அத்தியாயம் – 26
நரகலோகம் பற்றிய விளக்கம்
பதம் 5.26.1
ராஜோவாச
மஹர்ஷ ஏதத் வைசித்ருயம் லோகஸ்ய கதம் இதி.

ராஜா உவாச—மன்னர் கூறினார்; மஹர்ஷே—ஒ, மாமுனிவரே (சுகதேவ கோஸ்வாமி); ஏதத்—இந்த; வைசித்ருயம்—பல்வகை வேறுபாடுகள்; லோகஸ்ய—உயிர்வாழிகளின்; கதம்—எவ்வாறு; இதி—இவ்வாறு.

பரீக்ஷித்து மன்னர் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: போற்றுதற்குரியப் பெரியீர், உயிர்வாழிகள் ஏன் பல்வேறு பௌதீக நிலைகளில் வைக்கப்படுகின்றன? அருள் கூர்ந்து இதனை எனக்கு விளக்குவீராக.

பதம் 5.26.2
ரிஷிர் உவாச
த்ரி-குணத்வாத் கர்து: ஸ்ரத்தயா கர்ம-கதய: ப்ருதக்-விதா: ஸர்வாய்
ஏவ ஸர்வஸ்ய தாரதம்யேன பவந்தி

ருஷி: உவாச—மாமுனிவர் (சுகதேவ கோஸ்வாமி) கூறினார்; த்ரி-குணத்வாத்—ஜட இயற்கையின் முக்குணங்களின் காரணமாக; கர்து:—செய்பவன்; ஸ்ரத்தயா—மனநிலை காரணமாக; கர்ம-கதய—செயலிருந்து விளையும் இலக்குகள்; ப்ருதத்—பல்வேறு; விதா—வகைகள்; ஸர்வா—எல்லாம்; ஏவ—இவ்வாறு; ஸர்வஸ்ய—அனைவரின்; தாரதம்யேன—பல்வேறு கோணங்களில்; பவந்தி—சாத்தியமாகிறது.

மாமுனிவர் சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த மன்னனே, இப்பௌதீக உலகில் மூன்று வகையானச் செயல்கள் சத்துவ குணத்தில் உள்ளவை, இரஜோ குணத்தில் உள்ளவை, தமோ குணத்தில் உள்ளவை என்று இருக்கின்றன. மக்கள், அனைவரும் ஜட இயற்கையின் முக்குணங்களினால் பாதிக்கப்படுவதால் அவர்களது செயல்களின் விளைவும் கூட மூன்றாகவேப்பிரிக்கப்படுகின்ற, சத்துவ குணத்தில் செயல்படுபவன் சமயச்சார்புடையவனாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும் இருக்கிறான். இரஜோ குணத்தில் செயல்படுபவன் இன்ப துன்பங்களைக் கலந்து பெறுகிறான், தமோ குணத்தில் செயல்படுபவன் எப்போதும் துன்பத்தில் உழன்று ஒரு மிருகம் போல் வாழ்கிறான். பல்வேறு கோளங்களில் உயிர்வாழிகள் ஜட இயற்கையின் வெவ்வேறான குணங்களினால் பாதிக்கப்படுவதினால் அவர்களது இலக்குகளும் கூட பல்வேறு வகையுடையனவாக இருக்கின்றன.

பதம் 5.26.3
அதேதானீம் ப்ரதிஷித்த-லக்ஷணஸ்யாதர்மஸ்ய ததைவ கர்து:
ஸ்ரத்தாயா வைஸாத்ருஸ்யாத் கர்ம-பலம் விஸத்ருஸம் பவதி யா ஹி
அநாதி அவித்யயா க்ருத காமானாம் தத்-பரிணாம-லக்ஷணா: ஸ்ருதய:
ஸஹஸ்ரஸ: ப்ரவ்ருத்தாஸ தாஸாம் ப்ராசுர்யேணானு வர்ணயிஷ்யாம:

அத—இவ்வாறு; இதானீம்—இப்பொழுது; ப்ரதிஷித்த—தடை செய்யப்பட்டிருப்பதினால்; லக்ஷணஸ்ய—அடையாளங்கொண்டு; அதர்மஸ்ய—பாவச் செயல்களின்; ததா—மேலும் கூட; ஏவ—உறுதியாக; கர்து—செய்பவனின்; ஸ்ரத்தாயா—நம்பிக்கையின்; வைஸாத்ருஸ்யாத்—வேற்றுமையினால்; கர்ம-பலம்—பலன் தரும் செயலின் விளைவுகள்; விஸத்ருஸம்—வேறுபாடு; பவதி—இருக்கின்றது; யா—இது; ஹி—உண்மையில்; அநாதி—ஆதிக்காலத்திலிருந்து; அவித்யயா—அறியாமையினால்; க்ருத—செய்யப்பட்ட; காமானாம்—பல காம இச்சையுடையவர்கள்; தத்-பரிணாம-லக்ஷணா:—அத்தீய ஆசைகளின் விளைவுகளின் அடையாளங்கள்; ஸ்ருதய:—நரக வாழ்க்கை நிலை; ஸஹஸ்ரஸ—ஆயிரமாயிரம்; ப்ரவ்ருத்தா—விளைகின்றது; தாஸாம்—அவை; ப்ராசுர்யேன—மிக விரிவாக; அனுவர்ணயிஷ்யாம—நான் விளங்குவேன்.

புண்ணியச் செயல்கள் செய்வதினால் ஒருவன் சொர்க்க வாழ்வின் பல்வேறு நிலைகளை எய்துவதுபோல், பாவச்செயல்களைச் செய்வதின் மூலம் ஒருவன் நரக வாழ்வின் பல்வேறு நிலைகளை அடைகிறான். தமோ குணத்தில் செயல்படுபவன் பாவச்செயல்களில் ஈடுபடுகிறான். அவர்களது அறியாமையின் அளவிற்கேற்ப அவர்கள் பல்வேறுவகைகளையுடைய நரக வாழ்வில் இடப்படுகிறான். அறியாமையின் காரணமாக ஒருவன் தமோ குணத்தில் செயல்படுவதினால் அதனால் விளையும் அவன் துன்பமானது சிறிதளவே கடுமையுடன் இருக்கும். பாவ புண்ணியச் செயல்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டினை அறிந்தும் ஒருவன் பாவச் செயல் செய்வானெனில் அவன் நடுத்தரமானக் கடுமையுடன் கூடிய நரகத்தில் இடப்படுகிறான். நாத்திகத் தன்மையின் காரணமாக ஒருவன் அறியாமை மற்றும் தீமையில் செயல்படுவானெனில் அதனால் விளையும் நரக வாழ்க்கையானது மிகமிக மோசமானதாக இருக்கும். அறியாமையின் காரணமாக ஒவ்வொரு உயிர்வாழியும் ஆதிகாலந்தொட்டு பல்வேறு ஆசைகளினால் ஆயிரக்கணக்கான நரகங்களுக்கு இழுத்துச் செல்லப்படுகிறான். என்னால் முடிந்த அளவு அவற்றை நான் விளக்க முயற்சிக்கிறேன்.

பதம் 5.26.4
ராஜாவோச
நரகா நாம பகவன் கிம் தேஸ விஸேஷா அதவா பஹிஸ் த்ரி-லோக்யா
ஆஹோஸ்வித் அந்தரால இதி

ராஜா உவாச—மன்னர் கூறினார்; நரகா:—நரகங்கள்; நாம—பெயரில்; பகவான்—ஓ, எந்தன் பகவானே; கிம்—ஏதாவது; தேஸ-விஸேஷா—ஒரு குறிப்பிட்ட நாடு; அதவா—அல்லது; த்ரி-லோக்யா—மூவுலகங்கள் (பிரபஞ்சம்); ஆஹோஸ்வித்—அல்லது; அந்தராலே—பிரபஞ்சத்தின் நடுப்பகுதியில்; இதி—இவ்வாறு.

மன்னர் பரீக்ஷித்து சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: மரியாதைக்குரிய பெரியீர், நரக லோகங்கள், பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கின்றனவோ, அல்லது உள்ளே இருக்கின்றனவா அல்லது இவ்வுலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றனவா?

பதம் 5.26.5
ருஷிர் உவாச
அந்தரால ஏவ த்ரி-ஜகத்யாஸ் து திஸி தக்ஷிணஸ்யாம் அதஸ்தாத்
பூமேர் உபரிஷ்டாச் ச ஜலாத் யஸ்யாம் அக்னிஷ்வாத்தாதயா பித்ரு-கணா
திஸி ஸ்வானாம் கோத்ராணாம் பரமணே ஸமாதினா ஸத்யா ஏவாஸிஷ
ஆஸாஸானா நிவஸந்தி

ருஷி: உவாச—மாமுனிவர் பதில் கூறினார்; அந்தராலே—அந்தரத்தில் (நடு மையத்தில்); ஏவ—உறுதியாக; த்ரி-ஜகத்யா:—மூவுலகங்களின்; து—ஆனால்; திஸி—திசையில்; தக்ஷிணஸ்யாம்—தெற்கு; அதஸ்தாத்—கீழே; பூமே—பூமியின் மேல்; உபரிஷ்டாத்—சிறிதுமேலே; ச—மேலும்; ஜலாத்—கர்போதகக் கடல்; யஸ்யாம்—இதில்; அக்னிஷ்வாத்தா:-ஆதய—அக்னிஷ்வாத்தாவின் தலைமையிலே; பித்ரு-கணா—பிதாக்கள் என்போர்; திஸி—திசை; ஸ்வானாம்—அவர்களுக்குரிய; கோத்ராணாம்—குடும்பங்களின்; பரமேண—உயர்வுடன்; ஸமாதினா—பகவானைப் பற்றிய ஆழ்ந்த நிலையில்; ஸத்யா—உண்மையில்; ஏவ—உறுதியாக; ஆஸிஷ—ஆசிகள்; ஆஸாஸானா—விரும்புதல்; நிவஸந்தி—அவர்கள் வாழ்கின்றனர்.

மாமுனிவர் சுகதேவ கோஸ்வாமி பதில் கூறினார்: நரக லோகங்கள் அனைத்தும் மூவுலகங்களும், கர்போதகக் கடலுக்கும் நடுவில் இருக்கின்றன. அவை பூமண்டலத்திற்குக் கீழே பிரபஞ்சத்தின் தென்பகுதியில், கர்போதகக் கடலுக்குச் சிறிது மேலாக இருக்கின்றன. பித்துரு லோகம் கூட இப்பகுதியில் கர்போதகக் கடல், மற்றும் கீழ் உலகங்களுக்கு இடையேதான் இருக்கின்றன. அக்னிஷ்வாத்தா தலைமையின் கீழ் பித்துரு லோகத்தில் உள்ள அனைவரும் முழுமுதற் கடவுளை தியானித்தபடி ஆழ்ந்த சமாதி நிலையில் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் தங்கள் குடும்ப நலம் வேண்டுகின்றனர்.

பதம் 5.26.6
யத்ர ஹ வாவ பகவான் பித்ரு-ரஜோ வைவஸ்வத: ஸ்வ-விஷயம்
ப்ராபிதேஷுஸ்வ-புருஷைர் ஜந்துஷு ஸம்பரேதேஷு யதா-கர்மாவத்யம்
தோஷம் ஏவானுவ்லங்கித-பகவச் சாஸன: ஸகணோ தமம் தாரயதி

யத்ர—இங்கே; ஹ வாவ—உண்மையில்; பகவான்—மிகவும் சக்தியுடைய; பித்ரு-ராஜா:—பிதாக்களின் அரசனான யமராஜன்; வைவஸ்வத:—சூரியதேவனின் புதல்வன்; ஸ்வ-விஷயம்—அவரது சொந்த இராஜ்ஜியம்; ப்ராபிதேஷு—அடைகின்ற காரணம்; ஸ்வ-புருஷை:—அவரது தூதர்களினால்; ஜந்துஷு—மனிதர்கள்; ஸம்பரே துஷு—இறந்த; யதா-கர்ம-அவத்யம்—பந்தப்பட்ட வாழ்வில் எந்த அளவிற்கு அவர்கள் ஒழுங்குமுறை விதிகளை மீறியிருக்கின்றனர் என்பதைப்பொருத்து; தோஷம்—குற்றம்; ஏவ—உறுதியாக; அனுவ்லங்கித-பகவத்-ஸாஸன:—முழுமுதற்கடவுளின் ஆணையினை அவர்களால் மீறமுடியாது; ஸ-கண:—அவரது அடியவர்களுடன்; தமம்—தண்டனை; தாரயதி—நிறைவேற்றுகிறார்.

பிதாக்களின் அரசன் சூரிய தேவனின் ஆற்றல்மிக்க மைந்தன் யமராஜன் ஆவான். இவன் பித்ரு லோகத்தில் தனது துணைவர்களுடன் இருக்கிறான். பரமபுருஷபகவான் ஏற்படுத்தியுள்ள ஒழுங்குமுறை விதிகளுக்குக் கட்டுப்பட்டு இவனது தூதர்களான யமதூதர்கள் பாவம் செய்யும் மனிதர்கள் இறந்தவுடன் அவர்களை உடனே இவனிடம் அழைத்து வருகின்றனர். அவனது எல்லைக்குள் வந்தவுடன் இவன் அவரவர் செய்த பாவங்களுக்கேற்ப சரியான தண்டனை அனுபவிப்பதற்காக அவர்களைப் பல்வேறு நரக லோகங்களுக்கு அனுப்பிவைக்கிறான்.

பதம் 5.26.7
தத்ர ஹைகே நரகான் ஏக-விம்ஸதிம் கணயந்தி அத தாம்ஸ் தே ராஜன்
நாமரூப- லக்ஷணதோ’னுக்ரமிஸ்யாமஸ் தாமிஸ்ரோ ‘ந்ததாமிஸ்ரோ
ரெளவோ மஹாரெளரவ கும்பீபாக: காலஸுத்ரம் அஸிபத்ரவனம்
ஸுகரமுகம் அந்தகூப: க்ருமிபோஜன: ஸந்தம்ஸஸ் தப்தஸுர்மிர்
வஜ்ரகண்டக ஸால்மவீ வைதரணீ பூயோத: ப்ராணரதோ விஸஸனம்
லாலாபக்ஷ: ஸாரமேயாதனம் அவீசிர் அய: பானம் இதி கிஞ்ச க்ஷார
கர்தமோ ரக்ஷ: கண-போஜன: ஸுலப்ரோதோ தந்தஸுகோ ‘வட
நிரோதன: பர்யாவர்தன: ஸுசீமுகம் இதி அஷ்டா விம்ஸதிர் நரகா விவித-
யாதனாபூமய:

தத்ர—அங்கே; ஹ—உறுதியாக; ஏகே—சில; நரகான்—நரகலோகங்கள்; ஏக-விம்ஸிதம்—இருபத்தியொன்று; கணயந்தி—கணக்கிருதல்; அத—அதனால்; தாம்—அவை; தே—உனக்கு; ராஜன்—ஒ, மன்னனே; நாம-ரூப-லக்ஷணத:—அவற்றின் பெயர், வடிவம், அடையாளம்; அனுக்ரமிஷ்யாம:—நாம் ஒன்றன்பின் ஒன்றாகக் கோடிட்டுக் காட்டுகிறோம்; தாமிஸ்ர:—தாமிஸ்ரம்; அந்த-தாமிஸ்ர:—அந்ததாமிஸ்ரம்; ரௌரவ:—ரெளரவம்; மஹாரௌரவ:—மகா ரௌரவம்; கும்பீபாக:—கும்பீபாகம்; காலஸுத்ரம்—காலசூத்திரம்; அஸி-பத்ரவனம்—அசிபத்ரவனம்; ஸுகரமுகம்—சூகரமுகம்; அந்த-கூப:—அந்த கூபம்; க்ருமி-போஜன:—கிருமிபோஜனம்; ஸந்தம்ஸ:—சந்தம்ஸம்; தப்த-ஸுர்மி:—தப்தசூர்மி; வஜ்ர-கண்டக-ஸால்மவீ—வஜ்ரகண்டக சால்மவீ; வைதரணீ—வைதரணீ; பூயோத:—பூயோதம்; ப்ராண-ரோத:—பிராணரோதம்; விஸஸனம்—விசசம்; லாலா-பக்ஷ:—லாலாபக்ஷம்; ஸாரமேயாதனம்—சாம்பரமேயாதனம்; அவீசி:—அவீசி; அய:-பானம்—அய: பானம்; இதி—இவ்வாறு; கிஞ்ச—சிலகூட; க்ஷார-கர்தம—க்ஷாரகர்தமம்; ரக்ஷ: கண-போஜன:—ரக்ஷோ கண போஜனம்; சூல-ப்ரோத:—சூலப்ரோதம்; தந்தஸுக:—தந்தசூகம்; அவட-நிரோதன:—அவடநிரோதனம்; பர்யாவர்தன:—பர்யாவர்தனம்; ஸுசீ-முகம்—சூசீமுகம்; இதி—இவ்வாறு; அஷ்டா-விம்ஸதி:—இருபத்தெட்டு; நரகா:—நரகலோகங்கள்; விவித—பல்வேறு; யாதனா-பூமய:—நரகநிலையில் துன்புறுவதற்கான இடங்கள்.

அதிகாரம் பெற்ற சிலர் இருபத்தோரு நரகலோகங்கள் என்று கூற சிலர் இருபத்தெட்டு என்கின்றனர். அன்பார்ந்த மன்னனே அவற்றின் பெயர், வடிவம் மற்றும் அடையாளத்தினை நான் உனக்குக் கோடிட்டுக் காட்டுவேன். பல்வேறுவகையான நரகங்களின் பெயர்கள் பின்வருமாறு: தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், ரெளரவம், மகாரௌரவம், கும்பீபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், சூகரமுகம், அந்தகூபம், கிருமிபோஜனம், வைதரணீ, பூயோதம், பிராணரோதம், விசசனம், வாலாபக்ஷம், சாரமேயாதனம், அவீசி, அய: பானம், க்ஷாரகர்தமம்; ரக்ஷோகண போஜனம், சூலப்ரோதம், தந்தசூகம், அவடநிரோதனம், பர்யாவர்தனம், சூசீமுகம். இவ்வுலகங்கள் அனைத்தும் உயிர்வாழிகளைத் தண்டிப்பதற்குரியவையாகும்.

பதம் 5.26.8
தத்ர யஸ் து பர-வித்தாபத்ய-களத்ராணி அபஹரதி ஸ ஹி கால-
பாஸ-பத்தோ யம-புருஷைர் அதி-பயா-நகைஸ் தாமிஸ்ரே நரகே
பலான் நிபாத்யதே அனஸனானு தபனா தண்ட தாதன ஸந்தர்ஜனாதிபிர்
யாதநாபிர் யாத்யமானோ ஐந்துர் யத்ர கஸ்மலம் ஆஸாதித ஏகனதவ
மூர்ச்சம் உபயாதி தாதிஸ்ர ப்ராயே

தத்ர—அந்நரக லோகங்களில்; ய:—ஒருவன்; து—ஆனால்; பரவித்த-அபத்ய-களத்ராணி—பிறன் பணம், மனைவி, மக்கள்; அபஹரதி—எடுத்துக் கொண்டால்; ஸ:—அம்மனிதன்; ஹி—உறுதியாக; கால-பஸபத்த:—காலக்கயிறு அல்லது யமராஜனால் பிணைக்கப்படுகிறான்; யமபுருஷை:—யமராஜனின் தூதர்களால்; அதி-பயானகை:—அவர்கள் அச்சமிகுத்தோற்றமுடையோர்; தாமிஸ்ரே நரகே—தாமிஸ்ரம் என்றும் நரகம்; பலாத்—பலாத்காரமாக; நிபாத்யதே—தூக்கி எறியப்படுகின்றனர்; அனஸன—பசி; அனுதபான—குடிக்க நீரின்றி; தண்ட-தாடன—இரும்புத் தடிகளினால் அடிக்கப்பட்டு; ஸந்தர்ஜன-ஆதிபி:—மிரட்டப்படுதல் போன்றவற்றினால்; யாதனாபி:—கடுமையானத் தண்டனைகளினால்; யாத்யமான:—தண்டிக்கப்படுகின்றனர்; ஐந்து:—உயிர்வாழி; யத்ர—இங்கே; கஸ்மலம்—துன்பம்; ஆஸாதித:—எய்துகிறான்; ஏகதா—சிலசமயம்; ஏவ—உறுதியாக; மூர்ச்சம்—மயங்கிவிழுகிறான்; உபயாதி—பெறுகிறான்; தாமிஸ்ரப்ரயே—பெரும்பாலும் இருட்டான சூழ்நிலையில்.

அன்பிற்குரிய அரசனே, ஒருவன் பிறனது சட்டபூர்வமான மனைவி, மக்கள், பொருள் முதலியவற்றை தனதாக்கிக் கொண்டால், அவனது மரணவேளையில் யமதூதர்களின் காலக்கயிற்றினால் அவன் பலாத்காரமாகக் கட்டப்பட்டு தாமிஸ்ரம் என்னும் நரக லோகத்தில் தூக்கி எறியப்படுகிறான். அந்த இருள் நரகத்தில் அப்பாவம் செய்தவன் யமதூதர்களால் அடித்து, மிரட்டி துன்புறுத்தப்படுகிறான். அவன் பசியால் வருந்துவான், ஆயினும் அவனுக்குக் குடிப்பதற்குக் கூட நீர் கொடுக்கப்படுவதில்லை. இவ்வாறு சீற்றம் கொண்ட யமதூதர்கள் அவனது கடுமையானத் துன்பத்திற்குக் காரணமாகின்றனர். சில சமயம் அவர்களது தண்டனையின் வேதனை தாங்காது அவன் மூர்ச்சையடைகிறான்.

பதம் 5.26.9
ஏவம் ஏவரந்ததாமிஸ்ரே யஸ் து வாஞ்சயித்வா புருஷம் தராதீன்
உபயுங்கத யத்ர ஸரீரீ நிபாத்யமானோ யாதானா ஸ்தோ வேதனயா நஷ்ட-
மதிர் நஷ்ட- த்ருஷ்டிஸ் ச பவதி யதா வனஸ்பதிர் வ்ருஷ்ச்யமான்- மூலஸ்
தஸ்மாத் அந்த தாமிஸ்ரம் தம் உபதிஸந்தி

ஏவம்—இவ்வாறு; ஏவ—உறுதியாக; அந்ததாமிஸ்ரே—அந்த தாமிஸ்ரம் என்னம் நரகம்; ய:—மனிதன்; து—ஆனால்; வஞ்சயித்வா—ஏமாற்றுதல்; புருஷம்—மற்றொருவன்; தார-ஆதீன்—மனைவி, மக்கள்; உபயுங்க்தே—அனுபவிப்பவன்; யத்ர—இங்கே; ஸரீரீ—உடல் பெற்ற மனிதன்; நிபாத்யமான:—பலவந்தமாக எறியப்படுகிறான்; யாதனா-ஸ்த:—எப்போதும் மிகுந்த துன்பத்தில் வைக்கப்படுகின்றனர்; வேதனயா—அத்துன்பத்தினால்; நஷ்ட—இழத்தல்; மதி:—அவனது உணர்வு; நஷ்ட—இழந்து; த்ருஷ்டி:—அவனது பார்வை; ச—மேலும்; பவதி—ஆகிறான்; யதா—அவ்வளவு; வனஸ்பதி:—மரங்கள்; வ்ருஸ்ச்யமான—துண்டிக்கப்படுதல்; மூல:—அதன் வேர்; தஸ்மாத்—இதன் காரணமாக; அந்ததாமிஸ்ரம்—அந்ததாமிஸ்ரம்; தம்—அது; உபதிஸந்தி—அவர்கள் அழைக்கின்றனர்.

அடுத்தவன் மனைவி மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றி அனுபவிப்பவன் அந்ததாமிஸ்ரம் என்னும் நரகினை அடைகிறான். அங்கே அவனது நிலை ஒருமரம் அடிவேருடன் வெட்டிச் சாய்க்கப்படுவது போன்றதாகும். அந்ததாமிஸ்ரத்தினை அவன் அடைவதற்கு முன்பே அவன் பல்வேறு கொடிய துன்பங்களுக்கு ஆளாகிறான். அவன் தனது பார்வை மற்றும் புத்தியினை இழக்கச் செய்யும் அளவிற்கு துன்பம் கொடுமை வாய்ந்ததாகும். இக்காரணத்தினாலேயே கற்றறிந்த முனிவர்கள் இதனை அந்ததாமிஸ்ரம் என்று அழைக்கின்றனர்.

பதம் 5.26.10
யஸ் த்வ இஹ வா ஏதத் அஹம் இதி மமேதம் இதி பூத-த்ரோஹேண
கேவலம் ஸ்வ குடும்பம் ஏவானுதினம் ப்ரபுஷ்ணாதி ஸ தத் இஹ விஹாய
ஸ்வயம் ஏவ தத் அஸுபேன ரௌரவே நிபத்தி

ய:—ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறவியில்; வா—அல்லது; ஏதத்—இந்த உடல்; அஹம்—நான்; இதி—இவ்வாறு; மம—எனது; இதம்—இந்த; பூத-த்ரோஹேண—பிற உயிர்வாழிகளின் மீதுள்ள துவேஷத்தினால்; கேவலம்—தனியே; ஸ்வ-குடும்பம்—அவன் குடும்பத்தினர்; ஏவ—மட்டும்; அனுதினம்—அனுதினமும்; ப்ரபுஷ்ணாதி—தாங்குகிறான்; ஸ:—அவன்; தத்—அந்த; இஹ—இங்கே; விஹாய—விட்டுவிடுதல்; ஸ்வயம்—தனக்குரிய; ஏவ—உறுதியாக; தத்—அதன்; அஸுபேன—பாவத்தினால்; ரௌரவே—ரெளரவத்தில்; நிபத்தி—அவன் கீழே வீழ்கிறான்.

ஒருவன் தனது உடலைத் தன் மனைவி, மக்கள் மற்றும் தனது உடல்களைக் காப்பதற்காக, அல்லும் பகலும் கடினமாக உழைப்பதற்காகவே தனது உடலை ஏற்றுக் கொள்கிறான். தன்னையும் தனது குடும்பத்தினரையும் காப்பதற்காக அவன் பிற உயிர்வாழிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகிறான். மரணவேளையில் இம்மனிதன் ரௌரவம் என்னும் நரகத்தில் அவன் தூக்கி எறியப்படுவதின் மூலம் அவன் பிற உயிரினங்களின் மீது கொண்ட துவேஷத்தின் பலன்களை பலவந்தமாகப் பிரிக்கப்படுகிறான்.

பதம் 5.26.11
யே த்வ இஹ யதைவாமுனா விஹிம்ஸிதா ஜந்தவ: பரத்ர யம-
யாதனாம் உபகதம் த ஏவ ருரவோ பூத்வா ததா தம் ஏவ விஹிம்ஸந்தி
தஸ்மாத் ரெளரவம் இதி ஆஹு ருருர் இதி ஸர்பாத் அதி-க்ரூர-
ஸதத்வஸ்யாபதேஸ:

யே—இவர்கள்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; யதா—எவ்வளவு; ஏவ—உறுதியாக; அமுனா—அவனால்; விஹிம்ஸிதா—காயப்பட்ட; ஜந்தவ—ஜந்துக்கள்; (உயிர்வாழிகள்); பரத்ர—மறுபிறப்பில்; யம-யாதனாம்-உபகதம்—யமராஜனால் துன்பத்திற்காளாகின்றனர்; தே—அவ்வுயிர்வாழிகள்; ஏவ—உண்மையில்; ருரவ—ருருக்கள் (ஒரு வகையான துவேஷ மிருகம்); பூத்வா—ஆகின்றன; ததா—அவ்வளவு; தம்—அவனை; ஏவா—உறுதியாக; விஹிம்ஸந்தி—அவை காயப்படுத்துகின்றன; தஸ்மாத்—இதன் காரணமாக; ரௌரவம்—ரௌரவம்; இதி—இவ்வாறு; ஸர்பாத்—சர்ப்பத்தைக் காட்டிலும்; அதி-க்ரூர—மிகக் கொடியதும், துவேஷமுடையனவுமாகும்; ஸத்த்வஸ்ய—உயிரின்; அபதேஸ—பெயர்.

இப்பிறப்பில் துவேஷமுடைய ஒருவன் பல உயிர்வாழிகளுக்கெதிராக வன்முறையில் ஈடுபடுகிறான். அதனால் அவன் மரணத்திற்குப் பிறகு, யமராஜனால் நரகத்திற்கு எடுத்துச் செல்லப்படும்பொழுது, அவனால் காயப்படுத்தப்பட்ட உயிர்வாழிகள் அவனுக்குக் கடுமையான வேதனை அளிப்பதற்காக ருருக்கள் என்னும் மிருகங்களாகத் தோன்றுகின்றன. கற்றறிந்த அறிஞர்கள் இந்நரகத்தினை ரௌரவம் என்று அழைக்கின்றனர். பாம்பை விட துவேஷமுடைய இந்தருரு என்னும் மிருகம் பொதுவாக இவ்வுலகில் காணப்படுவதில்லை.

பதம் 5.26.12
ஏவம் ஏவ மஹாரெளரவோ யத்ர நிபதிதம் புருஷம் க்ரவ் யாதா நாம
ருரவஸ் தம் க்ரவ்யேன காயந்தி ய: கேவலம் தேஹம்மபர:

ஏவம்—இவ்வாறு; ஏவ—உறுதியாக; மஹா-ரௌரவ—மகா ரௌரவம் என்னும் நரகம்; யத்ர—எங்கே; நிபதிதம்—எறியப்படுகிறான்; புருஷம்—ஒருவன்; க்ரவ்யாதா:-நாம—கிரவ்யதம் என்னும் பெயருடைய; ருரவ—ருரு மிருகங்கள்; தம்—அவனை (நிந்திக்கப்பட்டவன்); க்ரவ்யேண—அவன் தசையினைப் புசிப்பதற்காக; காதயந்தி—கொன்று; ய—இவன்; கேலவம்—மட்டுமே; தேஹம்பர—தனது உடலினை மட்டும் ஓம்புவதற்கான எண்ணம்.

தன்னுடைய உடம்பினை ஒம்புவதற்காகப் பிறருக்குத் துன்பமிழைப்பவன் மகாரெளரவம் என்னும் நரகத்தில் கிரவ்யாதம் எனப்படும் ருரு மிருகங்கள் அவனைத் துன்புறுத்தி அவன் தசையினைத் தின்கின்றன.

பதம் 5.26.13
யஸ் த்வ இஹ வா உக்ர: பஸுன் பக்ஷிணோ வா ப்ராணத உபரந்தயதி
தம் அப கருணம் புருஷாதைர் அபி விக்ரஹிதம் அமுத்ர யமானுசரா:
கும்பீபாககே தப்ததைலே உபரந்தயந்தி

ய—ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வா—அல்லது; உக்ர—மிகக் கொடிய; பஸுன்—மிருகங்கள்; பக்ஷிண—பறவைகள்; வா—அல்லது; ப்ராணத—உயிரோடிருக்கும் பொழுதே; உபரந்தயதி—சமைத்து; தம்—அவனை; அபகருணம்—மிகக் கொடிய மனம் படைத்த; புருஷ-ஆதை—மனித மாமிசத்தை உண்பதை; அபி—கூட; விகர்ஹிதம்—நிந்திக்கப்படுகின்றனர்; அமுத்ர—மறுப்பில்; யம அனுசரா—யமராஜனின் தூதர்கள்; கும்பீபாகே—கும்பீபாகம் என்னும் நரகம்; தப்த-தைலே—கொதிக்கும் எண்ணெயில்; உபரந்தயந்தி—சமைத்து.

தங்கள் உடலினை ஒம்புவதற்காகவும், நாவின் சுவைக்காகவும் கொடிய மனிதர்கள் விலங்குகளையும், பறவைகளையும் உயிரோடுப் பிடித்துக் கொல்கின்றனர். இம்மனிதர்கள் நர பட்சணிகளால் கூட நிந்திக்கப்படுகின்றனர். இவர்கள் தமது மறு பிறப்பில் கும்பீபாகம் என்னும் நரகத்திற்கு யமதூதர்களால் தூக்கிச் செல்லப்பட்டு அங்கே எண்ணெயில் போடப்படுகின்றனர்.

பதம் 5.26.14
யஸ் த்வ இஹ ப்ரஹ்ம-த்ருக் ஸ காலஸுத்ர- ஸம்ஜ்ஞகே நரகே அயுத-
யோஜன-பரிமண்டலே தாம்ரமயே தப்த-கலே உபரி-அதஸ்தாதே
அக்னி-அர்காப்யாம் அதி-தப்யமானே ‘பிநிவேஷித: க்ஷுத்-
பிபாஸாப்யாம் ச தஹ்யமானாந்தர் பஹி: ஸரீர ஆஸ்தே ஸேதே
சேஷ்டதே ‘வதிஷ்டதி பரிதாவதி ச யாவந்திபஸுரோமணி தாவத் வர்ஷ
ஸஹஸ்ராணி

ய—ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; ப்ரஹ்ம-த்ருக்—அந்தணனைக் கொன்றவன்; ஸ—அவன்; காலஸுத்ர-ஸம்ஜ்ஞகே—காலசூத்திரம் என்னும் பெயருடைய; நரகே—நரகத்தில்; அயுத-யோஜன—பரிமண்டலே எண்பதினாயிரம் மைல்கள் சுற்றளவுடைய; தாம்ர-மயே—தாமிரத்தினாலான; தப்த—உஷ்ணமான; கலே—சமதளத்தில்; உபரி-அதஸ்தாத்—மேலும் கீழும்; அக்னி—அக்கினி; அர்காப்யம்—சூரியனால்; அதி-தப்யமானே—அது சூடாக்கப்பட்டு; அபிநிவேஷித—புகுத்தப்படுகிறான்; க்ஷுத்-பிபாஸாப்யாம்—பசி மற்றும் தாகத்தினால்; ச—மேலும்; தஹ்யமான—எரிக்கப்படுதல்; அந்த—உள்ளே; பஹி—வெளியே; ஸரீர—அவனது உடல்; ஆஸ்தே—இருக்கிறது; ஸே-அத—சிலசமயம் படுத்திருக்கிறான்; சேஷ்டதே—சிலசமயம் அசைந்து கொண்டிருக்கிறான்; அவதிஷ்ததி—சிலசமயம் நிற்கிறான்; பரிதாவதி—சிலசமயம் இங்குமங்கும் ஒடுகிறான்; ச—மேலும்; யாவந்தி—எவ்வளவு; பஸு-ரோமாணி—ஒரு மிருகத்தின் உடலில் உள்ள ரோமங்கள்; தாவத்—அதுவரை; வர்ஷ-ஸஹஸ்ராணி—ஆயிரக்கணக்கான வருடங்கள்.

ஓர் அந்தணனைக் கொன்றவன் எண்பதினாயிரம் மைல்கள் சுற்றளவுடையதும் முற்றிலும் தாமிரத்தினால் ஆனதுமான காலசூத்திரம் என்னும் நரகத்தில் நடப்படுகிறான். கீழே நெருப்பினாலும், மேலே சுட்டெரிக்கும் சூரியனாலும் சூடுபடுத்தப்படுவதால் இந்நரகத்தின் மேற்பகுதி அதீத உஷ்ணமுடையதாக இருக்கிறது. இதி விடப்படுவதால் அந்தணனைக் கொன்றவன் அகத்திலும் புறத்திலும் உஷ்ணத்தால் துன்புறுகிறான். அகத்தினில் அவன் பசித்தாகத்தினால் எரிந்து கொண்டிருக்கின்றான். புறத்தினில் மேலே சுட்டெரிக்கும் சூரியனும், தாமிர சமதளத்திற்குக் கீழே நெருப்பினாலும் எரிந்து கொண்டிருக்கின்றான். அதனால் அவன் சிலசமயம் படுத்திருக்கிறான், சிலசமயம் அமர்ந்திருக்கிறான், சிலசமயம் இங்குமங்கும் ஒடிக் கொண்டிருக்கின்றான். அவ்வாறு அவன் ஒரு மிருகத்தின் உடலிலுள்ள ரோமங்கள் எத்துணை இருக்கின்றதோ அத்துணை ஆயிரம் வருடங்கள் அவன் அங்கே வருந்தவேண்டியதிருக்கின்றது.

பதம் 5.26.15
யஸ் த்வ இஹ வை நிஜ-வேத-பதாத் அநாபதி அபகத: பாகண்டம்
சோபகதஸ் தம் அஸி-பத்ரவனம் ப்ரவேஸ்ய கஸயா ப்ரஹரந்தி தத்ர
ஹாஸாவ் இதஸ் ததோ தாவமான உபயதோ தாரைஸ்-தாலவனாஸி-
பத்ரைஸ் சித்யமான ஸர்வாங்கோ ஹா ஹதோ ‘ஸ்மீதி பரமயா வேதனயா
மூர்ச்சித: பதே நிபததி ஸ்வ-தர்மஹா பாகண்டானுகதம் பலம் புங்கதே

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; நிஜவேத-பதாத்—வேதங்களால் பரிந்துரைக்கப்பட்ட அவன் பாதையிலிருந்து; அநாபதி—ஓர் அவசரக் காலம் இவ்வாறிருந்தும் கூட; அபகத—மாறி; பாகண்டம்—கற்பனையான நாத்திக முறை; ச—மேலும்; உபகத—சென்றால்; தம்—அவனை; அஸி-பத்ரவனம்—அசிபத்ரவனம் என்னும் நரகம்; ப்ரவஸ்ய—புகச்செய்து; கஸயா—ஒரு கசையினால் (சாட்டையினால்); ப்ரஹரந்தி—அவர்கள் அடிக்கின்றனர்; தத்ர-அஹ:—உறுதியாக; அஸௌ—அந்த; இத தத:—இங்குமங்கும்; தாவமான—ஒடுகின்றான்; உபயதா—இருபுறமும்; தாரைத்—விளிம்புகளால்; தால-வன-அஸி-பத்ரை—பனைமரங்களின் கத்தி போன்ற இலைகள்; சித்யமான—கிழிக்கப்பட்டு; ஸர்வ-அங்க—அவன் உடல் முழுவதும்; ஹா-அந்தோ-ஹத—கொல்லப்படுகிறான்; அஸ்மி—நான் இருக்கிறேன்; இதி—இவ்வாறு; பரமயா—மிகக் கடுமையான; வேதனயா—வேதனை; மூர்ச்சித—மூர்ச்சித்து விழுகிறான்; பதே-பதே—ஒவ்வோர் அடியிலும்; நிபததி—கீழே விழுகிறான்; ஸ்வ-தர்ம-ஹா—அவனது சொந்த சமயநெறிகளைக் கொன்றவன்; பாகண்ட-அனுகதம் பலம்—ஒரு நாத்திகப் பாதையினை ஏற்றதின் விளைவாக; புங்க்தே—அவன் துன்புறுகிறான்.

அவசரநிலை அல்லாத சூழ்நிலையிலும் ஒருவன் வேதங்களின் பாதையிலிருந்து விலகிச் சென்றான் என்றால், யமராஜனின் தூதர்கள் அவனை அசிபத்ரவனம் என்னும் நரகத்தில் தள்ளுகின்றனர். அங்கே அவர்கள் அவனைச் சாட்டையினால் அடிக்கின்றனர். வேதனை தாளாது அவன் இங்கும் அங்கும் தப்பி ஒடும்பொழுது அவன் கத்தியைப்போல் கூர்மையான முனைகளையுடைய ஒலைகள் நிறைந்த பனைமரங்களினூடனே ஒடுகிறான். இவ்வாறு அவன் உடல் முழுவதும் காயம்பட்டு, அடிதோறும் மயங்கி வீழ்ந்து “ஒ, நான் இனி என்ன செய்வேன், எவ்வாறு காப்பாற்றப்படுவேன்” என்று கதறி அழுகிறான். ஏற்றுக்கொண்ட சமய நெறிகளிலிருந்து விலகி நடப்பவன் படும்பாடாகும் இது.

பதம் 5.26.16
யஸ் த்வ இஹ வை ராஜா ராஜா புருஷோ வா அதண்ட்யே தண்டம்
ப்ரணயதி ப்ராஹ்மயே வா ஸரீர தண்டம் ஸ பாபீயான் நரகே ‘முத்ர
ஸுகரமுகே நிபததி தத்ராதிபலைர் விநிஷ்பிஷ்யமாணாவயவோ
யதைவேஹேக்ஷுகண்ட ஆர்தஸ்வரேண ஸ்வனயன் க்வசின் மூர்ச்சித:
கஸ்மலம் உபகதோ யதைவேஹாத்ருஷ்ட தோஷா உபருத்தா:

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; ராஜா—ஒரு ராஜா; ராஜ-புருஷ—ராசாவின் மனிதன்; வா—அல்லது; அதண்ட்யே—தண்டிக்கத் தகாத ஒருவனுக்கு; தண்டம்—தண்டனை; ப்ரணயதி—அனுபவிக்கச் செய்தல்; ப்ராஹ்மயே—ஒரு அந்தணனுக்கு; வா—அல்லது; ஸரீர-தண்டம்—உடலுக்குத் தண்டனை; ஸ—அம்மனிதன்; அவன் அரசனோ அல்லது அரசாங்க அதிகாரியோ; பாபீயான்—மிகக் கொடியபாவி; நரகே—நரகத்தில்; அமுத்ர—மறுபிறப்பில்; ஸுகரமுகே—சூகரமுகம் என்னும் பெயருடைய; நிபததி—வீழ்ந்து; தத்ரா—அங்கே; அதிபலை—யமராஜனின் வலிமை மிக்கத் தூதர்களால்; விநிஷ்பிஷயமான—அரைக்கப்பட்டு; அவயவ—அவயங்கள்; யதா—போன்று; ஏவ—உறுதியாக; இஹ—இங்கு; இக்ஷு—கண்ட கரும்பு; ஆர்த-ஸ்வரேண—இரங்கத்தக்க ஒலியுடன்; ஸ்வனயன்—அழுதுகொண்டு; க்வசித்—சிலசமயம்; மூர்ச்சித—மூர்ச்சையடைகிறான்; கஸ்மலம்-உபகத—மாயைக்காளாகி; யதா—போன்று; ஏவ—உண்மையில்; இஹ—இங்கே; அத்ருஷத-தோஷா—தவறில்லாதவன்; உபருத்தா—தண்டனைக்காக கைது செய்யப்படுகிறான்.

ஓர் அரசன் அல்லது அரசாங்க அதிகாரி குற்றம் செய்யாத ஒருவனைத் தண்டித்தாலோ அல்லது ஓர் அந்தணனுக்கு உடல் ரீதியாகத் தண்டனை வழங்கினாலோ அவனது மறுபிறப்பில் அவன் யம தூதர்களால் சூகரமுகம் என்னும் நரகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறான். அங்கே அவன் யமதூதர்களால், சாறு எடுப்பதற்காகக் கரும்பு பிழியப்படுவதுபோல் பிழியப்படுகிறான். பாவம் செய்த அந்த உயிர்வாழி தவறு செய்யாத ஒருவன் தண்டனை அனுபவிப்பது போல் மிகவும் இரங்கத்தக்க ஒலியிலே அழுது அரற்றி மூர்ச்சையடைகிறான் குற்றமற்ற ஒருவனைத் தண்டிப்பதன் விளைவு இதுவேயாகும்.

பதம் 5.26.17
யஸ் த்வ இஹ வை பூதானாம் ஈஸ்வரோபகல்பித வ்ருத்தினாம்
அவிவிக்த-பரவ்யதானாம் ஸ்வயம் புருஷோபகல்பித-வ்ருதத்தில் விவிக்த
பர-வ்யதோ-வ்யதாம் ஆசரதி ஸ பரத்ராந்தகூபே தத்-அபித்ராஹேண
நிபததி தத்ர ஹாஸௌ தைர் ஜந்துபி பஸு-ம்ருக-பக்ஷி- ஸரீஸ்ருபைர்
மஸக யூகா மத்குண மக்ஷிகாதிபிர் யே கே சாபித்ருக்தாஸ் தை: ஸர்வதோ
‘பித்ருஹ்யமாணஸ் தமஸி விஹத-நித்ரா நிர்வ்ருதிர் அலப்தாவஸ்தான:
பரிக்ராமதி யதா குஸரீரே ஜீவ:

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; பூதானாம்—சில உயிர்வாழிகளுக்கு; ஈஸ்வர-பரம—நெறியாளரால்; உபகல்பித—நிர்ணயித்த; வ்ருத்தீனாம்—அவன் வாழும் வழி; அவிவிக்த—புரிந்து கொள்ளாது; பர-வ்யதானாம்—பிறர் வேதனை; ஸ்வயம்—நிர்ணயிக்கப்பட்டு; புருஷ-உபகல்பித—பரமபுருஷரால்; வ்ருத்தி—அவற்றின் வாழ்க்கை; விவிக்த—புரிந்துகொண்டு; பர-வ்யத—பிறரின் வேதனைச் சூழ்நிலைகள்; வ்யதாம் ஆசரதி—ஆனால் இன்றும் வேதனைக்குக் காரணமாகிறது; ஸ—அப்படிப்பட்டவன்; பரத்ர—அவனது மறுபிறப்பில்; அந்தகூபே—அந்தகூபம் என்னும் நரகத்தில்; தத்—அவர்களுக்கு; அபித்ரோஹேண—பகைமை என்னும் பாவத்தினால்; நிபததி—வீழ்கிறான்; தத்ர—அங்கே; ஹ—உண்மையில்; அஸௌ—அவன்; தை ஐந்துபி—அக்குறிப்பிட்ட உயிர்வாழிகளால்; பஸு—மிருகங்கள்; ம்ருக—கொடிய மிருகங்கள்; பக்ஷி—பறவைகள்; ஸரீஸ்ரு-பை—பாம்புகள்; மஸக—கொசுக்கள்; யூகா—பூச்சிகள்; மத்குண—புழுக்கள்; மக்ஷிக-ஆதிபி—ஈக்கள் போன்றவை; யேகே—யாராயினும்; ச—மேலும்; அபித்ருக்தா—துன்புறுத்துதல்; தை—அவர்களால்; ஸர்வத—எங்கும்; அபித்ருஹ்யமாண—காயம்பட்டு; தமஸி—இருளில்; விஹத—துன்புறுதல்; நித்ரா-நிர்வ்ருத்தி—அவற்றின் தங்குமிடம்; அலப்த—கிடைப்பதற்கரியது; அவஸ்தான—ஒரு தங்குமிடம்; பரிக்ராமதி—அலைகிறான்; யதா—போன்று; கு-ஸரீர—ஒரு இழிந்த உடலில்; ஜீவ—ஓர் உயிர்வாழி.

பரம புருஷ பகவானின் ஏற்பாட்டின் பேரிலேயே இழிந்த உயிர்களான மூட்டைப் பூச்சிகளும், கொசுக்களும் மனிதன் மற்றும் விலங்கின் இரத்தத்தினை உறிஞ்சி வாழ்கின்றன. இவ்விழிந்த பூச்சிகளுக்குத் தாம் மனிதனைக் கடிப்பதினால் அவன் வேதனை அடைகிறான் என்பது தெரியாது. ஆயினும் முதல்தர மனிதர்களான அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் அறிவு வளர்ச்சி பெற்றவர்கள் அதனால் கொல்லப்படுவது எத்துணை துன்பமானது என்பதை அவர்கள் நன்கறிவர். பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் எந்தவித பேதமுற்ற இழிந்த ஜந்துக்களைக் கொன்றாலோ அல்லது துன்புறுத்தினாலோ அவன் நிச்சயம் பாவம் செய்தவனேயாவான். பரமபுருஷ பகவான் அவனை அந்த கூபம் என்னும் நரகத்தில் தள்ளுவதின்மூலம் தண்டிக்கிறார். அங்கே அவன், அவனால் முன்பு துன்புறுத்தப்பட்ட பறவைகள், ஈக்கள் போன்றவற்றினால் தாக்கப்படுகிறான். அவை அவனை எல்லா பக்கங்களிலும் தாக்கி அவன் நித்திரை சுகத்தினைத் திருடிக்கொள்கின்றன. ஒய்வில்லாத காரணத்தினால் அவன் இருளில் தொடர்ந்து இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கின்றான். இவ்வாறு அந்த கூபத்தில் அவன் அனுபவிக்கும் துன்பமானது இழிந்த பூச்சிகள் அனுபவிக்கும் துன்பம் போன்றதாகும்.

பதம் 5.26.18
யஸ் த்வ இஹ வா அஸம்விபஜ்யாஸ்னாதி யத் கிஞ்சனோபதைம்
அநிர்மித-பஞ்சயஜ்ஞோ வாயஸ-ஸம்ஸ்துத: ஸ பரதர க்ருமி போஜனே
நரகாதமே நிபததி தத்ர ஸத-ஸஹஸ்ர-யோஜனே க்ருமி குண்டே-க்ருமி-பூத:
ஸ்வயம் க்ருமிபிர் ஏவ பக்ஷயமான: க்ருமி போஜன யாவத் தத் அப்ரத்தா
ப்ரஹுதாதோ ‘நிர்வேஸம் ஆத்மானம் யாதயதே

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வா—அல்லது; அஸம்விபஜ்—பிரித்துக் கொடுக்காது; அஸ்னாதி—உண்டால்; யத்கிஞ்சன—எதுவாயினும்; உபதைம்—கிருஷ்ணரின் கருணையினால் பெறப்படுவது; அநிர்மித—செய்யவில்லையென்றால்; பஞ்ச-யோஜ்ஞ:—ஐந்து வகையான வேள்விகள்; வாயஸ—காக்கைகளுடன்; ஸம்ஸ்துத—சமமானவன் என்று வர்ணிக்கப்படுகிறான்; ஸ—அம்மனிதன்; பரதர—மறுபிறப்பில்; க்ருமிபோஜன—கிருமிபோஜனம் என்னும் பெயருடைய; நரக-அதமே—நரகங்களிலேயே மிகவும் வெறுக்கத்தக்க நரகம்; நிபததி—வீழ்கிறான்; தத்ர—அங்கே; ஸத-ஸஹஸ்ர-யோஜனே—100,000 யோஜனங்கள் (800,000) அளவுடைய; க்ருமி-குண்டே—கிருமிகளின் குளத்தில்; க்ருமி-பூத—கிருமிகளுள் ஒன்றாகின்றன; ஸ்வயம்—அவன் தன்னை; க்ருமிபி—பிற கிருமிகளால்; ஏவ—நிச்சயமாக; பக்ஷயமாண—உண்ணப்படுகிறான்; க்ருமி-போஜன—தின்கின்ற கிருமிகள்; யாவத்—அதுவரை; தத்—அந்தக்குளம் அகலத்தில்; அப்ரத்த-அப்ரஹுத—பகிர்ந்தளிக்காமலும், வழங்காமலும் உள்ள உணவு; அத—ஒருவன் உண்டால்; அநிர்வேஸம்—ஈடு செய்யாதவன்; ஆத்மானம்—அவனுக்கு; யாதயதே—வேதனை அளிக்கிறான்.

ஒரு மனிதன் தான் பெற்ற உணவினை விருந்தினர்களுக்கோ, முதியவர்களுக்கோ, குழந்தைகளுக்கோ பகிர்ந்து கொடுக்காமல் தான் மட்டும் உண்டானென்றாலும் அவன் அதனை ஐவகை வேள்விகளைச் செய்யாமல் உண்டானென்றாலும் அவன் ஒரு காக்கையினை விட சிறந்தவனாகிவிட மாட்டான். அவன் மரித்த பிறகு மிகவும் வெறுக்கத்தக்கக் கிருமி போஜனம் என்னும் நரகத்தில் இடப்படுகிறான். இந்நரகத்தில் 100,000 யோஜனங்கள் (800,000 மைல்கள்) அகலமுடைய கிருமிகள் நிறைந்த குளம் ஒன்று இருக்கின்றது. அவன் இக்குளத்தில் ஒரு கிருமியாகி பிற கிருமிகளை உண்ணச் செய்கிறான். பிற கிருமிகள் உண்ணக் கொடுப்பதையும் உண்கிறான். அவன் தனது செயலுக்குத் தன் மரணத்திற்கு முன்பு கழுவாய் தேடிக் கொள்ளவில்லையென்றால் அவன் கிருமி போஜன நரகத்தில் உள்ள குளத்தில், அது எத்துணை யோஜனம் அகலமுடையதாக இருக்கின்றதோ அத்துணை ஆண்டுகள் இருந்து துன்புறுவான்.

பதம் 5.26.19
யஸ் த்வ இஹ வை ஸ்தேயேன பலாத் வா ஹிரண்ய ரத்னாதீனி
ப்ராஹ்மணஸ்ய வாபஹரதி அன்யஸய வானாபதி புருஷஸ் தம் அமுத்ர
ராஜன் யம-புருஷா அயஸ்மயைர் அக்னி-பிண்டை: ஸந்தம்ஸைஸ த்வசி
நிஷ்குஷந்தி

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; ஸ்தேயேன—திருடுவதினால்; பலாத்—பலாத்காரத்தினால்; வா—அல்லது; ஹிரண்ய—பொன்; ரத்ன—இரத்தினங்கள்; ஆதீனி—போன்றவை; ப்ராஹ்மணஸ்ய—ஓர் அந்தணனின்; வா—அல்லது; அபஹரதி—திருடுதல்; அன்யஸ்ய—பிறரின்; வா—அல்லது; அனாபதி—பேரிடர் இன்றி; புருஷ—ஒருவன்; தம்—அவனை; அமுத்ர—மறு பிறப்பில்; ராஜன்—ஒ மன்னனே; யம புருஷை—யமதூதர்கள்; அயமயை—இரும்பினால் செய்யப்பட்ட; அக்னி-பிண்டை—தீயில் வாட்டப்பட்டக் குண்டுகள்; ஸந்தம்ஸை—பற்றுக்குறட்டுடன்; த்வசி—தோல் மீது; நிஷ்குஷந்தி—துண்டுதுண்டாகக் கிழித்தல்.

அன்பார்ந்த மன்னனே, நெருக்கடி நிலை இன்றி ஒருவன் ஒர் அந்தணனிடம் அல்லது பிறரிடம் அவனது இரத்தினங்கள், பொன் போன்றவற்றைத் திருடினான் என்றால் அவன் சந்தம்ஸம் என்னும் நரகத்தில் இடப்படுகிறான். அங்கே அவனது உடல்சதை தீயில் வாட்டப்பட்டு சூடேறிச் சிவந்திருக்கும் இரும்புக் குண்டுகள் மற்றும் பற்றுக்குறடினால் துண்டு துண்டாகக் கிழிக்கப்படுகிறது. இவ்வாறு அவனது உடல் முழுவதும் சிதைக்கப்படுகிறது.

பதம் 5.26.20
யஸ் த்வ இஹ வா அகம்யாம் ஸ்த்ரியம் அகம்யம் வா புருஷம் யோஷித்
அபிகச்சதி தாவ் அமுத்ர கஸயா தாடயந்தஸ் திக்மயா ஸுர்ம்யா
லோஹமய்யா புருஷம் ஆலிங்கயந்தி ஸ்த்ரியம் ச புருஷ ரூபயா
ஸுர்ம்யா

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வா—அல்லது; அகம்யாம்—பொருந்தாத; ஸ்த்ரியம்—ஒரு பெண்; அகம்யம்—பொருந்தாத; வா—அல்லது; புருஷம்—ஒரு ஆண்; யோஷித்—ஒரு பெண்; அபிகச்சதி—பாலியல் உறவிற்கு அணுகினால்; தெள—அவர்கள் இருவரும்; அமுத்ர—மறுபிறப்பில்; கஸயா—கசையினால் (சாட்டையினால்); தாடயந்த—அடிக்கப்பட்டு; திக்மயா—மிகவும் சூடான; ஸுர்ம்யா—ஒர் பிரதிமையினால்; லோஹ-மய்யா—இரும்பினாலான; புருஷம்—அம்மனிதன்; ஆலிங்கயந்தி—அவர்கள்; கட்டித்தழுவுகின்றனர்; ஸ்த்ரியம்—பொன்; ச—மேலும்; புருஷரூபயா—ஓர் ஆணின் வடிவத்தில்; ஸுர்ம்யா—ஒரு பிரதிமையினால்.

ஓர் ஆண் அல்லது பெண் பொருந்தாத எதிர் பாலினரிடம் பாலியல் உறவு கொண்டால் அவர்கள் மரித்தப்பிறகு, யமதூதர்களால் தத்சூரமி என்னும் நரகத்தில் தள்ளப்படுகின்றனர். அங்கே அந்த ஆணும், பெண்ணும் சாட்டையினால் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர். அந்த ஆண் இரும்பினால் செய்த நெருப்பில் போட்டு சிவந்து சூடேறியிருக்கும் பெண் பொம்மையினைப் பலவந்தமாகத் தழுவச் செய்யப்படுகிறான், அதே போல் அப்பெண் ஒரு ஆண் பொம்மையினைப் பலவந்தமாகத் தழுவச் செய்யப்படுகிறாள். இதுதான் கூடாப்பாலுறவிற்குக் கொடுக்கப்படும் தண்டனையாகும்.

பதம் 5.26.21
யஸ் த்வ இஹ வை ஸர்வவாபிகமஸ் தம் அமுத்ர் நிரயே வர்தமானம்
வஜ்ரகண்டக-ஸால்மலீம் ஆரோப்ய நிஷ்கர்ஷந்தி

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; ஸர்வ-அபிகம—விலங்கிற்கும், மனிதனுக்கும் வித்தியாசமின்றி ஒருவன் உடலுறவு கொண்டால்; தம்—அவனை; அமுத்ர—மறுபிறப்பில்; நிரயே—நரகத்தில்; வர்தமானம்—இருக்கும்; வஜ்ரகண்டக-ஸால்மலீம்—வஜ்ராயுதம் போல் முட்கள் உடைய ஓர் இலவமரத்தில்; ஆரோப்ய—அவனை ஏற்றி; நிஷ்கர்ஷந்தி—அவனை அவர்கள் வெளியே இழுப்பர்.

ஒருவன் எந்தவித வித்தியாசமுமின்றி உடலுறவு கொள்பவன் அது மிருகத்தோடாயினும் சரி அவன் மரணமடைந்த பின்னர் வஜ்ரகண்டக சால்மலீ என்னும் நரகத்தில் தள்ளப்படுகிறான். அந்நரகத்தில் வஜ்ராயுதங்களைப் போல் முட்கள் உடைய ஒர் இலவமரம் இருக்கின்றது. யமதூதர்கள் அவனைப் பலவந்தமாக அந்த மரத்தில் கழுவேற்றுகின்றனர். அப்போது அவன் உடல் அம்முட்களினால் சின்னாபின்னமாகக் கிழிக்கப்படுகிறது.

பதம் 5.26.22
யேத்வ இஹ வை ராஜன்யா ராஜ-புருஷா வா அபாகண்டா தர்ம-
ஸேதூன் நிபதந்தி தே ஸம்பரேத்ய வைதரண்யம் ருபந்தி பின்ன-
மர்யாதாஸ் தஸ்யாம் நிரய பரிகா-பூதாயாம் நத்யாம் யாத-கணை இத:
தத: பக்ஷ்யமாணா ஆத்மனா ந வ்யுஜ்யமானாஸ் சாஸுபிர்
உஹ்யமானா: ஸ்வாகேன கர்ம-பாகம் அனுஸ்மரந்தோவிண் மூத்ர-
பூய-ஸோணித-கேஸ நாகாஸ்தி மேதோ-மாம்ஸ-வஸா வாஹின்யாம்
உபதப்யந்தே

யே—இவர்கள்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; ராஜன்யா—அரச குலத்தைச் சேர்ந்தோர் அல்லது சத்திரியர்கள்; ராஜ-புருஷா—அரசு பணியாளர்கள்; வா—அல்லது; அபாகண்டா—பொறுப்புள்ள குடும்பங்களில் பிறந்தோர் எனினும்; தர்ம-ஸேதூன்—குறிப்பிட்ட சமய அறநெறிகளின் எல்லையினை; பிந்தந்தி—மீறினால்; தே—அவர்கள்; ஸம்பரேத்ய—இறந்த பிறகு; வைதரண்யாம்—வைதரணி என்னும்; நிபதந்தி—வீழ்ந்து; பின்ன-மர்யாதா—சமய அறநெறிகளைச் சிதைத்தவன்; தஸ்யாம்—அதில்; நிரய-பரிகா-பூதாயாம்—அகழியினால் ஆழப்பட்டிருக்கும் நரகம்; நத்யாம்—ஆற்றில்; யாத-கணை—கொடிய நீர்வாழ்வன; இத: தத:—இங்கும் அங்கும்; பக்ஷ்யமாணா—உண்ணப்பட்டு; ஆத்மனா—உடலுடன்; ந—இல்லை; வியுஜ்யமானா—சுமந்து செல்லப்பட்டு; ச—மற்றும்; அஸுபி:—உயிர்காற்று; உஹ்யமானா:—சுமந்து கொண்டு; ஸ்வ-அகேன—அவனது பாவச் செயலினால்; கர்ம-பாகம்—அவனது பாவத்தின் பலன்; அனுஸ்மரந்த—நினைத்து; விட்—மலம்; மூத்ர—மூத்திரம்; பூய—சீழ்; ஸோனித—உதிரம்; கேஸ—மயிர்; நக—நகம்; அஸ்தி—எலும்புகள்; மேத—மஜ்ஜைகள்; மாம்ஸ—சதை; வஸா—கொழுப்பு; வாஹின்யாம்—ஆற்றில்; உபதப்யந்தே—வேதனையினால் துன்புறுதல்.

ஒரு பொறுப்புள்ள குடும்பத்தில் பிறந்தவன் சத்திரியன், அரசகுலம், அல்லது அரசுப் பணியாளன் அவனுக்குரிய சமய நெறிக்கேற்ப குறிப்பிடப்பட்டிருக்கும் கடமைகளைப் புறக்கணித்தான் என்றால் அவன் மிகவும் இழிந்தவனாகி மரண வேளையில் வைதரணீ என்னும் நரகத்திலுள்ள ஆற்றில் வீழ்கிறான். அகழியினால் சூழப்பட்டிருக்கும் இந்நரகமானது கொடிய நீர்வாழ் விலங்குகளை உடையதாகும். வைதரணீ ஆற்றில் ஒரு பாவி தூக்கி எறியப்பட்டான் என்றால் அதிலிருக்கும் நீர்வாழ்விலங்குகள் உடனே அவனை தின்னத் தொடங்கும். அவனது உடலைப் பிரிய முடியாது. அவன் தொடர்ந்து தனது பாவச் செயல்களை எண்ணிக் கொண்டு மலமும், மூத்திரமும், சீழும், உதிரமும், மயிரும், நகமும், எலும்பும், மஜ்ஜையும், கொழுப்பும் நிறைந்திருக்கும் அந்த ஆற்றில்கிடப்பான்.

பதம் 5.26.23
யே த்வ இஹ வை வ்ருஷலீ-பதயோ நஷ்ட-ஸௌசாசார நியமாஸ்
த்யக்த-லஜ்ஜா: பஸு சர்யாம் சரந்தி தே சாபி ப்ரேத்ய பூய-விண்
மூத்ர-ஸ்லேஷ்ம-மல-பூர்ணார்ணவே நிபதந்தி தத் ஏவாதிபீபத்ஸிதம்
அஸ்னந்தி

யே—இம்மனிதர்கள்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; வ்ருஷலீபதய—சூத்திரப் பெண்களின் கணவர்கள்; நஷ்ட—இழந்து; ஸௌச-ஆசாரநியமா—அவர்களின் சுத்தம்; நன்னடத்தை, ஒழுங்குமுறை வாழ்க்கை; த்யக்த-லஜ்ஜா—வெட்கமின்றி; பஸு-சர்யாம்—விலங்குகள் போல் நடந்து; சரந்தி—அவர்கள் செயல்படுகின்றனர்; தே—அவர்கள்; ச—மேலும்; அபி—உண்மையில்; ப்ரேத்ய—இறந்து; பூய—சீழ்; விட்—மலம்; மூத்ர—மூத்திரம்; ஸ்லேஷ்ம—சளி; மலா—எச்சில்; பூர்ண—நிறைந்து; அர்ணவே—ஒரு கடலில்; நிபதந்தி—வீழ்ந்து; தத்—அது; ஏவ—மட்டும்; அதிபீபத்ஸிதம்—முற்றிலும் அருவருக்கத்தக்கது; அஸ்னந்தி—அவர்கள் உணர்கின்றனர்.

இழிந்த சூத்திரக் குலத்தில் பிறந்த பெண்களின் கணவர்கள் மிருகங்களைப் போன்றே வாழ்கின்றனர். அதனால் அவர்களிடம், நன்னடத்தையோ, சுத்தமோ, அல்லது ஒழுங்குமுறை வாழ்க்கையோ இருப்பதில்லை. மரணத்திற்குப் பிறகு இம்மனிதர்கள் பூயோதம் என்னும் நரகத்தில் தூக்கி எறியப்படுகின்றனர். அங்கே இவர்கள், சீழும், மலமும், மூத்திரமும், சளியும் நிறைந்த கடலினுள் வைக்கப்படுகின்றனர். தம்மைத் திருத்திக்கொள்ளாத சூத்திரர்கள் அக்கடலினுள் தூக்கி எறியப்பட்டு, அருவருக்கத்தக்க இவற்றைப் பலவந்தமாக உண்ணச் செய்யப்படுகின்றனர்.

பதம் 5.26.24
யே த்வ இஹ வை ஸ்வ-கர்தப-பதயோ ப்ராஹ்மணாதயோ ம்ருகயா
விஹாரா அதீர்தே ச ம்ருகான் நிக்னந்தி தான் அபி ஸம்பரேதால்
லக்ஷ்ய-பூதான் யம புருஷா இஷுபிர் வித்யந்தி

யே—இவர்கள்; து—ஆனால்; வை—அல்லது; ஸ்வ—நாய்கள்; கர்தப—கழுதைகள்; பதய—வளர்ப்பவர்கள்; ப்ராஹ்மண-ஆதய—அந்தணர்கள், வைசியர்கள், சூத்திரர்கள்; ம்ருகயா விஹாரா—காட்டில் மிருகங்களை வேட்டையாடுவதில் இன்புறுகின்றனர்; அதீர்தே—குறிப்பிடப்பட்டதைக் காட்டிலும்; ச—மேலும்; ம்ருகான்—மிருகங்கள்; நிக்னந்தி—கொன்று; தான்—அவற்றை; அபி—உண்மையில்; ஸம்பரேதான்—இறக்கின்றனர்; லக்ஷ்ய-பூதான்—குறிவைக்கப்பட்டு; யம புருஷா:—யமதூதர்கள்; இஷுபி—அம்புகளால்; வித்யந்தி—கிழிக்கின்றனர்.

இப்பிறப்பில் உயர்குலத்தில் (அந்தண, சத்திரிய, வைசிய) பிறந்தவன், தனது நாய், கோவேறு கழுதை அல்லது கழுதை போன்றவற்றுடன் காட்டிற்குச் சென்று மிருகங்களை வேட்டையாடிக் கொன்றானென்றால் அவன் மரித்தபிறகு பிராணரோதம் என்னும் நரகத்தில் வைக்கப்படுகிறான். அங்கே அவனை யமதூதர்கள் தங்களது குறிக்கு இலக்காக்கி, தமது அம்புகளினால் கிழித்தெறிகின்றனர்.

பதம் 5.26.25
யே த்வ இஹ வை தாம்பிகா தம்ப-யஜ்ஞேஷு பஸுன் விஸஸந்தி
தான் அமுஷமில் லோக வைஸஸே நரகே பதிதான் நிரய-பதயோ
யாதயித்வா விஸஸந்தி

யே—இந்த மனிதர்கள்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; தாம்பிகா—செல்வப் பெருமையும்; கௌரவ-நிலையும் உடையோர்; தம்ப-யஜ்-ஞேஷு—கௌரவத்தினை அதிகரிப்பதற்காகச் செய்யும் வேள்வி; பஸுன்—மிருகங்கள்; விஸஸந்தி—கொன்று; தான்—அவற்றை; அமுஷ்மின்-லோகே—மனு உலகில்; வைஸஸே—வைச்ச அல்லது விசசனம்; நரகே—நரகத்தில்; பதிதான்—வீழ்ந்து; நிரயபதய—யமதூதர்கள்; யாதயித்வா—அதிக தேவைக்குக் காரணமாகி; விஸஸந்தி—கொல்லப்படுகிறான்.

இப்பிறப்பில் தனது உயர் நிலையினால் செருக்குற்று பெளதீகப் பெருமைக்காக தேவையின்றி விலங்குகளைப் பலியிடுபவன் அவனது மரணத்திற்குப் பிறகு விசசனம் என்னும் நரகத்தில் இடப்படுகிறான். அங்கே யமதூதர்கள் அவனைப் பயங்கரமாகத் துன்புறுத்திப் பின்னர் கொல்கின்றனர்.

பதம் 5.26.26
யஸ் த்வ இஹ வை ஸவ ரணாம் பார்யாம் த்விஜோ ரேத: பாயயதி
காம-மோஹிதஸ் தம் பாப-க்ருதம் அமுத்ர ரேத:-குரலயாயாம்
பாதயித்வா ரேத: ஸம்பாயயந்தி

யா—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; ஸ-வரணாம்—அதே பிரிவைச் சேர்ந்து; பார்யாம்—அவன் மனைவியை; த்விஜ—உயர் குலத்தைச் சேர்ந்த ஒருவன்; (அந்தண, சத்திரிய, வைசியக்குலம்); ரேத—சுக்கிலம்; பாயயதி—குடிப்பதற்குக் காரணம்; காம மோஹித—காம இச்சையில் மயங்கி; தம்—அவனை; பாப-க்ருதம்—பாவம் செய்கின்றான்; அமுத்ர—மறுபிறப்பில்; ரேத குரலயாயாம்—சுக்கில ஆற்றில்; பாதயித்வா—எறியப்படுகிறான்; ரேத—சுக்கிலம்; ஸம்பாயயந்தி—பலவந்தமாக குடிக்க வைக்கப்படுகிறான்.

இருபிறப்பினர் குலத்தில் (அந்தண, சத்திரிய, வைசியக்குலம்) பிறந்த ஒரு மூடமனிதன் தன் மனைவியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகத் தனது சுக்கிலத்தைப் பலவந்தமாக அவளைக் குடிக்கச் செய்தானென்றால், அவன் மரணமடைந்தபிறகு லாலாபக்ஷம் என்னும் நரகத்தினை அடைகிறான். அங்கே அவன் சுக்கில ஆற்றில் அதனைக் குடிப்பதற்காகப் பலவந்தமாக தூக்கி எறியப்படுகிறான்.

பதம் 5.26.27
யே த்வ இஹ வை தஸ்யவோ ‘க்னிதா கரதா க்ராமான் ஸாரதான் வா
விலும்பந்தி ராஜானோ ராஜ-படா வா தாம்ஸ் சாபி ஹி பரேத்ய யமதூத
வஜ்ர-தம்ஸ்ட்ரா: ஸ்வான: ஸப்த ஸதானி விம்ஸதிஸ் ச ஸரபஸம்
காதந்தி

யே—இம்மனிதர்கள்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; தஸ்யவ—திருடர்களும்; கொள்ளையர்களும்; அக்னி-தா—தீவைப்பர்; கரதா—விஷம் வைப்பர்; க்ராமான்—கிராமங்கள்; ஸாரதான்—வியாபாரிகள்; வா—அல்லது; விலும்பந்தி—கொள்ளையிடல்; ராஜான்—அரசர்கள்; ராஜ-படா—அரசு எதிரிகள்; வா—அல்லது; தான்—அவர்கள்; ச—மேலும்; அபி—உண்மையில்; ஹி—உறுதியாக; பரேத்ய—இறந்தபின்; யமதூத—யமதூதர்கள்; வஜ்ர-தம்ஸ்ட்ரா—கூர்மையானப் பற்களுடன்; ஸ்வான—நாய்கள்; ஸப்த-ஸதானி—எழுநூறு; விம்ஸதி—இருபது; ச—மேலும்; ஸரபஸம்—பெரும்பசியுடன்; காதந்தி—விழுங்கும்.

இவ்வுலகில் சில கொள்ளைக்காரர்கள் பிறர் வீடுகளுக்குத் தீ வைக்கின்றனர் அல்லது பிறருக்கு விஷம் வைக்கின்றனர். அரச குலத்தைச் சேர்ந்தோர் அல்லது அரசு அதிகாரிகள் சில சமயம் வியாபாரிகளிடமிருந்து வரிவசூலிப்பதற்காக அவர்களைப் பலவந்தப்படுத்துகின்றனர், வெவ்வேறான வழிமுறைகளையும் பயன்படுத்துகின்றனர். மரணத்திற்குப் பிறகு இந்த அரக்கர்கள் காரமேயாதனம் என்னும் நரகத்தில் வைக்கப்படுகின்றனர். இந்நரகத்தில் வஜ்ராயுதம் போன்ற கூர்மையானப் பற்களையுடைய 720 நாய்கள் இருக்கின்றன. யமதூதர்களின் கட்டளையின் பேரில் இந்நாய்கள் இப்பாவிகளை பெரும் பசியுடன் விழுங்குகின்றன.

பதம் 5.26.28
யஸ் த்வ இஹ வா அந்ருதம் வததி ஸாக்ஷ்யே த்ரவ்ய விநிமயே தானே
வா கதஞ்சித் ஸ வை ப்ரேத்ய நரகே ‘வீசிமதி அத:-ஸிரா நிரவகாஸே
யோஜன-ஸதோச்சராயாத் கிரி-மூர்த்ன: ஸம்பாத்யதே யத்ர ஜலம்
இவ ஸ்தலம் அஸ்ம ப்ருஷ்டம் அவபாஸதே தத் அவீசிமத்திலஸோ
விஸீர்யமாண-ஸரீரோ ந ம்ரியமாண: புனர் ஆரோபிதோ நிபததி

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வா—அல்லது; அந்ருதம்—ஒரு பொய்; வததி—பேசுகிறான்; ஸாக்ஷ்யே—சாட்சியளித்து; த்ரவ்ய-விநிமயே—பொருட்களின் பரிமாற்றத்திற்காக; தானே—தானமளிப்பது; வா—அல்லது; கதஞ்சித்—எவ்வாறேனும்; ஸ—அம்மனிதன்; வை—உண்மையில்; ப்ரேத்ய—இறந்தபிறகு; நரகே—நரகத்தில்; அவீசி-மதி—அவீசிமத் (தண்ணீரில்லாத) என்னும் பெயருடைய; அத: ஸிரா—அவனது தலைகீழே இருக்கும்படி; நிரவகாஸே—ஆதரவின்றி; யோஜன-ஸத—எண்ணூறு மைல்கள்; உச்சராயாத்—உயரமுடைய; கிரி—ஒரு மலையின்; மூர்த்ன—உச்சியிலிருந்து; ஸம்பாத்யதே—எறியப்படுகிறான்; யத்—இங்கே; ஜலம் இவ—தண்ணீர் போன்ற; ஸ்தலம்—நிலம்; அஸ்ம ப்ருஷ்டம்—கல்தரையில்; அவபாஸதே—தோன்றும்; தத்—அந்த; அவீசிமத்—தண்ணீர் அல்லது அலைகள் அற்ற; திலஸ—சிறு விதைகள் போன்ற துண்டுகளாக; விஸீர்யமான—உடைகின்றான்; ஸரீர—உடல்; ந ம்ரியமாண—இறப்பதில்லை; புன—மீண்டும்; ஆரோபித—உயரே தூக்கிச் செல்லப்பட்டு; நிபத்தி—கீழே விழுகிறான்.

ஒருவன் இப்பிறப்பில் பொய்சாட்சி கூறினாலோ அல்லது வியாபாரத்திலோ, தானம் வழங்குவதிலோ பொய் கூறினாலோ அவன் இறந்த பிறகு யமதூதர்களால் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறான். இம்மனிதன் எண்ணூறு மைல்கள் உயரமுடைய மலையின் உச்சிக்குத் தூக்கி செல்லப்பட்டு அவீசிமத் என்னும் நரகத்தில் தலைகீழாகப் போடப்படுகிறான். இந்நரகத்தில் தங்குமிடம் எல்லாம் கிடையாது. இது நீரில் உள்ள அலைகளைப் போல் தோற்றம் தரும் உறுதியான கல்லினால் ஆனதாகும். அங்கே தண்ணீர் என்பதே கிடையாது அதனால் இந்நரகம் அவீசமத் (தண்ணீரில்லாதது) என்று அழைக்கப்படுகின்றது. அம்மனிதன் மலை உச்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டு அவனது உடல் சுக்குநூறாகச் சிதறிய போதிலும் அவன் மரிப்பதில்லை மாறாகத் தொடர்ந்து தண்டனை அனுபவிக்கின்றான்.

பதம் 5.26.29
யஸ் த்வ இஹ வை விப்ரோ ராஜன்யோ வைஸ்யோ வா ஸோம-
பீதஸ் தத்-களத்ரம் வா ஸுராம் வ்ரத-ஸ்தோ ‘பி வா பிபதி ப்ரமாததஸ்
தேஸாம் நிரயம் நீதானாம் உரஸி பதாக்ரம்யாஸ்யே வாஹ்னினா த்ரவ-
மாணம் கார்ஷ்ணாயஸம் நிஷிஞ்சந்தி

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; விப்ர—ஒரு படித்த அந்தணன்; ராஜன்ய—ஒரு சத்திரியன்; வைஸ்ய—வைசியன்; வா—அல்லது; ஸோம-பீத—சோமரஸம் பருகினால்; தத்—அவனுடைய; களத்ரம்—மனைவி; வா—அல்லது; ஸுராம்—மது; வ்ரத-ஸ்த—ஓர் விரதத்தில் இருந்து; அபி—உறுதியாக; வா—அல்லது; பிபதி—பருகுகிறான்; ப்ரமாதத—மயக்கத்தினால்; தேஷாம்—அனைவரும்; நிரயம்—நரகத்திற்கு; நீதானாம்—கொண்டு செல்லப்படுகின்றனர்; உரஸி—மார்பின்மீது; பதா—கால்களினால்; ஆக்ரம்ய—ஏறி; அஸ்யே—வாயினுள்; வஹ்னினா—தீயினால்; த்ரவமாணம்—உருகிய; கார்ஷ்ணாயஸம்—இரும்பு; நிஷிஞ்சந்தி—ஊற்றுகின்றனர்;

எந்தவொரு அந்தணனோ அல்லது அவன் மனைவியோ மது அருந்தினால் அவர்கள் யமதூதர்களால் அய: பானம் என்னும் நரகத்திற்குத் தூக்கிச் செல்லப்படுகின்றனர். இந்நரகம் சத்திரியன், வைசியன் அல்லது விரதம் பூண்டவனாக இருந்து, அவன் சோமரஸம் பருகி மயங்கினான் என்றால் அவனுக்காகக் காத்திருக்கின்றது. அய: பானத்தில் யமதூதர்கள் அவர்களின் மார்பின் மீது கால்களினால் ஏறி மிதித்து அவர்கள் வாயில் காய்ச்சி உருக்கிய இரும்பினை ஊற்றுகின்றனர்.

பதம் 5.26.30
அத ச யஸ்த்வ இஹ வா ஆத்ம ஸம்பாவனேன ஸ்வயம் அதமோ ஜன்ம
தபோ வித்யாசார வர்ணாஸ்ரமவதோ வரீயஸோ ந பஹு மன்யதே
ஸ ம்ருதக ஏவ ம்ருத்வா க்ஷாரகர்தமே நிரயே ‘வாக்ஸிரா நிபாதிதோ
துரந்தா யாதனா ஹி அஸ்னுதே

அத—மேலும்; ச—மேலும்; ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வா—அல்லது; ஆத்ம-ஸம்பாவனேன—வீண்கர்வத்தினால்; ஸ்வயம்—அவனை; அதம—மிகவும் மழிந்த; ஜன்ம—நற்பிறப்பு; தப—தவங்கள்; வித்யா—கல்வி; ஆசார—நன்னடத்தை; வர்ண-ஆஸ்ரம்-வத:—வர்ணாஸ்ரம தர்மத்தினைக் கடுமையாகப் பின்பற்றுதல்; வரீயஸ—மரியாதைக்குரிய; ந—இல்லை; பஹு—அதிகம்; மன்யதே—மரியாதைகள்; ஸ—அவன்; ம்ருதக—ஓர் இறந்த உடல்; ஏவ—மட்டும்; ம்ருத்வா—இறந்தபிறகு; க்ஷாரகர்தமே—க்ஷரகர்தமம் என்னும் பெயருடைய; நிரயே—நரகத்தில்; அவாக்-ஸிரா—அவனது தலை கீழாக இருக்கும்படி; நிபாதித—எறியப்படுகிறான்; துரந்தா-யாதனா—மிகுந்த வேதனைக்குரிய நிலையில்; ஹி—உண்மையில்; அஸ்னுதே—துன்புறுகிறான்.

இழி குலத்தில் பிறந்த அருவருக்கத்தக்க ஒருவன் இப்பிறப்பில் பொய்யானக் கர்வம் கொண்டு “நான் பெரியவன்” என்று கருதுகிறான். இதனால் அவன் தன்னை விட பிறப்பு, தவங்கள், கல்வி, நடத்தை, குலம் அல்லது ஆன்மீகப் பிரிவு போன்றவற்றில் உயர்ந்திருக்கும் ஒருவனுக்கு உரிய மரியாதை தர மறுக்கிறான். இப்படிப்பட்டவன் இப்பிறப்பிலேயே இறந்த பிணத்துக்குச் சமமானவனாக இருக்கிறான். இறந்த பிறகோ க்ஷாரகர்தமம் என்னும் நரகத்தில் தலைகீழாகத் தூக்கி எறியப்படுகிறான். அங்கே அவன் யமதூதர்களின் கரங்களில் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறான்.

பதம் 5.26.31
யே த்வ இஹ வை புருஷா: புருஷ:-மேதேன யஜந்தே யஸ் ச
ஸ்த்ரியோ ந்ரு-பஸுன் காதந்தி தாம்ஸ் ச தே பஸவ இவ நிஹதா
யம-ஸதனே யாதயந்தோ ரக்ஷோகணா: ஸெளனிகா இவ
ஸ்வதிதினாவத்யாஸ்ருக் பிபந்தி நிருத்யந்தி ச காயந்தி ச
ஹ்ருஷ்யமாணா யதேஹ புருஷாதா:

யே—இம்மனிதர்கள்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; புருஷா:—மனிதர்கள்; புருஷமேதேன—ஒருவனை நரபலி கொடுப்பதினால்; யஜந்தே—வழிபடுகிறான் (காளிதேவி அல்லது பத்ரகாளி); யா:—இவர்கள்; ச—மேலும்; ஸ்த்ரிய—பெண்கள்; ந்ரு-பஸுன்—நரபலிகொடுக்கப்படும் மனிதர்கள்; காதந்தி—உண்கின்றனர்; தான்—அவர்களை; ச—மேலும்; தே—அவர்கள்; பஸவ-இவ—மிருகங்களைப் போன்று; நிஹதா—கொல்லப்படுகிறான்; யம-ஸதனே—யமராஜனின் இருப்பிடத்தில்; யாதயந்தா:—தண்டிக்கப்பட்டு; ரக்ஷகணா—இராட்சதர்களாக; ஸௌனிகா—கொல்பவர்கள்; இவ—போன்று; ஸ்வதிதினா—வாளினால்; அவதாய—துண்டுதுண்டாக வெட்டப்பட்டு; அஸ்ருக்—உதிரம்; பிபந்தி—பருகி; ந்ருத்யந்தி—ஆடல்; ச—மேலும்; காயந்தி—பாடல்; ச—மேலும்; ஹ்ருஷ்ய-மாணா—உவகை கொண்டு; யதா—போன்று; இஹ—இவ்வுலகில்; புருஷ-அதா—நரமாமிசம் உண்போர்.

இவ்வுலகில் உள்ள சிலர் பைரவருக்கோ அல்லது பத்திரகாளிக்கோ மனிதர்களைப் பலியிட்டு அவர்களது தசையினை உண்கின்றனர். இவ்வாறு வேள்வி செய்பவர்கள், இறந்தபிறகு யமராஜனின் இருப்பிடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கே அவர்களால் கொல்லப்பட்டவர்கள் இராட்சதர்களாக மாறி கைகளில் உள்ள கூர்மையான வாளால் அவர்களைத் துண்டு துண்டாக வெட்டி எறிகின்றனர். இவ்வுலகில் நரமாமிசம் உண்போர் பலியிடப்பட்டவனின் உதிரத்தைக் குடித்துப் பாடி ஆடி மகிழ்வதுபோல் இப்போது அவர்களால் பலியிடப்பட்டவர்கள் அதே போல் அவர்களைக் கொன்று அவர்களது உதிரத்தைக் குடித்து மகிழ்கின்றனர்.

பதம் 5.26.32
யே த்வ இஹ வா அனாகஸோ ‘ரண்யே க்ராமே வா
வைஸ்ரம்பகைர் உபஸ்ருதான் உபவிஸ்ரம்பய்ய ஜிஜீவிஷுன் ஸுல-
ஸுத்ராதிஷுபப்ரோதான் க்ரீடனகதயா யாதயந்தி தே ‘பி ச ப்ரேத்ய யம-
யாதனாஸு ஸுலாதிஷு ப்ரோதாத்மான: க்ஷீத்-த்ருட்ப்யாம் சாபிஹதா:
கங்க-வடாதிபிஸ் சேதஸ் ததஸ் திக்ம-துண்டைர் ஆஹான்யமானா
ஆத்ம ஸமலம் ஸ்மரந்தி

யே—இம்மனிதர்கள்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வா—அல்லது; அனாகஸ—குற்றமற்ற; அரண்யே—வனத்தில்; க்ராமே—கிராமத்தில்; வா—அல்லது; வைஸ்ரம்பகை—நன்னம்பிக்கை வழியினால்; உபஸ்ருதான்—அருகே கொண்டுவந்து; உபவிஸ்ரம்பய்ய—நம்பிக்கையுடன் தூண்டப் பெற்று; ஜிஜீவிஷுன்—பாதுகாக்கப்பட விரும்பி; ஸுல-ஸுத்ர-ஆதிஷு—ஒரு ஈட்டி அல்லது நூலின் மீது; உபப்ரோதான்—பொருத்தப்பட்டு; க்ரீடனகதயா—ஒரு விளையாட்டுப் பொருள் போன்று; யாதயந்தி—துன்பத்திற்குக் காரணமாகின்றனர்; தே—இம்மனிதர்கள்; அபி—நிச்சயமாக; ச—மேலும்; ப்ரேத்ய—மரித்த பின்னர்; யமயாதனாஸு—யமராஜனின் அடக்குமுறையினால்; ஸுல-ஆதிஷு—சூலம் போன்றவற்றினால்; ப்ரோத-ஆத்மான—இவர்களது உடல் பொருத்தப் பட்டு; க்ஷுத்-த்ருட்ப்யாம்—பசி தாகத்தினால்; ச—மேலும்; அபிஹதா—வெல்லப்படுகின்றனர்; கங்க-வட-ஆதிபி—கழுகு, பருந்து போன்ற பறவைகளினால்; ச—மேலும்; இத: தத:—இங்குமங்கும்; திக்ம-துண்டை—கூர்மையான அலகுகளினால்; ஆஹன்யமானா—துன்புறுத்தப்படுகின்றனர்; ஆத்ம-ஸமலம்—சொந்த பாவங்களினால்; ஸ்மரந்தி—அவர்கள் நினைக்கின்றனர்.

இப்பிறப்பில் ஒரு வனத்திலோ அல்லது கிராமத்திலோ தங்களிடம் பாதுகாப்பிற்காக வரும் விலங்குகள் அல்லது பறவைகளுக்கு அடைக்கலம் தருகின்றனர். அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்னும் நம்பிக்கையினை ஊட்டி இம்மனிதர்கள் பின்பு சூலாயுதத்தினால் அவற்றைக் குத்தியும், நூல்களில் கட்டியும் அவற்றிற்கு பெரும் வேதனை அளிக்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்கள் இறந்த பின்னர் யமதூதர்களால் சூலப்ரோதம் என்னும் நரகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கே இவர்களது உடல் ஊசிபோன்ற ஈட்டிகளால் துளைக்கப்படுகின்றன. இவர்கள் பசி, தாகத்தினால் வருந்துகின்றனர். மேலும் கூர்மையான அலகுகளையுடைய கழுகுகள், பருந்துகள் போன்றவை எல்லாப் பக்கமும் இருந்து வந்து இவர்கள் உடல்களைக் குத்திக் கிழிக்கின்றன. வேதனை மற்றும் துன்பத்தினால் இவர்கள் தாம் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நினைத்துப் பார்க்கின்றனர்.

பதம் 5.26.33
யே த்வ இஹ வை பூதானி உத்வேஜயந்தி நரா உல்பண-ஸ்வாபாவா
யதா தந்த ஸுகாஸ் தே ‘பி ப்ரேத்ய நரகே தந்தஸுகாக்யே நிபதந்தி
யத்ர ந்ருப தந்தஸுகா: பஞ்ச-முகா: ஸப்த-முகா உபஸ்ருத்ய க்ரஸந்தி
யதா பிலேஸயான்

யே—இம்மனிதர்கள்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வை—உண்மையில்; பூதானி—உயிர்வாழிகளுக்கு; உத்வேஜயந்தி—தேவையின்றி வேதனைக்குக் காரணமாகி; நரா—மனிதர்கள்; உல்பண-ஸ்வபாவா:—இயற்கையாகவே சினம் கொண்டு; யதா—போன்று; தந்த-ஸுகா—பாம்புகள்; தே—அவர்கள்; அபி—கூட; ப்ரேத்ய—மரித்த பின்னர்; நரகே—நரகத்தில்; தந்த-ஸுக-ஆக்யே—தந்தசூகம் என்னும் பெயருடைய; நிபதந்தி—வீழ்கின்றனர்; யத்ர—இங்கே; ந்ருப—ஒ மன்னனே; தந்தஸுகா—பாம்புகள்; பஞ்ச-முகா—ஐந்துதலை உடையன; ஸப்த-முகா—ஏழுதலை உடையன; உபஸ்ருத்ய—அடைந்து; க்ரஸந்தி—உண்கின்றன; யதா—போன்று; பிலேஸயான்—சுண்டெலிகளை.

இப்பிறப்பில் துவேஷமுடைய பாம்புகள் போன்றவர்கள் எப்போதும் சினம் கொண்டு பிற உயிர்வாழிகளுக்குத் துன்பம் செய்கின்றனர். இவர்கள் இறந்த பின்னர் தந்த சூகம் என்னும் நரகத்தில் வீழ்கின்றனர். அன்பார்ந்த மன்னனே, இந்நரகத்தில் ஐந்து தலை மற்றும் ஏழுதலைப் பாம்புகள் உள்ளன. இப்பாம்புகள் சுண்டெலிகளை உண்பது போல் இப்பாவிகளை உண்கின்றன.

பதம் 5.26.34
யே த்வ இஹ வா அந்தாவட-குஸுல-குஹாதிஸு- பூதானி நிருந்தந்தி
ததாமுத்ர தேஷ்வ ஏவோபவேஸ்ய ஸகரேண வஹ்னினா தூமேன
நிருந்தந்தி

யே—இம்மனிதர்கள்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வா—அல்லது; அந்த-அவட—ஒரு பாழுங்கிணற்றில்; குஸுல— தானியக்கிடங்கு; குஹா-ஆதிஸு—மற்றும் குகைகளில்; பூதானி—உயிர்வாழிகள்; நிருந்தந்தி—வைக்கப்பட்டு; ததா—அதுபோல்; அமுத்ர—மறுபிறப்பில்; தேஷு—இதே இடங்களில்; ஏவ—உறுதியாக; உபவேஸ்ய—புகுதற்குக் காரணமாகி; ஸகரேண—நச்சுக்காற்று; வஹ்னினா—நெருப்புடன்; தூமேன—புகையுடன்; நிருந்தந்தி—வைக்கப்படுகின்றனர்.

இப்பிறப்பில் பிற உயிர்வாழிகளைப் பாழுங்கிணறு, தானியக்கிடங்கு, மலைக்குகையினுள் வைப்பவர்கள் தாங்கள் இறந்தபிறகு அவட நிரோதனம் என்னும் நரகத்தில் இடப்படுகின்றனர். அங்கே இவர்களும் நச்சுக் காற்றும், நெருப்புப் புகையும் உள்ள பாழுங்கிணற்றினுள் வைக்கப்பட்டு அதனால் பெரும் துன்பமடைகின்றனர்.

பதம் 5.26.35
யத் த்வ இஹ வாஅதிதீன் அப்யாகதான் வா க்ருஹ—பதிர் அஸக்ருத்
உபகத-மன்யுர் திதக்ஷுர் இவ பாபேன ச க்ஷுஸா நிரீக்ஷதே தஸ்ய சாபி
நிரயே பாப-த்ருஷ்டேர் அக்ஷிணீ வஜ்ர-துண்ட க்ருத்ரா: கங்க-காக-
வடா-தய: ப்ரஸஹ்யோரு-பலாத் உத்பதாயந்தி

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இப்பிறப்பில்; வா—அல்லது; அதிதீன்—விருந்தினரை; அப்யாகதான்—பார்வையாளர்கள்; வா—அல்லது; க்ருஹ-பதி:—ஒர் இல்லறத்தான்; அஸக்ருத்—பல தடவைகள்; உபகத—பெறுகின்ற; மன்யு—சினம்; திதக்ஷு—எரிக்க விரும்புபவன்; இவ—போன்று; பாபேன—பாவி; ச க்ஷுஸா—விழிகளுடன்; க்ஷதே—பார்ப்பவர்கள்; நிரீக்ஷதே—பார்ப்பவர்கள்; தஸ்ய—அவனை; ச—மேலும்; அபி—உறுதியாக; நிரயே—நரகத்தில்; பாப-த்ருஷ்டே—பாவம் நிறைந்த பார்வையுடையவன், அக்ஷிணீ—விழிகள்; வஜ்ர-துண்டா—கூர்மையான அலகுகளையுடைய; க்ருத்ரா—கழுகுகள்; கங்க—கொக்குகள்; காக—காகங்கள்; வட-ஆதய—பிறபறவைகள்; ப்ரஸஹ்ய—கடுமையாக; உரு-பலாத்—மிகுந்த வலிமையுடன்; உத்பாதயந்தி—பிடுங்கி வெளியே எடுக்கின்றன.

விருந்தினர்களையும், தன்னை சந்திக்க வருபவர்களையும், எரிந்து சாம்பலாகப் போகுமாறு பார்க்கும் ஓர் இல்லறத்தான் பார்யாவர்தனம் என்னும் நரகத்தில் போடப்பட்டு அங்கே கழுகுகள், கொக்குகள், காக்கைகள் போன்ற பறவைகளாய் அவனும் அது போலவே பார்க்கப்பட்டுப் பின்னர் அப்பறவைகள் திடீரெனப் பாய்ந்து வந்து அவனது விழிகளை மிகுந்த பலத்துடன் பிடுங்கி வெளியே எடுக்கின்றன.

பதம் 5.26.36
யஸ் த்வ இஹ வா ஆட்யாபிமதிர் அஹங்க்ருதிஸ் திர்யக்-ப்ரேக்ஷண:
ஸர்வதோ ‘பிவிஸங்கீ அர்த-வ்யய-நஸ-சிந்தயா பரிஸுஸ்யமான
ஹ்ருதய-வதனோ நிர்வ்ருதிம் அனவகதோ க்ரஹ இவார்தம் அபிரக்ஷதி
ஸ சாபி ப்ரேத்ய தத் உத்பாதனோத்கர்ஷண-ஸம்ரக்ஷண-ஸமல-க்ரஹ:
ஸுசீமுகே நரகே நித்பததி யத்ர ஹ வித்த-க்ரஹம் பாப-புருஷம் தர்மராஜ
புருஷா வாயகா இவ ஸர்வதோ ‘ங்கேஷு ஸுத்ரை: பரிவயந்தி

ய—யாரேனும் ஒருவன்; து—ஆனால்; இஹ—இவ்வுலகில்; வா—அல்லது; ஆட்ய-அபி-மதி—பணத்தினால் கர்வங்கொண்டு; அஹங்க்ருதி—அகங்காரத்துடன்; திர்யக்- ப்ரேக்ஷணா—அவனது பார்வை கோணலாயிருக்கும்; ஸர்வத-அபிவிஸங்கீ—எப்போதும் பிறரால், ஏன் தன்னைவிட உயர்ந்தவர்களால் கூட ஏமாற்றப்படுவோம் என்று அஞ்சுகிறான்; அர்த-வ்யய-நாஸ-சிந்தயா—செலவும் மற்றும் தொலைந்துவிடும் என்னும் நினைவு; பரிஸுஸ்யமான—காய்ந்துபோன; ஹ்ருதய-வதன—இதயமும், முகமும்; நிர்வ்ருதிம்—மகிழ்ச்சி; அனவகத—பெறுவதில்லை; க்ரஹ—ஒரு பேய்; இவ—போன்று; அர்தம்—செல்வம்; அபிரக்ஷதி—பாதுகாக்கிறான்; ஸ—அவன்; ச—மேலும்; அபி—உண்மையில்; ப்ரேத்ய—இறந்த பின்னர்; தத்—அச்செல்வங்கள்; உத்பாதன—ஈட்டியதின்; உத்கர்ஷண—அதிகரித்து; ஸம்ரக்ஷண—பாதுகாக்கின்ற; ஸமல-க்ரஹ—பாவச் செயல்களை ஏற்றுக் கொண்டு; ஸுசீமுகே—சூசீமுகம் என்னும் பெயருடைய; நரகே—நரகத்தில்; நித்பததி—வீழ்கிறான்; யத்ர—இங்கே; ஹ—உண்மையில்; வித்த-கிரஹம்—பணத்தைச் சுரண்டும் பேய்போல்; பாப-புருஷம்—மிகக் கொடிய பாவி; தர்மராஜ-புருஷா—யமராஜனின் தூதர்கள்; வாயகா-இவ—தேர்ந்த நெசவாளர்களைப் போல்; ஸர்வத—எங்கும்; அங்கேஷு—உடல் அங்கங்களின்; ஸுத்ரை—நூலினால்; பரிவயந்தி—தைக்கிறான்.

இவ்வுலகில் அல்லது இப்பிறப்பில் மிகுந்த செல்வமுடையவன் “நான் பெரிய பணக்காரன், எனக்கு இணையார்?” என்று நினைக்கிறான். அவனது பார்வை கோணலாகிறது, தனது செல்வத்தை எப்போதும், எவரேனும் கவர்ந்துவிடுவார்களோவென்று அஞ்சுகிறான். உண்மையில் அவன் தன்னைவிட உயர்ந்தவர்களைக் கூட சந்தேகப்படுகிறான். அவனது மனமும், முகமும், பணத்தை இழந்து விடுவோம் என்னும் நினைவில் வறண்டு போகிறது எனவே அவன் எப்போதும் ஒரு கொடிய பேய் போன்று காட்சியளிக்கிறான். எந்த வழியிலும் அவனால் உண்மை இன்பம் பெறமுடியாமல் போகிறது மேலும் கவலையிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதையும் அவன் அறியாதவனாகிறான். செல்வத்தை ஈட்டுவது, அதிகரிப்பது, பாதுகாப்பது போன்றவற்றிற்காக அவன் பாவம் செய்கின்ற காரணத்தினால், அவன் இறந்தவுடன் சூசீமுகம் என்னும் நரகத்தில் போடப்படுகிறான் அங்கே அவன் யமராஜனின் தூதர்களால் உடலெங்கும் துணி நெய்வதற்காக நெசவாளர்கள் செய்வதுபோல் நூலினால் நெய்யப்பட்டுத் துன்பத்திற்காளாகிறான்.

பதம் 5.26.37
ஏவம்-விதா நரகா யமாலயே ஸந்தி ஸதய: ஸஹஸ்ரஸஸ் தேஷு
ஸர்வேஷு ச ஸர்வ ஏவாதர்ம வர்தினோ யே கேசித் இஹோதிதா
அனுதிதாஸ் சாவனி பதே பர்யாயேண விஸந்தி ததைவ
தர்மானுவர்தின இதரத்ர இஹ து புனர்பவே த உபய-ஸேஸாப்யாம்
நிவிஸந்தி

ஏவம்-விதா—இவ்வகையான; நரகா—ஏராளமான நரகங்கள்; யம-ஆலயே—யமராஜனின் பகுதியில்; ஸந்தி—இருக்கின்றன; ஸதஸ—நூற்றுக்கணக்கில்; ஸஹஸ்ரஸ—ஆயிரக்கணக்கில்; தேஷு—இந்நரகங்களில்; ஸர்வேஷு—எல்லாம்; ச—மேலும்; ஸர்வே:—எல்லாம்; ஏவ—உண்மையில்; அதர்ம-வர்தின—வேதநெறிகள் அல்லது ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றாதவர்கள்; யே கேசித்—யாராயினும்; இஹ—இங்கே; உதிதா—குறிப்பிடப்பட்ட; அனுதிதா—குறிப்பிடப்படாத; ச—மேலும்; அவனி-பதே—ஒ, அரசனே; பர்யாயேண—பல்வேறு வகையான பாவச்செயல்களின் அளவிற்கேற்ப; விஸந்தி—அவர்கள் செய்கின்றனர்; ததா ஏவ—அது போல்; தர்ம-அனுவர்தின—புண்ணிவான்கள்; ஒழுங்குமுறை விதிகள் அல்லது வேத நெறிகளுக்கேற்பச் செயல்படுபவர்கள்; இதரத்ர—எங்கெங்கும்; இஹ—இவ்வுலகில்; து—ஆனால்; புன-பவே—மற்றொரு பிறப்பில்; தே—அனைவரும்; உபய-ஸேஷாப்யாம்—கடவுள் பக்தியின் விளைவுகள் அல்லது கடவுளின் பக்தி இல்லாததின் விளைவுகளினால்; நிவிஸந்தி—அவர்கள் நுழைகிறார்கள்.

அன்பிற்குரியப் பரீட்சித்து மன்னனே, யமராஜனின் ஆட்சியில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நரக லோகங்கள் இருக்கின்றன. நான் குறிப்பிட்டிருக்கும் பாவிகள் அல்லது நான் குறிப்பிடாத பாவிகள் அனைவரும் அவர்கள் செய்த பாவங்களின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு நரகங்களைக் கண்டிப்பாக அடைந்தே தீரவேண்டும். புண்ணியம் செய்தவர்கள் தேவலோகம் என்னும் பெயருடைய மேல் உலகங்களை அடைகின்றனர், இருந்தும் புண்ணியவாளர்கள் மற்றும் பாவிகள் இருசாரரும் தங்கள் தங்கள் பாவ, புண்ணியத்தின் பலன்கள் தீர்ந்தவுடன் மீண்டும் இப்பூமிக்கே திரும்பி வருகின்றனர்.

பதம் 5.26.38
நிவ்ருத்தி-லக்ஷண-மார்க ஆதாவ் ஏவ வ்யாக்யாத: ஏதாவான்
ஏவாண்ட-கோஸோ யஸ் சதுர்தஸதா புராணேஷு விகல்பித உபகீயதே
யத் தத் பகவதோ நாராயணஸ்ய ஸாக்ஷான் மஹா-புருஷஸ்ய ஸ்தவிஷ்டம்
ரூபம் ஆத்மமாயா குணமயம் அனுவர்ணிதம் ஆத்ருத: படதி ஸ்ருணோதி
ஸ்ராவயதி ஸ உபகேயம் பகவத: பரமாத்மனோ ‘க்ராஹ்யம் அபி
ஸ்ரத்தா-பக்தி-விஸுத்த-புத்திர்வேத

நிவருத்தி-லக்ஷண-மார்க—துறவினால் அடையாளம் காட்டப்படும் பாதை அல்லது விடுதலைக்கான பாதை; ஆதௌ—ஆரம்பத்தில் (இரண்டு மற்றும் மூன்றாவது காண்டங்கள்); ஏவ—உண்மையில்; வ்யாக்யாத—விளக்கப்பட்டிருக்கிறது; ஏதாவான்—இந்த அளவு; ஏவ—உறுதியாக; அண்ட-கோஸ—ஒரு பெரிய முட்டையினைப் போல் தோன்றும், இந்தப் பிரபஞ்சம்; ய—இது; சதுர்தஸதா—பதினான்கு பாகங்கள்; புராணேஷு—புராணங்களில்; விகல்பித—பிரிக்கப்பட்டு; உபகீயதே—விளக்கப்படுகின்றது; யத்—இது; தத்—அந்த; பகவத—முழுமுதற்கடவுள்; நாராயணஸ்ய—பகவான் நாராயணரின்; ஸாக்ஷாத்—நேரடியாக; மஹா-புருஷஸ்ய—பரமபுருஷரின்; ஸ்தவிஷ்டம்—பூத; ரூபம்—வடிவம்; ஆத்மமாயா—அவரது சுயசக்தியின்; குண—குணங்களின்; மயம்—உடையது; அனுவர்ணிதம்—விளக்கப்படுகின்றது; ஆத்ருதே—வணங்குகின்ற; படதி—ஒருவன் படிக்கிறான்; ஸ்ருணோதி—கேட்கிறான்; ஸ்ராவயதி—அல்லது விளக்குகிறான்; ஸ—அவன்; உபகேயம்—பாடுகிறான்; பகவத—முழுமுதற்கடவுளின்; பரமாத்மன—பரமாத்மாவின்; அக்ராஹ்யம்—புரிந்து கொள்வதற்குக் கடினமான; அபி—இருந்த போதிலும்; ஸ்ரத்தா—நம்பிக்கையினால்; பக்தி—பக்தியினால்; விஸுத்த—தூய்மையடைகிறான்; புத்தி—அவனது புத்தி; வேத—புரிந்து கொள்கிறான்.

ஆரம்பத்தில் (ஸ்ரீமத் பாகவதம் இரண்டு மற்றும் மூன்றாவது காண்டங்கள்) எவ்வாறு ஒருவன் விடுதலைப் பாதையில் முன்னேற முடியும் என்பதை விளக்கியிருக்கிறேன். புராணங்களில் ஒரு முட்டையினைப் போன்றிருக்கும் பிரபஞ்சத் தோற்றமானது பதினான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது என்று விளக்கப்படுகின்றது. இப்பெரிய வடிவமே பகவானது சக்தி மற்றும் அவரது குணங்களால் உண்டாக்கப்பட்ட அவரது புற உடலாகக் கருதப்படுகின்றது. பொதுவாக இது விராட ரூபம் என்றழைக்கப்படுகின்றது. பகவானின் புறவடிவத்தினைப் பற்றி ஒருவன் மிகுந்த நம்பிக்கையுடன் பாகவத தர்மத்தினை அல்லது கிருஷ்ண உணர்வினைப் பரப்புவதற்காகப் படித்தாலும், கேட்டாலும் பிறருக்கு எடுத்துக் கூறினாலும் ஆன்மீக உணர்வில், கிருஷ்ண உணர்வில் அவன் கொண்ட நம்பிக்கையும், பக்தியும் படிப்படியாக வளர்ச்சியடைகின்றது. இவ்வுணர்வினை வளர்ப்பது கடினமாக இருந்தபோதிலும் இம்முறையினாலேயே ஒருவன் தன்னைத் தூய்மை செய்து கொள்ளவும், பரமமெய்ப்பொருள் பற்றிய உணர்விற்குப் படிப்படியாக வரவும் முடியும்.

பதம் 5.26.39
ஸ்ருத்வா ஸ்தூலம் ததா ஸுக்ஷ்மம் ரூபம் பகவதோ யதி:
ஸ்தூலே நிர்ஜிதம் ஆத்மானம் ஸனை: ஸுக்ஷ்மம் தியா நயேத் இதி

ஸ்ருத்வா—கேட்டபிறகு (குரு பரம்பரையிலிருந்து), ஸ்தூலம்—பூத; ததா—அதுபோல்; ஸுக்ஷ்மம்—நுண்ணிய; ரூபம்—வடிவம்; பகவத—முழுமுதற்கடவுளின்; யதி—ஒரு துறவி அல்லது பக்தன்; ஸ்தூல—பூத வடிவம்; நிர்ஜிதம்—வெல்லப்படுதல்; ஆத்மான—மனம்; ஸனை—படிப்படியாக; ஸுக்ஷ்மம்—பகவானின் சூட்சும ஆன்மீக வடிவம்; தியா—புத்தியினால்; நயேத்—ஒருவன் இதனை எடுத்துச் செல்வதற்கு; இதி—இவ்வாறு.

பந்தப்பட்ட வாழ்க்கைப் பாதையில் பற்றின்றி விடுதலையில் பற்றுக்கொண்டு விடுதலைப் பாதையினை மேற்கொண்டவன் யதி அல்லது பக்தன் என்றழைக்கப்படுகிறான். இப்படிப்பட்டவன் முதலில் பகவானின் பிரபஞ்ச வடிவமான விராட ரூபத்தினைப் பற்றி சிந்திப்பதின் மூலம் முதலில் தனது மனதினைக் கட்டுப்படுத்த வேண்டும். பின்னர் படிப்படியாகப் பகவான் கிருஷ்ணரின் ஆன்மீக வடிவத்தினை (சச் சித் ஆனந்த விக்ரஹம்) நினைத்தல் வேண்டும். இவ்விரு வடிவங்களைப் பற்றியும் முதலில் நன்கு கேட்டு அறிந்த பின்பே இவ்வாறு சிந்தித்தல் வேண்டும். இதன்மூலம் ஒருவனது மனம் சமாதியில் நிலை பெறுகிறது. பக்தித் தொண்டினால் மட்டுமே, பக்தர்களின் இலக்கானப் பகவானின் ஆன்மீக வடிவத்தினை ஒருவனால் உணரமுடியும். இதனால் அவன் வாழ்க்கை வெற்றி பெறுகின்றது.

பதம் 5.26.40
பூ-த்வீப-வர்ஷ-ஸரித்-அத்ரி-நப:-ஸமுத்ர
பாதால-தின்-நரக- பாகண-லோக-ஸமஸ்தா
கீதா மயா தவ ந்ருபாத்புதம் ஈஸ்வரஸ்ய
ஸ்தூலம் வபு: ஸகல-ஜீவ-நிகாய-தாம

பூ—இப்பூவுலகம்; த்வீப—மற்றம் பிற உலகங்கள்; வர்ஷ—நிலப்பகுதிகள்; ஸரித்—நதிகள்; அத்ரி—மலைகள்; நப:—வானம்; ஸமுத்ர—சமுத்திரங்கள்; பாதால—பாதால லோகங்கள்; திக்—திசைகள்; நரக—நரகலோகங்கள்; பாகண-லோக—மேலுலகங்களும், பிற கோளங்களும்; ஸம்ஸ்தா—இருக்கும் நிலை; கீதா—விளக்கப்பட்டது; மயா—என்னால்; தவ—உனக்கு; ந்ருப—ஓ அரசனே; அத்புதம்—அற்புதமான; ஈஸ்வரஸ்ய—முழுமுதற்கடவுளின்; ஸ்தூலம்—பூத; வபு:—உடல்; ஸகல-ஜீவ-நிகாய—உயிர்வாழிகளின் கூட்டங்களும்; தாம—அதுவே தாங்கி நிற்கும் இடமாகும்.

அன்புக்குரிய அரசனே, இப்போது நான் உனக்கு, இப்பூமி, பிற உலகங்கள், அவற்றிலுள்ள நிலப்பகுதிகள் (வர்ஷங்கள்) நதிகள், மலைகள், போன்றவற்றை விளக்கியிருக்கிறேன். மேலும், வானம், சமுத்திரங்கள் பாதால லோகங்கள், நரக லோகங்கள், நட்சத்திர மண்டலங்கள் பற்றியும் கூட விளக்கியிருக்கிறேன். இவையெல்லாம் சேர்ந்தே பகவானின் மிகப் பெரிய பௌதீக வடிவம் என்றும் விராட ரூபத்தினை உண்டாக்குகின்றன. அதன் மீதே எல்லா உயிர்வாழிகளும் இருக்கின்றன. இவ்வாறு நான் உனக்குப் பகவானது புறஉடலின் அற்புதவடிவினைப் பற்றி விளக்கியிருக்கின்றேன்


ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “நரகலோகம் பற்றிய விளக்கம்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தாறாவதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare