அத்தியாயம் – 2
அஜாமிளன் விஷ்ணு தூதர்களால்
விடுவிக்கப்படுதல்
பதம் 6.2.1
ஸ்ரீ-பாதாராநாயணிர் உவாச
ஏவம் தே பகவத்-தூதா யமதூதாபிபாஷிதம்
உபதார்யாத தான் ராஜன் ப்ரத்யாஹுர் நய-கோவிதா:

ஸ்ரீ பாதாராநாயணி: உவாச—வியாச புத்திரரான சுகதேவர் கூறினார்; ஏவம்—இவ்வாறு; தே—அவர்கள்; பகவத்-தூதா:—பகவான் விஷ்ணுவின் சேவகர்கள்; யமதூத—யமதூதர்களால்; அபிபாஷிதம்—கூறப்பட்டதை; உபதார்ய—கேட்டு; அத—பிறகு; தான்—அவர்களிடம்; ராஜன்—அரசே; ப்ரத்யாஹு:—நன்றாக பதில்கூறினர்; நய-கோவிதா:—தர்க்க வாதத்தில் நன்கு பரிச்சயமுள்ள.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, பகவான் விஷ்ணுவின் சேவகர்கள் எப்பொழுதும் நியாயத்திலும், தர்க்க வாதத்திலும் மிகவும் திறமைசாலிகளாவர். யமதூதர்களின் கூற்றுக்களைக் கேட்டபின், அவர்கள் பின்வருமாறு பதிலளித்தனர்.

பதம் 6.2.2
ஸ்ரீ-விஷ்ணுதூதா ஊசு:
அஹோ கஷ்டம் தர்ம-த்ருசாம் அதர்ம: ஸ்ப்ருசதே ஸபாம்
யத்ராதண்ட்யேஷவ் அஸாபேஷு தண்டோ யைர் த்ரியதே விருதா

ஸ்ரீ-விஷ்ணுதூதா: ஊசு:—விஷ்ணுதூதர்கள் கூறினர்; அஹோ—ஐயோ; கஷ்டம்—அது எவ்வளவு வேதனைக்குரியது; தர்ம-த்ருசாம்—தர்மத்தைக் காப்பதில் அக்கறை உள்ளவர்களின்; அதர்ம:—அதர்மச் செயல்கள்; ஸ்ப்ருசதே—பாதிக்கிறது; ஸபாம்—சபையை; யத்ர—எங்கு; அதண்ட்யேஷு—தண்டிக்கப்படக் கூடாதவர்களின் மீது; அஸாபேஷு—பாவமற்றவர்களை; தண்ட:—தண்டனை; யை:—யாரால்; த்ரியதே—தரப்படுகிறது; வ்ருதா—அநாவசியமாக.

விஷ்ணுதூதர்கள் கூறினர்: ஐயோ தர்மம் காக்கப்பட வேண்டிய ஒரு சபையில் அதர்மம் அறிமுகப்படுத்தப்படுவது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்! உண்மையில், தர்மத்தைக்காக்கும் பொறுப்புடையவர்கள் பாவமற்ற, தண்டிக்கப்படக்கூடாத ஒருவனை அநாவசியமாக தண்டிக்கிறார்களே!

பதம் 6.2.3
ப்ரஜானாம் பிதரோ யேச சாஸ்தார: ஸாதவ: ஸமா:
யதி ஸ்யாத் தேஷு வைஷ்ம்யம் கம் யாந்தி சரணம் ப்ரஜா:

ப்ரஜானாம்—பிரஜைகளின்; பிதர:—காவலர்கள் (அரசர்கள் அல்லது அரசாங்க ஊழியர்கள்); யே—அவர்கள்; ச—கூட; சாஸ்தார—சட்டம், ஒழுங்குமுறை பற்றி கட்டளையிடுபவர்கள்; ஸாதவ:—எல்லா நற்குணங்களும் உடையவர்கள்; ஸமா:—எல்லோரிடமும் சமமானவர்கள்; யதி—ஒருவேளை; ஸ்யாத்—இருந்தால்; தேஷு—அவர்களுக்கிடையில்; வைஷ்ம்யம்—பாரபட்சம்; கம்—யாரிடம்; யாந்தி—செல்வார்கள்; சரணம்—அடைக்கலம்; ப்ரஜா:—பிரஜைகள்.

அரசன் அல்லது அரசாங்க அதிகாரியொருவன், பிரஜைகளுக்குத் தந்தை போலவும், காவலர் போலவும் இருந்து, அன்புடனும், பாசத்துடனும் அவர்களைக் காத்து இரட்சிக்கக்கூடிய அளவுக்குச் சிறந்த தகுதிமுறைகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் வேத சாஸ்திரங்களுக்கேற்ப பிரஜைகளுக்கு நல்ல அறிவுரைகளையும், உபதேசங்களையும் அளித்து, எல்லோரிடமும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். இதைத்தான் யமராஜன் செய்கிறார். ஏனெனில் அவர் நேர்மை தவறாத பரம நீதிமானாவார். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களும் அப்படித்தான். ஆனால் இத்தகையவர்கள் ஊழல் நிறைந்தவர்களாகி குற்றமற்ற அப்பாவிகளைத் தண்டிப்பதன் மூலம் பராபட்சம் காட்டுவார்களாயின், பிரஜைகள் தங்களுடைய பராமரிப்பிற்கும், பாதுகாப்பிற்கும் அடைக்கலம் தேடி எங்கு செல்வார்கள்?

பதம் 6.2.4
யத் யத் ஆசரதி ஸ்ரேயான் இதரஸ் தத் தத் ஈஹதே
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்ததே

யத் யத்—எதையெல்லாம்; ஆசரதி—செய்கிறார்களோ; ஸ்ரேயான்—பூரண சமய அறிவுடைய முதல்தர மனிதன்; இதர:—கீழ்ப்பட்டவன்; தத்தத்—அதையே; ஈஹதே—செய்கிறான்; ஸ:—அவன் (அந்த பெரிய மனிதன்); யத்—எதையெல்லாம்; ப்ரமாணம்—அத்தாட்சியாக அல்லது சரியானதாக; குருதே—ஏற்றுக் கொள்கிறான்; லோக:—பொது மக்கள்; தத்—அதை; அனுவர்ததே—பின்பற்றுகிறார்கள்.

பொதுமக்கள், சமூகத்திலுள்ள ஒரு தலைவனின் உதாரணத்தைப் பின்பற்றி, அவனுடைய நடத்தைப்படியே தாங்களும் நடப்பர். அத்தலைவன் ஏற்றுக் கொள்வதையெல்லாம் பிரமாணமாக தாங்களும் ஏற்றுக் கொள்வர்.

பதங்கள் 6.2.5 – 6.2.6
யஸ்யாங்கே சிர ஆதாய லோக: ஸ்வபிதி நிர்வ்ருத:
ஸ்வயம் தர்மம் அதர்மம் வா நஹி வேத யதா பசு:

ஸ கதம் ன்யர்பிதாத்மானம் க்ருத-மைத்ரம் அசேதனம்
விஸ்ரம்பணீயோ பூதானாம் ஸக்ருணோ தோக்தும் அர்ஹதி

யஸ்ய—யாருடைய; அங்கே—மடியில்; சிர:—தலையை; ஆதாய—வைத்து; லோக:—பாமர மக்கள்; ஸ்வபிதி—தூங்குகிறார்களோ; நிர்வ்ருத:—நிம்மதியாக; ஸ்வயம்—தானே; தர்மம்—சமயக் கோட்பாடுகளை அல்லது வாழ்வின் இலட்சியத்தை; அதர்மம்—அதர்மத்தை; வா—அல்லது; ந—இல்லை; ஹி—நிச்சயமாக; வேத—அறிவது; யதா—போலவே; பசு:—ஒரு மிருகம்; ஸ:—அத்தகைய ஒருவன்; கதம்—எவ்வாறு; ன்யர்பித-ஆத்மானம்—பூரண சரணடைந்த ஜீவராசிக்கு; க்ருத மைத்ரம்—உயர்ந்த நம்பிக்கையும்; நட்பும் வைத்துள்ள; அசேதனம்—உணர்வு முதிர்ச்சியடையாத மூடன்; விஸ்ரம்பணீய:—நம்பிக்கைக்கு உகந்த; பூதானாம்—ஜீவ ராசிகளின்; ஸ-க்ருண:—எல்லோருக்கும் நல்லது செய்யும் மென்மையான இதயமுடைய; தோக்தும்—துன்புறுத்த; அர்ஹித—முடியும்.

பாமர மக்கள், எது தர்மம், எது அதர்மம் என்று பிரித்தறியக் கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சியடையாதவர்களாக உள்ளனர். கள்ளங்கபடமற்றவனும், தேர்ந்த அறிவு இல்லாதவனுமான ஒரு குடிமகன், தன் எஜமானன் தன்னைக் காப்பாற்றுவான் என்ற உறுதியான நம்பிக்கையுடன், அவனது மடியில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கும் அறிவற்ற ஒரு மிருகத்தைப் போன்றவனாவான். ஒரு தலைவன் உண்மையில் இரக்க மனமுடையவனாகவும், ஒரு ஜீவராசியின் நம்பிக்கைக்குத் தகுதியுடைவனாகவும் இருந்தால், உயர்ந்த நம்பிக்கையும் நட்பும் கொண்டு முழுமையாகச் சரணடைந்துள்ள ஒரு பாமரனை அவன் எவ்வாறு தண்டிக்கலாம் அல்லது கொல்லலாம்?

பதம் 6.2.7
அயம் ஹி க்ருத-நிர்வேசோ ஜன்ம-கோடி-அம்ஹஸாம் அபி
யத் வ்யாஜஹார விவசோ நாம ஸ்வஸ்தி-அயனம் ஹரே:

அயம்—இந்த மனிதன் (அஜாமிளன்); ஹி—உண்மையில்; க்ருத-நிர்வேச:—எல்லாவித பிராயச்சித்தங்களையும் செய்தவனாகிறான்; ஜன்ம—பிறவிகளின்; கோடி—கோடிக்கணக்கான; அம்ஹஸாம்—பாவச்செயல்களுக்கு; அபி—கூட; யத்—ஏனெனில்; வ்யாஜஹார—அவன் ஜபித்திருக்கிறான்; விவச:—கதியற்ற ஒரு நிலையில்; நாம—திருநாமத்தை; ஸ்வஸ்தி-அயனம்—முக்திக்கு வழிவகுக்கும்; ஹரே—பரமபுருஷரின்.

அஜாமிளன் தன் பாவச் செயல்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் செய்துவிட்டான். உண்மையில், ஒரு பிறவியில் செய்த பாவங்களுக்கு மட்டுமின்றி, கோடிக்கணக்கான பிறவிகளில் செய்த பாவங்களுக்கும் அவன் பிராயச்சித்தம் செய்தவனாகிறான். ஏனெனில், கதியற்ற ஒரு நிலையில் நாராயணரின் திருநாமத்தை அவன் ஜபித்ததுவே அதற்குக் காரணம். அவன் தூய்மையாக ஜபிக்கவில்லை என்றாலும், குற்றமில்லாமல் ஜபித்திருக்கிறான். எனவே இப்பொழுது அவன் தூய்மையடைந்து முக்திக்குத் தகுதியுடைவன் ஆகிவிட்டான்.

பதம் 6.2.8
ஏதேனைவ ஹி அகோனோ ‘ஸ்ய க்ருதம் ஸ்யாத் அக-நிஷ்க்ருதம்
யதா நாராயணாயேதி ஜகாத சதுர்-அக்ஷரம்

ஏதேன—(ஜபித்த) இதனால்; ஏவ—மட்டும்; ஹி—நிச்சயமாக; அகோன:—பாவ விளைவுகளை உடைய; அஸ்ய—இவனுடைய (அஜாமிளன்); க்ருதம்—செய்யப்பட்டுவிட்டது; ஸ்யாத்—இருக்கிறது; அக—பாவங்களுக்கு; நிஷ்க்ருதம்—முழுமையான பிராயச்சித்தம்; யதா—எப்பொழுது; நாராயண—ஓ நாராயணா (அவனது மகனின் நாமம்); ஆய—இங்கு வா; இதி—என்று; ஜகாத—அவன் உரைத்தான்; சது: அக்ஷரம்—(நா—ரா—ய—ண என்ற) நான்கு அட்சரங்களை.

விஷ்ணுதூதர்கள் தொடர்ந்து கூறினார்: இதற்கு முன்பு கூட, உண்ணும் பொழுதும் மற்ற சமயங்களிலும் இந்த அஜாமிளன் தன் மகனை “நாராயணா இங்கு வா” என்று அழைத்து வந்தான். இவ்வாறு அவன் தன் மகனின் பெயரைத் தான் அழைத்தான் என்றாலும், நா—ரா—ய—ண என்ற நான்கு அட்சரங்களை உச்சரித்திருக்கிறான். நாராயணா என்ற நாமத்தை இவ்வாறு ஜபித்ததனாலேயே, கோடிக்கணக்கான பிறவிகளில் செய்த பாவங்களுக்குப் போதுமான பிராயச்சித்தத்தை அவன் செய்தவனாகிறான்.

பதங்கள் 6.2.9 – 6.2.10
ஸ்தேன: ஸுரா-போ மித்ர திருக் ப்ரஹ்ம-ஹா குரு-தல்ப-க:
ஸ்த்ரீ-ராஜ-பித்ரு-கோ-ஹந்தா யே ச பாதகினோ ‘பரே

ஸர்வேஷாம் அபி அகவதாம் இதம் ஏவ ஸுனிஷ்க்ருதம்
நாம வ்யாஹரணம் விஷ்ணோர் யதஸ் தத்-விஷயா மதி:

ஸ்தேன:—திருடன்; ஸுரா-ப:—குடிகாரன்; மித்ர-த்ருக்—ஒரு நண்பனுக்கு அல்லது உறவினனுக்குத் துரோகம் செய்தவன்; ப்ரஹம-ஹா—ஒரு பிராமணனைக் கொன்றவன்; குரு-தல்ப-க:—தன் ஆசான் அல்லது குரு பத்தினியுடன் தகாத உறவு கொள்பவன்; ஸ்த்ரீ—பெண்கள்; ராஜ—அரசன்; பித்ரு—தந்தை; கோ—பசுக்களை; ஹந்தா—கொன்றவன்; யே—எவர்கள்; ச—கூட; பாதகின:—பாவங்கள் செய்தவன்; அபரே—மற்றும் பலர்; ஸர்வேஷாம்—அவர்களனைவரின்; அபி—என்ற போதிலும்; அக-வதாம்—பல பாவங்களைச் செய்தவர்கள்; இதம்—இது; ஏவ—மட்டுமே; ஸு-நிஷ்க்ருதம்—பூரண பிராயச்சித்தமாகும்; நாம-வ்யாஹரணம்—புனித நாமத்தை ஜபிப்பது; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; யத:—எதனால்; தத்-விஷயா—புனித நாமத்தை ஜபிப்பவன்பால்; மதி:—அவரது கவனம்.

பகவான் விஷ்ணுவின் புனித நாமத்தை ஜபிப்பதுதான், தங்கம் முதலான விலையுயர்ந்த பொருட்களைத் திருடுபவனுக்கும், குடிகாரனுக்கும், ஒரு நண்பன் அல்லது உறவினனுக்குத் துரோகம் செய்பவனுக்கும், பிராமணனைக் கொல்பவனுக்கும், பெண்களை, அரசரை அல்லது தன் தந்தையைக் கொல்பவனுக்கும், பசுக்களைக் கொன்றவனுக்கும், மற்றெல்லா பாவ ஆத்மாக்களுக்கும் மிகச் சிறந்த பிராயச்சித்த முறையாகும். பகவான் விஷ்ணுவின் புனித நாமத்தை ஜபிப்பதாலேயே, இத்தகைய பாவிகள் பரமபுருஷரின் கவனத்தைக் கவர்ந்து விடுகின்றனர். ஆகவே, “இவன் எனது புனித நாமத்தை ஜபித்திருக்கிறான் என்பதால், இவனுக்குப் பாதுகாப்பளிப்பது என் கடமையாகும்” என்று பகவான் கருதுகிறார்.

பதம் 6.2.11
ந நிஷ்க்ருதைர் உதிதைர் ப்ரஹ்ம-வாதிபிஸ்
ததா விஜத்யதி அகவான் வ்ரதாதிபி:
யதா ஹரேர் நாம-பதைர் உதாஹ்ருதைஸ்
தத் உத்தமஸ்லோக-குணோபலம்பகம்

ந—இல்லை; நிஷ்க்ருதை:—பிராயச்சித்த முறைகளால்; உதிதை:—நியமிக்கப்பட்டுள்ள; ப்ரஹ்ம-வாதிபி:—மனுவைப் போன்ற வேத வல்லுணர்களால்; ததா—அந்த அளவு; விஜத்யதி —தூய்மையடைகிறான்; அகவான்—ஒரு பாவி; வ்ரத-ஆதிபி:—விரதங்களையும், கட்டுப்பாட்டு விதிகளையும் அனுஷ்டிப்பதன் மூலம்; யதா—போன்று; ஹரே:—பகவான் ஹரியின்; நாம-பதை:—புனித நாமத்தின் அட்சரங்களால்; உதாஹ்ருதை:—ஜபிக்கப்பட்ட; தத்—அது; உத்தமஸ் லோக—பரமபுருஷரின்; குண—உன்னத குணங்களின்; உபலம்பகம்—ஒருவனுக்கு ஞாபகப்படுத்துவது.

பாவிகள், பகவான் ஹரியின் புனித நாமத்தை ஒரே ஒரு தடவை ஜபிப்பதால் எவ்வளவு பரிசுத்தமடைகிறார்களோ, அவ்வளவு பரிசுத்தத்தை, வேத சம்ஸ்காரங்களைப் பின்பற்றுவதாலோ, பிராயச்சித்தம் செய்வதாலோ அடைவதில்லை. சமஸ்காரப் பிராயச்சித்தம் ஒருவனைப் பாவ விளைவுகளிலிருந்து விடுவிக்கும் என்றாலும், இது பக்தித் தொண்டை எழுப்புவதில்லை. ஆனால் பகவானின் நாமங்களை ஜபிப்பதானது பாவ விளைவுகளைப் போக்கி, பக்தித் தொண்டை எழுப்புவதுடன், பகவானின் புகழ், குணங்கள், விசேஷ பண்புகள், லீலைகள் மற்றும் உபகரணங்களையும் ஒருவனுக்கு ஞாபகப்படுத்துகிறது.

பதம் 6.2.12
நைகாந்திகம் தத் தி க்ருதே ‘பி நிஷ்க்ருதே
மன: புனர் தாவதி சேத் அஸத்-பதே
தத் கர்ம-நிர்ஹாரம் அபீப்ஸதாம் ஹ ரேர்
குணானுவாத: கலு ஸத்வ-பாவன:

ந—இல்லை; ஜகாந்திகம்—முற்றிலும் தூய்மையடைவது; தத்—இதயம்; ஹி—ஏனெனில்; க்ருதே—மிகவும் நன்றாக செய்யப்பட்ட; அபி—போதிலும்; நிஷ்க்ருதே—பிராயச்சித்தம்; மன:—மனம்; புன:—மீண்டும்; தாவதி—ஓடுகிறது; சேத்—என்றால்; அஸத்-பதே—பெளதிக செயல்களின் வழியில்; தத்—எனவே; கர்ம-நிர்ஹாரம்—பலன் விளைவிக்கக்கூடிய கருமங்களை முற்றிலும் நிறுத்துவதில்; அபீப்ஸதாம்—தீவிர ஆசை உடையவர்களுக்கு; ஹரே:—பரம புருஷரின்; குண-அனுவாத:—மகிமைகளை இடையறாது பாடுவதுதான்; கலு—உண்மையில்; ஸத்வ-பாவன:—நிஜமாக ஒருவனது வாழ்வை தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.

சமய சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பிராயச்சித்த சடங்கு முறையில் இதயத்தை தூய்மைப்படுத்துவதற்குப் போதுமானவையல்ல. ஏனெனில் பிராயச்சித்தம் செய்த பிறகும், மனம் மீண்டும் பெளதிகச் செயல்களை நோக்கியே ஓடுகிறது. அதனால்தான், பெளதிக செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட விரும்புபவனுக்கு, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஜபிப்பது அல்லது பகவானின் நாமம், புகழ், மற்றும் லீலைகளைத் துதித்துப் போற்றுவது, பரிபூரண பிராயச்சித்த முறையாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய நாம ஜபமும், துதியும் ஒருவனது இதயத்திலுள்ள அழுக்கை முழுமையாகப் போக்கிவிடுகிறது.

பதம் 6.2.13
அதைனம் மாபனயத க்ருதாசேஷாக-நிஷ்க்ருதம்
யத் அஸெள பகவன்-நாம ம்ரியமாண: ஸமக்ரஹீத்

அத—எனவே; ஏனம்—இவனை (அஜாமிளனை); மா—கூடாது; அபநயத—எடுத்துச் செல்ல முயற்சிக்க; க்ருத—செய்யப்பட்டு விட்டது; அசேஷ—எல்லையற்ற; அக-நிஷ்க்ருதம்—அவனது பாவச் செயல்களுக்கான பிராயச்சித்தம்; யத்—ஏனெனில்; அஸௌ—அவன்; பகவத்-நாம—பரமபுருஷரின் புனித நாமத்தை; ம்ரியமாண:—இறக்கும் பொழுது; ஸமக்ரஹீத்—நன்கு ஜபித்தான்.

இறக்கும் பொழுது, இந்த அஜாமிளன் பகவான் நாராயணரின் புனித நாமத்தை கதியற்ற நிலையில், உரக்க ஜபித்தான். அந்த ஜபம் ஒன்றே அவனது எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் அவனை விடுவித்துவிட்டது. ஆகவே, யமதூதர்களே, நரக சூழ்நிலைகளில் தண்டிப்பதற்காக, இவனை உங்கள் எஜமானரிடம் எடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டாம்.

பதம் 6.2.14
ஸாங்கேத்யம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலனம் ஏவ வா
வைகுண்ட-நாம-க்ரஹணம் அசேஷாக-ஹரம் விது:

ஸாங்கேத்யம்—குறிப்பாக; பாரிஹாஸ்யம்—பரிகாசமாக; வா—அல்லது; ஸ்தோபம்—இன்ப கானமாக; ஹேலனம்—அலட்சியமாக; ஏவ—நிச்சயம்; வா—அல்லது; வைகுண்ட—பகவானின்; நாம க்ரஹணம்—பகவானின் நாம ஜபத்தை; அசேஷ—எண்ணற்ற; அக-ஹரம்—பாவ விளைவுகளைப் போக்கும்; விது:—முன்னேற்றமடைந்த ஆன்மீகிகள் அறிவர்.

பகவானின் புனித நாமத்தை ஒருவன் (வேறொன்றைக் குறிப்பதற்காக) மறைமுகமாகவோ, விளையாட்டாகவோ, இசை விருந்தாகவோ அல்லது அலட்சியமாகவோ ஜபித்திருந்தால் கூட, அவன் எண்ணற்ற பாவ விளைவுகளிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான். எல்லா வேத வல்லுனர்களாலும் இது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

பதம் 6.2.15
பதித: ஸ்கலிதோ பக்ன: ஸந்தஷ்டஸ் தப்த ஆஹத:
ஹரிர் இதி அவசேனாஹ புமான் நார்ஹதி யாதனா:

பதித—விழுந்தாலும்; ஸ்கலித—இடறினாலும்; பக்ன:—எலும்புகள் முறிபட்டாலும்; ஸந்தஷ்ட:—கடிபட்டாலும்; தப்த—கொடிய ஜுரத்தினால் அல்லது அதற்கொப்பான துன்பச் சூழ்நிலையால் தாக்கப்பட்டாலும்; ஆஹத:—காயப்பட்டாலும்; ஹரி:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; இதி—இவ்வாறு; அவசேன—தன்னையறியாமலே; ஆஹ—உரைப்பானாயின்; புமான்—ஒருவன்; ந—இல்லை; அர்ஹதி—தகுதியுடைவன்; யாதனா:—நரக சூழ்நிலைகளுக்கு.

ஒருவன் ஹரியின் புனித நாமத்தை உச்சரித்த பின், வீட்டின் மேலிருந்து விழுந்தோ, வழுக்கி விழுந்தோ, சாலையின் விபத்தினால் எலும்புமுறிவு ஏற்பட்டோ, பாம்பு கடித்தோ, வலியினால் அல்லது கடும் ஜுரத்தினால் பாதிக்கப்பட்டோ அல்லது ஏதேனும் ஆயுதத்தால் காயமடைந்தோ மரணமடைய நேரிட்டால், அவன் பாவியாக இருப்பினும், அவன் நரக வாழ்வில் புகுவதிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான்.

பதம் 6.2.16
குரூணாம் ச லகூணம் ச குரூணி ச லகூணி ச
ப்ராயஸ்சித்தானி பாபானாம் ஜ்ஞாத்வோக்தானி மஹர்ஷிபி:

குருணாம்—பெரிய; ச—மற்றும்; லகூணா—சிறிய; ச—கூட; குரூணி—பெரியதான; ச—மற்றும்; லகூனி—சிறியதான; ச—கூட; ப்ராயஸ்சித்தானி—பிராயச்சித்த முறைகள்; பாபானாம்—பாவச் செயல்களின்; ஞாத்வா—நன்கு அறிந்து; உக்தானி—விதிக்கப்பட்டுள்ள; மஹா-ரிஷிபி:—மகரிஷிகளால்.

பெரிதும், சிறிதுமான பாவங்களுக்குப் பெரிதும் சிறிதுமான பிராயச்சித்த முறைகளை ஒருவன் மேற்கொள்ள வேண்டும் என்று வேத வல்லுனர்களாலும், முனிவர்களாலும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஹரே கிருஷ்ண மந்திர ஜபமானது, பெரிதும் சிறிதுமான பாவங்களின் எல்லா விளைவுகளையும் அழித்துவிடுகிறது.

பதம் 6.2.17
தைஸ் தானி அகானி பூயந்தே தபோ-தான-வ்ரதாதிபி:
நாதர்மஜம் தத்-த்ருதயம் தத் அபீசாங்ரி-ஸேவயா

தை:—அவைகளால்; தானி—அவ்வெல்லா; அகானி—பாவச்செயல்களும் அவற்றின் விளைவுகளும்; பூயந்தே—முற்றிலும் முறியடிக்கப்படுகின்றன; தப:—தவம்; தான—தானம்; வ்ரத ஆதிபி:—விரதங்கள் மற்றும் இது போன்ற செயல்களால்; ந—இல்லை; ஆதர்ம-ஜம்—அதர்மச் செயல்களிலிருந்து உண்டாகும்; தத்—அதனுடைய; ஹ்ருதயம்—இதயம்; தத்—அது; அபி—கூட; ஈச-அங்ரி—பகவானுடைய தாமரைப் பாதங்களின்; ஸேவயா—சேவையால்.

ஒருவன் தவம், தானம், விரதங்கள் முதலான முறைகளினால் பாவ விளைவுகளை முறியடிக்க இயலும் என்றாலும், இப்புண்ணியச் செயல்களால் இதயத்திலுள்ள பௌதிக ஆசைகளை அவனால் வேருடன் களையமுடியாது. ஆனால் பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் சேவை செய்வதால் அவன் இத்தகைய மாசுகளிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான்.

பதம் 6.2.18
அஞ்ஞானாத் அதவா ஞானாத் உத்தமஸ்லோக-நாம யத்
ஸங்கீர்திதம் அகம் பும்ஸோ தஹேத் ஏதோ யதானல:

அஞ்ஞானாத்—அறியாமையின் காரணத்தால்; அதவா—அல்லது; ஞானாத்—அறிவுடன்; உத்தமஸ்லோக—பரமபுருஷரின்; நாம—புனித நாமத்தை; யத்—எது; ஸங்கீர்திதம்—உச்சரிக்கப்படுகிறதோ; அகம்—பாவம்; பும்ஸ:—ஒருவரின்; தஹேத்—எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது; ஏத:—காய்ந்த சருகுகள்; யதா—போன்று; அனல:—நெருப்பு.

நெருப்பு எவ்வாறு காய்ந்த சருகுகளை எரித்துச் சாம்பலாக்குகிறதோ, அவ்வாறே அறிந்தோ, அறியாமலோ ஜபிக்கப்படும் பகவானின் புனித நாமம் கூட ஒருவனுடைய எல்லாப் பாவ விளைவுகளையும் எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது.

பதம் 6.2.19
யதாகதம் வீர்யதமம் உபயுக்தம் யத்ருச்சயா
அஜானதோ ‘பி ஆத்ம-குணம் குர்யான் மந்த்ரோ ‘பி உதாஹ்ருத:

யதா—எவ்வாறு; அகதம்—மருந்து; வீர்ய-தமம்—மிகவும் சக்தி வாய்ந்த; உபயுக்தம்—சரியாக உட்கொள்ளப்பட்டால்; யத்ருச்சயா—எப்படியாவது; அஜானத:—அறியாத ஒருவனால்; அபி—கூட; ஆத்ம-குணம்—அதன் சுய ஆற்றலை; குர்யாத்—வெளிப்படுத்துகிறது; மந்த்ர:—ஹரே கிருஷ்ண மந்திரம்; அபி—கூட; உதாஹ்ருத:—ஜபிக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட மருந்தின் நல்ல பலனளிக்கும் சக்தியை அறியாத ஒருவன், அந்த மருந்தை உட்கொண்டால், அல்லது வலுக்கட்டாயமாக உட்கொள்ளச் செய்யப்பட்டால் கூட, அவனுக்குத் தெரியாமலேயே அது செயற்படுகிறது. ஏனெனில், அதன் ஆற்றல் நோயாளிக்குத் தெரியுமா, தெரியாதா என்பதைப் பொறுத்ததல்ல. அதுபோலவே, பகவானின் புனித நாம ஜபத்தின் மகிமையை ஒருவன் அறிந்திருக்கவில்லை என்றாலும், அறிந்தோ, அறியாமலோ அதை அவன் ஜபித்தாலும், அந்த ஜபம் நற்பயன் அளிக்கும் என்பது நிச்சயம்.

பதம் 6.2.20
ஸ்ரீ-சுக உவாச
த ஏவம் ஸுவினிர்ணீய தர்மம் பாகவதம் ந்ருப
தம் யாம்ய-பாசான் நிர்முச்ய விப்ரம் ம்ருத்யோர் அமூமுசன்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவர் கூறினார்; தே—அவர்கள் (விஷ்ணுதூதர்கள்); ஏவம்—இவ்வாறு; ஸு-வினிர்ணீய—பூரணமாக ஆராய்ந்தறிந்து; தர்மம்—நிஜ தர்மத்தை; பாகவதம்—பக்தித் தொண்டிற்கேற்ப உள்ள; ந்ருப—அரசே; தம்—அவனை (அஜாமிளனை); யாம்ய-பாசாத்—யமதூதர்களின் பாசக்கயிற்றிலிருந்து; நிர்முச்ய—விடுவித்து; விப்ரம்—அந்தபிராமணனை; ம்ருத்யோ:—மரணத்திலிருந்து; அமூமுசன்—காப்பாற்றினர்.

ஸ்ரீ சுகதேவர் தொடர்ந்து கூறினார்: அரசே, பக்தித் தொண்டின் கோட்பாடுகளைத் தக்க வாதங்களுடனும், நியாயங்களுடனும் இவ்வாறு பூரணமாக ஆராய்ந்த விஷ்ணுதூதர்கள், பிராமணனான அஜாமிளனை யமதூதர்களின் பிடியிலிருந்து விடுவித்து, சமீபித்திருந்த மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றினர்.

பதம் 6.2.21
இதி ப்ரத்யுதிதா யாம்யா தூதா யாத்வா யமாந்திகம்
யம-ராஜ்ஞே யதா ஸர்வம் ஆசசக்ஷுர் அரிந்தம

இதி—இவ்வாறு; ப்ரத்யுதிதா:—(விஷ்ணுதூதர்களால்) விடையளிக்கப்பட்ட; யாம்யா:—யமராஜனின்; தூதா:—தூதர்கள்; யாத்வா—சென்று; யம-அந்திகம்—யமலோகத்திற்கு; யம ராஜ்ஞே—யமராஜனிடம்; யதா—முறையாக; ஸர்வம்—அனைத்தையும்; ஆசசக்ஷு:—அறிவித்தனர்; அரிந்தம—எதிரிகளை அடக்குபவரே.

எதிரிகளை அடக்குபவரான பரீட்சித்து மகாராஜனே, யம தூதர்களுக்கு விஷ்ணுதூதர்களால் விடையளிக்கப்பட்டபின் அவர்கள் யமராஜனிடம் சென்று நடந்ததையெல்லாம் விவரித்தனர்.

பதம் 6.2.22
த்விஜ: பாசாத் வினிர்முக்தோ கத-பீ: ப்ரக்ருதிம் கத:
வவந்தே சிரஸா விஷ்ணோ: கிங்கரான் தர்சனோத்ஸவ:

த்விஜ:—அந்த பிராமணன் (அஜாமிளன்); பாசாத்—பாசத்திலிருந்து; வினிர்முக்த:—விடுவிக்கப்பட்டு; கத-பீ:—பயத்திலிருந்து விடுபட்டு; ப்ரக்ருதிம் கத:—சுய நினைவுக்கு வந்தான்; வவந்தே—தனது பணிவான வணக்கங்களைச் செலுத்தினான்; சிரஸா—தன் சிரம் தாழ்த்தி; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; கிங்கரான்—சேவகர்களை; தர்சன-உத்ஸவ:—தரிசித்ததால் மிகவும் மகிழ்ந்தான்.

யமதூதர்களின் பாசங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பிராமணனான அஜாமிளன் இப்பொழுது பயத்திலிருந்து விடுபட்டு, தன் சுயநினைவுக்கு வந்தான். பிறகு உடனேயே விஷ்ணுதூதர்களின் தாமரைப் பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்கினான். அவர்களுடைய வருகையால் அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில், அவர்கள் யமதூதர்களின் கைகளிலிருந்து தன் உயிரைக் காப்பாற்றியதை அவன் நேரில் கண்டிருந்தான்.

பதம் 6.2.23
தம் விவக்ஷும் அபிப்ரேத்ய மஹாபுருஷ-கிங்கரா:
ஸஹஸா பஸ்யதஸ் தஸ்ய தத்ராந்தர்ததிரே ‘நக

தம்—அவனை (அஜாமிளனை); விவக்ஷும்—பேச விரும்பியவனான; அபிப்ரேத்ய—புரிந்து கொண்டு; மஹாபுருஷ-கிங்கரா:—பகவான் விஷ்ணுவின் சேவகர்கள்; ஸஹஸா—திடீரென்று; பஸ்யத: தஸ்ய—அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே; தத்ர—அங்கு; அந்தர்ததிரே—மறைந்து விட்டனர்; அனக—பாவமற்ற பரீட்சித்து மகாராஜனே.

பாவமற்ற பரீட்சித்து மகாராஜனே, பரமபுருஷரின் சேவகர்களான விஷ்ணுதூதர்கள், அஜாமிளன் ஏதோ சொல்ல முயல்வதைக் கண்டு திடீரென்று அங்கிருந்து மறைந்து விட்டனர்.

பதங்கள் 6.2.24 – 6.2.25
அஜாமிளோ ‘பி அதாகர்ண்ய தூதானாம் யம- க்ருஷ்ணயோ:
தர்மம் பாகவதம் சுத்தம் த்ரை-வேத்யம் ச குணாஸ்ரயம்

பக்திமான் பகவதி ஆசு மஹாத்ம்ய-ஸ்ரவணாத் தரே:
அனுதாபோ மஹான் ஆஸீத் ஸ்மரதோ ‘சுபம் ஆத்மன:

அஜாமிள:—அஜாமிளன்; அபி—கூட; அத—அதன்பிறகு; ஆகர்ண்ய—கேள்வியுற்று; தூதானாம்—தூதர்களில்; யமக்ருஷ்ணயோ:—யமராஜன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய; தர்மம்—உண்மையான சமயக் கோட்பாடுகள்; பாகவதம்—ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது போன்ற, அல்லது ஜீவராசிக்கும், பரமபுருஷருக்கும் இடையிலான உறவுமுறையைப் பற்றிய; சுத்தம்—பரிசுத்தமான; த்ரை-வேத்யம்—மூன்று வேதங்களில் கூறப்பட்டுள்ள; ச—கூட; குண-ஆஸ்ரயம்—ஜட இயற்கைக் குணங்களுக்கு கீழ்ப்பட்ட பெளதிக மதம்; பக்தி-மான்—(ஜட இயற்கைக்குணங்களிலிருந்து விடுபட்ட) ஒருதூய பக்தன்; பகவதி—பரமபுருஷரிடம்; ஆசு—உடனடியாக; மஹாத்ம்ய—நாமம், புகழ் முதலியவைகளின் துதி; ஸ்ரவணாத்—கேட்டதால்; ஹரே:—பகவான் ஹரியின்; அனுதப:—வருத்தமடைந்து; மஹான்—அளவுகடந்த; ஆஸீத்—இருந்தது; ஸ்மரத:—நினைந்து; அசுபம்—மானக்கேடான செயல்களையெல்லாம்; ஆத்மன:—தன்னால் செய்யப்பட்ட.

யமதூதர்களுக்கும், விஷ்ணுதூதர்களுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலைக் கேட்ட அஜாமிளனால், மூன்று ஜட இயற்கைக் குணங்களின் கீழ் செயற்படுபவையும், மூன்று வேதங்களில் குறிப்பிட்டுள்ளவையுமான மதக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் ஜட இயற்கைக் குணங்களுக்கு மேற்பட்டவையும், ஜீவராசி மற்றும் பரமபுருஷர் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவுமுறையைப் பற்றியவையுமான உன்னதமான சமயக் கோட்பாடுகளையும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அத்துடன் பரமபுருஷரின் நாமம், புகழ், குணங்கள் மற்றும் லீலைகளைப் பற்றியும் அஜாமிளன் கேள்விப்பட்டான். இவ்விதமாக அவன் ஒரு தூய பக்தனானான். பிறகு அவனால் தனது முக்கிய பாவச் செயல்களை நினைவுகூற முடிந்தது. அவற்றைச் செய்ததற்காக அவன் மிகவும் வருத்தப்பட்டான்.

பதம் 6.2.26
அஹோ மே பரமம் கஷ்டம் அபூத் அவிஜிதாத்மன:
யேன விப்லாவிதம் ப்ரஹ்ம வ்ருஷல்யாம் ஜாயதாத்மனா

அஹோ—ஐயோ; மே—எனது; பரமம்—மிகப் பெரிது; கஷ்டம்—கஷ்டம்; அபூத்—இருந்தது; அவிஜித-ஆத்மன:—என் புலன்கள் கட்டுப்படுத்தப்படாததால்; யேன—எதனால்; விப்லாவிதம்—அழிக்கப்பட்டு; ப்ரஹ்ம—எனது பிராமண தகுதிகள் அனைத்தும்; வ்ருஷல்யாம்—வேலைக்காரியான ஒரு சூத்ராணீயிடம்; ஜாயதா—குழந்தை பெற்று; ஆத்மனா—என்னால்.

அஜாமிளன் கூறினான்: ஐயோ, என் புலன்களுக்கு அடிமையான நான் எவ்வளவு இழிந்தவனாக ஆகிவிட்டேன்! உயர்ந்த தகுதியுடைய ஒரு பிராமணனின் நிலையிலிருந்து விழுந்து, ஒரு விலைமகளிடம் நான் குழந்தைகளைப் பெற்றேனே!

பதம் 6.2.27
தின் மாம் விகர்ஹிதம் ஸத்பிர் துஷ்க்ருதம் குல- கஜ்ஜலம்
ஹித்வா பாலாம் ஸதீம் யோ ‘ஹம் ஸுரா-பீம் அஸதீம் அகாம்

திக் மாம்—என்னை வெறுக்க வேண்டும்; விகர்ஹிதம்—நிந்திக்கப்பட்ட; ஸத்பி:—நல்லோர்களால்; துஷ்க்ருதம்—பாவங்களைச் செய்தவனும்; குல-கஜ்ஜலம்—குலப் பெருமையைக் கெடுத்தவனும்; ஹித்வா—கைவிட்டு; பாலாம்—இளம் மனைவியை; ஸதீம்—பதிவிரதையான; ய:—யார்; அஹம்—நான்; ஸுராபீம்—மது அருந்தும் பழக்கம் உள்ள ஒரு பெண்ணுடன்; அஸதீம்—கெட்ட நடத்தையுள்ள; அகாம்—நான் உடலுறவு கொண்டேன்.

ஐயகோ, நான் மிகவும் பாவகரமாக செயற்பட்டு என் குலப்பெருமையைக் கெடுத்துவிட்டேனே. உண்மையில் பதிவிரதையான என் அழகிய இளம் மனைவியைக் கைவிட்டு, குடிகாரியான இழிவடைந்த ஒரு வேசியுடன் உடலுறவு கொண்டவனும், நல்லோர்களால் இகழப்பட்டவனுமான என்னை வெறுக்க வேண்டும்.

பதம் 6.2.28
வ்ருத்தாவ் அனாதௌ பிதாரள நான்ய-பந்தூ தபஸ்வினௌ
அஹோ மயாதுனா த்யக்தாவ் அக்ருதஜ்ஞேன நீசவத்

வ்ருத்தௌ—வயதானவர்களும்; அனாதெள—அனாதையானவர்களும்; பிதரெள—என் பெற்றோர்கள்; ந-அன்ய-பந்தூ—வேறு நண்பர்கள் இல்லாதவர்களும்; தபஸ்வினௌ—அதிக கஷ்டங்களுக்கு உள்ளானவர்களுமான; அஹோ—ஐயோ; மயா—என்னால்; அதுனா—அப்பொழுது; த்யக்தௌ—கைவிடப்பட்டனர்; அக்ருத ஜ்ஞேன—நன்றி கெட்ட; நீசவத்—இழிகுலத்து நீசனைப்போல்.

வயதான என் பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேறெந்த மகனோ அல்லது நண்பனோ இல்லை. நானும் அவர்களை கவனித்துக்கொள்ளாததால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஐயோ, இழிகுலத்து நீசனைப்போல், நன்றி கெட்டதனமாக நான் அவர்களை அந்நிலையில் விட்டு வந்தேனே!

பதம் 6.2.29
ஸோ ‘ஹம் வ்யக்தம் பதிஷ்யாமி நரகே ப்ருச-தாருணே
தர்ம க்னா: காமினோ யத்ர விந்தந்தி யம-யாதனா:

ஸ:—இத்தகைய மனிதனான; அஹம்—நான்; வயக்தம்—இப்பொழுது தெளிவாகிவிட்டது; பதிஷ்யாமி—விழுவேன்; நரகே—நரகத்தில்; ப்ருச-தாருணே—மிகவும் துன்பகரமான; தர்ம-க்னா:—சமயக் கோட்பாடுகளை மீறியவர்கள்; காமினோ:—மிகவும் காமமாக இருப்பார்கள்; யத்ர—எங்கு; விந்தந்தி—அனுபவிப்பார்கள்; யம-யாதனா:—யமராஜனால் சுமத்தப்படும் துன்பகரமான சூழ்நிலைகளை.

பாவம் செய்தவனும், சமயக் கோட்பாடுகளை மீறியவனுமான என்னைப் போன்ற ஒருவன், இத்தகைய செயல்களின் பலனாக, நரகச் சூழ்நிலைகளில் தள்ளப்பட்டு, கடும் வேதனைகளை அனுபவிக்க வேண்டும் என்பது இப்பொழுது தெளிவாகிறது.

பதம் 6.2.30
கிம் இதம் ஸ்வப்ன ஆஹோஸ்வித் ஸாக்ஷாத் த்ருஷ்டம் இஹாத்புதம்
க்வ யாதா அத்ய தே யே மாம் வ்யகர்ஷண் பா-பாணய:

கிம்—என்ன; இதம்—இது; ஸ்வப்னே—கனவில்; ஆஹோஸ்வித்—அல்லது; ஸாக்ஷாத்—நேரிடையாக (நனவில்); த்ருஷ்டம்—காணப்பட்டதா; இஹ—இங்கு; அத்புதம்—அற்புதம்; க்வ—எங்கு; யாதா:—சென்றுவிட்டனர்; அத்ய—இப்பொழுது; தே—அவர்கள் எல்லோரும்; யே—எவர்கள்; மாம்—என்னை; வ்யகர்ஷன்—இழுத்துக் கொண்டிருந்த; பாச-பாணய:—தங்கள் கைகளில் பாசக்கயிறுகளுடன்.

இப்பொழுது நான் கண்டது கனவா அல்லது நனவா? பயங்கரமான மனிதர்கள் என்னைக் கட்டி இழுத்துச் செல்வதற்காக தங்கள் கைகளில் கயிறுகளுடன் வந்ததை நான் கண்டேனே, அவர்கள் எங்கு சென்று விட்டனர்?

பதம் 6.2.31
அத தே க்வ கதா: ஸித்தாஸ் சத்வாரஸ் சாரு-தர்சனா:
வ்யாமோசயன் நீயமானம் பத்வா பாசைர் அதே புவ:

அத—அதன்பிறகு; தே—அந்த மனிதர்கள்; க்வ—எங்கு; கதா:—சென்று விட்டனர்; ஸித்தா:—முக்தியடைந்த; சத்வார:—நான்கு பேர்கள்; சாரு-தர்சனா:—காண்பதற்கு மிகவும் அழகான; வ்யாமோசயன்—அவர்கள் விடுவித்தனர்; நீயமானம்—இழுத்துச் செல்லப்பட்ட என்னை; பத்வா—கட்டி; பாசை:—கயிறுகளால்; அத: புவ:—நரகத்தை நோக்கிக் கீழே.

கயிற்றால் கட்டப்பட்டு, நரகத்தை நோக்கின் கீழே இழுத்துச் செல்லப்பட்ட என்னை விடுவித்தவர்களும், அழகு மிக்கவர்களுமான அந்நான்கு முக்தர்களும் எங்கே சென்று விட்டனர்?

பதம் 6.2.32
அதாபி மே துர்பகஸ்ய விபுதோத்தம-தர்சனே
பவிதவ்யம் மங்களேன யேனாத்மா மே ப்ரஸீததி

அத—ஆகவே; அபி—கூட; மே—என்னுடைய; துர்பகஸ்ய—மிகவும் துரதர்ஷ்டசாலியான; விபுத-உத்தம—உத்தம பக்தர்களை; தர்சனே—தரிசித்ததால்; பவிதவ்யம்—இருந்திருக்க வேண்டும்; மங்களேன—புண்ணியச் செயல்கள்; யேன—எவற்றினால்; ஆத்ம—ஆத்மா; மே—எனது; ப்ரஸீததி—உண்மையில் ஆனந்தமடைகிறது.

பாவச் செயல்களெனும் கடலில் மூழ்கியிருந்த நான் மிகவும் வெறுக்கத்தக்கவனும், துரதிர்ஷ்டசாலியும் ஆவேன் என்பதில் ஐயமில்லை. ஆயினும், என்னுடைய பூர்வ ஆன்மீகச் செயல்களின் பலனாக, என்னைக் காப்பாற்ற வந்த நான்கு உத்தம பக்தர்களை என்னால் தரிசிக்க முடிந்தது. அவர்களது வருகையால் நான் இப்பொழுது பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பதம் 6.2.33
அன்யதா ம்ரியமாணஸ்ய நாசுசேர் வ்ருஷாலீ-பதே:-
வைகுண்ட-நாம-க்ரஹணம் ஜிஹ்வா வக்தும் இஹார்ஹதி

அன்யதா—இல்லையெனில்; ம்ரியமாணஸ்ய—மரணவாயிலில் உள்ள ஒருவனுக்கு; ந—இல்லை; அசுசே:—மிகவும் அசுத்தமான; வ்ருஷலீ-பதே:—ஒரு வேசியின் கணவனுக்கு; வைகுண்ட—வைகுண்ட நாதரின்; நாம-க்ரஹணம்—புனித நாமத்தை உச்சரிக்கும்; ஜிஹ்வா—நாக்கு; வக்தும்—சொல்வதற்கு; இஹ—இச்சூழ்நிலையில்; அர்ஹதி—முடிந்தது.

எனது பூர்வ பக்தித்தொண்டு இல்லையெனில், சாகும் தறுவாயில் உள்ளவனும், அசுத்தமானவனும், ஒரு வேசியின் கணவனுமான நான் எப்படி வைகுண்ட நாதரின் புனித நாமத்தை உச்சரிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கக் கூடும்? நிச்சயமாக அது சாத்தியமேயல்ல.

பதம் 6.2.34
க்வ சாஹம் கிதவ: பாபோ ப்ரஹ்ம-க்னோ நிரபத்ரப:
க்வ ச நாராயணேதி ஏதத் பகவன்-நாம மங்களம்

க்வ—எங்கே; ச—கூட; அஹம்—நான்; கிதவ—வஞ்சகனும்; பாப:—பாவமே உருவானவனும்; ப்ரஹ்ம-க்ன:—பிராமண தர்மத்தைக் கொன்றவனும்; நிரபத்ரப:—வெட்கங்கெட்டவனுமான; க்வ—எங்கே; ச—கூட; நாராயண—நாராயண; இதி—என்ற; ஏதத்—இந்த; பகவத்-நாம—பரமபுருஷரின் புனித நாமம்; மங்களம்—மங்களகரமான.

அஜாமிளன் தொடர்ந்து கூறினான்: வஞ்சகனும், பாவமே உருவானவனும், பிராமண தர்மத்தைக் கொன்றவனும், வெட்கங்கெட்டவனுமான நான் எங்கே? நாராயணா என்ற பரம மங்களகரமான பரமபுருஷரின் புனித நாமம் எங்கே?

பதம் 6.2.35
ஸோ ‘ஹம் ததா யதிஷ்யாமி யத-சித்தேந்ரியானில:
யதா ந பூய ஆத்மானம் அந்தே தமஸி மஜ்ஜயே

ஸ:—அப்படிப்பட்ட; அஹம்—நான்; ததா—அவ்வாறு; யதிஷ்யாமி—நான் முயற்சி செய்வேன்; யத-சித்த-இந்ரிய—மனதையும், புலன்களையும் அடக்கி; அனில:—மற்றும் உள்காற்றுகளையும்; யதா—அதனால்; ந—இல்லை; பூய:—மீண்டும்; ஆத்மானம்—என் ஆத்மாவை; அந்தே—இருளில்; தமஸி—அறியாமையில்; மஜ்ஜயே—நான் மூழ்கடிப்பேன்.

நான் பெரும் பாவியாவேன். ஆனால் இப்பொழுது இந்த அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியிருப்பதால், நான் எனது மனம், பிராணவாயு, புலன்கள் ஆகியவற்றை நன்கு அடக்கி எப்பொழுதும் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதனால் பெளதிக வாழ்வெனும் ஆழமான இருளிலும், அறியாமையிலும் மீண்டும் விழுந்து விடாமல் இருக்க முடியும்.

பதங்கள் 6.2.36 – 6.2.37
விமுச்ய தம் கிமம் பந்தம் அவித்யா-காம-கர்மஜம்
ஸர்வ-பூத-ஸுஷ்ருச் சாந்தோ மைத்ர: கருண ஆத்மவான்

மோசயே க்ரஸ்தம் ஆத்மானம் யோஷின்-மய்யாத்ம-மாயயா
விக்ரீடிதோ யயைவாஹம் க்ரீடா-ம்ருக இவாதம:

விமுச்ய—அதிலிருந்து விடுபட்டு; தம்—அந்த; கிமம்—இந்த; பந்தம்—பந்தத்திலிருந்து; அவித்யா—அறியாமையால்; காம—காம இச்சைகளினால்; கர்ம-ஜம்—செயல்களின் பலனாக உண்டான; ஸர்வ-பூத—அனைத்து ஜீவராசிகளின்; ஸுஹ்ருத்—நண்பனாக; சாந்த:—சாந்தனாகவும்; மைத்ர:—நண்பனாகவும்; கருண:—கருணை காட்டுபவனாகவும்; ஆத்ம-வான்—ஆத்மாவை அறிந்தவனாகவும்; மோசயே—நான் விடுவித்துக் கொள்ளப் போகிறேன்; க்ரஸ்தம்—சிறைப்பட்டுள்ள; ஆத்மானம்—என் ஆத்மாவை; யோஷித்-மய்யா—ஒரு பெண்ணின் உருவிலுள்ள; ஆத்ம-மாயயா—பகவானின் மாயா சக்தியால்; விக்ரீடித:—விளையாடினேன்; யயா—எதனால்; ஏவ—நிச்சயமாக; அஹம்—நான்; க்ரீட-ம்ருக:—ஒரு விளையாட்டு (பழக்கப்படுத்தப்பட்ட) மிருகம்; இவ—போல்; அதம:—மிகவும் இழிந்தவனாகிய.

ஒருவன் தன்னை தன் உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால், புலன் நுகர்வு ஆசைகளுக்கு உள்ளாகி, பலவகைப் பாவ, புண்ணியச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இது தான் பந்தப்பட்ட பௌதிக வாழ்வு எனப்படுகிறது. இப்பொழுது, ஒரு பெண்ணின் வடிவில், பரமபுருஷரின் மாயா சக்தியால் விளைவிக்கப்பட்ட பெளதிக பந்தத்திலிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ளப் போகிறேன். மிகவும் இழிவடைந்த ஆத்மாவாக இருந்த காரணத்தால், நான் மாயா சக்திக்கு பலியாகி, ஒரு பெண்ணின் கையால் ஆட்டி வைக்கப்பட்ட ஒரு விளையாட்டு மிருகம் போல் ஆனேன். இப்பொழுது நான் காம இச்சைகளைத் துறந்து, இந்த மாயையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ளப் போகிறேன். நான் எல்லா ஜீவராசிகளிடமும் கருணையுள்ள ஓர் உற்ற நண்பனாக இருந்து, எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் என்னை ஆழ்த்திக் கொள்வேன்.

பதம் 6.2.38
மமாஹம் இதி தேஹாதௌ ஹித்வாமித்யார்த்த-தீர் மதிம்
தாஸ்யே மனோ பகவதி சுத்தம் தத்-கீர்த்தனாதிபி:

மம—எனது; அஹம்—நான்; இதி—என்று; தேஹ-ஆதௌ—உடலிலும், உடல் சம்பந்தமான பொருட்களிலும்; ஹித்வா—விட்டுவிட்டு; அமித்யா—பொய்யல்லாத; அர்த்த—விஷயங்களில்; தீ:—என் உணர்வினால்; மதிம்—புத்தியை; தாஸ்யே—செலுத்துவேன்; மன:—என் மனதை; பகவதி—பரம புருஷர் மீது; சுத்தம்—பரிசுத்தமான; தத்—அவரது நாமத்தை; கீர்த்தன-ஆதிபி:—ஜபித்தல், கேட்டல் முதலியவைகளால்.

பக்தர்களின் சகவாசத்தில் பகவானின் புனித நாமத்தை நான் ஜபித்ததனாலேயே என் இதயம் இப்பொழுது தூய்மையடைந்து வருகிறது. எனவே பெளதிக புலன் நுகர்வின் பொய்யான வசீகரத்திற்கு மீண்டும் நான் பலியாக மாட்டேன். இப்பொழுது நான் என் மனதை பரப்பிரம்மத்தில் நிலை நிறுத்தி விட்டதால், என்னை என் உடலுடன் இனி அடையாளப்படுத்த மாட்டேன். “நான், எனது” என்ற பொய்யான எண்ணங்களைக் கைவிட்டு, என் மனதை ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் நான் பதிக்கப்போகிறேன்.

பதம் 6.2.39
இதி ஜாத-ஸுனிர்வேத: க்ஷண-ஸங்கேன ஸாதுஷு
கங்கா-த்வாரம் உபயாய முக்த-ஸர்வானுபந்த:

இதி—இவ்வாறு; ஜாத-ஸீனிர்வேத—பௌதிக சிந்தனையிலிருந்து விடுபட்டவன் (அஜாமிளன்); க்ஷண-ஸ்ங்கேன—கணநேர தொடர்பினால்; ஸாதுஷு—பக்தர்களுடனான; கங்கா-த்வாரம்—ஹரியிடம் செல்வதற்கான வாயிலாகிய ஹரித்வாரம் (இது கங்கை துவங்குமிடம் என்பதால் கங்கா-த்வாரம் என்றும் அழைக்கப்படுகிறது); உபேயாய—சென்றான்; முக்த—விடுபட்டவனாக; ஸர்வ-அனுபந்தன:—எல்லாவகையான பெளதிக பந்தத்திலிருந்தும்.

பக்தருடனான (விஷ்ணுதூதர்கள்) கணப்பொழுது சகவாசத்தின் காரணத்தினால், அஜாமிளன் பெளதிக அபிமானத்திலிருந்து வைராக்கியத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டான். இவ்வாறு எல்லா பௌதிக கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்ட அவன் உடனே ஹரித்வாரத்தை நோக்கிச் சென்றான்.

பதம் 6.2.40
ஸ தஸ்மின் தேவ-ஸதன ஆஸீனோ யோகம் ஆஸ்தித: ப்ரத்யாஹ்ருதேந்ரிய-க்ராமோ யுயோஜ மன ஆத்மனி

ஸ:—அவன் (அஜாமிளன்); தஸ்மின்—அந்த இடத்தில் (ஹரித்துவாரில்); தேவ-ஸதனே—ஒரு விஷ்ணு ஆலயத்தில்; ஆஸீன:—இருந்துகொண்டு; யோகம் அஸ்தித:—பக்தி யோகத்தை மேற்கொண்டான்; ப்ரத்யாஹ்ருத—புலன்நுகர்வுச் செயல்களிலிருந்து விலகி; இந்திரிய-க்ராம:—அவனது புலன்களை; யுயோஜ—அவன் நிலைநிறுத்தினான்; மன:—மனதை; ஆத்மனி—ஆத்மாவிடம் அல்லது பரமபுருஷரான பரமாத்மாவிடம்.

ஹரித்வாரில் அஜாமிளன் ஒரு விஷ்ணு ஆலயத்தில் புகலிடம் ஏற்று, பக்தியோக முறையை மேற்கொண்டான். அவன் தன் புலன்களை அடக்கி அவனது மனதை பகவானின் சேவையில் முழுமையாக ஈடுபடுத்தினான்.

பதம் 6.2.41
ததோ குணேப்ய ஆத்மானம் வியுஜ்யாத்ம-ஸமாதினா
யுயுஜே பகவத்-தாம்னி ப்ரஹ்மணி அனுபவாத்மனி

தத:—அதன்பிறகு; குணேப்ய:—ஜட இயற்கைக் குணங்களிலிருந்து; ஆத்மானம்—மனதை; வியுஜ்ய—விலக்கி; ஆத்ம-ஸமாதினா—பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுப்படுவதன் மூலமாக; யுயஜே—ஈடுபடுத்தினான்; பகவத்-தாம்னி—பகவானின் ரூபத்தில்; ப்ரஹ்மணி—பரப்பிரம்மனாகிய (இது சிலை வழிபாடு அல்ல); அனுபவ-ஆத்மனி—(தாமரைப் பாதங்களிலிருந்து துவங்கி படிப்படியாக மேல் நோக்கிச் சென்று) எப்பொழுதும் சிந்திக்கப்பட வேண்டிய.

அஜாமிளன் முழுமையாக பக்தித் தொண்டில் ஈடுபட்டான். இவ்விதமாக அவன் தன் மனதைப் புலன் நுகர்விலிருந்து விலக்கி, பகவானின் ரூபத்தைச் சிந்திப்பதில் முழுமையாக ஆழ்ந்துவிட்டவனானான்.

பதம் 6.2.42
யர்ஹி உபாரத தீஸ் தஸ்மின் அத்ராஷீத் புருஷான் புர: உபலப்யோபலப்தான் ப்ராக் வவந்தே சிரஸா த்விஜ:

யர்ஹி—எப்பொழுது; உபாரத-தீ:—அவனது மனமும், புத்தியும் நிலை நிறுத்தப்பட்டனவோ; தஸ்மின்—அப்பொழுது; அத்ராக்ஷீத்—கண்டான்; புருஷான்—அப்புருஷர்களை (விஷ்ணு தூதர்களை); புர:—தன் முன்னால்; உபலப்ய—அடைந்து; உபலப்தான்—அடையப்பெற்றவர்களை; ப்ராக்—முன்பு; வவந்தே—வணங்கினான்; சிரஸா—தலையால்; த்விஜ:—அந்த பிராமணன்.

அஜாமிளனின் புத்தியும், மனதும் பகவானின் ரூபத்தில் நிலை நிறுத்தப்பட்டதும், அந்த பிராமணன் நான்கு திவ்ய புருஷர்களை மீண்டும் தன்முன் கண்டான். அவர்கள், முன்பு தான் கண்ட அதே நபர்கள்தான் என்பதைப் புரிந்து கொண்ட அவன், தன் சிரம் தாழ்த்தி அவர்களை வணங்கினான்.

பதம் 6.2.43
ஹித்வா கலேவரம் தீர்த்தே கங்காயாம் தர்சனாத் அனு
ஸத்ய: ஸ்வரூபம் ஜக்ருஹே பகவத்-பார்ஸ்வ- வர்த்தினாம்

ஹித்வா—கைவிட்டு; கலேவரம்—ஜட உடலை; தீர்த்தே—அந்த புண்ணிய ஸ்தலத்தில்; கங்காயாம்—கங்கைக் கரையில்; தர்சனாத்-அனு—தரிச்சித்த பிறகு; ஸத்ய:—உடனேயே; ஸ்வ-ரூபம்—அவனது சுயமான ஆன்மீக ரூபத்தை; ஜக்ருஹே—அவன் ஏற்றான்; பகவத் பார்ஸ்வ-வர்த்தினாம்—பகவானின் சகாக்களுக்கே உரித்தான.

விஷ்ணு தூதர்களைப் பார்த்தவுடன் அஜாமிளன் தன் ஜட உடலை, ஹரித்துவரின் கங்கைக் கரையில் விட்டுவிட்டான். பிறகு பகவானின் சகாக்களுக்கே உரித்தான, அவனது உண்மையான மூல ஆன்மீக உடலைப் பெற்றான்.

பதம் 6.2.44
ஸாகம் விஹாயஸா விப்ரோ மஹாபுருஷ-கிங்கரை:
ஹைமம் விமானம் ஆருஹ்ய யயௌ யத்ர ஸ்ரிய: பதி:

ஸாகம்—உடன்; விஹாயஸா—ஆகாய மார்கமாக; விப்ர:—அந்தபிராமணன் (அஜாமிளன்); மஹாபுருஷ-கிங்கரை:—விஷ்ணு தூதர்களுடன்; ஹைமம்—தங்கத்தாலான; விமானம்—ஒரு விமானத்தில்; ஆருஹ்ய—ஏறி; யயௌ—சென்றான்; யத்ர—எங்கு; ஸ்ரிய: பதி:—ஸ்ரீதேவியின் கணவரான பகவான் விஷ்ணு இருக்கிறாரோ அங்கு.

அஜாமிளன் விஷ்ணுதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு தங்க விமானத்தில் ஏறினான். அவன் ஆகாய மார்கமாக, ஸ்ரீதேவியின் கணவரான பகவான் விஷ்ணுவின் இருப்பிடத்திற்கு நேராகச் சென்றான்.

பதம் 6.2.45
ஏவம் ஸ விப்லாவித-ஸர்வ-தர்மா
தாஸ்யா: பதி: பதிதோ கர்ஹ்ய-கர்மணா
நிபாத்யமானோ நிரயே ஹத-வ்ரத:
ஸத்யோ விமுக்தோ பகவன்-நாம-க்ருஹ்ணன்

ஏவம்—இவ்வாறு; ஸ:—அவன் (அஜாமிளன்); விப்லாவித-ஸர்வ-தர்மா:—எல்லா சமயக் கோட்பாடுகளையும் கைவிட்டவனும்; தாஸ்யா: பதி:—தாசியின் கணவனும்; பதித:—வீழ்ச்சியுற்றவனும்; கர்ஹ்ய-கர்மணா—வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டதால்; நிபாத்யமான:—விழுந்து கொண்டிருந்தவனும்; நிரயே—நரக வாழ்வில்; ஹத-வ்ரத:—எல்லா விரதங்களையும் கைவிட்டவனும்; ஸத்ய:—உடனேயே; விமுக்த:—முக்தியடைந்தான்; பகவத்-நாம—பகவானின் புனித நாமத்தை; க்ருஹ்ணன்—ஜபித்து.

ஒரு பிராமணனாக இருந்த அஜாமிளன் கெட்ட சகவாசத்தினால் பிராமண பண்பாட்டையும், சமயக் கோட்பாடுகளையும் அவனே கைவிட்டான். மிகவும் வீழ்ச்சியுற்றவனான அவன் திருடுவதிலும், குடிப்பதிலும், வெறுக்கத்தக்க மற்ற செயல்களிலும் ஈடுபட்டான். ஒரு விலைமகளைக் கூட அவன் வைத்திருந்தான். இவ்வாறாக, அவன் யமதூதர்களால் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக இருந்தான். ஆனால் நாராயணரின் புனித நாம ஜபத்தினால் உடனடியாக காப்பாற்றப்பட்டான்.

பதம் 6.2.46
நாத: பரம் கர்ம-நிபந்த-க்ருன்தனம்
முமுக்ஷதாம் தீர்த்த-பதானுகீர்த்தனாத்
ந யத் புன: கர்மஸு ஸஜ்ஜதே மனோ
ரஜஸ்-தமோப்யாம் கலிலம் ததோ ‘ன்யதா

ந—இல்லை; அத:—எனவே; பரம்—சிறந்த வழி; கர்ம-நிபந்த—கர்மங்களின் பலனாகத் துன்புற வேண்டிய நிபந்தனை; க்ருன்தனம்—முழுமையாக துண்டித்துவிடக் கூடியது; முமுக்ஷதாம்—பெளதிக பந்தத்தின் பிடியிலிருந்து வெளியேற விரும்புபவர்களின்; தீர்த்த-பத—யாருடைய திருவடிகளில் எல்லாப் புண்ணிய ஸ்லனங்களும் நிற்கின்றனவோ அந்த பரமபுருஷரைப் பற்றி; அனுகீர்த்தனாத்—ஒரு சத்குருவின் வழிகாட்டலின் கீழ் இடைவிடாது செய்யும் ஜபத்தினால்; ந—இல்லை; யத்—ஏனெனில்; புன:—மீண்டும்; கர்மஸு—பலன் தரும் கருமங்களில்; ஸ்ஜ்ஜதே—பற்றுக் கொள்கிறது; மன:—மனம்; ரஜ: தமோப்யாம்—ரஜோ மற்றுத் தமோ குணங்களில்; கலிலம்—களங்கப்பட்ட; தத:—அதன்பிறகு; அன்யதா—வேறெந்த வழியாலும்.

எனவே பௌதிக பந்தத்திலிருந்து விடுபட விரும்புபவர்கள், எல்லாப் புண்ணிய ஸ்தலங்களுக்கும் உறைவிடமாக விளங்கும் பரமபுருஷரின் நாமம், புகழ், ரூபம் மற்றும் லீலைகளைப் பாடுவதும், துதிப்பதுமான முறையை மேற்கொள்ள வேண்டும். புண்ணிய பிராயச்சித்தம், கற்பனா ஞானம், அஷ்டாங்க யோக தியானம் முதலான வேறு வழிமுறைகளால் சரியான நன்மையை ஒருவனால் அடையமுடியாது. ஏனெனில், இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகும், ரஜோ மற்றும் தமோ ஆகிய இயற்கையின் அடிப்படைக்குணங்களால் களங்கப்பட்டுள்ள மனதை அடக்க முடியாமல், ஒருவன் மீண்டும் பலன் கருதும் செயல்களிலேயே ஈடுபடுகிறான்.

பதங்கள் 6.2.47 – 6.2.48
ய ஏதம் பரமம் குஹ்யம் இதிஹாஸம் அகாபஹம்
ஸ்ருணுயாச் ச்ரத்தயா யுக்தோ யஸ் ச பக்த்யானுகீர்த்தயேத்

ந வை ஸ நரகம் யாதி நேக்ஷிதோ யம-கிங்கரை:
யத்யபி அமங்கலோ மர்த்யோ விஷ்ணு-லோகே மஹீயதே

ய:—எவனொருவன்; ஏதம்—இந்த; பரமம்—மிகவும்; குஹ்யம்—இரகசியமான; இதிஹாஸாம்—சரித்திர வர்ணணையை; அக-அபஹம்—எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் ஒருவனை விடுவிக்கக் கூடிய; ஸ்ரணுயாத்—கேட்கிறானோ; ஸ்ரத்தயா—சிரத்தையுடன்; யுக்த:—கூடியவனாக; ய:—எவன்; ச—கூட; பக்த்யா—மிகுந்த பக்தியுடன்; அனுகீர்த்தயேத்—பிறர்க்கு எடுத்துரைப்பானோ; ந—இல்லை; வை—உண்மையில்; ஸ:—அத்தகைய ஒருவன்; நரகம்—நரகத்திற்கு; யாதி—செல்கிறான்; ந—இல்லை; ஈக்ஷித:—கடைபிடிக்கப்படுகிறது; யம-கிங்கரை:—யமதூதர்களால்; யத்யபி—என்ற போதிலும்; அமங்கல:—அமங்கலமான; மர்த்ய:—ஜட உடலுடைய ஒரு ஜீவராசி; விஷ்ணு-லோகே—ஆன்மீக உலகில்; மஹீயதே—மரியாதையுடன் வரவேற்று உபசரிக்கப்படுகிறான்.

மிகவும் இரகசியமான இந்த சரித்திர வர்ணணைக்கு, எல்லாப் பாவ விளைவுகளையும் அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. ஆகவே எவனொருவன் இதை பக்தி சிரத்தையுடன் கேட்கிறானோ அல்லது சொல்கிறானோ, அவன் ஒரு பௌதிக உடலைப் பெற்றிருப்பினும் அல்லது எவ்வளவு பெரிய பாவியாக இருந்திருப்பினும், அவன் இனி நரக வாழ்வுக்குத் தள்ளப்பட மாட்டான். உண்மையில் அவனைப் பார்க்கக்கூட யமதூதர்கள் அவனை நெருங்கமாட்டார்கள். அவன் தன்னுடைய உடலை விட்டபின், ஆன்மீக உலகை அடைகிறான். அங்கு அவன் மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, பூஜிக்கப்படுகிறான்.

பதம் 6.2.49
ம்ரியமாணோ ஹரேர் நாம கருணன் புத்ரோபசாரிதம்
அஜாமிளோ ‘அபி அகாத் தாம கிம் உத ஸ்ரத்தயா க்ருணன்

ம்ரியமாண:—மரணத்தறுவாயில்; ஹரே: நாம—ஹரியின் நாமத்தை; க்ருணன்—உச்சரித்து; புத்ர-உபசாரிதம்—அவனது மகனைக் குறித்து; அஜாமிள:—அஜாமிளன்; அபி—கூட; அகாத்—சென்றான்; தாம—ஆன்மீக உலகிற்கு; கிம் உத—என்னென்று சொல்வது; ஸ்ரத்தயா—அன்புடனும், சிரத்தையுடனும்; க்ருணன்—நாம கீர்த்தனம் செய்பவர்களைப் பற்றி.

மரணத் தறுவாயில் மரண வேதனைக்குள்ளான அஜாமிளன், பகவானின் புனித நாமத்தை ஜபித்தான். தன் மகனுக்குப் பெயராக அமைந்த ஹரிநாமத்தை அவன் ஜபித்து பரமபதம் அடைந்தான். எனவே ஒருவன் சிரத்தையுடனும், குற்றமில்லாமலும் பகவானின் புனித நாமத்தை ஜபிப்பானாயின், அவன் பரமபதம் அடைவான் என்பதில் சந்தேகமேது?


ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “அஜாமிளன் விஷ்ணுதூதர்களால் விடுவிக்கப்படுதல்” எனும் தலைப்பை கொண்ட இரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare