அத்தியாயம் – 14
சித்ரகேது மகாராஜனின் மனக்கவலை
பதம் 6.14.1
ஸ்ரீ-பரீக்ஷித் உவாச
ரஜஸ்-தம:-ஸ்வபாவஸ்ய ப்ரஹ்மன் வ்ருத்ரஸ்ய பாப்மன:
நாராயணே பகவதி கதம் ஆஸீத் த்ருடா மதி:
ஸ்ரீ-பரீக்ஷித் உவாச—பரீட்சித்து மகாராஜன் வினவினார்; ரஜ:—ரஜோ குணத்தின்; தம:—மற்றும் தமோ குணத்தின்; ஸ்வ-பாவஸ்ய—சுபாவமுடைய; ப்ரஹ்மன்—கற்றறிந்த பிராமணரே; வ்ருத்ரஸ்ய—விருத்ராசுரனின்; பாப்மன:—பாவியாக இருக்க வேண்டிய; நாராயணே—பகவான் நாராயணரிடத்தில்; பகவதி—பரமபுருஷராகிய; கதம்—எவ்வாறு; ஆஸீத்—ஏற்பட்டது; த்ருடா—மிகவும் திடமான; மதி:—புத்தி.
பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: கற்றறிந்த பிராமணரே, ரஜோ மற்றும் தமோ குணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அசுரர்கள் பொதுவான பாவிகளாகத்தான் இருப்பார்கள். அவ்வாறிருக்க விருத்ராசுரன் எவ்வாறு பரமபுருஷராகிய பகவான் நாராயணரிடத்தில் இத்தகைய உயர்ந்த அன்பைப் பெற்றான்?
பதம் 6.14.2
தேவானாம் சுத்த-ஸத்வானாம் ரிஷீணாம் சாமலாத்மனாம்
பக்திர் முகுந்த-சரணே ந ப்ராயேணோபஜாயதே
தேவானம்—தேவர்களுக்கும்; சுத்த-ஸத்வானாம்—தூய்மையடைந்த மனதுடைய; ரிஷீணாம்—சிறந்த முனிவர்களுக்கும்; ச—மேலும்; அமல-ஆத்மனாம்—வாழ்வை தூய்மைப்படுத்திக் கொண்டவர்களான; பக்தி:—பக்தித் தொண்டு; முகுந்த-சரணே—முக்தியளிப்பவரான பகவான் முகுந்தனின் தாமரைப் பாதங்களில்; ந—இல்லை; ப்ராயேண—பெரும்பாலும்; உபஜாயதே—தோன்றுவது.
சத்வ குணத்தில் நிலைபெற்றுள்ள தேவர்களும், பௌதிக சுகத்தின் அழுக்கிலிருந்து தூய்மையடைந்துள்ள சிறந்த முனிவர்களும் கூட மிகவும் அரிதாகவே பகவான் முகுந்தனின் தாமரைப் பாதங்களில் தூய பக்தித் தொண்டை ஆற்றுகின்றனர். (ஆகையால் விருத்ராசுரனால் எவ்வாறு இத்தகைய ஒரு சிறந்த பக்தனாக முடிந்தது?)
பதம் 6.14.3
ரஜோபி: ஸம-ஸங்க்யாதா: பார்த்திவைர் இஹ ஜந்தவ:
தேஷாம் யே கேசனேஹந்தே ஸ்ரேயோ வை மனுஜாதய:
ரஜோபி:—அணுக்களுடன்; ஸம-ஸங்க்யாதா:—சம எண்ணிக்கையுள்ள; பார்த்திவை:—பூமியின்; இஹ—இவ்வுலகில்; ஜந்தவ:—ஜீவராசிகள்; தேஷாம்—அவர்களுடைய; யே—எவர்கள்; கேசன—சில; ஈஹந்தே—செயற்படுகின்றனர்; ஸ்ரேய:—சமயக் கொள்கைகளுக்காக; வை—உண்மையில்; மனுஜ-ஆதய:—மனிதர்களும் மற்றவர்களும்.
இந்த ஜட உலகில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ, அத்தனை ஜீவராசிகள் உள்ளன. அவற்றில் மிகச் சிலவே மனிதர்கள். மேலும் அவர்களுள் சிலரே மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
பதம் 6.14.4
ப்ராயோ முமுக்ஷவஸ் தேஷாம் கேசனைவ த்விஜோத்தம
முமுக்ஷூணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சின் முச்யேத ஸித்யதி
ப்ராய:—பெரும்பாலும்; முமுக்ஷவ:—முக்தியில் ஆர்வமுடையவர்கள்; தேஷாம்—அவர்களுள்; கேசன—சிலரே; ஏவ—உண்மையில்; த்விஜ-உத்தம—பிராமண சிரேஷ்டரே; முமுக்ஷூணாம்—முக்தியடைய விரும்புபவர்களுள்; ஸஹஸ்ரேஷு—பல ஆயிரம் பேர்களுள்; கஸ்சித்—யாரோ ஒருவர்; முச்யேத—உண்மையில் முக்தியடையக் கூடும்; ஸித்யதி—ஒருவரே பூரணத்துவமடைகிறார்.
பிராமணர்களுள் சிறந்தவரான சுகதேவ கோஸ்வாமியே, மதக்கோட்பாடுகளைப் பின்பற்றும் பலரில் வெகு சிலரே ஜடஉலகிலிருந்து முக்திபெற விரும்புகின்றனர். முக்தியடைய விரும்பும் பல ஆயிரக்கணக்கானவர்களுள், ஒருவரே சமூகம், நட்பு, அன்பு, தேசம், வீடு, மனைவி, மற்றும் குழந்தைகளிடம் உள்ள பெளதிக பற்றைத் துறந்து உண்மையில் முக்தியடையக்கூடும். இவ்வாறு முக்தி பெற்ற பல ஆயிரக்கணக்கானவர்களுள், முக்தியின் உண்மையான பொருளை அறிந்தவர் மிகவும் அரிது
பதம் 6.14.5
முக்தானாம் அபி ஸித்தானாம் நாராயண-பாராயண:
ஸுதுர்லப: ப்ரசாந்தாத்மா கோடிஷ்வ் அபி மஹா-முனே
முக்தானாம்—இப்பிறவிலேயே முக்தியடைபவர்களுள் (தேக சுகம், சமூகம், நட்பு, அன்பு ஆகியவற்றில் பற்றற்றவர்கள்); அபி—கூட; ஸித்தானாம்—(தேக சுகம் அற்பமானது என்பதைப் புரிந்து கொண்டுள்ள காரணத்தால்) பக்குவமடைந்தவர்கள்; நாராயண-பாராயண:—நாராயணரே பரமபுருஷர் என்று முடிவு செய்தவர்; ஸு-துர்லப:—மிகவும் அரிதாக காணப்படுகிறார்; ப்ரசாந்த—முற்றிலும் அமைதியான; ஆத்மா—எவருடைய மனது; கோடிஷு—இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கானவர்களில்; அபி—கூட; மஹா-முனே—சிறந்த முனிவரே.
சிறந்த முனிவரே, முக்தியடைந்தவர்களும், முக்தியைப் பற்றிய பூரண ஞானம் உள்ளவர்களுமான பல கோடிக்கணக்கானவர்களுள், ஒருவனே பகவான் நாராயணரின், அல்லது கிருஷ்ணரின் பக்தனாக இருக்கக்கூடும். சாந்த சொரூபமாக விளங்கும் இத்தகைய பக்தர்கள் மிக மிக அரிது.
பதம் 6.14.6
விருத்ரஸ் து ஸ கதம் பாப: ஸர்வ-லோகோபதாபன:
இத்தம் த்ருட-மதி: க்ருஷ்ண ஆஸீத் ஸங்ராம உல்பணே
வ்ருத்ர:—விருத்ராசரன்; து—ஆனால்; ஸ:—அவன்; கதம்—எவ்வாறு; பாப:—பாவியான; ஸர்வ-லோக—மூவுலங்களின்; உபதாபன:—துன்பத்திற்குக் காரணமான; இத்தம்—இத்தகைய; த்ருட-மதி:—உறுதியான புத்தி; க்ருஷ்ணே—கிருஷ்ணரிடத்தில்; ஆஸீத்—இருந்தது; ஸங்ராமே உல்பணே—யுத்தமென்ற பெரு நெருப்பில்
பாவம்மிக்க அசுரனும், புகழற்றவனும் யுத்தமென்ற நெருப்பினால் துன்பத்தையும், கவலைகளையும் கொடுப்பவனுமான விருத்ராசுரனைப் போன்ற ஓர் அசுரனால் எவ்வாறு சிறந்த கிருஷ்ண உணர்வு மிக்கவனாக மாற இயலும்?
பதம் 6.14.7
அத்ர ந: ஸம்சயோ பூயாஞ் ச்ரோதும் கௌதூஹலம் ப்ரபோ
ய: பௌருஷேண ஸமரே ஸஹஸ்ராக்ஷம் அதோஷயத்
அத்ர—இந்த விஷயத்தில்; ந:—நம்முடைய; ஸம்சய:—சந்தேகம்; பூயான்—பெரியது; ஸ்ரோதும்—கேட்பதற்கு; கௌதூஹலம்—ஆர்வம்; ப்ரபோ—பிரபுவே; ய:—எவனொருவன்; பௌருஷேண—தைரியத்தாலும்; பலத்தாலும்; ஸமரே—யுத்தத்தில்; ஸஹஸ்ர-அக்ஷம்—ஆயிரம் கண்களுடைய இந்திரனை; அதோஷயத்—சந்தோஷப்படுத்தினான்.
பிரபுவே, சுகதேவ கோஸ்வாமி, விருத்ராசுரன் ஒரு பாவம்மிக்க அசுரனாக இருந்தாலும், யுத்தத்தில் மிகச்சிறந்த ஒரு க்ஷத்திரியரின் வீரத்தைக் காட்டி தேவேந்திரனை சந்தோஷப்படுத்தினான். இத்தகைய ஓர் அசுரனால் எப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தனாக இருக்க இயலும்? இந்த முரண்பாடுகள் எனக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகவே இதைப்பற்றி உங்களிடமிருந்து கேட்க ஆவலாக இருக்கிறேன்.
பதம் 6.14.8
ஸ்ரீ-ஸூத உவாச
பரீக்ஷிதோ ‘த ஸம்ப்ரஸ்னம் பகவான் பாதராயணி:
நிசம்ய ஸ்ரத்ததானஸ்ய ப்ரதினந்ய வசோ ‘ப்ரவீத்
ஸ்ரீ-ஸூத: உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; பரீக்ஷித:—பரீட்சித்து மகாராஜனின்; அத—இவ்வாறு; ஸம்ப்ரஸ்னம்—பக்குவமான கேள்வியை; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்தவரான; பாதராயணி:—வியாச புத்திரரான சுகதேவர்; நிசம்ய—கேட்டு; ஸ்ரத்ததானஸ்ய—உண்மையை அறிவதில் பெரும் நாட்டமுடைய தன் சீடனின்; ப்ரதிநந்ய—பாராட்டி; வச:—வார்த்தைகளை; அப்ரவீத்—கூறினார்.
ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனின் மிகவும் புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்ட பிறகு, மிகவும் சக்திவாய்ந்த முனிவரான சுகதேவ கோஸ்வாமி, தமது சீடருக்கு மிகவும் அன்புடன் பதில் கூறத் துவங்கினார்.
பதம் 6.14.9
ஸ்ரீ-சுக உவாச
ஸ்ருணுஷ்வாவஹிதோ ராஜன் இதிஹாஸம் இமம் யதா
ஸ்ருதம் த்வைபாயன-முகான் நாரதாத் தேவலாத் அபி
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸ்ருணுஷ்வ—தயவு செய்து கேளும்; அவஹித:—மிகவும் கவனமாக; ராஜன்—அரசே; இதிஹாஸம்—வரலாற்றை; இமம்—இந்த; யதா—அப்படியே; ஸ்ருதம்—கேட்டபடி; த்வைபாயன—வியாசதேவரின்; முகாத்—வாயிலிருந்து; நாரதாத்—நாரதரிடமிருந்து; தேவலாத்—தேவல ரிஷியிடமிருந்து; அபி—கூட.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, வியாசதேவர், நாரதர், தேவலர் ஆகியோரின் வாய்களிலிருந்து நான் கேட்ட அதே வரலாற்றை உமக்குக் கூறுகிறேன் கவனமுடன் கேளும்.
பதம் 6.14.10
ஆஸீத் ராஜா ஸார்வபெளம: சூரஸேனேஷு வை ந்ருப
சித்ரகேதுர் இதி க்யாதோ யஸ்யாஸீத் காமதுந் மஹீ
ஆஸீத்—இருந்தார்; ராஜா—ஓர் அரசன்; ஸார்வ-பௌம:—உலகம் முழுவதையும் ஆண்ட ஒரு சக்கரவர்த்தி; சூரஸேனேஷு—சூரசேன தேசத்தில்; வை—உண்மையில்; ந்ருப—அரசே; சித்ரகேது:—சித்ரகேது; இதி—என்று; க்யாத:—புகழ்பெற்ற; யஸ்ய—யாருடைய; ஆஸீத்—இருந்தார்; காம-துக்—எல்லாத் தேவைகளையும் கொடுக்கும்; மஹீ—பூமி.
பரீட்சித்து மகாராஜனே, சூரசேன தேசத்தில் இந்த பூமி முழுவதையும் ஆண்டுவந்த சித்ரகேது என்ற ஓர் அரசர் இருந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் பூமியானது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்தது.
பதம் 6.14.11
தஸ்ய பார்யா-ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி தசாபவன்
ஸாந்தானிகஸ் சாபி ந்ருபோ ந லேபே தாஸு ஸந்ததிம்
தஸ்ய—அவருடைய (சித்ரகேதுவின்); பார்யா-ஸஹஸ்ராணாம்—ஆயிரக்கணக்கான மனைவிகளுக்கு; ஸஹஸ்ராணி—ஆயிரங்கள்; தச—பத்து; அபவன்—இருந்தார்கள்; ஸாந்தானிக:—பிள்ளைகள் பெறும் தகுதியுடையவராக; ச—மேலும்; அபி—இருந்தபோதிலும்; ந்ருப:—அந்த அரசர்; ந—இல்லை; லேபே—பெற்றார்; தாஸு—அவர்களில்; ஸந்ததிம்—சந்ததியை.
இந்த சித்ரகேதுவிற்கு ஒரு கோடி மனைவிகள் இருந்தனர். அவர் குழந்தை பெறும் தகுதியுடையவராக இருந்தும், எந்த மனைவியிடமிருந்தும் ஒரு குழந்தையைக் கூட அவர் பெறவில்லை. துரதிர்ஷ்டவசமாக எல்லா மனைவிகளும் மலடிகளாக இருந்தனர்.
பதம் 6.14.12
ரூபௌதார்ய-வயோ-ஜன்ம-வித்யைஸ்வர்ய-ஸ்ரீயாதிபி:
ஸம்பன்னஸ்ய குணை: ஸர்வைஸ் சிந்தா பந்யா-பதேர் அபூத்
ரூப—அழகு; ஒளதார்ய—பெருந்தன்மை; வய:—இளமை; ஜன்ம—உயர்குடிப் பிறப்பு; வித்யா—கல்வி; ஐஸ்வர்ய—ஐசுவரியம்; ஸ்ரீய-ஆதிபி:—செல்வம் முதலியன; ஸம்பன்னஸ்ய—கூடியவரான; குணை:—நற்குணங்களுடன்; ஸர்வை:—எல்லா; சிந்தா—கவலை; பந்யா-பதே:—பல மலடிகளின் கணவரான சித்ரகேதுவிற்கு; அபூத்—இருந்தது.
இத்தகைய இலட்சக்கணக்கான மனைவிகளின் கணவரான சித்ரகேது அழகிய உருவமுடையவராகவும், பெருந்தன்மை உடையவராகவும், இளமை உடையவராகவும் இருந்தார். உயர் குடியில் பிறந்த அவர், பூரண கல்வியும், செல்வமும், ஐசுவரியமும் உடையவராக இருந்தார். எனினும், இவ்வெல்லாச் சொத்துக்களையும் பெற்றிருந்தும், ஒரு மகனில்லாத காரணத்தால் கவலை மிக்கவராகவே இருந்தார்.
பதம் 6.14.13
ந தஸ்ய ஸம்பத: ஸர்வா மஹிஷ்யோ வாம-லோசனா:
ஸார்வபௌமஸ்ய பூஸ் சேயம் அபவன் ப்ரீதி-ஹேதவ:
ந—இல்லை; தஸ்ய—அவருடைய (சித்ரகேதுவின்); ஸம்பத:—பெரும் செல்வங்கள்; ஸர்வா:—எல்லாம்; மஹிஷ்ய:—ராணிகள்; வாம-லோசனா:—மிகவும் கவர்ச்சியான கண்களையுடைய; ஸார்வ-பௌமஸ்ய—பேரரசரின்; பூ:—நிலம்; ச—கூட; இயம்—இது; அபவன்—இருந்தன; ப்ரீதி-ஹேதவ:—சந்தோஷத்திற்குக் காரணமாக.
அவரது ராணிகள் அனைவரும் அழகிய முகங்களையும், கவர்ச்சியான கண்களையும் பெற்றிருந்தனர். இருப்பினும், அவரது ஐசுவரியங்களோ, அவரது இலட்சக்கணக்கான மனைவிகளோ, அல்லது அவரது ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலங்களோ அவருடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக அமையவில்லை.
பதம் 6.14.14
தஸ்யைகதா து பவனம் அங்கிரா பகவான் ரிஷி:
லோகான் அனுசரன் ஏதான் உபாகச்சத் யத்ருச்சயா
தஸ்ய—அவருடைய; ஏகதா—ஒரு சமயம்; து—ஆனால்; பவனம்—அரண்மனைக்கு; அங்கிரா:—அங்கிரர்; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; ரிஷி:—முனிவரான; லோகான்—உலகங்களை; அனுசரன்—சுற்றிவரும் பொழுது; ஏதான்—இந்த; உபாகச்சத்—வந்தார்; யத்ருச்சயா—திடீரென்று.
ஒரு சமயம், ஒரு ஈடுபாடும் இல்லாமல் பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்த அங்கிரர் என்ற சக்திவாய்ந்த முனிவர், தன்னிச்சையாக சித்ரகேது மகாராஜனின் அரண்மனைக்கு வந்தார்.
பதம் 6.14.15
தம் பூஜயித்வா விதிவத் ப்ரத்யுத்தானார்ஹணாதிபி:
க்ருதாதித்யம் உபாஸீதத் ஸுகாஸீனம் ஸமாஹித:
தம்—அவரை; பூஜயித்வா—பூஜித்தபின்; விதி-வத்—மேன்மையான விருந்தினரை உபசரிப்பதற்குரிய சாஸ்திர விதிகளுக்கேற்ப; ப்ரத்யுத்தான—சிம்மாசனத்திலிருந்து எழுந்து; அர்ஹண-ஆதிபி:—வணங்குதல் முதலியவைகளால்; க்ருத-அதித்யம்—உபசரணை செய்த பிறகு; உபாஸீதத்—அருகில் அமர்ந்தார்; ஸுக-ஆஸீனம்—சுகமாக அமர்ந்திருந்த; ஸமாஹித:—மனதையும் புலன்களையும் அடக்கி.
சித்ரகேது உடனே தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து அவருக்கு வணக்கம் செலுத்தினார். அவருக்குக் குடிப்பதற்கு நீரும், உணவு வகைகளையும் கொடுத்த அரசர், இவ்விதமாக ஒரு மேன்மைக்குரிய விருந்தினரை உபசரிக்கும் முறையில் தன் கடமையைச் செய்தார். முனிவர் ஆசனத்தில் சுகமாக அமர்ந்தபின், அரசர் தன் மனதையும், புலன்களையும் அடக்கியவராய், அந்த முனிவரின் பாதங்களுக்கருகில் தரையில் அமர்ந்தார்.
பதம் 6.14.16
மஹர்ஷிஸ் தம் உபாஸீனம் ப்ரஸ்ரயாவனதம் க்ஷிதெள
ப்ரதிபூஜ்ய மஹாராஜ ஸமாபாஷ்யேதம் அப்ரவீத்
மஹா-ரிஷி:—அச்சிறந்த முனிவர்; தம்—அவரை (அரசரை); உபாஸீனம்—அருகில் அமர்ந்திருந்த; ப்ரஸ்ரய-அவனதம்—அடக்கத்துடன் வணங்கும்; க்ஷிதௌ—தரையில்; ப்ரதிபூஜ்ய—வாழ்த்தி; மஹாராஜ—பரீட்சித்து மகாராஜனே; ஸமாபாஷ்ய—அழைத்து; இதம்—இதை; அப்ரவீத்—கூறினார்.
பரீட்சித்து மகாராஜனே, சித்ரகேது அடக்கத்துடன் வணங்கி அச்சிறந்த முனிவரின் பாத கமலங்களில் அமர்ந்ததும், அரசரின் அடக்கத்திற்காகவும், விருந்தோம்பும் பண்பிற்காகவும் அவரை வாழ்த்திய அம்முனிவர், அவரிடம் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்.
பதம் 6.14.17
அங்கிரா உவாச
அபி தே ‘நாமயம் ஸ்வஸ்தி ப்ரக்ருதீனாம் ததாத்மன:
யதா ப்ரக்ருதிபிர் குப்த: புமான் ராஜா ச ஸப்தபி:
அங்கிரா: உவாச—மாமுனிவரான அங்கிரர் கூறினார்; அபி—என்ன; தே—உமக்கு; அனாமயம்—தேகஆரோக்கியம்; ஸ்வஸ்தி—நலம்; ப்ரக்ருதீனாம்—உமது அரச பரிவாரங்களின் (சகாக்கள் மற்றும் குடும்பத்தினர்); ததா—அவ்வாறே; ஆத்மன:—உமது உடல், மனம் மற்றும் ஆத்மாவின்; யதா—அதுபோல்; ப்ரக்ருதிபி:—ஜட இயற்கையின் மூலப் பொருட்களால்; குப்த:—பாதுகாக்கப்பட்டு; புமான்—ஜீவராசி; ராஜா—அரசன்; ச—கூட; ஸப்தபி:—ஏழினால்.
மாமுனிவரான அங்கிரர் கூறினார்: அரசே, உமது உடலும், மனமும், உமது அரச குடும்பமும், பரிவாரமும் நலமென்று நம்புகிறேன். ஜட இயற்கையின் ஏழு குணாதியசங்கள் (மொத்த பெளதிக சக்தி, அகங்காரம் மற்றும் ஐந்து புலன் பொருட்கள்) சரியான நிலையில் இருக்கும்பொழுது, பெளதிக மூலப்பொருட்களினுள் உள்ள ஜீவராசி மகிழ்ச்சியாக இருக்கிறான். இந்த ஏழு மூலப்பொருட்களும் இல்லாமல் ஒருவனால் வாழமுடியாது. அது போலவே, அரசனோருவன், தனக்கு உபதேசிப்பவர் (சுவாமி அல்லது குரு), தன் மந்திரிகள் தன் இராஜ்யம், தன் கோட்டை, பொக்கிஷம், அரச குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆகிய ஏழு விஷயங்களால் எப்பொழுதும் பாதுகாக்கப்படுகிறார்.
பதம் 6.14.18
ஆத்மானம் ப்ரக்ருதிஷ்வ் அத்தா நிதாய ஸ்ரேய ஆப்னுயாத்
ராஜ்ஞா ததா ப்ரக்ருதயோ நரதேவாஹிதாதய:
ஆத்மானம்—தன்னை; பரக்ருதிஷு—அரசனுக்குரிய இந்த ஏழுவகையான அடிப்படை விஷயங்களின் கீழ்; அத்தா—நேராக; நிதாய—வைத்துக் கொண்டு; ஸ்ரேய:—முடிவான மகிழ்ச்சியை; ஆப்னுயாத்—அடையலாம்; ராஜ்ஞா—அரசரால்; ததா—அவ்வாறே; ப்ரக்ருதய:—நம்பியுள்ள அரசாங்க பரிவாரங்கள்; நர-தேவ—அரசே; ஆஹித-ஆதய:—செல்வம் முதலான பிற விஷயங்கள்.
அரசே, மனிதகுலத் தலைவரே, ஓர் அரசன் நேரடியாக அவனது சகாக்களைச் சார்ந்திருந்து அவர்களுடைய அறிவுரைகளைப் பின்பற்றும் பொழுது, அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அவ்வாறே, அவனது சகாக்கள் அவர்களுடைய காணிக்கைகளையும், செயல்களையும் அரசனுக்கு அளித்து அவரது உத்தரவுகளைப் பின்பற்றும் பொழுது, அவர்களும் மகிழ்ச்சியடைகின்றனர்.
பதம் 6.14.19
அபி தாரா: ப்ரஜாமாத்யா ப்ருத்யா: ஸ்ரேண்யோ ‘த மந்த்ரிண:
பௌரா ஜானபதா பூபா ஆத்மஜா வச-வர்தின:
அபி—ஒருவேளை; தாரா:—மனைவிகள்; ப்ரஜா—பிரஜைகள்; அமாத்யா:—மற்றும் உதவியாளர்கள்; ப்ருத்யா:—சேவகர்கள்; ஸ்ரேண்ய:—வணிகர்கள்; அத—மேலும்; மந்த்ரிண:—மந்திரிகள்; பௌரா:—அரண்மனைவாசிகள்; ஜானபதா:—மாகாண அதிகாரிகள்; பூபா:—நிலச்சுவான்கள்; ஆத்ம-ஜா:—மகன்கள்; வச-வர்தின:—உமது முழுகட்டுப்பாட்டின் கீழ்.
அரசே, உமது மனைவிகள், காரியதரிசிகள், சேவகர்கள், மற்றும் வாசனைத் திரவியங்கள், எண்ணெய் இவைகளை விற்கும் வணிகர்கள் ஆகியோர் உமக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றனரா? மந்திரிகள், அரண்மனைவாசிகள், மாகாண அதிகாரிகள், உமது மகன்கள் மற்றும் உம்மைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடம் உமக்கும் முழு ஆதிக்கம் உள்ளதா?
பதம் 6.14.20
யஸ்யாத்மானுவசஸ் சேத் ஸ்யாத் ஸர்வே தத்-வசகா இமே
லோகா: ஸ்பாலா யச்சந்தி ஸர்வே பலிம் அதந்ரிதா:
யஸ்ய—யாருடைய; ஆத்மா—மனம்; அனுவச:—கட்டுப்பாட்டின் கீழ்; சேத்—இருக்குமானால்; ஸ்யாத்—இருக்கக்கூடும்; ஸர்வே—எல்லோரும்; தத்-வச-கா:—அவரது கட்டுப்பாட்டின் கீழ்; இமே—இந்த; லோகா:—உலகங்கள்; ஸ-பாலா:—அவர்களுடைய ஆளுனர்களுடன்; யச்சந்தி—கொடுக்கிறார்கள்; ஸர்வே—எல்லா; பலிம்—கப்பங்களும்; அதந்ரிதா:—சோம்பலிலிருந்து விடுபட்டு.
அரசரின் மனம் அவரது முழு கட்டுப்பாட்டில் இருக்குமானால், அவரது குடும்ப அங்கத்தினர், அரசாங்க அதிகாரிகள் ஆகிய அனைவரும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். மாகாண ஆளுனர்கள் உரிய காலத்தில் வரிப்பணத்தை எதிர்ப்பின்றி செலுத்துவார்கள். கீழான சேவகர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?
பதம் 6.14.21
ஆத்மன: ப்ரீயதே நாத்மா பரத: ஸ்வத ஏவ வா
லக்ஷயே ‘லப்த-காமம் த்வாம் சிந்தயா சபலம் முகம்
ஆத்மன:—உம்முடைய; ப்ரீயதே—மகிழ்ச்சியாக; ந—இல்லை; ஆத்மா—மனம்; பரத:—வேறு காரணங்களால்; ஸ்வத:—உம்மால்; ஏவ—உண்மையில்; வா—அல்லது; லக்ஷயே—நான் பார்க்க முடிகிறது; அலப்த-காமம்—உம்மால் விரும்பப்பட்ட இலட்சியத்தை அடையாது; த்வாம்—நீர்; சிந்தயா—கவலையினால்; சபலம்—வெளுத்து; முகம்—முகம்.
சித்ரகேது மகாராஜனே, உமது மனம் மகிழ்ச்சியாக இல்லாததை நான் காண்கிறேன். நீர் விரும்பிய இலட்சியத்தை அடையாதவர் போல் காணப்படுகிறீர். நீரே இதற்குக் காரணமா அல்லது மற்றவர்களா? உமது வெளுத்த முகம் உம்முடைய ஆழ்ந்த கவலையைப் பிரதிபலிக்கிறது.
பதம் 6.14.22
ஏவம் விகல்பிதோ ராஜன் விதுஷா முனினாபி ஸ:
ப்ரஸ்ரயாவனதோ ‘ப்யாஹ ப்ரஜா-காமஸ் ததோ முனிம்
ஏவம்—இவ்வாறு; விகல்பித:—கேட்கப்பட்ட; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; விதுஷா—மிகவும் கற்றறிந்தவரான; முனினா—தத்துவ ஞானியால்; அபி—என்ற போதிலும்; ஸ:—அவர் (சித்ரகேது); ப்ரஸ்ரய-அவனத:—அடக்கத்தினால் வணங்கிய; அப்யாஹ—பதிலளித்தார்; ப்ரஜா-காம:—சந்ததியை விரும்பி; தத:—அதன்பிறகு; முனிம்—அந்த மாமுனிவருக்கு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, மாமுனிவரான அங்கிரர் அனைத்தையும் அறிந்திருந்தார் என்ற போதிலும், அவர் அரசரிடம் இவ்வாறு வினவினார். இவ்வாறாக ஒரு மகனைப் பெற விரும்பிய சித்ரகேது மகாராஜன், அந்த மாமுனிவரை மிகவும் அடக்கத்துடன் வணங்கி, பின்வருமாறு கூறலானார்.
பதம் 6.14.23
சித்ரகேதுர் உவாச
பகவன் கிம் ந விதிதம் தபோ-ஞான-ஸமாதிபி:
யோகினாம் த்வஸ்த-பாபானாம் பஹிர் அந்த: சரீரிஷு
சித்ரகேது: உவாச—சித்ரகேது மகாராஜன் கூறினார்; பகவன்—மிகவும் சக்திவாய்ந்த முனிவரே; கிம்—என்ன; ந—இல்லை; விதிதம்—புரிந்து கொள்ளப்படுகிறது; தப:—தவத்தினாலும்; ஞான—ஞானத்தினாலும்; ஸமாதிபி:—மற்றும் சமாதியாலும் (உன்னத தியானம்); யோகினாம்—சிறந்த யோகிகளால் அல்லது பக்தர்களால்; த்வஸ்த-பாபானாம்—எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுள்ள; பஹி:—புறமும்; அந்த:—உள்ளும்; சரீரிஷு—ஜட உடல்களை பெற்றுள்ள பந்தப்பட்ட ஆத்மாக்களில்.
சித்ரகேது மகாராஜன் கூறினார்: மிகவும் சக்திவாய்ந்த அங்கிர முனிவரே, தவம், ஞானம், உன்னத சமாதி ஆகியவற்றின் காரணத்தால் தாங்கள் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டுள்ளீர்கள். எனவே, பரிபூரண யோகி என்ற முறையில், எங்களைப் போன்ற உடல்பெற்ற, பந்தப்பட்ட ஆத்மாக்களின் அகம், புறம் இரண்டையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
பதம் 6.14.24
ததாபி ப்ருச்சதோ பூயாம் ப்ரஹ்மன் ஆத்மனி சிந்திதம்
பவதோ விதஷஸ் சாபி சோதிதஸ் த்வத்-அனுக்ஞயா
ததாபி—அப்படியிருந்தும்; ப்ருச்சத:—கேட்கின்ற; பூயாம்—நான் கூறுகிறேன்; ப்ரஹ்மன்—சிறந்த பிராமணரே; ஆத்மனி—மனதில்; சிந்திதம்—கவலையை; பவத:—உங்களுக்கு; விதுஷ:—எல்லாம் அறிந்தவர்; ச—மேலும்; அபி—இருந்தும்; சோதித:—தூண்டப்பட்டு; த்வத்—உங்களுடைய; அனுக்ஞயா—உத்தரவால்.
சிறந்த ஆத்மாவே, தாங்கள் எல்லாம் அறிந்தவர். இருந்தும், நான் கவலை நிரம்பியவனாக இருப்பதன் காரணத்தைக் கேட்கிறீர்கள். ஆகவே, தங்களுடைய உத்தரவுப்படி நான் காரணத்தை வெளிப்படுத்துகிறேன்.
பதம் 6.14.25
லோக-பாலைர் அபி ப்ரார்த்யா: ஸாம்ரராஜ்யைஸ்வர்ய-ஸம்பத:
ந நந்தயந்தி அப்ரஜம் மாம் க்ஷுத்-த்ருத்-காமம் இவாபரே
லோக-பாலை:—சிறந்த தேவர்களால்; அபி—கூட; ப்ரார்த்யா—விரும்பத்தகுந்த; ஸாம்ராஜ்ய—சாம்ராஜ்யம்; ஐஸ்வர்ய—பௌதிக ஐசுவரியம்; ஸம்பத:—உடைமைகள்; ந-நந்தயந்தி—இன்பமளிக்கவில்லை; அப்ரஜம்—மகன் இல்லாததால்; மாம்—என்னை; க்ஷுத்—பசி; த்ருத்—தாகம்; காமம்—திருப்திப்படுத்த விரும்பி; இவ—போன்று; அபரே—அனுபவிக்கத் தகுந்த பிற புலன் பொருட்கள்.
எப்படி பசியாலும், தாகத்தாலும் துன்புற்றவன், புற நுகர்வுகளாக மலர் மாலைகளாலோ, சந்தனக் குழம்பினாலோ மகிழ்ச்சியடைவதில்லையோ அப்படியே, எனக்கு மகனில்லாத காரணத்தால், சிறந்த தேவர்களாலும் விரும்பப்படும் எனது சாம்ராஜ்யத்தினாலும், ஐசுவரியத்தாலும் அல்லது உடைமைகளாலும் நான் திருப்தியடையவில்லை.
பதம் 6.14.26
தத: பாஹி மஹா-பாக பூர்வை: ஸஹ கதம் தம:
யதா தரேம துஷ்பாரம் ப்ரஜயா தத் விதேஹி ந:
தத:—ஆகவே, இந்த காரணத்தினால்; பாஹி—அன்புடன் காப்பாற்றுங்கள்; மஹா-பாக—மாமுனிவரே; பூர்வை: ஸஹ—என் முன்னோர்களுடன்; கதம்—சென்றுவிட்ட; தம:—இருளுக்கு; யதா—அதனால்; தரேம—நாங்கள் கடக்க முடியும்; துஷ்பாரம்—கடப்பதற்கு மிகக் கடினமான; ப்ரஜயா—ஒரு மகனைப் பெறுவதால்; தத்—அதை; விதேஹி—அன்புடன் செய்யுங்கள்; ந:—எங்களுக்காக.
ஆகவே, மாமுனிவரே, சந்ததி இல்லாத காரணத்தால், இருளடர்ந்த நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் என்னையும், என் முன்னோர்களையும் தயவு செய்து காப்பாற்றுங்கள். எங்களை நரகச் சூழ்நிலைகளிலிருந்து விடுவிக்க எனக்கு ஒரு மகன் வேண்டும். அன்புடன் ஏதாவது செய்யுங்கள்.
பதம் 6.14.27
ஸ்ரீ-சுக உவாச
இதி அர்தித: ஸ பகவான் க்ருபாலுர் ப்ரஹ்மண: ஸுத:
ஸ்ரபயித்வா சரும் த்வாஷ்ட்ரம் த்வஷ்டாரம் அஜயத் விபு:
ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; அர்தித:—வேண்டிக் கொள்ளப்பட்டு; ஸ:—அவர் (அங்கிர முனிவர்); பகவான்—மிகவும் சக்திவாய்ந்த; க்ருபாலு:—மிகவும் கருணை கொண்ட; ப்ரஹ்மண:—பிரம்ம தேவரின்; ஸுத:—மகன் (பிரம்மாவின் மானச புத்திரர்); ஸ்ரபயித்வா—சமைக்கச் செய்து; சரும்—சர்க்கரைப் பொங்கல் என்ற குறிப்பிட்ட நிவேதனப் பொருளை; த்வாஷ்ட்ரம்—துவஷ்டா என்ற தேவருக்கென உள்ள; த்வஷ்டாரம்—துவஷ்டாவை; அஜயத்—அவர் பூஜித்தார்; விபு:—அந்த மாமுனிவர்.
சித்ரகேது மகாராஜனின் வேண்டுகோளுக்கிணங்க, பிரம்மாவின் மானசீக புத்திரரான அங்கிர முனிவர் அவரிடம் மிகுந்த கருணை கொண்டார். அம்முனிவர் மிகவும் சக்திவாய்ந்தவர் என்பதால், அவர் ஒரு யாகத்தைச் செய்து, அதில் துவஷ்டா என்ற தேவருக்கு சர்க்கரைப் பொங்கலை நிவேதனம் செய்தார்.
பதம் 6.14.28
ஜ்யேஷ்டா ஸ்ரேஷ்டா சயா ராஜ்ஞோ மஹிஷீணாம் ச பாரத
நாம்னா க்ருதத்யுதிஸ் தஸ்யை யக்ஞோச்சிஷ்டம் அதாத் த்விஜ:
ஜ்யேஷ்டா—மூத்தவளும்; ஸ்ரேஷ்டா—மிகச் சிறந்தவளும்; ச—மேலும்; யா—எவள்; ராஜ்ஞ:—அரசருடைய; மஹிஷீணாம்—எல்லா ராணிகளுக்கிடையிலும்; ச—கூட; பாரத—பாரத வம்சத்தில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே; நாம்னா—என்ற பெயருடைய; க்ருதத்யுதி:—கிருதத்யுதி; தஸ்யை—அவளுக்கு; யக்ஞ—யாகத்தில்; உச்சிஷ்டம்—எஞ்சிய உணவை; அதாத்—கொடுத்தார்; த்விஜ—அந்த மகாமுனிவர் (அங்கிரர்).
பரத வம்சத்தில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே, யாகத்தில் ஹோமம் செய்த எஞ்சிய உணவை, மாமுனிவரான அங்கிரர். சித்ரகேதுவின் இலட்சக்கணக்கான ராணிகளுள் மூத்தவளும், மிகச் சிறந்தவருமான கிருதத்யுதி என்பவளுக்குக் கொடுத்தார்.
பதம் 6.14.29
அதாஹ ந்ருபதிம் ராஜன் பவிதைகஸ் தவாத்மஜ:
ஹர்ஷ-சோக-ப்ரதஸ் துப்யம் இதி ப்ரஹ்ம-ஸுதோ யயௌ
அத—அதன்பிறகு; ஆஹ—கூறினார்; ந்ருபதிம்—அரசரிடம்; ராஜன்—சித்ரகேது மகாராஜனே; பவிதா—வருவான்; ஏக:—ஒரு; தவ—உமது; ஆத்ம-ஜ:—மகன்; ஹர்ஷ-சோக—மகிழ்ச்சியும், துன்பமும்; ப்ரத:—கொடுக்கக்கூடிய; துப்யம்—உமக்கு; இதி—என்று; ப்ரஹ்ம-ஸுத:—பிரம்மாவின் புத்திரரான அங்கிர முனிவர்; யயௌ—சென்றுவிட்டார்.
அதன்பிறகு, அந்த மகாமுனிவர் அரசரிடம், “சிறந்த அரசே, உமது மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் காரணமாக இருக்கப் போகும் ஒரு மகனை இப்பொழுது நீர் பெறுவீர்” என்று கூறிவிட்டு, சித்ரகேதுவின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பதம் 6.14.30
ஸாபி தத்-ப்ராசனாத் ஏவ சித்ரகேதோர் அதாரயத்
கர்பம் க்ருதத்யுதிர் தேவீ க்ருத்திகாக்னேர் இவாத்மஜம்
ஸா—அவள்; அபி—கூட; தத்-ப்ராசனாத்—அச்சிறந்த யாகத்தில் எஞ்சிய உணவை உண்டதால்; ஏவ—உண்மையில்; சித்ரகேதோ:—சித்ரகேதுவிடமிருந்து; அதாரயத்—தாங்கினாள்; கர்பம்—கர்ப்பத்தை; க்ருதத்யுதி:—மகாராணி கிருதத்யுதி; தேவீ—அந்த தேவதை; க்ருத்திகா—கிருத்திகா; அக்னே:—அக்னியிடமிருந்து; இவ—அவ்வாறு; ஆத்ம-ஜம்—ஒரு மகனை.
அக்னியிடமிருந்து சிவ பெருமானின் விந்துவைப் பெற்றபிறகு ஸ்கந்தன் (கார்த்திகேயன்) என்ற குழந்தையை கிருத்திகாதேவி பெற்றாள். அவ்வாறே, சித்ரகேதுவிடமிருந்து விந்துவைப் பெற்ற கிருதத்யுதியும், அங்கிரரால் செய்யப்பட்ட யாகத்தில் மிஞ்சிய உணவை உண்டபிறகு கர்பவதியானாள்.
பதம் 6.14.31
தஸ்யா அனுதினம் கர்ப: சுக்ல-பக்ஷ இவாடுப:
வவ்ருதே சூரஸேனேச-தேஜஸா சனகைர் ந்ருப
தஸ்யா:—அவளுடைய; அனுதினம்—அனுதினமும்; கர்ப:—கர்பமானது; சுகல-பக்ஷே—வளர் பிறையில்; இவ—போல்; உடுப:—சந்திரன்; வவ்ருதே—படிப்படியாக வளர்ந்தது; ஸூரஸேன-ஈச—சூரசேன அரசரின்; தேஜஸா—விந்துவினால்; சனகை:—சிறிது சிறிதாக; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே.
சூரசேன அரசரான சித்ரகேது மகாராஜனிடமிருந்து விந்துவைப் பெற்ற ராணி கிருதத்யுதியின் கர்பம், வளர்பிறை போல் படிப்படியாக வளர்ந்தது.
பதம் 6.14.32
அத கால உபாவ்ருத்தே குமார: ஸமஜாயத
ஜனயன் சூரஸேனானாம் ஸ்ருண்வதாம் பரமாம் முதம்
அத—அதன்பிறகு; காலே உபாவ்ருத்தே—காலப்போக்கில்; குமார:—அந்த மகன்; ஸமஜாயத—பிறந்தான்; ஜனயன்—ஏற்படுத்தியபடி; சூரஸேனானாம்—சூரசேன மக்களுக்கு; ஸ்ருண்வதாம்—கேட்கும்; பரமாம்—மிகுந்த; முதம்—சந்தோஷத்தை.
அதன்பிறகு, காலப்போக்கில் அரசருக்கு ஒரு மகன் பிறந்தான். இச்செய்தியைக் கேட்ட சூரசேன தேசத்து மக்களனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
பதம் 6.14.33
ஹ்ருஷ்டோ ராஜா குமாரஸ்ய ஸ்னாத: சுசிர் அலங்க்ருத: வாசயித்வாசிஷோ விப்ரை: காரயாம் ஆஸ ஜாதகம்
ஹ்ருஷ்ட:—மிகவும் மகிழ்ச்சியடைந்த; ராஜா—அந்த அரசர்; குமாரஸ்ய—தன் குழந்தைக்கு; ஸ்னாத:—நீராட்டி; சுசி:—தூய்மையுடன்; அலங்க்ருத:—ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு; வாசயித்வா—கூறச் செய்த பிறகு; ஆசிஷ:—ஆசிகளை; விப்ரை:—கற்றறிந்த பிராமணர்களைக் கொண்டு; காரயாம் ஆஸ—செய்வித்தார்; ஜாதகம்—பிறப்புச் சடங்கை.
முக்கியமாக சித்ரகேது மகாராஜன் மிகவும் மகிழ்ந்தார். நீராடி தன்னை தூய்மைப்படுத்திக் கொண்ட அவர், ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டபின், குழந்தைக்கு ஆசிகளை வழங்குவதிலும், பிறப்புச் சடங்கைச் செய்வதிலும் கற்றறிந்த பிராமணர்களை அவர் ஈடுபடுத்தினார்.
பதம் 6.14.34
தேப்யோ ஹிரண்யம் ரஜதம் வாஸாம்ஸி ஆபரணானி ச
க்ராமான் ஹயான் கஜான் ப்ராதாத் தேனூனாம் அர்புதானி ஷட்
தேப்ய:—அவர்களுக்கு (கற்றறிந்த பிராமணர்களுக்கு); ஹிரண்யம்—தங்கம்; ரஜதம்—வெள்ளி; வாஸாம்ஸி—ஆடைகள்; ஆபரணானி—ஆபரணங்கள்; ச—கூட; க்ராமான்—கிராமங்கள்; ஹயான்—குதிரைகள்; கஜான்—யானைகள்; ப்ராதாத்—தானமாகக் கொடுத்தார்; தேனூனாம்—பசுக்களையும்; அர்புதானி—பத்து கோடி கொண்ட; ஷட்—ஆறு.
அந்த வேதச் சடங்கில் பங்கேற்ற பிராமணர்களுக்கு அரசர் தங்கம், வெள்ளி, ஆடைகள், ஆபரணங்கள், கிராமங்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுடன் 60 கோடி பசுக்களையும் தானமாகக் கொடுத்தார்.
பதம் 6.14.35
வவர்ஷ காமான் அன்யேஷாம் பர்ஜன்ய இவ தேஹினாம்
தன்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் குமாரஸ்ய மஹா-மனா:
வவர்ஷ—தானத்தை மழைபோல் பொழிந்தார்; காமான்—விரும்பத்தக்க பொருட்களையெல்லாம்; அன்யேஷாம்—மற்றவர்களுக்கு; பர்ஜன்ய:—ஒரு மேகம்; இவ—போல்; தேஹினாம்—எல்லா ஜீவராசிகளுக்கும்; தன்யம்—செல்வச் செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன்; யசஸ்யம்—புகழ் அதிகரிக்க; ஆயுஷ்யம்—ஆயுள் அதிகரிக்க; குமாரஸ்ய—புத்திளம் குழந்தையின்; மஹா மனா:—தாராள மனமுடைய சித்ரகேது மகாராஜன்.
மேகமானது பூமியில் பாகுபாடியின்றி மழை பொழிவதுபோல், தாராள மனமுடைய சித்ரகேது மகாராஜன் தன் மகனின் புகழ், செல்வச் செழிப்பு, ஆயுள் ஆகியவற்றை அதிகரிக்க, எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் மேகம் மழையைப் பொழிவதுபோல் வழங்கினார்.
பதம் 6.14.36
க்ருச்ர-லப்தே ‘த ராஜர்ஷேஸ் தனயே ‘நுதினம் பிது:
யதா நிஹ்ஸ்வஸ்ய க்ருச்ராப்தே தனே ஸ்னேஹோ ‘ன்வவர்தத
க்ருச்ர—மிகவும் கஷ்டத்துடன்; லப்தே—அடைந்த; அத—பிறகு; ராஜ-ரிஷே:—புண்ணியமுள்ள சித்ரகேது மகாராஜனுக்கு; தனயே—தன் மகனிடம்; அனுதினம்—அனுதினமும்; பிது:—தந்தையின்; யதா—அதைப்போலவே; நிஹ்ஸ்வஸ்ய—ஒரு ஏழை மனிதனுக்கு; க்ருச்ர-ஆப்தே—மிகுந்த கஷ்டத்திற்குப் பிறகு அடையப்பட்ட; தனே—செல்வத்திடம்; ஸ்னேஹ:—அன்பு; அன்வவர்தத:—அதிகரித்தது.
ஒரு ஏழை மனிதன் மிகுந்த கஷ்டத்திற்குப் பிறகு கொஞ்சம் செல்வத்தை அடையும் போது, அந்த செல்வத்தின் மேல் அவனுக்கு அனுதினமும் அன்பு (ஆசை) அதிகரிக்கிறது. அதுபோலவே, மிகுந்த கஷ்டத்திற்குப் பிறகு ஒரு மகனைப் பெற்ற சித்ரகேதுவிற்குத் தன் மகனிடமுள்ள அன்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்தது.
பதம் 6.14.37
மாதுஸ் து அதிதராம் புத்ரே ஸ்னேஹோ மோஹ-ஸமுத்பவ:
க்ருதத்யுதே: ஸபத்னீனாம் ப்ரஜா-காம-ஜ்வரோ ‘பவத்
மாது:—தாய்க்கு; து—கூட; அதிதராம்—மிகவும் அதிகமான; புத்ரே—தன் புத்திரனிடம்; ஸ்னேஹ:—அன்பு; மோஹ—அறியாமையால்; ஸமுத்பவ:—உண்டாயிற்று; க்ருதத்யுதே:—கிருதத்யுதியின்; ஸபத்னீனாம்—சக மனைவிகளுக்கு; ப்ரஜா-காம—குழந்தை பெறும் தாபம்; ஜ்வர:—ஜுரமாக; அபவத்—தகித்தது.
தந்தைக்குக் குழந்தையிடம் இருந்தது போலவே, தாய்க்கும் தன் மகனிடமுள்ள கவர்ச்சியும், கவனமும் பெருகிக் கொண்டே போனது. மற்ற மனைவிகள், கிருதத்யுதியின் மகனைப் பார்த்து, மகன்களைப் பெறும் ஆசையால், காய்ச்சல் கண்டவர்கள் போல் மிகவும் மனக்கிளர்ச்சி அடைந்தனர்.
பதம் 6.14.38
சித்ரகேதோர் அதிப்ரீதிர் யதா தாரே ப்ரஜாவதி
ந ததான்யேஷு ஸஞ்ஜக்ஞே பாலம் லாலயதோ ‘ன்வஹம்
சித்ரகேதோ:—சித்ரகேதுவிற்கு; அதிப்ரீதி:—அதிகபற்று; யதா—எவ்வாறு; தாரே—மனைவியிடம்; ப்ரஜா-வதி—ஒரு மகனைப் பெற்ற; ந—இல்லை; ததா—அவ்வாறு; அன்யேஷு—பிறரிடம்; ஸஞ்ஜக்ஞே—உண்டானது; பாலம்—மகனை; லாலயத:—கவனித்தது; அன்வஹம்—எப்பொழுதும்.
தன் மகனைப் பேணி வளர்த்த சித்ரகேது மகாராஜனுக்கு, தன் பட்டமகிஷியான கிருதத்யுதியிடமுள்ள அன்பு அதிகரித்தது. ஆனால் மகன்களற்ற பிற மனைவிகளிடமுள்ள அன்பை அவர் படிப்படியாக இழந்துவிட்டார்.
பதம் 6.14.39
தா:பர்யதப்யன் ஆத்மானம் கர்ஹயந்த்யோ ‘ப்யஸூயயா
ஆனபத்யேன துஹ்கேன ராஜ்ஞஸ் சானாதரேண ச
தா:—அவர்கள் (மகனில்லாத ராணிகள்); பர்யதப்யன்—புலம்பினர்; ஆத்மானம்—தங்களை; கர்ஹயந்த்ய:—நொந்து கொண்டு; அப்யஸூயயா—பொறாமையால்; ஆனபத்யேன—மகன்களில்லாததால்; துஹ்கேன—துக்கத்தினால்; ராஜ்ஞ:—அரசருடைய; ச—கூட; அனாதரேண ச—பாராமுகத்தினாலும்.
மற்ற ராணிகள், தங்களுக்குப் பிள்ளையில்லாத காரணத்தால் மிகவும் வருத்தமடைந்தனர். அவர்களை அரசர் உதாசீனப்படுத்தியதால், அவர்கள் தங்களையே நொந்து கொண்டு, பொறாமையால் புலம்பினார்கள்.
பதம் 6.14.40
திக் அப்ரஜாம் ஸ்த்ரியம் பாபாம் பத்யுஸ் சாக்ருஹ-ஸம்மதாம்
ஸுப்ரஜாபி: ஸபத்னீபிர் தாஸீம் இவ திரஸ்க்ருதாம்
திக்—அந்தோ பரிதாபம்; அப்ரஜா—மகனில்லாத; ஸ்த்ரியம்—ஒரு பெண்ணுக்கு; பாபாம்—பாவம் நிறைந்த; பத்யு: ச—கணவனாலும்; அ-க்ருஹ-ஸம்மதாம்—வீட்டில் மதிக்கப்படாத; ஸு-ப்ரஜாபி:—மகன்களுள்ள; ஸப்த்னீபி:—சக மனைவிகளால்; தாஸீம்—ஒரு வேலைக்காரி; இவ—போல்; திரஸ்க்ருதாம்—அவமதிக்கப்படுகிறாள்.
மகன்களில்லாத ஒரு மனைவி வீட்டில் தன் கணவனால் உதாசீனப்படுத்தப்படுகிறாள், சக மனைவிகளால் ஒரு வேலைக்காரியைப்போல் அவமதிக்கப்படுகிறாள். இத்தகைய ஒரு பெண் அவளுடைய பாவச் செயல்களின் காரணத்தால் எல்லா விதத்திலும் நிந்திக்கப்படுகிறாள்.
பதம் 6.14.41
தாஸீனாம் கோ நு ஸந்தாப: ஸ்வாமின: பரிசர்யயா
அபீக்ஷ்ணம் லப்த-மானானாம் தாஸ்யா தாஸீவ துர்பகா:
தாஸீனாம்—வேலைக்காரிகளுக்கு; க:—எதற்கு; நு—உண்மையில்; ஸந்தாப:—புலம்பல்; ஸ்வாமின:—கணவனிடம்; பரிசர்யயா—சேவை செய்வதால்; அபீக்ஷ்ணம்—நிலையாக; லப்த-மானானாம்—மதிக்கப்படும்; தாஸ்யா:—வேலைக்காரியின்; தாஸீ இவ—ஒரு வேலைக்காரி போல்; துர்பகா:—மிகவும் துரதிர்ஷ்டசாலிகள்.
கணவனுக்கு நிலையான பணிவிடை செய்யும் வேலைக்காரிகள் கூட கணவனால் மதிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. ஆனால் அந்த வேலைக்காரிகளுக்கும் வேலைக்காரிகளாக இருப்பதுதான் நம்முடைய நிலை. எனவே நாம் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாவோம்.
பதம் 6.14.42
ஏவம் ஸந்தஹ்யமானானாம் ஸபத்ன்யா: புத்ர-ஸம்பதா
ராஜ்ஞோ ‘ஸம்மத-வ்ருத்தீனாம் வித்வேஷோ பலவான் அபூத்
ஏவம்—இவ்வாறு; ஸந்தஹ்யமானானாம்—எப்பொழுதும் துக்கத்தினால் எரிந்து கொண்டிருந்த ராணிகளின்; ஸபத்ன்யா:—சக மனைவியான கிருதத்யுதியின்; புத்ர-ஸம்பதா—பிள்ளைச் செல்வத்தினால்; ராஜ்ஞ:—அரசரால்; அஸம்மத-வ்ருத்தீனாம்—அவ்வளவாக ஆதரவு காட்டப்படாத; வித்வேஷ:—பொறாமை; பலவான்—மிக்க பலமுடையதாக; அபூத்—ஆனது.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தங்கள் கணவனால் ஒதுக்கப்பட்டும், கிருதத்யுதி ஒரு பிள்ளைச் செல்வத்தைப் பெற்றிருப்பதைக் கண்டும், பொறாமையால் வெந்து கொண்டிருந்த கிருதத்யுதியின் சக மனைவிகளின் பொறாமை தீவிரமடைந்தது.
பதம் 6.14.43
வித்வேஷ-நஷ்ட-மதய: ஸ்த்ரியோ தாருண-சேதஸ:
கரம் தது: குமாராய துர்மர்ஷா ந்ருபதிம் ப்ரதி
வித்வேஷ-நஷ்ட-மதய:—பொறாமையால் மதியிழந்த; ஸ்த்ரிய:—அப்பெண்கள்; தாருண-சேதஸ:—கடினமான இதயமுள்ள; கரம்—விஷம்; தது:—கொடுத்தனர்; குமாராய—அச்சிறுவனுக்கு; துர்மர்ஷா:—பொறுக்க இயலாதவர்களாய்; ந்ருபதிம்—அந்த அரசர்; ப்ரதி—குறித்து.
பொறாமை அதிகரித்ததால் அவர்கள் மதியிழந்தவர்களாயினர். கல்நெஞ்சம் உடையவர்களான அவர்கள், அரசரின் புறக்கணிப்பைப் பொறுக்க முடியாமல் இறுதியில் அக்குழந்தைக்கு விஷம் கொடுத்தனர்.
பதம் 6.14.44
க்ருதத்யுதிர் அஜானந்தீ ஸபத்னீனாம் அகம் மஹத்
ஸுப்த ஏவேதி ஸஞ்சிந்த்ய நிரீக்ஷ்ய வ்யசரத் க்ருஹே
க்ருதத்யுதி:—ராணி கிருதத்யுதி; அஜானந்தீ—அறியாத; ஸபத்னீனாம்—சக மனைவிகளின்; அகம்—பாவச் செயலை; மஹத்—மிகப் பெரிய; ஸுப்த:—உறங்குகிறான்; ஏவ—உண்மையில்; இதி—என்று; ஸஞ்சிந்த்ய—எண்ணி; நிரீக்ஷ்ய—பார்த்துக் கொண்டு; வ்யசரத்—நடந்து கொண்டிருந்தாள்; க்ருஹே—வீட்டில்.
தன் சக மனைவிகளால் விஷம் கொடுக்கப்பட்டதை அறியாத ராணி கிருதத்யுதி, தன் மகன் ஆழ்ந்து உறங்குகிறான் என்றெண்ணி, வீட்டினுள் நடந்து கொண்டிருந்தாள். அவன் இறந்துவிட்டதை அவள் அறியவில்லை.
பதம் 6.14.45
சயானம் ஸுசிரம் பாலம் உபதார்ய மனீஷிணீ
புத்ரம் ஆனய மே பத்ரே இதி தாத்ரீம் அசோதயத்
சயானம்—உறங்குவதாக; ஸு-சிரம்—நீண்ட நேரம்; பாலம்—தன் மகன்; உபதார்ய—எண்ணி; மனீஷிணீ—மிகவும் புத்திசாலி; புத்ரம்—மகனை; ஆனய—கொண்டுவா; மே—என்னிடம்; பத்ரே—தோழியே; இதி—இவ்வாறு; தாத்ரீம்—தாதியிடம்; அசோதயத்—உத்தரவிட்டாள்.
தன் குழந்தை நீண்ட நேரம் உறங்குவதாக எண்ணிய, மிகவும் புத்திசாலியான ராணி கிருதத்யுதி, தன் தாதியிடம், “அருமைத் தோழியே, என் மகனை இங்கு கொண்டுவா” என்று உத்தரவிட்டாள்.
பதம் 6.14.46
ஸா சயானம் உபவ்ரஜ்ய த்ருஷ்ட்வா சோத்தார-லோசனம் ப்ராணேந்ரியாத்மபிஸ் த்யக்தம் ஹதாஸ்மீதி அபதத் புவி
ஸா—அவள் (தாதி); சயானம்—படுத்திருந்ததை; உபவ்ரஜ்ய—அணுகி; த்ருஷ்ட்வா—கண்டு; ச—கூட; உத்தாரலோசனம்—(இறந்துவிட்டவர்களைப் போல்) அவனது கண்கள் மேலேயே நிலைத்திருப்பதை; ப்ராண-இந்ரிய-ஆத்மபி:—உயிர், புலன்கள், மனம் ஆகியவற்றால்; த்யக்தம்—கைவிடப்பட்டு; ஹதா அஸ்மி—இப்பொழுது நான் அழிந்தேன்; இதி—என்று; அபதத்—விழுந்தாள்; புவி—தரையில்.
அந்த தாதி படுத்திருந்த குழந்தையை அணுகிய பொழுது, அக்குழந்தையின் கண்கள் மேலேயே நிலைத்திருந்ததையும், உயிருக்கான அறிகுறிகள் இல்லாததையும் கண்டாள். அவனுடைய எல்லாப் புலன்களும் செயலற்றுக் கிடந்தன. குழந்தை இறந்து விட்டதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. இதைக் கண்டதும் உடனே, “இப்பொழுது நான் அழிந்தேன்” என்று கதறியபடி தரையில் விழுந்தாள்.
பதம் 6.14.47
தஸ்யாஸ் ததாகர்ண்ய ப்ருசாதுரம் ஸ்வரம்
க்னந்த்யா: கராப்யாம் உர உச்சகைர் அபி
ப்ரவிஸ்ய ராஜ்ஞீ த்வரயாத்மஜாந்திகம்
ததர்ச பாலம் ஸஹஸா ம்ருதம் ஸுதம்
தஸ்யா:—அவளுடைய (தாதியின்); ததா—அப்பொழுது; ஆகர்ண்ய—கேட்டு; ப்ருச-ஆதுரம்—பெருந்துக்கத்துடனும், கலக்கத்துடனும்; ஸ்வரம்—குரலை; க்னந்த்யா:—அடித்துக் கொண்டு; கராப்யாம்—கைகளால்; உர:—மார்பை; உச்சகை:—உரக்க; அபி—கூட; ப்ரவிஸ்ய—நுழைந்து; ராஜ்ஞீ—ராணி; த்வரயா—அவசரமாக; ஆத்மஜ-அந்திகம்—தன்மகனுக்கு அருகில்; ததர்ச—அவள் கண்டாள்; பாலம்—குழந்தையை; ஸஹஸா—உடனே; ம்ருதம்—இறந்த; ஸுதம்—மகனை.
பெரும் கலக்கத்துடன் அந்த தாதி, தன் மார்பில் இரு கைகளாலும் அடித்துக் கொண்டு, துக்கம் நிறைந்த வார்த்தைகளில் உரக்கக் கதறி அழுதாள். அவளுடைய உரத்த குரலைக் கேட்டு, உடனே அங்கு வந்த ராணி, தன் மகனை அணுகியபொழுது, திடீரென்று அவன் இறந்து கிடப்பதைக் கண்டாள்.
பதம் 6.14.48
பபாத பூமௌ பரிவ்ருத்தயா கசா
முமோஹ விப்ரஷ்ட-சிரோருஹாம்பரா
பபாத—கீழே விழுந்தாள்; பூமௌ—தரையில்; பரிவ்ருத்தயா—பெருக்கெடுத்த; கசா—துக்கத்தினால்; முமோஹ—அவள் மூர்ச்சையடைந்தாள்; விப்ரஷ்ட—கலைந்து; சிரோருஹ—தலைமுடியும்; அம்பரா—ஆடையும்.
பெருந்துக்கத்தினால், அவளுடைய தலைமுடியும், உடையும் அலங்கோலமாகி, ராணி மூர்ச்சையடைந்து தரையில் விழுந்தாள்.
பதம் 6.14.49
ததோ ந்ருபாந்தஹ்புர-வர்தினோ ஜனா
நராஸ் ச நார்யஸ் ச நிசம்ய ரோதனம்
ஆகத்ய துல்ய-வ்யஸனா: ஸுதுஹ்கிதாஸ்
தாஸ் ச வ்யலீகம் ருருது: க்ருதாகஸ:
தத:—அதன்பிறகு; ந்ருப—அரசே; அந்தஹ்புர-வர்த்தின:—அரண்மனைவாசிகளான; ஜனா:—எல்லா ஜனங்களும்; நரா:—ஆண்களும்; ச—மற்றும்; நார்ய:—பெண்களும்; ச—கூட; நிசம்ய—கேட்டு; ரோதனம்—உரத்த அழுகுரலை; ஆகத்ய—வந்து; துல்ய-வ்யஸன:—சம துக்கமடைந்து; ஸு-துஹ்கிதா:—கதறியழுதனர்; தா:—அவர்களும்; ச—மேலும்; வ்யலீகம்—பாசாங்குடன்; ருருது:—அழுதனர்; க்ருத-ஆகஸ:—(விஷம் கொடுத்து) குற்றமிழைத்தவர்களான.
பரீட்சித்து மகாராஜனே, உரத்த அழுகுரலைக் கேட்ட அரண்மனைவாசிகளான ஆண், பெண் இருபாலரும் அங்கு வந்தனர். அவர்களும் அவ்வாறே துக்கமடைந்து அழத்துவங்கினர். தங்கள் குற்றத்தை நன்கு அறிந்திருந்த, விஷம் கொடுத்த ராணிகளும் பாசாங்குடன் அழுதனர்.
பதங்கள் 6.14.50 – 6.14.51
ஸ்ருத்வா ம்ருதம் புத்ரம் அலக்ஷிதாந்தகம்
வினஷ்ட- த்ருஷ்டி: ப்ரபதன் ஸ்கலன் பதி
ஸ்நேஹானுபந்தைதிதயா கசா ப்ருசம்
விமூர்ச்சிதோ ‘நுப்ரக்ருதிர் த்விஜைர் வ்ருத:
பபாத பாலஸ்ய ஸ பாத-மூலே
ம்ருதஸ்ய விஸ்ரஸ்த-சிரோருஹாம்பர:
தீர்கம் ஸ்வஸன் பாஷ்ப-கலோபரோததோ
நிருத்த-கண்டோ ந சசாக பாஷிதும்
ஸ்ருத்வா—கேட்டு; ம்ருதம்—இறந்த; புத்ரம்—மகனை; அலக்ஷித அந்தகம்—மரணத்தின் காரணத்தை அறியாமல்; வினஷ்ட-திருஷ்டி:—சரியாகப் பார்க்க முடியாமல்; ப்ரபதன்—எப்பொழுதும் கீழே விழுந்தபடி; ஸ்கலன்—நழுவி; பதி—வழியில்; ஸ்நேஹ-அனுபந்த—பாசத்தினால்; ஏதிதயா—அதிகரிக்கும்; கசா—அழுகையால்; ப்ருசம்—மிகவும்; விமூர்ச்சித:—மூர்ச்சையடைந்து; அனுப்ரக்ருதி:—மந்திரிகளாலும், பிறஅதிகாரிகளாலும் பின் தொடரப்பட்டு; த்விஜை:—கற்றறிந்த பிராமணர்களால்; வ்ருத:—சூழப்பப்பட்டபடி; பபாத—கீழேவிழுந்தார்; பாலஸ்ய—சிறுவனின்; ஸ:—அவர் (அரசர்); பாத-மூலே—பாதங்களில்; ம்ருதஸ்ய—இறந்த உடலின்; விஸ்ரஸ்த—கலைந்த; சிரோருஹ—தலைமுடி; அம்பர:—மற்றும் ஆடையும்; தீர்கம்—நீண்ட; ஸ்வஸன்—பெருமூச்சுடன்; பாஷ்ப-கலா-உபரோதத:—கண்களில் கண்ணீருடன் அழுததால்; நிருத்த-கண்ட—தொண்டை அடைத்துக்கொள்ள; ந—இல்லை; சசாக—முடிந்தது; பாஷிதும்—பேச.
யாரும் அறியாத ஒரு காரணத்தினால் தன் மகன் இறந்து விட்டான் என்பதைக் கேட்ட சித்ரகேது மகாராஜன், கிட்டத்தட்ட குருடராகவே ஆகிவிட்டார். தன் மகனிடம் கொண்டிருந்த அதிக பாசத்தினால், அவரது துக்கம் கொழுந்துவிட்டெரியும் தீபோல் பெருகிக்கொண்டே போனது. மரணமடைந்த குழந்தையை அவர் காணச் சென்றபொழுது, வழியில் பலமுறை காலிடறி தரையில் விழுந்தார். தன் மந்திரிகளாலும், பிற அதிகாரிகளாலும் சூழப்பட்டபடி, கற்றறிந்த பிராமணர்கள் உடனிருக்க, அக்குழந்தையை அணுகிய அரசர், ஆடை கலைந்து தலைவிரி கோலமாக அதன் காலடியில் மயங்கி விழுந்தார். பிறகு பெருமூச்சுடன் உணர்வு பெற்றெழுந்த அரசரின் கண்களில் கண்ணீர் பெருக அவரது தொண்டை அடைத்துக் கொண்டதால், அவரால் பேச முடியவில்லை.
பதம் 6.14.52
பதிம் நிரீக்ஷ்யோரு-சுசார்பிதம் ததா
ம்ருதம் ச பாலம் ஸுதம் ஏக-ஸந்ததிம்
ஜனஸ்ய ராஜ்ஞீ ப்ரக்ருதேஸ் ச ஹ்ருத்-ருஜம்
ஸதீ ததானா விலலாப சித்ரதா
பதிம்—கணவனை; நிரீக்ஷ்ய—பார்த்து; உரு—பெரும்; சுச—அழுகையுடன்; அர்பிதம்—துக்கமடைந்து; ததா—அப்பொழுது; ம்ருதம்—இறந்துகிடந்த; ச—மேலும்; பாலம்—குழந்தையை; ஸுதம்—மகனை; ஏக-ஸந்ததிம்—குடும்பத்தின் ஒரே சந்ததியை; ஜனஸ்ய—அங்கு கூடியிருந்த மற்றனைவரின்; ராஜ்ஞீ—ராணி; ப்ரக்ருதே: ச—மேலும் மந்திரிகள் மற்றும் அதிகாரிகளின்; ஹ்ருத்-ருஜம்—இதயங்களில் வலியை; ஸதீ ததானா—அதிகரித்தவளாக; விலலாப—அழுது புலம்பினாள்; சித்ரதா—பலவிதமாக.
தன் கணவரான சித்ரகேது மகாராஜனைக் கண்ட ராணி, பெருந்துயரத்தில் மூழ்கியவளாய், குடும்பத்தில் ஒரே சந்ததியான இறந்த குழந்தையைப் பார்த்து பலவிதமாக அழுது புலம்பினாள். அரண்மனைவாசிகள், மந்திரிகள், அனைத்து பிராமணர்கள் ஆகிய அனைவருடைய இதயங்களிலும் இது வலியை அதிகரித்தது.
பதம் 6.14.53
ஸ்தன-த்வயம் குங்கும-பங்க-மண்டிதம்
நிஷிஞ்சதீ ஸாஞ்சன-பாஷ்ப-பிந்துபி:
விகீர்ய கேசான் விகலத்-ஸ்ரஜ: ஸுதம்
கசோச சித்ரம் குரரீவ ஸுஸ்வரம்
ஸ்தன-த்வயம்—அவளது இரு மார்பகங்களும்; குங்கும—(பொதுவாக பெண்களின் மார்பங்களில் தெளிக்கப்படும்) குங்குமத்தால்; பங்க—மை; மண்டிதம்—அலங்கரிக்கப்பட்ட; நிஷிஞ்சதீ—நனைந்தது; ஸ-அஞ்சன—கண்மையுடன் கலந்த; பாஷ்ப—கண்ணீர்; பிந்துபி:—துளிகளால்; விகீர்ய—கலைந்து; கேசான்—கேசம்; விகலத்—கீழே விழுந்தது; ஸ்ரஜ:—மேலேயிருந்த பூமாலை; ஸுதம்—மகனுக்காக; கசோச—அழுதான்; சித்ரம்—பலவிதமாக; குரரீ இவ—குரரீ பறவை போல்; ஸு-ஸ்வரம்—இனிய குரலில்.
ராணியின் தலையை அலங்கரித்த பூமாலை கீழே விழுந்தது. அவளது கேசமும் கலைந்தது. கண்ணீர் கண்மையைக் கரைத்துக் கொண்டு, குங்குமத்தால் மூடப்பட்ட அவளது மார்பகத்தை நனைத்தது. மகனை இழந்து அவள் அழுதபோது அவளது உரத்த அழுகுரல் குரரீ பறவையின் இனிய ஓசைபோல் இருந்தது.
பதம் 6.14.54
அஹோ விதாதஸ் த்வம் அதீவ பாலிசோ
யஸ் நு ஆத்ம-ஸ்ருஷ்டி-அப்ரதிரூபம் ஈஹஸே
பரே து ஜீவதி அபரஸ்ய யா ம்ருதிர்
விபர்யயஸ் சேத் த்வம் அஸி த்ருவ: பர:
அஹே—ஜயோ; விதாத:—கடவுளே; த்வம்—நீங்கள்; அதீவ—மிகவும்; பாலிச:—அனுபவமில்லாதவர்; ய:—யார்; து—உண்மையில்; ஆத்ம-ஸ்ருஷ்டி—உங்களுடைய சொந்த சிருஷ்டிக்கு; அப்ரதிரூபம்—நேர் எதிரானதாகும்; ஈஹஸே—செய்வதும், விரும்புவதும் நீங்களே; பரே—தந்தை அல்லது மூத்தவர்; நு—அல்லவா; ஜீவதி—உயிர் வாழ்கிறார்; அபரஸ்ய—பின்னால் பிறந்தவனின்; யா—எது; ம்ருதி:—மரணம்; விபர்யய:—முரணானது; சேத்—ஒருவேளை; த்வம்—நீங்கள்; அஸி—இருக்கிறீர்கள்; த்ருவ:—நிச்சயம்; பர:—எதிரியாக.
ஜயோ, கடவுளே, சிருஷ்டிகர்த்தாவே, படைப்பில் நீங்கள் நிச்சயமாக அனுபவமில்லாதவர். தந்தை உயிருடன் இருக்கும்போதே அவருடைய மகனுக்கு நீங்கள் மரணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இவ்விதமாக நீங்கள் உங்களுடைய சிருஷ்டி விதிகளுக்கு முரணாக செயற்படுகிறீர்கள். ஒருவேளை இச்சட்டங்களுக்கு முரணாக நடந்து கொள்ள நீங்கள் தீர்மானித்திருந்தால், நிச்சயமாக நீங்கள் ஜீவராசிகளுக்கு எதிரியும், இரக்கமற்றவருமாவீர்.
பதம் 6.14.55
ந ஹி க்ரமஸ் சேத் இஹ ம்ருத்யு-ஜன்மனோ:
சரீரிணாம் அஸ்து தத் ஆத்ம-கர்மபி:
ய: ஸ்நேஹ-பாசோ நிஜ-ஸர்க வ்ருத்தயே
ஸ்வயம் க்ருதஸ் தே தம் இமம் விவ்ருஸ்சஸி
ந—இல்லை; ஹி—உண்மையில்; க்ரம:—காலக் கிரகப்படி; சேத்—ஒருவேளை; இஹ—இந்த ஜட உலகில்; ம்ருத்யு—மரணத்தின்; ஜன்மனோ:—மற்றும் பிறப்பின்; சரீரிணாம்—ஜட உடல்களை ஏற்றுள்ள பந்தப்பட்ட ஆத்மாக்களின்; அஸ்து—இருக்கட்டும்; தத்—அது; ஆத்ம-கர்மபி:—ஒருவனது கர்ம பலன்களால்; ய:—எது; ஸ்நேஹ-பாச:—பாசப் பிணைப்பு; நிஜ-ஸர்க—உமது சொந்த படைப்பு; வ்ருத்தயே—அதிகரிப்பதற்கு; ஸ்வயம்—தாமே; க்ருத:—செய்யப்பட்டது; தே—உங்களால்; தம்—அதை; இமம்—இது; விவ்ருஸ்சஸி—நீங்கள் துண்டிக்கிறீர்கள்.
பகவானே, ஒரு தந்தை தன் மகனின் ஆயுட்காலத்தில் மரணமடைய வேண்டும் என்றும், மகன் தன் தந்தையின் ஆயுட்காலத்தில் பிறக்க வேண்டும் என்றும் நீங்கள் கூறக்கூடும். ஏனெனில் அனைவரும் அவரவர் கருமங்களுக்கேற்பவே வாழ்ந்து மடிகின்றனர். ஆனால் பிறப்பும், மரணமும் கருமங்களைச் சார்ந்துள்ள அளவிற்கு கருமம் அவ்வளவு பலம் மிக்கதாக இருக்குமானால், ஆண்டவனுக்கு அல்லது கடவுளுக்கு அவசியமேயில்லை. மேலும், ஜட சக்திக்குச் சுயமாக செயற்படும் திறனில்லாததால், அதை ஆள்பவர் (ஆண்டவன்) தேவைப்படுகிறார் என்று நீங்கள் கூறக்கூடும். இதற்கு பதில் பின்வருமாறு நீங்கள் ஏற்படுத்தியுள்ள பாசப் பிணைப்புக்கு கருமங்களால் இடையூறு ஏற்படுமானால், எவரும் தங்கள் குழந்தைகளைப் பாசத்துடன் வளர்க்கமாட்டார்கள்; அதற்குப் பதிலாக, அனைவரும் இரக்கமின்றி தங்கள் குழந்தைகளைப் புறக்கணிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வளர்க்கும்படி கட்டாயப்படுத்தும் பாசப் பிணைப்புகளை நீங்கள் துண்டித்துவிடுவதால், நீங்கள் அனுபவமற்றவராகவும், அறிவற்றவராகவும் காணப்படுகிறீர்.
பதம் 6.14.56
த்வம் தாத நார்ஹஸி ச மாம் க்ருபணாம் அனாதாம்
த்யக்தும் விசக்ஷ்வ பிதரம் தவ சோக-தப்தம்
அஞ்ஜஸ் தரேம பவதாப்ரஜ-துஸ்தரம் யத்
த்வாந்தம் ந யாஹி அகருணேன யமேன தூரம்
த்வம்—நீ; தாத—அன்பு மகனே; ந—இல்லை; அர்ஹஸி—அவசியம் வேண்டும்; ச—மேலும்; மாம்—என்னை; க்ருபணாம்—நிராதரவான; அனாதாம்—காப்பாற்றுவர் இல்லாமல்; த்யக்தும்—விடுவதற்கு; விசக்ஷ்வ—பார்; பிதரம்—தந்தையை; தவ—உன்னுடைய; சோக-தப்தம்—பெருந்துக்கத்தினால் பாதிக்கப்பட்ட; அக்ஞ:—சுலபமாக; தரேம—நாங்கள் கடக்க முடியும்; பவதா—உன்னால்; அப்ரஜ-துஸ்தரம்—மகனில்லாதவனுக்குக் கடப்பது மிகக் கடினம்; யத்—எது; த்வாந்தம்—இருண்ட சாம்ராஜ்யம்; ந யாஹி—போக வேண்டாம்; அகருணேன—கருணையில்லாத; யமேன—யமராஜனுடன்; தூரம்—மேற்கொண்டு.
அருமை மகனே, நான் ஆதரவற்றவளாகவும், மிகவும் துக்கமுள்ளவளாகவும் இருக்கிறேன். என் துணையை நீ விட்டுவிடக் கூடாது. அழுது புலம்பும் உன் தந்தையைப் பார். எங்களுக்கு ஆதரவில்லை. ஏனெனில், ஒரு மகனில்லாத நாங்கள் நரகத்தின் இருண்ட பிரதேசத்திற்குச் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். நாங்கள் இந்த இருண்ட பிரசேதங்களிலிருந்து வெளியேறுவதற்கு நீ ஒருவன் தான் எங்களுக்கு உதவ முடியும். ஆகவே இரக்கமற்ற யமராஜனுடன் தொடர்ந்து செல்ல வேண்டாமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பதம் 6.14.57
உத்திஷ்ட தாத த இமே சிசவோ வயஸ்யாஸ்
த்வாம் ஆஹ்வயந்தி ந்ருப-நந்தன ஸம்விஹர்தும்
ஸுப்தஸ் சிரம் ஹி அசனயா ச பவான் பரீதோ
புங்க்க்ஷ்வ ஸ்தனம் பிப சுசோ ஹர ந: ஸ்வகானாம்
உத்திஷ்ட—அன்புடன் எழுந்திரு; தாத—அன்பு மகனே; தே—அவர்கள்; இமே—இவர்கள் எல்லோரும்; சிசவ:—குழந்தைகள்; வயஸ்யா:—விளையாட்டுத் தோழர்கள்; த்வாம்—உன்னை; ஆஹ்வயந்தி—அழைக்கின்றனர்; ந்ருப-நந்தன—அரச புத்திரனே; ஸம்விஹர்தும்—விளையாட; ஸுப்த:—நீ உறங்கிவிட்டாய்; சிரம்—நீண்ட நேரம்; ஹி—உண்மையில்; அசனயா—பசியால்; ச—கூட; பவான்—நீ; பரீத:—வெற்றி கொண்டு; புங்க்க்ஷ்வ—தயவு செய்து சாப்பிடு; ஸ்தனம்—(உன் தாயின்) மார்பில்; பிப—குடி; சுச:—புலம்பலை; ஹர—அகற்று; ந:—எங்களுடைய; ஸ்வகானாம்—உன் உறவினர்களான.
அன்பு மகனே, நீ நீண்ட நேரம் உறங்கிவிட்டாய். இப்பொழுது விழித்தெழு. உன் தோழர்கள் உன்னை விளையாட அழைக்கிறார்கள். நீ மிகவும் பசியுடன் இருப்பாய் எழுந்து என் முலைப்பாலைக் குடித்து, எங்களுடைய புலம்பலை அகற்று.
பதம் 6.14.58
நாஹம் தனூஜ தத்ருசே ஹத-மங்களா தே
முக்த-ஸ்மிதம் முதித-வீக்ஷணம் ஆனனாப்ஜம்
கிம் வா கதோ ‘ஸி அபுனர்-அன்வயம் அன்ய-லோகம்
நீதோ ‘க்ருணேன ந ஸ்ருணோமி கலா கிரஸ் தே
ந—இல்லை; அஹம்—நான்; தனூ-ஜ—(என் உடலிலிருந்து பிறந்த) அன்பு மகனே; தத்ருசே—பார்த்தேன்; ஹத-மங்களா—நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி என்பதால்; தே—உன்னுடைய; முக்த-ஸிமிதம்—அழகிய புன்னகையுடன்; முதித-வீக்ஷணம்—மூடிய கண்களுடன்; ஆனன-அப்ஜம்—தாமரைமுகம்; கிம் வா—ஒருவேளை; கத:—சென்றுவிட்டாய்; அஸி—நீ இருக்கிறாய்; அ-புன:-அன்வயம்—எதிலிருந்து ஒருவன் திரும்புவதில்லையோ; அன்ய-லோகம்—வேறொரு உலகிற்கு, அல்லது யம லோகத்திற்கு; நீத:—எடுத்துச் செல்லப்பட்டாய்; அக்ருணேன—இரக்கமற்ற யமராஜானால்; ந—இல்லை; ஸ்ருணோமி—நான் கேட்க முடியும்; கலா:—மிகவும் இனிமையான; கிர:—வார்த்தைகளை; தே—உன்னுடைய.
அன்பு மகனே, உன்னுடைய கனிவான புன்னகையை இனிமேல் என்னால் காண முடியாது என்பதால், நான் உண்மையாகவே மிகவும் துரதிர்ஷ்டசாலியாவேன். நீ உன் கண்களை நிரந்தரமாக மூடிக் கொண்டுவிட்டாய். ஆகவே, எங்கிருந்து உன்னால் திரும்பி வர முடியாதோ, அந்த உலகிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டாய். அன்பு மகனே, உனது இனிய குரலை இனிமேல் என்னால் கேட்கமுடியாது.
பதம் 6.14.59
ஸ்ரீ-சுக உவாச
விலபந்த்யா ம்ருதம் புத்ரம் இதி சித்ர-விலாபனை:
சித்ரகேதுர் ப்ருசம் தப்தோ முக்த-கண்டோ ருரோத ஹ
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; விலபந்த்யா—புலம்பிக்கொண்டிருந்த பெண்ணுடன்; மருதம்—இறந்த; புத்ரம்—மகனுக்காக; இதி—என்று; சித்ர-விலாபனை:—பலவிதமான புலம்பலுடன்; சித்ரகேது:—சித்ரகேது மகாராஜன்; ப்ருசம்—மிகவும்; தப்த:—துக்கமடைந்தார்; முக்த-கண்ட:—உரக்க; குரோத—அழுதார்; ஹ—உண்மையில்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இறந்து போன தன் மகனுக்காக இவ்வாறு அழுது புலம்பிய தன் மனைவியுடன், சித்ரகேது மகாராஜனும் பெருந்துக்கத்தினால், திறந்த வாயுடன் உரக்க அழத்துவங்கினார்.
பதம் 6.14.60
தயோர் விலபதே: ஸர்வே தம்பத்யோஸ் தத்-அனுவ்ரதா:
ருருது: ஸ்ம நரா நார்ய: ஸர்வம் ஆஸீத் அசேதனம்
தயோ:—அவ்விருவரும்; விலபதோ:—புலம்பிக் கொண்டிருந்த; ஸர்வே—எல்லோரும்; தம்-பத்யோ:—அத்தம்பதிகள்; தத்-அனுவ்ரதா:—அவர்களைப் பின்பற்றுபவர்கள்; ருருது:—உரக்க அழுதனர்; ஸ்ம—உண்மையாகவே; நரா:—ஆண்கள்; நார்ய:—பெண்கள்; ஸர்வம்—அந்த அரசு முழுவதும்; ஆஸீத்—ஆயிற்று; அசேதனம்—கிட்டத்தட்ட மயக்கமடைந்ததாக.
அந்த அரசனும், அரசியும் அழுத பொழுது, அவர்களுடைய பிரஜைகளான ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரும் அவர்களுடன் சேர்ந்து அழுதனர். திடீர் விபத்தினால் நாட்டு மக்களனைவரும் கிட்டத்தட்ட நினைவிழந்தவர்கள் போல் ஆயினர்.
பதம் 6.14.61
ஏவம் கஸ்மலம் ஆபன்னம் நஷ்ட-ஸம்க்ஞம் அனாயகம்
ஞாத்வாங்கிரா நாம ரிஷிர் ஆஜகாம ஸனாரத:
ஏவம்—இவ்வாறு; கஸ்மலம்—அவல நிலையை; ஆபன்னம்—அடைந்து; நஷ்ட—இழந்துவிட்ட; ஸம்க்ஞம்—உணர்வை; அனாயகம்—உதவியின்றி; ஞாத்வா—அறிந்து; அங்கிரா:—அங்கிரர்; நாம—என்ற பெயருடைய; ரிஷி:—முனிவர்; ஆஜகாம—வந்தார்; ஸ-நாரத:—நாரத முனிவருடன்.
அந்த அரசர் துக்கக் கடலில் மூழ்கி கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலையில் இருப்பதைப் புரிந்து கொண்ட மாமுனிவரான அங்கிரர், நாரத முனிவருடன் அங்கு சென்றார்.
ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “சித்ரகேது மகாராஜனின் மனக்கவலை” எனும் தலைப்பை கொண்ட பதினான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.