அத்தியாயம் – 20
பிரபஞ்சத்தின் கட்டமைப்புப் பற்றிய ஆய்வு
பதம் 5.20.1
ஸ்ரீஸுக-உவாச
அத பரம் பிலக்ஷாதீனாம் ப்ரமாண-லக்ஷண-ஸம்ஸ்தா-னதோ வர்ஷ
விபாக உபவர்ண்யதே

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத: பரம்—இதன் பிறகு; பிலக்ஷ-ஆதீனாம்—பிலக்ஷ மற்றும் பிற தீவுகள்; ப்ரமாண-லக்ஷண-ஸம்ஸ்தானத:—முப்பரிமாணங்களிலிருந்து குறிப்பாகத் தன்மை மற்றும் வடிவம்; வர்ஷ-விபாக:—தீவின் பிரிவுகள்; உபவர்ண்யதே—விளக்கப்படுகிறது.

மாமுனிவர் சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இதன் பின்னர் நான் பிலக்ஷத்தீவு தொடங்கி உள்ள ஆறு தீவுகளின் முப்பரிமாணம் தன்மை மற்றும் வடிவங்களைப் பற்றி விளக்குவேன்.

பதம் 5.20.2
ஜம்பூத்வீபோ ‘யம் யாவத்-ப்ரமாண-விஸ்தாரஸ் தாவதா
க்ஷாரோததினா பரிவேஷ்டிதோ யதா மேரூர் ஜம்ப்வ-ஆக்யேன
லவணோததிர் அபி ததோ த்வி குணவிஸாலேன ப்லக்ஷாக்யேன
பரிக்ஷிப்தோ யதா பரிகா பாஹ்யோ பவனேன, ப்லக்ஷோ ஜம்பூ-
ப்ரமாணோ த்வீபாக்யாகரோ ஹிரண்மய உத்திதோ யத்ராக்னிர் உபாஸ்தே
ஸப்த-ஜிஹ்வஸ் தஸ்யாதிபதி: ப்ரிய-வ்ரதாத்மஜ இத்மஜிஹவ்: ஸ்வம்
த்வீபம் ஸப்த-வர்ஷாணி விபஜ்ய ஸப்த-வர்ஷ-நாமப்ய ஆத்மஜேப்ய
ஆகலய்ய ஸ்வயம் ஆத்ம-யோகேனோபரராம

ஜம்பூ-த்வீப:—ஜம்பூ என்றும் பெயருடைய தீவு, ஜம்பூத்-வீபம்; அயம்—இந்த; யாவத்-ப்ரமாண-விஸ்தார:—அதன் அகலத்தின் அளவைப் பொருத்தமட்டில் 100,000 யோஜனங்கள் (ஒரு யோஜனம் எட்டு மைல்களாகும்); தாவதா—அவ்வளவு; க்ஷார-உததினா—உப்பு நீர்க் கடலினால்; பரிவேஷ்டித:—சூழப்பட்டு; யதா—போன்று; மேரு:—சுமேருமலை; ஜம்பூ-ஆக்யேன—ஜம்பு என்னும் தீவினால்; லவண-உததி—உப்பு நீர்க்கடல்; அபி—நிச்சயமாக; தத:—அதன்பிறகு; த்வி-குண-விஸாலேன—அது இருமடங்கு அகலமுடையது; ப்லக்ஷ-ஆக்யேன—பிலக்ஷம் என்னும் தீவினால்; பரிக்ஷிப்த:—சூழப்பட்டு; யதா—போல; பரிகா—ஓர் அகழி; பாஹ்ய—வெளியே; உபவனேன—நந்தவனம் போன்ற ஒரு வனத்தினால்; ப்லக்ஷ:—ஒரு பிலக்ஷமரம்; ஜம்பூ-ப்ராமண—ஜம்பூ மரத்தின் உயரங்கொண்டு; த்வீப-ஆக்யா-கர:—அத்தீவின் பெயர்க் காரணமாகியது; ஹிரண்மய—கண்ணைக் கூசச் செய்யும் மிகப் பெரிய ஒளி; உத்தித:—எழுந்து; யத்ர—இங்கே; அக்னி:—ஒரு நெருப்பு; உபாஸ்தே—இருக்கிறது; ஸப்த-ஜிஹ்வ:—ஏழு தீ ஜுவாலைகள் கொண்டு; தஸ்ய—அந்தத் தீவின்; அதிபதி—அதிபதியாக; ப்ரியவ்ரத-ஆத்மஜ:—மன்னர் பிரியவிரதனின் மைந்தன்; இத்ம-ஜிஹ்வ:—இத்மஜிஸ்வன் என்னும் பெயருடையவர்; ஸ்வம்—சுயமாக; த்வீபம்—தீவு; ஸப்த—ஏழு; வர்ஷாணி—நிலப்பகுதிகள்; விபஜ்ய—பிரிந்து; ஸப்த-வர்ஷ-நாமப்ய:—அவர்களின் இந்த ஏழு நிலங்களுக்கும் சூட்டப்பெற்றது; ஆத்மஜேப்ய:—தன் சொந்த மகன்களுக்கு; ஆகலய்ய—அர்ப்பணித்தல்; ஸ்வயம்—தனிப்பட்ட முறையில்; ஆத்ம-யோகேன—பகவானின் பக்தித் தொண்டினால்; உபரராம—அவர் பௌதீகச் செயல்கள் அனைத்திலிருந்தும் ஒய்வு பெற்றார்.

சுமேரு மலை ஜம்புத்வீபத்தினால் சூழப்பட்டிருக்கிறது. ஜம்புத் தீபமோ உப்பு நீர்க்கடலினால் சூழப்பட்டிருக்கிறது. ஜம்புத் தீபத்தின் அகலம் 100,000 யோஜனங்கள் ஆகும். (800.000 மைல்கள்) உப்பு நீர்க்கடலின் அகலமும்கூட அதே அளவேயாகும். ஒரு கோட்டையின் மதிலைச் சுற்றியிருக்கும் அகழி சில சமயம் நந்தவனம் போன்ற காட்டினால் சூழப்பட்டிருப்பது போல் ஜம்புத்வீபத்தைச் சுற்றியிருக்கும் உப்பு நீர்க்கடல் பிலக்ஷத்வீபத்தினால் சூழப்பட்டிருக்கிறது. பிலக்ஷத்வீபத்தின் அகலம் உப்புநீர்க்கடலைப் போல் இருமடங்கு பெரியதாகும்— அதாவது 200,000 யோஜனங்களாகும் (1,600,000 மைல்கள்) பிலக்ஷத்வீபத்தில் ஒரு மரம் தங்கத்தைப் போன்று ஒளியுடையதாகவும் ஜம்புத்வீபத்திலுள்ள ஜம்பூ மரத்தைப் போல் உயரமுடையதாகவும் உள்ளது. அதன் வேர் ஏழு ஜீவாலைகளையுடைய அக்கினியாகும். இம்மரம் பிலக்ஷ மரம் ஆதலினால் இத்தீவு பிலக்ஷத்வீபம் என்றழைக்கப்படுகிறது. பிலக்ஷத்வீபத்திற்கு மகாராஜா பிரியவிரதனின் மைந்தர்களுள் ஒருவரான இத்மஜிஹ்வன் என்பவர் அதிபதியாவார். அவர் ஏழு தீவுகளுக்கும் தனது ஏழு மைந்தர்களின் பெயர்களையேச் சூட்டினார். பின்னர் அவர் பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்காக அன்றாட வாழ்விலிருந்து ஒய்வு பெற்றார்.

பதங்கள் 5.20.3 – 5.20.4
ஸிவம் யாவஸம் ஸுபத்ரம் ஸாந்தம் க்ஷேமம் அம்ருதம் அபயம் இதி
வர்ஷாணி தேஷு கிரயோ நத்யஸ் ச ஸப்தை—வாபிஜ்ஞாதா: மணிகூடோ
வஜ்ரகூட இந்த்ரஸேனோ ஜ்யோதிஷ்மான் ஸுபர்ணோ ஹிரண்
யஷ்டீவோ மேகமால இதி ஸேது-ஸைலா: அருணா ந்ரும்ணாங்கிரஸு
ஸாவித்ரீ ஸுப்தபாதா ருதம்பரா ஸத்யம்பரா இதி மஹா-நத்ய: யாஸாம்
ஜலோபஸ்பர்ஸன-விதூத-ரஜஸ்-தமஸோ ஹம்ஸ-பதங்கோர்த்வாயன-
ஸத்யாங்க-ஸம்ஜ்ஞாஸ் சத்வாரோ வர்ணா: ஸஹஸ்ராயுஷோ
விபுதோபம்-ஸந்தர்ஸன-ப்ரஜனனா ஸ்வர்க-த்வாரம் த்ரய்யா வித்யாயா
பகவந்தம் த்ரயீமயம் ஸுர்யம் ஆத்மானம் யஜந்தே

ஸிவம்—சிவன்; யவஸம்—யவஸன்; ஸுபத்ரம்—சுபத்திரன்; ஸாந்தம்—சாந்தன்; க்ஷேமம்—க்ஷேமன்; அம்ருதம்—அம்ருதன்; அபயம்—அபயன்; இதி—இவ்வாறு; வர்ஷாணி—ஏழு புதல்வர்களின் பெயர்களைக் கொண்ட ஏழு நிலப்பகுதிகள்; தேஷு—அவற்றில்; கிரய:—மலைகள்; நத்ய: ச—மற்றும் நதிகள்; ஸப்த—ஏழு; ஏவ—உண்மையில்; அபிஜ்ஞாதா:—அறியப்படுகின்ற; மணி-கூட:—மணி கூடம்; வஜ்ர-கூட:—வஜ்ரகூடம்; இந்த்ர-ஸேன—இந்திரசேனம்; ஜ்யோதஷிமான்—ஜோதிஷ்மான்; ஸுபர்ண:—கர்ணம்; ஹிரண்ய-ஸ்டீவ:—இரண்யஸ்டீவம்; மேக-மால:—மேகமாலம்; இதி—இவ்வாறு; ஸேது-ஸைலா:—வர்ஷங்களின் எல்லைகளைக் குறிக்கும் மலைகளின் அறைகள்; அருணா—அருணா; ந்ரும்ணா—நிரும்ணா; ஆங்கிரஸீ—ஆங்கிரஸி; ஸாவித்ரீ—சாவித்திரி; ஸுப்த-பாதா—சுப்தபாதா; ருதம்பரா—ருதம்பரா; ஸத்யம்பரா—சத்யம்பரா; இதி—இவ்வாறு; மஹா-நத்ய:—மிகப்பெரிய நதிகள்; யாஸாம்—அவற்றின்; ஜல-உபஸ்பர்ஸன—நீரைத் தொட்ட மாத்திரத்திலேயே; விதூத—நீக்கும்; ரஜ:-தமஸ:—அவர்களின் இரஜோ மற்றும் தமோகுணங்களை; ஹம்ஸ—ஹம்ஸர்கள்; பதங்க—பதங்கர்கள்; ஊர்த்வாயன—ஊர்த்வாயனர்கள்; ஸத்யாங்க—சத்யாங்கர்கள்; ஸம்ஜ்ஞா:—பெயரில்; சத்வார:—நான்கு; வர்ணா:—மனித இனங்கள்; ஸஹஸ்ர-ஆயுஷ:—ஓராயிரம் வருடங்கள் ஆயுள் உடையோர்; விபுத-உபம—தேவர்களைப் போன்று; ஸந்தர்ஸன—மிக அழகிய வடிவமுடையோர்; ப்ரஜனனா:—மழலைகள் பெற்று; ஸ்வர்க-த்வாரம்—சொர்க்கத்தின் வாசல்; த்ரய்யா வித்யயா—வேதநெறிகளுக்கேற்ப சமயச் சடங்குகள் செய்வதினால்; பகவந்தம்—முழுமுதற் கடவுள்; த்ரயீ-மயம்—வேதங்களில் நிறுவப்பட்டிருக்கும்; ஸுர்யம்-ஆத்மானம்—சூரிய தேவனால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பரமாத்மா; யஜந்தே—அவர்கள் வழிபடுகின்றனர்.

அந்த எழு தீவுகளும் (வர்ஷங்கள்) அவர்தம் ஏழு மைந்தர்களின் பெயர்களைக் கொண்டிருந்தன சிவன், யவஸன், சுபத்திரன், சாந்தன், க்ஷேமன், அம்ருதன், அபயன், அந்த ஏழு நிலப்பகுதிகளிலும் ஏழ மலைகள் மற்றும் ஏழு நதிகள் இருக்கின்றன. அம்மலைகளின் பெயர்கள் மணி கூடம், வஜ்ரகூடம், இந்திர சேனம், ஜோதிஷ்மான், சுபர்ணம், இரண்யஷ்தீவம், மேகமாலம் ஆகும். அந்நதிகளின் பெயர்கள் அருணா, நிரும்ணா, ஆங்கிரஸீ, சாவித்திரி, சுப்தபாதா, ருதம்பரா, சத்யம்பரா ஆகும். அந்நதிகளின் நீரைத் தொட்டாலோ அல்லது நீராடினாலோ ஒருவன் உடனடியாக பௌதிக மாசுக்களில் இருந்து விடுதலை பெறுவான். மேலும் பிலக்ஷத்வீபத்தில் ஹம்ஸர்கள், பதங்கர்கள், ஊர்த்வாயனர்கள், சத்யாங்கர்கள் என்று நான்கு மக்கட் பிரிவுகள் உள்ளன. இவர்கள் இவ்வழியேத் தம்மைத் தூய்மை செய்து கொள்கின்றனர். பிலக்ஷத்வீப வாசிகள் ஓராயிரம் ஆண்டுகள் ஆயுளுடையவர் ஆவர். அவர்கள் தேவர்களைப் போன்று எழில் மிக்கவர்கள் ஆவர். ஆதலினால் அவர்கள் தேவர்களைப் போன்ற குழந்தைகளைப் பெற்றிருக்கின்றனர். வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சமயச் சடங்குகளைச் செய்வதினாலும் சூரிய தேவனால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முழுமுதற் கடவுளை வழிபடுவதினாலும் அவர்கள் மேலுலகமான சூரிய லோகத்தை அடைகின்றனர்.

பதம் 5.20.5
பிரத்னஸ்ய விஷ்ணோ ரூபம் யத் ஸத்யஸ்யர்தஸ்ய ப்ரஹ்மண:
அம்ருதஸ்ய ச ம்ருத்யோஸ் ச ஸூர்யம் ஆத்மானம் ஈமஹீதி

ப்ரத்னஸ்ய—ஆதியானவர்; விஷ்ணோ—பகவான்விஷ்ணு; ரூபம்—வடிவம்; யத்—இது; ஸத்யஸ்ய—முழுமெய்ப் பொருளின்; ருதஸ்ய—தர்மத்தின்; ப்ரஹ்மண:—பரப்பிரம்மத்தின்; அம்ருதஸ்ய—புண்ணியபலனின்; ச—மேலும்; ம்ருத்யோ:—மரணத்தின் (பாவ பலன்); ச—மேலும்; ஸூர்யம்—சூரியதேவன்; ஆத்மானம்—பரமாத்மா அல்லது ஆத்மாக்களுக்கெல்லாம் ஆதாரமானவர்; ஈமஹி—அடைக்கலம் வேண்டி நாம் அணுகுகிறோம்; இதி—இவ்வாறு.

(பிலக்ஷத்வீபத்தைச் சேர்ந்தவர்கள் இம்மந்திரத்தினாலேயே பரமபுருஷ பகவானை வழிபடுகின்றனர்) எல்லோருக்கும் ஆதியானவரும், எங்கும் பரந்திருக்கும் முழுமுதற் கடவுளுமான பகவான் விஷ்ணுவின் பிரதிபிம்பமாகத் திகழும் சூரிய தேவனை நாம் சரணடைவோமாக வணங்கத்தக்கப் பகவான் விஷ்ணுவே ஆவார். வேதமும் அவரே, தர்மமும் அவரே. புண்ணிய மற்றும் பாவச் செயல்களின் பலன்கள் அனைத்திற்கும் அவரே ஆதாரமானவர்.

பதம் 5.20.6
ப்லக்ஷாதிஷு பஞ்சஸு புருஷாணாம் ஆயுர் இந்த்ரியம் ஒஜ:
ஸஹோ பலம் புத்திர் விக்ரம இதி ச ஸர்வேஸாம் ஒளத்பத்திகீ ஸித்திர்
அவிஸேஷேன வர்ததே

ப்லக்ஷ:-ஆதிஷு—பிலக்ஷ தீவின் தலைமையின் கீழுள்ள தீவுகள்; பஞ்சஸு—ஐந்து; புருஷாணாம்—வசிப்பவர்கள்; ஆயு—நீண்ட ஆயுள்; இந்த்ரியம்—தெளிவான புலன்கள்; ஒஜ—உடல் வலிமை; ஸஹ—புத்திபலம்; பலம்—உடல்வலிமை; புத்தி—புத்தி; விக்ரம—வீரதீரம்; இதி—இவ்வாறு; ச—மேலும்; ஸர்வேஷாம்—அனைவரும்; ஒளத்பத்திகீ—இயல்பாக அமைந்துள்ள; ஸித்தி—நிறைவுநிலை; அவி-ஸேஷேண—வேறுபாடு இன்றி; வர்ததே—வெளிப்படுகிறது.

ஓ மன்னனே, நீண்ட ஆயுள், புலன்களின் ஆற்றல், புத்தி பலம், உடல் பலம், வீரதீரம், போன்ற அனைத்துத் தன்மைகளும் பிலக்ஷத்தீவு மற்றும் அதன் தலைமையின் கீழ் உள்ள அனைத்துத் தீவுகளில் வாழ்பவர்களிடமும் இயற்கையாகவும் சமமாகவும் அமையப்பெற்றிருந்தன.

பதம் 5.20.7
ப்லக்ஷ: ஸ்வ-ஸமானேனேக்ஷு – ரஸோதேனாவ்ருதோ யதா ததா
த்வீபோ ‘பி ஸால்மலோ த்வி-குண-விஸால: ஸமானேன ஸுரோ
தேனாவ்ருத: பரிவ்ருங்க்தே

ப்லக்ஷ:—பிலக்ஷத்வீபம் என்னும் நிலப்பகுதி; ஸ்வ-ஸமானேன—அகலத்தில் இணையானது; இக்ஷு-ரஸ—கரும்புச் சாற்றின்; உதேன—கடலினால்; ஆவ்ருத—சூழப்பட்டு; யதா—போன்று; ததா—அதுபோல்; த்வீப—மற்றொரு தீவு; அபி—மேலும்; ஸால்மல—சாமலம்; த்வி-குண-விஸால—இருமடங்கு பெரியது; ஸமானேன—அகலத்தில் சமமானது; ஸுரா-உதேன—மதுக்கடலினால்; ஆவ்ருத—சூழப்பட்டு; பரிவ்ருங்க்தே—வெளிப்படுகிறது.

பிலக்ஷத்வீபம் அதன் அகலத்திற்கு இணையான அளவுடைய கரும்புச் சாறுக் கடலினால் குழப்பட்டிருக்கிறது. அதுபோல் மற்றொரு தீவான சால்மலத்வீபம் பிலக்ஷத்விபத்தைப்போல் இரு மடங்கு (400,000 போஜனம் அல்லது 3,200,000 மைல்கள்) அகலமுடையதாகும். மேலும் இத்தீவு மதுவின் சுவையுடைய நீரினால் நிரம்பப்பெற்றிருக்கும் சுராசாகரம் என்னும் அகன்று விரிந்த கடலினால் சூழப்பட்டிருக்கிறது.

பதம் 5.20.8
யத்ர ஹ வை ஸால்மலீ பிலக்ஷாயாமா யஸ்யாம் வாவகில நிலயம்
ஆஹுர்பகவதஸ் சந்த-ஸ்துத-பதத்த்ரி ராஜஸ்ய ஸா த்வீப-ஹுதயே
உபலக்ஷ்யதே

யத்ர—இங்கே; ஹ வை—உறுதியாக; ஸால்மலீ—ஒரு சால்மலீ-மரம்; ப்லக்ஷ-ஆயாமா—பிலக்ஷ மரத்தைப் போன்று பெரியது (நூறு யோஜனங்கள் அகலமும், ஆயிரத்து நூறு யோஜனங்கள் உயரமும் உடையதாகும்); யஸ்யாம்—இதில்; வாவகில—உண்மையில்; நிலயம்—ஓய்விடம் அல்லது இருப்பிடம்; ஆஹு:—அவர்கள் கூறுகின்றனர்; பகவத—மிகவும் சக்தி வாய்ந்த; சந்த-ஸ்துத—அவர் பகவானை வேத மந்திரங்களினால் வழிபடுகிறார்; பதத்த்ரி-ராஜஸ்ய—பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடன்; ஸா—அந்த மரம்; த்வீப-ஹுதயே—அத்தீவின் பெயர்; உபலக்ஷ்யதே—அடையாளம் காணப்படுகிறது.

சால்மலீத்வீபத்தில் சால்மலீ என்றொரு மரம் இருக்கிறது. இம்மரத்தின் பெயரினாலேயே இத்தீவு அழைக்கப்படுகின்றது. இம்மரம் பிலக்ஷ மரத்தைப்போன்று அகலமும் உயரமும் உடையதாகும். அதாவது 100 யோஜனங்கள் (800 மைல்கள்) அகலமும் 1,100 யோஜனங்கள் (8,800 மைல்கள்) உயரமும் உடையதாகும். கற்றறிந்த அறிஞர்கள், இப்பெரிய மரத்தில் பகவான் விஷ்ணுவின் வாகனமும், பறவைகளின் அரசருமான கருடன் வசிப்பதாகக் கூறுகின்றனர். இம்மரத்தில் கருடன் பகவான் விஷ்ணுவை வேத மந்திரங்களினால் வழிபடுகிறார்.

பதம் 5.20.9
தத் -த்வீபாதிபதி: ப்ரிய வ்ரதாத்மஜோ யஜ்ஞபாஹு: ஸ்வ-ஸுதேப்ய:
ஸப்தப்யஸ் தன்-நாமானி ஸப்த-வர்ஷணி வ்யபஜத் ஸுரோசனம்
ஸௌமனஸ்யம் ரமணகம் தேவ வர்ஷம் பாரிபத்ரம் ஆப்யாயனம்
அவிஜ்ஞாதம் இதி

தத்-த்வீப-அதிபதி:—இத்தீவின் தலைவர்; ப்ரியவரத-ஆத்மஜ:—மகாராஜா பிரியவிரதனின் புதல்வர்; யஜ்ஞ-பாஹு:—யக்ஞபாகு என்பவர்; ஸ்வ-ஸுதேப்ய:—அவரது புதல்வர்களுக்கு; ஸப்தப்ய:—எண்ணிக்கையில் ஏழு; தத்-நாமானி—அவர்களுடைய பெயர்களைக் கொண்டு; ஸப்த-வர்ஷணி—ஏழு நிலப்பகுதிகள்; வ்யபஜத்—பிாிக்கப்பட்ட; ஸுரோசனம்—சுரோசனம்; ஸௌமனஸ்யம்—சௌமனஸ்யம்; ரமணகம்—இரமணகள்; தே-வர்ஷம்—தேவ வர்ஷம்; பாரிபத்ரம்—பாரிபத்ரம்; ஆப்யாயனம்—ஆப்யாயனம்; அவிஜ்ஞாதம்—அவிக்ஞாதம்; இதி—இவ்வாறு.

சால்மலீத்வீபத்தின் தலைவரும், மகாராஜா பிரியவிரதனின் மைந்தனுமான யக்ஞபாகு என்பவர் இத்தீவை ஏழு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தமது ஏழு புதல்வர்களுக்கு அளித்தார். ஏழு மைந்தர்களின் பெயரைக் கொண்டே அவ்வேழு நிலப்பகுதிகளும் வழங்கப்பட்டன. அவை சுரோசனம், சௌமனஸ்யம், இரமணகம், தேவ வர்ஷம், பாரிபத்ரம், ஆப்யாயனம் மற்றும் அவிக்ஞாதம் ஆகும்.

பதம் 5.20.10
தேஷு வர்ஷாத்ரயோ நத்யஸ் ஸப்தைவா பிஜ்ஞாதா ஸ்வரஸ:
ஸதஸ்ருங்கோ வாம தேவ: குந்தோ முகுந்த: புஷ்ப-வர்ஷ: ஸஹஸ்ர
ஸ்ருதிர் இதி அனுமதி: ஸினீவாலீ ஸரஸ்வதீ குஹு ரஜனீ நந்தா ராகேதி

தேஷு—அந்நிலப்பகுதிகளில்; வர்ஷ-அத்ரய:—மலைகள்; நத்ய ச—அதுபோல் நதிகள்; ஸப்த-ஏவ—எண்ணிக்கையில் ஏழு; அபிஜ்ஞாதா—அறியப்படுகிறது; ஸ்வரஸ—சுவரஸம்; ஸத-ஸ்ருங்க—சதஸ்ருங்கம்; வாம-தேவ:—வாமதேவம்; குந்த—குந்தம்; முகுந்த—முகுந்தம்; புஷ்ப-வர்ஷ—புஷ்ப வர்ஷம்; ஸஹஸ்ர-ஸ்ருதி—சகஸ்ரஸ்ருதி; இதி—இவ்வாறு; அனுமதி—அனுமதி; ஸினீவாலீ—சினீவாலீ; சரஸ்வதீ—சரஸ்வதி; குஹு—குஹு; ரஜனீ—ரஜனீ; நந்தா—நந்தா; ராகா—ராகா; இதி—இவ்வாறு.

அந்நிலப்பகுதிகளில் சுவர்ஸம், சதஸ்ருங்கம். வாமதேவம், குந்தம், முகுந்தம். புஷ்ப வர்ஷம், சகஸ்ரஸ்ரருதி என்று ஏழு மலைகள் இருக்கின்றன. மேலும் அங்கே அனுமதி சினீவாலீ, சரஸ்வதி, குஹு, ரஜனீ, நந்தா, ராகா என்று ஏழு நதிகளும் இருக்கின்றன. அவை இப்போதும் ஒடிக்கொண்டிருக்கின்றன.

பதம் 5.20.11
தத்-வர்ஷ-புருஷா: ஸ்ருததர-வீர்யதர-வஸுந்தரே-ஷந்தர-ஸம்ஜ்ஞா
பகவந்தம் வேதமயம் ஸோமம் ஆத்மனம் வேதேன யஜஞ்தே

தத்-வர்ஷ-புருஷ:—அந்நிலப்பகுதிகளில் வாழ்பவர்கள்; ஸ்ருததர—ததரம்; வீர்யதர—வீர்யதரம்; வஸுந்தர—வசுந்தரம்; இஷந்தர—இஷந்தம்; ஸம்ஜ்ஞா—அறியப்படுகின்றன; பகவந்தம்—முழுமுதற் கடவுள்; வேத-மயம்—வேதஞானம் நிரம்ப பெற்றவர்கள்; ஸோமம்-ஆத்மானம்—சோமன் என்றறியப்படும் உயிர்வாழியினை; வேதேன—வேதங்களின் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றி; யஜந்தே—அவர்கள் வழிபடுகின்றனர்.

அந்நிலப்பகுதிகளில் வாழும் ஸ்ருதிதரர்கள், வீர்யதரர்கள், வசுந்தரர்கள், இஷந்தாரர்கள் என்றறியப்படுவோர் வர்ணாஸ்ரம தர்மம் கோட்பாட்டினை மிகவும் கடுமையாகப் பின்பற்றி முழுமுதற் கடவுளின் அம்ச விரிவான சந்திரதேவன் சோமனை வழிபடுகின்றனர்.

பதம் 5.20.12
ஸ்வ-கோபி: பித்ரு-தேவேப்யோ விபஜன் க்ருஷ்ண-ஸுக்லயோ:
ப்ரஜானாம் ஸர்வாஸாம் ராஜா-ந்த: ஸோமோ ந ஆஸ்த்வ இதி

ஸ்வ-கோபி:—அவரது சுய ஒளிக்கதிர்களின் விரிவினால்; பித்ரு-தேவேப்ய:—பிதாக்கள் மற்றும் தேவர்களுக்கு; விபஜன்—பிரித்தல்; க்ருஷ்ண-ஸுக்லயோ—கிருஷ்ணபட்சம் மற்றும் சுக்லபட்சம் என்று பதினைந்து நாட்கள் கொண்ட இரு பிரிவாக; ப்ரஜானாம்—குடிமக்களின்; ஸர்வாஸாம்—அனைவரின்; ராஜா—அரசர்; அந்த—உணவு தானியங்கள்; ஸோம—சந்திரதேவன்; ந—எமக்கு; ஆஸ்து—அருள்பாவிப்பாராக; இதி—இவ்வாறு.

(சாலமலீத் வீபத்தில் வாழ்பவர்கள் சந்திரதேவனைப் பின்வரும் வார்த்தைகளினால் வழிபடுகின்றனர்) அவரது சுய ஒளிக்கதிர்களினால் சந்திர தேவன் பிதாக்கள் மற்றும் தேவர்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்காக ஒரு மாதத்தினை இருவாரங்கள் சுக்கிலபட்சம் என்றும் இருவாரங்கள் கிருஷ்ணபட்சம் என்றும் பிரித்திருக்கின்றார். சந்திரதேவனே காலத்தைப் பிரிக்கின்றார். அவரே இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைவர்க்கும் அரசர் ஆவார். ஆகவே அவர் நம்மை ஆள்பவராகவும், நமக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டுமென்று பிரார்த்தித்து, நமது மரியாதைக்குரிய வந்தனங்களை அவருக்கு அர்ப்பணிப்போமாக.

பதம் 5.20.13
ஏவம் ஸுரோதாத் பஹிஸ் தத்-த்வி-குண: ஸமானே-னாவ்ருதே
க்ருதோதேன யதா பூரவ்: குஸ-த்வீபோ யஸ்மின்குஸ ஸ்தம்போ தேவ-
க்ருதஸ் தத்-த்வீபாஸ்யாகரோ ஜ்வலன இவாபர: ஸ்வ-ஸஷ்ப-ரோசிஷா
திஸோ விராஜயதி

ஏவம்—இவ்வாறு; ஸுரோதாத்—மதுக்கடலில் இருந்து; பஹி—வெளியே; தத்-த்வி-குண:—இருமடங்கு; ஸ்மானேன—அகலத்தில் இணையானது; ஆவ்ருத—சூழப்பட்டு; க்ருத-உதேன—ஒரு நெய்க் கடல்; யதா-பூரவ:—சால்மலீத்வீத்துடன் முன்பு இருந்தது போல்; குஸ-த்வீப—குசத்வீபம் என்னும் தீவு; யஸ்மின்—இதில்; குஸ-ஸ்தம்ப—குசப்புற்கள்; தேவ-க்ருத—முழுமுதற் கடவுளின் பரம விருப்பத்தினால் உருவாக்கப்பட்டது; தத்-த்வீப-ஆக்யா-கர:—அத்தீவிற்குப் பெயர் அளிக்கப்பட்டு; ஜ்வலன—தீ; இவ—போன்று; அபர—மற்றொரு; ஸ்வ-ஸஷப-ரோசிஷா—வளர்ந்த இளம்புற்களின்
ஒளியினால்; திஸா—எல்லாத் திசைகளும்; விராஜயதி—ஒளிர்கிறது.

மதுக்கடலுக்கு வெளியே குசத்வீபம் என்று மற்றொரு தீவு இருக்கிறது. இத்தீவு 800,000 யோஜனங்கள் (6,400,000 மைல்கள்) அகலமுடையதாகும். இவ்வகலம் மதுக்கடலைப் போல் இருமடங்கு பெரிதாகும். சால்மலீத்வீபம் மதுக்கடலினால் சூழப்பட்டிருப்பது போல், குசத்வீபம், அதற்கு இணையான அகலமுடைய நெய்க்கடலினால் சூழப்பட்டிருக்கின்றன. இப்புற்களின் பெயரிலேயே இத்தீவு அழைக்கப்படுகின்றன. முழுமுதற் கடவுளின் விருப்பத்தின் பேரில் தேவர்களால் படைக்கப்பட்ட குசப்புற்கள் அக்கினியின் இரண்டாவது வடிவம்போல் தோன்றுகின்றது. ஆயினும் இவை மெல்லிய இனிமையான சுடர் ஒளியாகும் இதன் இளம் குருத்துக்கள் எல்லாத் திசைகளிலும் ஒளிவீசுகிறது.

பதம் 5.20.14
தத்-த்விப-பதி: ப்ரையவ்ரதோ ராஜன் ஹிரண்யாரேதா நாம ஸ்வம்
த்வீபம் ஸப்தப்ய: ஸ்வ-புதரேப்யோ யதா-பாகம் விபஜ்ய ஸ்வயம் தப
ஆதிஷ்டத வஸு- வஸுதான-த்ருடருசி-நாபிகுப்த-ஸ்துத்யவ்ரத-விவிக்த
வாமதேவ நாமப்ய:

தத்-ததவீப-பதி:—அத்தீவின் தலைவன்; ப்ரையவ்ரத:—மகாராஜ பிரியவிரதனின் மைந்தன்; ராஜன்—ஓ மன்னனே; ஹிரண்யரேதா—இரண்யரேதான்; நாம—பெயருடையவர்; ஸ்வம்—அவருக்குரிய; த்வீபம்—தீவு; ஸப்தப்ய—ஏழுபேர்களுக்கு; ஸ்வ-புத்பரப்ய—அவரது புத்திரர்கள்; யதா-பாகம்—பிரிவிற்கேற்ப; விபஜ்ய—பிரித்து; ஸ்வயம்—அவர் தனது; தப-ஆதிஷடத—தவத்தில் ஈடுபட்டார்; வஸு—வசுவிற்கு; வஸுதான—வசுதானன்; த்ருடருசி—திருடருசி; நாபிகுப்த—நாபிகுப்தன்; ஸ்துத்ய-வ்ரத—ஸ்துத்யவிரதன்; விவித்த—விவிக்தன்; வாம-தேவ—வாமதேவன்; நாமப்ய—பெயருடையோர்.

ஒ, மன்னனே, மகாராஜா பிரியவிரதனின் மற்றொரு மைந்தனான இரண்யரேதான் என்பவன் இத்தீவின் அரசன் ஆவார். அவர் இத்தீவை ஏழு பாகங்களாகப் பிரித்து அவற்றைத் தமது மைந்தர்களின் மரபு உரிமைக்கேற்ப அவர்களுக்கு அளித்தார். அரசர் பின்னர் தவத்தில் ஈடுபடுவதற்காக இல்லற வாழ்விலிருந்து ஒய்வுபெற்றார். அவரது மைந்தர்களின் பெயர்கள் வசு, வசுதானன், திருடருசி, ஸ்துத்யவ்ரதன், நாபிகுப்தன், விவிக்தன், வாமதேவன் என்பவையாகும்.

பதம் 5.20.15
தேஷாம் வர்ஷேஷு ஸீமா-கிரயோ நத்யஸ் சாபிஜ்ஞாதா ஸப்த
ஸப்தைவ சக்ரஸ் சதுஸ்ருங்க: கபிலஸ் சித்ரகூடோ தேவானீக ஊர்த்வ
ரோமா த்ர்விண இதி ரஸகுல்யா மதுகுல்யா மித்ரவிந்தா ஸ்ருதவிந்தா
தேவகர்பா க்ருதச்யுதா மந்த்ரமாலேதி

தேஷாம்—இம்மைந்தர்கள் அனைவரும்; வர்ஷேஷு—இந்தப் பகுதிகளில்; ஸுமோ-கிரய—எல்லைகளாக மலைகள்; நத்ய ச—அதுபோல நதிகள்; அபிஜ்ஞாதா—அறியப்படுகின்றன; ஸப்த—ஏழு; ஸப்த—ஏழு; ஏவ—உறுதியாக; சக்ரா—சக்கரம்; சது ஸ்ருங்க—சது ஸ்ருங்கம்; கபில—கபிலம்; சித்ர-கூட—சித்ர கூடம்; தேவானீக—தேவானீகம்; ஊர்தவ-ரோமா—ஊர்த்வரோமா; த்ரவிண—திரவிணம்; இதி—இவ்வாறு; ரஸ-குல்யா—இரமகுல்யா; மது-குல்யா—மதுகுல்யா; மித்ர-விந்தா—மித்திரவிந்தா; ஸ்ருத-விந்தா—ஸ்ருதவிந்தா; தேவ-கர்பா—தேவகர்பா; க்ருத-ச்யுதா—கிருதச்யுதா; மந்த்ர-மாலா—மந்திரமாலா; இதி—இவ்வாறு.

அந்த எழு தீவுகளின் எல்லைகளாகச் சக்கரம், சது:ஸ்ருங்கம், கபிலம், சித்திரகூடம், தேவானீகம், ஊர்த்வரோமா மற்றும் திரவிணம் என்று ஏழு மலைகள் இருக்கின்றன. மேலும் இங்கு இரமகுல்யா, மதுகுல்யா, மித்ரவிந்தா, ஸ்ருதவிந்தா, தேவகர்பா, க்ருதச்யுதா, மந்திரமாலா என்று ஏழு நதிகள் ஒடுகின்றன.

பதம் 5.20.16
யாஸாம் பயோபி: குஸத்வீபௌகஸ: குஸல-கோவி தாபியுக்த-
குலகஸம்ஜ்ஞா பகவந்தம் ஜாத வேத ஸரூபிணம் கர்ம கௌஸலேன யஜந்தே

யாஸாம்—அவற்றின்; பயோபி—நீரினால்; குஸ-த்வீப-ஒளகஸ:—குசத்வீபம் என்னும் தீவில் வாழ்பவர்கள்; குஸல—குசலர்; கோவித—கோவிதர்; அபியுக்த—அபியுக்தர்; குலக——குலகர்: ஸம்ஜ்ஞா—பெயருடையோர்; பகவந்தம்—முழுமுதற் கடவுளுக்கு; ஜாதவேத—அக்கினி தேவன்; ஸ-ரூபிணம்—வடிவில் வெளிப்படும்; கர்ம கௌஸலேன—சமயச்சடங்குகளின் தேர்ச்சியினால்; யருந்தே—அவர்கள் வழிபடுகின்றனர்.

குசத்வீபத்தில் வாழ்பவர்கள் குசலர்கள், கோவிந்தர்கள், அபியுக்தர்கள், குலகர்கள் என்று போற்றப்படுகின்றனர். அவர்கள் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆவார். அந்நதிகளில் நீராடுவதினால் அவர்கள் அனைவரும் தூய்மையடைகின்றனர். வேத சாத்திரங்களின் கட்டளைக்கேற்ப சமயச்சடங்குகளைச் செய்வதில் இவர்கள் தேர்ந்தவர்கள் ஆவார். அவ்வாறு அவர்கள் முழுமுதற் கடவுளை அக்கினிதேவன் வடிவில் வழிபடுகின்றனர்.

பதம் 5.20.17
பரஸ்ய ப்ரஹ்மண: ஸாக்ஷாஜ் ஜாத-வேதோ ‘ஸி ஹவ்யவாட்
தேவானாம் புருஷாங்கானாம் யஜ்ஞேன புருஷம் யஜேதி

பரஸ்ய—மிகவுயர்ந்த; ப்ரஹ்மண—பிரம்மன்; ஸாக்ஷாத்—நேரடியாக; ஜாத-வேத—ஒ அக்கினி தேவனே; அஸி—நீர் இருக்கின்றீர்; ஹவ்யவாட்—நெய், தானியங்கள் போன்று வேள்வியில் அர்ப்பணிக்கப்படும் பொருள்களை எடுத்துச் செல்பவர்; தேவானாம்—அனைத்துத் தேவர்களின்; புருஷ-அங்கானாம்—பரமபுருஷரின் அங்கங்கள் ஆவர்; யஜ்ஞேன—வேள்விச்சடங்குகளைச் செய்வதினால்; புருஷம்—பரம புருஷருக்கு; யஜ—அர்ப்பணங்களை எடுத்துச் செல்வீராக; இதி—இவ்வாறு.

(இம்மந்திரங்களினாலேயே குசத்வீபத்தைச் சேர்ந்தவர்கள் அக்கினி தேவனை வழிபடுகின்றர்) ஒ, அக்கினி தேவனே, நீர் முழுமுதற் கடவுளான ஹரியின் அங்கத்தின் ஒருபாகமாவீர். மேலும் வேள்விகளில் அர்ப்பணிக்கப்படுபவற்றை நீரே முழுமுதற் கடவுளிடம் எடுத்துச் செல்லுகின்றீர். ஆகையினால் வேள்விகளில் தேவர்களுக்கு நாங்கள் அர்ப்பணிக்கும் பொருட்களை நீர் முழுமுதற் கடவுளிடம் எடுத்து செல்வீராக, ஏனெனில் பகவானே வேள்விகளின் பலன்களை உண்மையில் அனுபவிப்பவர் ஆவர்.

பதம் 5.20.18
ததா க்ருதோதாதே பஹி: க்ரௌஞ்சத்வீபோ த்விகுண: ஸ்வ-
மானே க்ஷ ரோதேன பரித உபக்லுப்தோ வ்ருதோ யதா குஸத்வீபோ
க்ருதோதேன யஸ்மின் க்ரௌஞ்சோ நாம பர்வத-ராஜோ த்வீப-நாம-
நிர்வர்தக ஆஸ்தே

ததா—அதுபோல்; க்ருத-உதாத்—நெய்க்கடலிலிருந்து; பஹி:—வெளியே; க்ரௌஞ்ச-த்வீப—கிரௌஞ்சத்வீபம் என்று மற்றொரு தீவு; த்வி-குண:—இருமடங்கு பெரிது; ஸவ-மானே—அதே அளவு; க்ஷீர-உதேன—பாற்கடலினால்; பரித—சுற்றிலும்; உபக்லுப்த—சூழப்பட்டு; வ்ருத—சூழப்பட்டு; யதா—போன்ற; குஸத்வீபோ—குசத்வீபம் என்னும் தீவு; க்ருத-உதேன—நெய்க்கடலினால்; யஸ்மின்—இதில்; க்ரௌஞ்ச: நாம—கிரௌஞ்சம் என்னும் பெயரில்; பர்வத-ராஜ—பர்வதராஜம் (மலைகளின் அரசன்); த்வீப-நாம—தீவின் பெயர்; நிர்வர்தக—பெறப்பட்டு; ஆஸ்தே—வெளிப்படுகிறது.

நெய்க்கடலுக்கு வெளியே கிரௌஞ்சத்வீபம் என்று மற்றொரு தீவு இருக்கிறது. இதன் அகலம் 1,600,000 யோஜனங்கள் (12,800,000 மைல்கள்) உடையதாகும் அதாவது நெய்க்கடலைப்போல் இருமடங்கு பெரிதாகும். குசத்வீபம் எவ்வாறு நெய்க்கடலினால் சூழப்பட்டிருக்கிறதோ அதுபோல் கிரௌஞ்சத்வீபம் அத்தீவின் பரப்பளவைப் போன்று பாற்கடலினால் சூழப்பட்டிருக்கின்றது. கிரௌஞ்சத்வீபத்தில் கிரௌஞ்சம் என்றொரு மலை இருக்கிறது. இமயமலையின் பெயரிலேயே அத்தீவு அழைக்கப்படுகின்றது.

பதம் 5.20.19
யோ ‘ ஸௌ குஹ-ப்ரஹரணோன்மதித-நிதம்ப-குஞ்ஜோ ‘பி க்ஷ
ரோதேனா ஸிச்யமானோ பகவதா வருணேனாபிருப்தோ விபயோ பபூவ

ய—இரு; அஸெள—அந்த (மலை); குஹ-ப்ரஹரண—சிவ பெருமானின் மைந்தனான கார்த்திகேயனின் ஆயுதங்களினால்; உன்மதித—அழிக்கப்பட்டு; நிதம்ப-குஞ்ஜ:—அதன் சரிவுகளில் உள்ள மரம், செடி, கொடிகள்; அபி—இருந்தபோதிலும்; க்ஷீர-உதேன—பாற்கடலினால்; ஆஸிச்யமான—எப்போதும் நீராடி; பகவதா—மிகுந்த சக்தியினால்; வருணேன—வருணதேவன்; அபிருப்த:—பாதுகாக்கப்பட்டு; விபய:-பபூவ—அச்சமற்றிருந்தது.

கிரௌஞ்ச மலையில் இருந்த மரம், செடி, கொடிகள் அனைத்தும் கார்த்திகேயனின் ஆயுதங்களினால் அழிக்கப்பட்டபோதிலும்கூட அம்மலை அச்சமற்றிருந்தது காரணம் அம்மலை எப்போதும் பாற்கடலினால் சூழப்பட்டு வருணபகவானால் பாதுகாக்கப்படுகிறது.

பதம் 5.20.20
தஸ்மின்ன அபி ப்ரையவ்ரதோ க்ருதப்ருஷ்டோ நாமாதிபதி: ஸ்வே
த்வீபே வர்ஷாணி ஸப்த விபஜ்ய தேஷு புத்ர-நாமஸு ஸப்த ரிக்தாதான்
வர்ஷபான் நிவேஸ்ய ஸ்வயம் பகவான் பகவத: பரம-கல்யாண-யஸஸ
ஆத்ம-பூதஸ்ய ஹரேஸ் சரணாரவிந்தம் உபஜகாம

தஸ்மின்—அத்தீவில்; அபி—மேலும்; ப்ரையவ்ரத:—மகாராஜா பிரியவிரதனின் மைந்தன்; க்ருத-ப்ருஷ்ட:—கிருதப்ருஷடன்; நாம—பெயரில்; அதிபதி—அத்தீவின் அரசன்; ஸ்வே—அவருக்குரிய; த்வீபே—அத்தீவில்; வர்ஷாணி—நிலப்பகுதி; ஸப்த—ஏழு; விபஜ்ய—பிரிந்து; தேஷு—அவை ஒவ்வொன்றிலும்; புத்ர-நாமஸு—அவர் புதல்வர்களின் பெயர்களைப் பெற்று; ஸப்த—ஏழு; ரிக்தா-தான்—புதல்வர்கள்; வர்ஷ-பான்—வர்ஷங்களின் தலைவர்கள்; நிவேஸ்ய—நியமித்து; ஸ்வயம்—அவர்; பகவான்—சக்திமிக்க; பகவத—முழுமுதற் கடவுள்; பரம-கல்யாண-யஸஸ:—அவரது பெருமைகள் மங்களம் நிறைந்தவையாகும்; ஆத்ம-பூதஸ்ய—அனைத்து ஆத்மாக்களின் ஆத்மா; ஹரே சரண-அரவிந்தம்—பகவானின் தாமரைத்திருவடிகள்; உபஜகாம—சரணம் அடைந்தார்.

இத்தீவின் அரசர் மகாராஜா பிரியவிரதனின் மற்றொரு மைந்தன் ஆவார். அவரது பெயர் கிருதப்பிருஷ்டன் என்பதாகும். அவர் கற்றறிந்த அறிஞர் ஆவார். அவர் தனக்குச் சொந்தமானத் தீவைத் தனது ஏழு மைந்தர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். இவ்வாறு அத்தீவை ஏழு பகுதிகளாகப் பிரித்து தனது மைந்தர்களின் பெயர்களை அப்பகுதிகளுக்கு இட்டப்பிறகு கிருதப்ருஷ்ட மகாராஜா இல்வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று ஆத்மாக்கள் அனைத்திற்கும் ஆத்மாவாகவும், பரம கல்யாண குணங்களையுடையவருமானப் பகவானின் திருவடித்தாமரைகளைச் சரணடைத்தார். இவ்வாறு அவர் நிறைவுநிலை எய்தினார்.

பதம் 5.20.21
ஆமோ மதுருஹோ மேகப்ருஷ்ட: ஸுதாமா ப்ரஜி ஜிஷ்டோ
லோஹிதார்ணோ வனஸ்பதிர் இதி க்ருதப்ருஷ்ட-ஸுதாஸ் தேஷாம்
வர்ஷ-கிரய: ஸப்த ஸப்தைவ நத்யஸ் சாபிக்யாதா: ஸுக்லோ வர்தமா
னோ போஜன உபப்ர்ஹிணோ நந்தோ நந்தன: ஸர்வதோ-பத்ர இதி
அபயா அம்ருதௌகா ஆர்யகா தீர்தவதீ ரூபவதீ பவித்ரவதீ
ஸுக்லதி

ஆம:—ஆமன்; மது-ருஹ—மதுருஹன்; மேக-ப்ருஷ்ட:—மேகப்ருஷ்டன்; ஸுதாமா—சுதாமா; ப்ராஜிஷ்ட—பிராஜிஷ்டன்; லோஹிதார்ண:—லோஹிதார்ணன்; வனஸ்பதி—வனஸ்பதி; இதி—இவ்வாறு; க்ருதப்ருஷ்ட ஸுதா—கிருதப்ருஷ்டனின் மைந்தன்; தேஷாம்—அம்மைந்தர்களின்; வர்ஷ-கிரய:—அந்நிலப்பகுதிகளின் எல்லைகளாக விளங்கும் மலைகள்; ஸப்த—ஏழு; ஸப்த—ஏழு; ஏவ—மேலும்; நத்ய—நதிகள்; ச—மேலும்; அபிக்யாதா:—போற்றப்படும்; ஸுக்ல: வர்தமான:—சுக்கிலம் மற்றும் வர்த்மானம்; போஜன—போஜனம்; உபப்ருஹிண—உபப்ர்ஹிணம்; நந்த—நந்தம்; நந்தன:—நந்தனம்; ஸர்வத: பத்ர—சர்வதோபத்ரம்; இதி—இவ்வாறு; அபயா—அபயா; அம்ருதௌகா—அம்ருதௌகா; ஆர்யகா—ஆர்யகா; தீர்தவதீ—தீர்த்தவதி; ரூபவதீ—ரூபவதீ; பவித்ரவதீ—பவித்ரவதீ; ஸுக்லா—சுக்லர; இதி—இவ்வாறு.

மகாராஜா கிருதப்ருஷ்டனின் மைந்தர்கள் ஆமன், மதுருஹன் மேகப்ருஷ்டன், சுதாமா, பிரஜிஷ்டன், லோஹிதார்ணன், வனஸ்பதி என்போராவர். இவர்களின் தீவில் ஏழு மலைகள் எல்லைகளாக விளங்குகின்றன. மேலும் அங்கு ஏழு நதிகளும் இருக்கின்றன. அம்மலைகளின் பெயர்கள் சுக்கிலம், வர்தமானம், போஜனம், உபபர்ஹிணம், நந்தம், நந்தனம், சர்வதோபத்திரம் ஆகும். அங்கு பாயும் நதிகள் பெயர்கள் அபயா, அம்ருதௌகா, ஆர்யகா, தீர்த்தவதீ, ரூபவதி, பவித்ரவதீ மற்றும் சுக்லா ஆகும்.

பதம் 5.20.22
யாஸாம் அம்ப: பவித்ரம் அமலம் உபயுஞ்ஜானா: புருஷ- ரூஷபத்ரவிண தேவக
ஸம்ஜ்ஞா வர்ஷ-புருஷா ஆபோமயம் தேவம் அபாம் பூர்ணேனாஞ்
ஜவினா யஜந்தே

யாஸாம்—அனைத்து நதிகளின்; அம்ப—நீர்; பவித்ரம்—மிகவும் புனிதமானது; அமலம்—மிகவும் தூய்மையான; உபயுஞ்ஜானா:—பயன்படுத்தி; புருஷ—புருஷர்கள்; ருஷப—ரிஷபர்கள்; த்ரவிண—திரவிணர்கள்; தேவக—தேவர்கள்; ஸம்ஜ்ஞா—பெயருடையவர்கள்; வர்ஷ-புருஷா—அந்நிலப்பகுதிகளில் வாழ்பவர்கள்; ஆப-மயம்—நீருக்கு அதிபதியான வருணபகவான்; தேவம்—வழிபடும் தெய்வம்; அபாம்—நீரின்; பூர்ணேன—பூரணமாக; அஞ்ஜலினா—குவிந்த உள்ளங்ககைகள்; யஜந்தே—வழிபடுகின்றனர்.

கிரௌஞ்சத்வீபத்தில் வாழ்பவர்கள் புருஷர்கள், ரிஷபர்கள், திரவிணர்கள், தேவகர்கள் என்று நான்கு பிரிவினராக அழைக்கப்படுகின்றனர். அப்புனித நதிகளைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் உள்ளங்கை நிறைய நீரை எடுத்து அதனை நீரின் வடிவமாக விளங்கும் வருண பகவானின் தாமரைத் திருவடிகளுக்கு அர்ப்பணிப்பதின் மூலம் முழுமுதற் கடவுளை வழிபடுகின்றனர்.

பதம் 5.20.23
ஆப: புருஷ-வீர்யா: ஸ்த புனந்தீர் பூர்-புவ:-ஸுவ:
தா ந: புனீதாமீவ-க்னீ: ஸ்ப்ருஸதாம் ஆத்மனா புவ இதி

ஆப:—ஒ, நீரே; புருஷ-வீர்யா—முழுமுதற் கடவுளின் சக்தியைப் பெற்றிருப்பவரே; ஸ்த—நீர் ஆவீர்; புனந்தீ—புனிதப்படுத்துகின்றீர்; பூ—பூலோகம்; புவ—புவலோகம்; ஸுவ:—சுவலோகம்; தா:—நீர்; ந—எமது; புனீத—தூய்மைசெய்தல்; அமீவ-க்னீ:—அவர் பாவங்களை அழிக்கிறார்; ஸ்ப்ருஸதாம்—தொடுபவர்களின்; ஆத்மனா—உமது சட்டப்பூர்வமான நிலை; புவ—உடல்கள்; இதி—இவ்வாறு.

(கிரௌஞ்சத்வீபத்தைச் சேர்ந்தவர்கள் இம்மந்திரங்களைக் கூறி வழிபடுகின்றனர்) ஒ, நதிகளில் உள்ள நீரின் வடிவமாக விளங்குபவரே நீர் உமக்கான சக்தியை முழுமுதற் கடவுளிடமிருந்து பெறுகின்றீர். ஆகையினால் நீர் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் மூன்றினையும் தூய்மை செய்கின்றீர். உமது சட்டப்பூர்வமானத் தன்மையினால் நீர் பாவங்களை நீக்குகின்றீர். இதன் காரணமாகவே உம்மை நாங்கள் தொழுகின்றோம். அருள்கூர்ந்து எம்மைத் தூய்மை செய்வதைத் தொடர்வீராக.

பதம் 5.20.24
ஏவம் புரஸ்தாத் க்ஷீரோதாத் பரித உபவேஸித: ஸாகத்வீபோ த்வாத்ரிம்ஸல்-
லக்ஷயோஜனாயாம: ஸமானேன ச ததி மண்டோதேன பரீதோ யஸ்மின்
ஸாகோ நாம மஹீருஹ: ஸ்வ-க்ஷேத்ர வ்யபதேஸகோ யஸ்ய ஹ மஹா-
ஸுரபி-கந்தஸ் தம் த்வீபம் அனுவாஸயதி

ஏவம்—இவ்வாறு; புரஸ்தாத்—மேலாக; க்ஷீர-உதாத்—பாற்கடலிலிருந்து; பரித—சுற்றிலும்; உபவேஸித—அமைந்திருக்கின்றது; ஸாக-த்வீப:—மற்றொரு தீவு; சாகத்வீபம் ஆகும்; த்வா-த்ரிம்ஸத்—முப்பத்திரெண்டு; லக்ஷ—100,000; யோஜன—யோஜனங்கள்; ஆயாம—அதன் அளவு; ஸமானேன—சமமான நீளம்; ச—மேலும்; ததி-மண்ட-உதேன—கடைந்த தயிரினால் ஆனகடல்; பரீத—சூழப்பட்டு; யஸ்மின்—இந்நிலத்தில்; ஸாக—சாகம்; நாம—பெயருடைய; மஹீருஹ—ஓர் அத்திமரம்; ஸ்வ-க்ஷேத்ர-வ்யப தேஸக:—இதன் பெயரே அத்தீவிற்கும் வழங்குகிறது; யஸ்ய—இதன்; ஹ—உண்மையில்; மஹா-ஸுரபி—சிறந்த நறுமணம்; கந்த:—இனியமணம்; தம்த்வீபம்—இத்தீவு; அனுவாஸயதீ—நறுமணம் செய்கிறது.

பாற்கடலுக்கு வெளியே சாகத்வீபம் என்றொரு தீவு இருக்கிறது. இதன் அகலம் 3,200,000 யோஜனங்கள் (25,600,000 மைல்கள்) ஆகும். கிரௌஞ்சத்வீபம் அதன் பாற்கடலினால் சூழப்பட்டிருப்பது போல் சாகத்வீபம், அத்தீவின் பரப்பளவுள்ள தயிர்க்கடலினால் சூழப்பட்டிருக்கிறது. சாகத்வீபத்தில் ஒரு பெரிய சாகமரம் உள்ளது. இதன் பெயரிலேயே இத்தீவு அழைக்கப்படுகிறது. இம்மரம் மிகுந்த நறுமணம் உடையதாகும். உண்மையில் இம்மரம் தனது நறுமணத்தினை இத்தீவு முழுவதும் பரப்புகின்றது.

பதம் 5.20.25
தஸ்யாபி ப்ரையவ்ரத ஏவாதிபதிர் நாம்னா மேதாதிதி: ஸோ ‘பி
விபஜ்ய ஸப்த வர்ஷாணி புத்ர-நாமானி தேஷு ஸ்வாத்மஜான் புரோஜவ –
மனோஜவபவமான தூம்ரானீக சித்ரரேப பஹுரூபே விஸ்வதார
ஸம்ஜ்ஞான் நிதாப்யாதிபதீன் ஸ்வயம் பகவதி அனந்த ஆ-வேஸித
மதிஸ் தபோவன ப்ரவிவேஸ

தஸ்ய அபி—இத்தீவையும்கூட; ப்ரையவ்ரத—மகாராஜா பிரியவிரதனின் மைந்தன்; ஏவ—உறுதியாக; அதிபதி—அரசர்; நாம்னா—பெயரினால்; மேதா-திதி—மேதாதிதி; ஸ அபி—அவரும்கூட; விபஜ்ய—பிரித்து; ஸப்த-வர்ஷாணி—அத்தீவின் ஏழுபிரிவுகள்; புத்ர-நாமானி—அவரது புதல்வர்களின் பெயர்களை உடையன; தேஷு—அவற்றில்; ஸ்வ-ஆத்மஜான்—அவரது சொந்தப் புதல்வர்கள்; புரோஜவ—புரோஜவன்; மனோஜவ—மனோஜவன்; பவமான—பவமானன்; தூம்ரானீக—தூம்ரானீகன்; சித்ர-ரேப—சித்திரரேபன்; பஹு-ருப—பஹுரூபன்; விஸ்வதார—விஸ்வதாரன்; ஸம்ஜ்ஞான்—பெயர்கள் உடையவர்கள்; நிதாப்ய—நியமித்து; அதிபதீன்—அதிபதிகளாக; ஸ்வயம்—அவரது; பகவதி—முழுமுதற் கடவுளிடத்தில்; அனந்தே—அளவற்ற; ஆவேஸித-மதி:—அவரது மனம் முற்றிலும் ஆழ்ந்து; தப: வனம்—தபோவனத்தில்; ப்ரவிவேஸ—அவர் புகுந்தார்.

இத்தீவின் அரசர் பிரியவிரதனின் மைந்தர்களுள் ஒருவரான மேதாதிதி என்பவர் ஆவார். இவரும் கூட இத்தீவை ஏழு பகுதிகளாகப் பிரித்து அவற்றிற்குத் தன் மைந்தர்களின் பெயர்களை இட்டு, தனது மைந்தர்களையே அவற்றிற்கு அரசர்களாகவும் ஆக்கினார். அம்மைந்தர்களின் பெயர்கள் புரோஜவன், மனோஜவன், பவமானன், தூம்ரானீகன், சித்திரரேபன், பஹுரூபன், விஸ்வதாரன் என்பவையாகும். இத்தீவினைப் பிரித்துத் தனது மைந்தர்களை அவற்றிற்கு அரசர்களாக்கிய பின்னர் மேதாதிதி ஓய்வுபெற்று தனது மனதினை முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகளில் நிலை நிறுத்துவதற்காகத் தபோவனம் சென்றார்.

பதம் 5.20.26
ஏதேஷாம் வர்ஷ-மர்யாதா கிரயோ நத்யஸ் ச ஸப்த ஸப்தைவ ஈஸான
உருஸ்ருங்கோ பலபத்ர: ஸத கேஸர: ஸஹஸ்ரஸ்ரோதோ தேவபாலோ
மஹானஸ இதி அனகாயுர்தா உபயஸ்ப்ருஷ்டிர் அபராஜிதா பஞ்சபாதீ
ஸஹஸ்ரஸ்ருதிர் நிஜத்ருதிர இதி

ஏதேஷாம்—இப்பிரிவுகள் எல்லாவற்றிலும்; வர்ஷ-மர்யாதா—எல்லைக்கோடுகளாக செயல்பட்டன; கிரய—பெரிய மலைகள்; நத்ய: ச—நதிகள் கூட; ஸப்த—ஏழு; ஸப்த—ஏழு; ஏவ—உண்மையில்; ஈஸான—ஈஸானம்; உருஸ்ருங்க—உருஸ்ருங்கம்; பல-பத்ர:—பலபத்திரம்; ஸத-கேஸர:—சதகேஸரம்; ஸஹஸ்ர-ஸ்ரோத—சகஸ்ரஸ்ரோதம்; தேவ-பால—தேவபாலம்; மஹானஸ—மஹானஸம்; இதி—இவ்வாறு; அனகா—அனகா; ஆயுர்தா—ஆயுர்தா; உபயஸ்-ப்ருஷ்டி—உபயஸ்ப்ருஷ்டி; அபாரஜித—அபராஜிதா; பஞ்சபதீ—பஞ்சபதீ; ஸஹஸ்ர-ஸ்ருதி—சகஸ்ரஸ்ருதி; நிஜ-த்ருதி—நிஜத்ருதி; இதி—இவ்வாறு.

இத்தீவிலும் கூட எல்லைக்கோடுகளாக ஏழு மலைகளும் மற்றும் ஏழு நதிகளும் இருக்கின்றன. அம்மலைகள் ஈஸானம், உருஸ்ருங்கம், பலபத்ரம், சதகேஸரம், தேவபாலம், மஹானஸம் ஆகும். அந்நதிகள் அனகா, ஆயுர்தா, உபயஸ்ப்ருஷ்டி, அபராஜிதா, பஞ்சபதீஷ், சகஸ்ரஸ்ருதி மற்றும் நிஜத்ருதி போன்றவையாகும்.

பதம் 5.20.27
தத்-வர்ஷ- புருஷா ருதவ்ரத-ஸத்யவ்ரத-தானவ்ரத-தானுவ்ரத-நாம
னோ பகவந்தம் வாயு-ஆத்மகம் ப்ராணாயாம-விதூத-ரஜஸ்-தமஸ:
பரம-ஸமா-தினா யஜந்தே

தத்-வர்ஷ-புருஷோ—இந்நிலப்பகுதிகளில் வாழ்பவர்கள்; ருதவ்ரத—ரிதவிரதர்கள்; ஸத்ய-வ்ரத—சத்தியவிரதர்கள்; தானவ்ரத—தானவிரதர்கள்; அனுவ்ரத—அனுவிரதர்கள்; நாமான:—நான்கு பெயர்கள் உடையவர்கள்; பகவந்தம்—முழுமுதற் கடவுள்; வாயு-ஆத்மகம்—வாயுதேவனால் பிரதிநிதித்துவம்படுத்தப்பட்ட; ப்ராணாயாம—பிராணாயாமத்தினால் (உடலினுள் சுவாசக் காற்றினை முறைப்படுத்துதல்) விதூத—தூய்மை செய்கிறது; ரஜ:-தமஸ:—அவர்களது இரஜோ மற்றும் தமோகுணங்கள்; பரம—மிகவுயர்ந்த; ஸமாதினா—சமாதியினால்; யஜந்தே—அவர்கள் வழிபடுகின்றனர்.

இத்தீவுகளில் வாழ்பவர்கள் ரிதவிரதர்கள், சத்தியவிரதர்கள், தானவிரதர்கள், அனுவிரதர்கள் என்னும் நான்கு பிரிவினர் ஆவர். இப்பிரிவுகள் உண்மையில் அந்தண, சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவுகள் போன்றவையாகும். இவர்கள் பிராணாயாமம், யோகஸித்தி போன்றவைகளைப் பயிற்சி செய்கின்றனர். மேலும் அவர்கள் முழுமுதற் கடவுளை வாயுபகவான் வடிவில் சமாதி நிலையில் வழிபடுகின்றனர்.

பதம் 5.20.28
அந்த- ப்ரவிஸ்ய பூதானி யோ பிபர்தி ஆத்ம -கேதுபி:
அந்தர்யாமீஸ்வர: ஸாக்ஷாத் பாது நோ யத்-வஸே ஸ்யுடம்

அந்த:-ப்ரவிஸ்ய—உள்ளே புகுந்து; பூதானி—எல்லா உயிர்வாழிகளும்; ய:—இவர்; பிபர்தி—காக்கின்றார்; ஆத்ம-கேதுபி:—உடலினுள் செயல்படும் காற்றினால் (பிராணன், அபானன் போன்றவை); அந்தர்யாமீ—உள்ளிருக்கும் பரமாத்மா; ஈஸ்வர—பரமபுருஷர்; ஸாக்ஷாத்—நேரடியாக; பாது—பாதுகாப்பீராக; ந—எம்மை; யத்-வஸே—அவரது கட்டுப்பாட்டின் கீழ்; ஸ்யுடம்—இப்பிரபஞ்சத் தோற்றம்

(சாகத்வீபத்தைச் சேர்ந்தவர்கள் முழுமுதற் கடவுளை வாயுபகவான் வடிவில் பின்வரும் வார்த்தைகளினால் வழிபடுகின்றனர்) ஒ பரமாத்வாக உடலினுள் வீற்றிருக்கும் பரமபுருஷரே, பிராணன் போன்ற பல்வேறு காற்றுக்களை இயக்குவதின் மூலம் நீர் உயிர்வாழிகள் அனைவரையும் காக்கின்றீர்; ஒ பகவானே, ஒ, அனைவரிடத்தும் உள்ள பரமாத்மாவே, எல்லாவற்றையும் தன்னிடமிருந்து வெளிப்படுத்தும் பிரபஞ்சத் தோற்றத்தினைக் கட்டுப்படுத்துபவரே, எங்களை எல்லாவிதமான ஆபத்துக்களிலும் இருந்து காத்து அருள்புரிவீராக.

பதம் 5.20.29
ஏவம் ஏவ ததி- மண்டோதாத் பரத புஷ்கரத்வீபஸ் ததோ த்விகுணா
யாம: ஸமந்தத உபகல்பித: ஸமானேன ஸ்வாதூதகேன ஸமுத்ரேண
பஹிர் ஆவ்ருதோக் யஸ்மின் ப்ருஹத்-புஷ்கரம் ஜ்வலன-ஸிகாமல-
கனக-பத்ராயுதாயுதம் பகவத: கமல்ஸனஸ்யாத்யாஸனம் பரிகல்பிதம்

ஏவம் ஏவ—இவ்வாறு; ததி-மண்ட-உதாத்—தயிர்கடல்; பரத—மேலாக; புஷ்கர-த்வீப:—புஷ்கரத்வீபம் என்னும் மற்றொரு தீவு; தத—அதனைவிட, (சாகத்வீபம்); த்வி-குண-ஆயாம:—அதன் அளவு இருமடங்கு பெரியது; ஸமந்தத—எல்லாப் பக்கங்களிலும்; உபகல்பித—சூழப்பட்டு; ஸமானேன—அகலத்தில் இணையானது; ஸ்வாது-உதகேன—இனிமையான நீருடையது; ஸமுத்ரேண—ஒரு சமுத்திரத்தினால்; பஹி—வெளியே; ஆவ்ருத—சூழப்பட்டு; யஸ்மின்—இதில்; ப்ருஹத்—மிகப்பெரிய; புஷ்கரம்—தாமரைமலர்; ஜ்வலன-ஸிகா—எரிகின்ற தீ ஜுவாலைகள் போன்று; அமல—தூய்மையான; கனக—தங்கம்; பத்ர—இலைகள்; அயுத—அயுதம்; 100,000,000 உடையது; பகவத—மிகச் சக்திவாய்ந்த; கமல-ஆஸனஸ்ய—பிரம்ம தேவன் இருக்கும் தாமரைமலர்; அத்யாஸனம்—இருப்பிடம்; பரிகல்பிதம்—கருதப்படுகிறது.

தயிர்க்கடலுக்கு வெளியே புஷ்கரத்வீபம் என்றொரு தீவு இருக்கின்றது. இத்தீவு 6,400,000 யோஜனங்கள் (51,200,000 மைல்கள்) அகலமுடையதாகும். அதாவது தயிர்கடலைப்போல் இரு மடங்கு பெரியதாகும். இத்தீவு, தனது அளவுடைய இனிமையான சுவை நீர்க்கடலினால் சூழப்பட்டிருக்கின்றது. புஷ்கரத்வீபத்தில் தீப்பிழம்புகளைப் போல் மின்னும் 100,000,000 தங்க இதழ்களையுடையத் தாமரை மலர் ஒன்று இருக்கின்றது. இம்மலர், சிறப்பிற்குரிய பிரம்ம தேவனின் இருப்பிடமாகக் கருதப்படுகின்றது. அவர் மிகச் சக்தி வாய்ந்த உயிர்வாழியாக விளங்கி அதனால் சிலசமயம் பகவான் என்றழைக்கப்படுகிறார்.

பதம் 5.20.30
தத்-த்வீப-மத்யே மானஸோத்தர-நாமைக ஏவார் வாசீன- பராசீன
வர்ஷயோர் மர்யாதாசலோ ‘யுத-யோஜனோச் ராயாயாமோ யத்ர து
சதஸ்ருஷு திக்ஷு சத்வாரி புராணி லோக-பாலானாம் இந்த்ராதீனாம்
யத் உபரிஷ்டாத் ஸுர்ய-ரதஸ்ய மேரும் பரிப்ரமத: ஸம்வத்ஸராத்மகம்
சக்ரம் தேவானாம் அஹோ-ராத்ராப்யாம் பரிப்ரமதி

தத்-த்வீப-மத்யே—அத்தீவினுள்; மானஸோத்தர—மானஸோத்தரம்; நாம—பெயரில்; ஏக—ஒரு; ஏவ—உண்மையில்; அர்வாசீன—இப்பக்கத்தில்; பராசீன—அதற்கும் மேலாக அல்லது வெளியே; வர்ஷயோ—நிலப்பகுதிகளின்; மர்யாதா—எல்லையினைக் குறிப்பிடும்; அசல—ஒரு பெரிய மலை; அயுத—பத்தாயிரம்; யோஜன—எட்டு மைல்; உச்ராய-ஆயாம—அதன் உயரமும் அகலமும்; யத்ர—இங்கே; து—ஆனால்; சதஸ்ருஷு—நான்கு; திக்ஷு—திசைகள்; சத்வாரீ—நான்கு; புராணி—நகரங்கள்; லோக-பாலானாம்—உலகங்களைப் பரிபாலிப்பவர்கள்; இந்த்ர-அதீனாம்—இந்திரனால் தலைமை தாங்கப்பட்ட; யத்—இதன்; உபரிஷ்டாத்—உச்சியில்; ஸுர்ய-ரதஸ்ய—சூரியதேவனின் இரதமும்; மேரும்—மேருமலை; பரிப்ரமத—அது சுற்றிவருகின்றது; ஸம்வத்ஸர-ஆத்மகம்—ஒரு சம்வத்ஸரத்தினை உடையது; சக்ரம்—சக்கரம் அல்லது கோளப்பாதை; தேவானாம்—தேவர்களின்; அஹ: ரத்ராப்யாம்—இரவு மற்றும் பகலினால்; பரிப்ரமதி—சுற்றி வருகின்றது.

இத்தீவின் நடுவில் மானஸோத்தரம் என்று ஒரு பெரிய மலை இருக்கின்றது. இம்மலையே இத்தீவின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திற்கு இடையே ஒரு எல்லைக்கோடாக விளங்குகிறது. இதன் அகலமும் உயரமும் 10,000 யோஜனங்கள் (80,000 மைல்கள்) ஆகும். இம்மலையின் உச்சியில் நான்கு திசைகளிலும் இந்திரன் போன்ற தேவர்களின் இருப்பிடங்கள் இருக்கின்றன. சூரியதேவன் தனது இரதத்தில் மலை உச்சியில் மேரு மலையினைச் சுற்றி வருவது சம்வத்ஸரம் என்றழைக்கப்படுகின்றது. சூரியன் செல்லும் வடதிசைப் பாதை உத்தராயணம் என்றும் தென்திசைப் பாதை தக்ஷிணாயனம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு பகுதி தேவர்களின் பகலையும் மற்றொரு பகுதி தேவர்களின் இரவினையும் குறிப்பிடுவதாகும்.

பதம் 5.20.31
தத்-த்வீபஸ்யாபி அதிபதி: ப்ரையவ்ரதோ வீதிஹோத்ரோ நாமைதஸ்
யாத்மஜௌ ரமணக- தாதகி-நாமானௌ வர்ஷ- பதி நியுஜ்ய ஸ ஸ்வயம்
பூர்வஜவத்பகவத்-கர்ம-ஸீல ஏவாஸ்தே

தத்-த்வீபஸ்ய—இத்தீவில்; அபி—கூட; அதிபதி—அரசர்; ப்ரியவ்ரத—மகாராஜா பிரியவிரதனின் ஒரு மைந்தன்; வீதிஹோத்ர:-நாம—வீதிஹோத்திரன் என்னும் பெயருடையவர்; ஏதஸ்ய—அவரின்; ஆத்ம-ஜெள—இரு புதல்வர்களுக்கு; ரமணக—இரமணகன்; தாதகி—தாதகி; நாமானௌ—பெயருடையவர்கள்; வர்ஷபதீ—இரு நிலப்பகுதிகளின் அரசர்கள்; நியுஜ்ய—நியமித்து; ஸ: ஸ்வயம்—அவர்; பூர்வஜ-வத்—அவருடைய சகோதரர்களைப் போல்; பகவத்-கர்ம-ஸீல:—முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்குரிய செயல்களில் ஈடுபட்டார்; ஏவ—உண்மையில்; ஆஸ்தே—இருந்தார்.

இத்தீவின் மன்னரும், மகாராஜா பிரியவிரதனின் மைந்தனுமான வீதிஹோத்திரனுக்கு இரமணகன், தாதகி என்று இரு புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது இருபுதல்வர்களுக்கும் அத்தீவின் இருபகுதிகளையும் அளித்துவிட்டு தனது மூத்த சகோதரன் மேதாதிதியினைப் போல் முழுமுதற் கடவுளுக்குரிய செயல்களில் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்டார்.

பதம் 5.20.32
தத்-வர்ஷ- புருஷா பகவந்தம் ப்ரஹ்ம -ரூபிணம் ஸகர்மகேன
கர்மணாரர்த்யந்தீதம் சோதாஹரந்தி

தத்-வர்ஷ-புருஷா—இத்தீவில் வாழ்பவர்கள்; பகவந்தம்—முழுமுதற் கடவுள்; ப்ரஹ்ம-ரூபிணம்—தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்ம தேவனாக வெளிபட்டார்; ஸ-கர்மகேண—பெளதீக ஆசைகளை நிறைவேற்றுவதற்காக; கர்மணா—வேதங்களுக்கேற்றாற்போல் சமயச் சடங்குகளைச் செய்வதினால்; ஆராதயந்தி—வழிபடுதல்; இதம்—இந்த; ச—மேலும்; உதாஹரந்தி—அவர்கள் ஒதுகின்றனர்.

பௌதீக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இத்தீவில் உள்ளவர்கள் முழுமுதற் கடவுளை பிரம்மதேவன் வடிவில் வழிபடுகின்றனர். அவர்கள் பகவானுக்குத் தங்கள் பிரார்த்தனைகளைப் பின்வருமாறு அர்ப்பணிக்கின்றனர்.

பதம் 5.20.33
யத் தத் கர்மமயம் லிங்கம் ப்ரஹ்ம-லிங்கம் ஜனோ ‘ர்சயேத்
ஏகாந்தம் அத்வயம் ஸாந்தம் தஸ்மை பகவதே நம இதி

யத்—இது; தத்—அது; கர்ம-மயம்—வேத சமய முறையினால் கிடைக்கக்கூடிய; லிங்கம்—வடிவம்; ப்ரஹ்ம-லிங்கம்—பரப்பிரம்மத்தை அறியச்செய்கிறது; ஜன—ஒருவன்; அர்சயேத்—வழிபடுதல் வேண்டும்; ஏகாந்தம்—ஒரே பரம்பொருளிடத்தில் முழு நம்பிக்கை உடையவர்; அத்வயம்—வேறுபாடில்லாதவர்; ஸாந்தம்—அமைதி; தஸ்மை—அவருக்கு; பகவதே—மிகவும் சக்திவாய்ந்த; நம:—எமது மரியாதைகள்; இதி—இவ்வாறு.

பிரம்மதேவன் “கர்ம மய” அதாவது சமயச்சடங்குகளின் வடிவம் என்று அறியப்படுகிறார். ஏனென்றால் சமயச் சடங்குகளை முறையாகச் செய்வதின்மூலம் ஒருவன் அவரது நிலையினை அடையலாம். மேலும் வேதமந்திரங்களும் அவரிடமிருந்தே வெளிப்பட்டன. அவர் எந்தவித மாறுபாடுமின்றி முழுமுதற் கடவுளிடம் பக்தி செலுத்துகின்றார். ஆகையினால் ஒரு வகையில் அவர் பகவானிடமிருந்து வேறுபாடில்லாதவர் ஆவார். அதனால் அவரை ஒரு பொருண்மைவாதிகள் போலன்றி இருமைவாதிகள் போல் வழிபடவேண்டும். பரம வணக்கத்திற்குரிய தெய்வமான பரமபுருஷ பகவானுக்கு ஒருவன் எப்போதும் தொண்டனாகவே இருத்தல் வேண்டும். ஆதலினால் நாங்கள் வேதஞானத்தின் வடிவமாக விளங்கும் பிரம்மதேவனுக்கு எங்களது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 5.20.34
தத: பரஸ்தால் லோகாலோகா-நாமாசலோ லோகா லோகாயோர்
அந்தரர்லே பரித உபக்ஷிப்த

தத:—இனிய குடிநீர்க் கடலிலிருந்து; பரஸ்தாத்—மேலாக; லோகா லோகா-நாம—லோகாலோகம் என்னும் பெயரில்; அசல—ஒரு மலை; லோக-அலோகயோ: அந்தராலே—முற்றிலும் சூரிய ஒளியுள்ள நாடுகள் மற்றும் சூரிய ஒளியே இல்லாத நாடுகளுக்கும் இடையில்; பரித—சுற்றிலும்; உபக்ஷிப்த—வெளிப்படுகிறது.

அதன்பிறகு இனிய நீர்க் கடலுக்கு மேலாக, அதனை முற்றிலும் சூழ்ந்து லோகாலோகம் என்று ஒரு மலை இருக்கின்றது, இம்மலை முற்றிலும் சூரிய ஒளி உள்ள நாடுகளையும், சூரிய ஒளியே இல்லாத நாடுகளையும் இரண்டாகப் பிரிக்கின்றது.

பதம் 5.20.35
யாவன் மானஸோத்தர- மேர்வோர் அந்தரம் தாவதீ பூமி: காஞ்சனி
அன்யாதர்ஸ தலோபமா யஸ்யாம் ப்ரஹித: பதார்தோ ந கதாஞ்சித் புன:
ப்ரத்யுப லபயதே தஸ்மாத் ஸர்வ-ஸத்த்வ-பரிஹ்ருதாஸுத:

யாவத்—அவ்வளவு; மானஸோத்தர-மேர்வோ: அந்தரம்—மானஸோத்தரம் மற்றும் மேரு மலைக்கு இடையிலுள்ள நிலப்பகுதி (சுமேரு மலையின் நடுவிலிருந்து தொடங்கி); தாவதீ—அவ்வளவு; பூமி—நிலம்; காஞ்சனீ—பொன்னால் ஆனாது; அன்யா—மற்றொன்று; ஆதர்ஸ-தலா-உபமா—அதன் மேல்தளம் கண்ணாடியின் மேல்தளம் போன்றது; யஸ்யாம்—அதன்மேல்; ப்ரஹித—விழுவது; பதார்த—ஒரு பொருள்; ந—இல்லை; கதஞ்சித்—எவ்வழியில்; புன:—மீண்டும்; ப்ரத்யுபலபயதே—காணப்படும்; தஸ்மாத்—எனவே; ஸர்வ-ஸத்த்வ—அனைத்து உயிர்வாழிகளால்; பரிஹ்ருதா—கைவிடுதல்; ஆஸீத்—இருந்தது.

இனிய நீர்க்கடலின் வெளியே சுமேரு மலைக்கும், மானஸோத்தர மலையின் எல்லைப்பகுதிக்கும் இடையே இருக்கும் நிலப்பகுதியின் பரப்பளவுள்ள ஒர் நிலப்பகுதி இருக்கிறது. இந்நிலப்பகுதியில் பல உயிர்வாழிகள் இருக்கின்றனர். இதற்கு மேற்புறம் தங்கத்தினாலான மற்றொரு நிலப்பகுதி இருக்கிறது. இந்நிலத்தின் மேற்பகுதி பொன்னாலானது. ஆகையினால் அது கண்ணாடியைப்போல் ஒளியைப் பிரதிபலிக்கும். மேலும் ஏதேனும் ஒரு ஜடப்பொருள் அதன்மீது விழுந்ததென்றால் அது மீண்டும் காணப்படுவதில்லை. அதனால் அப்பொன் நிலத்தை உயிர்வாழிகள் அனைவரும் புறக்கணித்தனர்.

பதம் 5.20.36
லோகாலோக இதி ஸமாக்யா யத் அனேனாசலேன லோகா
லோகஸ்யாந்தர்வர்-தினா வஸ்தாப்யதே

லோக—ஒளியுடன் (அல்லது வசிப்பவர்களுடன்); அலோக—ஒளியின்றி (அல்லது வசிப்பவர்களின்றி); இதி—இவ்வழியே; ஸமாக்யா—அமைந்தது; யத்—இது; அனேன—இதனால்; அசலேன—மலை; லோக—உயிர்வாழிகள் வாழும் நிலப்பகுதி; அலோகஸ்ய—உயிர்வாழிகள் வாழாத நிலப்பகுதி; அந்தர்வர்தினா—நடுவில் உள்ளது; அவஸ்தாப்யதே—இருக்கிறது.

உயிர்வாழிகள் வாழும் நிலப்பகுதியையும், உயிர்வாழிகள் வாழாத நிலப்பகுதியினையும் ஒரு பெரிய மலை இரண்டாகப் பிரிக்கிறது. அதனால் அது லோகாலோகம் என்று போற்றப்படுகின்றது.

பதம் 5.20.37
ஸ லோக- த்ர்யாந்தே பரித ஈஸ்வரேண விஹிதோ யஸ்மாத்
ஸுர்யாதீனாம் த்ருவாபவர்காணாம் ஜ்யோதிர்-கணானாம் கபஸ்தயோ
‘ர்வாசீனாம்ஸ் த்ரீல் லோகான் ஆவிதன்வானா ந கதாசித் பராசீனா
பவிதும் உத்ஸஹந்தே தாவத் உன்னஹனாயாம:

ஸ:—அந்த மலை; லோக-த்ரய-அந்தே—மூவுலகங்களுக்கும் இறுதியில் (பூர்வலோகம், புவர்லோகம், சுவர்லோம்); பரித—சுற்றிலும்; ஈஸ்வரேண—முழுமுதற் கடவுளால், கிருஷ்ணரால்; விஹித—படைக்கப்பட்டது; யஸ்மாத்—இதிலிருந்து; ஸுர்ய-ஆதீனாம்—சூரிய மண்டலம்; த்ருவ அபவர்காணாம்—துருவலோகம் மற்றும் பிற தாழ்ந்த ஒளிக்கோளங்கள்; ஜ்யோதி: கணானாம்—அனைத்து ஒளிக்கோளங்களின்; கபஸ்தய—ஒளிக்கதிர்கள்; அர்வாசீனான்—இப்பகுதியின் மேல்; த்ரீன்—மூன்று; லோகான்—லோகங்கள்; ஆவிதன்வானா:—முழுவதும் பரவி; ந—இல்லை; கதாசித்—எந்நேரத்திலும்; பராசீனா:—அம்மலையின் எல்லைக்கு மேல்; பவிதும்—இருக்கும்; உத்ஸஹந்தே—திறனுடையதாக; தாவத்—அவ்வளவு; உன்னஹன-அயாம—அம்மலையின் உயரத்தின் அளவு.

கிருஷ்ணரின் பரம விருப்பத்தின் பேரில் லோகாலோகம் என்னும் மலையானது, பிரபஞ்சம் முழுவதுமே சூரிய ஒளிக்கதிர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பூர்வலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்னும் மூவுலகங்களின் வெளி எல்லையில் நிறுவப்பட்டது. சூரியன் தொடங்கி துருவலோம் வரை உள்ள அனைத்து ஒளிக்கோளங்களும், மூவுலகங்கள் முழுவதும் தங்கள் ஒளிக்கதிர்களை வழங்குகின்றன. ஆயினும் அவை அம்மலையினால் உண்டாக்கப்பட்ட எல்லைக்குள் மட்டுமே தங்கள் ஒளிக்கதிர்களை வழங்குகின்றன. இம்மலை துருவலோகத்தை விடவும் மிகவும் உயரமுடையதாகையினால், இது ஒளிக்கோளங்களின் கதிர்களை தடைசெய்கிறது. அதனால் ஒளிக்கதிர்கள் இம்மலையினைத் தாண்டிச் செல்வதில்லை.

பதம் 5.20.38
ஏதாவால் லோக- வின்யாஸா மான-லக்ஷண – ஸம்ஸ்தாபிர் விசிந்தித:
கவிபி: ஸ து பஞ்சாஸத்-கோடி-கணிதஸ்ய, பூ-கோளஸ்ய துரீய-பாகோ
‘யம் லோகா லோகாசல:

ஏதாவான்—இவ்வளவு; லோக-வின்யாஸ:—பல்வேறு உலகங்களை இட்டு; மான—அளவுகளுடன்; லக்ஷண—அடையாளங்கள்; ஸம்ஸ்தாபி:—அதுபோல் அவற்றின் பல்வேறு நிலைகளுடன்; விசிந்தித:—விஞ்ஞானக் கணக்கினால் நிறுவப்பட்டவை; கவிபி—கற்றறிந்த அறிஞர்களால்; ஸ—அது; து—ஆனால்; பஞ்சாஸத்-கோடி—500,000,000 யோஜனங்கள்; கணிதஸ்ய—அது அளக்கப்படுகிறது; பூ-கோளஸ்ய—பூகோளகம் என்றும் உலகம்; துரீய-பாக:—கால் பாகம்; அயம்—இந்த; லோகா லோக-அசல:—லோகாலோகம் எனப்படும் மலை.

தவறுகள், மயக்கங்கள் மற்றும் பிறரை ஏமாற்றும் எண்ணம் சிறிதும் இல்லாத கற்றறிந்த அறிஞர்கள் இவ்வாறு பல்வேறு உலகங்களைப் பற்றியும், அவற்றின் அடையாளங்கள், அளவுகள் இருப்பிடங்கள் பற்றியும் விளக்கியுள்ளனர். மிகவும் நுண்ணிய மலைக்கும் இடையே உள்ள தூரம் பிரபஞ்சத்தின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகம் அல்லது 125,000,000 யோஜனங்கள (100 கோடி மைல்கள்) என்னும் உண்மையினை நிறுவியிருக்கின்றனர்.

பதம் 5.20.39
தத்-உபரிஸ்டாச் சதஸ்ருஷ்வ ஆஸாஸ்வாத்ம-யோனி ணாகிலர்-
ஜகத் – குருணாதி நிவேஸிதா யே த்விரத பதய ருஷப: புஷ்கரசூடோ
வாமனோ ‘பராஜித இதி ஸகலலோக- ஸ்திதி- ஹேதவ:

தத்-உபரிஷ்டாத்—லோகாலோக மலையின் உச்சியில்; சதஸ்ருஷு-ஆஸாஸு—நான்கு திசைகளில்; ஆத்ம-யோனினா—பிரம்ம தேவனால்; அகில-ஜகத்-குருணா—முழுபிரபஞ்சத்தின் ஆன்மீக குருவானவர்; அதி-நிவேஸிதா:—நிறுவி; யே—அவையெல்லாம்; த்விரத-பதய:—யானைகளில் மிகச்சிறந்தவை; ருஷப—ரிஷபம்; புஷ்கர-சூட:—புஷ்கரசூடம்; வாமன—வாமனம்; அபராஜித—அபராஜிதம்; இதி—இவ்வாறு; ஸகல-லோக-ஸ்திதி-ஹேதவ:—இப்பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு உலகங்களைக் காப்பதற்கானக் காரணங்கள்.

லோகா லோகா மலை உச்சியின் மேல் மிகச் சிறந்த யானைகளான நான்கு கஜபதிகள் உள்ளன. இவைகள் இப்பிரபஞ்சம் முழுவதற்கும் ஆன்மீகக்குருவான பிரம்ம தேவனால் நான்கு திசைகளில் நிறுத்தப்பட்டனவாகும். அந்த யானைகளின் பெயர்கள் ரிஷபம், புஷ்கரசூடம், வாமனம், அபராஜிதம் என்பவையாகும். இவையே இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா உலகங்களையும் காக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

பதம் 5.20.40
தேஷாம் ஸ்வ-விபூதினா லோக பாலனம் ச விவித-
வீர்யோபப்ரும்ஹணாய பகவான் பரம-மஹா-புருஷோ மஹா-
விபூதி-பதிர் அந்தர்யாமி ஆத்மனோவிஸுத்த ஸத்த்வம்-தர்ம-ஜ்ஞான-
வைராக்யைஸ்வர்யாதி அஷ்ட மஹா-ஸித்தி-உபலக்ஷணம் விஷவ
க்ஷேனாதிபதி: ஸ்வபார்ஷத-ப்ரவ்ரை: பரிவாரிதோ நிஜ-
வராயுதோபஸோபிதைர் நிஜ-புஜ-தண்டை: தஸ்மின் கிரி-வரே ஸமந்தாத்
ஸகல-லோக-ஸ்வஸ்தய ஆஸ்தே

தேஷாம்—இவர்கள் அனைவரும்; ஸ்வ-விபூதினாம்—அவரது தனிப்பட்ட விரிவுகள் மற்றும் துணைவர்கள் ஆவர்; லோக-பாலானாம்:—பிரபஞ்ச விஷயங்களைக் கவனிக்கும் பொறுப்பினைப் பெற்றவர்கள்; ச—மேலும்; விவித—பல்வகை; வீர்ய-உபப்ரும்ஹணாய—சக்திகளை விரிப்பதற்காக; பகவான்—முழுமுதற் கடவுள்; பரம-மஹா-புருஷ—எல்லாவிதமான வளங்களுக்கும் நாயகரான முழுமுதற் கடவுள்; மஹா-விபூதி-பதி:—கற்பனைக்கெட்டாத அனைத்து சக்திகளுக்கும் தலைவர்; அந்தர்யாமீ—பரமாத்மா; ஆத்மன:—அவரது; விஸுத்த-ஸத்த்வம்—ஜட இயற்கைக் குணங்களினால் மாசுபடாத ஒரு தோற்றம் உடையவர்; தர்ம-ஜ்ஞான-வைராக்ய—தர்மம், ஞானம் மற்றும் வைராக்கியம்; ஐஸ்வர்ய-ஆதி—எல்லாவிதமான ஐஸ்வர்யங்களும்; அஷ்ட—எட்டு; மஹா-ஸித்தி—மகா சித்திகளும்; உபலக்ஷணம்—தன்மைகளும் கொண்டு; விஷ்வக்ஷேன-ஆதிபதி:—அவரது விஷ்வக்ஷேனன் மற்றும் பிறவிரிவுகளினால்; ஸ்வபார்ஷத ப்ர்வரை—சிறந்த துணைவர்கள்; பரிவாரித—சூழப்பட்டு; நிஜ—அவருடைய; வர-ஆயுத—பல்வேறு வகையான ஆயுதங்கள்; உபஸோபிதை:—அலங்கரிக்கப்பட்டு; நிஜ—சொந்தமான; புஜ-தண்டை:—உறுதி மிக்கக் கரங்களுடன்; ஸந்தாரயமாண:—இவ்வடிவத்தில் வெளிப்பட்டு; தஸ்மின்—அதன் மீது; கிரி-வரே—பெரியமலை; ஸமந்தாத்—சுற்றிலும்; ஸகல-லோக-ஸ்வஸ்தயே— அனைத்து லோகங்களின் நன்மைக்காக; ஆஸ்தே—வெளிப்படுகிறார்.

முழுமுதற் கடவுளே அனைத்து வகையான உன்னத வளங்களுக்கும், ஆன்மீக வானத்திற்கும் தலைவர் ஆவார். அவரே பரமபுருஷர், பகவான், அனைவரிடத்தும் உள்ள பரமாத்மா ஆவார். தேவலோகத்தின் தலைவனான இந்திரன், மற்றும் அவர் கீழுள்ள தேவர்கள் அனைவரிடத்தும் பௌதீக உலக விஷயங்களைக் கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. பல்வேறு உலகங்களிலுள்ள அனைத்து உயிர்வாழிகளின் நலனுக்காகவும், அந்த யானைகள் மற்றும் தேவர்களின் சக்தியை அதிகரிப்பதற்காகவும் பகவான் அம்மலையின் உச்சியில் ஜடஇயற்கைக் குணங்களினால் மாசுபடாத ஆன்மீக உடலுடன் தோன்றுகிறார். அவரது தனிப்பட்ட விரிவுகள் மற்றும் விஷ்வக்ஷேனன் போன்ற அவரது துணைவர்களால் சூழப்பட்டு, அவர் தர்மம், ஞானம், அனிமா, லகிமா, மஹிமா என்பதான யோக ஸித்திகள் போன்ற அவரது அனைத்து வளங்களையும் வெளிப்படுத்துகின்றார். அவர் மிகவும் எழிலுடன் அமர்ந்திருக்கிறார். அவரது நான்கு கரங்களும் பல்வேறு வகையான ஆயுதங்களினால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

பதம் 5.20.41
ஆகல்பம் ஏவம் வேஷம் கத ஏஷ பகவான் ஆத்ம-யோகமாயயா
விரசித-விவித-லோக-யாத்ரா- கோபீயாயேதி அர்த:

ஆ-கல்பம்—படைப்பின் காலத்தின் அளவிற்காக; ஏவம்—இவ்வாறு; வேஷம்—தோற்றம்; கத:—ஏற்றுக் கொண்டிருக்கிறார்; ஏஷ—இது; பகவான்—முழுமுதற் கடவுள்; ஆத்ம-யோக-மாயயா—அவரது சுய ஆன்மீகச் சக்தியினால்; விரசித—நிறைவுசெய்து; விவித-லோக-யாத்ரா—பல்வேறு உலகங்களின் வாழ்க்கை; கோபீயாய—காப்பதற்கு; இதி—இவ்வாறு; அர்த:—நோக்கம்.

நாராயணர், விஷ்ணு போன்ற முழுமுதற் கடவுளின் பல்வேறு வடிவங்கள் பல்வேறு வகையான ஆயுதங்களினால் மிகவும் எழிலாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. பகவான் தனது தனிச் சக்தியான யோகமாயையினால் படைக்கப்பட்ட இப்பல்வேறு உலகங்களைக் காப்பதற்காக இவ்வடிவங்களை மேற்கொள்கிறார்.

பதம் 5.20.42
யோ ‘ந்தர் விஸ்தார ஏதேன ஹி அலோக பரிமாணம் ச வ்யாக்யாதம்
யத் பஹிர் லோகா லோகாசலாத், தத: பரஸ்தாத் யோகேஸ்வர கதிம்
விஸுத்தாம் உதாஹரந்தி

ய:—இது; அந்த:-விஸ்தார—லோகா லோக மலையின் உள்ளே உள்ள தூரம்; ஏதேன—இதனால்; ஹி—உண்மையில்; அலோக-பரிமாணம்—அலோக-வர்ஷம் என்னும் நிலப்பகுதியின் அகலம்; ச—மேலும்; வ்யாக்யாதம்—விளக்கப்படுகிறது; யத்—இது; பஹி—வெளியே; லோகாலோக-அசலாத்—லோகாலோக மலைக்கு மேலாக; தத:—அது; ப்ரஸ்தாத்—மேலாக; யோகேஸ்வர-கதிம்—பிரபஞ்ச மேலுறையினைத் துளைத்த யோகேஸ்வரரின் (கிருஷ்ணரின்) பாதை; விஸுத்தாம்—பெளதீக மாசு இன்றி; உதாஹரந்தி—அவர்கள் கூறுகின்றனர்.

அன்பிற்குரிய மன்னனே, லோகாலோக மலைக்கு வெளியே அலோக வர்ஷம் என்னும் ஒரு நிலப்பகுதி இருக்கின்றது. மலையின் அதே அகலத்திற்கு இந்நிலப்பகுதி விரிந்திருக்கிறது அதாவது 125,000,000 யோஜனங்கள் (நூறு கோடி மைல்கள்) என்று கூறலாம். அலோக வர்ஷத்திற்கு மேலாக பௌதீக உலகிலிருந்து விடுதலை பெறவிரும்புவோரின் இலக்கிடம் இருக்கிறது. இவ்விடம்ஜட இயற்கைக்குணங்களின் எல்லைப் பகுதிக்கு அப்பால் இருக்கின்றது. அதனால் அது முற்றிலும் தூய்மையானதாகும். அந்தணர்களின் மைந்தர்களை மீண்டும் கொண்டு வருவதற்காக பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனை இதன் வழியாகத்தான் அழைத்துச் சென்றார்.

பதம் 5.20.43
அண்ட- மத்ய-கத: ஸுர்யோ த்யாவ்-ஆபூம்யோர் யத் அந்தரம்
ஸுர்யாண்ட- கோளயோர் மத்யே கோட்ய: ஸ்யு: பஞ்ச-விம்ஸதி:

அண்ட-மத்ய-கத:—பிரபஞ்சத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது; ஸுர்ய—சூரியகோளம்; த்யாவ்-ஆ பூம்யோ:—பூர்வலோகம், புவர்லோகம் என்றும் இரண்டு லோகங்கள்; யத்—இது; அந்தரம்—இடையில்; ஸுர்ய—சூரியனின்; அண்ட-கோளயோ—மற்றும் பிரபஞ்சக் கோளம்; மத்யே—மத்தியில்; கோட்ய—ஒருகோடி கூட்டங்கள்; ஸ்யு—இருக்கின்றன; பஞ்ச-விம்ஸதி:—இருபத்தைந்து.

சூரியன் (செங்குத்தாக) பிரபஞ்சத்தின் மத்தியில் பூர்வலோகம், புவர்லோகத்திற்கு இடையே “அந்தரீக்ஷம்” அதாவது வான்வெளியில் இருக்கின்றது. சூரியனுக்கும் பிரபஞ்சச் சுற்றளவிற்கும் இடையிலுள்ள தூரம் இருபத்தைந்து கோடி யோஜனங்கள் (இறுநூறு கோடி மைல்கள்) இருக்கின்றது.

பதம் 5.20.44
ம்ருதே ‘ண்ட ஏஷ ஏதஸ்மின் யத் அபூத் ததோமார்தண்ட இதி
வ்யபதேஸ: ஹிரண்யகர்ப இதி யத் திரண்யாண்ட- ஸமுத்தவ:

ம்ருதே—மரணம்; அண்டே—அண்டத்தில்; ஏஷ:—இந்த; ஏதஸ்மின்—இதில்; யத்—இது; அபூத்—படைப்புக்காலத்தில் தனிப்பட்ட முறையில் புகுந்தார்; த:—அதிலிருந்து; மார்தாண்ட—மார்தாண்டம்; இதி—இவ்வாறு; வ்யபதேஸ:—பதவி; ஹிரண்ய-கர்ப:—இரண்யகர்பம் எனப்படுவது; இதி—இவ்வாறு; யத்—ஏனென்றால்; ஹிரண்ய-அண்ட-ஸமுத்பவ—அவரது பௌதீக உடல் இரண்யகர்பத்திலிருந்து உருவானதாகும்.

சூரியதேவன், எல்லா உயிர்வாழிகளின் மொத்தப் பெளதீக உடல் ஆனவர் என்றும் பொருள் தரும் வைராஜன் என்றும் அறியப்படுகிறார். பிரபஞ்சத்தின் மந்த முட்டையினுள் படைப்புக்காலத்தில் அவர் புகுந்ததினால், மார்தாண்டம் என்றும் அவர் அழைக்கப்படுகின்றார். அவர் இரண்யகர்பம் என்றும் கூட அறியப்படுகின்றார் ஏனென்றால் அவர் தனது பௌதீக உடலினை இரண்யகர்பத்திடமிருந்து (பிரம்ம தேவன்) பெற்றவர் ஆவார்.

பதம் 5.20.45
ஸுர்யேண ஹி விபஜ்யந்தே திஸ: கம் த்யௌர் மஹு பிதா
ஸ்வர்காபர்கௌ நரகா ரஸௌகாம்ஸி ச ஸர்வஸ:

ஸுர்யேண—சூரிய மண்டலத்தினுள்ளே உள்ள சூரியதேவனால்; ஹி—உண்மையில்; விபஜ்யந்தே—பிரிக்கப்படுகின்றன; திஸ—திசைகள்; கம்—வானம்; த்யௌ—தேவலோகங்கள்; மஹு—பூலோகங்கள்; பிதா—பிற பிரிவுகள்; ஸ்வர்க—சொர்க்கலோகங்கள்; அபவர்கௌ—விடுதலைக்கான இடங்கள்; நரகா—நரகலோகங்கள்; ரஸௌகாம்ஸி—அது போல் அதலலோகம்; ச—மேலும்; ஸர்வஸ:—எல்லாம்.

ஒ, மன்னனே, சூரிய தேவனும், சூரிய மண்டலமும் இப்பிரபஞ்சத்தின் அனைத்துத் திசைகளையும் பிரிக்கின்றன. சூரியன் இருக்கின்ற காரணத்தினாலேயே நம்மால் வானம் என்றால் என்னவென்றும் மேலுலகம், பூவுலகம், பாதாளலோகம் என்றால் என்னவென்றும் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் சூரியன் காரணமாகவே நம்மால் பௌதீக இன்பத்திற்கான இடங்கள் எவையென்றும், விடுதலைக்கான இடங்கள் எவையென்றும், நரக லோகம் எவையென்றும் பாதாள லோகம் எவையென்றும் புரிந்து கொள்ள முடிகிறது.

பதம் 5.20.46
தேவ-திர்யன்-மனுஷ்யாணாம் ஸரீஸ்ரூப – ஸவீருதாம்
ஸர்வ-ஜீவ-நிகாயானம் ஸுர்ய ஆத்மா த்ருக்- ஈஸ்வர:

தேவ—தேவர்களின்; திர்யக்—இழிந்த விலங்குகள்; மனுஷ்யாணாம்—மனிதர்கள்; ஸரீஸ்ருப—பூச்சிகள்; மற்றும் பாம்புகள்; ஸவீருதாம்—மரம், செடிகள்; ஸர்வ-ஜீவ-நிகாயானாம்—உயிர்வாழிகளின் அனைத்துப் பிரிவுகளும்; ஸுர்ய—சூரியதேவன்; ஆத்மா—உயிர் மற்றும் ஆத்மா; த்ருக்—விழிகளின்; ஈஸ்வர:—முழுமுதற் கடவுள்.

தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஊர்வன, மரம், செடி, கொடிகள் உள்ளிட்ட அனைத்து உயிர்வாழிகளும் சூரிய மண்டலத்திலிருந்து, சூரிய தேவன் அளிக்கும் வெம்மை மற்றும் ஒளியையே சார்ந்திருக்கின்றன. மேலும் சூரியன் இருப்பதினாலேயே அனைத்து உயிர்வாழிகளாலும் பார்க்க முடிகின்றது அதனால்தான் அவர் ‘த்ருக் ஈஸ்வர’ அதாவது பாரவைக்கான முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகின்றார்.


ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “பிரபஞ்சத்தின் கட்டமைப்புப் பற்றிய ஆய்வு” எனும் தலைப்பை கொண்ட இருபதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare