அத்தியாயம் – 11
பரிபூரண சமுதாயம் :
நான்கு சமூகப் பிரிவுகள்
பதம் 7.11.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பிரம்மதேவர், சிவபெருமான் முதலான சிறந்த புருஷர்களுக்கிடையில் பூஜிக்கத் தகுந்தவையும், விவாதிக்கப்படுபவையுமான பிரகலாத மகாராஜனின் செயல்களைப் பற்றியும், குணாதிசயங்களைப் பற்றியும் கேட்ட பிறகு, மேன் மக்களுக்கிடையில் மிகவும் மதித்துப் போற்றப்படும் அரசரான யுதிஷ்டிர மகாராஜன் மிகவும் மகிழ்ச்சியுடன் நாரத முனிவரிடம் மீண்டும் வினவினார்.

பதம் 7.11.2 : யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: என் பிரபுவே, எதனால் வாழ்வின் இறுதி லட்சியமாகிய பக்தித் தொண்டை ஒருவனால் அடையமுடியுமோ, அந்த சமயக் கோட்பாடுகளைப் பற்றி தங்களிடமிருந்து நான் கேட்க விரும்புகிறேன். மேலும் மனித சமுதாயத்தின் பொதுவான உத்தியோகக் கடமைகளைப் பற்றியும், வர்ணாஸ்ரம தர்மம் எனப்படும் சமூக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தின் நெறிமுறைகளைப் பற்றியும் நான் கேட்க விரும்புகிறேன்.

பதம் 7.11.3 : பிராமண சிரேஷ்டரே, தாங்கள் பிரஜாபதியின் (பிரம்மதேவரின்) புதல்வராவீர். உங்களுடைய தவங்கள், அஷ்டாங்க யோகம் மற்றும் சமாதிநிலை ஆகியவற்றின் காரணத்தால் பிரம்மதேவரின் புத்திர்களிலேயே தாங்கள் மிகச் சிறந்தவராக கருதப்படுகிறீர்கள்.

பதம் 7.11.4 : அமைதியும், கருணையும், நிறைந்த வாழ்வில் தங்களைவிட மேலானவர் ஒருவருமில்லை. பக்தித் தொண்டை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதையும், மிகச் சிறந்த பிராமணராவது எப்படி என்பதையும் நன்கறிந்தவர் தங்களைவிட வேறொவரும் இல்லை.

பதம் 7.11.5 : ஸ்ரீ நாரத முனி கூறினார்: சகல ஜீவராசிகளுக்கும் உரிய சமயக்கோட்பாடுகளின் காவலரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது முதற்கண் வணக்கத்தைச் சமர்ப்பித்து, நாராயணரின் வாயிலிருந்து நான் கேட்ட நித்திய சமயமுறையைப் பற்றிய கோட்பாடுகளை நான் விவரிக்கிறேன்.

பதம் 7.11.6 : பகவான் நாராயணர் அவரது அம்சமான நாரதருடன் தட்ச மகாராஜனின் மகளான மூர்த்தியின் மூலமாக இவ்வுலகில் தோன்றினார். அவர் அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக தர்ம மகாராஜனால் பெற்றெடுக்கப்பட்டார். அவர் இன்றும் பக்தரிகாஸ்ரமம் என்ற இடத்திற்கு அருகில் கடுந்தவங்களை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளார்.

பதம் 7.11.7 : பரம ஜீவனாகிய பரமபுருஷர், சகல வேத ஞானத்திற்கும் சாராம்சமும், சகல சமயக் கோட்பாடுகளுக்கும் மூலமும், சிறந்த வேத வல்லுனர்களின் ஞாபக சக்தியுமாவார். யுதிஷ்டிர மகாராஜனே, இச்சமயக் கோட்பாடே உண்மையானதென அறியப்பட வேண்டும். இச்சமயக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஒருவனது மனம். ஆத்மா, உடல் உட்பட்ட அனைத்தும் திருப்தி அடைகின்றன.

பதங்கள் 7.11.8 – 7.11.12 : எல்லா மனிதர்களாலும் பின்பற்றப்பட வேண்டிய பொதுவான கோட்பாடுகள் சில உள்ளன: அவை, உண்மையே பேசுதல், கருணை, தவம் (குறிப்பிட்ட நாட்களில் விரதம் அனுஷ்டித்தல்), ஒருநாளுக்கு இருமுறை குளிப்பது, பொறுமை, சரியையும், தவறையும் பகுத்தறிவது, மனவடக்கம், புலனடக்கம், அகிம்சை, பிரம்மச்சரியம், தானம், சாஸ்திரப்படிப்பு, எளிமை, திருப்தி, சாதுக்களுக்குச் சேவை செய்தல், படிப்படியாக அனாவசியமான ஈடுபாடுகளிலிருந்து விலகுதல், மனித சமுதாயத்தினுடைய அனாவசியமான செயல்களின் பயனின்மையை அறிதல், தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்து மெளனமாகவும் ஆழ்ந்த கவனத்துடனும் இருத்தல், தான் உடலா அல்லது ஆத்மாவா என்று சிந்தித்தல், (மனிதர்கள் மற்றும் மிருகங்கள் ஆகிய) அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவைச் சமமாகப் பகிர்ந்தளித்தல், ஒவ்வொரு ஆத்மாவையும் (குறிப்பாக மனித ரூபத்திலுள்ள ஆத்மாக்களை) பரமபுருஷரின் பின்னப்பகுதிகளாகக் காணுதல், (சாதுக்களுக்குப் புகலிடமான பரமபுருஷரால் அளிக்கப்பட்டுள்ள செயல்களைப் பற்றியும், உபதேசங்களைப் பற்றியும் கேட்டல், இச்செயல்களையும் உபதேசங்களையும் எப்பொழுதும் நினைவில் வைத்திருத்தல், சேவை செய்ய முயலுதல், வழிபடுதல், வணக்கம் செலுத்துதல், ஒரு சேவகனாகப் பணிவிடை செய்தல், ஒரு நண்பனாகுதல், மற்றும் தன்னை அர்ப்பணித்தல், யுதிஷ்டிர மகாராஜனே, இந்த முப்பது தகுதி முறைகளும் மனித உருவிலுள்ள ஒருவனால் அடையப்பட வேண்டியவையாகும். இத்தகுதி முறைகளை அடைவதாலேயே ஒருவனால் பரமபுருஷரை திருப்திப்படுத்தி விட முடியும்.

பதம் 7.11.13 : வேத மந்திரங்களைக் கொண்டு செய்யப்படும் கர்பாதான சடங்கினாலும், பிற வழிமுறைகளாலும் புனிதப்படுத்தப்பட்டு, பிரம்மதேவரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் த்விஜர்கள், அல்லது இருபிறப்பு எய்தியவர்கள் ஆவர். இத்தகைய பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் தங்களுடைய குல வழக்கங்களாலும், நடத்தையாலும் தூய்மையடைந்து பகவானை வழிபட வேண்டும். மேலும் வேதங்களைக் கற்பதுடன், தான தருமங்களையும் செய்ய வேண்டும். இந்த முறையில், (பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய) நான்கு ஆசிரமங்களின் கோட்பாடுகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

பதம் 7.11.14 : ஒரு பிராமணனுக்கு ஆறுவிதமான தொழிற் கடமைகள் உள்ளன. ஒரு க்ஷத்திரியன் தானம் ஏற்கக்கூடாது. ஆனால் பிராமணனுக்குரிய மற்ற ஐந்து கடமைகளையும் அவன் செய்யலாம். ஓர் அரசன் அல்லது க்ஷத்திரியன் பிராமணர்களிடமிருந்து வரி வசூலிப்பதும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவன் தனது மற்ற பிரஜைகளிடமிருந்து குறைந்தபட்ச வரிகளையும், அபராதத் தொகைகளையும் வசூலிப்பதன் மூலம் தனது வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக் கொள்ளலாம்.

பதம் 7.11.15 : வணிகர் சமூகம் எப்பொழுதும் பிராமணர்களின் உத்தரவுகளைப் பின்பற்றி விவசாயம், வியாபாரம், பசு பராமரிப்பு போன்ற தொழிற்கடமைகளில் ஈடுபட வேண்டும். ஒரு சூத்திரன் ஏதேனும் ஓர் உயர்பிரிவைச் சேர்ந்த ஒரு எஜமானரை ஏற்றுக் கொண்டு, அவரது சேவையில் ஈடுபடுவதே அவனது ஒரே கடமையாகும்.

பதம் 7.11.16 : பிராமணர் ஒருவர் மாற்றுத் தொழிலாக வைசியர்களுக்குரிய விவசாயம், பசு பராமரிப்பு, அல்லது வியாபாரம் ஆகிய தொழிற் கடமையை ஏற்றுக்கொள்ளலாம். அவர் யாசகம் செய்யாமல் தான் பெற்றதையோ, தினமும் நெல் வயலில் தான் யாசிப்பதையோ, உரிமையாளரால் வயலில் விட்டுச் செல்லப்பட்ட நெல்லை சேகரிப்பதையோ, அல்லது தானிய வியாபாரிகளால் இங்குமங்கும் விட்டுச் செல்லப்பட்ட உணவுத் தானியங்களைச் சேகரிப்பதையோ நம்பி வாழலாம். இங்கு நான்கு ஜீவனோபாய முறைகளைக்கூட பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இந்நான்கில் ஒவ்வொன்றும் முந்தியதைவிடச் சிறந்ததாகும்.

பதம் 7.11.17 : அவசர காலங்களைத் தவிர மற்ற சமயங்களில், கீழ் நிலையிலுள்ளோர் மேல் நிலையில் உள்ளவர்களின் தொழிற் கடமைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இத்தகைய ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்படும் பொழுது, நிச்சயமாக க்ஷத்திரியர்களைத் தவிர மற்ற பிரிவினர் பிறருடைய ஜீவனோபாய முறையை ஏற்றுக் கொள்ளலாம்.

பதங்கள் 7.11.18 – 7.11.20 : அவசர காலங்களில், ருத, அம்ருத, ம்ருத, ப்ரம்ருத மற்றும் ஸத்யாம் ருதக எனப்படும் பல்வேறு வகையான தொழில்களில் ஏதேனும் ஒன்றை ஒருவன் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாயின் தொழிலை ஒருவன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. வயலிலிருந்து தானியங்களைச் சேகரிக்கும் உஞ்சசில என்ற தொழில் ருத என்று அழைக்கப்படுகிறது. யாசிக்காமல் சேகரிப்பது அம்ருத எனப்படுகிறது. தானியங்களை யாசிப்பது ம்ருத எனப்படுகிறது. நிலத்தை உழுவது ப்ரம்ருத எனப்படுகிறது. வியாபாரம் ஸத்யன்ருத எனப்படுகிறது. ஆனால் கீழானவர்களின் சேவையில் ஈடுபடுவது ஸ்வ-வ்ருத்தி அதாவது நாய்களின் தொழில் எனப்படுகிறது. குறிப்பாக பிராமணர்களும் க்ஷத்திரியர்களும், வெறுக்கத் தகுந்ததான சூத்திரர்களின் சேவையில் ஈடுபடக் கூடாது. பிராமணர்கள் வேத ஞானத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். க்ஷத்திரியர்களோ தேவ ஆராதனையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பதம் 7.11.21 : மனவடக்கம், புலனடக்கம், தவம், விரதம், தூய்மை, திருப்தி, மன்னிக்கும் குணம், எளிமை, அறிவு, இரக்கம், உண்மை, மற்றும் பரமபுருஷரிடம் பூரண சரணாகதி ஆகியவை ஒரு பிராமணருக்குரிய அடையாளங்களாகும்.

பதம் 7.11.22 : யுத்த தேர்ச்சி, தோல்வியின்மை, பொறுமை, சண்டைக்கழைத்தல், பெருந்தன்மை, உடல் தேவைகளைக் கட்டுப்படுத்துதல், மன்னித்தல், பிராமண பண்பாட்டில் பற்றுக் கொண்டிருத்தல், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருத்தல், மற்றும் உண்மையே பேசுதல் ஆகியவை க்ஷத்திரியனின் அடையாளங்களாகும்.

பதம் 7.11.23 : தேவர்களிடமும், ஆன்மீக குருவிடமும், பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவிடமும் எப்பொழுதும் பக்தி கொண்டிருத்தல்; சமய வாழ்விலும், பொருளாதார முன்னேற்றத்திலும், புலன் நுகர்விலும் (தர்ம, அர்த்த, காம) முன்னேற முயற்சித்தல்; குரு மற்றும் சாஸ்திரங்களின் சொற்களில் நம்பிக்கைக் கொள்ளல்; மற்றும் எப்பொழுதும் சாமர்த்தியமாகப் பொருளீட்ட முயற்சித்தல் ஆகியவை வைசியனுக்குரிய அடையாளங்களாகும்.

பதம் 7.11.24 : சமுதாயத்தின் உயர் பிரிவுகளுக்கு (பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர்களுக்கு) வணக்கம் செலுத்துதல், எப்பொழுதும் மிகவும் சுத்தமாக இருத்தல், கபடத்தன்மை இல்லாதிருத்தல், தன் எஜமானருக்குச் சேவை செய்தல், மந்திரங்களை உச்சரிக்காமல் யாகங்கள் செய்தல், திருடாமல் இருத்தல், எப்பொழுதும் உண்மையே பேசுதல், பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் முழு பாதுகாப்பு அளித்தல் ஆகியவை சூத்திரனின் அடையாளங்களாகும்.

பதம் 7.11.25 : கணவனுக்குச் சேவை செய்தல், கணவனிடம் எப்பொழுதும் அனுகூலமாக நடந்து கொள்ளுதல், கணவனின் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அவ்வாறே நடந்து கொள்ளுதல், கணவனின் விரதங்களைப் பின்பற்றுதல் ஆகிய இந்நான்கு கொள்கைகளும் கற்புடையவள் என்று விவரிக்கப்படும் பெண்களால் பின்பற்றப்பட வேண்டியவையாகும்.

பதங்கள் 7.11.26 – 7.11.27 : கற்புடைய ஒரு பெண் தன் கணவனின் மகிழ்ச்சிகாக நன்கு ஆடை அணிந்து, தங்க ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அவள் எப்பொழுதும் சுத்தமான, கவர்ச்சியான ஆடைகளை உடுத்தி, வீட்டைப் பெருக்கி, அது எப்பொழுதும் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்படி நீரினாலும் மற்ற திரவங்களினாலும் முழு வீட்டையும் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். அவள் வீட்டிற்குத் தேவையான சாமான்களைச் சேகரிக்க வேண்டும். மேலும் வாசனை பத்திகளாலும், மலர்களாலும் வீட்டை எப்பொழுதும் நறுமணம் கொண்டதாக வைத்துக் கொண்டு, தன் கணவனின் விருப்பங்களை நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும். அவள் அடக்கத்துடனும், உண்மையாகவும், புலனடக்கத்துடனும் இருப்பதுடன், இனிய வார்த்தைகளையே பேசுபவளாகவும் இருக்க வேண்டும். இத்தகைய ஒரு கற்புடைய பெண் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்பதன் கணவனுக்கு அன்புடன் சேவை செய்வதில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்க வேண்டும்.

பதம் 7.11.28 : கற்புடைய ஒரு பெண் பேராசை இல்லாதவளாகவும், எல்லாச் சூழ்நிலைகளிலும் திருப்தி அடைந்தவளாகவும் இருக்கவேண்டும். குடும்ப விவகாரங்களைக் கையாள்வதில் அவள் சாமர்த்தியம் உள்ளவளாக இருக்கவேண்டும். மேலும் சமயக் கோட்பாடுகளில் ஆழ்ந்த பரிச்சயம் உள்ளவளாகவும் இருக்கவேண்டும். அவள் உண்மையாகவும், இன்பம் ஊட்டும் வகையிலும் பேசுவதுடன், அதிக கவனமுள்ளவளாகவும், எப்பொழுதும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். இவ்வறாக கற்புடைய ஒரு பெண் இழிவடையாத தன் கணவனின் அன்பான சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

பதம் 7.11.29 : லக்ஷ்மி தேவியின் அடிச்சுவடுகளை உறுதியாகப் பின்பற்றி தன் கணவனின் சேவையில் ஈடுபடும் ஒரு பெண், நிச்சயமாகத் தன் கணவனுடன் பரமபதம் அடைந்து வைகுண்ட லோகங்களில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வாள்.

பதம் 7.11.30 : ஸங்கரம் எனப்படும் கலப்படமான பிரிவினருக்கிடையில், திருடர்கள் அல்லாதவர்கள், அந்தேவஸாயீ அல்லது சண்டாளர்கள் (நாய் திண்பவர்கள்) என்று அறியப்படுகின்றனர். அவர்களுக்கும் பாரம்பரிய வழக்கங்கள் உள்ளன.

பதம் 7.11.31 : அரசே, ஒவ்வொரு யுகத்திலும் தங்களுடைய இயற்கைக் குணங்களுக்கேற்ப செயற்படும் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மக்களின் நடத்தையானது, இம்மையிலும், மறுமையிலும் மங்களம் அளிப்பதாகும்.

பதம் 7.11.32 : ஒருவன் தன்னுடைய இயற்கையான குணத்திற்கேற்ப தனக்குரிய தொழிலைச் செய்து, படிப்படியாக இச்செயல்களை விட்டுவிடும் பொழுது, நிஷ்காம நிலையை அடைகிறான்.

பதங்கள் 7.11.33 – 7.11.34 : அரசே, விவசாய நிலத்தில் திரும்பத் திரும்ப பயிர் செய்யும் பொழுது அதன் உற்பத்தித்திறன் குறைந்து, அதில் விதைக்கப்படும் விதைகள் வீணாகி விடுகின்றன. எரியும் நெருப்பில் சொட்டுச் சொட்டாகவிடப்படும் நெய் நெருப்பை வளர்க்கும். ஆனால் அதில் வெள்ளமாக நெய்யைக் கொட்டினால் அது நெருப்பை அணைத்துவிடும். அது போலவே, காம இச்சைகளில் மிதமிஞ்சிய ஈடுபாடு இத்தகைய ஆசைகளை முழுமையாக சமனப்படுத்திவிடுகிறது.

பதம் 7.11.35 : ஒருவன் வேறொரு வகுப்பில் பிறந்துள்ள போதிலும், மேலே குறிப்பிட்டுள்ளது போல், அவன் ஒரு பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் அல்லது சூத்திரனுக்குரிய அடையாளங்களைக் காட்டுவானாயின், அந்த அடையாளங்களுக்கேற்பவே அவனை ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare