அத்தியாயம் – 13
பூரணத்துவம் அடைந்தவரின் நடத்தை
பதம் 7.13.1
ஸ்ரீ-நாரத உவாச
கல்பஸ் து ஏவம் பரிவ்ரஜ்ய தேஹ-மாத்ராவசேஷித:
க்ராமைக-ராத்ர-விதனா நிரபேக்ஷஸ் சரேன் மஹீம்

ஸ்ரீ-நாரத:உவாச—ஸ்ரீ நாரத முனிவர் கூறினார்; கல்ப:—சந்நியாச வாழ்வுக்குரிய தவங்களை மேற்கொள்ளத் தகுதியுடைய ஒருவன், அல்லது ஆன்மீக கல்வியைத் தொடரும் தகுதியுடைய ஒருவன்; து—ஆனால்; ஏவம்—(முன்பு கூறியது போல்) இவ்வாறு; பரிவ்ரஜ்ய—தனது ஆன்மீக சொரூபத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பிரயாணம் செய்ய வேண்டும்; தேஹ-மாத்ர—உடலை மட்டுமே வைத்துக் கொண்டு; அவசேஷித:—இறுதியில்; க்ராம—ஒரு கிராமத்தில்; ஏக—ஒரே ஒரு; ராத்ர—இரவைக் கழித்து; விதினா—இம்முறையில்; நிரபேக்ஷ:—எந்த பெளதிக பொருளையும் சார்ந்திராமல்; சரேத்—ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சஞ்சரிக்க வேண்டும்; மஹீம்—பூமியில்.

ஸ்ரீ நாரத முனிவர் கூறினார்: ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் திறமையுடைய ஒருவன் எல்லா பெளதிகத் தொடர்புகளையும் துறந்து விட்டு, உடலை ஒரு வசிப்பிடமாக மட்டுமே வைத்துக் கொண்டு, ஒவ்வொரு கிராமத்திலும் ஓரிரவை மட்டுமே கழித்துக் கொண்டு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பிரயாணம் செய்ய வேண்டும். இவ்வாறு உடல் தேவைகளுக்காக எதையும் சார்ந்திராமல், ஒரு சந்நியாசி உலகம் முழுவதிலும் பிரயாணம் செய்ய வேண்டும்.

பதம் 7.13.2
பிப்ருயாத் யதி அஸௌ வாஸ: கெளபீனாச்சாதனம் பரம்
த்யக்தம் ந லிங்காத் தண்டாதேர் அன்யத் கிஞ்சித் அனாபதி

பிப்ருயாத்—ஒருவர் உபயோகிக்க வேண்டும்; யதி—இருந்தால்; அஸௌ—துறவு பூண்டுள்ள ஒருவர்; வாஸ:—ஓர் ஆடையை அல்லது மறைப்பை; கெளபீன—(அந்தரங்க பகுதிகளை மறைப்பதற்கு) ஓர் இடுப்புத்துணி; ஆச்சாதனம்—மறைப்பதற்கு; பரம்—அவ்வளவு மட்டுமே; த்யக்தம்—விடப்பட்டது; ந—இல்லை; லிங்காத்—ஒரு சந்நியாசிக்குரிய அடையாளங்களைத் தவிர; தண்ட-ஆதே:—தண்டம் போன்ற; அன்யத்—மற்ற; கிஞ்சிக்—எதையும்; அனாபதி—சாதாரண குழப்பமற்ற நேரங்களில்.

துறவு வாழ்வை ஏற்றுள்ள ஒருவர், உடலை மறைப்பதற்குரிய ஓர் ஆடையைக் கூட தவிர்க்க முயல வேண்டும். அவர் எதையேனும் அணிவாரானால், அது இடுப்புத் துணி மட்டுமாகவே இருக்க வேண்டும். தேவை இல்லையென்றால் அவர் ஒரு தண்டத்தைக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஒரு சந்நியாசி தண்டத்தையும் கமண்டலத்தையும் தவிர வேறெதையும் உடன் எடுத்துச் செல்லக் கூடாது.

பதம் 7.13.3
ஏக ஏவ சரேத் பிக்ஷுர் ஆத்மாராமோ ‘னபாஸ்ரய:
ஸர்வ-பூத-ஸுஹ்ருச்-சாந்தோ நாராயண-பராயண:

ஏக:—தனியாக; ஏவ—மட்டுமே; சரேத்—சஞ்சரிக்க முடியும்; பிக்ஷு:—பிச்சை எடுக்கும் ஒரு சந்நியாசி; ஆத்ம-ஆராம:—ஆத்ம திருப்தியுடைய; அனபாஸ்ரய:—எதையும் சார்ந்திராமல்; ஸர்வ-பூத-ஸுஹ்ருத்—அனைத்து ஜீவராசிகளின் நலம் விரும்பியாகி; சாந்த:—முழு அமைதியுடன்; நாராயண பராயண:—முற்றிலும் நாராயணரையே சார்ந்தவராகவும், அவரது பக்தராகவும் ஆகி.

பூரண ஆத்ம திருப்தியுடைய சந்நியாசி, வீடு வீடாகப் பிச்சையெடுத்து வாழ வேண்டும். அவர் எந்த மனிதரையோ, இடத்தையோ சார்ந்திராமல், அனைத்து ஜீவராசிகளின் நலம் விரும்பும் ஒரு நண்பராகவே எப்பொழுதும் இருக்க வேண்டும். இவ்வாறாக அவர் ஓர் அமைதியான கலப்படமற்ற நாராயண பக்தராக இருந்து கொண்டு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சஞ்சரிக்க வேண்டும்.

பதம் 7.13.4
பஸ்யேத் ஆத்மனி அதோ விஸ்வம் பரே ஸத்-அஸதோ ‘வ்யயே
ஆத்மானம் ச பரம் ப்ரஹ்ம ஸர்வத்ர ஸத்-அஸன்-மயே

பஸ்யேத்—ஒருவன் பார்க்க வேண்டும்; ஆத்மனி—பரமாத்மாவில்; அத:—இந்த; விஸ்வம்—பிரபஞ்சம்; பரே—அப்பால்; ஸத்-அஸத:—படைப்பை அல்லது படைப்பின் காரணத்தை; அவ்யயே—அழிவற்றதான பூரணத்தில்; ஆத்மானம்—தன்னுடைய; ச—மேலும்; பரம்—பரமான; ப்ரஹ்ம—பிரம்மம்; ஸர்வத்ர—எல்லா இடங்களிலும்; ஸத்-அஸத்—காரணத்திலும், விளைவிலும்; மயே—எங்கும் வியாபித்துள்ள.

ஒரு சந்நியாசி, எப்பொழுதும் பரமபுருஷரை அனைத்திலும் வியாபித்திருப்பவராகவும், இப்பிரபஞ்சம் உட்பட்ட அனைத்தும் பரம புருஷரையே சார்ந்திருப்பதாகவும் காண முயல வேண்டும்.

பதம் 7.13.5
ஸுப்தி ப்ரபோதயோ: ஸந்தாவ் ஆத்மனோ கதிம் ஆத்ம-த்ருக்
பஸ்யன் பந்தம் ச மோக்ஷம் ச மாயா-மாத்ரம் ந வஸ்துத:

ஸுப்தி—உணர்வற்ற நிலையிலும்; ப்ரபோதயோ:—உணர்வுள்ள நிலையிலும்; ஸந்தௌ—நடுத்தரமான உணர்வு நிலையிலும்; ஆத்மன:—ஒருவனுடைய; கதிம்—அசைவு; ஆத்ம-த்ருக்—ஆத்மாவை உண்மையாகப் பார்க்கும் சக்தியுள்ள ஒருவன்; பஸ்யன்—எப்பொழுதும் பார்க்க அல்லது புரிந்து கொள்ள முயன்று; பந்தம்—வாழ்வின் பந்தப்பட்ட நிலை; ச—மேலும்; மோக்ஷம்—முக்திபெற்ற நிலை; ச—கூட; மாயா-மாத்ரம்—மாயை மட்டுமே; ந—இல்லை; வஸ்துத:—உண்மையில்.

உணர்வற்ற நிலையிலும், உணர்வுள்ள நிலையிலும், அவ்விரண்டிற்கும் இடையில் இருக்கும் பொழுதும், அவன் ஆத்மாவை அறிய முயன்று, அதிலேயே முழுமையாக நிலைபெற்றிருக்க முயற்சிக்க வேண்டும். இவ்விதமாக, பந்தப்பட்ட நிலையும் விடுதலையடைந்த நிலையும் வெறும் மாயையே என்பதை அவன் உணர வேண்டும். இத்தகைய ஓர் உயர்ந்த அறிவுடன், அனைத்திலும் ஊடுருவிப் பரவியுள்ள பூரண உண்மையை மட்டுமே அவன் காண வேண்டும்.

பதம் 7.13.6
நாபினந்தேத் த்ருவம் ம்ருத்யும் அத்ருவம் வாஸ்ய ஜீவிதம்
காலம் பரம் ப்ரதீக்ஷேத பூதானாம் ப்ரபவாப்யயம்

ந—இல்லை; அபிநந்தேத்—ஒருவன் புகழ வேண்டும்; த்ருவம்—நிச்சயமாக; ம்ருத்யும்—மரணம்; அத்ருவம்—நிச்சயமில்லை; வா—அல்லது; அஸ்ய—இவ்வுடலின்; ஜீவிதம்—வாழ்நாள்; காலம்—நித்திய காலம்; பரம்—மேலான; ப்ரதீக்ஷேத—ஒருவன் கவனிக்க வேண்டும்; பூதானாம்—ஜீவராசிகளின்; ப்ரபவ—தோற்றம்; அப்யயம்—மறைவு.

ஜட உடல் நிச்சயமாக அழியக் கூடியது. ஒருவனுடைய வாழ்நாள் எவ்வளவு என்பதும் நிச்சயமில்லை என்பதால், வாழ்வோ சாவோ இரண்டுமே போற்றத்தக்கதல்ல. மாறாக, ஜீவராசியானவன் எதில் தோன்றி மறைகிறானோ அந்த நித்தியமான காலத்தத்துவத்தை மட்டுமே ஒருவன் கவனிக்க வேண்டும்.

பதம் 7.13.7
நாஸச் சாஸ்த்ரேஷு ஸஜ்ஜேத நோபஜீவேத ஜீவிகாம்
வாத-வாதாம்ஸ் த்யஜேத் தர்கான் பக்ஷம் கம்ச ந ஸம்ஸ்ரயேத்

ந—இல்லை; அஸத்-சாஸ்த்ரேஷு—செய்தித்தாள், நாவல், நாடகம், கற்பனைக் கதை போன்ற இலக்கியத்தை; ஸஜ்ஜேத—படிப்பதில் ஈடுபட வேண்டும்; ந—இல்லை; உபஜீவேத—ஒருவன் வாழ முயற்சிக்க வேண்டும்; ஜீவிகாம்—படிப்பை ஒட்டிய தொழில் சம்பந்தமானவைகளில்; வாத-வாதான்—வெவ்வேறு தத்துவங்களைப் பற்றிய அநாவசியமான வாதங்களை; த்யஜேத்—ஒருவன் விட்டு விட வேண்டும்; தர்க்கான்—தர்க்கங்களை; பக்ஷம்—கட்சியையும்; கம்ச—எந்த; ந—கூடாது; ஸம்ஸ்ரயேத்—சரணடைய.

காலத்தை வீணடிக்கும் இலக்கியங்களை, அதாவது ஆன்மீக நன்மையைத் தராத இலக்கியங்களை நிராகரிக்க வேண்டும். ஒருவன் ஆசிரியர் தொழிலை, வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதிக்கும் ஓர் உபாயமாக பாவிக்கக் கூடாது. மேலும் ஒருவன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதையும் விட்டுவிட வேண்டும்.

பதம் 7.13.8
ந சிஷ்யான் அனுபத்னீத் க்ரந்தான் நைவாப்யஸேத் பஹூன்
ந வ்யாக்யாம் உபயுஞ்ஜீத நாரம்பான் ஆரபேத் க்வசித்

ந—கூடாது; சிஷ்யான்—சீடர்களை; அனுபத்னீத—பெளதிக நன்மைக்காக தூண்ட வேண்டும்; க்ரந்தான்—தேவையற்ற இலக்கியங்களை; ந—கூடாது் ஏவ—நிச்சயமாக; அப்யஸேத்—புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்; பஹூன்—பல; ந—அல்லது; வ்யாக்யாம்—சொற் பொழிவுகளை; உபயுஞ்ஜீத—ஜீவனோபயத்திற்காகச் செய்ய வேண்டும்; ந—அல்லது; ஆரம்பான்—தேவையற்ற செல்வங்களை; ஆரபேத்—அதிகரிக்க முயற்சி செய்யவேண்டும்; க்வசித்—எச்சமயத்திலும்.

ஒரு சந்நியாசி பல சீடர்களைத் திரட்டுவதற்காக பெளதிக நன்மைகளின் கவர்ச்சிகளைப் பற்றி எடுத்துரைக்கக் கூடாது. தேவையில்லாமல் பல புத்தகங்களை அவர் படிக்கக் கூடாது. அவர் ஜீவனோபாயத்திற்காக சொற்பொழிவுகளை நிகழ்த்தக் கூடாது. அவர் அனாவசியமாக பெளதிக செல்வங்களை அதிகரிக்கவும் முயற்சி செய்யக் கூடாது.

பதம் 7.13.9
ந யதேர் ஆஸ்ரம: ப்ராயோ தர்ம-ஹேதுர் மஹாத்மன:
சாந்தஸ்ய ஸம-சித்தஸ்ய பிப்ருயாத் உத வா த்யஜேத்

ந—இல்லை; யதே:—சந்நியாசியின்; ஆஸ்ரம:—(தண்டமும், கமண்டலமும் கூடிய) அடையாள உடையை; ப்ராய:—கிட்டத்தட்ட எப்பொழுதுமே; தர்ம-ஹேது:—ஆன்மீக முன்னேற்றத்தின் காரணம்; மஹா-ஆத்மன:—உண்மையாகவே உயர்ந்தவனும், மேன்மையானவனுமான; சாந்தஸ்ய—அமைதியானவனும்; ஸம-சித்தஸ்ய—சமத்துவ நிலையை அடைந்தவனும்; பிப்ருயாத்—(இத்தகைய அடையாளங்களை) ஒருவன் ஏற்றுக் கொள்ளலாம்; உத—நிச்சயம்; வா—அல்லது; த்யஜேத்—விட்டுவிடலாம்.

உண்மையாகவே ஆன்மீக உணர்வில் முன்னேறியுள்ள, அமைதியும், சமநிலையும் உள்ள ஒருவன், திரிதண்டம், கமண்டலம் போன்ற ஒரு சந்நியாசியின் சின்னங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தேவைக்கேற்ப சிலசமயங்களில் அந்த அடையாளச் சின்னங்களை அவன் ஏற்றுக் கொள்ளலாம். சிலசமயங்களில் அவற்றை அவன் விலக்கியும் விடலாம்.

பதம் 7.13.10
அவ்யக்த-லிங்கோ வ்யக்தார்தோ மனீஷி உன்மத்த-பாலவத்
கவிர் மூகவத் ஆத்மானம் ஸ த்ருஷ்ட்யா தர்சயேன் ந்ருணாம்

அவ்யக்த-லிங்க:—யாருடைய சந்நியாச அறிகுறிகள் வெளிப்படுவதில்லையோ; வ்யக்த-அர்த்த:—அவரது நோக்கம் வெளிப்பட்டு விடுகிறது; மனீஷீ—இத்தகைய சிறந்த சாது; உன்மத்த—அமைதியற்ற; பால-வத்—சிறுவனைப் போல்; கவி:—சிறந்த கவிஞரான அல்லது பேச்சாளரான; மூக-வத்—ஊமைபோல்; ஆத்மானம்—தன்னை; ஸ:—அவர்; த்ருஷ்ட்யா—உதாரணத்தால்; தர்சயேத்—காட்ட வேண்டும்; ந்ருணாம்—மனித சமுதாயத்திற்கு.

ஒரு சந்நியாசி அல்லது சாது மனித சமுதாயத்தின் பார்வைக்குத் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் இருக்கக்கூடும். ஆனால் நடத்தையில் அவரது நோக்கம் வெளிப்படுகிறது. மனித சமுதாயத்திடம் அவர் தன்னை ஒரு அமைதியற்ற குழந்தைப் போல் காட்டிக் கொள்ள வேண்டும். அவர் சிந்தனைமிக்க சிறந்த பேச்சாளராக இருப்பினும், தன்னை ஒரு ஊமையாக காட்டிக் கொள்ள வேண்டும்.

பதம் 7.13.11
அத்ராபி உதாரஹரந்தீமம் இதிஹாஸம் புராதனம்
ப்ரஹ்ராதஸ்ய ச ஸம்வாதம் முனேர் ஆஜகரஸ்ய ச

அத்ர—இங்கு; அபி—சாதாரண கண்களுக்குப் புலப்படாத போதிலும்; உதாஹரந்தி—கற்றறிந்த முனிவர்கள் ஓர் உதாரணமாகக் கூறுகின்றனர்; இமம்—இந்த; இதிஹாஸம்—வரலாற்றுச் சம்பவத்தை; புராதனம்—மிகப் புராதனமான; ப்ரஹ்ராதஸ்ய—பிரகலாதரின்; ச—கூட; ஸம்வாதம்—உரையாடலை; முனே:—சிறந்த முனிவரின்; ஆஜகரஸ்ய—ஒரு மலைப்பாம்பின் தொழிலை ஏற்ற; ச—மேலும்.

இதற்கு ஒரு வரலாற்று உதாரணமாக, கற்றறிந்த முனிவர்கள் பிரகலாத மகாராஜனுக்கும், ஒரு மலைப்பாம்பைப் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெருந்துறவிக்கும் இடையில் நிகழ்ந்த பண்டைக் காலத்து உரையாடலைப் பற்றிய கதையைக் கூறுகின்றனர்.

பதங்கள் 7.13.12 – 7.13.13
தம் சயானம் தரோபஸ்தே காவேர்யாம் ஸஹ்ய-ஸானுனி
ரஜஸ்-வலைஸ் தனூ-தேசைர் நிகூடாமல்-தேஜஸம்

ததர்ச லோகான் விசரன் லோக-தத்வ-விவித்ஸயா
வ்ருதோ ‘மாத்யை: கதிபயை: ப்ரஹ்ராதோ பகவத்-ப்ரிய:

தம்—அந்த (துறவி); சயானம்—படுத்துக் கொண்டிருந்தார்; தரா-உபஸ்தே—தரையில்; காவேர்யாம்—காவேரி நதிக் கரையில்; ஸஹ்ய-ஸானுனி—சஹ்யம் என்ற மலைச் சரிவில்; ரஜ:-வலை:—அழுக்கும், புழுதியும் படிந்தவராக; தனூ-தேசை:—உடலின் எல்லாப் பகுதிகளும்; நிகூட—ஆழ்ந்த மனமுடைய; அமல—களங்கமற்ற; தேஜஸம்—எவருடைய ஆன்மீக சக்தி; ததர்ச—பார்த்தார்; லோகான்—எல்லாக் கிரகங்களுக்கும்; விசரன்—பயணம் செய்து கொண்டு; லோக-தத்வ—ஜீவராசிகளின் இயற்கையை (குறிப்பாக கிருஷ்ண உணர்வில் முன்னேற முயல்பவர்களின் இயற்கையை); விவித்ஸயா—அறிய முயல்வதற்காக; வ்ருத:—சூழப்பட்டவராக; அமாத்யை:—அந்தரங்க சகாக்களால்; கதிபயை:—சில; ப்ரஹ்ராத:—பிரகலாத மகாராஜன்; பகவத்-ப்ரிய:—பரமபுருஷருக்கு மிகமிகப் பிரியமானவரான.

பரமபுருஷருக்கு மிகவும் பிரியமுள்ள சேவகரான பிரகலாத மகாராஜன் துறவிகளின் இயற்கையை ஆராய்ந்து அறியும் பொருட்டு, தனது அந்தரங்க சகாக்கள் சிலருடன் ஒருசமயம் பிரபஞ்சத்தை சுற்றி வரச் சென்றார். இவ்வாறாக அவர் காவேரி நதிக்கரையை அடைந்தார். அருகில் சஹ்யம் என்ற ஒரு மலை இருந்தது. அங்கு ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறிய சிறந்த துறவியொருவர் அழுக்கும், புழுதியும் படிந்த உடலுடன் தரையில் படுத்திருப்பதைக் கண்டார்.

பதம் 7.13.14
கர்மணாக்ருதிபிர் வாசா லிங்கைர் வர்ணாஸ்ரமாதிபி:
ந விதந்தி ஜனா யம் வை ஸோ ‘ஸாவ் இதி ந வேதி ச

கர்மணா—செயல்களாலோ; ஆக்ருதிபி:—தேக அம்சங்களாலோ; வாசா—வார்த்தைகளாலோ; லிங்கை:—அடையாளங்களாலோ; வர்ண-ஆஸ்ரம—வர்ணாஸ்ரம நிலையின்; ஆதிபி:—பிற அடையாளங்களாலோ; ந விதந்தி—புரிந்து கொள்ள இயலவில்லை; ஜனா:—பொது மக்களால்; யம்—எவரை; வை—உண்மையில்; ஸ:—அவர்; அஸௌ—அதே நபர்தானா; இதி—என்று; ந—இல்லை; வா—அல்லது; இதி—இவ்வாறு; ச—மேலும்.

அத்துறவியின் செயல்களாலோ அவரது தேக அம்சங்களாலோ, அவரது வார்த்தைகளாலோ அல்லது அவரது வர்ணாஸ்ரம நிலையின் அடையாளங்களாலோ, அவர் தாங்கள் அறிந்திருந்த அதே நபர்தானா என்பதை மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.

பதம் 7.13.15
தம் நத்வாப்யர்ச்ய விதிவத் பாதயோ: சிரஸா ஸ்ப்ருசன்
விவித்ஸுர் இதம் அப்ராக்ஷீன் மஹா-பாகவதோ ‘ஸுரா:

தம்—அவருக்கு (துறவிக்கு); நத்வா—வணக்கம் செலுத்திவிட்டு; அப்யர்ச்ய—பூஜித்துவிட்டு; விதி-வத்—தகுந்த விதிமுறைகளுக்கேற்ப; பாதயோ:—அத்துறவியின் தாமரைப் பாதங்களை; சிரஸா—தலையால்; ஸ்ப்ருசன்—தொட்டு; விவித்ஸு:—அவரைப் பற்றி அறிய ஆவல் கொண்டு; இதம்—கீழ்க்கண்ட சொற்களை; அப்ராக்ஷீத்—வினவினார்; மஹா-பாகவத:—பகவானின் பரம பக்தர்; அஸுர:—ஒர் அசுர குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும்.

முன்னேற்றமடைந்த பக்தராகிய பிரகலாத மகாராஜன், ஒரு மலைப் பாம்பின் ஜீவனோபாய முறையை ஏற்றுக் கொண்டிருந்த அத்துறவியை முறையாகப் பூஜித்து வணங்கினார். இவ்வாறு அத்துறவியை வழிபட்டு, அவரது தாமரைப் பாதங்களில் தன் தலையைத் தொட்டு வணங்கிய பிரகலாதர், அவரைப் பற்றி அறியும் பொருட்டு பின்வருமாறு மிகவும் அடக்கத்துடன் வினவினார்.

பதங்கள் 7.13.16 – 7.13.17
பிபர்ஷி காயம் பீவானம் ஸோத்யமோ போகவான் யதா
வித்தம் சைவோத்யமவதாம் போகோ வித்தவதாம் இஹ
போகினாம் கலு தேஹோ ‘யம் பீவா பவதி நான்யதா

பிபர்ஷி—நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்; காயம்—ஓருடலை; பீவானம்—பருமனான; ஸ-உத்யம:—பெருமுயற்சி செய்பவன்; போகவான்—அனுபவிப்பவன்; யதா—எப்படி; வித்தம்—செல்வம்; ச—மேலும்; ஏவ—நிச்சயமாக; உத்யம-வதாம்—பொருளாதார முன்னேற்றத்திலேயே எப்பொழுதும் ஈடுபட்டுள்ளவர்களின்; போக:—புலன் நுகர்வில்; வித்த-வதாம்—அதிக செல்வம் படைத்தவர்களுக்கு; இஹ—இவ்வுலகில்; போகினாம்—அனுபவிப்பவர்களின் (கருமிகளின்); கலு—உண்மையில்; தேஹ:—உடல்; அயம்—இந்த; பீவா—மிகவும் பருத்ததாக; பவதி—ஆகிறது; ந—இல்லை; அன்யதா—வேறு விதத்தில்.

அத்துறவி மிகவும் பருமனாக இருப்பதைக் கண்டு பிரகலாதர் பின்வருமாறு கூறினார்: ஐயா, உங்களுடைய ஜீவனோபாயத்திற்காக எவ்வித முயற்சியையும் நீங்கள் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் சுகபோகங்களை அனுபவிக்கும் ஒரு பௌதிகவாதியின் உடலைப் போன்ற ஒரு பருத்த உடலை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஒரு செல்வந்தன் வேலை எதுவும் செய்யாமல் உண்டும், உறங்கியும் வாழ்க்கையைக் கழிப்பதால் மிகவும் பருத்தவனாக ஆகிறான் என்பதை நான் அறிவேன்.

பதம் 7.13.18
ந தே சயானஸ்ய நிருத்யமஸ்ய
ப்ரஹ்மன் நு ஹார்தோ யத ஏவ போக:
அபோகினோ ‘யம் தவ விப்ர தேஹ:
பீவா யதஸ் தத் வத ந: க்ஷமம் சேத்

ந—இல்லை; தே—உங்களுடைய; சயானஸ்ய—படுத்துக் கொண்டிருக்கும்; நிருத்யமஸ்ய—செயலின்றி; ப்ரஹ்மன்—துறவியே; நு—உண்மையில்; ஹ—இது தெரிந்ததே; அர்த்த:—பணம்; யத:—எதிலிருந்து; ஏவ—நிச்சயமாக; போக:—புலன் சுகம்; அபோகின:—புலன் சுகத்தில் ஈடுபட்டிராத ஒருவரின்; அயம்—இந்த; தவ—உங்களுடைய; விப்ர—கற்றறிந்த பிராமணரே; தேஹ:—உடல்; பீவா—பருத்துள்ளது; யத:—இது எப்படி; தத்—அவ்வுண்மையை; வத—கூறுங்கள்; ந:—எங்களுக்கு; க்ஷமம்—மன்னிக்கவும்; சேத்—நான் விவேகமற்ற கேள்வியைக் கேட்டிருந்தால்.

பிராமணரே, ஆத்ம ஞானத்தில் முழுமை பெற்றவராகிய நீங்கள் செய்யக்கிடப்பது எதுவுமில்லை என்பதால், கீழே இவ்வாறு படுத்துக்கிடக்கிறீர்கள். புலன்களை அனுபவிப்பதற்கு உங்களிடம் பணம் இல்லை என்பதும் தெளிவாகிறது. அப்படியிருக்க உங்களுடைய உடல் இவ்வளவு பருமனாக ஆனது எவ்வாறு? என்னுடைய வேள்வி விவேகமற்றதாக இல்லையெனில், இது எவ்வாறு நிகழ்ந்தது என்று விவரிக்க வேண்டுகிறேன்

பதம் 7.13.19
கவி: கல்போ நிபுண-த்ருக் சித்ர-ப்ரிய-கத: ஸம:
லோகஸ்ய குர்வத: கர்ம சேஷே தத்-வீக்ஷிதாபி வா

கவி:—மிகவும் கற்றறிந்த; கல்ப:—நிபுணரான; நிபுண-த்ருக்—அறிவாளி; சித்ர-ப்ரிய-கத:—இதயத்தை மகிழ்விக்கும் இனிய வார்த்தைகளைப் பேசக் கூடியவர்; ஸம:—சமநிலை வகிப்பவராய்; லோகஸ்ய—பொது மக்களின்; குர்வத:—ஈடுபட்டுள்ள; கர்ம—பலன் கருதும் செயல்களில்; சேஷே—நீங்கள் படுத்துக் கொண்டிருக்கிறீர்கள்; தத்-வீக்ஷிதா—அவர்கள் எல்லோரையும் பார்த்தும்; அபி—என்ற போதிலும்; வா—அல்லது.

மதிப்புற்குரிய தாங்கள் எல்லா வகையிலும் கற்றறிந்தவராகவும், நிபுணராகவும், அறிவாளியாகவும் காணப்படுகிறீர்கள். இதயத்தை மகிழ்விக்கும் மிகவும் இனிமையான வார்த்தைகளைப் பேசக்கூடியவர். பொதுமக்கள் பலன் கருதும் செயல்களில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தும், செயலற்றவராக இங்கு நீங்கள் படுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

பதம் 7.13.20
ஸ்ரீ-நாரத உவாச
ஸ இத்தம் தைத்ய-பதினா பரிப்ருஹ்டோ மஹா-முனி:
ஸ்மயமானஸ் தம் அப்யாஹ தத்-வாக்-அம்ருத-யந்த்ரித:

ஸ்ரீ-நாரத:உவாச—மாமுனிவரான நாரதர் கூறினார்; ஸ:—(படுத்துக் கொண்டிருந்த) அத்துறவி; இத்தம்—இவ்வாறு; தைத்ய-பதினா—தைத்திய ராஜனால் (பிரகலாதரால்); பரிப்ருஷ்ட:—கேட்கப்பட்டவராக; மஹா-முனி:—அச்சிறந்த துறவி; ஸ்மயமான:—புன்சிரிப்புடன்; தம்—அவருக்கு (பிரகலாதருக்கு); அப்யாஹ—பதிலளிக்கத் தயாரானார்; தத்-வாக்—அவரது வார்த்தைகளின்; அம்ருத-யந்த்ரித:—அமிர்தத்தால் வசீகரிக்கப்பட்டு.

நாரதமுனி தொடர்ந்து கூறினார்: தைத்திய ராஜனான பிரகலாத மகாராஜனால் இவ்வாறு கேள்வி கேட்கப்பட்ட பொழுது, அவரது அமுது போன்ற வார்த்தைகளின் பொலிவால் வசீகரிக்கப்பட்ட அத்துறவி, பிரகலாதரின் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதில் கூறலானார்.

பதம் 7.13.21
ஸ்ரீ-ப்ரஹ்மண உவாச
வேதேதம் அஸுர-ஸ்ரேஷ்ட பவான் நன்வார்ய-ஸம்மத: ஈஹோபரமயோர் ந்ரூணாம் பதானி அத்யாத்ம-சக்ஷுஷா

ஸ்ரீ-ப்ராஹ்மண: உவாச—அந்த பிராமணர் பதில் கூறினார்; வேத—நன்கு அறிந்திருக்கிறீர்கள்; இதம்—இவைகளை எல்லாம்; அஸுர-ஸ்ரேஷ்ட—அசுரர்களுள் சிறந்தவரே; பவான்—நீங்கள்; நனு—உண்மையில்; ஆர்ய-ஸம்மத:—நாகரீகமடைந்த மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களை உடையவர்; ஈஹா—நாட்டத்தின்; உபரமயோ:—குறைவதன்; ந்ருணாம்—பொது ஜனங்களின்; பதானி—வெவ்வேறு நிலைகளை; அத்யாத்ம-சக்ஷுஷா—திவ்யமான கண்களால்.

துறவியான பிராமணர் கூறினார்: அசுரர்களில் சிறந்தவரும், முன்னேற்றமும், நாகரீகமும் அடைந்த மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவருமான பிரகலாத மகாராஜனே, உங்களுடைய ஞான திருஷ்டியின் மூலமாக வாழ்வின் வெவ்வேறு நிலைகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இந்த ஞான திருஷ்டியினால் ஒரு மனிதனின் குணங்களைக் கண்டறிந்து, பொருட்களை ஏற்பது மற்றும் விலக்குவதன் பலன்களை உள்ளபடி தெளிவாக அறிந்திருக்கிறீர்கள்.

பதம் 7.13.22
யஸ்ய நாராயணோ தேவோ பகவான் ஹ்ருத்-கத: ஸதா
பக்த்யா கேவலயாக்ஞானம் துனோதி த்வாந்தம் அர்கவத்

யஸ்ய—எவருக்கு; நாராயண: தேவ:—பரமபுருஷராகிய நாராயணர்; பகவான்—பகவான்; ஹ்ருத்-கத:—இதய ஆழத்தில்; ஸதா—எப்பொழுதும்; பக்த்யா—பக்தித்தொண்டினால்; கேவலயா—மட்டுமே; அக்ஞானம்—அறியாமை; துனோதி—சுத்தம் செய்கிறார்; த்வாந்தம்—இருளை; அர்க-வத்—சூரியனைப் போல்.

எல்லா ஐசுவரியங்களையும் முழுமையாகப் பெற்றவரும், பரம புருஷருமாகிய பகவான் நாராயணர், தூய பக்தர் என்ற காரணத்தினால் உங்களுடைய இதயத்தில் மேலோங்கி இருக்கிறார். சூரியன் பிரபஞ்ச இருளைப் போக்குவது போல், பகவான் அறியாமை இருளை முழுமையாகப் போக்கிவிடுகிறார்.

பதம் 7.13.23
ததாபி ப்ருமஹே ப்ரஸ்னாம்ஸ் தவ ராஜன் யதா-ஸ்ருதம்
ஸம்பாஷணீயோ ஹி பவான் ஆத்மன: சுத்திம் இச்சதா

ததாபி—இருப்பினும்; ப்ரூமஹே—நான் பதில் கூறுகிறேன்; ப்ரஸ்னான்—எல்லாக் கேள்விகளுக்கும்; தவ—உமது; ராஜன்—அரசே; யதா-ஸ்ருதம்—வேத வல்லுணர்களிடமிருந்து நான் கேட்டறிந்தது போலவே; ஸம்பாஷணீய:—பேசத் தகுந்த; ஹி—உண்மையில்; பவான்—நீங்கள்; ஆத்மன:—ஆத்மாவின்; சுத்திம்—தூய்மையை; இச்சதா—விரும்பும் ஒருவனால்.

அரசே, நீங்கள் எல்லாம் அறிந்தவராக இருந்தும், என்னிடம் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். வேத வல்லுணர்களிடமிருந்து நான் கேட்டு அறிந்ததற்கேற்ப அவற்றிற்கு விடையளிக்க நான் முயற்சி செய்கிறேன். இவ்விஷயத்தில் நான் மௌனமாக இருக்க முடியாது. ஏனெனில் தன்னை புனிதப்படுத்திக் கொள்ள விரும்பும் ஒருவன் உங்களைப் போன்ற ஒருவரிடம் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

பதம் 7.13.24
த்ருஷ்ணயா பவ-வாஹின்யா யோக்யை: காமைர் அபூர்யயா
கர்மாணி கார்யமாணோ ‘ஹம் நானா-யோனிஷு யோஜித

த்ருஷ்ணயா—பெளதிக ஆசைகளின் காரணத்தால்; பவ-வாஹின்யா—ஜட இயற்கைச் சட்டங்களின் ஆட்சியின் கீழ்; யோக்யை:—தகுந்தபடி; காமை:—பெளதிக ஆசைகளால்; ஆபூர்யயா—முடிவின்றி, ஒன்றன்பின் ஒன்றாக; கர்மாணி—செயல்களை; கார்யமாண:—செய்யும்படி எப்பொழுதும் கட்டாயப்படுத்தப்பட்டு; அஹம்—நான்; நானா-யோனிஷு—பல்வேறு உயிரினங்களில்; யோஜித:—வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன்.

என்னுடைய திருப்தியடையாத பெளதிக ஆசைகளின் காரணத்தால், நான் இயற்கைச் சட்டங்களின் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டேன். இவ்வாறாக நான் வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டவனாய், பல்வேறு உயிரினங்களின் வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருந்தேன்.

பதம் 7.13.25
யத்ருச்சயா லோகம் இமம் ப்ராபித: கர்மபிர் ப்ரமன்
ஸ்வர்காபவர்கயோர் த்வாரம் திரஸ்சாம் புனர் அஸ்ய ச

யத்ருச்சயா—ஜட இயற்கையின் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு; லோகம்—மனித ரூபத்தை; இமம்—இந்த; ப்ராபித:—அடைந்தேன்; கர்மபி—வெவ்வேறு பலன் கருதும் செயல்களின் ஆதிக்கத்தினால்; ப்ரமன்—ஒருவித வாழ்வினத்திலிருந்து மற்றொன்றுக்கு சஞ்சரித்தபடி; ஸ்வர்க—சுவர்க்க லோகங்களுக்கும்; அபவர்கயோ:—முக்திக்கும்; த்வாரம்—வாயில்; திரஸ்சாம்—தாழ்ந்த உயிரினங்களுக்கும்; புன:—மீண்டும்; அஸ்ய—மனிதர்களின்; ச—மேலும்.

விரும்பத்தகாத பெளதிக புலன் நுகர்வின் காரணத்தால், காலப்போக்கில் எனது கருமங்களால் விளைந்த பரிணாமத்தின் மூலமாக இந்த மனித ரூபத்தை நான் பெற்றேன். இந்த மனித ரூபத்தினால் என்னைச் சுவர்க்க லோகங்களுக்கோ, முக்திக்கோ, தாழ்ந்த உயிரினங்களுக்கோ அல்லது மீண்டும் மனிதப் பிறவிக்கோ அழைத்துச் செல்ல முடியும்.

பதம் 7.13.26
தத்ராபி தம்-பதீனாம் ச ஸுகாயன்யாபனுத்தயே
கர்மாணி குர்வதாம் த்ருஷ்ட்வா நிவ்ருத்தோ ‘ஸ்மி விபர்யயம்

தத்ர—அங்கு; அபி—கூட; தம்—பதீனாம்—திருமணத்தில் இணைந்த தம்பதிகளின்; ச—மேலும்; ஸுகாய—சுகத்திற்காக, குறிப்பாக பாலுறவு சுகத்திற்காக; அன்ய-அபனுத்தயே—துன்பத்தைத் தவிர்ப்பதற்காக; கர்மாணி—பலன்கருதும் செயல்களில்; குர்வதாம்—எப்பொழுதும் ஈடுபட்டிருந்ததை; த்ருஷ்ட்வா—பார்த்து; நிவ்ருத்த: அஸ்மி—(இத்தகைய செயல்களை) நான் நிறுத்தி விட்டேன்; விபர்யயம்—எதிரான.

மனித உருவிலுள்ள இவ்வாழ்வில், பாலுறவு சுகத்திற்காக ஓர் ஆணும் பெண்ணும் இணைகின்றனர். ஆனால் அவர்களில் ஒருவரும் மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் அனுபவப்பூர்வமான உண்மை. ஆகவே இத்தகைய முரணான பலன்களைக் கண்டு, பெளதிக செயல்களில் பங்கேற்பதை நான் நிறுத்திவிட்டேன்.

பதம் 7.13.27
ஸுகம் அஸ்யாத்மனோ ரூபம் ஸர்வேஹோபரதிஸ் தனு:
மன:-ஸம்ஸ்பர்சஜான் த்ருஷ்ட்வா போகான் ஸ்வப்ஸ்யாமி ஸம்விசன்

ஸுகம்—மகிழ்ச்சி; அஸ்ய—அவனுடைய; ஆத்மன:—ஜீவராசியின்; ரூபம்—இயற்கையான சொரூபம்; ஸர்வ—எல்லா; ஈஹ—பெளதிக செயல்களையும்; உபரதி:—முற்றிலும் நிறுத்திவிட்டு; தனு:—அதன் தோற்றத்தின் வழி; மன:-ஸம்ஸ்பர்ச-ஜான்—புலன் நுகர்வுக்குத் தேவையானதிலிருந்து உண்டாக்கப்பட்ட; த்ருஷ்ட்வா—பார்த்த பிறகு; போகான்—புலன் சுகத்தை; ஸ்வப்ஸ்யாமி—இந்த பெளதிக செயல்களைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையுடன் நான் மௌனமாக அமர்ந்திருக்கிறேன்; ஸம்விசன்—இத்தகைய செயல்களில் பிரவேசித்து.

ஜீவராசிகளுக்குரிய உண்மையான வாழ்வுமுறை, உண்மையான ஆன்மீக ஆனந்தத்தை அனுபவிப்பதாகும். பெளதிக செயல்களை எல்லாம் நிறுத்திவிடும் பொழுதுதான் இந்த ஆனந்தத்தை ஒருவனால் அடையமுடியும். பெளதிக புலனின்பம் வெறும் கற்பனையே ஆகும். ஆகவே இவ்விஷயத்தைக் கருத்திற் கொண்டுதான் நான் எல்லா பௌதிக செயல்களையும் நிறுத்திவிட்டு இங்கு படுத்துக் கொண்டிருக்கிறேன்.

பதம் 7.13.28
இதி ஏதத் ஆத்மன: ஸ்வார்தம் ஸந்தம் விஸ்ம்ருத்ய வை புமான்
விசித்ராம் அஸதி த்வைதே கோராம் ஆப்னோதி ஸம்ஸ்ருதிம்

இதி—இவ்வாறாக; ஏதத்—பந்தப்பட்ட ஒருவன்; ஆத்மன:—தன்னுடைய; ஸ்வ-அர்த்தம்—சுயநலத்தை; ஸந்தம்—தனக்குள் இருந்து கொண்டு; விஸ்ம்ருத்ய—மறந்து; வை—உண்மையாகவே; புமான்—ஜீவராசி; விசித்ராம்—கவர்ச்சிகரமான பலவகைப்பட்ட பொய்மைகளால்; அஸதி—இந்த ஜட உலகில்; த்வைதே—தன்னைத் தவிற பிற; கோராம்—(பிறப்பையும், இறப்பையும் தொடர்ந்து ஏற்றுக் கொள்வதன் காரணத்தால்) மிகவும் அச்சமடைந்து; ஆப்னோதி—ஒருவன் சிக்கிக் கொள்கிறான்; ஸம்ஸ்ருதிம்—பௌதிக வாழ்வில்.

இவ்வாறாக உடலுக்குள் வாழும் பந்தப்பட்ட ஜீவாத்மா தன்னை உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால், தனது உண்மையான சுயநலத்தை மறந்து விடுகிறான். உடல் பெளதிகமானது என்பதால் அவன் இயற்கையாகவே ஜட உலகின் பலதரப்பட்ட நிலைகளால் கவரப்பட்டு, பௌதிக வாழ்வின் துன்பங்களை அனுபவிக்கிறான்.

பதம் 7.13.29
ஜலம் தத்-உத்பவைஸ் சன்னம் ஹித்வாக்ஞோ ஜல-காம்யயா
ம்ருகத்ருஷ்ணாம் உபாதாவேத் ததான்யத்ரார்த்த-த்ருக் ஸ்வத:

ஜலம்—நீர்; தத்-உத்பவை:—அந்த நீரிலிருந்து வளர்ந்த புல்லால்; சன்னம்—மூடப்பட்டுள்ள; ஹித்வா—விட்டுவிட்டு; அக்ஞ:—அறிவில்லாத ஒரு மிருகம்; ஜல-காம்யயா—நீரைப் பருக விரும்பி; ம்ருகத்ருஷ்ணாம்—கானல் நீரை; உபாதாவேத்—தேடிச் செல்கிறது; ததா—அதுபோலவே; அன்யத்ர—வேறெங்கோ; அர்த்த-த்ருக்—தன்னலத்தில் ஈடுபட்டு; ஸ்வத:—தனக்குள்.

அறியாமையின் காரணத்தால், புல்லால் மூடப்பட்டுள்ள கிணற்றுக்குள் இருக்கும் நீரைக் காண முடியாமல் ஒரு மான் நீரைத் தேடி வேறு எங்கோ ஓடுகிறது. அதுபோலவே, ஜட உடலால் மூடப்பட்டுள்ள ஜீவராசி தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை காண முடியாமல், ஜட உலகில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான்.

பதம் 7.13.30
தேஹாதிபிர் தைவ-தந்த்ரைர் ஆத்மன: ஸுகம் ஈஹத:
துஹ்காத்யயம் சானீசஸ்ய க்ரியா மோக: க்ருதா: க்ருதா:

தேஹ-ஆதிபி:—உடல், மனம், அகங்காரம், புத்தி ஆகியவற்றுடன்; தைவ-தந்த்ரை:—உயர்ந்த சக்தியின் கட்டுப்பாட்டில்; ஆத்மன:—தன்னுடைய; ஸுகம்—மகிழ்ச்சியை; ஈஹத:—தேடிக்கொண்டு; துஹ்க-அத்யயம்—துன்ப நிலைகளை அகற்றிவிட; ச—மேலும்; அனீசஸ்ய—ஜட இயற்கையின் முழு கட்டுப்பாட்டிலுள்ள ஜீவராசியின்; க்ரியா:—திட்டங்களும், செயல்களும்; மோகா: க்ருதா: க்ருதா:—மீண்டும் மீண்டும் தோல்வியடைகின்றன.

ஜீவராசியானவன் மகிழ்ச்சியடையவும், துன்பங்களுக்கான காரணங்களிலிருந்து விடுபடவும் முயற்சி செய்கிறான். ஆனால் ஜீவராசிகளின் பல்வேறு உடல்கள் ஜட இயற்கையின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதால், வெவ்வேறு உடல்களில் அவன் போடும் திட்டங்களெல்லாம் இறுதியில் ஒவ்வொன்றாகத் தோல்வியடைகின்றன.

பதம் 7.13.31
ஆத்யாத்மிகாதிபிர் துஹ்கைர் அவிமுக்தஸ்ய கர்ஹிசித்
மர்த்யஸ்ய க்ருச்ரோபனதைர் அர்த்தை: காமை: க்ரியேத கிம்

ஆத்யாத்மிக-ஆதிபி:—அத்யாத்மிகம், அதிதைவிகம் மற்றும் அதிபௌதிகம்; துஹ்கை:—பெளதிக வாழ்வின் மூவகைத் துன்பங்களால்; அவிமுக்தஸ்ய—இத்தகைய துன்பச் சூழ்நிலைகளிலிருந்து விடுபடாத ஒருவனின் (அல்லது பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் நோய்க்கு உட்பட்ட ஒருவனின்); கர்ஹிசித்—சிலசமயம்; மர்த்யஸ்ய—மரணத்திற்குட்பட்ட ஜீவராசியின்; க்ருச்ர-உபனதை:—கடுந்துன்பங்களின் காரணத்தால் அடையப்படுபவை; அர்த்தை:—ஏதோ சில நன்மைகள் அடையப்பட்டாலும்; காமை:—ஒருவனது பெளதிக ஆசைகளை நிறைவேற்றக் கூடிய; க்ரியேத—அவர்களால் என்ன செய்ய முடியும்; கிம்—மேலும் இத்தகைய மகிழ்ச்சியின் மதிப்புதான் என்ன.

பெளதிக செயல்கள் எப்பொழுதும் அத்யாத்மிகம், அதிதைவிகம் மற்றும் அதிபௌதிகம் என்ற மூன்றுவித துன்ப நிலைகளின் கலப்படத்தைக் கொண்டுள்ளன. ஆகவே இத்தகைய செயல்களால் ஒருவன் சிறிதளவு வெற்றியை அடைந்த போதிலும், இந்த வெற்றியால் என்ன நன்மை? அவன் இன்னமும் பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் ஆகியவற்றிற்கும், தனது கர்ம விளைவுகளுக்கும் உட்பட்டவனாகவே இருக்கிறான்.

பதம் 7.13.32
பஸ்யாமி தனினாம் க்லேசம் லுப்தானாம் அஜிதாத்மனாம்
பயாத் அலப்த-நித்ராணாம் ஸர்வதோ ‘பிவிசங்கினாம்

பஸ்யாமி—நான் கண்கூடாகக் காண்கிறேன்; தனினாம்—பெரும் செல்வந்தர்களின்; க்லேசம்—துன்பங்களை; லுப்தானாம்—மிகவும் பேராசை கொண்ட; அஜித-ஆத்மனாம்—தங்கள் புலன்களுக்கு அடிமைகளான; பயாத்—பயத்தின் காரணமாக; அலப்த-நித்ராணாம்—தூக்கமின்மையால் துன்புறும்; ஸர்வத:—எல்லாப் பக்கங்களிலிருந்து; அபிவிசங்கினாம்—குறிப்பாக அச்சத்திற்குள்ளாகி இருப்பதால்.

அந்த பிராமணர் தொடர்ந்து கூறினார்: தன் புலன்களுக்கு அடிமையான ஒரு செல்வந்தன், பொருள் சேர்ப்பதில் பேராசை கொண்டு, அதிக செல்வமிருந்தும் எல்லாப் பக்கங்களிலிருந்து வரும் பயத்தின் காரணத்தால், தூக்கமின்மையால் அவதிப்படுவதை உண்மையாகவே நான் காண்கிறேன்.

பதம் 7.13.33
ராஜதஸ் சௌரத: சத்ரோ: ஸ்வ-ஜனாத் பசு-பக்ஷித:
அர்திப்ய: காலத ஸ்வஸ்மான் நித்யம் ப்ராணார்த்தவத் பயம்

ராஜத:—அரசாங்கத்திடமிருந்தும்; சௌரத:—திருடர்கள் மற்றும் மோசக்காரர்களிடமிருந்தும்; சத்ரோ:—எதிரிகளிடமிருந்தும்; ஸ்வ-ஜனாத்—உறவினர்களிடமிருந்தும்; பசு-பாக்ஷித:—மிருகங்கள் மற்றும் பறவைகளிடமிருந்தும்; அர்திப்ய:—பிச்சைக்காரர்கள் மற்றும் தானம் யாசிப்பவர்களிடமிருந்தும்; காலத:—காலத் தத்துவத்திடமிருந்தும்; ஸ்வஸ்மாத்—மேலும் தன்னிடமிருந்தும்; நித்யம்—எப்பொழுதும்; ப்ராண-அர்த்த-வத்—உயிருள்ள அல்லது பணமுள்ள ஒருவனுக்கு; பயம்—பயம்.

பெளதிக செல்வாக்கும், செல்வமும் உள்ளவர்களாகக் கருதப்படுபவர்கள், அரசாங்க சட்டம், திருடர்கள், மோசக்காரர்கள், எதிரிகள், குடும்ப அங்கத்தினர்கள், மிருகங்கள், பறவைகள், தானம் யாசிப்பவர்கள், தவிர்க்க முடியாத காலத்தத்துவம் மற்றும் தாங்கள் ஆகியவற்றினால் எப்பொழுதும் கவலை நிறைந்தவர்களாய், மாற்றமுடியாத அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.

பதம் 7.13.34
சோக-மோஹ-பய-க்ரோத-
ராக-க்லைப்ய-ஸ்ரமாதய:
யன்-மூலா: ஸ்யுர் ந்ருணாம் ஜஹ்யாத்
ஸ்ப்ருஹாம் ப்ராணார்தயோர் புத:

சோக—வருத்தம்; மோஹ—மாயை; பய—பயம்; க்ரோத—கோபம்; ராக—பற்று; க்லைப்ய—ஏழ்மை; ஸ்ரம—அனாவசியமான உழைப்பு; ஆதய:—முதலியவைகள்; யத்-மூலா:—இவற்றிற்கெல்லாம் மூலகாரணமாக இருப்பதை; ஸ்யு:—ஆகின்றன; ந்ருணாம்—மனிதர்களின்; ஜஹ்யாத்—விட்டுவிட வேண்டும்; ஸ்ப்ருஹாம்—ஆசையை; ப்ராண—உடல் பலத்தில் அல்லது கௌரவத்தில் உள்ள; அர்த்தயோ:—மற்றும் பொருள் சேர்ப்பதில்; புத:—அறிவாளி ஒருவன்.

மனித சமுதாயத்திலுள்ள அறிவாளிகள் வருத்தம், மாயை, பயம், கோபம், பற்று, ஏழ்மை, மற்றும் அனாவசியமான உழைப்பு ஆகியவற்றிற்கு மூலகாரணமாக இருப்பதை விட்டுவிட வேண்டும். அனாவசியமான கெளரவத்திலும், பணத்திலும் உள்ள ஆசையே இவற்றிற்கெல்லாம் மூலகாரணம்.

பதம் 7.13.35
மதுகார-மஹா-ஸர்பௌ லோகே ‘ஸ்மின் நோ குரூத்தமெள
வைராக்யம் பரிதோஷம் ச ப்ராப்த யச்-சிக்ஷயா வயம்

மதுகார—தேனைச் சேகரிக்கப் பூப்பூவாகச் செல்லும் தேனீக்கள்; மஹா-ஸர்பௌ—பெரிய பாம்பு (ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகராத மலைப்பாம்பு); லோகே—உலகில்; அஸ்மின்—இந்த; ந:—எங்களுடைய; குரு—ஆன்மீக ஆசான்கள்; உத்தமௌ—முதல்தரமான; வைராக்யம்—துறவு; பரிதோஷம் ச—மற்றும் திருப்தி; ப்ராப்தா:—அடைந்துள்ள; யத்-சிக்ஷயா—யாருடைய உபதேசங்களால்; வயம்—நாங்கள்.

ஒருவன் எப்படி சிறிதளவு மட்டுமே சேகரிப்பதிலும், அசையாமல் ஒரே இடத்தில் இருப்பதிலும் திருப்தியடைய வேண்டும் என்ற விஷயத்தில் பின்பற்றத்தக்க உபதேசங்களைக் கொடுக்கும் தேனீயும், மலைப்பாம்பும் மிகச் சிறந்த ஆன்மீக ஆசான்களாக விளங்குகின்றன.

பதம் 7.13.36
விராக: ஸர்வ-காமேப்ய: சிக்ஷிதோ மே மது-வ்ரதாத்
க்ருச்ராப்தம் மதுவத் வித்தம் ஹத்வாபி அன்யோ ஹரேத் பதிம்

விராக:—பற்றின்மை; ஸர்வ-காமேப்ய:—எல்லா பௌதிக ஆசைகளிலிருந்து; சிக்ஷித:—கற்பிக்கப்பட்டது; மே—எனக்கு; மது-வரதாத்—வண்டுகளிடமிருந்து; க்ருச்ர—மிகவும் சிரமத்துடன்; ஆப்தம்—அடையப்பட்ட; மது-வத்—தேனைப் போன்றது; வித்தம்—பணமானது; ஹத்வா—கொன்று; அபி—கூட; அன்ய:—மற்றொருவன்; ஹரேத்:—அபகரித்துச் செல்கிறான்; பதிம்—உரிமையாளனை.

வண்டுகளிடமிருந்து, பொருள் சேர்ப்பதில் பற்றற்றவனாக இருக்க நான் கற்றுக்கொண்டேன். பணமானது தேனைப் போன்றது என்ற போதிலும், ஒருவன் உரிமையாளனைக் கொன்று பணத்தை அவனிடமிருந்து அபகரித்துச் சென்றுவிடக் கூடும்.

பதம் 7.13.37
அனீஹ: பரிதுஷ்டாத்மா யத்ருச்சோபனதாத் அஹம்
நோ சேச் சயே பஹு-அஹானி மஹாஹிர் இவ ஸத்வவான்

அனீஹ:—அதிக ஆசையின்றி; பரிதுஷ்ட—மிகவும் திருப்தியடைகிறேன்; ஆத்மா—ஆத்மா; யத்ருச்சா—முயற்சியின்றி தானே வரும்; உபனதாத்—உடைமைகளால்; அஹம்—நான்; ந—இல்லை; சேத்—அப்படியிருந்தால்; சயே—நான் கீழே படுத்திருப்பேன்; பஹு—பல; அஹானி—நாட்கள்; மஹா-அஹி:—ஒரு மலைப்பாம்பு; இவ—போல்; ஸத்வ-வான்—பொறுமையாக.

நான் எதையுமே அடைய முயற்சி செய்வதில்லை. ஆனால் தானாகவே கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைகிறேன். எனக்கு எதுவுமே கிடைக்காத சமயத்திலும், ஒரு மலைப்பாம்பைப் போல் சலனமின்றி பொறுமையாக இருந்துகொண்டு, பல நாட்களுக்கு இவ்வாறு படுத்துக் கொண்டிருக்கிறேன்.

பதம் 7.13.38
க்வசித் அல்பம் க்வசித் பூரி புஞ்ஜே ‘ன்னம் ஸ்வாது அஸ்வாது வா
க்வசித் பூரி குணோபேதம் குண-ஹீனம் உத க்வசித்
ஸ்ரத்த யோபஹ்ருதம் க்வாபி கதாசின் மான-வர்ஜிதம்
புஞ்ஜே பூக்த்வாத கஸ்மிம்ஸ் சித் திவா நக்தம் யத்ருச்சயா

க்வசித்—சிலசமயம்; அல்பம்—மிகக் குறைந்த அளவு; க்வசித்—சிலசமயம்; பூரி—அதிக அளவு; புஞ்ஞே—நான் உண்கிறேன்; அன்னம்—உணவு; ஸ்வாது—சுவையான; அஸ்வாது—சுவையற்ற; வா—அல்லது; க்வசித்—சிலசமயம்; பூரி—அதிகமான; குண-உபேதம்—நல்ல வாசனையுள்ள; குண-ஹீனம்—வாசனையற்ற; உத—அல்லது; க்வசித்—சிலசமயம்; ஸ்ரத்தயா—மரியாதையுடன்; உபஹ்ருதம்—ஒருவரால் கொண்டுவரப்படுகிறது; க்வாபி—சிலசமயம்; கதாசித்—சிலசமயம்; மான-வர்ஜிதம்—மரியாதையின்றி வழங்கப்படுகிறது; புஞ்ஜே—நான் உண்கிறேன்; புக்த்வா—உண்டபின்; அத—அப்படியே; கஸ்மின் சித்—சிலசமயம், ஏதோ ஓரிடத்தில்; திவா—பகலில்; நக்தம்—அல்லது இரவில்; யத்ருச்சயா—கிடைப்பது போல்.

சிலசமயங்களில் மிகக் குறைவாகவும், சிலசமயங்களில் மிகவும் அதிகமாகவும் நான் சாப்பிடுகிறேன். சிலசமயங்களில் உணவு சுவைமிக்கதாகவும், சிலசமயங்களில் சுவையற்றதாகவும் இருக்கும். சிலசமயங்களில் அலட்சியமாக உணவு கொடுக்கப்படும். சிலசமயங்களில் பகலிலும், சிலசமயங்களில் இரவிலும் நான் சாப்பிடுவேன். இவ்வாறாக சுலபமாகக் கிடைப்பதையே நான் சாப்பிடுகிறேன்

பதம் 7.13.39
க்ஷெளமம் துகூலம் அஜினம் சீரம் வல்கலம் ஏவ வா
வஸோ ‘ன்யத் அபி ஸம்ப்ராப்தம் திஷ்ட-புக் துஷ்ட-தீர் அஹம்

க்ஷெளமம்—சணல் துணி; துகூலம்—பட்டு அல்லது பருத்தி; அஜினம்—மான்தோல்; சீரம்—இடுப்புத் துணி; வல்கலம்—மரிவுரி; ஏவ—உள்ளபடி; வா—அல்லது; வஸே—நான் அணிகிறேன்; அன்யத்—வேறொன்று; அபி—என்ற போதிலும்; ஸம்ப்ராப்தம்—கிடைத்தபடி; திஷ்ட-புக்—விதிப்படி; துஷ்ட—திருப்தியடைந்த; தீ:—மனதை உடையவனாக; அஹம்—நான் இருக்கிறேன்.

என்னுடைய விதியின்படி சணல் துணி, பட்டு, பருத்தி, மரவுரி அல்லது மான்தோல் ஆகியவற்றுள் எது கிடைக்கிறதோ, அதையே உடலை மூடிக்கொள்ள நான் உபயோகிக்கிறேன். அதைக் கொண்டு நான் சஞ்சலமில்லாமல் முழு திருப்தியடைகிறேன்.

பதம் 7.13.40
க்வசித் சயே தரோபஸ்தே த்ருண-பர்ணாஸ்ம-பஸ்மௌ
க்வசித் ப்ராஸாத-பர்யங்கே கசிபௌ வா பரேச்சயா

க்வசித்—சிலசமயம்; சயே—நான் படுத்துக் கொள்கிறேன்; தர-உபஸ்தே—தரையின் மேல்; த்ருண—புல்லின் மேல்; பர்ண—இலைகள்; அஸ்ம—கல்; பஸ்மௌ—சாம்பல் குவியல்; க்வசித்—சிலசமயம்; ப்ராஸாத—அரண்மனைகளில்; பர்யங்கே—முதல்தரமான ஒரு படுக்கைமேல்; கசிபெள—ஒரு தலையணை மேல்; வா—அல்லது; பர—மற்றொருவரின்; இச்சயா—விருப்பத்தினால்.

சிலசமயம் தரையிலும், சிலசமயம் இலைகள், புல் அல்லது கற்களின் மேலும், சிலசமயம் சாம்பல் குவியலின் மேலும், அல்லது சிலசமயம் பிறருடைய விருப்பத்தினால், ஓர் அரண்மனையில் தலையணைகளுடன் கூடிய முதல் தரமான ஒரு படுக்கையிலும் நான் படுத்துக் கொள்கிறேன்.

பதம் 7.13.41
க்வசித் ஸ்னாதோ ‘நுலிப்தாங்க: ஸுவாஸா: ஸ்ரக்வி அலங்க்ருத:
ரதேபாவ்வைஸ் சரே க்வாபி திக்-வாஸா க்ரஹவத் வி போ

க்வசித்—சிலசமயம்; ஸ்னாத:—நன்கு நீராடி; அனுலிப்த-அங்க:—உடல் முழுவதும் சந்தனம் தடவி; ஸு-வாஸா:—நல்ல ஆடைகளை உடுத்தி; ஸ்ரக்வீ—மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு; அலங்க்ருத:—பலவகையான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு; ரத—ஒரு தேரின் மேல்; இப—யானையின் மேல்; அஸ்வை:—அல்லது குதிரையின் மேல்; சரே—நான் செல்கிறேன்; க்வாபி—சிலசமயம்; திக்-வாஸா:—முற்றிலும் நிர்வாணமாக; க்ரஹ-வத்—பேய் பிடித்தவன் போல்; விபோ—பிரபுவே.

பிரபுவே, சிலசமயம் நான் நன்றாக நீராடி, என் உடல் முழுவதிலும் சந்தனம் தடவி, மலர் மாலை அணிந்து, நல்ல ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு ஓர் அரசனைப் போல் யானையின் மேல் அல்லது தேரின்மேல் அல்லது குதிரையின் மேல் பிரயாணம் செய்கிறேன். ஆனால் சிலசமயம் பேய் பிடித்தவன் போல் நிர்வாணமாகப் பிரயாணம் செய்கிறேன்.

பதம் 7.13.42
நாஹம் நிந்தே ந ச ஸ்தௌமி ஸ்வ-பாவ-விஷமம் ஜனம்
ஏதேஷாம் ஸ்ரேய ஆசாஸே உதைகாத்ம்யம் மஹாத்மனி

ந—இல்லை; அஹம்—நான்; நிந்தே—இகழ்வதோ; ந—அல்லது; ச—கூட; ஸ்தெளமி—புகழ்வதோ; ஸ்வ-பாவ—யாருடைய சுபாவம்; விஷமம்—எதிர்மாறான; ஜனம்—ஒரு ஜீவராசியை அல்லது மனிதனை; ஏதேஷாம்—அவர்கள் அனைவருடைய; ஸ்ரேய:—முடிவான நன்மைக்கு; ஆசாஸே—வேண்டுகிறேன்; உத—உண்மையில்; ஜகாத்-ம்யம்—ஒருமை; மஹா-ஆத்மனி—பரப்பிரம்மனான (கிருஷ்ணர்) பரமாத்மாவில்.

வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு மனநிலைகளில் இருக்கின்றனர். ஆகவே அவர்களைப் புகழ்வதோ அல்லது இகழ்வதோ என் வேலையல்ல. அவர்களுடைய நலனை மட்டுமே நான் விரும்புகிறேன். அவர்கள் பரமாத்மாவுடன், அல்லது பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணருடன் ஒன்றிவிட சம்மதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

பதம் 7.13.43
விகல்பம் ஜுஹுயாச் சித்தௌ தாம் மனஸி அர்த்த- விப்ரமே
மனோ வைகாரிகே ஹுத்வா தம் மாயாயாம் ஜு ஹோதி அனு

விகல்பம்—பாகுபாடு (நல்லது கெட்டது, ஒருவன் மற்றொருவன், ஒரு நாடு மற்றொரு நாடு, மற்றும் இதுபோன்ற பாகுபாடுகள்); ஜுஹுயாத்—ஒருவன் அர்ப்பணித்துவிட வேண்டும்; சித்தௌ—உணர்வெனும் தீயில்; தாம்—அவ்வுணர்வை; மனஸி—மனதில்; அர்த்த-விப்ரமே—ஏற்பதற்கும், விலக்குவதற்கும் வேராக உள்ள; மன:—அந்த மனதை; வைகாரிகே—தன்னை ஜடத்துடன் ஒன்றுபட்டவனாக அடையாளப்படுத்தும் பொய் அகங்காரத்தில்; ஹுத்வா—நிவேதனமாக அர்ப்பணித்து; தம்—இந்த பொய் அகங்காரத்தை; மாயாயாம்—மொத்த ஜட சக்தியில்; ஜுஹோதி—நிவேதனமாக அர்ப்பணிக்கிறான்; அனு—இக்கொள்கையைப் பின்பற்றி.

வெறும் மனக்கற்பனையான நல்லதையும், கெட்டதையும் ஒன்றே என்று ஏற்றுக் கொண்டு, அவற்றை மனதில் அர்ப்பணித்துவிட வேண்டும். பிறகு அந்த மனதைப் பொய் அகங்காரத்தில் அர்ப்பணிக்க வேண்டும். பொய் அகங்காரத்தை மொத்த பெளதிக சக்தியில் அர்ப்பணிக்க வேண்டும். இதுவே பொய்யான பாகுபாட்டை எதிர்த்துப் போரிடும் முறையாகும்.

பதம் 7.13.44
ஆத்மானுபூதௌ தாம் மாயாம் ஜுஹுயாத் ஸத்ய-த்ருண் முனி:
ததோ நிரீஹோ விரமேத் ஸ்வானுபூதி-ஆத்மனி ஸ்தித:

ஆத்ம-அனுபூதெள—தன்னை அறிவதற்கு; தாம்—அந்த; மாயாம்—பெளதிக வாழ்வெனும் பொய் அகங்காரத்தை; ஜுஹுயாத்—நிவேதனமாக அர்ப்பணித்துவிட வேண்டும்; ஸத்ய-த்ருக்—உண்மையாகவே பரம உண்மையை உணர்ந்துள்ளவன்; முனி:—இத்தகைய ஒரு விவேகி; தத:—இந்த தன்னுணர்வின் காரணத்தால்; நிரீஹ:—பௌதிக ஆசைகளின்றி; விரமேத்—பௌதிக செயல்களிலிருந்து ஒருவன் முழுமையாக விலகி விட வேண்டும்; ஸ்வ-அனுபூதி-ஆத்மனி—தன்னுணர்வில்; ஸ்தித:—இவ்வாறு நிலைபெற்றவனாய்.

பெளதிக வாழ்வு மாயையானது என்பதை, கற்றறிந்த ஒருவன் உணரவேண்டும். இது தன்னுணர்வின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். நிஜமாகவே உண்மையைக் கண்டுள்ள தன்னுணர்வு பெற்ற ஒருவன், தன்னுணர்வில் நிலைபெற்றவனாய், எல்லா பெளதிக செயல்களிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும்.

பதம் 7.13.45
ஸ்வாத்ம-வ்ருத்தம் மயேத்தம் தே ஸுகுப்தம் அபி வர்ணிதம்
வ்யபேதம் லோக-சாஸ்த்ராப்யாம் பவான் ஹி பகவத்-பர:

ஸ்வ-ஆத்ம-வ்ருத்தம்—தன்னுணர்வின் வரலாற்றைப் பற்றிய செய்தி; மயா—என்னால்; இத்தம்—இவ்வாறு; தே—உங்களுக்கு; ஸுகுப்தம்—மிகவும் இரகசியமானது; அபி—என்ற போதிலும்; வர்ணிதம்—விவரிக்கப்பட்டது; வ்யபேதம்—இல்லாமல்; லோக-சாஸ்த்ராப்யாம்—சாதாரண மனிதனின் அல்லது சாதாரண இலக்கியத்தின் அபிப்பிராயம்; பவான்—நீங்கள்; ஹி—உண்மையாக; பகவத்-பர:—பரமபுருஷரைப் பூரணமாக உணர்ந்திருப்பதால்.

பிரகலாத மகாராஜனே, நீங்கள் நிச்சயமாகத் தன்னுணர்வு பெற்ற ஓர் ஆத்மாவும், பரமபுருஷரின் ஒரு பக்தருமாவீர். நீங்கள் பொது ஜனங்களின் அபிப்பிராயத்தைப் பற்றியோ, பெயரளவேயான சாஸ்திரங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. இந்த காரணத்திற்காகத்தான் எனது தன்னுணர்வைப் பற்றிய வரலாற்றைத் தயக்கமின்றி உமக்கு நான் விவரித்தேன்.

பதம் 7.13.46
ஸ்ரீ-நாரத உவாச
தர்மம் பாரமஹம்ஸ்யம் வை முனே: ஸ்ருத்வாஸுரேஸ்வர:
பூஜயித்வா தத: ப்ரீத ஆமந்த்ரிய ப்ரயயௌ க்ருஹம்

ஸ்ரீ-நாரத உவாச—ஸ்ரீ நாரதமுனி கூறினார்; தர்மம்—வர்ணாஸ்ரம கடமை; பாரமஹம்ஸ்யம்—மிகவும் பூரணத்துவமடைந்த பரமஹம்ஸர்களின்; வை—உண்மையில்; முனே:—துறவியிடமிருந்து; ஸ்ருத்வா—கேட்டபிறகு; அஸுர-ஈஸ்வர:—அசுர வேந்தனான பிரகலாத மகாராஜன்; பூஜயித்வா—அத்துறவியைப் பூஜித்து; தத:—பிறகு; ப்ரீத:—மிகவும் திருப்தியடைந்தவராய்; ஆமந்த்ரிய—அனுமதி பெற்று; ப்ரயயெள—அந்த இடத்தை விட்டுச் சென்றார்; க்ருஹம்—தன்வீட்டிற்கு.

நாரத முனி தொடர்ந்து கூறினார்: அசுர வேந்தனான பிரகலராத மகாராஜன் அத்துறவியிடமிருந்து இவ்வுபதேசங்களைக் கேட்ட பிறகு பூரணத்துவம் பெற்ற ஒருவரின் (பரமஹம்சரின்) கடமை என்னவென்பதைப் புரிந்து கொண்டார். இவ்வாறாக அவர் அத்துறவியைச் சரிவர பூஜித்த பிறகு, அவரிடம் அனுமதி பெற்ற தனது இல்லம் திரும்பினார்.


ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின் “பூரணத்துவம் அடைந்தவரின் நடத்தை” எனும் தலைப்பை கொண்ட பதிமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare