அத்தியாயம் – 19
பும்ஸவனம் என்ற வேதச் சடங்கை
நிறைவேற்றுதல்
பதம் 6.19.1
ஸ்ரீ-ராஜோவாச
வ்ரதம் பும்ஸவனம் ப்ரஹ்மன் பவதா யத் உதீரிதம்
தஸ்ய வேதிதும் இச்சாமி யேன விஷ்ணு: ப்ரஸீததி

ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; வ்ரதம்—விரதத்தை; பும்ஸவனம்—பும்ஸவனம் என்ற; ப்ரஹ்மன்—பிராமணரே; பவதா—உங்களால்; யத்—எது; உதீரதம்—பற்றி பேசப்பட்டது; தஸ்ய—அதைப்பற்றி; வேதிதும்—அறிய; இச்சாமி—நான் விரும்புகிறேன்; யேன—எதனால்; விஷ்ணு:—பகவான் விஷ்ணு; ப்ரஸீததி—மகிழ்ச்சியடைகிறாரோ.

பரீட்சித்து மகாராஜன் கூறினார்: பிரபுவே பும்ஸவனம் என்ற எந்த விரதமானது உங்களால் உபதேசிக்கப்பட்டதோ, எதனால் பகவான் விஷ்ணு சந்தோஷமடைந்து அருள்புரிவாரோ, அதை இன்னும் விரிவாக நான் அறிய விரும்புகிறேன்.

பதங்கள் 6.19.2 – 6.19.3
ஸ்ரீ-சுக உவாச
சுக்லே மார்கசிரே பக்ஷே யோஷித் பர்துர் அனுக்ஞயா
ஆரபேத வ்ரதம் இதம் ஸார்வ-காமிகம் ஆதித:

நிசம்ய மருதாம் ஜன்ம ப்ராஹ்மணான் அனுமந்த்ரிய ச
ஸ்ணாத்வா சுக்ல-ததீ சுக்லே வஸுதாலங்க்ருதாம்பரே
பூஜயேத் ப்ராதசராசாத் ப்ராக் பகவந்தம் ஸ்ரியா ஸஹ

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; சுக்லே—வளர்பிறை; மார்கசிரே—மார்கழி மாதத்தில் (நவம்பர், டிசம்பர்); பக்ஷே—பட்சத்தில் (வளர்பிறைக் காலத்தில்); யோஷித்—ஒரு பெண்; பர்து:—கணவனின்; அனுக்ஞயா—அனுமதியுடன்; ஆரபேத—துவங்க வேண்டும்; வ்ரதம்—விரதத்தை; இதம்—இந்த; ஸார்வ-காமிகம்—எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றக்கூடிய; ஆதித:—முதல் நாளிலிருந்து; நிசம்ய—கேட்டு; மருதாம்—மருத்களின்; ஜன்ம—பிறப்பைப் பற்றி; ப்ராஹ்மணான்—பிராமணர்களிடமிருந்து; அனுமந்த்ரிய—உபதேசம் பெற்று; ச—மேலும்; ஸ்னாத்வா—குளித்து; சுக்ல-ததீ—பல்துலக்கி; சுக்லே—வெள்ளை; வஸீத—அணிந்து; அலங்க்ருதா—ஆபரணங்கள் அணிந்து; அம்பரே—ஆடைகளை; பூஜயேத்—பூஜீக்க வேண்டும்; ப்ராத:-ஆசாத் ப்ராக்—காலை உணவுக்கு முன்; பகவந்தம்—பரமபுருஷரை; ஸ்ரியா ஸஹ—லக்ஷ்மிதேவியுடன்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மார்கழி மாதத்தில் (நவம்பர், டிசம்பர்), சுக்ல பட்சத்து பிரதமையன்று, ஒரு பெண், தன் கணவனின் உபதேசத்தைப் பின்பற்றி, எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடிய பும்ஸவனம் என்ற இந்த பக்தித்தொண்டை, விரத அனுஷ்டானத்துடன் துவங்க வேண்டும். பகவான் விஷ்ணுவின் வழிபாட்டைத் துவங்கும் முன்பாக, மருத்களின் பிறப்பைப் பற்றிய கதையை அப்பெண் கேட்க வேண்டும். தகுதியுள்ள பிராமணர்களின் அறிவுரைப்படி, காலையில் பல்துலக்கி, குளித்த பிறகு, வெள்ளை ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து கொண்டு, காலை உணவுக்கு முன் அவள் பகவான் விஷ்ணுவையும் லக்ஷ்மி தேவியையும் வழிபட வேண்டும்.

பதம் 6.19.4
அலம் தே நிரபேக்ஷாய பூர்ண-காம நமோ ‘ஸ்து தே:
மஹாவிபூதி-பதயே நம: ஸகல-ஸித்தயே

அலம்—போதும்; தே—உங்களுக்கு; நிரபேக்ஷாய—பாரபட்சமற்ற; பூர்ண-காம—எப்பொழுதும் பூரண திருப்தியுடைய பகவானே; நம:—வணக்கங்கள்; அஸ்து—உரித்தாகட்டும்; தே—உங்களுக்கு; மஹா-விபூதி—லக்ஷ்மியின்; பதயே—கணவருக்கு; நம:—வணக்கங்கள்; ஸகல-ஸித்தயே—சகல சித்திகளுக்கும்.

(பிறகு அவள் பின்வருமாறு பகவானை வணங்க வேண்டும்) பகவானே, நீங்கள் சகல ஐசுவரியங்களும் நிரம்பியவர் ஆனால் ஐசுவரியத்தை நான் உங்களிடம் வேண்டவில்லை. நான் எனது பணிவான வணக்கங்களை மட்டுமே உங்களுக்குச் செலுத்த விரும்புகிறேன். நீங்கள் சகல ஐசுவரியங்களும் உடைய லக்ஷ்மி தேவியின் கணவரும், தலைவருமாவீர். ஆகவே சகல யோக சித்திகளுக்கும் அதிபதியாகிய உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.19.5
யதா த்வம் க்ருபயா பூத்யா தேஜஸா மஹிமௌஜஸா
ஜுஷ்ட ஈச குணை: ஸர்வைஸ் ததோ ‘ஸி பகவான் ப்ரபு:

யதா—எவ்வாறு; த்வம்—நீங்கள்; க்ருபயா—கருணையுடனும்; பூத்யா—செல்வங்களுடனும்; தேஜஸா—வீரத்துடனும்; மஹிமா-ஓஜஸா—மகிமையுடனும், பலத்துடனும்; ஜூஷ்ட:—கூடியவர்; ஈச—பகவானே; குணை:—உன்னத குணங்களுடனும்; ஸர்வை:—எல்லா; தத:—ஆகவே; அஸி—இருக்கிறீர்கள்; பகவான்—பரமபுருஷராக; ப்ரபு:—தலைவராக.

பகவானே, நீங்கள் காரணமற்ற கருணையுடனும், சகல ஐசுவரியங்களுடனும், வீரத்துடனும், மகிமைகளுடனும், பலத்துடனும், உன்னத குணங்களுடனும் கூடியவராய் இருப்பதால், நீங்கள் பரமபுருஷரும், அனைவருக்கும் தலைவருமாவீர்

பதம் 6.19.6
விஷ்ணு-பத்னி மஹா-மாயே மஹாபுருஷ-லக்ஷணே
ப்ரீயேதா மே மஹா-பாகே லோக-மாதர் நமோ ‘ஸ்து தே

விஷ்ணு-பத்னி—பகவான் விஷ்ணுவின் மனைவியே; மஹா-மாயே—பகவான் விஷ்ணுவின் சக்தியே; மஹா-புருஷ-லக்ஷணே—பகவான் விஷ்ணுவின் குணங்களையும், ஐசுவரியங்களையும் உடையவளே; ப்ரீயேதா:—அன்புடன் திருப்தியடைவீராக; மே—என்னிடம்; மஹா-பாகே—லக்ஷ்மி தேவியே; லோக-மாத:—லோக மாதாவே; நம:—வணக்கங்கள்; அஸ்து—உரித்தாகட்டும்; தே—உங்களுக்கு.

(பகவான் விஷ்ணுவிற்கு மிகுதியான வணக்கம் செலுத்தியபின் பக்தன், ஸ்ரீதேவியாகிய அன்னை லக்ஷ்மிக்கு வணக்கம் செலுத்தி பின்வருமாறு துதிக்க வேண்டும்.) பகவான் விஷ்ணுவின் மனைவியே, பகவான் விஷ்ணுவின் அந்தரங்க சக்தியே, நீங்கள் பகவான் விஷ்ணுவின் எல்லாக் குணங்களையும், ஐசுவரியங்களையும் பெற்றிருப்பதால், அவருக்குச் சமமானவளாவீர். லக்ஷ்மிதேவியே, தயவுகூர்ந்து என்னிடம் அன்பு கொள்ளுங்கள். லோக மாதாவே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.19.7
ஓம் நமோ பகவதே மஹா-புருஷாய மஹானுபாவாய மஹாவிபூதி-
பதயே ஸஹ மஹா-விபூதிபிர் பலிம் உபஹராமிதீ: அனேனாஹர்-அஹர் மந்த்ரேண விஷ்ணோர் ஆவாஹனார்க்ய-பாத்யோபஸ்பர்சன-ஸ்னான-வாஸ-உபவீத-விபூஷண-கந்த-புஷ்ப-தூப-தீபோபஹாராதி உபசாரான் ஸுஸமா-ஹிதோபாஹரேத்

ஓம்—பகவானே; நம:—வணக்கங்கள்; பகவதே—ஆறு ஐசுவரியங்களையும் பூரணமாகப் பெற்றுள்ள பரமபுருஷருக்கு; மஹா-புருஷாய—அனுபவிப்பாளர்களில் சிறந்தவரே; மஹா-அனுபாவாய—மிகவும் சக்திவாய்ந்தவரே; மஹா-விபூதி—லக்ஷ்மி தேவியின்; பதயே—கணவரே; ஸஹ—உடன்; மஹா-விபூதிபி:—சகாக்கள்; பலிம்—காணிக்கைகளை; உபஹராமி—நான் அர்ப்பணிக்கிறேன்; இதி—இவ்வாறு; அனேன—இதனால்; அஹ-அஹ:—தினமும்; மந்த்ரேண—மந்திரத்தை; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ஆவாஹன—எழுந்தருளச் செய்யும்; அர்க்ய-பாத்ய-உபஸ்பர்சன—வாயையும், கை, கால்களையும் கழுவுவதற்கான நீர்; ஸ்னான—குளிப்பதற்கான நீர்; வாஸ—ஆடைகள்; உபவீத—ஒரு பூணூல்; விபூஷண—ஆபரணங்கள்; கந்த—வாசனைத் திரவியங்கள்; புஷ்ப—மலர்கள்; தூப—தூபம்; தீப—தீபம்; உபஹார—காணிக்கைகள்; ஆதி—முதலான; உபசாரான்—உபசாரங்களை; ஸு-ஸமாஹிதா—மிகவும் கவனத்துடன்; உபாஹரேத்—அவள் அளிக்க வேண்டும்.

“பகவானே, ஆறு ஐசுவரியங்களைப் பூரணமாக உடைய பகவான் விஷ்ணுவே, தாங்கள் அனுபவிப்பாளர்களில் மிகச் சிறந்தவரும், எல்லோரையும் விட அதிக சக்திவாய்ந்தவருமாவீர். அன்னை லக்ஷ்மியின் கணவரே, விஸ்வக்ஷேனர் போன்ற பல சகாக்களால் சூழப்பட்டிருப்பவரே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். தங்களை வழிபடுவதற்குரிய எல்லாப் பொருட்களுடனும் ஆராதனையை சமர்ப்பிக்கிறேன்” என்ற இந்த மந்திரத்துடன், பகவான் விஷ்ணுவை மிகுந்த கவனத்துடன் நாள்தோறும் ஆவாஹனம், நீர் உபசாரம் (அர்க்கியம்), பாத்தியம், ஆசமனம், ஸ்நானம் ஆகிய உபசாரங்களால் வழிபட வேண்டும். அவரது வழிபாட்டில் ஆடைகள், பூணூல், ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள் மலர்கள், தூபம், தீபங்கள் ஆகிய பல்வேறு காணிக்கைகளை அவருக்குச் செலுத்த வேண்டும்.

பதம் 6.19.8
ஹவி:-சேஷம் ச ஜூஹுயாத் அனலே த்வாதசாஹுதீ:
ஓம் நமோ பகவதே மஹா-புருஷாய மஹாவிபூதி-பதயே ஸ்வாஹேதி

ஹவி:—சேஷம் ச—படையலில் எஞ்சியுள்ளதையும்; ஜுஹுயாத்—ஒருவன் படைத்துவிட வேண்டும்; அனலே—அக்னியில்; த்வாதச—பன்னிரண்டு; ஆஹுதீ:—நைவேத்தியங்கள்; ஓம்—பகவானே; நம:—வணக்கங்கள்; பகவதே—பரமபுருஷருக்கு; மஹா-புருஷாய—பரம அனுபவிப்பாளராகிய; மஹா-விபூதி—லக்ஷ்மி தேவியின்; பதயே—கணவருக்கு; ஸ்வாஹா—வணக்கம்; இதி—இவ்வாறு.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: மேலே குறிப்பிட்ட எல்லாப் பொருட்களுடனும் பகவானை வழிபட்ட பிறகு, ஒருவர் ஓம் நமோ பகவதே மஹா-புருஷாய மஹாவிபூதி-பதயே ஸ்வாஹா என்று ஜபித்துக் கொண்டு, புனித வேள்வித் தீயில் நெய்யைப் பன்னிரண்டு தடவைகள் நிவேதனம் செய்ய வேண்டும்.

பதம் 6.19.9
ஸ்ரியம் விஷ்ணும் ச வரதாவ் ஆசிஷாம் ப்ரபவாவ் உபௌ
பக்த்யா ஸம்பூஜயேன் நித்யம் யதீச்சேத் ஸர்வ-ஸம்பத:

ஸ்ரியம்—லக்ஷ்மிதேவியும்; விஷ்ணும் ச—பகவான் விஷ்ணுவும்; வர-தெள—வரங்கள் அளிப்பவர்கள்; ஆசிஷாம்—ஆசிகளின்; ப்ரபவெள—பிறப்பிடங்களான; உபௌ—இருவரையும்; பக்த்யா—பக்தியுடன்; ஸம்பூஜயேத்—வழிபடவேண்டும்; நித்யம்—நாள்தோறும்; யதி—ஒருவேளை; இச்சேத்—விரும்பினால்; ஸர்வ—சகல; ஸம்பத:—செல்வங்களையும்.

சகல செல்வங்களையும் ஒருவன் விரும்பினால், அவன் பகவான் விஷ்ணுவை, அவரது மனைவியான லக்ஷ்மியுடன் நாள்தோறும் வழிபடுவதை கடமையாகக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள முறைப்படி அவரைச் சிறந்த பக்தியுடன் ஒருவன் வழிபட வேண்டும். பகவான் விஷ்ணுவும், லக்ஷ்மிதேவியும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சேர்க்கையாவர். அவர்கள் எல்லா வரங்களையும் அளிப்பவர்களாகவும். நல்லதிர்ஷ்டத்தின் பிறப்பிடமாகவும் இருக்கிறார்கள். ஆகவே லக்ஷ்மி நாராயணரை வழிபடுவதே ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

பதம் 6.19.10
ப்ரணமேத் தண்டவத் பூமெள பக்தி-ப்ரஹ்வேண சேதஸா
தச-வாரம் ஜபேன் மந்த்ரம் தத: ஸ்தோத்ரம் உதீரயேத்

ப்ரணமேத்—வணங்க வேண்டும்; தண்ட-வத்—ஒரு தண்டம் போல்; பூமெள—பூமியில்; பக்தி—பக்தி; ப்ரஹ்வேண—பிரவாகமுள்ள; சேதஸா—ஒரு மனதுடன்; தச-வாரம்—பத்து தடவை; ஜபேத்—ஜபிக்க வேண்டும்; மந்த்ரம்—மந்திரத்தை; தத:—பிறகு; ஸ்தோத்ரம்—ஸ்தோத்திரத்தை; உதீரயேத்—சொல்ல வேண்டும்.

பக்தி நிறைந்த மனதுடன் பூமியில் தண்டத்தைப் போல் உடலைக் கிடத்தி பகவானை வணங்கும்பொழுது, மேற்கண்ட மந்திரத்தை ஒருவன் பத்து தடவை ஜபம் செய்து, பின்வரும் ஸ்தோத்திரத்தையும் சொல்ல வேண்டும்.

பதம் 6.19.11
யுவாம் து விஸ்வஸ்ய விபூ ஜகத: காரணம் பரம்
இயம் ஹி ப்ரக்ருதி: ஸூக்ஷ்மா மாயா-சக்திர் துரத்யயா

யுவாம்—நீங்களிருவரும்; து—நிச்சயமாக; விஸ்வஸ்ய—பிரபஞ்சத்தின்; விபூ—உரியாளர்கள்; ஜகத:—பிரபஞ்சத்தின்; காரணம்—காரணமாவீர்கள்; பரம—மூல; இயம்—இது; ஹி—நிச்சயமாக; ப்ரக்ருதி:—சக்தி; ஸூக்ஷ்மா—புரிந்து கொள்ளக் கடினமான; மாயா சக்தி:—அந்தரங்க சக்தி; துரத்யயா—கடக்க முடியாத.

பகவான் விஷ்ணுவே, ஸ்ரீ தேவியான அன்னை லக்ஷ்மியே, நீங்களிருவரும் முழு சிருஷ்டிக்கும் உரிமையாளர்களாவீர்கள். உண்மையில், சிருஷ்டிக்கு மூல காரணமும் நீங்களே. அன்னை லக்ஷ்மி மிகவும் சக்திவாய்ந்தவன் என்பதால் அவளது சக்தியை யாராலும் கடக்க முடியாது. எனவே அவளைப் புரிந்து கொள்வது மிகமிகக் கடினமாகும். அன்னை லக்ஷ்மி இந்த ஜட உலகில் பகிரங்க சக்தி என்று அழைக்கப்படுகிறாள். ஆனால் உண்மையில் அவள் எப்பொழுதும் பகவானின் அந்தரங்க சக்தியாவாள்.

பதம் 6.19.12
தஸ்யா அதீஸ்வர: ஸாக்ஷாத் த்வம் ஏவ புருஷ: பர:
த்வம் ஸர்வ-யக்ஞ இஜ்யேயம் க்ரியேயம் ஃபல-புக் பவான்

தஸ்யா:—அவளுடைய; அதிஸ்வர:—தலைவர்; ஸாக்ஷாத்—நேரிடையாக; த்வம்—நீங்கள்; ஏவ—நிச்சயமாக; புருஷ:—புருஷர்; பர:—பரம; த்வம்—நீங்கள்; ஸர்வ-யக்ஞ:—யக்ஞ சொரூபமானவர்; இஜ்யா—வழிபாடு; இயம்—இவள் (லக்ஷ்மி); க்ரியா—செயல்வடிவினள்; இயம்—இவள்; ஃபல-புக்—பலன்களை அனுபவிப்பவர்; பவான்—நீங்கள்.

பகவானே, நீங்கள் இந்த சக்தியின் தலைவர் என்பதால் பரமபுருஷராவீர், நீங்கள் யக்ஞ சொரூபமாக விளங்குகிறீர். ஆன்மீக செயல்களின் உருவாக விளங்கும் லக்ஷ்மிதேவி, உங்களுக்கு செலுத்தப்படும் வழிபாட்டின் மூல வடிவமாவாள். ஆனால் தாங்களோ யக்ஞங்களை எல்லாம் அனுபவிப்பவராவீர்.

பதம் 6.19.13
குண-வ்யக்திர் இயம் தேவீ வ்யஞ்ஜகோ குண-புக் பவான்
த்வம் ஹி ஸர்வ-சரீரி ஆத்மா ஸ்ரீ: சரீநேந்ரியாசயா:
நாம-ரூபே பகவதீ ப்ரத்யயஸ் த்வம் அபாஸ்ரய:

குண-வ்யக்தி:—குணங்களின் இருப்பிடம்; இயம்—இந்த; தேவீ—தேவியானவள்; வ்யஞ்ஜக:—தோற்றுவிப்பவர்; குண-புக்—குணங்களை அனுபவிப்பவர்; பவான்—தாங்கள்; த்வம்—தாங்கள்; ஹி—உண்மையில்; ஸர்வ-சரீரீ ஆத்மா—அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மா; ஸ்ரீ:—லக்ஷ்மிதேவி; சரீர—உடல்; இந்திரிய—புலன்கள்; ஆசயா:—மற்றும் மனதின்; நாம—நாமம்; ரூபே—மற்றும் ரூபம்; பகவதீ—லக்ஷ்மிதேவி; ப்ரத்யய:—தோற்றத்திற்குக் காரணமாவாள்; த்வம்—தாங்கள்; அபாஸ்ரய:—ஆதாரமாவீர்.

அன்னை லக்ஷ்மியாகிய இவள் எல்லா ஆன்மீக குணங்களுக்கும் இருப்பிடமாவாள். ஆனால் நீங்களோ இக்குணங்களையெல்லாம் தோற்றுவித்து அனுபவிப்பவராவீர். உண்மையில் அனைத்தையும் அனுபவிப்பவர் தாங்களே. நீங்கள் எல்லா ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாக இருக்கிறீர்கள். லக்ஷ்மிதேவியோ அவற்றின் உடல்கள் புலன்கள் மற்றும் மனங்களின் வடிவமாக இருக்கிறாள். அவளுக்கும் ஒரு புனித நாமமும், ரூபமும் உண்டு. ஆனால் நீங்களோ இத்தகைய நாம ரூபங்களுக்கெல்லாம் ஆதாரமாகவும், இவற்றின் தோற்றங்களுக்குக் காரணமாகவும் இருக்கிறீர்கள்.

பதம் 6.19.14
யதா யுவாம் த்ரி-லோகஸ்ய வரதௌ பரமேஷ்டினௌ
ததா ம உத்தமஸ்லோக ஸந்து ஸத்யா மஹாசிஷ:

யதா—எவ்வாறு; யுவாம்—நீங்களிருவரும்; த்ரி-லோகஸ்ய—மூவுலங்களுக்கும்; வர-தௌ—வரமளிப்பவர்கள்; பரமே-ஷ்டினௌ—பரம ஆளுனர்கள்; ததா—ஆகவே; மே—எனது; உத்தம-ஸ்லோக—உத்தம சுலோகங்களால் போற்றப்படும் பகவானே; ஸந்து—ஆகட்டும்; ஸத்யா:—நிறைவேற்றப்படுவதாக; மஹா-ஆசிஷ:—உயர்ந்த விருப்பங்கள்.

நீங்களிருவரும் மூவுலங்களுக்கும் பரம ஆளுனர்களும், வரமளிப்பவர்களுமாவீர். ஆகவே, உத்தம சுலோகங்களால் போற்றப்படும் பகவானே, எனது உயர்ந்த விருப்பங்கள் உங்களுடைய கருணையால் நிறைவேற்றப்படட்டும்.

பதம் 6.19.15
இதி அபிஷ்டூய வரதம் ஸ்ரீனிவாஸம் ஸ்ரியா ஸஹ
தன் நிஹ்ஸார்யோபஹரணம் தத்வாசமனம் அர்ச்சயேத்

இதி—இவ்வாறு; அபிஷ்டூய—ஸ்தோத்திரம் செய்து; வர-தம்—வரமளிப்பவரான; ஸ்ரீ-நிவாஸம்—ஸ்ரீதேவியின் வசிப்பிடமான பகவான் விஷ்ணுவிற்கு; ஸ்ரியா ஸஹ—லக்ஷ்மியுடன்; தத்—பிறகு; நிஹ்ஸார்ய—அப்புறப்படுத்திவிட்டு; உபஹரணம்—வழிபாட்டுப் பொருட்களை; தத்வா—அளித்தபிறகு; ஆசமனம்—ஆசமனம் (வாயையும், கைகளையும், கழுவுவதற்கான நீர்); அர்ச்சயேத்—வழிபட வேண்டும்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக, ஸ்ரீநிவாஸர் எனப்படும் பகவான் விஷ்ணுவை, ஸ்ரீதேவியான அன்னை லக்ஷ்மியுடன், மேலே சொல்லப்பட்டுள்ள முறைக்கேற்ப ஒருவன் வழிபட வேண்டும். பிறகு வழிபாட்டுப் பொருட்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு, அவர்களுக்கு ஆசமனம் அளித்து, மீண்டும் அவர்களை வழிபட வேண்டும்.

பதம் 6.19.16
தத: ஸ்துவீத ஸ்தோத்ரேண பக்தி-ப்ரஹ்வேண சேதஸா
யக்ஞோச்சிஷ்டம் அவக்ராய புனர் அப்யர்ச்சயேத் தரிம்

தத:—பிறகு; ஸ்துவீத—துதிக்க வேண்டும்; ஸ்தோத்ரேண—ஸ்தோத்திரங்களால்; பக்தி—பக்தியுடனும்; ப்ரஹ்வேண—பணிவான; சேதஸா—மனதுடனும்; யக்ஞ-உச்சிஷ்டம்—யாகப் பிரசாதத்தை; அவக்ராய—முகர்ந்து பார்த்து; புன:—மறுபடியும்; அப்யர்ச்சயேத்—வழிபடவேண்டும்; ஹரிம்—பகவான் விஷ்ணுவை.

அதன் பிறகு, பக்தியுடனும், பணிவான மனோ பாவத்துடனும் பகவானையும் அன்னை லக்ஷ்மியையும் ஸ்தோத்திரம் செய்யவேண்டும். பிறகு படைக்கப்பட்ட பிரசாதத்தை முகர்ந்து பார்த்துவிட்டு, மறுபடியும் பகவானையும், லக்ஷ்மிதேவியையும் வழிபடவேண்டும்.

பதம் 6.19.17
பதிம் ச பரயா பக்த்யா மஹாபுருஷ-சேதஸா
ப்ரியைஸ் தைஸ் தைர் உபனமேத் ப்ரேம-சீல: ஸ்வயம் பதி:
பிப்ருயாத் ஸர்வ-கர்மாணி பத்ன்யா உச்சாவசானி ச

பதிம்—கணவனை; ச—மேலும்; பரயா—பரம; பக்த்யா—பக்தியுடன்; மஹா-புருஷ-சேதஸா—பரமபுருஷராக ஏற்று; ப்ரியை:—அன்பான; தை: தை:—அவற்றினால் (பிரசாதத்தினால்); உபனமேத்—வழிபடவேண்டும்; ப்ரேம-சீல:—அன்புடைய; ஸ்வயம்—தானே; பதி:—கணவனும்; பிப்ரியாத்—நிறைவேற்ற வேண்டும்; ஸர்வ-கர்மானி—எல்லாச் செயல்களையும்; பத்ன்யா:—மனைவியின்; உச்ச-அவசானி—உயர்ந்ததும், தாழ்ந்ததும்; ச—கூட.

ஒரு மனைவி தன் கணவரைப் பரமபுருஷரின் பிரதிநிதியாக ஏற்று, அவருக்குப் பிரசாதமளித்து, தூய பக்தியுடன் அவரைப் பூஜிக்க வேண்டும். கணவனும் மனைவியுடம் மிகவும் மகிழ்ந்து தனது குடும்ப விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பதம் 6.19.18
க்ருதம் ஏகதரேணாபி தம்-பத்யோர் உபயோர் அபி
பத்ன்யாம் குர்யாத் அனர்ஹாயாம் பதிர் ஏதத் ஸமாஹித:

க்ருதம்—செய்யப்பட்டது; ஏகதரேண—ஒருவரால்; அபி—கூட; தம்-பத்யோ—தம்பதிகளின்; உபயோ:—இருவருடைய; அபி—இருந்தும்; பத்ன்யாம்—மனைவி; குர்யாத்—அவர் செய்ய வேண்டும்; அனர்ஹாயாம்—முடியாதபொழுது; பதி:—கணவன்; ஏதத்—இதை; ஸமாஹித:—கவனத்துடன்.

கணவன் மனைவிக்கிடையில், ஒருவர் இந்த பக்தித் தொண்டைச் செய்தாலே போதும். அவர்களுடைய நல்லுறவின் காரணத்தால் இருவருமே அதன் பலனை அனுபவிப்பார்கள். ஆகவே மனைவியால் இதைச் செய்ய முடியாதபோது, கணவன் இதை கவனத்துடன் செய்ய வேண்டும். இதனால் விசுவாசமுள்ள மனைவியும் பலனைப் பகிர்ந்து கொள்வான்.

பதங்கள் 6.19.19 – 6.19.20
விஷ்ணேர் வ்ரதம் இதம் பிப்ரன் ந விஹன்யாத் கதாஞ்சன
விப்ரான் ஸ்த்ரியோ வீரவதி: ஸ்ரக்-கந்த-பலி-மண்டனை:
அர்ச்சேத் அஹர்-அஹர் பக்த்யா தேவம் நியமம் ஆஸ்திதா

உத்வாஸ்ய தேவம் ஸ்வே தாம்னி தன்-நிவேதிதம் அக்ரத:
அத்யாத் ஆத்ம-விசுத்தி-அர்த்தம் ஸர்வ-காம-ஸம்ருத்தயே

விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; வ்ரதம்—விரதத்தை; இதம்—இந்த; பிப்ரத்—நிறைவேற்றி; ந—கூடாது; விஹன்யாத்—முறிக்கப்பட வேண்டும்; கதஞ்சன—எந்த காரணத்திற்காகவும்; விப்ரான்—பிராமணர்களையும்; ஸ்த்ரிய:—பெண்களையும்; வீர-வதீ:—கணவனையும், மகன்களையும் பெற்றுள்ளன; ஸ்ரக்—மாலைகளாலும்; கந்த—சந்தனத்தாலும்; பலி—உணவளித்தும்; மண்டனை:—ஆபரணங்களாலும்; அர்ச்சேத்—பூஜிக்க வேண்டும்; அஹ:-அஹ:—நாள்தோறும்; பக்த்யா—பக்தியுடன்; தேவம்—பகவான் விஷ்ணுவை; நியமம்—நியமங்களை; ஆஸ்திதா—பின்பற்றி; உத்வாஸ்ய—வைத்து; தேவம்—பகவானை; ஸ்வே—அவரது சொந்த; தாம்னி—படுக்கையில்; தத்—அவருக்கு; நிவேதிதம்—நிவேதனம் செய்ததை; அக்ரத:—முதலில் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்த பிறகு; அத்யாத்—ஒருவர் சாப்பிட வேண்டும்; ஆத்ம-விசுத்தி-அர்த்தம்—தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக; ஸர்வ-காம—எல்லா விருப்பங்களையும்; ஸம்ருத்தயே—நிறைவேற்றுவதற்கு.

பக்தித்தொண்டு விரதமான இந்த விஷ்ணு-விரதத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, பிற காரியங்களைச் செய்வதற்காக அதைப் புறக்கணிக்கக் கூடாது. ஒருவன் மிஞ்சிய பிரசாதம், மலர் மாலைகள், சந்தனம், ஆபரணங்கள் ஆகியவற்றைக் கொடுத்து தினமும் பிராமணர்களையும், அமைதியாக கணவனுடனும், குழந்தைகளுடனும் வாழும் பெண்களையும் பூஜிக்க வேண்டும். நாள்தோறும் மனைவியானவள், மிகுந்த பக்தியுடன் பகவான் விஷ்ணுவை வழிபடுவதற்குரிய நியமங்களைத் தொடர்ந்து பின்பற்றி வரவேண்டும். அதன்பிறகு, பகவான் விஷ்ணுவை அவரது படுக்கையில் படுக்க வைத்த பின்னரே, ஒருவர் பிரசாதத்தைச் சாப்பிட வேண்டும். இவ்விதமாக கணவனும், மனைவியும் தூய்மையடைந்து, தங்களுடைய விருப்பங்களெல்லாம் நிறைவேற்றப் பெறுவார்கள்.

பதம் 6.19.21
ஏதேன பூஜா-விதினா மாஸான் த்வாதச ஹாயனம்
நீத்வாதோபரமேத் ஸாத்வீ கார்த்திகே சரமே ‘ஹனி

ஏதேன—இந்த; பூஜா-விதினா—பூஜா நியமத்துடன்; மாஸான் த்வாதச—பன்னிரண்டு மாதங்கள்; ஹாயனம்—ஒரு வருடம்; நீத்வா—கழிந்த பிறகு; அத—பிறகு; உபரமேத்—உபவாசம் இருக்க வேண்டும்; ஸாத்வீ—பதிவிரதையான மனைவி; கார்த்திகே—கார்த்திகை மாதத்தில்; சரமே அஹனி—கடைசி நாளான்று.

பதிவிரதையான அந்த மனைவி இத்தகைய பக்தித் தொண்டை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ந்து செய்துவர வேண்டும். ஒரு வருடம் கழிந்ததும், கார்த்திகை மாதத்தில் (நவம்பர், டிசம்பர்), பௌர்ணமியன்று அவள் உபவாசம் இருக்க வேண்டும்.

பதம் 6.19.22
ஸ்வோ-பூதே ‘ப உபஸ்ப்ருஸ்ய க்ருஷ்ணம் அப்யர்ச்ய பூர்வவத்
பய-ஸ்ருதேன ஜுஹுயாச் சருணா ஸஹ ஸர்பிஷா
பாக-யக்ஞ-விதானேன த்வாதசைவாஹுதீ: பதி:

ஸ்வ:-பூதே—மறுநாள் காலையில்; அப:—நீரை; உபஸ்ப்ருஸ்ய—தொட்டு; க்ருஷ்ணம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை; அப்யர்ச்ய—வழிபட்டு; பூர்வ-வத்—முன்போலவே; பய:-ஸ்ருதேன—காய்ச்சிய பாலுடன்; ஜுஹுயாத்—படைக்க வேண்டும்; சருணா—சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியத்துடன்; ஸஹ—உடன்; ஸர்பிஷா—நெய்; பாக-யக்ஞ-விதானேன-கிருஹ்ய—சூத்திரங்களின் முறைப்படி; த்வாதச—பன்னிரண்டு; ஏவ—உண்மையில்; ஆஹுதீ:—நைவேத்தியங்களை; பதி:—கணவன்.

மறுநாள் காலையில், குளித்து முன்போலவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவன் வழிபட்டபின், கிருஹ்ய-சூத்திரங்களில் கூறப்பட்டபடி பண்டிகைக் காலத்தில் சமைப்பது போல் சமைக்க வேண்டும். நெய்யைக் கொண்டு சர்க்கரைப் பொங்கலைப் பன்னிரண்டு தடவைகள் அக்னியில் நிவேதனம் (ஆஹுதீ) செய்ய வேண்டும்.

பதம் 6.19.23
ஆசிஷ: சிரஸாதாய த்விஜ: ப்ரீதை: ஸமீரிதா:
ப்ரணம்ய சிரஸா பக்த்யா புஞ்ஜீத் தத்-அனுக்ஞயா

ஆசிஷ—ஆசிகளை; சிரஸா—தலையால்; ஆதாய—ஏற்று; த்விஜை:—பிராமணர்களால்; ப்ரீதை:—திருப்தியடைந்த; ஸமீரிதா:—கூறப்பட்ட; ப்ரணம்ய—வணங்கியபின்; சிரஸா—தலையால்; பக்த்யா—பக்தியுடன்; புஞ்ஜீத—சாப்பிட வேண்டும்; தத்-அனுக்ஞயா—அவர்களுடைய அனுமதியுடன்.

அதன்பிறகு, பிராமணர்களை அவர் திருப்திப்படுத்த வேண்டும். திருப்தியடைந்த பிராமணர்கள் ஆசிகளை வழங்கும்பொழுது, அவன் பக்தியுடனும், மரியாதையுடனும் தலையால் அவர்களை வணங்க வேண்டும். பிறகு அவர்களுடைய அனுமதியுடன் பிரசாதத்தை உட்கொள்ள வேண்டும்.

பதம் 6.19.24
ஆசார்யம் அக்ரத: க்ருத்வா வாக் யத: ஸஹ பந்துபி:
தத்யாத் பத்ன்யை சரோ: சேஷம் ஸுப்ரஜாஸ்த்வம் ஸுஸௌபகம்

ஆசார்யம்—ஆசாரியரை; அக்ரத:—முதலில்; க்ருத்வா—முறையாக வரவேற்று; வாக்-யத:—வாக்கை அடக்கி (மௌனமாக); ஸஹ—உடன்; பந்துபி:—நண்பர்கள் மற்றும் உறவினர்கள்; தத்யாத்—அவர் கொடுக்க வேண்டும்; பத்ன்யை:—மனைவிக்கு; சரோ:—சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியத்தின்; சேஷம்—மிச்சத்தை; ஸு-ப்ரஜாஸ்த்வம்—நல்ல சந்ததியை உறுதி செய்வதும்; ஸு-ஸௌபகம்—நல்ல சௌபாக்கியத்தை அளிப்பதுமான.

உணவைச் சாப்பிடும் முன்பாக, கணவன் முதலில் ஆசாரியரை சுகமாக அமரச் செய்து, தன் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மௌனமாக அந்த குருவிற்குப் பிரசாதத்தை அளிக்க வேண்டும். பிறகு மனைவியானவள், நெய்யுடன் சமைக்கப்பட்டு படைக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலின் மீதத்தைச் சாப்பிட வேண்டும். மீதத்தை உண்பதானது, ஒரு கற்ற, பக்தியுடைய மகனையும், சகல சௌபாக்கியங்களையும் அவள் பெறுவாள் என்பதை உறுதி செய்கிறது.

பதம் 6.19.25
ஏதச் சரித்வா விதிவத் வ்ரதம் விபோர்
அபீப்ஸிதார்த்தம் லபதே புமான் இஹ
ஸ்த்ரீ சைதத் ஆஸ்தாய லபேத ஸௌபகம்
ஸ்ரியம் ப்ரஜாம் ஜூவ-பதிம் யசோ க்ருஹம்

ஏதத்—இந்த; சரித்வா—அனுஷ்டித்த; விதி-வத்—சாஸ்திர முறைப்படி; வ்ரதம்—விரதத்தை; விபோ:—பகவானிடமிருந்து; அபீப்ஸித—விரும்பிய; அர்த்தம்—பொருளை; லபதே—அடைவான்; புமான்—ஒருவன்; இஹ—இப்பிறவியில்; ஸ்த்ரீ—ஒரு பெண்; ச—மேலும்; ஏதத்—இதை: ஆஸ்தாய—அனுஷ்டித்த; லபேத—அடைய முடியும்; ஸௌபகம்—சௌபாக்கியம்; ஸ்ரியம்—செல்வம்; ப்ரஜாம்—நன்மைகள்; ஜீவ-பதிம்—நீண்ட ஆயுளுடைய கணவன்; யச:—புகழ்; க்ருஹம்—வீடு.

இந்த விரதம் சாஸ்திர முறைப்படி அனுஷ்டிக்கப்படுமானால், இப்பிறவியிலேயே தான் விரும்பிய வரங்களையெல்லாம் பகவானிடமிருந்து ஒருவனால் பெற முடியும். இதை அனுஷ்டித்த மனைவியானவள் நிச்சயமாக சௌபாக்கியத்தையும், செல்வத்தையும், மகன்களையும், நீண்ட ஆயுளுடைய கணவனையும், புகழையும், இன்பம் நிறைந்த வீட்டையும் பெறுவாள்.

பதங்கள் 6.19.26 – 6.19.28
கன்யா ச விந்தேத ஸமக்ர-லக்ஷணம்
பதிம் து அவீரா ஹத-கில்பிஷம் கதிம்
ம்ருத-ப்ராஜா ஜீவ-ஸுதா தனேஸ்வரீ
ஸுதுர்பகா ஸுபாகா ரூபம் அக்ரியம்

விந்தேத் விரூப விருஜா விமுச்யதே
ய ஆமயாவீந்ரிய-கல்ய-தேஹம்
ஏதத் படன் அப்யுதயே ச கர்மணி
அனந்த-த்ருப்தி: பித்ரு-தேவதானாம்

துஷ்டா: ப்ரயச்சந்தி ஸமஸ்த-காமான்
ஹோமாவஸானே ஹுத-புக் ஸ்ரீ-ஹரிஸ் ச
ராஜன் மஹன் மருதாம் ஜன்ம புண்யம்
திதேர் வ்ரதம் சாபிஹிதம் மஹத் தே

கன்யா—ஒரு மணமாகாத பெண்; ச—மேலும்; விந்தேத—அடைய முடியும்; ஸமக்ர-லக்ஷணம்—எல்லா நற்குணங்களும் உள்ள; பதிம்—ஒரு கணவனை; து—மேலும்; அவீரா—கணவனோ அல்லது மகனோ இல்லாத பெண்; ஹத-கில்பிஷம்—குற்றமற்ற; கதிம்—நற்கதியை; ம்ருத-ப்ரஜா—குழந்தைகளைப் பறிகொடுத்தவள்; ஜீவ-ஸுதா—நீண்ட ஆயுளுடைய குழந்தையைப் பெறுவாள்; தன-ஈஸ்வரீ—செல்வத்தை அடைந்து; ஸு-துர்பகா—நல்ல பாக்கியமில்லாதவள்; ஸு-பகா—பாக்கியமுள்ளவள்; ரூபம்—அழகு; அக்ரியம்—மிகச் சிறந்த; விந்தேத்—அடையமுடியும்; விரூப—அவலட்சணமான பெண்; விருஜா—நோயிலிருந்து; விமுச்யதே—விடுபடுகிறாள்; ய:—எவன்; ஆமயா—ஒரு நோயாளி; இந்ரிய-கல்ய-தேஹம்—திடகாத்திரமுள்ள உடலை; ஏதத்—இதை; படன்—படித்து; அப்யுதயே ச-கர்மணி—முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும் படையல்கள் படைக்கப்படும் ஒரு யாகச் சடங்கில்; அனந்த—அளவில்லாத; த்ருப்தி:—திருப்தி; பித்ரு-தேவதானாம்—முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும்; துஷ்டா:—சந்தோஷமடைந்து; ப்ரயச்சந்தி—அவர்கள் அளிப்பார்கள்; ஸமஸ்த—எல்லா; காமான்—விருப்பங்களையும்; ஹோம-அவஸானே—ஹோமத்தின் முடிவில்; ஹுத-புக்—யக்ஞத்தை அனுபவிப்பவரான; ஸ்ரீ-ஹரி:—பகவான் ஸ்ரீவிஷ்ணு; ச—கூட; ராஜன்—அரசே; மஹத்—சிறப்புடைய; மருதாம்—மருத்களின்; ஜன்ம—பிறப்பு; புண்யம்—புண்ணியமுள்ள; திதே:—திதியின்; வ்ரதம் ச—விரதமும்; அபிஹிதம்—விவரிக்கப்பட்டது; மஹத்—சிறந்த; தே—உமக்கு.

திருமணமாகாத ஒரு பெண் விரதத்தை அனுஷ்டித்தால், மிகச் சிறந்த நல்ல கணவனை அடைவாள். கணவனோ, மகனோ, இல்லாதவள் (அவீரா) ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்படுவாள். பிறந்த குழந்தைகளைப் பறிகொடுத்தவள் நீண்ட ஆயுளுடைய ஒரு குழந்தையையும், செல்வத்தை அடையும் பாக்கியத்தையும் பெறுவாள். துரதிர்ஷ்டசாலியான ஒரு பெண் பாக்கியசாலியாவாள். அவலட்சணமான பெண் அழகுமிக்கவளாவாள். இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் ஒரு நோயாளி நோயிலிருந்து விடுபட்டு, திடகாத்திரமான ஒருடலைப் பெறுவாள். முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும் படையல்கள் அர்ப்பணிக்கும் பொழுது, குறிப்பாக சிரார்த்தம் (ஸ்ரத்தா) செய்யும் பொழுது இந்த வர்ணணையை ஒருவன் படிப்பானாயின், தேவர்களும், பித்ருலோக வாசிகளும் மிகவும் திருப்தியடைந்து அவனுடைய விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவார்கள். இந்த ஹோமத்தின் முடிவில் பகவான் விஷ்ணுவும், ஸ்ரீதேவியாகிய அன்னை லக்ஷ்மியும் அவனிடம் மிகவும் சந்தோஷமடைவார்கள். பரீட்சித்து மகாராஜனே, திதியின் இந்த விரத அனுஷ்டானத்தையும், எவ்வாறு அவள் நல்ல புத்திரர்களான மருத்0களையும், மகிழ்ச்சியான வாழ்வையும் பெற்றாள் என்பதையும் இப்பொழுது நான் முழுமையாக விவரித்தேன். இதை என்னால் இயன்றளவு விவரமாக விவரிக்க நான் முயற்சி செய்துள்ளேன்.


ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “பும்ஸவனம் என்ற வேதச் சடங்கை நிறைவேற்றுதல்” எனும் தலைப்பை கொண்ட பத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare