அத்தியாயம் – 15
நாகரீக மனிதருக்குரிய உபதேசங்கள்
பதம் 7.15.1
ஸ்ரீ-நாரத உவாச
கர்ம-நிஷ்டா த்விஜா: கேசித் தபோ-நிஷ்டா ந்ருபாபரே
ஸ்வாத்யாயே ‘ன்யே ப்ரவசனே கேசன ஞான-யோகயோ:
ஸ்ரீ-நாரத: உவாச—நாரத முனிவர் கூறினார்; கர்ம-நிஷ்டா:—(தங்களுடைய சமூக நிலைக்கேற்ப) பலன்நோக்குக் கருமங்களில் பற்றுக்கொண்டுள்ளனர்; த்வி-ஜா:—இருப்பிறப்பெய்தியவர்கள் (குறிப்பாக பிராமணர்கள்); கேசித்—சிலர்; தப:-நிஷ்டா:—தவ, விரதங்களில் மிகவும் பற்றுக்கொண்டுள்ளனர்; ந்ருப—அரசே; அபரே—மற்றவர்கள்; ஸ்வாத்யாயே—வேத இலக்கியங்களைக் கற்பதில்; அன்யே—மற்றவர்கள்; ப்ரவசனே—வேத இலக்கியங்களைப் பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்துகின்றனர்; கேசன—சிலர்; ஞான-யோகயோ:—அறிவைப் பண்படுத்துவதிலும், பக்தியோகத்தைப் பயில்வதிலும்.
நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: அரசே, சில பிராமணர்கள் பலன்நோக்குக் கருமங்களில் மிகவும் பற்றுக் கொண்டுள்ளனர். சிலர் தவ விரதங்களில் பற்றுக் கொண்டுள்ளனர். சிலர் வேத இலக்கியங்களைக் கற்றறிகின்றனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையுடைய மற்றும் சிலரே, அது அறிவைப் பயன்படுத்தி வெவ்வேறு யோகங்களை, குறிப்பாக பக்தியோகத்தைப் பயில்கின்றனர்.
பதம் 7.15.2
ஞான-நிஷ்டாய தேயானி கவ்யானி ஆனந்த்யம் இச்சதா
தைவே ச தத்-அபாவே ஸ்யாத் இதரேப்யோ யதார்ஹத:
ஞான-நிஷ்டாய—அருவவாதிக்கு அல்லது பரமனில் இரண்டறக் கலந்துவிட விரும்பும் ஆன்மீகிக்கு; தேயானி—தானம் கொடுக்கப்பட வேண்டும்; கவ்யானி—முன்னோர்களுக்கு நிவேதனம் செய்யப்படும் பொருட்கள்; ஆனந்தயம்—பெளதிக பந்தத்திலிருந்து விடுதலையை; இச்சதா—விரும்பும் ஒருவனால்; தைவே—தேவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய காணிக்கைகள்; ச—கூட; தத்-அபாவே—இத்தகைய முன்னேற்றமடைந்த ஆன்மீகம் இல்லாத சமயத்தில்; ஸ்யாத்—அது செய்யப்பட வேண்டும்; இதரேப்ய:—மற்றவர்களுக்கு (பலன் கருதும் செயல்களில் பற்றுக் கொண்டவர்களுக்கு); யதா-அர்ஹத:—ஒப்பாக அல்லது தகுதிக்கேற்ப.
தன் முன்னோர்களோ அல்லது தானோ முக்தியடைய வேண்டும் என்று விரும்புபவன், அருவவாத அத்வைதத்தைப் (ஞான-நிஷ்டா) பின்பற்றும் ஒரு பிராமணருக்குத் தானம் செய்ய வேண்டும். முன்னேற்றமடைந்த இத்தகைய ஒரு பிராமணர் இல்லாத சமயத்தில், பலன் கருதும் செயல்களில் (கர்ம-காண்டத்தில்) பற்றுக் கொண்டுள்ள ஒரு பிராமணருக்குத் தானம் செய்யலாம்.
பதம் 7.15.3
த்ரெள தைவே பித்ரு-கார்யே த்ரீன் ஏகைகம் உபயத்ர வா
போஜயேத் ஸுஸம்ருத்தோ ‘பி ஸ்ராத்தே குர்யான் ந விஸ்தரம்
த்வௌ—இரண்டு; தைவே—தேவர்களுக்கு நிவேதனம் செய்யும் காலத்தில்; பித்ரு-கார்யே—முன்னோர்களுக்கு செய்யப்படும் சிரார்த்தச் சடங்கில்; த்ரீன்—மூன்று; ஏக—ஒன்று; ஏகம்—ஒன்று; உபயத்ர—இவ்விரு சமயங்களிலும்; வா—அல்லது; போஜயேத்—ஒருவன் உணவளிக்க வேண்டும்; ஸு-ஸம்ருத்த:-அபி—ஒருவன் பெரும் செல்வந்தனாக இருப்பினும்; ஸ்ராத்தே—முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்யும் பொழுது; குர்யாத்—ஒருவன் செய்ய வேண்டும்; ந—இல்லை; விஸ்தரம்—ஊதாரித்தனமான ஏற்பாடுகளை.
தேவர்களுக்கு நிவேதனம் செய்யும் காலத்தில் இரு பிராமணர்களை மட்டுமே ஒருவன் அழைக்க வேண்டும். முன்னோர்களுக்கு நிவேதனம் செய்யும் பொழுது மூன்று பிராமணர்களை ஒருவன் அழைக்கலாம். அல்லது, இவ்விரு சந்தர்ப்பத்திலும் ஒரு பிராமணரை அழைப்பதே போதுமானது. ஒருவன் பெரும் செல்வந்தனாக இருப்பினும், அவன் அதிக பிராமணர்களை அழைக்கவோ அல்லது பலவிதமான ஊதாரித்தனமான ஏற்பாடுகளை இச்சந்தர்ப்பங்களில் செய்யவோ அதிக முயற்சி எடுத்துக் கொள்ளக் கூடாது.
பதம் 7.15.4
தேசே-காலோசித-ஸ்ரத்தா-த்ரவய-பாத்ரார்ஹணானி ச
ஸம்யக் பவந்தி நைதானி விஸ்தராத் ஸ்வ-ஜனார்ப்பணாத்
தேச—இடம்; கால—காலம்; உசித—உசிதமான; ஸ்ரத்தா—மரியாதை; த்ரவ்ய—தேவையான சாமான்கள்; பாத்ர—பொருத்தமான ஒரு நபர்; அர்ஹணானி—பூஜைக்குரிய பொருட்கள்; ச—மேலும்; ஸம்யக்—நன்கு; பவந்தி—இருக்கின்றன; ந—இல்லை; ஏதானி—இவை; விஸ்தராத்—விரிவாகச் செய்வதால்; ஸ்வ-ஜன-அர்பணாத்—அல்லது உறவினர்களை அழைப்பதால்.
இந்த சிரார்த்தச் சடங்கின்போது பல பிராமணர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு உணவளிப்பதற்கான ஏற்பாடுகளை ஒருவன் செய்தால், காலம், இடம், மரியாதை செய்தல் மற்றும் தேவையான பொருள்கள் ஆகியவற்றிலும், பூஜிக்கப்பட வேண்டியவர், மற்றும் பூஜிக்கும் முறை ஆகியவற்றிலும் முரண்பாடுகள் உண்டாகும்.
பதம் 7.15.5
தேசே காலே ச ஸம்ப்ராப்தே முனி-அன்னம் ஹரி-தைவதம்
ஸ்ரத்தயா விதிவத் பாத்ரே ன்யஸ்தம் காமதுக் அக்ஷயம்
தேசே—தகுந்த இடத்தில், அதாவது புனிதமான தீர்த்த யாத்திரை ஸ்தலத்தில்; காலே—மங்களகரமான ஒரு நேரத்தில்; ச—கூட; ஸம்ப்ராப்தே—அமையும் பொழுது; முனி-அன்னம்—நெய்யினால் அமைக்கப்பட்டதும், சிறந்த முனிவர்களால் உண்ணப்படுவதற்கு ஏற்றதுமான உணவு வகைகளை; ஹரி-தைவதம்—பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரிக்கு; ஸ்ரத்தயா—அன்புடனும், சிரத்தையுடனும்; விதி-வத்—ஆன்மீக குரு மற்றும் சாஸ்திரங்களின் வழிகாட்டலுக்கேற்ப; பாத்ரே—தகுதியுடைய ஒருவருக்கு; ன்யஸ்தம்—அது அவ்வாறு அளிக்கப்படுமானால்; காமதுக்—செழிப்புக்குப் பிறப்பிடமாகும்; அக்ஷயம்—நிலையான.
தகுந்த மங்களகரமான நேரமும், இடமும் அமையும் பொழுது, ஒருவன் நெய்யால் சமைத்த உணவை பரமபுருஷரின் விக்கிரகத்திற்கு அன்புடன் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த பிரசாதத்தைத் தகுதியுள்ள நபராகிய ஒரு வைஷ்ணவருக்கோ அல்லது பிராமணருக்கோ அளிக்க வேண்டும். இதுவே நிலையான செழிப்புக்கு உபாயமாகும்.
பதம் 7.15.6
தேவர்ஷி-பித்ரு-பூதேப்ய ஆத்மனே ஸ்வ-ஜனாய ச
அன்னம் ஸம்விபஜன் பஸ்யேத் ஸர்வம் தம் புருஷாத்மகம்
தேவ—தேவர்களுக்கும்; ரிஷி—சாதுக்களுக்கும்; பித்ரு—முன்னோர்களுக்கும்; பூதேப்ய:—பொதுவாக ஜீவராசிகளுக்கும்; ஆத்மனே—உறவினர்களுக்கும்; ஸ்வ-ஜனாய—குடும்ப அங்கத்தினருக்கும், நண்பர்களுக்கும்; ச—மேலும்; அன்னம்—உணவு வகைகளை (பிரசாதத்தை); ஸம்விபஜன்—கொடுத்து; பஸ்யேத்—பார்க்க வேண்டும்; ஸர்வம்—எல்லாம்; தத்—அவர்களை; புருஷ-ஆத்மகம்—பரமபுருஷருடன் உறவு கொண்டவர்களாகவே.
தேவர்கள், சாதுக்கள், முன்னோர்கள், பொது ஜனங்கள், குடும்ப அங்கத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகிய அனைவரையும் ஒருவன் பரமபுருஷரின் பக்தர்களாகவே பார்த்து அவர்களுக்கும் பிரசாதத்தை அளிக்க வேண்டும்.
பதம் 7.15.7
ந தத்யாத் ஆமிஷம் ஸ்ராத்தே ந சாத்யாத் தர்ம-தத்வவித்
முனி-அன்னை: ஸ்யாத் பரா ப்ரீதிர் யதா ந பசு-ஹிம்ஸயா
ந—கூடாது; தத்யாத்—கொடுக்க; ஆமிஷம்—மாமிசம், மீன், முட்டை போன்றவைகளை; ஸ்ராத்தே—சிரார்த்தச் சடங்கில்; ந—அல்லது; ச—கூட; அத்யாத்—தான் உண்ணுவதும்; தர்ம-தத்வ-வித்—சமயச் செயல்முறைகளைப் பற்றி நன்கு கற்றறிந்த ஒருவன்; முனி-அன்னை:—சாதுக்களுக்குரிய நெய்யினால் சமைக்கப்பட்ட உணவுகளால்; ஸ்யாத்—இருக்க வேண்டும்; பரா—முதல் தரமானதாக; ப்ரீதி:—திருப்தியை; யதா—முன்னோர்களுக்கும், பரமபுருஷருக்கும்; ந—இல்லை; பசு-ஹிம்ஸயா—அனாவசியமாக மிருகங்களைக் கொல்வதால்.
சமயக் கோட்பாடுகளை நன்கு அறிந்துள்ள ஒருவன், சிரார்த்தச் சடங்கில் மாமிசம், முட்டை, மீன் போன்ற எதையுமே நிவேதனம் செய்யக்கூடாது. க்ஷத்திரியனாக இருப்பவன்கூட இத்தகைய பொருட்களை உண்ணக்கூடாது. நெய்யால் சமைக்கப்பட்ட ஏற்ற உணவு சாதுக்களுக்கு அளிக்கப்படும்பொழுது, அந்நிகழ்ச்சி முன்னோர்களையும், பரமபுருஷரையும் திருப்திப்படுத்துகிறது. யாகம் என்ற பெயரில் மிருகங்கள் கொல்லப்படுவதில் அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
பதம் 7.15.8
நைதாத்ருச: பரோ தர்மோ ந்ருணாம் ஸத்-தர்மம் இச்சதாம்
ன்யாஸோ தண்டஸ்ய பூதேஷு மனோ-வாக்-காயஜஸ்ய ய:
ந—இல்லை; ஏதாத்ருச:—இதைப் போன்ற; பர:—பரமான அல்லது மேலான; தர்ம:—சமயம்; ந்ருணாம்—மனிதர்களின்; ஸத்-தர்மம்—மேலான தர்மம்; இச்சதாம்—விரும்புவதால்; ன்யாஸ:—விட்டுவிட்டு; தண்டஸ்ய—பொறாமையில் தொல்லை விளைவிக்கும்; பூதேஷு—ஜீவராசிகளிடம்; மன:—மனதிற்கும்; வாக்—வார்த்தைகளுக்கும்; காய-ஜஸ்ய—உடலுக்கும் ஏற்ப; ய:—எவனொருவன்.
உயர்ந்த சமய மார்க்கத்தில் முன்னேற விரும்புபவர்கள் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றினால் பிற ஜீவராசிகளிடம் ஏற்படும் பொறாமையை அறவே விட்டுவிட வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகின்றனர். இதைக் காட்டிலும் உயர்வான சமயம் வேறில்லை.
பதம் 7.15.9
ஏகே கர்மமயான் யக்ஞான் ஞானினோ யக்ஞ-வித்தமா:
ஆத்ம-ஸம்யமனே ‘னீஹா ஜுஹ்வதி ஞான-தீபிதே
ஏகே—சிலர்; கர்ம-மயான்—(மிருகவதை முதலியவைகளின்) பயனாகவிளையும்; யக்ஞான்—யாகங்களை; ஞானின:—ஞானிகள்; யக்ஞ-வித்-தமா:—யாகத்தின் நோக்கத்தை நன்கு அறிந்துள்ளவர்கள்; ஆத்ம- ஸம்யமனே—சுயக் கட்டுப்பாட்டினால்; அனீஹா:—பெளதிக ஆசைகள் இல்லாதவர்கள்; ஜூஹ்வதி—யாகம் செய்கின்றனர்; ஞான-தீபிதே—பரிபூரண ஞானத்தை அடைந்து.
யக்ஞங்களின் நோக்கத்தையும், சமயக் கோட்பாடுகளையும் உண்மையாக அறிந்துள்ளவர்களும் பெளதிக ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களுமான ஆன்மீகிகள், ஆத்ம ஞானத்தின் விழிப்புணர்வின் காரணத்தால், ஆத்ம ஞானம் அல்லது பரப்பிரம்ம ஞானம் என்ற ஞானாக்கினியில் ஆத்மாவைக் கட்டுப்படுத்துகின்றனர். இவர்கள் இந்த வேதக்கிரியைகளின் வழிமுறையை விட்டுவிடலாம்.
பதம் 7.15.10
த்ரவ்ய-யக்ஞைர் யக்ஷ்யமாணம் த்ருஷ்ட்வா பூதானி பிப்யதி
ஏஷ மாகருணோ ஹன்யாத் அதஜ்-ஞோ ஹி அஸு-த்ருப் த்ருவம்
த்ரவ்ய-யக்ஞை:—மிருகங்களுடனும், பிற உணவுப்பொருள்களுடனும்; யக்ஷ்ய-மாணம்—இத்தகைய யாகங்களில் ஈடுபட்டுள்ளவன்; திருஷ்ட்வா—பார்த்துவிட்டு; பூதானி—ஜீவராசிகள் (மிருகங்கள்); பிப்யதி—அச்சமடைகின்றன; ஏஷ:—இவன் (யாகம் செய்பவன்); மா—நம்மை; அகருண:—மனிதத் தன்மையும், இரக்கமும் இல்லாத; ஹன்யாத்—கொன்றுவிடப் போகிறான்; அ-தத்-க்ஞ:—பெரும் அறியாமையில் உள்ளவன்; ஹி—நிச்சயமாக; அஸு-த்ருப்—பிறரைக் கொல்வதில் மிகவும் திருப்தியடைபவன்; த்ருவம்—கட்டாயமாக.
மிருக பலியினால் யக்ஞம் செய்பவர்களைக் கண்டு, யக்ஞத்தில் பலியிடுவதற்காக வைக்கப்பட்டுள்ள மிருகங்கள், “யக்ஞங்களைச் செய்யும் கருணையற்ற இவன் யக்ஞத்தின் நோக்கத்தை அறியாத காரணத்தினாலும், பிறரைக் கொல்வதில் மிகவும் திருப்தியடையும் காரணத்தினாலும் நிச்சயமாக நம்மைக் கொன்று விடப்போகிறான்” என்றெண்ணி மிகவும் அஞ்சுகின்றன.
பதம் 7.15.11
தஸ்மாத் தைவோபன்னேன முனி-அன்னேனாபி தர்மவித்
ஸந்துஷ்டோ ‘ஹர் அஹ: குர்யான் நித்ய-நைமித்திகீ: க்ரியா:
தஸ்மாத்—எனவே; தைவ-உபபன்னேன—பகவானின் அருளால் மிகவும் எளிதாக அடையப்படக்கூடிய; முனி-அன்னேன—(நெய்யினால் சமைத்து பரமபுருஷருக்குப் படைக்கப்பட்ட) உணவால்; அபி—நிச்சயமாக; தர்ம-வித்—சமயக் கோட்பாடுகளில் உண்மையாக முன்னேறியுள்ள ஒருவன்; ஸந்துஷ்ட:—மிகவும் மகிழ்ச்சியுடன்; அஹ: அஹ:—நாள்தோறும்; குர்யாத்—ஒருவன் செய்ய வேண்டும்; நித்ய-நைமித்திகீ:—தினசரியும், அவ்வப்பொழுதும் செய்ய வேண்டிய; க்ரியா:—கடமைகளை.
ஆகவே, சமயக் கோட்பாடுகளை நன்கு அறிந்தவனும், நிராதரவான மிருகங்களிடம் மிகவும் கொடுமையான பகைமை பாராட்டுபவனுமான ஒருவன், பகவானின் கிருபையால் சுலபமாக கிடைக்கக்கூடிய உணவைக் கொண்டு நாள்தோறும் தனது அன்றாட யக்ஞங்களை மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற வேண்டும்.
பதம் 7.15.12
விதர்ம: பர-தர்மஸ் ச ஆபாஸ உபமா சல:
அதர்ம-சாகா: பஞ்சேமா தர்ம-ஞோ ‘தர்மவத் த்யஜேத்
விதர்ம:—அதர்மம்; பர-தர்ம:—பிறரால் பின்பற்றப்படும் சமயக் கோட்பாடுகள்; ச—மேலும்; ஆபாஸ:—போலியான சமயக் கோட்பாடுகள்; உபமா—சமயத்தைத் தழுவியது போல் காணப்படும், ஆனால் சமயத்தை தழுவாத கோட்பாடுகள்; சல:—ஏமாற்று தர்மம்; அதர்ம-சாகா:—இவை அதர்மத்தின் வெவ்வேறு கிளைகளாகும்; பஞ்ச—ஐந்து; இமா:—இவை; தர்ம-க்ஞ:—சமயக் கோட்பாடுகளை அறிந்துள்ளவன்; அதர்ம-வத்—இவற்றை அதர்மமாகக் கருதி; த்யஜேத்—விட்டுவிட வேண்டும்.
அதர்மத்தில் ஐந்து கிளைகள் உள்ளன. அவை சமயப் பற்றின்மை (விதர்மம்) என்றும், தன் தகுதிக்கு மேலான சமயக் கோட்பாடுகள் (பர-தர்மம்) என்றும், போலியான தர்மம் (ஆபாஸம்) என்றும், ஒத்த தன்மையைக் காட்டுகிற சமயம் (உபதர்மம்) என்றும், ஏமாற்றுதர்மம் (சல-தர்மம்) என்றும் அறியப்படுகின்றன. உண்மையான சமய வாழ்வை அறிந்துள்ள ஒருவன் இவ்வைந்தையும் அதர்மமாகக் கருதி விலக்கிவிட வேண்டும்.
பதம் 7.15.13
தர்ம-பாதோ விதர்ம: ஸ்யாத் பர-தர்மோ ‘ன்ய-சோதித:
உபதர்மஸ் து பாகண்டோ தம்போ வா சப்த-பிச் சல:
தர்ம-பாத:—ஒருவனது சொந்த சமயக் கோட்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருப்பதை; விதர்ம:—சமயக் கோட்பாடுகளுக்கு எதிரானவையாக; ஸ்யாத்—கொள்ள வேண்டும்; பர-தர்ம:—தன்னால் பின்பற்ற முடியாத சமய முறைகளைப் பின்பற்றுவதாக நடிப்பது; அன்ய-சோதித:—வேறொருவரால் அறிமுகப்படுத்தப்படுவது; உபதர்ம:—கற்பனையால் உண்டாக்கப்பட்ட சமயக்கோட்பாடுகள்; து—உண்மையில்; பாகண்ட:—வேதக்கொள்கைகளுக்கு எதிரான ஒருவனால்; தம்ப:—பொய்யான கர்வம் கொண்டவன்; வா—அல்லது; சப்த-பித்—வார்த்தை ஜாலங்களால்; சல:—ஏமாற்றும் சமய முறையாகும்.
ஒருவன் தனது சொந்த சமயத்தைப் பின்பற்றுவதற்குத் தடையாக உள்ள சமயக் கோட்பாடுகள் விதர்மம் என்று அழைக்கப்படுகின்றன. மற்றவர்களால் அறிமுகப்படுத்தபடும் சமயக் கோட்பாடுகள் பர-தர்மம் எனப்படுகின்றன. பொய்யான கர்வம் கொண்டவனும், வேதக் கோட்பாடுகளை எதிர்ப்பவனுமான ஒருவனால் உண்டாக்கப்பட்ட ஒரு புதுவிதமான சமயம் உபதர்மம் எனப்படுகிறது. ஒருவனது வார்த்தை ஜாலங்களால் உண்டான கருத்து சல-தர்மம் என்று அழைக்கப் படுகிறது.
பதம் 7.15.14
யஸ் து இச்சயா க்ருத: பும்பிர்
ஆபாஸோ ஹி ஆஸ்ரமாத் ப்ருதக்
ஸ்வ-பாவ-விஹிதோ தர்ம:
கஸ்ய நேஷ்ட: ப்ரசாந்தயே
ய:—எது; து—உண்மையில்; இச்சயா—மனம் போனபடி; க்ருத:—செய்யப்பட்டதோ; பும்பி:—நபர்களால்; ஆபாஸ:—மங்களான பிரதிபலிப்பு; ஹி—நிச்சயமாக; ஆஸ்ரமாத்—தன் சொந்த ஆசிரமத்திலிருந்து; ப்ருதக்—மாறுபட்ட; ஸ்வ-பாவ—ஒருவனது சுபாவத்திற்கேற்ப; விஹித:—விதிக்கப்பட்ட; தர்ம:—சமயக் கோட்பாடு; கஸ்ய—எவ்விதத்தில், ந—இல்லை; இஷ்ட:—தகுதியுள்ள; ப்ரசாந்தயே—எல்லா வகையான துன்பங்களையும் போக்குவதற்கு.
தன்னுடைய வர்ணாஸ்ரம் கடமைகளை வேண்டுமென்றே அலட்சியம் செய்பவனால் உண்டாக்கப்படும் போலியான சமயமுறை ஆபாஸம் (தெளிவற்றது அல்லது பொய்யானது) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ஒருவனது குறிப்பிட்ட ஆசிரமத்திற்கு அல்லது வர்ணத்திற்கு விதிக்கப்பட்ட கடமைகளை, ஒருவன் செய்வானாயின், அவை ஏன் அவனுடைய எல்லா பெளதிக துன்பங்களையும் போக்குவதற்குப் போதுமானவையாக இருப்பதில்லை?
பதம் 7.15.15
தர்மார்த்தம் அபி நேஹேத யாத்ரார்த்தம் வாதனோ தனம்
அனீஹானீஹமானஸ்ய மஹாஹேர் இவ வ்ருத்திதா
தர்ம-அர்த்தம்—சமயத்திலோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திலோ; அபி—உண்மையில்; ந—இல்லை; ஈஹேத—அடைய முயற்சிக்க வேண்டும்; யத்ரா-அர்த்தம்—உடலையையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருக்க; வா—அல்லது; அதன:—பொருளில்லாதவன்; தனம்—செல்வத்தை; அனீஹா—விருப்பற்றதன்மை; அனீஹமானஸ்ய—தன் ஜீவனோபாயத்தை தேடிக் கொள்வதற்குக் கூட முயலாத ஒருவனின்; மஹா-அஹே:—பெரிய மலைப்பாம்பு; இவ—போல; வ்ருத்தி-தா—முயற்சியின்றி தன் ஜீவனோபாயத்தைப் பெறும்.
ஒருவன் ஏழையாக இருப்பினும், அவன் தன் உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்காக அல்லது புகழ் பெற்ற ஒரு சமயவாதி ஆவதற்காக தனது பொருளாதார நிலையை முன்னேற்றிக் கொள்ள அதிக முயற்சி செய்யக்கூடாது. எப்படி ஒரு பெரிய மலைப்பாம்பு ஒரே இடத்தில் படுத்துக் கொண்டிருந்த போதிலும், தனது ஜீவனத்திற்கு எந்த முயற்சியும் செய்யாமலேயே உடலையும், ஆத்மாவையும் பராமரிப்பதற்குத் தேவையான உணவைப் பெறுகிறதோ, அப்படியே விருப்பற்றவனும் முயற்சியின்றி தனது ஜீவனோபாயத்தைப் பெறுகிறான்.
பதம் 7.15.16
ஸந்துஷ்டஸ்ய நிரீஹஸ்ய ஸ்வாத்மாராமஸ் யத் ஸுகம்
குதஸ் தத் காம-லோபேன தாவதோ ‘ர்தேஹயா திச:
ஸந்துஷ்டஸ்ய—கிருஷ்ண உணர்வில் பூரண திருப்தியடைந்தவனின்; நிரீஹஸ்ய—தன் ஜீவனோபாயத்திற்கு முயற்சி செய்யாதவன்; ஸ்வ—தன்னுடைய; ஆத்ம-ஆராமஸ்ய—தன்னிறைவு உடையவன்; யத்—எந்த: ஸுகம்—ஆனந்தம்; குத:—எங்கே; தத்—இத்தகைய ஆனந்தம்; காம-லோபேன—காமத்தினாலும், பேராசையினாலும் உந்தப்பட்டவனாக; தாவத:—இங்குமங்கும் சுற்றித் திரிபவனின்; அர்த்த-ஈஹயா—பொருள் சேர்க்கும் ஆசையுடன்; திச:—எல்லாத் திசைகளிலும்.
போதுமென்ற மனநிலையுடன் திருப்தியடைந்தவனும், எல்லோருடைய இதயங்களிலும் வாழும் பரமபுருஷருடன் தன் செயல்களை இணைத்துக் கொள்பவனுமான ஒருவன், தன் ஜீவனத்திற்குரிய முயற்சி இல்லாமலேயே உன்னத ஆனந்தத்தை அனுபவிக்கிறான். காமத்தினாலும், பேராசையினாலும் உந்தப்பட்டவனாக, பொருள் சேர்க்கும் ஆசையுடன் எல்லாத் திசைகளிலும் சுற்றித்திரியும் ஒரு பௌதிகவாதிக்கு இத்தகைய ஆனந்தம் கிடைப்பதேது?
பதம் 7.15.17
ஸதா ஸந்துஷ்ட-மனஸ: ஸர்வா சிவமயா திச:
சர்கரா-கண்டகாதிப்யோ யதோபானத்-பத: சிவம்
ஸதா—எப்பொழுதும்; ஸந்துஷ்ட-மனஸ:—சுய திருப்தி உடையவனுக்கு; ஸர்வா:—அனைத்தும்; சிவ-மயா—மங்களகரமானதே; திச:—எல்லாத் திசைகளிலும்; சர்கரா—கல்லிலும்; கண்டக-ஆதிப்ய:—முட்கள் முதலியவைகளிலும்; யதா—எப்படி; உபானத்-பத:—பொருத்தமான செருப்பை அணிந்தவனுக்கு; சிவம்—ஆபத்தில்லை (மங்களமே).
காலில் பொருத்தமான செருப்பை அணிந்தவனுக்கு, கல்லிலும் முள்ளிலும் நடக்கும் பொழுதுகூட எந்த ஆபத்தும் இல்லாமல் எல்லாம் சுபமாகவே நடைபெறுகிறது. அவ்வாறே, எப்பொழுதும் சுயதிருப்தி உடையவனுக்குத் துன்பம் என்பதே இல்லை; உண்மையில் எல்லா இடங்களும் அவனுக்கு இன்பமயமாகவே இருக்கின்றன.
பதம் 7.15.18
ஸந்துஷ்ட: கேன வா ராஜன் ந வர்தேதாபி வாரிணா
ஒளபஸ்த்ய-ஜைஹ்வ்ய-கார்பண்யாத் க்ருஹ-பாலாயதே ஜன:
ஸந்துஷ்ட:—எப்பொழுதும் போதுமென்ற மனமுடையவன்; கேன—ஏன்; வா—அல்லது; ராஜன்—அரசே; ந—இல்லை; வர்தேத—(மகிழ்ச்சியாக) வாழ வேண்டும்; அபி—கூட; வாரிணா—நீரைப்பருகுவதால்; ஒளபஸ்த்ய—பாலுறுப்புகளாலும்; ஜைஹ்வ்ய—நாவினாலும்; கார்பண்யாத்—மோசமான அல்லது கஞ்சத்தனமான நிலையில் இருப்பதால்; க்ருஹ-பாலாயதே—வீட்டில் வளர்க்கும் நாய் போல் ஆகிறான்; ஜன:—அத்தகைய ஒருவன்.
அரசே, போதுமென்ற மனமுடையவன் வெறும் நீரைப் பருகுவதாலேயே மகிழ்ச்சியடைகிறான். ஆனால் புலன்களால் குறிப்பாக நாக்கினாலும், பாலுறுப்புகளாலும் தூண்டப்படுபவன், தன் புலன்களைத் திருப்திப்படுத்துவதற்கு வீட்டில் வளர்க்கும் நாயின் நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பதம் 7.15.19
அஸந்துஷ்டஸ்ய விப்ரஸ்ய தேஜோ வித்யா தபோ யச:
ஸ்ரவந்தீந்ரிய-லௌல்யேன ஞானம் சைவாவகீர்யதே
அஸந்துஷ்டஸ்ய—போதுமென்ற மனமில்லாதவனின்; விப்ரஸ்ய—இத்தகைய ஒரு பிராமணனின்; தேஜ:—பலம்; வித்யா—கல்வி; தப:—தவம்; யச:—கீர்த்தி; ஸ்ரவந்தி—நலிவடைகின்றன; இந்ரிய—புலன்களின்; லௌல்யேன—பேராசையால்; ஞானம்—அறிவு; ச—மற்றும்; ஏவ—நிச்சயமாக; அவகீர்யதே—படிப்படியாக மறைந்து விடுகிறது.
புலன்களின் பொருட்டு உண்டாகும் பேராசையின் காரணத்தால் போதுமென்ற மனமில்லாத ஒரு பக்தனின் அல்லது பிராமணனின் ஆன்மீக பலம், கல்வி, தவம், கீர்த்தி ஆகியவை நலிவடைந்து, அவனுடைய அறிவு படிப்படியாக மறைந்து விடுகிறது.
பதம் 7.15.20
காமஸ்யாந்தம் ஹி க்ஷுத்-த்ருத்ப்யாம்
க்ரோதஸ்யைதத் ஃபலோதயாத்
ஜனோ யாதி ந லோபஸ்ய
ஜித்வா புக்த்வா திஸோ புவ:
காமஸ்ய—புலன் நுகர்வு ஆசையின் அல்லது உடலில் அவசரத் தேவையின்; அந்தம்—முடிவு; ஹி—நிச்சயமாக; க்ஷுத்-த்ருத்ப்யாம்—மிகவும் தாகத்துடனோ அல்லது பசியுடனோ இருப்பவனால்; க்ரோதஸ்ய—கோபத்தின்; ஏதத்—இது; ஃபல-உதயாத்—கோபத்தைக் காட்டுவதாலும், அதன் பிரதிபலனாலும்; ஜன:—ஒருவன்; யாதி—கடக்கிறான்; ந—இல்லை; லோபஸ்ய—பேராசை; ஜித்வா—வென்று; புக்த்வா—அனுபவித்தும்; திச:—எல்லாத் திசைகளையும்; புவ:—உலகின்.
பசியாலும், தாகத்தினாலும் பீடிக்கப்பட்டவனுடைய உடலின் தீவிரமான ஆசைகளும், தேவைகளும் உணவு உண்பதால் நிச்சயமாக திருப்தியடைகின்றன. அவ்வாறே, ஒருவன் கடுங்கோபம் கொள்வானாயின், அக்கோபம் தண்டிப்பதாலும், அதன் பிரதிபலனாலும் திருப்திப்படுத்தப்படுகிறது. ஆனால் பேராசை கொண்ட ஒருவன் திசைகளையெல்லாம் வென்றும், உலகிலுள்ள அனைத்தையும் ஆண்டனுபவித்தும் திருப்தியடைவதேயில்லை.
பதம் 7.15.21
பண்டிதா பஹவோ ராஜன் பஹு-க்ஞா: ஸம்சய-ச்சித:
ஸதஸஸ் பதயோ ‘பி ஏகே அஸந்தோஷாத் பதந்தி அத:
பண்டிதா:—கற்றறிந்த மேதைகள்; பஹவ:—பலர்; ராஜன்—அரசே (யுதிஷ்டிரரே); பஹு-ஞா:—பலவித அனுபவங்களைக் கொண்டவர்கள்; ஸம்சய-ச்சித:—சட்ட நிபுணர்கள்; ஸதஸ:-பதய:—கற்றறிந்த சபைகளுக்குத் தலைமை தாங்கும் தகுதி படைத்தவர்கள்; அபி—கூட; ஏகே—ஒரு தகுதியின்மையால்; அஸந்தோஷாத்—அதிருப்தியினாலேயே அல்லது போராசையினாலேயே; பதந்தி—விழுந்து விடுகின்றனர்; அத:—நரக வாழ்வில்.
யுதிஷ்டிர மகாராஜனே, பலவித அனுபவங்களைக் கொண்ட பல பேர்கள், பல சட்ட ஆலோசகர்கள், பல கற்றறிந்த மேதைகள், கற்றறிந்த சபைகளுக்குத் தலைமை தாங்கும் தகுதி படைத்தவர்கள் ஆகியோர் தங்களுடைய நிலைகளில் திருப்தியடையாத காரணத்தால் நரக வாழ்வில் தள்ளப்படுகின்றனர்.
பதம் 7.15.22
அஸங்கல்பாஜ் ஜயேத் காமம் க்ரோதம் காம-விவர்ஜனாத்
அர்த்தானர்த்தேக்ஷயா லோபம் பயம் தத்வாவமர்சனாத்
அஸங்கல்பாத்—மன உறுதியினால்; ஜயேத்—ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும்; காமம்—காம இச்சையை; க்ரோதம்—கோபத்தை; காம-விவர்ஜனாக்—புலன் ஆசையின் நோக்கத்தையே விட்டு விடுவதால்; அர்த்த—பொருள் சேர்ப்பது; அனர்த்த—தொல்லைக்குக் காரணம்; ஈக்ஷயா—கருத்திற் கொள்வதால்; லோபம்—பேராசையை; பயம்—பயத்தை; தத்வ—உண்மையை; அவமர்சனாத்—கருத்திற்கொள்வதால்.
ஒருவன் உறுதியான திட்டங்களைத் தீட்டுவதன் மூலம், புலன் நுகர்வுக்கான தீவிர ஆசைகளை விட்டுவிட வேண்டும். அவ்வாறே, பொறாமையை விடுவதன் மூலம் கோபத்தை ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும். பொருள் சேர்ப்பதில் உள்ள தீமைகளைப் பற்றி ஆலோசிப்பதன் மூலம் பேராசையை விட்டுவிட வேண்டும். மேலும் உண்மைப் பற்றி விவாதிப்பதன் மூலம் பயத்தையும் விட்டுவிட வேண்டும்.
பதம் 7.15.23
ஆன்வீக்ஷிக்யா சோக-மோஹௌ தம்பம் மஹத்-உபாஸயா
யோகாந்தராயான் மௌனேன ஹிம்ஸாம் காமாதி-அனீஹயா
ஆன்வீக்ஷிக்யா—ஜட மற்றும் ஆன்மீக விஷயங்களை ஆராய்வதால்; சோக—சோகத்தையும்; மோஹௌ—மோகத்தையும்; தம்பம்—பொய்யான தற்பெருமையை; மஹத்—ஒரு வைஷ்ணவருக்கு; உபாஸயா—சேவை செய்வதால்; யோக-அந்தராயான்—யோக மார்கத்தின் இடையூறுகள்; மௌனேன—மௌனத்தால்; ஹிம்ஸாம்—பொறாமை; காம-ஆதி—புலன் நுகர்வுக்கான; அனீஹயா—முயற்சியின்றி.
ஆத்ம ஞானத்தைப் பற்றி விவாதிப்பதன் மூலம் ஒருவனால் சோகத்தையும், மோகத்தையும் வெல்ல முடியும். ஒரு சிறந்த பக்தருக்குச் சேவை செய்வதன் மூலம் அகங்காரத்தை விட்டொழிக்க முடியும். மௌனம் சாதிப்பதன் மூலம் அஷ்டாங்கயோக மார்க்கத்தின் இடையூறுகளைத் தவிர்க்க முடியும். மேலும் புலன்நுகர்வை நிறுத்திக் கொள்வதாலேயே பொறாமையை வென்று விடமுடியும்.
பதம் 7.15.24
க்ருபயா பூதஜம் துஹ்கம் தைவம் ஜஹ்யாத் ஸமாதினா
ஆத்மஜம் யோக-வீர்யேண நித்ராம் ஸத்வ-நிஷேவயா
க்ருபயா—எல்லா ஜீவராசிகளிடமும் கருணை கொள்வதால்; பூத-ஜம்—பிற ஜீவராசிகளின் காரணத்தால்; துஹ்கம்—விளையும் துன்பம்; தைவம்—விதியினால் ஏற்படும் துன்பத்தை; ஜஹ்யாத்—ஒருவன் விட்டுவிட வேண்டும்; ஸமாதினா—சமாதி அல்லது தியானத்தினால்; ஆத்ம-ஜம்—உடலாலும், மனதாலும் விளையும் துன்பங்களை; யோக-வீர்யேண—ஹட-யோகம், பிராணாயாமம் முதலான பயிற்சிகளால்; நித்ராம்—உறக்கத்தை; ஸத்வ-நிஷேவயா—பிராமண தகுதிமுறைகளை அல்லது சத்வ குணத்தை விருத்தி செய்வதால்.
நன்நடத்தையாலும், பொறாமையிலிருந்து விடுபடுவதாலும் (கருணையாலும்) பிற ஜீவராசிகளினால் விளையும் துன்பங்களை ஒருவன் செயலிழக்கச் செய்ய வேண்டும். தியான சமாதியின் மூலம் விதிவசத்தால் விளையும் துன்பங்களை ஒருவன் செயலிழக்கச் செய்ய வேண்டும். ஹட-யோகம், பிராணாயாமம் முதலான பயிற்சிகளால், உடலாலும் மனதாலும் ஏற்படும் துன்பங்களை ஒருவன் செயலிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறே, குறிப்பாக உண்ணும் விஷயத்தில் சத்வகுணத்தை விருத்தி செய்வதன் மூலம் உறக்கத்தை ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும்.
பதம் 7.15.25
ரஜஸ் தமஸ் ச ஸத்வேன ஸத்வம் சோபசமேன ச
ஏதத் ஸர்வம் குரெள பக்த்யா புருஷோ ஹி அஞ்ஜஸா ஜயேத்
ரஜ தம:—ரஜோ மற்றும் தமோ குணங்களை; ச—மேலும்; ஸத்வேன—சத்வ குணத்தை விருத்தி செய்வதன் மூலம்; ஸத்வம்—சத்வ குணத்தை; ச—கூட; உபசமேன—பற்றை விட்டுவிடுவதால்; ச—மேலும்; ஏதத்—இவை; ஸர்வம்—எல்லாம்; குரௌ—ஆன்மீக குருவிற்கு; பக்த்யா—பக்தியுடன் சேவை செய்வதால்; புருஷ:—ஒருவன்; ஹி—நிச்சயம்; அஞ்ஜஸா—சுலபமாக; ஜயேத்—வெற்றிக்கொள்ள முடியும்.
சத்வ குணத்தை விருத்தி செய்வதன் மூலம், ரஜோ மற்றும் தமோ குணங்களை ஒருவன் வெற்றிக் கொள்ள வேண்டும். பிறகு சுத்த-ஸத்வ நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்வதன்மூலம், ஒருவன் நற்குணத்தில் பற்றற்றவன் ஆக வேண்டும். ஒருவன் பக்தி சிரத்தையுடன் ஆன்மீக குருவின் சேவையில் ஈடுபடும் பொழுது இவையெல்லாம். தானாகவே சாத்தியமாகின்றன. இவ்விதமாக ஒருவனால் இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்தை வெற்றி கொள்ள முடியும்.
பதம் 7.15.26
யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஞான-தீப-ப்ரதே குரௌ
மர்த்யாஸத்-தீ: ஸ்ருதம் தஸ்ய ஸர்வம் குஞ்ஜர-சௌசவத்
யஸ்ய—எவனொருவன்; ஸாக்ஷாத்—நேரடியாக; பகவதி—பரம புருஷர்; ஞான-தீப-ப்ரதே—அறிவுச் சுடரால் ஞானோபதேசம் செய்பவரான; குரௌ—ஆன்மீக குருவிற்கு; மர்த்ய-அஸத்-தீ:—ஆன்மீக குருவை ஒரு சாதாரண மனிதராகக் கருதி, அனுகூலமற்ற இத்தகைய ஒரு மனோபாவத்தைப் பராமரிப்பவன்; ஸ்ருதம்—வேத ஞானம்; தஸ்ய—அவனுக்கு; ஸர்வம்—அனைத்தும்; குஞ்ஜர-சௌச-வத்—ஏரியில் நீராடும் ஒரு யானையின் குளியலைப் போன்றவையே.
ஆன்மீக குரு ஆத்ம போதித்தற்குரிய உன்னத அறிவைக் கொடுப்பதால், அவரை நேரடியாகப் பரமபுருஷராகவே கருத வேண்டும். ஆகையால், ஆன்மீக குருவானவர் ஒரு சாதாரண மனிதர் என்ற பௌதிக எண்ணம் கொண்டுள்ளவன் அனைத்திலும் ஏமாற்றம் அடைகிறான். அவனுடைய ஆத்ம போதமும், வேதக் கல்விகளும், அறிவும் ஒரு யானையின் குளியலைப் போன்றவையே.
பதம் 7.15.27
ஏஷ வை பகவான் ஸாக்ஷாத் ப்ரதான-புருஷேஸ்வர:
யோகேஸ்வரைர் விம்ருக்யாங்ரிர் லோகோ யம் மன்யதே நரம்
ஏஷ:—இவர்; வை—உண்மையில்; பகவான்—பரமபுருஷர்; ஸாக்ஷாத்—நேரடியாக; ப்ரதான—ஜட இயற்கைக்கு முக்கிய காரணமாவார்; புருஷ—அனைத்து ஜீவராசிகளின் அல்லது புருஷாவதாரமான பகவான் விஷ்ணுவின்; ஈஸ்வர:—பரம ஆளுனர்; யோக-ஈஸ்வரை:—சிறந்த யோகிகளால்; விம்ருக்ய-அங்ரி:—நாடிச் செல்லப்படும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்கள்; லோக:—பொதுவாக மக்கள்; யம்—அவரை; மன்யதே—கருதுகின்றனர்; நாம்—ஒரு மனிதராக.
பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்து ஜீவராசிகளுக்கும், ஜட இயற்கைக்கும் தலைவராவார். அவருடைய தாமரைப் பாதங்கள் வியாசரைப் போன்ற மாமுனிவர்களாலும் நாடி பூஜிக்கப்படுகின்றன. அப்படியிருந்தும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு சாதாரண மனிதராகக் கருதும் முட்டாள்களும் இருக்கவே செய்கின்றனர்.
பதம் 7.15.28
ஷட்-வர்க-ஸம்யமைகாந்தா: ஸர்வா நியம-சோதனா:
தத்-அந்தா யதி நோ யோகான் ஆவஹேயு: ஸ்ரமாவஹா:
ஷட்-வர்க—ஆறு மூலப் பொருட்கள், அதாவது ஐந்து செயற் புலன்கள் மற்றும் மனது; ஸம்யம-ஏகாந்தா:—கட்டுப்படுத்துவதெனும் முடிவான இலட்சியம்; ஸர்வா:—இத்தகைய செயல்களனைத்தும்; நியம-சோதனா:—புலன்களையும், மனதையும் மேலும் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு விதிகள்; தத்-அந்தா:—இத்தகைய செயல்களின் முடிவான இலக்கு; யதி—இருந்தால்; ந—இல்லை; யோகான்—பரமனுடனான சரியான இணைப்பு; ஆவஹேயு:—அழைத்துச் செல்லும்; ஸ்ரம-ஆவஹா:—உழைப்பு மற்றும் காலத்தின் விரயமாகும்.
வேதக் கிரியைகள், கட்டுப்பாட்டு விதிகள், தவங்கள், யோகப் பயிற்சி ஆகிய அனைத்தும் புலன்களையும், மனதையும் அடக்குவதற்காகவே உள்ளன. ஆனால் புலன்களையும், மனதையும் ஒருவனால் அடக்க முடிந்த பிறகும், அவன் பரமபுருஷரைத் தியானிக்கும் நிலைக்கு வரவில்லை என்றால், இத்தகைய செயல்கள் எல்லாம் ஏமாற்றத்தில் முடிவுறும் வீணான உழைப்பு மட்டுமேயாகும்.
பதம் 7.15.29
யதா வார்த்தாதயோ ஹி அர்த்தா யோகஸ்யார்த்தம் ந பிப்ரதி
அனர்த்தாய பவேயு: ஸ்ம பூர்தம் இஷ்டம் ததாஸத:
யதா—எப்படி; வார்த்தா-ஆதய:—வர்த்தகம் போன்ற வருவாய்க்கான தொழில்கள்; ஹி—நிச்சயமாக; அர்த்தா:—(இத்தகைய தொழில்களிலிருந்து கிடைக்கும்) வருவாய்; யோகஸ்ய—தன்னுணர்வு பெறுவதற்கான யோக சக்தியின்; அர்த்தம்—பயனை; ந—இல்லை; பிப்ரதி—உதவியாக; அனர்த்தாய—மதிப்பற்றதாக; (ஒருவனைத் தொடர்ந்த பிறவிச் சக்கரத்தில் பந்திக்கிறதோ); பயேயு:—இருக்கிறார்கள்; ஸ்ம—எப்பொழுதும்; பூர்தம் இஷ்டம்—வேதக் கிரியைகள்; ததா—அப்படியே; அஸத:—பக்தனல்லாத ஒரு பௌதிகவாதியின்.
எப்படி வருவாய்க்கான செயல்கள் அல்லது வர்த்தகத்தில் கிடைக்கும் இலாபங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவ முடியாமல் பெளதிக பந்தத்திற்குக் காரணமாக இருக்கின்றனவோ, அப்படியே பகவானின் பக்தனல்லாத ஒருவனுக்கு வேதக் கிரியைகளால் உதவ முடியாது.
பதம் 7.15.30
யஸ் சித்த-விஜயே யத்த: ஸ்யான் நிஹ்ஸங்கோ ‘பரிக்ரஹ:
ஏகோ விவிக்த-சரணோ பிக்ஷுர் பைக்ஷ்ய-மிதாசன:
ய:—எவனொருவன்; சித்த-விஜயே—மனதை வெற்றி கொள்வதில்; யத்த:—ஈடுபட்டவனாக; ஸ்யாத்—இருக்கிறானோ; நிஹ்ஸங்க:—மாசுபட்ட சேர்க்கையின்றி; அபரிக்ரஹ:—(குடும்பத்தை) சார்ந்திராமல்; ஏக:—தனியாக; விவிக்த-சரண:—தனிமையான ஓரிடத்தைத் தஞ்சமடைந்து; பிக்ஷு:—ஒரு துறவி; பைக்ஷ்ய—உடலைப் பராமரிப்பதற்காக மட்டுமே யாசிப்பதன் மூலம்; மித-அசன:—சிக்கனமாக உணவு உண்பவனாக.
மனதை வெற்றி கொள்ள விரும்பும் ஒருவன் தன் குடும்பத்தினரின் சேர்க்கையை விட்டுவிட்டு, மாசுபட்ட சேர்க்கையிலிருந்து விடுபட்டவனாய்த் தனிமையான ஓரிடத்தில் வாழ வேண்டும். உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்கும், வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கும் தேவையான அளவு மட்டுமே அவன் யாசித்துப் பெற வேண்டும்.
பதம் 7.15.31
தேசே கசெள ஸமே ராஜன் ஸம்ஸ்தாப்யாஸனம் ஆத்மன:
ஸ்திரம் ஸுகம் ஸமம் தஸ்மின் ஆஸீதர்ஜு-அங்க ஓம் இதி
தேசே—ஓரிடத்தில்; கசௌ—மிகவும் புனிதமான; ஸமே—சமமான; ராஜன்—அரசே; ஸம்ஸ்தாப்ய—அமர்த்தி; ஆஸனம்—ஆசனத்தில்; ஆத்மன:—தன்னை; ஸ்திரம்—உறுதியாக; ஸுகம்—சௌகரியமாக; ஸமம்—சமமான மனநிலையுடன்; தஸ்மின்—அந்த ஆசனத்தில்; ஆஸீத—ஒருவன் அமர வேண்டும்; ருஜு-அங்க:—உடலைச் செங்குத்தாக வைத்துக் கொண்டு; ஓம்—வேத மந்திரமான பிரணவத்தை; இதி—இவ்வாறு.
அரசே, புனிதமான ஒரு தீர்த்த யாத்திரை ஸ்தலத்தின் யோகம் செய்வதற்குரிய ஓரிடத்தை ஒருவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இடம் உயரமாகவோ, தாழ்வாகவோ இல்லாமல் சமதரையாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் ஒருவன் மிகவும் செளகரியமாகவும், உறுதியாகவும், சமமான மனநிலையுடனும், உடலை நிமிர்த்தியும் உட்கார்ந்து கொண்டு, வேதப் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கத் துவங்க வேண்டும்.
பதங்கள் 7.15.32 – 7.15.33
ப்ராணாபானௌ ஸன்னிருத்யாத் பூர-கும்பக-ரேசகை:
யாவன் மனஸ் த்யஜேத் காமான் ஸ்வ-நாஸாக்ர-நிரீக்ஷண:
யதோ யதோ நிஹ்ஸரதி மன: காம-ஹதம் ப்ரமத்
ததஸ் தத உபாஹ்ருத்ய ஹ்ருதி ருந்யாச் ச்சனைர் புத:
ப்ராண—உள்மூச்சு; அபானௌ—வெளிமூச்சு; ஸன்னி-ருத்யாத்—நிறுத்திவிட வேண்டும்; பூர-கும்பக-ரேசகை:—மூச்சை இழுப்பதாலும், மூச்சை விடுவதாலும், மூச்சை நிறுத்தி வைப்பதாலும் (இவை பூரகம், கும்பகம் மற்றும் ரேசகம் எனப்படுகின்றன); யாவத்—எதுவரை; மன:—மனது; த்யஜேத்—விட்டுவிட வேண்டும்; காமான்—எல்லா பெளதிக ஆசைகளையும்; ஸ்வ—தன்னுடைய; நாஸ-அக்ர—மூக்கின் நுனியை; நிரீக்ஷண:—பார்த்துக் கொண்டு; யத: யத:—எதிலிருந்தும், எங்கிருந்தும்; நிஹ்ஸரதி—பின்வாங்கச் செய்கிறான்; மன:—மனதை; காம-ஹதம்—காம இச்சைகளால் தோற்கடிக்கப்பட்டு; ப்ரமத்—அலையும்; தத: தத:—இங்கு மங்கும்; உபாஹ்ருத்ய—அதைத் தன்வசம் கொண்டுவந்து; ஹ்ருதி—ஆழ்மனதில்; ருந்யாத்—(மனதை) வசப்படுத்த வேண்டும்; சனை:—பயிற்சியினால் படிப்படியாக; புத:—கற்றறிந்த ஒரு யோகி.
கற்றறிந்த ஒரு யோகி தொடர்ந்து மூக்கின் நுனியையே பார்த்துக் கொண்டு, சுவாசப்பயிற்சிகளைச் செய்கிறான். இப்பயிற்சிகள் உள்மூச்சையும், வெளிமூச்சையும் கட்டுப்படுத்தி, பிறகு அவ்விரண்டையும் நிறுத்திவிடுவதைப் பற்றியதாகும். இவை பூரகம், கும்பகம் மற்றும் ரேசகம் என்று அறியப்படுகின்றன. இவ்விதமாக யோகியானவன் பெளதிக பற்றுகளிலிருந்து தன் மனதைக் கட்டுப்படுத்தி, மனதின் ஆசைகளையெல்லாம் விட்டு விடுகிறான். மனது காம இச்சைகளுக்கு அடிமைப்பட்டவுடனேயே அது புலன்நுகர்வு சுகத்தை நோக்கி அலையத் துவங்குகிறது. யோகியானவன் அவ்வாறு அலையும் மனதை உடனே தன் பக்கம் இழுத்து, ஆழ்மனதில் அதைப் பூட்டி வைக்க வேண்டும்.
பதம் 7.15.34
ஏவம் அப்யஸ்யதஸ் சித்தம் காலேனால்பீயஸா யதே:
அனிசம் தஸ்ய நிர்வாணம் யாதி அனிந்தன-வஹ்னிவத்
ஏவம்—இவ்வாறு; அப்யஸ்யத:—இந்த யோக முறையைப் பயிற்சி செய்பவனின்; சித்தம்—மனம்; காலேன—காலப்போக்கில்; அல்பீயஸா—குறுகிய காலத்திலேயே; யதே:—யோகத்தைப் பயில்பவனின்; அனிசம்—விடாமல் எப்பொழுதும்; தஸ்ய—அவனுடைய; நிர்வாணம்—எல்லா பெளதிக மாசுகளிலிருந்தும் புனிதத் தன்மையை; யாதி—அடைகிறது; அனிந்தன—ஜுவாலையோ அல்லது புகையோ இல்லாத; வஹ்னி-வத்—ஒரு நெருப்பு போல்.
ஒரு யோகி ஒழுங்காக இவ்வாறு யோகப் பயிற்சியை மேற்கொள்வதால், குறுகிய காலத்திலேயே, ஜுவாலையும், புகையும் இல்லாத ஒரு நெருப்பு போல், அவனுடைய மனம் ஒருமுகப்பட்டு தொல்லைகளிலிருந்து விடுபடுகிறது.
பதம் 7.15.35
காமாதிபிர் அனாவித்தம் ப்ரசாந்தாகில-வ்ருத்தி யத்
சித்தம் ப்ரஹ்ம-ஸுக-ஸ்ப்ருஷ்டம் நைவோத்திஷ்டேத கர்ஹிசித்
காம-ஆதிபி:—பல்வேறு தீவிர ஆசைகளால்; அனாவித்தம்— பாதிக்கப்படாமல்; ப்ரசாந்த—சலனமற்றதாயும், அமைதியுடையதாயும்; அகில-வ்ருத்தி—எல்லா விதத்திலும், அல்லது எல்லாச் செயல்களிலும்; யத்—எது; சித்தம்—உணர்வு; ப்ரஹ்ம-ஸுக-ஸ்ப்ருஷ்டம்—உன்னத படித்தரத்திலுள்ள நித்திய ஆனந்தத்தில் நிலைபெற்று; ந—இல்லை; ஏவ—நிச்சயமாக; உத்திஷ்டேத—வெளியேற முடியும்; கர்ஹிசித்—எச்சமயத்திலும்.
ஒருவனுடைய உணர்வு தீவிரமான பெளதிக ஆசைகளால் களங்கமடையாமல் இருக்கும் பொழுது, அது எல்லாச் செயல்களிலும் சலனமற்றதாயும், அமைதியுடையதாயும் ஆகிறது. ஏனெனில் அந்நிலையில் ஒருவன் நித்தியமான ஆனந்த வாழ்வில் நிலைபெற்றவனாகிறான். ஒருமுறை அந்த படித்தரத்தில் நிலைபெற்ற ஒருவன் பெளதிக செயல்களுக்குத் திரும்புவதேயில்லை.
பதம் 7.15.36
ய: ப்ரவ்ரஜ்ய க்ருஹாத் பூர்வம் த்ரி-வர்காவபனாத் புன:
யதி ஸேவேத தான் பிக்ஷு: ஸ வை வாந்தாசி அபத்ரப:
ய:—எவனொருவன்: ப்ரவ்ரஜ்ய—(உன்னத ஆனந்தத்தில் நிலைத்திருப்பதால்) முற்றும் துறந்தவனாய் வனம் சென்று; க்ருஹாத்—வீட்டிலிருந்து; பூர்வம்—முதலில்; த்ரி-வர்க—தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்று கொள்கைகளை; ஆவபனாத்—அவை விதைக்கப்பட்ட நிலத்திலிருந்து; புன:—மீண்டும்; யதி—இருந்தால்; ஸேவேத—ஏற்றுக் கொள்வதாக; தான்—பெளதிக செயல்களை; பிக்ஷு:—துறவறம் பூண்ட ஒருவன்; ஸ:—அவன்; வை—உண்மையில்; வாந்த-ஆசீ—தன் சொந்த வாந்தியை உண்பவன்; அபத்ரப:—வெட்கம் இல்லாதவனாவான்.
துறவு வாழ்வை ஏற்றுக் கொள்பவன் தர்மம், அர்த்தம், காமம் என்ற பெளதிக வாழ்வின் மூன்று கொள்கைகளை விட்டு விடுகிறான். முதலில் சந்நியாச வாழ்வை ஏற்றுக் கொண்டு, பிறகு மீண்டும் இத்தகைய பௌதிக செயல்களுக்கே திரும்பி வருபவன் தன் சொந்த வாந்தியை உண்பவன் (வாந்தாசீ) என்று அழைக்கப்பட வேண்டியவனாவான். உண்மையில் இந்தகைய ஒருவன் வெட்கமற்றவனாவான்.
பதம் 7.15.37
யை: ஸ்வ-தேஹ: ஸ்ம்ருதோ ‘னாத்மா
மர்த்யோ விட்-க்ருமி-பஸ்மவத்
த ஏனம் ஆத்மஸாத் க்ருத்வா
ஸ்லாகயந்தி ஹி அஸத்தமா:
யை:—எந்த சந்நியாசிகளால்; ஸ்வ-தேஹ:—தங்களுடைய உடல்; ஸ்ம்ருத:—கருதப்படுகிறதோ; அனாத்மா—ஆத்மாவிலிருந்து வேறுபட்டதாக; மர்த்ய:—மரணத்திற்கு உட்பட்டு; விட்—மலமாக; க்ருமி—கிருமிகளாக; பஸ்மவத்—அல்லது சாம்பலாக மாறி; தே—இத்தகைய நபர்கள்; ஏனம்—இவ்வுடலை; ஆத்மஸாத் க்ருத்வா—மீண்டும் ஆத்மாவுடன் அடையாளப்படுத்தி; ஸ்லாகயந்தி—மிகவும் முக்கியமானதாகப் போற்றும்; ஹி—உண்மையில்; அஸத்-தமா:—மிகப் பெரிய அயோக்கியர்களாவர்.
உடலானது மரணத்திற்கு உட்பட்டது என்றும், பிறகு அது மலமாகவோ, கிருமிகளாகவோ அல்லது சாம்பலாகவோ மாறுகிறது என்றும் முதலில் கருதி, பிறகு மீண்டும் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதையே ஆத்மா என்று போற்றும் இத்தகைய சந்நியாசிகளை மிகப் பெரிய அயோக்கியர்களாகக் கருத வேண்டும்.
பதங்கள் 7.15.38 – 7.15.39
க்ருஹஸ்தஸ்ய க்ரியா-த்யாகோ வ்ரத-த்யாகோ வடோர் அபி
தபஸ்வினோ க்ராம-ஸேவா பிகேஷார் இந்ரிய-லோலதா
ஆஸ்ரமாபஸதா ஹி ஏதே கல்வ் ஆஸ்ரம-விடம்பனா:
தேவ-மாயா-விமூடாம்ஸ் தான் உபேக்ஷேதானுகம்பயா
க்ருஹஸ்தஸ்ய—ஒரு குடும்பஸ்தனுக்கு; க்ரிய-த்யாக:—குடும்ப வாழ்வின் கடமையை விட்டுவிடுவது; வ்ரத-த்யாக:—தவ, விரதங்களை விட்டுவிடுவது; வடோ:—ஒரு பிரம்மச்சாரிக்கு; அபி—மேலும்; தபஸ்வின:—வாழ்வை மேற்கொண்ட ஒரு வானப்பிரஸ்தனுக்கு; க்ராம-ஸேவா—ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டு அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்வது; பிகேஷா:—யாசகம் செய்து வாழ்ந்து வந்த ஒரு சந்நியாசிக்கு; இந்ரிய-லோலதா—புலன் நுகர்வில் வேட்கையும்; ஆஸ்ரம—ஆன்மீகப் பிரிவுகளின்; அபஸதா:—மிகவும் வெறுக்கத்தக்கதாகும்; ஹி—உண்மையில்; ஏதே—இவையெல்லாம்; கலு—நிச்சயமாக; ஆஸ்ரம-விடம்பனா:—போலி வேடம் பூண்டு வெவ்வேறு ஆன்மீக பிரிவுகளை ஏமாற்றி; தேவ-மாயா-விமூடான்—பரமபுருஷரின் புறச் சக்தியால் மதியிழந்தவர்கள்; தான்—அவர்களை; உபேக்ஷேத—உண்மையானவர்களாக ஏற்றுக் கொள்ளாமல், விலக்கிவிட வேண்டும்; அனுகம்பயா—அல்லது கருணையுடன் (அவர்களுக்கு உண்மையான வாழ்வைக் கற்றுக் கொடுக்க வேண்டும்).
கிருஹஸ்த ஆசிரமத்தில் வாழ்பவன் கட்டுப்பாட்டு விதிகளைக்கைவிடுவதும், ஒரு பிரம்மச்சாரி குருவின் பராமரிப்பில் வாழும் பொழுது பிரம்மச்சரிய விரதங்களைப் பின்பற்றாதிருப்பதும், வானப்பிரஸ்தன் கிராமத்தில் வாழ்ந்து கொண்டு பெயரளவேயான சமூகச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும், ஒரு சந்நியாசி புலன் நுகர்வில் பற்றுக் கொண்டிருப்பதும் கேவலமான விஷயங்களாகும். இவ்வாறு செயற்படுபவனை மிகவும் கடைப்பட்ட மதத் துரோகியாகக் கருத வேண்டும். இத்தகைய ஒரு வேஷதாரி பரமபுருஷரின் புறச்சக்தியால் குழப்பமடைந்தவனாவான். இத்தகைய ஒருவனை எல்லா அந்தஸ்துகளிலிருந்தும் விலக்கிவிட வேண்டும். அல்லது அவனிடம் இரக்கம் கொண்டு, சாத்தியமானால் அவன் தன் பழைய நிலையை அடைவதற்குத் தேவையானதை அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பதம் 7.15.40
ஆத்மானம் சேத் விஜானீயாத் பரம் ஞான-துதாசய:
கிம் இச்சன் கஸ்ய வா ஹேதோர் தேஹம் புஷ்ணாதி லம்பட:
ஆத்மானம்—ஆத்மாவையும், பரமாத்மாவையும்; சேத்—இருக்குமானால்; விஜானீயாத்—புரிந்து கொள்ள முடியும்; பரம்—இந்த ஜட உலகிற்கு அப்பாற்பட்டவர்களான; ஞான—அறிவினால்; துத-ஆசய:—தன் உணர்வைச் சுத்தம் செய்து கொண்டவன்; கிம்—என்ன; இச்சன்—பெளதிக வசதிகளை விரும்பும்; கஸ்ய—யாருக்காக; வா—அல்லது; ஹேதோ:—எதற்காக; தேஹம்—ஜட உடலை; புஷ்ணாதி—பராமரிக்கிறான்; லம்பட:—சட்ட விரோதமாக புலன் நுகர்வில் ஈடுபாடு கொண்டு.
மனித ரூபத்திலுள்ள உடலானது, உன்னத நிலையிலுள்ள ஆத்மாவையும், பரமபுருஷராகிய பரமாத்மாவையும் புரிந்து கொள்வதற்காகவே உள்ளது. முன்னேற்றமான அறிவினால் தூய்மையடையும் பொழுது இவ்விருவரையும் ஒருவனால் புரிந்து கொள்ள முடியும். அப்படியிருக்க, எதற்காக, யாருக்காக பேராசை கொண்ட ஒரு மூடன் புலன் சுகத்திற்காக உடலைப் பேணி வளர்க்கிறான்?
பதம் 7.15.41
ஆஹு: சரீரம் ரதம் இந்ரியாணி
ஹயான் அபீஷூன் மன இந்ரியேசம்
வர்த்மானி மாத்ரா திஷணாம் ச ஸூதம்
ஸத்வம் ப்ருஹத் பந்துரம் ஈச-ஸ்ருஷ்டம்
ஆஹு—என்று கூறப்படுகிறது; சரீரம்—உடல்; ரதம்—தேராகும்; இந்ரியாணி—புலன்கள்; ஹயான்—குதிரைகளாகும்; அபீஷூன்—கடிவாளங்கள்; மன:—மனமாகும்; இந்ரிய—புலன்களின்; ஈசம்—எஜமானர்; வர்த்மானி—சேரவேண்டிய இடங்கள்; மாத்ரா:—புலன் பொருட்கள்; திஷணாம்—புத்தி; ச—மேலும்; ஸூதம்—தேரோட்டி; ஸத்வம்—உணர்வாகும்; ப்ருஹத்—பெரிய; பந்துரம்—பந்தம்; ஈச—பரமபுருஷரால்; ஸ்ருஷ்டம்—படைக்கப்பட்டதாகும்.
அறிவில் முன்னேறியுள்ள ஆன்மீகிகள், பரமபுருஷரின் ஆணைப்படி செய்யப்பட்டுள்ள உடலை ஒரு தேருடன் ஒப்பிடுகின்றனர். புலன்கள் குதிரைகளுக்கு ஒப்பாகும். புலன்களின் எஜமானரான மனம் கடிவாளங்களுக்கு ஒப்பாகும். அடைய வேண்டிய இலக்குகள் புலன் பொருட்களாகும்; புத்தி தேரோட்டியாகும்; மற்றும் உடல் முழுவதிலும் பரவியுள்ள உணர்வானது இந்த ஜடஉலக பந்தத்திற்குக் காரணமாகும்
பதம் 7.15.42
அக்ஷம் தச-ப்ராணம் அதர்ம-தர்மௌ
சக்ரே ‘பிமானம் ரதினம் ச ஜீவம்
தனுர் ஹி தஸ்ய ப்ராணவம் படந்தி
சரம் து ஜீவம் பரம் ஏவ லக்ஷ்யம்
அக்ஷம்—(தேர்ச் சக்கரத்திலுள்ள) ஆரக்கால்கள்; தச—பத்து; ப்ராணம்—உடலுக்குள் சூழலும் பத்து விதமான காற்றுகள்; அதர்ம—அதர்மமாகும்; தர்மௌ—தர்மமாகும் (சக்கரத்தின் மேலும், கீழும் உள்ள இரு புறங்கள்); சக்ரே—சக்கரத்தில்; அபிமானம்—தவறான அபிமானம்; ரதினம்—தேரோட்டி அல்லது உடலின் எஜமானன்; ச—மேலும்; ஜீவம்—ஜீவராசி; தனு:—வில்லாகும்; ஹி—உண்மையில்; தஸ்ய—அவனுடைய; ப்ரணவம்—வேத மந்திரமான ஓம்காரம்; படந்தி—என்று கூறப்படுகிறது; சரம்—அம்பாவான்; து—ஆனால்; ஜீவம்—ஜீவராசி; பரம்—பரமபுருஷர்; ஏவ—உண்மையில்; லக்ஷ்யம்—இலக்கவார்.
உடலுக்குள் சுழலும் பத்துவிதமான காற்றுகள், தேர்ச்சக்கரங்களின் ஆரக்கால்களுக்கு ஒப்பிடப்படுகின்றன. சக்கரத்தின் மேற்பாகமும், கீழ்ப்பாகமும் தர்மம் என்றும் அதர்மம் என்றும் அழைக்கப்படுகின்றன. தேகாபிமானத்திலுள்ள ஜீவராசி தேரின் உரிமையாளனாவான். வேத மந்திரமான பிரணவம் வில்லாகும். தூய ஜீவராசி அம்பாவான். பரமபுருஷர் இலக்காவார்.
பதங்கள் 7.15.43 – 7.15.44
ராகோ த்வேஷஸ் ச லோபஸ் ச சோக-மோஹௌ பயம் மத:
மானோ ‘வமானோ ‘ஸூயா ச மாயா ஹிம்ஸா ச மத்ஸர:
ரஜ: ப்ரமாத: க்ஷுன்-நித்ரா சத்ரவஸ் து ஏவம் ஆதய:
ரஜஸ்-தம:-ப்ரக்ருதய: ஸத்வ-ப்ரக்ருதய: க்வசித்
ராக:—பற்று; த்வேஷ:—பகைமை; ச—மேலும்; லோப:—பேராசை; ச—மேலும்; சோக—வருத்தம்; மோஹௌ—மோகம்; பயம்—பயம்; மத:—மதி மயக்கம்; மான:—பொய்க் கௌரவம்; அவமான:—அவமரியாதை; அஸூயா—குற்றங்கண்டுபிடித்தல்; ச—மேலும்; மாயா—வஞ்சகம்; ஹிம்ஸா—பொறாமை; ச—கூட; மத்ஸர:—பொறுமையின்மை; ரஜ:—தீவிர உணர்ச்சி; ப்ரமாத:—குழப்பம்; க்ஷுத்—பசி; நித்ரா—உறக்கம்; சத்ரவ:—எதிரிகளாகும்; து—உண்மையில்; ஏவம்ஆதய:—இத்தகைய பிற கருத்துகள் கூட; ரஜ: தம:—ரஜோ மற்றும் தமோ குணங்களிலிலுள்ள எண்ணங்களின் காரணத்தால்; ப்ரக்ருதய:—காரணங்களாகும்; ஸத்வ—சத்வ குணத்தினால்; ப்ரக்ருதய:—காரணங்கள்; க்வசித்—சிலசமயம்.
பந்தப்பட்ட நிலையில், ஒருவனுடைய எண்ணங்கள் சிலசமயம் ரஜோ மற்றும் தமோ குணங்களால் களங்கமடைகின்றன. இக்குணங்கள் பற்று, பகை, பேராசை, வருத்தம், மோகம், பயம், மதம், பொய்க் கெளரவம், அவமரியாதை, குற்றங்கள் கண்டுபிடித்தல், வஞ்சகம், பொறாமை, பொறுமையின்மை, தீவிர உணர்ச்சி, குழப்பம், பசி மற்றும் உறக்கம் ஆகியவற்றினால் வெளிப்படுத்தப்படுகின்றன. இவையனைத்தும் எதிரிகளாகும். சிலசமயம் ஒருவனுடைய எண்ணங்கள் சத்வ குணத்தினாலும் மாசுபடுத்தப்படுகின்றன.
பதம் 7.15.45
யாவன் ந்ரு-காய-ரதம் ஆத்ம-வசோபகல்பம்
தத்தே கரிஷ்ட-சரணார்ச்சனயா நிசாதம்
ஞானாஸிம் அச்யுத-பலோ ததத் அஸ்த-சத்ரு:
ஸ்வானந்த-துஷ்ட உபசாந்த இதம் விஜஹ்யாத்
யாவத்—எதுவரை; ந்ரு-காய—இந்த மனித உடல்; ரதம்—ஒரு தேராக கருதப்படுகிறது; ஆத்ம-வச—தன் சொந்த கட்டுப்பாட்டிலுள்ள; உபகல்பம்—எதில் வேறு பல சிறிய கிளைகள் உள்ளனவோ; தத்தே—ஒருவன் பெற்றுள்ளான்; கரிஷ்ட-சரண—மேலானவர்களின் தாமரைப் பாதங்களை (ஆன்மீக குரு மற்றும் அவருக்கு முன்னிருந்தவர்கள்); அர்ச்னயா—சேவை செய்வதனால்; நிசாதம்—கூர்மைப்படுத்தப்பட்ட; ஞான-அஸிம்—அறிவாகிய கத்தியை அல்லது ஆயுதத்தை; அச்யுத-பல:—கிருஷ்ணரின் உன்னத சக்தியால்; ததத்—பிடித்துக் கொண்டு; அஸ்த-சத்ரு:—எதிரி தோல்வியடையும் வரை; ஸ்வ-ஆனந்த-துஷ்ட:—உன்னத ஆனந்தத்தினால் பூரண மனநிறைவு பெற்று; உபசாந்த:—உணர்விலிருந்து பௌதிக மாசுகளையெல்லாம் தூய்மைப்படுத்தி; இதம்—இவ்வுடலை; விஜஹ்யாத்—ஒருவன் விட்டுவிட வேண்டும்.
ஒருவன் தனது முழு கட்டுப்பாட்டில் இல்லாத வெவ்வேறு பகுதிகளுடனும், அவற்றிற்குரிய பொருட்களுடனும் கூடிய ஒரு ஜட உடலை ஏற்றுக் கொண்டுள்ள வரை, அவன் தனக்கும் மேலானவரான தனது ஆன்மீக குரு மற்றும் அவருக்கு முன்னிருந்தவர்களின் தாமரைப் பாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுடைய கருணையால் அறிவாகிய கத்தியை ஒருவனால் கூர்மையாக்கிக் கொள்ள முடியும். பிறகு பரமபுருஷரின் கருணையாகிய சக்தியினால் மேற்கூறிய எதிரிகளை ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும். இவ்விதமாக பக்தனானவன் தன் சொந்த உன்னத ஆனந்தத்தில் கலந்துவிட வேண்டும். அதன்பிறகு அவனால் தன் உடலை விட்டுவிட்டு, தனது ஆன்மீக சொரூபத்தை திரும்பப் பெறமுடியும்.
பதம் 7.15.46
நோசேத் ப்ரமத்தம் அஸத்-இந்ரிய வாஜி-ஸூதோ
நித்வோத்பதம் விஷய-தஸ்யுஷு நிக்ஷிபந்தி
தே தஸ்யவ: ஸஹய-ஸூதம் அமும் தமோ ‘ந்தே
ஸம்ஸார-கூப உரு-ம்ருத்யு-பயே க்ஷிபந்தி
நோசேத்—அச்யுதார கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி; பலதேவரிடம் நாம் தஞ்சமடையாவிடில்; ப்ரமத்தம்—அக்கறையும், கவனமும் இல்லாமல்; அஸத்—எப்பொழுதும் பெளதிக உணர்வுக்கு உட்படக் கூடியவையான; இந்ரிய—புலன்கள்; வாஜி—குதிரைகளாகச் செயற்படும்; ஸூதா:—சாரதி (புத்தி); நீத்வா—கொண்டுவந்து; உத்பதம்—பெளதிக ஆசை என்ற வழிக்கு; விஷய—புலன் பொருட்களை; தஸ்யுஷு—கொள்ளையடிப்பவர்களின் கைகளில்; நிக்ஷிபந்தி—தள்ளப்படுகின்றனர்; தே—அவர்கள்; தஸ்யவ:—கொள்ளைக்காரர்கள்; ஸ—உடன்; ஹய-ஸூதம்—குதிரைகளும் தேரோட்டியும்; அமும்—அவர்களனைவரும்; தம:—இருண்ட; அந்தே—குருடான; ஸம்ஸார-கூபே—பௌதிக வாழ்வெனும் கிணற்றுக்குள்; உரு—மிகுந்த; ம்ருத்யு-பயே—மரண பயம்; க்ஷிபந்தி—தள்ளப்படுகிறான்.
ஒருவன் அச்யுதரிடமும், பலதேவரிடமும் சரணடைய வேண்டும். இல்லையெனில், பெளதிக களங்கத்திற்கு உட்படக் கூடியவையும், முறையே குதிரைகளாகவும், சாரதியாகவும் செயற்படுபவையுமான புலன்களும், புத்தியும், கவனக்குறைவினால், தேர்போல் செயற்படும் உடலை, புலன்நுகர்வு என்ற வழிக்குக் கொண்டு வந்துவிடுகின்றன. இவ்வாறாக விஷயம் (உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல்) என்ற அயோக்கியர்களால் மீண்டும் கவரப்படும் பொழுது, குதிரைகளும், சாரதியும் பௌதிக வாழ்வெனும் இருண்ட கிணற்றுக்குள் தள்ளப்பட்டு, ஆபத்தானதும், மிகவும் பயங்கரமானதுமான பிறவிச் சக்கரத்தில் மீண்டும் ஒருவன் புகுத்தப்படுகிறான்.
பதம் 7.15.47
ப்ரவ்ருத்தம் ச நிவ்ருத்தம் ச த்வி-விதம் கர்ம வைதிகம்
ஆவர்ததே ப்ரவ்ருத்தேன நிவ்ருத்தேனாஸ்னுதே ‘ம்ருதம்
ப்ரவ்ருத்தம்—பௌதிக சுகத்தை அனுபவிப்பதில் நாட்டம்; ச—மேலும்; நிவ்ருத்தம்—பெளதிக சுகத்தை நிறுத்திவிடுவது; ச—மேலும்; த்வி-விதம்—இவ்விரு வகையான; கர்ம—செயல்களின்; வைதிகம்—வேதங்களின் சிபாரிசு செய்யப்பட்டுள்ள; ஆவர்ததே—சம்ஸார சக்கரத்தின் மூலமாக ஒருவன் மேலும், கீழும் சஞ்சரிக்கிறான்; ப்ரவ்ருத்தேன—பௌதிக செயல்களை அனுபவிக்கும் நாட்டத்தினால்; நிவ்ருத்தேன—ஆனால் அத்தகைய செயல்களை நிறுத்திவிடுவதால்; அஸ்னுதே—ஒருவன் அனுபவிக்கிறான்; அம்ருதம்—நித்திய வாழ்வை.
வேதங்களின்படி, ப்ரவ்ருத்தி மற்றும் நிவ்ருத்தி என்ற இருவகையான செயல்கள் உள்ளன. தாழ்ந்த பெளதிக நிலையிலிருந்து உயர்ந்த பெளதிக நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்வது ப்ரவ்ருத்தி செயலாகும். ஆனால் பெளதிக ஆசைகளை நிறுத்திவிடுவது நிவ்ருத்தி எனப்படுகிறது. ப்ரவ்ருத்தி செயல்களின் மூலமாக பெளதிக பந்தத்தினால் ஏற்படும் துன்பங்களை ஒருவன் அனுபவிக்கிறான். ஆனால் நிவ்ருத்தி செயல்களினால் ஒருவன் புனிதமடைந்து, நித்தியமான ஆனந்த வாழ்வை அனுபவிக்கத் தகுதியுடையவன் ஆகிறான்.
பதங்கள் 7.15.48 – 7.15.49
ஹிம்ஸ்ரம் த்ரவ்யமயம் காம்யம் அக்னி-ஹோத்ராதி- அசாந்திதம்
தர்சஸ் ச பூர்ணமாஸஸ் ச சாதுர்மாஸ்யம் பசு: ஸுத:
ஏதத் இஷ்டம் ப்ரவ்ருத்தாக்யம் ஹுதம் ப்ரஹுதம் ஏவ ச
பூர்தம் ஸுராலயாராம-கூபாஜீவ்யாதி-லக்ஷணம்
ஹிம்ஸ்ரம்—மிருகங்களைக் கொன்று பலி கொடுக்கும் ஒருவித முறை; த்ரவ்ய-மயம்—அதிகமான பொருட்கள் தேவைப்படும்; காம்யம்—எண்ணற்ற பௌதிக ஆசைகள் நிறைந்த; அக்னி-ஹோத்ர-ஆதி—அக்னி-ஹேத்ர-யக்ஞம் போன்ற வேதச் சடங்குகள்; அசாந்தி-தம்—கவலைகளுக்குக் காரணமாகின்றன; தர்ச:—தர்சம் என்ற சமயச் சடங்கு; ச—மேலும்; பூர்ணமாஸ:—பூர்ணமாஸம் என்ற சமயச் சடங்கு; ச—கூட; சாதுர்மாஸ்யம்—நான்கு மாத விரத அனுஷ்டானம்; பசு:—மிருக பலி அல்லது பசு யக்ஞம்; ஸுத:—ஸோம-யக்ஞம்; ஏதத்—இவற்றின்; இஷ்டம்—இலட்சியம்; ப்ரவ்ருத்த-ஆக்யம்—பெளதிக பற்று எனப்படும்; ஹுதம்—பரமபுருஷரின் ஓர் அவதாரமான வைஸ்வதேவர்; ப்ரஹுதம்—பலிஹரணம் எனப்படும் ஒரு சடங்கு; ஏவ—உண்மையில்; ச—மேலும்; பூர்தம்—பொது மக்களின் நன்மைக்காக; ஸுர-ஆலய—தேவர்களுக்காக ஆலயங்களை நிர்மாணித்தல்; ஆராம—சத்திரங்களும், தோட்டங்களும்; கூப—கிணறுகள் வெட்டுதல்; ஆஜீவ்ய-ஆதி—உணவும், நீரும் விநியோகிப்பது போன்ற செயல்கள்; லக்ஷணம்—அறிகுறிகளாகும்.
அக்னி-ஹோத்ர-யக்ஞம், தர்ச-யக்ஞம், பூர்ணமாஸ-யக்ஞம், சாதுர்மாஸ்ய-யக்ஞம், பசு-யக்ஞம் மற்றும் ஸோம-யக்ஞம் எனப்படும் எல்லாச் சடங்குகளும், யக்ஞங்களும் பெளதிக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செய்யப்படுகின்றன. இத்தகைய யக்ஞங்களில் குறிப்பாக உணவுத் தானியங்களைப் போன்ற பல விலையுயர்ந்த பொருட்கள் அக்னிக்கு இரையாக்கப்படுவதுடன், மிருகங்களும் பலி கொடுக்கப்படுகின்றன. இத்தகைய யக்ஞங்களைச் செய்தல், விஸ்வதேவரை வழிபடுதல், பலிஹரண சடங்கைச் செய்தல் ஆகிய இவையே வாழ்வின் இலட்சியம் என்று நம்பப்படுகின்றன. மேலும் தேவர்களின் ஆலயங்களை நிர்மாணித்தல், சத்திரங்களையும், தோட்டங்களையும் நிர்மாணித்தல், தண்ணீர் விநியோகத்திற்குக் கிணறு வெட்டுதல், உணவு விநியோகித்திற்கு விடுதிகள் அமைத்தல், மற்றும் சமூக நலனுக்குரிய செயல்களைச் செய்தல் ஆகிய இவையெல்லாம் பெளதிக ஆசைகளில் பற்றுக்கொண்டுள்ளதன் அறிகுறிகளாகும்.
பதங்கள் 7.15.50 – 7.15.51
த்ரவ்ய-ஸூக்ஷ்ம விபாகஸ் ச தூமோ ராத்ரித் அபக்ஷய:
அயனம் தக்ஷிணம் ஸோமோ தர்ச ஓஷதி-வீருத:
அன்னம் ரேத இதி க்ஷ்மேச பித்ரு-யானம் புனர்-பவ: ஏகைகஸ்யேனானுபூர்வம் பூத்வா பூத்வேஹ ஜாயதே
த்ரவ்ய-ஸூக்ஷ்ம-விபாக:—நெய்யுடன் கலந்த உணவுத் தானியங்களைப் போன்ற, யாகத்தீயில் நிவேதனம் செய்யப்படும் பொருட்கள்; ச—மேலும்; தூம:—புகையாக மாற்றப்படுகின்றன, அல்லது புகைக்கு அதிபதியான தேவர்; ராத்ரி:—இரவுக்கு அதிபதியான தேவர்; அபக்ஷய:—தேய் பிறையில்; அயனம்—சூரியனின் பாதைக்கு அதிபதியான தேவர்; தக்ஷிணம்—தென் திசையில்; ஸோம:—சந்திரன்; தர்ச:—திரும்பி வரும்; ஓஷதி—(பூமியின் மேற்பரப்பில் தோன்றும்) தாவரங்கள்; வீருத:—பொதுவாக தாவரங்கள் (புலம்பல் பிறப்பு); அன்னம்—உணவு தானியங்கள்; ரேத:—விந்து; இதி—இவ்விதமாக; க்ஷ்ம-ஈச—பூமிக்குத் தலைவராக யுதிஷ்டிர மகாராஜனே; பித்ரு-யானம்—தந்தையின் விந்துவிலிருந்து பிறவியெடுக்கும் முறை; புன: பவ:—திரும்பத் திரும்ப; ஏக-ஏகஸ்யேன—ஒன்றன்பின் ஒன்றாக; அனுபூர்வம்—படிப்படியாக, அவரவர்களுடைய தகுதிக்கேற்ப; பூத்வா—பிறவியெடுத்து; பூத்வா—மீண்டும் பிறவியெடுத்து; இஹ—இந்த ஜட உலகில்; ஜாயதே—ஒருவன் பெளதிகமான முறையில் வாழ்கிறான்.
யுதிஷ்டிர மகாராஜனே, வால் கோதுமை (பார்லி), எள் போன்ற உணவுத் தானியங்களும், நெய்யும் வேள்வித் தீயில் நிவேதனம் செய்யப்படும் பொழுது, அவை விண்ணுலக புகையாக மாறுகின்றன. அப்புகை ஒருவனை துமா, ராத்ரி, கிருஷ்ணபக்ஷம், தக்ஷிணம் மற்றும் இறுதியாக சந்திரன் போன்ற உயர்கிரக அமைப்புகளுக்கு படிப்படியாக உயர்த்துகின்றது. ஆனால் இத்தகைய யாகங்களைச் செய்தவர்கள் பிறகு பூமிக்கே திரும்பி வந்து மூலிகைகளாகவும், கொடிகளாகவும், காய்கறிகளாகவும், உணவுத் தானியங்களாகவும், மாறுகின்றனர். இவை வெவ்வேறு ஜீவராசிகளால் உண்ணப்பட்டு, விந்துவாக மாற்றப்பட்டு, பெண்ணின் உடல்களுக்குள் புகுத்தப்படுகின்றன. இவ்வாறாக ஒருவன் திரும்பத் திரும்ப பிறவிகளை எடுக்கிறான்.
பதம் 7.15.52
நிக்ஷேகாதி-ஸ்மசானாந்தை: ஸம்ஸ்காரை: ஸம்ஸ்க்ருதோ த்விஜ:
இந்ரியேஷு க்ரியா-யக்ஞான் ஞான தீபேஷு ஜுஹ்வதி
நிஷேக-ஆதி—வாழ்வின் ஆரம்பம் முதல் (தந்தை, தாயின் கர்பத்தில் விந்துவைப் பாய்ச்சி ஒரு குழந்தையைப் பெறும் பொழுது செய்யப்படும், கர்பாதானம் என்ற புனிதமடையும் சடங்கு முதல்); ஸ்மசான-அந்தை:—இறக்கும் வரை (உடலானது காட்டில் எரித்துச் சாம்பலாக்கப்படுவது வரை; ஸம்ஸ்காரை:—இத்தகைய புனிதப்படுத்தும் சடங்குகளால்; ஸம்ஸ்க்ருத:—புனிதமடைந்து; த்விஜ:—இருபிறப்பெய்திய ஒரு பிராமணன்; இந்ரியேஷு—புலன்களில்; க்ரியா-யக்ஞான்—(ஒருவனை மேலுலகங்களுக்கு உயர்த்தும்) செயல்களையும் யாகங்களையும்; ஞான-தீபேஷு—உண்மையான அறிவில் பெறப்படும் ஞானோதயத்தினால்; ஜூஹ்வதி—அர்ப்பணித்துவிடுகிறான்.
இருப்பிறப்பெய்திய பிராமணன் ஒருவன் (த்விஜ) தன் பெற்றோர்களின் கருணையால், கார்பாதானம் என்ற புனிதச் சடங்கின் மூலமாக தன்னுடைய வாழ்வைப் பெறுகிறான். அந்திம கிரியை (அந்த்யேஷ்டி-க்ரியா) எனப்படும் வாழ்வின் கடைசி கட்டம் வரை செய்யப்படவேண்டிய மற்ற புனிதப்படுத்தும் முறைகளும் உள்ளன. இவ்வாறாக தகுதியுள்ள ஒரு பிராமணன் காலப்போக்கில் பெளதிக செயல்களிலும், யக்ஞங்களிலும் விருப்பற்றவன் ஆகிறான். மாறாக, அவன் முழு அறிவுடன், ஞானத் தீயினால் பிரகாசிக்கச் செய்யப்படும் செயற்புலன்களில் தனது இந்திரிய சுகங்களை அர்ப்பணித்து விடுகிறான்.
பதம் 7.15.53
இந்ரியாணி மனஸி ஊர்மௌ வாசி வைகாரிகம் மன:
வாசம் வர்ண-ஸமாம்னாயே தம் ஓம்காரே ஸ்வரே ன்யஸேத்
ஓம்காரம் பிந்தெள நாதே தம் தம் து ப்ராணே மஹதி அமும்
இந்ரியாணி—(செயல் மற்றும் அறிவு சேகரிக்கும்) புலன்களை; மனஸி—மனதில்; ஊர்மெள—ஏற்பதும், விலக்குவதுமான அலைகளில்; வாசி—வார்த்தைகளில்; வைகாரிகம்—மாற்றங்களால் பாதிக்கப்பட்ட; மன:—மனதை; வாசம்—வார்த்தைகளை; வர்ண-ஸமாம்னாயே—எழுத்துக்களின் மொத்தத்தில்; தம்—அதை (எழுத்துக்களின் மொத்தத்தை); ஓம்காரே—சுருக்கமான ஓம்கார ரூபத்தில்; ஸ்வரே—ஒலிஅதிர்வில்; ன்யஸேத்—ஒருவன் அர்ப்பணித்துவிட வேண்டும்; ஓம்காரம்—ஓம்காரத்தை; பிந்தெள—ஓம்காரணத்தின் புள்ளியான பிந்துவில்; நாதே—ஒலி அதிர்வில்; தம்—அதை; தம்—அதை (ஒலி அதிர்வை); து—நிச்சயமாக; ப்ராணே—பிராணவாயுவில்; மஹதி—பரமனிடம்; அமும்—ஜீவராசி.
ஏற்றுக் கொள்வதா அல்லது விலக்கி விடுவதா என்ற எண்ண அலைகளால் மனம் எப்பொழுதும் சஞ்சலமடைகிறது. எனவே புலன்களின் எல்லாச் செயல்களையும் மனதிலும், மனதைத் தன் வார்த்தைகளிலும் ஒருவன் அர்ப்பணித்துவிட வேண்டும். பிறகு வார்த்தைகளை ஒருவன் எழுத்துக்களின் மொத்தத்திலும், எழுத்துக்களின் மொத்தத்தை சுருக்கமான ஓம்கார ரூபத்திலும் அர்ப்பணித்துவிட வேண்டும். ஓம்காரத்தைப் புள்ளி வடிவுலுள்ள பிந்துவிலும், பிந்துவை ஒலி அதிர்விலும், அந்த ஒலி அதிர்வைப் பிராணவாயுவிலும் அர்ப்பணித்துவிட வேண்டும். பிறகு எஞ்சியுள்ள ஜீவராசியைப் பரமனான பிரம்மனில் அர்ப்பணித்துவிட வேண்டும். இதுவே அர்ப்பணம் செய்யும் முறையாகும்.
பதம் 7.15.54
அக்னி: ஸூர்யோ திவா ப்ராஹ்ண:
சுக்லோ ராகோத்தரம் ஸ்வ-ராட்
விஸ்வோ ‘த தைஜஸ: ப்ராக்ஞஸ்
துர்ய ஆத்மா ஸமன்வயாத்
அக்னி:—நெருப்பு; ஸூர்ய:—சூரியன்; திவா—பகல்; ப்ராஹ்ண:—பகலின் முடிவு; சுக்ல:—வளர்பிறையின் 15 நாட்கள்; ராக—சுக்ல பட்சத்தின் முடிவில் வரும் பௌர்ணமி; உத்தரம்—சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் காலம்; ஸ்வ-ராட்—பரப்பிரம்மன் அல்லது பிரம்மதேவர்; விஸ்வ:—பௌதிக பதவி; அத—பெளதிக சுகத்தின் உச்ச நிலையிலுள்ள பிரம்ம லோகம்; தைஜஸ:—சூட்சும பதவி; ப்ராக்ஞ:—காரண பதவியின் சாட்சியாகிறான்; துர்ய:—உன்னதமான; ஆத்மா—ஆத்மா; ஸமன்வயாத்—இயற்கையான ஒரு முடிவாக.
முன்னேறிச் செல்லும் ஜீவராசி மேலே செல்லும் வழியில் நெருப்பு, சூரியன், பகல், பகலின் முடிவு, சுக்ல பட்சம், பெளர்ணமி, மற்றும் சூரியன் வடதிசையைக் கடத்தல், அவற்றின் அதிதேவதைகள் ஆகியவற்றினுள் புகுந்து செல்கிறான். பிறகு அவன் பிரம்மலோகத்தில் நுழைந்து, பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு வாழ்வை அனுபவிக்கிறான். கடைசியாக அவனுடைய பௌதிக பதவி ஒரு முடிவுக்கு வருகிறது. பிறகு அவன் ஒரு சூட்சும பதவிக்கு வருகிறான். அதிலிருந்து அவன் காரண பதவியை அடைந்து, கடந்த நிலைகளுக்கெல்லாம் சாட்சியமாக விளங்குகிறான். இந்த காரண நிலை அழிந்ததும் அவன் தனது தூய நிலையை அடைகிறான். அந்நிலையில் அவன் தன்னைப் பரமாத்மாவுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறான். இவ்விதமாக அந்த ஜீவராசி உன்னதமானவன் ஆகிறான்.
பதம் 7.15.55
தேவ-யானம் இதம் ப்ராஹுர் புத்வா பூத்வானுபூர்வச:
ஆத்ம-யாஜி உபசாந்தாத்மா ஹி ஆத்ம-ஸ்தோ ந நிவர்த்தே
தேவ-யானம்—தேவயானம் என்ற உயர்வடையும் முறை; இதம்—இதில் (இவ்வழியில்); ப்ராஹு:—என்று கூறப்படுகிறது; பூத்வா பூத்வா—ஒன்றன்பின் ஒன்றாக வரும் பிறப்புடைய; அனுபூர்வச:—தொடர்ச்சியாக; ஆத்ம-யாஜீ—தன்னுணர்வில் ஆவல் கொண்டுள்ளவன்; உபசாந்த-ஆத்மா—எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்ட; ஹி—உண்மையாக; ஆத்ம-ஸ்த:—தன்னில் நிலைபெற்றுள்ள; ந—இல்லை; நிவர்ததே—திரும்பி வருகிறான்.
தன்னுணர்வு பெறுவதற்குப் படிப்படியாக உயரும் இந்தமுறை, பூரண உண்மையை உண்மையாக அறிந்தவர்களுக்குரிய முறையாகும். தேவ-யானம் எனப்படும் இவ்வழியில் தொடர்ந்து பிறவிகளை எடுத்தபின், ஒருவன் ஒன்றன்பின் ஒன்றாக இந்நிலைகளை அடைகிறான். எல்லா பெளதிக ஆசைகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்ட ஒருவன், தன்னில் (ஆத்மாவில்) நிலைபெற்றிருப்பதால், அவன் தொடர்ச்சியான பிறப்பையும், இறப்பையும் சந்திக்கும் இவ்வழியைக் கடக்க வேண்டிய அவசியமில்லை.
பதம் 7.15.56
யே ஏதே பித்ரு-தேவானாம் அயனே வேத-நிர்மிதே
சாஸ்த்ரேண சக்ஷுஷா வேத ஜன-ஸ்தோ ‘பி ந முஹ்யதி
ய:—எவனொருவன்; ஏதே—(மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள) இவ்வழியில்; பித்ரு-தேவானாம்—பித்ரு-யானம் மற்றும் தேவ-யானம் எனப்படும்; அயனே—இவ்வழியில்; வேத-நிர்மிதே—வேதங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள; சாஸ்த்ரேண—ஒழுங்கான வேதக் கல்வியினால்; சக்ஷுஷா—ஞானக் கண்களினால்; வேத—முழுமையாக அறிந்துள்ள; ஜன-ஸ்த:—ஒரு ஜட உடலை ஏற்றுள்ள ஒருவன்; அபி—என்ற போதிலும்; ந—ஒரு போதும் இல்லை; முஹ்யதி—குழப்பமடைகிறான்.
ஒரு ஜட உடலில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும், பித்ரு-யானம், மற்றும் தேவ-யானம் எனப்படும் மார்கங்களை முழுமையாக அறிந்திருப்பதால், வேதக் கல்வியினால் ஞானக் கண்களைப் பெற்றுள்ள ஒருவன் இந்த ஜட உலகில் குழப்பம் அடைவதேயில்லை.
பதம் 7.15.57
ஆதாவ் அந்தே ஜனானாம் ஸத்
பஹிர் அந்த: பராவரம்
ஞானம் ஞேயம் வசோ வாச்யம்
தமோ ஜ்யோதிஸ் து அயம் ஸ்வயம்
ஆதௌ—ஆரம்பத்தில்; அந்தே—முடிவில்; ஜனானாம்—அனைத்து ஜீவராசிகளின்; ஸத்—எப்பொழுதும் இருக்கும்; பஹி:—புறமும்; அந்த:—உள்ளும்; பர—உன்னதமான; அவரம்—பௌதிக; ஞானம்—அறிவு; ஞேயம்—அறியப்பட வேண்டிய பொருள்; வச:—சொற்கள்; வாச்யம்—முடிவான இலட்சியம்; தம:—இருள்; ஜ்யோதி:—ஒளி; து—உண்மையில்; அயம்—இவர் (பரமபுருஷர்); ஸ்வயம்—தானேயாவார்.
எவர் உள்ளும், புறமுமாகவும், அனைத்து ஜீவராசிகளுக்கும், அனைத்திற்கும் ஆரம்பமும் முடிவுமாகவும், அனுபவிக்கப்படுவதாயும், உயர்ந்தது தாழ்ந்தது ஆகிய அனைத்தையும் அனுபவிப்பவராகவும் இருக்கிறரோ, அவரே பூரண உண்மையாவார். அவர் எப்பொழுதும் அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும், சித்தரிப்பாகவும், சித்தரிக்கப்படும் பொருளாகவும், இருளாகவும், ஒளியாகவும் இருக்கிறார். இவ்வாறாக பரமபுருஷராகிய அவரே அனைத்துமாவார்.
பதம் 7.15.58
அபாதிதோ ‘பி ஹி ஆபாஸோ யதா வஸ்துதயா ஸ்ம்ருத:
துர்கடத்வாத் ஐந்ரியகம் தத்வத் அர்த்த-விகல்பிதம்
அபாதித:—ஒதுக்கப்படுகிறது; அபி—என்ற போதிலும்; ஹி—நிச்சயமாக; ஆபாஸ:—ஒரு பிரதிபலிப்பு; யதா—எப்படி; வஸ்துதயா—உண்மையின் ஓர் உருவம்; ஸ்ம்ருத:—ஏற்கப்படுகிறது; துர்கடத்வாத்—உண்மை நிலையை நிரூபிப்பது மிகக் கடினம் என்பதால்; ஐந்ரியகம்—பலன்களிலிருந்து பெறப்படும் அறிவு; தத்வத்—அவ்வாறே; அர்த்த—உண்மை நிலை; விகல்பிதம்—கற்பனையான அல்லது சந்தேகத்திற்கு இடமான.
கண்ணாடியில் பிரதிபலிக்கும் சூரியனின் பிரதிபலிப்பைப் பொய்யென்று ஒருவன் கருதக்கூடும் என்றாலும், அதற்கு அதன் உண்மையான இருப்பு இருக்கிறது. அதற்கிணங்க, கற்பனா ஞானத்தினால் உண்மை நிலை இல்லை என்று நிரூபிப்பது மிகவும் கடினம்.
பதம் 7.15.59
க்ஷிதி-ஆதீனாம் இஹார்த்தானாம் சாயா ந கதமாபி ஹி
ந ஸங்காதோ விகாரோ ‘பி ந ப்ருதந் நான்விதோ ம்ருஷா
க்ஷிதி-ஆதீனாம்—மண் முதலான பஞ்ச பூதங்களின்; இஹ—இவ்வுலகில்; அர்த்தானாம்—இப்பஞ்ச பூதங்களின்; சாயா—நிழல் (பிரதிபலிப்பு); ந—இல்லை; கதமா—எவை; அபி—உண்மையில்; ஹி—நிச்சயமாக; ந—இல்லை; ஸங்காத:—சேர்க்கை; விகார:—உருமாற்றம்; அபி—இருப்பினும்; ந ப்ருதக்—வேறுபட்டவையல்ல; ந-அன்வித:—ஒன்றானவையல்ல; ம்ருஷா—இக்கொள்கைகள் எல்லாம் உண்மையல்லாதவை ஆகும்.
இவ்வுலகில் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் இருக்கின்றன. ஆனால் உடலானது இவற்றின் ஒரு பிரதிபலிப்போ, சேர்க்கையோ அல்லது உருமாற்றமோ அல்ல. உடலும் அதன் கூட்டுப்பொருட்களும் வேறுபட்டவையல்ல, ஒன்றானவையுமல்ல. இத்தகைய கொள்கைகள் எல்லாம் உண்மையல்லாதவை.
பதம் 7.15.60
ததாவோ ‘வயவித்வாச் ச தன்-மாத்ராவயவைர் வினா
ந ஸ்யுர் ஹி அஸதி அவயவினி அஸன் அவயவோ ‘ந்தத:
தாதவ:—பஞ்ச பூதங்கள்; அவயவித்வாத்—தேகாபிமானத்திற்குக் காரணம் என்பதால்; ச—மேலும்; தத்-மாத்ர—புலன் பொருட்கள் (ஓசை, சுவை, ஸ்பரிசம் முதலானவை); அவயவை:—சூட்சுமமான பகுதிகள்; வினா—இல்லாமல்; ந—இல்லை; ஸ்யு:—இருக்க முடியும்; ஹி—நிச்சயமாக; அஸதி—பொய்யான; அவயவினி—உடல் உருவாக்கப்படுவதில்; அஸன்—இல்லாமல்; அவயவ:—உடலின் பகுதி; அந்தத:—முடிவில்
உடல் பஞ்ச பூதங்களாலானாது என்பதால், சூட்சுமமான புலன் பொருட்களின்றி அதனால் இருக்க முடியாது. ஆகவே உடல் பொய்யானது என்பதால், புலன் பொருட்களும் பொய்யானவை அல்லது தற்காலிகமானவையே.
பதம் 7.15.61
ஸ்யாத் ஸாத்ருஸ்ய-ப்ரமஸ் தாவத் விகல்பே ஸதி வஸ்துன:
ஜாக்ரத்-ஸ்வாபௌ யதா ஸ்வப்னே ததா விதி -நிஷேததா
ஸ்யாத்—இது இவ்வாறு ஆகிறது; ஸாத்ருஸ்ய—ஒற்றுமை; ப்ரம:—தவறு; தாவத்—அதுவரை; விகல்பே—பிரிவில்; ஸதி—அந்த பாகம்; வஸ்துன:—பொருளிலிருந்து; ஜாக்ரத்—விழித்திருக்கும்; ஸ்வாபௌ—உறங்கும்; யதா—எப்படி; ஸ்வப்னே—கனவில்; ததா—அவ்வாறே; விதி-நிஷேததா—ஏற்கப்பட வேண்டியதையையும், விலக்கப்பட வேண்டியதையும் கொண்ட கட்டுப்பாட்டு விதிகள்.
ஒரு பொருளிலிருந்து அதன் பாகங்களைப் பிரித்த பிறகு, பிரிக்கப்பட்ட இவற்றிற்கிடையில் ஒற்றுமை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்வதானது மாயை என்று அழைக்கப்படுகிறது. கனவு காணும் பொழுது, விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் இடையில் ஒருவன் ஒரு பிரிவை ஏற்படுத்துகிறான். இத்தகைய ஒரு மனநிலையில் தான் ஏற்கப்பட வேண்டிய விஷயங்களையும், விலக்கப்பட வேண்டிய விஷயங்களையும் கொண்ட சாஸ்திர விதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
பதம் 7.15.62
பாவாத்வைதம் க்ரியாத்வைதம் த்ரவ்யாத்வைதம் ததாத்மன:
வர்தயன் ஸ்வானுபூத்யேஹ த்ரீன் ஸ்வப்னான் துனுதே முனி:
பாவ-அத்வைதம்—வாழ்வைப் பற்றிய எண்ணத்தில் ஒருமை; க்ரியா-அத்வைதம்—செயல்களில் ஒருமை; த்ரவ்ய-அத்வைதம்—வெவ்வேறு பொருள்களில் ஒருமை; ததா—அவ்வாறே; ஆத்மன:—ஆத்மாவின்; வர்தயன்—என்று கருதி; ஸ்வ—தன்னுடைய; அனுபூத்யா—தன்னுணர்வுக்கேற்ப; இஹ—இந்த ஜட உலகில்; த்ரீன்—மூன்று; ஸ்வப்னான்—நிலைகளை (விழிப்பு, கனவு மற்றும் உறக்கம்); துனுதே—விட்டுவிடுகிறான்; முனி:—தத்துவவாதி அல்லது மனக்கற்பனையாளன்.
வாழ்விலும், செயலிலும், பொருளிலும் உள்ள ஒருமையையும், ஆத்மாவானது எல்லாச் செயல் விளைவுகளிலிருந்தும் வேறுபட்டது என்பதையும் உணர்ந்த பிறகு, மனக்கற்பனையாளன் (முனிவன்) தான் பெற்ற தன்னுணர்வுக்கேற்ப, விழிப்பு, கனவு மற்றும் உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் விட்டுவிடுகிறான்.
பதம் 7.15.63
கார்ய-காரண-வஸ்து-ஐக்ய-தர்சனம் பட-தந்துவத்
அவஸ்துத்வாத் விகல்பஸ்ய பாவாத்வைதம் தத் உச்யதே
கார்ய—பலன் அல்லது விளைவு; காரண—காரணம்; வஸ்து—பொருள்; ஐக்ய—ஒத்ததன்மை; தர்சனம்—காண்பது; பட—துணி; தந்து—நூல்; வத்—போல; அவஸ்துத்வாத்—முடிந்த முடிவாகப் பொய்யானது என்பதால்; விகல்பஸ்ய—வேறுபட்டது என்ற; பாவ-அத்வைதம்—ஒருமை உணர்வு; தத் உச்யதே—என்று அழைக்கப்படுகிறது.
ஒரு துணியிலுள்ள நூல் அத்துணியிலிருந்து வேறுபட்டதாகும். அது போலவே, காரணமும் விளைவும் ஒன்றே என்பதையும், இருமை (வேற்றுமை), பொய்யானது என்பதையும் புரிந்து கொள்ளும் பொழுது, ஒருவன் பாவாத்வைதம் எனப்படும் ஒருமை உணர்வை அடைகிறான்.
பதம் 7.15.64
யத் ப்ரஹ்மணி பரே ஸாக்ஷாத் ஸர்வ-கர்ம-ஸமர்ப்பணம்
மனோ-வாக்-தனுபி: பார்த்த க்ரியாத்வைதம் தத் உச்யதே
யத்—எது; ப்ரஹ்மணி—பரப்பிரம்மனில்; பரே—உன்னதமான; ஸாக்ஷாத்—நேரடியாக; ஸர்வ—அனைத்தின்; கர்ம—செயல்கள்; ஸமர்ப்பணம்—அர்ப்பணம்; மன:—மனதாலும்; வாக்—வாக்காலும்; தனுபி:—உடலாலும்; பார்த்த—யுதிஷ்டிர மகாராஜனே; க்ரிய-அத்வைதம்—செயல்களில் ஒருமை; தத் உச்யதே—என்று அழைக்கப்படுகிறது.
யுதிஷ்டிரரே (பார்த்த), மனம், வாக்கு, காயம் ஆகியவற்றினால் செய்யப்படும் எல்லாச் செயல்களையும் ஒருவன் நேரடியாக பரமபுருஷரின் சேவைக்காக அர்ப்பணித்துவிடும் பொழுது, அவன் க்ரியாத்வைதம் எனப்படும் செயல்களின் ஒருமையை அடைகிறான்.
பதம் 7.15.65
ஆத்ம-ஜாயா-ஸுதாதீனாம் அன்யேஷாம் ஸர்வ- தேஹினாம்
யத் ஸ்வார்த்த-காமயோர் ஐக்யம் த்ரவ்யாத்வைதம் தத் உச்யதே
ஆத்ம—ஒருவனுடைய; ஜாயா—மனைவி; ஸுத-ஆதீனாம்—மற்றும் குழந்தைகள்; அன்யேஷாம்—உறவினர்கள் முதலான; ஸர்வ-தேஹினாம்—மற்றெல்லா ஜீவராசிகளுடைய; யத்—எதையெல்லாம்; ஸ்வ-அர்த்த—காமயோ:—ஒருவனுடைய இறுதி இலட்சியம் மற்றும் பயன் ஆகியவற்றின்; ஐக்யம்—ஒருமைப்பாடு; த்ரவ்ய-அத்வைதம்—விருப்பத்தின் ஒருமைப்பாடு; தத்-உச்யதே—என்று அழைக்கப்படுகிறது.
ஒருவனுடைய இறுதி இலட்சியமும் விருப்பமும், அவனுடைய மனைவி, மக்கள், உறவினர்கள், மற்றெல்லா ஜீவராசிகள் ஆகியோரின் இறுதி இலட்சியமும் விருப்பமும் ஒன்றாக இருக்கும் பொழுது, அது த்ராவ்யாத்வைதம், அல்லது விருப்பத்தின் ஒற்றுமை எனப்படுகிறது.
பதம் 7.15.66
யத் யஸ்ய வானிஷித்தம் ஸ்யாத் யேன யத்ர யதோ ந்ருப
ஸ தேனேஹேத கார்யாணி நரோ நான்யைர் அனாபதி
யத்—எதுவாயினும்; யஸ்ய—ஒருவனின்; வா—அல்லது; அனிஷித்தம்—தடை விதிக்கப்படாத; ஸ்யாத்—அவ்வாறு இருக்கிறது; யேன—எந்த வழியினால்; யத்ர—இடத்திலும், நேரத்திலும்; யத:—எதிலிருந்து; ந்ருப—அரசே; ஸ:—அத்தகைய ஒருவன்; தேன—இத்தகைய ஒரு முறையால்; ஈஹேத—செய்ய வேண்டும்; கார்யாணி—விதிக்கப்பட்ட செயல்களை; நர:—ஒருவன்; ந—இல்லை; அன்யை:—வேறெந்த வழிகளால்; அனாபதி—ஆபத்தில்லாத சமயங்களில்.
யுதிஷ்டிர மகாராஜனே, ஆபத்தில்லாத வழக்கமான சூழ்நிலைகளில், ஒரு மனிதன் தனது சமூக நிலைக்கேற்ப, தனக்குத் தடைவிதிக்கப்படாத தேவையான பொருட்கள், முயற்சிகள், முறைகள், வசிப்பிடம் ஆகியவற்றைக் கொண்டு, தனக்கென விதிக்கப்பட்ட செயல்களைச் செய்ய வேண்டும், வேறெந்த வழியிலும் அல்ல.
பதம் 7.15.67
ஏதைர் அன்யைஸ் ச வேதோக்தைர் வர்த்தமான: ஸ்வ- கர்மபி:
க்ருஹே ‘பி அஸ்ய கதிம் யாயாத் ராஜம்ஸ் தத்-பக்தி-பாங் நர:
ஏதை:—இவ்வழிகளால்; அனயை:—பிற வழிகளால்; ச—மேலும்; வேத-உக்தை:—வேத இலக்கியங்களில் கூறியுள்ளபடி; வர்த்தமான:—நடந்து; ஸ்வ-கர்மபி:—தனது வர்ணாஸ்ரம கடமைகளால்; க்ருஹே-அபி—இல்லறத்தில் இருக்கும்பொழுது கூட; அஸ்ய—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; கதிம்—கதியை; யாயாத்—அடைய முடியும்; ராஜன்—அரசே; தத்-பக்தி-பாக்—பரமபுருஷருக்கு பக்தித் தொண்டாற்றும்; நர:—எந்த மனிதனும்.
அரசே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு பக்தனாக நிலைத்திருப்பதற்காகவாவது, இந்த உபதேசங்களுக்கும், வேத இலக்கியத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிற உபதேசங்களுக்கும் ஏற்ப, தனக்கென விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம கடமைகளை ஒருவன் செய்ய வேண்டும். இவ்வாறாக இல்லறத்தில் இருக்கும் பொழுதுகூட ஒருவனால் பகவானுடைய கதியை அடைய முடியும்.
பதம் 7.15.68
யதா ஹி யூயம் ந்ருப-தேவ துஸ்த்யஜாத்
ஆபத்-கணாத் உத்தரதாத்மன: ப்ரபோ:
யத்-பாத-பங்கேருஹ-ஸேவயா பவான்
அஹாரஷீன் நிர்ஜித-திக்-கஜ: க்ரதூன்
யதா—எப்படி; ஹி—உண்மையில்; யூயம்—நீங்களனைவரும் (பாண்டவர்கள்); ந்ருப-தேவ—மனிதர்கள், அரசர்கள் மற்றும் தேவர்களின் தலைவரே; துஸ்த்யஜாத்—கடக்க முடியாத; ஆபத்—ஆபத்தான சூழ்நிலைகள்; கணாத்—அனைத்திலிருந்தும்; உத்தரத—தப்பினீர்கள்; ஆத்மன:—சொந்தமான; ப்ரபோ:—பகவானின்; யத்-பாதபங்கேருஹ—எவருடைய தாமரைப் பாதங்களுக்கு; ஸேவயா—சேவை செய்வதால்; பவான்—நீங்கள்; அஹாரஷீத்—செய்தீர்கள்; நிர்ஜித—வென்று; திக்-கஜ:—யானைகளைப் போன்ற மிகவும் சக்திவாய்ந்த எதிரிகளை; க்ரதூன்—சமயச் சடங்குகளை.
யுதிஷ்டிர மகாராஜனே, பரமபுருஷருக்கு நீங்கள் ஆற்றிய சேவையின் காரணத்தால், பாண்டவர்களாகிய நீங்கள் எண்ணற்ற அரசர்களாலும், தேவர்களாலும் விளைவிக்கப்பட்ட பேராபத்துகளை வென்றீர்கள் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களைச் சேவிப்பதன் மூலம், யானைகளைப் போன்ற சக்திவாய்ந்த எதிரிகளை வென்று யாகப் பொருட்களை நீங்கள் சேகரீத்தீர்கள். அவருடைய அருளால் நீங்கள் பௌதிக ஈடுபாடுகளிலிருந்து விடுதலை அடைவீர்களாக.
பதம் 7.15.69
அஹம் புராபவம் கஸ்சித் கந்தர்வ உபபர்ஹண:
நாம்னாதீதே மஹா-கல்பே கந்தர்வாணாம் ஸுஸம்மத:
அஹம்—நானே; புரா—முன்பு; அபவம்—இருந்தேன்; கஸ்சித் கந்தர்வ:—கந்தர்வ லோகவாசியாக; உபபர்ஹண:—உபபர்ஹணன்; நாம்னா—என்ற பெயருடன்; அதீதே—மிகநீண்ட காலத்திற்கு முன்பு; மஹா-கல்பே—மஹா-கலபம் என்ற பிரம்மாவின் ஒரு வாழ்நாளில்; கந்தர்வாணாம்—கந்தர்வர்களுக்கிடையில்; ஸு-ஸம்மத:—மிகவும் மரியாதைக்குரியவனாக.
மிக நீண்ட காலத்திற்கு முன்பு, வேறொரு மஹா-கல்பத்தில் (பிரம்மாவின் யுகத்தில்), நான் உபபர்ஹணன் என்ற கந்தர்வனாக இருந்தேன். மற்ற கந்தர்வகளால் நான் மிகவும் மதிக்கப்பட்டேன்.
பதம் 7.15.70
ரூப-பேசல-மாதுர்ய-ஸௌகந்ய-ப்ரிய-தர்சன:
ஸ்த்ரீணாம் ப்ரியதமோ நித்யம் மத்த: ஸ்வ-புர-லம்பட:
ரூப—அழகு; பேசல—தேக அமைப்பு; மாதுர்ய—கவர்ச்சி; ஸௌகந்ய—பலவித மலர் மாலைகளாலும், சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்டும் நறுமணம் வீசுபவனாக இருந்தேன்; ப்ரிய-தர்சன:—காண்பதற்கு மிகவும் அழகாக இருந்தேன்; ஸ்த்ரீணாம்—பெண்களின்; ப்ரிய-தம:—இயற்கையாகவே கவரப்பட்டவனாய்; நித்யம்—தினமும்; மத்த:—பித்துப்பிடித்தவன் போல் கர்வம் கொண்டு; ஸ்வ-புர—அவனது சொந்த நகரில்; லம்பட:—காம இச்சைகளின் காரணத்தால், பெண்களிடம் மிகவும் பற்றுக் கொண்டவனாய்.
எனக்கு அழகிய முகமும், இனிமையும், கவர்ச்சியும் நிறைந்த தேகஅம்சங்களும் இருந்தன. மலர் மாலைகளாலும், சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த நான் என்னுடைய நகரத்து பெண்களுக்கு மிகவும் பிரியமானவனாக இருந்தேன். இவ்விதமாக நான் எப்பொழுதும் காம இச்சைகளால் பீடிக்கப்பட்டு, சஞ்சலம் அடைந்தவனாக இருந்தேன்.
பதம் 7.15.71
ஏகதா தேவ-ஸத்ரே து கந்தர்வாப்ஸரஸாம் கணா:
உபஹூதா விஸ்வ-ஸ்ருக்பிர் ஹரி காதோபகாயனே
ஏகதா—ஒருசமயம்; தேவ-ஸத்ரே—தேவர்களின் சபையில்; து—உண்மையில்; கந்தர்வ—கந்தர்வலோக வாசிகளின்; அப்ஸரஸாம்—மற்றும் அப்ஸரலோக வாசிகள்; கணா:—எல்லோரும்; உபஹூதா:—அழைக்கப்பட்டனர்; விஸ்வ-ஸ்ருக்பி:—பிரஜாபதிகள் என்ற தேவர்களால்; ஹரி-காத-உபகாயனே—பரமபுருஷரைத் துதித்துப் போற்றுவதற்கான ஒரு சங்கீர்த்தன விழாவின் போது.
ஒருசமயம் தேவர்களின் சபையில், பரமபுருஷரை துதித்துப் போற்றுவதற்கு ஒரு சங்கீர்த்தன விழா நடைபெற்றது. அதில் பங்கேற்க கந்தவர்களும், அப்ஸரஸ்களும் பிரஜாபதிகளால் அழைக்கப்பட்டனர்.
பதம் 7.15.72
அஹம் ச காயம்ஸ் தத்-வித்வான் ஸ்த்ரீபி: பரிவ்ருதோ கத:
ஞாத்வா விஸ்வ-ஸ்ருஜஸ் தன் மே ஹேலனம் சேபுர் ஓஜஸா
யாஹி த்வம் சூத்ரதாம் ஆக நஷ்ட-ஸ்ரீ: க்ருத-ஹேலன:
அஹம்—நான்; ச—மேலும்; காயன்—பகவானுடைய மகிமைகளைப் பாடுவதற்குப் பதிலாக தேவர்களின் மகிமைகளைப் பாடினேன்; தத்-வித்வான்—பாடும் கலையை நன்கு அறிந்திருந்த; ஸ்த்ரீபி:—பெண்களால்; பரிவ்ருத:—சூழப்பட்டபடி; கத:—அங்கு சென்றேன்; ஞாத்வா—நன்கறிந்து; விஸ்வ-ஸ்ருஜ:—பிரபஞ்ச விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட பிரஜாபதிகள்; தத்—நான் பாடும் விதத்தை; மே—எனது; ஹேலனம்—அலட்சியத்தை; சேபு:—சபித்தனர்; ஓஜஸா—பெரும் சக்தியுடன்; யாஹி—ஆவாயாக; த்வம்—நீ; சூத்ரதாம்—ஒரு சூத்திரன்; ஆக—உடனேயே; நஷ்ட—இழந்து; ஸ்ரீ—அழகை; க்ருத-ஹேலன:—ஆசார முறையை மீறிய காரணத்தால்.
நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார்: அவ்விழாவிற்கு அழைக்கப்பட்டதால் நானும் அதில் கலந்து கொண்டேன். நான் பெண்களால் சூழப்பட்டபடி தேவர்களின் பெருமைகளை வாத்தியத்துடன் பாட ஆரம்பித்தேன். இதனால் பிரபஞ்ச விவகாரங்களின் பொறுப்பாளிகளான பிரஜபாதிகள் (சக்தி வாய்ந்த தேவர்கள்), “நீ இக்குற்றத்தைப் புரிந்ததனால், அழகை இழந்து உடனே ஒரு சூத்திரனாக ஆகக் கடவாய்” என்ற சொற்களால் என்னைச் சபித்தனர்.
பதம் 7.15.73
தாவத் தாஸ்யாம் அஹம் ஜக்ஞே தத்ராபி ப்ரஹ்ம- வாதினாம்
சுஸ்ரூஷயானுஷங்கேண ப்ராப்தோ ‘ஹம் ப்ரஹ்ம-புத்ரதாம்
தாவத்—அவ்வாறு சபிக்கப்பட்டதால்; தாஸ்யாம்—ஒரு வேலைக்காரியின் கர்பத்தில்; அஹம்—நான்; ஜக்ஞே—பிறவி எடுத்தேன்; தத்ராபி—(ஒரு சூத்திரனாக) இருந்த போதிலும்; ப்ரஹ்ம-வாதினாம்—வேத ஞானத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு; சுஸ்ரூஷயா—சேவை செய்ததனால்; அனுஷங்கேண—ஒரே சமயத்தில்; ப்ராப்த:—அடைந்தேன்; அஹம்—நான்; ப்ரஹ்ம-புத்ரதாம்—(இப்பிறப்பில்) பிரம்ம தேவரின் ஒரு மகனாக.
நான் ஒரு வேலைக்காரியின் கர்பத்தில் ஒரு சூத்திரனாகப் பிறவி எடுத்த போதிலும், வேத ஞானத்தில் தேர்ச்சி பெற்ற வைஷ்ணர்களின் சேவையில் நான் ஈடுபட்டிருந்தேன். அதன் பலனாக, நான் இப்பிறவியில் பிரம்மதேவரின் மகனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
பதம் 7.15.74
தர்மஸ் தே க்ருஹ-மேதீயோ வர்ணித: பாப-நாசன:
க்ருஹஸ்தோ யேன பதவீம் அஞ்ஜஸா ன்யாஸினாம் இயாத்
தர்ம:—அந்த சமய முறையை; தே—உமக்கு; க்ருஹ-மேதீய—குடும்ப வாழ்வில் பற்றுக் கொண்டிருப்பினும்; வர்ணித:—(என்னால்) விவரிக்கப்பட்டது; பாபா-நாசன:—பாவ விளைவுகளின் அழிவு; க்ருஹஸ்த:—இல்லற வாழ்வில் இருப்பவன்; யேன—எதனால்; பதவீம்—நிலையை; அஞ்ஜஸா—மிகவும் எளிதாக; ன்யாஸினாம்—துறவு வாழ்வில் உள்ளவர்களின்; இயாத்—அடைந்து விட முடியும்.
பகவானின் புனித நாமத்தைப் பாடும் இந்த முறை மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், இதைக் கொண்டு குடும்பஸ்தர்களால்கூட துறவிகளால் அடையப்படும் முடிவான பலனை மிகவும் எளிதாக அடைந்துவிட முடியும். யுதிஷ்டிர மகாராஜனே, அந்த சமயமுறையை இப்பொழுது உமக்கு நான் விவரித்தேன்.
பதம் 7.15.75
யூயம் ந்ரு-லோகே பத பூரி-பாகா
லோகம் புனானா முனயோ ‘பியந்தி
யேஷாம் க்ருஹான் ஆவஸதீதி ஸாக்ஷாத்
கூடம் பரம் ப்ரஹ்ம மனுஷ்ய-லிங்கம்
யூயம்—பாண்டவர்களாகிய நீங்களனைவரும்; ந்ரு-லோகே—இந்த ஜட உலகில்; பத—உண்மையாகவே; பூரி-பாகா:—மிகவும் பாக்கியசாலிகள்; லோகம்—பிரபஞ்சத்திலுள்ள எல்லாக்கிரகங்களையும்; புனானா:—புனிதப்படுத்தக் கூடிய; முனய:—சிறந்த முனிவர்கள்; அபியந்தி—(சாதாரண மனிதர்கள் போல்) பார்க்க வருகின்றனர்; யேஷாம்—எவர்களுடைய; க்ருஹான்—பாண்டவர்களின் வீட்டில்; ஆவஸதி—வசிக்கிறாரோ; இதி—இவ்வாறு; ஸாக்ஷாத்—நேரடியாக; கூடம்—மிகவும் இரகசியமாக; பரம்—உன்னதமான; ப்ரஹ்ம—பரப்பிரம்மனாகிய கிருஷ்ணர்; மனுஷ்ய-லிங்கம்—ஒரு சாதாரண மனிதனைப் போல்.
யுதிஷ்டிர மகாராஜனே, பாண்டவர்களாகிய நீங்கள் இவ்வுலகிலேயே பெரும் பாக்கியசாலிகள். ஏனெனில் பிரப்ஞசத்தின் எல்லாக் கிரகங்களையும் புனிதப்படுத்தக் கூடிய பற்பல சிறந்த முனிவர்கள் கூட சாதாரண மனிதர்கள் போல் உங்கள் வீட்டிற்கு வருகின்றனர். மேலும் பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் உங்களுடைய சகோதரர் போலவே உங்களுடைய வீட்டில் உங்களுடன் இரகசியமாக வாழ்கிறார்.
பதம் 7.15.76
ஸ வா அயம் ப்ரஹ்ம மஹத்-விம்ருக்ய-
கைவல்ய-நிர்வாண-ஸுகானுபூதி:
ப்ரிய: ஸுஹ்ருத் வ: கலு மாதுலேய
ஆத்மார்ஹணீயோ விதி-க்ருத் குருஸ் ச
ஸ:—அப்பரமபுருஷர்; வா—அல்லது; அயம்—கிருஷ்ணர்; ப்ரஹ்ம—பரப்பிரம்மனாகிய; மஹத்-விம்ருக்ய—மிகச் சிறந்த சாதுக்காளலும் (கிருஷ்ண பக்தர்களாலும்) நாடிச் செல்லப்படும்; கைவல்ய-நிர்வாண-ஸுக—முக்தியையும், உன்னத ஆனந்தத்தையும்; அனுபூதி:—உணர்வதற்கு; ப்ரிய:—மிகப் பிரியமானவரும்; ஸுஹ்ருத்—நலம் விரும்பியும்; வ:—பாண்டவர்களாகிய உங்களின்; கலு—என்று புகழப்படும்; மாதுலேய:—உங்களுடைய தாய்மாமன்; ஆத்மா—ஆத்மாவும், உயிருமானவரும்; அர்ஹணீய:—மிகவும் வழிபாட்டுக்குரியவரும்; விதி-க்ருத்—வழிகாட்டுபவரும்; குரு—உங்களுடைய ஆன்மீக குருவும்; ச—மற்றும்.
முக்தியையும், உன்னத ஆனந்தத்தையும் அடைவதற்காக மிகச் சிறந்த முனிவர்களாலும் நாடிச் செல்லப்படும் பரப்பிரம்மனாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உங்களுடைய நலம் விரும்பியாகவும், நண்பராகவும் ஒன்றுவிட்ட சகோதரராகவும், ஆத்மாவும் உயிருமாகவும் வழிபாட்டுக்குரிய வழிகாட்டியாகவும், மற்றும் ஆன்மீக குருவாகவும் செயற்படுவது மிகவும் அற்புதமாக இருக்கிறது.
பதம் 7.15.77
ந யஸ்ய ஸாக்ஷாத் பவ-பத்மஜாதிபீ
ரூபம் தியா வஸ்துதயோபவர்ணிதம்
மெளனேன பக்த்யோபசமேன பூஜித:
ப்ரஸீததாம் ஏஷ ஸ ஸாத்வதாம் பதி:
ந—இல்லை; யஸ்ய—எவருடைய (பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய); ஸாக்ஷாத்—நேரிடையாக; பவ—சிவபெருமானாலும்; பத்ம-ஜ-ஆதிபி:—பிரம்ம தேவராலும், மற்றவர்களாலும்; ரூபம்—ரூபத்தை; தியா—தியானத்தினாலும்; வஸ்துதயா—உண்மையில்; உபவர்ணிதம்—விவரிக்க முடியும்; மௌனேன—மௌனத்தினாலும்; பக்த்யா—பக்தித் தொண்டினாலும்; உபசமேன—பெளதிக செயல்களை நிறுத்திவிடுவதாலும்; பூஜித:—இவ்வாறு பூஜிக்கப்படுபவர்; ப்ரஸீததாம்—நம்மிடம் திருப்தியடைவாராக; ஏஷ:—இவர்; ஸ:—அதே பரம புருஷராகிய; ஸாத்வதாம்—பக்தர்களின்; பதி:—காப்பவரும், தலைவரும், வழிகாட்டியுமான.
எவருடைய நிஜ ரூபத்தை, பெருமதிப்பிற்குரிய பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் போன்றவர்களால்கூட புரிந்து கொள்ள முடியாதோ, அதே பரமபுருஷர் இப்பொழுது இங்கு எழுந்தருளியுள்ளார். பக்தர்களின் உறுதியான சரணாகதியின் காரணத்தால் அவர்களால் அவர் உணரப்படுகிறார். தமது பக்தர்களைக் காப்பவரும், மௌனவிரதம், பக்தித் தொண்டு, பெளதிக செயல்களின் நிறுத்தம் ஆகியவற்றினால் பூஜிக்கப்படுபவருமான அதே பரமபுருஷர் நம்மிடம் திருப்தியடைவராக.
பதம் 7.15.78
ஸ்ரீ-ஸுக உவாச
இதி தேவர்ஷிணா ப்ரோக்தம் நிசம்ய பரதர்ஷப
பூஜயாம் ஆஸ ஸுப்ரீத: க்ருஷ்ணம் ச ப்ரேம-விஹ்வல:
ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; தேவ-ரஷினா—தேவரிஷியினால் (நாரத முனிவரால்); ப்ரோக்தம்—விவரிக்கப்பட்டதை; நிசம்ய—கேட்டு; பரத-ரிஷப:—பரத வம்சத்தில் சிறந்த யுதிஷ்டிர மகாராஜன்; பூஜயாம்-ஆஸ—வழிபட்டார்; ஸு-ப்ரீத:—மிகவும் மகிழ்ந்து; க்ருஷ்ணம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை; ச—மேலும்; ப்ரேம-விஹ்வல:—கிருஷ்ணப் பிரேமையின் பரவச நிலையில்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக பரத வம்சத்தில் சிறந்த யுதிஷ்டிர மகாராஜன், நாரத முனிவரின் வர்ணனைகளிலிருந்து அனைத்தையும் கற்றறிந்தார். இவ்வுபதேசங்களைக் கேட்ட பிறகு, அவர் தன் இதயத்தில் பேரானந்தத்தை உணர்ந்தார். பிறகு மிகவும் பரவசத்துடனும், அன்புடனும், பாசத்துடனும் அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டார்.
பதம் 7.15.79
க்ருஷ்ண பார்த்தாவ் உபாமந்த்ரிய பூஜித: ப்ரயயௌ முனி:
ஸ்ருத்வா க்ருஷ்ணம் பரம் ப்ரஹ்ம பார்த்த: பரம-விஸ்மித:
க்ருஷ்ண—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; பார்த்தெள—மற்றும் யுதிஷ்டிர மகாராஜன்; உபாமந்த்ரிய—வழியனுப்பிவிட்டு; பூஜித:—அவர்களால் பூஜிக்கப்பெற்ற; ப்ரயயௌ—(அங்கிருந்து) புறப்பட்டார்; முனி:—நாரதமுனிவர்; ஸ்ருத்வா—கேட்ட பிறகு; க்ருஷ்ணம்—கிருஷ்ணரைப் பற்றி; பரம்ப்ரஹ்ம—பரமபுருஷராக; பார்த்த:—யுதிஷ்டிர மகாராஜன்; பரம-விஸ்மித:—மிகவும் ஆச்சரியமடைந்தார்.
கிருஷ்ணராலும், யுதிஷ்டிர மகாராஜனாலும் பூஜிக்கப்பெற்ற நாரதமுனிவர் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். தனது ஒன்றுவிட்ட சகோதரராகிய ஸ்ரீ கிருஷ்ணர், பரமபுருஷர் என்பதைக் கேட்டு யுதிஷ்டிர மகாராஜன் மிகவும் ஆச்சரியமடைந்தார்.
பதம் 7.15.80
இதி தாக்ஷாயணீனாம் தே ப்ருதக் வம்சா: ப்ரகீர்திதா:
தேவாஸுர-மனுஷ்யாத்யா லோக யத்ர சராசரா:
இதி—இவ்விதமாக; தாக்ஷாயணீனாம்—அதிதி மற்றும் திதி முதலான தட்ச மகாராஜனுடைய புதல்விகளின்; தே—உமக்கு; ப்ருதக்—தனித்தனியாக; வம்சா:—வம்சங்கள்; ப்ரகீர்திதா:—(என்னால்) விவரிக்கப்பட்டன; தேவ—தேவர்கள்; அஸுர—அசுரர்கள்; மனுஷ்ய—மற்றும் மனிதர்கள்; ஆத்யா:—முதலானவர்கள்; லோகா:—பிரபஞ்சத்திலுள்ள எல்லாக் கிரகங்களும்; யத்ர—எவ்விடத்தில்; சர-அசரா—அசைவன, அசையாதன ஆகிய ஜீவராசிகள்.
தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் உட்பட; இப்பிரபஞ்சத்தின் அனைத்து லோகங்களிலும் உள்ள அசைவன, அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளும் தட்ச புத்திரிகளிலிருந்தே உற்பத்தி செய்யப்ewrq7பட்டனர். அவர்களையும், அவர்களது வெவ்வேறு வம்சங்களையும் இப்பொழுது நான் விவரித்தேன்.
ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின் “நாகரீக மனிதருக்குரிய உபதேசங்கள்” எனும் தலைப்பை கொண்ட பதினைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.