அத்தியாயம் – 2
அசுரராஜன் இரண்யகசிபு
பதம் 7.2.1
ஸ்ரீ-நாரத உவாச
ப்ராதரி ஏவம் வினிஹதே ஹரிணா க்ரோட-மூர்த்தினா
ஹிரண்யகசிபூ ராஜன் பர்யதப்யத் ருஷா சுசா
ஸ்ரீ-நாரத: உவாச-ஸ்ரீ நாரத முனிவர் கூறினார்; ப்ராதரி-சகோதரன் (இரண்யாக்ஷன்); ஏவம்-இவ்வாறு: வினிஹதே-கொல்லப்பட்ட போது ; ஹரினா—ஹரியால்; க்ரோட-மூர்த்தினா வராக மூர்த்தியின் ரூபத்தில்; ஹிரண்யகசிபு:- இரண்யகசிபு:ராஜன்—அரசே; பர்யதப்பத்-மிகவும் வருத்தமடைந்தான்; ருஷா-கோபத்தால்; சுசா-துக்கத்தினால்.
ஸ்ரீ நாரத முனிவர் கூறினார்: யுதிஷ்டிர மகாராஜனே, பகவான் விஷ்ணு வராக மூர்த்தியின் ரூபத்தில் இரண்யாக்ஷனைக் கொன்ற பொழுது இரண்யாக்ஷனின் சகோதரனான இரண்யகசிபு கடுங்கோபமடைந்து வருந்தத் துவங்கினான்.
பதம் 7.2.2
ஆஹ சேதம் ருஷா பூர்ண: ஸந்தஷ்ட-தர்சன-ச்சத:
கோபோஜ்வலத்ப்யாம் சக்ஷூர்ப்யாம் நிரீக்ஷன் தூம்ரம் அம்பரம்
ஆஹ -கூறினான்; ச-மேலும்; இதம்- இதை ; ருஷா-கோபத்துடன்; பூர்ண -நிரம்பியவனாய்; ஸந்தஷ்ட—கடித்துக்கொண்டு; தசன -சத:-தன் உதடுகளை; கோப -உஜ்வலத்ப்யாம் – கோபக்கனல் பறக்கும்; சக்ஷூர்ப்யாம் —கண்களுடன்; நிரீக்ஷன் – பார்த்துக் கொண்டு; தூம்ரம் – புகை சூழ்ந்ததாக; அம்பரம்-ஆகாயத்தை.
இரண்யகசிபு கடுங்கோபத்துடன் தன் உதடுகளை கடித்துக் கொண்டு கோபக்கனல் பறக்கும் கண்களுடன் ஆகாயத்தை வெறித்து நோக்கி அதைப் புகையால் மூடச் செய்தான். பின்னர் அவன் பின்வருமாறு பேசலானான்.
பதம் 7.2.3
கரால-தம்ஷ்ட்ரோக்ர-த்ருஷ்ட்யா துஷ்ப்ரேக்ஷ்ய-ப்ருகுடீ-முக:
சூலம் உத்யம்ய ஸதஸி தானவான் இதம் அப்ரவீத்
கரால – தம்ஷ்ட்ர—கோரமான பற்களுடனும்; உக்ர—த்ருஷ்ட்யா— கொடூரமான பார்வையுடனும்; துஷ்ப்ரேக்ஷ்ய-பார்ப்பதற்கு பயங்கரமான; ப்ரு-குடீ-நெறிந்த புருவங்களுடன்; முக:-முகத்தையுடைய; சூலம் – சூலத்தை; உத்யம்ய—உயர்த்திக் கொண்டு: ஸதஸி – சபையில்; தானவான்-அசுரர்களிடம்; இதம்—இவ்வாறு; அப்ரவீத்- கூறினாள்.
அவனுடைய கோரமான பற்களைக் காட்டிக் கொண்டு கொடூரமான பார்வையுடனும், நெறித்த புருவங்களுடனும், பார்ப்பதற்கு பயங்கரத் தோற்றமுடையவனாய், அவன் தனது ஆயுதமான சூலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அங்கு கூடியிருந்த தனது சகாக்களான அசுரர்களிடம் பின்வருமாறு பேசத் துவங்கினான்.
பதங்கள் 7.2.4-7.2.5
போ போ தானவ-தைதேய த்விமூர்தம்ஸ் த்ரியக்ஷ சம்பர
சதபாஹோ ஹயக்ரீவ் நமுசே பாக இல்வல
விபரசித்தே மம வச: புலோமன் சகுணாதய:
ஸ்ருணுதானந்தரம் ஸர்வே க்ரியதாம் ஆசு மா சிரம்
போ:-ஓ; போ:-ஓ; தானவ–தைதேயா: -தானவர்களே, தைதியர்களே; த்வி-மூர்தன் – துவிமூர்தா (இரு தலையுடையவன்); த்ரி- அக்ஷ—திரியக்ஷா (மூன்று கண்களுடையவன்); சம்பர-சம்பரா; சத— பாஹோ-சதாபாஹு (நூறு கைகளுடையவன்); ஹயக்ரீவ—ஹயகிரீவ (குதிரைத் தலையுடையவன்); நமுசே – நமுசி: பாக-பாகா; இல்வல— இல்வலா; விப்ரசித்தே-விப்ரசித்தி; மம-என்னுடைய; வச – வார்த்தைகளை; புலோமன்- புலோமா; சகுண-சகுனா; ஆதய:- மற்றும் எல்லோரும்; ஸ்ருணுத-கேளுங்கள்; அனந்தரம்-அதன்பிறகு; ஸர்வே-எல்லோரும்; கிரியதாம்-செய்யப்படும்; ஆக-உடனடியாக; மா – வேண்டாம்; சிரம் – தாமதிக்க.
ஓ தானவர்களே, தைத்தியர்களே! ஓ துவிமூர்மன், திரியக்ஷன், சம்பரன், சதபாஹு! ஓ ஹயகிரீவன், நமுச்சி, பாக, இவ்வலன்! ஓ விப்ரசித்தி, புலோமன், சகுணன் முதலான அசுரர்களே! நீங்கலெல்லோரும் அன்புடன் என் வார்த்தையை கவனமாகக் கேட்டு அதற்கேற்ப தாமதமின்றி செயற்பட வேண்டும்.
பதம் 7.2.6
ஸபத்னைர் காதித: க்ஷுத்ரைர் ப்ராதா மே தயித: ஸுஹ்ருத்
பார்ஷ்ணி-க்ராஹேண ஹரிணா ஸமேனாபி உபதாவனை:
ஸபத்னை:-பகைவர்களால்;காகித:-கொல்லப்பட்டான்; க்ஷுத்ரை: -அற்ப சக்தியுடைய; ப்ராதா—சகோதரனை; மே-என்; தயித:- மிகப் பிரியமான: ஸுஹ்ருத் – நலன் விரும்பியும்; பார்ஷ்ணி— க்ராஹேண-பின்னாலிருந்து தாக்கி: ஹரிணா- பரமபுருஷனால்; ஸமேன— (தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய) அனைவருக்கும் சமமானவன்; அபி—என்ற போதிலும்; உபதாவனை:-உபசகர்களான தேவர்களால்.
எனது துச்சமான எதிரிகளாகிய தேவர்கள் ஒன்று சேர்ந்து எனது அன்புமிக்க, எனது நலனின் அக்கறை கொண்டு எனக்குக் கீழ்படிந்து நடந்த என் சகோதரனான இரண்யாக்ஷனைக் கொன்றுவிட்டனர். பரமபுருஷனான விஷ்ணு, தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய நம் இரு சாராருக்கும் எப்பொழுதும் சமமானவன் என்றாலும், இம்முறை தேவர்களால் பக்தியுடன் பூஜிக்கப்பட்ட அவன் அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டு, இரண்யாக்ஷனைக் கொல்வதில் அவர்களுக்கு உதவியுள்ளான்.
பதங்கள் 7.2.7-7.2.8
தஸ்ய த்யக்த-ஸ்வபாவஸ்ய க்ருணேர் மாயா-வனௌகஸ:
பஜந்தம் பஜமானஸ்ய பாலஸ்யேவாஸ்திராத்மன:
மச்-சூல-பின்ன-க்ரீவஸ்ய பூரிணா ருதிரேண வை
அஸ்ருக்- ப்ரியம் தர்ப்பயிஷ்யே ப்ராதரம் மே கத-வ்யத:
தஸ்ய- அவருடைய (பரமபுருஷர்); த்யக்த – ஸ்வபாவஸ்ய- ( எல்லோரையும் சமமாகப் பாவிக்கும்) தனது நடுநிலையைக் கைவிட்டவரான; க்ருரணே:மிகவும் வெறுக்கத்தக்க; மாயா-மாயா சக்தியின் வசப்பட்டு; வன- ஓகஸ:-காட்டிலுள்ள ஒரு மிருகம் போல் நடந்து கொண்டு; பஜந்தம் -பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள பக்தனுக்கு: பஜமானஸ்ய-பூஜிக்கப்பட்டு; பாலஸ்ய—ஒரு குழந்தை; இவ-போல்; அஸ்திர-ஆத்மன:- அமைதியற்ற சஞ்சலத்துடன் எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும்; மத்-எனது; சூல-சூலத்தால்; பின்ன-துண்டிக்கப்பட்ட; கிரீவஸ்ய-கழுத்தையுடைய; பூரிணா- மிகுதியான; ருதிரேண-இரத்ததால்; வை-உண்மையில்; அஸ்ருக்— ப்ரியம்—இரத்தத்தை மிகவும் விரும்பிய; தர்ப்பயிஷ்யே- நான் திருப்திப்படுத்துவேன்; ப்ராதரம்-சகோதரனை; மே- என்னுடைய; கத-வ்யத:- நானும் நிம்மதியடைவேன்.
பரமபுருஷன் தேவர்களிடமும், அசுரர்களிடமும் உள்ள தனது இயல்பான சமத்துவத்தை விட்டுவிட்டான். அவன் பரம புருஷனாக இருந்தும், இப்பொழுது மாயையால் கவரப்பட்டு, அவனது பக்தர்களான தேவர்களை மகிழ்விப்பதற்காக ஒரு காட்டுப் பன்றியின் ரூபத்தை ஏற்றுக் கொண்டுள்ளான். இது சஞ்சலமுள்ள ஒரு குழந்தை வேறொருவரை நோக்கி தாவுவதைப் போலாகும். எனவே நான் எனது சூலத்தினால் பகவான் விஷ்ணுவின் தலையை துண்டித்துவிடப் போகிறேன். அவனது உடலிலிருந்து பெருகி வரும் ரத்தத்தால், ரத்தத்தை உறிஞ்சுவதை மிகவும் விரும்பிய என் சகோதரன் இரண்யாக்ஷனை நான் திருப்திப் படுத்துவேன். இவ்வாறு தானும் நிம்மதியடைவேன்.
பதம் 7.2.9
தஸ்மின் கூடே ‘ஹிதே நஷ்டே க்ருத்த-மூலே வனஸ்-பதௌ
விடபா இவ கஷ்யந்தி விஷ்ணு-ப்ராணா திவௌகஸ:
தஸ்மின் – அவன்; கூடே-மிகவும் தந்திரக்காரனான; அஹிதே- அப்பகைவன்; நஷ்டே- அழிந்துவிடும் பொழுது; க்ருத்த-மூலே- அதன் வேர்கள் துண்டிக்கப்பட்டு; வனஸ்—பதௌ—ஒரு மரம்; விடபா: -கிளைகளும், இலைகளும், இவ-போல்; கஷ்யந்தி-உலர்ந்து விடு வார்கள்;விஷ்ணு—ப்ராணா:- விஷ்ணுவை உயிராகக் கொண்ட; திவ- ஓகஸ:- தேவர்கள்.
வேர் துண்டிக்கப்பட்டு ஒரு மரம் கீழே விழுந்தவுடனேயே அதன் கிளைகளும், இலைகளும் தானாகவே உலர்ந்து போய்விடுகின்றன. அதுபோலவே, தேவர்களின் உயிரும், ஆத்மாவுமாக உள்ள தந்திரக்காரனான இந்த விஷ்ணுவை நான் கொன்றுவிட்டால், தேவர்கள் தங்களுடைய உயிரின் மூலத்தை இழந்து உலர்ந்து போய் விடுவார்கள்.
பதம் 7.2.10
தாவத் யாத புவம் யூயம் ப்ரஹ்ம-க்ஷத்ர-ஸமேதிதாம்
ஸூதயத்வம் தபோ -யக்ஞ- ஸ்வாத்யாய-வ்ரத-தானின:
தாவத் (நான் விஷ்ணுவைக் கொல்வதில் ஈடுபட்டுள்ள) அதுவரை; யாத-சென்று: புவம்– மண்ணுலகிற்கு: யூயம்—நீங்களனைவரும்; ப்ரஹ்ம – க்ஷத்ர-பிராமணர் மற்றும் க்ஷத்திரியர்களின்; ஸமேதிதாம்- (பிராமண பண்பாடு மற்றும் வேத அரசாங்கம் ஆகிய) செயல்களால் வளப்படுத்தப்பட்டுள்ள; ஸூதயத்வம்-அழிந்துவிடுங்கள்; தப:- தவம் செய்பவர்களை; யக்ஞ-யக்ஞங்களையும்; ஸ்வித்யாய-வேதக் கல்வி கற்பதையும்; வ்ரத-விரதங்களையும்; தானின:- மற்றும் தான தருமங்கள் செய்பவர்களையும்.
நான் பகவான் விஷ்ணுவைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கும் பொழுது, பிராமண பண்பாட்டினாலும் க்ஷத்திரிய அரசாட்சியாலும் செழிப்புற்று விளங்கும் மண்ணுலகிற்கு நீங்கள் செல்ல வேண்டும். மண்ணுலகில் தவத்திலும், வேள்வியிலும், வேதக் கல்வியிலும், விரதங்களிலும், தான தர்மங்களிலும் ஈடுபட்டுள்ள மக்களையெல்லாம் நீங்கள் அழித்துவிடவேண்டும்.
பதம் 7.2.11
விஷ்ணுர் த்விஜ-க்ரியா-மூலோ யக்ஞோ தர்மமய: புமான்
தேவர்ஷி-பித்ரு-பூதானாம் தர்மஸ்ய ச பராயணம்
விஷ்ணு:-பரமபுருஷனான விஷ்ணு; த்விஜ-பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின்; க்ரியா- மூல:-வேத யக்ஞங்களுக்கும், கிரியைகளுக்கும் ஆணி வேராக உள்ள; யக்ஞ:- யக்ஞமே உருவானவர் (யக்ஞ— புருஷர் எனப்படும் பகவான் விஷ்ணு) ; தர்ம-மய:-தர்மமே உருவான; புமாம்- பரமபுருஷர்; தேவ-ரிஷி-வியாச தேவர் மற்றும் நாரதர் போன்ற சிறந்த ரிஷிகள் மற்றும் தேவர்களின்; பித்ரு-பித்ருக்களின்; பூதானாம் – மேலும் மற்றெல்லா ஜீவராசிகளின்; தர்மஸ்ய – சமயக் கோட்பாடுகளின்; ச- கூட; பராயணம் -அடைக்கலம்.
யக்ஞம் மற்றும் கிரியா சொரூபமாக விளங்கும் பகவான் விஷ்ணுவை திருப்திப்படுத்துவதே பிராமணப் பண்பாட்டின் அடிப்படைக் கொள்கையாகும். பகவான் விஷ்ணு எல்லாச் சமய கொள்கைகளுக்கும் பிறப்பிடமாவார். அவரே அனைத்து தேவர்களுக்கும் சிறந்த பிதாக்களுக்கும், பொது ஜனங்களுக்கும் புகலிடமாவார். பிராமணர்கள் கொல்லப்பட்டுவிட்டால் யக்ஞங்கள் செய்யும்படி க்ஷத்திரியர்களை உற்சாகப்படுத்துவதற்கு எவருமே இருக்கமாட்டார்கள். இவ்வாறாக தேவர்களும் யக்ஞத்தில் வரும் ஹவிர்பாகம் இன்றி வருந்தித் தானாகவே இறந்துவிடுவர்.
பதம் 7.2.12
யத்ர யத்ர த்விஜா காவோ வேதா வர்ணாஸ்ரம-க்ரியா
தம் தம் ஜனபதம் யாத ஸந்தீபயத வ்ருஸ்சத
யத்ர யத்ர—எங்கெல்லாம்; தீவிஜா:-பிராமணர்கள்; காவோ:-பாது காக்கப்படும் பசுக்கள்; வேதா:-வேத சுலாச்சாரம்; வர்ண— ஆஸ்ரம -நான்கு வர்ணங்களையும், நான்கு ஆசிரமங்களையும் கொண்ட ஆரிய கலாச்சாரத்தின்; க்ரியா:-செயல்களை; தம் தம் -அந்தந்த; ஜன— பதம் நகருக்கு -அல்லது ஊருக்கு; யாத-செல்லுங்கள்; ஸந்தீபயத -தீமூட்டுங்கள்; வ்ருஸ்சத—(எல்லா மரங்களையும்) வெட்டித்தள்ளுங்கள்.
எங்கெல்லாம், பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் நல்ல பாதுகாப்பு உள்ளதோ, எங்கெல்லாம் வர்ணாஸ்ரம கொள்கைகளுக்கேற்ப வேதங்கள் கற்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் உடனடியாகச் செல்லுங்கள். அந்த இடங்களுக்குத் தீவைத்து, வாழ்வின் ஆதாரமாக விளங்கும் அங்குள்ள மரங்களை வெட்டித் தள்ளுங்கள்.
பதம் 7.2.13
இதி தே பர்த்ரு-நிர்தேசம் ஆதாய சிரஸாத்ருதா:
ததா ப்ரஜானாம் கதனம் விதது: கதன-ப்ரியா:
இதி- இவ்வாறாக; தே—அவர்கள்; பர்திரு-எஜமானனின்; நிர் தேசம்-உத்தரவை; ஆகாய—பெற்று; சிரஸா-சிரமேற்கொண்டு: ஆத்ரதா:- மரியாதை செய்து; ததா -அவ்வாறே; ப்ரஜானாம்-பிரஜைகளையெல்லாம்; கதனம்-சித்திரவதை: விதது:-செய்தனர்; கதன – ப்ரியா:-பிறரைத் துன்புறுத்துவதில் வல்லவர்களான.
இவ்வாறாக அழிவுச் செயல்களில் அதிக விருப்பம் கொண்ட அசுரர்கள், இரண்யகசிபுவின் உபதேசங்களை சிரமேற்கொண்டு மிகவும் மரியாதையுடன் அவனுக்கு வணக்கம் செலுத்தினர். அவனது உத்தரவுப்படி அனைத்து ஜீவராசிகளுக்கும் எதிரான துஷ்டச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.
பதம் 7.2.14
புர-க்ராம-வ்ரஜோத்யான-க்ஷேத்ராராமாஸ்ரமாகரான்
கேட-கர்வட-கோஷாம்ஸ் ச ததஹு: பத்தனானி ச
புர-நகரங்களையும்; க்ராம-கிராமங்களையும்; வ்ரஷ-மேய்ச்சல் நிலங்களையும்; உத்யான-தோட்டங்களையும்; க்ஷேத்ர —வயல்களையும்; ஆராம-இயற்கையான காடுகளையும்; ஆஸ்ரம-முனிவர் களின் ஆசிரமங்களையும்; ஆகரான்—மற்றும் (பிராமண பண்பாட்டைப் பராமரிப்பதற்குரிய விலையுயர்ந்த உலோகங்களை உற்பத்தி செய்யும்) கரங்களையும்; கேட-விவசாயக் கிராமங்களையும்; கர்வட – மலைக் கிராமங்களையும்; கோஷான் – இடையர்களின் குக்கிராமங்களையும் ச-மேலும்; ததஹு:-அவர்கள் எரித்தனர்; பனனானி – பட்டணங்களையும்; ச – கூட.
அந்த அசுரர்கள் நரகங்களுக்கும், கிராமங்களுக்கும், மேய்ச்சல் நிலங்களுக்கும், இடையர் கிராமங்களுக்கும், தோட்டங்களுக்கும் வயல்களுக்கும் மற்றும் இயற்கையான காடுகளுக்கும் தீமூட்டினர். அவர்கள் சாதுக்களின் ஆசிரமங்களையும், விலையுயர்ந்த உலோகங்களை வழங்கும் முக்கியச் சுரங்கங்களையும், விவசாயிகளின் குடியிருப்புகளையும், மலைக் கிராமங்களையும், பசுக்களைப் பாதுகாப்பவர்களான இடையர்களின் கிராமங்களையும் தீக்கிரையாக்கினர். அரசாங்கத் தலைநகரங்களையும் அவர்கள் கொளுத்தினர்.
பதம் 7.2.15
கேசித் கனித்ரைர் பிபிது: ஸேது-ப்ராகார-கோபுரான்
ஆஜீவ்யாம்ஸ் சிச்சிதுர் வ்ருக்ஷான் கேசித் பரசு-பாணய:
ப்ராதஹஞ் சகணானி ஏரே ப்ரஜானாம் ஜ்வலிதோல்முகை:
கேசித்-அசுரர்களில் சிலர்; கனித்ரை: கடப்பாறைகளால்; பிபிது:- உடைத்தெறிந்தனர்; ஸேது-பாளங்களை; ப்ராகார-அரண்கள்; கோபுரான் – கோபுர வாசல்கள்; ஆஜீவ்யான்-ஜீவனத்திற்கு ஆதாரமான; சிச்சிது:-வெட்டித் தள்ளினர்; வ்ருக்ஷான்-மரங்களை: சேகித் – சிலர்; பரசு-பாணய:- கோடரிகளைக் கையிலெடுத்து; ப்ராதஹன்- எரித்தனர்; சரணானி- வசிப்பிடங்களை; ஏகே-மற்ற அசுரர்கள்: ப்ரஜானாம்- பிரஜைகளுடைய; ஜ்வலித-கொழுந்து விட்டெரியும்: உல்முகை:-தீப்பந்தங்களால்.
அசுரர்களில் சிலர் கடப்பாறைகளை எடுத்து நகரங்களில் பாலங்களையும், அரண்களையும், (கோபுர) வாசல்களையும் உடைத்தனர். சிலர் கோடரிகளை எடுத்து மாம்பழங்களையும், பலாப்பழங்களையும், மற்ற உணவு வகைகளையும் அளித்த முக்கியமான மரங்களை வெட்டத் துவங்கினர். சில அசுரர்கள் தீப்பந்தங்களை எடுத்து பிரஜைகளின் குடியிருப்புகளுக்குத் தீ வைத்தனர்.
பதம் 7.2.16
ஏவம் விப்ரக்ருதே லோகே தைத்யேந்ரானுசரைர் முஹு:
திவம் தேவா: பரித்யஜ்ய புவி சேருர் அலக்ஷிதா:
ஏவம்—இவ்வாறு: விப்ரக்குதே- தொல்லைப் படுத்தப்பட்டபோது; லோகே-மக்கலெல்லோரும்; தைத்ய—இந்ர—அனுசரை:-தைத்திய ராஜனான இரண்யகசிபுவின் ஆட்களால்; முஹு: -திரும்பத்திரும்ப; திவம் – சுவர்க்க லோகங்களை; தேவா:- தேவர்கள்; பரித்யஜ்ய – விட்டுவிட்டு; புவி-மண்ணுலகில்; சேரு—(எவ்வளவு நாசம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காண) சஞ்சரித்தனர்; அலக்ஷிதா:-அசுரர்களுக்குக் தெரியாமல்.
இவ்வாறு இரண்யகசிபுவின் ஆட்களால் விளைவிக்கப்பட்ட இயற்கைக்கு விரோதமான செயல்களால் திரும்பத்திரும்ப தொல்லைக்குள்ளான மக்கலெல்லோரும் வேத பண்பாட்டுச் செயல்களை விட்டுவிட வேண்டியிருந்தது. யாகப் பலன்களைப் பெறாததால் தேவர்களும் தொல்லைக்குள்ளாகினர். அவர்கள் சுவர்கலோகங்களிலுள்ள தங்களுடைய குடியிருப்புகளை விட்டுவிட்டு அசுரர்களுக்குத் தெரியாமல் நாசகரமான சம்பவங்களைக் காணும் பொருட்டு மண்ணுலகில் சஞ்சரிக்கத் துவங்கினர்.
பதம் 7.2.17
ஹிரண்யகசிபுர் ப்ராது: ஸம்பரேதஸ்ய துஹ்கித:
க்ருத்வா கடோதகாதீனி ப்ராத்ரு-புத்ரான் அஸாந்த்வயத்
ஹிரண்யகசிபு:-இரண்யகசிபு:ப்ராது:-சகோதரனுடைய;ஸம்பரோதஸ்ய-இறந்த: துஹ்கித:- மிகவும் வருத்தமடைந்து; க்ருத்வா-செய்து; கடோதக-ஆதீனி-சமக்கிரியைகளை; ப்ராத்ரு- புத்ரான்—அவனது சகோதரனின் புத்திரர்களை; அஸாந்த்வயத் – சமாதானப்படுத்தினான்.
இரண்யகசிபு தன் சகோதரனின் மரணத்திற்குரிய ஈமக்கிரியைகளைச் செய்துமுடித்தபின் மிகவும் வருத்தத்துடன் தன் மருமகன்களை சமாதானப்படுத்த முயன்றான்.
பதங்கள் 7.2.18-7.2.19
சகுனிம் சம்பரம் திருஷ்டிம் பூதஸந்தாபனம் வ்ருகம்
காலநாபம் மஹானாபம் ஹிரஸ்மஸ்ரும் அதோத்கசம்
தன் மாதரம் ருஷாபானும் திதிம் ச ஜனனீம் கிரா
ஸ்லக்ஷ்ணயா தேச-கால-க்ஞ இதம் ஆஹ ஜனேஸ்வர
சகுனிம்-சகுனி; சம்பரம் -சம்பரன்; திருஷ்டிம்-திருஷ்டி, பூத -ஸந்தாபனம் – பூதஸந்தாபனன்; வ்ருகம்-விருகன்; காலநாபம் -காலநாபன்; மஹானாபம்-மஹானாபன்; ஹிரிஸ்மஸ்ரும் – ஹரிஸ்மஸ்ரு: அத-மற்றும்; உத்கசம்-உத்கசன்; தத்-மாதரம்—அவர்களது தாய்; ருஷாபானும்-ருஷாபானு: திதிம்-திதி: ச-மற்றும்: ஜனனீம்- அவனது சொந்த தாய்; கிரா-வார்த்தைகளால்; வ்யஷ்ணயா—மிகவும் இனிமையான; தேச-கால க்ஞ:-காலத்தையும், சூழ்நிலையையும் அறிவதில் வல்லவனான; இதம்-இதை; ஆஹ -கூறினான்; ஜன- ஈஸ்வர- அரசே.
அரசே, இரண்யகசிபு கடுங்கோபமடைந்தான். ஆனால் அவனொரு பெரிய அரசியல்வாதி என்பதால், காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப எப்படி செயல்படுவது என்பதை அறிந்திருந்தான். அவன் இனிய வார்த்தைகளால் தன் மருமகன்களான சகுனி, சம்பரன், திருஷ்டி, பூத்தசந்தாபணன், விருகன், காலநாபன், மஹாநாபன், ஹரிஸ் மஸ்ரு மற்றும் உத்சகன் ஆகியோரை சமாதானப்படுத்தத் துவங்கினான். மேலும் அவன் அவர்களது தாயையும், தன் சகோதரன் மனைவியான ருஷாபானுவையும் தன் சொந்த தாயான திதியையும் கூட தேற்றினான். அவன் அவர்களிடம் பின்வருமாறு பேசலானான்.
பதம் 7.2.20
ஸ்ரீ-ஹிரண்யகசிபு உவாச
அம்பாம்ப ஹே வதூ: புத்ரா வீரம் மார்ஹத சோசிதும்
விபோர் அபிமுகே ஸ்லாக்ய: சூராணாம் வத ஈப்ஸித:
ஸ்ரீ-ஹிரண்யகசிபு: உவாச-இரண்யகசிபு கூறினான்; அம்ப அம்ப- அம்மா, அம்மா; ஹேஓ; வது:- என் சகோதரன் மனைவியே; புத்ரா- என் சகோதர புத்திரர்களே; வீரம்-வீரனை; மா-இல்லை; அர்ஹத— தகுதியுடையவர்கள்; சோசிதும்- பற்றி வருந்த; ரிபோ:-எதிரியின்; அபிமுகே – முன்; ஸ்லாக்ய:- புகழத்தக்கதாகும்; சூராணாம் – உண்மையில் வலிமை மிக்கவர்களின்: வத:-கொல்வது; ஈப்ஸித:- விரும்பத்தக்கது.
இரண்யகசிபு கூறினான்: அன்புள்ள தாயே, சகோதரன் மனைவியே மற்றும் மருமகன்களே, ஒரு சிறந்த வீரனின் மரணத்திற்காக நீங்கள் வருந்தக் கூடாது. ஏனெனில் எதிரியின் முன் உயிரை விடுவது ஒரு வீரனுக்கு பெருமை தரக் கூடியதும், விரும்பத்தக்கதும் ஆகும்.
பதம் 7.2.21
பூதானாம் இஹ ஸம்வாஸ: ப்ரபாயாம் இவ ஸுவ்ரதே
தைவேநைகத்ர நீதானாம் உன்னீதானம் ஸ்வ-கர்மபி:
பூதானாம் – எல்லா ஜீவராசிகளின்; இஹ-இந்த ஜட உலகில்; ஸம்வாஸ:-கூடிவாழ்வது; ப்ரபாயாம்-குளிர்ந்த நீரைப் பருகும் இடத்தில்; இவ-போல; ஸு – வ்ரதே எனதன்புத் தாயே; தைவேன— விதிப்பயனாக; ஏகத்ர—ஓர் இடத்தில்; நீதானாம்-கொண்டுவரப்பட்டவர்களின்; உன்னீதானாம் – பிரிக்கப் பட்டவர்களின்; ஸ்வ- கர்மபி:-அவர்களது சொந்த கர்ம பலன்களால்.
என் அருமைத் தாயே, ஓர் உணவு விடுதியில் அல்லது தண்ணீர்ப் பந்தலில் பல பயணிகள் கூடுகின்றனர். பிறகு நீர் பருகிய பின் அவர்கள் தாங்கள் போக வேண்டிய இடங்களுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றனர். அதுபோலவே ஜீவராசிகள் ஒரு குடும்பத்தில் ஒன்றாகக் கூடுகின்றனர். அதன்பிறகு அவர்களுடைய சொந்த செயல்களின் பலனாக தங்களுடைய வெவ்வேறு திசைகளுக்கு பிரித்து அனுப்பப்படுகின்றனர்.
பதம் 7.2.22
நித்ய ஆத்யாவ்யய: சுத்த: ஸர்வக: ஸர்வ-வித் பர:
தத் தே ‘ஸர்வ ஆத்மனோ லிங்கம் மாயயா விஸ்ருஜன் குணான்
நித்ய-நித்தியமான: ஆத்மா-ஆத்மா: அவ்யய:-குறைவில்லாதவன்; சுத்த:- பௌதிக களங்கம் இல்லாதவன்; ஸர்வ-க: ஜட அல்லது ஆன்மீக உலகங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் தகுதியுடையவன்; ஸர்வ -வித்-அறிவுமயமானயன்; பர:-பௌதிக சூழ்நிலைகளுக்கு மேற்பட்ட; தத்தே-ஏற்கிறான்; அஸௌ—அந்த ஆத்மா; ஆத்மன:-தன்னுடைய; லிங்கம் – ஓருடலை; மாயயா-ஜடசக்தியால்; விஸ்ருஜன் – உண்டாக்கி; குணான் – பல்வேறு பௌதிக குணங்களை.
ஆன்மீக ஆத்மாவான ஜீவராசி நித்தியமானவனும் முடிவற்றவனும் ஆவான் என்பதால் அவனுக்கு மரணமில்லை. அவன் பௌதிக களங்கத்திலிருந்து விடுபட்டிருப்பதால் அவனால் பௌதிக அல்லது ஆன்மீக உலகங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அவன் அறிவுமயமானவன், ஜட உடலிலிருந்து முற்றிலும் வேறானவன். ஆனால் தன்னுடைய சிறிய சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து தவறாக வழிநடத்திச் செல்லப்படுவதன் காரணத்தால், அவன் ஜட இயற்கையால் உருவாக்கப்படும் ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். இவ்வாறாக அவன் பெயரளவிளான பௌதிக இன்ப துன்பங்களுக்கு ஆளாகிறான். எனவே உடலிலிருந்து ஆத்மா பிரிவதைக் குறித்து ஒருவரும் துக்கப்படக் கூடாது.
பதம் 7.2.23
யதாத்பஸா ப்ரசலதா தரவோ ‘பி சலா இவ
சக்ஷூஷா ப்ராம்யமாணேன த்ருஸ்யதே சலதீவ பூ:
யதா—எவ்வாறு: அம்பஸா – நீரால்; ப்ரசலதா-அசைகின்றன; தாவர:- (நதிக்கரையிலுள்ள) மரங்கள்; அபி-கூட; சலா:—அசைவது; இவ-போலவே; சக்ஷூஷா – கண்களால்; ப்ராம்யமாணேண- அசைவதாக; த்ருஸ்யதே – காணப்படுகிறது: சலதீ-அசைவது; இவ – போலவே: பூ -பூமி.
நீரில் ஏற்படும் அசைவுகளின் காரணத்தால் அந்த நீரில் பிரதிபலிக்கும் நதிக்கரையிலுள்ள மரங்கள் அசைவது போல் காணப்படுகின்றன. அது போலவே மனக்கோளாறினால் கண்கள் அசையும் பொழுது நிலமும் அசைவது போல் காணப்படுகிறது.
பதம் 7.2.24
ஏவம் குணைர் ப்ராம்யமானே மனஸி அவிகல: புமான்
யாதி தத்-ஸாம்யதாம் பத்ரே ஹி அலிங்கோ லிங்கவான் இவ
ஏவம்-இவ்விதமாக; குணை:-ஜட இயற்கைக் குணங்களால்; ப்ராம்யமாணே- அலைக்கழிக்கப்படும் பொழுது; மனஸி-மனம்; அவிகல: மாற்றமற்ற; புமான்-ஜீவராசி; யாதி—அடைகிறான்; தத் -ஸாம்யதாம் – சஞ்சலப்படும் மனதின் அதே நிலையை; பத்ரே- நற்குணமுள்ள என் தாயே; ஹி-உண்மையில்: அலிங்க:- ஒரு ஸ்தூல அல்லது சூட்சும உடல் இல்லாமல்; லிங்கவான்-பௌகி உடலை உடையவன்; இவ-போல்.
அதுபோலவே, எனதருமைத்தாயே, ஜட இயற்கைக் குணங்களின் அசைவினால் மனம் அலைக்கழிக்கப்படும் பொழுது, ஜீவராசியானவன் ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களின் வெவ்வேறு நிலைகளிலிருந்து விடுபட்டுள்ள போதிலும், தான் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறிவிட்டதாக எண்ணுகிறான்.
பதங்கள் 7.2.25- 7.2.26
ஏஷ ஆத்ம-விபர்யாஸோ ஹி அலிங்கே லிங்க-பாவனா
ஏஷ ப்ரியாப்ரியைர் யோகோ வியோக: கர்ம-ஸமஸ்ருதி:
ஸம்பவஸ் ச வினாசஸ் ச சோகஸ் ச விவித: ஸ்ம்ருத:
அவிவேகஸ் ச சிந்தா ச விவேகாஸ்ம்ருதிர் ஏவ ச
ஏஷ:- இது; ஆத்ம-விபர்யாஸ: -ஜீவராசியின் குழப்பம்: ஹி- உண்மையில்; அலிங்கே- ஒரு ஜட உடலைப் பெற்றிராத ஒன்றில்; லிங்க—பாவனா—ஜட உடலை ஆத்மா என்று எண்ணும்; ஏஷ:- இது: ப்ரிய – மிகவும் பிரியமானவர்களுடன்; அப்ரியை:-மற்றும் பிரியமில்லாதவர்களுடன் (குடும்பத்தில் இல்லாத பகைவர் போன்றவர்); யோக:- தொடர்பு; வியோக:-பிரிவு: கர்ம-கர்ம பலன்கள்: ஸம்ஸ்ருதி:- பெளதிகமான வாழ்வு நிலை; ஸம்பர -பிறவிகளை ஏற்று : ச-மேலும்; வினாச:- மரணத்தை ஏற்று; ச-மேலும்; சோக:-துக்கம்; ச – கூட; விவித:-வெவ்வேறு விதமான; ஸ்ம்ருத:- சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட; அவிவேக:-விவேகமற்ற; ச-கூட; சிந்தா-கவலை; ச-மேலும்; விவேக -விவேகத்தின்; ச-மற்றும்; அஸ்ம் ருதி- மறதி ; ஏவ-உண்மையில்; ச-கூட.
உடலையும் மனதையும் ஆத்மாவாக ஏற்றுக் கொள்ளும் குழப்பமடைந்த நிலையிலும் ஜீவராசி, சிலரைத் தனது உறவினர்கள் என்றும், மற்றவர்களை வெளியாட்கள் என்றும் கருதுகிறான். இந்த தப்பபிப்பிராயத்தின் காரணத்தால் அவன் துன்புறுகிறான். உண்மையில், கற்பனையான இத்தகைய பௌதிக எண்ணங்களின் சேகரிப்புத்தான், ஜட உலகிலுள்ள பெயரளவேயான இன்ப துன்பங்களுக்குக் காரணமாகும். இந்நிலையிலுள்ள பந்தப்பட்ட ஆத்மா வெவ்வேறு உயிரினங்களில் பிறவி எடுத்து பல்வேறு வகையான உணர்வு நிலைகளில் செயலாற்ற வேண்டியுள்ளது. இவ்விதமாக புதுப்புது உடல்களை அவன் உற்பத்தி செய்து கொண்டே போகிறான். தொடர்ச்சியான இந்த பௌதிக வாழ்வுதான் ஸம்ஸாரம் என்று அழைக்கப்படுகிறது. பிறப்பு, இறப்பு. துக்கம், முட்டாள்தனம், தவறு ஆகியவற்றிற்கு இத்தகைய பௌதிக சூழ்நிலைகள்தான் காரணம். இவ்வாறாக நாம் சில சமயங்களில் சரியான புரிதல் சரியான உணர்வுக்கு வருகிறோம். சில சமயங்களில் தவறான புரிதல் தவறான உணர்வுக்கு பலியாகிவிடுகிறோம்.
பதம் 7.2.27
அத்ராபி உதாஹரந்தீமாம் இதிஹாஸம் புராதனம்
யமஸ்ய ப்ரேத-பந்தூனாம் ஸம்வாதம் தம் நிபோதத
அத்ர—இது தொடர்பாக; அபி -உண்மையில்; உதாஹரந்தி-எடுத்துக்காட்டாக அவர்கள் கூறுகின்றனர்; இமம் – இந்த; இதி ஹாஸம்-சரித்திரம்; புராதனம்—மிகவும் பழமையான; யமஸ்ய – (மரணத்திற்குப்பின் நீதி வழங்கும், மரணத்தின் அதிதேவதையான) யமராஜனின்; ப்ரேத-பந்தூனாம்-இருந்தவனுடைய நண்பர்களின்; ஸம்வாதம்- உரையாடல்; தம்—அதை; நிபோதத—அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
இது தொடர்பாக பழைய சரித்திரத்திலிருந்து ஓர் உதாரணம் கொடுக்கப்படுகிறது. இது யமராஜனுக்கும், மரணமடைந்த ஒருவனின் நண்பர்களுக்கும் இடையிலான ஒரு சம்பாஷனையாகும். இதை கவனமாகச் கேளுங்கள்.
பதம் 7.2.28
உசீனரேஷ்வ் அபூத் ராஜா ஸுயக்ஞ இதி விஸ்ருத:
ஸபத்நைர் நிஹதோ யுத்தே ஞாதஸ்ய தம் உபாஸத
உசீனரேஷு-உசீனரம் என்ற நகரில்; அபூத்-இருந்தான்; ராஜா— ஓர் அரசன்; ஸுயக்ஞ:—சுயக்ஞன்; இதி-இவ்வாறு; விஸ்ருத:- புகழ்பெற்ற; ஸபத்னை:- எதிரிகளால்; நிஹத:-கொல்லப்பட்டான்; யுக்தே-யுத்தத்தில்; ஞாதய:-உறவினர்கள்; தம்—அவனை; உபாஸத- சுற்றி அமர்ந்து கொண்டனர்.
உசீனரம் என்ற தேசத்தில் சுயக்ஞன் என்ற பெயருடைய புகழ் பெற்ற ஓர் அரசன் இருந்தான். அவன் யுத்தத்தில் பகைவர்களால் கொல்லப்பட்ட பொழுது, அவனது உறவினர்கள் அவனது உயிரற்ற உடலைச் சுற்ற அமர்ந்து, தங்களுடைய நண்பனின் மரணத்தை எண்ணி அழுது புலம்ப துவங்கினர்.
பதங்கள் 7.2.29-7.2.31
விசீர்ண-ரத்ன-கவசம் விப்ரஷ்டாபரண-ஸ்ரஜம்
சர-நிர்பின்ன-ஹ்ருதயம் சயானம் அஸ்ருக்-ஆவிலம்
ப்ரகீர்ண-கேசம் த்வஸ்தாக்ஷம் ரபஸா தஷ்ட-தச்சதம்
ரஜ-குண்ட-முகாம்போஜம் சின்னாயுத புஜம் ம்ருதே
உசீனரேந்ரம் விதினா ததா க்ருதம்
பதிம் மஹிஷ்ய: ப்ரஸமீஷ்ய துஹ்கிதா;
ஹதா: ஸ்ம நாதேதி கரைர் உரோ ப்ருசம்
க்னந்த்யோ முஹுஸ் தத்-பதயோர் உபாபதன்
விசீர்ண—இங்குமங்கும் சிதறிக் கிடந்தன; ரத்ன-இரத்தினங்களாலான; கவசம்- கவசம்; விப்ரஷ்ட-கீழே விழுந்து: ஆபரண— ஆபரணங்கள்; ஸ்ரஜம்- மாலைகள்; சர-நிர்பின்ன:-அம்புகளால் துளைக்கப்பட்டு; ஹ்ருதயம் -இதயம்: சயானம் – விழுந்து; அஸ்ருக்- ஆவிலம் – இரத்தம் தோய்ந்தபடி; ப்ரகீர்ண – கேசம்—அவனது கேசம் அவிழ்ந்து சிதறியபடி; த்வஸ்த-அக்ஷம்- அவனது கண்கள் ஒளியிழந்தபடி: ரபஸா -கோபத்துடன்; தஷ்ட-கடிக்கப்பட்ட; தச்சதம்—அவனது உதடுகள்; ரஜ:-குண்ட—புழுதியால் மூடப் பட்டிருந்தது; முக-அம்போஜம்-முன்பு தாமரையை ஒத்திருந்த அவனது முகம்; சின்ன- வெட்கப்பட்டு; ஆயுத- புஜம் -அவனது கைகளும், ஆயுதங்களும்; ம்ருதே-யுத்தகளத்தில்; உசீனர- இந்ரம் -உசீனர நகரத்தின் அரசன்; விதினா- விதிவசத்தால்; ததா-இவ்வாறு; க்ருதம்- இந்நிலைக்கு தள்ளப்பட்டு; பதிம்-கணவனை; மஹிஷ்ய:-ராணிகள்: ப்ரஸமீஷ்ய- கண்டு; துஹ்கிதா:-மிகவும் துக்கப்பட்டனர்; ஹதா;- கொல்லப்பட்டோம்; ஸ்ம- நிச்சயமாக; நாத-கணவரே; இதி-இவ்வாறு; கரை:-கரங்களால்; உர:-மார்பில்; ப்ருசம் -திரும்பத் திரும்ப; க்னந்த்ய:-அடித்துக் கொண்டு; முஹு:-மீண்டும் மீண்டும்; தத்-பதயோ:- அந்த அரசனின் பாதங்களில்; உபாபதன் -விழுந்தனர்.
அவனது தங்கத்தாலான வைரம் இழைத்த கவசம் தகர்க்கப்பட்டு, அவனது ஆபரணங்களும், மாலைகளும் அறுந்து விழுந்து. அவனது கேசம் சிதறிக்கிடக்க, அவனது விழிகள் ஒளியிழந்து மங்கியபடி அந்த அரசன் கொல்லப்பட்டு யுத்தகளத்தில் விழுந்து கிடந்தான். அவனது முழு உடலும் இரத்தத்தால் நனைந்திருந்தது. அவனது இதயம் எதிரியின் அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தது. சாகும் தறுவாயில் தன் வீரத்தைக் காட்ட விரும்பிய அவன் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டதால், அவனது பற்கள் அந்த நிலையிலேயே இருந்தன. தாமரை போன்ற அவனது அழகிய முகம் இப்பொழுது கருமையடைந்து யுத்தகளத்தின் புழுதியால் மூடப்பட்டிருந்தது. வாளுடனும், மற்ற ஆயுதங்களுடனும் கூடிய அவனது கரங்கள் வெட்டப்பட்டு கிடந்தன. உசீனர மன்னனின் ராணிகள் தங்கள் கணவரின் நிலையைக் கண்டு பின்வருமாறு அழுது புலம்பத் துவங்கினர். “ஓ பிரபு, இப்பொழுது நீங்கள் கொல்லப்பட்டு விட்டதால், நாங்களும் கொல்லப்பட்டவர்களாவோம்.” இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறிப் புலம்பிய அவர்கள், மார்பில் அடித்துக் கொண்டு மரண மடைந்த அரசனின் பாதங்களில் விழுந்தனர்.
பதம் 7.2.32
ருதத்ய உச்சைர் தயிதாங்கரி-பங்கஜம்
ஸிஞ்சந்த்ய அஸ்ரை: குச-குங்குமாருணை:
விஸ்ரஸ்த-கேசாபரணா: கசம் ந்ருணாம்
ஸ்ருஜந்த்ய ஆக்ரந்தனயா விலேபிரே
ருதத்ய:- அழுது கொண்டு; உச்சை:-உரக்க; தயித – தங்கள் பிரியமான கணவனின்; அங்ரி-பங்கஜம் – தாமரைப் பாதங்களை; ஜிஞ்சந்திய:- நனைத்துக் கொண்டு: அஸ்ரை:-கண்ணீரால்; குச-குங்கும-அருணை:- அவர்களது மார்பிலிருந்த குங்குமத்தால் சிவந்திருந்த; விஸ்ரஸ்த-சிதறிக் கிடந்தது; கேச-கேசம்; ஆபரணா:- மற்றும் ஆபரணங்கள்; கசம்- சோகம்; ந்ருணாம்- பொது ஜனங்களின்; ஸ்ருஜந்த்ய-உண்டாக்கிக் கொண்டு; அக்ரந்தனயா—பரிதாபகரமாக அழுது கொண்டு; விலேபிரே-புலம்பத்துவங்கினர்.
அந்த ராணிகள் உரக்கக் கதறியழுத பொழுது அவர்களது கண்ணீர் அவர்களது மார்பில் விழுந்தோடி அங்குள்ள குங்குமத்துடன் கலந்து, சிவந்து போய் அவர்களது அருமைக் கணவனின் பாதங்களில் விழுந்தன. அவர்களது கேசம் கலைந்து சிதறிக் கிடந்தது. ஆபரணங்கள் சிதறிக் கிடந்தன. இவ்வாறாக கேட்போர் இதயத்தை உருக்கும் வண்ணம் தங்கள் கணவனின் மரணத்தைக் குறித்து அந்த ராணிகள் அழுது புலம்பத் துவங்கினர்.
பதம் 7.2.33
அஹோ விதாத்ராகருணேன ந: ப்ரபோ
பவான் ப்ரணீதோ த்ருக்–அகோசராம் தசாம்
உசீனராணாம் அஸி வ்ருத்தித: புரா
க்ருதோ ‘துனா யேன சுசாசம் விவர்தன:
அஹோ-அந்தோ: விதாத்ரா- விதியினால்; அகருணேன—இரக்கமற்ற; ந- எங்களுடைய; ப்ரபோ-பிரபுவே: பவான்-தாங்கள்; ப்ரணீத;- கொண்டு செல்லப்பட்டீர்கள்; த்ருக்-பார்வையின்; அகோசராம்— தூரத்துக்கப்பால் உள்ள: தசாம் -ஒரு தேசத்திற்கு; உசீனராணாம்- உசீனர நகர மக்களுக்கு; அஹி—நீங்கள் இருந்தீர்கள்; வ்ருத்தி-த:- படியளப்பவராக; புரா-முன்பு: க்ருத:-முடிந்து விட்டது; அதுனா- இப்பொழுது; யேன – யாரால்; சுசாம்- புலம்பலின்; விவர்தன:- அதிகரிப்பு.
பிரபுவே, இரக்கமற்ற விதியினால் இப்பொழுது நீங்கள் எங்களுடைய பார்வைக்கு எட்டாத இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுவீட்டீர்கள். நீங்கள் முன்பு உசீனர நாட்டு மக்களுக்குப் படியளந்து அவர்களைப் பராமரித்து வந்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் இப்பொழுதுள்ள உங்களுடைய நிலை அவர்களுடைய துக்கத்திற்குக் காரணமாகிவிட்டது.
பதம் 7.2.34
த்வயா க்ருதக்ஞேன வயம் மஹீ-பதே
கதம் வினா ஸ்யாம ஸுஹ்ருத்தமேன தே
தத்ரானுயானம் தவ வீர பாதயோ:
கஸ்ருஷதீனாம் திச யத்ர யாஸ்யஸி
த்வயா—நீங்கள்; க்ருதகிஞேன-மிகவும் நன்றியுடையவர்;வயம்- நாங்கள்: மஹீ-பதே -அரசே; கதம்- எவ்வாறு; வினா-இல்லாமல்; ஸ்யாம-உயிர்வாழ்வது; ஸுஹ்ருத் -தமேன – எங்கள் சிறந்த நண்பரான; தே-உங்களுடைய; தத்ர-அங்கு; அனுயானம்—பின்தொடர்வது; தவ—உங்களுடைய; வீர-வீரரே; பாதயோ:- தாமரைப் பாதங்களின்; கஸ்ரூஷதீனாம்—சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு: திச-கட்டளையிடுங்கள்; யத்ர—எங்கு; யாஸ்யஸி-செல்வீர்களோ அங்கு.
அரசே, ஓ வீரரே, நீங்கள் எங்களனைவரிடமும் மிகவும் நன்றியுள்ள ஒரு கணவராகவும், உண்மை நண்பராகவும், இருந்தீர்கள். நீங்களில்லாமல் நாங்கள் எவ்வாறு உயிர் வாழ்வது? வீரரே, தாங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள் என்பதை எங்களுக்கும் தயவு செய்து சொல்லுங்கள். அதனால் நாங்களும் உங்கள் அடிச்சுவடிகளைப் பின்பற்றி வந்து மீண்டும் உங்களுடைய சேவையில் ஈடுபடுவோம். நாங்களும் உங்களுடன் வந்து விடுகிறோம்!
பதம் 7.2.35
ஏவம் விலபதீனாம் வை பரிக்ருஹ்ய ம்ருதம் பதிம்
அனிச்சதீனாம் நிர்ஹாரம் அர்கோ ‘ஸ்தம் ஸன்யவர்தத
ஏவம்—இவ்வாறு; விலபதீனாம்—அழுது புலம்பும் ராணிகளின்; வை – உண்மையில்; பரிக்ருஹ்ய-மடிகளில் போட்டுக் கொண்டு; ம்ருதம்—இறந்த; பதிம்-கணவனை; அனிச்சதீனாம்- விரும்பாமல்; நிர்ஹாரம்—அந்திம கிரியைக்கு அவ்வுடல் எடுத்துச் செல்லப்படுவதை; அர்க:-சூரியன்; அஸ்தம்-அஸ்தமனம்; ஸன்யவர்த்தத—ஆயிற்று.
உடலை எரிப்பதற்குரிய நேரம் வந்தது. ஆனால் அவ்வுடல் எடுத்துச் செல்லப்படுவதை அனுமதிக்காத அந்த ராணிகள் தங்கள் மடிகளில் கிடத்தியிருந்த உயிரற்ற அவ்வுடலைக் குறித்து தொடர்ந்து அழுது புலம்பிக் கொண்டே இருந்தனர். இதற்கிடையில் சூரியனும் மேற்குத் திசையில் மறையலாயிற்று.
பதம் 7.2.36
தத்ர ஹ ப்ரேத-பந்தானாம் ஆஸ்ருத்ய பரிதேவிதம்
ஆஹ தான் பாலகோ பூத்வா யம: ஸ்வயம் உபாகத:
தத்ர—அங்கு : ஹ- நிச்சயமாக: ப்ரேத—பந்தூனாம்- இறந்த அரசனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின்: ஆஸ்ருத்ய-கேட்டு; பரிதேவிதம்-உரத்த அழுகுரலை (அது யமலோகத்திலிருந்தும் கேட்கக் கூடிய அளவுக்கு உரத்ததாக இருந்தது); ஆஹ-கூறினார்; தான்- (அழுது புலம்பும்) ராணிகளுக்கு; பாலக: -ஒரு சிறுவனின்; பூத்வா— உருவெடுத்து; யம: மரண தேவரான யமராஜன்; ஸ்வயம் – நேரில்; உபாகத:-வந்த பிறகு.
அந்த ராணிகள் அரசனின் உயிரற்ற அந்த உடலுக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பொழுது அவர்களுடைய உரத்த அழுகுரல்கள் யமலோகத்திற்குக் கூட கேட்டது. யமராஜனும் ஒரு சிறுவனின் உருவில் இறந்துபோன அரசனின் உறவினர்களை அணுகி பின்வருமாறு அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
பதம் 7.2.37
ஸ்ரீ-யம உவாச
அஹோ அமீஷாம் வயஸாதிகானாம்
விபஸ்யதாம் லோக-விதிம் விமோஹ:
யத்ராகதஸ் தத்ர கதம் மனுஷ்யம்
ஸ்வயம் ஸதர்மா அபி சோசந்தி அபார்த்தம்
ஸ்ரீ-யம: உவாச:-ஸ்ரீ யமராஜன் கூறினார்: அஹோ -ஐயோ;அமீஷாம் -இந்த; வயஸா—வயதில்; அதிகானாம்—பெரியவர்களின்;விபஸ்யதாம்-தினமும் பார்த்து; லோக -விதிம் (ஒவ்வொருவரும் மடிக்கின்றனர் என்ற) இயற்கையின் சட்டத்தை; விமோஹ:—இக்குழப்பம்; யத்ர—எங்கிருந்து; ஆகத:-வந்தது; தத்ர—அங்கு; கதம்-சென்று விட்ட; மனுஷ்யம்-மனிதனைக் குறித்து; ஸ்வயம் -தாங்களும்;ஸ – தர்மா:- (இறப்புக்கு உட்பட்ட) அதே தன்மையுடையவர்கள்;அபி— என்ற போதிலும்; சோசந்தி—அவர்கள் அழுது புலம்புகின்றனர்;அபார்த்தம்—பயனின்றி.
ஸ்ரீ யமராஜர் கூறினார்: அந்தோ! இது எவ்வளவு ஆச்சரியமானது. என்னைவிட மூத்தவர்களான இவர்களுக்கு, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஜீவராசிகள் பிறவியெடுத்து மடிந்திருப்பதில் முழு அனுபவம் உள்ளது. இவ்வாறாக தாங்களும் மடிய வேண்டியவர்கள் தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படியிருந்தும் அவர்கள் குழப்பமடைந்துள்ளனர். பந்தப்பட்ட ஆத்மா யாருக்கும் தெரியாத ஓரிடத்திலிருந்து வருகிறான். மரணத்திற்குப் பிறகு யாருக்கும் தெரியாத அதே இடத்திற்கு திரும்பிச் செல்கிறான். ஜட இயற்கையில் நடத்தப்படும் இச்சட்டத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல. இதையறிந்தும் அவர்கள் ஏன் வீணாகப் புலம்புகிறார்கள்?
பதம் 7.2.38
அஹோ வயம் தன்யதமா யத் அத்ர
த்யக்தா: பித்ருப்யாம் ந விசிந்தயாம:
அபக்ஷ்யமாணா அபலா வ்ருகாதிபி:
ஸ ரக்ஷிதா ரக்ஷதி யோ ஹி கர்பே
அஹேர-அந்தோ; வயம் -நாங்கள்; தன்ய – தமா:மிகவும் பாக்கியசாலிகள்; யத்-ஏனெனில்; அத்ர-தற்போது; தீயக்தா:-பாது காப்பின்றி, தனியாக விடப்பட்டு; பித்ருப்யாம்-தாய் தந்தையால்; ந -இல்லை: விசிந்தயாம:-கவலைப்பட; அபக்ஷ்யமாணா— இரையாகவில்லை; அபலா:- பலமில்லாம;வ்ருக-ஆதிபி:- புலிகளாலும் மற்ற பயங்கர மிருகங்களாலும்; ஸ-அவர் (பரமபுருஷர்); ரக்ஷிதா- பாதுகாப்பார்; ரக்ஷதி—பாதுகாத்தாரோ; ய:-யார்; ஹி-கண்டிப்பாக ; கர்பே-கர்பத்தில்.
வயதான இப்பெண்களுக்கு, எம்மை விட, வாழ்வைப் பற்றிய உயர்ந்த அறிவு இல்லாதது ஆச்சர்யமாக உள்ளது; உண்மையில் யாம் மிகவும் பாக்கியசாலியாவோம். ஏனெனில், யார் குழந்தையாக நாம் இருப்பினும், தாய் தந்தையரால் பாதுகாக்கப்படாமல் கைவிடப்பட்டு, தனியாக இவ்வுலகில் போராட நேர்ந்தபோதிலும், பலவீனமானவனாக இருந்த போதிலும், யாம் அழிக்கப்பட்டுவிடவோ அல்லது கொடிய மிருகங்களுக்கு இரையாகவோ இல்லை. இவ்வாறாக தாயின் கர்ப்பத்திலேயே எமக்குப் பாதுகாப்பு அளித்துள்ள பரமபுருஷர் எல்லா இடங்களிலும் எம்மை பாதுகாப்பர் என்று நாம் திடமாக நம்புகிறோம்.
பதம் 7.2.39
ய இச்சயோ ஸ்ருஜதீதம் அவ்யயோ
ய ஏவ ரக்ஷதி அவலும்பதே சய:
தஸ்யாபலா: க்ரீடனம் ஆஹுர் ஈசிதுஸ்
சராசரம் நிக்ரஹ-ஸங்ரஹே ப்ரபு:
ய:-யார்; இச்சயா – தமது விருப்பத்தினால் (எவராலும் தூண்டப்படாது); ஈச:-பரம ஈசுவரரான; ஸ்ருஜதி-படைக்கிறார்; இதம்- இந்த (ஜட உலகை); அவ்யய:(பல பௌதிக தோற்றங்களைப் படைத்துள்ளதால் தம் சொந்த இருப்பை இழந்து விடாமல்) அப்படியே இருந்து கொண்டு; ய:-யார்; ஏவ-உண்மையில்; ரக்ஷதி-காக்கிறார்; அவலும்பதே-அழிக்கிறார்; ச-கூட; ய:-யார்; தஸ்ய-அவருடைய; அபலா:-அபலைகளே; க்ரீடனம்-விளையாட்டு; ஆஹு:—அவை கூறுகின்றன; ஈசிது:-பரமபுருஷரின்; சர- அசரம் -அசையும் மற்றும் அசையாத நிக்ரஹ-அழிப்பதில்; ஸங்ரஹே-அல்லது காப்பதில்; ப்ரபு:-முழு திறமையுள்ளவர்.
அந்த சிறுவன் அப்பெண்களை நோக்கி கூறினான்: அபலைப் பெண்களே, ஒருபோதும் குறைவற்றவரான பரமபுருஷரின் விருப்பத்தினாலேயே பிரபஞ்சம் படைத்து, காத்து மீண்டும் அழிக்கப்படுகிறது. இதுவே வேத ஞானத்தின் தீர்ப்பாகும். அசைவன, அசையாதன ஆகிய ஜீவன்களைக் கொண்டுள்ள இந்த ஜட சிருஷ்டி பகவானின் விளையாட்டுப் பொருளைப் போன்றதாகும். அவர் பரமபுருஷர் என்பதால், அதை அழிக்கவும், காக்கவும் பூரண தகுதியுடையவராவார்.
பதம் 7.2.40
பதி ச்யுதம் திஷ்டதி திஷ்ட-ரக்ஷிதம்
க்ருஹே ஸ்திதம் தத்-விஹதம் வினஸ்யதி
ஜீவதி அனாதோ ‘பி தத் ஈக்ஷிதோ வனே
க்ருஹே ‘பிகுப்தோ ‘ஸ்ய ஹதோ ந ஜீவதி
பதி—பொது வீதியில்; ச்யுதம்-கீழே விழுந்துவிட்ட பொருள்; திஷ்டதி-அப்படியே இருக்கிறது; திஷ்ட-ரக்ஷிதம்-விதியால் பாதுகாக்கப்பட்டு; க்ருஹே-வீட்டில்; ஸ்திதம் – இருந்தபோதிலும்; தத் – விஹதம் – பரமனின் விருப்பத்தால் பீடிக்கப்பட்டு; வினஸ்பதி – தொலைந்து விடுகிறது; ஜீவதி-உயிரோடு இருக்கிறான்; அனாத: அபி—காவலர் இல்லாத போதிலும்; தத்—ஈக்ஷித:- பகவானால் காக்கப்பட்டு; வனே-காட்டில்; க்ருஹே-வீட்டில்; அபிகுப்த:-மறைத்து வைத்து நன்கு காக்கப்பட்டாலும்; அஸ்ய-அவன்; ஹத:-தாக்கப்பட்டு ; ந-இல்லை; ஜீவதி- பிழைப்பது.
சிலசமயங்களில் எல்லோராலும் பார்க்கும்படியான பொதுவீதியில் ஒருவன் தன் பணத்தை தொலைத்துவிடுகிறான். இருப்பினும் மற்றவர்களால் காணமுடியாதபடி அவனுடைய பணம் விதியினால் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறாக அதை இழந்தவனே மீண்டும் அதைப் பெறுகிறான். மற்றொரு புறம், பகவான் பாதுகாப்பு அளிக்காவிடில், வீட்டில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள பணம் கூட காணாமற்போய் விடுகிறது. பரமபுருஷர் ஒருவனுக்குப் பாதுகாப்பு அளிப்பாரேயானால், அவன் பாதுகாப்பவர் இல்லாமல் காட்டில் இருந்தாலும் உயிரோடிருக்கிறான். ஆனால் வீட்டில் உறவினர்களாலும், மற்றவர்களாலும் நன்கு பாதுகாக்கப்படும் ஒருவன் சிலசமயங்களில் ஒருவராலும் காப்பாற்றமுடியாமல் மரணமடைகிறான்.
பதம் 7.2.41
பூதானி தைஸ் தைர் நிஜ-யோனி-கர்மபிர்
பவந்தி காலே ந பவந்தி ஸர்வச:
ந தத்ர ஹாத்மா ப்ரக்ருதாவ் அபி ஸ்திதஸ்
தஸ்யா குணைர் அன்யதமோ ஹி பத்யதே
பூதானி-ஜீவராசிகளின் எல்லா உடல்களும்; தை: தை:-அவர்களது; நிஜ- யோனி- தங்களது உடல்களுக்குத் தாங்களே காரணமாக: கர்மபி: -கருமங்களால்;பவந்தி— தோன்றுகிறார்கள்; காலே-காலப்போக்கில்; ந பவந்தி-முடிந்து விடுகிறது; ஸர்வச:-எல்லா விதத்திலும்; ந -இல்லை: தத்ர-அங்கு; ஹ—உண்மையில்; ஆத்மா—ஆத்மா; ப்ரக்ருதௌ- இந்த ஜட உலகில்; அபி-போதிலும்; ஸ்தித:-இருந்த; தஸ்யா:-அவளின் (ஜட சக்தியின்) ; குணை:-வெவ்வேறு குணங்களால்; அன்ய-தம:-முற்றிலும் வேறான; ஹி—கட்டாயம்; பத்யதே- கட்டுப்படுகிறான்.
ஒவ்வொரு பந்தப்பட்ட ஆத்மாவும் அவனது செயலுக்கேற்ப வெவ்வேறு வகையான உடலைப் பெறுகிறான். அவனுடைய வேலை முடிந்ததும் உடலும் முடிந்துவிடுகிறது. ஆத்மாவானது வெவ்வேறு உயிரினங்களில், ஸ்தூல மற்றும் சூட்சும ஜட உடல்களில் இருந்த போதிலும், அவற்றினால் அவன் பந்திக்கப்படுவதில்லை. ஏனெனில், தோன்றியுள்ள உடலிலிருந்து அவன் முற்றிலும் வேறுபட்டவனாவான்.
பதம் 7.2.42
இதம் சரீரம் புருஷஸ்ய மோஹஜம்
யதா ப்ருதக் பெளதிகம் ஈயதே க்ருஹம்
யதௌதகை: பார்த்திவ-தைஜஸைர் ஜன:
காலேன ஜாதோ விக்ருதோ வினஸ்யதி
இதம்-இந்த : சரீரம் – உடல் : புருஷஸ்ய-பந்தப்பட்ட ஆத்மாவின்; மோஹ-ஜம்-அறியாமையில் பிறந்த; யதா- எவ்வாறு; ப்ருதக்-தனி; பௌதிகம்-பௌதிக; ஈயதே -காணப்படுகிறது; க்குஹம்- ஒரு வீடு; யாத— எவ்வாறு; உதகை:-நீரால்: பார்த்திவ -மண்ணால்; தைஜஸை- மற்றும் நெருப்பால்; ஜன:-பந்தப்பட்ட ஆத்மா; காலேன-காலப் போக்கில்; ஜாத:-பிறக்கிறான்; விக்ருத:- மாற்றமடைகிறது; வினஸ்யதி- அழிகிறது.
ஓர் இல்லறவாசி அவனது இல்லத்திலிருந்து வேறுபட்டவன் என்றபோதிலும், தான் தனது இல்லத்துடன் ஒன்றுபட்டவன் என்று நினைக்கிறான். அதுபோலவே, பந்தப்பட்ட ஆத்மா அறியாமையின் காரணத்தால், உடலானது உண்மையில் ஆத்மாவிலிருந்து வேறுபட்டது என்றபோதிலும், உடலையே தான் என்று ஏற்றுக் கொள்கிறான். இவ்வுடலானது மண், நீர், நெருப்பு ஆகியவற்றின் ஒரு சேர்க்கையின் மூலமாக அடையப்படுகிறது. இந்த மண், நீர், நெருப்பு ஆகியவை காலப்போக்கில் உருமாற்றமடையும் பொழுது உடல் அழிந்துபோகிறது. உடலின் இந்த சிருஷ்டி மற்றும் அழிவு ஆகியவற்றுடன் ஆத்மாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை.
பதம் 7.2.43
யதானலோ தாருஷு பின்ன ஈயதே
யதானிலோ தேஹ-கத: ப்ருநக் ஸ்தித:
யதா நப: ஸர்வ-கதம் ந ஸஜ்ஜதே
ததா புமான் ஸர்வ-குணாஸ்ரய: பர:
யதா – எப்படி: அனல்- நெருப்பு: தாருஷு-விறகில்: பின்ன;- பிரித்திருப்பதாக; ஈயதே- காணப்படுகிறதோ;யதா—எப்படி; அனில:- காற்று; தேஹ- கத:- உடலுக்குள்; ப்ருதக் – தனியாக; ஸ்தித:-இருக்கிறதோ; யதா—எவ்வாறு; நப:-ஆகாயம்; ஸர்வ-கதம்—எங்கும் நிறைந்திருப்பினும்; ந-இல்லையோ; ஸஜ்ஜதே-கலப்பது: ததா- அவ்வாறே; புமான் – ஜீவராசி; ஸர்வ-குண-ஆஸ்ரய:-இப்பொழுது ஜட இயற்கைக் குணங்களின் புகலிடமாக இருந்த போதிலும்; பர:- பௌதிக களங்கத்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது.
எப்படி நெருப்பு விறகில் ஊடுருவி இருப்பினும் விறகிலிருந்து வேறுபட்டதாகக் காணப்படுகிறதோ, எப்படி காற்றானது வாய்க்குள்ளும், நாசித்துவாரங்களுக்குள்ளும் இருப்பினும் அது பிரிந்திருப்பதாகக் காணப்படுகிறதோ, எப்படி ஆகாயமானது எங்கும் நிறைந்திருப்பினும் எதனுடனும் கலப்பதில்லையோ அப்படியே, ஜட உடலுக்கு ஆதாரமான ஜீவராசி இப்பொழுது அதற்குள் சிறைப்பட்டுள்ள போதிலும், அதிலிருந்து வேறுபட்டதாகவே உள்ளது.
பதம் 7.2.44
ஸுயக்ஞோ நனு அயம் சேதே மூடா யம் அனுசோகத
ய: ஸ்ரோதா யோ ‘நுகவ்தேஹ ஸ ந த்ருஸ்யேத கர்ஹிசித்
ஸுயக்ஞ:—சுயக்ஞன் என்ற அரசன்; நனு-நிச்சயம்; அயம்- இந்த; சேதே-கிடக்கிறார்; மூடா:-முட்டாள் மனிதர்களே; யம் – யாரை; அனுசோசத—நினைத்து அழுகிறீர்களோ; ய-எவர்; ஸ்ரோதா- கேட்பவர்; ய:-எவர்; அனுவக்தா-பேசுபவர்; இஹ -இவ்வுலகில்; ஸ:—அவர்; ந-இல்லை; த்ருஸ்யேத – காணப்பட; கர்ஹிசித்—எந்த சமயத்திலும்.
யமராஜர் தொடர்ந்து கூறினார்: துக்கப்படுபவர்களே, நீங்களெல்லோரும் மூடர்களாவீர்! யாருக்காக நீங்கள் துக்கப்படுகிறீர்களோ அந்த சுயக்ஞன் எங்கும் சென்றுவிடவில்லை, இன்னும் உங்கள் முன்தான் படுத்திருக்கிறார். அப்படியிருக்க உங்களுடைய துக்கத்திற்குக் காரணமென்ன? முன்பு அவர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு பதில் கூறினார். ஆனால் இப்பொழுது அவரைக் காணாது நீங்கள் துக்கப்படுகிறீர்கள். இது முரணான நடத்தையாகும். ஏனெனில், உண்மையில் நீங்கள், உடலுக்குள் இருந்து கொண்டு நீங்கள் கூறியதைக் கேட்டு அதற்கு பதிலளித்த அவரை ஒரு போதும் கண்டதில்லை. நீங்கள் அன்றாடம் பார்த்து வந்த உடல் இங்கே அப்படியே கிடக்கிறது என்பதால், நீங்கள் துக்கப்படுவதற்கு அவசியமே இல்லை.
பதம் 7.2.45
ந ஸ்ரோதா நானுவத்தாயம் முக்யோ ‘பி அத்ர மஹான் அஸு:
யஸ் து இஹேந்ரியவான் ஆத்மா ஸ சான்ய: ப்ராண-தேஹயோ:
ந-இல்லை: ஸ்ரோதா-கேட்பவன்; ந-இல்லை; அனுவக்தா-பேசுபவன்; அயம் – இவன்; முக்ய:- தலைவன்; அபி— என்ற போதிலும்; அத்ர-இவ்வுடலில்;மஹான்- மகிமையுடைய; அஸு;— பிராண வாயு; ய-யாரொருவன்; து-ஆனால்; இஹ-இவ்வுலகில்: இந்ரிய-வான்—எல்லாப் புலன்களையும் உடைய; ஆத்மா-ஆத்மா; ஸ:—அவன்; ச-கூட: அன்ய:-வேறுபட்டவன்; ப்ரான -தேஹயோ:- பிராண வாயு, ஜட உடல் ஆகியவற்றிலிருந்து.
உடலில் மிகவும் முக்கிய பொருளாக விளங்குவது பிராணவாயுவாகும். ஆனால் அந்த பிராணவாயு கூட கேட்பவனோ அல்லது பேசுபவனோ அல்ல. அந்த பிராணவாயுக்கும் அப்பாலுள்ள ஆத்மாவின் ஒத்துழைப்புடன் பரமாத்மாதான் உண்மையில் உத்தரவிடுபவராவார். உடலின் செயல்களை நடத்தும் பரமாத்மா, உடல் மற்றும் உயிர்ச் சக்தி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டவராவார்.
பதம் 7.2.46
பூதேந்ரிய-மனோ-லிங்கான் தேஹான் உச்சாவசான் விபு:
பஜதி உத்ஸ்ருதி ஹி அன்யஸ் தச் சாபி ஸ்வேன தேஜஸா
பூத-பஞ்ச பூதங்களால்; இந்ரிய-ஐந்து புலன்கள்; மன:-மற்றும் மனம்: லிங்கான் – வகைப்படுத்தப்பட்ட; தேஹான்—ஸ்துல ஜட உடல்களை; உச்ச-அவசான்-மேலான,மற்றும் மட்டமான; விபு:-உடலுக்கும்; புலன்களுக்கும் தலைவனான தனிப்பட்ட ஆத்மா; பஜதி —அடைகிறான்; உத்ஸ்ருஜதி-விட்டுவிடுகிறான்; ஹி-உண்மையில்; அன்ய:-வேறாக இருப்பதால்; தத்—அது; ச-கூட; அபி- நிச்சயம்; ஸ்வேன-அவனுடைய சொந்த; தேஜஸா-உயர்ந்த அறிவாற்றலைக் கொண்டு.
பஞ்ச பூதங்கள், ஐந்து புலன்கள், மனம் ஆகியவை சேர்ந்து, ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களின் வெவ்வேறு பாகங்களாகின்றன. ஜீவராசி, உயர்ந்ததாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ உள்ள ஜட உடல்களுடன் தொடர்பு கொண்டு, பிறகு தனது சொந்த அறிவு முதிர்ச்சியினால் அவற்றைக் கைவிடுகிறான். வெவ்வேறு வகையான உடல்களைப் பெறுவதில் ஜீவராசிக்குள்ள சொந்த சக்தியில் இந்த பலத்தைக் காண முடியும்.
பதம் 7.2.47
யாவல் லிங்கபன்விதோ ஹி ஆத்மா தாவத் கர்ம-நிபந்தனம்
தேதா விபர்யய: க்லே சோ மாயா-யோகோ ‘நுவர்த்ததே
யாவத்- எதுவரை; ஸிங்க-அன்வித:-சூட்சும உடலால் மூடப்பட்டுள்ள ; ஹி-நிச்சயம்; ஆத்மா-ஆத்மா; தாவத்-அதுவரை; கர்ம- கருமங்களின்; நிபந்தனம்-பந்தம்; தத்: அதிலிருந்து: விபர்யய:- எதிரிடையான (உடலே ஆத்மா என்று தவறாக எண்ணும்); க்லேச:- துன்பத்தை; மாயா -யோக:- மாயா சக்தியுடனான ஓர் உறுதியான உறவு; அனுவர்ததே-தொடர்கிறது.
ஆத்மாவானவன் மனம், புத்தி, பொய், அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் மூடப்பட்டிருக்கும் வரை, அவனது கர்ம பலன்களால் அவன் பந்திக்கப்படுகிறான். இந்த மறைப்பின் காரணத்தால் ஆத்மா ஜட சக்தியுடன் சம்பத்தப்படுவதால், அதற்கேற்ப அவன் தொடர்ந்து பிறவிக்குப்பின் பிறவியாக பௌதிக சூழ்நிலைகளையும் எதிரிடையான சூழ்நிலைகளையும் அனுபவிக்க வேண்டும்.
பதம் 7.2.48
விததாபினிவேசோ ‘யம் யத் குணேஷ்வ் அர்த்த-த்ருக்-வச:
யதா மனோரத: ஸ்வப்ன: ஸர்வம் ஐந்ரியகம் ம்ருஷா
விதத—பலனற்ற; அபினிவேச:-கருத்து; அயம்—இது; யத் – எது குணேஷு – ஜட இயற்கைக் குணங்களில்;அர்த்த—உண்மையாக; த்ருக்-வச:-பார்ப்பதும், பேசுவதும்; யதா—எவ்வாறு; மனோரத:- ஒரு மனக் கற்பனை (பகற் கனவு); ஸ்வப்ன: கனவு; ஸர்வகம்— அனைத்தும்; ஐந்ரியகம் -புலன்களால் உண்டாக்கப்பட்டவை; ம்ருஷா – பொய்யாக.
ஜட இயற்கைக் குணங்களும், அவற்றின் பலன்களாகிய பெயரளவேயான இன்ப துன்பங்களும் உண்மையானவை என்பது போல் அவற்றைப் பார்ப்பதும், அவைகளைப் பற்றி பேசுவதும், பயனற்ற செயலாகும். பகலில் மனம் இங்குமங்கும் சஞ்சரிக்கும் பொழுது, ஒருவன் தன்னை மிகவும் முக்கியமானவன் என்று நினைக்கத் துவங்குகிறான். அல்லது இரவில் அவன் கனவு கண்டு, ஓரழகிய பெண்ணுடன் தான் சுகம் அனுபவிப்பதாக காண்கிறான். இவையெல்லாம் வெறும் பொய்க்கனவுகளே ஆகும். அதுபோலவே பௌதிக புலன்களால் விளைவிக்கப்படும் இன்ப துன்பங்களும் அர்த்தமற்றவையே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பதம் 7.2.49
அத நித்யம் அனித்யம் வா நேஹ சோசந்தி தத்-வித:
நான்யதா சக்தயே கர்தும் ஸ்வ-பாவ: சோசதாம் இதி
அத-எனவே; நித்யம் – நித்தியமான ஆத்மா; அநித்யம்—நிலையற்ற ஜட உடல்; வா—அல்லது; ந-இல்லை: இஹ-இவ்வுலகில்; சோசந்தி-கவலைப்படுகின்றனர்; தத்-வித: – உடல் மற்றும் ஆத்ம ஞானத்தில் முன்னேறியவர்கள்; ந-இல்லை; அன்யதா-வேறு மாதிரி: சக்யதே—முடியும்; கர்தும் -செய்வதற்கு; ஸ்வ – பாவ: இயற்கை; சோசதாம்-கவலைப்படும் சுபாவம் உள்ளவர்களின்; இதி-இவ்வாறு.
தன்னுணர்வு பற்றிய முழு அறிவு உள்ளவர்களும், ஆத்மா நித்தியமானது ஆனால் உடல் அழியக் கூடியது என்பதை அறிந்திருப்பவர்களும் துக்கத்தால் நசுக்கப்படுவதில்லை. ஆனால் தன்னுணர்வு பற்றிய அறிவில்லாதவர்கள் துக்கப்படுவது நிச்சயம். ஆகவே மாயையில் உள்ள ஒருவனுக்குக் கல்வி புகட்டுவது மிகவும் கடினமாகும்.
பதம் 7.2.50
லுப்தகோ விபினே கஸ்சித் பக்ஷிணாம் நிர்மிதோ ‘ந்தக:
விதத்ய ஜாலம் விததே தத்ர தத்ர ப்ரலோபயன்
லூப்தக:-வேடன்; விபினே – காட்டில், கஸ்சித்—ஒருவன்;பக்ஷீணாம்— பறவைகளின்; நிர்மித:-நியமிக்கப்பட்ட; அந்தக:- கொலைகாரன்; விதத்ய-விரித்து; ஜாலம் – வலை; விததே-பிடித்தான்; தத்ர – தத் – இங்குமங்கும்; ப்ரலோபயன்—உணவைக் காட்டி வசீகரித்து.
முன்பொரு சமயம் வேடனொருவன் உணவால் பறவைகளை வசீகரித்து ஏமாற்றி, அவைகளை வலைவிரித்து பிடித்து வந்தான். அவன் மரண தேவனால் நியமிக்கப்பட்டவன் போல், பறவைகளைக் கொன்று குவித்து வந்தான்.
பதம் 7.2.51
குலிங்க-மிதுனம் தத்ர விசரத் ஸமத்ருஸ்யத
தயோ: குலிங்கீ ஸஹஸா லுப்தகேன ப்ரலோபிதா
குலிங்க – மிதுனம் – ஒரு ஜோடி குலிங்கப் பறவைகள்; தத்ர- அங்கு (வேடன் இருந்த இடத்தில்); விசரத் – இங்குமங்கும் பறப்பதை; ஸம்த்ருஸ்யத – அவன் கண்டான்; தயோ:-அந்த ஜோடி: குலிங்கீ- பெண் பறவை; ஸஹஸா – திடீரென்று; லுப்தகேன—வேடனால்; ப்ரலோபிதா – வசீகரிக்கப்பட்டது.
வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வேடன் ஒரு ஜோடி குலிங்க பறவைகளைக் கண்டான். அவ்விரு பறவைகளில் பெண் பறவை வேடனின் வேட்டைக் கவர்ச்சி இசையால் வசீகரிக்கப்பட்டது.
பதம் 7.2.52
ஸாஸஜ்ஜத ஸிசஸ் தந்த்ரியாம் மஹிஷ்ய: கால-யந்த்ரிதா
குலிங்கஸ் தாம் ததாபன்னாம் நிரீக்ஷ்ய ப்ருச-துஹ்கித:
ஸ்நேஹாத் அகல்ப: க்ருபண: க்ருபணாம் பர்யதேவயத்
ஸா-அந்த பெண் பறவை; அஸஜ்ஜத-சிக்கிக் கொண்டது: ஸிச- வலையின்; தந்த்ரியாம்—கயிற்றில்; மஹிஷ்ய:-ராணிகளே; கால-யந்த்ரிதா-காலத்தின் கட்டாயத்தால்; குலிங்க:-ஆண் குலிங்கப் பறவை; தாம்—அவளை; ததா—அந்நிலையில்: ஆபன்னாம் – பிடிக்கப் பட்டதை : நிரீக்ஷ்ய-கண்டு; ப்ருச-துஹ்கித:-மிகவும் துக்கமடைந்து; ஸ்நேஹாத்—அன்பினால்; அகல்ப:-ஏதும் செய்ய இயலாது: க்ருபண: பரிதாபமான அப்பறவை; க்ருபணாம்—தீனமான தன் மனைவியை; பர்யதேவயத் – நினைத்து வருந்தத் துவங்கியது.
சுயக்ஞனின் ராணிகளே, தன் மனைவி பெரும் ஆபத்தில் வைக்கப்பட்டு விதியின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆண் குலிங்கப் பறவை மிகவும் வருத்தமடைந்தது. அன்பின் காரணத்தால் பரிதாபமான அப்பறவை தன் மனைவியை விடுவிக்க இயலாது வருந்தத் துவங்கியது.
பதம் 7.2.53
அஹோ அகருணோ தேவ: ஸ்த்ரியாகருணயா விபு:
க்ருபணம் மாம் அனுசோசந்த்யா தீனயா கிம் கரிஷ்யதி
அஹோ – ஐயோ; அகருண:-சிறிதும் இரக்கமின்றி ; தேவ:- விதி; ஸ்த்ரியா- என் மனைவியோடு; ஆகருணயா-கருணை மிக்கவரான; விபு:- பரமபுருஷர்; க்ருபணம்-ஆதரவற்ற; மாம்-என்னை; அநுசோசந்த்யா—நினைத்துப் புலம்பும்; தீனயா-பரிதாபமான; கிம்-என்ன; கரிஷ்யதி- செய்ய முடியும்.
ஐயோ! விதி எவ்வளவு இரக்கமற்றதாக உள்ளது! என் மனைவி யாராலும் காப்பாற்ற முடியாத பரிதாபமான நிலையில் எனக்காக வருந்துகிறாள். பரிதாபமான இப்பறவையை எடுத்துக் கொள்வதால் தெய்வத்திற்கு என்ன கிடைக்கும்? இதனால் என்ன லாபம்?
பதம் 7.2.54
காமம் நயது மாம் தேவ: கிம் அர்தேனாத்மனோ ஹி மே
தீனேன ஜீவதா துஹ்கம் அனேன விதுராயுஷா
காமம்—அவர் இஷ்டப்படி; நயது—பறித்துக் கொள்ளட்டும்; மாம்- என்னை; தேவ:-பரமபுருஷர்; கிம்-என்ன பயன்; அர்தேன- பாதியினால்; மன:-உடலின்; ஹி-உண்மையில்; மே – எனது; தீனேன – பரிதாபமான; ஜீவதா – உயிர்வாழ்வதால்; துஹ்கம் -துன்பத்தில்: அனேன – இதனால்; விதுர—ஆயுஷா-ஆயுள் முழுவதும் துன்பம் அனுபவித்துக் கொண்டு.
என்னுடைய உடலின் சரி பாதியான என் மனைவியை இரக்கமற்ற தெய்வம் பறித்துக் கொள்ளுமானால், என்னையும் ஏன் அவர் எடுத்துக் கொள்ளக் கூடாது? நான் என் மனைவியை இழந்த வருத்தத்தால் என்னுடைய பாதி உடலுடன் உயிர் வாழ்வதால் என்ன பயன்? இவ்வாறு நான் அடையப் போவதுதான் என்ன?
பதம் 7.2.55
கதம் து அஜாத-பக்ஷாம்ஸ் தான் மாத்ரு-ஹீனான் பிபர்மி அஹம்
மந்த-பாக்யா: ப்ரதீக்ஷந்தே நீடே மே மாதரம் ப்ரஜா:
கதம் – எப்படி;து—ஆனால்; அஜாத – பக்ஷான்—இன்னும் சிறகு கூட முளைக்காத; தான்—அவர்களை; மாத்ரு-ஹீனான்—தாயை இழந்த; பிபர்மி- காப்பாற்றுவேன்; அஹம்—நான்; மந்த-பாக்யா:-மிகவும் துர்பாக்கியசாலிகளான; ப்ரதீக்ஷந்தே-அவை காத்திருக்கின்றன; நீடே- கூட்டில்; மே-என்; மாதரம்—தாயை எதிர்நோக்கி; ப்ரஜா:-குஞ்சுகள்.
துரதிஷ்டசாலியான குழந்தைகள், தாயை இழந்து, தாய் வந்து உணவளிப்பதற்காக கூட்டில் காத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு இன்னும் இறக்கைகள் கூட முளைக்கவில்லை. நான் எப்படி அவைகளைக் காப்பாற்றப் போகிறேன்?
பதம் 7.2.56
ஏவம் குலிங்கம் விலபந்தம் ஆராத்
ப்ரியா-வியோகாதுரம் அஸ்ரு-கண்டம்
ஸ ஏவ தம் சாகுணிக: சரேண
விவ்யாத கால ப்ரஹிதோ விலீன:
ஏவம்-இவ்வாறு; குலிங்கம்—அப்பறவை; விலபந்தம்:- புலம்பிக் கொண்டிருந்தபோது; ஆராத் – தூரத்திலிருந்து; ப்ரியா – வியோக – தன் மனைவியை இழந்ததால்; ஆதுரம் – மிகவும் துக்கமடைந்து; அஸ்ரு -கண்டம்-கண்களில் கண்ணீருடன்; ஸ: -அவன் (அந்த வேடன்); ஏவ- உண்மையில்; தம்—அதை (ஆண் பறவையை); சாகுணிக:-ஒரு கழுகைக் கூட கொல்லக் கூடியவனான; சரேண- அம்பினால்; விவ்யாத—துளைத்தான்; கால-ப்ரஹித: காலத்தினால் தூண்டப்பட்டு; விலீன:-மறைந்திருந்த.
தன் மனைவியை இழந்த காரணத்தால் குலிங்கப் பறவை தன் கண்களில் கண்ணீருடன் புலம்பிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் தூரத்தில் மிகவும் கவனமாக மறைந்திருக்கும் வேடன் தக்க தருணம் வந்ததும் தன் அம்பை விட்டான். அது அந்த குலிங்கப் பறவையின் உடலைத் துளைத்து, அதைக் கொன்று விட்டது.
பதம் 7.2.57
ஏவம் யூயம் அபஸ்யந்த்ய ஆத்மாபாயம் அபுத்தய:
நைனம் ப்ராப்ஸ்யத சோசந்த்ய: பதிம் வர்ஷ சதைர் அபி
ஏவம் – இவ்வாறாக; பூயம்—நீங்கள்; அபஸ்யந்த்ய:-காணாமல்; ஆத்ம—அபாயம்—சொந்த மரணத்தை; அபுத்தய:-அறிவிலிகளே; ந- இல்லை; ஏனம்-இவரை; ப்ராப்ஸ்யத -நீங்கள் அடைய; சோசந்த்ய:- யாருக்காகப் புலம்புகிறீர்களோ; பதிம்-உங்கள் கணவரை; வர்ஷ- சதை:- நூறு வருடங்கள்: அபி—ஆனாலும்.
இவ்வாறாக ஒரு சிறுவனின் வேடத்திலிருந்து யமராஜன், அந்த ராணிகளிடம் பின்வருமாறு கூறினார்: பெரும் முட்டாள்களான நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய சொந்த மரணத்தை நீங்கள் பார்க்கவில்லை. அறிவு பற்றாக்குறையினால் பீடிக்கப்பட்டுள்ள நீங்கள் இறந்துபோன உங்கள் கணவனுக்காக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அழுது புலம்பினாலும், ஒரு போதும் அவரை நீங்கள் உயிருடன் திரும்பிப் பெற இயலாது. இதற்கிடையில் உங்களுடைய வாழ்வும் முடிந்து விடும்.
பதம் 7.2.58
ஸ்ரீ-ஹிரண்யகசிபுர் உவாச
பாவ ஏவம் ப்ரவததி ஸர்வே விஸ்மித-சேதஸ:
ஞாதயோ மேனிரே ஸர்வம் அநித்யம் அயதோத்திதம்
ஸ்ரீஹிரண்யகசிபு: உவாச-ஸ்ரீ இரண்யகசிபு கூறினான்; பாலே- ஒரு சிறுவனின் ரூபத்திலிருந்த யமராஜன்; ஏவம்-இவ்வாறு ; ப்ரவததி– தத்துவார்த்தமாக பேசிய போது; ஸர்வே-எல்லோரும்; விஸ்மித – ஆச்சரியமடைந்த; சேதஸ:- மனதுடன்; ஞாதய:-உறவினர்கள்; மேனிரே-நினைத்தனர்; ஸர்வம்-பௌதிகமான அனைத்தும்; அநித்யம் – தற்காலிகமானவை; அயதா – உத்திதம்—நிலையற்ற தத்துவத்திலிருந்து தோன்றியவை.
இரண்யகசிபு கூறினான்: ஒரு சிறுவனின் ரூபத்திலிருந்த யமராஜன், சுயக்ஞனின் சவத்தைச் சூழ்ந்து கொண்டிருந்த அவனது உறவினர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது, தத்துவார்த்தமான அவரது வார்த்தைகளைக் கேட்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பௌதிகமான அனைத்தும் தற்காலிகமானவையே என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
பதம் 7.2.59
யம ஏதத் உபாக்யாய தத்ரைவரந்தரதீயத
ஞாதயோ ஹி ஸுயக்ஞஸ்ய சக்ருர் யத் ஸாம்பராயிகம்
யம:-சிறுவனின் ரூபத்திலிருந்த யமராஜன்; ஏதத்—இதை; உபாக்யாய-உபதேசித்தபின்; தத்ர-அங்கிருந்து; ஏவ—உண்மையில்; அந்தரதீயத-மறைந்து விட்டார்; ஞாதய:-உறவினர்கள்; ஹி-நிச்சயம்; ஸுயக்ஞஸ்ய-மன்னன் சுயக்ஞனுடைய; சக்ரு:-செய்தனர்; யத்-எது; ஸாம்பராயிகம்— அந்திம கிரியைகளை.
ஒரு சிறுவனின் ரூபத்திலிருந்து யமராஜன், சுயக்ஞனின் முட்டாள் உறவினருக்கு உபதேசித்தபின், அவர்களுடைய பார்வையிலிருந்து அவர் மறைந்து போனார். அதன்பிறகு சுயக்ஞனின் உறவினர்கள் அவனது அந்திம கிரிகைகளைச் செய்தனர்.
பதம் 7.2.60
அத: சோசத மா யூயம் பரம் சாத்மானம் ஏவ வா
க ஆத்மா க: பரோ வாத்ர ஸ்வீய: பாரக்ய ஏவ வா
ஸ்வ-பராபினிவேசேன வினாக்ஞானேன தேஹினாம்
அத:-ஆகவே; சோசத-வருந்ததுல்; மா—கூடாது; யூயம்—நீங்களனைவரும்; பரம் -மற்றொரு; ச-கூட; ஆத்மானம்—உங்களுக்காக; ஏவ – நிச்சயமாக; வா—அல்லது; க-யார்; ஆத்மா -ஆத்மா; க:- யார்; பர:- மற்றொருவன்; வா—அல்லது; அத்ர—இந்த ஜட உலகில்; ஸ்வீய:-தனக்குச் சொந்தமானது ; பாரக்ய:- மற்றவர்களுடையது; ஏவ -தான்; வா—அல்லது; ஸ்வ- பர-அபினி வேசேன- தேகாபிமானத்தால் நான், பிறர் என்று எண்ணுவது; வினா—தவிர; அக்ஞானேன—அறியாமையினால்; தேஹினாம்—உடல்களுக்குள் சிறைப்பட்டுள்ள ஜீவராசிகள்.
எனவே, உங்களுடைய சொந்த உடலின் மறைவுக்காகவோ அல்லது மற்றவர்களுடைய உடலின் மறைவுக்காகவே உங்களில் எவரும் வருந்தக் கூடாது. ஒருவன் அறியாமையில் இருக்கும் பொழுது தான், “நான் யார்? மற்றவர்கள் யார்? எனக்குச் சொந்தமானது எது? மற்றவர்களுக்குச் சொந்தமானது எது?” என்றெண்ணி, தேக வேறுபாடுகளைக் காண்கிறான்.
பதம் 7.2.61
ஸ்ரீ-நாரத உவாச
இதி தைத்ய-பதேர் வாக்யம் திதிர் ஆகரீண்ய ஸஸ்னுஷா
புத்ர-சோகம் க்ஷணாத் த்யக்த்வா தத்வே சித்தம் அதாரயத்
ஸ்ரீ-நாரத: உவாச-ஸ்ரீ நாரத முனிவர் கூறினார்; இதி—இவ்வாறு: தைத்ய—பதே:-அசுர ராஜனின்; வாக்யம்-வார்த்தைகளை; திதி:- இரண்யகசிபு, இரண்யாக்ஷன் ஆகியோரின் தாயான திதி; ஆகர்ண்ய- கேட்டு; ஸ-ஸ்னுஷா-இரண்யாக்ஷனனின் மனைவியுடன்; புத்ர- சோகம் – புத்திர சோகத்தினால்; க்ஷணாத்—உடனே; த்யக்த்வா—விட்டு விட்டு: தத்வே—வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தில்; சித்தம— மனதை: அதாரயத்- செலுத்தினான்.
ஸ்ரீ நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார்: இரண்யகசிபு மற்றும் இரண்யாக்ஷனின் தாயாரான திதி, தன் மருமகளும், இரண்யாக்ஷனின் மனைவியுமான ருஷாபனுவுடன் இரண்யகசிபுவின் உபதேசங்களைக் கேட்டாள். பிறகு அவள் தன் மகனின் மரணத்தைக் குறித்த வருத்தத்தை மறந்து, வாழ்வின் உண்மையான தத்துவத்தைப் புரிந்து கொள்வதில் தன் மனதையும், கவனத்தையும் ஈடுபடுத்தினாள்.
ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின், “அசுரராஜன், இரண்யகசிபு” எனும் தலைப்பைக் கொண்ட இரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.