அத்தியாயம் – 21
சூரியனின் இயக்கம்

பதம் 5.21.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த மன்னனே, நான் இவ்வாறு, இதுவரை பிரபஞ்சத்தின் பரப்பளவு (ஐம்பது கோடி யோஜனங்கள் அல்லது நானூறு கோடி மைல்கள்) மற்றும் பொதுத் தன்மைகளை கற்றறிந்த அறிஞர்களின் கணிதப்படி விளக்கியிருக்கிறேன்.

பதம் 5.21.2 : கோதுமை தானியத்தை இரண்டாகப் பிரித்தால், கீழிருக்கும் பகுதியைக் கொண்டு மேலிருக்கும் பகுதியை ஒருவனால் அளவிட முடிவது போல் தேர்ந்த பூகோள நூல் வல்லுநர்கள் பிரபஞ்சத்தின் கீழ்ப்பகுதியினை அறிந்து கொள்வதின் மூலம் ஒருவனால் அதன் மேற்பகுதியினை அளவிடமுடியும் என்று அறிவுறுத்துகின்றார். மேல் உலகிற்கும், பூவுலகிற்கும் இடையிலுள்ள வானம் அல்லது வெளியானது அந்தரிக்ஷம் என்றழைக்கப்படுகின்றது. இது பூமியின் மேற்பகுதியினை அடுத்து மேல் உலகிற்குக் கீழாக இருக்கின்றது.

பதம் 5.21.3 : விண்வெளியின் மத்தியில் (அந்ததிக்ஷம்) மிக வளம் உடையதும், சந்திரனைப் போன்று வெம்மை உண்டாக்கும் கோளங்கள் அனைத்திற்கும் அரசரான சூரியன் இருக்கிறார். அதன் கதிர்களின் செல்வாக்கினால் சூரியன் இப்பிரபஞ்சத்தைக் காப்பதோடு அதனை முறையாகவும் வைத்திருக்கின்றது. அனைத்து உயிர்வாழிகளும் காண்பதற்கு உதவும் பொருட்டு அது ஒளிவழங்குகிறது. முழுமுதற் கடவுளின் கட்டளைக்கேற்ப அது தென்திசை, வடதிசை அல்லது மத்தியில் பயணம் செய்யும் பொழுது, மெதுவாக, வேகமாக, சமநிலையில் செல்வதாகக் கூறப்படுகிறது. அதன் இயக்கம் உயர்ந்தோ, தாழ்ந்தோ அல்லது மத்தியில் செல்வதற்கேற்பவும் மகர ராசியின் கீழுள்ளப் பல்வேறு இராசிக் கூட்டங்களுடன் தொடர்பு கொள்வதற்கேற்பவும் இரவு பகல் குறுகியும், நீண்டும், சமமாகவும் இருக்கின்றன.

பதம் 5.21.4 : மேஷ இராசி மற்றும் துலா இராசியில் சூரியன் செல்லும் பொழுது பகற்பொழுதும், இராப்பொழுதும் சமமாக இருக்கின்றன. அது ரிஷபராசியின் கீழுள்ள ஐந்து இராசிகளில் செல்லும்பொழுது பகற் பொழுதுகள் அதிகரிக்கின்றன. (கர்க்கடக இராசிவரை) பின்னர் அது, இரவும் பகலும் சமமாகும் வரை (துலா இராசியில்) ஒவ்வொரு மாதமும் அரைமணி அளவில் படிப்படியாக குறைகிறது.

பதம் 5.21.5 : சூரியன் விருச்சிக இராசி தொடங்கி ஐந்து இராசி மண்டலங்களில் பயணம் செய்யும்பொழுது (மகராசி வரை) பகற்பொழுது குறைகிறது பின்னர் அது இரவும் பகலும் சமமாகும் வரை (மேஷ இராசி வரும் வரை) ஒவ்வொரு மாதமும் படிப்படியாக அதிகரிக்கின்றது.

பதம் 5.21.6 : தென்திசையில் சூரியன் பயணம் செய்யும்வரை பகற்பொழுதுகள் நீண்டதாகவும், அது வடதிசையில் பயணம் செய்யும்வரை இரவுகள் நீண்டதாகவும் இருக்கின்றன.

பதம் 5.21.7 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய மன்னனே முன்பு குறிப்பிட்டதுபோல் கற்றறிந்த அறிஞர்கள் சூரியன் மானஸோத்தர மலையினை வட்டமாகச் சுற்றிவருகிறான் என்றும் அதன் நீளம் 95,100,000 யோஜனங்கள் (760,800,000 மைல்கள்) என்றும் கூறுகின்றார். மானஸோத்தானீ என்றோர் நகரம் இருக்கிறது. இது இந்திரனால் ஆளப்படுகின்றது. அதுபோல் தென்திசையில் யமராஜன் வாழும் ஸம்யமனீ என்னும் நகரம் இருக்கின்றது. மேற்குத் திசையில் வருணதேவன் வாழும் நிம்லோசனீ என்னும் நகரம் இருக்கின்றது. மேலும் அதன் வடதிசையில் சந்திரதேவன் வாழும் விபாவரீ என்னும் நகரமும் இருக்கின்றது. சூரிய உதயம், நண்பகல், சூரிய அஸ்தமனம் மற்றும் நள்ளிரவு போன்றவை இவ்விடங்கள் அனைத்திலும் குறிப்பிட்டக் காலங்களில் நிகழ்கின்றன. இதன்மூலம் அனைத்து உயிர்வாழிகளையும் அவர்களுக்குரிய தொழில் தர்மங்களில் ஈடுபடுத்தி, அத்தொழில் தர்மங்களிலிருந்து அவர்களை விடுவிக்கின்ற செயலையும் சூரியன் செய்கிறான்.

பதங்கள் 5.21.8 – 5.12.9 : சுமேரு மலையில் வாழும் உயிர்வாழிகள் நண்பகலில் இருப்பது போல் எப்போதும் மிகுந்த வெப்பத்திற்க்காளாகின்றனர். காரணம் சூரியன் எப்போதும் அங்கே உச்சிச் சூரியனாகவே இருக்கிறான். சூரியன் சுமேருமலைக்கு இடதுபுறத்திலிருந்து விண்மீன் கூட்டத்தைப் பார்த்த வண்ணம் வலமாகச் சென்ற போதிலும் அது இடமாகவும் செல்வதின் மூலம் மலை தனக்கு வலது புறத்தில் இருப்பது போன்றும் தோன்றுகிறது ஏனென்றால் அது தக்ஷிணாவர்த காற்றின் பாதிப்பிற்கு ஆளாகிறது. சூரியன் முதலில் உதிக்கின்ற நாடுகளுக்கு நேர் எதிர் திசையில் இருப்பவர்கள் அப்போது அங்கே சூரிய அஸ்தமனத்தினைக் காண்கின்றனர். அதுபோல் சூரியன் தமது தலைக்கு நேராக உச்சியில் இருக்கும் நாட்டில் உள்ளவர்களுக்கு நேர் எதிர் திசையில் உள்ள நாட்டினர்க்கு அப்போது நள்ளிரவாக இருக்கும். அதுபோல் சூரியன் அஸ்தமிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமக்கு நேர் எதிர்கோட்டில் இருக்கும் நாட்டிற்குச் சென்று பார்த்தால் அங்கே அந்த சமயத்தில் சூரிய அஸ்தமனத்தைக் காணமுடியாது.

பதம் 5.21.10 : இந்திரனின் இருப்பிடமான தேதானீயிலிருந்து யமராஜனின் இருப்பிடமான சம்யமணீ என்னும் இடத்திற்குச் சூரியன் பயணம் செய்யும் பொழுது அது 23,775,000 யோஜனங்கள் (190,200,000 மைல்கள்) பதினைந்து கடிகைகளில் (ஆறுமணி நேரங்கள்) கடந்து செல்கிறது.

பதம் 5.21.11 : யமராஜனின் இருப்பிடத்திலிருந்து சூரியன் வருணதேவனின் இருப்பிடமான நிம்லோசனீ என்னும் இடத்திற்கு பயணம் செய்கிறது. பின்னர் அங்கிருந்து சந்திரதேவனின் இருப்பிடமான விபாவரீ என்னும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் இந்திரனின் இருப்பிடத்திற்குச் செல்கிறது. இதேபோன்றுதான் சந்திரன், நட்சத்திரங்கள், பிற கோளங்கள் எல்லாம் விண்வெளியில் தோன்றுகின்றன. பிறகு மறைகின்றன, மீண்டும் தோன்றுகின்றன.

பதம் 5.21.12 : போற்றுதற்குரிய பகவானே, தடுமாற்றம், பசி, தவறி வீழ்தல், வாயினால் சுவாசித்தல் அல்லது மரண வேளையில் ஏற்படும் கடுமையான காய்ச்சலில் வீழ்தல் போன்றவற்றினால் உமது பெயர், தோற்றம், குணம் முதலியவற்றை எம்மால் நினைக்க முடியாது போகலாம். ஆகையினால் பக்தர்கள் மீது அளவற்ற அன்புடைய பகவானே, உம்மை நாங்கள் வழிபடுகிறோம். எங்களது பாவச் செயல்கள் அனைத்தையும் நீக்கவல்ல உமது புனித நாமங்கள், குணங்கள் மற்றும் செயல்களை எப்போதும் நாங்கள் நினைத்திருக்க எங்களுக்கு உதவுவீராக.

பதம் 5.21.13 : சூரிய தேவனின் இரதத்திற்கு சம்வத்ஸரம் எனப்படும் ஒரே ஒரு சக்கரம் மட்டுமே உண்டு. பன்னிரெண்டு மாதங்களும் அதன் பன்னிரெண்டு ஆரங்களாகும். ஆறு பருவகாலங்களும் வளையத்தின் ஆறு கூறுகளாகும், மூன்று சாதுர்மாஸ்யக் காலங்களும் சக்கரத்திலுள்ள குடத்தின் மூன்று பகுதிகளாகும். சக்கரத்தின் ஒரு பக்க அச்சு சுமேரு மலையில் பொருத்தப்பட்டிருக்கிறது. மற்றொரு அச்சு மானஸோத்தர மலையின் உச்சியில் பொருத்தப்பட்டிருக்கிறது. அச்சின் மறுமுனை பொருத்தப்பட்டிருப்பதினால் சக்கரம், எண்ணெய் எடுக்கும் இயந்திரத்தின் சக்கரத்தைப் போல் தொடர்ந்து மானஸோத்தர மலையின் மீது சுழல்கின்றது.

பதம் 5.21.14 : எண்ணெய் எடுக்கும் எந்திரத்தில் இருப்பதைப் போன்று முதல் அச்சு, இரண்டாவது அச்சுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இது நீளத்தில் நான்கில் ஒரு பகுதியாகும் (3,937,500 யோஜனங்கள் அல்லது 31,500,000 மைல்கள்). இந்த இரண்டாம் அச்சின் மேல் பகுதி காற்றுக் கயிற்றினால் துருவ லோகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது.

பதம் 5.21.15 : அன்புக்குரிய அரசனே, சூரிய தேவன் அமர்ந்திருக்கும் இரதத்தட்டு 3,600,000 யோஜனங்கள் (28,800,000 மைல்கள்) நீளமும் அதில் நான்கில் ஒருபகுதி (900,000 யோஜனங்கள் அல்லது 7,200,000 மைல்கள்) அகலமும் உடையதாகும். காயத்திரி மற்றும் பிற வேத அளவுகளின் பெயர்களைக் கொண்ட குதிரைகள் அருணதேவனால் 900,000 யோஜனங்கள் அகலமுடைய நுகத்தடியில் பூட்டப்பட்டிருக்கின்றன. இந்த இரதம் தொடர்ந்து சூரிய தேவனைச் சுமந்து செல்கின்றது.

பதம் 5.21.16 : அருணதேவன், சூரியதேவனுக்கு முன்புறம் அமர்ந்து இரதத்தினை ஒட்டியும், குதிரைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டும் இருக்கின்றார் என்றபோதிலும் அவர் சூரியதேவனைப் பார்த்த வண்ணம் பின்புறம் நோக்குகின்றார்.

பதம் 5.21.17 : கட்டைவிரல் அளவுடைய வாலிகில்யர்கள் என்னும் அறுபதினாயிரம் முனிவர்கள் சூரிய தேவனின் முன்பு அமர்ந்து அவரது புகழின் நனிசிறந்த பிரார்த்தனைகளை அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர்.

பதம் 5.21.18 : அதுபோல் பதினான்கு பிற முனிவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸுகள், நாகர்கள், யக்ஷர்கள், இராட்சதர்கள், தேவர்கள், இரண்டு பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு மாதமும் பல்வேறு பெயர்களைப் பெற்று, மிகச் சக்தி வாய்ந்த சூரிய தேவனாகவும், பல்வேறு நாமங்களை உடையவராகவும் விளங்கும் பரமபுருஷப் பகவானை வழிபடுவதற்காகத் தொடர்ந்து பல்வேறு சமயச் சடங்குகளைச் செய்கின்றனர்.

பதம் 5.21.19 : அன்பார்ந்த மன்னனே, பூ மண்டலத்தைச் சுற்றியுள்ளக் கோளப் பாதையில் சூரியதேவன் 95,100,000 யோஜனங்கள் (760,800,000 மைல்கள்) தூரத்தே ஒரு கணக்கில் 2000 யோஜனங்கள் இரண்டு குரோஸங்கள் (16,004 மைல்கள்) வேகத்தில் பயணம் செய்கின்றார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare