அத்தியாயம் – 6
தட்சப் புதல்விகளின் வம்சம்
பதம் 6.6.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஆகவே, அரசே, பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி, பராசேதஸர் எனப்படும் பிரஜாபதி தட்சன், தன் மனைவியான அசிக்னியின் கர்பத்தில் அறுபது புதல்விகளைப் பெற்றார். அப்புதல்விகள் எல்லோரும் தங்கள் தந்தையிடம் அன்பு மிக்கவர்களாக இருந்தனர்.

பதம் 6.6.2 : அவர் தர்மராஜனுக்கு (யமராஜனுக்கு) பத்து பெண்களையும், கஸ்யபருக்கு (முதலில் பன்னிரண்டும் பிறகு ஒன்றுமாக) பதின்மூன்று பெண்களையும், சந்திரதேவனுக்கு இருபத்தேழு பெண்களையும், அங்கிரர், கிருசாஸ்வர், பூதர் ஆகிய இவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பெண்களையும் கன்னிகாதானம் செய்தார். மற்ற நான்கு பெண்களும் கஸ்யபருக்கே கொடுக்கப்பட்டனர். (இவ்விதமாக கஸ்யபர் மொத்தம் பதினேழு பெண்களைப் பெற்றார்).

பதம் 6.6.3 : இப்பொழுது, மூவுலகையும் நிரப்பிய இப்பெண்களின் பெயர்களையும், அவர்களுடைய வம்சத்தவர்களின் பெயர்களையும் என்னிடமிருந்து கேட்பீராக.

பதம் 6.6.4 : யமராஜனுக்குக் கொடுக்கப்பட்ட பத்து பெண்களின் பெயர்கள் பானு, லம்பா, ககுத், யாமி, விஸ்வா, சாத்யா, மருத்வதி, வஸு, முகூர்த்தா மற்றும் சங்கல்பா என்பனவாகும். இப்பொழுது அவர்களுடைய மகன்களின் பெயர்களைக் கேட்பீராக.

பதம் 6.6.5 : அரசே, பானுவின் கர்பத்திலிருந்து தேவ ரிஷபன் என்ற ஒரு மகன் பிறந்தான். அவனிலிருந்து இந்திரசேனன் என்ற ஒரு மகன் வந்தான். லம்பாவின் கர்பத்திலிருந்து வித்யோதன் என்ற ஒரு மகன் வந்தான். அவன் எல்லா மேகங்களையும் உற்பத்தி செய்தான்.

பதம் 6.6.6 : ககுத்தின் கர்பத்திலிருந்து சங்கடன் என்ற மகன் வந்தான். அவனுடைய மகனின் பெயர் கீகடன். கீகடனிலிருந்து துர்கர்கள் என்ற பெயருடைய தேவர்கள் வந்தனர். யாமியிலிருந்து சுவர்கள் என்ற மகன் வந்தான். அவனுடைய மகனின் பெயர் நந்தி.

பதம் 6.6.7 : விஸ்வாவின் மகன்கள் விஸ்வதேவர்கள். அவர்களுக்கும் சந்ததி இல்லை. சாத்யாவின் கர்பத்திலிருந்து சாத்யர்கள் வந்தனர். அவர்களுக்கு அர்த்தசித்தி என்ற ஒரு மகன் இருந்தான்.

பதம் 6.6.8 : மருத்வதியின் கர்பத்திலிருந்து மருத்வான், ஜயந்தன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். பகவான் வாசுதேவரின் ஓர் அம்சமாகிய ஜயந்தன், உபேந்திரர் என்று அறியப்படுகிறார்.

பதம் 6.6.9 : மெளகூர்த்திகர்கள் என்ற பெயருடைய தேவர்கள் முகூர்தாவின் கர்பத்திலிருந்து பிறந்தனர். இந்த தேவர்கள் ஜீவராசிகளுக்கு அவர்களுடைய தனிப்பட்ட செயல்களின் பலன்களை அளிக்கின்றனர்.

பதங்கள் 6.6.10 – 6.6.11 : சங்கல்பாவின் மகன் சங்கல்பன் எனப்பட்டார். அவரிலிருந்து துராசை (பேராசை) பிறந்தது. வஸுவின் மகன்கள் எட்டு வஸுக்கள் எனப்பட்டனர். அவர்களுடைய பெயர்கள் துரோணர், பிராணன், துருவன், அர்கன், அக்னி, தோஷன், வாஸ்து, விபாவசு என்பனவாகும். துரோணன் என்ற வஸுவின் மனைவியான அபிமதியிலிருந்து ஹர்ஷன், சோகன், பயன் முதலான மகன்கள் உற்பத்தி செய்யப்பட்டனர்.

பதம் 6.6.12 : பிராணனின் மனைவியான ஊர்ஜஸ்வதி என்பவள், சஹன், ஆயுஸ், புரோஜவன் என்ற மூன்று மகன்களைப் பெற்றாள். துருவனின் மனைவி தரணி எனப்பட்டாள். அவளுடைய கர்பத்திலிருந்து பல்வேறு நகரங்கள் பிறந்தன.

பதம் 6.6.13 : அர்கனின் மனைவியான வாசனாவின் கர்பத்திலிருந்து தர்ஷன் முதலான பல மகன்கள் வந்தனர். அக்னி என்ற வஸுவின் மனைவியான தாரா, திரவிணகன் முதலான மகன்களைப் பெற்றாள்.

பதம் 6.6.14 : அக்னியின் மற்றொரு மனைவியான கிருத்திகாவிலிருந்து கார்த்திகேயன் (ஸ்கந்தன்) என்ற மகன் வந்தார். விசாகன் முதலானோர் அவருடைய மகன்களாவர். தோஷன் என்ற வஸுவின் மனைவியான சர்வரியின் கர்பத்திலிருந்து சிசுமாறன் என்ற மகன் வந்தார். அவர் பரமபுருஷரின் ஓர் அம்சமாவார்.

பதம் 6.6.15 : வாஸ்து என்ற வஸுவின் மனைவியான ஆங்கிரசியிலிருந்து விஸ்வகர்மா என்ற சிறப்புமிக்க சிற்பி பிறந்தார். விஸ்வகர்மா ஆக்ருதியின் கணவரானார். ஆக்ருதியிலிருந்து சாக்ஷுஷர் என்ற மனு பிறந்தார். அந்த மனுவின் புத்திரர்கள் விஸ்வதேவர்கள் என்றம் சாத்யர்கள் என்றும் அறியப்பட்டனர்.

பதம் 6.6.16 : விபாவஸுவின் மனைவியான ஊஷா, வியுஷ்டன், ரோசிஷன், ஆதபன் என்ற மூன்று மகன்களைப் பெற்றாள். ஆதபனிலிருந்து பஞ்சயாமன் வந்தார். அவர் அனைத்து ஜீவராசிகளையும் பெளதிக செயல்களைச் செய்யும்படி தூண்டும் காலமாவார்.

பதங்கள் 6.6.17 – 6.6.18 : பூதரின் மனைவியான சரூபா ஒரு கோடி ருத்திரர்களைப் பெற்றாள். அவர்களுள் ரைவதன், அஜன், பவன், ருமன், வாமன், உக்ரன், விருஷாகபி, அஜைகபாத், அஹிர்பிரத்னன், பஹுரூபன் மற்றும் மஹான் ஆகியோர் பதினொன்று முக்கிய ருத்திரர்கள் ஆவர். அவர்களுடைய கணங்களும் கோரமான தோற்றம் உள்ளவர்களுமான பேய்களும், பிசாசுகளும் பூதரின் மற்ற மனைவியிலிருந்து பிறந்தனர்.

பதம் 6.6.19 : பிரஜாபதி அங்கிரருக்கு சுவதா, சதீ என்ற இரு மனைவிகள் இருந்தனர். சுவதா என்ற மனைவி எல்லாப் பிதாக்களையும் தன் மகன்களாக ஏற்றுக் கொண்டாள். சதீ அதர்வாங்கிரஸ வேதத்தைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டாள்.

பதம் 6.6.20 : கிருசாஸ்வருக்கு அர்சிஸ், திஷணா என்ற இரு மனைவிகள் இருந்தனர். அவர் அர்சிஸ் என்ற மனைவியில் தூமகேதுவையும், திஷனா என்ற மனைவியில் வேதசிரா, தேவலர், வயுனர், மனு என்ற நான்கு மகன்களையும் பெற்றார்.

பதங்கள் 6.6.21 – 6.6.22 : தார்க்ஷ்யர் என்றும் அறியப்படுபவரான கஸ்யபருக்கு வினதா (சபர்ணா), கத்ரூ, பதங்கி, யாமினீ என்ற நான்கு மனைவிகள் இருந்தனர். பதங்கி பலவகையான பறவைகளைப் பெற்றாள். யாமினீ வெட்டுக்கிளிகளைப் பெற்றாள். வினதா (சுபர்ணா), பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடனையும் சூரிய தேவனின் தேரோட்டியான அனூருவையும் (அருணன்) பெற்றாள். கத்ரூ பலவகையான பாம்புகளைப் பெற்றாள்.

பதம் 6.6.23 : பாரதர்களில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே, கிருத்திகா என்ற நட்சத்திரக் கூட்டங்கள் சந்திரதேவனின் மனைவிகளாவர் ஆனால் சந்திரதேவன் படிப்படியாகத் தேய்ந்து போகும் நோய்க்கு ஆளாக வேண்டும் என்று பிரஜாபதி தட்சனால் சபிக்கப்பட்டதால், அவருடைய எந்த மனைவியின் மூலமாகவும் அவரால் குழந்தைகளைப் பெற இயலவில்லை.

பதங்கள் 6.6.24 – 6.6.26 : அதன் பிறகு சந்திரதேவன் மரியாதையான வார்த்தைகளால் பிரஜாபதி தட்சனை சாந்தப்படுத்தி, தான் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் இழந்திருந்த ஒளியின் பகுதிகளை மீண்டும் பெற்றார். இருப்பினும் அவரால் குழந்தைகளைப் பெற இயலவில்லை. சந்திரன் தேய்பிறைக் காலத்தில் தனது ஒளிவீசும் சக்தியை இழந்து, வளர்பிறையில் அதை திரும்பப் பெறுகிறார். பரீட்சித்து மகாராஜனே, கஸ்யப்பருடைய எந்த மனைவிகளின் கர்பங்களிலிருந்து முழுபிரபஞ்சத்தின் ஜனத்தொகையும் வந்ததோ, அந்த மனைவிகளின் பெயர்களை இப்பொழுது என்னிடமிருந்து கேட்பீராக. கிட்டத்தட்ட முழு பிரபஞ்சத்தின் மொத்த ஜனத் தொகைக்கும் அவர்களே தாய்களாவர். அவர்களுடைய பெயர்களைக் கேட்பதால் மங்களம் உண்டாகும். அவை அதிதி, திதி, தனு, காஷ்டா, அரிஷ்டா, கரஸா, இளா, முனி, குரோதவசா, தாம்ரா, சுரபி, சரமா மற்றும் திமி என்பனவாகும். திமியின் கர்பத்திலிருந்து புலிகள், சிங்கங்கள் போன்ற கொடிய மிருகங்கள் பிறந்தன.

பதம் 6.6.27 : பரீட்சித்து மகாராஜனே, சுரபியின் கர்பத்திலிருந்து எருமைகளும், மாடுகளும், பிளவுபட்ட குளம்புகளுடைய பிற மிருகங்களும் பிறந்தன. தாம்ராவின் கர்பத்திலிருந்து கழுகுகளும், பருந்துகளும், பிணந்தின்னும் பிற பெரிய பறவைகளும் பிறந்தன. மேலும் முனியின் கர்பத்திலிருந்து தேவதைகள் பிறந்தனர்.

பதம் 6.6.28 : குரோதவசாவிலிருந்து தந்தசூகம் என்ற பாம்புகளும், மற்ற பாம்புகளும், கொசுக்களும் பிறந்தன. இளாவின் கர்பத்திலிருந்து எல்லா வகையான மரம் செடி கொடிகளும் பிறந்தன. சுரசாவின் கர்ப்பத்திலிருந்து இராட்சஸர்கள் பிறந்தனர்.

பதங்கள் 6.6.29 – 6.6.31 : அரிஷ்டாவின் கர்பத்திலிருந்து கந்தர்வர்கள் பிறந்தனர். குதிரைகளைப் போன்ற பிளவுபடாத குளம்புகளுடைய மிருகங்கள் காஷ்டாவின் கர்ப்பத்திலிருந்து பிறந்தன. அரசே, தனுவின் கர்பத்திலிருந்து அறுபத்தொரு மகன்கள் வந்தனர். அவர்களுள் துவிமூர்தன், சம்பரர், அரிஷ்டர், ஹயகிரீவர், விபாவசு, அயோமுகர், சங்குசிரா, சுவர்பானு, கபிலர், அருணர், புலோமா, விருஷபர்வா, ஏகசக்ரர், அனுதாபனர், தூம்ரகேசர், விரூபாக்ஷர், விப்ரசித்தி மற்றும் துர்ஜயர் ஆகிய பதினெட்டு பேர்களும் மிகவும் முக்கியமானவர்களாவர்.

பதம் 6.6.32 : சுப்ரபா என்ற சுவர்பானுவின் மகளை நமுசி மணந்து கொண்டார். விருஷபர்வாவின் மகளான சர்மிஷ்டா, நகுஷ புத்திரரான சக்தி வாய்ந்த யயாதி மகராஜனுக்கு கொடுக்கப்பட்டாள்.

பதங்கள் 6.6.33 – 6.6.36 : தனுவின் மகனான வைஷ்வானரருக்கு உபதானவி, ஹயசிரா, புலோமா, காலகா என்ற நான்கு அழகிய புதல்விகள் இருந்தனர். இரண்யாக்ஷன் உபதானவியையும், கிரது ஹயசிரசாவையும் மணந்தனர். அதன் பிறகு பிரம்ம தேவரின் வேண்டுகோளுக்கிணங்க, பிரஜாபதியான கஸ்யபர், வைஸ்வானரரின் இரு புதல்விகளான புலோமாவையும், காலகாவையும் மணந்து கொண்டார். கஸ்யபருடைய இந்த இரு மனைவிகளின் கர்பங்களிலிருந்து அறுபதாயிரம் மகன்கள் வந்தனர். நிவாதகவசன் முதலான அம்மகன்கள் பௌலோமர்கள் என்றும் காலகேயர்கள் என்றும் அறியப்பட்டனர். அதிக தேக பலம் உள்ளவர்களும், யுத்த நிபுணர்களுமான அவர்கள், மாமுனிவர்களால் செய்யப்பட்ட யாகங்களுக்கு இடையூறு செய்வதையே தங்களுடைய இலட்சியமாகக் கொண்டிருந்தனர். அரசே, உமது பாட்டனாரான அர்ஜுனன் சுவர்க்க லோகங்களுக்குச் சென்று தனியாகவே அந்த அசுரர்களையெல்லாம் கொன்று, தேவேந்திரனின் பேரன்பிற்குப் பாத்திரமானார்.

பதம் 6.6.37 : விப்ரசித்தி தன் மனைவி சிம்ஹிகாவில் நூற்றியொரு மகன்களைப் பெற்றார். அவர்களுள் மூத்தவன் ராகு, மற்றவர்கள் நூறு கேதுக்கள் ஆவர். அவர்கள் அனைவருமே ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களின் அந்தஸ்துகளை அடைந்தனர்.

பதங்கள் 6.6.38 – 6.6.39 : காலக்கிரமப்படி அதிதியின் வம்சத்தவர்களைப் பற்றி நான் விவரிப்பதை இப்பொழுது கேட்பீராக. இந்த வம்சத்தில் பரமபுருஷராகிய நாராணயர் அவரது அம்ச அவதாரமாகத் தோன்றினார். அதிதி புத்திரர்களின் பெயர்கள் விவஸ்வான், அரியமா, பூஷா, துவஷ்டா, சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்ரன், சத்ரு மற்றும் உருக்ரமர் என்பனவாகும்.

பதம் 6.6.40 : சம்க்ஞா சூரியதேவனாகிய விவஸ்வானின் மனைவியாவாள். அவள் சிராத்ததேவர் என்ற மனுவைப் பெற்றாள். பாக்கியசாலியான அவளே இரட்டையர்களான யமராஜனையும், யமுனை நதியையும் பெற்றாள். பிறகு யமீ ஒரு பெண் குதிரையின் உருவில் பூமியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பொழுது அஸ்வினி குமாரர்களைப் பெற்றாள்.

பதம் 6.6.41 : சூரியதேவனின் மற்றொரு மனைவியான சாயா, சனீஸ்வரன், சாவர்ணி மனு என்ற இரு மகன்களையும், தபதீ என்ற ஒரு மகளையும் பெற்றாள். அந்த மகள் சம்வரணரை மணந்து கொண்டாள்.

பதம் 6.6.42 : அரியமாவின் மனைவியான மாத்ருகாவின் கர்ப்பத்திலிருந்து பல கற்றறிந்த அறிஞர்கள் பிறந்தனர். பிரம்மதேவர், அவர்களுக்கிடையில் தன்னை அறிவதில் இயல்பான ஆர்வமுடைய மனித இனங்களைப் படைத்தார்.

பதம் 6.6.43 : பூஷாவிற்கு மகன்கள் இல்லை. சிவபெருமான் தட்சனிடம் கோபம் கொண்ட பொழுது, பூஷா தன் பற்களைக் காட்டியபடி சிவபெருமானைப் பார்த்து சிரித்தான். அதனால் தன் பற்களை இழந்த அவன், அரைத்த மாவை மட்டுமே உண்டு வாழ வேண்டியதாயிற்று.

பதம் 6.6.44 : தைத்தியர்களின் மகளான ரசனா, பிரஜாபதி துவஷ்டாவின் மனைவியானாள். அவள் அவரது விந்துவின் மூலமாக தன் கர்பத்தில் சன்னிவேசன், விஸ்வரூபர் என்ற மிகவும் சக்திவாய்ந்த இரு மகன்களைப் பெற்றாள்

பதம் 6.6.45 : விஸ்வரூபர், தேவர்களின் நிரந்தர எதிரிகளாகிய அசுரர்களுடைய புதல்வியின் மகனாவார். இருப்பினும், தேவ குருவான பிருஹஸ்பதியை அவமதித்ததால், அவரால் அவர்கள் கைவிடப்பட்டபொழுது, தேவர்கள் பிரம்மாவின் உத்தரவுப்படி அந்த விஸ்வரூபரையே தங்களுடைய புரோகிதராக ஏற்றுக் கொண்டனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare