அத்தியாயம் – 13
இந்திரன் தன் பாவ விளைவுகளால் துன்புறுதல்

துன்புறுதல்

பதம் 6.13.1
ஸ்ரீ-சுக உவாச
வ்ருத்ரே ஹதே த்ரயோ லோகா வினா சக்ரேண பூரித
ஸபாலா ஹி அபவன் ஸத்யோ விஜ்வரா நிர்வ்ருதேந்ரியா:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; வ்ருத்ரே-ஹதே—விருத்ராசுரன் கொல்லப்பட்ட பொழுது; த்ரய: லோகா:—மூன்று லோகங்களும் (மேல், மத்திய, கீழ் லோகங்கள்); வினா—தவிர; சக்ரேண—சக்ரன் என்றும் அழைக்கப்படும் இந்திரன்; பூரி-த—சிறந்த வள்ளலாகிய பரீட்சித்து மகாராஜனே; ஸ-பாலா:—பல்வேறு கிரகங்களின் அதிபதிகளுடன்; ஹி—உண்மையில்; அபவன்—ஆயினர்; ஸத்ய:—உடனே; விஜ்வரா:—மரண பயமின்றி; நிர்வ்ருத—மிகவும் திருப்தியடைந்தார்; இந்திரியா:—அவர்களுடைய புலன்கள்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, சிறந்த வள்ளலே, விருத்ராசுரன் கொல்லப்பட்டபொழுது, இந்திரனைத் தவிர அனைத்து அதிதேவதைகளும், மூன்று லோகங்களிலுள்ள அனைவரும் உடனே தொல்லையிலிருந்து விடுபட்டு திருப்தியடைந்தனர்.

பதம் 6.13.2
தேவர்ஷி-பித்ரு-பூதானி தைத்யா தேவானுகா: ஸ்வயம்
ப்ரதிஜக்மு: ஸ்வ-திஷ்ண்யானி ப்ரஹ்மேசேந்ராதயஸ் தத:

தேவ—தேவர்கள்; ரிஷி—சிறந்த முனிவர்கள்; பித்ரு—பித்ருலோகவாசிகள்; பூதானி—மற்றும் பிற ஜீவராசிகள்; தைத்யா:—அசுரர்கள்; தேவ-அனுகா:—தேவர்களின் கொள்கைகளைப் பின்பற்றும் பிற லோகங்களின் வாசிகள்; ஸ்வயம்—(இந்திரனிடம் அனுமதி பெறாமல்) சுதந்திரமாக; ப்ரதிஜக்மு:—திரும்பிச் சென்றனர்; ஸ்வ-திஷ்ண்யானி—அவரவர் லோகங்களுக்கும், இருப்பிடங்களுக்கும்; ப்ரஹ்ம—பிரம்ம தேவர்; ஈச—சிவபெருமான்; இந்திரா-ஆதய:—மற்றும் இந்திரன் முதலான தேவர்கள்; தத:—அதன்பிறகு.

அதன்பிறகு, தேவர்கள், சிறந்த முனிவர்கள், பித்ருலோக மற்றும் பூதலோக வாசிகள், அசுரர்கள், தேவர்களைப் பின்பற்றுபவர்கள், பிரம்மதேவர், சிவபெருமான், இந்திரனுக்குக் கீழ்ப்படிந்த தேவர்கள் ஆகிய அனைவரும் அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் அவ்வாறு புறப்பட்டுச் செல்லும் பொழுது ஒருவரும் இந்திரனோடு பேசவில்லை.

பதம் 6.13.3
ஸ்ரீ-ராஜோவாச
இந்திரஸ்யானிர்வ்ருதேர் ஹேதும் ஸ்ரோதும் இச்சாமி போ முனே
யேனாஸன் ஸுகினோ தேவா ஹரேர் துஹ்கம் குதோ ‘பவத்

ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; இந்ரஸ்ய—இந்திரனின்; அனிர்வ்ருதே:—வருத்தத்தின்; ஹேதும்—காரணத்தை; ஸ்ரோதும்—கேட்க; இச்சாமி—நான் விரும்புகிறேன்; போ:—பிரபுவே; முனே—மாமுனிவராகிய சுகதேவ கோஸ்வாமியே; யேன—எதனால்; ஆஸன்—இருந்தனர்; ஸுகின:—மிகவும் மகிழ்ச்சியுடன்; தேவா:—எல்லா தேவர்களும்; ஹரே:—இந்திரனின்; துஹ்கம்—துக்கம்; குத:—எங்கிருந்து; அபவத்—இருந்தது.

பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: சிறந்த முனிவரே, இந்திரனின் வருத்தத்திற்குக் காரணமென்ன? இதைப் பற்றி கேட்க நான் ஆவலாக இருக்கிறேன். அவர் விருத்ராசுரனைக் கொன்றபொழுது எல்லா தேவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அப்படியிருக்க இந்திரன் மட்டும் ஏன் துக்கப்பட்டார்?

பதம் 6.13.4
ஸ்ரீ-சுக உவாச
வ்ருத்ர-விக்ரம-ஸம்விக்னா: ஸர்வே தேவா: ஸஹர்ஷிபி:
தத்-வதாயார்தயன் இந்திரம் நைச்சத் பீதோ ப்ருஹத்-வதாத்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; வ்ருத்ர—விருத்ராசுரனின்; விக்ரம—சக்திமிக்க செயல்களால்; ஸம்விக்னா:—அதிக கவலைக்குள்ளானதால்; ஸர்வே—எல்லா; தேவா:—தேவர்களும்; ஸஹ ரிஷிபி:—மாமுனிவர்களுடன்; தத்-வதாய—அவனைக் கொன்றுவிடும்படி; ஆர்தயன்—கேட்டுக்கொண்டனர்; இந்திரம்—இந்திரன்; ந ஐச்சத்—மறுத்து விட்டார்; பீத:—அஞ்சி; ப்ருஹத்-வதாத்—ஒரு பிராமணனைக் கொல்ல.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு விடையளித்தார்: அனைத்து தேவர்களும், சிறந்த முனிவர்களும் விருத்ராசுரனின் அசாதாரணமான சக்தியினால் தொல்லைக்குள்ளான பொழுது, இந்திரனிடம் அவனைக் கொன்றுவிடும்படி கேட்டுக் கொள்வதற்காக அவர்கள் அங்கு கூடினர். ஆனால் ஒரு பிராமணனைக் கொல்ல அஞ்சிய இந்திரன், அவர்களது வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

பதம் 6.13.5
இந்திர உவாச
ஸ்த்ரீ-பூ-த்ரும-ஜலைர் ஏனோ-விஸ்வரூப வதோத்பவம்
விபக்தம் அனுக்ருஹ்ணத்பிர் வ்ருத்ர-ஹத்யாம் க்வ மார்ஜ்மி அஹம்

இந்திர: உவாச—இந்திரன் கூறினார்; ஸ்த்ரீ—பெண்களால்; பூமி—பூமி; த்ரும—மரங்கள்; ஜலை:—மற்றும் நீர்; ஏன:—இதை (பாவம்); விஸ்வரூப—விஸ்வரூபரை; வத—கொன்றதிலிருந்து; உத்பவம்—உண்டான; விபக்தம்—பிரித்துக் கொடுத்தேன்; அனுக்கருஹ்ணத்பி:—(எனக்கு) அவை உதவியைச் செய்து; வ்ருத்ர-ஹத்யாம்—விருத்ராசுரனைக் கொன்றதிலிருந்து; க்வ—எவ்வாறு; மார்ஜ்மி—விடுபடுவேன்; அஹம்—நான்.

இந்திரன் பதிலளித்தார்: நான் விஸ்வரூபரைக் கொன்ற பொழுது, அளவுக்கதிகமான பாவ விளைவுகளைப் பெற்றேன். ஆனால் பெண்கள், நிலம், மரங்கள், நீர் ஆகியவற்றின் உதவியால், என் பாவத்தை அவற்றிற்கு என்னால் பிரித்துக் கொடுக்க முடிந்தது. ஆனால் இப்பொழுது மற்றொரு பிராமணனான விருத்ராசுரனையும் கொன்றால், பாவ விளைவுகளிலிருந்து எவ்வாறு நான் விடுபடுவேன்?

பதம் 6.13.6
ஸ்ரீ-சுக உவாச
ரிஷயஸ் தத் உபாகர்ண்ய மஹேந்ரம் இதம் அப்ருவன்
யாஜயிஷ்யாம பத்ரம் தே ஹயமேதேன மா ஸ்ம பை:

ஸ்ரீ-சுக:உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ரிஷய:—சிறந்த முனிவர்கள்; தத்—அதை; உபாகர்ண்ய—கேட்டு; மஹா-இந்திரம்—இந்திரனிடம்; இதம்—இதை; அப்ருவன்—கூறினர்; யாஜயிஷ்யாம:—நாங்கள் ஒரு சிறந்த யாகத்தைச் செய்வோம்; பத்ரம்—மங்களம்; தே—உமக்கு; ஹயமேதேன—அஸ்வமேத யாகத்தால்; மா ஸ்ம பை:—அஞ்ச வேண்டாம்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இதைக் கேட்ட சிறந்த முனிவர்கள் இந்திரனிடம், “சுவர்க்க ராஜனே, உமக்கு மங்களம் உண்டாகட்டும். நீர் அஞ்ச வேண்டாம். அந்த பிராமணனைக் கொல்வதால் விளையப்போகும் பாவத்திலிருந்து உம்மை விடுவிப்பதற்கு நாங்கள் ஓர் அஸ்வமேத யாகத்தைச் செய்யப்போகிறோம்” என்று பதிலளித்தனர்.

பதம் 6.13.7
ஹயமேதேன புருஷம் பரமாத்மானம் ஈஸ்வரம்
இஷ்ட்வா நாராயணம் தேவம் மோக்ஷ்யஸே ‘பி ஜகத்-வதாத்

ஹயமேதேன—அஸ்வமேத யாகத்தினால்; புருஷம்—பரமபுருஷரும்; பரமாத்மானம்—பரமாத்மாவும்; ஈஸ்வரம்—பரம ஆளுனருமான; இஷ்ட்வா—வழிபட்டு; நாராயணம்—பகவான் நாராயணரை; தேவம்—பரமபுருஷரை; மோக்ஷ்யஸே—நீர் விடுவிக்கப்படுவீர்; அபி—கூட; ஜகத்-வதாத்—முழு உலகையும் கொன்ற பாவத்திலிருந்து.

முனிவர்கள் தொடர்ந்து கூறினர்: இந்திரனே, ஓர் அஸ்வமேத யாகத்தைச் செய்வதனால் பரமபுருஷரும், பரமாத்மாவும், பரமஆளுனருமாகிய பகவான் நாராயணரை திருப்திப்படுத்துவதன் மூலம், ஒருவனால் விருத்ராசுரனைப் போன்ற ஓர் அசுரனைக் கொன்ற பாவத்தை மட்டுமின்றி, முழு உலகையும் கொன்ற பாவவிளைவுகளைக் கூட போக்கிக் கொள்ளமுடியும்.

பதங்கள் 6.13.8 – 6.13.9
ப்ரஹ்ம-ஹா பித்ரு-ஹா கோ-க்னோ
மாத்ரு-ஹாசார்ய-ஹாகவான்
ஸ்வாத: புல்கஸ்கோ வாபி
ஸுத்யேரன் யஸ்ய கீர்த்தனாத்

தம் அஸ்வமேதேன மஹா-மகேன
ஸ்ரத்தான்விதோ ‘ஸ்மாபிர் அனுஷ்டிதேன
ஹத்வாபி ஸப்ரஹ்ம-சராசரம் த்வம்
ந லிப்யஸே கிம் கல-நிக்ரஹேண

ப்ரஹ்ம-ஹா—ஒரு பிராமணனைக் கொன்றவன்; பித்ரு-ஹா—தன் தந்தையைக் கொன்றவன்; கோ-க்ன:—ஒரு பசுவைக் கொன்றவன்; மாத்ரு-ஹா—தன் தாயைக் கொன்றவன்; ஆசார்ய-ஹா—தன் குருவைக் கொன்றவன்; அக-வான்—இத்தகைய ஒரு பாவி; ஸ்வ-அத:—நாய் தின்பவன்; புல்கஸக:—சூத்திரனை விடத் தாழ்ந்த ஒரு சண்டாளன்; வா—அல்லது; அபி—கூட; ஸுத்யேரன்—தூய்மையடையக் கூடும்; யஸ்ய—யாருடைய (பகவான் நாராயணருடைய); கீர்த்தனாத்—புனித நாம ஜபத்தினால்; தம்—அவரை; அஸ்வமேதேன—அஸ்வமேத யாகத்தால்; மஹா-மகேன—யாகங்களில் மிகச் சிறந்த; ஸ்ரத்தா-அன்வித:—நம்பிக்கையுடைய; அஸ்மாபி:—எங்களால்; அனுஷ்டிதேன—நடத்தப்படும்; ஹத்வா—கொல்வது; அபி—கூட; ஸ-ப்ரஹ்ம-சர-அசரம்—பிரமணர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளையும்; த்வம்—நீர்; ந—இல்லை; லிப்யஸே—களங்கமடைவீர்; கிம்—பிறகு ஏன்; கல-நிக்ரஹேண—தொல்லை தரும் ஓரசுரனைக் கொல்வதால்.

ஒரு பிராமணனையோ, ஒரு பசுவையோ, அல்லது தன் தந்தையையோ, தாயையோ அல்லது குருவையோ கொன்றவனால், பகவான் நாராயணரின் புனித நாமத்தை ஜபிப்பதாலேயே எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் உடனே விடுபட முடியும். சூத்திரர்களை விடத் தாழ்ந்தவர்களான சண்டாளர்கள் மற்றும் நாய் தின்பவர்கள் போன்ற பாவிகள் கூட இம்முறையினால் விடுபட முடியும். ஆனால் நீரோ ஒரு பக்தர். சிறந்த அஸ்வமேத யாகத்தைச் செய்து உமக்கு நாங்கள் உதவி புரியப்போகிறோம். அவ்வாறு பகவான் நாராயணரை உம்மால் மகிழ்விக்க முடியுமானால், பிறகு எதற்காக அஞ்சுகிறீர்? விருத்ராசுரனைப் போன்ற தொல்லை தரும் ஓர் அசுரனைக் கொல்வது ஒருபுறமிருக்க, பிராமணர்கள் உட்பட முழு பிரபஞ்சத்தையும் நீர் கொன்றாலும், அதிலிருந்து நீர் விடுவிக்கப்படுவீர்.

பதம் 6.13.10
ஸ்ரீ-சுக: உவாச
ஏவம் ஸஞ்சோதிதோ விப்ரைர் மருத்வான் அஹனத் ரிபும்
ப்ரஹ்ம-ஹத்யா ஹதே தஸ்மின் ஆஸஸாத வ்ருஷாகபிம்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; ஸஞ்சோதித:—தூண்டப்பட்டு; விப்ரை:—பிராமணர்களால்; மருத்வான்—இந்திரன்; அஹனத்—கொன்றார்; ரிபும்—எதிரியான விருத்ராசுரனை; ப்ரஹ்ம-ஹத்யா—ஒரு பிராமணரைக் கொன்ற தன் பாவ விளைவு; ஹதே—கொல்லப்பட்ட பொழுது; தஸ்மின்—அவன் (விருத்ராசுரன்); ஆஸஸாத—நெருங்கியது; வ்ருஷாகபிம்—விருஷாகபி என்றும் அழைக்கப்படும் இந்திரனை.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: முனிவர்களின் வார்த்தைகளால் தூண்டப்பட்டு இந்திரன் விருத்ராசுரனைக் கொன்றார். அவன் கொல்லப்பட்டதும் ஒரு பிராமணனைக் கொன்றதன் பாவ விளைவு (ப்ரஹ்ம-ஹத்யா) இந்திரனை வந்தடைந்து.

பதம் 6.13.11
தயேந்ர: ஸ்மாஸஹத் தாபம் நிர்வ்ருதிர் நாமும் ஆவிசத்
ஹ்ரீமந்தம் வாச்யதாம் ப்ராப்தம் ஸுகயந்தி அபி நோ குணா:

தயா—அச்செயலினால்; இந்ர:—இந்திரனை; ஸ்ம—உண்மையில்; அஸஹத்—துன்பமடைந்தார்; தாபம்—துன்பம்; நிர்வ்ருதி:—மகிழ்ச்சி; ந—இல்லை; அமும்—அவருக்குள்; ஆவிசத்—புகுந்தது; ஹ்ரீமந்தம்—வெட்கமடைந்த; வாச்யதாம்—பழி; ப்ராப்தம்—அடைந்து; ஸுகயந்தி—மகிழ்ச்சியளிக்க; அபி—என்ற போதிலும்; ந—இல்லை; குணா:—செல்வம் போன்றவைகளை வைத்திருக்கும் நல்ல தகுதிகளை.

தேவர்களின் அறிவுரையைப் பின்பற்றி, விருத்ராசுரனைக் கொன்ற அப்பாவச் செயல்களின் காரணத்தால், அவர் துன்பமடைந்தார். மற்ற தேவர்கள் மகிழ்ச்சியடைந்த போதிலும், விருத்ராசுரனைக் கொன்ற இந்திரனால் மகிழ்ச்சியடைய இயலவில்லை. பொறுமை, செல்வம் போன்ற இந்திரனின் பிற நற்குணங்களால் அவரது வருத்தத்தைப் போக்க அவருக்கு உதவ முடியவில்லை.

பதங்கள் 6.13.12 – 6.13.13
தாம் ததர்சானுதாவந்தீம் சாண்டாலீம் இவ ரூபிணீம்
ஜரயா வேபமானாங்கீம் யக்ஷ்ம-க்ரஸ்தாம் அஸ்ருக்-படாம்

விகீர்ய பலிதான் கேசாம்ஸ் திஷ்ட திஷ்டேதி பாஷிணீம்
மீன-கந்தி-அஸு-கந்தேன குர்வதீம் மார்க்க-தூஷணம்

தாம்—பாவ விளைவு; ததர்ச—அவர் கண்டார்; அனுதாவந்தீம்—பின்தொடர்வதை; சாண்டாலீம்—ஒரு சண்டாளப் பெண்; இவ—போன்ற; ரூபிணீம்—ஒரு ரூபத்தை ஏற்று; ஜரயா—முதுமையின் காரணத்தால்; வேபமான-அங்கீம்—அவளுடைய தேக அங்கங்கள் நடுங்கின; யக்ஷ்ம-க்ரஸ்தாம்—க்ஷயரோகத்தினால் பீடிக்கப்பட்டு; அஸ்ருக்-படாம்—அவளது ஆடைகள் இரத்தம் தோய்ந்திருந்தன; விகீர்ய—கலைந்தபடி; பலிதான்—நரைத்த; கேசான்—முடி; திஷ்ட திஷ்ட—நில், நில்; இதி—என்று; பாஷிணீம்—அழைத்தபடி; மீன-கந்தி—மீன் வாடை வீசும்; அஸு—அவளது மூச்சுக்காற்று; கந்தேன—வாடையினால்; குர்வதீம்—ஏற்படுத்தினாள்; மார்க்க-தூஷணம்—முழு வீதியிலும் தூய்மைக்கேட்டை.

பாவ விளைவின் சொரூபமானது, ஒரு சண்டாளப் பெண்ணின் உருவில் தன்னைப் பின்தொடர்ந்து வருவதை இந்திரன் கண்டார். மிகவும் வயதானவளாகக் காணப்பட்ட அவளது உடல் அங்கங்கள் நடுங்கின. க்ஷயரோகத்தினால் பீடிக்கப்பட்டிருந்த காரணத்தால் அவளது உடலும், ஆடைகளும் இரத்தம் தோய்ந்தவையாக இருந்தன. நரைத்த முடியுடனும், தலைவிரி கோலமாகவும், மீன் வாடை வீசும் மூச்சுக் காற்றினால், செல்லும் வழியிலுள்ள காற்றைக் கெடுத்தபடி, அவள் “நில், நில்” என்று அழைத்துக் கொண்டு இந்திரனைப் பின் தொடர்ந்தாள்.

பதம் 6.13.14
ந போ கதோ திச: ஸர்வா: ஸஹஸ்ராக்ஷோ விசாம்பதே
ப்ராக்-உதீசீம் திசம் தூர்ணம் ப்ரவிஷ்டோ ந்ருப மானஸம்

நப:—ஆகாயத்திற்கு; கத:—சென்றார்; திச:—திசைகளுக்கும்; ஸர்வா:—எல்லா; ஸஹஸ்ர-அக்ஷ:—ஆயிரம் கண்களுடைய இந்திரன்; விஷம்பதே—அரசே; ப்ராக்-உதீசீம்—வடகிழக்கு; திசம்—திசையில்; தூர்ணம்—மிகவும் வேகமாக; ப்ரவிஷ்ட:—புகுந்தார்; ந்ருப—அரசே; மானஸம்—மானஸ ஸரோவரம் என்ற ஏரியில்.

அரசே, இந்திரன் முதலில் ஆகாயத்தில் பறந்து சென்றார். ஆனால் பாவ சொரூபமான அப்பெண் அங்கும் தன்னைப் பின் தொடர்ந்து வருவதை இந்திரன் கண்டார். அவள் இந்திரன் சென்ற இடத்திற்கெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து சென்றாள். இறுதியாக அவர் வடகிழக்கு திசையில் விரைந்து மானஸ-ஸரோவர ஏரியில் புகுந்தார்.

பதம் 6.13.15
ஸ ஆவஸத் புஷ்கர-நாள-தந்தூன்
அலப்த-போகோ யத் இஹாக்னி-தூத:
வர்ஷாணி ஸாஹஸ்ரம் அலக்ஷிதோ ‘ந்த:
ஸஞ்சிந்தயன் ப்ரஹ்ம-வதாத் விமோக்ஷம்

ஸ:—அவர் (இந்திரன்); ஆவஸ்த்—வாழ்ந்தார்; புஷ்கர-நாள-தந்தூன்—ஒரு தாமரைத் தண்டின் நூல்களுள்; அலப்த-போக:—எவ்வித பெளதிக வசதியையும் பெறாமல் (எந்த பொருளுமின்றி பட்டினி கிடந்தார்); யத்—எது; இஹ—இங்கு; அக்னி-தூத:—தூதரான அக்னி தேவன்; வர்ஷாணி—தேவ ஆண்டுகள்; ஸாஹஸ்ரம்—ஆயிரம்; அலக்ஷித:—கண்ணுக்குப் புலப்படாது; அந்த:—அவரது இதயத்தினுள்; ஸஞ்சிந்தயன்—பற்றியே எப்பொழுதும் சிந்தித்தபடி; ப்ரஹ்ம-வதாத்—பிராமணரைக் கொன்றதிலிருந்து; விமோக்ஷம்—விடுபடுவது.

பிராமணனைக் கொன்ற பாவ விளைவிலிருந்து விடுபடுவது எப்படி என்று எப்பொழுதும் சிந்தித்து வந்த இந்திரன் யாருக்கும் தெரியாமல் ஒரு தாமரைத் தண்டின் நூலினுள் மறைந்தபடி, அந்த ஏரியிலேயே ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அக்னி தேவன், யக்ஞங்களில் இந்திரனுக்குச் சேரவேண்டிய பாகத்தை அங்கு கொண்டு வருவது வழக்கம். ஆனால் அக்னி தேவன் அந்த நீருக்குள் புக அஞ்சியதால், இந்திரன் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று.

பதம் 6.13.16
தாவதி த்ரிணாகம் நஹுஷ: சசாஸ
வித்யா-தபோ-யோக-பலானுபாவ:
ஸ ஸம்பத்-ஐஸ்வர்ய-மதாந்த-புத்திர்
நீதஸ் திரஸ்சாம் கதிம் இந்ர-பத்ன்யா

தாவத்—அது வரை; த்ரிணாகம்—சுவர்க்க லோகத்தை; நஹுஷ:—நகுஷன்; சசாஸ—ஆண்டு வந்தார்; வித்யா—கல்வி; தப:—தவம்; யோக—யோக சக்தி; பல—மற்றும் பலம்; அனுபாவ:—பெற்றிருந்ததால்; ஸ:—அவர் (நகுஷன்); ஸம்பத்—அவ்வளவு செல்வம்; ஐஸ்வர்ய—மற்றும் ஐசுவரியத்தின்; மத—செருக்கினால்; அந்த—குருடாக்கப்பட்டு; புத்தி:—அவரது புத்தி; நீத:—கொண்டு வரப்பட்டார்; திரஸ்சாம்—ஒரு பாம்பின்; கதிம்—கதிக்கு; இந்ர-பத்ன்யா—இந்திரனின் மனைவியான சசிதேவியால்.

இந்திரன் தாமரைத் தண்டினுள் மறைந்தபடி அந்த நீருக்குள் வாழ்ந்து வந்தது வரை, அறிவும், தவமும், யோக பலமும் வாய்ந்த நகுஷன் தேவலோகத்தை ஆண்டு வந்தார். ஆனால் பலத்தினாலும், ஐசுவரியத்தனாலும் அறிவாகிய கண்ணை இழந்த நகுஷன், இந்திரனின் மனைவியை அனுபவிக்கும் ஆசையுடன், விரும்பத்தகாத திருமணக் பேச்சுகளை அவரிடம் பேசினார். இதனால் நகுஷன் ஒரு பிராமணரால் சபிக்கப்பட்டு ஒரு பாம்பாக மாறினார்.

பதம் 6.13.17
ததோ கதோ ப்ரஹ்ம-கிரோபாஹூத
ருதம்பர-த்யான-நிவாரிதாக:
பாபஸ் து திக்தேவதயா ஹதெளஜாஸ்
கதம் நாப்யபூத் அவிதம் விஷ்ணு-பத்ன்யா

தத:—அதன்பிறகு; கத:—சென்றார்; ப்ரஹ்ம—பிராமணர்களின்; கிரா—வார்த்தைகளால்; உபஹூத:—அழைக்கப்பட்டு; ருதம்பர—சத்தியத்தின் காவலரான பரமபுருஷரின் மீதான; த்யான—தியானத்தால்; நிவாரித—குறைக்கப்பட்டது; அக:—அவரது பாவம்; பாப:—பாவச் செயல்; து—பிறகு; திக்-தேவதயா—ருத்திரனால்; ஹத-ஒஜா:—வீரியம் குன்றிய; தம்—அவரை (இந்திரனை); ந அப்யபூத்—பீடிக்க இயலவில்லை; அவிதம்—காக்கப்பட்டதால்; விஷ்ணு-பத்ன்யா—பகவான் விஷ்ணுவின் மனைவியான லக்ஷ்மி தேவியால்.

திக்தேவதையான ருத்திரனின் செல்வாக்கினால் இந்திரனின் பாவங்கள் குறைக்கப்பட்டன. மானஸ-ஸரோவர ஏரியிலுள்ள தாமரைக் கூட்டத்தில் வாழ்ந்து வந்த இந்திரன், பகவான் விஷ்ணுவின் மனைவியான லக்ஷ்மி தேவியால் காக்கப்பட்டிருந்த காரணத்தால், இந்திரனின் பாவங்களால் அவரைப் பீடிக்க இயலவில்லை. இந்திரன் பகவான் விஷ்ணுவைச் சிரத்தையுடன் வழிபட்டதால், முடிவில் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். பிறகு அவர் பிராமணர்களால் சுவர்க்க லோகங்களுக்கு அழைக்கப்பட்டு, மீண்டும் அவரது பழைய பதவியில் அமர்த்தப்பட்டார்.

பதம் 6.13.18
தம் ச ப்ரஹ்மர்ஷயோ ‘ப்யேத்ய ஹயமேதேன பாரத
யதாவத் தீக்ஷயாஞ் சக்ரு: புருஷாராதனேன ஹ

தம்—அவரை (இந்திரனை); ச—மேலும்; ப்ரஹ்ம-ரிஷய:—சிறந்த முனிவர்களும், பிராமணர்களும்; அப்யேத்ய—அணுகி; ஹயமேதேன—அஸ்வமேத யாகத்துடன்; பாரத—பரீட்சித்து மகாராஜனே; யதாவத்—சட்டதிட்டங்களுக்கேற்ப; தீக்ஷயாம் சக்ரு:—தீட்சை அளித்தனர்; புருஷ-ஆராதனேன—பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரியின் ஆராதனையைக் கொண்ட; ஹ—உண்மையில்.

அரசே, இந்திரன் சுவர்க்க லோகங்களை அடைந்ததும், சிறந்த பிராமணர்களான முனிவர்கள் அவரை அணுகி, பரமபுருஷரை திருப்திப்படுத்துவதற்குரிய அஸ்வமேத யாகத்திற்கு முறைப்படி தீட்சை பெறும்படி செய்தனர்.

பதங்கள் 6.13.19 – 6.13.20
அதேஜ்யமானே புருஷே ஸர்வ-தேவமயாத்மனி
அஸ்வமேதே மஹேந்ரேண விததே ப்ரஹ்ம-வாதிபி:

ஸ வை த்வாஷ்ட்ர-வதோ பூயான் அபி பாப-சயோ ந்ருப
நீதஸ் தேனைவ சூன்யாய நீஹார இவ பானுனா

அத—ஆகவே; இஜ்யமானே—வழிபட்டதும்; புருஷே—பரம புருஷரை; ஸர்வ—எல்லா; தேவ-மய-ஆத்மனி—தேவர்களின் பரமாத்மாவும் காவலருமான; அஸ்வமேதே—அஸ்வமேத யாகத்தின் மூலம்; மஹா-இந்ரேண—இந்திரனால்; விததே—நடத்தப்பட்டு; ப்ரஹ்ம-வாதிபி:—வேதவல்லுனர்களான முனிவர்களாலும், பிராமணர்களாலும்; ஸ:—அந்த; வை—உண்மையில்; த்வாஷ்ட்ர-வத:—துவாஷ்டரின் மகனான விருத்ராசுரனின் வதம்; பூயாத்—இருக்கக்கூடும்; அபி—என்ற போதிலும்; பாப-சய:—பெரும் பாவம்; ந்ருப—அரசே; நீத:—கொண்டுவரப்பட்டது; தேன—அதனால் (அஸ்வமேத யாகத்தினால்); ஏவ—நிச்சயமாக; சூன்யாய—ஒன்றுமில்லாத நிலைக்கு; நீஹார:—பனி; இவ—போல்; பானுனா—பிரகாசிக்கும் சூரியனால்.

பிரம்ம ரிஷிகளால் செய்யப்பட்ட அஸ்வமேத யாகத்தில் இந்திரன் பரம்புருஷரை வழிபட்டதால், அவர் தன்னுடைய எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அரசே, மிகக் கடுமையான ஒரு பாவத்தை அவர் செய்திருந்த போதிலும், அந்த யாகத்தினால், அப்பாவ விளைவுகள் சூரியனைக் கண்ட பனிபோல் உடனே மறைந்து போயின.

பதம் 6.13.21
ஸ வாஜிமேதேன யதோதிதேன
விதாயமானேன மரீசி-மிஸ்ரை:
இஷ்ட்வாதியஜ்ஞம் புருஷம் புராணம்
இந்ரோ மஹான் ஆஸ விதூத-பாப:

ஸ:—அவர் (இந்திரன்); வாஜிமேதேன—அஸ்வமேத யாகத்தால்; யதா—போல்; உதிதேன—விவரிக்கப்பட்டது; விதாயமானேன—செய்யப்பட்டு; மரீசி-மிஸ்ரை:—மரீசி முதலான புரோகிதர்களால்; இஷ்ட்வா—வழிபட்டு; அதியக்ஞம்—பரமாத்மா; புருஷம் புராணம்—மூல முழுமுதற் கடவுள்; இந்திர:—இந்திரன்; மஹான்—பூஜிக்கத்தக்கவர்; ஆஸ—ஆனார்; விதூத-பாப:—எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டு.

இந்திரன், மரீசி முதலான முனிவர்களால் ஆதரிக்கப்பட்டார். அவர்கள் சட்ட திட்டங்களுக்கேற்ப, பரமாத்மாவும் ஆதிபுருஷருமாகிய பரமபுருஷரை முறைப்படி வழிபட்டு அஸ்வமேத யாகத்தை நிறைவேற்றினர். இவ்வாறு தனது மேலான பதவியை திரும்பப் பெற்ற இந்திரன் மீண்டும் அனைவராலும் பெருமைப்படுத்தப்பட்டார்.

பதங்கள் 6.13.22 – 6.13.23
இதம் மஹாக்யானம் அசேஷ-பாப்மனாம்
ப்ரக்ஷாலனம் தீர்த்தபானுகீர்த்தனம்
பக்தி-உச்ரயம் பக்த-ஜனானுவர்ணனம்
மஹேந்ர-மோக்ஷம் விஜயம் மருத்வத:

படேயுர் ஆக்யானம் இதம் ஸதா புதா:
ஸ்ருண்வந்தி அதோ பர்வணி பர்வணீந்ரியம்
தன்யம் யசஸ்யம் நிகிலாக-மோசனம்
ரிபுஞ்ஜயம் ஸ்வஸ்தி-அயனம் ததாயுஷம்

இதம்—இது; மஹா-ஆக்யானம்—சிறந்த சரித்திர வரலாறு; அசேஷ-பாப்மனாம்—எண்ணற்ற பாவச் செயல்களை; ப்ரக்ஷாலனம்—தூய்மைப்படுத்தும்; தீர்த்தபத-அனுகீர்த்தனம்—தீர்த்தபாதர் எனப்படும் பரமபுருஷரை துதித்துப் போற்றி; பக்தி—பக்தித் தொண்டின்; உச்ரயம்—பெருக்கமுள்ள அதில்; பக்த-ஜன—பக்தர்களை; அனுவர்ணனம்—வர்ணிக்கும்; மஹா-இந்ர-மோக்ஷம்—சுவர்க்க ராஜனின் முக்தி; விஜயம்—வெற்றி; மருத்வத:—இந்திரனின்; படேயு:—படிக்க வேண்டும்; ஆக்யானம்—வர்ணனையை; இதம்—இந்த; ஸதா—எப்பொழுதும்; புதா:—புத்திமான்கள்; ஸ்ருண்வந்தி—தொடர்ந்து கேட்க வேண்டும்; அதோ—கூட; பர்வணி பர்வணி—திருவிழாக் காலங்களில்; இந்ரியம்—புலன்களைக் கூர்மையாக்குவதும்; தன்யம்—செல்வத்தை அளிப்பதும்; யசஸ்யம்—புகழ் சேர்ப்பதும்; நிகில—எல்லா; அக-மோசனம்—பாவங்களிலிருந்தும் விடுவிப்பதும்; ரிபும்-ஜயம்—சத்துரு ஜயத்தைக் கொடுப்பதும்; ஸ்வஸ்தி-அயனம்—எல்லோருக்கும் மங்களம் அருள்வதும்; ததா—அவ்வாறே; ஆயுஷம்—நீண்ட ஆயுளை.

மிகச்சிறந்த இந்த வரலாற்றில், பரமபுருஷராகிய நாராயணரின் புகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இதில் பக்தித் தொண்டின் மேன்மையைப் பற்றிய கூற்றுகளும், இந்திரன் மற்றும் விருத்ராசுரனைப் போன்ற பக்தர்களைப் பற்றிய வர்ணனைகளும் உள்ளன. இந்திரன் பாவ வாழ்விலிருந்து விடுபட்டதைப் பற்றிய கூற்றுகளும், அசுரர்களை அவர் போரில் வென்றதைப் பற்றிய கூற்றுகளும் கூட இதில் உள்ளன. இச்சம்பவத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒருவன் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவான். ஆகவே இந்திரனைப் பற்றிய இவ்வரலாற்றை எப்பொழுதும் புத்திமான்கள் படிக்க வேண்டும். இது புலன் செயல்களின் திறமையையும், செல்வத்தையும், புகழையும், பாவத்திலிருந்து விடுதலையையும், சத்துரு ஜயத்தையும், நீண்ட ஆயுளையும் அளிக்கக் கூடியதாகும். இந்த வரலாறு எல்லா வகையிலும் மங்களகரமானது என்பதால், புத்திமான்கள் பருவம் தோறும் இதைக் கேட்கவும், திருப்பிக் கூறவும் வேண்டும்.


ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “இந்திரன் தன் பாவ விளைவினால் துன்புறுதல்” எனும் தலைப்பை கொண்ட பதிமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

 

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare