ
நரஸிம்ஹ நாத விபவாய நோ பவ

ஸ்ரீ—கின்னரா: ஊசு:-கின்னரலோக வாசிகள் கூறினர்; வயம்— நாங்கள்; ஈச-பகவானே; கின்னர—கணா:-கின்னரலோக வாசிகளான; தவ—தங்களுடைய; அனுகா:-விசுவாசமுள்ள சேவகர்கள்; திதி- ஜேன—திதியின் மகனால்; விஷ்டிம்- சன்மானம் இல்லாத சேவை; அமுனா—இதனால்; அனுகாரிதா:-செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டோம்; பவதா—தங்களால்; ஹரே-பகவானே ; ஸ:இவன்; வ்ருஜின:–மகாபாவியான; அவஸாதித: அழிக்கப்பட்டான்; நரஸிம்ஹ- பகவான் நரசிம்மதேவரே; நாத-தலைவரே; விபவாய- மகிழ்ச்சிக்கும். செல்வாக்கிற்கும்; ந-எங்களுடைய; பவ- தாங்கள் இருங்கள்.

கின்னரர்கள் கூறினர்: பரம ஆளுனரே நாங்கள் தங்களுடைய நித்திய சேவகர்களாவோம். ஆனால் தங்களுடைய சேவைக்குப் பதிலாக நாங்கள் இந்த அசுரனால், சன்மானம் இல்லாத இவனது சேவையில் ஈடுபடுத்தப்பட்டோம். பாவியான இவன் இப்பொழுது தங்களால் கொல்லப்பட்டான். ஆகவே பிரபுவே, பகவான் நரசிம்மதேவரே, தங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள் நாங்கள் சமர்ப்பிக்கிறோம். தயவு கூர்ந்து எங்களைத் தொடர்ந்து காத்தருள்வீராக.

பதம் 7.8.56
ஸ்ரீ-விஷ்ணு-பார்ஷதா ஊசு:
அத்யைதத் தரி-நர-ரூபம்-அத்புதம் தே
திருஷ்டம் ந: சரணத ஸர்வ-லோக-சர்ம
ஸோ ‘யம் தே விதிகர ஈச விப்ர-சப்தஸ்
தஸ்யேதம் நிதனம் அனுக்ரஹாய வித்ம:

ஸ்ரீ- விஷ்ணு பார்ஷதா: ஊசு:- வைகுண்டலோகத்து பகவான் விஷ்ணுவின் சகாக்கள் பின்வருமாறு துதித்தனர்; அத்ய-இன்று; ஏதத் – இந்த; ஹரி-நர-பாதி சிங்க, பாதி மனித: ரூபம்-ரூபத்தை: அத்புதம் மிகவும் அற்புதமான; தே- தங்களுடைய; திருஷ்டம்- கண்டோம்; ந:-எங்களுடைய; சரண-த-நித்தியமாகப் புகலிடம் அளிப்பவர்; ஸர்வ-லோக-சர்ம—அனைத்து லோகங்களுக்கும் நல்லதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்; ஸ:-இவன்; அயம்-இந்த; தே- தங்களுடைய; விதிகர:-தூதன் (சேவகன்); ஈச-பகவானே; விப்ர- சப்த:- பிராமணர்களால் சபிக்கப்பட்டு; தஸ்ய-இவனுடைய; இதம்— இந்த; நிதனம்- வதம்; அனுக்ரஹாய—விசேஷ அனுக்கிரகம் என்பதை ; வித்ம:- நாங்கள் அறிவோம்.

வைகுண்டலோகத்து பகவான் விஷ்ணுவின் சகாக்கள் பின்வருமாறு துதித்தனர்: பகவானே, எங்களுக்குப் புகலிடமனிப்பவருள் தலை சிறந்தவரே, இன்று, உலக தன்மைக்காக, பகவான் நரசிம்ம தேவராகத் தாங்கள் மேற்கொண்ட அற்புதமான ரூபத்தை நாங்கள் தரிசித்தோம். பகவானே, இந்த இரண்யகசிபு, தங்களுடைய சேவையில் ஈடுபட்டிருந்தபொழுது, பிராமணர்களால் சபிக்கப்பட்டு ஓரசுரனின் உடலை ஏற்ற அதே ஜயன் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. இப்பொழுது இவன் கொல்லப்பட்டதற்கு, இவனிடம் தாங்கள் கொண்டிருந்த விசேஷ கருணையே காரணம் என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம்.


ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின், “பகவான் நரசிம்மர் அசுர ராஜனை வதம் செய்தல்” எனும் தலைப்பைக் கொண்ட எட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare