அத்தியாயம் – 1
அஜாமிளனின் வாழ்க்கை வரலாறு
பதம் 6.1.1
ஸ்ரீ பரீக்ஷித் உவாச
நிவ்ருத்தி-மார்க்க: கதித ஆதௌ பகவதா யதா
க்ரம-யோகோபலப்தேன ப்ரஹ்மணா யத் அஸம்ஸ்ருதி:

ஸ்ரீ-பரீக்ஷித் உவாச— பரீட்சித்து மகாராஜன் கூறினார்; நிவ்ருத்தி-மார்க்க:— முக்தி மார்க்கம்; கதித:—விவரிக்கப்பட்டது; ஆதௌ—ஆரம்பத்திலேயே; பகவதா—மதிப்பிற்குரிய தங்களால்; யதா—முறையாக; க்ரம—படிப்படியாக; யோக- உபலப்தேன— யோக முறையால் அடையப்பெற்ற; ப்ரஹ்மணா—(பிரம்ம லோகத்தை அடைந்தபின்) பிரம்ம தேவருடன்; யத்—எந்த விதத்தால்; அஸம்ஸ்ருதி:—பிறவிச் சக்கரத்தின் நிறுத்தம்.

பரீட்சித்து மகாராஜன் கூறினார்; பிரபுவே, சுகதேவ கோஸ்வாமி, முக்தி மார்க்கத்தை (இரண்டாம் காண்டத்தில்) தாங்கள் ஏற்கனவே விவரித்து விட்டீர்கள். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதால், ஒருவன் படிப்படியாக மிகவுயர்ந்த கிரக அமைப்பான பிரம்ம லோகத்திற்கு ஏற்றம் பெறுவது நிச்சயம். அங்கிருந்து பிரம்மதேவருடன் அவன் ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்படுகிறான். இவ்விதமாக உலகில் தொடர்ச்சியான பிறப்பும், இறப்பும் நின்று விடுகிறது.

பதம் 6.1.2
ப்ரவ்ருத்தி-லக்ஷணஸ் சைவ த்ரைகுண்ய-விஷயோ முனே
யோ ‘ஸாவ் அலீனப்ரக்ருதேர் குண-ஸர்க: புன: புன:

ப்ரவ்ருத்தி—விருப்பத்தால்; லக்ஷண:—அடையாளமாகக் கொண்ட; ச—கூட; ஏவ—உண்மையில்; த்ரை-குண்ய—இயற்கையின் முக்குணங்களை; விஷய:—நோக்கங்களைக் கொண்டு; முனே—மாமுனிவரே; ய:—எது; அஸௌ—அது; அலீன-ப்ரக்ருதே:—மாயையின் பிடியிலிருந்து விடுபடாதவனின்; குண-ஸர்க:—எதில் ஜட உடல்களின் ஒரு படைப்பு ஏற்படுகிறதோ; புன: புன:—மீண்டும், மீண்டும்.

மாமுனிவரான சுகதேவ கோஸ்வாமியே, ஜீவராசியானவன் ஜட இயற்கைக் குணங்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டாலல்லாது, இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவிப்பதற்கான வெவ்வேறு வகையான உடல்களை பெற்றுக் கொண்டே இருக்கிறான். மேலும் அவன் பெறும் உடலுக்கேற்ப அவனுக்கு வேறுபட்டவிருப்பங்கள் இருப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது. இவ்விருப்பங்களைப்பின்பற்றுவதன் மூலமாக, தாங்கள் முன்பே (மூன்றாம் காண்டத்தில்) விவரித்துள்ளது போல், எதனால் ஒருவன் சுவர்க்க லோகங்களுக்கும் ஏற்றம் பெற முடியுமோ, அந்த ப்ரவ்ருத்தி-மார்க்கத்தை அவன் கடந்து செல்கிறான்.

பதம் 6.1.3
அதர்ம-லக்ஷணா நானா நரகாஸ் சானுவர்ணிதா:
மன்வந்தரஸ் ச வ்யாக்யாத ஆத்ய: ஸ்வாயம்புவோ யத:

அதர்ம-லக்ஷணா:—பாவச் செயல்களால் அடையாளப் படுத்தப்பட்ட; நானா—பலவிதமான; நரகா:—நரக லோகங்கள்; அனுவர்ணிதா:—விவரிக்கப்பட்டன; மனு-அந்தர:—மனுக்களின் மாற்றம் (பிரம்மாவின் ஒரு நாளில் பதினான்கு மனுக்கள் உள்ளனர்); ச—கூட; வ்யாக்யாத:—விவரிக்கப்பட்டது; ஆத்ய:—முதன் முதலான; ஸ்வாயம்புவ:—பிரம்மாவின் நேரடிப் புதல்வர்; யத:—எதில்.

தாங்கள் (ஐந்தாம் காண்டத்தின் முடிவில்) பாவச் செயல்களிலிருந்து விளையும் பலவகையான நரக வாழ்வுகளையும், (ஐந்தாம் காண்டத்தில்) பிரம்ம தேவரின் புத்திரரான சுயம்புவமனுவால் பதவியேற்கப்பட்ட முதல் மன்வந்திரத்தையும் கூட விவரித்தீர்கள்.

பதங்கள் 6.1.4 -6.1.5
ப்ரியவ்ரதோத்தானபதோர் வம்சஸ் தச்-சரிதானி ச
த்வீப-வர்ஷ-ஸமுத்ராத்ரி-நதி-உத்யான-வனஸ்பதீன்

தரா-மண்டல ஸம்ஸ்தானம் பாக-லக்ஷண-மானத:
ஜ்யோதிஷாம் விவராணாம் ச யதேதம் அஸருஜத் விபு:

ப்ரியவ்ரத—பிரியவிரதனின்; உத்தானபதோ:—மற்றும் உத்தானபாதனின்; வம்ச:—வம்சத்தையும்; தத்-சரிதானி—அவர்களின் இயற்கைப் பண்புகளையும்; ச—கூட; த்வீப—வெவ்வேறு கிரகங்கள்; வர்ஷ—நாடுகள்; ஸமுத்ர—கடல்கள்; அத்ரி—மலைகள்; நதீ—நதிகள்; உத்யான—தோட்டங்கள்; வனஸ்பதீன்—மற்றும் மரங்கள்; தரா-மண்டல—மண்ணுலகின்; ஸம்ஸ்தானம்—சூழ்நிலையை; பாக—பிரிவுகளுக்கேற்ப; லக்ஷண—வெவ்வேறு அறிகுறிகள்; மானத:—மற்றும் அளவுகள்; ஜ்யோதிஷாம்—சூரியன் மற்றும் பிற விண்வெளிக் கோளங்களின்; விவராணாம்—தாழ்ந்த கிரக அமைப்புக்களின்; ச—மேலும்; யதா—போல்; இதம்—இது; அஸ்ருஜத்—படைத்தார்; விபு:—பரமபுருஷர்.

பிரபுவே, பிரியவிரத மகாராஜன் மற்றும் உத்தானபாத மகாராஜன் ஆகியோரைப் பற்றிய வம்சங்களையும் சிறப்பியல்புகளையும் தாங்கள் விவரித்தீர்கள். பரமபுருஷர் இந்த ஜட உலகை பல்வேறு பிரபஞ்சங்களுடனும், கிரக அமைப்புக்களுடனும், கிரகங்களுடனும் மற்றும் நட்சத்திரங்களுடனும், பலவகையான நாடுகளுடனும், கடல்களுடனும், மலைகள், நதிகள், தோட்டங்கள் மற்றும் மரங்களுடனும் படைத்துள்ளார். இவை இந்த மண்ணுலகில் சில, விண்வெளியிலுள்ள ஒளிரும் கோளங்களில் சில, மற்றும் தாழ்ந்த கிரக அமைப்புக்களில் சில என்று பிரிக்கப்பட்டுள்ளன. தாங்கள் இக்கிரகங்களையும் இவற்றில் வாழும் ஜீவராசிகளையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

பதம் 6.1.6
அதுனேஹ மஹா-பாக யதைவ நரகான் நர:
நானோக்ர-யாதானான் நேயாத் தன் மே வ்யாக்யாதும் அர்ஹஸி

அதுனா—இப்பொழுதே; இஹ—இந்த ஜட உலகில்; மஹா-பாக—மகா பாக்கியசாலியான சுகதேவரே; யதா—இதனால்; ஏவ—உண்மையில்; நரகான்—பாவிகள் அனுபவிக்கும் நரகமான சூழ்நிலைகள் அனைத்தும்; நர:—மனிதர்கள்; நானா—பலவகையான; உக்ர—பயங்கரமான; யாதனான்—துன்பகரமான சூழ்நிலைகளை; ந ஈயாத்—அனுபவிக்க மாட்டார்களோ; தத்—அதை; மே—எனக்கு; வ்யாக்யாதும் அர்ஹஸி—விவரிக்க வேண்டுகிறேன்.

மகா பாக்கியசாலியான சுகதேவ கோஸ்வாமியே, மனிதர்கள் பல விதமான நரகச் சூழ்நிலைகளை அடைந்து, கடுமையான வேதனைகளை அனுபவிப்பதிலிருந்து எவ்வாறு காப்பாற்றப்படுவார்கள் என்பது பற்றி எனக்கு விளக்கி அருள்வீராக.

பதம் 6.1.7
ஸ்ரீ-சுக உவாச
ந சேத் இஹைவாபசிதிம் யதாம்ஹஸ:
க்ருதஸ்ய குர்யான் மன-உக்த-பாணிபி:
த்ருவம் ஸ வை ப்ரேத்ய நரகான் உபைதி
யே கீர்த்திதா மே பகவதஸ் திக்ம-யாதனா:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ந—இல்லை; சேத்—என்றால்; இஹ—இப்பிறவியிலேயே; ஏவ—நிச்சயமாக; அபசிதிம்—பிராயச்சித்தத்தை; யதா—முறையாக; அம்ஹஸ; க்ருதஸ்ய—செய்துள்ள பாவ காரியங்களுக்கு; குர்யாத்—செய்கிறார்; மன—மனதாலும்; உக்த—வாக்கினாலும்; பாணிபி:—மற்றும் புலன்களாலும்; த்ருவம்—சந்தேகமின்றி; ஸ:—அவன்; வை—உண்மையில்; ப்ரேத்ய—இறந்தபின்; நரகான்—பலவித நரகச் சூழ்நிலைகளை; உபைதி—அடைகிறான்; யே—எவை; கீர்த்திதா:—முன்பே விவரிக்கப்பட்டுள்ளன; மே—என்னால்; பவத:—உமக்கு; திக்ம-யாதனா:—எதில் பயங்கரமான துன்பம் உண்டோ.

சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: அரசே, ஒருவன் அவனுடைய மரணம் வருவதற்கு முன்பே, இப்பிறவியில் அவனுடைய மனோ, வாக்குக், காயத்தினால் அவன் செய்துள்ள பாவங்களுக்கு, மனு சம்ஹிதை மற்றும் பிற தர்ம சாஸ்திரங்களுக்கேற்ப முறையாக பிராயச்சித்திங்களைச் செய்தாக வேண்டும். இல்லையெனில் மரணத்திற்குப்பின் அவன் நரக லோகங்களில் புகுந்து பயங்கரமான துன்பங்களை அனுபவிப்பது நிச்சயம். இதை முன்பே உமக்கு நான் விவரித்துள்ளேன்.

பதம் 6.1.8
தஸ்மாத் புரைவாஸ்வ் இஹபாப-நிஷக்ருதௌ
யதேத ம்ருத்யோர் அவிபத்யதாத்மனா
தோஷஸ்ய த்ருஷ்ட்வா குரு-லாகவம் யதா
பிஷக் சிகித்ஸேத ருஜாம் நிதானவித்

தஸ்மாத்—ஆகவே; புரா—முன்பாகவே; ஏவ—உண்மையில்; ஆசு—வெகு சீக்கிரமாக; இஹ—இப்பிறவியில்; பாப-நிஷ்க்ருதௌ—பாவ விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கு; யதேத—ஒருவன் பாடுபட வேண்டும்; ம்ருத்யோ:—மரணத்தின்; அவிபத்யத—வியாதி, முதுமை இவற்றின் பிடியில் சிக்காமல்; ஆத்மனா—ஓருடலுடன்; தோஷஸ்ய—பாவச் செயல்களின்; த்ருஷ்ட்வா—விளைவுகளை கருத்திற்கொண்டு; குரு-லாகவம்—பெரிய அல்லது சிறிய; யதா—போலவே; பிஷக்—ஒரு மருத்துவர்; சிகித்ஸேத—சிகிச்சை அளிப்பது; ருஜாம்—நோயின்; நிதான-வித்—கடுமையை நிர்ணயிப்பதில் வல்லவரான.

ஆகவே, ஒருவனது மரணம் நெருங்குவதற்குள், அவனுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது சாஸ்திர விதிகளுக்கேற்ப பிராயச்சித்த முறையை விரைவில் அவன் மேற்கொள்ள வேண்டும்; இல்லையெனில் காலம் கழிந்து அவனுடைய பாவ விளைவுகள் அதிகரித்துவிடும். மருத்துவ நிபுணர் ஒருவர் ஒரு நோயின் கடுமைக்கேற்ப சிகிச்சையளிப்பது போலவே, ஒருவன் தனது பாவங்களின் கடுமைக்கேற்ப பிராயச்சித்த முறையை மேற்கொள்ள வேண்டும்.

பதம் 6.1.9
ஸ்ரீ ராஜோவாச
த்ருஷ்ட-ஸ்ருதாப்யாம் யத் பாபம் ஜானன் அபி ஆத்மனோ ‘ஹிதம்
கரோதி பூயோ விவச: ப்ராயஸ்சித்தம் அதோ கதம்

ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; த்ருஷ்ட— காண்பதாலும்; ஸ்ருதாப்யாம்—(சாஸ்திரங்களிலிருந்து அல்லது சட்ட நூல்களிலிருந்து) கேட்பதாலும் கூட; யத்—என்பதால்; பாபம்—பாவச் செயல்; ஜானன்—என்பதை அறிந்திருந்த; அபி—போதிலும்; ஆத்மன:—தனக்கு; அஹிதம்—தீமையளிக்கக் கூடியது; கரோதி—அவன் செயற்படுகிறான்; பூய:—திரும்பத்திரும்ப; விவச:—தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது; ப்ராயஸ்சித்தம்—பிராயச்சித்தத்தினால்; அதோ—ஆகவே; கதம்—என்ன பிரயோஜனம்.

பரீட்சித்து மகாராஜன் கூறினார்: குற்றவாளியொருவன் அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவதையும், பொதுமக்களால் திட்டப்படுவதையும் உண்மையாகவே ஒருவன் காண்கிறான். மேலும் பாவம் செய்வதற்காக அடுத்த பிறவியில் ஒருவன் நரக சூழ்நிலைகளில் தள்ளப்படுகிறான் என்பதை சாஸ்திரங்கள் மற்றும் வேத வல்லுனர்களிடமிருந்து அவன் கேள்விப்படுகிறான். இதனால் பாவம் செய்வது தனக்கு நல்லதல்ல என்பதை அவன் அறிவான். ஆயினும், பிராயச்சித்தங்கள் செய்த பின்னரும் கூட, திரும்பத்திரும்ப பாவம் செய்யும்படி ஒருவன் கட்டாயப்படுத்தப்படுகிறான். ஆகவே, இத்தகைய பிராயச்சித்தத்தினால் என்ன பயன்?

பதம் 6.1.10
க்வசின் நிவர்ததே ‘பத்ராத் க்வசித் சரதி தத் புன:
ப்ராயஸ்சித்தம் அதோ ‘பார்த்தம் மன்யே குஞ்ஜர-செளசவத்

க்வசித்—சிலசமயங்களில்; நிவர்ததே—நிறுத்திக் கொள்கிறான்; அபத்ராத்—பாவச் செயல்களை; க்வசித்—சிலசமயங்களில்; சரதி—செய்கிறான்; தத்—அதை (பாவத்தை); புன:—மீண்டும்; ப்ராயஸ்சித்தம்—இந்த பிராயச்சித்த முறையானது; அதோ—எனவே; அபார்த்தம்—பயனற்றதென்று; மன்யே—நான் கருதுகிறேன்; குஞ்ஜர-சௌச-வத்—ஒரு யானையின் குளியலைப் போன்றதான.

சிலசமயங்களில் பாவச் செயல்களிலிருந்து கவனமாக விலகியிருப்பவன் கூட, மீண்டும் பாவச் செயலுக்கு பலியாகிறான். எனவே தொடர்ந்து பாவம் செய்வதும், பிறகு பிராயச்சித்தம் செய்வதுமான இந்த முறை பயனற்றது என்று நான் கருதுகிறேன். இது ஒரு யானையின் குளியலைப் போன்றதாகும். ஏனெனில், ஒரு யானை நன்கு குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது ஆனால் கரையேறியதும் தன் மேல் மண்ணை வாரி இறைத்துக் கொள்கிறது.

பதம் 6.1.11
ஸ்ரீ பாதநாயணிர் உவாச
கர்மணா கர்ம-நிர்ஹாரோ ந ஹி ஆத்யந்திக இஷ்யதே
அவித்வத்-அதிகாரித்வாத் ப்ராயஸ்சித்தம் விமர்சனம்

ஸ்ரீ-பாதராயணி: உவாச—வியாசரின் புத்திரரான சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்; கர்மணா—பலன் கருதும் செயல்களால்; கர்ம-நிர்ஹார:—பலன் கருதும் செயல்களை நிஷ்பலமாக்குவது; ந—இல்லை; ஹி—உண்மையில்; ஆத்யந்திக—முடிவானது; இஷ்யதே—சாத்தியமாகிறது; அவித்வத்- அதிகாரித்வாத்—அறிவற்றவனாக இருப்பதிலிருந்து; ப்ராயஸ்சித்தம்—உண்மையான பிராயச்சித்தமாகும்; விமர்சனம்—பூரண வேதாந்த ஞானம்தான்.

வியாச புத்திரரான சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: அரசே, பாவச் செயல்களை நிஷ்பலப்படுத்துவதற்காக செய்யப்படும் செயல்களும் பலன் கருதும் செயல்களே என்பதால், பலனை எதிர்பார்த்து செயற்படும் பாவத்திலிருந்து அச்செயல்கள் ஒருவனை விடுவிக்காது. பிராயச்சித்த முறையை ஏற்றுக் கொள்பவர்கள் புத்திசாலிகளே அல்ல, உண்மையில் அவர்கள் அறியாமையில் உள்ளவர்களாவர். ஒருவன் அறியாமைக் குணத்திலிருந்து விடுவிக்கப்பட்டாலல்லாது, ஒரு செயலை மற்றொன்றால் நிஷ்பலமாக்க முயல்வது பயனற்றதாகும். ஏனெனில், இது ஒருவனின் ஆசைகளை வேருடன் களையாது. இவ்வாறாக வெளித்தோற்றத்தில் ஒருவன் புண்ணியவான் போல் காணப்பட்டாலும், அவன் பாவம் செய்யும் சுபாவம் உடையவன்தான் என்பதில் ஐயமில்லை. எனவே, எதனால், பரப்பிரம்மனை ஒருவனால் அறிய முடியுமோ, அந்த பக்குவ ஞானமான வேதாந்தத்தில் ஏற்படும் ஞானோதயம் தான் உண்மையான பிராயச்சித்தமாகும்.

பதம் 6.1.12
நாஸ்னத: பத்யம் ஏவான்னம் வ்யாதயோ ‘பிபவந்தி ஹி
ஏவம் நியமக்ருத் ராஜன் சனை: க்ஷேமாய கல்பதே

ந—இல்லை; அஸ்நத:—உண்பவர்கள்; பத்யம்—பத்தியமான; ஏவ—உண்மையில்; அன்னம்—உணவை; வ்யாதய:—வெவ்வேறு வகையான வியாதிகள்; அபிபவந்தி—சமாளிக்கப்படுகின்றன; ஹி—உண்மையில்; ஏவம்—அதுபோலவே; நியம-க்ருத்—கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுபவன்; ராஜன்—அரசே; சனை:— படிப்படியாக; க்ஷேமாய— நல்வாழ்விற்கு; கல்பதே—தகுதியுடையவனாகிறான்.

அரசே, ஒரு மருத்துவரால் சிபாரிசு செய்யப்படும் தூய குற்றமற்ற உணவை நோய்வாய்ப்பட்டவன் உண்பானாயின், அவன் படிப்படியாக குணமடைந்து விடுவான். நோய்க் கிருமிகள் இனி அவனைத் தொடாது. அதுபோலவே, ஒருவன் அறிவுக்கான கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுவானாயின், அவன் படிப்படியாக பெளதிக களங்கத்திலிருந்து விடுபட்டு முக்தியை நோக்கி முன்னேறுகிறான்.

பதங்கள் 6.1.13 – 6.1.14
தபஸா ப்ரஹ்மசர்யேன சமேன ச தமேன ச
த்யாகேன ஸத்ய-சௌசாப்யாம் யமேன ஸ்ரத்தயான்விதா
தேஹ-வாக்-புத்திஜம் தீர தீர்மஜ்ஞா ஸ்ரத்தயான்விதா:
க்ஷிபந்தி அகம் மஹத் அபி வேணு-குல்மம்: இவானல:

தபஸா—தவத்தினால் அல்லது பெளதிக சுகத்தை தன்னிச்சையாக ஒதுக்கித் தள்ளுவதால்; ப்ரஹ்மசர்யேண—(முதல் தவமான) பிரம்மச்சரியத்தால்; சமேன—மனக்கட்டுப்பாட்டினால்; ச—மற்றும்; தமேன—புலன்களை முழுமையாக அடக்குவதனால்; ச—மேலும்; த்யாகேன—நற்காரியங்களுக்குத் தன்னிச்சியாக தானம் செய்வதால்; ஸத்ய—சத்தியத்தால்; சௌசாப்யாம்—மற்றும் உள்ளும் புறமும் சுத்தமாக வைத்துக்கொள்ள கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுவதால்; யமேன—சபித்தலையும், இம்சையையும் தவிர்ப்பதால்; நியமேன—பகவானின் புனித நாமத்தை தினமும் ஜபிப்பதால்; வா—மற்றும்; தோஹ-வாக்-புத்தி-ஜம்—உடலாலும், வாக்கினாலும், புத்தியாலும் செய்யப்படும்; தீரா:—நிதான புத்தியுடையவர்கள்; தர்ம-ஜ்ஞா:—சமயக் கொள்கையைப் பற்றிய அறிவில் முழுமையாக ஊறிப்போன; ஸ்ரத்தயா அன்விதா:—விசுவாசம் உடையவர்; க்ஷிபந்தி—அழிக்கவும்; அகம்—எல்லா வகையான பாவச்செயல்களும்; மஹத் அபி—மிகமுக்கியமானவையாகவும், வெறுக்கத்தக்கவையாகவும் இருப்பினும்; வேணு-குல்மம்—ஒரு மூங்கில் செடிக்கு அடியிலுள்ள உலர்ந்த கொடிகள்; இவ—போல; அனல:—நெருப்பு.

மனதை ஒருநிலைப்படுத்த ஒருவன் பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதுடன், கீழே விழுந்து விடாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும். தன்னிச்சையாக புலனின்பத்தைக் கைவிடும் தவத்தையும் ஒருவன் மேற்கொள்ள வேண்டும். பிறகு ஒருவன் தன் மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்த வேண்டும். தான, தருமங்களைச் செய்ய வேண்டும். சத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சுத்தம், அகிம்சை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றவேண்டும். மேலும் பகவானின் புனித நாமத்தை தினமும் ஜபிக்க வேண்டும். இவ்வாறாக சமயக் கோட்பாடுகளை அறிந்துள்ளவனும், நிதானபுத்தியுள்ளவனும், நம்பிக்கையுள்ளவனுமான ஒருவன், அவனது மனோ, வாக்குக், காயத்தினால் செய்யப்பட்ட எல்லாப் பாவங்களிலிருந்தும் தற்காலிகமாக தூய்மையடைகிறான். இப்பாவங்கள் ஒரு மூங்கில் புதரின் அடியிலுள்ள உலர்ந்த இலைகளைப் போன்றவையாகும். அந்த இலைகள் நெருப்பினால் எரிந்து போகக்கூடும் என்றாலும், அவற்றின் வேர்கள் அப்படியே உள்ளன. அதனால் எந்த சமயத்திலும் அது மீண்டும் முளைக்கக் கூடும்.

பதம் 6.1.15
கேசித் கேவலயா பக்த்யா வாஸுதேவ-பராயணா:
அகம் துன்வந்தி கார்த்ஸ்ன்யேன நீஹாரம் இவ பாஸ்கர:

கேசித்—சிலர்; கேவலயா பக்த்யா—தூய பக்தித் தொண்டை நிறைவேற்றுவதால்; வாஸுதேவ—எங்கும் பரவியுள்ள பரமபுருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு; பராயணா:—(தவம், விரதம், அறிவு வளர்ச்சி அல்லது புண்ணியத்தை நம்பியிராமல், இத்தகைய தொண்டில் மட்டுமே) முழுமையாக பற்றுக் கொண்டு; அகம்—எல்லா வகையான பாவ விளைவுகளையும்; துன்வந்தி—அழிந்துவிடுகின்றன; கார்த்ஸ்ன்யேன—(தீய விருப்பங்கள் மறுபடியும் உயிர்த்தெழ வாய்ப்பில்லாதபடி) முழுமையாக; நீஹாரம்—பனி; இவ—போல்; பாஸ்கர:—சூரியனை.

கிருஷ்ணரிடம் முழுமையான தூய பக்தித்தொண்டை மேற்கொண்ட மிகவும் அரிதான ஒருவரால் மட்டுமே, பாவ விதைகள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பில்லாதபடி அவற்றை வேருடன் பிடுங்கியெறிய முடியும். சூரியன் அதன் கதிர்களால் உடனே பனியை அகற்றுவதுபோல், பக்தித்தொண்டை நிறைவேற்றுவதாலேயே இதை அவரால் செய்துவிட முடியும்.

பதம் 6.1.16
ந ததா ஹி பகவான் ராஜன் பூயேத தப-ஆதிபி:
யதா கிருஷ்ணார்பித-ப்ராணஸ் தத்-புருஷ-நிஷேவயா

ந—இல்லை; ததா—அந்த அளவு; ஹி—நிச்சயமாக; அக-வான்—நிறைய பாவங்களைச் செய்தவனால், ராஜன்—அரசே; பூயேத—தூய்மை அடைய முடியும்; தப:-ஆதிபி:—விரதம், தவம், பிரம்மச்சரியம் போன்ற புனிதப்படுத்தும் முறைகளை மேற்கொள்வதால்; யதா—எந்த அளவு; கிருஷ்ண-அர்பித-ப்ராண:—கிருஷ்ண உணர்வு நிரம்பிய வாழ்வையுடைய பக்தன்; தத்-புருஷ-நிஷேவயா— கிருஷ்ணருடைய பிரதிநிதியின் தொண்டில் அவனது வாழ்வை ஈடுபடுத்துவதன் மூலம்.

அரசே, பாவியொருவன் உண்மையான ஒரு பகவத் பக்தரின் தொண்டில் ஈடுபட்டு, கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தன் வாழ்வை அர்ப்பணிக்கக் கற்றுக் கொள்வானாயின், அவனால் முழுமையாக தூய்மையடைய முடியும். முன்பு நான் விவரித்த விரதம், தவம், பிரம்மச்சரியம் முதலான பிராயச்சித்த முறைகளை மேற்கொள்வதால் மட்டும் ஒருவரால் தூய்மை அடைய முடியாது.

பதம் 6.1.17
ஸத்ரீசீனோ ஹி அயம் லேகே பந்தா: க்ஷேமோ ‘குதோ-பய:
ஸுசீலா: ஸாதவோ யத்ர நாராயண-பராயணா:

ஸத்ரீசீன:—மிகவும் பொருத்தமான; ஹி—நிச்சயமாக; அயம்—இந்த; லேகே—உலகில்; பந்தா:—பாதை; க்ஷேம:—மங்களகரமானது; அகுத: பய—பயமில்லாதது; ஸு-சீலா:—நன்னடத்தையுடைய; ஸாதவ:—பக்தர்கள்; யத்ர—எங்கு; நாராயண-பராயணா:—நாரயண மார்க்கமான பக்தித் தொண்டைத் தங்களது உடலும் உயிருமாக ஏற்றுக் கொண்டவர்கள்.

நன்நடத்தை உடையவர்களும், சிறந்த தகுதி முறைகளை முழுமையாக உடையவர்களுமான தூய பக்திமான்களால் பின்பற்றப்படும் பாதை நிச்சயமாக இவ்வுலகிலேயே மிகவும் மங்களகரமான பாதையாகும். அது பயத்திலிருந்து விடுபட்டதும், சாஸ்திரங்களால் அங்கீகரிக்கப்பட்டதுமாகும்.

பதம் 6.1.18
ப்ராயஸ்சித்தானி சீர்ணானி நாராயண-பரான்முகம்
ந நிஷ்புனந்தி ராஜேந்ர ஸுரா-கும்பம் இவாபகா:

ப்ராயஸ்சித்தானி—பிராயச்சித்த முறைகள்; சீர்ணானி—நன்கு நிறைவேற்றப்பட்ட; நாராயண-பராண்முகம்—பக்தனல்லாதவன்; ந நிஷ்புனந்தி—தூய்மைப்படுத்த முடியாத; ராஜேந்ர—அரசே; ஸுரா கும்பம்—ஒரு கள்குடம்; இவ—போல்; ஆப-கா:—நதிகளின் தீர்த்தங்கள்.

அரசே, ஒருகள்குடத்தைப் பலநதிகளின் தீர்த்தங்களால் கழுவினாலும், அதை தூய்மைப்படுத்த முடியாது. அதுபோலவே, பக்தரல்லாதவர்கள் பிராயச்சித்த முறைகளை நன்கு நிறைவேற்றினாலும் அவர்களால் தூய்மையடைய முடியாது.

பதம் 6.1.19
ஸக்ருன் மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோர்
நிவேசிதம் தத்-குண-ராகி யைர் இஹ
ந தே யமம் பாச-ப்ருதஸ் ச தத்-படான்
ஸ்வப்னே ‘பி பஸ்யந்தி ஹி சீர்ண-நிஷ்க்ருதா:

ஸக்ருத்—ஒரு தடவையாவது; மன:—மனம்; க்ருஷ்ண-பத அரவிந்தயோ:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத கமலங்களில்; நிவேசிதம்—பூரண சரணாகதியடைந்த; தத்—கிருஷ்ணரின்; குண-ராகி—அவருடைய குணங்கள்; நாமம், புகழ் மற்றும் உபகரணங்களில் சிறிதளவு ஈடுபாடு உடைய; யை:—எவர்களால்; இஹ—இவ்வுலகில்; ந—இல்லை; தே—அத்தகைய மனிதர்கள்; யமம்—மரண தேவரான யமராஜனை; பாச-ப்ருத:—(பாவிகளைப் பிடிக்க) கையில் பாசக் கயிறுகளை வைத்திருக்கும்; ச—மேலும்; தத்—அவருடைய; படான்—தூதர்களை; ஸ்வப்னே அபி—சொப்னத்தில் கூட; பஸ்யந்தி—பார்ப்பார்கள்; ஹி—உண்மையாக; சீர்ண-நிஷ்க்ருதா:—சரியான பிராயச்சித்தத்தைச் செய்திருப்பார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணரை முழுமையாக உணர்ந்தறியவில்லை என்றாலும், யார் ஒரு தடவையாவது அவரது பாத கமலங்களில் முழுமையாக சரணடைந்து அவரது நாமம், ரூபம், குணங்கள் மற்றும் லீலைகளால் கவரப்பட்டனரோ, அவர்கள் சரியான பிராயச்சித்த முறையை ஏற்ற காரணத்தினால் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட்டவர்களாகின்றனர். இத்தகைய சரணடைந்த ஆத்மாக்கள், யமராஜனையோ அல்லது பாவிகளைக் கட்டும் பாசக் கயிற்றைக் கையில் வைத்துள்ள அவரது தூதர்களையோ சொப்பனத்திலும் காண்பதில்லை.

பதம் 6.1.20
அத்ர சோதாஹரந்தீமம் இதிஹாஸம் புராதனம்
தூதானாம் விஷ்ணு-யமயோ: ஸம்வாதஸ் தம் நிபோத மே

அத்ர—இது தொடர்பாக; ச—தான்; உதாஹரந்தி—ஓர் எடுத்துக்காட்டாக அவர்கள் கொடுக்கின்றனர்; இமம்—இந்த; இதிஹாஸம்—(அஜாமிலனுடைய) சரித்திரத்தை; புராதனம்—மிகவும் பழமையான; தூதானாம்— தூதர்களின்; விஷ்ணு—பகவான் விஷ்ணுவின்; யமயோ:—மற்றும் யமராஜனின்; ஸம்வாத:—உரையாடலை; தம்—அந்த; நிபோத—புரிந்து கொள்ள முயல்வீராக; மே—என்னிடமிருந்து.

இது தொடர்பாக, மஹான்களும், சாதுக்களுக்கும், விஷ்ணு தூதர்களுக்கும், யம தூதர்களுக்கும் நிகழ்ந்த உரையாடலைப் பற்றிய ஒரு பழமையான வரலாற்றுச் சம்பவத்தை விவரிக்கின்றனர். இதை நான் கூறக் கேளும்.

பதம் 6.1.21
கன்ய குப்ஜே த்விஜ: கஸ்சித் தாஸீ-பதிர் அஜாமிலா:
நாம்னா நஷ்ட-ஸதாசாரோ தாஸ்யா: ஸம்ஸர்க-தூஷித:

கான்ய-குப்ஜே—கான்ய குப்ஜ நகரில் (கான்பூருக்கு அருகிலுள்ள கனௌஞ் என்ற ஒரு நகரம்); த்விஜ:—பிராமணன்; கஸ்சித்—ஒரு; தாஸீ-பதி:—ஒரு தாசியின் கணவன்; அஜாமிள:—அஜாமிளன்; நாம்னா—என்ற பெயருடைய; நஷ்ட-ஸத்-ஆசார:—பிராமண குணங்களையெல்லாம் இழந்துவிட்ட; தாஸ்யா:—அந்த தாசியின்; ஸம்ஸர்க-தூஷித:—உறவால் கெட்டுப்போனான்.

கன்யாகுப்ஜ நகரில், அஜாமிளன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் ஒரு தாசியை மணந்து, அந்த கீழ்த்தரமான பெண்ணின் உறவினால் தனது பிராமண குணங்களையெல்லாம் இழந்தவனானான்.

பதம் 6.1.22
பந்தி-அக்ஷை: கைதவைஸ் சௌர்யைர் கர்ஹிதாம் வ்ருத்திம்அஸ்தித:
பிப்ரத் குடும்பம் அசுசிர் யாதயாம் ஆஸ தேஹின:

பந்தீ-அக்ஷை:—பிறரை அநாவசியமாக கைது செய்தும்; கைதவை:—சூதாட்டத்தில் அல்லது தாய விளையாட்டில் ஏமாற்றியும்; சௌர்யை:—திருடியும்; கர்ஹிதாம்—வெறுக்கத்தக்க; வ்ருத்திம்—தொழில்களை; ஆஸ்தித:—(ஒரு தாசியுடனான உறவின் காரணத்தால்) மேற்கொண்டிருந்தான்; பிப்ரத்—பராமரித்து; குடும்பம்—அவனது மனைவி மக்களை; அசுசி:—பெரும் பாவியான காரணத்தால்; யாதயாம் ஆஸ—அவன் தொல்லை கொடுத்தான்; தேஹின:—பிற ஜீவராசிகளுக்கு.

இழிவடைந்த பிராமணனான இந்த அஜாமிளன், மற்றவர்களைக் கைது செய்தும், சூதாட்டத்தில் அவர்களை ஏமாற்றியும், அல்லது நேரிடையாக அவர்களைக் கொள்ளையடித்தும், அவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வந்தான். இவ்வாறு தான் அவன் தன் வாழ்க்கைக்குத் தேவையானதைச் சம்பாதித்து, அவனது மனைவியையும், குழந்தைகளையும் பராமரித்து வந்தான்.

பதம் 6.1.23
ஏவம் நிவஸதஸ் தஸ்ய லாலயானஸ்ய தத்-ஸுதான்
காலோ ‘த்யகான் மஹான் ராஜன் அஷ்டாசீத்யாயுஷ: ஸமா:

ஏவம்—இவ்வாறாக; நிவஸத:—வாழ்ந்து விடுவதிலேயே; தஸ்ய—அவனுடைய (அஜாமிளனின்); லாலயானஸ்ய—பராமரித்து; தத்—அவளுடைய (சூத்ராணீ); ஸுதான்—மகன்களை; கால:—காலம்; அத்யகாத்—கழிந்து போயிற்று; மஹான்—பெரும்பகுதி; ராஜன்—அரசே; அஷ்டாசீத்யா—எண்பத்தெட்டு; ஆயுஷ:—ஆயுளின்; ஸமா:—ஆண்டுகள்.

அரசே, இவ்வாறாக அந்த தாசியின் பல மகன்களைப் பராமரிப்பதற்காக, வெறுக்கத்தக்க பாவச் செயல்களில் தன் நேரத்தைக் கழிப்பதிலேயே அவனுடைய ஆயுளின் பெரும்பகுதியான எண்பத்தெட்டு ஆண்டுகள் கழிந்து போயிற்று.

பதம் 6.1.24
தஸ்ய ப்ரவயஸ: புத்ரா தச தேஷாம் து யோ ‘வம:
பாலோ நாராயணோ நாம்னா பித்ரோஸ் ச தயிதோ ப்ருசம்

தஸ்ய—அவனுடைய (அஜாமிளனின்); ப்ரவயஸ:—வயது கடந்த; புத்ரா:—மகன்கள்; தச—பத்து பேர்கள்; தேஷாம்—அவர்களுள்; து—ஆனால்; ய:—எவன்; அவம:—இளையவனான; பால:—பாலகன்; நாராயண—நாராயணன்; நாம்னா—என்ற பெயருடைய; பித்ரோ:—தாய், தந்தையருக்கு; ச—மேலும்; தயித:—பிரியமானவன்; ப்ருசம்—மிகவும்.

வயது கடந்த அஜாமிளனுக்குப் பத்து மகன்கள் இருந்தனர். அவர்களுள் கடைசிக் குழந்தையின் பெயர் நாராயணன். நாராயணன் எல்லோரிலும் இளையவன் என்பதால், இயல்பாகவே அவனுடைய பெற்றோர்களுக்கு அவன் மிகவும் பிரியமானவனாக இருந்தான்.

பதம் 6.1.25
ஸ பத்த-ஹ்ருதயஸ் தஸ்மின் அர்பகே கல-பாஷிணி
நிரீக்ஷமாணஸ் தல்-லீலாம் முமுதே ஜரடோ ப்ருசம்

ஸ:—அவன்; பத்த—ஹ்ருதய:—ஆழ்ந்த பற்றுக்கொண்டு; தஸ்மின்—அதனிடம்; அர்பகே—சிறுகுழந்தையிடம்; கல-பாஷிணி—தெளிவாகப் பேசத் தெரியாமல் மழலை மொழியில் பேசிய; நிரீக்ஷமாண:—கண்டு; தத்—அதன்; லீலாம்—(நடப்பதும், அதன் தந்தையிடம் பேசுவதுமான) விளையாட்டுகளை; முமுதே—அனுபவித்தான்; ஜரட:—அந்த வயோதிகன்; ப்ருசம்—மிகவும்.

அக்குழந்தையின் மழலைப் பேச்சாலும், தளர் நடையாலும், வயோதிகனான அஜாமிளன் அதனிடம் அதிக பற்றுக் கொண்டவனானான். அவன் எப்பொழுதும் அக்குழந்தையைக் கவனித்தும், அதன் செயல்களில் மகிழ்ந்தும் வந்தான்.

பதம் 6.1.26
புஞ்ஜான: ப்ரபிபன் காதன் பாலகம் ஸ்நேஹ-யந்த்ரித:
போஜயன் பாயயன் மூடோ ந வேதாகதம் அந்தகம்

புஜ்ஞான:—சாப்பிடும் போது; ப்ரபிபன்—பருகும் போது; காதன்—மெல்லும் போது; பாலகம்—அக்குழந்தைக்கு; ஸ்நேஹ-யந்த்ரித:—பாச மிகுதியினால் உந்தப்பட்டு; போஜயன்—சாப்பிடச் செய்தும்; பாயயன்—எதையேனும் பருகச் செய்தும்; மூட:—மூடனான அவன்; ந—இல்லை; வேத—புரிந்து கொள்ள; ஆகதம்—நெருங்கி விட்டதை; அந்தகம்—மரணம்.

அஜாமிளன் அக்குழந்தையிடமுள்ள அன்பின் மிகுதியால், தான் உணவை மென்று சாப்பிடும்பொழுது குழந்தையை மென்று சாப்பிடச் செய்தும், தான் பருகும்பொழுது குழந்தையைப் பருகச் செய்தும் வந்தான். இவ்வாறு எப்பொழுதும் குழந்தையைக் கவனிப்பதிலும், நாராயணா என்ற அவனது பெயரை அழைப்பதிலும் ஈடுபட்டிருந்த அம்மூடன், தனக்கு வயதாகி மரணம் நெருங்கிவிட்டதை உணரவில்லை.

பதம் 6.1.27
ஸ ஏவம் வர்தமாணோ ‘ஜ்ஞோ ம்ருத்யு-கால உபஸ்திதே
மதிம் சகார தனயே பாலே நாராயணாஹ்வயே

ஸ:—அந்த அஜாமிளன்; ஏவம்—இவ்விதம்; வர்த்தமான:—வாழ்ந்து வந்தபொழுது; அஜ்ஞ:—மூடனான; ம்ருத்யு-காலே—மரண காலம்; உபஸ்திதே—நெருங்கியபோது; மதிம் சகார—மனதைச் செலுத்தினான்; தனயே—தன் மகனின் மேல்; பாலே—குழந்தையான; நாராயண ஆஹ்வயே—நாராயணா என்ற பெயருடைய.

மூடனான அந்த அஜாமிளனின் மரண காலம் நெருங்கியபோது. அவன் தன் மகனான நாராயணனைப் பற்றியே அதிகமாக நினைக்க ஆரம்பித்தான்.

பதங்கள் 6.1.28 – 6.1.29
ஸ பாச-ஹஸ்தாம்ஸ் த்ரீன் த்ருஷ்ட்வா புருஷான் அதி-தாருணான்
வக்ர-துண்டான் ஊர்த்வ-ரோம்ணா ஆத்மானம் நேதும் ஆகதான்

தூரே க்ரீடனகாஸக்தம் புத்ரம் நாராயணாஹ்வயம்
ப்லாவிதேன ஸ்வரேணோசசைர் ஆஜுஹாவாகுலேந்ரிய:

ஸ:—அவன் (அஜாமிளன்); பாச-ஹஸ்தான்—கைகளில் பாசக் கயிறுகளுடன்; த்ரீன்—மூன்று; த்ருஷ்ட்வா—பார்த்துவிட்டு; புருஷான்—புருஷர்களை; அதி-தாருணான்—மிகவும் பயங்கரமான அவயங்களைக் கொண்ட; வக்ர-துண்டான்—கோணலான முகங்களுடன்; ஊர்த்வ-ரோம்ண:—உடலில் குத்திட்டு நின்ற ரோமங்களை உடையவர்களாய்; ஆத்மானம்—தன்னை (ஆத்மாவை); நேதும்—எடுத்துச்செல்ல; ஆகதான்—வந்தவர்களை; தூரே—சிறிது தூரத்தில்; க்ரீடனக-ஆஸக்தம்—விளையாட்டில் லயித்திருந்த; புத்ரம்—தன் மகனை; நாராயண-ஆஹ்வயம்—நாராயண என்ற பெயர் கொண்ட; ப்லாவிதேன—கலங்கிய கண்களுடன்; ஸ்வரேண—குரலில்; உச்சை:—உரக்க; ஆஜுஹாவ—அழைத்தான்; ஆகுல-இந்ரிய:—இந்திரியங்கள் பயத்தில் நடுங்க.

பிறகு அஜாமிளன், கோணல் மாணலான தேக அம்சங்களுடனும், பயங்கரமான உருத்தெரியாத முகங்களுடனும், உடல்களில் குத்திட்டு நிற்கும் ரோமங்களுடனும் கூடிய மூன்று விகாரமான புருஷர்களைக் கண்டான். அவனை யமலோகத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அவர்கள் தங்கள் கைகளில் பாசக்கயிறுகளுடன் வந்திருந்தனர். அவர்களைக் கண்ட அஜாமிளன் மிகுவும் கலக்கமடைந்து, சிறிது தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகனிடம் உள்ள பாசத்தினால் உரத்த குரலில் அவனது பெயரைச் சொல்லி அழைக்கலானான். இவ்வாறாக கண்களில் கண்ணீர் மல்க எப்படியோ நாராயணரின் புனித நாமத்தை அவன் உச்சரித்தான்.

பதம் 6.1.30
நிசம்ய ம்ரியமாணஸ்ய முகதோ ஹரி-கீர்த்தனம்
பர்துர் நாம மஹாராஜ பார்ஷதா: ஸஹஸாபதன்

நிசம்ய—கேட்டு; ம்ரியமாணஸ்ய—சாகும் தறுவாயில் இருந்தவனின்; முகத:—வாயிலிருந்து; ஹரி-கீர்த்தனம்—பரமபுருஷரின் புனித நாமம் உச்சரிக்கப்படுவதை; பர்து: நாம—தங்கள் எஜமானரின் புனித நாமம்; மஹா-ராஜ—அரசே; பார்ஷதா:—விஷ்ணு தூதர்கள்; ஸஹஸா—உடனேயே; ஆப்தன்—வந்து சேர்ந்தனர்.

அரசே, மரண வாயிலிருந்த அஜாமிளனின் வாயிலிருந்து, தங்கள் எஜமானரின் புனித நாமம் பெரும் பயத்தின் காரணத்தால் குற்றமின்றி உச்சரிக்கப்பட்டதைக் கேட்ட விஷ்ணு தூதர்கள் உடனேயே அங்கு வந்து சேர்ந்தனர்.

பதம் 6.1.31
விகர்ஷதோ ‘ந்தர் ஹ்ருதயாத் தாஸீ பதிம் அஜாமிளம்
யம-ப்ரேஷ்யாண் விஷ்ணுதூதா வாரயாம் ஆஸுர் ஓஜஸா

விகர்ஷத:—பிடித்திழுத்து; அந்த: ஹ்ருதயாத்—இதயத்திற்குள்ளிருந்து; தாஸீ—பதிம்—அந்த தாசியின் கணவனை; அஜாமிளம்—அஜாமிளனை; யம-ப்ரேஷ்யான்—யமதூதர்களை; விஷ்ணு தூதா:—பகவான் விஷ்ணுவின் தூதர்கள்; வாரயாம் ஆஸு:—தடுத்து நிறுத்தினர்; ஒஜஸா—கம்பீரமான குரல்களால்.

யமதூதர்கள், அந்த தாசியின் கணவனான அஜாமிளனுடைய ஆத்மாவை அவனுடைய இதயத்திற்குள்ளிருந்து வெளியே இழுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கம்பீரமான குரல்களால் விஷ்ணு தூதர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

பதம் 6.1.32
ஊசுர் நிஷேதிதாஸ் தாம்ஸ் தே வைவஸ்வத-புரஹ்ஸரா:
கே யூயம் ப்ரதிஷேத்தாரோ தர்ம-ராஜஸ்ய சாஸனம்

ஊசு:—பதிலளித்தனர்; நிஷேதிதா:—இவ்வாறு தடுக்கப்பட்டு; தான்—விஷ்ணு தூதர்களிடம்; தே—அவர்கள்; வைவஸ்வத—யமராஜனின்; புர:-ஸரா:—சேவகர்கள் அல்லது தூதர்கள்; கே—யார்; யூயம்—நீங்கள் எல்லோரும்; ப்ரதிஷேத்தார:—எதிர்க்கும்; தர்ம-ராஜஸ்ய—தர்மராஜனான யமராஜனின்; சாஸனம்—கட்டளையை.

இவ்வாறு தடுக்கப்பட்ட, சூரிய தேவனின் புத்திரரான யமராஜனின் அத்தூதர்கள், அவர்களைப் பார்த்து, ‘யமதர்மராஜனின் கட்டளையைத் தடுக்கும் அளவிற்குத் துணிவுள்ள நீங்கள் யார்?’ என்று கேட்டனர்.

பதம் 6.1.33
கஸ்ய வா குத ஆயாதா: கஸ்மாத் அஸ்ய நிஷேதத
கிம் தேவா உபதேவா யா யூயம் கிம் ஸித்த-ஸத்தமா:

கஸ்ய—யாருடைய சேவகர்கள்; வா—அல்லது; குத:—எங்கிருந்து; ஆயாதா:—நீங்கள் வருகிறீர்கள்; கஸ்மாத்—என்ன காரணம்; அஸ்ய—இந்த அஜாமிளனை (அழைத்துச் செல்வதை); நிஷேதத—நீங்கள் தடுப்பதற்கு; கிம் தேவா:—நீங்கள் தேவர்களா; உபதேவா:—உபதேவர்களா; யா:—யார்; யூயம்—நீங்களனைவரும்; கிம்—என்ன; ஸித்த-ஸத்-தமா:—பூரணத்துவம் பெற்றவர்களுள் மிகவும் மேலான தூய பக்தர்களா?

ஐயா, நீங்களனைவரும் யாருடைய சேவகர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? நாங்கள் அஜாமிளனின் உடலைத் தொடுவதை ஏன் தடுக்கிறீர்கள்? நீங்கள் சுவர்க்க லோகங்களிலிருந்து வந்த தேவர்களா? அல்லது உபதேவர்களா? அல்லது உத்தம பக்தர்களா?

பதங்கள் 6.1.34 – 6.1.36
ஸர்வே பத்ம பலாசாக்ஷா: பீத-கௌசேய-வாஸஸ:
கிரீடின: குண்டலினோ லஸத்-புஷ்கர-மாலின:

ஸர்வே ச நூத்ன-வயஸ: ஸர்வே சாரு-சதுர்புஜா:
தனுர்-நிஷங்காஸி-கதா-சங்க-சக்ராம்புஜ ஸ்ரிய:

திசோ விதிமிராலோகா: குர்வந்த: ஸ்வேன தேஜஸா
கிம் அர்த்தம் தர்ம-பாலஸ்ய கிங்கரான் நோ நிஷேதத

ஸர்வே—நீங்கள் எல்லோரும்; பத்ம-பலாச-அக்ஷா:—தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடனும்; பீத—மஞ்சள் நிற; கௌசேய—பட்டு; வாஸஸ:—ஆடைகளை அணிந்து கொண்டு; கிரீடின:—கீரிடங்களுடனும்; குண்டலின:—குண்டலங்களுடனும்; லஸத்—ஜொலிக்கும்; புஷ்கர-மாலின:—தாமரைப் பூமாலையுடனும்; ஸர்வே—நீங்கள் எல்லோரும்; ச—மேலும்; நூத்ன-வயஸ:—மிகவும் இளமையுடன் கூடிய; ஸர்வே—நீங்கள் எல்லோரும்; சாரு—மிகவும் அழகுடைய; சது:-புஜா:—நான்கு கைகளுடன் கூடிய; தனு:—வில்; நிஷங்க—அம்பறாத்தூண்; அஸி—வாள்; கதா—கதை; சங்க—சங்கு; சக்ர—சக்கரம்; அம்புஜ—தாமரை; ஸ்ரிய:—அலங்கரிக்கப்பட்டு; திச:—எல்லாத் திசைகளிலும்; விதிமிர—இருள் இல்லாதபடி; ஆலோகா:—அசாதாரணமான ஒளியை; குர்வந்த:—வீசிக்கொண்டு; ஸ்வேன—உங்களுடைய; தேஜஸா—காந்தியோடு; கிம் அர்த்தம்—என்ன காரணம்; தர்ம பாலஸ்ய—தர்மத்தின் காவலரான யமராஜனின்; கிங்கரான்—சேவகர்களான; ந:—எங்களை; நிஷேதத—தடுக்கிறீர்கள்.

அந்த யமதூதர்கள் கூறினர்: உங்களுடைய கண்கள் தாமரையின் இதழ்களைப் போலவே உள்ளன. மஞ்சள் பட்டாடைகளை அணிந்தும், தாமரைப்பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், அழகுமிக்க கிரீடங்களைத் தலைகளிலும், குண்டலங்களைக் காதுகளிலும் அணிந்தும் உள்ள நீங்கள் எல்லோரும் புத்திளமையுடன் காட்சியளிக்கிறீர்கள். உங்கள் எல்லோருடைய நான்கு நீண்ட கைகளும், வில்கள், அம்பறாத்தூண்கள், வாள்கள், கதைகள், சங்குகள், சக்கரங்கள் மற்றும் தாமரைகள் ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உங்களுடைய காந்தி, அதன் அசாதாரணமான பிரகாசத்தினால் இந்த இடத்தின் இருளைப் போக்கிவிட்டது. நீங்கள் ஏன் இப்பொழுது எங்களைத் தடுக்கிறீர்கள்?

பதம் 6.1.37
ஸ்ரீ-சுக உவாச
இதி உக்தே யமதூதைஸ் தே வாஸு தேவோக்த-காரிண:
தான் ப்ரத்யூக: ப்ரஹஸ்யேதம் மேக நிர்ஹ்ராதயா கிரா

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; உக்தே—சொல்லப்பட்டதும்; யமதூதை:—யம தூதர்களால்; தே—அவர்கள்; வாஸுதேவ-உக்த-காரிண:—(ஸாலோக்ய முக்தி பெற்ற பகவான் விஷ்ணுவின் அந்தரங்க சகாக்கள் என்பதால்) பகவான் வாசுதேவரின் கட்டளைகளை நிறைவேற்ற எப்பொழுதும் தயாராக இருப்பவர்கள்; தான்—அவர்களுக்கு; ப்ரத்யூக:—பதிலளித்தனர்; ப்ரஹஸ்ய—புன்னகை செய்து; இதம்—இதை; மேக-நிர்ஹ்ராதயா—மேக கர்ஜனை போன்ற கம்பீரமான; கிரா—குரலில்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: யமதூதர்களால் இவ்வாறு கேட்கப்பட்ட வாசுதேவரின் சேவகர்கள், புன்னகை செய்து, மேக கர்ஜனை போன்ற கம்பீரமான குரல்களில் பின்வருமாறு கூறினர்.

பதம் 6.1.38
ஸ்ரீ விஷ்ணுதூதா ஊசு:
யூயம் வை தர்ம-ராஜஸ்ய யதி நிர்தேச-காரிண:
ப்ரூத தர்மஸ்ய நஸ் தத்வம் யச் சாதர்மஸ்ய லக்ஷணம்

ஸ்ரீ விஷ்ணுதூதா: ஊசு:—புண்ணியாத்மாக்களான விஷ்ணுதூதர்கள் கூறினர்; யூயம்—நீங்கள் எல்லோரும்; வை—உண்மையிலேயே; தர்ம-ராஜஸ்ய— யமதர்ம ராஜனின்; யதி—என்றால்; நிர்தே-காரிண:—தூதர்கள்; ப்ரூத—கூறுங்கள்; தர்மஸ்ய— தர்மத்தைப் பற்றியும்; ந:—எங்களுக்கு; தத்வம்—உண்மையை; யத்—எது; ச—கூட; அதர்மஸ்ய—அதர்மத்தைப் பற்றியும்; லக்ஷணம்—அடையாளங்களையும்.

புண்ணியாத்மாக்களான விஷ்ணு தூதர்கள் கூறினர்: நீங்கள் எல்லோரும் உண்மையிலேயே யமராஜனின் சேவகர்கள்தான் என்றால், தர்மத்தின் பொருளையும் அதர்மத்தின் அடையாளங்களையும் எங்களுக்கு நீங்கள் விளக்கவேண்டும்.

பதம் 6.1.39
கதம்ஸ்வித் த்ரியதே தண்ட: கிம் வாஸ்ய ஸ்தானம் ஈப்ஸிதம்
தண்ட்யா: கிம் காரிண: ஸர்வே ஆஹோஸ்வித் கதிசின் ந்ருணாம்

கதம்ஸ்வித்—எந்த கணக்கின்படி; த்ரியதே—விதிக்கப்படுகிறது; தண்ட:—தண்டனை; கிம் வா—மேலும் என்ன; அஸ்ய—அதனுடைய; ஸ்தானம்—இடம்; ஈப்ஸிதம்—விரும்பத்தக்க; தண்ட்யா:—தண்டனைக்குரிய; கிம்—என்ன; காரிண:—பலனை எதிர்பார்த்து செயலாற்றுபவர்கள்; ஸர்வே—எல்லோரும்; ஆஹோஸ்வித்—அல்லது; கதிசித்—ஒரு சிலர்; ந்ருணாம்—மனிதர்களுள்.

மற்றவர்களைத் தண்டிப்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது? உண்மையில் தண்டனைக்கு உரியவர்கள் யார்? பலன் கருதும் செயல்களில் ஈடுபட்டுள்ள எல்லாக் கருமிகளும் தண்டனைக்குரியவர்களா? அல்லது அவர்களில் சிலர் மட்டுமா?

பதம் 6.1.40
யமதூத ஊசு:
வேத-ப்ரணிஹிதோ தர்மோ ஹி அதர்மஸ் தத்-விபர்யய:
வேதோ நாராயண: ஸாக்ஷாத் ஸ்வயம்பூர் இதி சுஸ்ரும

யமதூதா: ஊசு:—யமதூதர்கள் கூறினர்; வேத—நான்கு வேதங்களால் (சாம, யஜுர், ரிக் மற்றும் அதர்வ); ப்ரணிஹித:—விதிக்கப்பட்டவை; தர்ம:—தர்மம் என்பது; ஹி—நிச்சயமாக; அதர்ம:—அதர்மம் என்பது; தத் விபர்யய:—அதற்குப் புறம்பானது (வேதக் கட்டளைகளால் ஆதரிக்கப்படாதது); வேத:—ஞான நூல்களான வேதங்கள்; நாராயண: ஸாக்ஷாத்—(நாராயணரால் பேசப்பட்ட வார்த்தைகள் என்பதால்) நேரடியாக நாராயணரேயாகும்; ஸ்வயம்-பூ:—சுயமாகத் தோன்றியவை, சுய பூர்த்தியுடையவை (ஏனெனில் அவை நாராயணரின் சுவாசத்திலிருந்து தோன்றுபவை, எவராலும் எழுதப்படாதவை); இதி—இவ்வாறு; சுஸ்ரும—நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

யமதூதர்கள் பதிலளித்தனர்: வேதங்களில் விதிக்கப்பட்டிருப்பது தர்மமாகும். அதற்குப் புறம்பானது அதர்மமாகும். வேதங்கள் சுயமாகத் தோன்றியவை என்றும், அவை நேரடியாக பரமபுருஷரான நாராயணரே என்றும் யமராஜனிடமிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பதம் 6.1.41
யேன ஸ்வதாம்னி அமீபாவா ரஜ:-ஸத்வ-தமோமயா:
குண-நாம-க்ரியா-ரூபைர் விபாவ்யந்தே யதா-ததம்

யேன—யாரால் (நாராயணரால்); ஸ்வ-தாம்னி—அவரது சொந்த இருப்பிடமான ஆன்மீக உலகில் இருந்த போதிலும்; அமீ—இவ்வெல்லா; பாவா:—தோற்றங்களும்; ரஜ:-ஸத்வ-தம:-மயா:—ஜட இயற்கையின் முக்குணங்களால் (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ்) படைக்கப்பட்ட; குண—குணங்கள்; நாம—பெயர்கள்; க்ரிய—செயல்கள்; ரூபை:—மற்றும் ரூபங்களுடன் கூடி; விபாவ்யந்தே—வெவ்வேறு விதமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன; யதா-ததம்—எவ்வாறு உள்ளனவோ அவ்வாறு.

அனைத்து காரணங்களுக்கும் பரம காரணமான நாராயணர் அவரது சொந்த இருப்பிடமான ஆன்மீக உலகில் வாழ்கிறார். எனினும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும் மூன்று ஜட இயற்கைக் குணங்களுக்கேற்ப அவர் முழு பிரபஞ்ச தோற்றத்தையும் ஆள்கிறார். இவ்விதமாக அனைத்து ஜீவராசிகளுக்கும் வெவ்வேறு குணங்களும், (பிராமணர், க்ஷத்திரியர், வைசியர்) என்ற வெவ்வேறு பெயர்களும், வர்ணாசிரம ஸ்தாபனத்திற்கேற்ப வெவ்வேறு கடமைகளும், வெவ்வேறு ரூபங்களும் அளிக்கப்படுகின்றன. இவ்வாறாக நாராயணர் தான் முழு பிரபஞ்ச தோற்றத்திற்கும் காரணமாவார்.

பதம் 6.1.42
ஸூர்யோ ‘க்னி: கம் மருத் தேவ: ஸோம: ஸந்யாஹனீ திச:
கம் கு: ஸ்வயம் தர்ம இதி ஹி ஏதே தைஹ்யஸ்ய ஸாக்ஷிணா:

ஸூர்ய:—சூரிய தேவன்; அக்னி:—அக்கினி; கம்—ஆகாயம்; மருத்—காற்று; தேவ:—தேவர்கள்; ஸோம:—சந்திரன்; ஸந்யா—சாயங்காலம்; அஹனீ—பகலும், இரவும்; திச:—திசைகள்; கம்—நீர்; கு:—பூமி; ஸ்வயம்—தானே; தர்ம:—யமராஜன் அல்லது பரமாத்மா; இதி—இவ்வாறாக; ஹி—உண்மையில்; ஏதே—இவையனைத்தும்; தைஹ்யஸ்ய—பௌதிக மூலப் பொருட்களாலான உடலில் வாழும் ஒரு ஜீவராசிக்கு; ஸாக்ஷிண:—சாட்சிகளாகும்.

சூரியன், அக்னி, ஆகாயம், காற்று, தேவர்கள், சந்திரன், சாயங்காலம், பகல், இரவு, திசைகள், நீர், பூமி மற்றும் பரமாத்மா ஆகிய அனைத்தும் ஒரு ஜீவராசியின் செயல்களுக்குச் சாட்சிகளாக விளங்குகின்றன.

பதம் 6.1.43
ஏதைர் அதர்மோ விஜ்ஞாத: ஸ்தானம் தண்டஸ்ய யுஜ்யதே
ஸர்வே கர்மானுரோதேன தண்டம் அர்ஹந்தி காரிண:

ஏதை:—இவைகளால் (சூரியதேவன் முதலான சாட்சிகள்); அதர்ம:—தர்மத்திலிருந்து வழிதவறிய; விஜ்ஞாத:—அறியப்படுகிறது; ஸ்தானம்—உரிய இடம்; தண்டஸ்ய—தண்டனைக்கு; யுஜ்யதே—என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது; ஸர்வே—எல்லோரும்; கர்ம-அனுரோதேன—செயல்களுக்குத் தக்கவாறு; தண்டம்—தண்டனையை; அர்ஹந்தி—ஏற்கத் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்; காரிண:—பாவ காரியங்களைச் செய்பவர்கள்.

அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து (தர்மம்) வழுவியவர்களின் குற்றங்கள் இத்தனை சாட்சிகளால் உறுதி செய்யப்படுவதால், அதர்ம வழி சென்றவர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆகின்றனர். பலன் கருதும் செயல்களில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் அவரவர் பாவச் செயல்களுக்கேற்ப, தண்டிக்கப்படத் தகுந்தவராவர்.

பதம் 6.1.44
ஸம்பவந்தி ஹி பத்ராணி விபரீதானி சானகா:
காரணாம் குண ஸங்கோ ‘ஸ்தி தேஹவான் ந ஹி அகர்மக்ருத்

ஸம்பவந்தி—நடக்கின்றன; ஹி—உண்மையில்; பத்ராணி—மங்களகரமான புண்ணியச் செயல்கள்; விபரீதானி—அவற்றிற்கு நேர் எதிரானவை (அமங்களமான பாவச் செயல்கள்); ச—கூட; அனகா:—பாவமற்ற வைகுண்டவாசிகளே; காரிணாம்—பலன் கருதும் கருமிகளின்; குண-ஸங்க:—இயற்கையின் முக்குணங்களின் களங்கம்; அஸ்தி—உள்ளது; தேஹ-வான்—இந்த ஜட உடலை ஏற்றுக் கொண்ட எவனும்; ந—இல்லை (இருக்க முடியாது); ஹி—நிச்சயமாக; அகர்ம-க்ருத்—செயலாற்றாமல்.

வைகுண்ட வாசிகளே நீங்கள் பாவமற்றவர்கள். ஆனால் இந்த ஜட உலகில் உள்ளவர்கள் புண்ணியங்களையோ அல்லது பாவங்களையோ செய்தாலும் அவர்களனைவருமே கருமிகள்தான். அவர்கள் இயற்கையின் முக்குணங்களால் களங்கமடைந்தும், அதற்கேற்ப செயற்பட வேண்டியவர்களாகவும் இருப்பதால், இந்த இருவகைச் செயல்களுமே அவர்களுக்குச் சாத்தியம்தான். ஜட உடலை ஏற்றவனால் செயலாற்றாமல் இருக்க முடியாது. மேலும் ஜட இயற்கைக் குணங்களின் கீழ் செயற்படுபவர்களுக்கு, பாவம் செய்வது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த ஜட உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் தண்டனைக்குரியவையே.

பதம் 6.1.45
யேன யாவான் யதாதர்மோ தர்மோ வேஹ ஸம்ஹித:
ஸ ஏவ தத்-ஃபலம் புங்க்தே ததா தாவத் அமுத்ர வை

யேன—எவனால்; யாவான்—எந்த அளவு; யதா—எந்த விதமாக; அதர்ம:—அதர்மச் செயல்கள்; தர்ம:—தர்மச் செயல்கள்; வா—அல்லது; இஹ—இப்பிறவியில்; ஸம்ஹித:—செய்யப்படுகிறதோ; ஸ:—அவன்; ஏவ—உண்மையில்; தத்-ஃபலம்—அந்த குறிப்பிட்ட பலனை; புங்க்தே—இன்புறுகிறான் அல்லது துன்புறுகின்றான்; ததா—அதே போல்; தாவத்—அந்த அளவிற்கு; அமுத்ர—அடுத்த பிறவியில்; வை—கட்டாயமாக.

இப்பிறவியில் ஒருவன் செய்யும் தர்மச் செய்லகள் அல்லது அதர்மச் செயல்களின் விகிதத்திற்கேற்ப, அடுத்த பிறவியில் அவன் தனது கர்ம பலன்களான இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவிக்கிறான்.

பதம் 6.1.46
யதேஹ தேவ-ப்ரவராஸ் த்ரை-வித்யம் உபலப்யதே
பூதேஷீ குணா-வைசித்ர்யாத் ததான்யத்ரானுமீயதே

யதா—எவ்வாறு; இஹ—இப்பிறவியில்; தேவ-ப்ரவரா:—தேவர்களுள் சிறந்தவர்களே; த்ரை-வித்யம்—மூன்று குணங்கள்; உபலப்யதே—அடையப்படுகின்றன; பூதேஷீ—எல்லா ஜீவராசிகளுக்குள்ளும்; குணா-வைசித்ர்யாத்—இயற்கையின் முக்குணங்களால் ஏற்படும் களங்கத்தின் வேறுபாடுகளின் காரணத்தால்; ததா—அது போலவே; அன்யத்ர—வேறு வகையான இடங்களில்; அனுமீயதே—அது தீர்மானிக்கப்படுகிறது.

தேவர்களுள் சிறந்தவர்களே, மூன்று இயற்கைக் குணங்களின் களங்கத்தின் காரணத்தால் மூன்று வகையான வாழ்வுகளை நாம் காண்கிறோம். இவ்விதமாக ஜீவராசிகள், சாந்த நிலை, தீவிரநிலை மற்றும் அறியாமை நிலையில் உள்ளவர்களாகவும், மகிழ்ச்சி, மகிழ்ச்சியின்மை மற்றும் அதற்கிடைப்பட்ட நிலையில் உள்ளவர்களாகவும், தர்ம நிலை, அதர்ம நிலை மற்றும் இரண்டுங் கெட்டான் நிலையில் உள்ளவர்களாவும் அறியப்படுகின்றனர். அடுத்த பிறவியிலும், இம்மூன்று வகையான பௌதிக குணங்கள் இதே முறையில்தான் செயற்படும் என்பதை நம்மால் ஊகிக்க இயலும்.

பதம் 6.1.47
வர்த்தமானோ ‘ன்யயோ: காலோ குணாபிஞாபகோ யதா
ஏவம் ஜன்மான்யயோர் ஏதத் தர்மாதர்ம-நிதர்சனம்

வர்த்தமான:—நிகழ்காலம்; அன்யயோ:—கடந்த மற்றும் எதிர்; கால:—காலங்களின்; குண-அபிஞாபக:—குணங்களை வெளிப்படுத்துவது; யதா—போலவே; ஏவம்—இவ்வாறு; ஜன்ம—பிறவி; அன்யயோ:—கடந்த மற்றும் எதிர்கால பிறவிகளின்; ஏதத்—இது; தர்ம—தர்மத்தையும்; அதர்ம—அதர்மத்தையும்; நிதர்சனம்—சுட்டிக் காட்டுகிறது.

நிகழ்காலத்து வசந்தம், கடந்த மற்றும் எதிர்காலங்களிலுள்ள வசந்தங்களின் தன்மையை சுட்டிக்காட்டுவது போலவே, இன்பத்தையோ, துன்பத்தையோ அல்லது இவற்றின் கலப்படத்தையோ கொண்ட இப்பிறவி, கடந்த மற்றும் எதிர்காலங்களில் ஒருவன் செய்த அல்லது செய்யப்போகின்ற தர்ம, அதர்மச் செயல்களைப் பற்றிய அறிகுறியைக் கொடுக்கிறது.

பதம் 6.1.48
மனஸைவ புரே தேவ: பூர்வ-ரூபம் விபஸ்யதி
அனுமீமாம்ஸதே ‘பூர்வம் மனஸா பகவான் அஜ:

மனஸா—மனதினால்; ஏவ—மட்டுமே; புரே—அவருடைய வசிப்பிடத்தில்; அல்லது பரமாத்மாவைப் போல் அனைவருடைய இதயங்களுக்குள்ளும்; தேவ:—தேவரான யமராஜன் (திவ்யதீதி தேவ: எப்பொழுதும் ஒளி மிகுந்து பிரகாசிப்பவர், தேவர் என்று அழைக்கப்படுகிறார்); பூர்வ-ரூபம்—கடந்த காலத்திய தர்ம அல்லது அதர்ம நிலை; விபஸ்யதி—முழுமையாக கண்டறிகிறார்; அனுமீமாம்ஸதே—அவர் புரிந்து கொள்கிறார்; அபூர்வம்—எதிர்கால நிலையை; மனஸா—மனதால்; பகவான்—சர்வ சக்தி படைத்த; அஜ:—பிரம்மதேவருக்கு நிகரானவர்.

சர்வசக்தி படைத்த யமராஜன் பிரம்மதேவருக்கு நிகரானவராவார். ஏனெனில், அவரது சொந்த இருப்பிடத்தில் இருந்து கொண்டே, அனைவருடைய இதயங்களிலுமுள்ள பரமாத்மாவைப் போல், அவர் ஒரு ஜீவராசியின் கடந்த காலச் செயல்களை மனதால் கண்டறிந்து, எதிர்காலத்தில் அந்த ஜீவராசி எப்படி செயற்படுவான் என்பதைப் புரிந்து கொள்கிறார்.

பதம் 6.1.49
யதாஞஸ் தமஸா யுக்த உபாஸ்தே வ்யக்தம் ஏவ ஹி
ந வேத பூர்வம் அபரம் நஷ்ட-ஜன்ம-ஸ்ம்ருதிஸ் ததா

யதா—எவ்வாறு; அஞ:—அறியாமையிலுள்ள ஒரு ஜீவன்; தமஸா—உறக்கத்தில்; யுக்த:—ஈடுபட்டுள்ள; உபாஸ்தே—ஏற்ப செயற்படுகிறானோ; வ்யக்தம்—கனவில் தோன்றிய ஒரு உடலுக்கு; ஏவ—நிச்சயமாக; ஹி—உண்மையில்; ந வேத—அறிய மாட்டான்; பூர்வம்—கடந்தகால உடலை; அபரம்—அடுத்த உடலை; நஷ்ட—அழிந்து விட்ட; ஜன்ம-ஸ்ம்ருதி:—பிறப்பின் நினைவு; ததா—அதேபோல்.

உறங்கிக் கொண்டிருப்பவன், தன் கனவில் தோன்றிய உடலுக்கேற்ப செயற்பட்டு, அதைத் தான் என்று ஏற்றுக் கொள்கிறான். அதுபோலவே, ஒருவன் தன் கடந்தகால தர்ம, அதர்மச் செயல்களால் பெற்ற தற்போதைய உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். அவனால் தனது கடந்த கால பிறவிகளையோ, எதிர்கால பிறவிகளையோ அறிய முடியாது.

பதம் 6.1.50
பஞ்சபி: குருதே ஸ்வார்த்தான் பஞ்ச வேதாத பஞ்சபி:
ஏகஸ் து ஷோடசேன த்ரீன் ஸ்வயம் ஸப்ததசோ ‘ஸ்னுதே

பஞ்சபி:—ஐந்து செயற் புலன்களினால் (குரல், கைகள், கால்கள், மலத்துவாரம் மற்றும் பாலுறுப்புகள்); குருதே—செய்கிறான்; ஸ்வ-அர்த்தான்—அவன் விரும்பிய காரியங்களை; பஞ்ச—ஐந்து புலன் பொருட்கள் (ஓசை, ரூபம், ஸ்பரிசம், வாசனை, சுவை); வேத—அறிகிறான்; அத—இவ்வாறு; பஞ்சபி:—ஐந்து அறிவுப் புலன்களால் (கேட்டல், பார்த்தல், முகர்தல், சுவைத்தல், தொடுதல்); ஏக:—ஒன்று; து—ஆனால்; ஷோடசேன—இப்பதினைந்து வகைகள் மற்றும் மனம் ஆகியவற்றினால்; த்ரீன்—மூவகை அனுபவங்கள் (மகிழ்ச்சி, துன்பம் மற்றும் இவ்விரண்டின் கலப்படம்); ஸ்வயம்—ஜீவராசி தானே; ஸப்ததச:—பதினேழாவது விஷயம்; அஸ்னுதே—அனுபவிக்கிறான்.

ஐந்து அறிவுப் புலன்களுக்கும் (ஞானேந்திரியங்கள்), ஐந்து செயற் புலன்களுக்கும் (கர்மேந்திரியங்கள்), ஐந்து புலன் விஷயங்களுக்கும் மேலே பதினாறாவதாக மனம் இருக்கிறது. மனதிற்கும் மேலே பதினேழாவதாக ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மா, மற்ற பதினாறின் ஒத்துழைப்புடன் ஜட உலகைத் தனியாக அனுபவிக்கிறான். ஜீவராசியானவன், இன்பம், துன்பம், இவற்றின் கலப்படம் என்ற மூன்று வகையான அனுபவங்களுக்கு ஆளாகிறான்.

பதம் 6.1.51
தத் ஏதத் ஷோடச-கலம் லிங்கம் சக்தி-த்ரயம் மஹத்
தத்தே ‘நுஸம்ஸ்ருதிம் பும்ஸி ஹர்ஷ-சோக-பயார்திதாம்

தத்—ஆகவே; ஏதத்—இது; ஷோடச-கலம்—பதினாறு பாகங்களால் (பத்து புலன்கள், மனம் மற்றும் ஐந்து புலன் விஷயங்கள்) ஆனதாகும்; லிங்கம்—சூட்சும சரீரம்; சக்தி-த்ரயம்—மூன்று ஜட இயற்கைக்குணங்களின் விளைவு; மஹத்—கடக்க முடியாததாகும்; தத்தே—கொடுக்கிறது; அநுஸம்ஸ்ருதிம்—வெவ்வேறு வகையான உடல்களில், கிட்டத்தட்ட முடிவில்லா தொடர் சக்கரம் போல் மாறிக்கொண்டிருக்கும்; பும்ஸி—ஜீவ ராசிக்கு; ஹர்ஷ—மகிழ்ச்சி; சோக—துக்கம்; பய—பயம்; ஆர்த்தி—துயரம்; தாம்—கொடுப்பது.

சூட்சும சரீரம் பதினாறு பாகங்களைக் கொண்டதாகும். அவை: ஐந்து அறிவு திரட்டும் புலன்கள், ஐந்து சொற்புலன்கள், ஐந்து புலனின்பப் பொருட்கள், மற்றும் மனம். இந்த சூட்சும சரீரம், மூன்று ஐட இயற்கைக் குணங்களின் ஒரு விளைவாகும். இது கடக்க முடியாத உறுதியான ஆசைகளால் ஆனது. எனவே இது மனித வாழ்வு, மிருக வாழ்வு மற்றும் தேவ வாழ்வு ஆகியவற்றுக்கிடையில் ஜீவராசி வெவ்வேறு உடல்களை எடுக்கும்படி செய்கிறது. ஜீவராசி ஒரு தேவ உடலைப் பெறும் பொழுது அதிக மகிழ்ச்சியடைகிறான். ஒரு மனித உடலைப் பெறும்பொழுதும் வருத்தமடைகிறான். ஒரு உடலைப் மிருக பெறும்பொழுதும் வருத்தமடைகிறான். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவன் துக்ககரமான நிலையில் இருக்கிறான் என்பதுதான் உண்மை. அவனது பரிதாபகரமான இந்நிலைதான் சம்சாரம் (ஸம்ஸ்ருதி) என்று அழைக்கப்படுகிறது.

பதம் 6.1.52
தோஹி அஜ்ஞோ ‘ஜித-ஷட்-வர்கோ நேச்சன் கர்மாணி கார்யதே
கோசகார இவாத்மானம் கர்மனாச்சாத்ய முஹ்யதி

தேஹி—உடல்பெற்ற ஆத்மா; அஜ்ஞ:—பக்குவ ஞானம் இல்லாததால்; அஜித-ஷட்-வர்க:—அறிவுப் புலன்களையும் மனதையும் அடக்காத; ந இச்சன்—தன் விருப்பமின்றியே; கர்மாணி—பெளதிக நன்மைகளை அடைவதற்கான செயல்களை; கார்யதே—செய்யும்படி தூண்டப்படுகிறான்; கோசகார:—பட்டுப்பூச்சி; இவ—போல; ஆத்மானம்—தன்னைத் தானே; கர்மணா—பலன் கருதும் செயல்களால்; ஆச்சாத்ய—போர்த்திக் கொண்டு; முஹ்யதி—குழப்பமடைகிறது.

தன் புலன்களையும், மனதையும் அடக்கியாள முடியாதவனும், உடலுக்குள் சிறைப்பட்டவனுமான முட்டாள் ஜீவராசி, தன் விருப்பமின்றியே, ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்திற்கேற்ப செயற்படும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். அவன் ஒரு பட்டுப்பூச்சியைப் போன்றவனாவான். அது தன் சொந்த உமிழ்நீரைக்கொண்டு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை நெய்து வெளிவருவதற்குச் சாத்தியமில்லாதபடி உள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறது. ஜீவராசி, அவனது சொந்த பலன் கருதும் செயல்களின் பின்னலுக்குள் தானாகவே அடைபட்டுக் கொள்கிறான். பிறகு தன்னை விடுவித்துக் கொள்ளும் வழியறியாது தவிக்கிறான். இவ்வாறாக அவன் எப்பொழுதும் புத்திபேதலித்தவனாகவும், திரும்பத் திரும்ப மரணமடைபவனாகவும் இருக்கிறான்.

பதம் 6.1.53
ந ஹி கஸ்சித் க்ஷணம் அபி ஜாது திஷ்டதி அகர்மக்ருத்
கார்யதே ஹி அவச: கர்ம குணை: ஸ்வாபாவிகைர் பலாத்

ந—இல்லை; ஹி—உண்மையில்; கஸ்சித்—ஒருவரும்; க்ஷணம் அபி—ஒரு கணம் கூட; ஜாது—எந்த சமயத்திலும்; திஷ்டதி—இருக்கிறான்; அகர்ம-க்ருத்—எதுவும் செய்யாமல்; கார்யதே—அவன் செய்விக்கப்படுகிறான்; ஹி—கட்டாயமாக; அவச:—தானாகவே; கர்ம—பலன் விளைவிக்கும் செயல்களை; குணை:—இயற்கையின் முக்குணங்களால்; ஸ்வாபாவிகை:—முற்பிறவிகளில் அவனது சொந்த சுபாவங்களால் உண்டாக்கப்பட்ட; பலாத்—பலவந்தமாக.

எந்த ஒரு ஜீவராசியாலும் ஒரு கணம் கூட செயற்படாமல் இருக்க முடியாது. ஒருவன் தனது இயற்கையான சுபாவத்தினால், ஜட இயற்கையின் முக்குணங்களுக்கேற்ப செயற்பட்டுத்தான் ஆக வேண்டும். ஏனெனில், இந்த இயற்கைச் சுபாவமானது, ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயற்படும்படி அவனைக் கட்டாயப்படுத்துகிறது.

பதம் 6.1.54
லப்த்வா நிமித்தம் அவ்யக்தம் வ்யக்தாவ்யக்தம் பவதி உத
யதா-யோனி யதா-பீஜம் ஸ்வபாவேன பலீயஸா

லப்த்வா—கிடைக்கப்பெற்று; நிமித்தம்—காரணம்; அவ்யக்தம்—ஒருவனுக்குக் காணப்படாதது அல்லது தெரியாதது; வ்யக்த-அவ்யக்தம்—வெளிப்படையாகத் தெரிவதும், தெரியாததும், அதாவது ஸ்தூல உடலும், சூட்சும உடலும்; பவதி—உண்டாகிறது; உத—நிச்சயமாக; யதா-யோணி—தாயைப் போலவே; யதா-பீஜம்—தந்தையைப் போலவே; ஸ்வ-பாவேன—இயற்கையான சுபாவத்தினால்; பலீயஸா—மிகவும் சக்திவாய்ந்த.

ஒரு ஜீவராசியால் செய்யப்படும் பாவ, புண்ணிய கருமங்களே அவனுடைய ஆசைகளின் நிறைவேற்றத்திற்கு காரணமாகும். கண்ணுக்குத் தெரியாத இக்காரணம்தான் ஜீவராசியின் வெவ்வேறு உடல்களுக்கு அடிப்படையாக உள்ளது. தீவிர ஆசையின் காரணத்தால் ஜீவராசி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்து, அவனுடைய தந்தையைப் போன்ற அல்லது தாயைப் போன்ற ஒருடலைப் பெறுகிறான். ஸ்தூல மற்றும் சூட்சும உடல்கள் அவனது விருப்பத்திற்கேற்பவே படைக்கப்படுகின்றன.

பதம் 6.1.55
ஏஷ ப்ரக்ருதி-ஸங்கேன புருஷஸ்ய விபர்யய:
ஆஸீத் ஸ ஏவ ந சிராத் ஈச-ஸங்காத் விலீயதே

ஏஷ:—இது; ப்ரக்ருதி-ஸங்கேன—ஜட இயற்கையுடனான சேர்க்கையினால்; புருஷஸ்ய—ஜீவராசியின்; விபர்யய:—மறதியான அல்லது சங்கடமான ஒரு நிலை; ஆஸீத்—இருந்தது; ஸ:—அந்த நிலை; ஏவ—மட்டுமே; ந—இல்லை; சிராத்—நீண்ட காலம் எடுக்கும்; ஈச-ஸங்காத்—பரமபுருஷரின் சகவாசத்தினால்; விலீயதே—மறைந்து விடுகிறது.

ஜீவராசி ஜட இயற்கையுடன் தொடர்பு கொண்டிருப்பதால், ஆபத்தான ஒரு நிலையில் இருக்கிறான். ஆனால் மனித ரூபத்திலுள்ள வாழ்வில் பரம்புருஷருடனோ அல்லது அவரது பக்தருடனோ சகவாசம் கொள்ளும் முறை அவனுக்கு கற்பிக்கப்படுமானால், இந்த நிலையை மாற்றிவிட முடியும்.

பதங்கள் 6.1.56 – 6.1.57
அயம் ஹி ஸ்ருதி-ஸம்பன்ன: சீல-வருந்த-குணாலய:
த்ருத-வ்ரதோ ம்ருதுர் தாந்த: ஸத்ய-வான் மந்த்ரவிச் ச்சுசி:

குர்வ்-அக்னி-அதிதி-வ்ருத்தானாம் சுஸ்ரூஷுர் அனஹங்க்ருத:
ஸர்வ-பூத-ஸுஹ்ருத் ஸாதூர் மித-வாக் அனஸுய:

அயம்—(அஜாமிளன் என்ற) இவன்; ஹி—உண்மையில்; ஸ்ருத-ஸம்பன்ன:—வேதமறிந்தவனாகவும்; சீல—நல்ல குணத்திற்கும்; வ்ருத்த—நல்ல நடத்தைக்கும்; குண—மற்றும் பண்புகளுக்கும்; ஆலய:—உறைவிடமாக; த்ருத-வ்ரத:—வேத விதிகளை அனுஷ்டிப்பதில் உறுதியுள்ளவனாகவும்; ம்ருது:—சாந்தனாகவும்; தாந்த:—புலன்களையும், மனதையும் முழுமையாக அடக்கியவனாகவும்; ஸத்ய-வாக்—உண்மையே பேசுபவனாகவும்; மந்த்ர-வித்—வேத மந்திரங்களை உச்சரிக்கும் முறையை அறிந்தவனாகவும்; சுசி:—எப்பொழுதும் சுத்தமும், ஓங்கும் உடையவனாகவும்; குரு—ஆன்மீக குருவையும்; அக்னி—அக்னி தேவனையும்; அதிதி—விருந்தாளிகளையும்; வ்ருத்தானாம்—மற்றும் வீட்டிலுள்ள வயோதிகர்களையும்; சுஸ்ருஷு:—மரியாதையுடன் வழிபடுவதில் ஈடுபட்டிருந்தான்; அனஹங்க்ருத:—போலி கெளரவமின்றி; ஸர்வ-பூத-ஸுஹ்ருத்—எல்லாப் பிராணிகளிடத்தும் அன்புடையவனாகவும்; ஸாது:—சாதுவாகவும்; மித-வாக்—தகாதன பேசாது நல்லதை குறைவாகப் பேசுபவனாகவும்; அனஸூயக:—பொறாமையற்றவனாகவும்.

துவக்கத்தில் அஜாமிளன் என்ற இந்த பிராமணன், வேதங்களைக் கற்றவனாகவும், நல்லொழுக்கமும், நன்னடத்தையும், நற்குணங்களும் உடையவனாகவும், வேத விதிகளை அனுஷ்டிப்பதில் உறுதியுள்ளவனாகவும், சாந்தனாகவும், புலன்களையும் மனதையும் அடக்கியவனாகவும், உண்மையே பேசுபவனாகவும், வேதம் ஓதுவதை அறிந்தவனாகவும், பரிசுத்தனாகவும் இருந்தவன். மேலும் குருவையும், அக்னி தேவனையும், அதிதிகளையும், தன் குடும்பத்திலுள்ள முதியோர்களையும் மரியாதையுடன் பூஜிப்பவனாகவும், போலி கெளரவத்திலிருந்து விடுபட்டவனாகவும், நேர்மையானவனாகவும், எல்லாப் பிராணிகளிடத்தும் அன்புடையவனாகவும், அதிகம் பேசாதவனாகவும், எவரிடமும் பொறாமை கொள்ளாதவனாகவும் இருந்தவன்.

பதங்கள் 6.1.58 – 6.1.60
ஏகதாஸௌ வனம் யாத: பித்ரு-ஸந்தேசக்ருத் த்விஜ:
ஆதாய தத ஆவ்ருத்த: ஃபல-புஷ்ப-ஸமித்-குசான்

ததர்ச காமினம் கஞ்சிச் சூத்ரம் ஸஹ புஜிஷ்யயா
பீத்வா ச மது மைரேயம் மதாகூர்ணித-நேத்ரயா

மத்தயா விஸ்லதன்-நீவ்யா வ்யபேதம் நிரபத்ரபம்
க்ரீடந்தம் அனுகாயந்தம் ஹஸந்தம் அனயாந்திகே

ஏகதா—ஒரு சமயம்; அஸௌ—இந்த அஜாமிளன்; வனம் யாத:—காட்டிற்குச் சென்றான்; பித்ரு—அவனது தந்தையின்; ஸந்தேச—கட்டளையை; க்ருத்—நிறைவேற்ற; த்விஜ:—அந்த பிராமணன்; ஆதாய—சேகரித்துக் கொண்ட; தத:—காட்டிலிருந்து; ஆவ்ருத்த:—திரும்பிக் கொண்டிருந்தான்; ஃபல-புஷ்ப—பழங்களையும், புஷ்பங்களையும்; ஸமித்-குசான்—ஸமித்து, தர்ப்பை என்ற இருவித புற்களையும்; ததர்ச—கண்டான்; காமினம்—காம வேட்கை நிறைந்த; கஞ்சித் சூத்ரம்—நான்காம் தரமான ஒரு சூத்திரனை; ஸஹ—கூட; புஜிஷ்யயா—ஒரு சாதாரண வேலைக்காரி அல்லது வேசியுடன்; பீத்வா—குடித்தபின்; ச—மேலும்; மது—கள்; மைரேயம்—ஸோம மலரிலிருந்து செய்யப்பட்ட; மத—போதையால்; ஆகூர்ணித—சுழலும்; நேத்ரயா—கண்களையுடைவளின்; மத்தயா—மயங்கி; விஸ்லதத்னீவ்யா—நழுவிய ஆடையை உடையவளாக; வ்யபேதம்—நன்நடத்தையிலிருந்து நழுவி; நிரபத்ரபம்—பொதுமக்கள் என்ன சொல்வார்கள் என்ற பயமின்றி; க்ரீடந்தம்—காமக் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தான்; அனுகாயந்தம்—பாடிக் கொண்டும்; ஹஸந்தம்—சிரித்துக் கொண்டும்; அனயா—அவளுடன்; அந்திகே—நெருக்கமாக.

ஒருசமயம் அஜாமிளன் என்ற இந்த பிராமணன், தந்தையின் கட்டளைப்படி பழங்கள், பூக்கள், சமித்து மற்றும் தர்ப்பை என்ற இருவித புற்கள் ஆகியவற்றை சேகரிப்பதற்காக வனம் சென்றான். வீடு திரும்பும் வழியில், நான்காம் தரமான காமவெறி கொண்ட ஒரு சூத்திரன் வெட்கமின்றி ஒரு வேசியைத் தழுவுவதையும், முத்தமிடுவதையும் கண்டான். அந்த சூத்திரனோ, தன் நடத்தையில் தப்பில்லை என்பது போல் பாடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தான். அந்த சூத்திரன், வேசி இருவருமே கள் குடித்திருந்தனர். அந்த தாசியின் கண்கள் போதையால் சுழன்றன. அவளது ஆடை களைந்திருந்தது. அஜாமிளன் பார்த்த பொழுது அவர்களது நிலை இப்படித்தான் இருந்தது.

பதம் 6.1.61
த்ருஷ்ட்வா தாம் காம-லிப்தேன பாஹுனா பரிரம்பிதாம்
ஜகாம ஹ்ருச்-சய-வசம் ஸஹஸைவ விமோஹித:

த்ருஷ்ட்வா—பார்த்தான்; தாம்—அவளை (வேசியை); காம-லிப்தேன—காம இச்சையைத் தூண்டுவதற்காக மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்டிருந்த; பாஹீனா—கையால்; பரிரம்பிதாம்—கட்டியணைக்கப்பட்டவனை; ஜகாம—சென்றான்; ஹ்ருத்-சய—இயத்திலுள்ள காம இச்சைகளின்; வசம்—கட்டுப்பாட்டின் கீழ்; ஹஸா—திடீரென்று; ஏவ—உண்மையில்; விமோஹித:—மோக வசப்பட்டு.

அந்த சூத்திரன் மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்ட தன் கையால் அந்த வேசியை கட்டி அணைத்துக் கொண்டிருந்தான். அஜாமிளன் அவளைக் கண்டதும், அவனது இதயத்தில் செயலற்றுக்கிடந்த காம இச்சைகள் தலைதூக்கின. அதனால் அவன் மோக வசப்பட்டு அவற்றிற்கு அடிமையானான்.

பதம் 6.1.62
ஸ்தம்பயன் ஆத்மனாத்மானம் யாவத் ஸத்வம் யதா- ஸ்ருதம்
ந சசாக ஸமாதாதும் மனோ மதன-வேபிதம்

ஸ்தம்பயன்—கட்டுப்படுத்த முயன்று; ஆத்மனா—புத்தியினால்; ஆத்மானம்—மனதை; யாவத் ஸத்வம்—தன்னால் இயன்றளவு; யதா-ஸ்ருதம்—(பிரம்மச்சரியத்தில் பெண்களைப் பார்ப்பது கூட தவறு என்ற உபதேசத்தை) நினைவுகூர்வதன் மூலம்; ந—இல்லை; சசாக—முடிந்தது; ஸமாதாதும்—கட்டுப்படுத்தி; மன:—மனதை; மதன-வேபிதம்—மன்மதனால் அல்லது காம இச்சையால்.

ஒரு பெண்ணைக் காண்பது கூட தவறு என்ற சாஸ்திரங்களின் உபதேசங்களை, அவன் தன்னால் இயன்றளவு பொறுமையாக நினைவுகூற முயன்றான். இந்த அறிவினாலும், தன் புத்தியினாலும் தனது காம இச்சைகளை அவன் கட்டுப்படுத்த முயன்றான். ஆனால் அவனது இதயத்திலெழுந்த காம வேகத்தின் காரணத்தால் தன் மனதைக் கட்டுப்படுத்த அவனால் முடியவில்லை.

பதம் 6.1.63
தன்-நிமித்த-ஸ்மர-வ்யாஜ-க்ரஹ-க்ரஸ்தோ விசேதன:
தாம் ஏவ மனஸா த்யாயன் ஸ்வ-தர்மாத் விரராம ஹ

தத்-நிமித்த—அவளைப் பார்த்ததனால் உண்டான; ஸ்மர-வ்யாஜ—அவளையே சதா நினைத்துக் கொண்டிருந்ததைக் காரணமாகக் கொண்டு; க்ரஹ-கிரஸ்த:—கிரகணத்தால் பிடிக்கப்பட்டவன் போல்; விசேதன:—தன் உண்மை நிலையை முற்றிலும் மறந்து; தாம்—அவளை; ஏவ—நிச்சயமாக; மனஸா—மனதால்; த்யாயன்—தியானித்து; ஸ்வ-தர்மாத்—ஒரு பிராமணனால் நிறைவேற்றப்படும் கட்டுப்பாட்டு விதிகளிலிருந்து; விரராமஹ—அவன் முழுமையாக விலகினான்.

சூரியனும், சந்திரனும் எவ்வாறு கீழானதொரு கிரகத்தால் பிடிக்கப்படுகிறார்களோ, அப்படியே அந்த பிராமணன் தன் நற்புத்தியை முழுமையாக இழந்தான். இச்சூழ்நிலையைக் காரணமாகக் கொண்டு, அவன் எப்பொழுதும் அந்த தாசியையே நினைத்துக் கொண்டிருந்தான். இவ்வாறாக குறுகிய காலத்திலேயே அவளைத் தன் வீட்டு வேலைக்காரியாக்கிக் கொண்டு, ஒரு பிராமணனுக்குரிய எல்லாக் கட்டுப்பாட்டு விதிகளையும் கைவிட்டான்.

பதம் 6.1.64
தாம் ஏவ தோஷயாம் ஆஸ பித்ருயேணார்த்தேன யாவதா
க்ராம்யைர் மனோரமை: காமை: ப்ரஸீதேத யதா ததா

தாம்—அவளை (தாசியை); ஏவ—உண்மையில்; தோஷயாம் ஆஸ—அவன் திருப்திப்படுத்த முயன்றான்; பித்ருயேண—அவனது தந்தையின் கடின உழைப்பிலிருந்து அவன் பெற்ற; அர்த்தேன—பணத்தினால்; யாவதா—எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம்; க்ராம்யை:—பொருட்களினால்; மன:-ரமை:—அவளது மனதை மகிழ்விக்கக்கூடிய; காமை:—புலனினிப்பதிற்கான அன்பளிப்புகளால்; ப்ரஸீதே—அவள் திருப்தியடைவாளோ; யதா—அதனால்; ததா—அவ்வாறு.

இவ்வாறு, தன் தந்தையிடமிருந்து பெற்ற சொத்துக்களையெல்லாம், பல்வேறு பொருட்களினால் அந்த தாசியை திருப்திப்படுத்தி, தன்னிடம் மகிழ்ந்து அவள் தன்னுடனேயே இருக்க வேண்டுமென்று செலவழிக்கத் துவங்கினான். அந்த தாசியை திருப்திப்படுத்துவதற்காக அவன் தன் பிராமண செயல்களையெல்லாம் கைவிட்டான்.

பதம் 6.1.65
விப்ராம் ஸ்வ-பார்யாம் அப்ரௌடாம் குலே மஹதி லம்பிதாம்
வினஸர்ஜாசிராத் பாப: ஸ்வைரிண்யாபாங்க-வித்த-தீ:

விப்ராம்—பிராமண குலத்தில் பிறந்த; ஸ்வ-பார்யாம்—தன் சொந்த மனைவியை; அப்ரௌடாம்—அவ்வளவு முதுமையடையாத (இளமையான); குலே—ஒரு குடும்பத்திலிருந்து; மஹதி—மிகவும் மரியாதைக்குரிய; லம்பிதாம்—மணந்து கொள்ளப்பட்டு; வினஸர்ஜ—அவன் கைவிட்டான்; அசிராத்—மிக வரைவில்; பாப:—அந்த பாவி; ஸ்வைரிண்யா—அந்த விபச்சாரியின்; அபாங்க-வித்த-தீ:—காமப் பார்வையினால் மதியிழந்த.

அவனது புத்தி அந்த விபச்சாரியின் காமம் நிறைந்த பார்வையால் துளைக்கப்பட்ட காரணத்தால், அதற்குப் பலியான பிராமணனான அஜாமிளன், அவளது சகவாசத்தில் பாவச் செயல்களில் ஈடுபட்டான். அந்த பாவி, மிகவும் மரியாதைக்குரிய ஒரு பிராமண குடும்பத்திலிருந்து வந்த இளமையுள்ள தன் அழகிய மனைவியின் உறவைக் கூட கைவிட்டான்.

பதம் 6.1.66
யதஸ் ததஸ் சோபனின்யே ன்யாயதோ ‘ன்யாயதோ தனம்
பபாராஸ்யா: குடும்பின்யா: குடும்பம் மந்த-தீர் அயம்

யத: தத:—எங்கெல்லாம், எப்படியெல்லாம் முடியுமோ; ச—மற்றும்; உபனின்யே—அவன் சம்பாதித்தான்; ன்யாயத:—நியாயமாகவோ; அன்யாயத:—அநியாயமாகவோ; தனம்—பொருளை; பபார—அவன் காப்பாற்றினான்; அஸ்யா:—அவளுடைய; குடும்பன்யா:—பல பிள்ளைகளையும், பெண்களையும் உடைய; குடும்பம்—குடும்பத்தை; மந்த-தீ:—புத்தி மழுங்கிய; அயம்—அவன் (அஜாமிளன்).

ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், இந்த அறிவிலி, அந்த விபச்சாரியின் சேர்க்கையினால் புத்தியை இழந்து நியாயமாகவோ, அநியாயமாகவோ, எங்கெல்லாம், எப்படியெல்லாம் முடிகிறதோ அப்படியெல்லாம் பணம் சம்பாதித்து, பல பிள்ளைகளையும், பெண்களையும் உடைய அந்த விபச்சாரியின் குடும்பத்தைக் காப்பாற்றினான்.

பதம் 6.1.67
யத் அஸௌ சாஸ்த்ரம் உல்லங்ய ஸ்வைர-சாரி அதி-கர்ஹித:
அவர்தத சிரம் காலம் அகாயுர் அசுசிர் மலாத்

யத்—என்பதால்; அஸௌ—இந்த பிராமணன்; சாஸ்த்ரம் உல்லங்ய—சாஸ்திர விதிகளை மீறி; ஸ்வைர-சாரீ—பொறுப்பில்லாமல் நடந்து; அதிகர்ஹித:—மிகவும் தூற்றப்பட்டு; அவர்தத—கழித்தான்; சிரம் காலம்—நீண்ட காலத்தை; அக-ஆயு:—பாவங்கள் நிறைந்த அவனது வாழ்வு; அசுசி:—அழுகடைந்தவன்; மலாத்—அசுத்தங்களினால்.

இந்த பிராமணன் பொறுப்பில்லாமல் சாஸ்திர விதிகளை மீறுவதிலும், ஊதாரித்தனமாக வாழ்வதிலும், ஒரு தாசியால் சமைக்கப்பட்ட உணவை உண்டும் தனது நீண்ட ஆயுளைக் கழித்தான். எனவே இவன் பாவங்கள் நிறைந்தவனாவான். இவன் அழுக்கடைந்தவனாகவும், தடைவிதிக்கப்பட்ட செயல்களில் பற்றுக்கொண்டவனாகவும் உள்ளான்.

பதம் 6.1.68
தத் ஏனம் தண்ட-பாணே: ஸகாசம் க்ருத-கில்பிஷம்
நேஷ்யாமோ க்ருத-நிர்வேசம் யத்ர தண்டேன சுத்யதி

தத்—ஆகவே; ஏனம்—இவனை; தண்ட-பாணே:—தண்டனையளிக்கும் அதிகாரமுடைய யமராஜனின்; ஸகாசம்—முன்; க்ருத-கில்பிஷம்—மீண்டும் மீண்டும் பாவச் செயல்களைச் செய்துள்ளவனும்; நேஷ்யாம:—நாங்கள் அழைத்துச் செல்லப் போகிறோம்; அக்ருத-நிர்வேசம்—பிராயச்சித்தம் செய்யாதவனுமான; யத்ர—எங்கு; தண்டேன—தண்டனையால்; சுத்யதி—சுத்தியடைவான்.

பாவச் செயல்களைச் செய்தவனும், அதற்குப் பிராயச்சித்தம் செய்யாதவனுமான இந்த அஜாமிளனை நாங்கள் யமராஜனிடம் அழைத்துச் செல்லப் போகிறோம். அங்கு, இவனது பாவச் செயல்களுக்கேற்ப தண்டிக்கப்பட்டு இவன் சுத்தியடைவான்.


ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “அஜாமிளனின் வாழ்க்கை வரலாறு” எனும் தலைப்பை கொண்ட ஒன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare