அத்தியாயம் – 19
பும்ஸவனம் என்ற வேதச் சடங்கை
நிறைவேற்றுதல்
பதம் 6.19.1 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: பிரபுவே பும்ஸவனம் என்ற எந்த விரதமானது உங்களால் உபதேசிக்கப்பட்டதோ, எதனால் பகவான் விஷ்ணு சந்தோஷமடைந்து அருள்புரிவாரோ, அதை இன்னும் விரிவாக நான் அறிய விரும்புகிறேன்.

பதங்கள் 6.19.2 – 6.19.3 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மார்கழி மாதத்தில் (நவம்பர், டிசம்பர்), சுக்ல பட்சத்து பிரதமையன்று, ஒரு பெண், தன் கணவனின் உபதேசத்தைப் பின்பற்றி, எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடிய பும்ஸவனம் என்ற இந்த பக்தித்தொண்டை, விரத அனுஷ்டானத்துடன் துவங்க வேண்டும். பகவான் விஷ்ணுவின் வழிபாட்டைத் துவங்கும் முன்பாக, மருத்களின் பிறப்பைப் பற்றிய கதையை அப்பெண் கேட்க வேண்டும். தகுதியுள்ள பிராமணர்களின் அறிவுரைப்படி, காலையில் பல்துலக்கி, குளித்த பிறகு, வெள்ளை ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து கொண்டு, காலை உணவுக்கு முன் அவள் பகவான் விஷ்ணுவையும் லக்ஷ்மி தேவியையும் வழிபட வேண்டும்.

பதம் 6.19.4 : (பிறகு அவள் பின்வருமாறு பகவானை வணங்க வேண்டும்) பகவானே, நீங்கள் சகல ஐசுவரியங்களும் நிரம்பியவர் ஆனால் ஐசுவரியத்தை நான் உங்களிடம் வேண்டவில்லை. நான் எனது பணிவான வணக்கங்களை மட்டுமே உங்களுக்குச் செலுத்த விரும்புகிறேன். நீங்கள் சகல ஐசுவரியங்களும் உடைய லக்ஷ்மி தேவியின் கணவரும், தலைவருமாவீர். ஆகவே சகல யோக சித்திகளுக்கும் அதிபதியாகிய உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.19.5 : பகவானே, நீங்கள் காரணமற்ற கருணையுடனும், சகல ஐசுவரியங்களுடனும், வீரத்துடனும், மகிமைகளுடனும், பலத்துடனும், உன்னத குணங்களுடனும் கூடியவராய் இருப்பதால், நீங்கள் பரமபுருஷரும், அனைவருக்கும் தலைவருமாவீர்

பதம் 6.19.6 : (பகவான் விஷ்ணுவிற்கு மிகுதியான வணக்கம் செலுத்தியபின் பக்தன், ஸ்ரீதேவியாகிய அன்னை லக்ஷ்மிக்கு வணக்கம் செலுத்தி பின்வருமாறு துதிக்க வேண்டும்.) பகவான் விஷ்ணுவின் மனைவியே, பகவான் விஷ்ணுவின் அந்தரங்க சக்தியே, நீங்கள் பகவான் விஷ்ணுவின் எல்லாக் குணங்களையும், ஐசுவரியங்களையும் பெற்றிருப்பதால், அவருக்குச் சமமானவளாவீர். லக்ஷ்மிதேவியே, தயவுகூர்ந்து என்னிடம் அன்பு கொள்ளுங்கள். லோக மாதாவே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.19.7 : “பகவானே, ஆறு ஐசுவரியங்களைப் பூரணமாக உடைய பகவான் விஷ்ணுவே, தாங்கள் அனுபவிப்பாளர்களில் மிகச் சிறந்தவரும், எல்லோரையும் விட அதிக சக்திவாய்ந்தவருமாவீர். அன்னை லக்ஷ்மியின் கணவரே, விஸ்வக்ஷேனர் போன்ற பல சகாக்களால் சூழப்பட்டிருப்பவரே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். தங்களை வழிபடுவதற்குரிய எல்லாப் பொருட்களுடனும் ஆராதனையை சமர்ப்பிக்கிறேன்” என்ற இந்த மந்திரத்துடன், பகவான் விஷ்ணுவை மிகுந்த கவனத்துடன் நாள்தோறும் ஆவாஹனம், நீர் உபசாரம் (அர்க்கியம்), பாத்தியம், ஆசமனம், ஸ்நானம் ஆகிய உபசாரங்களால் வழிபட வேண்டும். அவரது வழிபாட்டில் ஆடைகள், பூணூல், ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள் மலர்கள், தூபம், தீபங்கள் ஆகிய பல்வேறு காணிக்கைகளை அவருக்குச் செலுத்த வேண்டும்.

பதம் 6.19.8 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: மேலே குறிப்பிட்ட எல்லாப் பொருட்களுடனும் பகவானை வழிபட்ட பிறகு, ஒருவர் ஓம் நமோ பகவதே மஹா-புருஷாய மஹாவிபூதி-பதயே ஸ்வாஹா என்று ஜபித்துக் கொண்டு, புனித வேள்வித் தீயில் நெய்யைப் பன்னிரண்டு தடவைகள் நிவேதனம் செய்ய வேண்டும்.

பதம் 6.19.9 : சகல செல்வங்களையும் ஒருவன் விரும்பினால், அவன் பகவான் விஷ்ணுவை, அவரது மனைவியான லக்ஷ்மியுடன் நாள்தோறும் வழிபடுவதை கடமையாகக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள முறைப்படி அவரைச் சிறந்த பக்தியுடன் ஒருவன் வழிபட வேண்டும். பகவான் விஷ்ணுவும், லக்ஷ்மிதேவியும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சேர்க்கையாவர். அவர்கள் எல்லா வரங்களையும் அளிப்பவர்களாகவும். நல்லதிர்ஷ்டத்தின் பிறப்பிடமாகவும் இருக்கிறார்கள். ஆகவே லக்ஷ்மி நாராயணரை வழிபடுவதே ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

பதம் 6.19.10 : பக்தி நிறைந்த மனதுடன் பூமியில் தண்டத்தைப் போல் உடலைக் கிடத்தி பகவானை வணங்கும்பொழுது, மேற்கண்ட மந்திரத்தை ஒருவன் பத்து தடவை ஜபம் செய்து, பின்வரும் ஸ்தோத்திரத்தையும் சொல்ல வேண்டும்.

பதம் 6.19.11 : பகவான் விஷ்ணுவே, ஸ்ரீ தேவியான அன்னை லக்ஷ்மியே, நீங்களிருவரும் முழு சிருஷ்டிக்கும் உரிமையாளர்களாவீர்கள். உண்மையில், சிருஷ்டிக்கு மூல காரணமும் நீங்களே. அன்னை லக்ஷ்மி மிகவும் சக்திவாய்ந்தவன் என்பதால் அவளது சக்தியை யாராலும் கடக்க முடியாது. எனவே அவளைப் புரிந்து கொள்வது மிகமிகக் கடினமாகும். அன்னை லக்ஷ்மி இந்த ஜட உலகில் பகிரங்க சக்தி என்று அழைக்கப்படுகிறாள். ஆனால் உண்மையில் அவள் எப்பொழுதும் பகவானின் அந்தரங்க சக்தியாவாள்.

பதம் 6.19.12 : பகவானே, நீங்கள் இந்த சக்தியின் தலைவர் என்பதால் பரமபுருஷராவீர், நீங்கள் யக்ஞ சொரூபமாக விளங்குகிறீர். ஆன்மீக செயல்களின் உருவாக விளங்கும் லக்ஷ்மிதேவி, உங்களுக்கு செலுத்தப்படும் வழிபாட்டின் மூல வடிவமாவாள். ஆனால் தாங்களோ யக்ஞங்களை எல்லாம் அனுபவிப்பவராவீர்.

பதம் 6.19.13 : அன்னை லக்ஷ்மியாகிய இவள் எல்லா ஆன்மீக குணங்களுக்கும் இருப்பிடமாவாள். ஆனால் நீங்களோ இக்குணங்களையெல்லாம் தோற்றுவித்து அனுபவிப்பவராவீர். உண்மையில் அனைத்தையும் அனுபவிப்பவர் தாங்களே. நீங்கள் எல்லா ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாக இருக்கிறீர்கள். லக்ஷ்மிதேவியோ அவற்றின் உடல்கள் புலன்கள் மற்றும் மனங்களின் வடிவமாக இருக்கிறாள். அவளுக்கும் ஒரு புனித நாமமும், ரூபமும் உண்டு. ஆனால் நீங்களோ இத்தகைய நாம ரூபங்களுக்கெல்லாம் ஆதாரமாகவும், இவற்றின் தோற்றங்களுக்குக் காரணமாகவும் இருக்கிறீர்கள்.

பதம் 6.19.14 : நீங்களிருவரும் மூவுலங்களுக்கும் பரம ஆளுனர்களும், வரமளிப்பவர்களுமாவீர். ஆகவே, உத்தம சுலோகங்களால் போற்றப்படும் பகவானே, எனது உயர்ந்த விருப்பங்கள் உங்களுடைய கருணையால் நிறைவேற்றப்படட்டும்.

பதம் 6.19.15 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக, ஸ்ரீநிவாஸர் எனப்படும் பகவான் விஷ்ணுவை, ஸ்ரீதேவியான அன்னை லக்ஷ்மியுடன், மேலே சொல்லப்பட்டுள்ள முறைக்கேற்ப ஒருவன் வழிபட வேண்டும். பிறகு வழிபாட்டுப் பொருட்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு, அவர்களுக்கு ஆசமனம் அளித்து, மீண்டும் அவர்களை வழிபட வேண்டும்.

பதம் 6.19.16 : அதன் பிறகு, பக்தியுடனும், பணிவான மனோ பாவத்துடனும் பகவானையும் அன்னை லக்ஷ்மியையும் ஸ்தோத்திரம் செய்யவேண்டும். பிறகு படைக்கப்பட்ட பிரசாதத்தை முகர்ந்து பார்த்துவிட்டு, மறுபடியும் பகவானையும், லக்ஷ்மிதேவியையும் வழிபடவேண்டும்.

பதம் 6.19.17 : ஒரு மனைவி தன் கணவரைப் பரமபுருஷரின் பிரதிநிதியாக ஏற்று, அவருக்குப் பிரசாதமளித்து, தூய பக்தியுடன் அவரைப் பூஜிக்க வேண்டும். கணவனும் மனைவியுடம் மிகவும் மகிழ்ந்து தனது குடும்ப விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பதம் 6.19.18 : கணவன் மனைவிக்கிடையில், ஒருவர் இந்த பக்தித் தொண்டைச் செய்தாலே போதும். அவர்களுடைய நல்லுறவின் காரணத்தால் இருவருமே அதன் பலனை அனுபவிப்பார்கள். ஆகவே மனைவியால் இதைச் செய்ய முடியாதபோது, கணவன் இதை கவனத்துடன் செய்ய வேண்டும். இதனால் விசுவாசமுள்ள மனைவியும் பலனைப் பகிர்ந்து கொள்வான்.

பதங்கள் 6.19.19 – 6.19.20 : பக்தித்தொண்டு விரதமான இந்த விஷ்ணு-விரதத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, பிற காரியங்களைச் செய்வதற்காக அதைப் புறக்கணிக்கக் கூடாது. ஒருவன் மிஞ்சிய பிரசாதம், மலர் மாலைகள், சந்தனம், ஆபரணங்கள் ஆகியவற்றைக் கொடுத்து தினமும் பிராமணர்களையும், அமைதியாக கணவனுடனும், குழந்தைகளுடனும் வாழும் பெண்களையும் பூஜிக்க வேண்டும். நாள்தோறும் மனைவியானவள், மிகுந்த பக்தியுடன் பகவான் விஷ்ணுவை வழிபடுவதற்குரிய நியமங்களைத் தொடர்ந்து பின்பற்றி வரவேண்டும். அதன்பிறகு, பகவான் விஷ்ணுவை அவரது படுக்கையில் படுக்க வைத்த பின்னரே, ஒருவர் பிரசாதத்தைச் சாப்பிட வேண்டும். இவ்விதமாக கணவனும், மனைவியும் தூய்மையடைந்து, தங்களுடைய விருப்பங்களெல்லாம் நிறைவேற்றப் பெறுவார்கள்.

பதம் 6.19.21 : பதிவிரதையான அந்த மனைவி இத்தகைய பக்தித் தொண்டை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ந்து செய்துவர வேண்டும். ஒரு வருடம் கழிந்ததும், கார்த்திகை மாதத்தில் (நவம்பர், டிசம்பர்), பௌர்ணமியன்று அவள் உபவாசம் இருக்க வேண்டும்.

பதம் 6.19.22 : மறுநாள் காலையில், குளித்து முன்போலவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவன் வழிபட்டபின், கிருஹ்ய-சூத்திரங்களில் கூறப்பட்டபடி பண்டிகைக் காலத்தில் சமைப்பது போல் சமைக்க வேண்டும். நெய்யைக் கொண்டு சர்க்கரைப் பொங்கலைப் பன்னிரண்டு தடவைகள் அக்னியில் நிவேதனம் (ஆஹுதீ) செய்ய வேண்டும்.

பதம் 6.19.23 : அதன்பிறகு, பிராமணர்களை அவர் திருப்திப்படுத்த வேண்டும். திருப்தியடைந்த பிராமணர்கள் ஆசிகளை வழங்கும்பொழுது, அவன் பக்தியுடனும், மரியாதையுடனும் தலையால் அவர்களை வணங்க வேண்டும். பிறகு அவர்களுடைய அனுமதியுடன் பிரசாதத்தை உட்கொள்ள வேண்டும்.

பதம் 6.19.24 : உணவைச் சாப்பிடும் முன்பாக, கணவன் முதலில் ஆசாரியரை சுகமாக அமரச் செய்து, தன் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மௌனமாக அந்த குருவிற்குப் பிரசாதத்தை அளிக்க வேண்டும். பிறகு மனைவியானவள், நெய்யுடன் சமைக்கப்பட்டு படைக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலின் மீதத்தைச் சாப்பிட வேண்டும். மீதத்தை உண்பதானது, ஒரு கற்ற, பக்தியுடைய மகனையும், சகல சௌபாக்கியங்களையும் அவள் பெறுவாள் என்பதை உறுதி செய்கிறது.

பதம் 6.19.25 : இந்த விரதம் சாஸ்திர முறைப்படி அனுஷ்டிக்கப்படுமானால், இப்பிறவியிலேயே தான் விரும்பிய வரங்களையெல்லாம் பகவானிடமிருந்து ஒருவனால் பெற முடியும். இதை அனுஷ்டித்த மனைவியானவள் நிச்சயமாக சௌபாக்கியத்தையும், செல்வத்தையும், மகன்களையும், நீண்ட ஆயுளுடைய கணவனையும், புகழையும், இன்பம் நிறைந்த வீட்டையும் பெறுவாள்.

பதங்கள் 6.19.26 – 6.19.28 : திருமணமாகாத ஒரு பெண் விரதத்தை அனுஷ்டித்தால், மிகச் சிறந்த நல்ல கணவனை அடைவாள். கணவனோ, மகனோ, இல்லாதவள் (அவீரா) ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்படுவாள். பிறந்த குழந்தைகளைப் பறிகொடுத்தவள் நீண்ட ஆயுளுடைய ஒரு குழந்தையையும், செல்வத்தை அடையும் பாக்கியத்தையும் பெறுவாள். துரதிர்ஷ்டசாலியான ஒரு பெண் பாக்கியசாலியாவாள். அவலட்சணமான பெண் அழகுமிக்கவளாவாள். இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் ஒரு நோயாளி நோயிலிருந்து விடுபட்டு, திடகாத்திரமான ஒருடலைப் பெறுவாள். முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும் படையல்கள் அர்ப்பணிக்கும் பொழுது, குறிப்பாக சிரார்த்தம் (ஸ்ரத்தா) செய்யும் பொழுது இந்த வர்ணணையை ஒருவன் படிப்பானாயின், தேவர்களும், பித்ருலோக வாசிகளும் மிகவும் திருப்தியடைந்து அவனுடைய விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவார்கள். இந்த ஹோமத்தின் முடிவில் பகவான் விஷ்ணுவும், ஸ்ரீதேவியாகிய அன்னை லக்ஷ்மியும் அவனிடம் மிகவும் சந்தோஷமடைவார்கள். பரீட்சித்து மகாராஜனே, திதியின் இந்த விரத அனுஷ்டானத்தையும், எவ்வாறு அவள் நல்ல புத்திரர்களான மருத்0களையும், மகிழ்ச்சியான வாழ்வையும் பெற்றாள் என்பதையும் இப்பொழுது நான் முழுமையாக விவரித்தேன். இதை என்னால் இயன்றளவு விவரமாக விவரிக்க நான் முயற்சி செய்துள்ளேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare