அத்தியாயம் – 9
மானுடப் பிறப்பில் பரதரின் சிறந்த இயல்புகள்
பதங்கள் 5.9.1 – 5.9.2 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார். அன்பார்ந்த மன்னனே, மானின் உடலைத் துறந்த பின் பரதர் ஒரு தூய அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். அங்கிராவின் குலத்தில் வந்த அந்தணர் ஒருவர் அந்தணத் தகுதிகள் அனைத்தும் நிரம்பியவர். மனம் மற்றும் புலன்களை அடக்கி வேதங்களையும், சாத்திரங்களையும் நன்கு கற்றவராக அவர் விளங்கினார். தானம் வழங்குவதில் தேர்ந்தவராகவும், எப்போதும் திருப்தியுடையவராகவும், கற்றறிந்தவராகவும், காழ்ப்புணர்ச்சியற்றவராகவும் இருந்தார். தன்னுணர்வு பெற்று பகவானின் பக்தித் தொண்டில் அவர் ஈடுபட்டிருந்தார். எப்போதும் சமாதி நிலையிலேயே இருந்தார். அவரது முதல் மனைவியிடம் ஒன்பது புதல்வர்களையும் இரண்டாம் மனைவியிடம் இரட்டையராகப் பிறந்த ஒரு புதல்வன் மற்றும் ஒரு புதல்வியையும் பெற்றெடுத்தார். இப்புதல்வனே மிகச் சிறந்த பக்தரும், உயர்ந்த ராஜ ரிஷியுமான பரத மகாராஜா ஆவார். மானின் உடலைத் துறந்தபிறகு அவர் பிறந்த கதை இதுவேயாகும்.

பதம் 5.9.3 : பகவானின் கருணையினை விசேஷமாகப் பெற்றிருந்தாலும் பரத மன்னருக்கு அவரது முற்பிறப்பு சம்பவங்கள் அனைத்தும் நன்றாக நினைவில் இருந்தன. அவர் அந்த உடலைப் பெற்று அந்தணக் குடும்பத்தில் வாழ்ந்தபோதிலும் பக்தரல்லாத தனது உற்றார் உறவினர்களைக் கண்டு மிகவும் அஞ்சினார். இவர்களோடு தொடர்பு கொள்வதில் அவர் எப்போதும் மிகவும் எச்சரிக்கையுடனேயே இருந்தார். ஏனெனில் எங்கே தான் மீண்டும் தவநெறி பிறழ்ந்து விடுவோமோ என்று அவர் அஞ்சினார். இதனைத் தொடர்ந்தே அவர் பொதுமக்களின் கண்களுக்குத் தன்னை ஓர் உன்மத்தம் பிடித்தவராக முட்டாள் போன்றும், குருடு மற்றும் செவிடராகவும் காண்பித்துக் கொண்டார். அப்போதுதானே அவரிடம் பிறர்பேசவும் தொடர்பு கொள்ளவும் முயல மாட்டார்கள். இவ்வாறு அவர் தன்னைத் தீயத் தொடர்புகளிலிருந்து காத்துக் கொண்டார். மேலும் அவர் எப்போதும் தனக்குள் பலன் தரும் செயலிலிருந்து ஒருவரைக் காத்தருளும் பகவானின் தாமரைத் திருவடிகளையே சிந்தித்து, அவரது பெருமைகளையே தொடர்பின் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொண்டார்.

பதம் 5.9.4 : மானுட பரதரின் அந்தணத் தந்தை எப்போதும் தன் புதல்வன் (பரத மகாராஜா) மீது பாசம் கொண்டிருந்தார். கிரஹஸ்த ஆஸ்ரமம் என்னும் இல்வாழ்க்கைக்கு மானுட பரதர் பொருத்தமானவராக இல்லையெனவே அவர் இறுதிவரையில் பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தில் இருப்பதற்கானத் தூய்மை செய்யும் முறையினைச் செய்து வைத்தார். பரதருக்குத் தன் தந்தையின் உபதேசங்களை ஏற்றுக் கொள்வதற்கு விருப்பமில்லாவிட்டாலும் கூட தந்தை மகனுக்குச் செய்யும் கடமையின் காரணமாக அந்த அந்தணர் அவருக்கு எவ்வாறு கை, வாய் போன்றவற்றைக் கழுவித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார்.

பதம் 5.9.5 : அவரது தந்தை அவருக்கு வேத மந்திரத்தில் போதிய பயிற்சி அளித்திருந்தபோதிலும், மானுட பரதர் தன் தந்தையின் முன்பு ஒரு மூடனைப் போன்றே நடந்து கொண்டார். அப்படிச் செய்தால்தானே மானுட பரதர் உபதேசிப்பதற்குப் பயனற்றவர் என்று கருதி அவர் தந்தை அவருக்கு மேலும் உபதேசிப்பதை நிறுத்துவார். அவர் எதிலும் நேருக்கு மாறாகவே நடந்து கொள்வார். மலங்கழித்துவிட்டுக் கால் கழுவ வேண்டுமென்றால், அவர் முதலிலேயே கால் கழுவுவார். இருப்பினும் அவர் தந்தை அவருக்கு வசந்த காலத்திலும், கோடைக் காலத்திலும் வேதங்களை உபதேசிக்க விரும்பினார். அவர் அவருக்கு ஒம்காரத்துடன் கூடிய காயத்ரி மந்திரம் மற்றும் வியாஹ்ருதியினை கற்றுக்கொடுக்க முயன்றார். ஆனால் நான்கு மாதங்கள் கடந்த பிறகும்கூட அவர் தந்தையால் தன் முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை.

பதம் 5.9.6 : மானுட பரதரின் அந்தணத் தந்தை தன் மகனைத் தனது இதயமும் ஆத்மாவாகவும் கருதினார். ஆகையினால் அவர், மகன் மீது அதிகப் பற்றுடையவராக இருந்தார். தனது மைந்தனுக்கு முறையான கல்வியளிப்பதே நன்று எனக் கருதினார். வெற்றி தராத இம்முயற்சியில் அவர் ஆழ்ந்து தனது மைந்தனுக்கு பிரம்மச்சரிய நெறிகளை —வேத விரதங்களை மேற்கொள்ளல், வேதங்களைக் கற்றல், ஒழுங்கு முறை விதிகளைக் கடைப்பிடித்தல், ஆன்மீக குருவிற்கு சேவை செய்தல், நெருப்பு வேள்வியினை அர்ப்பணித்தல் போன்றவை அடங்கியது கற்பிக்க முயற்சித்தார். தன் மைந்தனுக்கு அனைத்தையும் கற்பிக்க முயன்றாலும், தனது முயற்சிகள் அனைத்திலும் அவர் தோல்வியே கண்டார். தன் மைந்தன் ஒர் கற்றறிந்த அறிஞனாக வருவான் என்று அவர் கொண்ட நம்பிக்கை பொய்த்துவிட்டது. எல்லோரையும் போல் அந்த அந்தணரும் தன் குடும்பத்தின் மீது அதிக பாசமுடையவராக இருந்தார். ஒரு நாள் தான் இறந்து போவோம் என்பதை அவர் எண்ணவில்லை. ஆனால் மரணமோ மறக்கும் தன்மை உடையதல்ல. சரியான நேரத்தில் மரணம் அவரை அள்ளிக் கொண்டு போயிற்று.

பதம் 5.9.7 : அதன் பிறகு அந்த அந்தணரின் இளைய மனைவி தன் இரட்டைக் குழந்தைகளான ஆணையும், பெண்ணையும் தனது சக கிழத்தியிடம் ஒப்படைத்துவிட்டு தன் கணவனுடன் உடன்கட்டை ஏறி பதிலோகம் சென்றாள்.

பதம் 5.9.8 : தந்தை இறந்த பிறகு தந்தையின் மூத்த மனைவிக்குப் பிறந்த ஒன்பது மைந்தர்களும் மானுட பரதரை முறையற்ற மந்த மதியுடையவர் என்று கருதி தங்கள் தந்தை அவருக்குக் கல்வியளிக்க வேண்டும் என்று செய்திருந்த அனைத்து முயற்சிகளையும் உடனே நிறுத்தினர். மானுட பரதரின் மாற்றாந்தாய் மக்கள் ஒன்பது பேர்களும் ரிக் வேதம், யஸுர் வேதம், சாம வேதம் என்னும் மூன்று வேதங்களையும் கற்றிருந்தனர். இவை பலன் தரும் செயல்களைச் செய்ய அதிக ஊக்கமளிப்பவையாகும். அவ்வொன்பது சகோதரர்களும் பகவானின் பக்தித் தொண்டில் அத்துணை ஒளிமிக்கவர்கள் அல்லர். இதனைத் தொடர்ந்து அவர்களால் மானுட பரதரின் மேன்மை நிலையினைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

பதங்கள் 5.9.9 – 5.9.10 : இழிந்த மனிதர்கள் விலங்குகளை விடச் சிறந்தவர்கள் அல்லர். ஒரே வேறுபாடு யாதெனில் கால்கள் அவ்வளவுதான். இந்த இரண்டு கால் மிருக மனிதர்கள் மானுட பரதரை பைத்தியம், ஜடம், செவிடு, ஊமை என்றெல்லாம் கூறினார். அவரைத் துன்புறுத்தினர். அவரும் அவர்களிடம் செவிடு, ஊமை, குருடு பைத்தியக்காரனைப் போலவே நடந்து கொண்டார். அவர் அம்மனிதர்களிடம் தான் அப்படிப்பட்டவன் அல்ல என்றோ அல்லது அவர்களது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோ இல்லை. சிலர் அவர் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமென்று கூறினால் அவர்கள் விருப்படி அவர் செய்வார். இரப்பதினலோ அல்லது கூலியாகவோ அல்லது தானாகவோ கிடைக்கும் உணவு சிறிதளவாயினும், சுவையுடையதோ அல்லது சுவையற்றதோ, பழையதோ எதுவாயினும் ஏற்றுக்கொண்டு உண்பார். அவர் புலனுகர்ச்சிக்காக எதையும் உண்பதில்லை. ஏனெனில் ஏற்கனவே அவர் உடற் கருத்திலிருந்து விடுதலை பெற்றவர் ஆவார். உடற் கருத்தே, ஒருவனை சுவையுடைய அல்லது சுவையற்ற உணவினை ஏற்றுக் கொள்ளச் செய்யும். அவர் எப்போதும் பக்தித் தொண்டின் ஆன்மீக மெய்யுணர்வு நிரம்பப் பெற்றவராகவே இருந்தார். ஆகையினால் உடற்கருத்திலிருந்து தோன்றும் இருமைகளினால் அவர் பாதிக்கப்பட்டதே இல்லை. உண்மையில் அவரது உடல் ஒரு காளை மாட்டினைப் போல் உறுதியுடையதாகவும், அவரது அங்கங்கள் ஆண்மை மிக்கவையாகவும் இருந்தன. குளிரோ கோடையோ, காற்றோ, மழையோ அவர் எப்போதும், எந்த நேரமும் தன் உடலை மூடிக் கொண்டதே இல்லை. அவர் தரையில்தான் படுத்தார். உடலுக்கு எண்ணெய் தேய்ப்பதோ, குளிப்பதோ கிடையாது. அவரது உடல் அழுக்காக இருந்த காரணத்தினால் அவரது ஆன்மீக ஒளி மற்றும் விலைமதிப்பில்லா இரத்தினக் கல்லின் ஒளியினை அழுக்கு மூடியிருப்பதுபோல், மூடப்பட்டிருந்தன. அரையில் கோவணமும், மார்பில் அழுக்கினால் கறுப்பாகிப்போன முப்புரி நூலும் அணிந்திருந்தார். அவர் பிரம்மண குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறிந்திருந்த மக்கள் அவரை பிரம்ம பந்து என்னும் பிற பெயர்களினாலும் அழைத்தனர். இவ்வாறு மனிதர்களின் அவமதிப்பு மற்றும் புறக்கணிப்பிற்கு ஆளாகி அவர் அங்கு மிங்கும் திரிந்து கொண்டிருந்தார்.

பதம் 5.9.11 : மானுட பரதர் உணவு ஒன்றிற்காக மட்டுமே உழைத்தார். அவரது மாற்றாந்தாய் மக்கள் இதனைப் பயன்படுத்தி கொண்டு வேலை வாங்கினர். ஆனால் வயல் வெளியில் எவ்வாறு வேலை பார்ப்பது என்பது அவருக்கு உண்மையில் தெரியாது. கழிவு மண்ணை எங்கே பரப்புவது, நிலத்தை மேடாக்குவது, பள்ளமாக்குவது அல்லது நிலத்தை எங்கே சமமாக்குவது என்பது பற்றியெல்லாம் அவர் ஒன்றும் அறியார். அவர் சகோதரர்கள் அவருக்கு நொய்யரிசி, எண்ணெய் பிண்ணாக்கு, புழுத்த அரிசி, பானையில் இருக்கும் கருகிய அரிசி, உமி, போன்றவற்றை உண்பதற்குக் கொடுத்தனர். ஆயினும் அவர் அவற்றையெல்லாம் அமிர்தம் போன்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவர் எந்த விரோதமும் இன்றி அனைத்தையும் மகிழ்ச்சியுடன் உண்டார்.

பதம் 5.9.12 : அச்சமயம், சூத்திரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த கொள்ளைக் கூட்டத் தலைவன் ஒருவன், ஒரு புதல்வனைப் பெற வேண்டி தான் வழிபடும் பத்திரகாளிக்கு மிருகத்தை விட மேலானவனாக இல்லாத ஒரு மந்த மனிதனை பலி கொடுக்க வேண்டுமென்று விரும்பினான்.

பதம் 5.9.13 : கொள்னைக் கூட்டத் தலைவன் ஒரு மனித மிருகத்தைப் பலி கொடுப்பதற்காகப் பிடித்து வைத்திருந்தான். ஆனால் அம்மனித மிருகம் தப்பி ஓடிவிட்டது. மனித மிருகத்தைத் தேடுமாறு தனது பணியாட்களுக்கு அவன் கட்டளையிட்டான். அவர்கள் நாலா திசைகளில் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் இருள் மூடிய நடு இரவில் தேடிக்கொண்டே ஒரு வயல் வெளியை அடைந்தனர். அங்கே மான், காட்டுப்பன்றி வராமல் பயிர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு மேடான இடத்தில் அமர்ந்திருந்த அங்கிராவின் குடும்பத்தைச் சேர்ந்த தவப்புதல்வனை (மானுட பரதர்) அவர்கள் கண்டனர்.

பதம் 5.9.14 : கொள்ளையர்கள் மானுட பரதரிடம் மனித மிருகத்திற்கான அனைத்து குணங்களும் இருப்பதாகக் கருதினர். எனவே பலி கொடுப்பதற்கு இவரே சரியான தகுதியுடையவர் என்று அவர்கள் தீர்மானித்தனர். அவர்கள் முகம் மகிழ்ச்சியினால் மலர்ந்தது. அவரை ஒரு கயிற்றினால் கட்டி காளிதேவியின் கோயிலுக்குச் கொணர்ந்தனர்.

பதம் 5.9.15 : இதன்பிறகு திருடர்கள் அனைவரும் மனித மிருகத்தைப் பலியிடுவதற்கானத் தமது கற்பனைச் சடங்கிற்கேற்ப மானுட பரதரை நீராட்டி, புத்தாடை அணிவித்து, மிருகத்திற்குப் பொருத்தமான அணிகலன்களை அணியச் செய்து அவர் உடலெங்கும் நறுமணத் தைலம் பூசி, சந்தனம் பூசி, திலகமிட்டு, மாலை போட்டு அலங்காரம் செய்தனர். பின்னர் அவரை நன்கு உண்ணச் செய்து காளிதேவியின் முன்பு கொணர்ந்தனர். காளிதேவிக்கும் தூப தீபம் காட்டி மாலை சாற்றி, தளிர்கள், மிலார்கள், பழங்கள் பூக்களைப் படைத்தனர். பலியிடுவதற்கு முன்பு காளிதேவியை வழிபட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் பாடி, வழிபட்டு, மிருதங்கம், கொம்புகள் போன்ற இசைக் கருவிகளை இசைத்தனர். மானுட பரதரை அச்சிலையின் முன்பு அமரச் செய்தனர்.

பதம் 5.9.16 : அச்சமயம், அக்கொள்ளையர்களுள் ஒருவனான தலைமைப் பூசாரி மனித மிருகமாகத் தாங்கள் கருதும் மானுடப் பரதரின் இரத்தத்தினை மதுவாக காளிதேவிக்கு அளிப்பதற்குத் தயாரானான். அதனால் அவன் அச்சம் தரும், மிகக் கூர்மையான, பத்திரகாளியின் மந்திரத்தினால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு அரிவாளை எடுத்து மானுட பரதரை வெட்டுவதற்கு உயர்த்தினான்.

பதம் 5.9.17 : காளிதேவியை வழிபடுவதற்கு வந்த அனைத்துக் கயவர்களும், திருடர்களும் இழிகுணமுடையவர்கள் என்பதோடு இரஜோ மற்றும் தமோ குணத்தினால் பிணிக்கப்பட்டவர்களுமாவர். அவர்கள் செல்வந்தர்களாகும் ஆசையினால் பாதிக்கப்பட்டவர்கள். வேதக்கட்டளைகளுக்குப் பணியக் கூடாது என்னும் உறுதியோடு இருப்பவர்கள். எனவேதான் அந்தண குடும்பத்தில் பிறந்து தன்னுணர்வு பெற்ற ஜட பரதரையேக் கொல்வதற்குத் தயாராக அவர்கள் இருந்தனர். அவர்களது துஷ்டத்தனத்தினாலேயே அவர்கள் மானுட பரதரைக் காளிதேவியின் முன்பு பலியிடுவதற்காகக் கொண்டு வந்தனர். இம்மனிதர்கள் எப்போதும் தீய செயல்களிலேயே பற்றுடையவர்களாவர். எனவேதான் அவர்கள் மானுட பரதனையே கொல்வதற்கு முயற்சித்தனர். பரதர் உயிர்கள் அனைவரின் மிகச் சிறந்த நண்பராவார். அவருக்கு எதிரி என யாருமிலர். அவர் எப்போதும் முழுமுதற் கடவுளைப் பற்றியே சிந்திப்பார். அவர் ஒரு நல்ல அந்தணரின் மகனாகப் பிறந்ததினால் அவர் பகைவராக இருந்தாலும் மோசமானவராக இருந்தபோதிலும் கூட அவரைக் கொல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. மானுட பரதரைக் கொல்வதற்கு எந்தக் காரணமுமில்லை. அதனால் காளிதேவியினால் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இத்தீயக் கொள்ளையர்கள் பகவானின் மிகச் சிறந்த பக்தனைக் கொல்லப் போகின்றனர் என்பதைக் காளியால் புரிந்துகொள்ள முடிந்தது, திடீரென்று காளிதேவியின் சிலை இரண்டாகப் பிளந்தது. அதனுள்ளிருந்து தாங்க முடியாத கண்ணைக் கூசச் செய்யும் ஒளியுடன் காளிதேவி வெளிப்பட்டாள்.

பதம் 5.9.18 : செய்த குற்றங்களைத் தாங்கமுடியாது சீற்றங்கொண்ட காளிதேவி தனது ஒளிமிக்க கண்களையும், வளைந்த கூர்மையான பற்களையும் வெளிப்படுத்தினாள். அவளது சிவந்த விழிகள் தீப்பந்தம் போல் எரிந்தன. தனது அச்சந்தரும் வடிவத்தோடு இப்பிரபஞ்சத்தையே அழித்துவிடுவதற்கு ஏற்ற உடலோடு அவள் தோன்றினாள். பீடத்திலிருந்து ஆவேசமாகப் பாய்ந்து, அவர்கள் மானுட பரதனைக் கொல்வதற்காக வைத்திருந்த அதே வெட்டரிவாளால் துஷ்டர்களையும், திருடர்களையும் கொன்று குவித்தாள். தலை துண்டிக்கப்பட்ட உடல்களிலிருந்து பொங்கி வரும் உதிரத்தை மதுவெனக் கருதி சூனியக்காரிகள் மற்றும் பெண் பேய்களான தனது உதவியாளர்களுடன் சேர்ந்தே பருகினாள். உதிரம் குடித்த வெறியில், இப்பிரபஞ்சத்தையே அழிப்பதற்குத் தயாராக இருப்பது போன்ற உரத்த குரலில் திருடர்களின் துண்டிக்கப்பட்ட தலைகளை பந்தைப் போல் உயரே தூக்கி எறிந்து விளையாடவும் தொடங்கினர்.

பதம் 5.9.19 : ஓர் உயர்ந்த மகானுக்கு எதிராக விரோத உணர்வுடைய ஒருவன் குற்றம் இழைக்கும்பொழுது மேலே குறிப்பிட்டுள்ளபடி எப்போதும் தண்டிக்கப்படுகிறான்.

பதம் 5.9.20 : சுகதேவ கோஸ்வாமி பின்னர் பரீட்சித்து மன்னரிடம் கூறினார் ஒ, விஷ்ணு தத்தனே, உடலிலிருந்து ஆத்மா வேறுபட்டது என்பதை முன்னமையே அறிந்தவர்களும், தங்கள் இதயத்தின் ஆழ்ந்த பிடிப்பிலிருந்து விடுதலை பெற்றவர்களும், எப்போதும் அனைத்து உயிர்களின் நலனில் ஈடுபடுபவர்களும் ஒருவருக்கும் சிறிதும் துன்பம் இழைக்காதவர்களும் இறைவனால் காக்கப்படுவர். அவரே தமது கரத்தில் சுதர்சனச் சக்கரம் ஏந்தி, துஷ்டர்களை அழித்துப் பக்தர்கனைக் காப்பதில் நெடுங்காலமாகச் செயல்படும் முழுமுதற் கடவுள் ஆவார். பக்தர்கள் எப்போதும் பகவானின் தாமரைத் திருவடிகளையே சரணடைகின்றனர். ஆகையினால் அவர்கள், தங்கள் தலை துண்டிக்கப்படப் போவதாக அச்சுறுத்தப்படினும், எல்லாக் காலங்களிலும் அமைதியுடனேயே இருக்கின்றனர். அவர்களுக்கு இவையெல்லாம் ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare