அத்தியாயம் – 11
விருத்தாசுரனின் உன்னத குணங்கள்
பதம் 6.11.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, அசுர சேனாதிபதியான விருத்ராசுரன் தனது உபசேனாதிபதிகளுக்கு தர்மத்தை உபதேசித்தான். ஆனால், யுத்தகளத்தை விட்டு ஓட்டம் பிடிக்க எண்ணியிருந்த கோழைகளான அந்த அசுரத் தலைவர்கள் அவனுடைய வார்த்தைகளை ஏற்க இயலாமல் பெரும் அச்சத்திற்குள்ளாயினர்.

பதங்கள் 6.11.2 – 6.11.3 : பரீட்சித்து மகாராஜனே, இந்த அனுகூலமான நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், பின்னாலிருந்து அசுர சேனைகளைத் தாக்கி, தலைவனற்ற சேனைபோல் அவர்களை இங்குமங்கும் சிதறியோடச் செய்தனர். அசுரர்களில் சிறந்தவனும், இந்திரனின் சத்துரு என்று அழைக்கப்பட்டவனுமான விருத்ராசுரன், தன் சேனையின் பரிதாபமான நிலையைக் கண்டு மிகவும் வருந்தினான். வருந்தத்தக்க இந்நிலையைப் பொறுக்க இயலாத அவன், கோபத்துடன் பின்வரும் வார்த்தைகளைக் கூறி, கடுமையாக தேவர்களைக் கண்டனம் செய்தான்.

பதம் 6.11.4 : தேவர்களே, இந்த அசுர வீரர்களின் பிறப்பு பயனில்லாமற் போயிற்று. உண்மையில் இவர்கள் தங்களுடைய தாய்களின் உடல்களிலிருந்து மலத்தைப் போலவே வெளிவந்துள்ளனர். பயந்து ஓடும் இந்த எதிரிகளைப் பின்னாலிருந்து கொல்வதால் என்ன பயன்? தன்னை ஒரு வீரனென்று கருதுபவன், உயிரை இழக்க அஞ்சும் ஓர் எதிரியை கொல்லக்கூடாது. இத்தகைய கொலை புகழுக்குரியதும் இல்லை. சுவர்க்க லோகங்களுக்கு ஒருவனை உயர்த்தக் கூடியதுமில்லை.

பதம் 6.11.5 : அற்ப தேவர்களே, உங்களுடைய வீரத்தில் உண்மையாகவே நம்பிக்கை இருக்குமானால், உங்களுடைய இதயங்களில் உங்களுக்குப் பொறுமை இருக்குமானால், மேலும் புலன் நுகர்வில் நீங்கள் பேராசை கொண்டிருக்கவில்லை என்றால், தயவுசெய்து நொடிப்பொழுது என்முன் நில்லுங்கள்.

பதம் 6.11.6 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மிகவும் சக்திவாய்ந்த வீரனும், கோபம் கொண்டவனுமான விருத்ராசுரன், தனது வலிமை மிக்க, பருத்த உடலுடன் தேவர்களை பயமுறுத்தினான். அவன் எதிரொலிக்கும் குரலுடன் கர்ஜித்தபொழுது கிட்டத்தட்ட அனைத்து ஜீவராசிகளுமே மூர்ச்சையடைந்து விட்டன.

பதம் 6.11.7 : விருத்ராசுரனின் சிங்கத்தையொத்த கொடிய கர்ஜனையைக் கேட்ட தேவர்கள் அனைவரும் மூர்ச்சையடைந்து, இடி விழுந்தவர்கள் போல் தரையில் விழுந்தனர்.

பதம் 6.11.8 : விருத்ராசுரன் தனது சூலாயுதத்தை கையிலெடுத்துக் கொண்டு, தன்னுடைய பெரும் பலத்தினால் பூமியை அதிரச் செய்தபடி, அச்சத்தினால் கண்களை மூடிக்கொண்ட தேவர்களை யுத்த களத்தில், மதம் பிடித்த யானையொன்று காட்டில் மூங்கில்களை நசுக்குவது போல், தன் கால்களால் நசுக்கினான்.

பதம் 6.11.9 : விருத்ராசுரனின் போக்கைக் கண்ட தேவேந்திரன் பொறுமை இழந்து, தடுப்பதற்கு மிகக் கடினமான தனது சக்தி வாய்ந்த கதைகளுள் ஒன்றை அவன் மேல் வீசியெறிந்தார். ஆனால் விருத்ராசுரனை நோக்கிப் பறந்து சென்ற அந்த கதையை அவன் சுலபமாகத் தனது இடது கையினால் பிடித்துவிட்டான்.

பதம் 6.11.10 : பரீட்சித்து மகாராஜனே, இந்திரனின் சத்துருவான வலிமைமிக்க அந்த விருத்ராசுரன் கோபத்துடன் இந்திரனுடைய யானையின் தலையை அந்த கதையால் தாக்கினான். அது யுத்தகளத்தில் பேரொலியை எழுப்பியது. இந்த வீரச் செயலுக்காக இரு பக்கத்து வீரர்களும் அவனைப் போற்றினர்.

பதம் 6.11.11 : விருத்ராசுரனின் கையிலிருந்த கதையால் தாக்குண்ட ஐராவத யானை, இடிவிழுந்த மலைபோல், மிகுந்த வேதனையுடனும், கிழிந்த வாயிலிருந்து இரத்தம் கக்கியபடி பதினான்கு கஜ தூரத்திற்குப் பின்னால் தள்ளப்பட்டு, பெரும் வேதனையுடன் இந்திரனோடு தரையில் விழுந்தது.

பதம் 6.11.12 : இந்திரனின் வாகனமான அந்த யானை காயமடைந்து சோர்வுற்றதையும், தனது வாகனம் அவ்வாறு தாக்கப்பட்டதால் இந்திரன் வருத்தம் அடைந்ததையும் கண்ட சிறந்த ஆத்மாவான விருத்ராசுரன், தர்மத்தை அனுஷ்டித்து, கதையால் இந்திரனை மீண்டும் தாக்காது விட்டான். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், தனது அமிர்தம் உண்டாக்கும் கையினால் அந்த யானையைத் தொட்டு அதன் வேதனையைப் போக்கி, அதன் காயங்களை ஆற்றினார். பிறகு அந்த யானையும், இந்திரனும் மௌனமாக நின்றனர்.

பதம் 6.11.13 : அரசே, தன் சகோதரனைக் கொன்றவரும், தன் பகைவருமான இந்திரன், யுத்தம் செய்யும் விருப்பத்துடன் கையில் வஜ்ராயுதத்துடன் தன் முன் நிற்பதைக் கண்ட மகா வீரனான விருத்ராசுரன், இந்திரன் தன் சகோதரனை கொடூரமாகக் கொன்ற விதத்தை நினைவு கூர்ந்தான். இந்திரனின் பாவச் செயல்களை நினைந்து சோகமும், மோகமும் மேலிட கேலியாக சிரித்துக்கொண்டு பின்வருமாறு கூறலானான்.

பதம் 6.11.14 : ஸ்ரீ விருத்ராசுரன் கூறினான்: ஒரு பிராமணனைக் கொன்றவனும், தன் குருவைக் கொன்றவனும், என் சகோதரனைக் கொன்றவனுமான நீ, நல்ல அதிர்ஷ்டத்தினால், என் எதிரியாக இப்பொழுது என் முன் நேருக்கு நேராக நின்று கொண்டிருக்கிறாய். மிகவும் வெறுக்கத் தகுந்தவனே, கல்லுக்கொப்பான உன் இதயத்தை எனது சூலத்தால் பிளந்து, என் சகோதரனிடம் பட்ட கடனை நான் தீர்த்துக் கொள்ளப் போகிறேன்.

பதம் 6.11.15 : சுவர்க்கலோகங்களில் வாழும் ஒரே ஆசையினால், தன்னுணர்வு பெற்றவரும், பாவமற்றவரும், தகுதியுடைய பிராமணரும், உனது தலைமைப் புரோகிதராக நியமிக்கப்பட்டவருமான என் தமையனை நீ கொன்று விட்டாய். உனக்கு குருவாக இருந்த அவரிடம் யாகப் பொறுப்பை நீ ஒப்படைத்திருந்தாய். இருப்பினும் ஒருவன் ஒரு மிருகத்தைக் கொலை செய்வது போல் அவரது தலைகளை நீ இரக்கமின்றி துண்டித்து விட்டாய்.

பதம் 6.11.16 : இந்திரா, நீ வெட்கம், கருணை, புகழ், நல்லதிர்ஷ்டம் ஆகிய அனைத்தையும் இழந்துவிட்டாய். உன்னுடைய கருமங்களின் பலனாக இந்த நற்குணங்களையெல்லாம் இழந்துவிட்ட நீ இராட்சஸர்களாலும் நிந்திக்கத்தக்கவனாவாய். இப்பொழுது என் சூலத்தால் உன் உடலை நான் பிளக்கப்போகிறேன். பெரும் வேதனையுடன் நீ மடிந்த பிறகு நெருப்பு கூட உன்னைத் தீண்டாது கழுகுகள் மட்டுமே உன் உடலைத் தின்னும்.

பதம் 6.11.17 : இயற்கையாகவே நீ கொடூரமானவன். மற்ற தேவர்கள் உன்னைப் பின்பற்றி, உயர்த்திய ஆயுதங்களுடன் என்னைத் தாக்குவார்களானால், கூர்மையான இச்சூலத்தினால் அவர்களுடைய தலைகளை நான் துண்டித்து விடுவேன். அத்தலைகளைக் கொண்டு பைரவருக்கும், பூதங்களுக்கும், மற்ற பூத கணங்களுக்கும் நான் பலி கொடுப்பேன்.

பதம் 6.11.18 : ஆனால் இந்த யுத்தத்தில் நீ உன் வஜ்ராயுதத்தினால் என் தலையைத் துண்டித்து, என் வீரர்களையும் கொன்று விடுவாயானால், இந்திரனே, சிறந்த வீரனே, (குள்ள நரிகள், கழுகுகள் போன்ற) பிற ஜீவன்களுக்கு நான் எனது உடலைப் பெரும் மகிழ்ச்சியுடன் இரையாக்கி விடுவேன். இவ்விதமாக என் கர்ம விளைவுகளுக்குக் கட்டுப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு, நாரத முனிவரைப் போன்ற சிறந்த பக்தர்களின் பாததுளியைப் பெறும் பாக்கியத்தை நான் அடைவேன்.

பதம் 6.11.19 : தேவராஜனே, உன் எதிரியான நான் உன் எதிரிலேயே நிற்கிறேன். நீ ஏன் உன் வஜ்ராயுதத்தை என் மீது பிரயோகிக்காமல் இருக்கிறாய்? உன் கதையால் நீ என்னைத் தாக்கியது, உலோபியிடம் யாசித்த பணம் போல் பயனற்றுப் போனது என்றாலும், நீ வைத்திருக்கும் வஜ்ராயுதம் அவ்வாறு பயனற்றுப் போகாது. இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.

பதம் 6.11.20 : சுவர்க்க ராஜனான இந்திரனே, என்னைக் கொல்வதற்காக நீ வைத்துள்ள வஜ்ராயுதம் பகவான் விஷ்ணுவின் சக்தியினாலும், ததீசியின் தவ வலிமையினாலும் சக்தியளிக்கப்பட்டுள்ளது. பகவான் விஷ்ணுவின் உத்தரவுப்படி என்னைக் கொல்வதற்காகவே நீ இங்கு வந்திருப்பதால், உன்னுடைய வஜ்ராயுதத்தினால் நான் கொல்லப்படுவேன் என்பதில் ஐயமில்லை. பகவான் விஷ்ணு உன் பக்கம் இருக்கிறார். ஆகவே வெற்றி, ஐசுவரியம், நற்குணங்கள் ஆகிய அனைத்தையும் நீ பெறுவது நிச்சயம்.

பதம் 6.11.21 : உன்னுடைய வஜ்ராயுதத்தின் வேகத்தினால் நான் பௌதிக பந்தத்திலிருந்தும், பெளதிக ஆசைகளைக் கொண்ட இவ்வுடலிலிருந்தும், இவ்வுலகிலிருந்தும் விடுபடுவேன். நான் பகவான் சங்கர்ஷணர் கூறியதுபோல், நாரதரைப் போன்ற சிறந்த முனிவர்களின் கதியை அடைவேன்.

பதம் 6.11.22 : பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் பூரண சரணடைந்தவர்களும், அவரது தாமரைப் பாதங்களையே எப்பொழுதும் நினைப்பவர்களும், பகவானால் அவரது அந்தரங்க சேவகர்களாக அல்லது உதவியாளர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். இத்தகைய சேவகர்களுக்கு இந்த ஜட உலகைச் சேர்ந்த மேல், கீழ் மற்றும் மத்திய கிரக அமைப்புக்களில் உள்ள செல்வங்களை பகவான் கொடுப்பதே இல்லை. மேற்கூறிய கிரக அமைப்புகளுள் ஒன்றில் ஒருவன் பெளதிக ஐசுவரியத்தை அடையும்பொழுது, இயல்பாகவே அது அவனுடைய பகை, வருத்தம், கவலை, கர்வம், போரில் ஈடுபாடு ஆகியவற்றை அதிகரிக்கிறது. இவ்விதமாக ஒருவன் தன் உடைமைகளை அதிகரிப்பதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் அதிக முயற்சியை மேற்கொள்வதுடன், அவற்றை இழக்கும்பொழுது பெருந்துன்பத்திற்கும் உள்ளாகிறான்.

பதம் 6.11.23 : எங்கள் பெருமானாகிய பரமபுருஷர், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றுக்காகத் தமது பக்தர்கள் வீணாக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிப்பார். இந்திரனே, பகவான் எவ்வளவு கருணையுடையவர் என்பதை இதைக் கொண்டு ஒருவனால் தீர்மானிக்கமுடியும். இத்தகைய கருணையை தூய பக்தர்களால் மட்டுமே அடையமுடியும், பௌதிக இலாபத்தை விரும்புபவர்களால் அல்ல.

பதம் 6.11.24 : எம்பெருமானே, பரமபுருஷரே, உங்களுடைய திருவடியொன்றிலேயே நாட்டமுள்ள உங்களுடைய நித்தியத் தொண்டர்களுக்கும் தொண்டனாக மீண்டும் நான் ஆகுமாறு அருள்புரிய வேண்டும். என் பிராண நாதரே, மீண்டும் நான் அவர்களுக்குச் சேவகனாகிப் பணிபுரிய வேண்டும். இதனால் தங்களுடைய உன்னத குணங்களையே என் மனம் எப்பொழுதும் நினைக்கட்டும்; அக்குணங்களையே என் வாக்கு எப்பொழுதும் துதிக்கட்டும்; தங்களுடைய அன்புத் தொண்டிலேயே எனது உடல் எப்பொழுதும் ஈடுபடட்டும்.

பதம் 6.11.25 : எல்லாச் செல்வங்களுக்கும் உறைவிடமாகிய பகவானே, நான் துருவ லோகத்தையோ, சுவர்க்க லோகங்களையோ அல்லது பிரம்ம தேவர் வாழும் உலகத்தையோ அனுபவிக்க விரும்பவில்லை. அல்லது அனைத்து மண்ணுலகங்களுக்கும், அல்லது பாதாள லோகங்களுக்கும் மேலான அதிபதியாக இருப்பதையோ கூட நான் விரும்பவில்லை. யோக சித்திகளை நான் விரும்பவில்லை. தங்களுடைய தாமரைப் பாதங்களைக் கைவிட வேண்டுமாயின், முக்தியையும் நான் வேண்டேன்.

பதம் 6.11.26 : கமலக்கண்ணரே, இறக்கை முளைக்காத பறவைகள் தாய் வந்து உணவளிப்பாள் என்று அவளை நோக்கி எப்பொழுதும் அவாவுவது போலும், கயிறுகளால் கட்டப்பட்டு பசியினால் வருந்தும் இளங்கன்றுகள் தாயின் பாலைப் பருக அவாவுவது போலும், அல்லது மனங்கலங்கிய மனைவி தூரதேசம் சென்ற கணவன் திரும்பி வந்து தன்னை எல்லா விதத்திலும் திருப்திப்படுத்துவதற்காக எப்பொழுதும் அவாவுவது போலும், தங்களுக்கு நேரடியாகத் தொண்டு செய்யும் சந்தர்ப்பத்திற்காக என் மனம் எப்பொழுதும் அவாவுகிறது.

பதம் 6.11.27 : பிரபுவே, என் கருமங்களின் பலனாக இந்த ஜட உலகம் முழுவதிலும் நான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே பக்திமிக்க உங்களுடைய உத்தம பக்தர்களின் நட்பு எனக்கு ஏற்படவேண்டும். உங்களுடைய மாயா சக்தியின் வசியத்தினால், என்னுடைய உடல், மனைவி குழந்தைகள் வீடு ஆகியவற்றிலுள்ள எனது பற்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இவற்றிடம் இனி பற்றற்றவனாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் மனம், உணர்வு முதலான அனைத்தும் தங்களிடம் மட்டுமே பற்றுக் கொண்டவையாக இருக்கட்டும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare