அத்தியாயம் – 16
சித்ரகேது பரமபுருஷரைச் சந்தித்தல்
பதம் 6.16.1
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
அத தேவ-ரிஷீ ராஜன் ஸம்பரேதம் ந்ருபாத்மஜம்
தர்சயித்வேதி ஹோவாச ஞாதீனாம் அனுசோசதாம்

ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத—இவ்வாறு; தேவ-ரிஷி:—தேவரிஷியான நாரதர்; ராஜன்—அரசே; ஸம்பரேதம்—மரணமடைந்த; ந்ருப-ஆத்மஜம்—அரச புத்திரனை; தர்சயித்வா—பார்த்து; இதி—இவ்வாறு; ஹ—என்று; உவாச—கூறினார்; ஞாதீனாம்—எல்லா உறவினர்களுக்கும்; அனுசோசதாம்—துக்கப்பட்டுக் கொண்டிருந்த.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, மாமுனிவரான நாரதர் தமது யோக சக்தியினால், மரணமடைந்த அந்த மகனை துக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த உறவினர்களுக்குக் காட்டி, பின்வருமாறு கூறலானார்.

பதம் 6.16.2
ஸ்ரீ-நாரத உவாச
ஜீவாத்மன் பஸ்ய பத்ரம் தே மாதரம் பிதரம் ச தே
ஸுஹ்ருதோ பாந்தவாஸ் தப்தா: சுசா த்வத்-க்ருதயா ப்ருசம்

ஸ்ரீ-நாரத: உவாச—ஸ்ரீ நாரத முனி கூறினார்; ஜீவ-ஆத்மன்—ஜீவாத்மாவே; பஸ்ய—பார்; பத்ரம்—மங்களமுண்டாகட்டும்; தே—உனக்கு; மாதரம்—தாயும்; பிதரம்—தந்தையும்; ச—கூட; தே—உன்னுடைய; ஸுஹ்ருத:—நண்பர்களும்; பாந்தவா:—உறவினர்களும்; தப்தா:—தவிக்கின்றனர்; சுசா—துக்கத்தினால்; த்வத்-க்ருதயா—உன்னைப் பற்றிய; ப்ருசம்—மிகவும்.

ஸ்ரீ நாரத முனி கூறினார்: ஜீவாத்மாவே, உனக்கு மங்களமுண்டாகட்டும். உன் தாயையும், தந்தையையும், நண்பர்களையும், உறவினர்களையும் கண் திறந்து பார். அவர்கள் உன்னைப் பற்றிய துக்கத்தால் தவிக்கின்றனர்.

பதம் 6.16.3
கலேவரம் ஸ்வம் ஆவிஸ்ய சேஷம் ஆயு: ஸுஹ்ருத்-வ்ருத
புங்ஷ்வ போகான் பித்ரு ப்ரத்தான் அதிதிஷ்ட ந்ருபாஸனம்

கலேவரம்—உடலில்; ஸ்வம்—உன்னுடைய; ஆவிஸ்ய—புகுந்து; சேஷம்—மீதியுள்ள; ஆயு:—ஆயுளை; ஸுஹ்ருத் வ்ருத:—உற்றார் உறவினருடன்; புங்ஷ்வ—அனுபவி; போகான்—அனுபவிக்கத்தக்க செல்வங்களையெல்லாம்; பித்ரு—உன் தந்தையால்; ப்ரத்தான்—வழங்கப்பட்ட; அதிதிஷ்ட—ஏற்றுக்கொள்; ந்ருப-ஆஸனம்—அரச சிம்மாசனத்தை.

நீ அகால மரணமடைந்ததால் எஞ்சியுள்ள உனது ஆயுள் அப்படியே இருக்கிறது. எனவே உனது உடலில் மீண்டும் புகுந்து, மீதமுள்ள உனது வாழ்நாளை உற்றார் உறவினர்களுடன் அனுபவிப்பாயாக. உன் தந்தையால் கொடுக்கப்பட்ட அரச சிம்மாசனத்தையும், அனைத்து செல்வங்களையும் ஏற்றுக் கொள்வாயாக.

பதம் 6.16.4
ஜீவ உவாச
கஸ்மிஞ் ஜன்மனி அமீ மஹ்யம் பிதரோ மாதரோ ‘பவன்
கர்மபிர் ப்ராம்யமாணஸ்ய தேவ-திர்யங்-ந்ரு-யோனிஷு

ஜீவ: உவாச—ஜீவாத்மா கூறியது; கஸ்மின்—எந்த; ஜன்மனி—பிறவியில்; அமீ—அவர்கள் எல்லோரும்; மஹ்யம்—எனக்கு; பிதர:—தந்தைகளாக; மாதர:—தாய்களாக; அபவன்—இருந்தனர்; கர்மபி:—கர்ம பலன்களால்; ப்ராம்யமாணஸ்ய—அலைந்து கொண்டிருக்கும்; தேவ-திர்யக்—தேவர்கள் மற்றும் தாழ்ந்த மிருகங்களின்; ந்ரு—மற்றும் மனித இனங்களின்; யோனிஷு—கர்பங்களில்.

நாரத முனிவரின் யோக சக்தியினால் அந்த ஜீவாத்மா, உயிரற்ற தனது உடலுக்குள் மீண்டும் சிறிது நேரம் புகுந்து, நாரத முனிவரின் வேண்டுகோளின்படி பின்வருமாறு பேசலாயிற்று: ஜீவாத்மாவாகிய நான், என் கர்ம பலன்களுக்கேற்ப, சில சமயங்களில் தேவர்களுக்கிடையிலும், சிலசமயங்களில் தாழ்ந்த மிருகங்களுக்கிடையிலும் சிலசமயங்களில் தாவரங்களுக்கிடையிலும், சிலசமயங்களில் மனிதர்களுக்கிடையிலும் ஒருடலிலிருந்து மற்றொரு உடலுக்கு மாறிக்கொண்டிருக்கிறேன். எனவே எப்பிறவியில் இவர்கள் எனது பெற்றோர்களாக இருந்தனர்? உண்மையில் ஒருவர் எனக்குத் தாயுமில்லை, மற்றவர் எனக்குத் தந்தையுமில்லை. நான் எப்படி இவ்விருவரையும் என் பெற்றோர்களாக ஏற்றுக் கொள்ள முடியும்?

பதம் 6.16.5
பந்து-ஞாதி-அரி-மத்யஸ்த-மித்ரோதாஸீன-வித்விஷ:
ஸர்வ ஏவ ஹி ஸர்வேஷாம் பவந்தி க்ரமசோ மித:

பந்து—நண்பர்கள்; ஞாதி—குடும்ப அங்கத்தினர்கள்; அரி—விரோதிகள்; மத்யஸ்த—மத்தியஸ்தர்கள்; மித்ர—நலம்விரும்பிகள்; உதாஸீன—ஒதுக்கப்பட்டவர்கள்; வித்விஷ:—அல்லது பொறாமை உள்ளவர்கள்; ஸர்வே—எல்லோரும்; ஏவ—உண்மையில்; ஹி—நிச்சயமாக; ஸர்வேஷாம்—எல்லோருக்கும்; பவந்தி—ஆகின்றனர்; க்ரமச:—மாறிமாறி; மித:—ஒருவன் மற்றவருக்கு.

ஜீவராசியை அடித்துச் செல்லும் ஒரு நதியைப் போல் முன்னேறிச் செல்லும் இந்த ஜட உலகில் எல்லோரும் மாறி மாறித் தொடர்ந்து நண்பர்களாகவும், குடும்ப அங்கத்தினர்களாகவும், விரோதிகளாகவும், மத்தியஸ்தர்களாகவும், நலம் விரும்பிகளாகவும், ஒதுக்கப்பட்டவர்களாகவும், பொறாமை கொண்டவர்களாகவும், வேறுபல உறவுகள் உடையவர்களாகவும் ஆகின்றனர். இத்தனை உறவுமுறைகள் இருந்தும், எவரும் நிரந்தரமாக உறவு கொண்டிருப்பதில்லை.

பதம் 6.16.6
யதா வஸ்தூனி பண்யானி ஹேமாதீனி ததஸ் தத:
பர்யடந்தி நரேஷு ஏவம் ஜீவோ யோனிஷு கர்த்ருஷு

யதா—எவ்வாறு; வஸ்தூனி—பொருட்கள்; பண்யானி—வியாபாரத்திற்குரிய; ஹேம-ஆதீனி—தங்கம் முதலாக; தத: தத:—இங்குமங்கும்; பர்யடந்தி—இடம் மாறுகிறதோ; நரேஷு—மனிதர்களுக்கிடையில்; ஏவம்—அவ்வாறே; ஜீவ:—ஜீவராசியும்; யோனிஷு—வெவ்வேறு உயிரினங்களில்; கர்த்ருஷு—வெவ்வேறு பெளதிக தந்தைகளில்.

எவ்வாறு பண்டமாற்றுக்குப் பயன்படும் தங்கம் முதலான பொருட்கள் காலப்போக்கில் மனிதர்களிடையே மாறிமாறி வருகின்றனவோ, அவ்வாறே ஜீவராசியானவன் தனது கர்ம பலன்களின் விளைவாக, வெவ்வேறு உயிரினங்களிலுள்ள தாய் தந்தையருக்கிடையில் மாறிமாறி வந்து, பிரபஞ்சம் முழுவதிலும் சஞ்சரிக்கிறான்.

பதம் 6.16.7
நித்யஸ்யார்தஸ்ய ஸம்பந்தோ ஹி அனித்யோ த்ருஸ்யதே ந்ருஷு
யாவத் யஸ்ய ஹி ஸம்பந்தோ மமத்வம் தாவத் ஏவ ஹி

நித்யஸ்ய—நித்தியமானதின்; அர்தஸ்ய—பொருளின்; ஸம்பந்த:—உறவுமுறை; ஹி—உண்மையில்; அநித்ய:—நிலையற்றது; த்ருஸ்யதே—காணப்படுகிறது; ந்ருஷு—மனித சமுதாயத்தில்; யாவத்—எதுவரை; யஸ்ய—எவனுடைய; ஹி—உண்மையில்; ஸம்பந்த:—உறவுமுறை; மமத்வம்—சொந்தம்; தாவத்—அதுவரையே; ஏவ—உண்மையில்; ஹி—நிச்சயமாக.

ஒருசில ஜீவராசிகளே மனித இனத்தில் பிறக்கின்றன. மற்றவை மிருகங்களாகப் பிறக்கின்றன. இரண்டுமே ஜீவராசிகள்தான் என்றாலும், அவற்றிற்கிடையிலுள்ள உறவுமுறைகள் நிலையற்றவையாகும். ஒரு மிருகம் ஒரு மனிதனின் பாதுகாப்பில் சில காலம் இருந்து, பிறகு வேறொரு மனிதனின் உடைமையாக மாற்றப்படக்கூடும். அந்த மிருகம் சென்ற உடனேயே அதன் முந்திய உரிமையாளன் அதனிடம் தனக்கிருந்த உரிமையை விட்டுவிடுகிறான். அந்த மிருகம் தன்னிடம் இருக்கும்வரை அதனிடம் அவனுக்கு உறவு இருக்கிறது. ஆனால் அம்மிருகம் விற்கப்பட்டதும் அந்த உறவு மறைந்துவிடுகிறது.

பதம் 6.16.8
ஏவம் யோனி-கதோ ஜீவ: ஸ நித்யோ நிரஹங்க்ருத:
யாவத் யத்ரோபலப்யேத தாவத் ஸ்வத்வம் ஹி தஸ்ய தத்

ஏவம்—இவ்வாறு; யோனி-கத:—ஒரு குறிப்பிட்ட வகையான உடலில் இருந்துகொண்டு; ஜீவ:—ஜீவராசி; ஸ:—அவன்; நித்ய—நித்தியமானவன்; நிரஹங்க்ருத:—உடலுடன் சம்பந்தமில்லாதவன்; யாவத்—எதுவரை; யத்ர—எங்கு; உபலப்யேத—அவன் கண்டு பிடிக்கப்படுகிறான்; தாவத்—அதுவரை; ஸ்வத்வம்—தான் என்ற உணர்வு; ஹி—உண்மையில்; தஸ்ய—அவனுடைய; தத்—அது.

அழியக்கூடிய உடல்களை அடிப்படையாகக் கொண்ட உறவுமுறையின் காரணத்தால், ஒரு ஜீவராசி மற்றொரு ஜீவராசியுடன் சம்பந்தப்பட்டவனாகிறான் என்றாலும், ஜீவராசி நித்தியமானவனாவான். உண்மையில் பிறப்பதும், மடிவதும் இந்த உடல்தான், ஜீவராசியல்ல. இதை ஒருவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜீவராசிக்குப் பெயரளவேயான தாய் தந்தையருடன் உண்மையான உறவுமுறை எதுவும் கிடையாது. தனது பூர்வ கர்மத்தின் பலனாக, ஒரு குறிப்பிட்ட தாய், தந்தையருக்கு அவன் மகனாக இருக்கும்வரை, அந்த தாய், தந்தையரால் கொடுக்கப்பட்ட உடலுடன் அவனுக்கு ஒரு சம்பந்தமும் இருக்கிறது. இவ்வாறு தன்னை அவர்களுடைய மகனென்று பொய்யாக ஏற்றுக் கொள்ளும் அவன் பாசமுள்ளவன்போல் நடந்து கொள்கிறான். ஆனால் அவன் மரணமடைந்ததும் அந்த உறவும் முடிந்து விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் உள்ள ஒருவன் பொய்யான மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் சிக்கிக் கொள்ளக்கூடாது.

பதம் 6.16.9
ஏஷ நித்யோ ‘வ்யய: ஸூக்ஷ்ம ஏஷ ஸர்வாஸ்ரய: ஸ்வத்ருக்
ஆத்மமாயா-குணைர் விஸ்வம் ஆத்மானம் ஸ்ருஜதே ப்ரபு:

ஏஷ:—இந்த ஜீவராசி; நித்ய:—நித்தியமான; அவ்யய:—அழிவற்ற; ஸூக்ஷ்ம:—சூட்சுமமான (பௌதிக கண்களுக்குப் புலப்படாதது); ஏஷ:—இந்த ஜீவராசி; ஸர்வ-ஆஸ்ரய:—வெவ்வேறு வகையான உடல்களுக்குக் காரணமாவான்; ஸ்வ-த்ருக்—சுயப்பிரகாசமுடையவன்; ஆத்ம-மாயா-குணை:—பரமபுருஷருடைய ஜட இயற்கைக் குணங்களால்; விஸ்வம்—இந்த ஜட உலகம்; ஆத்மானாம்—தன்னை; ஸ்ருஜதே—தோன்றுகிறான்; ப்ரபு:—தலைவன்.

உண்மையில் ஜீவராசி ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதால், அவன் நித்தியமானவனும், அழிவற்றவனுமாவான். அவன் பிறப்பதுமில்லை, மடிவதுமில்லை. எல்லா வகையான உடல்களுக்கும் அவனே அடிப்படைத் தத்துவம் என்றாலும், அவன் உடலின் பிரிவைச் சேர்ந்தவனல்ல. ஜீவராசி மிகவும் பரிசுத்தமானவான் என்பதால் அவன் குணத்தில் பரமபுருஷருக்குச் சமமானவனாவான். இருப்பினும், அவன் மிகமிகச் சிறியவன் என்பதால், புறச்சக்தியினால் மயக்கப்படக் கூடியவனாக இருக்கிறான். இவ்விதமாக, தனது பல்வேறு உடல்களை ஏற்படுத்திக் கொள்கிறான்.

பதம் 6.16.10
ந ஹி அஸ்யாஸ்தி ப்ரிய: கஸ்சின் நாப்ரிய: ஸ்வ: பரோ ‘பி வா
ஏக: ஸர்வ-தியாம் த்ரஷ்டா கர்த்ரூணாம் குண-தோஷயோ:

ந—இல்லை; ஹி—உண்மையில்; அஸ்ய—ஜீவராசிக்கு; அஸ்தி—இருக்கிறான்; ப்ரிய:—பிரியமான; கஸ்சித்—ஒருவன்; ந—இல்லை; அப்ரிய:—பிரியமில்லாத; ஸ்வ—தன்னுடையவன்; பர:—மற்றவன்; அபி—கூட; வா—அல்லது; ஏக:—ஒரே; ஸர்வ- தியாம்—எல்லோருடைய புத்திக்கும்; த்ரஷ்டா—சாட்சி; கர்த்ரூணாம்—கர்த்தாக்களுக்கு; குண-தோஷயோ:—சரியான மற்றும் தவறான செயல்களின்.

இந்த ஜீவராசிக்கு மிகவும் பிரியமானவனுமில்லை, பிரியமில்லாதவனுமில்லை. தன்னுடையதற்கும், பிறருடையதற்கும் இடையில் அவன் வேறுபாடு காண்பதில்லை. அவன் இரண்டற்ற ஒருவனாவான்; அதாவது, அவன் நண்பர்கள் அல்லது பகைவர்களாலோ, நல்லவர்கள் அல்லது தீயவர்களாலோ பாதிக்கப்படுவதில்லை. அவன் மனிதர்களின் வெவ்வேறு குணங்களுக்கு ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிறான்.

பதம் 6.16.11
நாதத்த ஆத்மா ஹி குணம் ந தோஷம் ந க்ரியா-ஃபலம்
உதாஸுனவத் ஆஸீன: பராவர-த்ருக் ஈஸ்வர:

ந—இல்லை; ஆதத்தே—ஏற்கிறார்; ஆத்மா—பரமபுருஷர்; ஹி—உண்மையில்; குணம்—இன்பம்; ந—இல்லை; தோஷம்—துன்பம்; ந—அல்லது; க்ரியா-ஃபலம்—கர்ம பலனை; உதாஸீன-வத்—ஒரு மத்தியஸ்தர் போல்; ஆஸீன:—(இதய மத்தியில்) அமர்ந்து கொண்டு; பர-அவர-த்ருக்—காரண, விளைவுகளைப் பார்த்தபடி; ஈஸ்வர:—பரமபுருஷர்.

காரண, விளைவுகளை உண்டாக்குபவரான பரமபுருஷர் (ஆத்மா), கருமத்தினால் விளையும் இன்ப, துன்பங்களை ஏற்றுக்கொள்வதில்லை. பௌதிக உடலை ஏற்கவேண்டிய நிர்பந்தத்திலிருந்து அவர் முற்றிலும் சுதந்திரமானவராவார். அவருக்கு பௌதிக உடல் இல்லையென்பதால், அவர் எப்பொழுதும் நடுநிலையாக நடந்து கொள்கிறார். ஜீவராசிகள் பகவானின் பின்னப் பகுதிகளாக இருப்பதால், பகவானின் குணங்களை மிகச்சிறிய அளவில் பெற்றுள்ளனர். எனவே ஒருவன் துக்கத்தினால் பாதிக்கப்படக் கூடாது.

பதம் 6.16.12
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
இதி உதீர்ய கதோ ஜீவோ ஞாதயஸ் தஸ்ய தே ததா
விஸ்மிதா முமுசு: சோகம் சித்வாத்ம-ஸ்னேஹ-ஸ்ருங்கலாம்

ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; உதீர்ய—பேசிவிட்டு; கத:—சென்று விட்டான்; ஜீவ:—(சித்ரகேதுவின் மகனாகத் தோன்றியிருந்த) ஜீவாத்மா; ஞாதய:—உறவினர்களும், குடும்பத்தினரும்; தஸ்ய—அவனுடைய; தே—அவர்கள்; ததா—அப்பொழுது; விஸ்மிதா:—ஆச்சரியமடைந்து; முமுசு:—விட்டுவிட்டனர்; சோகம்—துக்கத்தை; சித்வா—துண்டித்து; ஆத்ம-ஸ்நேஹ—உறவினால் உண்டான பாசத்தின்; ஸ்ருங்கலாம்—இரும்புச் சங்கிலியை.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சித்ரகேதுவினுடைய மகனின் ரூபத்திலிருந்த பந்தப்பட்ட ஆத்மா இவ்வாறு பேசிவிட்டுச் சென்றதும், சித்ரகேதுவும், மற்ற உறவினர்களும் ஆச்சரியமடைந்து, அவனுடன் தங்களைப் பிணைத்திருந்த பாசச் சங்கிலியை அறுத்து, துக்கத்திலிருந்து விடுபட்டனர்.

பதம் 6.16.13
நிர்ஹ்ருத்ய ஞாதயோ ஞாதேர் தேஹம் க்ருத்வோசிதா: க்ரியா:
தத்யஜுர் துஸ்த்யஜம் ஸ்நேஹம் சோக-மோஹ-பயார்திதம்

நிர்ஹ்ருத்ய—நீக்கி; ஞாதய:—சித்ரகேதுவும், மற்றெல்லா உறவினர்களும்; ஞாதே:—மகனின்; தேஹம்—உடலை; க்ருத்வா—செய்து; உசிதா—தகுந்த; க்ரியா:—கிரியைகளை; தத்யஜு:—கைவிட்டனர்; துஸ்த்யஜம்—விடுவதற்கு மிகக் கடினமான; ஸ்நேஹம்—பாசத்தை; சோக—துக்கம்; மோஹ—மோகம்; பய—பயம்; அர்தி—மற்றும் துன்பத்தை; தம்—கொடுக்கும்.

அந்த உறவினர்கள், ஈமக் கிரியைகளைச் செய்து, இறந்த குழந்தையின் உடலை எரித்துத் தங்கள் கடமைகளை நிறைவேற்றியபின், மோகம், துக்கம், பயம், துன்பம் ஆகியவற்றிற்குக் காரணமான பாசத்தைவிட்டொழித்தனர். அப்படிப்பட்ட பாசத்தை விடுவது நிச்சயமாக கடினம்தான். ஆனால் அவர்கள் மிகச் சுலபமாக அதை விட்டுவிட்டனர்.

பதம் 6.16.14
பால-க்ன்யோ வ்ரீடிதாஸ் தத்ர பால-ஹத்யா-ஹத-ப்ரபா:
பால-ஹத்யா-வ்ரதம் சேருர் ப்ராஹ்மணைர் யன் நிரூபிதம்
யமுனாயாம் மஹாராஜ ஸ்மரந்த்யோ த்விஜ-பாஷிதம்

பால-க்ன்ய:—குழந்தையைக் கொன்றவர்கள்; வ்ரீடிதா:—மிகவும் வெட்கமடைந்து; தத்ர—அங்கு; பால-ஹத்யா—குழந்தையைக் கொன்றதால்; ஹத—இழந்து; ப்ரபா:—உடலின் காந்தியை; பால-ஹத்யா-வ்ரதம்—குழந்தையைக் கொன்றதற்கான பிராயச்சித்தத்தை; சேரு:—செய்தனர்; ப்ராஹ்மணை:—புரோகிதர்களால்; யத்—எது; நிரூபிதம்—விவரிக்கப்பட்டதோ; யமுனாயாம்—யமுனை நதியில்; மஹா-ராஜ—பரீட்சித்து மகாராஜனே; ஸ்மரந்த்ய:—நினைவிற் கொண்டு; த்விஜ-பாஷிதம்—பிராமணர்களால் கூறப்பட்ட வார்த்தைகளை.

குழந்தைக்கு விஷம் கொடுத்த கிருதத்யுதியின் சக மனைவிகள் மிகவும் வெட்கத்திற்குள்ளாகி, தங்களது உடல்களின் காந்தியை இழந்தனர். அரசே, இவ்வாறு அழுது புலம்பிய வேளையில், அங்கிரரின் போதனைகளை நினைவுகூர்ந்த அவர்கள், குழந்தைகள் பெறும் நோக்கத்தைக் கைவிட்டனர். பிறகு பிராமணர்களின் வழிகாட்டலின்படி, யமுனைக்கரைக்குச் சென்ற அவர்கள் அதில் குளித்துவிட்டு, தங்களுடைய பாவச் செயல்களுக்கான பிராயச்சித்தத்தைச் செய்தனர்.

பதம் 6.16.15
ஸ இத்தம் ப்ரதிபுத்தாத்மா சித்ரகேதுர் த்விஜோக்திபி:
க்ருஹாந்த-கூபான் நிஷ்க்ராந்த: ஸர:-பங்காத் இவ த்விப:

ஸ:—அவர்; இத்தம்—இவ்வாறு; ப்ரதிபுத்த-ஆத்மா—ஆத்ம ஞானத்தை நன்கறிந்து; சித்ரகேது:—சித்ரகேது; த்விஜ-உக்திபி:—(அங்கிரர், நாரதர் ஆகிய) சிறந்த பிராமணர்களின் உபதேசங்களின்படி; க்ருஹ-அந்த-கூபாத்—குடும்ப வாழ்வெனும் இருண்ட கிணற்றிலிருந்து; நிஷ்க்ராந்த:—வெளிவந்தார்; ஸர:—ஏரியின்; பங்காத்—சேற்றிலிருந்து; இவ—போல; த்விப:—ஒரு யானை.

இவ்விதமாக, பிராமணர்களான அங்கிரர் மற்றும் நாரதரின் உபதேசங்களால் ஞான ஒளியூட்டப்பட்ட சித்ரகேது மகாராஜன், ஆத்ம ஞானத்தை முழுமையாக அறியப்பெற்றார். ஒரு ஏரியின் சேற்றிலிருந்து ஒரு யானை விடுதலை அடைவதுபோல், சித்ரகேதுவும் குடும்ப வாழ்வெனும் இருண்ட கிணற்றிலிருந்து வெளியே வந்தார்.

பதம் 6.16.16
காலிந்யாம் விதிவத் ஸ்னாத்வா க்ருத-புண்ய-ஜல-க்ரிய:
மௌனேன ஸம்யத-ப்ராணோ ப்ரஹ்ம-புத்ராவ் அவந்தத

காலிந்யாம்—யமுனை நதியின்; விதி-வத்—விதிமுறைகளுக்கேற்ப; ஸ்நாத்வா—குளித்து; க்ருத—செய்து; புண்ய—புண்ணியமான; ஜல-க்ரிய—ஜல தர்ப்பணம்; மௌனேன—மௌனமாக; ஸம்யத-ப்ராண:—மனதையும், புலன்களையும் அடக்கி; ப்ரஹ்ம-புத்ரௌ—பிரம்ம புத்திரர்களை (அங்கிரர் மற்றும் நாரதர்); அவந்தத—வணங்கினார்.

அரசர் யமுனை நதியில் முறைப்படி நீராடி, முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும் ஜல தர்ப்பணம் செய்தார். பிறகு வைராக்கியத்துடன் புலன்களையும், மனதையும் அடக்கி, பிரம்ம தேவரின் புத்திரரர்களை (அங்கிரர் மற்றும் நாரதர்) மரியாதையுடன் வணங்கினார்.

பதம் 6.16.17
அத தஸ்மை ப்ரபன்னாய பக்தாய ப்ரயதாத்மனே
பகவான் நாரத: ப்ரீதோ வித்யாம் ஏதாம் உவாச ஹ

அத—அதன்பிறகு; தஸ்மை—அவருக்கு; ப்ரபன்னாய—சரண் புகுந்த; பக்தாய—பக்தரென்பதால்; ப்ரயத-ஆத்மனே—புலன்களை அடக்கியவரான; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்தவரான; நாரத:—நாரதர்; ப்ரீத:—மிகவும் திருப்தியடைந்து; வித்யாம்—உன்னத ஞானத்தை; ஏதாம்—இந்த; உவாச—உபதேசித்தார்; ஹ—உண்மையில்.

அதன்பிறகு, புலனடக்கமுள்ள பக்தரும், சரணடைந்த ஆத்மாவுமான சித்ரகேதுவிடம் மிகவும் திருப்தியடைந்த, சக்திவாய்ந்த முனிவரான நாரதர், பின்வரும் உன்னத ஞானத்தை அவருக்கு உபதேசித்தார்.

பதங்கள் 6.16.18 – 6.16.19
ஓம் நமஸ் துப்யம் பகவதே வாஸுதேவாய தீமஹி ப்ரத்யும்னாயாநிருத்தாய நம: ஸங்கர்ஷணாய ச

நமோ விஞ்ஞான-மாத்ராய பரமானந்த-மூர்த்தயே
ஆத்மாராமாய சாந்தாய நிவ்ருத்த-த்வைத-த்ருஷ்டயே

ஓம்—எம்பெருமானே; நம:—வணக்கங்கள்; துப்யம்—தங்களுக்கு; பகவதே—பரமபுருஷருக்கு; வாஸுதேவாய—வசுதேவ புத்திரரான ஸ்ரீ கிருஷ்ணரை; தீமஹி—நான் தியானிக்கிறேன்; ப்ரத்யும்னாய—பிரதியும்னருக்கு; அநிருத்தாய—அநிருத்தருக்கு; நம:—வணக்கங்கள்; ஸங்கர்ஷணாய—பகவான் சங்கர்ஷணருக்கு; ச—கூட; நம:—வணக்கங்கள்; விஞ்ஞான-மாத்ராய—ஞானமயமானவருக்கு; பரம-ஆனந்த-மூர்த்தயே—பரமானந்த மூர்த்திக்கு; ஆத்ம-ஆராமாய—தன்னிறைவுடைய அந்த பகவானுக்கு; சாந்தாய—சாந்தருக்கு; நிவ்ருத்த-த்வைத-த்ருஷ்டயே:—இருமையிலிருந்து விலகியவர் அல்லது இரண்டற்ற ஒருவர்.

(நாரதர் சித்ரகேதுவிற்குப் பின்வரும் மந்திரத்தை உபதேசித்தார்.) ஓம்கார சொரூபியான பகவானே, பரமபுருஷரே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். பகவான் வாசுதேவரே, தங்களை நான் தியானிக்கிறேன். பகவான் பிரதியும்னரே, பகவான் அநிருத்தரே, பகவான் சங்கர்ஷணரே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். ஆன்மீக சக்தியின் இருப்பிடமே, பரமானந்த சொரூபியே, சாந்தரும், தன்னிறைவு உடையவருமான தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள், பரம சத்தியமே, இரண்டற்ற ஒருவரே, தாங்கள் பிரம்மனாகவும், பரமாத்மாவாகவும், பகவானாகவும் உணரப்படுகிறீர்கள். ஆகவே தாங்கள் சகல ஞானத்திற்கும் இருப்பிடமாவீர். தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.20
ஆத்மானந்தானுபூத்யைவ நயஸ்ய-சக்தி-ஊர்மயே நம:
ஹ்ரிஷீகேசாய மஹதே நமஸ் தே ‘நந்த-மூர்த்தயே

ஆத்ம-ஆனந்த—தங்களுடைய சுய ஆனந்தத்தின்; அனுபூத்யா—உணர்வினாலேயே; ஏவ—நிச்சயமாக; ந்யஸ்த—கைவிடப்படுகின்றன; சக்தி-ஊர்மயே—ஜட இயற்கையின் அலைகள்; நம:—பணிவான வணக்கங்கள்; ஹ்ரிஷீகேசாய—புலன்களின் பரம ஆளுனருக்கு; மஹதே—பரமபுருஷருக்கு; நம:—பணிவான வணக்கங்கள்; தே—தங்களுக்கு; அனந்த—எண்ணற்ற; மூர்த்தயே—ரூபங்களுடைய.

தங்களுடைய ஆத்மானந்த அனுபவத்தினால், தாங்கள் ஜட இயற்கையின் அலைகளுக்கு மேற்பட்ட உன்னத நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறீர்கள். ஆகவே, எம்பெருமானே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். தாங்கள் புலன்களின் பரம ஆளுனராவீர். தங்களுடைய அவதாரங்களும் எண்ணற்றவையாகும். தாங்கள் அனைவரிலும் மிகப் பெரியவர். எனவே தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.21
வசஸி உபரதே ‘ப்ராப்ய ய ஏகோ மனஸா ஸஹ
அனாம-ரூபஸ் சின்-மாத்ர: ஸோ ‘வ்யான் ந: ஸத்-அஸத்-பர:

வசஸி—வார்த்தைகளில்; உபரதே—முடிவடைகிறது; அப்ராப்ய—இலக்கை அடையாமல்; ய—எவர்; ஏக:—இரண்டற்ற ஒருவர்; மனஸா—மனது; ஸஹ—உடன்; அனாம—பௌதிக பெயர் இல்லாத; ரூப:—அல்லது பௌதிக ரூபம்; சித்-மாத்ர:—முற்றிலும் ஆன்மீகமானவர்; ஸ:—அவர்; அவ்யாத்—அன்புடன் காப்பாற்றுவாராக; ந:—நம்மை; ஸத்-அஸத்-பர:—எல்லாக் காரணங்களுக்கும் காரணமானவர் (பரம காரணம்).

பௌதிக நாம ரூபங்கள் பகவானுக்குப் பொருந்தாதவை என்பதால், பந்தப்பட்ட ஆத்மாவின் வார்த்தைகளும், மனமும் பரமபுருஷரை நெருங்க முடியாது. ஏனெனில் அவர் முற்றிலும் ஆன்மீகமானவரும், ஸ்தூல மற்றும் சூட்சும ரூபங்களுக்கு அப்பாற்பட்டவருமாவார். அருவ பிரம்மன் என்பது அவரது ரூபங்களுள் ஒன்றாகும். அவர் தமது இஷ்டம்போல் நம்மைக் காத்தருள்வாராக.

பதம் 6.16.22
யஸ்மின் இதம் யதஸ் சேதம் திஷ்டதி அப்யேதி ஜாயதே
ம்ருண்மயேஷ்வ் இவ ம்ருஜ்-ஜாதிஸ் தஸ்மை தே ப்ரஹ்மணே நம:

யஸ்மின்—யாரிடத்தில்; இதம்—இது (பிரபஞ்ச தோற்றம்); யத—எவரிலிருந்து; ச—கூட; இதம்—இது (பிரபஞ்ச தோற்றம்); திஷ்டதி—நிற்கிறதோ; அப்யேதி—ஒடுங்குகிறதோ; ஜாயதே—பிறக்கிறதோ; ம்ருத்-மயேஷு—மண்ணினால் செய்யப்பட்டவைகளில்; இவ—போல்; ம்ருத்-ஜாதி:—மண்ணிலிருந்து உண்டான; தஸ்மை—அவருக்கு; தே—உங்களுக்கு; ப்ரஹ்மணே—பரம காரணமான; நம:—பணிவான வணக்கங்கள்.

முற்றிலும் மண்ணினால் செய்யப்பட்ட பானைகள், அந்த மண்ணிலேயே இருந்து, பிறகு உடைந்துவிடும் பொழுது மண்ணாகவே மாறுகின்றன. அவ்வாறே பிரபஞ்சத் தோற்றமானது பரப்பிரம்மனால் செய்யப்பட்டு, பரப்பிரம்மனிலேயே இருந்து, அதே பரப்பிரம்மனிலேயே ஒடுங்கியும்விடுகிறது. எனவே, பிரம்மத்திற்குக் காரணமானவர் பரமபுருஷரே என்பதால் அவருக்குப் பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.23
யன் ந ஸ்ப்ருசந்தி ந விதுர் மனோ புத்தீந்ரியாஸவ
அந்தர் பஹிஸ் ச விததம் வ்யோமவத் தன் நதோ ‘ஸ்மி அஹம்

யத்—எவரை; ந—இல்லை; ஸ்ப்ருசந்தி—தொட முடியும்; ந—அல்லது; விது:—அறிய முடியும்; மன:—மனதும்; புத்தி—புத்தியும்; இந்ரிய—புலன்களும்; அஸவ:—பிராண வாயுக்களும்; அந்த:—உள்ளே; பஹி:—வெளியே; ச—கூட; விததம்—விரிந்துள்ளார்; வ்யோம-வத்—ஆகாயம் போல்; தத்—அவரை; நத: அஸ்மி—வணங்குகிறேன்; அஹம்—நான்.

அந்த பரப்பிரம்மன் பரமபுருஷரிலிருந்து உற்பத்தியாகி ஆகாயம் போல் உள்ளும், புறமும் பரவி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். இருப்பினும் மனம், புத்தி, புலன்கள், உயிர்ச்சக்தி ஆகியவற்றினால் அவரைத் தொடவோ, அறியவோ முடியாது. அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.24
தேஹேந்ரிய-ப்ராண-மனோ-தியோ ‘மீ
யத்-அம்ச-வித்தா: ப்ரசரந்தி கர்மஸு
நைவான்யதா லௌஹம் இவாப்ரதப்தம்
ஸ்தானேஷுதத் த்ரஷ்ட்ரபதேசம் ஏதி

தேஹ—உடல்; இந்ரிய—புலன்கள்; ப்ராண—பிராண வாயுக்கள்; மன:—மனம்; திய:—மற்றும் புத்தி; அமீ—அவர்கள் எல்லோரும்; யத்-அம்ச-வித்தா:—பிரம்மனின், அல்லது பரமபுருஷரின் கதிர்களால் வசீகரிக்கப்பட்டு; ப்ரசரந்தி—அசைகின்றன; கர்மஸு—பல்வேறு செயல்களில்; ந—இல்லை; ஏவ—உண்மையில்; அன்யதா—மற்ற சமயங்களில்; லௌஹம்—இரும்பு; இவ—போல; அப்ரதப்தம்—(நெருப்பினால்) சூடாக்கப்படாத; ஸ்தானேஷு—அந்த சூழ்நிலைகளில்; தத்—அது; த்ரஷ்டர-அபதேசம்—ஒரு விஷயத்தின் பெயரை; ஏதி—அடைகிறது.

எப்படி நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படும் இரும்பு எரிக்கும் சக்தியைப் பெறுகிறதோ, அப்படியே உடல், புலன்கள், மனம், புத்தி, பிராண வாயுக்கள் ஆகியவை வெறும் ஜடப் பிண்டங்களே என்றாலும், அவற்றினுள் பரமபுருஷரால் சிறு உணர்வுத் துளி புகுத்தப்பட்டதும், அவற்றினால் செயற்பட முடிகிறது. எப்படி நெருப்பில் காய்ச்சினாலொழிய இரும்பினால் எரிக்க முடியாதோ, அப்படியே, பரப்பிரம்மனின் தயவு இருந்தாலொழிய, உடலிலுடள்ள புலன்களால் செயற்பட முடியாது.

பதம் 6.16.25
ஓம் நமோ பகவதே மஹா-புருஷாய மஹானுபாவாய மஹா-
விபூதி-பதயே-ஸகல-ஸாத்வத-பரிவ்ருட-நிகர-கர-கமல-குட்மலோ
பலாலித-சரணாரவிந்த-யுகல பரம-பரமேஷ்டின் நமஸ் தே

ஓம்—பரமபுருஷரே; நம—பணிவான வணக்கங்கள்; பகவதே—ஆறு ஐசுவரியங்கள் நிரம்பப்பெற்றவரான தங்களுக்கு; மஹா-புருஷாய—பரம அனுபவிப்பாளரும்; மஹா-அனுபாவாய—பூரண தன்னுணர்வு பெற்றவர், அல்லது பரமாத்மா; மஹா-விபூதி-பதயே—எல்லா யோக சக்திகளுக்கும் தலைவரும்; ஸகல-ஸாத்வத-பரிவ்ருட—மிகச்சிறந்த எல்லா பக்தர்களின்; நிகர—திரளான; கர-கமல—கமலக் கரங்களின்; குட்மல—தளிர்களால்; உபலாலித—சேவிக்கப்பெற்ற; சரண-அரவிந்த-யுகல—இரு தாமரைப் பாதங்கள்; பரம—மிக உயர்ந்த; பரமே-ஷ்டின்—ஆன்மீக உலகில் இருப்பவருமான; நம: தே—தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

மிகவுயர்ந்த கிரகமான ஆன்மீக உலகில் நிலைபெற்றிருக்கும் உன்னதமான பகவானே, மிகச் சிறந்த பக்தர்களின் தாமரைத் தளிர் போன்ற கரங்களால் வருடப் பெற்ற தாமரைப் பாதங்களை உடையவரும், பரமபுருஷரும், ஆறு ஐசுவரியங்கள் (கல்யாண குணங்கள்) நிரம்பப்பெற்றவரும், புருஷ-ஸூக்த ஸ்தோத்திரங்களில் பரமபுருஷரென்று குறிப்பிடப்படுபவரும், பரிபூரணமானவரும், பூரண தன்னுணர்வு பெற்றவரும், யோக சித்திகளுக்கெல்லாம் தலைவருமான தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.26
ஸ்ரீ-சுக உவாச
பக்தாயைதாம் ப்ரபன்னாய வித்யாம் ஆதிஸ்ய நாரத:
யயாவ் அங்கிரஸா ஸாகம் தாம ஸ்வாயம்புவம் ப்ரபோ

ஸ்ரீ சுக:—உவாச ஸ்ரீ—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பக்தாய—பக்தருக்கு; ஏதாம்—இது; ப்ரபன்னாய—முழுமையாக சரணடைந்தவருக்கு; வித்யாம்—உன்னத அறிவை; ஆதிஸ்ய—உபதேசித்து; நாரத:—மாமுனிவரான நாரதர்; யயௌ—சென்றார்; அங்கிரஸா—மாமுனிவர் அங்கிரர்; ஸாகம்—உடன்; தாம—மிக உயர்ந்த கிரகத்திற்கு; ஸ்வாயம்புவம்—பிரம்ம தேவருடைய; ப்ரபோ—அரசே.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சித்ரகேதுவிற்கு ஆன்மீக குரு ஆனதும், நாரதர் இந்த ஸ்தோத்திரத்தை முழு சரணாகதியடைந்த அவருக்கு உபதேசித்தார். பரீட்சித்து மகாராஜனே, நாரதர் பிறகு மாமுனிவரான அங்கிரருடன் மிக உயர்ந்த கிரகமான பிரம்மலோகத்திற்குச் சென்றார்.

பதம் 6.16.27
சிதர்கேதுஸ் து தாம் வித்யாம் யதா நாரத-பாஷிதாம்
தாரயாம் ஆஸ ஸப்தாஹம் அப்-பக்ஷ: ஸுஸமாஹித:

சித்ரகேது: து—சித்ரகேதுவும்; தாம்—அந்த; வித்யாம்—உன்னத அறிவை; யதா—எவ்வாறு; நாரத-பாஷிதாம்—மாமுனிவர் நாரதரால் உபதேசிக்கப்பட்ட; தாரயாம் ஆஸ—பாராயணம் செய்தார்; ஸப்த-அஹம்—ஒரு வாரம் தொடர்ந்து; அப்-பக்ஷ:—நீரை மட்டும் பருகி; ஸு-ஸமாஹித:—மிகவும் கவனத்துடனும், அக்கறையுடனும்.

சித்ரகேது விரதமிருந்து, நீர் மட்டும் பருகி, ஒரு வாரம் தொடர்ந்து நாரத முனிவரால் கொடுக்கப்பட்ட மந்திரத்தை மிகவும் கவனத்துடனும், அக்கறையுடனும் ஜபித்து வந்தார்.

பதம் 6.16.28
தத: ஸ ஸப்த-ராத்ராந்தே வித்யயா தார்யமாணயா
வித்யாதராதிபத்யம் ச லேபே ‘ப்ரதிஹதம் ந்ருப

தத:—இதிலிருந்து; ஸ:—அவர்; ஸப்த-ராத்ர-அந்தே—ஏழு இரவுகளின் முடிவில்; வித்யயா—பிரார்த்தனைகளால்; தார்யமாணயா—மிகவும் கவனமாகச் செய்த; வித்யாதர-அதிபத்யம்—(நடுவில் கிடைத்த பலனாக) வித்யாதரர்களின் தலைவராக; ச—கூட; லேபே—அடைந்தார்; அப்ரதிஹதம்—ஆன்மீக குருவின் உபதேசங்களிலிருந்து மாறாமல்; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே.

பரீட்சித்து மகாராஜனே, சித்ரகேது தன் ஆன்மீக குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தைத் தொடர்ந்து ஒரு வாரம் மட்டுமே ஜபித்த பிறகு, அவருடைய ஆன்மீக அறிவின் முன்னேற்றத்திற்கு நடுவில் கிடைத்த பலனாக, வித்யாதர லோகத்தின் ஆட்சியைப் பெற்றார்.

பதம் 6.16.29
தத: கதிபயாஹோபிர் வித்யயேத்த-மனோ-கதி:
ஜகாம தேவ-தேவஸ்ய சேஷஸ்ய சரணாந்திகம்

தத:—அதன்பிறகு; கதிபய-அஹோபி:—சில நாட்களுக்குள்; வித்யயா—தெய்வீக மந்திரத்தால்; இத்த-மன:-கதி:—மனதின் போக்கு ஞான ஒளியூட்டப்பட்டு; ஜகாம—சென்றார்; தேவ-தேவஸ்ய—எல்லாத் தெய்வங்களுக்கும் அல்லது தேவர்களுக்கும்; சேஷஸ்ய—பகவான் சேஷரின்; சரண-அந்திகம்—தாமரைப் பாதங்களின் அடைக்கலத்தின் கீழ்.

அதன்பிறகு சித்ரகேது ஜபித்து வந்த அந்த மந்திரத்தின் செல்வாக்கினால், சில நாட்களுக்குள் அவரது மனம் ஆன்மீக முன்னேற்றத்தால் ஒளியூட்டப்பட்டு, அவர் பகவான் அநந்ததேவரின் திருவடித் தாமரைகளில் அடைக்கலம் பெற்றார்.

பதம் 6.16.30
ம்ருணால-கெளரம் சிதி-வாஸஸம் ஸ்ஃபுரத்
கிரீட-கேயூர-கடித்ர-கங்கணம்
ப்ரஸன்ன-வக்த்ராருணலோசனம் வ்ருதம்
ததர்ச ஸித்தேஸ்வர-மண்டலை: ப்ரபும்

ம்ருணால-கௌரம்—தாமரை நார்களைப் போல் வெண்மையான; சிதி-வாஸஸம்—நீலப்பட்டாடை அணிந்து; ஸ்ஃபுரத்—பளப்பளப்பான; கிரீட—கிரீடம்; கேயூர—கடகங்கள்; கடித்ர—ஒட்டியாணம்; கங்கணம்—வளையல்கள்; ப்ரஸன்ன-வக்த்ர—சிரித்த முகத்துடன்; அருண-லோசனம்—சிவந்த கண்களுடைய; வ்ருதம்—சூழப்பட்டிருப்பதை; ததர்ச—அவர் பார்த்தார்; ஸித்த-ஈஸ்வர-மண்டலை:—பரம பூரணத்துவமடைந்த பக்தர்களால்; ப்ரபும்—பரமபுருஷரின்.

பரமபுருஷராகிய பகவான் சேஷனின் பாத கமலங்களை அடைந்த சித்ரகேது, பகவான் தாமரையின் வெள்ளை நார்களைப் போல் வெண்ணிறமாக இருப்பதைக் கண்டார். அவர் நீலப் பட்டாடை அணிந்து, பிரகாசமாக ஜொலிக்கும் கிரீடம், கடகங்கள், ஒட்டியாணம், வளையல்கள் ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அவரது முகம் புன்சிரிப்புடையதாயும், கண்கள் சிவந்தும் இருந்தன. அவர் சனத் குமாரர்களைப் போன்ற சிறந்த முக்தி பெற்ற ஆத்மாக்களால் சூழப்பட்டிருந்தார்.

பதம் 6.16.31
தத்-தர்சன-த்வஸ்த-ஸமஸ்த-கில்பிஷ:
ஸ்வஸ்தாமலாந்தஹ்கரணோ ‘ப்யயான் முனி:
ப்ரவ்ருத்த-பக்த்யா ப்ரணயாஸ்ரு-லோசன:
ப்ரஹ்ருஷ்ட ரோமானமத் ஆதி-புருஷம்

தத்-தர்சன—பரமபுருஷரின் தரிசனத்தால்; த்வஸ்த—அழிந்து; ஸமஸ்த-கில்பிஷ:—எல்லாப் பாவங்களும்; ஸ்வஸ்த—ஆரோக்கியமான; அமல—நிர்மலமான; அந்தஹ்கரண:—யாருடைய இதயம்; அப்யயாத்—நேருக்கு நேராகச் சந்தித்து; முனி:—பரிபூரண மனத்திருப்தியினால் மெளனமாயிருந்த அந்த அரசர்; ப்ரவ்ருத்த-பக்த்யா—அதிகரித்த பக்தி மனப்பான்மையால்; ப்ரணய-அஸ்ரு-லோசன:—அன்பினால் கண்களில் கண்ணீருடன்; ப்ரஹ்ருஷ்ட-ரோம—ஆனந்தத்தினால் மெய் சிலிர்க்க; அனமத்—பணிவுடன் வணங்கினார்; ஆதி-புருஷம்—ஆதி புருஷரின் அம்சத்திடம்.

சித்ரகேது மகாராஜன் பரமபுருஷரை தரிசித்த உடனேயே, எல்லா பெளதிக களங்கங்களிலிருந்தும் தூய்மையடைந்து, அவரது ஆதியான கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றார். இவ்வாறு மௌனமாகி, பகவானிடம் உள்ள அன்பினால் மெய்சிலிர்க்க, அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. அவர் சிறந்த பக்தியுடனும், பேரன்புடனும் மூல முழுமுதற்கடவுளைப் பணிவுடன் வணங்கினார்.

பதம் 6.16.32
ஸ உத்தமஸ்லோக-பதாப்ஜ-விஷ்டரம்
ப்ரேமாஸ்ரு-லேசைர் உபமேஹயன் முஹு:
ப்ரேமோபருத்தாகில-வர்ண-நிர்கமோ
நைவாசகத் தம் ப்ரஸமீடிதும் சிரம்

ஸ:—அவர்; உத்தமஸ்லோக—பரமபுருஷரின்; பத-அப்ஜ—தாமரைப் பாதங்களுடைய; விஷ்டரம்—தங்கும் இடத்தை; ப்ரேம-அஸ்ரு—தூய்மையான அன்புக் கண்ணீரின்; லேசை:—துளிகளால்; உபமேஹயன்—நனைத்து; முஹு:—மீண்டும் மீண்டும்; ப்ரேம-உபருத்த—பிரேமையினால் தொண்டை அடைத்துக் கொள்ள; அகில—எல்லா; வர்ண—எழுத்துக்களின்; நிர்கம:—வெளிப்பாடு; ந—இல்லை; ஏவ—உண்மையில்; அசகத்—முடிந்தது; தம்—அவரை; ப்ரஸ மீடிதும்—துதிக்க; சிரம்—நீண்ட நேரமாக.

சித்ரகேது அன்பும், பாசமும் நிறைந்த கண்ணீரால், பரமபுருஷரின் தாமரைப் பாதங்களுடைய இருப்பிடத்தை மீண்டும் மீண்டும் நனைத்தபடி இருந்தார். ஆனந்தப் பரவசத்தினால் அவரது தொண்டை அடைத்துக் கொண்டதால், நீண்ட நேரமாக பகவானைத் துதிப்பதற்கேற்ற வார்த்தைகளை அவரால் உச்சரிக்க இயலவில்லை.

பதம் 6.16.33
தத: ஸமாதாய மனோ மனீஷயா
பபாஷ ஏதத் ப்ரதிலப்த-வாக் அஸௌ
நியம்ய ஸர்வேந்ரிய-பாஹ்ய-வர்தனம்
ஜகத்-குரும் ஸாத்வத-சாஸ்த்ர-விக்ரஹம்

தத:—அதன்பிறகு; ஸமாதாய—கட்டுப்படுத்தி; மன:—மனதை; மனீஷயா—அவருடைய புத்தியால்; பபாஷ—பேசினார்: ஏதத்—இதை; ப்ரதிலப்த—திரும்பப் பெற்று; வாக்—பேச்சை; அஸௌ—அவர் (சித்ரகேது); நியம்ய—கட்டுப்படுத்தி; ஸர்வ-இந்திரிய—எல்லாப் புலன்களின்; பாஹ்ய—புற; வர்தனம்—அலைச்சலை; ஜகத்-குரும்—எல்லோருக்கும் ஆன்மீக குருவாக இருப்பவரை; ஸாத்வத—பக்தித் தொண்டின்; சாஸ்த்ர—புனித சாஸ்திரங்களின்; விக்ரஹம்—சொரூபமான.

அதன்பிறகு, புத்தியால் தன் மனதைக் கட்டுப்படுத்தியதன் மூலமாக, தன் புலன்களைப் புற ஈடுபாடுகளிலிருந்து தடுத்து நிறுத்திய அவர், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமான வார்த்தைகளை திரும்பப் பெற்றார். இவ்விதமாக, புனித சாஸ்திரங்களின் (பிரம்ம சம்ஹிதை மற்றும் நாரத-பஞ்சராத்ரம் போன்ற ஸாத்வ-ஸம்ஹிதைகளின்) சொரூபமானவரும், ஜகத் குருவுமான பகவானை அவர் பின்வருமாறு துதிக்கலானார்.

பதம் 6.16.34
சித்ரகேதுர் உவாச
அஜித ஜித: ஸம-மதிபி:
ஸாதுபிர் பவான் ஜிதாத்மபிர் பவதா
விஜிதாஸ் தே ‘பி ச பஜதாம்
அகாமாத்மனாம் ய ஆத்மதோ ‘தி-கருண:

சித்ரகேது: உவாச—சித்ரகேது மகாராஜன் கூறினார்; அஜித—எவராலும் வெல்லமுடியாத பகவானே; ஜித:—வெல்லப்படுகிறீர்கள்; ஸம-மதிபி:—மனதை வென்றவர்களால்; ஸாதுபி:—பக்தர்களால்; பவான்—தாங்கள்; ஜித-ஆத்மபி:—புலன்களை முழுமையாக அடக்கிய; பவதா—உங்களால்; விஜிதா:—வெற்றிகொள்ளப்படுகின்றனர்; தே—அவர்கள்; அபி—கூட; ச—மேலும்; பஜதாம்—எப்பொழுதும் உங்களுடைய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு; அகாம-ஆத்மனாம்—பெளதிக ஆதாயத்தைப் பற்றிய எண்ணமில்லாமல்; ய:—யார்; ஆத்மதா:—உங்களையே கொடுத்து விடுகிறீர்கள்; அதி-கருண:—கருணைமிக்கவரான.

சித்ரகேது கூறினார்: வெல்லுதற்கரிய பகவானே, உங்களை யாராலும் வெல்ல முடியாது என்றபோதிலும், தங்கள் புலன்களையும் மனதையும் அடக்கிய பக்தர்களால் நீங்கள் வெற்றிகொள்ளப்படுகிறீர்கள் என்பதில் ஐயமில்லை. உங்களிடமிருந்து எந்த பெளதிக ஆதாயத்தையும் எதிர்ப்பார்க்காத பக்தர்களிடம் நீங்கள் காரணமற்ற கருணை காட்டுகிறீர் என்பதால், அவர்களால் உங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது. உண்மையில் நீங்கள் உங்களையே அவர்களுக்குக் கொடுத்து விடுகிறீர்கள். இதனால் உங்களுக்கும் உங்களுடைய பக்தர்களிடம் முழு ஆதிக்கம் உள்ளது.

பதம் 6.16.35
தவ விபவ: கலு பகவன்
ஜகத்-உதய-ஸ்திதி-லயாதீனி
விஸ்வ-ஸ்ருஜஸ் தே ‘ம்சாம்சாஸ்
தத்ர ம்ருஷா ஸ்பர்தந்தி ப்ருதக் அபிமத்யா

தவ—உங்களுடைய; விபவ:—விபூதிகளாகும்; கலு—அல்லவா; பகவன்—பரமபுருஷரே; ஜகத்—பிரபஞ்ச தோற்றத்தின்; உதய—படைத்தல்; ஸ்திதி—காத்தல்; லய-ஆதீனி—அழித்தல் முதலானவை; விஸ்வ-ஸ்ருஜ:—பிரபஞ்ச தோற்றத்தின் சிருஷ்டிக் கர்த்தாக்கள்; தே—அவர்கள்; அம்ச-அம்சா:—உங்களுடைய அம்சத்தின் அம்சங்களாவர்; தத்ர—அதில்; ம்ருஷா—வீணாக; ஸ்பர்தந்தி—ஒருவரையொருவர் பகைத்துக் கொள்கின்றனர்; ப்ருதக்—தனித்தன்மைக்காக; அபிமத்யா—ஒரு தப்பெண்ணத்தினால்.

பகவானே, இப்பிரபஞ்சத் தோற்றமும், அதன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவையும் உங்களுடைய விபூதிகளேயாகும். பிரம்மதேவரும், மற்ற சிருஷ்டிகர்த்தாக்களும் உங்களுடைய ஓர் அம்சத்தின் சிறு அம்சங்களேயன்றி வேறில்லை. அவர்கள் பெற்றுள்ள பூரணமற்ற படைப்புச் சக்தி அவர்களைக் கடவுளாக (ஈஸ்வரர்) ஆக்காது. எனவே தங்களைத் தனித்தனி கடவுள்களாக நினைக்கும் அவர்களுடைய உணர்வு உண்மையில் வீண் கெளரவமாகும். அது செல்லத்தக்கதல்ல.

பதம் 6.16.36
பரமாணு-பரம-மஹதோஸ்
த்வம் ஆதி-அந்தாந்தர-வர்த்தீ த்ரய-விதுர:
ஆதாவ் அந்தே ‘பி ச ஸத்வானாம்
யத் த்ருவம் தத் ஏவாந்தராலே ‘பி

பரம-அணு—மிகச்சிறிய அணுவின்; பரம-மஹதோ:— (அணுக்களின் சேர்க்கையினால் உண்டான) மிகப் பெரியதின்; த்வம்—நீங்களே; ஆதி-அந்த—ஆரம்பம் மற்றும் முடிவு ஆகிய இரண்டிலும்; அந்தர—மற்றும் மத்தியிலும்; வர்த்தீ—இருக்கும்; த்ரய-விதுர:—ஆரம்பம், மத்யமம் அல்லது முடிவு ஆகியவை இல்லையென்றாலும்; ஆதௌ—ஆரம்பத்தில்; அந்தே—முடிவில்; அபி—கூட; ச—மேலும்; ஸத்வானாம்—எல்லா இருப்புகளின்; யத்—எது; த்ருவம்—நிலையான; தத்—அது; ஏவ—நிச்சயமாக; அந்தராலே—மத்தியில்; அபி—கூட.

பிரபஞ்ச தோற்றத்தின் மிகச் சிறிய பொருளான அணுவிலிருந்து, பிரம்மாண்டமான பிரபஞ்சங்கள் மற்றும் மொத்த பெளதிக சக்தி வரையுள்ள அனைத்திலும் தாங்களே ஆரம்பமாகவும், நடுவாகவும், முடிவாகவும் இருக்கிறீர்கள். இருப்பினும் ஆரம்பமோ, நடுவோ, அல்லது முடிவோ இல்லாதவர் என்பதால் நீங்கள் நித்தியமானவராவீர். இம்மூன்று கால கட்டங்களிலும் இருப்பவராக நீங்கள் உணரப்படுகிறீர்கள். எனவே தாங்கள் நிலையானவராவீர். பிரபஞ்ச தோற்றம் இல்லாதபொழுதும், ஆதி சக்தியாக நீங்கள் இருக்கிறீர்கள்.

பதம் 6.16.37
க்ஷிதி-ஆதிபிர் ஏஷ கிலாவ்ருத:
ஸப்தபிர் தச-குணோத்தரைர் அண்ட-கோச:
யத்ர பததி அணு-கல்ப:
ஸஹாண்ட-கோடி-கோடிபிஸ் தத் அனந்த:

க்ஷிதி ஆதிபி:—மண் முதலான ஜட உலக மூலப்பொருட்களால்; ஏஷ:—இது; கில—உண்மையில்; ஆவ்ருத:—மூடப்பட்டுள்ளது; ஸப்தபி:—ஏழு; தச-குண உத்தரை:—ஒவ்வொன்றும் முந்தியதைவிட பத்து மடங்கு அதிகம்; அண்ட-கோச:—முட்டை வடிவமுள்ள பிரபஞ்சம்; யத்ர—எங்கு; பததி—விழுகிறது; அணு-கல்ப:—மிகச்சிறிய ஓர் அணுபோல்; ஸஹ—உடன்; அண்ட-கோடி-கோடிபி:—கோடிக்கணக்கான இத்தகைய பிரபஞ்சங்கள்; தத்—ஆகவே; அனந்த:—எல்லையற்றவர் (என்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்).

ஒவ்வொரு பிரபஞ்சமும் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மொத்த சக்தி மற்றும் பொய் அகங்காரம் ஆகிய ஏழு அடுக்குகளால் மூடப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் முந்தியதைவிட பத்து மடங்கு பெரியதாகும். இந்த பிரபஞ்சத்தைத் தவிர இன்னும் எண்ணற்ற பிரபஞ்சங்கள் உள்ளன. அவை எல்லையற்ற அளவுடையவை என்றாலும், சிறிய அணுக்களைப் போல் உங்களுக்குள் சஞ்சரிக்கின்றன. எனவேதான் நீங்கள் எல்லையற்றவர் (அனந்தர்) என்று அழைக்கப்படுகிறீர்கள்.

பதம் 6.16.38
விஷய-த்ருஷோ நர-பசவோ
ய உபாஸதே விபூதிர் ந பரம் த்வாம்
தேஷாம் ஆசிஷ ஈச
தத் அனு வினஸ்யந்தி யதா ராஜ-குலம்

விஷய-த்ருஷ:—புலன் நுகர்வை அனுபவிக்க ஆவல் கொண்டுள்ள; நர-பசவ:—மனித மிருகங்கள்; யே—யார்; உபாஸதே—சிறப்பாக வழிபடுகிறார்களோ; விபூதீ:—பரமபுருஷரின் சிறு துணுக்குகள் (தேவர்கள்); ந—இல்லை; பரம்—பரமபுருஷரான; த்வாம்—தாங்கள்; தேஷாம்—அவர்களுடைய; ஆசிஷ:—வரங்கள்; ஈச—பரம ஈசுவரே; தத்—அவர்களை (தேவர்களை); அனு—பிறகு; வினஸ்யந்தி—அழிந்துவிடுவார்கள்; யதா—எவ்வாறு; ராஜ-குலம்—(அரசாங்கம் முடிவடையும் பொழுது) அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுபவர்கள்.

பகவானே, பரமபுருஷரே, புலன் நுகர்வில் தீவிர வேட்கை கொண்டவர்களும், பல்வேறு தேவர்களை வழிபடுபவர்களுமான புத்தியற்ற மனிதர்கள், மனித ரூபத்திலுள்ள மிருகங்களைவிட எவ்விதத்திலும் சிறந்தவர்களல்ல. மிருக சுபாவத்தின் காரணத்தினால் அவர்கள் உங்களை வழிபடத் தவறிவிடுகின்றனர். அதற்குப் பதிலாக, உங்களுடைய பெருமைகளின் சிறு பொறிகளான அற்ப தேவர்களை அவர்கள் வழிபடுகின்றனர். முழு பிரபஞ்சத்துடன் தேவர்களும் அழிந்துவிடும் பொழுது, அவர்களிடமிருந்து பெறப்பட்ட வரங்களும் அழிந்துவிடுகின்றன. அது, பதவியில் இல்லாத ஓர் அரசரின் பெருந்தன்மையைப் போலாகும்.

பதம் 6.16.39
காம-தியஸ் த்வயி ரசிதா
ந பரம ரோஹந்தி யதா கரம்ப-பீஜானி
ஞானாத்மனி அகுணமயே
குண-கணதோ ‘ஸ்ய த்வந்வ-ஜாலானி

காம-திய:—புலன் நுகர்வுக்கான ஆசைகள்; த்வயி—உங்களிடத்தில்; ரசிதா:—செய்யப்படும்; ந—இல்லை; பரம—பரமபுருஷரே; ரோஹந்தி—வளர்கின்றன (வேறு உடல்களை உண்டாக்குகின்றன); யதா—அவ்வாறே; கரம்ப-பீஜானி—மலடாக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட விதைகள்; ஞான-ஆத்மனி—பூரண ஞானத்தில் நிலைபெற்றுள்ள உங்களிடத்தில்; அகுண-மயே—பெளதிக குணங்களால் பாதிப்படையாதவர்; குண-கணத:—பெளதிக குணங்களிலிருந்து; அஸ்ய—ஒருவனின்; த்வந்வ-ஜாலானி—இருமையெனும் வலையான.

பரமபுருஷரே, புலன் நுகர்வுக்குரிய பெளதிக ஆசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவன், சகல ஞானத்திற்கும் பிறப்பிடமும், பெளதிக குணங்களுக்கு மேற்பட்டவருமான உங்களை வழிபடுவானாயின் அவன், எப்படி மலடாக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட விதைகள் முளைப்பதில்லையோ அப்படியே பெளதிக மறுபிறப்பிற்கு உட்படுவதில்லை. ஜீவராசிகள் ஐடஇயற்கையால் பந்தப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பிறப்பு, இறப்பெனும் தொடர்ச்சிக்கு உட்பட்டுள்ளனர். ஆனால் நீங்கள் உன்னதமானவர் என்பதால், உன்னதமான முறையில் உங்களுடைய சகவாசம் கொள்ளும் நாட்டமுள்ளவர்கள் ஜட இயற்கையின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்புகின்றனர்.

பதம் 6.16.40
ஜிதம் அஜித ததா பவதா
யதாஹ பாகவதம் தர்மம் அனவத்யம்
நிஷ்கிஞ்சனா யே முனய
ஆத்மாராமா யம் உபாஸதே ‘பவர்காய

ஜிதம்—வென்றீர்கள்; அஜித—வெல்லப்பட முடியாதவரே; ததா—அப்பொழுது; பவதா—பகவானாகிய உங்களால்; யதா—எப்பொழுது; ஆஹ—பேசிய; பாகவதம்—பரமபுருஷரை அணுக பக்தனுக்கு உதவும்; தர்மம்—சமய முறையை; அனவத்யம்—குறையற்ற (களங்கத்திலிருந்து விடுபட்ட); நிஷ்கிஞ்சனா:—பௌதிக செல்வங்களால் மகிழ்ச்சியுறும் விருப்பமில்லாத; யே—எவர்கள்; முனய:—சிறந்த தத்துவ ஞானிகளும், சிறந்த முனிவர்களும்; ஆத்ம-ஆராமா:—(பகவானின் நித்தியத் தொண்டர்கள் என்ற தங்களுடைய உண்மை நிலையை நன்கு அறிந்திருப்பதால்) தன்நிறைவு உடையவர்கள்; யம்—யாரை; உபாஸதே—வழிபடுகிறார்கள்; அபவர்காய—பெளதிக பந்தத்திலிருந்து முக்தியடைவதற்கு.

வெல்லப்பட முடியாதவரே, உங்களுடைய தாமரைப் பாதங்களில் தஞ்சமடைவதற்குரிய களங்கமற்ற சமய முறையான பாகவத தர்மத்தை நீங்கள் பேசியபொழுது அதுவே உங்களுடைய வெற்றியாக அமைந்தது. பௌதிக ஆசைகள் இல்லாதவர்களும், தன்நிறைவுடைய முனிவர்களுமான குமாரர்களைப் போன்றவர்கள், பெளதிக களங்கத்திலிருந்து விடுபட உங்களை வழிபடுகின்றனர். அதாவது, உங்களுடைய திருவடித் தாமரைகளில் தஞ்சமடைய பாகவத தர்மம் என்ற முறையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

பதம் 6.16.41
விஷம-மதிர் ந யத்ர ந்ருணாம்
த்வம் அஹம் இதி மம தவேதி சயத் அன்யத்ர
விஷம-தியா ரசிதோ ய:
ஸ ஹி அவிசுத்த: க்ஷயிஷ்ணுர் அதர்ம-பஹுல:

விஷம—சமமில்லாத (உன் மதம், என் மதம்; உன் நம்பிக்கை, என் நம்பிக்கை); மதி:—உணர்வு; ந—இல்லை; யத்ர—எதில்; ந்ருணாம்—மனித சமுதாயத்தின்; த்வம்—நீ; அஹம்—நான்; இதி—இவ்வாறு; மம—என்னுடைய; தவ—உன்னுடைய; இதி—என்று; ச—கூட; யத்—எது; அன்யத்ர—வேறு இடத்தில் (பாகவத தர்மத்திற்குப் புறம்பான வேறு சமய முறைகளில்); விஷம-தியா—சமமற்ற இந்த புத்தியால்; ரசித:—செய்யப்பட்டன; ய—எது; ஸ:—அந்த சமய முறை; ஹி—நிச்சயமாக; அவிசுத்த:—தூய்மையற்றது; க்ஷயிஷ்ணு—தற்காலிகமானது; அதர்ம-பஹுல:—அதர்மம் நிறைந்தது.

பாகவத-தர்மத்தைத் தவிர மற்றெல்லா வகையான சமய முறைகளும் முரண்பாடுகள் நிறைந்தவையாக இருப்பதால், அவை கர்ம-பலனை எதிர்பார்க்கும் எண்ணத்துடனும், ‘நீ, நான்” மற்றும் “உன்னுடையது, என்னுடையது” என்ற வேறுபாடுகளுடனும் செயற்படுகின்றன. ஸ்ரீமத்பாகவதத்தைப் பின்பற்றுவோருக்கு அத்தகைய எண்ணம் கிடையாது. அவர்கள் தங்களை கிருஷ்ணருக்குச் சொந்தமானவர்கள் என்ற எண்ணத்துடனும், கிருஷ்ணர் தங்களுக்குச் சொந்தமானவர் என்ற எண்ணத்துடனும் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றுள்ளனர். தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த மற்ற சமய முறைகளும் உள்ளன. அவற்றில் எதிரியைக் கொல்வதற்கும் யோக சக்திகளைப் பெறுவதற்கும் இடமுண்டு. ஆனால் அத்தகைய சமய முறைகள் தீவிர உணர்ச்சியும், பொறாமையும் நிறைந்தவை என்பதால், அவை தூய்மையற்றவையும், நிலையற்றவையுமாகும். பொறாமை நிறைந்துள்ள காரணத்தால் அவற்றில் அதர்மமும் நிறைந்துள்ளது.

பதம் 6.16.42
க: க்ஷேமோ நிஜ-பரயோ:
கியான் வார்த: ஸ்வ-பர-த்ருஹா தர்மேண
ஸ்வ-த்ரோஹாத் தவ கோப:
பர-ஸம்பீடயா ச ததாதர்ம:

க:—என்ன; க்ஷேம:—நன்மை; நிஜ—தனக்கு; பரயோ:—மற்றவர்களுக்கு; கியான்—எவ்வளவு; வா—அல்லது; அர்த:—நோக்கம்; ஸ்வ-பர-த்ருஹா—எது செய்பவனுக்கும், மற்றவர்களுக்கும் துரோகம் இழைக்கிறதோ; தர்மேண—சமய முறையினால்; ஸ்வ-த்ரோஹாத்—தனக்குத் தானே பொறாமைகொள்வதிலிருந்து; தவ—உங்களுடைய; கோப:—கோபம்; பர-ஸம்பீடயா—மற்றவர்களுக்கு துன்பத்தைக் கொடுப்பதால்; ச—கூட; ததா—அதுவும்; அதர்ம:—அதர்மமாகும்.

தன்னிடமும், மற்றவர்களிடமும் பொறாமையை உண்டாக்கக்கூடிய ஒரு சமய முறையானது எவ்வாறு தனக்கும், மற்றவர்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்க முடியும்? இத்தகைய ஒரு முறையைப் பின்பற்றுவதில் என்ன நன்மை உள்ளது? உண்மையில் இந்த முறையினால் அடையப்பட வேண்டியதுதான் என்ன? சுயப் பொறாமையின் காரணத்தால் துன்பம் இழைப்பதானது உங்களுடைய கோபத்தைத் தூண்டுவதாக உள்ளது. இவ்வாறாக அவன் அதர்மத்தைச் செய்பவனாகிறான்.

பதம் 6.16.43
ந வ்யபிசரதி தவேக்ஷா
யயா ஹி அபிஹிதோ பாகவதோ தர்ம:
ஸ்திர-சர-ஸத்வ-கதம்பேஷு
அப்ருதக்-தியோ யம் உபாஸதே து ஆர்யா:

ந—இல்லை; வ்யபிசரதி—தவறுகிறான்; தவ—உங்களுடைய; ஈக்ஷா யயா—கண்ணோட்டத்தின்படி; ஹி—நிச்சயமாக; அபிஹித:—வெளியிடப்பட்ட; பாகவத:—உங்களுடைய உபதேசங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப; தர்ம:—சமயக் கொள்கை; ஸ்திர—அசையாத; சர—அசையும்; ஸத்வ-கடம்பேஷு—ஜீவராசிகளுக்கிடையில்; அப்ருதக்-திய:—வேற்றுமைகளைப் பொருட்படுத்தாதவர்கள்; யம்—அதை; உபாஸதே—பின்பற்றுபவர்கள்; து—நிச்சயமாக; ஆர்யா:—நாகரீகத்தில் முன்னேறியவர்களாவர்.

பகவானே, உங்களுடைய கண்ணோட்டத்திற்கேற்ப ஸ்ரீமத் பாகவதத்திலும், பகவத்கீதையிலும் ஒருவனது வர்ணாஸ்ரம கடமை உபதேசிக்கப்பட்டுள்ளது. அது வாழ்வின் உயர்ந்த இலட்சியத்திலிருந்து விலகுவதேயில்லை. எவர்கள் உங்களுடைய மேற்பார்வையின் கீழ் தங்களுடைய வர்ணாஸ்ரம கடமைகளைப் பின்பற்றி, அசைவன, அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளிடமும் சமமாக நடந்து கொண்டு, அவைகளுக்கிடையில் உயர்வு, தாழ்வு பாராட்டுவதில்லையோ அவர்களே ஆரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தகைய ஆரியர்கள் பரமபுருஷராகிய உங்களை வழிபடுகின்றனர்.

பதம் 6.16.44
ந ஹி பகவான் அகடிதம் இதம்
த்வத்-தர்சனான் ந்ருணாம் அகில-பாப-க்ஷய:
யன்-நாம ஸக்ருச் ச்ரவணாத்
புக்கசோ ‘பி விமுச்யதே ஸம்ஸாராத்

ந—இல்லை; ஹி—நிச்சயமாக; பகவான்—பகவானே; அகடிதம்—நடைபெறாத; இதம்—இந்த; த்வத்—உங்களுடைய; தர்சனாத்—தரிசனத்தால்; ந்ருணாம்—மனிதர்களிலேயே; அகில—எல்லா; பாப—பாவங்களின்; க்ஷய:—நாசம்; யத்-நாம—யாருடைய நாமம்; ஸக்ருத்—ஒரே ஒரு தடவை; ஸ்ரவணாத்—கேட்பதால்; புக்கச:—கடைத்தரமான சண்டாளன்; அபி—கூட; விமுச்யதே—விடுபடுகிறான்; ஸம்ஸாராத்—பெளதிக வாழ்வின் சிக்கலிலிருந்து.

பகவானே, உங்களுடைய தரிசனத்தால் எல்லா பௌதிக களங்கத்திலிருந்தும் விடுபடுவது ஒருவனுக்குச் சாத்தியமாகிறது. உங்களுடைய நேரடியான தரிசனத்தைப் பற்றி சொல்வானேன். ஒரே ஒரு தடவை உங்களுடைய புனித நாமத்தைக் கேட்பதால் மனிதரில் கடைப்பட்ட சண்டாளர்கள் கூட எல்லா பௌதிக களங்கத்திலிருந்தும் விடுபடுகின்றனர். இந்த நிலையில், உங்களை தரிசிப்பதாலேயே பெளதிக களங்கத்திலிருந்து யார்தான் விடுபட மாட்டார்?

பதம் 6.16.45
அத பகவன் வயம் அதுனா
த்வத்-அவலோக-பரிம்ருஷ்டாசய-மலா:
ஸுர-ரிஷிணா யத் கதிதம்
தாவகேன கதம் அன்யதா பவதி

அத—ஆகவே; பகவன்—பரமபுருஷரே; வயம்—நாங்கள்; அதுனா—தற்பொழுது; த்வத்-அவலோக—உங்களைக் காண்பதால்; பரிம்ருஷ்ட—அழிக்கப்பட்டன; ஆசய-மலா:—இதயத்திலிருந்து அசுத்தமான ஆசைகள்; ஸுர-ரிஷிணா—சிறந்த தேவரிஷியால் (நாரதரால்); யத்—எது; கதிதம்—கூறப்பட்டதோ; தாவகேன—உங்களுடைய பக்தரான; கதம்—எவ்வாறு; அன்யதா—வேறொன்றாக; பவதி—அது இருக்க முடியும்.

ஆகவே பகவானே, உங்களை தரிசித்ததாலேயே, என் மனதையும் இதயத்தையும் எப்பொழுதும் ஆக்கிரமித்திருந்த பாவச் செயல்களும், மற்றும் அவற்றின் பலன்களான பெளதிகப் பற்று, காம இச்சைகள் ஆகியவற்றின் எல்லாக் களங்கமும் இப்பொழுது துடைக்கப்பட்டுவிட்டன. மாமுனிவரான நாரதரால் எது முன்பே கூறப்பட்டதோ, அது ஒருபோதும் பொய்க்காது. அதாவது, நாரத முனிவரால் பயிற்றுவிக்கப்பட்டதன் பலனாக உங்களுடைய தரிசனத்தை நான் பெற்றேன்.

பதம் 6.16.46
விதிதம் அனந்த ஸமஸ்தம்
தவ ஜகத்-ஆத்மனோ ஜனைர் இஹாசரிதம்
விக்ஞாப்யம் பரம-குரோ:
கியத் இவ ஸவிதுர் இவ கத்யோதை:

விதிதம்—நன்றாகத் தெரியும்; அனந்த—எல்லையற்றவரே; ஸமஸ்தம்—அனைத்தும்; தவ—உங்களுக்கு; ஜகத்-ஆத்மன—எல்லா ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாகிய; ஜனை:—பொது ஜனங்களால், அல்லது அனைத்து ஜீவராசிகளால்; இஹ—இவ்வுலகில்; ஆசரிதம்—செய்யப்படுவது; விக்ஞாப்யம்—அறிவிக்கப்பட வேண்டியது; பரம-குரோ—பரம குருவாகிய பரமபுருஷருக்கு; கியத்—எவ்வளவு; இவ—நிச்சயமாக; ஸவிது:—சூரியனுக்கு; இவ—போல; கத்யோதை:—மின்மினிப் பூச்சிகளால்.

எல்லையற்ற பரமபுருஷரே, நீங்கள் பரமாத்மா என்பதால், இந்த ஜட உலகில் ஒரு ஜீவராசி செய்வதையெல்லாம் நீங்கள் நன்றாக அறிவீர்கள். சூரியனின் முன்னிலையில், அது மின்மினிப் பூச்சியின் ஒளியால் எதுவும் புலப்படுவதில்லை. அதுபோலவே, நீங்கள் அனைத்தையும் அறிந்தவர் என்பதால், உங்கள் முன்னிலையில் என்னால் அறிவிக்கப்பட வேண்டியது எதுவுமில்லை.

பதம் 6.16.47
நமஸ் துப்யம் பகவதே ஸகல-ஜகத்-ஸ்திதி-லயோதயேசாய
துரவஸிதாத்ம-கதயே குயோகினாம் பிதா பரமஹம்ஸாய

நம:—வணக்கங்கள்; துப்யம்—உங்களுக்கு; பகவதே—பகவானாகிய; ஸகல—எல்லாம்; ஜகத்—பிரபஞ்ச தோற்றத்தின்; ஸ்திதி—காத்தல்; லய—அழித்தல்; உதய—மற்றும் படைத்தலின்; ஈசாய—பரமபுருஷருக்கு; துரவஸித—புரிந்துகொள்ள முடியாது; ஆத்ம-கதயே—யாருடைய சொந்த நிலையை; கு-யோகினாம்—புலன் பொருட்களிடம் பற்றுக் கொண்டிருப்பவர்களின்; பிதா—பிரிந்திருப்பதென்ற பொய்யான புரிந்துணர்வினால்; பரம-ஹம்ஸாய—பரிசுத்தமானவருக்கு.

பகவானே, பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்து, காத்து, அழிப்பவர் தாங்களே. ஆனால் பெளதிகத்தில் ஆழ்ந்தவர்களும், பிரிவையே எப்பொழுதும் பார்ப்பவர்களுமான மனிதர்களுக்கு உங்களை தரிசிப்பதற்குரிய கண்கள் இல்லை. உங்களுடைய உண்மையான நிலையை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, பிரபஞ்ச தோற்றம் உங்களுடைய ஆட்சிக்கு உட்படாதது என்று அவர்கள் முடிவு செய்கின்றனர். பகவானே நீங்கள் பரிசுத்தமானவர். ஆறு ஐசுவரியங்களையும் பூரணமாகப் பெற்றவர். ஆகவே உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.48
யம் வை ஸ்வஸந்தம் அனு விஸ்வ-ஸ்ருஜ: ஸ்வஸந்தி
யம் சேகிதானம் அனு சித்தய உச்சகந்தி
பூ-மண்டலம் ஸர்ஷபாயதி யஸ்ய மூர்த்னி
தஸ்மை ந மோ பகவதே ‘ஸ்து ஸஹஸ்ர-மூர்த்னே

யம்—யாரை; வை—நிச்சயமாக; ஸ்வஸந்தம்—முயற்சிக்கு; அனு—பிறகுதான்; விஸ்வ-ஸ்ருஜ:—பிரபஞ்ச சிருஷ்டியில் நிர்வாகிகள்; ஸ்வஸந்தி—முயற்சியும்; யம்—யாரை; சேகிதானம்—உணர்ந்த; அனு—பிறகே; சித்தய:—எல்லா அறிவுப் புலன்களும்; உச்சகந்தி—உணர்கின்றன; பூ-மண்டலம்—பிரம்மாண்டமான பிரபஞ்சம்; ஸர்ஷபாயதி—கடுகு விதைகளைப் போல் ஆகின்றன; யஸ்ய—யாருடைய; மூர்த்னி—தலைமேல்; தஸ்மை—அவருக்கு; நம:—வணக்கங்கள்; பகவதே—ஆறு ஐசுவரியங்கள் நிறைந்த பரமபுருஷர்; அஸ்து—இருக்கட்டும்; ஸஹஸ்ர-மூர்த்னே—ஆயிரக்கணக்கான தலைகளுள்ள.

பகவானே, உங்களுடைய முயற்சிக்குப் பிறகுதான் பிரம்மதேவரும், இந்திரனும், மற்ற பிரபஞ்ச நிர்வாகிகளும் தங்கள் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகின்றனர். பகவானே, பெளதிக சக்தியை நீங்கள் உணர்ந்த பிறகே புலன்கள் அவற்றை உணரத் துவங்குகின்றன. பரமபுருஷர் எல்லாப் பிரபஞ்சங்களையும் கடுகுகளைப்போல் தமது தலைகளின்மேல் தாங்கிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு, ஆயிரக்கணக்கான தலைகளுடைய பரமபுருஷருக்கு, எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.49
ஸ்ரீ-சுக உவாச
ஸம்ஸ்துதோ பகவான் ஏவம் அனந்தஸ் தம் அபாஷத
வித்யாதர-பதிம் ப்ரீதஸ் சித்ரகேதும் குரூத்வஹ

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸம்ஸ்துத:—துதிக்கப்பட்ட; பகவான்—பரமபுருஷர்; ஏவம்—இவ்வாறு; அனந்த:—பகவான் அனந்தர்; தம்—அவருக்கு; அபாஷத—பதிலளித்தார்; வித்யாதர-பதிம்—வித்யாதரர்களின் தலைவரான; ப்ரீத:—மிகவும் மகிழ்ந்து; சித்ரகேதும்—சித்ரகேது மகாராஜன்; குரு-உத்வஹ—குரு வம்சத்தில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: குரு வம்சத்தில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே, பரமபுருஷராகிய பகவான் அனந்ததேவர், வித்யாதரர்களின் அரசரான சித்ரகேதுவின் ஸ்தோத்திரங்களால் மிகவும் மகிழ்ந்து, அவருக்குப் பின்வருமாறு பதிலளித்தார்.

பதம் 6.16.50
ஸ்ரீ-பகவான் உவாச
யன் நாரதாங்கிரோப்யாம் தே வ்யாஹ்ருதம் மே ‘நுசாஸனம்
ஸம்ஸித்தோ ‘ஸி தயா ராஜன் வித்யயா தர்சனாச் ச மே

ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷராகிய சங்கர்ஷணர் பதிலளித்தார்; யத்—எது; நாரத-அங்கிரோப்யாம்—சிறந்த முனிவர்களான நாரதராலும், அங்கிரராலும்; தே—உனக்கு; வ்யாஹ்ருதம்—கூறப்பட்டதோ; மே—என்னைப்பற்றி; அனுசாஸனம்—வழிபாடு; ஸம்ஸித்த:—முழு பூரணத்துவம் அடைந்தாய்; அஸி—நீ; தயா—அதனால்; ராஜன்—அரசே; வித்யயா—மந்திரத்தினால்; தர்சனாத்—நேரடியான தரிசனத்தால்; ச—கூட; மே—என்னுடைய.

பரமபுருஷராகிய அநந்ததேவர் பின்வருமாறு பதிலளித்தார்: அரசே, மாமுனிவர்களான நாரதராலும், அங்கிரராலும் என்னைப் பற்றி கூறப்பட்ட உபதேசங்களை ஏற்றுக் கொண்டதன் பயனாக நீ உன்னத அறிவை முழுமையாக அறிந்தவன் ஆகிவிட்டாய். இப்பொழுது உனக்கு ஆத்ம ஞானம் போதிக்கப்பட்டிருப்பதால், என்னை நேருக்கு நேராக நீ தரிசிக்கின்றாய். ஆகவே இப்பொழுது நீ முழு பூரணத்துவம் பெற்று விளங்குகிறாய்.

பதம் 6.16.51
அஹம் வை ஸர்வ-பூதானி பூதாத்மா பூத-பாவன:
சப்த-ப்ரஹ்ம பரம் ப்ரஹ்ம மமோபே சாஸ்வதீ தனூ

அஹம்—நான்; வை—நிச்சயமாக; ஸர்வ-பூதானி—ஜீவராசிகளின் வெவ்வேறு வடிவங்களாக விரிவடைந்துள்ளேன்; பூத-ஆத்மா—அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாகிய; பூத-பாவன:—அனைத்து ஜீவராசிகளின் தோற்றத்திற்கும் காரணம்; சப்த-ப்ரஹ்ம—உன்னதமான ஒலியதிர்வு (ஹரே கிருஷ்ண மந்திரம்); பரம் ப்ரஹ்ம—பரப்பிரம்மம்; மம—என்னுடைய; உபே—(ஓசை வடிவம் மற்றும் ஆன்மீக ரூபம் ஆகிய) இரண்டும்; சாஸ்வதீ—நித்தியமானவை; தனு—இரு உடல்களும்.

அசைவன, அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளும் என்னிடமிருந்து பிரிந்து சென்ற எனது அம்சங்களேயாகும். என்னால் தோற்றுவிக்கப்பட்ட காரணத்தினால் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நானே பரமாத்மாவாக இருக்கிறேன். ஓம்காரம் மற்றும் ஹரே கிருஷ்ண மந்திரம் போன்ற உன்னத ஓசைகளின் வடிவமும் நானே. விக்கிரக வடிவிலுள்ள நித்தியமான, ஆனந்தமயமான, ஆன்மீகமான ரூபம் மற்றும் உன்னத ஓசை ஆகிய என்னுடைய இவ்விரு ரூபங்களும் எனது நித்திய ரூபங்களாகும்; இவை பெளதிகமானவையல்ல.

பதம் 6.16.52
லோகே விததம் ஆத்மானாம் லோகம் சாத்மனி ஸந்ததம்
உபயம் ச மயா வ்யாப்தம் மயி சைவோபயம் க்ருதம்

லோகே—இந்த ஜட உலகில்; விததம்—(பெளதிக சுகபோகங்களின் உருவில்) விரிவடைந்துள்ளது; ஆத்மானம்—ஜீவராசி; லோகம்—ஜட உலகம்; ச—கூட; ஆத்மனி—ஜீவராசிக்குள்; ஸந்ததம்—பரவியிருக்கிறது; உபயம்—(பெளதிக மூலப்பொருட்களாலான ஜட உலகம் மற்றும் ஜீவராசி ஆகிய) இரண்டும்; ச—மேலும்; மயா—என்னால்; வ்யாப்தம்—வியாபிக்கப்பட்டுள்ளன; மயி—என்னில்; ச—கூட; ஏவ—நிச்சயமாக; உபயம்—அவ்விரண்டும்; க்ருதம்—படைக்கப்பட்டது.

அனுபவிக்கத்தக்க பொருட்களைக் கொண்டது என்று பந்தப்பட்ட ஆத்மாவால் ஏற்றுக் கொள்ளப்படும் இந்த ஜட உலகில், பந்தப்பட்ட ஆத்மா தானே இந்த ஜட உலகின் அனுபவிப்பாளன் என்றெண்ணி விரிவடைகிறான். அதுபோலவே, ஜட உலகும் சுகபோகத்தின் ஒரு பிறப்பிடமாக ஜீவராசிக்குள் விரிவடைகிறது. இவ்விதமாக இரண்டுமே விரிவடைகின்றன. ஆனால் இவை எனது சக்திகள் என்பதால் இவ்விரண்டிலும் நான் ஊடுருவிப் பரவியிருக்கிறேன். பரமபுருஷர் என்ற முறையில், நானே இவ்விளைவுகளுக்குக் காரணமாவேன். இவ்விரண்டுமே என்னிடத்தில் அடங்கியிருக்கின்றன என்பதை ஒருவன் அறிய வேண்டும்.

பதங்கள் 6.16.53 – 6.16.54
யதா ஸுஷுப்த: புருஷோ விஸ்வம் பஸ்யதி சாத்மனி
ஆத்மானம் ஏக-தேச-ஸ்தம் மன்யதே ஸ்வப்ன உத்தித:

ஏவம் ஜாகரணாதீனி ஜீவ-ஸ்தானானி சாத்மன:
மாயா-மாத்ராணி விக்ஞாய தத்-த்ரஷ்டாரம் பரம் ஸ்மரேத்

யதா—எவ்வாறு; ஸுஷுப்த:—உறங்குகின்ற; புருஷ:—மனிதன்; விஸ்வம்—முழு பிரபஞ்சத்தையும்; பஸ்யதி—காண்கிறானோ; ச—கூட; ஆத்மனி—தனக்குள்; ஆத்மானம்—தன்னை; ஏக-தேச-ஸ்தம்—ஓரிடத்தில் படுத்துக்கொண்டு; மன்யதே—அவன் கருதுகிறான்; ஸ்வப்னே—கனவு நிலைகளில்; உத்தித:—எழுந்து; ஏவம்—இவ்வாறு; ஜாகரண-ஆதீனி—விழிப்புநிலை முதலான; ஜீவ-ஸ்தானானி—ஜீவராசியின் வெவ்வேறு வாழ்வு நிலைகள்; ச—கூட; ஆத்மன:—பரமபுருஷரின்; மாயா-மாத்ராணி—மாயா சக்தியின் காட்சிகள்; விக்ஞாய—அறிந்து; தத்—அவைகளின்; த்ரஷ்டாரம்—இத்தகைய நிலைகளையெல்லாம் படைத்தவர் அல்லது பார்ப்பவர்; பரம்—பரமபுருஷர்; ஸ்மரேத்—ஒருவன் எப்பொழுதும் நினைவிற்கொள்ள வேண்டும்.

ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவன் கனவு காண்கிறான். அந்த கனவு நிலையில் அவன் தனக்குள் பெரிய மலைகளையும், நதிகளையும் அல்லது முழு பிரபஞ்சத்தையும் போன்ற வேறு பல பொருட்களையும் காண்கிறான். இருப்பினும் இவையெல்லாம் அவனுக்கு வெகு தூரத்தில் உள்ளன. சிலசமயங்களில் கனவு கலைந்து விழித்துக்கொள்ளும் ஒருவன், தான் ஒரு மனித ரூபத்தில், படுக்கையின் ஒரு மூலையில் படுத்திருப்பதைப் பார்க்கிறான். பிறகு, தான் ஒரு குறிப்பிட்ட நாட்டையும், குடும்பத்தையும் சேர்ந்தவன் என்பது போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் தன்னை அவன் காண்கிறான். ஆழ்ந்த உறக்கம், கனவுநிலை, விழிப்புநிலை ஆகிய எல்லா நிலைகளும் பரமபுருஷரின் சக்திகளேயன்றி வேறில்லை. இந்த நிலைகளின் மூல சிருஷ்டிக்கர்த்தாவும், இவற்றினால் பாதிப்படையாதவருமான பரமபுருஷரை ஒருவன் எப்பொழுதும் நினைவிற்கொள்ள வேண்டும்.

பதம் 6.16.55
யேன ப்ரஸுப்த: புருஷ: ஸ்வாபம் வேதாத்மனஸ் ததா
ஸுகம் ச நிர்குணம் ப்ரஹ்ம தம் ஆத்மானம் அவேஹி மாம்

யேன—யாரால் (பரப்பிரம்மனால்); ப்ரஸுப்த:—உறங்குகின்ற; புருஷ:—ஒரு மனிதன்; ஸ்வாபம்—ஒரு கனவின் விஷயம்; வேத—அறிகிறான்; ஆத்மன:—அவனுடைய; ததா—அப்பொழுது; ஸுகம்—மகிழ்ச்சி; ச—கூட; நிர்குணம்—பெளதிக சூழ்நிலையுடன் தொடர்பில்லாமல்; ப்ரஹ்ம—பரமாத்மா; தம்—அவரை; ஆத்மானம்—பரவியுள்ளன; அவேஹி—தெரிந்து கொள்; மாம்—என்னை.

யார் மூலமாக, உறக்கத்தலிருக்கும் ஜீவராசியால் அவனது கனவு நிலையையும், பௌதிக புலன்களின் செயல்முறைகளுக்கு அப்பாற்பட்ட அவனது மகிழ்ச்சியையும் புரிந்து கொள்ள முடிகிறதோ, அந்த பரப்பிரம்மன், எங்கும் நிறைந்துள்ள பரமாத்மா, நானே என்பதை அறிவாயாக. அதாவது, உறக்கத்திலுள்ள ஜீவராசியின் செயல்களுக்குக் காரணம் நானே என்பதை அறிவாயாக.

பதம் 6.16.56
உபயம் ஸ்மரத: பும்ஸ: ப்ரஸ்வாப-ப்ரதிபோதயோ:
அன்வேதி வ்யதிரிச்யேத தஜ் ஞானம் ப்ரஹ்ம தத் பரம்

உபயம்—(உறக்க நிலை, விழிப்பு நிலை என்ற) இரு வகையான உணர்வுகளும்; ஸ்மரத:—நினைப்பது; பும்ஸ:—ஒருவனின்; ப்ரஸ்வாப—உறங்கும் போதுள்ள உணர்வின்; ப்ரதிபோதயோ:—மற்றும் விழிப்பு நிலையிலுள்ள உணர்வின்; அன்வேதி—தொடர்கிறது; வ்யதிரிச்யேத—அப்பால் சென்றடையக்கூடும்; தத்—அது; ஞானம்—அறிவு; ப்ரஹ்ம—பரப்பிரம்மன்; தத்—அது; பரம்—உன்னதமான.

உறக்கத்திலுள்ள ஒருவனின் கனவுகள் பரமாத்மாவால் மட்டுமே காணப்படும் விஷயங்களாக இருக்குமானால், பரமாத்மாவிலிருந்து வேறுபட்டவனான ஜீவராசியால் எப்படி அவனது கனவின் செயல்களை ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும்? ஒருவனுடைய அனுபவங்களை மற்றவனால் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே உண்மைகளை அறிந்தவன், அதாவது கனவு மற்றும் விழிப்பு நிலைகளில் தோன்றிய சம்பவங்களைப் பற்றி விசாரிக்கும் ஜீவராசி, நேர்முகச் சம்பந்தமில்லாத செயல்களிலிருந்து வேறுபட்டவனானவான். அந்த அறியும் தத்துவம் பிரம்மனாவார். அதாவது, அறியும் குணமானது ஜீவராசிகளுக்கும், பரமாத்மாவிற்கும் சொந்தமாகும். இவ்வாறாக ஜீவராசியாலும் கனவு மற்றும் விழிப்பு நிலைகளின் செயல்களை உணர முடியும். இரு நிலைகளிலும் அறிபவன் மாறாமல் இருக்கிறான். ஆனால் குணத்தில் அவன் பரப்பிரம்மத்துடன் ஒன்றுபட்டவனாவான்.

பதம் 6.16.57
யத் ஏதத் விஸ்ம்ருதம் பும்ஸோ மத்-பாவம் பின்னம் ஆத்மன:
தத: ஸம்ஸார ஏதஸ்ய தேஹாத் தேஹோ ம்ருதேர் ம்ருதி:

யத்—எது; ஏதத்—இது; விஸ்ம்ருதம்—மறந்துபோன; பும்ஸ:—ஜீவராசியின்; மத்-பாவம்—எனது ஆன்மீக நிலையை; பின்னம்—பிரிவு; ஆத்மன:—பரமாத்மாவிலிருந்து; தத:—அதிலிருந்து; ஸம்ஸார:—பெளதிகமான, பந்தப்பட்ட வாழ்வு; ஏதஸ்ய—ஜீவராசியின்; தேஹாத்—ஓர் உடலிலிருந்து; தேஹ:—மற்றொரு உடல்; ம்ருதே:—ஒரு மரணத்திலிருந்து; ம்ருதி:—மற்றொரு மரணம்.

எப்பொழுது ஒரு ஜீவராசி தன்னை என்னிலிருந்து வேறுபட்டவனாக எண்ணி, நித்தியத்தன்மை, அறிவு, ஆனந்தம் ஆகிய குணங்களில் என்னுடன் ஒன்றுபட்ட அவனது ஆன்மீக சொரூபத்தை மறந்து போகிறானோ, அப்பொழுது அவனுடைய பந்தப்பட்ட பௌதிக வாழ்வு துவங்குகிறது. அதாவது, என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப அவனுடைய விருப்பத்தை அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக, அவன் மனைவி, மக்கள், பௌதிக உடைமை போன்ற உடலின் விரிவாம்சங்களில் தனது விருப்பத்தை வளர்த்துக் கொள்கிறான். இவ்விதமாக, அவனுடைய செயல்களின் ஆதிக்கத்தினால் ஒருடலிலிருந்து மற்றொரு உடல் வருகிறது. ஒரு மரணத்திற்குப்பின் மற்றொரு மரணம் சம்பவிக்கிறது.

பதம் 6.16.58
லப்த்வேஹ மானுஷீம் யோனிம் ஞான-விக்ஞான-ஸம்பவாம்
ஆத்மானம் யோ ந புத்யேத ந க்வசித் க்ஷேமம் ஆப்னுயாத்

லப்த்வா—அடைந்து; இஹ—இந்த ஜட உலகில் (குறிப்பாக பாரத-வர்ஷம் எனப்படும் புண்ணிய பூமியான இந்தியாவில்); மானுஷீம்—மனித; யோனிம்—இனம்; ஞான—வேத சாஸ்திரங்களின் மூலம் பெறப்படும் அறிவின்; விக்ஞான—அந்த அறிவின் நடைமுறைப் பிரயோகம்; ஸம்பவாம்—அங்கு ஒரு சாத்தியம் உள்ளது; ஆத்மானம்—ஒருவனது உண்மையான சொரூபம்; ய:—எவனொருவன்; ந—இல்லையோ; புத்யேத—புரிந்துகொள்ள; ந—ஒருபோதும் இல்லை; க்வசித்—எந்த சமயத்திலும்; க்ஷேமம்—வாழ்வில் வெற்றியை; ஆப்னுயாத்—அடைய முடியும்.

ஒரு மனிதனால் வேத சாஸ்திரம் மற்றும் அதன் நடைமுறைப் பிரயோகம் ஆகியவற்றின் மூலமாக வரும் தன்னுணர்வினால் வாழ்வில் பூரணத்துவத்தை அடைய முடியும். குறிப்பாக புண்ணிய பூமியான இந்தியாவில் பிறந்த ஒருவனுக்கு இது சாத்தியமான ஒன்றாகும். இத்தகைய ஒரு வசதியான நிலையில் பிறந்தும், தன்னை அறிய முடியாதிருக்கும் ஒருவன், மேலுலகங்களுக்கு உயர்த்தப்பட்டாலும் அவனால் மிக உயர்ந்த பூரணத்துவத்தை அடைய முடியாது.

பதம் 6.16.59
ஸ்ம்ருத்வேஹாயாம் பரிக்லேசம் தத: ஃபல-விபர்யயம்
அபயம் சாபி அனீஹாயாம் ஸங்கல்பாத் விரமேத் கவி:

ஸ்ம்ருத்வா—நினைவிற்கொண்டு; ஈஹாயாம்—கர்ம பலன்களை எதிர்பார்க்கும் செயற்களத்தில்; பரிக்லேசம்—சக்திவிரயமும், துன்பச்சூழ்நிலைகளும்; தத:—அதிலிருந்து; ஃபல-விபர்யயம்—விரும்பியதற்கு எதிரான பலன்; அபயம்—பயமின்மை; ச—கூட; அபி—நிச்சயமாக; அனீஹாயாம்—கர்ம பலன்களில் ஆசை இல்லாத பொழுது; ஸங்கல்பாத்—பௌதிக ஆசைகளிலிருந்து; விரமேத்—விலக வேண்டும்; கவி:—அறிவில் முன்னேறியவன்.

கர்ம பலன்களுக்காக இயற்றப்படும் செயற்களத்தில் உள்ள பெருந்தொல்லைகளை நினைவிற்கொண்டு, மேலும் வேத சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பௌதிக செயல்களிலிருந்தோ அல்லது பலனை எதிர்பார்க்கும் செயல்களிலிருந்தோ, தன் விருப்பங்களுக்கெதிரான பலன்களை எப்படி ஒருவன் பெறுகிறான் என்பதையும் நினைவிற்கொண்டு, புத்தியுள்ள ஒரு மனிதன் பலன் கருதும் செயல்களைச் செய்யும் ஆசையை விட்டுவிட வேண்டும். ஏனெனில் இத்தகைய முயற்சிகளால் வாழ்வின் முடிவான இலட்சியத்தை அடைய முடியாது. மற்றொரு புறம், ஒருவன் பலனை எதிர்பார்க்காமல் செயற்படுவானாயின், அதாவது பக்திபூர்வமான செயல்களில் ஒருவன் ஈடுபடுவானாயின், அவனால் துன்பகரமான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு, வாழ்பவன் மிக உயர்ந்த இலட்சியத்தை அடைய முடியும். ஒருவன் இதைக் கருத்திற்கொண்டு, பெளதிக ஆசைகளை விட்டுவிட வேண்டும்.

பதம் 6.16.60
ஸுகாய துஹ்க-மோக்ஷாய குர்வாதே தம்பதீ க்ரியா:
ததோ ‘நிர்வ்ருத்திர் அப்ராப்திர் துஹ்கஸ்ய ச ஸுகஸ்ய ச

ஸுகாய—மகிழ்ச்சியடையும் பொருட்டு; துஹ்க-மோக்ஷாய—துக்கத்திலிருந்து விடுபடும் பொருட்டு; குர்வாதே—செய்கின்றனர்; தம்-பதீ—கணவனும், மனைவியும் (தம்பதிகள்); க்ரியா:—செயல்களை; தத:—அதிலிருந்து; அனிவ்ருத்தி:—முடிவு இல்லை; அப்ராப்தி:—வெற்றியில்லை; துஹ்கஸ்ய—துக்கத்தின்; ச—கூட; ஸுகஸ்ய—மகிழ்ச்சியின்; ச—கூட.

தம்பதிகளான ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மகிழ்ச்சியை அடையவும், துக்கத்தைக் குறைக்கவும் பல வழிகளில் இணைந்து செயற்படுகின்றனர். ஆனால் அவர்களது செயல்கள் ஆசைகள் நிரம்பியவையாக இருப்பதால், அவை ஒருபோதும் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதில்லை, துக்கத்தைக் குறைப்பதுமில்லை. மாறாக, அவை மிகவும் வருந்தத்தக்க நிலைக்குக் காரணமாகின்றன.

பதங்கள் 6.16.61 – 6.16.62
ஏவம் ‘விபர்யயம் புத்வா ந்ருணாம் விஜ்ஞாபிமானினாம்
ஆத்மனஸ் ச கதிம் ஸூக்ஷ்மாம் ஸ்தான-த்ரய- விலக்ஷ்ணாம்

த்ருஷ்ட-ஸ்ருதாபிர் மாத்ராபிர் நிர்முக்த: ஸ்வேன தேஜஸா
ஞான-விஜ்ஞான-ஸந்த்ருப்தோ மத்-பக்த: புருஷோ பவேத்

ஏவம்—இவ்வாறு; விபர்யயம்—எதிரானது; புத்வா—என்பதை உணர்ந்து; ந்ருணாம்—மனிதர்களின்; விஜ்ஞ-அபிமானினாம்—தங்களை விஞ்ஞான அறிவு நிறைந்தவர்களான நினைத்துக் கொண்டிருக்கும்; ஆத்மன:—தன்னுடைய; ச—கூட; கதிம்—முன்னேற்றத்தை; ஸூக்ஷ்மாம்—புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமான; ஸ்தான-த்ரய—(ஆழ்ந்த உறக்கம், கனவுநிலை, விழிப்புநிலை என்ற) வாழ்வின் மூன்று நிலைகள்; விலக்ஷ்ணாம்—அதிலிருந்து வேறுபட்ட; த்ருஷ்ட—நேரிடையாக உணர்ந்த; ஸ்ருதாபி:—அல்லது வேதச் சான்றுகளிலிருந்து அறியப்பட்ட; மாத்ராபி:—பொருட்களிலிருந்து; நிர்முக்த:—விடுபட்டு; ஸ்வேன—ஒருவனது சொந்த; தேஜஸா—பகுத்தறிவின் வலிமையினால்; ஞான-விஜ்ஞான—அறிவினாலும், அந்த அறிவின் நடைமுறைப் பிரயோகத்தினாலும்; ஸந்த்ருப்த:—முழு திருப்தியடைந்து; மத்-பக்த:—என் பக்தனாக; புருஷ:—ஒரு மனிதனாக; பவேத்—மாற வேண்டும்.

தங்களுடைய பௌதிக அனுபவத்தில் தற்பெருமை கொண்டுள்ளவர்களால் விழிப்பு நிலையிலும், உறக்கத்திலும், ஆழ்ந்த உறக்கத்திலும் செய்யப்படும் செயல்கள், அவர்கள் விரும்பியதற்கு எதிரான பலன்களை மட்டுமே கொண்டு வருகின்றன என்பதை ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும். பெளதிகவாதிகளால் ஆன்மீகமான ஆத்மாவை உணர்வது மிகவும் கடினம் என்றாலும், அது இச்சூழ்நிலைகளுக்கெல்லாம் மேற்பட்டது என்பதையும் ஒருவன் அறிய வேண்டும். ஒருவன் தனது பகுத்தறிவின் பலத்தைக் கொண்டு, இப்பிறவியிலும், அடுத்ததிலும், கர்ம பலன்களிலுள்ள ஆசையை விட்டுவிட வேண்டும். இவ்வாறு ஒருவன் ஆன்மீக ஞானத்தால் அனுபவம் பெற்று, என்னுடைய பக்தனாக மாற வேண்டும்.

பதம் 6.16.63
ஏதாவான் ஏவ மனுஜைர் யோக-நைபுண்ய-புத்திபி:
ஸ்வார்த்த: ஸர்வாத்மனா ஞேயோ யத் பராத்மைக-தர்சனம்

ஏதாவான்—இவ்வளவு; ஏவ—உண்மையில்; மனுஜை:—மனிதர்களால்; யோக—பக்தி, யோகத்தின் மூலமாகப் பரமனுடன் தொடர்பு கொள்ளும் முறையினால்; நைபுண்ய—சிறப்புத் திறமை பெற்று; புத்திபி:—புத்தியுள்ளவர்கள்; ஸ்வ-அர்த்த:—வாழ்வின் முடிவான இலக்கு; ஸர்வ-ஆத்மனா—எல்லாவிதத்திலும்; ஞேய:—அறியப்பட வேண்டிய; யத்—எது; பர—உன்னத பகவானின்; ஆத்ம—மற்றும் ஜீவாத்மாவின்; ஏக—ஒத்த தன்மையின்; தரிசனம்—புரிந்துணர்வு.

வாழ்வின் முடிவான இலக்கை அடைய முயல்பவர்கள், முழுமையும் பின்னப் பகுதியும் போல, பரமபுருஷரும், ஜீவராசியும் குணத்தில் ஒற்றுமையுடையவர்கள் என்பதைச் சாமார்த்தியமாக அறிய வேண்டும். இதுதான் வாழ்வின் முடிவான புரிந்துணர்வாகும். இதைவிடச் சிறந்த உண்மை வேறில்லை.

பதம் 6.16.64
த்வம் ஏதச் ச்ரத்தயா ராஜன் அப்ரமத்தோ வசோ மம
ஞான-விஜ்ஞான ஸம்பன்னோ தாரயன் ஆசு ஸித்யஸி

த்வம்—நீ; ஏதத்—இதை; ஸ்ரத்தயா—பெரும் நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும்; ராஜன்—அரசே; அப்ரமத்த:—மயக்கமற்றவனாகவும் அல்லது வேறெந்த முடிவிலிருந்தும் விலகாதவனாக; வச:—உபதேசத்தை; மம—என்னுடைய; ஞான-விஜ்ஞான-ஸம்பன்ன:—அறிவையும், நடைமுறை வாழ்வில் அதை செயல்முறைப்படுத்துவதையும் முழுமையாக அறிந்து; தாரயன்—ஏற்று; ஆசு—வெகுவிரைவில்; ஸித்யஸி—முழு பூரணத்துவம் பெற்றவனாக ஆவாய்.

அரசே, பெளதிக சுகபோகத்தில் பற்றுக்கொள்ளாமல், பெரும் நம்பிக்கையுடன் என் கருத்தை அனுசரித்து, என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்வதன் மூலமாக, சாமர்த்தியம் உள்ளவனாகி, அறிவையும், நடைமுறையில் அதைச் செயற்படுத்தும் முறையையும் நீ அறியும்பொழுது, என்னை அடைவதன் மூலமாக மிகவுயர்ந்த பூரணத்துவத்தை நீ அடைந்தவனாவாய்.

பதம் 6.16.65
ஸ்ரீ-சுக உவாச
ஆஸ்வாஸ்ய பகவான் இத்தம் சித்ரகேதும் ஜகத்-குரு:
பஸ்யதஸ் தஸ்ய விஸ்வாத்மா ததஸ் சாந்தர்ததே ஹரி:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஆஸ்வாஸ்ய—உறுதியளித்து; பகவான்—பரமபுருஷர்; இத்தம்—இவ்வாறு; சித்ரகேதும்—சித்ரகேது; ஜகத்-குரு:—ஜகத் குருவும்; பஸ்யத:—பார்த்துக் கொண்டிருக்கும் போதே; தஸ்ய—அவர்; விஸ்வ-ஆத்மா—முழு பிரபஞ்சத்திற்கும் பரமாத்மாவுமான; தத:—அங்கிருந்து; ச—கூட; அந்தர்ததே—மறைந்து விட்டார்; ஹரி:—பகவான் ஸ்ரீ ஹரி.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சித்ரகேதுவிற்கு இவ்வாறு உபதேசித்து, இவ்விதமாக அவரால் பூரணத்துவம் அடைய முடியும் என்று உறுதியளித்தபின், ஜகத் குருவும், பரமாத்மாவும், சங்கர்ஷணரும், பரமபுருஷருமாகிய பகவான் ஸ்ரீ ஹரி, சித்ரகேது பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த இடத்திலிருந்து மறைந்து விட்டார்.


ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “சித்ரகேது பரமபுருஷரைச் சந்தித்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare