அத்தியாயம் – 1
பரமபுருஷர் அனைவருக்கும் சமமானவர்
பதம் 7.1.1 : பரீட்சித்து மகாராஜன் வினவினார்: பிராமணரே, பரமபுருஷராகிய ஸ்ரீ விஷ்ணு அனைவருக்கும் நலம்விரும்பி என்ற முறையில், எல்லோரிடமும் சமமானவரும், மிகவும் பிரியமுள்ளவருமாவார். அப்படியிருக்க, அவர் எவ்வாறு ஒரு சாதாரண மனிதனைப் போல் இந்திரனிடம் பாரபட்சம் கொண்டு, இந்திரனின் எதிரிகளைக் கொன்றார் எல்லோரிடமும் பாரபட்சமின்றி நடத்துகொள்ளும் ஒருவர் எப்படி சிலரிடம் பாரபட்சம் கொண்டவராகவும், மற்றவர்களிடம் விரோதம் கொண்டவராகவும் இருக்க முடியும்?

பதம் 7.1.2 : பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ விஷ்ணு தான் எல்லா ஆனந்தத்திற்கும் இருப்பிடமாவார். எனவே, தேவர்களின் பக்கமிருப்பதால் என்ன நன்மையை அவரால் அடைய முடியும்? இவ்விதமாக எந்த நோக்கத்தை அவரால் நிறைவேற்றிக் கொள்ள இயலும்? பகவான் திவ்ய புருஷர் என்பதால் அசுரர்களைக் கண்டு அவர் ஏன் அஞ்ச வேண்டும்? மேலும் அவரால் அவர்களிடம் எப்படி பொறாமை கொள்ள இயலும்?

பதம் 7.1.3 : மகா பாக்கியசாலியான கற்றறிந்த பிராமணரே, நாராயணர் பாரபட்சம் உடையவரா இல்லையா என்பது பெரும் சந்தேகத்திற்குரிய ஒரு விஷயமாகியுள்ளது. நாராயணர் எப்பொழுதும் பாரபட்சமின்றி அனைவரிடமும் சமமாக நடந்து கொள்பவர் என்ற தகுந்த ஆதாரத்தை காட்டி என் சந்தேகத்தைப் போக்கியருள வேண்டுகிறேன்.

பதங்கள் 7.1.4-7.1.5 : மாமுனிவரான சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, நீர் என்னிடம் மிகச் சிறந்த ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர். எதில் பக்தர்களின் பெருமைகளும் காணப்படுகின்றனவோ, அந்த பகவானின் செயல்களைப் பற்றிய உரையாடல்கள் பக்தர்களுக்கு மிகவும் இன்பம் அளிப்பவையாகும். அற்புதமான இத்தகைய கதைகள் பௌதிக வாழ்வு முறையினால் உண்டாகும் துன்பங்களை எப்பொழுதும் தடுத்து விடுகின்றன. எனவேதான் நாரதரைப் போன்ற மாமுனிவர்கள் எப்பொழுதும் ஸ்ரீமத் பாகவதத்தைப் பற்றியே பேசுகின்றனர். ஏனெனில், பகவானின் அற்புதச் செயல்களைப் பற்றி ஒருவன் கேட்பதற்கும், பாடுவதற்கும் உரிய வாய்ப்பை அது அளிக்கிறது. ஸ்ரீல வியாசதேவருக்கு எனது பணிவான வணக்கங்களைச் செலுத்தியபின், பகவான் ஸ்ரீ ஹரியின் செயல்களைப் பற்றிய கதைகளை நான் விவரிக்கத் துவங்குவேனாக.

பதம் 7.1.6 : பரமபுருஷரான ஸ்ரீ விஷ்ணு எப்பொழுதும் பௌதிக குணங்களுக்கு மேற்பட்டவராவார். எனவேதான் அவர் நிர்குண அதாவது குணங்களற்றவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் பற்றற்றவர் என்பதால், விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட ஒரு ஜட உடல் அவருக்கில்லை. பகவான் எப்பொழுதும் பௌதிக வாழ்வுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்றாலும், தமது ஆன்மீக சக்தியின் வாயிலாகத் தோன்றி, ஒரு சாதாரண மனிதனைப் போல் செயற்பட்ட அவர், புறத்தோற்றத்தில் ஒரு பந்தப்பட்ட ஆத்மாவைப் போல் கடமைகளையும், பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார்.

பதம் 7.1.7 : பரீட்சித்து மகாராஜனே, சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய பௌதிக குணங்கள் ஜட உலகிற்குச் சொந்தமானவையாகும். இவை பரம புருஷரைத் தொடுவது கூட இல்லை. இம்மூன்று குணங்களால் அதிகமாவதையும், குறைவதையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாது.

பதம் 7.1.8 : சத்வ குணம் மேலோங்கி இருக்கும்பொழுது, முனிவர்களும், தேவர்களும் அதன் உதவியுடன் செழிப்படைகின்றனர். பரமபுருஷரும் இக்குணத்தை அவர்களுக்குள் ஊட்டி நிரப்புகிறார். அதுபோலவே, ரஜோ குணம் மேலோங்கும் பொழுது அசுரர்கள் செழிப்படைகின்றனர். தமோ குணம் மேலோங்கும் பொழுது யக்ஷர்களும், இராட்சஸர்களும் செழிப்புறுகின்றனர். பரமபுருஷர் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய இக்குணங்களின் பிரதிபலன்களை வளர்த்துக் கொண்டு எல்லோருடைய இதயங்களிலும் வீற்றிருக்கிறார்.

பதம் 7.1.9 : எங்கும் நிறைந்துள்ள பரமபுருஷர் ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திலும் இருக்கிறார். அவர் எவ்வாறு அங்கு பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ இருக்கிறார் என்பதைச் சிறந்ததொரு அறிஞரால் காண முடியும். எப்படி ஒருவனால் விறகிலுள்ள தீயை, குடத்திலுள்ள நீரை அல்லது ஒரு பாத்திரத்திலுள்ள ஆகாயத்தைப் புரித்துகொள்ள முடிகிறதோ அப்படியே, ஒரு ஜீவராசியின் பக்தி பூர்வமான செயல்களைக் கொண்டு அந்த ஜீவராசி ஓர் அசுரனா அல்லது ஒரு தேவரா என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு நபரின் செயல்களைக் காண்பதன் மூலம் அவன் பரம புருஷரால் எந்த அளவிற்கு அனுக்கிரகிக்கப்பட்டுள்ளான் என்பதை சிந்தனையாளரால் புரிந்துகொள்ள முடியும்.

பதம் 7.1.10 : பரமபுருஷர் வெவ்வேறு வகையான உடல்களைப் படைத்து, ஒவ்வொரு ஜீவராசிக்கும் அவனது குணத்திற்கும், பலன்கருதும் செயல்களுக்கும் ஏற்ப ஒரு குறிப்பிட்ட உடலை அளிப்பதன் மூலமாக, சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய எல்லா ஜட இயற்கைக் குணங்களையும் உயிர்தெழச் செய்கிறார். பிறகு அவர் பரமாத்மாவாக, ஒவ்வொரு உடலுக்குள்ளும் புகுந்து, காப்பதற்கு சத்வ-குணத்தையும், படைப்பதற்கு ரஜோ-குணத்தையும், அழிப்பதற்குத் தமோ குணத்தையும் உபயோகித்து, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய குணங்களின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்.

பதம் 7.1.11 : மாமன்னரே, ஜட ஆன்மீக சக்திகளை ஆள்பவரும், முழு பிரபஞ்சத்தையும் படைத்தவருமான பரமபுருஷர்தான், ஜட சக்தியையும், ஜீவராசியையும் காலத்தின் எல்லைகளுக்குள் செயற்படச் செய்வதற்காக காலத் தத்துவத்தைப் படைக்கிறார். இவ்வாறாக பரமபுருஷர் காலத் தத்துவத்திற்கோ, பௌதிக சக்திக்கோ ஒருபோதும் கீழ்ப்படுவதேயில்லை.

பதம் 7.1.12 : அரசே, இக்காலத் தத்துவமானது சத்வ குணத்தை வளப்படுத்துகிறது. இவ்வாறாக பரமபுருஷர் அனைத்தையும் ஆள்பவர் என்றாலும், சத்வ- குணம் மேலோங்கியுள்ள தேவர்களுக்கு அவர் அருள் புரிகிறார். தமோ-குணம் மேலோங்கியுள்ள அசுரர்களோ அழிக்கப்படுகின்றனர். காலத் தத்துவத்தை வெவ்வேறு வழிகளில் செயற்படும்படி பரமபுருஷர் தூண்டுகிறார். ஆனால் அவர் ஒருபோதும் பாரபட்சம் உள்ளவரல்ல. மாறாக, அவரது செயல்கள் பெருமை வாய்ந்தவையாகும். எனவேதான் அவர் உருஸ்ரவா என்று அழைக்கப்படுகிறார்.

பதம் 7.1.13 : அரசே, முன்பு யுதிஷ்டிர மகாராஜனால் நடத்தப்பட்ட மகத்தான ராஜஸூய யாகத்தின்போது, அவரால் நாரத முனிவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு விடையளித்த மாமுனிவரான நாரதர், பரமபுருஷர் எப்படி அசுரர்களைக் கொல்லும் பொழுது கூட எப்பொழுதும் பாரபட்சமற்றவராகவே நடந்து கொள்கிறார் என்பதைக் காட்டும் சரித்திர உண்மைகளை எடுத்துரைத்தார். இவ்விஷயத்தில் ஒரு தெளிவான உதாரணத்தை அவர் கொடுத்துள்ளார்.

பதங்கள் 7.1.14-7.1.15 : அரசே, ராஜஸூய யக்ஞத்தில், பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் உடலுக்குள் சிசுபாலன் ஐக்கியமானதை, பாண்டு புத்திரரான யுதிஷ்டிர மகாராஜன் நேரடியாகக் கண்டார். இதனால் ஆச்சரியமடைந்த அவர் இதற்கான காரணத்தைப் பற்றி அங்கு வீற்றிருந்த தேவரிஷி நாரதரிடம் வினவினார். அவர் கேட்ட கேள்வியை அங்கு கூடியிருந்த மற்றெல்லா முனிவர்களும் கூட செவியுற்றனர்.

பதம் 7.1.16 : யுதிஷ்டிர மகாராஜன் வினவினார்: அசுரனான சிசுபாலன் மிகவும் பொறாமை கொண்டிருந்த போதிலும், அவன் பரமபுருஷரின் உடலுக்குள் ஐக்கியமானது மிகவும் அற்புதமாக உள்ளது. இந்த ஸாயுஜ்ய முக்தி சிறந்த ஆன்மீகிகளால் கூட அடைதற்கரியதாகும். அவ்வாறிருக்க பகவானின் பகைவன் எப்படி அதை அடைந்தான்?

பதம் 7.1.17 : மாமுனிவரே, பகவானுடைய இந்த கருணைக்காக காரணத்தை அறிய நாங்களனைவரும் ஆவலாக உள்ளோம். வேனன் என்ற ஓரரசன் முன்பு பரமபுருஷரை நிந்தித்தான் என்றும், அதன் விளைவாக பிராமணர்களால் அவன் நரகத்தில் வீழ்த்தப்பட்டான் என்றும் நான் கேட்டிருக்கிறேன், சிசுபாலனும் நரகத்திற்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்க அவன் எப்படி பகவானிடத்தில் ஐக்கியமானான்?

பதம் 7.1.18 : சரியாக பேசக்கூடத் தெரியாத அவனது குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலிருந்தே, தமகோஷனின் மிகவும் பாவமுள்ள மகனான சிசுபாலன் பகவானை நிந்திக்கத் துவங்கினான். மேலும் மரணமடையும் வரை அவன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தொடர்ந்து பகைமை பாராட்டி வந்துள்ளான். அவனது சகோதரனான தந்தவக்ரனும் அதையேதான் செய்து வந்துள்ளான்.

பதம் 7.1.19 : சிசுபாலன், தந்தவக்ரன் ஆகிய இவ்விருவரும், பரமபுருஷரும், பரப்பிரம்மனுமாகிய பகவான் விஷ்ணுவை (கிருஷ்ணரை) திரும்பத் திரும்ப நிந்தனை செய்து வந்த போதிலும் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தனர். அவர்களது நாக்குகள் வெண் குஷ்டத்தினால் பீடிக்கப்படவுமில்லை, அவர்கள் நரக வாழ்வின் இருண்ட பிரதேசத்தில் பிரவேசிக்கவுமில்லை. அதைக் கண்டு நாங்கள் உண்மையாகவே மிகவும் ஆச்சரியப்படுகிறோம்.

பதம் 7.1.20 : பல உயர்ந்த புருஷர்களின் முன்னிலையில், அடைதற்கரிய இயற்கையுடைய ஸ்ரீ கிருஷ்ணரின் உடலுக்குள் சிசுபாலனும், தந்தவக்ரனும் மிகச் சுலபமாகப் பிரவேசிப்பது எப்படி சாத்தியமாகும்?

பதம் 7.1.21 : இவ்விஷயம் சந்தேகமின்றி மிகவும் அற்புதமானதுதான். உண்மையில், வீசும் காற்றால் ஒரு தீபச் சுடர் அலைபாய்வதைப் போல் என் புத்தி தடுமாற்றம் அடைந்துள்ளது. நாரத முனிவரே தாங்கள் எல்லாம் அறித்தவர். அற்புதமான இச்சம்பவத்திற்கான காரணத்தை எனக்குக் கூறியருளுங்கள்.

பதம் 7.1.22 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மிகவும் சக்திவாய்ந்த ஆன்மீக குருவும், அனைத்தும் அறிந்தவருமான நாரத முனிவர் யுதிஷ்டிர மகாராஜனின் அவ்வார்த்தையைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இவ்வாறாக யாகத்தில் பங்கேற்ற எல்லோர் முன்னிலையிலும் அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

பதம் 7.1.23 : மாமுனிவர் ஸ்ரீ நாரதாஜி கூறினார்: அரசே, இகழ்ச்சி, புகழ்ச்சி, அவமரியாதை, மரியாதை ஆகியவை அறியாமையின் காரணத்தால் தான் அனுபவிக்கப்படுகின்றன. பந்தப்பட்ட ஆத்மாவின் உடலானது இந்த ஜட உலகில் துன்புறுவதற்கேற்ற முறையில், பகவானால் திட்டமிடப்பட்டு அவரது புறச்சக்தியின் வாயிலாக உருவாக்கப்படுகிறது.

பதம் 7.1.24 : அரசே, பந்தப்பட்ட ஆத்மா தேகாபிமானத்தில் இருப்பதால், தனது உடலைத் தான் என்றும், அவ்வுடலுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்தையும் தனதென்றும் கருதுகிறான். வாழ்வில் இந்த தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதால் அவன் புகழ்ச்சி, இகழ்ச்சி போன்ற இருமைகளுக்கு உட்பட்டுள்ளான்.

பதம் 7.1.25 : பந்தப்பட்ட ஆத்மா அவனது தேகாபிமானத்தின் காரணத்தால், உடல் அழியும்போது, உயிரும் அழித்துவிடுகிறது என்று எண்ணுகிறான். பரமபுருஷரும், பரம ஆளுனருமாகிய பகவான் விஷ்ணு அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மா ஆவார். அவருக்கு ஜட உடல் இல்லையென்பதால், “நான், எனது” என்ற பொய் அபிமானமும் அவருக்கில்லை. எனவே இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும் அவர் துன்பத்தையோ, இன்பத்தையோ உணர்கிறார் என்று நினைப்பது தவறாகும். இவ்வாறாக அவருக்கு நண்பருமில்லை, பகைவருமில்லை. அசுரர்களை அவர் தண்டிப்பது அவர்களுடைய நன்மைக்காகவேயாகும். பக்தர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வது பக்தர்களின் நன்மைக்காகவேயாகும். அவர் புகழ்ச்சிகளாலோ அல்லது இகழ்ச்சிகளாலோ பாதிக்கப்படுவதேயில்லை.

பதம் 7.1.26 : எனவே பகைமையினாலோ அல்லது பக்தித் தொண்டினாலோ பயத்தினாலோ, அன்பினாலோ அல்லது காம இச்சையினாலோ, அல்லது இவையனைத்தினாலோ, ஒரு பந்தப்பட்ட ஆத்மா எப்படியாவது தன் மனதை பகவான் மீது குவிப்பானாயின், அதன் விளைவு ஒன்றே. ஏனெனில், பகவானுடைய ஆனந்தமயமான நிலையின் காரணத்தால், அவர் பகைமையாலோ, அல்லது நட்பினாலோ ஒரு போதும் பாதிக்கப்படுவதேயில்லை.

பதம் 7.1.27 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: எவ்வாறு பரமபுருஷரிடமுள்ள தொடர்ந்த பகைமையால் ஒருவன் பகவானைப் பற்றிய எண்ணத்தில் தீவிரமாக ஆழ்ந்துவிட முடியுமோ, அவ்வாறு பக்தித் தொண்டினாலும் ஆகமுடியாது என்பது என்னுடைய உறுதியான அபிப்பிராயமாகும்.

பதங்கள் 7.1.28-7.1.29 : சுவற்றிலுள்ள ஒரு துவாரத்தில் ஒரு வண்டினால் அடைக்கப்பட்ட புல்லின புழு ஒன்று, பயத்தினாலும், விரோதத்தினாலும் எப்பொழுதும் அந்த வண்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நினைப்பின் காரணத்தால் பிறகு அதுவும் ஒரு வண்டாக மாறி விடுகிறது. அதுபோலவே, பந்தப்பட்ட ஆத்மாக்கள், சச்-சித்-ஆனந்த- விரேஹமான ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி எப்படியாவது நினைத்துக் கொண்டிருப்பார்களானால், அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவார்கள். ஸ்ரீ கிருஷ்ணரைத் தங்களது வழிபாட்டுக்குரிய இறைவனாகவோ அல்லது விரோதியாகவே நினைத்தாலும், அவரைப் பற்றிய இடையறாத சிந்தனையின் காரணத்தால், அவர்கள் தங்களுடைய ஆன்மீக உடல்களைத் திரும்பப் பெறுவர்.

பதம் 7.1.30 : பலபேர்கள் மிகுந்த கவனத்துடன் கிருஷ்ணரைப் பற்றி நினைத்து, பாவச் செயல்களை விட்டதாலேயே முக்தியடைந்துள்ளனர். இந்த பயத்தாலோ, அன்பினாலோ அல்லது பக்தித் தொண்டினாலோ ஏற்பட்டதாக இருக்கக்கூடும். கிருஷ்ணரின் மீது மனதைக் குவிப்பதாலேயே எப்படி ஒருவன் அவரது கருணையைப் பெறுகிறான் என்பதை இப்பொழுது நான் விளக்குகிறேன்.

பதம் 7.1.31 : யுதிஷ்டிர மகாராஜனே, காமத்தால் கோபியர்களும், பயத்தால் கம்சனும், துவேஷத்தால் சிசுபாலனும் மற்ற அசுரர்களும், குடும்ப உறவினால் யாதவர்களும் கிருஷ்ணரின் கருணையைப் பெற்றனர். சிறந்த நட்பினால் பாண்டவர்களாகிய நீங்களும், பக்தித் தொண்டினால் பொதுவான பக்தர்களாகிய நாங்களும் அதைப் பெற்றுள்ளோம்.

பதம் 7.1.32 : ஏதாவதொரு வழியில் ஒருவன் கிருஷ்ணரின் ரூபத்தைத் தீவிரமாக மனதில் தியானிக்க வேண்டும். அப்படிச் செய்தால், மேற்கூறிய ஐந்து முறைகளுள் ஒன்றினால் பரமபதத்தை அடையமுடியும். ஆனால் வேனனைப் போன்ற நாஸ்திகர்களால் இவ்வனைத்து முறைகளில் எதனாலும் கிருஷ்ணரின் ரூபத்தைப்பற்றி நினைக்க முடியாது என்பதால், அவர்களால் முக்தியடைய முடியாது. ஆகவே, ஒருவன் எவ்விதத்திலாவது, நட்புணர்ச்சியுடனோ அல்லது பகையுணர்ச்சியுடனோ கிருஷ்ணரை நினைப்பது அதிசயமாகும்.

பதம் 7.1.33 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: பாண்டவர்களில் சிறந்தவரே, உமது சிறிய தாயார் மகன்களும், உமது ஒன்றுவிட்ட சகோதரர்களுமான சிசுபாலனும், தந்தவக்ரனும் முன்பு பகவான் விஷ்ணுவின் சகாக்களாக இருந்தவர்கள். ஆனால் பிராமணர்களின் சாபத்தினால் அவர்கள் வைகுண்டத்திலிருந்து இந்த ஜட உலகில் வீழ்ந்தனர்.

பதம் 7.1.34 : யுதிஷ்டிர மகாராஜன் வினவினார்: முக்திபெற்ற விஷ்ணு பக்தர்களைக் கூட பாதிக்கக்கூடிய சாபம், எத்தகைய சக்திவாய்ந்த சாபமாக இருக்கும்: பகவானின் சகாக்களைக் கூட சபிக்கக்கூடியவர் எத்தகையவராக இருப்பார்! உறுதியான பகவத் பக்தர்களுக்கு மீண்டும் இந்த ஜட உலகி விழுவதென்பது அசாத்தியமாகும். இதை என்னால் நம்ப முடியவில்லை.

பதம் 7.1.35 : வைகுண்ட வாசிகளின் தேகங்கள் முற்றிலும் ஆன்மீகமானவை. அவற்றிற்கு ஜட உடலுடனோ, புலன்களுடனோ, உயிர் மூச்சுடனோ எவ்வித தொடர்பும் இல்லை. எனவே பகவானின் சகாக்கள் எப்படி சாதாரண மனிதர்கள்போல் ஜட உடல்களில் பிறக்கும்படி சபிக்கப்பட்டனர் என்பதை விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 7.1.36 : மாமுனிவரான நாரதர் கூறினார்: முன்னொரு சமயம், பிரம்மதேவரின் புத்திரர்களான சனகர், சனாதனர், சனந்தனார், சனத்குமாரர் ஆகிய நால்வரும் மூவுலகங்களிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்த பொழுது, தற்செயலாக வைகுண்ட லோகத்தை அடைந்தனர்.

பதம் 7.1.37 : இந்நான்கு மாமுனிவர்களும், மரீசியைப் போன்ற பிரம்மாவின் மற்ற புதல்வர்களை விட மூத்தவர்கள் என்றாலும், அவர்கள் ஆடையணியாத ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுவர்கள் போல் காட்சியளித்தனர். அவர்கள் வைகுண்ட லோகத்தில் பிரவேசிக்க முயல்வதைக் கண்ட வாயில் காப்பான்களான ஜயனும், விஜயனும் அவர்களைச் சாதாரண குழந்தைகள் என்றெண்ணி நுழையவிடாமல் தடுத்தனர்.

பதம் 7.1.38 : இவ்வாறு வாயில்காப்பான்களான ஜய, விஜயர்களால் தடுக்கப் பட்ட சனந்தனரும் மற்ற மாமுனிவர்களும் கடுங்கோபங்கொண்டு பின்வருமாறு அவர்களைச் சபித்தனர். “மூடர்களே, ரஜோ மற்றும் தமோ ஆகிய பௌதிக குணங்களால் தூண்டப்பட்டுள்ள, வாயில் காப்போன்களான நீங்களிருவரும், இத்தகைய குணங்களிலிருந்து விடுபட்டுள்ள மதுத்விஷருடைய தாமரைப் பாதங்களின் புகலிடத்தில் வாழத் தகுதியற்றவர்களாவீர். நீங்கள் உடனே ஜட உலகிற்குச் சென்று, பெரும் பாவிகளான அசுரர்களின் குடும்பத்தில் பிறவி எடுக்க வேண்டும்.”

பதம் 7.1.39 : முனிவர்களால் இவ்வாறு சபிக்கப்பட்ட ஜயனும், விஜயனும் ஜட உலகை நோக்கி விழுந்துகொண்டிருக்கும் பொழுது, அவர்களிடம் மிகவும் கருணையுடைய அதே முனிவர்கள் பின்வருமாறு அவர்களிடம் கூறினர். “வாயில் காப்பான்களே, நீங்கள் மூன்று பிறவிகளுக்குப்பின் சாபம் தீர்ந்து, மீண்டும் வைகுண்ட பதவியை அடைவீர்கள்.”

பதம் 7.1.40 : பகவானின் சகாக்களான ஜயன், விஜயன் ஆகிய இருவரும் பிறகு ஜட உலகிற்கு வந்து, திதியின் இரு புத்திரர்களாகப் பிறந்தனர். இவர்களில் மூத்தவன் இரண்யகசிபு ஆவான். இளையவன் இரண்யாக்ஷனாவான். இவர்கள் (அசுர இனத்தவர்களான) தைதியர்களாலும், தானவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டனர்.

பதம் 7.1.41 : பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ ஹரி நரசிம்மராகத் தோன்றி இரண்யகசிபுவைக் கொன்றார். கர்போதக சமுத்திரத்தில் விழுந்து கிடந்த பூமியை, பகவான் வராக ரூபத்தை ஏற்று தூக்கியெடுத்த பொழுது, அவரைத் தடுக்க முயன்ற இரண்யாக்ஷணை அவர் கொன்றார்.

பதம் 7.1.42 : தன் மகனான பிரகலாதன், பகவான் விஷ்ணுவின் பரம பக்தனாக விளங்கியதால், அவரைக் கொல்ல விரும்பிய இரண்யகசிபு, பலவழிகளில் அவரைச் சித்திரவதை செய்தான்.

பதம் 7.1.43 : அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்வாகிய பகவான் தெளிவும், அமைதியும், அனைவரிடமும் சமத்துவமும் உடையவராவார். சிறந்த பக்தரான பிரகலாதர் பகவானின் சக்தியால் பாதுகாக்கப்பட்டிருந்ததால், பல வழிகளில் முயன்றும் இரண்யகசிபுவால் அவரைக் கொல்ல இயலவில்லை.

பதம் 7.1.44 : அதன்பிறகு பகவான் விஷ்ணுவின் இருவாயில் காப்பான்களான அதே ஜயனும், விஜயனும் விஸ்ரவரால் கேசினியின் கர்பத்தில் பெற்றெடுக்கப்பட்ட இராவணனாகவும், கும்பகர்ணனாகவும் பிறவி எடுத்தனர். அவர்கள் பிரபஞ்ச மக்களுக்கெல்லாம் பெருந்ததொல்லைகளைச் செய்துவந்தனர்.

பதம் 7.1.45 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்; அரசே, இராவணனையும் கும்பகர்ணனையும் கொன்று, அந்த பிராமணர்களின் சாபத்திலிருந்து ஜயனையும், விஜயனையும் விடுவிப்பதற்காகவே பகவான் ராமச்சந்திரர் தோன்றினார். பகவான் ராமச்சந்திரரின் செயல்களைப் பற்றிய வர்ணணைகளை மார்க்கண்டேயரிடமிருந்து கேட்பது உமக்கு நன்மையாக இருக்கும்.

பதம் 7.1.46 : அதே ஜயனும், விஜயனும் அவர்களது மூன்றாவது பிறப்பில், ஒரு க்ஷத்திரிய குடும்பத்தில் உமது தாயாரின் சகோதரியின் மகன்களாகத் தோன்றினர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது சக்கராயுதத்தினால் அவர்களைத் தாக்கியதால், அவர்களுடைய எல்லாப் பாவ விளைவுகளும் அழிக்கப்பட்டு, சாபத்திலிருந்து இப்பொழுது விடுதலை அடைத்தனர்.

பதம் 7.1.47 : பகவான் விஷ்ணுவின் சகாக்களான ஜயன், விஜயன் ஆகிய இருவரும் மிக நீண்டகாலமாக இப்பகை உணர்ச்சியைப் பாதுகாத்து வந்தனர். இவ்விதமாக எப்பொழுதும் ஸ்ரீ கிருஷ்ணரையே நினைத்த வண்ணம் இருந்ததால் அவர்கள் பரமபதத்தை அடைந்து, பகவானிடம் மீண்டும் தஞ்சம் புகுந்தனர்.

பதம் 7.1.48 : யுதிஷ்டிர மகாராஜன் வினவினார்: பிரபுவே நாரதமுனி, இரண்யகசிபுவுக்கும் அவனது பிரிய மகனான பிரகலாத மகாராஜனுக்கும் இடையில் இத்தகைய பகை உணர்ச்சி ஏன் உண்டானது? பிரகலாத மகாராஜன் எப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இத்தகைய ஒரு மிகச் சிறந்த பக்தரானார்? இதை எனக்கு விளக்கியருள வேண்டுகிறேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare