அத்தியாயம் – 8
நாராயண—கவசம்
பதங்கள் 6.8.1 – 6.8.2
ஸ்ரீ-ராஜோவாச
ஃயயா குப்த: ஸஹஸ்ராக்ஷ: ஸவாஹான் ரிபு-ஸைனிகான்
க்ரீடன் இவ வினிர்ஜித்ய த்ரி-லோக்ய பபுஜே ஸ்ரியம்

பகவம்ஸ் தன் மமாக்யாஹி வர்ம நாராயணாத்மகம்
யதாதாயின: சத்ரூன் யேன குப்தோ ‘ஜயன் ம்ருதே

ஸ்ரீ-ராஜா உவாச—-பரீட்சித்து மகாராஜன் கூறினார்; யயா—எதனால் (ஆன்மீக கவசம்); குப்த:—பாதுகாக்கப்பட்ட; ஸஹஸ்ர-அக்ஷ:—ஆயிரம் கண்ணுடைய தேவேந்திரன்; ஸ-வாஹான்—அவர்களுடைய வாகனங்களுடன்; ரிபு-ஸைனிகான்—எதிரியின் படைகளையும், தளபதிகளையும்; க்ரீடன் இவ—விளையாட்டாக; வினிர்ஜித்ய—வென்று; த்ரி-லோக்யா:—(மேல், மத்திய, கீழ் ஆகிய) மூவுலங்களின்; புபுஜே—அனுபவித்தார்; ஸ்ரியம்—ஐசுவரியத்தை; பகவன்—மாமுனிவரே; தத்—அதை; மம—எனக்கு; ஆக்யாஹி—தயவுகூர்ந்து விளக்குங்கள்; வர்ம—மந்திரத்தாலான பாதுகாப்புக் கவசத்தை; நாராயண-ஆத்மகம்—நாராயணரின் கருணையைக் கொண்டதான; யதா—எவ்வழியில்; ஆததாயின:—அவரைக் கொல்ல முயன்ற; சத்ரூன்—பகைவர்கள்; யேன—எதனால்; குப்த:—காக்கப்பட்டு; அஜயத்—வென்றாரோ; ம்ருதே—போரில்.

பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: பிரபுவே, தேவேந்திரனைக் காத்ததும், அவருடைய பகைவர்களையும் அவர்களுடைய வாகனங்களையும் வென்று மூவுலங்களின் ஐசுவரியத்தை அனுபவிக்க உதவியதுமான அந்த விஷ்ணு மந்திர கவசத்தை தயவு கூர்ந்து விளங்குங்கள். எதனால் தன்னைக் கொல்ல முயன்ற எதிரிகளை இந்திரன் வென்று போர்க்களத்தில் வெற்றி பெற்றாரோ, அந்த நாராயண-கவசத்தை எனக்கு விளக்கியருள வேண்டும்.

பதம் 6.8.3
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
வ்ருத:புரோஹிதஸ் த்வாஷ்ட்ரோ மஹேந்ராயானுப்ருச்சதே
நாராயணாக்யம் வர்மாஹ தத் இஹைக-மனா: ஸ்ருணு

ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; வ்ருத:—தேர்ந்தெடுக்கப்பட்டவர்; புரோஹித:—புரோகிதர்; த்வாஷ்ட்ர:—துவஷ்டாவின் மகன்; மஹேந்ராய—இந்திரனுக்கு; அனுப்ருச்சதே—அவர் (இந்திரன்) வினவியபின்; நாராயண-ஆக்யம்—நாராயண கவசம் என்ற; வர்ம—ஒரு மந்திரத்தாலான பாதுகாப்புக் கவசத்தை; ஆஹ—அவர் கூறினார்; தத்—அந்த; இஹ—இந்த; ஏக-மனா:—மிகவும் கவனமுடன்; ஸ்ருணு—கேட்பீராக.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இந்திரன் முதலான தேவர்களால் தங்களுடைய புரோகிதராக நியமிக்கப்பட்ட விஸ்வரூபரிடமிருந்து இந்திரன் நாராயண கவசத்தைப் பற்றி வினவினார். விஸ்வரூபரின் அந்த பதிலைக் கவனமுடன் கேட்பீராக.

பதங்கள் 6.8.4 – 6.8.6
ஸ்ரீ-விஸ்வரூப உவாச
தௌதாங்ரி-பாணிர் ஆசம்ய ஸபவித்ர உதங்-முக:
க்ருத-ஸ்வாங்க-கர-ன்யாஸோ மந்த்ராப்யாம் வாக்-யத: சுசி:

நாராயண-பரம் வர்ம ஸன்னஹ்யேத் பய ஆகதே
பாதயோர் ஜானுனோர் ஊர்வோர் உதரே ஹ்ருதி அதோரஸி

முகே சிரஸி ஆனுபூர்வ்யாத் ஓம்காராதீனி வின்யஸேத்
ஓம் நமோ நாராயணாயேதி விபர்யயம் அதாபி வா

ஸ்ரீ-விஸ்வரூப: உவாச—ஸ்ரீ விஸ்வரூபர் கூறினார்; தௌத—நன்கு கழுவிய பின்; அங்ரி—பாதங்களையும்; பாணி:—கைகளையும்; ஆசம்ய—ஆசமனம் செய்து; ஸ-பவித்ர:—(இரு கைகளிலும் மோதிர விரல்களில்) தர்ப்பைப் புல்லாலான மோதிரங்களை அணிந்து; உதக்-முக:—வடக்கு முகமாக அமர்ந்து; க்ருத—செய்து; ஸ்வ-அங்க-கர-ன்யாஸ:—உடலின் எட்டு பாகங்களிலும் கைகளின் பன்னிரண்டு பாகங்களிலும் மனதைச் செலுத்தி; மந்த்ராப்யாம்—ஓம் நமோ பகவதே வாஸுதேவாய, ஓம் நமோ நாராயணாய என்ற இரு மந்திரங்களால்; வாக்-யத:—மௌனம் சாதித்து; சுசி:—தூய்மையடைந்து; நாராயண-பரம்—நாராயணரையே நினைந்து; வர்ம—கவசத்தை; ஸன்னஹ்யேத்—அணிந்து கொள்ள வேண்டும்; பயே—பயம்; ஆகதே—வரும்பொழுது; பாதயோ:—பாதங்களிலும்; ஜானுனோ:—முழங்கால்களிலும்; ஊர்வோ:—தொடைகளிலும்; உதரே—வயிற்றிலும்; ஹ்ருதி—இதயத்திலும்; அத—இவ்வாறு; உரஸி—மார்பிலும்; முகே—வாயிலும்; சிரஸி—தலையிலும்; ஆனுபூர்வ்யாத்—ஒன்றன் பின் ஒன்றாக; ஓம்கார-ஆதீனி—ஓம்காரத்துடன் துவங்கி; வின்யஸேத்—இடவேண்டும்; ஓம்—பிரணவத்தை; நம:—வணக்கங்கள்; நாராயணாய—பரம புருஷராகிய நாராயணருக்கு; இதி—இவ்வாறு; விபர்யயம்—பின்னாலிருந்து; அத அபி—மேலும்; வா—அல்லது.

விஸ்வரூபர் கூறினார்: ஏதேனும் பயம் ஏற்படும் பொழுது, முதலில் ஒருவன் தனது கைகால்களைக் கழுவிய பிறகு, ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ‘பி வா/ ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யாந்தர: கசி:/ ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு என்ற மந்திரத்தை உச்சரித்து ஆசமனம் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒருவன் தர்ப்பைப் புல்லைத் தொட்டு, வடக்கு நோக்கி மௌனமாக அமரவேண்டும். முற்றிலும் தூய்மையடைந்த பிறகு, ஒருவன் எட்டு அட்சரங்களாலான மந்திரத்தைக் கொண்டு அவனுடைய உடலின் எட்டு பாகங்களையும், பன்னிரண்டு அட்சரங்களைக் கொண்ட மந்திரத்ததால் கைகளையும் தொடவேண்டும். இவ்விதமாக, பின்வருமாறு அவன் தன்னை நாராயண-கவசத்துடன் பிணைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஓம்காரத்துடன் துவங்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டு அட்சரங்களாளான மந்திரத்தை ஜபிக்கும் பொழுது, அவன் தனது கைகளால், இரு பாதங்களிலிருந்து துவங்கி முழங்கால்கள், தொடைகள், வயிறு, இதயம், மார்பு, வாய் மற்றும் தலை என்ற வரிசைப்படி அவனது உடலின் எட்டுப் பாகங்களைத் தொட வேண்டும். பிறகு, அவனது உடலின் எட்டுப் பாகங்களை, தலையிலிருந்து துவங்கி பாதங்கள் வரை, தலைகீழான வரிசைப்படி தொடும் பொழுது, ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை ய என்ற கடைசி அட்சரத்திலிருந்து துவங்கி தலைகீழான வரிசையில் உச்சரிக்க வேண்டும். இவ்விரு முறைகளும் முறையே உத்பத்தி-ஞாஸ என்றும் ஸம்ஹார-ஞாஸ என்றும் அறியப்படுகின்றன.

பதம் 6.8.7
கர-ன்யாஸம் தத: குர்யாத் த்வாதசாக்ஷர-வித்யயா
ப்ரணாவாதி-ய-காராந்தம் அங்குலி-அங்குஷ்ட-பர்வஸு

கர-ன்யாஸம்—மந்திரத்தின் வெவ்வேறு அட்சரங்களை வெவ்வேறு விரல்களுக்கு நியமிக்கும், கர-ன்யாஸம் என்ற சடங்கை; தத:—பிறகு; குர்யாத்—நிறைவேற்ற வேண்டும்; த்வாதச-அக்ஷர—பன்னிரண்டு அட்சரங்களாலான; வித்யயா—மந்திரத்தால்; ப்ரணவ-ஆதி—ஓம்காரத்திலிருந்து துவங்கி; ய-கார-அந்தம்—ய என்ற அட்சரத்துடன் முடியும்; அங்குலி—விரல்களில், ஆள்காட்டி விரலிலிருந்து துவங்கி; அங்குஷ்ட-பர்வஸு—பெரு விரல்களின் கணுக்கள் வரை.

பிறகு பன்னிரண்டு அட்சரங்களைக் கொண்ட ஓம் நமோ பகவதே வாஸுதேவாய என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரத்தையும் ஓம்காரத்துடன் ஆரம்பித்து அந்த அட்சரங்களைத் தன் விரல்களின் நுனிகளில் இட வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது வலது கையின் ஆள்காட்டி விரலிலிருந்து துவங்கி, இடது கையின் ஆள்காட்டி விரலில் முடிக்க வேண்டும். எஞ்சியுள்ள நான்கு அட்சரங்களையும் கட்டை விரல்களின் கணுக்களில் இட வேண்டும்.

பதங்கள் 6.8.8 – 6.8.10
ன்யஸேத் த்ருதய ஓம்காரம் வி-காரம் அனு மூர்தனி
ஷ-காரம் து ப்ரூவோர் மத்யே ண-காரம் சிகயா ன்யஸேத்

வே-காரம் நேத்ரயோர் யுஞ்யான் ந-காரம் ஸர்வ-ஸ்ந்திஷு
ம-காரம் அஸ்த்ரம் உத்திஸ்ய மந்த்ர-மூர்த்திர் பவேத் புத:

ஸவிஸர்கம் ஃபட்-அந்தம் தத் ஸர்வ-திக்ஷு வினிர்திசேத்
ஓம் விஷ்ணயே நம இதி

ன்யஸேத்—இட வேண்டும்; ஹ்ருதயே—இதயத்திலும்; ஓம்காரம்—ஓம் என்ற பிரணவத்தை; வி-காரம்—விஷ்ணவே என்ற மந்திரத்திலுள்ள வி என்ற அட்சரத்தை; அனு—பிறகு; மூர்தனி—தலை உச்சியிலும்; ஷ-காரம்—ஷ என்ற அட்சரத்தை; து—மேலும்; ப்ருவோ: மத்யே— இருபுருவங்களுக்கு மத்தியிலும்; ந-காரம்—ந என்ற அட்சரத்தை; சிகயா—குடுமியிலும்; ன்யஸேத்—இட வேண்டும்; வே-காரம்—வே என்ற அட்சரத்தை; நேத்ரயோ:—இரு கண்களுக்கு மத்தியிலும்; யுஞ்யாத்—இட வேண்டும்; ந-காரம்—நம: என்ற சொல்லிலுள்ள ந என்ற அட்சரத்தை; ஸர்வ-ஸந்திஷு—எல்லாக் கணுக்களிலும்; ம-காரம்—நம: என்ற சொல்லிலுள்ள ம என்ற அட்சரத்தை; அஸ்த்ரம்—ஓர் ஆயுதமாக; உத்திஸ்ய—எண்ணி; மந்த்ர-மூர்த்தி:—மந்திர சொரூபமாக; பவேத்—மாற வேண்டும்; புத:—புத்திசாலி ஒருவன்; ஸ-விஸர்கம்—ஹ என்ற விஸர்கத்துடன்; ஃபட்-அந்தம்—ஃபட் என்ற ஓசையுடன் முடிக்க வேண்டும்; தத்—அதை; ஸர்வ-திக்ஷு—எல்லாத் திசைகளிலும்; வினிர்திசேத்—ஸ்தாபிக்க வேண்டும்; ஓம்—பிரணவத்தை; விஷ்ணவே—பகவான் விஷ்ணுவிற்கு; நம:—வணக்கங்கள்; இதி—என்று.

பிறகு ஒருவன் ஓம் விஷ்ணுவே நம: என்ற ஆறு அட்சரங்களைக் கொண்ட மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு ஒருவன் ஓம் என்ற அட்சரத்தைத் தன் இதயத்தின் மேலும், வி என்ற அட்சரத்தைத் தலை உச்சியிலும், ஷ என்ற அட்சரத்தைப் புருவங்களுக்கு மத்தியிலும், ண என்ற அட்சரத்தைக் குடுமியின் மேலும் (சிகா), வே என்ற அட்சரத்தை இரு கண்களுக்கு மத்தியிலும் இட வேண்டும். மந்திரத்தை உச்சரிப்பவன் பிறகு, ந என்ற அட்சரத்தை அவனது உடலிலுள்ள எல்லாக் கணுக்களின் மேலும் இட்டு ம என்ற அட்சரத்தை ஓர் ஆயுதமாகப் பாவித்து, அதைத் தியானிக்க வேண்டும். இவ்விதமாக அவன் பரிபூரண மந்திர சொரூபமாக மாற வேண்டும். அதன்பிறகு ம என்ற கடைசி அட்சரத்துடன் விஸர்கத்தைச் சேர்த்து, ம: அஸ்த்ராய ஃபட் என்ற மந்திரத்தை கிழக்கிலிருந்து துவங்கி எல்லாத் திசைகளிலும் அவன் உச்சரிக்க வேண்டும். இவ்விதமாக எல்லாத் திசைகளும் பாதுகாப்பான மந்திரக் கவசத்தினால் கட்டப்படும்.

பதம் 6.8.11
ஆத்மானம் பரமம் த்யாயேத் த்யேயம் ஷட்-சக்திபிர் யுதம்
வித்யா-தேஜஸ்-தபோ-மூர்த்திம் இமம் மந்த்ரம் உதாஹரேத்

ஆத்மானம்—தான்; பரமம்—பரமனை; த்யாயேத்—தியானிக்க வேண்டும்; த்யேயம்—தியானிக்கத்தக்கவரான; ஷட்-சக்திபி:—ஆறு ஐசுவரியங்கள்; யுதம்—உடைய; வித்யா—கல்வி; தேஜ:—செல்வாக்கு; தப:—தவம்; மூர்த்திம்—சொரூபமான; இமம்—இந்த; மந்த்ரம்—மந்திரத்தை; உதாஹரேத்—உச்சரிக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை உச்சரித்த பிறகு ஆறு ஐசுவரியங்களில் முழுமையானவரும், தியானிக்கத்தக்கவருமான பரமபுருஷருடன், தான் குணத்தில் ஒன்றுபட்டவன் என்று தன்னை அவன் நினைக்க வேண்டும். பிறகு அவன் பகவான் நாராயணரிடம் நாராயண-கவசம் என்ற பின்வரும் பாதுகாப்பு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

பதம் 6.8.12
ஓம் ஹரிர் விதத்யான் மம ஸர்வ-ரக்ஷாம்
ன்யஸ்தாங்ரி-பத்ம பதகேந்ர-ப்ரூஷ்டே
தராரி-சர்மாஸி-கதேஷு-சாப-
பாசா ததானோ ‘ஷட்-குணோ ‘ஷ்ட-பாஹு:

ஓம்—பகவானே; ஹரி:—பரமபுருஷர்; விதத்யாத்—அவர் அருள்வாராக; மம—எனது; ஸர்வ-ரக்ஷாம்—எல்லாப் பக்கங்களிலிருந்தும்; ன்யஸ்த—வைத்துள்ள; அங்ரி-பத்ம:—தாமரைப் பாதங்களை; பதகேந்ர-ப்ருஷ்டே—பட்சி ராஜனான கருடன் மேல்; தர—சங்கு; அரி—சக்கரம்; சர்ம—கேடயம்; அஸி—கத்தி; கதா—கதை; இஷு—அம்புகள்; சாப—வில்; பாசான்—பாசம் (கயிறு); ததான:—ஏந்தியபடி; அஷ்ட—எட்டு; குண:—சித்திகளைப் பெற்றுள்ள; அஷ்ட—எட்டு; பாஹு:—கைகள்.

தமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார்.

பதம் 6.8.13
ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்ய-மூர்த்திர்
யாதோ-கணேப்யோ வருணஸ்ய பாசாத்
ஸ்தாலேஷு மாயாவடு-வாமனோ ‘வ்யாத்
த்ரிவிக்ரம: கே ‘வது விஸ்வரூப:

ஜலேஷு—நீரில்; மாம்—எனக்கு; ரக்ஷது—காக்கட்டும்; மத்ஸ்ய-மூர்த்தி:—பரமபுருஷர் பெரியதொரு மீனின் உருவில்; யாத:-கணேப்ய:—கொடிய நீர்வாழ் மிருகங்களிடமிருந்து; வருணஸ்ய—வருண தேவரின்; பாசாத்—பாசத்திலிருந்து; ஸ்தலேஷு—நிலத்தில்; மாயா-வடு—குள்ளமாகத் தோன்றிய பகவானின் கருணைமிக்க வடிவம்; வாமன:—வாமனதேவர் என்ற பெயருடைய; அவ்யாத்—அவர் காக்கட்டும்; த்ரிவிக்ரம:—யாருடைய பிரும்மாண்டமான மூன்றடிகள் பலியிடமிருந்து மூவுலகையும் எடுத்துக் கொண்டனவோ அந்த திரிவிக்ரமர்; கே—ஆகாயத்தில்; அவது—அந்த பகவான் காப்பாராக; விஸ்வரூப:—விஸ்வரூபம்.

மிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வருணதேவனின் சகாக்களாகவுள்ள, கொடிய நீரினங்களிடம் இருந்து நீரில் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக. பகவான் தமது மாயா சக்தியை விரிவடையச் செய்து குள்ள வாமனரின் உருவத்தை ஏற்றார். அந்த வாமனர் நிலத்தில் என்னைக் காப்பாராக. பகவானின் பிரம்மாண்டமான விஸ்வரூபம் மூவுலகங்களையும் ஆக்கிரமிப்பதால், அவர் ஆகாயத்தில் என்னைக் காப்பாராக.

பதம் 6.8.14
துர்கேஷு அடவி-ஆஜி-முகாதிஷு ப்ரபு:
பாயான் ந்ருஸிம்ஹோ ‘ஸுர-யூதபாரி:
விமுஞ்சதோ யஸ்ய மஹாட்ட-ஹாஸம்
திசோ வினேதுர் ன்யபதம்ஸ் ச கர்பா:

துர்கேஷு—பிரயாணம் செய்யக் கடினமான இடங்களிலும்; அடவி—அடர்ந்த காட்டிலும்; ஆஜி-முக-ஆதிஷு—யுத்த முன்னனி போன்ற இடங்களிலும்; ப்ரபு:—பரமபுருஷர்; பாயாத்—காப்பாராக; ந்ருஸிம்ஹ:—பகவான் நரசிம்மதேவர்; அஸுர-யூதப—அசுர ராஜனான இரண்யகசிபுவின்; அரி:—எதிரி; விமுஞ்சத்:—விடுவித்து; யஸ்ய—எவருடைய; மஹா-அட்டஹாஸம்—மிகவும் அட்டகாசமான பயங்கர சிரிப்பு; திச:—எல்லாத் திசைகளையும்; வினேது:—அதிரச் செய்து; ன்யபதன்—விழுந்தன; ச—மேலும்; கர்பா:—அசுர பத்தினிகளின் கர்ப்பங்கள்.

இரண்யகசிபுவின் எதிரியாகத் தோன்றிய பகவான் நரசிம்மர் எல்லாத் திசைகளிலும் என்னைக் காப்பாராக. அவருடைய உரத்த சிரிப்பு எல்லாத் திசைகளையும் அதிரச் செய்து, கருவுற்றிருந்த அசுர பத்தினிகளுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தியது. அந்த பகவான், வனம் மற்றும் யுத்த முன்னனி போன்ற கடினமான இடங்களில் என்னைக் காத்து இரட்சிப்பாராக.

பதம் 6.8.15
ரக்ஷது அஸௌ மாத்வனி யக்ஞ-கல்ப:
ஸ்வ-தம்ஷ்ட்ரயோன்னீத-தரோ வராஹ:
ராமோ ‘த்ரி-கூடேஷ்வ் அத விப்ரவாஸே
ஸலக்ஷ்மனோ ‘வ்யாத் பரதாக்ரஜோ ‘ஸ்மான்

ரக்ஷது—பகவான் காக்கட்டும்; அஸௌ—அந்த; மா—என்னை; அத்வனி—தெருவில்; யக்ஞ-கல்ப:—வேத யக்ஞங்களால் அறியப்படுபவரான; ஸ்வ-தம்ஷ்ட்ரயா—அவரது சொந்த கோரைப் பற்களால்; உன்னீத—உயர்த்தி; தர:—பூமியை; வராஹ:—பகவான் வராகர்; ராம:—பகவான் ராமர்; அத்ரி-க்ஷடேஷு—மலையுச்சிகளில்; அத—பிறகு; விப்ரவாஸே—அந்நிய தேசங்களில்; ஸ-லக்ஷ்மண:—அவரது தம்பி லக்ஷ்மணருடன்; அவ்யாத்—காப்பாராக; பரத-அக்ரஜ:—பரத மகாராஜனின் தமையனான; அஸ்மான்—எங்களை.

அழிக்கப்பட முடியாதவரான பரமபுருஷர் வேத யக்ஞ அனுஷ்டானத்தின் மூலமாக ஆராய்ந்தறியப்படுவதால், அவர் யக்ஞேஸ்வரர் எனப்படுகிறார். அவருடையவராக அவதாரத்தில் அவர் பிரபஞ்சத்திற்கு அடியிலுள்ள நீரிலிருந்து பூமியைத் தூக்கி, அதைத் தனது கூரிய பற்களின் மேல் தாங்கிக் கொண்டார். அந்த பகவான் தெருவில் திருடர்களிடமிருந்து என்னைக் காப்பாராக. மலை உச்சிகளில் பகவான் பரசுராமர் என்னைக் காக்கட்டும். பரதனின் தமையனான பகவான் ராமச்சந்திரர் தம்பி லக்ஷ்மணருடன் அந்நிய தேசங்களில் என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.16
மாம் உக்ர-தர்மாத் அகிலாத் ப்ரமாதான்
நாராயண: பாது நரஸ் ச ஹாஸாத்
தத்தஸ் து அயோகாத் அத யோக-நாத:
பாயாத் குணேச: கபில: கர்ம-பந்தாத்

மாம்—என்னை; உக்ர-தர்மாத்—அனாவசியமான சமய நெறிகளிலிருந்து; அகிலாத்—எல்லா வகையான செயல்களிலிருந்தும்; ப்ரமாதாத்—செருக்குடன் செய்யப்படும்; நாராயண:—பகவான் நாராயணர்; பாது—காப்பாராக; நர: ச—மற்றும் நரர்; ஹாஸாத்—தேவையற்ற தற்பெருமையிலிருந்து; தத்த:—தத்தாத்ரேயர்; து—நிச்சயமாக; அயோகாத்—தவறான யோக மார்க்கத்திலிருந்து; அத—உண்மையில்; யோக-நாத:—யோக சக்திகளுக்கெல்லாம் தலைவரான; பாயாத்—அவர் காப்பாராக; குண-ஈச:—ஆன்மீக குணங்களுக்கெல்லாம் தலைவரான; கபில:—பகவான் கபிலர்; கர்ம-பந்தாத்—கர்ம பந்தத்திலிருந்து.

செருக்கின் காரணத்தினால், தேவையில்லாமல் தவறான சமய மார்க்கத்தைப் பின்பற்றி, என் கடமைகளிலிருந்து விழுவதிலிருந்து பகவான் நாராயணர் என்னைக் காப்பாராக. நரராகத் தோன்றிய பகவான் அனாவசியமான தற்பெருமையிலிருந்து என்னைக் காக்கட்டும். யோக சித்திகளுக்கெல்லாம் தலைவரான பகவான் தத்தாத்ரேயர் பக்தி யோகத்தை நிறைவேற்றும் சமயத்தில் இழிவடைவதிலிருந்து என்னைக் காக்கட்டும். எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமான பகவான் கபிலர் கர்ம பந்தத்திலிருந்து என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.17
ஸனத்-குமாரோ ‘வது காமதேவாத்
தயசீரீஷா மாம் பதி தேவ-ஹேலனாத்
தேவர்ஷி-வர்ய: புருஷார்சனாந்தராத்
கூர்மோ ஹரிர் மாம் நிரயாத் அசேஷாத்

ஸனத்-குமார:—சனத்குமாரர் என்ற சிறந்த பிரம்மச்சாரி; அவது—காக்கட்டும்; காம-தேவாத்—காம தேவனின் கைகளிலிருந்து அல்லது காம இச்சையிலிருந்து; ஹய-சீர்ஷா—குதிரையைப் போன்ற தலையுடைய அவதாரமான பகவான் ஹயகிரீவர்; மாம்—என்னை; பதி—வழியில்; தேவ-ஹேலனாத்—பிராமணர்களையும், வைஷ்ணவர்களையும், பரமபுருஷரையும் மரியாதையுடன் வணங்கத் தவறுவதிலிருந்து; தேவர்ஷி-வர்ய:—சிறந்த முனிவரான நாரதர்; புருஷ-அர்ச்சன-அந்தராத்—விக்கிரக ஆராதனையிலுள்ள குற்றங்களிலிருந்து; கூர்ம:—பகவானின் கூர்ம அவதாரம்; ஹரி:—பரமபுருஷர்; மாம்—என்னை; நிரயாத்—நரகத்திலிருந்து; அசேஷாத்—எல்லையற்ற.

காம இச்சையிலிருந்து சனத் குமாரர் என்னைக் காக்கட்டும். மங்கள காரியத்தைத் துவங்கும் பொழுது, பரமபுருஷரை வணங்கத் தவறி குற்றம் புரிவதிலிருந்து பகவான் ஹயகிரீவர் என்னைக் காக்கட்டும். விக்கிரக ஆராதனையில் குற்றம் புரிவதிலிருந்து தேவரிஷி நாரதர் என்னைக் காக்கட்டும். எல்லையற்ற நரக லோகங்களில் விழுவதிலிருந்து பகவான் கூர்மர் என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.18
தன்வந்தரிர் பகவான் பாது அபத்யாத்
த்வந்வாத் பயாத் ரிஷபோ நிர்ஜிதாத்மா
யக்ஞஸ் ச லோகாத் அவதாஜ் ஜனாந்தாத்
பலோ கணாத் க்ரோத-வசாத் அஹீந்ர:

தன்வந்தரி:—மருத்துவரான தன்வந்தரி அவதாரம்; பகவான்—பரமபுருஷராகிய; பாது—என்னைக் காக்கட்டும்; அபத்யாத்—ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் மாமிசம், மதுபானம் போன்றவைகளிலிருந்து; த்வந்வாத்—இருமையிலிருந்து; பயாத்—பயத்திலிருந்து; ரிஷப:—பகவான் ரிஷபதேவர்; நிர்ஜித-ஆத்மா—மனதையும் ஆத்மாவையும் முழுமையாகக் கட்டுப்படுத்தியவரான; யக்ஞ:—யக்ஞர்; ச—மேலும்; லோகாத்—பொதுமக்களின் அவதூறிலிருந்து: அவதாத்—அவர் காக்கட்டும்; ஜன-அந்தாத்—பிறரால் விளைவிக்கப்படும் ஆபத்துகளிலிருந்து; பல:—பகவான் பலராமர்; கணாத்—கூட்டங்களிலிருந்து; க்ரோத-வசாத்—குரோதமுள்ள பாம்புகளின்; அஹீந்ர:—சேஷ நாகத்தின் வடிவிலுள்ள பகவான் பலராமர்.

பரமபுருஷர் அவரது தன்வந்தரி அவதாரத்தில், விரும்பத்தகாத உணவுகளிலிருந்து என்னை விடுவித்து, நோய்களிலிருந்து என்னைக் காக்கட்டும். அக மற்றும் புறப் புலன்களை வென்றவராக பகவான் ரிஷபதேவர், வெப்பம் மற்றும் குளிர் என்ற இருமையினால் உண்டாகும், பயத்திலிருந்து என்னைக் காக்கட்டும். பொதுமக்களால் விளைவிக்கப்படும் அவதூறிலிருந்தும், தீங்கிலிருந்தும் யக்ஞர் என்னைக் காக்கட்டும். பகவான் பலராமரின் சேஷ அவதாரம் குரோதம் நிறைந்த பாம்புகளிடமிருந்து என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.19
த்வைபாயனோ பகவான் அப்ரபோதாத்
புத்தஸ் து பாஷண்ட-கண-ப்ரமாதாத்
கல்கி: கலே: கால-மலாத் ப்ரபாது
தர்மவனாயோரு-க்ருதாவதார:

த்வைபாயன:—எல்லா வேத ஞானத்தையும் அருளிய ஸ்ரீல வியாசதேவர்; பகவான்—பரமபுருஷரின் சக்திவாய்ந்த அவதாரமாகிய; அப்ரபோதாத்—சாஸ்திரங்களை அறியாத நிலையிலிருந்து; புத்த:து—புத்த பகவானும் கூட; பாஷண்ட-கண—அப்பாவிகளுக்கு அறியாமையை ஏற்படுத்தும் நாஸ்திகர்களின்; ப்ரமாதாத்—மதத்திலிருந்து; கல்கி:—கேசவரின் அவதாரமான பகவான் கல்கி; கலே:—இக்கலியுகத்தின்; கால-மலாத்—காலத்தின் இருளிலிருந்து; ப்ரபாது—அவர் காக்கட்டும்; தர்ம-அவனாய—சமயக் கோட்பாடுகளைக் காப்பதற்கு; உரு—மிகச்சிறந்த; க்ருத-அவதார:—ஓர் அவதாரத்தை ஏற்ற.

பரமபுருஷரின் சக்திவாய்ந்த அவதாரமான வியாசதேவர், வேத ஞானம் இல்லாமையால் உண்டாகும் எல்லா வகையான அஞ்ஞானத்திலிருந்தும் என்னைக் காக்கட்டும். வேதக் கோட்பாடுகளுக்கு முரணான செயல்களிலிருந்தும், வேத ஞானம் மற்றும் கிரியை ஆகிய வேதக் கோட்பாடுகளை முற்றிலும் மறக்கச் செய்யும் சோம்பலிலிருந்தும், பகவான் புத்ததேவர் என்னைக் காக்கட்டும். சமயக் கோட்பாடுகளைக் காப்பதற்காக அவதரித்தவரும், பரம புருஷருமாகிய பகவான் கல்கிதேவர் கலியுகத்தின் அழுக்கிலிருந்து என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.20
மாம் கேசவோ கதயா ப்ராதர் அவ்யாம்
கோவிந்த ஆஸங்கவம் ஆத்த-வேணு:
நாராயண: ப்ராஹ்ண உதாத்த-சக்திர்
மத்யன்-தினே விஷ்ணுர் அரீந்ர-பாணி:

மாம்—என்னை; கேசவ:—பகவான் கேசவர்; கதயா—அவரது கதையினால்; ப்ராத:—அதிகாலை நேரத்தில்; அவ்யாத்—காக்கட்டும்; கோவிந்த:—பகவான் கோவிந்தன்; ஆஸங்கவம்—பகலின் இரண்டாவது பகுதியின்போது; ஆத்த-வேணு:—கையில் புல்லாங்குழலை வைத்துள்ள; நாராயண:—நான்கு கைகளுடைய பகவான் நாராயணர்; ப்ராஹ்ண:—பகலின் மூன்றாவது பகுதியின் போது; உதாத்த-சக்தி:—வெவ்வேறு வயைான சக்திகளை ஆளும்; மத்யம்-தினே—பகலின் நான்காவது பகுதியின் போது; விஷ்ணு:—பகவான் விஷ்ணு; அரீந்ர-பாணி:—பகைவரைக் கொல்வதற்காக கையில் சக்கரத்தை ஏந்தியுள்ள.

பகலின் முதல் பகுதியின் (அதிகாலையில்), பகவான் கேசவர் அவரது கதையால் என்னைக் காக்கட்டும், எப்பொழுதும் புல்லாங்குழலை வாசிப்பதில் ஈடுபட்டுள்ள கோவிந்தன், பகலின் இரண்டாவது பகுதியில் என்னைக் காக்கட்டும். அனைத்து சக்திகளையும் உடையவரான பகவான் நாராயணர் பகலின் மூன்றாவது பகுதியில் என்னைக் காக்கட்டும். மேலும் பகைவரைக் கொல்வதற்காக கையில் சக்கரத்தை ஏந்தியுள்ள பகவான் விஷ்ணு, பகலின் நான்காவது பகுதியில் என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.21
தேவோ ‘பராஹ்ணே மது-ஹோக்ரதன்வா
ஸாயம் த்ரி-தாமாவது மாதவோ மாம்
தோஷே ஹ்ரிஷீகேச உதார்த-ராத்ரே
நிசீத ஏகோ ‘வது பத்மநாப:

தேவ:—பகவான்; அபராஹ்ணே—பகலின் ஐந்தாவது பகுதியில்; மதுஹா—மதுசூதனர் என்ற; உக்ர-தன்வா—சாரங்கம் என்ற மிகவும் பயங்கரமானவில்லை வைத்திருப்பவரான; ஸாயம்—பகலின் ஆறாவது பாகம்; த்ரி-தாமா—பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் என்ற மும்மூர்த்திகளாகத் தோன்றி; அவது—காக்கட்டும்; மாதவ:—மாதவர் என்பவர்; மாம்—என்னை; தோஷே—இரவின் முதல் பகுதியில்; ஹ்ரிஷீகேச:—பகவான் ரிஷிகேசர்; உத—கூட; அர்த-ராத்ரே—இரவின் இரண்டாம் பகுதியில் (அர்த்த ராத்திரியில்); நிசீதே—இரவின் மூன்றாம் பகுதியில் (நடுநிசியில்); ஏக:—தனியாக; அவது—காக்கட்டும்; பத்மநாப:—பகவான் பத்மநாபர்.

அசுரர்களுக்கு அச்சமூட்டும் வில்லை வைத்திருப்பவரான பகவான் மதுசூதனர், பகலின் ஐந்தாம் பகுதியில் என்னைக் காக்கட்டும். பிரம்ம, விஷ்ணு மற்றும் மகேஸ்வரராகத் தோன்றும் பகவான் மாதவர் மாலையில் என்னைக் காக்கட்டும். இரவின் ஆரம்பத்தில் பகவான் ரிஷிகேசர் என்னைக் காக்கட்டும். இரவின் இரண்டாவது, மூன்றாவது பகுதிகளில் (அர்த்த ராத்திரியிலும், நடு நிசியிலும்) பகவான் பத்மநாபர் தனியாக என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.22
ஸ்ரீவத்ஸ-தாம்பர-ராத்ர ஈச:
ப்ரத்யூஷ ஈசோ ‘ஸி-தரோ ஜனார்தன:
தாதோதரோ ‘வ்யாத் அனுஸந்யம் ப்ரபாதே
விஸ்வேஸ்வரோ பகவான் கால-மூர்த்தி:

ஸ்ரீவத்ஸ-தாமா—ஸ்ரீவத்ஸ குறியைத் தமது மார்பில் தாங்கியுள்ள பகவான்; அபர-ராத்ரே—இரவின் நான்காம் பகுதியில்; ஈச:—பரமபுருஷர்; ப்ரத்யூஷே—இரவின் முடிவில்; ஈச:—பரமபுருஷர்; அஸி-தர:—கையில் வாளை ஏந்திய; ஜனார்தன:—பகவான் ஜனார்தனர்; தாமோதர:—பகவான் தாமோதரர்; அவ்யாத்—காக்கட்டும்; அனு-ஸந்யம்—ஒவ்வொரு சந்தி வேளையிலும்; ப்ரபாதே—அதிகாலையில் (இரவின் ஆறாவது பகுதி); விஸ்வ-ஈஸ்வர:—பிரபஞ்சத்தின் நாதர்; பகவான்—பரமபுருஷர்; கால-மூர்த்தி:—கால சொரூபமான.

மார்பில் ஸ்ரீவத்ஸத்தைத் தாங்கியிருக்கும் பரமபுருஷர், நள்ளிரவுக்குப் பிறகு கீழ்வானம் சிவக்கும் வரை என்னைக் காக்கட்டும். கையில் வாளேந்தியவரான பகவான் ஜனார்தனர், இரவின் முடிவில் (இரவின் கடைசி நான்கு நாழிகைகளின் போது) என்னைக் காக்கட்டும். அதிகாலையில் பகவான் தாமோதரர் என்னைக் காக்கட்டும். பகல் மற்றும் இரவின் சந்தி வேளைகளில் பகவான் விஸ்வேஸ்வரர் என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.23
சக்ரம் யுகாந்தானல-திக்ம-நேமி
ப்ரமத் ஸமந்தாத் பகவத்-ப்ரயுக்தம்
தந்தக்தி தந்தக்தி அரி-ஸைன்யம் ஆசு
கக்ஷம் யதா வாத-ஸகோ ஹுதாச:

சக்ரம்—பகவானுடைய சக்கரம்; யுக:-அந்த—யுகத்தின் முடிவில்; அனல—காலாக்கினி போல்; திக்ம-நேமி—கூரிய விளிம்புடன்; ப்ரமத்—சஞ்சரிக்கும்; ஸமந்தாத்—எங்கும்; பகவத்-ப்ரயுக்தம்—பகவானால் ஏவப்பட்டு; தந்தக்தி தந்தக்தி—பொசுக்கட்டும், பொசுக்கட்டும்; அரி-ஸைன்யம்—எதிரிகளின் சேனையை; ஆசு—உடனே; கக்ஷம்—உலர்ந்த புல்; யதா—போல; வாத-ஸக:—காற்றின் நண்பன்; ஹுதாச:—கொழுந்துவிட்டெரியும் தீ.

பகவானால் ஏவப்பட்டு நான்கு திசைகளிலும் சஞ்சரிக்கும் பரமபுருஷருடைய சக்கரமானது, யுகத்தின் முடிவில் தோன்றும் காலாக்னி போன்ற கூரிய முனைகளைக் கொண்டுள்ளது. கொழுந்து விட்டெரியும் தீயானது காற்றின் உதவியுடன் காய்ந்த புல்லை எரித்துச் சாம்பலாக்குவது போல், அந்த சுதர்சன சக்கரம் எங்களுடைய பகைவர்கள் எரித்துச் சாம்பலாக்கட்டும்.

பதம் 6.8.24
கதே ‘சனி-ஸ்பர்சன-விஸ்ஃபுலிங்கே
நிஷ்பிண்டி நிஷ்பிண்டி அஜித-ப்ரியாஸி
குஷ்மாண்ட-வைணாயக-யக்ஷ-ரக்ஷோ-
பூத-க்ரஹாம்ஸ் சூர்ணய சூர்ணயாரீன்

கதே—பரமபுருஷரின் கையிலுள்ள கதையே; அசனி—இடி போல்; ஸ்பர்சன—தொட்டதை; விஸ்ஃபுலிங்கே—தீப்பொறிகளைக்கக்கும்; நிஷ்பிண்டி நிஷ்பிண்டி—தூளாக்கிவிடு, தூளாக்கிவிடு; அஜித-ப்ரியா—பரமபுருஷருக்கு மிகப் பிரியமானவன்; அஸி—நீ; குஷ்மாண்ட—குஷ்மாண்டங்கள் எனப்படும் துர்தேவதைகள்; வைனாயக:—வைனாயிகர்கள் என்ற இராட்சஸர்கள்; யக்ஷர்கள்—யக்ஷர்கள் என்ற பேய்கள்; ரக்ஷ:—இராட்சஸர்கள்; பூத—பூதங்கள்; க்ரஹான்—மற்றும் கிரகங்கள் என்ற துஷ்ட அசுரர்கள்; சூர்ணய—பொடியாக்கி விடு; சூர்ணய—பொடியாக்கிவிடு; அரீன்—என் எதிரிகளை.

பரமபுருஷரின் கையிலுள்ள கதையே, இடிபோல் தொட்டதை அழிக்கும். பொறிகளைக் கக்கும் நீ பகவானுக்கு மிகப் பிரியமானவனாவாய். நானும் அவருடைய சேவகன்தான். ஆகவே குஷ்மாண்டர், வைனாயிகர், யக்ஷர், இராட்சஸர், பூதங்கள் மற்றும் கிரகங்கள் எனப்படும் துஷ்ட ஜீவன்கள் ஆகியோரை அழித்துவிடு. அவர்களை தூள்தூளாகப் பொடியாக்கிவிடு.

பதம் 6.8.25
த்வம் யாதுதான-ப்ரமத-ப்ரேத-மாத்ரு-
பிசாச-விப்ரக்ரஹ-கோர-த்ருஷ்டீன்
தரேந்த வித்ராவய க்ருஷ்ண-பூரிதோ
பீம-ஸ்வனோ ‘ரேர் ஹ்ருதயாணி கம்பயன்

த்வம்—நீ; யாதுதான—இராட்சஸர்கள்; ப்ரமத—பிரமதர்கள்; ப்ரேத—பிரேதங்கள்; மாத்ரு—மாத்ருக்கள்; பிசாச—பிசாசுகள்; விப்ர-க்ரஹ—பிரம்ம ராட்சஸர்கள்; கோர-த்ருஷ்டீன்—மிகவும் கோரமான கண்களுடைய; தரேந்ர—பகவானின் கையிலுள்ள சங்கமாகிய பாஞ்சஜன்யமே; வித்ராவய—விரட்டியடிப்பாயாக; க்ருஷ்ண-பூரித:—கிருஷ்ணரின் வாயிலிருந்து வரும் காற்றினால் நிரப்பப்பட்டு; பீம-ஸ்வன:—பயங்கரமான நாதத்தை உண்டாக்கி; அரே:—எதிரிகளின்; ஹ்ருதயாணி—இதயங்களை; கம்பயன்—நடுங்கச் செய்து.

சங்கங்களில் சிறந்ததும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் இருப்பதுமான பாஞ்சஜன்யமே, நீ எப்பொழுதும் பகவானுடைய மூச்சினால் நிரப்பப்பட்டிருக்கிறாய். ஆகவே நீ பயங்கரமான நாதத்தை உண்டாக்கி, இராட்சஸர்கள், பிரமதர்கள், பிரேதங்கள், மாத்ருகள், பிசாசுகள் மற்றும் கொடும் பார்வையுடைய பிரம்மராட்ஸர்களைப் போன்ற எதிரிகளின் இதயங்களை நடுங்கச் செய்து அவர்களை விரட்டியடிப்பாயாக.

பதம் 6.8.26
த்வம் திக்ம-தாராஸி-வராரி-ஸைன்யம்
ஈச-ப்ரயுக்தோ மம சிந்தி சிந்தி
சக்ஷும்ஷி சர்மாஞ் சத-சந்ர சாதய
த்விஷாம் அகோனாம் ஹர பாப சக்ஷுஷாம்

த்வம்—நீ; திக்ம-தார-அஸி-வர—கூரிய முனையுடைய வாள்களில் சிறந்தவனே; அரி-ஸைன்யம்—எதிரிகளின் சேனையை; ஈச-ப்ரயுக்த:—பரமபுருஷரால் வீசப்பட்டு; மம—என்னுடைய; சிந்தி சிந்தி—கண்ட துண்டமாக வெட்டிவிடு; சக்ஷும்ஷி—கண்களை; சர்மன்—கேடயமே; சத-சந்ர—நூறு சந்திரன்கள் போல் ஜொலிக்கும் வட்டங்களுடைய; சாதய—மறைத்துவிடு; த்விஷாம்—என்னிடம் பொறாமை கொண்டவர்களுடைய; அகோனாம்—முற்றிலும் பாவமான; ஹர—பிடுங்கிவிடு; பாப-சக்ஷுஷாம்—மிகவும் பாவமான கண்களுடையவர்களின்.

பரமபுருஷரால் ஏவப்படும் கூரிய முனையுடைய வாளே, என் எதிரிகளின் சேனைகளைக் கண்டதுண்டமாக வெட்டுவாயாக. சந்திரன் போல் ஜொலிக்கும் நூறு வட்டங்களைக் கொண்ட கேடயமே, பாவிகளான எதிரிகளின் கண்களை மறைத்துவிடு. பாவமுள்ள அவர்களது கண்களைப் பிடுங்கிவிடு.

பதங்கள் 6.8.27 – 6.8.28
யன் நோ பயம் க்ரஹேப்யோ ‘பூத் கேதுர்யோ ந்ருப்ய ஏவ ச
ஸரீஸ்ருபேப்யோ தம்ஷ்ட்ரிப்யோ பூதேப்யோ ‘ம்ஹோப்ய ஏவ ச

ஸர்வாணி ஏதானி பகவன்-நாம-ரூபானுகீர்த்தனாத்
ப்ரயாந்து ஸங்க்ஷயம் ஸத்யோ யே ந: ஸ்ரேய:-ப்ரதீபகா:

யத்—எது; ந:—எங்களுடைய; பயம்—பயம்; க்ரஹேப்ய:—கிரக அசுரர்களிடமிருந்து; அபூத்—இருந்த; கேதுபி:—எரிநட்சத்திரங்களிடமிருந்து; ந்ருப்ய:—பொறாமையுள்ள மனிதர்களிடமிருந்து; ஏவ ச—கூட; ஸரீஸ்ருபேப்ய:—பாம்புகள் அல்லது தேள்களிடமிருந்து; தம்ஷ்ட்ரிப்ய:—புலிகள், ஓநாய்கள், காட்டுப் பன்றிகள் போன்ற கொடூரமான பற்களுடைய மிருகங்களிடமிருந்து; பூதேப்ய:—பூதங்களிடமிருந்து அல்லது பஞ்ச பூதங்களிடமிருந்து; அம்ஹோப்ய:—பாவச் செயல்களிடமிருந்து; ஏவ ச—மேலும்; ஸர்வாணி ஏதானி—இவ்வெல்லா; பகவத்-நாம-ரூப-அனுகீர்த்தனாத்—பகவானின் உன்னத நாமம், ரூபம், குணங்கள், உபகரணங்கள் ஆகியவற்றைத் துதிப்பதால்; ப்ரயாந்து—அவை போகட்டும்; ஸங்க்ஷயம்—முழு அழிவை நோக்கி; ஸத்ய:—உடனே; யே—எவை; ந:—எங்களுடைய; ஸ்ரேய:-ப்ரதீபகா:—நன்மைக்குத் தடையாக உள்ள.

பரமபுருஷரின் திவ்யநாமம், ரூபம், குணங்கள், உபகரணங்கள் ஆகியவற்றின் கீர்த்தனமானது, எங்களைக் கெட்ட கிரகங்கள், எரி நட்சத்திரங்கள், பொறாமையுள்ள மனிதர்கள், பாம்புகள், தேவர்கள், புலி, ஓநாய் போன்ற மிருகங்களின் ஆதிக்கத்திலிருந்து எங்களைக் காக்கட்டும். மேலும், மண், நீர், நெருப்பு, காற்று போன்ற பெளதிக மூலப் பொருட்களிலிருந்தும், பூதங்களிடமிருந்தும், இடியிலிருந்தும் எங்களுடைய முந்திய பாவங்களிலிருந்தும்கூட அது எங்களைக் காக்கட்டும். எங்களுடைய மங்களகரமான வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கும் இவைகளிடம் நாங்கள் எப்பொழுதும் அச்சம் கொண்டுள்ளோம். ஆகவே இவையனைத்தும் ஹரே கிருஷ்ண மகா மந்திர ஜபத்தினால் முற்றிலும் அழிக்கப்படட்டும்.

பதம் 6.8.29
கருடோ பகவான் ஸ்தோத்ர ஸ்தோபஸ் சந்தோமய: ப்ரபு:
ரக்ஷது அசேஷ-க்ருச்ரேப்யோ விஷ்வக்ஷேன: ஸ்வ-நாமபி:

கருட:—பகவான் விஷ்ணுவின் வாகனமாகிய கருடதேவர்; பகவான்—பரமபுருஷருக்குச் சமமான சக்தியுடையவர்; ஸ்தோத்ர-ஸ்தோப:—சிறந்த சுலோகங்களாலும், பாடல்களாலும் போற்றப்படுபவர்; சந்த: மய:—வேத சொரூபமானவர்; ப்ரபு:—அந்த பிரபு; ரக்ஷது—காக்கட்டும்; அசேஷ-க்ருச்ரேப்ய:—எல்லையற்ற துன்பங்களிலிருந்து; விஷ்வக்ஷேன:—பகவான் விஷ்வக்ஷேனர்; ஸ்வ-நாமபி:—அவரது புனித நாமங்களினால்.

பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடதேவர் பரமபுருஷருக்கு இணையான சக்தியுடையவர் என்பதால் சிறந்த வழிபாட்டுக்கு உரியவராவார். வேதங்களின் சொரூபமாகிய அவர் சிறந்த சுலோங்களால் பூஜிக்கப்படுகிறார். அவர் ஆபத்தான எல்லாச் சூழ்நிலைகளிலிருந்தும் எங்களைக் காக்கட்டும். பரமபுருஷராகிய பகவான் விஷ்வக்ஷேனரும் அவரது புனித நாமங்களால் எல்லா அபாயங்களிலிருந்தும் எங்களைக் காக்கட்டும்.

பதம் 6.8.30
ஸர்வாபத்ப்யோ ஹரேர் நாம-ரூப-யானாயுதானி ந:
புத்தீந்ரிய-மன:-ப்ராணான் பாந்து பார்ஷத-பூஷணா:

ஸர்வ-ஆபத்ப்ய:—எல்லா ஆபத்துகளிலிருந்தும்; ஹரே:—பரமபுருஷரின்; நாம—புனித நாமம்; ரூப—உன்னத ரூபம்; யான—வாகனங்கள்; ஆயுதானி—மற்றும் எல்லா ஆயுதங்கள்; ந:—எங்களுடைய; புத்தி—புத்தியை; இந்திரிய—புலன்கள்; மன:—மனம்; ப்ராணான்—உயிர்; பாந்து—அவை காத்து இரட்சிக்கட்டும்; பார்ஷத-பூஷணா:—அந்தரங்க சகாக்களான அலங்கார பூஷணங்கள்.

பரமபுருஷரின் அந்தரங்க சகாக்களாக இருந்து கொண்டு அவரை அலங்கரிக்கும் அவரது புனித நாமங்கள், உன்னத ரூபங்கள், வாகனங்கள், ஆயுதங்கள் ஆகியவை எங்களுடைய புத்தியையும், புலன்களையும், மனதையும், உயிரையும், எல்லா அபாயங்களிலிருந்தும் காக்கட்டும்.

பதம் 6.8.31
யதா ஹி பகவான் ஏவ வஸ்துத: ஸத் அஸச் ச யத்
ஸத்யேனானேன ந: ஸர்வே யாந்து நாசம் உபத்ரவா:

யதா—எப்படி; ஹி—உண்மையில்; பகவான்—பரமபுருஷர்; ஏவ—ஐயமின்றி; வஸ்துத:—முடிந்த முடிவாக; ஸத்—தோன்றியது; அஸத்—தோன்றாதது; ச—மற்றும்; யத்—எதெல்லாம்; ஸத்யேன—உண்மையினால்; அனேன—இது; ந:—நம்முடைய; ஸர்வே—எல்லா; யாந்து—செல்லட்டும்; நாசம்—அழிவை நோக்கி; உபத்ரவா:—தொல்லைகள்.

ஸ்தூல மற்றும் சூட்சுமமான பிரபஞ்ச தோற்றம் பௌதிகமானதாகும். இருப்பினும் அது பரமபுருஷரிலிருந்து வேறுபட்டதல்ல. ஏனெனில் அவரே எல்லாக் காரணங்களுக்கும் முடிவான காரணமாவார். காரணமும் விளைவும் உண்மையில் ஒன்றேயாகும். ஏனெனில் காரணமானது அதன் விளைவில் அடக்கம். ஆகையால் பரம சத்தியமாகிய பரமபுருஷரால் நம்முடைய எல்லா அபாயங்களையும், சக்திவாய்ந்த அவருடைய பகுதிகளுள் ஒன்றினால் அழித்துவிட முடியும்.

பதங்கள் 6.8.32 – 6.8.33
யதைகாத்ம்யானுபாவானாம் விகல்ப-ரஹித: ஸ்வயம்
பூஷணாயுத-லிங்காக்யா தத்தே சக்தீ: ஸ்வ-மாயயா
தேனைவ ஸத்ய-மானேன ஸர்வ-க்ஞோ பகவான் ஹரி:
பாது ஸர்வை: வ்வருபைர் ந: ஸதா ஸர்வத்ர ஸர்வ-க:

யதா—எப்படி: ஐகாத்மய—வேற்றுமையில் உள்ள ஒற்றுமைக்கேற்ப; அனுபாவானாம்—நினைப்பவர்களின்; விகல்ப ரஹித:—வேற்றுடை இல்லாமை; ஸ்வயம்—அவரே; பூஷணம்—அணிகலன்கள்; ஆயுத—ஆயுதங்கள்; லிங்க-ஆக்யா:—தனிப்பட்ட குணங்களும், வெவ்வேறு நாமங்களும்; தந்தே—பெற்றுள்ளார்; சக்தீ:—செல்வம், செல்வாக்கு, சக்தி, அறிவு, அழகு, துறவு போன்ற ஆற்றல்கள்; ஸ்வ-மாயயா—அவரது ஆன்மீக சக்தியை விரிவடையச் செய்வதன் மூலம்: தேன ஏவ—அதனால்; ஸத்ய-மானேன—உண்மையான புரிந்துணர்வு; ஸர்வ-க்ஞ:—சர்வக்ஞரான; பகவான்—பரமபுருஷர்; ஹரி:—ஜீவன்களின் மாயையை நீக்கக்கூடியவர்; பாது—பாதுகாக்கட்டும்; ஸர்வை:—எல்லாவற்றுடனும்; ஸ்வ ரூபை—அவரது ரூபங்கள்; ந:—நம்மை; ஸதா—எப்பொழுதும்; ஸர்வத்ர—எங்கும்; ஸர்வ-க:—எங்கும் நிறைந்திருப்பவர்.

பரமபுருஷர், ஜீவராசிகள், பெளதிக சக்தி, ஆன்மீக சக்தி, முழு சிருஷ்டி ஆகிய அனைத்தும் தனித்தனி பொருள்களாகும். ஆனால் ஆராய்ந்து கண்ட உண்மை என்னவெனில், இவையெல்லாம் சேர்ந்து தான் ஒரே பரமபுருஷராக உருவெடுத்துள்ளன. ஆகவே ஆன்மீக அறிவில் முன்னேறியவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பார்கள். ஆன்மீகத்தில் முன்னேறிய இத்தகைய நபர்களுக்கு பகவானுடைய அணிகலன்கள், மற்றும் அவருடைய நாமம், புகழ், குணங்கள், ரூபங்கள், ஆயுதங்கள் ஆகிய அனைத்தும் அவரது சக்தியின் தோற்றங்களே என்பது தெரியும். அவர்களுடைய மேலான ஆன்மீக அறிவுக்கேற்ப, பல்வேறு ரூபங்களைத் தோற்றுவிப்பவரும் சர்வக்ஞருமான பகவான் எங்கும் நிறைந்திருப்பவராகிறார். அவர் எல்லா இடங்களிலும், எல்லா அபாயங்களிலிருந்தும் நம்மைக் காக்கட்டும்.

பதம் 6.8.34
விதிக்ஷு திஸூர்த்வம் அத: ஸமந்தாத்
அந்தர் பஹிர் பகவான் நாரஸிம்ஹ:
ப்ரஹாபயல் லோக-பயம் ஸ்வனேன
ஸ்வ-தேஜஸா க்ரஸ்த-ஸமஸ்த-தேஜா

விதிக்ஷு—எல்லா மூலைகளிலும்; திக்ஷு—எல்லாத் திசைகளிலும்; ஊர்த்வம்—மேலும்; அத:—கீழும்; ஸமந்தாத்—எல்லாப் பக்கங்களிலும்; அந்த:—உள்ளும்; பஹி:—புறமும்; பகவான்—பரம புருஷர்; நாரஸிம்ஹ:—நரசிம்மதேவரின் ரூபத்திலுள்ள; ப்ரஹாபயன்—முற்றிலும் அழித்து; லோக—பயம்—மிருகங்கள், விஷம், ஆயுதங்கள், நீர், காற்று, நெருப்பு போன்றவைகளால் ஏற்படும் பயத்தை; ஸ்வனேன—அவரது கர்ஜனையால் அல்லது அவரது பக்தரான பிரகலாத மகாராஜனால் உச்சரிக்கப்பட்ட அவரது நாமத்தினால்; ஸ்வ-தேஜஸா—அவரது சொந்த தேஜசினால்; க்ரஸ்த—மறைக்கப்பட்டு; ஸமஸ்த—மற்றெல்லா; தேஜ:—ஆதிக்கங்களையும்.

பிரகலாத மகாராஜன் பகவான் நரசிம்ம தேவரின் புனித நாமத்தை உரக்கப் பாடினார். தமது பக்தரான பிரகலாத மகாராஜனுக்காக கர்ஜனை செய்த பகவான் நரசிம்ம தேவர், துணிச்சலான தலைவர்களால், விஷம், ஆயுதங்கள், நீர், நெருப்பு போன்றவைகள் மூலம் எல்லாத் திசைகளிலும் விளைவிக்கப்படும் ஆபத்தெனும் பயத்திலிருந்து நம்மைக் காக்கட்டும். பகவான் தெய்வீகமான தமது சொந்த ஆதிக்கத்தினால் அவர்களுடைய ஆதிக்கத்தை மறைத்துவிடுவாராக. எல்லாத் திசைகளிலும், மூலைகளிலும், மேலும், கீழும், உள்ளும், புறமும் நரசிம்மதேவர் நம்மைக் காக்கட்டும்.

பதம் 6.8.35
மகவன் இதம் ஆக்யாதம் வர்ம நாராயணாத்மகம்
விஜேஷ்யஸே ‘ஞ்ஜஸா யேன தம்சிதோ ‘ஸுர-யூதபான்

மகவன்—தேவேந்திரனே; இதம்—இந்த; ஆக்யாதம்—விவரிக்கப்பட்டது; வர்ம—மாயக் கவசம்; நாராயண-ஆத்மகம்—நாராயணருடன் சம்பந்தப்பட்ட; விஜேஷ்யஸே—நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; அஞ்ஜஸா—மிகச் சுலபமாக; யேன—எதனால்; தம்சித:—பாதுகாக்கப்பட்டு; அஸுர-யூதபான்—அசுரர்களின் முக்கிய தலைவர்களை.

விஸ்வரூபர் தொடர்ந்து கூறினார்: இந்திரனே, பகவான் நாராயணருடன் சம்பந்தப்பட்டதான மாயாமான இக்கவசம் என்னால் உங்களுக்கு விவரிக்கப்பட்டது. இந்த பாதுகாப்புக் கவசத்தை அணிந்து கொள்வதால், அசுரத் தலைவர்களை நிச்சயமாக உங்களால் வெல்ல முடியும்.

பதம் 6.8.36
ஏதத் தாரயமாணஸ் து யம் யம் பஸ்யதி சக்ஷுஷா
பதா வா ஸம்ஸ்ப்ருசேத் ஸத்ய: ஸாத்வஸாத் ஸ விமுச்யதே

ஏதத்—இதை; தாரயமாண:—பிரயோகிப்பவர்; து—ஆனால்; யம் யம்—யாரையெல்லாம்; பஸ்யதி—அவர் பார்க்கிறாரோ; சக்ஷுஷா—அவரது கண்களால்; பதா—பாதங்களால்; வா—அல்லது; ஸம்ஸ்ப்ருசேத்—தொடுகிறாரோ; ஸத்ய:—உடனேயே; ஸாத்வஸாத்—எல்லா பயங்களிலிருந்தும்; ஸ:—அவர்; விமுச்யதே—விடுவிக்கப்படுகிறார்.

இக்கவசத்தை ஒருவர் அணிந்துகொண்டு யாரையெல்லாம் தன் கண்களால் பார்க்கிறரோ அல்லது தன் கால்களால் தொடுகிறாரோ, அவர்கள் மேற்கூரிய எல்லா அபாயங்களிலிருந்தும் உடனே விடுவிகப்படுவார்கள்.

பதம் 6.8.37
ந குதஸ்சித் பயம் தஸ்ய வித்யாம் தாரயதோ பவேத்
ராஜ-தஸ்யு-க்ரஹாதிப்யோ வ்யாதி-ஆதிப்யஸ் ச கர்ஹிசித்

ந—இல்லை; குதஸ்சித்—எங்கிருந்தும்; பயம்—பயம்; தஸ்ய—அவருடைய; வித்யாம்—இந்த அற்புத ஸ்தோத்திரத்தை; தாரயத:—பிரயோகிக்கும்; பவேத்—எழக்கூடிய; ராஜ—அரசாங்கத்திடமிருந்து; தஸ்யு—திருடர் மற்றும் துஷ்டர்களிடமிருந்து; க்ரஹ-ஆதிப்ய:—அசுரர்கள் முதலியவைகளிலிருந்தும்; வ்யாதி-ஆதிப்ய:—வியாதி போன்றவைகளிலிருந்து; ச—கூட; கர்ஹிசித்—எந்த நேரத்திலும்.

நாராணய—கவசமான இந்த ஸ்தோத்திரம் நாராயணருடன் தெய்வீகமான முறையில் இணைக்கப் பெற்ற சூட்சும அறிவினால் அமையப்பெற்றதாகும். இந்த ஸ்தோத்திரத்தை உபயோகிப்பவர் அரசாங்கத்தினாலோ, கொள்ளைக்காரர்களாலோ, துஷ்ட அசுரர்களாலோ அல்லது எவ்வித நோயினாலோ ஒரு போதும் தொல்லைக்குள்ளாவதில்லை.

பதம் 6.8.38
இமாம் வித்யாம் புரா கஸ்சித் கௌசிகோ தாரயன் த்விஜ:
யோக-தாரணயா ஸ்வாங்கம் ஜஹௌ ஸ மரு-தன்வனி

இமாம்—இந்த; வித்யாம்—ஸ்தோத்திரத்தை; புரா—முன்பு; கஸ்சித்—ஒருவர்; கெளசிக:—கெளசிகர்; தாரயன்—உபயோகித்து; த்விஜ:—ஒரு பிராமணர்; யோக-தாரணயா—யோக சக்தியால்; ஸ்வ-அங்கம்—அவரது சொந்த உடலை; ஜஹௌ—தியாகம் செய்தார்; ஸ:—அவர்; மரு-தன்வனி—பாலைவனத்தில்

சுவர்க்க ராஜனே, கெளசிகர் என்ற பிராமணர் தனது யோக சக்தியினால் முன்பு வேண்டுமென்றே தன் உடலைத் தியாகம் செய்த பொழுது இக்கவசத்தை உபயோகித்தார்.

பதம் 6.8.39
தஸ்யோபரி விமானேன கந்தர்வ-பதிர் ஏகதா
யயௌ சித்ரரத: ஸ்த்ரீபிர் வ்ருதோ யத்ர த்விஜ-க்ஷய:

தஸ்ய—அவரது இறந்த உடலுக்கு; உபரி—மேலே; விமானேன—விமானத்தில்; கந்தர்வ-பதி:—கந்தர்வலோக அரசரான சித்ரரதன்; ஏகதா—ஒரு சமயம்; யயௌ—சென்றார்; சித்ரரத:—சித்ரரதன்; ஸ்த்ரீபி:—பல அழகிய பெண்களால்; வ்ருத:—சூழப்பட்டபடி; யத்ர—எங்கு; த்விஜ-க்ஷய:—கெளசிக பிராமணர் இறந்தாரோ அங்கு.

கந்தர்வ லோகத்தின் அரசரான சித்ரரதன் ஒரு சமயம் பல அழகிய மங்கையரால் சூழப்பட்டபடி, தன் விமானத்தில் ஏறி, இறந்து போன பிராமணரின் உடல் இருந்த இடத்திற்கு மேலே கடந்து சென்றார்.

பதம் 6.8.40
ககனான் ன்யபதத் ஸத்ய: ஸவிமானோ ஹி அவாக் சிரா:
ஸ வாலிகில்ய-வசனாத் அஸ்தீனி ஆதாய விஸ்மித:
ப்ராஸ்ய ப்ராசீ-ஸரஸ்வத்யாம் ஸ்னாத்வா தாம ஸ்வம் அன்வகாத்

ககனாத்—ஆகாயத்திலிருந்து; ன்யபதத்—விழுந்தார்; ஸத்ய:—திடீரென்று; ஸ-விமான:—அவரது விமானத்துடன்; ஹி—நிச்சயமாக; அவாக்-சிரா:—தலைகீழாக; ஸ:—அவர்; வாளிகில்ய—வாளிகில்யர்கள் என்ற சிறந்த முனிவர்களின்; வசனாத்—உபதேசங்களால்; அஸ்தீனி—எல்லா எலும்புகளையும்; ஆதாய—எடுத்து; விஸ்மித:—ஆச்சரியமடைந்து; ப்ராஸ்ய—எறிந்து; ப்ராசீ-ஸரஸ்வத்யாம்—கிழக்கு நோக்கி ஓடும் சரஸ்வதி நதியில்; ஸ்னாத்வா—குளித்து; தாம—இருப்பிடத்திற்கு; ஸ்வம்—அவரது சொந்த; அன்வகாத்—திரும்பினார்.

உடனே சித்ரரதன் ஆகாயத்திலிருந்து பலவந்தமாக விமானத்துடன் தலைகீழாக கீழே தள்ளப்பட்டார். இதனால் ஆச்சரியமடைந்த அவர், வாளகில்யர்கள் என்ற சிறந்த முனிவர்களின் உத்தரவுப்படி, அந்த பிராமணரின் எலும்புகளை அருகிலிருந்த சரஸ்வதி நதியில் எறிந்து அந்த நதியில் நீராடிய பின்னரே அவரால் தன் இருப்பிடத்திற்குத் திரும்ப முடிந்தது.

பதம் 6.8.41
ஸ்ரீ-சுக உவாச
ய இதம் ஸ்ருணுயாத் காலே யோ தாரயதி சாத்ருத:
தம் நமஸ்யந்தி பூதானி முச்யதே ஸர்வதோ பயாத்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ய:—எவர்; இதம்—இதை; ஸ்ருணுயாத்—கேட்கிறாரோ; காலே—பயம் ஏற்படும் பொழுது; ய:—எவர்; தாரயதி—இந்த கவசத்தை உபயோகிக்கிறாரோ; ச—கூட; ஆத்ருத:—நம்பிக்கையுடன்; தம்—அவருக்கு; நமஸ்யந்தி—பணிவான வணக்கங்களைச் செலுத்துவார்கள்; பூதானி—எல்லா ஜீவராசிகளும்; முச்யதே—விவரிக்கப்படுகிறார்; ஸர்வத:—எல்லா; பயாத்—பயத்திலிருந்தும்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, இக்கவசத்தை உபயோகிப்பவர் அல்லது பயபக்தியுடன் இதைப்பற்றி கேட்பவர். இந்த ஜட உலக சூழ்நிலைகளின் காரணத்தால் அச்சத்திற்கு உள்ளாகும்பொழுது, எல்லா அபாயங்களிலிருந்தும் உடனே விடுவிக்கப்படுவதுடன், அனைத்து ஜீவராசிகளாலும் பூஜிக்கவும் படுகிறார்.

பதம் 6.8.42
ஏதாம் வித்யாம் அதிகதோ விஸ்வரூபாச் சதக்ரது:
த்ரைலோக்ய-லக்ஷ்மீம் புபுஜே வினிர்ஜித்ய ம்ருதே ‘ஸுரான்

ஏதாம்—இந்த; வித்யாம்—ஸ்தோத்திரத்தை; அதிகத:—பெற்றார்; விஸ்வரூபாத்—பிரமணரான விஸ்வரூபரிடமிருந்து; சத-க்ரது:—சுவர்க்க ராஜனான இந்திரன்; த்ரைலோக்ய-லக்ஷ்மீம்—மூவுலக ஐசுவரியங்களையும்; புபுஜே—அனுபவித்தார்; வினிர்ஜித்ய—வென்று; ம்ருதே—போரில்; அஸுரான்—எல்லா அசுரர்களையும்.

நூறு யாகங்களைச் செய்த தேவேந்திரன் விஸ்வரூபரிடமிருந்து இந்த ஸ்தோத்திர கவசத்தைப் பெற்றார். அசுரர்களை வென்றபின் மூவுலக ஐசுவரியங்களையும் அவர் அனுபவித்தார்.


ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “நாராயண—கவசம்” எனும் தலைப்பை கொண்ட எட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare