அத்தியாயம் – 2
மகாராஜா ஆக்னீதரனின் செயல்கள்
பதம் 5.2.1
ஸ்ரீ-ஷூக உவாச
ஏவம் பிதரி ஸம்ப்ரவ்ருத்தே தத்-அனுஷாஸனே வர்தமான
ஆக்னீத்ரோ ஜம்பூத்வீத்வீபௌகஸ: ப்ரஜா ஔரஸவத் தர்மாவேக்ஷமாண:
பர்யகோபாயத்

ஸ்ரீ-ஷூக:—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி; உவாச—கூறினார்; ஏவம்—இவ்வாறு; பிதரி—அவர் தந்தை; ஸம்ப்ரவ்ருத்தே—விடுதலைக்கான பாதையினை மேற்கொண்டபொழுது; தத்-அனுஷாஸனே—அவரது கட்டளைக்கிணங்க; வர்தமான:—இருந்த; ஆக்னீதர:—ஆக்னீதான்; ஜம்பூ-த்வீப- ஓகஸ:—ஜம்பூத்வீபத்தைச் சேர்ந்தவர்கள்; ப்ரஜா:—குடிமக்கள்; ஔரஸ-வத்—தனது குழந்தைகளைப் போல; தர்ம—தர்மங்கள்; அவேக்ஷமாண:—கடுமையாகப் பின்பற்றி; பர்யகோபாயத்—முற்றிலும் பாதுகாத்தனர்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மன்னர் ஆக்னீதரனின் தந்தையான பிரியவிரதன் தவங்களை மேற்கொள்வதன் மூலம் ஆன்மீக வாழ்க்கைப் பாதையில் பயணம் செல்லப் புறப்பட்டுச் சென்ற பின்னர் மன்னர் ஆக்னீதரன் தன் தந்தையின் கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். சமய தர்மங்களைக் கடுமையாகப் பின்பற்றி ஜம்பூத்வீபத்திலுள்ள தனது குடிமக்கள் அனைவரையும் தான் பெற்றெடுத்தக் குழந்தைகளைப் போல் பாதுகாத்தார்.

பதம் 5.2.2
ஸ ச கதாசித் பித்ருலோக காம ஸூர-வர-வனிதாக்ரீடா-சல-
த்ரோண்யாம் பகவந்தம் விஷ்வ-ஸ்ருஜாம் பதிம் ஆப்ருத-பரிசர்யோ
பகரண ஆத்மைகாக்ருயேண தபஸ்வி ஆராதயாம் பபூவ

ஸ—அவர் (மன்னர் ஆக்னீதரன்); ச—மேலும்; கதாசித்—முன்னொரு காலத்தில்; பித்ருலோக—பித்ருலோகம்; காம:—விரும்பி; ஸூர-வர—சிறந்த தேவர்களின்; வனிதா—பெண்; ஆக்ரீடா—விளையாடுமிடம்; அசல-த்ரோண்யாம்—மந்தார மலையின் அடிப்பகுதியில்; பகவந்தம்—சக்தி மிக்கவருக்கு (பிரம்மதேவன்); விஷ்வ-ஸ்ருஜாம்—இப்பிரபஞ்சத்தைப் படைத்த மகான்கள்; பதிம்—தலைவர்; ஆப்ருத—சேகரிப்பதற்காக; பரிசர்யா-உபகரண:—பூஜைப் பொருட்கள்; ஆத்ம—மனதின்; ஏக-அக்ருயேண—முழு கவனத்துடன்; தபஸ்வீ—தவம் செய்பவர்; ஆராதயாம்- பபூவ—வழிபடுவதில் ஈடுபட்டார்.

ஒரு நன்மகனைப் பெற்று அதன் மூலம் பித்ருலோக வாசியாக விரும்பி ஆக்னீதர மன்னன் ஒருமுறை உலகப் படைப்பின் தலைவரான பிரம்மதேவனை வழிபட்டார். அவர் தேவமங்கையர் வந்து விளையாடும் மந்தார மலையின் அடிப்பகுதிக்குச் சென்றார். அங்கே இருந்த நந்தவனத்திலிருந்து மலர்களையும், பூஜைக்கான பொருட்களையும் சேகரித்துக் கொண்டு அவர் கடுமையான தவ வழிபாட்டில் ஈடுபட்டார்.

பதம் 5.2.3
தத் உபலப்ய பகவான் ஆதி-புருஷ: ஸதஸி காயந்தீம் பூர்வ-சித்திம்
நாமோப்ஸரஸம் அபியாபயாம் ஆஸ

தத்—அது; உபலப்ய—புரிந்துகொண்டு; பகவான்—சக்திமிக்க; ஆதி-புருஷ:—பிரபஞ்சத்தில் முதலில் படைக்கப்பட்டவர்; ஸதஸி—அவரது அவைக்களத்தில்; காயந்தீம்—நடனமானது; பூர்வ-சித்திம்—பூர்வசித்தி; நாம—பெயருடைய; அப்ஸரஸம்—தேவலோக அழகு மங்கை; அபியாபயாம்-ஆஸ—அனுப்பி வைத்தார்.

ஆக்னீதர மன்னனின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட பிரம்மதேவன் தனது அவைக்களத்தில் நடனமாடும் அழகு மங்கையருள் மிகச்சிறந்த பூர்வசித்தி என்பவனை மன்னரிடம் அனுப்பி வைத்தார்.

பதம் 5.2.4
ஸா ச தத் – அஷ்ரமோபவனம் ஆதி-ரமணீயம் விவித-நிபிட-விடபி-
விடபனிகர-ஸம்ஷ்விஷ்ட-வதாரூட-ஸ்தல-விஹங்கம-மிதுனை
ப்ரோச்யமான -ஹ்ருதிபி: ப்ரதிபோத்யமான-ஸவில குக்குட காரண்டல
கலஹம்ஸாதிபிர் விசித்ரம் உபகூஜிதாமல-ஜலாஷய கமலாகரம்
உபப்ராம

ஸா—அவள் (பூர்வசித்தி); ச—மேலும்; தத்—மகாராஜா ஆக்னீதரனின்; ஆஷ்ரம—ஆஷ்ரமத்தின்; உபவனம்—நந்தவனத்தில்; அதி—மிகுந்த; ரமணீயம்—அழகான; விவித—பல்வண்ண; நிபிட—அடர்ந்த; விடபி—மரங்கள்; விடப—கிளைகளும், மிலார்களும்; நிகர—கூட்டங் கூட்டமாக; ஸம்ஷ்விஷ்ட—இணைந்த; புரட— பொண்மயமான; லதா—கொடிகளுடன்; ஆரூட—மேலே செல்லும்; ஸ்தல-விஹங்கம—நிலப்பறவைகள்; மிதுனை:—இணைகளுடன்; ப்ரோச்யமான—ஒலிக்கும்; ஷ்ருதிபி:—இனிமையான ஒலி; ப்ரதிபோத்யமான—பதிலளிக்கும் வண்ணம்; ஸலில-குக்குட—நீர்க்கோழி; காரண்டல—வாத்துக்கள்; கலஹம்ஸ—பல்வேறு வகையான அன்னங்கள்; ஆதிபி:—போன்றவை; விசித்ரம்—விதவிதமாக; உபகூஜித—ஒலியெழுப்பிக் கொண்டு; அமல—தெளிவான; ஜல-ஆஷய—குளத்தில்; கமல-ஆகரம்—தாமரை மலர்களின் இருப்பிடம்; உபப்ராம—நடக்கத் தொடங்கினாள்.

பிரம்மதேவனால் அனுப்பி வைக்கப்பட்ட அழகு மங்கை மன்னர் தவம் செய்து கொண்டிருந்த இடத்தின் அருகேயுள்ள நந்தவனத்தில் அன்னநடை பயின்று கொண்டிருந்தாள். அந்த நந்தவனம் எழில் மிக்கது. அங்கே அடர்த்தியான மரங்களும் பொன்மயமான கொடிகளும் எங்கும் நிறைந்திருந்தன. அங்கே மயில்கள் போன்ற பறவைகள் இணையோடு சேர்ந்து திரிந்தன. குளத்தில் அன்னங்களும், வாத்துக்களும் அழகாக நீந்திக் கொண்டிருந்தன. இவையெல்லாம் தங்கள் குரல் ஒலியால் இனிய இசை எழுப்பிக் கொண்டிருந்தன. இவ்வாறு அந்த நந்தவனம் மரங்கள், தெளிந்த நீருடைய குளம், தாமரை மலர்கள், மற்றும் இனிய ஓசை எழுப்பும் பல்வேறு வகையான வண்ணப் பறவைகளினால் கண்ணைக் கவரும் வண்ணம் எழில் மிக்கதாக இருந்தது.

பதம் 5.2.5
தஸ்யா: ஸூலலித-கமன-பத- வின்யாஸ-கதி-விலாஸாயாஷ்-
சானுபதம் கண-கணாயமான- ருசிர-சரணாபரண-ஸ்வனம் உபாகர்ண்ய
நரதேவ- குமார: ஸமாதி-யோகேனா மீலித-நயன-நளின-முகுலயுலகம்
ஈஷத் விகசய்ய வ்யசஷ்ட

தஸ்யா:—அவளது (பூர்வசித்தி); ஸூலலித—மிக அழகிய; கமன—அசைவுகள்; பத-வின்யாஸ—நடக்கும் சாயல்; கதி—முன்னேறும் பொழுது; விலாஸாயா:—அவள் விளையாட்டு; ச—மேலும்; அனுபதம்—ஒவ்வோர் அடியிலும்; கண-கணாயமான—மணியோசை எழுப்பியது; ருசிர—மிக இனிமையான; சரண-ஆபரண—காற்சதங்கைகள்; ஸ்வனம்—ஒலி; உபாகர்ண்ய—கேட்டு; நரதேவ-குமார:—இளவரசர்; ஸமாதி—சமாதிநிலையில்; யோகேன—புலன்களைக் கட்டுப்படுத்தியதினால்; ஆமீலித—அரைக்கண் பார்வையில்; நயன—விழிகள்; நளின—தாமரையின்; முகுல—மொட்டுக்கள்; யுகலம்—இரண்டு போல்; ஈஷத்—மெதுவாக; விகச்சய—திறந்து; வ்யசஷ்ட—கண்டார்.

மிக்க மகிழ்வோடு பூர்வசித்தி ஒயிலாக நந்தவனப் பாதையில் நடந்து சென்ற பொழுது அவளது காற்சலங்கைகள் மிக இனிமையான ஒலி எழுப்பின. இளவரசர் தனது புலன்களை அடக்குவதற்காக அரைவிழி திறந்து யோகத்தில் அமர்ந்திருந்த போதிலும், அவர் தனது தாமரை மொட்டுக்களைப் போன்ற விழிகளினால் அவளைக் காண முடிந்தது. மேலும் அவள் நடந்துவரும் பொழுது சலங்கைகள் எழுப்பிய இனிய ஓசையினைக் கேட்ட இளவரசர் தன் கண்களைத் திறந்து பார்த்தபொழுது அவள் அவர் அருகே நின்று கொண்டிருந்தாள்.

பதம் 5.2.6
தாம் ஏவாவிதூரே மதுகரீம் இவ ஸூமநஸ உபஜிக்ரந்தீம்
த்விஜ-மனுஜம்னோ-நயனாஹ்லாத-துகைர்கதி-விஹார-வ்ரீடா-
விநயாவ லோகஸூஸ்வராக்ஷராலயனவர் மஸஸி ந்ருணாம் குஸூமா
யுதஸ்ய விதததீம் விவரம் நிஜ-முக-விகலிதாம்ருதாஸவ-ஸஹாஸ-
பாஷணா மோதமதாடந்த-மதுகர-நிகராபரோதேன த்ருத-பத-வின்யா
ஸேன வல்குஸ்பந்தன-ஸ்தன-கலஷ-கபர-பார-ரஷனாம் தேவீம் தத்
அவலோகேன விவ்ருதாவஸரஸ்ய பகவதோ மகர-த்வஜஸ்ய வஷம்
உபனீதோ ஜடவத் இதி ஹோவாச

தாம்—அவளுக்கு; ஏவ—உண்மையில்; அவிதூர—அருகில்; மதுகரீம் இவ—தும்பியினைப் போல்; ஸூமநஸ:—எழில்மிக்க மலர்கள்; உபஜிக்ரந்தீம்—நறுமணம்; த்வி-ஜ—தேவலோகத்தில் பிறந்தவர்கள்; மனு-ஜ—மனிதகுலத்தில் பிறந்தவர்கள்; மன:—மனம்; நயன—கண்கள்; ஆஹ்லாத—இன்பம்; துகை:—செய்தன; கதி—அவளுடைய அசைவு; விஹார—விளையாட்டினால்; வ்ரீடா—நாணத்தினால்; விநய—பணிவு; அவலோக—பார்வையினால்; ஸூ-ஸ்வர-அக்ஷர—அவளது இனிமையான குரலினால்; அவயவை:—அவயவங்களினால்; மனஸி—மனதில்; ந்ருணாம்—மனிதர்களின்; குசும-ஆயுதஸ்ய—கையில் கரும்பு வில்லும் மலரம்பும் வைத்திருக்கும் மன்மதன்; விதததீம்—செய்தல்; விவரம்—செவியினால் கேட்டு; நிஜ முக—அவள் வாயிலிருந்து; விகலித—வெளிவரும்; அம்ருத-ஆஸவ—தேனைப் போன்ற சுவை; ஸ-ஹாஸ—அவள் புன்னகையில்; பாஷண—பேச்சும்; ஆமோத—மகிழ்ச்சியினால்; மத-அந்த—மதுபோதையினால் குருடான; மதுகர—தும்பிகளின்; நிகர—கூட்டங்கள்; உபரோதேன—சூழப்பட்டிருக்கும் காரணத்தினால்; த்ருத—பரபரப்புடன்; பத—பாதங்களின்; வின்யாஸேன—ஒயிலான நடையினால்; வல்கு—ஒரு சிறிய; ஸ்பந்தன—செல்வது; ஸ்தன—மார்பகங்கள்; கலஷ—கலசங்கள் போன்று; கபர—குழலின் வளைவுகள்; பார—பாரம்; ரஷனாம்—ஒட்டியாணாம்; தேவீம்—தேவதை; தத்-அவலோகனேன—அவளைப் பார்த்த மாத்திரத்தில்; விவ்ருத-அவஸ ரஸ்ய—கிடைத்த சந்தர்ப்பத்தின்; பகவத:—மிகவும் ஆற்றல் வாய்ந்த; மகர-த்வஜஸ்ய—மன்மதனின்; வஷம்—வசத்தின் கீழ்; உபனீத:—கொண்டுவரப்பட்டு; ஜட-வத்—அதிர்ச்சியடைந்தாற் போன்று; இதி—இவ்வாறு; ஹ—உறுதியாக; உவாச—அவர் கூறினார்.

தேன் உண்ணும் வண்டினைப் போல் அந்த அப்சரஸ் மங்கை அழகிய கவர்ச்சிமிகு மலர்களை முகர்ந்தாள். அவள் தனது அடக்கத்தினாலும், பார்வையினாலும், அங்க அசைவுகளினாலும், நாணத்தினாலும், அவள் வாய் திறந்து பேசும்போது வரும் இனிய வார்த்தைகளின் ஒலியினாலும் தேவர்கள் மற்றும் மனிதர்களின் மனங்களையும், விழிகளையும் கொள்ளையடிப்பவளாக இருந்தாள். இக்குணங்களினால், அவன் தனது கையில் மலரம்பு வைத்திருக்கும் மன்மத உணர்வினை ஆண்களில் உள்ளத்தில் கிளர்ந்து எழ வைத்தாள். அவள் வாய் திறந்த பொழுது வார்த்தைகள் அமுதமெனப் பிரவகித்தன. அவள் மூச்சு விட்டபொழுது அம்மூச்சின் நறுமணத்தில் மயங்கிய தும்பிகள் அவள் செந்தாமரை விழிகளின் மேல் பறக்க முயன்றன. தும்பிகளினால் துன்புறுத்தப்பட்ட அவள் அங்கிருந்து விரைந்து செல்வதற்காகத் தன் கால்களை தூக்கி முன்னே வைத்தாள். அப்போது அவள் இடையில் அணிந்திருந்த மேகலையும், பொற்கலசங்கள் போன்றிருந்த மார்பகங்களும் அசைந்து அவளது அழகையும், கவர்ச்சியையும் மேலும் அதிகரித்தன. உண்மையில் அவள் சக்தி மிக்க மன்மதனுக்குப் பாதையினைத் திறந்து வைப்பவள் போன்றே தோன்றினாள். அவள் எழில் கோலத்தைக் கண்டு தன்னை முற்றிலும் இழந்த இளவரசர் அவளிடம் பின்வருமாறு கூறினார்.

பதம் 5.2.7
கா த்வம் சிகீர்ஷஸி ச கிம் முனி-வர்ய ஷைலே
மாயாஸி காபி பகவத்-பர-தேவதாயா:
விஜ்யே பிபர்ஷி தனுஷீ ஸூஹ்ருத் ஆத்மனோ ‘ர்தே
கிம் வா ம்ருகான் ம்ருகயஸே விபினே ப்ரமத்தான்

கா—யார்; த்வம்—நீ; சிகீர்ஷஸி—நீ செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பது; ச—மேலும்; கிம்—என்ன; முனிவர்ய—முனிவர்களில் சிறந்தவளே; ஷைலே—இம்மலையில்; மாயா—மாயாசக்தி; அஸி—நீ; காபி—சில; பகவத்—முழுமுதற் கடவுள்; பர-தேவதாயா:—உன்னத பகவானின்; விஜ்யே—நாண் இன்றி; பிபர்ஸி—நீ வைத்துக் கொண்டிருப்பது; தனுஷீ—இரண்டு விற்கள்; ஸுஹ்ருத்—நண்பனின்; ஆத்மன:—உனது; அர்தே—பொருட்டு; கிம் வா—அல்லது; ம்ருகான்—காட்டு மிருகங்கள்; ம்ருகயஸே—வேட்டையாட முயற்சிக்கின்றாயா; விபினே—இந்த வனத்தில்; ப்ரமத்தான்—பௌதீக வெறிபிடித்தவர்கள்.

அழகிய மங்கையைத் தவறாகப் புரிந்து கொண்டு இளவரசர் கூறினார்: ஒ, முனிவர்களிற் சிறந்தோரே யார் நீவீர்? இம்மலைக்கு வந்த காரணம் என்ன? என்ன செய்ய விரும்புகின்றீர்? நீர் முழுமுதற் கடவுளின் மாயா சக்திகளுள் ஒருவரா? நாண் இல்லாத வில் இரண்டு நீர் வைத்திருக்கின்றீர். இவ்விரண்டை வைத்திருப்பதின் காரணம் என்ன? இது உமது நன்மைக்காகவா அல்லது உமது நண்பனின் நன்மைக்காகவா? ஒருக்கால் இக்காட்டிலுள்ள வெறிபிடித்த மிருகங்களைக் கொல்வதற்காக நீர் வைத்திருக்கின்றீர் போலும்.

பதம் 5.2.8
பாணவ் இமௌ பகவத: ஷத-பத்ர-பத்ரௌ
ஷாந்தாவ் அபுங்க-ருசிராவ் ஆதி-திக்ம-தந்தௌ
கஸ்மை யுயுங்க்ஷஸி வனே விசரன் ந வித்ம
க்ஷேமாய நோ ஜட-தியாம் தவ விக்ரமோ ‘ஸ்து

பாணௌ—இரு அம்புகள்; இமெள—இவை; பகவத:—மிகச் சக்திவாய்ந்த உனது; ஷத-பத்ர-பத்ரௌ—தாமரை மலரின் இதழ்கள் போன்ற மென்மையான தூவிகள்; ஷாந்தௌ—அமைதி மிக்க; அபுங்க—அம்பின் தண்டு இன்றி; ருசிரௌ—மிக அழகிய; அதி-திக்ம-தந்தௌ—மிகக் கூரிய நுனியுடன்; கஸ்மை—யாரை; யுயுங்க்ஷஸி—நீ துளைக்க விரும்புவது; வனே—வனத்தில்; விசரன்—அலைந்து கொண்டிருப்பது; நவித்ம:—எம்மால் புரிந்து கொள்ள முடியாது; க்ஷேமாய—நலனுக்காக; ந:—எமது; ஜட-தியாம்—மந்த மதியுடையோர்க்கு; தவ—உமது; விக்ரம—வீரம்; அஸ்து—இருக்கலாம்.

பின்னர் ஆக்னீதரன் பூர்வசித்தியின் விழிகளைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் கூறினார்: அன்பிற்குரிய நண்பரே, உம்மிடம் விழிகள் எனும் இரண்டு கூரிய அம்புகள் இருக்கின்றன. அவற்றிலுள்ள துவிகளோ தாமரை மலரின் மெல்லிதழ்கள் போன்று இருக்கின்றன. அம்பிற்கான தண்டு இல்லையென்ற போதிலும் அவை மிகவும் அழகாகவும், கூர்மையான நுனிகளை உடையனவாகவும் உள்ளன. அவை மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதினால், யார் மீதும் எய்யப்படப் போவதில்லை என்று தெரிகிறது. யார் மீதோ இந்த அம்புகளைப் போடுவதற்காக நீர் அலைந்து கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் அது யார் என்று என் மந்த மதிக்கு எட்டவில்லை. மேலும் என்னாலும் உம்மோடு போரிட முடியாது. வீரத்தில் உமக்கு நிகரானவர் எவருமிலர். ஆகையினால் உமது வீரம் எனக்கு நன்மையளிப்பதாக என்று நான் வணங்குகிறேன்.

பதம் 5.2.9
ஷிஷ்யா இமே பகவத: பரித: படந்தி
காயந்தி ஸாம ஸரஹஸ்யம் அஜஸ்ரம் ஈஷம்
யஷ்மச்-சிகா விலுலிதா ஸுமனோ ‘பிவ்ருஷ்டி:
ஸர்வே பஜந்தி ரிஷி- கணா இவ வேத-ஷாகா:

ஷிஷ்யா—சீடர்கள், அடியவர்கள்; இமே—இவை; பகவத:—வணங்குதற்குரிய உரிய உம்மை; பரித:—சூழ்ந்து; படந்தி—இசைக்கின்றன; காயந்தி—பாடிக்கொண்டிருக்கின்றன; ஸாம—சாம வேதம்; ஸ-ரஹஸ்யம்—இரகசியப் பகுதி; அஜஸ்ரம்—தொடர்ந்து; ஈஷம்—பகவானுக்கு; யுஷ்மத்—உமது; ஷிகா—கூந்தலிலிருந்து; விலுவிதா—வீழ்ந்து; ஸுமன:—மலர்களில்; அபில்ருஷ்டீ:—பொழிந்து; ஸர்வே—எல்லாம்; பஜந்தி—மகிழ்தல், புகலிடம்; ரிஷி கணா:—முனிவர்கள்: இவ—போன்று; வேத-ஷாகா:—வேத இலக்கியத்தின் பிரிவுகள்.

தேன் உண்ணும் வண்டுகள் பூர்வசித்தியைத் தொடர்ந்து வருவதைக் கண்ட ஆக்னீதர மன்னன் கூறினார்: போற்றுதற்குரிய பகவானே, வணங்குதற்குரிய உமது உடலைச் சுற்றிப் பக்தர்களைப் போல் தும்பிகள் சூழ்த்துள்ளன. அவை சாம வேதத்திலிருந்தும் உபநிஷத்துக்களிலிருந்தும் மந்திரங்களைத் தொடர்ந்து இசைப்பதின் மூலம் உமக்கு வழிபாட்டைச் செய்கின்றன. மாமுனிவர்கள் வேத இலக்கியத்தின் பிரிவுகளைத் தஞ்சமடைவது போல், உமது கூந்தலிலிருந்து உதிரும் மலர்களைத் தும்பிகள் தஞ்சமடைந்து மகிழ்கின்றன.

பதம் 5.2.10
வாசம் பரம் சரண-பஞ்ஜர-தித்திரீணாம்
ப்ரஹ்மன்ன அரூப-முகராம் ஷ்ருணவாம துப்யம்
லப்தா கதம்ப-ருசிர் அங்க-விடங்க-பிம்பே
யஸ்யாம் அலாத-பரிதி: க்வ ச வல்கவம்தே

வாசம்—எதிரொலி; பரம்—மட்டும்; சரண-பஞ்ஜர—சலங்கைகளின்; தித்திரீணாம்—தித்திரி பறவைகளின்; ப்ரஹ்மன்—ஒ, அந்தணரே; அரூப—உருவமற்ற; மூகராம்—மிகத் தெளிவாகக் கேட்கக்கூடிய; ஹ்ருணாவாம—நான் கேட்கிறேன்; துப்யம்—உமது; லப்தா—பெற்ற; கதம்ப—கதம்ப மலர்களைப் போன்று; ருசி:—கண்ணைக் கவரும் வண்ணம்; அங்க-விடங்க-பிம்பே—மெல்லிய நூலிழை போன்ற இடை; யஸ்யாம்—அதன் மீது; அலாத பரிதி:—எரிகின்ற தெருப்புத் துண்டங்களைப் போல்; க்வ—அங்கே; ச—மேலும்; வல்கலம்—மூடிய ஆடை; தே—உமது.

ஒ, அந்தணரே, உமது பாதங்களின் சலங்கை ஒலியினை மட்டுமே நான் கேட்டேன். அவ்வொலி உண்மையில் தித்திரிப் பறவைகளின் கீச்சொலி போன்று இருந்தது. நான் அப்பறவைகளை நேரில் பார்க்கவில்லை என்றாலும் அவை எழுப்பும் ஒலி எவ்வாறு இருக்கும் என்பதை நான் கேட்டிருக்கிறேன். நூலிழை போல் வளைந்திருக்கும் உமது மெல்லிய இடையினைக் காணும்பொழுது, மனதை மயக்கும் கதம்ப மலர்களின் வண்ணங்களையே நான் காண்கிறேன். அதன் மீது நீர் அணிந்திருக்கும் மேகலை நெருப்புத் துண்டங்களைப் போல் மின்னுகின்றன. உண்மையில் நீர் ஆடையணிய மறந்தவர் போன்றே தோன்றுகின்றீர்.

பதம் 5.2.11
கிம் ஸம்ப்ருதம் ருசிரயோர் த்விஜ ஷ்ருங்கயஸ் தே
மத்யே க்ருஷோ வஹஸி யத்ர த்ருஷி: ஷ்ரிதா மே
பங்கோ ‘ருண: ஸுரபிர் அத்ம-விஷாண ஈத்ருக்
யேனாஷ்ரமம் ஸுபக மே ஸுரபீ-க்ரோஷி

கிம்—என்ன; ஸம்ப்ருதம்—நிரப்பப் பெற்ற; ருசிரயோ:—மிக அழகிய; த்விஜ—ஒ, அந்தணரே; ஷ்ருங்கயோ:—இரு கொம்புகளின்; தே—உமது; மத்யே—மத்தியில்; க்ருஷ:—மெல்லிய; வஹஸி—நீர் சுமந்து கொண்டிருப்பது; யத்ர—அங்கே; த்ருஷி:—விழிகள்; ஷ்ரிதா—இணைந்த; மே—எனது; பங்க:—தூள்; அருண:—சிவப்பு; ஸுரபி:—நறுமணம்; ஆத்ம-விஷாணே—இரு கொம்புகளின் மீதும்; ஈத்ருக்—அத்தகைய; யேன—இதன்மூலம்; ஆஷ்ரமம்—வசிக்கும் இடம்; ஸுபக—ஒ, நல்லதிர்ஷ்டம் கொண்டவரே; மே—எனது; ஸுரபீ-கரோஷி—உம்மிடமிருந்து வரும் நறுமணம்.

ஆக்னீதரன் அதன்பின்னர் பூர்வசித்தியின் மார்பகங்களைப் புகழத் தொடங்கினார்: அன்பிற்குரிய அந்தணரே, உமது இடையோ மிகவும் மெலிந்திருக்கிறது. அவை மிகுந்த சிரமத்துடன் இரண்டு கொம்புகளைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன, அவைகளே எனது விழிகளை மிகவும் அதிகமாகக் கவர்கின்றன. அக்கொம்புகள் எதனால் நிரப்பப்பட்டிருக்கின்றன? அவற்றின் மேல் நீர் சிவப்பு நிற நறுமணப் பொடியினைப் பூசியிருக்கின்றீர். அப்பொடி காலையிளஞ் சூரியனைப் போல் சிவந்த நிறமுடையதாக இருக்கிறது. ஓ, நல்லதிர்ஷ்டம் வாய்ந்தவரே நீர் இந்த நறுமணப் பொடியினை எங்கு பெற்றீர், அதன் நறுமணம் எனது ஆஸ்ரமம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

பதம் 5.2.12
லோகம் ப்ரதர்ஷய ஸுஹ்ருத்தம தாவகம் மே
யத்ரத்ய இத்தம் உரஸாவயவாவ் அபூர்வௌ
அஸ்மத்-விதஸ்ய மன-உன்னனௌ பிபர்தி
பஹ்வ அத்புதம் ஸரஸ-ராஸ-ஸுதாதி வக்த்ரே

லோகம்—இருப்பிடம்; பிரதர்ஷய—அருள் கூர்ந்து காட்டுவீராக; ஸுஹ்ருத்தம—ஒ, சிறந்த நண்பரே; தாவகம்—உமது; மே—எனக்கு; யத்ரத்ய:—அங்கே பிறந்த ஒருவன்; இத்தம்—இதுபோன்ற; உரஸா—மார்பினால்; அவயவௌ—அவயவங்கள் (மார்பகங்கள்); அஸ்மத்-விதஸ்ய—என்னைப் போன்ற ஒருவனின்; மன:-உன்னயனௌ—மனதினைக் கிளர்ச்சியடையச் செய்யும்; பிபர்தி—நிறுத்தல்; பஹு—பல; அத்புதம்—அற்புதம்; ஸரஸ—இனிய வார்த்தைகள்; ராஸ—புன்னகை போன்ற மோகமுறச் செய்யும் செயல்கள்; ஸுதா-ஆதி—அமிர்தம் போன்றது; வக்த்ரே—வாயில்.

ஓ,சிறந்த நண்பரே, நீர் இருக்கும் இடம் எதுவென்று கூற மாட்டீரா? உமது மார்பகங்கள் போன்ற மயங்க வைக்கும் உடல் உறுப்புகளை அவர்கள் எவ்வாறு பெற்றனர் என்று என்னால் யூகிக்க முடியவில்லை? என்னைப் போன்ற மனிதர்கள் அவற்றைப் பார்க்கும் போது அவர்களின் மனமும் விழிகளும் கிளர்ச்சியடைகின்றன. அங்கிருப்பவர்களின் இனிய மொழி, அன்புப் புன்னகை போன்றவற்றை எண்ணும் பொழுது அவர்களது வாயில் அமிர்தம் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

பதம் 5.2.13
கா வாத்ம-வ்ருத்திர் அதனாத் தவிர் அங்கவாதி
விஷ்ணோ: கலாஸி அநிமிஷோன்மகரௌ ச கர்ணெள
உத்விக்ன-மீன-யுகலம் த்விஜ-பங்க்தி-ஷோசிர்
ஆஸன்ன-ப்ருங்க-நிகரம் ஸர இன் முகம் தே

கா—என்ன; வா—மற்றும்; ஆத்ம-வ்ருத்தி:—உடலைப் பேணுவதற்கான உணவு; அதனாத்—மெல்லுவதினால் (வெற்றிலை); ஹவி:—வேள்விக்கான சுத்தம் செய்யப்பட்ட பொருட்கள்; அங்க—அன்பு நண்பனே; வாதி—வருகிறது; விஷ்ணோ—பகவான் விஷ்ணுவின்; கலா—அம்சம் பொருந்திய உடல்; அஸி—உமது; அநிமிஷ—இமை மூடாது; உன்மகரெள—ஒளிவீசும் இரு சுறாமீன்கள்; ச—மேலும்; கர்ணௌ—இரு செவிகள்; உத்விக்ன—ஓய்வின்றி; மீன-யுகலம்—இரு மீன்களை உடைய; த்விஜ-பங்க்தி—பல்வரிசை; ஷோசி:—அழகு; ஆஸன்ன—அருகில்; ப்ருங்க-நிகரம்—தும்பிகளின் கூட்டம்; ஸர:-இதி—குளத்தினைப் போல்; முகம்—முகம்; தே—உமது.

அன்பு நண்பரே, உமது உடலை இவ்வாறு கன கச்சிதமாக வைத்திருப்பதற்காக நீர் என்ன உணவு உண்கிறீர்? நீர் தளிர் வெற்றிலைகளை மெல்லுவதினால் போலும் உமது வாயிலிருந்து இனிய நறுமணம் வந்து கொண்டிருக்கிறது! இதிலிருந்து விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கும் நிவேதனங்களையே நீர் எப்போதும் உண்கின்றீர் என்பது வெளிப்படை. உண்மையில் நீர் விஷ்ணுவின் இயல்புகளைப் பெற்றவரே ஆவீர். உமது முகம் இனிய குளத்தைப் போன்று எழில் மிக்கதாக விளங்குகிறது. உமது காதணிகள் விஷ்ணுவின் மூடாத விழிகளைப் போன்றிருக்கும் ஒளிமிக்க இரு சுறாமீன்களை ஒத்திருக்கின்றன. உமது விழிகளோ ஒய்வின்றி அங்குமிங்கும் தாவும் மீன்களைப் போன்றிருக்கின்றன. ஆகையினால் இரு சுறாமீன்கள் மற்றும் இரு விழி மீன்கள் உமது முகக்குளத்தில் ஒரே சமயத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றன. மேலும் உமது ஒளிரும் பல்வரிசை அக்குளத்தில் நீந்தும் அழகிய அன்னங்களின் வரிசையைப் போன்றுள்ளன. அவை பாயும் உமது கூந்தலோ உமது எழில் முகத்தைச் சுற்றி வட்டமிடும் தும்பிகளின் கூட்டத்தைப் போன்றிருக்கிறது.

பதம் 5.2.14
யோ’ ஸௌ த்வயா கர-ஸரோஜ-ஹத பதங்கோ
திக்ஷு ப்ரமம் ஏஜயதே ‘க்ஷிணி மே
முக்தம் ந தே ஸ்மரஸி வக்ர-ஜடா-வரூதம்
கஷ்டோ ‘னிலோ ஹரதி லம்படா ஏஷ நீவீம்

ய:—அது; அஸௌ—அந்த; த்வயா—உம்மால்; கர-ஸரோஜ—செந்தாமரை போன்ற உள்ளங்கை; ஹத:—அடித்து; பதங்க:—பந்து; திக்ஷு—எல்லாத் திசைகளிலும்; ப்ரமன்—சென்று; ப்ரமத—ஒய்வின்றி; ஏஜயதே—துன்புறுத்துகிறது; அக்ஷிணீ—விழிகள்; மே—என்னை; முக்தம்—சிதறி; ந—இல்லை; தே—உமது; ஸ்மரஸி—நீர்கவனீக்கின்றீரா; வக்ர—சுருண்ட; ஜடா—குழல் முடி; வரூதம்—கொத்து; கஷ்ட:—கஷ்டம் தருகின்றது; அனில:—காற்று; ஹரதி—எடுத்துச் செல்ல; லம்பட:—பெண்கள் மீது பற்றுடைய ஆணைப் போன்று; ஏஷ:—இந்த; நீவீம்—கீழுள்ள ஆடையினை.

என் மனம் ஏற்கனவே தவியாய் தவிக்கிறது. நீரோ உமது தாமரைக் கரத்திலுள்ள பந்தினைத் திசைகள்தோறும் வீசியடித்து விளையாடி என் விழிகளை மேலும் கிளர்ச்சியடையச் செய்கின்றீர். உமது சுருண்ட கார் குழல்கள் காற்றில் அலைபாய்கின்றன. ஆனால் அவற்றைச் சரிப்படுத்துவதற்கு நீர் கவனம் செலுத்துவதில்லை. நீர் அவற்றை ஒன்று சேர்த்து முடிக்க மாட்டீரா? பெண்கள் மீது பற்றுடைய ஆணைப் போல் குறும்புமிக்க இக்காற்று கால்களை மூடியிருக்கும் உமது ஆடையினை விலக்க முயல்கிறது. இதை நீர் கவனிக்கவில்லையா?

பதம் 5.2.15
ரூபம் தபோதன தபஷ் சரதாம் தபோக்னம்
ஹி ஏகத் து கேன தபஸா பவதோலப்தம்
சர்தும் தபோ ‘ர்ஹஸி மயா ஸஹ மித்ர மஹ்யம்
கிம் வா ப்ரஸீததி ஸ வை பவ-பாவனோ மே

ரூபம்—ரூப அழகு; தப: தன—தவம் செய்யும் முனிவர்களில் சிறந்தவரே; தப: சரதாம்—தவங்களையும் துறவுகளையும் மேற்கொள்வோர்; தப: க்னம்—அது தவங்களைக் கலைக்கும்; ஹி—உறுதியாக; ஏகத்—இந்த; து—உண்மையில்; கேன—எதனால்; தபஸா—தவம்; பவதா—உம்மால்; உபலப்தம்—எய்தியது; சர்தும்—செய்வதற்கு; தப:—தவம்; அர்ஹஸி—நீர் செய்திருக்க வேண்டும்; மயா ஸஹ—என்னுடன்; மித்ர—நண்பரே; மஹ்யம்—எனக்கு; கிம் வா—அல்லது இருக்கலாம்; ப்ரஸீததி—மகிழ்வுற்று; ஸ:—அவர்; வை—உறுதியாக; பவ-பாவன:—இப்பிரபஞ்சத்தைப் படைத்தவர்; மே—என்னோடு.

ஒ, தவம் செய்வோரில் சிறந்தவரே, பிறர் செய்யும் தவத்தைக் குலைக்கச் செய்யும் இந்த அழகினை நீர் எங்கிருந்து பெற்றீர்? இக்கலையினை எங்கு கற்றீர்? இந்த அழகினை எய்துவதற்கு நீர் என்ன தவம் செய்தீர்! என் இனிய நண்பரே? நீர் என்னோடு இணைந்து தவமும்,
துறவறமும் மேற்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பிரபஞ்சத்தைப் படைத்தப் பிரம்மதேவன் என் தவத்தினை மெச்சி எனது மனைவியாவதற்காக உம்மை இங்கு அனுப்பியிருக்கிறார் போலும்.

பதம் 5.2.16
ந த்வம் த்யஜாமி தயிதம் த்விஜ-தேவ-தத்தம்
யஸ்மின் மனோ த்ரக் அபி நோ வியாதி லக்னம்
மாம் சாரு-ஷ்ருங்கி அர்ஹஸி நேதும் அனுவ்ரதம் தே
சித்தம் யத: ப்ரதிஸரந்து ஷிவா: ஸசிவ்ய:

ந—இல்லை; த்வாம்—நீ; த்யஜாமி—நான் விடுவது; தயிதம்—மிகவும் அன்புடைய; த்விஜ-தேவ—பிரம்மதேவனால், அந்தணர்கள் வணங்கும் தேவர்; தத்தம்—அளிக்கப்பட்டு; யஸ்மின்—யாருக்கு; மன—மனம்; த்ருக்—விழிகள்; அபி—மேலும்; ந—எனது; ந வியாதி—என்னை விட்டுச் செல்லாதே; லக்னம்—இறுக இணைந்திருத்தல், மாம்—எனது; சாரு-ஷ்ருங்கி—ஒ, விம்மிய மார்பகங்களை உடையவளே; அர்ஹஸி—நீ செய்ய வேண்டும்; நேதும்—வழி நடத்த; அனுவ்ரதம்—அடியவனாக; தே—உன்னுடைய; சித்தம்—எண்ணம்; யத:—எங்கே என்றாலும்; ப்ரதிஸரந்து—பின்தொடர்வேன்; ஷிவா:—சாதகமாக; ஸசிவ்ய:—நண்பர்கள்.

அந்தணர்களால் வணங்கப்படும் பிரம்மதேவன் மிகுந்த கருணை கொண்டு என்னிடத்தில் உன்னை அனுப்பி வைத்திருக்கின்றார் போலும். அதனால்தான் உன்னை நான் சந்திக்க முடிந்தது. எனது விழிகளும், மனமும் உன்னை விட்டு விலகா. உன்னைப் பிரிய ஒருபோதும் நான் ஒப்பேன். விம்மிய மார்பகங்ளையுடைய எழில் மங்கையே! நான் உனது அடியவன். நீ எங்கே சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்லலாம். உனது நண்பர்கள் கூட என்னைத் தொடர்ந்து வரலாம்.

பதம் 5.2.17
ஸ்ரீ-ஷுக உவாச
இது லலகனானுயாதி விஷாரதோ க்ராம்ய வைதக்த்யயா பரிபாஷயா
தாம் விபுத வதூம் விபுத மதிர் அதிஸபாஜயாம் ஆஸ

ஸ்ரீ-ஷுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; லகனா—பெண்கள்; அனுயை—வெற்றிகொள்வதற்கு; அதி-விஷாரத:—மிகத் தேர்ந்தவர்; க்ராம்ய-வைதக்த்யயா—ஒருவனது உலகியல் ஆசைகளை நிறைவேற்றுவதில் தேர்ந்தவர்; பரிபாஷயா—குறிப்பிட்ட வார்த்தைகளினால்; தாம்—அவளுடைய; விபுத-வதூம்—தேவமங்கை; விபுத-மதி:—தேவர்களைப் போல் அறிவுடைய; ஆக்னீதரன்; அதிஸபாஜயாம் ஆஸ—கருணையைப் பெறுவதற்கு.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தேவர்களைப் போல் அறிவுடைய ஆக்னீதர மன்னர் புகழ்ந்து பேசுவதின் மூலம் பெண்களைக் கவரும் வித்தையில் கைதேர்ந்தவர் ஆவார். ஆகையினால் அவர் தனது காமமிக்க வார்த்தைகளினால் அவளை மகிழச் செய்து அவள் சம்மதத்தினைப் பெற்றார்.

பதம் 5.2.18
ஸா ச ததஸ் தஸ்ய வீர-யூதா-பதேர் புத்தி-ஷீல-ரூப-வய:
ஸ்ரீ யௌதார்யேண பராக்ஷிப்த-மனாஸ் தேன ஸஹாயுதா-யுதபரிவத்ஸ
ரோபலக்ஷணம் காலம் ஜம்பூத்வீப-பதினா பௌம-ஸ்வர்க போகான்
புபுஜே

ஸா—அவள்; ச—மேலும்; தத:—அதன் பின்னர்; தஸ்ய—அவரது; வீர-யூதபதே:—வீரர்களின் தலைவர்; புத்தி—புத்தியினால்; ஷீல—சீலத்தினால்; ரூப—அழகினால்; வய—இளமையினால்; ஸ்ரீயா—செல்வத்தினால்; ஔதார்யேன—தாராள மனத்தினால்; பராக்ஷிப்த—கவரப்பட்டு; மனா—அவள் மனம்; தேன ஸஹ—அவருடன்; ஆயுத—பத்தாயிரம்; பரிவத்ஸர—வருடங்கள்; உபலக்ஷணம்—நீடித்த; காலம்—காலம்; ஜம்பூத்வீப-பதினா—ஜம்புத்வீப மன்னருடன்; பெளம—பூமியிலுள்ள; ஸ்வர்க—சொர்க்கத்திலுள்ள; போகான்—இன்பங்களை; புபுஜே—மகிழ்ந்தாள்.

வீரர்களின் தலைவரும், நாவலந்தீவின் அரசருமான ஆக்னீதரனின் அறிவு, கல்வி, இளமை, குணம், செல்வம், பெருந்தன்மையால் கவரப்பட்ட பூர்வசித்தி அவருடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து, பூமி மற்றும் சொர்க்கத்திலுள்ள இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்தாள்.

பதம் 5.2.19
தஸ்யாம் உ ஹ வா ஆத்மஜான் ஸ ராஜ-வர ஆக்னீதரோ நாபி-கிம்புருஷ- ஹரிவர்
ஷோலாவ்ருத-ரம்பக-ஹிரண்மய-குரு-பத்ராஷ்வ-கேதுமால
ஸம்ஜ்ஞான் நவ புத்ரான் அஜனயத்

தஸ்யாம்—அவளிடம்; உ ஹ வா—உறுதியாக; ஆத்ம-ஜான்—புதல்வர்கள்; ஸ—அவர்; ராஜ-வர:—அரசர்களிற் சிறந்த; ஆக்னீதர—ஆக்னீதரன்; நாபி—நாபி; கிம்புருஷ—கிம்புருஷன்; ஹரி-வர்ஷ—ஹரிவர்ஷன்; இலாவ்ருத—இலாவ்ருதன்; ரம்யக—ரம்யகன்; ஹிரண்மய—இரண்மயன்; குரு—குரு; பத்ராஷ்வ—பத்ராஷ்வன்; கேது-மால—கேதுமாலன்; ஸம்ஜ்ஞான்—பெயர்களில்; நவ—ஒன்பது; புத்ரான்—புத்திரர்கள்; அஜனயத்—பெற்றெடுத்தார்.

அரசர்களிற் சிறந்த மகாராஜா ஆக்னீதரன் பூர்வசித்தியிடம் நாபி, கிம்புருஷன், ஹரிவர்ஷன், இலாவ்குதன், ரம்யகன், இரண்மயன், குரு, பத்ராஷ்வன், கேதுமாலன் என்னும் பெயர்களையுடைய ஒன்பது புத்திரர்களைப் பெற்றெடுத்தார்.

பதம் 5.2.20
ஸா ஸுத்வாத ஸுதான் நவானுவத்ஸரம் க்ருஹ ஏவாபஹாய பூர்வ
சித்திர் பூய ஏவாஜம் தேவம் உபதஸ்தே

ஸா—அவள்; ஸுத்வா—இவர்களைப் பெற்றெடுத்தப் பின்னர்; அத—அதன்பிறகு; ஸுதான—புதல்வர்கள்; நவ—ஒன்பது; அனுவத்ஸரம்—ஒவ்வொரு வருடமும்; க்ருஹே—இல்லத்தில்; ஏவ—உறுதியாக; அபஹாய—துறந்து; பூர்வசித்தி:—பூர்வசித்தி; பூய:—மீண்டும்; ஏவ—உறுதியாக; அஜம்—பிரம்மதேவன்; தேவம்—தேவர்; உபதஸ்தே—அடைந்தாள்.

பூர்வசித்தி இவ்வொன்பது மைந்தர்களையும் ஒவ்வொரு வருடமாக ஈன்றெடுத்து அவர்கள் வளர்ந்த பின்னர் தன் வீட்டைத் துறந்து, பிரம்மதேவனை வழிபடுவதற்காக மீண்டும் அவரை அடைந்தாள்.

பதம் 5.2.21
ஆக்னீதர-ஸுதாஸ் தே மாதுர் அனுக்ரஹாத் ஔத்பத்திகே னைவ
ஸம்பனனபலோபேதா: பித்ராவிபக்தா ஆத்ம-துல்ய-நாமானி யதா-
பாகம் ஜம்புத்வீப-வர்ஷாணி புபுஜு:

ஆக்னீதர-ஸுதா:—ஆக்னீதர மன்னனின் புதல்வர்கள்; தே—அவர்கள்; மாது—அன்னையின்; அனுக்ரஹாத்—கருணையினால் அல்லது தாய்ப்பால் குடித்ததினால்; ஒளத்பத்திகேன—இயற்கையிலேயே; ஏவ—உறுதியாக; ஸம்ஹனன—வலிமைமிக்க உடல்; பல—பலம்; உருபதா:—பெற்றிருந்தனர்; பித்ரா—தந்தையினால்; விபக்தா:—பிரிந்து; ஆத்ம-துல்யா—தம்மைப் பின்பற்றி; நாமானி—பெயர்களுடைய; யதா-பாகம்—முறையாகப் பிரிக்கப்பட்டு; ஜம்பூத்வீப-வர்ஷாணி—ஜம்பூத்வீபத்தின் பிற பகுதிகள் (அதாவது ஆசியா மற்றும் ஐரோப்பாக் கண்டங்கள் இணைந்த பகுதிகளாக இருக்கலாம்); புபுஜு:—ஆட்சி செய்தனர்.

தங்கள் அன்னையிடம் தாய்ப்பால் உண்டு வளர்ந்ததினால் ஆக்னீதரனின் ஒன்பது புதல்வர்களும் இயற்கையிலேயே வலிமையும் உறுதியுமிக்க உடல் அமையப் பெற்றிருந்தனர். அவர்களுக்கு அவர்களின் தந்தை ஜம்பூத்வீபத்தின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்வதற்காகப் பிரித்துக் கொடுத்தார். அந்நாடுகள் அப்புதல்வர்களின் பெயரிலேயே அழைக்கப்பட்டன. இவ்வாறு ஆக்னீதரனின் புதல்வர்கள் தங்கள் தந்தையினால் அளிக்கப்பட்ட நாடுகளை ஆண்டு வந்தனர்.

பதம் 5.2.22
ஆக்னீதரோ ராஜாத்ருப்த: காமானாம் அப்ஸரஸம் ஏவாநுதினம்
ஆதிமன்யமானஸ் தஸ்யா: ஸலோகதாம் ஷ்ருதிபிர் அவாருந்த யத்ர பிதரோ
மாதயந்தே

ஆக்னீதர:—ஆக்னீதரன்; ராஜ—அரசர்; அத்ருப்த:—திருப்தியடையாது; காமானாம்—புலனுகர்ச்சியுடன்; அப்ஸரஸம்—தேவமங்கை (பூர்வசித்தி); ஏவ—உறுதியாக; அனுதினம்—அனுதினமும்; அதி—அதிகமாக; மன்யுமான:—நினைந்து; தஸ்யா:—அவளை; ஸ-லோகதாம்—அதே உலகிற்கு செல்வதற்கு; ஷ்ருதிபி:—வேதங்களினால்; அவாருந்த—பெற்றார்; யத்ர—எங்கே; பிதர:—மூதாதையர்; மாதயந்தே—இன்புறுகின்றனரோ.

பூர்வசித்தி பிரிந்து சென்றபிறகு மன்னர் ஆக்னீதரன் அவள் மீது கொண்ட காம இச்சை தீராத காரணத்தினால் எப்போதும் அவளையே நினைத்துக் கொண்டிருந்தார். ஆகையினால் வேத நெறிகளுக்கேற்ப அவர் மரணமடைந்தவுடன் அவர் மனைவி வாழும் தேவலோகத்தினையே அடைந்தார். அவ்வுலகம் பித்ருலோகம் என்றழைக்கப்படுகிறது. அங்கே தான் மூதாதையர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

பதம் 5.2.23
ஸம்பரேதே பிதரி நவ ப்ராதரோ மேரு-துஹித்ரூர் மேருதேவீம் ப்ரதி
போம் உக்ரதம்ஷ்ட்ரீம் லதாம் ரம்யாம் ஷ்யாமாம் நாரீம் பத்ராம் தேவ
வீதிம் இதி ஸம்ஜ்ஞா நவோதவஹன்

ஸம்பரேதே பிதரி—தங்கள் தந்தை மறைந்த பின்னர்; நவ—ஒன்பது; ப்ராதர:—சகோதரர்கள்; மேரு-துஹித்ரூ:—மேருவின் புதல்விகள்; மேரூதேவீம்—மேரு தேவி; ப்ரதி-ரூபம்—பிரதிரூபா; உக்ர-தம்ஷ்ட்ரீம்—உக்ரதம்ஷ்ட்ரீ; லதாம்—லதா; ரம்யாம்—ரம்யா; ஷ்யாமாம்—ஷ்யாமா; நாரீம்—நாரீ; பத்ராம்—பத்ரா; தேவ-வீதிம்—தேவவீதி; இதி—இவ்வாறு; ஸம்ஜ்ஞா:—பெயர்கள்; நவ—ஒன்பது; உதவஹன்—மணந்தனர்.

தங்கள் தந்தை மறைந்த பின்னர் ஒன்பது சகோதரர்களும், மேருவின் ஒன்பது புதல்விகளான மேரு தேவி, பிரதிரூபா, உக்ரதம்ஷ்ட்ரீ, லதா, ரம்யா, ஷ்யாமா, நாரீ, பத்ரா மற்றும் தேவவீதி என்போரை மணம் செய்தனர்.


ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “மகாராஜா ஆக்னீதரனின் செயல்கள்” எனும் தலைப்பை கொண்ட இரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare