அத்தியாயம் – 8
பகவான் நரசிம்மர்
அசுரராஜனை வதம் செய்தல்
பதம் 7.8.1 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: அசுர குமாரர்கள் அனைவரும் பிரகலாத மகாராஜனின் திவ்யமான உபதேசங்களை சிரமேற் கொண்டு அவர்களுடைய ஆசிரியர்களான சண்டன் மற்றும் அமர்க்கனின் பௌதிக போதனைகளை நிராகரித்தனர்.
பதம் 7.8.2 : அசுர குமாரர்களான எல்லா மாணவர்களும் பிரகலாத மகாராஜனின் சகவாசத்தினால் கிருஷ்ண உணர்வில் முன்னேறி வருவதைக் கண்ட சுக்ராசாரியரின் மகன்களான சண்டனும் அமர்க்கனும், அச்சமடைந்து, அசுரராஜனிடம் சென்று நிலைமையை உள்ளபடி தெரிவித்தனர்.
பதங்கள் 7.8.3 – 7.8.4 : நிலைமையைப் புரிந்து கொண்ட இரண்யகசிபு, உடலே நடுங்கும் அளவுக்கு கோபாவேசமடைந்து முடிவில் தன் மகனான பிரகலாதரைக் கொன்றுவிட முடிவு செய்தான். இயற்கையாகவே கொடுமை மிக்கவனாக இரண்யகசிபு, அவமானமடைந்து, காலால் மிதிப்பட்ட பாம்புபோல் சீறத் துவங்கினான். அவனுடைய மகனான பிரகலாதரோ அமைதியாகவும், அடக்கமாகவும், மரியாதையுடனும், புலனடக்கத்துடனும் கைகளைக் கூப்பியபடி இரண்யகசிபுவின் முன் நின்று கொண்டிருந்தார். பிரகலாதரின் வயதுக்கும், நடத்தைக்கும் ஏற்ப அவர் தண்டிக்கப்படக்கூடாதவர் ஆவார். இருப்பினும் இரண்யகசிபு கொடுமைமிக்க வக்கிரக்கண்ணால் பார்த்துக் கொண்டு, பின்வரும் கடுஞ் சொற்களால் அவரைத் திட்டினான்.
பதம் 7.8.5 : இரண்யகசிபு கூறினான்: விவேமற்றவனே, மதி மழுங்கியவனே, குலத்தை அழிக்கப் பிறந்த பதரே, மனிதரில் கடைப்பட்டவனே, என் கட்டளையை மீறியவனான நீ பிடிவாதமுள்ள மூடனாவாய். உன்னை இன்றே யமபுரிக்கு அனுப்பி வைக்கிறேன்.
பதம் 7.8.6 : மூடனே பிரகலாதா, நான் கோபப்படும்பொழுது மூவுலகங்களும் அவற்றின் அதிபதிகளும் நடுங்குகின்றனர் என்பதை நீ அறிவாய். யாருடைய பலத்தினால் அயோக்கியனான நீ, பயமற்றவனாகி என் அதிகாரத்தையும் மீறும் அளவிற்கு இவ்வளவு புத்தியற்றவன் ஆனாய்?
பதம் 7.8.7 : பிரகலாத மகாராஜன் கூறினார்: அரசே, என்னுடைய பலத்திற்கு மூலம் எதுவோ, அதுவே தங்களுடைய பலத்திற்கும் மூலமாகும். உண்மையில், எல்லா வகையான பலத்திற்கும் ஆதிமூலம் ஒன்றுதான். அவரே எனக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும், மற்றுமுள்ள எல்லா பலசாலிகளுக்கும் ஒரே பலமாக விளங்குகிறார். அவரன்றி எவராலும் எந்த சக்தியையும் பெற முடியாது. பிரம்மதேவர் உட்பட, அசைவன, அசையாதன. உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய அனைவருமே பரமபுருஷரின் பலத்தினால்தான் ஆளப்படுகின்றனர்.
பதம் 7.8.8 : எவர் பரம ஆளுனராகவும், கால சொரூபமாகவும் இருக்கிறாரோ, அந்த பரமபுருஷரே இந்திரிய சக்தியாவும், மனோபலமாகவும், சரீர பலமாகவும், புலன்களின் உயிர்ச்சக்தியாகவும் இருக்கிறார். அவருடைய செல்வாக்கு எல்லையற்றதாகும். அவரே அனைத்து ஜீவராசிகளிலும் மிகச் சிறந்தவரும், ஜட இயற்கையின் முக்குணங்களை ஆள்பவருமாவார். அவர் தமது சொந்த சக்திகளால் இப்பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்து, காத்து, அழிக்கிறார்.
பதம் 7.8.9 : பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: அன்புத் தந்தையே, தயவுசெய்து உங்களுடைய அசுர மனோபாவத்தை விட்டுவிடுங்கள். உங்களுடைய இதயத்தில் நண்பனென்றும், பகைவனென்றும் வித்தியாசம் பாராட்ட வேண்டாம்; அனைவரிடமும் சமநோக்கு உடையவராக இருங்கள். கட்டுப்படுத்தாத, தவறாக வழிநடத்தப்பட்ட மனதைத் தவிர வேறு பகைவன் இவ்வுலகில் இல்லை. அனைவரையும் சமத்துவ நிலையில் காணும்பொழுது, ஒருவன் பகவானைப் பரிபூரணமாக வழிபடும் நிலையை அடைகிறான்.
பதம் 7.8.10 : முற்காலத்தில், உடலெனும் செல்வத்தைக் கவர்ந்து செல்லும் ஆறு எதிரிகளை வெல்ல முடியாத, உம்மைப் போன்ற பல முட்டாள்கள் இருந்தனர். அந்த முட்டாள்கள், “பத்துத் திக்குகளிலும் உள்ள எல்லா எதிரிகளையும் நான் வென்றுவிட்டேன்” என்றெண்ணி மிகவும் கர்வம் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவன் ஆறு எதிர்களை வென்று, எல்லா ஜீவன்களிடமும் சமத்துவம் உடையவனாக இருப்பானாயின், அவனுக்கு எதிரிகளே இல்லை. எதிரிகள் அறியாமையிலுள்ள ஒருவனின் கற்பனையில்தான் உருவாகின்றனர்.
பதம் 7.8.11 : இரண்யகசிபு பதிலளித்தான்: கயவனே, நீ புலன்களைக் கட்டுப்படுத்துவதில் என்னைவிடச் சிறந்தவன் என்பது போல், என்னுடைய மதிப்பைக் குறைக்க முயற்சிக்கிறாய். இது அதிகப் பிரசங்கித்தனமாகும். மரண வாயிலில் இருப்பவன்தான் இதுபோன்ற அர்த்தமற்ற பேச்சில் ஈடுபடுவான் என்பதால், நீ என் கைகளால் மடிய விரும்புகிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
பதம் 7.8.12 : மிகவும் துர்பாக்கியசாலியான பிரகலாதனே, என்னைத் தவிர வேறொரு உயர்ந்த ஜீவன் இருப்பதாகவும், அவர் அன்னத்திற்கும் மேலானவர் என்றும், அனைவரையும் ஆள்பவர் என்றும், எங்கும் நிறைந்திருப்பவர் என்றும் நீ எப்பொழுதும் கூறி வந்துள்ளாய். ஆனால் அவர் எங்குள்ளார்? அவர் எங்கும் நிறைந்திருப்பவராயின் அவர் ஏன் என் முன்னுள்ள இத்தூணில் இருக்கவில்லை?
பதம் 7.8.13 : இவ்வளவு அதிகமாக நீ பிதற்றுவதால், உன் உடலிலிந்து உன் தலையை இப்போது நான் துண்டித்து விடப்போகிறேன். உன்னால் மிகவும் வணங்கப்படும் கடவுள் இப்பொழுது உன்னைக் காப்பாற்றட்டும். அதை நான் காண விரும்புகிறேன்.
பதம் 7.8.14 : பெரும் தேகபலமுடைய இரண்யகசிபு கோபத்தினால் ஆவேசமடைந்து, மகா பாகவதரான தன் மகன் பிரகலாதரைக் கடுஞ்சொற்களால் திட்டினான். அவன் திரும்பத் திரும்ப பிரகலாதரைச் சபித்தபடி, தன் வாளை எடுத்துக் கொண்டு சிம்மாசனத்திலிருந்து பாய்ந்து வந்து, கடுங்கோபத்துடன் தன் முஷ்டியால் தூணில் குத்தினான்.
பதம் 7.8.15 : பிறகு அத்தூணிலிருந்து அதி பயங்கரமான சப்தம் உண்டாயிற்று. அது அண்ட கடாகத்தையே பிளந்து விடுவதுபோல் காணப்பட்டது. அன்பிற்குரிய யுதிஷ்டிரரே, அந்த சப்தம் பிரம்மதேவரைப் போன்ற தேவர்களின் உலகங்களையும் எட்டியது. அதைக்கேட்ட தேவர்கள், ‘நம்முடைய கிரகங்களெல்லாம் இப்பொழுது அழிக்கப்படுகின்றனவோ!” என்று எண்ணினர்.
பதம் 7.8.16 : தன் அசாதாரணமான வீரத்தைக் காட்டி, தன் சொந்த மகனையே கொல்ல விரும்பிய இரண்யகசிபு, இதுவரை தான் கேட்டிராத அதி அற்புதமான அந்த பயங்கர ஓசையைக் கேட்டான். அதைக் கேட்ட மற்ற அசுரத் தலைவர்களும் அச்சமடைந்தனர். ஆனால் அச்சபையில் உண்டான அவ்வோசையின் காரணத்தை அவர்களால் அறிய இயலவில்லை.
பதம் 7.8.17 : பரமபுருஷர் தமது சேவகரான பிரகலாத மகாராஜனின் கூற்றை உண்மையென்று நிரூபிப்பதற்காக, அதாவது, பரமபுருஷர் எங்கும் நிறைந்திருக்கிறார், சபை நடுவிலுள்ள தூணிலும் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காக, இதற்குமுன் கண்டிராத அற்புதமான ஒரு ரூபத்தைக் காட்டியருளினார். இவ்விதமாக பகவான் மனிதருமல்லாத, சிங்கமுமல்லாத அதியற்புதமான வடிவம் கொண்டு சபை நடுவில் தோன்றினார்.
பதம் 7.8.18 : அந்த போரொலியின் காரணத்தை அறிய இரண்யகசிபு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, மனிதனா சிங்கமா என்று அறிய முடியாத பகவானின் அந்த அற்புதமான ரூபம் தூணிலிருந்து வெளிப்பட்டது. அந்த ரூபத்தைக் கண்ட இரண்யகசிபு, “பாதி மனிதன் பாதி சிங்கமாக உள்ள இது என்ன ஜீவன்?” என்று ஆச்சரியப்பட்டான்.
பதங்கள் 7.8.19 – 7.8.22 : தன்முன் நிற்கும் நரசிம்ம ரூபம் யாராக இருக்கக்கூடும் என்று முடிவு செய்யும் முயற்சியில், இரண்யகசிபு பகவானின் ரூபத்தை ஆராய்ந்தான். உருக்கிய தங்கத்தையொத்த அவரது கோபக் கண்களின் காரணத்தால் பகவானுடைய ரூபம் மிகவும் பயங்கரமாக இருந்தது. மேலும் அவரது தோற்றத்தின் பயங்கரத்தை அதிகரிப்பது போல், ஜொலிக்கும் அவரது பிடரி மயிர் கோரமான அவரது முகத்தில் பரவிக் கிடந்தது; அவரது பற்கள் கோரமாக இருந்தன; கத்திபோல் கூர்மையான அவரது நாக்கு, சுழலும் வாள் போல் அசைந்தாடியது; அவரது காதுகள் நிமிர்ந்து அசைவற்றிருந்தன. அவரது நாசிகளும், பிளந்த வாயும் மலைக் குகைகள் போல் காணப்பட்டன. அவரது தாடைகள் பயங்கரமாகப் பிரிந்திருந்தன. அவரது முழு உடலும் ஆகாயத்தைத் தொட்டது. அவரது கழுத்து குறுகியும், பருத்தும் இருந்தது, அவரது மார்பு அகன்றும், இடை மெல்லியதாகவும் இருந்தன. அவரது உடலிலிருந்த உரோமம் சந்திர கிரணங்களைப் போல் வெண்மையாக இருந்தது. படை அணிகளைப் போலிருந்த அவரது கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை முதலான இயற்கையான ஆயுதங்கள் இருந்தன. அசுரர்களையும், கயவர்களையும், நாஸ்திகர்களையும் அவர் கொல்லும்பொழுது, அவரது கைகள் எல்லாத் திசைகளிலும் பரவிக்கிடந்தன.
பதம் 7.8.23 : “சிறந்த மாயாவி சக்தியுடைய பகவான் விஷ்ணு, என்னைக் கொல்வதற்காக இவ்வாறு திட்டமிட்டுள்ளார். ஆயினும் இத்தகைய ஒரு முயற்சியால் என்ன பயன்? என்னுடன் யாரால் போரிட முடியும்?” என்று தனக்குள் முணுமுணுத்த இரண்யகசிபு, இந்த எண்ணத்துடன் தன் கதையை எடுத்துக் கொண்டு, ஒரு யானைபோல் பகவானைத் தாக்கினான்.
பதம் 7.8.24 : எப்படி ஒரு சிறு பூச்சி பலவந்தமாக நெருப்பில் விழுந்து மறைந்து போகிறதோ, அப்படியே பகவானைத் தாக்கிய இரண்யகசிபு அவரது பெருஞ் ஜோதியில் மறைந்து போனான். பகவான் எப்பொழுதும் சுத்த சத்வ நிலையில் இருக்கிறார். எனவே இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. முன்பு சிருஷ்டியின்போது, பகவான் இருண்ட பிரபஞ்சத்தினுள் நுழைந்து, தமது ஆன்மீக ஜோதியினால் அதை பிரகாசப்படுத்தினார்.
பதம் 7.8.25 : அதன்பிறகு, கோபாவேசமடைந்த பெரிய அசுரனான இரண்யகசிபு, வேகமாகப் பாய்ந்து வந்து, தன் கதையால் நரசிம்மதேவரைத் தாக்கத் துவங்கினான். ஆனால் பகவான் நரசிம்மதேவர் ஒரு பெரிய பாம்பைப் பிடிப்பதுபோல் அந்த பெரிய அசுரனைப் பிடித்தார்.
பதம் 7.8.26 : யுதிஷ்டிரரே, சிறந்த பரத புத்திரரே, கருடன் சில சமயங்களில் விளையாட்டாக பாம்பைத் தன் வாயிலிருந்து நழுவ விடுவதுபோல், பகவான் நரசிம்ம தேவரும் இரண்யகசிபு தமது கையிலிருந்து நழுவிச் செல்ல ஒரு வாய்ப்பளித்தார். அப்பொழுது, தங்கள் இருப்பிடங்களை இழந்து, அந்த அசுரனிடமுள்ள பயத்தினால் மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த தேவர்கள், பகவானுடைய அச்செயல் நல்லதுக்கல்ல என்றெண்ணி கலக்கமடைந்தனர்.
பதம் 7.8.27 : நரசிம்மதேவரின் கைகளிலிருந்து இரண்யகசிபு விடுவிக்கப்பட்ட பொழுது, தன் வீரத்தைக் கண்டு பகவான் பயந்து விட்டதாகத் தவறாக அவன் எண்ணினான். எனவே அவன் சிறிது களைப்பாறிய பின், தன் கத்தியையும், கேடயத்தையும் எடுத்துக்கொண்டு, பெரும் பலத்துடன் மீண்டும் பகவானைத் தாக்கினான்.
பதம் 7.8.28 : பரமபுருஷரும், மகா பலசாலியுமான பகவான் நாராயணர் கிரீச்சிடும் அட்டகாசமான சிரிப்பொலியைச் செய்தார். பிறகு எந்த இடைவெளியும் இல்லாதபடி, கத்தியாலும், கேடயத்தாலும் தன்னைப் பாதுகாத்து வந்த இரண்யகசிபுவை பகவான் பிடித்தார். நரசிம்ம தேவருடைய சிரிப்பொலியின் பயத்தினால் கண்களை மூடிக் கொண்டபடி இரண்யகசிபு சிலசமயம் ஆகாயத்திலும், சிலசமயம் பூமியிலும் சஞ்சரித்தான்.
பதம் 7.8.29 : பாம்பு எலியைப் பிடிப்பது போல் அல்லது கருடன் கொடிய விஷமுள்ள பாம்பைப் பிடிப்பது போல், பகவான் நரசிம்மதேவர், இந்திரனின் வஜ்ராயுதத்தாலும் துளைக்க முடியாத இரண்யகசிபுவைப் பிடித்தார். பிடிப்பட்டதனால் துன்புற்று நாற்றிசையிலும் அவனது அங்கங்கள் சுழல, பகவான் நரசிம்மதேவர் சபா மண்டபத்தின் வாயிற்படியில் அந்த அசுரனைத் தமது தொடை மேல் கிடத்தித் தமது விரல் நகங்களால் விளையாட்டாகக் கிழித்துத் தள்ளினார்.
பதம் 7.8.30 : பகவான் நரசிம்மதேவரின் வாயும், பிடரி மயிரும் இரத்தம் தோய்ந்திருந்தன. கோபம் பொங்கிய அவரது கொடூரமான கண்களைக் காண்பது சாத்தியமற்றதாக இருந்தது. பரமபுருஷராகிய நரசிம்மதேவர் தமது நாக்கினால் வாயின் நுனிப் பாகத்தை நக்கிக்கொண்டும், இரண்யகசிபுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குடல்களாலான ஒரு மாலையால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த காட்சியானது, அப்பொழுதுதான் ஒரு சிங்கம் யானையைக் கொன்றது போல் காட்சியளித்தது.
பதம் 7.8.31 : பற்பல கைகளையுடைய பரமபுருஷர், முதலில் இரண்யகசிபுவின் இதயத்தைப் பிடுங்கிவிட்டு அவனை ஒருபுறம் எறிந்தபின், அந்த அசுரனுடைய சேனைகளின் பக்கம் திரும்பினார். அந்த சேனைகள் பகவானுடன் யுத்தம் செய்ய, உயர்த்திய ஆயுதங்களுடன் ஆயிரக் கணக்கில் வந்தனர். ஆனால் இரண்யகசிபுவிடம் விசுவாசம்மிக்க அந்த சேனைகளையெல்லாம் பகவான் நரசிம்மதேவர் தமது நகங்களின் நுனிகளாலேயே கொன்று போட்டார்.
பதம் 7.8.32 : நரசிம்மதேவரின் தலையிலுள்ள மயிர்களால் உதறித் தள்ளப்பட்ட மேகங்கள் இங்குமங்கும் சிதறடிக்கப்பட்டன. அவரது பிரகாசமான கண்கள், ஆகாயத்தில் ஒளிரும் கிரகங்களின் பிரகாசத்தையும் கவர்ந்து சென்றன. அவரது சுவாசம் கடல்களையும், சமுத்திரங்களையும் கொந்தளிக்கச் செய்தது. அவரது கர்ஜனையின் காரணத்தால், உலகிலுள்ள எல்லா யானைகளும் பயந்து அலறத் துவங்கின.
பதம் 7.8.33 : ஆகாய விமானங்கள் நரசிம்மதேவரின் தலை மயிர்களால் விண்வெளியிலும், உயர் கிரக அமைப்புகளிலும் வீசியெறியப்பட்டன. பகவானுடைய தாமரைப் பாதங்களின் அழுத்தத்தின் காரணத்தால், பூமியானது அதன் நிலையிலிருந்து நழுவிவிடுவது போல் காணப்பட்டது. பொறுக்க முடியாத அவரது பளுவினால் எல்லாக் குன்றுகளும், மலைகளும் மேலே எழும்பின. பகவானுடைய தேகத்தின் காந்தியினால், ஆகாயமும், எல்லாத் திசைகளும் தங்களுடைய இயற்கையான ஒளியை இழந்தன.
பதம் 7.8.34 : முழுமையான காந்தியையும், பயங்கரமான முகபாவத்தையும் வெளிப்படுத்திய பகவான் நரசிம்மர், கோபாவேசத்துடன், தமது சக்திக்கும், ஐசுவரியத்திற்கும் நிகரான எவரையும் காணாது, அரசவையிலிருந்த மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்தார். பயத்தினாலும்,மரியாதையினாலும், பகவானுக்கு நேரிடையாகப் பணிவிடை செய்ய எவரும் முன்வரவில்லை.
பதம் 7.8.35 : இரண்யகசிபு, மூவுலகங்களில் தலையில் உண்டான மூளை நோயின் வலிக்கு ஒப்பாக இருந்தான். இவ்விதமாக அப்பெரிய அசுரன், பரமபுருஷரின் கைகளாலேயே கொல்லப்பட்டத்தைக் கண்ட, சுவர்க்க லோகத்து தேவ மங்கையரின் முகங்கள் ஆனந்தத்தினால் மலர்ந்தன. தேவர்களின் மனைவிகளான அவர்கள் மீண்டும், மீண்டும் பகவான் நரசிம்மர்மீது மலர்மாரி பொழிந்தனர்.
பதம் 7.8.36 : அப்பொழுது, பரமபுருஷராகிய நாராயணரின் செயல்களைக் காண விரும்பிய தேவர்கள் தங்களுடைய விமானங்களால் ஆகாயத்தை நிரப்பினர். தேவர்கள் தங்களுடைய முரசுகளையும், துந்துபிகளையும் முழங்க ஆரம்பித்தனர். அதைக் கேட்ட தேவலோகத்து நடன மங்கையர் நடனமாட, கந்தர்வத் தலைவர்கள் இனிமையாகப் பாடினர்.
பதங்கள் 7.8.37 – 7.8.39 : பிரியமுள்ள யுதிஷ்டிரரே, அப்பொழுது பகவானை அணுகியவர்களுள், பிரம்மதேவர், இந்திரன், சிவபெருமான் முதலான தேவர்களும், சிறந்த முனிவர்களும், பித்ருலோக, சித்தலோக, வித்யாதர லோக மற்றும் நாகலோக வாசிகளும், மனுக்களும், பல்வேறு கிரகங்களின் தலைவர்களும், தேவலோகத்து நடன மங்கையரும், கந்தர்வர்கள், சாரணர்கள் மற்றும் யக்ஷர்களும், கின்னரலோக வாசிகளும், வேதாளங்களும், கிம்புருஷலோக வாசிகளும் மற்றும் சுனந்தன், குமுதன் முதலான விஷ்ணுவின் அந்தரங்க சேவகர்களும் அடங்குவர். இவர்களனைவரும் பேரொளியுடன் பிரகாசித்த பகவானுக்கு அருகாமையில் வந்தனர். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக, தலைக்குமேல் கூப்பிய கரங்களுடன் பகவானை வணங்கி, அவரை துதித்துப் போற்றினர்.
பதம் 7.8.40 : பிரம்மதேவர் பின்வருமாறு துதித்தார்: பகவானே, தாங்கள் எல்லையற்றவர், முடிவற்ற சக்திகளை உடையவர். தங்களுடைய செயல்கள் பௌதிக சக்தியினால் மாசடைவதேயில்லை என்பதால், தங்களுடைய வீரியத்தையும், அற்புதமான ஆதிக்கத்தையும் யாராலும் கணக்கிட முடியாது. பௌதிக குணங்களின் வாயிலாக தாங்கள் மிகச் சுலபமாக பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கிறீர்கள் என்றாலும், ஒரு குறைவுமின்றி அப்படியே இருக்கிறீர்கள். ஆகவே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 7.8.41 : சிவபெருமான் கூறினார்: யுகத்தின் முடிவே தங்களுடைய கோபத்தைக் காட்டுவதற்கான சரியான நேரம். பக்தர்களிடம் இயற்கையாகவே அன்பு கொண்டுள்ள பகவானே, இப்பொழுது அற்ப அசுரனான இந்த இரண்யகசிபு கொல்லப்பட்டு விட்டதால், இவனுடைய மகனும், பூரண சரணாகதியடைந்த பக்தனாக அருகில் நிற்பவனுமான இந்த பிரகலாதனைக் காத்தருளுங்கள்.
பதம் 7.8.42 : இந்திரன் கூறினார்: பரமபுருஷரே, எங்களைக் கடைத்தேற்றிக் காத்தருள்பவர் தாங்களேயாவீர். உண்மையில் உங்களுக்கே சொந்த மானதும், எங்களால் அனுபவிக்கப்படுவதுமான அவிர் பாகங்களை இந்த அசுரனிடமிருந்து தங்களால் மீட்டுத்தரப் பெற்றோம். அசுரராஜனான இரண்யகசிபு மிகவும் கொடூரமானவன் என்பதால், தங்களுடைய நித்திய வாசஸ்தலமாகிய எங்களுடைய இதயங்கள் அவனால் அபகரிக்கப் பட்டிருந்தன. இப்பொழுது தங்களுடைய இருப்பினால், எங்களுடைய இதயங்களிலிருந்த துக்கமும், இருளும் அகன்றுவிட்டன. பகவானே, முக்தியைக் காட்டிலும் மிகவும் மேலானதான தங்களுடைய சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, பௌதிக ஐசுவரியங்கள் அனைத்தும் அற்பமானவையாகும். அவர்கள் முக்தியைப் பற்றி கூட கவலைப்படுவதில்லை. காமம், அர்த்தம், தர்மம் ஆகியவற்றின் நன்மைகளைப் பற்றிக் கூறுவானேன்!
பதம் 7.8.43 : அங்கு கூடியிருந்த முனிவர்கள் அனைவரும் பின்வருமாறு பகவானைத் துதித்தனர்; பகவானே, தங்களுடைய தாமரைப் பாதங்களில் சரணடைந்தோரின் பரம காவலரே மூல முழுமுதற்கடவுளே, எந்த தவ, விரத முறையானது தங்களால் எங்களுக்கு முன்பு உபதேசிக்கப்பட்டதோ, அதுவே தங்களுடைய ஆன்மீகமான ஆத்ம பலமாகும். இந்த தவத்தினால் தான் தங்களுக்குள் முடங்கிக் கிடக்கும் ஜட உலகைத் தாங்கள் படைக்கிறீர்கள். இந்த தவமானது இந்த அசுரனால் கிட்டத்தட்ட முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது, எங்களைக் காப்பதற்கென்றே உள்ள நரசிம்மதேவரின் ரூபத்தில் நீங்கள் தோன்றியதன் மூலமாக, இந்த தவ முறையை மீண்டும் தாங்கள் அங்கீகரித்திருக்கிறீர்கள்.
பதம் 7.8.44 : பித்ருலோக வாசிகள் பின்வருமாறு துதித்தனர்: பிரபஞ்சத்தின் சமயக் கோட்பாடுகளைக் காப்பவரான பகவான் நரசிம்மதேவருக்கு எங்களது பணிவான வணக்கங்கள். வருடந்தோறும் எங்களுடைய இறந்த தினத்தன்று எங்களுடைய மகன்களாலும், பேரன்களாலும் அளிக்கப்பட்ட சிரார்த்த பிண்டங்களையும், புனித ஸ்தலங்களில் எங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட எள் கலந்த நீரையும் பலவந்தமாக அனுபவித்து வந்த இரண்யகசிபு இப்பொழுது தங்களால் கொல்லப்பட்டான். பகவானே தாங்கள் இந்த அசுரனை உங்களுடைய நகங்களினால் கிழித்துக் கொன்று, இவனுடைய வயிற்றிலிருந்து, இவனால் அபகரிக்கப்பட்ட இந்த சொத்துக்களையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டீர்கள். ஆகவே தங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்.
பதம் 7.8.45 : சித்தலோக வாசிகள் பின்வருமாறு துதித்தனர்: பகவான் நரசிம்ம தேவரே, நாங்கள் சித்தலோகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தானாகவே அஷ்ட சித்திகளின் பூரணத்துவத்தை நாங்கள் பெற்றுள்ளோம். இருப்பினும் மிகவும் வஞ்சகனான இரண்யகசிபு தனது தவ வலிமையினால் எங்களுடைய அஷ்ட சித்திகளைப் பறித்துக் கொண்டு விட்டான். இதனால் தனது யோக சக்தியில் இவன் மிகவும் கர்வம் கொண்டிருந்தான். இப்பொழுது இந்த அயோக்கியன் தங்களுடைய நகங்களினால் கிழித்துக் கொல்லப்பட்டதால், தங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம்.
பதம் 7.8.46 : வித்யாதரலோக வாசிகள் பின்வருமாறு துதித்தனர்: இரண்யகசிபு பிறரை வெல்லும் சாமர்த்தியத்திலும், மேலான தேக பலத்திலும் கர்வம் கொண்டிருந்தான். இதனால், பல்வேறு வழிகளில் மனம் போல் தோன்றவும், மறையவும் நாங்கள் பெற்றிருந்த சக்தியானது அந்த மூடனால் நிறுத்தப்பட்டது. இப்பொழுது இந்த அசுரனை பரமபுருஷர் ஒரு மிருகம்போல் பாவித்துக் கொன்றுவிட்டார். பரம லீலாவதாரமாகிய அந்த பகவான் நரசிம்மதேவருக்கு எங்களது நித்தியமான, பணிவான வணக்கங்கள்.
பதம் 7.8.47 : நாகலோக வாசிகள் கூறினர்: மகா பாவியான இரண்யகசிபு எங்கள் தலைகளிலுள்ள இரத்தினங்களையும், எங்களுடைய அழகிய மனைவிகளையும் அபகரித்துச் சென்றான். இப்பொழுது அவனுடைய மார்பு தங்களுடைய நகங்களால் கிழிக்கப்பட்டதால், தாங்கள் எங்களுடைய மனைவிகளுக்கு ஆனந்த ஊற்றாக மாறிவிட்டீர். இவ்விதமாக நாங்கள் இணைந்தாற்போல் தங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறோம்.
பதம் 7.8.48 : எல்லா மனுக்களும் பின்வருமாறு பிரார்த்தனை செய்தனர்: பகவானே, தங்களுடைய கட்டளைகளை அமல் படுத்துபவர்கள் என்ற முறையில், மனுக்களாகிய நாங்கள், மனித குலத்திற்குரிய சட்டங்களை அளிப்பவர்களாவோம். ஆனால் பெரிய அசுரனான இந்த இரண்யகசிபுவின் ஆதிக்கம் தற்காலிகமாக மேலோங்கியிருந்த காரணத்தால், வர்ணாசிரம தர்மத்தைப் பராமரிப்பதற்கான எங்களுடைய சட்டங்கள் அழிக்கப்பட்டன. பகவானே, தாங்கள் இக்கொடிய அகரனைக் கொன்றுவிட்டதால், நாங்கள் எங்களுடைய இயல்பான நிலையை இப்பொழுது அடைந்திருக்கிறோம். தங்களுடைய நித்திய சேவகர்களாகிய நாங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள்.
பதம் 7.8.49 : பிரஜாபதிகள் பின்வருமாறு துதி செய்தனர்: பரமபுருஷரே, பிரம்மாவிற்கும், சிவனுக்கும் கூட இறைவனே, தங்களுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவே பிரஜாபதிகளாகிய நாங்கள் படைக்கப்பட்டுள்ளோம். ஆனால் தொடர்ந்து நல்ல சந்ததியை உருவாக்குவதிலிருந்து நாங்கள் இரண்யகசிபுவால் தடுக்கப்பட்டோம். இப்பொழுது இந்த அசுரன் தங்களால் மார்பு பிளக்கப்பட்டு எங்கள் முன் இறந்து கிடக்கிறான். சுத்த சத்வ ரூபத்தில் வந்த இந்த அவதாரம் முழு பிரபஞ்சத்தின் நன்மைக்காகவே ஏற்பட்டது என்பதால், தங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள்.
பதம் 7.8.50 : கந்தர்வலோக வாசிகள் துதித்தனர்: பகவானே, நாங்கள் நாடக நிகழ்ச்சிகளில் ஆடியும், பாடியும் தங்களுடைய சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தோம். ஆனால் இந்த இரண்யகசிபுவின் தேகபலம் மற்றும் பராக்கிரமம் ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் அவனுடைய அடக்குமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டோம். இரண்யகசிபுவைப் போன்ற திடீர் பதவி பெற்ற ஒருவனின் செயல்களால் என்ன பயன் விளையக்கூடும்?
பதம் 7.8.51 : சாரணலோக வாசிகள் கூறினர்: பகவானே, நேர்மையானவர்களின் இதயங்களில் எப்பொழுதும் முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த அசுரனான இந்த இரண்யகசிபுவைத் தாங்கள் அழித்துவிட்டதால், நாங்கள் இப்பொழுது விடுதலை பெற்றோம். பௌதிக களங்கத்திலிருந்து பந்தப்பட்ட ஆத்மாவை விடுவிக்கக் கூடிய தங்களுடைய திருவடித் தாமரைகளில் நாங்கள் நித்தியமாகத் தஞ்சமடைகிறோம்.
பதம் 7.8.52 : யக்ஷலோக வாசிகள் துதித்தனர்: இருபத்துநான்கு பௌதிக மூலப் பொருட்களை அடக்கியாளும் பகவானே, நாங்கள் தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் சேவைகளைச் செய்வதால், தங்களுடைய சேவகர்களுள் சிறந்தவர்களாக கருதப்படுகிறோம். இருப்பினும், திதியின் மகனான இரண்யகசிபுவின் கட்டளையினால் நாங்கள் பல்லக்குத் தூக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். நரசிம்மதேவரின் ரூபத்திலுள்ள பகவானே, இந்த அசுரன் எப்படி எல்லோரையும் துன்புறுத்தினான் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் இவனைக் கொன்று விட்டதால், இவனுடைய உடல் பஞ்ச பூதங்களுடன் கலந்து கொண்டிருக்கிறது.
பதம் 7.8.53 : கிம்புருஷலோக வாசிகள் கூறினர்: நாங்கள் அற்ப ஜீவராசிகள், தாங்களோ அனைத்தையும் ஆளும் பரமபுருஷர். ஆகவே தங்களுக்குத் தகுதியான துதிகளை எங்களால் எவ்வாறு செய்ய இயலும்? பக்தர்களின் வெறுப்புக்கு ஆளானதால், அவர்களால் இந்த அசுரன் நிந்திக்கப்பட்டு, தங்களால் பிறகு இவன் கொல்லப்பட்டான்.
பதம் 7.8.54 : வைதாலிகலோக வாசிகள் கூறினர்: பகவானே பெரும் சபைகளிலும், யாக மண்டங்களிலும் தங்களுடைய மாசற்ற கீர்த்திகளை நாங்கள் பாடிக்கொண்டு, எல்லோருடைய மரியாதைக்கும் பாத்திரமானவர்களாக இருந்தோம். ஆனால் இந்த அசுரன் எங்களுடைய அந்த அந்தஸ்தைப் பிடுங்கிக் கொண்டான். இப்பொழுது எங்களுடைய பெரும் பாக்கியத்தினால், தீரா நோயை ஒருவன் தீர்ப்பது போல், இப்பெரும் அசுரனைத் தாங்கள் கொன்று விட்டீர்கள்.
பதம் 7.8.55 : கின்னரர்கள் கூறினர்: பரம ஆளுனரே நாங்கள் தங்களுடைய நித்திய சேவகர்களாவோம். ஆனால் தங்களுடைய சேவைக்குப் பதிலாக நாங்கள் இந்த அசுரனால், சன்மானம் இல்லாத இவனது சேவையில் ஈடுபடுத்தப்பட்டோம். பாவியான இவன் இப்பொழுது தங்களால் கொல்லப்பட்டான். ஆகவே பிரபுவே, பகவான் நரசிம்மதேவரே, தங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள் நாங்கள் சமர்ப்பிக்கிறோம். தயவு கூர்ந்து எங்களைத் தொடர்ந்து காத்தருள்வீராக.
பதம் 7.8.56 : வைகுண்டலோகத்து பகவான் விஷ்ணுவின் சகாக்கள் பின்வருமாறு துதித்தனர்: பகவானே, எங்களுக்குப் புகலிடமனிப்பவருள் தலை சிறந்தவரே, இன்று, உலக தன்மைக்காக, பகவான் நரசிம்ம தேவராகத் தாங்கள் மேற்கொண்ட அற்புதமான ரூபத்தை நாங்கள் தரிசித்தோம். பகவானே, இந்த இரண்யகசிபு, தங்களுடைய சேவையில் ஈடுபட்டிருந்தபொழுது, பிராமணர்களால் சபிக்கப்பட்டு ஓரசுரனின் உடலை ஏற்ற அதே ஜயன் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. இப்பொழுது இவன் கொல்லப்பட்டதற்கு, இவனிடம் தாங்கள் கொண்டிருந்த விசேஷ கருணையே காரணம் என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம்.