அத்தியாயம் – 17
அன்னை பார்வதி சித்ரகேதுவைச் சபித்தல்
பதம் 6.17.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: எந்த திசையில் பரமபுருஷராகிய பகவான் அனந்தர் மறைந்தருளினாரோ அந்த திசைக்கு வணக்கம் செலுத்திய பிறகு, சித்ரகேது, வித்யாதரர்களின் தலைவராக வான வெளியில் பிரயாணம் செய்யத் துவங்கினார்.
பதங்கள் 6.17.2 – 6.17.3 : மிகவும் சக்திவாய்ந்த மகா யோகியான சித்ரகேது, சிறந்த முனிவர்களாலும், ஞானிகளாலும், சித்த மற்றும் சாரணலோகவாசிகளாலும் புகழப்பட்டவாறு சஞ்சரித்தபடி, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு வாழ்வை அனுபவித்தார். அழிவற்ற தேக பலத்தையும், புலன்களையும் பெற்றிருந்த அவர், பலவகையான யோக சித்திகளுக்கு இருப்பிடமான சுமேரு மலையின் பள்ளத்தாக்குகளில் பிரயாணம் செய்தார். அப்பள்ளத்தாக்குகளில், பரமபுருஷரான ஸ்ரீ ஹரியின் மகிமைகளைப் பாடுவதன் மூலமாக, வித்யாதர லோகத்துப்பெண்களுடன் அவர் வாழ்வை அனுபவித்தார்.
பதங்கள் 6.17.4 – 6.17.5 : ஒருசமயம் சித்ரகேது மகாராஜன், பகவான் விஷ்ணுவால் அளிக்கப்பட்ட, பிரகாசமாக ஜொலிக்கும் ஒரு விமானத்தில் விண்வெளியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சித்தர்களாலும், சாரணர்களாலும் சூழப்பட்டிருந்த சிவபெருமான், சிறந்த முனிவர்களின் சபையில், பார்வதியை மடியில் வைத்துக் கொண்டு, அவளைத் தமது கைகளால் அணைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, பார்வதியின் காதில் விழும்படி சிரித்து பின்வருமாறு கூறாலானார்.
பதம் 6.17.6 : சித்ரகேது கூறினார்: பொது ஜனங்களின் ஆன்மீக குருவான சிவபெருமான், பெளதிக உடல்களை ஏற்றுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிறந்தவரும், அவர்களுக்கு தர்மத்தை உபதேசிப்பவருமாவார். இருந்தும் சிறந்த முனிவர்களின் ஒரு சபையில் தலைவராக அமர்ந்திருக்கும் அவர் சபையோரின் மத்தியில் தன் மனைவி பார்வதியை அணைத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
பதம் 6.17.7 : தலையில் ஜடாமுடி தரிப்பவரான சிவபெருமான் கடும் தவ, விரதங்களை அனுஷ்டித்தவர் என்பதில் ஐயமில்லை. உண்மையில் அவர் வேதக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றும் ஒரு சபையோருக்குத் தலைவருமாவார். அப்படியிருந்தும், முனிவர்களுக்கு மத்தியில் அவர் தன் மனைவியை மடியில் வைத்துக்கொண்டு, வெட்கமில்லாத ஒரு சாதாரண மனிதனைப் போல் அமர்ந்திருக்கிறார்.
பதம் 6.17.8 : சாதாரண பந்தப்பட்ட ஆத்மாக்கள் பொதுவாக தங்களது மனைவிகளைத் தனிமையான இடங்களில் அணைத்து இன்புறுகின்றனர். ஆனால் சிவபெருமான் தவங்களுக்குச் சிறந்த தலைவராக இருந்தும், முனிவர்களுடைய ஒரு சபையின் மத்தியில் பகிரங்கமாக தன் மனைவியை அணைத்துக் கொள்வது ஆச்சரியமாக உள்ளது.
பதம் 6.17.9 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, சித்ரகேதுவின் வார்த்தையைக் கேட்டு, மிகவும் சக்திவாய்ந்தவரும், ஆழங்காண முடியாத அறிவுடையவருமான சிவபெருமான் வெறும் புன்னகையுடன் மௌனமாக இருந்தார். சபையோரும் அவரைப் பின்பற்றி மெளனமாக இருந்துவிட்டனர்.
பதம் 6.17.10 : சிவபெருமான் மற்றும் பார்வதியின் சக்தியை அறியாத சித்ரகேது அவர்களைக் கடுமையாக விமர்சித்தார். அவரது கூற்றுகள் சிறிதும் திருப்தி அளிப்பவையாக இல்லை. எனவே கடுங்கோபங் கொண்ட பார்வதிதேவி, புலனடக்கத்தில் தான் சிவபெருமானைவிடச் சிறந்தவர் என்று எண்ணியிருந்த சித்ரகேதுவிடம் பின்வருமாறு கூறினாள்.
பதம் 6.17.11 : தேவி பார்வதி கூறினாள்: அந்தோ, நம்மைப் போன்ற துஷ்டர்களுக்கும், வெட்கமற்றவர்களுக்கும் பரம ஆளுனரும், தண்டனையளிப்பவனும், கட்டுப்படுத்துபவனுமான பிரபு இப்பொழுது இந்த புதுப் பதவியாளன் தானோ!
பதம் 6.17.12 : அந்தோ, சிவபெருமான் முறைகேடாக நடப்பதிலிருந்து அவரைத் தடுக்க முயலாத தாமரையிலிருந்து பிறந்த பிரம்மதேவரும், பிருகு மற்றும் நாரதர் போன்ற சிறந்த முனிவர்களும், சனத் குமாரர் முதலான நான்கு குமாரர்களாலும், கபிலரும், மனுவும் தர்மத்தை அறியவில்லை போலும்!
பதம் 6.17.13 : இந்த சித்ரகேது க்ஷத்தியர்களிலேயே கடைப்பட்டவனாவான். ஏனெனில், சிவபெருமானை அவமதித்ததன் மூலமாக, அவரை எப்பொழுதும் தியானிக்கும் பிரம்மாவையும், மற்ற தேவர்களையும் அடக்கமில்லாமல் அவமதித்துவிட்டான். சிவபெருமான் தர்ம சொரூபியும், முழு உலகிற்கும் ஆன்மீக குருவுமாவார். எனவே சித்ரகேது தண்டனைக்குரியவனாவான்.
பதம் 6.17.14 : இவன் தன்னுடைய சாதனைகளால் கர்வமடைந்து, “நான் தான் சிறந்தவன்” என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இவன் தன்னை மிகவும் முக்கியமானவனென்று எண்ணிக்கொண்டு, அடக்கம் இல்லாதவனாக இருப்பதால், புண்ணிய புருஷர்கள் சிறந்த சாதுக்களால் பூஜிக்கப்படும் பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களின் புகலிடத்தை அணுகுவதற்குத் தகுதியுடையவனல்ல.
பதம் 6.17.15 : ஆகவே மதிகெட்ட மகனே, இப்பொழுது பாவம் மிகுந்த, இழிவான அசுரர்களின் குடும்பத்தில் பிறப்பாயாக. இதனால், இவ்வுலகிலுள்ள சிறந்த சாதுக்களிடம் இத்தகைய குற்றத்தை மீண்டும் நீ செய்யாதிருப்பாய்.
பதம் 6.17.16 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, சித்ரகேது பார்வதியால் சபிக்கப்பட்ட பொழுது, அவர் தனது விமானத்திலிருந்து இறங்கி, மிகவும் பணிவுடன் சிரம் தாழ்த்தி வணங்கி, அவளை முழுமையாக திருப்திப்படுத்தினார்.
பதம் 6.17.17 : சித்ரகேது கூறினார்: தாயே, இரு கரங்களையும் கூப்பி உங்களது சாபத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த சாபத்தை நான் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் இன்பமும், துன்பமும் ஒருவனது முன் வினைப்பயனாக தேவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது அல்லவா?
பதம் 6.17.18 : அறியாமையினால் மயங்கி, ஜீவராசி, எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும், தனது கர்மங்களால் விளையும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி, ஜட உலகெனும் இக்காட்டில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். (ஆகவே தாயே, இச்சம்பவத்தைக் குறித்து நீங்களோ, நானோ குற்றங்சாட்டப்பட முடியாது).
பதம் 6.17.19 : இந்த ஜட உலகில், பெளதிக இன்ப துன்பங்களுக்கு ஜீவராசியோ அல்லது மற்றவர்களோ (நண்பர்கள் மற்றும் பகைவர்கள்) காரணமல்ல. ஆனால் முழு அஞ்ஞானத்தினால் தானும், மற்றவர்களுமே காரணம் என்று ஜீவராசி எண்ணுகிறான்.
பதம் 6.17.20 : இடையறாது ஒடிக்கொண்டிருக்கும் நதியின் அலைகளுக்கு ஒப்பான இந்த ஜட உலகில், உண்மையில் எது சாபம், எது அனுக்கிரகம்? எது சுவர்க்கம், எது நரகம்? எது இன்பம், எதுதான் துன்பம்? அலைகள் இடையறாது ஓடிக்கொண்டிருப்பதால், இவற்றில் எதற்கும் நிலையான விளைவு கிடையாது.
பதம் 6.17.21 : பரமபுருஷர் ஒருவரே, ஜட உலகின் நிலைகளால் பாதிக்கபடாதவராக அவர் தமது சுய சக்தியினால் எல்லா பந்தப்பட்ட ஆத்மாக்களையும் சிருஷ்டிக்கிறார். பௌதிக சக்தியினால் களங்கமடைந்துள்ளதால் ஜீவராசி அறியாமையில் புகுத்தப்பட்டு, வெவ்வேறு பந்தப்பட்ட நிலைகளுள் சிக்கிக் கொள்கிறான். சிலசமயங்களில் அறிவினால் ஜீவராசிக்கு முக்தி அளிக்கப்படுகிறது. சத்வம் மற்றும் ரஜோ குண நிலைகளில் அவன் இன்ப துன்பங்களுக்கு ஆளாகிறான்.
பதம் 6.17.22 : பரமபுருஷர் எல்லா ஜீவராசிகளிடமும் சமமாக நடந்து கொள்கிறார். ஆகவே யாருமே அவருக்கு மிகப்பிரியமானவரும் இல்லை, மிகப்பெரிய விரோதியும் இல்லை யாருமே அவரது நண்பருமில்லை, அவரது உறவினருமில்லை. அவருக்கு பௌதிக உலகிடம் பற்றில்லை என்பதால், பெயரளவேயான இன்பத்தில் விருப்போ அல்லது பெயரளவேயான துன்பத்தில் வெறுப்போ கிடையாது. இன்பம், துன்பம் என்ற இரு சொற்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ளவை. பகவான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதால், அவருக்குத் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பதம் 6.17.23 : பரமபுருஷர் கர்மத்திற்கேற்ப ஏற்படும் நம்முடைய இன்ப துன்பங்களில் பற்றற்றவர் என்றாலும், எவருமே அவருக்குப் பகைவரோ அல்லது வேண்டியவரோ இல்லை. இருப்பினும், அவர் தமது பெளதிக சக்தியின் மூலமாகப் பாவ, புண்ணியச் செயல்களைப் படைக்கிறார். இவ்வாறாக பௌதிக வாழ்வு முறையின் தொடர்ச்சிக்காக அவர் இன்ப துன்பங்களையும், நன்மை தீமைகளையும், பந்த மோட்சத்தையும், பிறப்பு இறப்புகளையும் சிருஷ்டிக்கிறார்.
பதம் 6.17.24 : தாயே, நீங்கள் இப்பொழுது தேவையில்லாமல் கோபப்படுகிறீர்கள். என்னுடைய இன்ப துன்பங்களெல்லாம் எனது பூர்வ செயல்களால் விதிக்கப்பட்டவை என்பதால், உங்களுடைய சாபத்திலிருந்து விடுபடுவதற்காக நான் உங்களை மகிழ்விக்க முயல்வதாக எண்ண வேண்டாம். நான் கூறியது தவறல்ல என்றாலும், எது தவறென்று உங்களால் கருதப்படுகிறதோ அது மன்னிக்கப்படட்டும்.
பதம் 6.17.25 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: எதிரிகளை அடக்கும் பரீட்சித்து மகாராஜனே, சிவபெருமானையும், பார்வதியையும் திருப்திப்படுத்தியபின், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சித்ரகேது தனது விமானத்திலேறி அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தைப் பற்றி அறிவிக்கப்பட்ட போதிலும், சித்ரகேது அஞ்சாததைக் கண்ட சிவபெருமானும், பார்வதியும் அவரது நடத்தையினால் முற்றிலும் வியப்படைந்து புன்னகை செய்தனர்.
பதம் 6.17.26 : பின்னர், மிகவும் சக்திவாய்ந்தவரான சிவபெருமான், மாமுனிவரான நாரதரும், அசுரர்களும், சித்தலோக வாசிகளும், தமது சொந்த சகாக்களும் கேட்கும்படியாக அவர்கள் முன்னிலையில் பார்வதியிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 6.17.27 : சிவபெருமான் கூறினார்: அழகிய பார்வதியே, வைஷ்ணவர்களின் பெருமையைப் பார்த்தாயா? பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரியின் அடியார்களுக்கும் அடியவர்களாகிய அவர்கள் மகாத்மாக்களாவர். அவர்கள் எவ்விதமான பௌதிக சுகத்திலும் விருப்பமற்றவர்களாக உள்ளனர்.
பதம் 6.17.28 : பரமபுருஷராகிய பகவான் நாராயணரின் பக்தித் தொண்டில் மட்டுமே ஈடுபட்டுள்ள பக்தர்கள், வாழ்க்கையின் எந்த சூழ்நிலைக்கும் அஞ்சுவதில்லை. இத்தகைய பக்தர்கள் பகவானின் தொண்டில் மட்டுமே ஆர்வம் கொண்டிருப்பதால், இவர்களுக்குச் சுவர்க்க லோகங்கள், முக்தி, நரக லோகங்கள் ஆகிய அனைத்துமே சமமானவைதான்.
பதம் 6.17.29 : பரமபுருஷரின் புறச்சக்தியினுடைய செயல்களின் காரணத்தால், ஜட உடல்களுடனான தொடர்பில் ஜீவராசிகள் பந்தப்படுத்தப்படுகின்றன. இருமைகளான இன்ப துன்பம், பிறப்பு இறப்பு, சாபம் அனுக்கிரகம் ஆகியவை, பௌதிக உலகுடன் கொண்ட இத்தொடர்பின் இயற்கையான விளைவுகளாகும்.
பதம் 6.17.30 : எப்படி ஒருவன் ஒரு மலர் மாலையைப் பாம்பென்று தவறாக கருதுகிறானோ அல்லது கனவில் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறானோ, அப்படியே, இந்த ஜட உலகில், சமயோசித புத்தியில்லாத காரணத்தால், இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக எண்ணி, ஒன்றை நல்லதென்றும், மற்றதைக் கெட்டதென்றும் நாம் கருதுகிறோம்.
பதம் 6.17.31 : வாசுதேவராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்கள் இயல்பாகவே பக்குவ ஞானத்தையும் இந்த ஜட உலகில் பற்றின்மையையும் பெற்றுள்ளனர். எனவே இத்தகைய பக்தர்கள் இவ்வுலகின் பெயரளவேயான இன்பத்திலோ அல்லது துன்பத்திலோ ஆர்வம் கொண்டிருப்பதில்லை.
பதம் 6.17.32 : நானோ (சிவபெருமான்), பிரம்மாவோ, அஸ்வினி-குமாரர்களோ, நாரதரோ, பிரம்மாவின் மற்ற புத்திரர்களான சிறந்த முனிவர்களோ அல்லது தேவர்களோ கூட பரமபுருஷரின் சுய ரூபத்தையோ அவரது லீலைகளையோ புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் அந்த பரமபுருஷரின் அம்சங்களின் அம்சங்கள் என்ற போதிலும், எங்களைத் தனித்தனியே ஈஸ்வரர்கள் என்றும், சுதந்திரமானவர்கள் என்றும் கருதுகிறோம். இதனால் அவருடைய சுயரூபத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பதம் 6.17.33 : இவருக்குப் பிரியமானவரும் இல்லை, பிரியமில்லாதவரும் இல்லை தன்னுடையவனுமில்லை, அந்நியனுமில்லை. உண்மையில் இவர் அனைத்து ஜீவராசிகளின் ஆத்மாவிற்கும் ஆத்மாவாக இருக்கிறார். இவ்வாறாக அனைத்து ஜீவராசிகளுக்கும் உற்ற நண்பராகிய பகவான் ஸ்ரீ ஹரி அவர்களனைவருக்கும் மிகவும் நெருங்கியவரும், பிரியமானவருமாவார்.
பதங்கள் 6.17.34 – 6.17.35 : மிகவும் தயாள குணமுடைய இந்த சித்ரகேது பகவானுக்கு மிகப் பிரியமுள்ள ஒரு பக்தராவார். அவர் எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பாவிப்பவரும், விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டவருமாவார். அவ்வாறே நானும் பகவான் நாராயணருக்கு மிகவும் பிரியமானவனாவேன். எனவே, மிகச் சிறந்தவர்களான நாராயண பக்தர்களின் செயல்களைக் கண்டு எவரும் ஆச்சரியப்படக்கூடாது. ஏனெனில் அவர்கள் விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்டவர்களாகவும், எப்பொழுதும் சாந்தர்களாகவும், அனைவரையும் சமமாகப் பாவிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
பதம் 6.17.36 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, தன் கணவரின் இப்பேச்சைக் கேட்ட தேவி பார்வதி (உமை), சித்ரகேதுவின் செயலில் உண்டான வியப்பு நீங்கி, சாந்த மதியுடையவளானாள்.
பதம் 6.17.37 : மிகச் சிறந்த பக்தரான சித்ரகேது தாய் பார்வதியின் சாபத்தை எதிர்த்து பதில் சாபமிடும் அளவிற்கு மிகவும் தகுதியுடையவராகவும், பெரும் சக்தி படைத்தவராகவும் இருந்தார். ஆனால் அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, அவர் சிவபெருமானையும், அவரது மனைவியையும் சிரம்தாழ்த்தி வணங்கி, மிகவும் அடக்கத்துடன் அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டார். இது ஒரு வைஷ்ணவருடைய நடத்தையின் உயர்ந்த தரம் என்று மிகவும் உயர்வாக மதித்துப் போற்றப்படுகிறது.
பதம் 6.17.38 : தாய் துர்கையால் (சிவபெருமானின் மனைவியான பவானியால்) சபிக்கப்பட்ட அதே சித்ரகேது, ஓர் அசுர இனத்தில் பிறவியை ஏற்றார். உன்னத உறவையும், நடைமுறை வாழ்வில் அதைச் செயற்படுத்தும் அறிவையும் இன்னமும் அவர் முழுமையாகப் பெற்றிருந்த போதிலும், துவஷ்டாவால் செய்யப்பட்ட ஒரு யாகத்தீயில் ஓர் அசுரனாக அவர் தோன்றினார். இவ்வாறாக அவர் விருத்ராசுரன் என்று பிரசித்தி பெற்றார்.
பதம் 6.17.39 : பரீட்சித்து மகாராஜனே, சிறந்த பக்தனான விருத்ராசுரன் எப்படி ஓர் அசுர குடும்பத்தில் பிறவியெடுத்தான் என்று நீர் கேட்டீர். இவ்விதமாக இதைப் பற்றிய அனைத்தும் உமக்கு விவரிக்கப்பட்டது.
பதம் 6.17.40 : சித்ரகேது ஒரு மிகச்சிறந்த பக்தராவார் (மகாத்மா ஆவார்). அவருடைய இந்த வரலாற்றை ஒரு தூய பக்தரிடமிருந்து கேட்பவன் கூட பெளதிக பந்தத்திலிருந்து விடுபடுகிறான்.
பதம் 6.17.41 : எவனொருவன் அதிகாலையில் எழுந்து, தன் மனதையும் வாக்கையும் கட்டுப்படுத்தியும், பரமபுருஷரை நினைந்தும், சித்ரகேதுவின் இந்த வரலாற்றைப் படிக்கிறானோ, அவன் சிரமமின்றி பரமபதமாகிய ஆன்மீக உலகை அடைவான்.