அத்தியாயம் – 8
நாராயண—கவசம்
பதங்கள் 6.8.1 – 6.8.2 :பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: பிரபுவே, தேவேந்திரனைக் காத்ததும், அவருடைய பகைவர்களையும் அவர்களுடைய வாகனங்களையும் வென்று மூவுலங்களின் ஐசுவரியத்தை அனுபவிக்க உதவியதுமான அந்த விஷ்ணு மந்திர கவசத்தை தயவு கூர்ந்து விளங்குங்கள். எதனால் தன்னைக் கொல்ல முயன்ற எதிரிகளை இந்திரன் வென்று போர்க்களத்தில் வெற்றி பெற்றாரோ, அந்த நாராயண-கவசத்தை எனக்கு விளக்கியருள வேண்டும்.

பதம் 6.8.3 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இந்திரன் முதலான தேவர்களால் தங்களுடைய புரோகிதராக நியமிக்கப்பட்ட விஸ்வரூபரிடமிருந்து இந்திரன் நாராயண கவசத்தைப் பற்றி வினவினார். விஸ்வரூபரின் அந்த பதிலைக் கவனமுடன் கேட்பீராக.

பதங்கள் 6.8.4 – 6.8.6 : விஸ்வரூபர் கூறினார்: ஏதேனும் பயம் ஏற்படும் பொழுது, முதலில் ஒருவன் தனது கைகால்களைக் கழுவிய பிறகு, ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ‘பி வா/ ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யாந்தர: கசி:/ ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு என்ற மந்திரத்தை உச்சரித்து ஆசமனம் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒருவன் தர்ப்பைப் புல்லைத் தொட்டு, வடக்கு நோக்கி மௌனமாக அமரவேண்டும். முற்றிலும் தூய்மையடைந்த பிறகு, ஒருவன் எட்டு அட்சரங்களாலான மந்திரத்தைக் கொண்டு அவனுடைய உடலின் எட்டு பாகங்களையும், பன்னிரண்டு அட்சரங்களைக் கொண்ட மந்திரத்ததால் கைகளையும் தொடவேண்டும். இவ்விதமாக, பின்வருமாறு அவன் தன்னை நாராயண-கவசத்துடன் பிணைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஓம்காரத்துடன் துவங்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டு அட்சரங்களாளான மந்திரத்தை ஜபிக்கும் பொழுது, அவன் தனது கைகளால், இரு பாதங்களிலிருந்து துவங்கி முழங்கால்கள், தொடைகள், வயிறு, இதயம், மார்பு, வாய் மற்றும் தலை என்ற வரிசைப்படி அவனது உடலின் எட்டுப் பாகங்களைத் தொட வேண்டும். பிறகு, அவனது உடலின் எட்டுப் பாகங்களை, தலையிலிருந்து துவங்கி பாதங்கள் வரை, தலைகீழான வரிசைப்படி தொடும் பொழுது, ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை ய என்ற கடைசி அட்சரத்திலிருந்து துவங்கி தலைகீழான வரிசையில் உச்சரிக்க வேண்டும். இவ்விரு முறைகளும் முறையே உத்பத்தி-ஞாஸ என்றும் ஸம்ஹார-ஞாஸ என்றும் அறியப்படுகின்றன.

பதம் 6.8.7 : பிறகு பன்னிரண்டு அட்சரங்களைக் கொண்ட ஓம் நமோ பகவதே வாஸுதேவாய என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரத்தையும் ஓம்காரத்துடன் ஆரம்பித்து அந்த அட்சரங்களைத் தன் விரல்களின் நுனிகளில் இட வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது வலது கையின் ஆள்காட்டி விரலிலிருந்து துவங்கி, இடது கையின் ஆள்காட்டி விரலில் முடிக்க வேண்டும். எஞ்சியுள்ள நான்கு அட்சரங்களையும் கட்டை விரல்களின் கணுக்களில் இட வேண்டும்.

பதங்கள் 6.8.8 – 6.8.10 : பிறகு ஒருவன் ஓம் விஷ்ணுவே நம: என்ற ஆறு அட்சரங்களைக் கொண்ட மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு ஒருவன் ஓம் என்ற அட்சரத்தைத் தன் இதயத்தின் மேலும், வி என்ற அட்சரத்தைத் தலை உச்சியிலும், ஷ என்ற அட்சரத்தைப் புருவங்களுக்கு மத்தியிலும், ண என்ற அட்சரத்தைக் குடுமியின் மேலும் (சிகா), வே என்ற அட்சரத்தை இரு கண்களுக்கு மத்தியிலும் இட வேண்டும். மந்திரத்தை உச்சரிப்பவன் பிறகு, ந என்ற அட்சரத்தை அவனது உடலிலுள்ள எல்லாக் கணுக்களின் மேலும் இட்டு ம என்ற அட்சரத்தை ஓர் ஆயுதமாகப் பாவித்து, அதைத் தியானிக்க வேண்டும். இவ்விதமாக அவன் பரிபூரண மந்திர சொரூபமாக மாற வேண்டும். அதன்பிறகு ம என்ற கடைசி அட்சரத்துடன் விஸர்கத்தைச் சேர்த்து, ம: அஸ்த்ராய ஃபட் என்ற மந்திரத்தை கிழக்கிலிருந்து துவங்கி எல்லாத் திசைகளிலும் அவன் உச்சரிக்க வேண்டும். இவ்விதமாக எல்லாத் திசைகளும் பாதுகாப்பான மந்திரக் கவசத்தினால் கட்டப்படும்.

பதம் 6.8.11 : இந்த மந்திரத்தை உச்சரித்த பிறகு ஆறு ஐசுவரியங்களில் முழுமையானவரும், தியானிக்கத்தக்கவருமான பரமபுருஷருடன், தான் குணத்தில் ஒன்றுபட்டவன் என்று தன்னை அவன் நினைக்க வேண்டும். பிறகு அவன் பகவான் நாராயணரிடம் நாராயண-கவசம் என்ற பின்வரும் பாதுகாப்பு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

பதம் 6.8.12 : தமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார்.

பதம் 6.8.13 : மிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வருணதேவனின் சகாக்களாகவுள்ள, கொடிய நீரினங்களிடம் இருந்து நீரில் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக. பகவான் தமது மாயா சக்தியை விரிவடையச் செய்து குள்ள வாமனரின் உருவத்தை ஏற்றார். அந்த வாமனர் நிலத்தில் என்னைக் காப்பாராக. பகவானின் பிரம்மாண்டமான விஸ்வரூபம் மூவுலகங்களையும் ஆக்கிரமிப்பதால், அவர் ஆகாயத்தில் என்னைக் காப்பாராக.

பதம் 6.8.14 : இரண்யகசிபுவின் எதிரியாகத் தோன்றிய பகவான் நரசிம்மர் எல்லாத் திசைகளிலும் என்னைக் காப்பாராக. அவருடைய உரத்த சிரிப்பு எல்லாத் திசைகளையும் அதிரச் செய்து, கருவுற்றிருந்த அசுர பத்தினிகளுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தியது. அந்த பகவான், வனம் மற்றும் யுத்த முன்னனி போன்ற கடினமான இடங்களில் என்னைக் காத்து இரட்சிப்பாராக.

பதம் 6.8.15 : அழிக்கப்பட முடியாதவரான பரமபுருஷர் வேத யக்ஞ அனுஷ்டானத்தின் மூலமாக ஆராய்ந்தறியப்படுவதால், அவர் யக்ஞேஸ்வரர் எனப்படுகிறார். அவருடையவராக அவதாரத்தில் அவர் பிரபஞ்சத்திற்கு அடியிலுள்ள நீரிலிருந்து பூமியைத் தூக்கி, அதைத் தனது கூரிய பற்களின் மேல் தாங்கிக் கொண்டார். அந்த பகவான் தெருவில் திருடர்களிடமிருந்து என்னைக் காப்பாராக. மலை உச்சிகளில் பகவான் பரசுராமர் என்னைக் காக்கட்டும். பரதனின் தமையனான பகவான் ராமச்சந்திரர் தம்பி லக்ஷ்மணருடன் அந்நிய தேசங்களில் என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.16 : செருக்கின் காரணத்தினால், தேவையில்லாமல் தவறான சமய மார்க்கத்தைப் பின்பற்றி, என் கடமைகளிலிருந்து விழுவதிலிருந்து பகவான் நாராயணர் என்னைக் காப்பாராக. நரராகத் தோன்றிய பகவான் அனாவசியமான தற்பெருமையிலிருந்து என்னைக் காக்கட்டும். யோக சித்திகளுக்கெல்லாம் தலைவரான பகவான் தத்தாத்ரேயர் பக்தி யோகத்தை நிறைவேற்றும் சமயத்தில் இழிவடைவதிலிருந்து என்னைக் காக்கட்டும். எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமான பகவான் கபிலர் கர்ம பந்தத்திலிருந்து என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.17 : காம இச்சையிலிருந்து சனத் குமாரர் என்னைக் காக்கட்டும். மங்கள காரியத்தைத் துவங்கும் பொழுது, பரமபுருஷரை வணங்கத் தவறி குற்றம் புரிவதிலிருந்து பகவான் ஹயகிரீவர் என்னைக் காக்கட்டும். விக்கிரக ஆராதனையில் குற்றம் புரிவதிலிருந்து தேவரிஷி நாரதர் என்னைக் காக்கட்டும். எல்லையற்ற நரக லோகங்களில் விழுவதிலிருந்து பகவான் கூர்மர் என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.18 : பரமபுருஷர் அவரது தன்வந்தரி அவதாரத்தில், விரும்பத்தகாத உணவுகளிலிருந்து என்னை விடுவித்து, நோய்களிலிருந்து என்னைக் காக்கட்டும். அக மற்றும் புறப் புலன்களை வென்றவராக பகவான் ரிஷபதேவர், வெப்பம் மற்றும் குளிர் என்ற இருமையினால் உண்டாகும், பயத்திலிருந்து என்னைக் காக்கட்டும். பொதுமக்களால் விளைவிக்கப்படும் அவதூறிலிருந்தும், தீங்கிலிருந்தும் யக்ஞர் என்னைக் காக்கட்டும். பகவான் பலராமரின் சேஷ அவதாரம் குரோதம் நிறைந்த பாம்புகளிடமிருந்து என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.19 : பரமபுருஷரின் சக்திவாய்ந்த அவதாரமான வியாசதேவர், வேத ஞானம் இல்லாமையால் உண்டாகும் எல்லா வகையான அஞ்ஞானத்திலிருந்தும் என்னைக் காக்கட்டும். வேதக் கோட்பாடுகளுக்கு முரணான செயல்களிலிருந்தும், வேத ஞானம் மற்றும் கிரியை ஆகிய வேதக் கோட்பாடுகளை முற்றிலும் மறக்கச் செய்யும் சோம்பலிலிருந்தும், பகவான் புத்ததேவர் என்னைக் காக்கட்டும். சமயக் கோட்பாடுகளைக் காப்பதற்காக அவதரித்தவரும், பரம புருஷருமாகிய பகவான் கல்கிதேவர் கலியுகத்தின் அழுக்கிலிருந்து என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.20 : பகலின் முதல் பகுதியின் (அதிகாலையில்), பகவான் கேசவர் அவரது கதையால் என்னைக் காக்கட்டும், எப்பொழுதும் புல்லாங்குழலை வாசிப்பதில் ஈடுபட்டுள்ள கோவிந்தன், பகலின் இரண்டாவது பகுதியில் என்னைக் காக்கட்டும். அனைத்து சக்திகளையும் உடையவரான பகவான் நாராயணர் பகலின் மூன்றாவது பகுதியில் என்னைக் காக்கட்டும். மேலும் பகைவரைக் கொல்வதற்காக கையில் சக்கரத்தை ஏந்தியுள்ள பகவான் விஷ்ணு, பகலின் நான்காவது பகுதியில் என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.21 : அசுரர்களுக்கு அச்சமூட்டும் வில்லை வைத்திருப்பவரான பகவான் மதுசூதனர், பகலின் ஐந்தாம் பகுதியில் என்னைக் காக்கட்டும். பிரம்ம, விஷ்ணு மற்றும் மகேஸ்வரராகத் தோன்றும் பகவான் மாதவர் மாலையில் என்னைக் காக்கட்டும். இரவின் ஆரம்பத்தில் பகவான் ரிஷிகேசர் என்னைக் காக்கட்டும். இரவின் இரண்டாவது, மூன்றாவது பகுதிகளில் (அர்த்த ராத்திரியிலும், நடு நிசியிலும்) பகவான் பத்மநாபர் தனியாக என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.22 : மார்பில் ஸ்ரீவத்ஸத்தைத் தாங்கியிருக்கும் பரமபுருஷர், நள்ளிரவுக்குப் பிறகு கீழ்வானம் சிவக்கும் வரை என்னைக் காக்கட்டும். கையில் வாளேந்தியவரான பகவான் ஜனார்தனர், இரவின் முடிவில் (இரவின் கடைசி நான்கு நாழிகைகளின் போது) என்னைக் காக்கட்டும். அதிகாலையில் பகவான் தாமோதரர் என்னைக் காக்கட்டும். பகல் மற்றும் இரவின் சந்தி வேளைகளில் பகவான் விஸ்வேஸ்வரர் என்னைக் காக்கட்டும்.

பதம் 6.8.23 : பகவானால் ஏவப்பட்டு நான்கு திசைகளிலும் சஞ்சரிக்கும் பரமபுருஷருடைய சக்கரமானது, யுகத்தின் முடிவில் தோன்றும் காலாக்னி போன்ற கூரிய முனைகளைக் கொண்டுள்ளது. கொழுந்து விட்டெரியும் தீயானது காற்றின் உதவியுடன் காய்ந்த புல்லை எரித்துச் சாம்பலாக்குவது போல், அந்த சுதர்சன சக்கரம் எங்களுடைய பகைவர்கள் எரித்துச் சாம்பலாக்கட்டும்.

பதம் 6.8.24 : பரமபுருஷரின் கையிலுள்ள கதையே, இடிபோல் தொட்டதை அழிக்கும். பொறிகளைக் கக்கும் நீ பகவானுக்கு மிகப் பிரியமானவனாவாய். நானும் அவருடைய சேவகன்தான். ஆகவே குஷ்மாண்டர், வைனாயிகர், யக்ஷர், இராட்சஸர், பூதங்கள் மற்றும் கிரகங்கள் எனப்படும் துஷ்ட ஜீவன்கள் ஆகியோரை அழித்துவிடு. அவர்களை தூள்தூளாகப் பொடியாக்கிவிடு.

பதம் 6.8.25 : சங்கங்களில் சிறந்ததும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் இருப்பதுமான பாஞ்சஜன்யமே, நீ எப்பொழுதும் பகவானுடைய மூச்சினால் நிரப்பப்பட்டிருக்கிறாய். ஆகவே நீ பயங்கரமான நாதத்தை உண்டாக்கி, இராட்சஸர்கள், பிரமதர்கள், பிரேதங்கள், மாத்ருகள், பிசாசுகள் மற்றும் கொடும் பார்வையுடைய பிரம்மராட்ஸர்களைப் போன்ற எதிரிகளின் இதயங்களை நடுங்கச் செய்து அவர்களை விரட்டியடிப்பாயாக.

பதம் 6.8.26 : பரமபுருஷரால் ஏவப்படும் கூரிய முனையுடைய வாளே, என் எதிரிகளின் சேனைகளைக் கண்டதுண்டமாக வெட்டுவாயாக. சந்திரன் போல் ஜொலிக்கும் நூறு வட்டங்களைக் கொண்ட கேடயமே, பாவிகளான எதிரிகளின் கண்களை மறைத்துவிடு. பாவமுள்ள அவர்களது கண்களைப் பிடுங்கிவிடு.

பதங்கள் 6.8.27 – 6.8.28 : பரமபுருஷரின் திவ்யநாமம், ரூபம், குணங்கள், உபகரணங்கள் ஆகியவற்றின் கீர்த்தனமானது, எங்களைக் கெட்ட கிரகங்கள், எரி நட்சத்திரங்கள், பொறாமையுள்ள மனிதர்கள், பாம்புகள், தேவர்கள், புலி, ஓநாய் போன்ற மிருகங்களின் ஆதிக்கத்திலிருந்து எங்களைக் காக்கட்டும். மேலும், மண், நீர், நெருப்பு, காற்று போன்ற பெளதிக மூலப் பொருட்களிலிருந்தும், பூதங்களிடமிருந்தும், இடியிலிருந்தும் எங்களுடைய முந்திய பாவங்களிலிருந்தும்கூட அது எங்களைக் காக்கட்டும். எங்களுடைய மங்களகரமான வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கும் இவைகளிடம் நாங்கள் எப்பொழுதும் அச்சம் கொண்டுள்ளோம். ஆகவே இவையனைத்தும் ஹரே கிருஷ்ண மகா மந்திர ஜபத்தினால் முற்றிலும் அழிக்கப்படட்டும்.

பதம் 6.8.29 : பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடதேவர் பரமபுருஷருக்கு இணையான சக்தியுடையவர் என்பதால் சிறந்த வழிபாட்டுக்கு உரியவராவார். வேதங்களின் சொரூபமாகிய அவர் சிறந்த சுலோங்களால் பூஜிக்கப்படுகிறார். அவர் ஆபத்தான எல்லாச் சூழ்நிலைகளிலிருந்தும் எங்களைக் காக்கட்டும். பரமபுருஷராகிய பகவான் விஷ்வக்ஷேனரும் அவரது புனித நாமங்களால் எல்லா அபாயங்களிலிருந்தும் எங்களைக் காக்கட்டும்.

பதம் 6.8.30 : பரமபுருஷரின் அந்தரங்க சகாக்களாக இருந்து கொண்டு அவரை அலங்கரிக்கும் அவரது புனித நாமங்கள், உன்னத ரூபங்கள், வாகனங்கள், ஆயுதங்கள் ஆகியவை எங்களுடைய புத்தியையும், புலன்களையும், மனதையும், உயிரையும், எல்லா அபாயங்களிலிருந்தும் காக்கட்டும்.

பதம் 6.8.31 : ஸ்தூல மற்றும் சூட்சுமமான பிரபஞ்ச தோற்றம் பௌதிகமானதாகும். இருப்பினும் அது பரமபுருஷரிலிருந்து வேறுபட்டதல்ல. ஏனெனில் அவரே எல்லாக் காரணங்களுக்கும் முடிவான காரணமாவார். காரணமும் விளைவும் உண்மையில் ஒன்றேயாகும். ஏனெனில் காரணமானது அதன் விளைவில் அடக்கம். ஆகையால் பரம சத்தியமாகிய பரமபுருஷரால் நம்முடைய எல்லா அபாயங்களையும், சக்திவாய்ந்த அவருடைய பகுதிகளுள் ஒன்றினால் அழித்துவிட முடியும்.

பதங்கள் 6.8.32 – 6.8.33 : பரமபுருஷர், ஜீவராசிகள், பெளதிக சக்தி, ஆன்மீக சக்தி, முழு சிருஷ்டி ஆகிய அனைத்தும் தனித்தனி பொருள்களாகும். ஆனால் ஆராய்ந்து கண்ட உண்மை என்னவெனில், இவையெல்லாம் சேர்ந்து தான் ஒரே பரமபுருஷராக உருவெடுத்துள்ளன. ஆகவே ஆன்மீக அறிவில் முன்னேறியவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பார்கள். ஆன்மீகத்தில் முன்னேறிய இத்தகைய நபர்களுக்கு பகவானுடைய அணிகலன்கள், மற்றும் அவருடைய நாமம், புகழ், குணங்கள், ரூபங்கள், ஆயுதங்கள் ஆகிய அனைத்தும் அவரது சக்தியின் தோற்றங்களே என்பது தெரியும். அவர்களுடைய மேலான ஆன்மீக அறிவுக்கேற்ப, பல்வேறு ரூபங்களைத் தோற்றுவிப்பவரும் சர்வக்ஞருமான பகவான் எங்கும் நிறைந்திருப்பவராகிறார். அவர் எல்லா இடங்களிலும், எல்லா அபாயங்களிலிருந்தும் நம்மைக் காக்கட்டும்.

பதம் 6.8.34 : பிரகலாத மகாராஜன் பகவான் நரசிம்ம தேவரின் புனித நாமத்தை உரக்கப் பாடினார். தமது பக்தரான பிரகலாத மகாராஜனுக்காக கர்ஜனை செய்த பகவான் நரசிம்ம தேவர், துணிச்சலான தலைவர்களால், விஷம், ஆயுதங்கள், நீர், நெருப்பு போன்றவைகள் மூலம் எல்லாத் திசைகளிலும் விளைவிக்கப்படும் ஆபத்தெனும் பயத்திலிருந்து நம்மைக் காக்கட்டும். பகவான் தெய்வீகமான தமது சொந்த ஆதிக்கத்தினால் அவர்களுடைய ஆதிக்கத்தை மறைத்துவிடுவாராக. எல்லாத் திசைகளிலும், மூலைகளிலும், மேலும், கீழும், உள்ளும், புறமும் நரசிம்மதேவர் நம்மைக் காக்கட்டும்.

பதம் 6.8.35 : விஸ்வரூபர் தொடர்ந்து கூறினார்: இந்திரனே, பகவான் நாராயணருடன் சம்பந்தப்பட்டதான மாயாமான இக்கவசம் என்னால் உங்களுக்கு விவரிக்கப்பட்டது. இந்த பாதுகாப்புக் கவசத்தை அணிந்து கொள்வதால், அசுரத் தலைவர்களை நிச்சயமாக உங்களால் வெல்ல முடியும்.

பதம் 6.8.36 : இக்கவசத்தை ஒருவர் அணிந்துகொண்டு யாரையெல்லாம் தன் கண்களால் பார்க்கிறரோ அல்லது தன் கால்களால் தொடுகிறாரோ, அவர்கள் மேற்கூரிய எல்லா அபாயங்களிலிருந்தும் உடனே விடுவிகப்படுவார்கள்.

பதம் 6.8.37 : நாராணய—கவசமான இந்த ஸ்தோத்திரம் நாராயணருடன் தெய்வீகமான முறையில் இணைக்கப் பெற்ற சூட்சும அறிவினால் அமையப்பெற்றதாகும். இந்த ஸ்தோத்திரத்தை உபயோகிப்பவர் அரசாங்கத்தினாலோ, கொள்ளைக்காரர்களாலோ, துஷ்ட அசுரர்களாலோ அல்லது எவ்வித நோயினாலோ ஒரு போதும் தொல்லைக்குள்ளாவதில்லை.

பதம் 6.8.38 : சுவர்க்க ராஜனே, கெளசிகர் என்ற பிராமணர் தனது யோக சக்தியினால் முன்பு வேண்டுமென்றே தன் உடலைத் தியாகம் செய்த பொழுது இக்கவசத்தை உபயோகித்தார்.

பதம் 6.8.39 : கந்தர்வ லோகத்தின் அரசரான சித்ரரதன் ஒரு சமயம் பல அழகிய மங்கையரால் சூழப்பட்டபடி, தன் விமானத்தில் ஏறி, இறந்து போன பிராமணரின் உடல் இருந்த இடத்திற்கு மேலே கடந்து சென்றார்.

பதம் 6.8.40 : உடனே சித்ரரதன் ஆகாயத்திலிருந்து பலவந்தமாக விமானத்துடன் தலைகீழாக கீழே தள்ளப்பட்டார். இதனால் ஆச்சரியமடைந்த அவர், வாளகில்யர்கள் என்ற சிறந்த முனிவர்களின் உத்தரவுப்படி, அந்த பிராமணரின் எலும்புகளை அருகிலிருந்த சரஸ்வதி நதியில் எறிந்து அந்த நதியில் நீராடிய பின்னரே அவரால் தன் இருப்பிடத்திற்குத் திரும்ப முடிந்தது.

பதம் 6.8.41 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, இக்கவசத்தை உபயோகிப்பவர் அல்லது பயபக்தியுடன் இதைப்பற்றி கேட்பவர். இந்த ஜட உலக சூழ்நிலைகளின் காரணத்தால் அச்சத்திற்கு உள்ளாகும்பொழுது, எல்லா அபாயங்களிலிருந்தும் உடனே விடுவிக்கப்படுவதுடன், அனைத்து ஜீவராசிகளாலும் பூஜிக்கவும் படுகிறார்.

பதம் 6.8.42 : நூறு யாகங்களைச் செய்த தேவேந்திரன் விஸ்வரூபரிடமிருந்து இந்த ஸ்தோத்திர கவசத்தைப் பெற்றார். அசுரர்களை வென்றபின் மூவுலக ஐசுவரியங்களையும் அவர் அனுபவித்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare