அத்தியாயம் – 8
பரத மகாராஜாவின் குண நலன் பற்றிய ஒரு விளக்கம்
பதம் 5.8.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார் அன்பார்ந்த மன்னனே, ஒரு நாள் மகாராஜா பரதன் மலஜலம் கழித்தல், நீராடுதல் போன்ற காலைக் கடன்களை முடித்து கண்டகீ நதியின் கரை மேல் சிறிது நேரம் அமர்ந்திருந்து பின்னர் ஒம்கார மந்திரத்துடன் தொடங்கும் தனது மந்திரத்தை ஒதத் தொடங்கினார்.

பதம் 5.8.2 : ஒ, மன்னனே: பரத மகாராஜா அந்நதிக் கரையில் அமர்ந்திருந்த பொழுது தாகத்தின் மிகுதியால் தவித்த ஒரு பெண்மான் நீர் அருந்துவதற்காக அங்கே வந்தது.

பதம் 5.8.3 : அப்பெண்மான் மிக்க திருப்தியுடன் நீர் அருந்திக் கொண்டிருந்த பொழுது அதன் அருகே ஒரு சிங்கத்தின் உறுமல் மிகப் பயங்கரமாகக் கேட்டது. உயிர்கள் அனைத்துக்கும் அச்சமூட்டுவதாக இருந்த அவ்வோசையினை அப்பெண்மான் கேட்டது.

பதம் 5.8.4 : இயற்கையிலேயே மான் பிறரால் கொல்லப்பட்டு விடுவோம் என்னும் அச்சம் உடையதாகும். அதனால் எதனையும் அது சந்தேகக் கண் கொண்டே பார்க்கும். சிங்கத்தின் உறுமலைக் கேட்டவுடன் அது நடு நடுங்கியது. அங்குமிங்கும் அச்சத்துடனும் அலைபாயும் கண்களுடன் பார்த்த அந்த மான், தனது தாகம் தணிவதற்குள்ளாகவே ஆற்றினுள் பாய்ந்தது.

பதம் 5.8.5 : அம்மான் சினைமான் ஆதலினால், அது அச்சங்கொண்டு தாவியவுடன் அதன் வயிற்றிலிருந்து மான் குட்டி வெளியே வந்து வேகமாகப் பாய்கின்ற ஆற்று நீரினுள் வீழ்ந்தது.

பதம் 5.8.6 : தனது கூட்டத்திலிருந்து பிரிந்து ஆற்றைக் கடக்கும்பொழுது தான் கருப்பையில் சுமந்திருந்த குட்டியும் பிறந்து ஆற்றில் விழுந்த காரணத்தினால் அக்கருநிற மான் மிகவும் வருந்தியது. உண்மையில் அது ஒர் மலைக் குகையினுள் வீழ்ந்து அதனால் மரணமடைந்தது.

பதம் 5.8.7 : கரையின் மீதமர்ந்து இருந்த பரத மகாராஜா தனது தாயைப் பிரிந்து ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மான் குட்டியைக் கண்டார். அதன் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டார். ஒர் உயிர் நண்பனைப் போல் அவர் அம்மான்குட்டியை நீரிலிருந்து வெளியே எடுத்தார். அதற்குத் தாய் இல்லை என்பதை அறிந்து அவர் அதனைத் தன் ஆஸ்ரமத்திற்குக் கொணர்ந்தார்.

பதம் 5.8.8 : பரத மன்னர் படிப்படியாக அம்மான் குட்டியின் மீது மிகுந்த பற்றுடையவரானார். புல் பூண்டு முதலியவற்றைப் போட்டு அதனை வளர்க்கத் தொடங்கினார். புலி போன்ற கொடிய விலங்குகளிடமிருந்து அதை கவனமுடன் பாதுகாத்தார். அது தன் மீது உரசும் பொழுது அதனைத் தட்டிக் கொடுப்பார். அதனை கண்ணுங் கருத்துமாக வளர்ப்பதில் கவனமுடன் முயற்சித்து வந்தார். அன்பின் மிகுதியால் அதனை அவர் முத்தமிடுவார். மானின் மீது கொண்ட பற்றுதல் காரணமாக பரத மகாராஜா ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகளை மறந்தார். படிப்படியாக அவர் முழுமுதற் கடவுளை வழிபடுவதையும் கூட மறந்தார். சிறிது நாட்களில் அவர் தனது ஆன்மீக வளர்ச்சிக்கான அனைத்தையுமே மறந்து போனார்.

பதம் 5.8.9 : மாமன்னர் பரத மகாராஜா பின்வருமாறு சிந்திக்கத் தொடங்கினார் அந்தோ, ஒருவர் துணையுமில்லாத இந்த இளமான் குட்டி முழுமுதற் கடவுளின் தூதனாகக் காலத்தின் வேகத்தினால் அதன் உற்றார் உறவினரை இழந்து இப்போது என்னிடம் தஞ்சம் புகுந்திருக்கின்றது. என்னைத் தவிர இதற்கு வேறு எவரையும் தெரியாது. நானே இதற்குத் தாயும், தந்தையும், சகோதரனும், நண்பனுமாக இருக்கிறேன். இவ்வாறே இந்த மான் நினைக்கின்றது ஆகையினால் இந்த மான் மீது இது எனது சுய நன்மையினை அழிக்கிறது என்று காழ்ப்புணர்ச்சி கொள்ளக் கூடாது. நானே இதனை வளர்த்து, புரந்து, ஆதரவளித்து மகிழ்வித்தல் வேண்டும். இது என்னை அடைக்கலம் புகும்பொழுது அதனை நான் எவ்வாறு மறுதலிக்க முடியும்? இம்மான் எனது ஆன்மீக வாழ்விற்கு இடையூறு விளைவித்தபோதிலும், தஞ்சமென்று வந்த ஒன்றைத் தள்ளிவிடக் கூடாது என்று நான் உணர்கிறேன். அது மிகப் பெரிய தவறாகும்.

பதம் 5.8.10 : முதிர்ந்த துறவற வாழ்க்கையில் ஒருவன் இருந்தாலும், வருந்துகின்ற உயிர்கள் மீது நிச்சயம் கருணை கொள்கிறான். தன்னிடம் அடைக்கலம் புகுந்தவரைக் காப்பதற்காக, அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பினும் ஒருவன் தனது சுய நன்மைகளைப் புறக்கணிக்கவே வேண்டும்.

பதம் 5.8.11 : மானின் மீது கொண்ட பாசத்தினால் பரத மன்னர் அதனோடு உண்டும், உறங்கியும், நீராடியும், நடந்தும் வந்தார். இவ்வாறு அவரது இதயம் மானின் மீது கொண்ட பாசத்தினால் கட்டப்பட்டது.

பதம் 5.8.12 : தர்பைப்புல், மலர்கள், சமித்துக்கள், இலைகள், கனிகள், கிழங்குகள், தண்ணீர் போன்றவற்றைச் சேகரிப்பதற்காகப் பரதர் காட்டிற்குள் போகும்பொழுது புலி, ஒநாய் போன்ற கொடிய மிருகங்களினால் மான்குட்டி கொல்லப்பட்டுவிடுமோ என்று அஞ்சினார். அதனால் அவர் எப்போது காட்டிற்குள் சென்றாலும் மான் குட்டியையும் தன்னுடன் அழைத்துச் செல்வார்.

பதம் 5.8.13 : காட்டினுள் சென்று கொண்டிருக்கும்பொழுது மானின் குழந்தைத் தனமான சேட்டைகள் பரத மன்னரை மிகவும் கவர்ந்தன. பரதர் அதன் மீது கொண்ட பாசத்தின் காரணமாக அதைத் தோள்கள் மீது கூடத் தூக்கிச் செல்வார். அவரது இதயம் பாசத்தினால் நிரம்பியிருந்தது. ஆகையினால் சில நேரம் அதனைத் தன் மடி மீது வைத்துக் கொள்வார். உறங்கும்போது அம்மானைத் தன் மார்பின் மீது போட்டுக் கொள்வார். இவ்வாறு அந்த மானைச் செல்லமாக வளர்ப்பதில் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

பதம் 5.8.14 : பரத மன்னர் உண்மையில் பகவானை வழிபட்டுக் கொண்டோ அல்லது சில சடங்குகளில் ஈடுபட்டுக்கொண்டோ இருக்கும்பொழுது அது முடிவதற்கு முன்பாகவே இடையிடையே எழுந்து அந்த மான்குட்டி எங்கே இருக்கிறது என்று பார்ப்பார். அது பாதுகாப்புடன் இருப்பதை அறிந்தால் உடனே மனமும் இதயமும் மகிழும். அவர் அந்த மானை “அன்பிற்குரிய மான்குட்டியே உனக்கு அனைத்து மங்கலங்களும் உண்டாகட்டும்” என்று வாழ்த்துவார்.

பதம் 5.8.15 : சில நேரம் மானைக் காணவில்லையெனில் பரதரின் மனம் மிகவும் கொந்தளித்துவிடும். ஒரு கஞ்சன் தனது செல்வத்தை இழந்தது போல் அவர் மனம் மிகுந்த வருத்தமெய்தும். மான் குட்டி எங்காவது சென்றுவிட்டால் அவர் கவலை கொண்டு அதன் பிறகு பிரிவை எண்ணித் கலங்குவார். மோக வயப்பட்டு அவர் பின்வருமாறு கூறுவார்.

பதம் 5.8.16 : மகாராஜா பரதன் இவ்வாறு நினைத்தார் அந்தோ, அந்த மான் இப்போது ஆதரவின்றி இருக்கிறது. நான் மிகுந்த தீவினையேன் என்று என் உள்ளம் எப்போதும் சூழ்ச்சிகளினாலும், கொடுமைகளினாலும் நிரம்பியிருக்கும் தந்திரமான வேடனைப் போன்று இருக்கின்றது. நன்னடத்தை மீது பற்றுள்ள ஒரு நல்லவன் மோசமான நடத்தையும் சூழ்ச்சியும் கொண்ட தன் நண்பனை மன்னித்து அவன் மீது நம்பிக்கை வைப்பது போல் இந்தமான் குட்டியும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தது. நான் நம்பிக்கையற்றவன் என்றாலும் அந்த மான் குட்டி மீண்டும் என்மீது நம்பிக்கை வைத்து இங்கு திரும்பி வருமா?

பதம் 5.8.17 : அந்தோ, புலிகள் போன்ற மிருகங்களினால் தாக்கப்படாமல் தேவர்களினால் காக்கப்பட்டு அந்த அழகியமான் உயிரோடு இருப்பதை நான் மீண்டும் காண முடியுமா? அது ஆஸ்ரமத்தின் நந்தவனத்தில் புற்களைத் தின்று கொண்டு திரிவதை மீண்டும் நான் காண்பேனா?

பதம் 5.8.18 : உண்மை என்னவென்று நான் அறியேன். ஆயினும் எனது மான் ஒரு ஓநாயினாலோ, அல்லது நாயினாலோ அல்லது கூட்டமாக அலையும் பன்றிகளினாலோ அல்லது தனியாகத் திரியும் புலியினாலோ நிச்சயம் கொன்று தின்னப்பட்டிருத்தல் வேண்டும்.

பதம் 5.8.19 : அந்தோ, சூரியன் உதிக்கும்பொழுது எல்லாவிதமான மங்கலங்களும் துவங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை எனக்காக ஆரம்பமாகவில்லை. சூரியதேவன் வேதங்களின் வடிவமானவர். ஆனால் நானோ வேதங்களின் விதிகளையெல்லாம் இழந்து நிற்கிறேன். சூரியன் மேல்வானில் மறையப் போகிறது. ஆனால் தனது தாய் இறந்ததிலிருந்து என்னை நம்பியிருந்த மான்குட்டி இன்னும் திரும்பி வரவில்லை.

பதம் 5.8.20 : மான் ஒரு ராஜ குமாரனைப் போன்றே இருந்தது. அது எப்போது திரும்பி வரும்? மீண்டும், மனதிற்கு இனிமையளிக்கக் கூடிய தனது செயல்களை எப்போது செய்து காட்டும்? என்னைப் போன்று துன்புற்றவருக்கு அது மீண்டும் அமைதி அளிக்குமா? உண்மையில் என்னிடம் புண்ணிய பலன்கள் ஏதுமில்லை, அவ்வாறு இருந்திருந்தால் மான் இதற்குள் திரும்பி வந்திருக்கும்.

பதம் 5.8.21 : அந்தோ, அச்சிறிய மான்குட்டி என்னோடு விளையாடும் பொழுதும், நான் கண்களை மூடி தியானத்திலிருப்பது போல் பாவனை செய்வதைக் கண்டதென்றாலும், அன்பின் உணர்ச்சிப் பெருக்கால், என்னைச் சுற்றி வந்து மிகுந்த அச்சத்துடன் தனது கொம்புகளின் நுனியினால் எனது உடலைத் தொடும். அது எனக்குக் குளிர்ந்த நீர்த்துளிகளைப் போன்று இருக்கும்.

பதம் 5.8.22 : நான் தர்ப்பைப் புல்லின் மீது வேள்விக்கான பொருட்களை வைத்திருக்கும்பொழுது விளையாடிக்கொண்டிருக்கும் மான் தனது பற்களினால் தர்ப்பைப் புல்லைத் தொட்டு அசுத்தப்படுத்தும். அப்போது அதை நாம் மிரட்டித் தள்ளினேன் என்றால் அது மிகுந்த அச்சத்துடன் ஒர் ரிஷிகுமாரனைப் போல் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்திருக்கும். இவ்வாறு அது தனது விளையாட்டினை சற்றே நிறுத்தும்.

பதம் 5.8.23 : இவ்வாறு புத்தி சுவாதீனமற்றவரைப் போல் தனக்குள் பேசிக் கொண்ட பரத மன்னர் எழுந்து வெளியே சென்றார். மானின் குளம்படித் தடத்தினைப் பூமியில் கண்டவுடன் அன்பு மிகுதியினால் அவற்றை அவர் புகழ்ந்து கூறினார் ஒ, வருத்தத்துக்குரிய பரதனே, இப்பூமி செய்த தவம் மற்றும் விரதத்துடன் ஒப்பிடும்பொழுது நீ செய்த தவங்களும் விரதங்களும் ஒன்றுமில்லாதவையாகும். இப்பூமி செய்த தவத்தினால் இம்மானின், அழகிய, மெல்லிய, மங்களகரமான குளம்படித்தடங்கள் இதன் மீது பதிந்திருக்கின்றன. இக்காலடித் தடங்கள் மானை இழந்து தவிக்கும் என்போன்ற ஒருவனுக்கு அத்தகைய மான் காட்டினுள் எவ்வாறு சென்றது என்பதையும் எவ்வாறு நான் இழந்த செல்வத்தை மீண்டும் பெறக் கூடும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன. காலடித் தடங்களினாலேயே சொர்க்கத்திற்குச் செல்வது அல்லது தேவர்களுக்குச் செய்யும் வேள்வியினால் விடுதலை பெறுவது என்று விரும்பும் அந்தணர்களுக்கு இந்த பூமி பொருத்தமான இடமாக இருக்கின்றது.

பதம் 5.8.24 : பரதமகாராஜா புத்தி சுவாதீனமற்ற மனிதனைப் போல் தொடர்ந்து பேசினார். தலைக்கு மேல் வானில் நிலவிலே தோன்றிய இருள் தடங்கள் அவருக்கு ஒரு மானைப் போல் காட்சி தந்தன. எனவே அவர் கூறினார் மகிழ்ச்சியற்ற மனிதன் மேல் மிகுந்த அன்புடைய சந்திரனாகிய இவன், தாயை இழந்த இந்த மான் ஆஸ்ரமத்திலிருந்து தனியே வந்துவிட்டதை அறிந்து அதன் மீதும் அன்பு வைத்திருப்பானோ? சிங்கத்தின் பயங்கரமானத் தாக்குதலிலிருந்து காப்பதற்காக இச்சந்திரன் அந்த மானுக்குத் தனது அருகிலேயே அடைக்கலம் கொடுத்திருக்கிறான் போலும்.

பதம் 5.8.25 : நிலவொளியினைக் கண்ட பின்னர் பரத மன்னர் தொடர்ந்து ஓர் உன்மத்தம் பிடித்தவனைப் போல் பேசினார் மான் குட்டி என்னிடம் மிகுந்த இணக்கமாகவும் எனக்கு மிகவும் பிரியமானதாகவும் இருந்தது. அதன் பிரிவு எனது மைந்தனை யான் பிரிந்தது போலிருக்கின்றது. தகிக்கும் அப்பிரிவுத் தீ உண்மையில் காட்டுத் தீ போல் என்னைச் சுடுகின்றது. மல்லிகை மலர் போன்ற மென்மையான எனது மனம் இப்போது எரிகின்றது. எனது துன்பத்தைக் கண்ட சந்திரன் எப்படி கடுமையான காய்ச்சலில் வருந்தும் தன் நண்பன் மீது ஒருவன் குளிர்ந்த நீரைத் தெளிப்பானோ அது போல் தனது குளிர்ந்த அமிர்தம் போன்ற கதிர்களை என்மீது தெளிக்கின்றான் சந்திரன். இவ்வாறு எனக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது.

பதம் 5.8.26 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் அன்பார்ந்த மன்னனே, பரத மன்னர் மானின் வடிவத்தில் வெளிப்பட்ட அடக்க முடியாத ஆசைக்குப் பலியானார். அவரது முன்னையப் பலன்தரும் செயலின் விளைவினால் அவர் யோக ஸித்தி, தவம், முழுமுதற் கடவுளை வழிபடுதல் போன்றவற்றிலிருந்து தவறி விட்டார். இது அவரது முன்னைய பலன் தரும் செயலின் விளைவினால் ஏற்படவில்லையெனில் அவர் தனது மனைவி, மக்கள், குடும்பம் போன்றவை தனது ஆன்மீக வாழ்வுப் பாதையில் தடையாக இருக்கும் என்று கருதி எவ்வாறு அவற்றின் தொடர்பினைக் கைவிட முடிந்தது? ஒரு மானின் மீது அளவிறந்த பாசத்தினை எவ்வாறு அவரால் காட்ட முடிந்தது? ஆகையினால் இது நிச்சயம் அவரது முன்னைய கர்மவினையின் பயனேயாகும். மன்னர் தனது ஆன்மீகச் செயல்களிலிருந்து நிலை தடுமாறுகின்ற அளவிற்கு அவர் அந்த மானைச் செல்லமாக வளர்ப்பதில் தன்னை மறந்து ஆளாகியிருந்தார். உரிய காலத்தில், எலிவளையில் புகுந்து கொண்டு எலியின் வரவிற்காகக் காத்திருக்கும் நச்சுப் பாம்பு போலும் மரணம் அவர் முன் வீற்றிருந்தது.

பதம் 5.8.27 : அவர் மரணம் அடையும்பொழுது தனது மகனைப் போலவே தன் அருகில் இருந்து தன் மரணத்திற்காக மான் அழுது புலம்புவதை அவர் கண்டார். உண்மையில் அவர் மனம் மானின் உடலின் மீதே ஆழ்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ண உணர்வினை இழந்தவர்களைப் போன்று அவர் இந்த உலகம், மான், மற்றும் தனது பெளதீக உடல் எல்லாவற்றையும் துறந்து மானின் உடலைப் பெற்றார். அதிலும் கூட ஓர் நன்மை இருந்தது. அவர் மனித உடலைத் துறந்து மானின் உடலைப் பெற்ற போதிலும் அவர் தனது முற்பிறப்பில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் எதையும் மறக்கவில்லை.

பதம் 5.8.28 : மானின் உடலில் இருந்தபோதிலும் பரத மன்னர் தனது முந்தைய வாழ்வின் வலிமைமிக்கப் பக்தியினால் இப்பிறப்பில் தான் பெற்றிருக்கும் உடலைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. தனது முற்பிறப்பு மற்றும் இப்பிறப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தனது செயல்களுக்காக அவர் மிகவும் மனம் வருந்தி பின்வருமாறு கூறினார்.

பதம் 5.8.29 : மானின் உடலிலிருந்து பரத மகாராஜா தனக்குள் புலம்பத் தொடங்கினார். என்ன தீவினை தன்னுணர்வுப் பாதையினின்றும் நான் தவறி விட்டேன். ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி பெறுவதற்காக எனது மனைவி, மக்கள், குடும்பம் எல்லாவற்றையும் துறந்து காட்டிலுள்ள ஒரு தனிமையான புனித இடத்தில் தஞ்சம் புகுந்தேன். தன்னடக்கமும் தன்னுணர்வும் பெற்றவனானேன். மேலும் நான் முழுமுதற் கடவுளான வாசுதேவரைப் பற்றிக் கேட்டல், நினைத்தல், ஓதுதல், வழிபடுதல் போன்ற பக்தித் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தேன். பக்தித் தொண்டில் எனது மனம் நிலை பெற்ற வரை எனது முயற்சியில் நான் வெற்றியும் பெற்றேன். ஆயினும் எனது மூடத்தனத்தினால் எனது மனம் இச்சமயம் ஒரு மானின் மீது பற்று வைத்துவிட்டது. நான் இப்போது ஒரு மானின் உடலைப் பெற்று எனது பக்திப் பயிற்சிகளிலிருந்து வெகுதொலைவில் வீழ்ந்துவிட்டேன்.

பதம் 5.8.30 : பரத மன்னர் ஒரு மானின் உடலைப் பெற்றிருந்தபோதிலும் தொடர்ந்து வருந்தியதன் காரணமாக உலக விஷயங்கள் எல்லாவற்றின் மீதும் முற்றிலும் பற்றறுத்தவரானார். அவர் இவ்வுண்மைகளை எவரிடத்தும் உரைக்கவில்லை. ஆயினும் தான் பிறந்த இடமான காலஞ்ஜர மலைப் பகுதியில் தன் தாய் மானை விட்டு விட்டு அவர் பிரிந்து வந்தார். அவர் மீண்டும் சாளக்கிராம வனத்திலுள்ள புலஸ்தியர் மற்றும் புலஹரின் ஆஸ்ரமத்திற்குத் திரும்பி வந்தார்.

பதம் 5.8.31 : பரத மன்னர் மீண்டும் ஒரு மோசமான உறவிற்குப் பலியாகிவிடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் வாழ்ந்து வந்தார். தனது கடந்த காலத்தைப் பற்றி யாரிடமும் கூறாது காய்ந்த இலை தழைகளைத் தின்று அவர் அந்த ஆஸ்ரமத்தில் வசித்து வந்தார். அவர் ஒன்றும் அங்கே தனியே இல்லை. அவர் பரமாத்மாவின் துணையைப் பெற்றிருந்தார். இவ்வாறாக இவர் மானின் உடலில் தனது மரணத்திற்காகக் காத்திருந்தார். அப்புனித இடத்தில் நீராடி இறுதியில் அவர் அந்த உடலைத் துறந்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare