அத்தியாயம் – 16
சித்ரகேது பரமபுருஷரைச் சந்தித்தல்
பதம் 6.16.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, மாமுனிவரான நாரதர் தமது யோக சக்தியினால், மரணமடைந்த அந்த மகனை துக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த உறவினர்களுக்குக் காட்டி, பின்வருமாறு கூறலானார்.

பதம் 6.16.2 : ஸ்ரீ நாரத முனி கூறினார்: ஜீவாத்மாவே, உனக்கு மங்களமுண்டாகட்டும். உன் தாயையும், தந்தையையும், நண்பர்களையும், உறவினர்களையும் கண் திறந்து பார். அவர்கள் உன்னைப் பற்றிய துக்கத்தால் தவிக்கின்றனர்.

பதம் 6.16.3 : நீ அகால மரணமடைந்ததால் எஞ்சியுள்ள உனது ஆயுள் அப்படியே இருக்கிறது. எனவே உனது உடலில் மீண்டும் புகுந்து, மீதமுள்ள உனது வாழ்நாளை உற்றார் உறவினர்களுடன் அனுபவிப்பாயாக. உன் தந்தையால் கொடுக்கப்பட்ட அரச சிம்மாசனத்தையும், அனைத்து செல்வங்களையும் ஏற்றுக் கொள்வாயாக.

பதம் 6.16.4 : நாரத முனிவரின் யோக சக்தியினால் அந்த ஜீவாத்மா, உயிரற்ற தனது உடலுக்குள் மீண்டும் சிறிது நேரம் புகுந்து, நாரத முனிவரின் வேண்டுகோளின்படி பின்வருமாறு பேசலாயிற்று: ஜீவாத்மாவாகிய நான், என் கர்ம பலன்களுக்கேற்ப, சில சமயங்களில் தேவர்களுக்கிடையிலும், சிலசமயங்களில் தாழ்ந்த மிருகங்களுக்கிடையிலும் சிலசமயங்களில் தாவரங்களுக்கிடையிலும், சிலசமயங்களில் மனிதர்களுக்கிடையிலும் ஒருடலிலிருந்து மற்றொரு உடலுக்கு மாறிக்கொண்டிருக்கிறேன். எனவே எப்பிறவியில் இவர்கள் எனது பெற்றோர்களாக இருந்தனர்? உண்மையில் ஒருவர் எனக்குத் தாயுமில்லை, மற்றவர் எனக்குத் தந்தையுமில்லை. நான் எப்படி இவ்விருவரையும் என் பெற்றோர்களாக ஏற்றுக் கொள்ள முடியும்?

பதம் 6.16.5 : ஜீவராசியை அடித்துச் செல்லும் ஒரு நதியைப் போல் முன்னேறிச் செல்லும் இந்த ஜட உலகில் எல்லோரும் மாறி மாறித் தொடர்ந்து நண்பர்களாகவும், குடும்ப அங்கத்தினர்களாகவும், விரோதிகளாகவும், மத்தியஸ்தர்களாகவும், நலம் விரும்பிகளாகவும், ஒதுக்கப்பட்டவர்களாகவும், பொறாமை கொண்டவர்களாகவும், வேறுபல உறவுகள் உடையவர்களாகவும் ஆகின்றனர். இத்தனை உறவுமுறைகள் இருந்தும், எவரும் நிரந்தரமாக உறவு கொண்டிருப்பதில்லை.

பதம் 6.16.6 : எவ்வாறு பண்டமாற்றுக்குப் பயன்படும் தங்கம் முதலான பொருட்கள் காலப்போக்கில் மனிதர்களிடையே மாறிமாறி வருகின்றனவோ, அவ்வாறே ஜீவராசியானவன் தனது கர்ம பலன்களின் விளைவாக, வெவ்வேறு உயிரினங்களிலுள்ள தாய் தந்தையருக்கிடையில் மாறிமாறி வந்து, பிரபஞ்சம் முழுவதிலும் சஞ்சரிக்கிறான்.

பதம் 6.16.7 : ஒருசில ஜீவராசிகளே மனித இனத்தில் பிறக்கின்றன. மற்றவை மிருகங்களாகப் பிறக்கின்றன. இரண்டுமே ஜீவராசிகள்தான் என்றாலும், அவற்றிற்கிடையிலுள்ள உறவுமுறைகள் நிலையற்றவையாகும். ஒரு மிருகம் ஒரு மனிதனின் பாதுகாப்பில் சில காலம் இருந்து, பிறகு வேறொரு மனிதனின் உடைமையாக மாற்றப்படக்கூடும். அந்த மிருகம் சென்ற உடனேயே அதன் முந்திய உரிமையாளன் அதனிடம் தனக்கிருந்த உரிமையை விட்டுவிடுகிறான். அந்த மிருகம் தன்னிடம் இருக்கும்வரை அதனிடம் அவனுக்கு உறவு இருக்கிறது. ஆனால் அம்மிருகம் விற்கப்பட்டதும் அந்த உறவு மறைந்துவிடுகிறது.

பதம் 6.16.8 : அழியக்கூடிய உடல்களை அடிப்படையாகக் கொண்ட உறவுமுறையின் காரணத்தால், ஒரு ஜீவராசி மற்றொரு ஜீவராசியுடன் சம்பந்தப்பட்டவனாகிறான் என்றாலும், ஜீவராசி நித்தியமானவனாவான். உண்மையில் பிறப்பதும், மடிவதும் இந்த உடல்தான், ஜீவராசியல்ல. இதை ஒருவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜீவராசிக்குப் பெயரளவேயான தாய் தந்தையருடன் உண்மையான உறவுமுறை எதுவும் கிடையாது. தனது பூர்வ கர்மத்தின் பலனாக, ஒரு குறிப்பிட்ட தாய், தந்தையருக்கு அவன் மகனாக இருக்கும்வரை, அந்த தாய், தந்தையரால் கொடுக்கப்பட்ட உடலுடன் அவனுக்கு ஒரு சம்பந்தமும் இருக்கிறது. இவ்வாறு தன்னை அவர்களுடைய மகனென்று பொய்யாக ஏற்றுக் கொள்ளும் அவன் பாசமுள்ளவன்போல் நடந்து கொள்கிறான். ஆனால் அவன் மரணமடைந்ததும் அந்த உறவும் முடிந்து விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் உள்ள ஒருவன் பொய்யான மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் சிக்கிக் கொள்ளக்கூடாது.

பதம் 6.16.9 : உண்மையில் ஜீவராசி ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதால், அவன் நித்தியமானவனும், அழிவற்றவனுமாவான். அவன் பிறப்பதுமில்லை, மடிவதுமில்லை. எல்லா வகையான உடல்களுக்கும் அவனே அடிப்படைத் தத்துவம் என்றாலும், அவன் உடலின் பிரிவைச் சேர்ந்தவனல்ல. ஜீவராசி மிகவும் பரிசுத்தமானவான் என்பதால் அவன் குணத்தில் பரமபுருஷருக்குச் சமமானவனாவான். இருப்பினும், அவன் மிகமிகச் சிறியவன் என்பதால், புறச்சக்தியினால் மயக்கப்படக் கூடியவனாக இருக்கிறான். இவ்விதமாக, தனது பல்வேறு உடல்களை ஏற்படுத்திக் கொள்கிறான்.

பதம் 6.16.10 : இந்த ஜீவராசிக்கு மிகவும் பிரியமானவனுமில்லை, பிரியமில்லாதவனுமில்லை. தன்னுடையதற்கும், பிறருடையதற்கும் இடையில் அவன் வேறுபாடு காண்பதில்லை. அவன் இரண்டற்ற ஒருவனாவான்; அதாவது, அவன் நண்பர்கள் அல்லது பகைவர்களாலோ, நல்லவர்கள் அல்லது தீயவர்களாலோ பாதிக்கப்படுவதில்லை. அவன் மனிதர்களின் வெவ்வேறு குணங்களுக்கு ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிறான்.

பதம் 6.16.11 : காரண, விளைவுகளை உண்டாக்குபவரான பரமபுருஷர் (ஆத்மா), கருமத்தினால் விளையும் இன்ப, துன்பங்களை ஏற்றுக்கொள்வதில்லை. பௌதிக உடலை ஏற்கவேண்டிய நிர்பந்தத்திலிருந்து அவர் முற்றிலும் சுதந்திரமானவராவார். அவருக்கு பௌதிக உடல் இல்லையென்பதால், அவர் எப்பொழுதும் நடுநிலையாக நடந்து கொள்கிறார். ஜீவராசிகள் பகவானின் பின்னப் பகுதிகளாக இருப்பதால், பகவானின் குணங்களை மிகச்சிறிய அளவில் பெற்றுள்ளனர். எனவே ஒருவன் துக்கத்தினால் பாதிக்கப்படக் கூடாது.

பதம் 6.16.12 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சித்ரகேதுவினுடைய மகனின் ரூபத்திலிருந்த பந்தப்பட்ட ஆத்மா இவ்வாறு பேசிவிட்டுச் சென்றதும், சித்ரகேதுவும், மற்ற உறவினர்களும் ஆச்சரியமடைந்து, அவனுடன் தங்களைப் பிணைத்திருந்த பாசச் சங்கிலியை அறுத்து, துக்கத்திலிருந்து விடுபட்டனர்.

பதம் 6.16.13 : அந்த உறவினர்கள், ஈமக் கிரியைகளைச் செய்து, இறந்த குழந்தையின் உடலை எரித்துத் தங்கள் கடமைகளை நிறைவேற்றியபின், மோகம், துக்கம், பயம், துன்பம் ஆகியவற்றிற்குக் காரணமான பாசத்தைவிட்டொழித்தனர். அப்படிப்பட்ட பாசத்தை விடுவது நிச்சயமாக கடினம்தான். ஆனால் அவர்கள் மிகச் சுலபமாக அதை விட்டுவிட்டனர்.

பதம் 6.16.14 : குழந்தைக்கு விஷம் கொடுத்த கிருதத்யுதியின் சக மனைவிகள் மிகவும் வெட்கத்திற்குள்ளாகி, தங்களது உடல்களின் காந்தியை இழந்தனர். அரசே, இவ்வாறு அழுது புலம்பிய வேளையில், அங்கிரரின் போதனைகளை நினைவுகூர்ந்த அவர்கள், குழந்தைகள் பெறும் நோக்கத்தைக் கைவிட்டனர். பிறகு பிராமணர்களின் வழிகாட்டலின்படி, யமுனைக்கரைக்குச் சென்ற அவர்கள் அதில் குளித்துவிட்டு, தங்களுடைய பாவச் செயல்களுக்கான பிராயச்சித்தத்தைச் செய்தனர்.

பதம் 6.16.15 : இவ்விதமாக, பிராமணர்களான அங்கிரர் மற்றும் நாரதரின் உபதேசங்களால் ஞான ஒளியூட்டப்பட்ட சித்ரகேது மகாராஜன், ஆத்ம ஞானத்தை முழுமையாக அறியப்பெற்றார். ஒரு ஏரியின் சேற்றிலிருந்து ஒரு யானை விடுதலை அடைவதுபோல், சித்ரகேதுவும் குடும்ப வாழ்வெனும் இருண்ட கிணற்றிலிருந்து வெளியே வந்தார்.

பதம் 6.16.16 : அரசர் யமுனை நதியில் முறைப்படி நீராடி, முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும் ஜல தர்ப்பணம் செய்தார். பிறகு வைராக்கியத்துடன் புலன்களையும், மனதையும் அடக்கி, பிரம்ம தேவரின் புத்திரரர்களை (அங்கிரர் மற்றும் நாரதர்) மரியாதையுடன் வணங்கினார்.

பதம் 6.16.17 : அதன்பிறகு, புலனடக்கமுள்ள பக்தரும், சரணடைந்த ஆத்மாவுமான சித்ரகேதுவிடம் மிகவும் திருப்தியடைந்த, சக்திவாய்ந்த முனிவரான நாரதர், பின்வரும் உன்னத ஞானத்தை அவருக்கு உபதேசித்தார்.

பதங்கள் 6.16.18 – 6.16.19 : (நாரதர் சித்ரகேதுவிற்குப் பின்வரும் மந்திரத்தை உபதேசித்தார்.) ஓம்கார சொரூபியான பகவானே, பரமபுருஷரே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். பகவான் வாசுதேவரே, தங்களை நான் தியானிக்கிறேன். பகவான் பிரதியும்னரே, பகவான் அநிருத்தரே, பகவான் சங்கர்ஷணரே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். ஆன்மீக சக்தியின் இருப்பிடமே, பரமானந்த சொரூபியே, சாந்தரும், தன்னிறைவு உடையவருமான தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள், பரம சத்தியமே, இரண்டற்ற ஒருவரே, தாங்கள் பிரம்மனாகவும், பரமாத்மாவாகவும், பகவானாகவும் உணரப்படுகிறீர்கள். ஆகவே தாங்கள் சகல ஞானத்திற்கும் இருப்பிடமாவீர். தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.20 : தங்களுடைய ஆத்மானந்த அனுபவத்தினால், தாங்கள் ஜட இயற்கையின் அலைகளுக்கு மேற்பட்ட உன்னத நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறீர்கள். ஆகவே, எம்பெருமானே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். தாங்கள் புலன்களின் பரம ஆளுனராவீர். தங்களுடைய அவதாரங்களும் எண்ணற்றவையாகும். தாங்கள் அனைவரிலும் மிகப் பெரியவர். எனவே தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.21 : பௌதிக நாம ரூபங்கள் பகவானுக்குப் பொருந்தாதவை என்பதால், பந்தப்பட்ட ஆத்மாவின் வார்த்தைகளும், மனமும் பரமபுருஷரை நெருங்க முடியாது. ஏனெனில் அவர் முற்றிலும் ஆன்மீகமானவரும், ஸ்தூல மற்றும் சூட்சும ரூபங்களுக்கு அப்பாற்பட்டவருமாவார். அருவ பிரம்மன் என்பது அவரது ரூபங்களுள் ஒன்றாகும். அவர் தமது இஷ்டம்போல் நம்மைக் காத்தருள்வாராக.

பதம் 6.16.22 : முற்றிலும் மண்ணினால் செய்யப்பட்ட பானைகள், அந்த மண்ணிலேயே இருந்து, பிறகு உடைந்துவிடும் பொழுது மண்ணாகவே மாறுகின்றன. அவ்வாறே பிரபஞ்சத் தோற்றமானது பரப்பிரம்மனால் செய்யப்பட்டு, பரப்பிரம்மனிலேயே இருந்து, அதே பரப்பிரம்மனிலேயே ஒடுங்கியும்விடுகிறது. எனவே, பிரம்மத்திற்குக் காரணமானவர் பரமபுருஷரே என்பதால் அவருக்குப் பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.23 : அந்த பரப்பிரம்மன் பரமபுருஷரிலிருந்து உற்பத்தியாகி ஆகாயம் போல் உள்ளும், புறமும் பரவி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். இருப்பினும் மனம், புத்தி, புலன்கள், உயிர்ச்சக்தி ஆகியவற்றினால் அவரைத் தொடவோ, அறியவோ முடியாது. அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.24 : எப்படி நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படும் இரும்பு எரிக்கும் சக்தியைப் பெறுகிறதோ, அப்படியே உடல், புலன்கள், மனம், புத்தி, பிராண வாயுக்கள் ஆகியவை வெறும் ஜடப் பிண்டங்களே என்றாலும், அவற்றினுள் பரமபுருஷரால் சிறு உணர்வுத் துளி புகுத்தப்பட்டதும், அவற்றினால் செயற்பட முடிகிறது. எப்படி நெருப்பில் காய்ச்சினாலொழிய இரும்பினால் எரிக்க முடியாதோ, அப்படியே, பரப்பிரம்மனின் தயவு இருந்தாலொழிய, உடலிலுடள்ள புலன்களால் செயற்பட முடியாது.

பதம் 6.16.25 : மிகவுயர்ந்த கிரகமான ஆன்மீக உலகில் நிலைபெற்றிருக்கும் உன்னதமான பகவானே, மிகச் சிறந்த பக்தர்களின் தாமரைத் தளிர் போன்ற கரங்களால் வருடப் பெற்ற தாமரைப் பாதங்களை உடையவரும், பரமபுருஷரும், ஆறு ஐசுவரியங்கள் (கல்யாண குணங்கள்) நிரம்பப்பெற்றவரும், புருஷ-ஸூக்த ஸ்தோத்திரங்களில் பரமபுருஷரென்று குறிப்பிடப்படுபவரும், பரிபூரணமானவரும், பூரண தன்னுணர்வு பெற்றவரும், யோக சித்திகளுக்கெல்லாம் தலைவருமான தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.26 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சித்ரகேதுவிற்கு ஆன்மீக குரு ஆனதும், நாரதர் இந்த ஸ்தோத்திரத்தை முழு சரணாகதியடைந்த அவருக்கு உபதேசித்தார். பரீட்சித்து மகாராஜனே, நாரதர் பிறகு மாமுனிவரான அங்கிரருடன் மிக உயர்ந்த கிரகமான பிரம்மலோகத்திற்குச் சென்றார்.

பதம் 6.16.27 : சித்ரகேது விரதமிருந்து, நீர் மட்டும் பருகி, ஒரு வாரம் தொடர்ந்து நாரத முனிவரால் கொடுக்கப்பட்ட மந்திரத்தை மிகவும் கவனத்துடனும், அக்கறையுடனும் ஜபித்து வந்தார்.

பதம் 6.16.28 : பரீட்சித்து மகாராஜனே, சித்ரகேது தன் ஆன்மீக குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தைத் தொடர்ந்து ஒரு வாரம் மட்டுமே ஜபித்த பிறகு, அவருடைய ஆன்மீக அறிவின் முன்னேற்றத்திற்கு நடுவில் கிடைத்த பலனாக, வித்யாதர லோகத்தின் ஆட்சியைப் பெற்றார்.

பதம் 6.16.29 : அதன்பிறகு சித்ரகேது ஜபித்து வந்த அந்த மந்திரத்தின் செல்வாக்கினால், சில நாட்களுக்குள் அவரது மனம் ஆன்மீக முன்னேற்றத்தால் ஒளியூட்டப்பட்டு, அவர் பகவான் அநந்ததேவரின் திருவடித் தாமரைகளில் அடைக்கலம் பெற்றார்.

பதம் 6.16.30 : பரமபுருஷராகிய பகவான் சேஷனின் பாத கமலங்களை அடைந்த சித்ரகேது, பகவான் தாமரையின் வெள்ளை நார்களைப் போல் வெண்ணிறமாக இருப்பதைக் கண்டார். அவர் நீலப் பட்டாடை அணிந்து, பிரகாசமாக ஜொலிக்கும் கிரீடம், கடகங்கள், ஒட்டியாணம், வளையல்கள் ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அவரது முகம் புன்சிரிப்புடையதாயும், கண்கள் சிவந்தும் இருந்தன. அவர் சனத் குமாரர்களைப் போன்ற சிறந்த முக்தி பெற்ற ஆத்மாக்களால் சூழப்பட்டிருந்தார்.

பதம் 6.16.31 : சித்ரகேது மகாராஜன் பரமபுருஷரை தரிசித்த உடனேயே, எல்லா பெளதிக களங்கங்களிலிருந்தும் தூய்மையடைந்து, அவரது ஆதியான கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றார். இவ்வாறு மௌனமாகி, பகவானிடம் உள்ள அன்பினால் மெய்சிலிர்க்க, அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. அவர் சிறந்த பக்தியுடனும், பேரன்புடனும் மூல முழுமுதற்கடவுளைப் பணிவுடன் வணங்கினார்.

பதம் 6.16.32 : சித்ரகேது அன்பும், பாசமும் நிறைந்த கண்ணீரால், பரமபுருஷரின் தாமரைப் பாதங்களுடைய இருப்பிடத்தை மீண்டும் மீண்டும் நனைத்தபடி இருந்தார். ஆனந்தப் பரவசத்தினால் அவரது தொண்டை அடைத்துக் கொண்டதால், நீண்ட நேரமாக பகவானைத் துதிப்பதற்கேற்ற வார்த்தைகளை அவரால் உச்சரிக்க இயலவில்லை.

பதம் 6.16.33 : அதன்பிறகு, புத்தியால் தன் மனதைக் கட்டுப்படுத்தியதன் மூலமாக, தன் புலன்களைப் புற ஈடுபாடுகளிலிருந்து தடுத்து நிறுத்திய அவர், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமான வார்த்தைகளை திரும்பப் பெற்றார். இவ்விதமாக, புனித சாஸ்திரங்களின் (பிரம்ம சம்ஹிதை மற்றும் நாரத-பஞ்சராத்ரம் போன்ற ஸாத்வ-ஸம்ஹிதைகளின்) சொரூபமானவரும், ஜகத் குருவுமான பகவானை அவர் பின்வருமாறு துதிக்கலானார்.

பதம் 6.16.34 : சித்ரகேது கூறினார்: வெல்லுதற்கரிய பகவானே, உங்களை யாராலும் வெல்ல முடியாது என்றபோதிலும், தங்கள் புலன்களையும் மனதையும் அடக்கிய பக்தர்களால் நீங்கள் வெற்றிகொள்ளப்படுகிறீர்கள் என்பதில் ஐயமில்லை. உங்களிடமிருந்து எந்த பெளதிக ஆதாயத்தையும் எதிர்ப்பார்க்காத பக்தர்களிடம் நீங்கள் காரணமற்ற கருணை காட்டுகிறீர் என்பதால், அவர்களால் உங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது. உண்மையில் நீங்கள் உங்களையே அவர்களுக்குக் கொடுத்து விடுகிறீர்கள். இதனால் உங்களுக்கும் உங்களுடைய பக்தர்களிடம் முழு ஆதிக்கம் உள்ளது.

பதம் 6.16.35 : பகவானே, இப்பிரபஞ்சத் தோற்றமும், அதன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவையும் உங்களுடைய விபூதிகளேயாகும். பிரம்மதேவரும், மற்ற சிருஷ்டிகர்த்தாக்களும் உங்களுடைய ஓர் அம்சத்தின் சிறு அம்சங்களேயன்றி வேறில்லை. அவர்கள் பெற்றுள்ள பூரணமற்ற படைப்புச் சக்தி அவர்களைக் கடவுளாக (ஈஸ்வரர்) ஆக்காது. எனவே தங்களைத் தனித்தனி கடவுள்களாக நினைக்கும் அவர்களுடைய உணர்வு உண்மையில் வீண் கெளரவமாகும். அது செல்லத்தக்கதல்ல.

பதம் 6.16.36 : பிரபஞ்ச தோற்றத்தின் மிகச் சிறிய பொருளான அணுவிலிருந்து, பிரம்மாண்டமான பிரபஞ்சங்கள் மற்றும் மொத்த பெளதிக சக்தி வரையுள்ள அனைத்திலும் தாங்களே ஆரம்பமாகவும், நடுவாகவும், முடிவாகவும் இருக்கிறீர்கள். இருப்பினும் ஆரம்பமோ, நடுவோ, அல்லது முடிவோ இல்லாதவர் என்பதால் நீங்கள் நித்தியமானவராவீர். இம்மூன்று கால கட்டங்களிலும் இருப்பவராக நீங்கள் உணரப்படுகிறீர்கள். எனவே தாங்கள் நிலையானவராவீர். பிரபஞ்ச தோற்றம் இல்லாதபொழுதும், ஆதி சக்தியாக நீங்கள் இருக்கிறீர்கள்.

பதம் 6.16.37 : ஒவ்வொரு பிரபஞ்சமும் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மொத்த சக்தி மற்றும் பொய் அகங்காரம் ஆகிய ஏழு அடுக்குகளால் மூடப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் முந்தியதைவிட பத்து மடங்கு பெரியதாகும். இந்த பிரபஞ்சத்தைத் தவிர இன்னும் எண்ணற்ற பிரபஞ்சங்கள் உள்ளன. அவை எல்லையற்ற அளவுடையவை என்றாலும், சிறிய அணுக்களைப் போல் உங்களுக்குள் சஞ்சரிக்கின்றன. எனவேதான் நீங்கள் எல்லையற்றவர் (அனந்தர்) என்று அழைக்கப்படுகிறீர்கள்.

பதம் 6.16.38 : பகவானே, பரமபுருஷரே, புலன் நுகர்வில் தீவிர வேட்கை கொண்டவர்களும், பல்வேறு தேவர்களை வழிபடுபவர்களுமான புத்தியற்ற மனிதர்கள், மனித ரூபத்திலுள்ள மிருகங்களைவிட எவ்விதத்திலும் சிறந்தவர்களல்ல. மிருக சுபாவத்தின் காரணத்தினால் அவர்கள் உங்களை வழிபடத் தவறிவிடுகின்றனர். அதற்குப் பதிலாக, உங்களுடைய பெருமைகளின் சிறு பொறிகளான அற்ப தேவர்களை அவர்கள் வழிபடுகின்றனர். முழு பிரபஞ்சத்துடன் தேவர்களும் அழிந்துவிடும் பொழுது, அவர்களிடமிருந்து பெறப்பட்ட வரங்களும் அழிந்துவிடுகின்றன. அது, பதவியில் இல்லாத ஓர் அரசரின் பெருந்தன்மையைப் போலாகும்.

பதம் 6.16.39 : பரமபுருஷரே, புலன் நுகர்வுக்குரிய பெளதிக ஆசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவன், சகல ஞானத்திற்கும் பிறப்பிடமும், பெளதிக குணங்களுக்கு மேற்பட்டவருமான உங்களை வழிபடுவானாயின் அவன், எப்படி மலடாக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட விதைகள் முளைப்பதில்லையோ அப்படியே பெளதிக மறுபிறப்பிற்கு உட்படுவதில்லை. ஜீவராசிகள் ஐடஇயற்கையால் பந்தப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பிறப்பு, இறப்பெனும் தொடர்ச்சிக்கு உட்பட்டுள்ளனர். ஆனால் நீங்கள் உன்னதமானவர் என்பதால், உன்னதமான முறையில் உங்களுடைய சகவாசம் கொள்ளும் நாட்டமுள்ளவர்கள் ஜட இயற்கையின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்புகின்றனர்.

பதம் 6.16.40 : வெல்லப்பட முடியாதவரே, உங்களுடைய தாமரைப் பாதங்களில் தஞ்சமடைவதற்குரிய களங்கமற்ற சமய முறையான பாகவத தர்மத்தை நீங்கள் பேசியபொழுது அதுவே உங்களுடைய வெற்றியாக அமைந்தது. பௌதிக ஆசைகள் இல்லாதவர்களும், தன்நிறைவுடைய முனிவர்களுமான குமாரர்களைப் போன்றவர்கள், பெளதிக களங்கத்திலிருந்து விடுபட உங்களை வழிபடுகின்றனர். அதாவது, உங்களுடைய திருவடித் தாமரைகளில் தஞ்சமடைய பாகவத தர்மம் என்ற முறையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

பதம் 6.16.41 : பாகவத-தர்மத்தைத் தவிர மற்றெல்லா வகையான சமய முறைகளும் முரண்பாடுகள் நிறைந்தவையாக இருப்பதால், அவை கர்ம-பலனை எதிர்பார்க்கும் எண்ணத்துடனும், ‘நீ, நான்” மற்றும் “உன்னுடையது, என்னுடையது” என்ற வேறுபாடுகளுடனும் செயற்படுகின்றன. ஸ்ரீமத்பாகவதத்தைப் பின்பற்றுவோருக்கு அத்தகைய எண்ணம் கிடையாது. அவர்கள் தங்களை கிருஷ்ணருக்குச் சொந்தமானவர்கள் என்ற எண்ணத்துடனும், கிருஷ்ணர் தங்களுக்குச் சொந்தமானவர் என்ற எண்ணத்துடனும் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றுள்ளனர். தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த மற்ற சமய முறைகளும் உள்ளன. அவற்றில் எதிரியைக் கொல்வதற்கும் யோக சக்திகளைப் பெறுவதற்கும் இடமுண்டு. ஆனால் அத்தகைய சமய முறைகள் தீவிர உணர்ச்சியும், பொறாமையும் நிறைந்தவை என்பதால், அவை தூய்மையற்றவையும், நிலையற்றவையுமாகும். பொறாமை நிறைந்துள்ள காரணத்தால் அவற்றில் அதர்மமும் நிறைந்துள்ளது.

பதம் 6.16.42 : தன்னிடமும், மற்றவர்களிடமும் பொறாமையை உண்டாக்கக்கூடிய ஒரு சமய முறையானது எவ்வாறு தனக்கும், மற்றவர்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்க முடியும்? இத்தகைய ஒரு முறையைப் பின்பற்றுவதில் என்ன நன்மை உள்ளது? உண்மையில் இந்த முறையினால் அடையப்பட வேண்டியதுதான் என்ன? சுயப் பொறாமையின் காரணத்தால் துன்பம் இழைப்பதானது உங்களுடைய கோபத்தைத் தூண்டுவதாக உள்ளது. இவ்வாறாக அவன் அதர்மத்தைச் செய்பவனாகிறான்.

பதம் 6.16.43 : பகவானே, உங்களுடைய கண்ணோட்டத்திற்கேற்ப ஸ்ரீமத் பாகவதத்திலும், பகவத்கீதையிலும் ஒருவனது வர்ணாஸ்ரம கடமை உபதேசிக்கப்பட்டுள்ளது. அது வாழ்வின் உயர்ந்த இலட்சியத்திலிருந்து விலகுவதேயில்லை. எவர்கள் உங்களுடைய மேற்பார்வையின் கீழ் தங்களுடைய வர்ணாஸ்ரம கடமைகளைப் பின்பற்றி, அசைவன, அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளிடமும் சமமாக நடந்து கொண்டு, அவைகளுக்கிடையில் உயர்வு, தாழ்வு பாராட்டுவதில்லையோ அவர்களே ஆரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தகைய ஆரியர்கள் பரமபுருஷராகிய உங்களை வழிபடுகின்றனர்.

பதம் 6.16.44 : பகவானே, உங்களுடைய தரிசனத்தால் எல்லா பௌதிக களங்கத்திலிருந்தும் விடுபடுவது ஒருவனுக்குச் சாத்தியமாகிறது. உங்களுடைய நேரடியான தரிசனத்தைப் பற்றி சொல்வானேன். ஒரே ஒரு தடவை உங்களுடைய புனித நாமத்தைக் கேட்பதால் மனிதரில் கடைப்பட்ட சண்டாளர்கள் கூட எல்லா பௌதிக களங்கத்திலிருந்தும் விடுபடுகின்றனர். இந்த நிலையில், உங்களை தரிசிப்பதாலேயே பெளதிக களங்கத்திலிருந்து யார்தான் விடுபட மாட்டார்?

பதம் 6.16.45 : ஆகவே பகவானே, உங்களை தரிசித்ததாலேயே, என் மனதையும் இதயத்தையும் எப்பொழுதும் ஆக்கிரமித்திருந்த பாவச் செயல்களும், மற்றும் அவற்றின் பலன்களான பெளதிகப் பற்று, காம இச்சைகள் ஆகியவற்றின் எல்லாக் களங்கமும் இப்பொழுது துடைக்கப்பட்டுவிட்டன. மாமுனிவரான நாரதரால் எது முன்பே கூறப்பட்டதோ, அது ஒருபோதும் பொய்க்காது. அதாவது, நாரத முனிவரால் பயிற்றுவிக்கப்பட்டதன் பலனாக உங்களுடைய தரிசனத்தை நான் பெற்றேன்.

பதம் 6.16.46 : எல்லையற்ற பரமபுருஷரே, நீங்கள் பரமாத்மா என்பதால், இந்த ஜட உலகில் ஒரு ஜீவராசி செய்வதையெல்லாம் நீங்கள் நன்றாக அறிவீர்கள். சூரியனின் முன்னிலையில், அது மின்மினிப் பூச்சியின் ஒளியால் எதுவும் புலப்படுவதில்லை. அதுபோலவே, நீங்கள் அனைத்தையும் அறிந்தவர் என்பதால், உங்கள் முன்னிலையில் என்னால் அறிவிக்கப்பட வேண்டியது எதுவுமில்லை.

பதம் 6.16.47 : பகவானே, பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்து, காத்து, அழிப்பவர் தாங்களே. ஆனால் பெளதிகத்தில் ஆழ்ந்தவர்களும், பிரிவையே எப்பொழுதும் பார்ப்பவர்களுமான மனிதர்களுக்கு உங்களை தரிசிப்பதற்குரிய கண்கள் இல்லை. உங்களுடைய உண்மையான நிலையை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, பிரபஞ்ச தோற்றம் உங்களுடைய ஆட்சிக்கு உட்படாதது என்று அவர்கள் முடிவு செய்கின்றனர். பகவானே நீங்கள் பரிசுத்தமானவர். ஆறு ஐசுவரியங்களையும் பூரணமாகப் பெற்றவர். ஆகவே உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.48 : பகவானே, உங்களுடைய முயற்சிக்குப் பிறகுதான் பிரம்மதேவரும், இந்திரனும், மற்ற பிரபஞ்ச நிர்வாகிகளும் தங்கள் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகின்றனர். பகவானே, பெளதிக சக்தியை நீங்கள் உணர்ந்த பிறகே புலன்கள் அவற்றை உணரத் துவங்குகின்றன. பரமபுருஷர் எல்லாப் பிரபஞ்சங்களையும் கடுகுகளைப்போல் தமது தலைகளின்மேல் தாங்கிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு, ஆயிரக்கணக்கான தலைகளுடைய பரமபுருஷருக்கு, எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.16.49 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: குரு வம்சத்தில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே, பரமபுருஷராகிய பகவான் அனந்ததேவர், வித்யாதரர்களின் அரசரான சித்ரகேதுவின் ஸ்தோத்திரங்களால் மிகவும் மகிழ்ந்து, அவருக்குப் பின்வருமாறு பதிலளித்தார்.

பதம் 6.16.50 : பரமபுருஷராகிய அநந்ததேவர் பின்வருமாறு பதிலளித்தார்: அரசே, மாமுனிவர்களான நாரதராலும், அங்கிரராலும் என்னைப் பற்றி கூறப்பட்ட உபதேசங்களை ஏற்றுக் கொண்டதன் பயனாக நீ உன்னத அறிவை முழுமையாக அறிந்தவன் ஆகிவிட்டாய். இப்பொழுது உனக்கு ஆத்ம ஞானம் போதிக்கப்பட்டிருப்பதால், என்னை நேருக்கு நேராக நீ தரிசிக்கின்றாய். ஆகவே இப்பொழுது நீ முழு பூரணத்துவம் பெற்று விளங்குகிறாய்.

பதம் 6.16.51 : அசைவன, அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளும் என்னிடமிருந்து பிரிந்து சென்ற எனது அம்சங்களேயாகும். என்னால் தோற்றுவிக்கப்பட்ட காரணத்தினால் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நானே பரமாத்மாவாக இருக்கிறேன். ஓம்காரம் மற்றும் ஹரே கிருஷ்ண மந்திரம் போன்ற உன்னத ஓசைகளின் வடிவமும் நானே. விக்கிரக வடிவிலுள்ள நித்தியமான, ஆனந்தமயமான, ஆன்மீகமான ரூபம் மற்றும் உன்னத ஓசை ஆகிய என்னுடைய இவ்விரு ரூபங்களும் எனது நித்திய ரூபங்களாகும்; இவை பெளதிகமானவையல்ல.

பதம் 6.16.52 : அனுபவிக்கத்தக்க பொருட்களைக் கொண்டது என்று பந்தப்பட்ட ஆத்மாவால் ஏற்றுக் கொள்ளப்படும் இந்த ஜட உலகில், பந்தப்பட்ட ஆத்மா தானே இந்த ஜட உலகின் அனுபவிப்பாளன் என்றெண்ணி விரிவடைகிறான். அதுபோலவே, ஜட உலகும் சுகபோகத்தின் ஒரு பிறப்பிடமாக ஜீவராசிக்குள் விரிவடைகிறது. இவ்விதமாக இரண்டுமே விரிவடைகின்றன. ஆனால் இவை எனது சக்திகள் என்பதால் இவ்விரண்டிலும் நான் ஊடுருவிப் பரவியிருக்கிறேன். பரமபுருஷர் என்ற முறையில், நானே இவ்விளைவுகளுக்குக் காரணமாவேன். இவ்விரண்டுமே என்னிடத்தில் அடங்கியிருக்கின்றன என்பதை ஒருவன் அறிய வேண்டும்.

பதங்கள் 6.16.53 – 6.16.54 : ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவன் கனவு காண்கிறான். அந்த கனவு நிலையில் அவன் தனக்குள் பெரிய மலைகளையும், நதிகளையும் அல்லது முழு பிரபஞ்சத்தையும் போன்ற வேறு பல பொருட்களையும் காண்கிறான். இருப்பினும் இவையெல்லாம் அவனுக்கு வெகு தூரத்தில் உள்ளன. சிலசமயங்களில் கனவு கலைந்து விழித்துக்கொள்ளும் ஒருவன், தான் ஒரு மனித ரூபத்தில், படுக்கையின் ஒரு மூலையில் படுத்திருப்பதைப் பார்க்கிறான். பிறகு, தான் ஒரு குறிப்பிட்ட நாட்டையும், குடும்பத்தையும் சேர்ந்தவன் என்பது போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் தன்னை அவன் காண்கிறான். ஆழ்ந்த உறக்கம், கனவுநிலை, விழிப்புநிலை ஆகிய எல்லா நிலைகளும் பரமபுருஷரின் சக்திகளேயன்றி வேறில்லை. இந்த நிலைகளின் மூல சிருஷ்டிக்கர்த்தாவும், இவற்றினால் பாதிப்படையாதவருமான பரமபுருஷரை ஒருவன் எப்பொழுதும் நினைவிற்கொள்ள வேண்டும்.

பதம் 6.16.55 : யார் மூலமாக, உறக்கத்தலிருக்கும் ஜீவராசியால் அவனது கனவு நிலையையும், பௌதிக புலன்களின் செயல்முறைகளுக்கு அப்பாற்பட்ட அவனது மகிழ்ச்சியையும் புரிந்து கொள்ள முடிகிறதோ, அந்த பரப்பிரம்மன், எங்கும் நிறைந்துள்ள பரமாத்மா, நானே என்பதை அறிவாயாக. அதாவது, உறக்கத்திலுள்ள ஜீவராசியின் செயல்களுக்குக் காரணம் நானே என்பதை அறிவாயாக.

பதம் 6.16.56 : உறக்கத்திலுள்ள ஒருவனின் கனவுகள் பரமாத்மாவால் மட்டுமே காணப்படும் விஷயங்களாக இருக்குமானால், பரமாத்மாவிலிருந்து வேறுபட்டவனான ஜீவராசியால் எப்படி அவனது கனவின் செயல்களை ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும்? ஒருவனுடைய அனுபவங்களை மற்றவனால் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே உண்மைகளை அறிந்தவன், அதாவது கனவு மற்றும் விழிப்பு நிலைகளில் தோன்றிய சம்பவங்களைப் பற்றி விசாரிக்கும் ஜீவராசி, நேர்முகச் சம்பந்தமில்லாத செயல்களிலிருந்து வேறுபட்டவனானவான். அந்த அறியும் தத்துவம் பிரம்மனாவார். அதாவது, அறியும் குணமானது ஜீவராசிகளுக்கும், பரமாத்மாவிற்கும் சொந்தமாகும். இவ்வாறாக ஜீவராசியாலும் கனவு மற்றும் விழிப்பு நிலைகளின் செயல்களை உணர முடியும். இரு நிலைகளிலும் அறிபவன் மாறாமல் இருக்கிறான். ஆனால் குணத்தில் அவன் பரப்பிரம்மத்துடன் ஒன்றுபட்டவனாவான்.

பதம் 6.16.57 : எப்பொழுது ஒரு ஜீவராசி தன்னை என்னிலிருந்து வேறுபட்டவனாக எண்ணி, நித்தியத்தன்மை, அறிவு, ஆனந்தம் ஆகிய குணங்களில் என்னுடன் ஒன்றுபட்ட அவனது ஆன்மீக சொரூபத்தை மறந்து போகிறானோ, அப்பொழுது அவனுடைய பந்தப்பட்ட பௌதிக வாழ்வு துவங்குகிறது. அதாவது, என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப அவனுடைய விருப்பத்தை அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக, அவன் மனைவி, மக்கள், பௌதிக உடைமை போன்ற உடலின் விரிவாம்சங்களில் தனது விருப்பத்தை வளர்த்துக் கொள்கிறான். இவ்விதமாக, அவனுடைய செயல்களின் ஆதிக்கத்தினால் ஒருடலிலிருந்து மற்றொரு உடல் வருகிறது. ஒரு மரணத்திற்குப்பின் மற்றொரு மரணம் சம்பவிக்கிறது.

பதம் 6.16.58 : ஒரு மனிதனால் வேத சாஸ்திரம் மற்றும் அதன் நடைமுறைப் பிரயோகம் ஆகியவற்றின் மூலமாக வரும் தன்னுணர்வினால் வாழ்வில் பூரணத்துவத்தை அடைய முடியும். குறிப்பாக புண்ணிய பூமியான இந்தியாவில் பிறந்த ஒருவனுக்கு இது சாத்தியமான ஒன்றாகும். இத்தகைய ஒரு வசதியான நிலையில் பிறந்தும், தன்னை அறிய முடியாதிருக்கும் ஒருவன், மேலுலகங்களுக்கு உயர்த்தப்பட்டாலும் அவனால் மிக உயர்ந்த பூரணத்துவத்தை அடைய முடியாது.

பதம் 6.16.59 : கர்ம பலன்களுக்காக இயற்றப்படும் செயற்களத்தில் உள்ள பெருந்தொல்லைகளை நினைவிற்கொண்டு, மேலும் வேத சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பௌதிக செயல்களிலிருந்தோ அல்லது பலனை எதிர்பார்க்கும் செயல்களிலிருந்தோ, தன் விருப்பங்களுக்கெதிரான பலன்களை எப்படி ஒருவன் பெறுகிறான் என்பதையும் நினைவிற்கொண்டு, புத்தியுள்ள ஒரு மனிதன் பலன் கருதும் செயல்களைச் செய்யும் ஆசையை விட்டுவிட வேண்டும். ஏனெனில் இத்தகைய முயற்சிகளால் வாழ்வின் முடிவான இலட்சியத்தை அடைய முடியாது. மற்றொரு புறம், ஒருவன் பலனை எதிர்பார்க்காமல் செயற்படுவானாயின், அதாவது பக்திபூர்வமான செயல்களில் ஒருவன் ஈடுபடுவானாயின், அவனால் துன்பகரமான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு, வாழ்பவன் மிக உயர்ந்த இலட்சியத்தை அடைய முடியும். ஒருவன் இதைக் கருத்திற்கொண்டு, பெளதிக ஆசைகளை விட்டுவிட வேண்டும்.

பதம் 6.16.60 : தம்பதிகளான ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மகிழ்ச்சியை அடையவும், துக்கத்தைக் குறைக்கவும் பல வழிகளில் இணைந்து செயற்படுகின்றனர். ஆனால் அவர்களது செயல்கள் ஆசைகள் நிரம்பியவையாக இருப்பதால், அவை ஒருபோதும் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதில்லை, துக்கத்தைக் குறைப்பதுமில்லை. மாறாக, அவை மிகவும் வருந்தத்தக்க நிலைக்குக் காரணமாகின்றன.

பதங்கள் 6.16.61 – 6.16.62 : தங்களுடைய பௌதிக அனுபவத்தில் தற்பெருமை கொண்டுள்ளவர்களால் விழிப்பு நிலையிலும், உறக்கத்திலும், ஆழ்ந்த உறக்கத்திலும் செய்யப்படும் செயல்கள், அவர்கள் விரும்பியதற்கு எதிரான பலன்களை மட்டுமே கொண்டு வருகின்றன என்பதை ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும். பெளதிகவாதிகளால் ஆன்மீகமான ஆத்மாவை உணர்வது மிகவும் கடினம் என்றாலும், அது இச்சூழ்நிலைகளுக்கெல்லாம் மேற்பட்டது என்பதையும் ஒருவன் அறிய வேண்டும். ஒருவன் தனது பகுத்தறிவின் பலத்தைக் கொண்டு, இப்பிறவியிலும், அடுத்ததிலும், கர்ம பலன்களிலுள்ள ஆசையை விட்டுவிட வேண்டும். இவ்வாறு ஒருவன் ஆன்மீக ஞானத்தால் அனுபவம் பெற்று, என்னுடைய பக்தனாக மாற வேண்டும்.

பதம் 6.16.63 : வாழ்வின் முடிவான இலக்கை அடைய முயல்பவர்கள், முழுமையும் பின்னப் பகுதியும் போல, பரமபுருஷரும், ஜீவராசியும் குணத்தில் ஒற்றுமையுடையவர்கள் என்பதைச் சாமார்த்தியமாக அறிய வேண்டும். இதுதான் வாழ்வின் முடிவான புரிந்துணர்வாகும். இதைவிடச் சிறந்த உண்மை வேறில்லை.

பதம் 6.16.64 : அரசே, பெளதிக சுகபோகத்தில் பற்றுக்கொள்ளாமல், பெரும் நம்பிக்கையுடன் என் கருத்தை அனுசரித்து, என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்வதன் மூலமாக, சாமர்த்தியம் உள்ளவனாகி, அறிவையும், நடைமுறையில் அதைச் செயற்படுத்தும் முறையையும் நீ அறியும்பொழுது, என்னை அடைவதன் மூலமாக மிகவுயர்ந்த பூரணத்துவத்தை நீ அடைந்தவனாவாய்.

பதம் 6.16.65 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சித்ரகேதுவிற்கு இவ்வாறு உபதேசித்து, இவ்விதமாக அவரால் பூரணத்துவம் அடைய முடியும் என்று உறுதியளித்தபின், ஜகத் குருவும், பரமாத்மாவும், சங்கர்ஷணரும், பரமபுருஷருமாகிய பகவான் ஸ்ரீ ஹரி, சித்ரகேது பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த இடத்திலிருந்து மறைந்து விட்டார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare