அத்தியாயம் – 1
மகாராஜா பிரியவிரதனின் செயல்கள்
பதம் 5.1.1
ராஜோவாச
ப்ரியவ்ரதோ பாகவத ஆத்மாராம: கதம் முனே
க்ருஹே ‘ரமத யன்-மூல கர்ம:-பந்த பராபவ:

ராஜா உவாச—மன்னர் பரீக்ஷித்து கூறினார்; ப்ரிய-வ்ரத:—மன்னர் பிரியவிரதன்; பாகவத:—சிறந்த பக்தர்; ஆத்ம-ஆராம:—தன்னுணர்வு இன்பத்தினை அனுபவித்தவர்; கதம்—ஏன்; முனே—ஓ, மாமுனிவரே; க்ருஹே—இல்லத்தில்; அரமத—மகிழ்தல்; யத்-மூல:—மூல காரணமாகும்; கர்ம-பந்த:—பலன்தரும் செயல்களில் பந்தப்படுவதற்கு; பராபவ:—ஒருவனது மனிதப் பிறப்பின் நோக்கத்தினைத் தோல்வியுறச் செய்யும்.

சுகதேவ கோஸ்வாமியிடம் மன்னர் பரீட்சித்து வினவினார். “ஓ, மாமுனிவரே! சிறந்த தன்னுணர்வு பெற்ற பக்தரான மன்னர் பிரியவிரதன், வினை எனும் கட்டுப்பாட்டுக்கு (பலன்தரும் செயல்கள்) மூலகாரணமாக விளங்குவதும் மனித வாழ்வின் குறிக்கோளைத் தோற்கடிப்பதுமான இல்லறவாழ்வில் ஏன் இருந்தார்?”

பதம் 5.1.2
ந நூனம் முக்த ஸங்கானாம் தாக்ருஷானாம் த்விஜர்ஷப
க்ருஹேஷ்வ அபினிவேஷோ ‘யம் பும்ஸாம் பவிதும் அர்ஹதி

ந—இல்லை; நூனம்—நிச்சயமாக; முக்த-ஸங்கானாம்—பற்றற்றவர்கள்; தாத்ருஸானாம்—இதுபோன்ற; த்விஜ-ருஷப—ஓ, அந்தணர்களிற் சிறந்தோரே; க்ருஹேஷூ—இவ்வாழ்க்கைக்கு; அபினிவேஷ:—அதீதப் பற்று; அயம்—இந்த; பும்ஸாம்—மனிதர்கள்; பவிதும்—அடைவது; அர்ஹதி—சாத்தியமாகிறது.

பக்தர்கள் நிச்சயம் விடுதலை பெற்றவர்களேயாவர். ஆகையினால் அந்தணர்களில் சிறந்தோரே அவர்கள் இல்லறச் செயல்களில் ஈடுபடுதல் சாத்தியமன்று.

பதம் 5.1.3
மஹதாம் கலு விப்ரர்ஷே உத்தம ஷ்ரோக-பாதயோ:
சாயா-நிர்வ்ருத-சிந்தானாம் ந குடும்பே ஸ்ப்ருஹா மதி:

மஹாதாம்—சிறந்த பக்தர்கள்; கலு—உறுதியாக; விப்ர-ருஷே—அந்தணர்களிற் சிறந்த மாமுனிவரே; உத்தம-ஷ்லோக-பாதயோ:—முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளின்; சாயா—நிழலினால்; நிர்வ்ருத—திருப்தியடைந்த; சித்தனாம்—அவர்களின் உணர்வு; ந—இல்லை; குடும்பே—குடும்பத்தினர்க்கு; ஸ்ப்ருஹா-மதி:—பற்றுடைய உணர்வு.

முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த உயர்ந்த மகாத்மாக்கள், அத்திருவடித் தாமரைகளின் நிழலினால் மனநிறைவு அடைகின்றனர். அவர்களது உணர்வு குடும்பத்தினர் மீது பற்றுடையதாக ஒரு நாளும் ஆகாது.

பதம் 5.1.4
ஸம்ஷயோ ‘யம் மஹான் ப்ரஹ்மன் தாராகார ஸதாதிஷு
ஸக்தஸ்ய யத் ஸித்தர் அபூத் க்ருஷ்ணே ச மதிர் அச்யுதா

ஸம்ஷய:—ஜயம்; அயம்—இந்த; மஹான்—சிறந்த; ப்ரஹ்மன்:—ஓ, அந்தணரே; தார—மனைவி; அகார—இல்லம்; சுத்—குழந்தைகள்; அதிஷு—போன்றவற்றில்; ஸக்தஸ்ய—பற்றுடைய ஒருவன்; யத்—ஏனென்றால்; ஸித்தி:—நிறைவு; அபூத்—ஆதல்; க்ருஷ்ருண—கிருஷ்ணருக்கு; ச—மேலும் மதி:—பற்று; அச்யுதா—குற்றமற்ற.

மன்னர் தொடர்ந்து கூறினார். “ஓ சிறந்த அந்தணரே! என் ஆழ்ந்த ஐயம் இதுதான் மனைவி மக்கள் இல்லம் என்று பற்று வைத்திருந்த மன்னர் பிரியவிரதன் கிருஷ்ண உணர்வில் குற்றமற்ற நிறைவெய்தியது எவ்வாறு சாத்தியமானது?”

பதம் 5.1.5
ஸ்ரீ ஷுக உவாச
பாடம் உக்தம் பகவத உத்தம ஷ்லோகஸ்ய ஸ்ரீ மச்-சரணாரவிந்த-
மகாந்த-ரஸ ஆவேஷித-சேதஸோ பகவத-பரமஹம்ஸ-தயித-கதாம்
கிஞ்சித் அந்தராய-விஹதாம் ஸ்வாம் ஷிவதமாம் பதவீம் ந ப்ராயணே ஹின்வந்தி

ஸ்ரீ-ஷுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பாடம்—சரியானது; உக்தம்—நீ கூறியது; பகவத்:—முழுமுதற் கடவுளின்; உத்தம-ஷ்த்லோகஸ்ய—தெய்விகப் பண்களினால் துதிக்கப்படுபவர்; ஹமத் சரண அரவிந்த—நறுமணமிக்க அழகிய தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளின்; மகரந்த—தேன்; ரஸே—ரஸத்தில்; ஆவேஷித—தோய்ந்து; சேதஸ:—அவர்களது இதயங்கள்; பாகவத—பக்தர்களுக்கு; பரமஹம்ஸ—விடுதலை பெற்றவர்கள்; தயித—இனிமையளிக்கும்; கதாம்—புகழ்; கிஞ்சித்—சிலநேரங்களில்; அந்தராய—தடைகளினால்; விஹதாம்—நிறுத்தப்படலாம்; ஸ்வாம்—சொந்த; ஷிவ-தமாம்—மிகவும் மேன்மையான; பதவீம்—நிலை; ந—இல்லை; ப்ராயேண—பெரும்பாலும் எப்போதும்; ஹின்வந்தி—துறத்தல்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நீ கூறியது உண்மைதான். பிரம்மதேவன் போன்ற உயர்ந்தவர்களினால் இயற்றப்பட்ட தெய்விகப் பண்களில் போற்றப்படும் முழுமுதற் கடவுளின் பெருமைகள் சிறந்த பக்தர்களுக்கும் விடுதலை பெற்றவர்களுக்கும் மிகுந்த இனிமையளிக்கின்றன. பகவானின் திருவடித்தாமரைகளின் தேனாம்ருதத்தில் பற்றும் அவனது பெருமைகளில் எப்போதும் தோய்ந்திருக்கும் மனமுடைய ஒருவன் சில தடைகளினால் தடுக்கப்படலாம். ஆயினும் அவன் தான் எய்திருக்கும் உயர் நிலையினை ஒருக்காலும் விட்டுக்கொடுக்க மாட்டான்.

பதம் 5.1.6
யர்ஹிவாவ ஹ ராஜன் ஸ ராஜ-புத்ர ப்ரியவ்ரத பரம-
பாகவதோ நாரதஸ்ய சரணோபஸே வயாஞ்ஜஸாவகத-பரமார்த்
ஸதத்வோ ப்ரஹ்மவதோ ஸத்ரேன தீக்ஷிஷ்யமயோ ‘வனிதல-
பரிபாலனோ யாம்னாத-ப்ரவர-குண-கணைகாந்த-பாஜதையாஸ்வ-
பித்ரோபாமந்த்ரிதோ பகவதி வாஸதேவ ஏவாவ்யவதான-
ஸமாதி-யோகேன ஸமாவோஷித-ஸகல-காரக-க்ரியா கலாபோ
நைவாப்யனந்தத் யத்யாபி தத் அப்ரத்யாம்னாதவ்யம்-தத் அதிகரண
ஆத்மனோ ‘ன்யஸ்மாத் அஸதோ பராபவம் அன்வீக்ஷமான:

யர்ஹி—ஏனெனில்; வரவ ஹ—உண்மையில்; ராஜன்—ஓ, மன்னனே; ஸ:—அவர்; ராஜபுத்ர:—ராஜபுத்திரன்; ப்ரியவ்ரத:—பிரியவிரதன்; பரம—பரமம்; பாகவத:—பக்தர்; நாரதஸ்ய—நாரதனின்; சரண—தாமரைத்திருவடிகள்; உபஸேவயா—தொண்டினால்; அஞ்ஜஸா—விரைவில்; அவகத—உணர்ந்தவரானார்; பரம-அர்த—உன்னத விஷயங்கள்; ஸ—தத்வ:—அறிந்து அனைத்து உண்மைகளுடன்; ப்ரஹ்ம-ஸத்ரேன—பரம் பொருளைப் பற்றிய தொடர்ந்த விவாதத்தினால்; க்ஷிஷ்ய-மாணவ:—தன்னை முற்றிலும் அர்ப்பணிக்கும் ஆவல்; அவனிதல—வேதங்களில் கூறியுள்ளபடி; ப்ரவர—உயர்ந்த; குண—குணங்களின்; கண—மொத்த எண்ணிக்கையில்; ஏகாந்த—மாற்றம் ஏதுமின்றி; பாஜாதையா—அவர் பெற்றிருந்த காரணத்தினால்; ஸ்வ-பித்ரா—அவரது தந்தையினால்; உபமந்த்ரித:—கேட்டுக் கொள்ளப்பட்டு; பகவதி—முழுமுதற் கடவுளிடத்தில்; வாசுதேவ—எங்கும் பரந்துள்ள பகவான்; ஏவ—உறுதியாக; அவ்யவதான—ஓய்வின்றி; ஸமாதி-யோகேன—யோகப்பயிற்சியின் முழு ஈடுபாட்டினால்; ஸமோவேஷித—முற்றிலும் அர்ப்பணித்து; ஸகல—எல்லாவற்றையும்; காரக—புலன்கள்; க்ரியா-கவாப:—அவரது மொத்தச் செயல்களும்; ந—இல்லை; ஏவ—இவ்வாறு; அப்யனந்தத்—வரவேற்கப்பட்டு; யத்யபி—இருந்த போதிலும்; தத்—அந்த; அப்ரத்யாம்னாதவ்யம்—எக்காரணத்தினாலும் புறக்கணிக்கப்படுவதில்லை; தத்-அதிகாரணே—அப்பதவியில் அமர்ந்து; ஆத்மன:—அவர்; அன்யஸ்மாத்—பிற செயல்களினால்; அஸத:—பௌதீகம்; அபி—உறுதியாக; பராபவம்—அழிதல்; அன்வீக்ஷமாண:— முன்பாகவே காணுதல்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் அன்பிற்குரிய மன்னனே. இளவரசர் பிரியதேவன் மிகச் சிறந்த பக்தர். அவர் தனது ஆன்மீக குருவான நாரதரின் தாமரைத் திருவடிகளைச் சரணடைந்தமையால், ஆன்மீக ஞானத்தில் உயர்நிறைவினை எய்தினார். முன்னேறிய ஞானத்துடன் அவர் எப்போதும் ஆன்மீகத்தைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டு வேறெதிலும் தனது கவனத்தைத் திருப்பவில்லை. இளவரசரின் தந்தை பின்னர் அவரை இவ்வுலகினை ஆளும் பொறுப்பினை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுவே வேதங்களில் உபதேசிக்கப்பட்டிருக்கும் கடமை என்று அவர் பிரியவிரதனைச் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் இளவரசர் பிரியவிரதனோ முழுமுதற் கடவுளை விடாது சிந்திக்கும் பக்தி யோகத்தில் தொடர்ந்து ஈடுபட்டுத் தனது புலன்கள் அனைத்தையும் இறைவனது பக்தித் தொண்டில் ஈடுபடுத்தினார். ஆகையினால் இளவரசர் தனது தந்தையின் வேண்டுகோளை வரவேற்காதபோதும் உலகை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதினால் தான் பக்தித் தொண்டிலிருந்து மாற வேண்டியதாகி விடுமோ என்றும் கேள்வியினை மனச்சான்றுக்கு உட்பட்டு எழுப்பினார்.

பதம் 5.1.7
அத ஹ பகவான் ஆதி-தேவ ஏதஸ்ய குண-விஸர்கஸ்ய பரிப்ரும்
ஹணானுத்யான-வ்யவஸித-ஸகவ-ஜகத்-அபிப்ராய ஆத்ம-யோனிர்
அகில-நிகம-நிஜ-கண-பரிவேஷ்டித: ஸ்வ-பவனாத் அவததார

அத—இவ்வாறு; ஹ—உண்மையில்; பகவான்—ஆற்றல் மிக்க; ஆதி-தேவ:—முதல் தேவர்; ஏதஸ்ய—இப்பிரபஞ்சத்தின்; குண-விஸர்கஸ்ய—ஜட இயற்கையின் முக்குணங்களின் படைப்பு; பரிப்ரும் ஹண—நலன்; அனுத்யான—எப்போதும் சிந்தித்த; வ்யவஸித—அறிதல்; ஸகல—எல்லாம்; ஜகத்—பிரபஞ்சத்தின்; அபிப்ராய:—இறுதி நோக்கம் அவரால்; ஆத்ம—பரமாத்மா; யோனி:—அவர் பிறந்த இடம்; அகில—எல்லாம்; நிகம—வேதங்களினால்; நிஜ-கண—தனிப்பட்ட துணைவர்களினால்; பரிவேஷ்டித:—சூழப்பட்டு; ஸ்வ-பவனாத்—அவரது இருப்பிடத்திலிருந்து; அவததார—இறங்கி வந்தார்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் இப்பிரபஞ்சத்தில் முதலில் பிறந்தவரும், ஆற்றல்மிக்கத் தேவராக விளங்குபவரும் பிரம்ம தேவனேயாவார். இகபரச் செயல்களின் வளர்ச்சிக்கு அவரே எப்போதும் பொறுப்பாவார். முழுமுதற் கடவுளிடமிருந்து நேரடியாகப் பிறந்தவர் ஆதலினால், பிரபஞ்சப்படைப்பின் நோக்கத்தை அவர் நன்றாக அறிவார். அதனால் அவர் தனது செயல்கள் அனைத்தையும் பிரபஞ்சம் முழுவதின் நன்மைக்கே அர்ப்பணிக்கிறார். இச்சக்தி மிக்கப் பிரம்மதேவன் அவரது துணைவர்களும் வேத உருவங்களும் சூழ்ந்துவர மேலுலகத்திலுள்ள தனது இருப்பிடத்திலிருந்து இறங்கி இளவரசர் பிரியவிரதன் தியானம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்தார்.

பதம் 5.1.8
ஸ தத்ர தத்ர ககன-தல உடு-பதிர் இவ விமனாலலிபிர் அனுபதம்
அமர-பரிவ்ருடைர் அபிபூஜ்யமான: பதி பதி வதேஷ: ஸித்த-கந்தர்வ-
ஸாத்ய-சாரண-முனி-கணைர் உபகீயமானோ கந்த-மாதன-த்ரோணிம்
அவபாஸயன்ன் உபஸஸர்ப

ஸ:—அவர் (பிரம்மதேவன்); தத்ர தத்ர—இங்குமங்கும்; ககன-தவே—வான் முகட்டினுள்; உரு-பதி:—சந்திரன்; இவ—போன்று; விமான—ஆவிலிபி:—அவர்களது பல்வேறு விமானங்களில்; அனுபதம்—பாதையில்; அமர—தேவர்கள்; பரிவ்ருடை:—தலைவர்களினால்; அபிபூஜ்யமான:—வணங்கப்பட்டு; பதி பதி—ஒருவர்பின் மற்றொருவராக வழியில்; ச—மேலும்; வதேஷ;—கூட்டங்கூட்டமாக; ஸித்த—சித்தலோகத்தைச் சேர்ந்தோர்; கந்தர்வ—கந்தர்வ லோகத்தைச் சேர்ந்தோர்; ஸாத்ய—சாத்யலோகத்தைச் சேர்ந்தார்; சாரண—சாரண லோகத்தைச் சேர்ந்தோர்; முனி-கணை:—மாமுனிவர்கள்; உபகீயமான:—வழிபட்டு; கந்த-மாதன—கந்தமாதனம் என்னும் மலை உள்ள உலகிற்கு; த்ரோணீம்—எல்லை; அவபாஸயன்—ஒளிர்கின்ற; உபஸ ஸர்ப—அவர் வந்தார்.

பிரம்மதேவன் தனது மிகப்பெரிய அன்னப் பறவை வானத்திலிருந்து இறங்கியவுடன் சித்தலோகம், கந்தர்வலோகம், சாத்யலோகம், சாரணலோகம் முதலியவற்றைச் சேர்ந்தவர்களும், மாமுனிவர்களும், தேவர்களும் தனித்தனி விமானங்களில் பறந்து வந்து பிரம்மதேவனை வணங்கி வரவேற்பதற்காக வான் முகட்டினுள் நின்றனர். பல்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள் பிரம்ம தேவனை வணங்கி வழிபட்டபோது பிரம்ம தேவன் ஒளிரும் நட்சத்திரக் கூட்டங்களினால் சூழப்பட்ட முழுமதி போல் திகழ்ந்தார். பிரம்மதேவனின் அன்னவாகனம் இறுதியில் இளவரசர் பிரியவிரதன் தவம் செய்து கொண்டிருந்த கந்தமாதன மலையின் எல்லையினை அடைந்தது.

பதம் 5.1.9
தத்ர ஹ வா ஞனம் தேவருஷிர் ஹம்ஸ-யானேன பிதரம் பகவந்தம்
ஹிரண்ய-கர்பம் உபலமான: ஹைஸைவோத்தாயார் ஹணேன ஸ ஹ
பிதா-புத்ராப்யாம் அவஹிதாஞ்ஜவிர் உபஸ்தே

தத்ர—அங்கே; ஹ வா—உறுதியாக; ஏனம்—அவரது; தேவ-ரிஷி:—நாரத முனிவர்; ஹம்ஸ-யாணேன—அன்னவாகனத்தினால்; பிதரம்—அவருடைய தந்தை; பகவந்தம்—சக்தி மிக்க; ஹிரண்ய-கர்பம்—பிரம்மதேவன்; உபலப-மான:—புரிந்து கொண்டு; ஸ ஹஸா ஏவ—உடனடியாக; உததாய—எழுந்து நின்று; அர்ஹணேன—வழிபடுதற்குரிய பொருட்களுடன்; ஹை—சேர்த்துக் கொண்டு; பிதா-புத்ராப்யாம்—பிரியவிரதனும் அவரது தந்தையான சுயம்புவ மனுவும்; அவஹித-அஞ்ஜலி:—மரியாதையுடன் கரங்களைக் குவித்து; உபதஸ்தே—வழிபட்டனர்.

நாரத முனிவரின் தந்தையான பிரம்மதேவன் இப்பிரபஞ்சத்தினுள் இருக்கும் பரமபுருஷர் ஆவார். பெரிய அன்னவாகனத்தினைக் கண்ணுற்றதும் பிரம்மதேவன் வந்துவிட்டார் என்பதை நாரத முனிவர் புரிந்துகொண்டார். ஆகையினால் அவரும் சுயாம்புவ மனுவும் அவரது மைந்தனும் நாரத முனிவரிடம் உபதேசம் கேட்டுக் கொண்டிருந்தவருமான பிரியவிரதனும் உடனே எழுந்து நின்றனர். பிறகு அவர்கள் தங்கள் கரங்களைக் கூப்பிப் பிரம்மதேவனை மிகுந்த மரியாதையுடன் வணங்கினர்.

பதம் 5.1.10
பகவான் அபி பாரத தத்-உபனீதார்ஹண: ஸூக்த-வாகேனாதி
தராம் உதித-குண-கணாவதார-ஸூஜய: ப்ரியவ்ரதம் ஆதி-புருஷஸ்-தம்
ஸதய-ஹஸாவலோக இதி ஹோவாச

பகவான்—பிரம்மதேவன்; அபி—மேலும்; பாரத—ஓ, பரீட்சித்து மன்னனே; தத்—அவர்கள்; உபனீத—முன்னே வந்து; அர்ஹண:—பூஜைப் பொருட்களுடன்; ஸூக்த—வேதமரபின்படி; வாகனே—வாக்கினால்; அதிகாரம்—உயர்வாக; உதித—போற்றினர்; குண-கண—குணங்களின்; அவதார—இறங்கி வந்த காரணத்தினால்; ஸூ-ஜய:—அவரது பெருமைகள்; ப்ரியவிரதம்—பிரியவிரதனுக்கு; ஆதி–புருஷ:—ஆதி புருஷர்; தம்—அவருக்கு; ஸ-தய—கருணையுடன்; ஹாஸ—புன்னகையுடன்; அவலோக:—அவரது பார்வை; இதி—இவ்வாறு; ஹ—உறுதியுடன்; உவாச—கூறினார்.

அன்பிற்குரிய பரீட்சித்து மன்னனே, இறுதியில் பிரம்மதேவன் மேல் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு இறங்கி வந்தவுடன் நாரத முனிவர், சுயாம்புவ மனு, பிரியவிரதன் மூவரும் எழுந்து முன்னே வந்து பூஜைப் பொருட்களை முன்வைத்து தேவ மரபிற்கேற்ப உயர்ந்த மொழிகளினால் அவரைப் போற்றினார். அச்சமயம் இப்பிரபஞ்சத்தின் ஆதிபுருஷரான பிரம்மதேவன் பிரியவிரதன் மீது கருணை கொண்டு கனிவுடன் அவரை நோக்கிப் புன்னகை புரிந்தவாறு பின் வரும் வார்த்தைகளைக் கூறலுற்றார்.

பதம் 5.1.11
ஸ்ரீ-பகவான் உவாச
நிபோத ததேதம் ருதம் ப்ரவீமி
மாஸுயிதும் தேவம் அர்ஹஸி அப்ரமேயம்
வயம் பவஸ் தே தத ஏஷ மஹருஷிர்
வஹாம ஸர்வே விவஷா யஸ்ய திஷ்டம்

ஸ்ரீ பகவான் உவாச—பரமபுருஷர் பிரம்மதேவன் கூறினார்; நிபோத—அருள்கூர்ந்து கேட்பாயாக; தத—அன்பிற்குரிய மைந்தனே; இதம்—இந்த; ருதம்—உண்மை; ப்ரவீமி—நான் சொல்வது; மா—இல்லை; அஸுயிதும்—பொறாமை கொள்வது; தேவம்—முழுமுதற் கடவுள்; அர்ஹிஸி—நீ உணர்தல் வேண்டும்; அப்ரமேயம்—நமது அனுபவ அறிவிற்கும் அவர் அப்பாற்பட்டவர்; வயம்—நாம்; பவ:—சிவபெருமான்; தே—உன்னுடைய; தத:—தந்தை; ஏஷ:—இந்த; மஹ-ரிஷி:—நாரதர்; வஹாம:—நிறைவேற்ற; ஸர்வே—அனைத்தும்; விவஷா:—மாற்ற முடியாத; யஸ்ய—அவரது; திஷ்டம்—கட்டளை.

இப்பிரபஞ்சத்தின் பரமபுருஷரான பிரம்மதேவன் கூறினார் அன்பார்ந்த பிரியவிரதனே! நான் சொல்லப்போவதை அருள் கூர்ந்து கேட்பாயாக. நமது அனுபவ அறிவின் எல்லைக்கும் எட்டாதவரான பரமபுருஷ பகவானின் மீது ஒரு நாளும் பொறாமை கொள்ளாதே. நான், நீ, சிவபெருமான், உனது தந்தை, மாமுனிவர் நாரதர் போன்ற அனைவரும் பரம்பொருளின் கட்டளையினை நிறைவேற்ற வேண்டியவர்களாவோம். அவரது கட்டளையினை எந்நாளும் நம்மால் மீற முடியாது.

பதம் 5.1.12
ந தஸ்ய கஷ்சித் தபஸா வித்யயா வா
ந யோக வீர்யேண மணீஷயா வா
நைவார்த தர்மை பரத ஸ்வதோவா
க்ருதம் விஹந்தும் தனு ப்ருத் விபூயாத்

ந—இல்லை; தஸ்ய—அவரது; கஷ்சித்—எவரேனும்; தபஸா—தவத்தினால்; வித்யயா—கல்வியினால்; வா—அல்லது; ந—இல்லை; யோக—யோக ஸித்தியின் சக்தியினால்; வீர்யேன—வீரத்தினால்; மனீஷயா—புத்தியினால்; வா—அல்லது; ந—இல்லை; ஏவ—உறுதியாக; அர்த—பௌதிக வளத்தினால்; தர்மை—தர்மத்தின் சக்தியினால்; பரத:—எந்தவிதப் புறச்சக்தியினாலும்; ஸ்வத:—தனிமுயற்சியினாலும்; வா—அல்லது; க்ருதம்—கட்டளை; விஹந்தும்—விலக்குவதற்கு; தனு-ப்ருத்—பௌதிக உடலை ஏற்றுக்கொண்டிருக்கும் ஓர் உயிர்; விபூயாத்—இயல்கிறான்.

முழுமுதற் கடவுளின் கட்டளையினை தவத்தின் வலிமையினாலேயோ உயர்ந்த வேதக் கல்வியினாலோ அல்லது யோக சித்தியின் ஆற்றலினாலோ அல்லது வீரத்தினாலோ, அன்றி புத்திசாலித்தனமான செயல்களினாலோ ஒருவன் விலக்க முடியாது. ஒருவன் தனது அறத்தின் வலிமையைப் பயன்படுத்தியோ, பௌதிக வளத்தினாலோ அல்லது வேறெந்த வழியிலோ தனித்தோ அல்லது பிறர் துணையுடனோ முழுமுதற் கடவுளின் கட்டளைகளை மீற முடியாது. சிறப்புமிக்க பிரம்மதேவன் தொடங்கி ஒரு சிற்றெறும்பு வரை எந்தவொரு உயிரும் இறைவன் கட்டளையை மீற முடியாது.

பதம் 5.1.13
பவாய நாஷாய ச கர்ம கர்தும்
ஷோகாய மோஹாய ஸதா பயாய
ஸுகாய து காய ச தேஹ-யோகம்
அவ்யக்த திஷ்டம் ஜனதாங்க தத்தே

பவாய—பிறப்பிற்காக; நாஷாய—இறப்பிற்காக; ச—மேலும்; கர்ம—செயல்; கர்தும்—செய்வதற்கு; ஷோகாய—சோகம்; மோஹாய—மோகம்; ஸதா—எப்போதும்; பயாய—அச்சத்திற்காக; ஸுகய—சுகத்திற்காக; துக்காய—துக்கத்திற்காக; ச—மேலும்; தேஹ-யோகம்—பௌதிக உடலுடன் தொடர்பு கொண்டு; அவ்யக்த—முழுமுதற் கடவுள்; திஷ்டம்—அதிகாரத்தினால்; ஜனதா—உயிர்வாழிகள்; அங்க—ஓ, பிரியவிரதனே; தத்தே—ஏற்றுக்கொள்கின்றன.

அன்பிற்குரிய பிரியவிரதனே! முழுமுதற் கடவுளின் கட்டளையினால் உயிர்கள் அனைத்தும் பிறப்பு, இறப்பு, செயல், சோகம், மோகம், அச்சம், எதிர்கால ஆபத்துக்கள், மகிழ்ச்சி, துக்கம் போன்றவற்றிற்காகப் பல்வேறு உடல்களை ஏற்றுக்கொள்கின்றன.

பதம் 5.1.14
யத் வாசி தந்த்யாம குண-கர்ம-தாமபி:
ஸுதுஸ்தரைர் வத்ஸ வயம் ஸுயோஜிதா:
ஸர்வே லஹாமோ பலிம் ஈஷ்வராய
ப்ரோதா நஸுவ த்லி-பதே சதுஷ்-பத:

யத்—அவரது; வாசி—வேத உபதேசத்தின் வடிவில்; தந்த்யாம்—நீண்ட கயிற்றிற்கு; குண—குணத்தின்; கர்ம—மற்றும் செயல்; தாமபி—கயிறுகளினால்; ஸு-துஸ்தரை:—விலக்குதற்கு மிகவும் கடினமான; வத்ஸ—அன்பு மைந்தனே; வயம்—நாம்; ஸு யோஜிதா:—ஈடுபடுகிறோம்; ஸர்வே—எல்லாம்; வஹாம:—நிறைவேற்ற; பலிம்—அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்குரிய கட்டளைகள்; ஈஷ்வராய—முழுமுதற் கடவுளுக்கு; ப்ரோதா:—கட்டுப்பட்டு; நஸி—மூக்கில்; இவ—போன்று; துவி-பதே—இருகால்களையுடையவனுக்கு (ஓட்டுபவன்); சது: பத:—நான்கு கால்களையுடையது (காளைமாடு).

அன்பிற்குரிய மைந்தனே! நாம் அனைவரும் நமது குணம் மற்றும் செயலுக்கேற்ப, வேதக் கட்டளைகளின்படி வர்ணாசிரமப் பிரிவுகளினால் கட்டுப்படுத்துகிறோம். இப்பிரிவுகளைத் தவிர்க்க இயலாது. ஏனெனில் இவை விஞ்ஞான ரீதியாக ஏற்படுத்தப்பட்டவையாகும். ஆகையினால் மூக்கணாங்கயிறுகள் பூட்டி காளைமாடுகள் எவ்வாறு அவற்றை ஓட்டுபவனின் விருப்பத்திற்கேற்பச் செல்கின்றனவோ அதுபோல் நாம் இவ்வர்ணாசிரம தர்மங்களிலுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

பதம் 5.1.15
ஈஷாபிஸ்குஷ்தம் ஹி அவருந்மஹே ‘ங்க
து கம் ஸுகம் வா குண-கர்ம ஸங்காத்
ஆஸ்தாய தத் தத் யத் அயுங்க்த நாதஷ்
சக்ஷுஷ்டதாந்தா இவ நீயமானா:

ஈஷ-அபிஸ்ருஷ்தம்—பகவானால் படைக்கப்பட்டது அல்லது அளிக்கப்பட்டது; ஹி—உறுதியாக; அவருந்த்மஹே—நாம் ஏற்றுக் கொண்டு; அங்க—அன்பிற்குரிய பிரியவிரதனே; து: கம்—துக்கம்; ஸுகம்—சுகம்; வா—அல்லது; குண-கர்ம—குணம் மற்றும் கர்மம்; ஸங்காத்—தொடர்பினால்; ஆஸ்தாய—இருப்பதினால்; தத் தத்—அந்த நிலை; யத்—அந்த உடல்; ஆயுங்க்த—அவர் அளித்தார்; நாத:—பரமபுருஷ பகவான்; சக்ஷுஷ்மதா—விழிகளுடைய ஒருவனால்; அந்தா:—குருடர்கள்; இவ—போன்று; நீயமானா:—வழிநடத்தப்படுதல்.

அன்பார்ந்த பிரியவிரதனே, இயற்கையின் பல்வேறு குணங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பிற்கேற்ப நமக்கு குறிப்பிட்ட உடலையும் நாம் அடைவதற்கான இன்ப துன்பங்களையும் அளிக்கிறார். ஆகையினால் ஒருவன் தான் இருக்கும் நிலையில் அப்படியே இருந்து விழிகளுடைய ஒருவன் குருடனை வழி நடத்திச் செல்வதைப் போல் முழுமுதற் கடவுளால் வழி நடத்திச் செல்லப்பட வேண்டும்.

பதம் 5.1.16
முக்தோ ‘பி தாவத் பிப்ருயாத் ஸ்வ-தேஹம்
ஆரப்தம் அஷ்னன்ன அபிமான-ஷுன்ய:
யதானுபூதம் ப்ரதியாத-நித்ர:
கிம் த்வ அன்ப-தேஹாய குணான் நவ்ருங்க்தே

முக்த:—விடுதலை பெற்ற ஒருவன்; அபி—கூட; தாவத்—நீண்ட காலமாக; பிப்ருயத்—காத்தல் வேண்டும்; ஸ்வ-தேஹம்—தனது உடலை; ஆரப்தம்—முன்வினைப் பயனால் பெற்றது; அஷ்னன்—ஏற்றுக் கொண்டு; அபிமான-ஷுன்ய:—பிழைபட்ட கருத்துக்களினால்; யதா—போன்று; அனு-பூதம்—உணரப்பட்டது எதுவோ; ப்ரதியாத-நித்ர—உறக்கத்திலிருந்து விழித்த ஒருவன்; கிம் து—ஆனால்; அன்ய-தேஹாய—மற்றொரு பௌதிக உடலுக்காக; குணான்—பௌதிகக் குணங்கள்; ந—இல்லை; வ்ருங்க்தே—மகிழ்தல்.

ஒருவன் விடுதலை பெற்றவனாக இருந்தாலும் அவன் தனது முன்வினைப் பயனுக்கேற்ப ஒரு உடலை ஏற்றுக்கொள்ள வேண்டியவனாகிறான். ஆயினும் பிழைபட்ட கருத்துக்கள் ஏதுமின்றி நித்திரை நீங்கி விழித்தெழுந்தவன், நித்திரையில் தான் கண்ட கனவினை எண்ணிப் பார்ப்பது போல் தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் தனது முந்தைய கர்மத்தினால் ஏற்பட்டது என்று அவன் எண்ணுகிறான். இப்படி அவன் உறுதியாக இருந்து இயற்கையின் முக்குணங்களின் பாதிப்பின் கீழ் மற்றொரு பரு உடலைப் பெறுவதற்காக ஒருபோதும் உழைக்கமாட்டான்.

பதம் 5.1.17
பயம் ப்ரமத்தஸ்ய வனேஷ்ல அபி ஸ்யாத்
யத ஸ ஆஸ்யதே ஸஹே-ஷட்-ஸபத்ன:
ஜீதேந்த்ரிய ஆத்ம-ரதேர் புதஸ்ய
க்ருஹாஷ்ரம கிம் நு கரோதி அவத்யம்

பயம்—பயம்; ப்ரமத்தஸ்ய—குழப்பமுற்ற ஒருவன்; வனேஷு—வனத்தில்; அபி—கூட; ஸ்யாத்—இருத்தல் வேண்டும்; யத:—ஏனேன்றால்; ஸ:—அவன் (சுயகட்டுப்பாடில்லாதவன்); ஆஸ்தே—இருக்கின்றான்; ஸ:—உடன்; ஷட்-ஸபத்ன:—ஆறு மனைவிகளுடன்; ஜித-இந்த்ரியஸ்ய—ஏற்கனவே புலன்களை வென்ற ஒருவனுக்காக; ஆத்ம—ரதே:—சுயதிருப்தியடைதல்; புதஸ்ய—இதுபோன்ற கற்றவனுக்கு; க்ருஹ-ஆஷ்ரம்:—இல்லறவாழ்க்கை; கிம்—என்ன; நு—உண்மையில்; கரோதி—செய்யக்கூடும்; அவத்யம்—துன்பம்.

சுயக்கட்டுப்பாடில்லாத ஒருவன் தவமேற்கொண்டு காடுவிட்டுக் காடு சென்றாலும் உலகத் தொடர்பினை எண்ணி எப்போதும் அச்சங்கொள்கிறான். ஏனென்றால் அவன் தன்னுள்ளே இருக்கும் அறிவுப் புலன்கள் என்னும் ஆறு மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஆயினும் தன்னடக்கத்தோடு புலன்களை வென்றுள்ள ஒரு கற்றறிந்த மனிதனை இல்லறவாழ்க்கை கூடத் துன்புறத்த முடியாது.

பதம் 5.1.18
ய:ஷம் ஸபத்னான் விஜி கீஷமானோ
க்ருஹேஷு நிர்விஷ்ய பூர்வம்
அத்யேதி துர்காஷ்ரித ஊர்ஜிதாரீன்
க்ஷ ணேஷு காமம் விகரேத் விபஷ்சித்

ய:—யாரேனும் ஒருவர்; ஷட்—ஆறு; ஸபத்னான்—எதிரிகள்; விஜிகீஷமான:—வெல்வதற்கு விரும்பி; க்ருஹேஷு—இல்வாழ்க்கையில்; நிர்விஷ்ய—புகுந்து; யதே த—முயல்கின்றனர்; பூர்வம்—முதலில்; அத்யேதி—வெல்கிறான்; துர்க-ஆஷ்ரித:—கோட்டையில் இருத்தல்; ஊர்ஜித-அதீன்—பலமிக்க எதிரிகள்; க்ஷீணேஷு—குறைதல்; காமம்—இச்சைகள்; விசரேத்—செல்கின்றன; விபஷ்சித்—அனுபவமிக்க கற்றவன்.

இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு திட்டமிட்டுத் தனது மனம் மற்றும் ஐந்து புலனுறுப்புக்களை வெல்பவன் தனது பலமிக்க எதிரிகளை வீழ்த்திக் கோட்டையினுள் பாதுகாப்பாக இருக்கும் அரசினைப் போன்றவன். இல்லற வாழ்கையில் பயிற்சி பெற்று அவனது காம இச்சைகள் குறைந்த பிறகு அவன் எங்கும் அச்சமின்றிச் செல்லலாம்.

பதம் 5.1.19
த்வம் த்வ அப்ஜ-நாபாங்க்ரி-ஸரோஜ-கோஷ-
துர்காஷ்ரிதோ நிர்ஜித-ஷட்-ஸபத்ன:
புங்க்க்ஷ்வேஹ போகான் புருஷாதிதிஷ்டான்
விமுக்த-ஸங்க: ப்ரக்ருதிம் பஜஸ்வ

த்வம்—நீ; து—பின்னர்; அப்ஜ-நாப—தாமரைமலர் போன்ற உந்திச் சுழியினையுடைய முழுமுதற் கடவுள்; அங்க்ரி—திருவடிகள்; ஸரோஜ—தாமரைமலர்; கோஷ—துனை; துர்க—பாதுகாப்பு; ஆஷ்ரித:—தஞ்சமடைந்து; நிர்ஜித—வென்று; ஷட்-ஸபத்ன:—ஆறு பகைவர்கள் (மனம் மற்றும் ஐம்புலன்கள்); புங்க்ஷ்வ—மகிழ்தல்; இஹ—இப்பௌதிக உலகில்; போகான்—போகப் பொருட்கள்; புருஷ—பரம புருஷரின்; அதிதிஷ்டான்—சிறப்பாகக் கட்டளையிடப்பட்டு; விமுக்தி—விடுதலை; ஸங்க:—பௌதிகத்தொடர்பிலிருந்து; ப்ரக்ருதிம்—சட்டப் பூர்வமான நிலை; பஜஸ்வ—அனுபவித்தல்.

பிரம்ம தேவன் கூறினார்: ‘அன்பிற்குரிய பிரியவிரதனே! தாமரைமலர் போல் உந்திச் சுழியினையுடைய பகவானின் திருவடித்தாமரையில் தஞ்சமடைக. ஆறு புலனுறுப்புக்களை (மனம் மற்றும் அறிவுப் புலன்கள்) வெல்க! பௌதிக இன்பத்தினை ஏற்றுக் கொள்! ஏனெனில் நீ இதனைச் செய்ய வேண்டுமென்று பகவான் சிறப்புக் கட்டளையிட்டிருக்கிறார். இதன்மூலம் நீ உலகத் தொடர்பிலிருந்து எப்போதும் விடுதலை பெற்றவனாகவும் உனது சட்டப்பூர்வமான நிலையிலிருந்து பகவானின் கட்டளைகளை நிறைவேற்றும் திறனுடையவனாகவும் இருப்பாய்.’

பதம் 5.1.20
ஸ்ரீ-ஷுக உவாச
இதி ஸமபிதோ மஹா-பாகவதோ பகவதஸ் த்ரி-புவன-குரோர்
அனுஷாஸனம் ஆத்மனோ வகுதயாவதை ஷிரோதரோ பாடம்-இதி
ஸபௌ-மானம் உவாஹ

ஸ்ரீ-ஷுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஸமபித:—முற்றிலும் உபதேசிக்கப்பட்டு; மஹா-பாகவத:—சிறந்த பக்தர்; பகவத:—சக்திமிக்க பிரம்மதேவன்; த்ரி-புவன—மூன்று உலகங்களின்; குரோ:—ஆன்மீககுரு; ஆனுஷாஸனம்—கட்டளை; ஆத்மன:—அவரது; வகுதயா—தாழ்நிலை காரணமாக; அவனத—கீழே விழுந்து; ஷிரோதா:—அவரது தலையினை; பாடம்—ஆம், ஐயா; இதி—இவ்வாறு; ஸ-பஹு-மானம்—மிக்க மரியாதையுடன்; உவாஹ—ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: திரி புவனங்களுக்கும் ஆன்மீக குருவாக விளங்கும் ஆற்றல் மிக்க பிரம்மதேவனால் இவ்வாறு உபதேசிக்கப்பட்ட பிரியவிரதன் தனது நிலை தாழ்ந்திருந்தபடியினால் தனது வணக்கத்தைச் செலுத்தி அக்கட்டளையினை ஏற்றுக்கொண்டு மிக்க மரியாதையுடன் அதனை நிறைவேற்றினார்.

பதம் 5.1.21
பகவான் அபி மனுனா யதாவத் உபகால்பிதாபசிதி: ப்ரியவ்ரத- நாரதயோர் அவிஷமம் அபிஸமீ க்ஷமாணயோர் ஆத்மஸம்-அவஸ்தானம்
அவாங்-மனஸம் க்ஷயம் அவ்யவஹ்மம் ப்ரவர்யன்ன அகமத்

பகவான்—சத்திமிக்க பிரம்மதேவன்; அபி—கூட; மனுன—மனுவினால்; யதாவத்—பொருத்தமாக; உபகல்பித-அபசிதி:—வணங்கப்பட்டு; ப்ரியவ்ரத-நாரதயோ—பிரியவிரதன் மற்றும் நாரதர் முன்நிலையில்; அவிஷமம்—வெறுப்பு இன்றி; அபிஸமீ மாணயோ:—பார்த்தனர்; ஆத்மஸம்—அவரது நிலைக்குப் பொருத்தமான; அவஸ்தானம்—அவரது இருப்பிடத்திற்கு; அவாக்-மானஸம்—மனம் வாக்கிற்கு எட்டாத; க்ஷயம்—உலகம்; அவ்யவஹ்ருதம்—சிறப்பாக அமைந்திருக்கும்; ப்ரவர்தயன்—புறப்பட்டு; அகமத்—சென்றார்.

மனு தன்னால் இயன்ற அளவு மரியாதை செய்து பிரம்ம தேவனை வழிபட்டார். பிரியவிரதனும், நாரதரும் கூட எவ்வித கசப்புணர்ச்சியுமின்றி பிரம்ம தேவனைக் கண்டுகொண்டிருந்தனர். பிரியவிரதனை அவரது தந்தையின் விருப்பினை ஏற்றுக் கொள்ளும்படிச் செய்த பின்னர் பிரம்ம தேவன், மனம் வாக்குகளால் வர்ணிக்க முடியாத சிறப்புடைய அவரது இருப்பிடமான சத்தியலோகத்திற்குத் திரும்பிச் சென்றார்.

பதம் 5.1.22
மனுர் அபி பரேணைவம் ப்ரதிஸந்தித-மனோரத:-ஸுரர்ஷி- வராணுமதேனாத்மஜம் அகில-தரா-மண்டல-ஸ்ருதி-குப்தய அஸ்தாப்ய ஸ்வயம் அதி-விஷம-விஷய-விஷ-ஜவாஸயாஷாயா-உபரராம

மனு:—சுயாம்புவ மனு; அபி—கூட; பரேண—பிரம்ம தேவனால்; ஏவம்—இவ்வாறு; ப்ரதிஸர்தித—நிறைவேற்றி; மன:-ரத:—அவரது மனவிருப்பத்தினை; ஸுர-ருஷி-வர—மாமுனிவர் நாரதரின்; அனுமதன—அனுமதியின் பேரில்; ஆத்ம-ஜம்—அவரது மைந்தன்; அகில—பிரபஞ்சம் முழுதும்; தரா-மண்டல—உலகங்களின்; ஸ்திதி—காத்தல்; ருப்தயே—காப்பதற்காக; ஆஸ்தாப்ய—நிலைநாட்டி; ஸ்வயம்—தனிப்பட்ட முறையில்; அதி-விஷம—மிகவும் ஆபத்தான; விஷய—விஷயங்கள்; விஷ—விஷத்தின்; ஜவ-ஆஷய—சமுத்திரம்; ஆஷாயா:—ஆசைகளிலிருந்து; உபாராம்—விடுதலை பெற்றார்.

பிரம்ம தேவனின் துணையினால் சுயாம்புவ மனு தனது விருப்பத்தினை இவ்வாறு நிறைவேற்றிக் கொண்டார். நாரத முனிவரின் அனுமதியுடன் அவர் தனது மைந்தன் பிரியவிரதனை பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உலகங்களையும் காப்பதற்காக ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். சுயாம்புவ மனு இவ்வாறு மிகவும் ஆபத்தான, ஆசைகள் என்னும் நச்சுக் கடலிலிருந்து விடுதலை பெற்றார்.

பதம் 5.1.23
இதிஹ வாவ ஸ ஜகதீ-பதிர்ஈஷ்வரேச்சயாதினிவேஷத-கர்மாதிகாரோ
‘கில-ஜகத்-பந்த த்வம்ஸன பரானுபாவஸ்ய பகவத ஆதி புரஷஸ்யாங்க்ரி
புகலானவரத த்யானாதுபாவனே பரிரந்தித கஷாயாஷயோ ‘வதாதோ ‘பி
மான வர்தனோ மஹதாம் மஹீதலம் அனுஷஷாஸ

இதி—இவ்வாறு; ஹ வாவ—உண்மையில்: ஸ:—அவர்; ஜகதீ-பதி:—பிரபஞ்சச் சக்ரவர்த்தி; ஈஷ்வர-இச்சயா—முழுமுதற்கடவுளின் கட்டளையினால்; அதினிவேஷித—முற்றிலும் ஈடுபட்டு; கர்ம-அதிகார:—பௌதிகச் செயல்கள்; அகில-ஜகத்—பிரபஞ்சம் முழுதும்; பந்த—பந்தம்; த்வம்ஸன—அழிந்து; பர—உன்னதமான; அனு பாவாஸ்ய—அவரது செல்வாக்கு; பகவத:—முழுமுதற்கடவுளின்; ஆதி-புருஷ்ய—ஆதி புருஷன்; அங்க்ரி—தாமரை மலர்மேல்; யுகல—இரண்டு; அனவரத—நிலையான; த்யானா-அனுபாவனே—தியானத்தால்; பரிரந்தித—அழித்து; கஷாய—எல்லா அழுக்குகளையும்; ஆஷய:—அவரது இதயத்தில்; அவதாத:—முற்றிலும் தூய்மையான; அபி—இருந்தபோதிலும்; மான-வர்தன:—மதிப்பளிப்பதற்காக; மஹதாம்—மூத்தோர்களுக்கு; மஹீதவம்—பௌதிக உலகம்; அனுஷஷாஸ—ஆட்சி செய்தார்.

முழுமுதற் கடவுளின் ஆணையினை ஏற்று மகாராஜா பிரியவிரதன் உலகச் செயல்களில் முற்றிலும் ஈடுபட்டிருந்தார் என்ற போதிலும் உலகப் பற்றுக்கள் அனைத்திலுமிருந்து விடுதலை பெறுவதற்குக் காரணமாக இருக்கும் பகவானின் தாமரைத் திருவடிகளை அவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருந்தார். பிரியவிரத மகாராஜா பௌதிக மாசுக்கள் அனைத்திலுமிருந்து விடுதலை பெற்றவராக விளங்கிய போதிலும் தனது முன்னோர்களின் கட்டளைகளை மதிப்பதற்காக அவர் இந்த உலகினை ஆட்சி செய்தார்.

பதம் 5.1.24
அத ச துஹிதரம் ப்ரஜாபதேர் விஷ்வகர்மண உபயேமே
பர்ஹிடஷமதீம் நாம தஸ்யாம் உ ஹ வாவ அத்மஜான் ஆத்ம- ஸமான-
ஷீல – குண -கர்ம -ரூப- வீர்யோதாரான் தஷ பாவயாம் பபூவ கன்யாம்
ச யவீயஸீம் ஊர்ஜஸ்வதீம் நாம

அத—அதன்பின்னர்; ச—மேலும்; துஹிதரம்—புதல்வி; ப்ரஜா-பதே:—மக்கட்தொகையை அதிகரிக்கும் தனிமனிதன் ஒருவர்; விஷ்வகர்மண:—விஷ்வகர்மாவின்; உபயேமே—மணமுடித்து; பர்ஹிஷ்மீதம்—பர்ஹிஷ்மதீ; நாம—பெயரில்; தஸ்யாம்—அவளிடம்; உஹ—போற்றப்படும்; வாவ—அதிசயிக்கத்தக்க; ஆத்ம-ஜான்—புதல்வர்கள்; ஆத்ம-ஸமான—தனக்கு சரிசமமான; ஷீல—நடத்தை; குண—குணம்; கர்ம—செயல்கள்; ரூப—அழகு; வீர்ய—வீரம்; உதாரான்—தயாளகுணம்; தக்ஷ—பத்து; பாவயாம் பபூவ—பெற்றார்; கன்யாம்—புதல்வி; ச—மேலும்; யவீயஷீம்—எல்லோருக்கும் கடைசியாக; ஊர்ஜஸ்வதீம்—ஊர்கஸ்வதீ; நாம—பெயர்.

ஆகையினால் மகாராஜா பிரியவிரதன் பிரஜாபதி விஷ்வகர்மாவின் புதல்வியான பர்ஹிஷ்மதியை மணம் செய்து கொண்டார். அவளிடம் அவர் தனக்கு இணையான அழகு, நடத்தை, பெருந்தன்மை, மற்றும் பிற நற்குணங்களுடைய பத்துப் புதல்வர்களைப் பெற்றெடுத்தார். அவர் கடைசியில் ஊர்சஸ்வதி எனும் ஒரு பெண்மகளையும் பெற்றெடுத்தார்

பதம் 5.1.25
ஆக்னீத்ரேத்மஜிஷ்வ-யஜ்ஞபாஹு-மஹாவிர-ஹிரண்யரேதோ-
க்ருதாப்ருஷ்ட-ஸவன-மேதாதிதி-வீதி ஹோத்ர-கவய இதி ஸர்வ-
ஏவாக்னி-நாமான:

ஆக்னீத்ர—ஆக்னீதரன்; இத்ம-ஜிஹ்வ—இத்மஜிஹ்வன்; யஜ்ஞபாஹு—யக்ஞாபாஹு; மஹா-வீர—மகாவீரன்; ஹிரண்ய-ரே:—இரண்யரேதான்; க்ருத-ப்ருஷ்ட—கிருதபுருஷ்டன்; ஸவன—சவனன்; மேதா-திதி—மேதா திதி; வீதி ஹோத்ர—வீதி ஹோத்திரன்; கவய—கவி; இதி—இவ்வாறு; ஸர்வே—இவையெல்லாம்; ஏவ—உறுதியாக; அக்னி—அக்கினி தெய்வத்தின்; நாமான:—பெயர்களாகும்.

பிரியவிரதனின் பத்துப் புதல்வர்களுக்கும் ஆக்னீதரன், இத்மஜி ஹிவன், யக்ஞபாஹு, மகாவீரன், இரண்யரேதான், கிருதபுருஷ்டன்; சவனன், மோதிதி, விதி ஹோத்திரன் மற்றும் கவி என்று பெயரிடப்பட்டன. இப்பெயர்கள் அனைத்தும் அக்னிதெய்வத்தின் பெயர்களுமாகும்.

பதம் 5.1.26
ஏதேஷாம் கவிர் மஹாவீர:ஸவன இதித்ரய ஆஸன்ன்-ஊர்த்வ-
ரேதஸஸ் த ஆத்ம வித்யாயாம் அர்ப-பாவாத் ஆரப்ய க்ருத-பரிசயா:-
பாரமஹம்ஸ்யம் ஏவாஷ்ரமம் அபஜன்

ஏதேஷாம்—இவர்களுள்; கவி:—கவி; மஹாவீர:—மகாவீரன்;
ஸவன:—சவனன்; இதி—இவ்வாறு; த்ரய—மூவரும்; ஆஸன்—இருந்தனர்; ஊர்த்வ-ரேதஸ:—முற்றிலும் பிரம்ச்சாரிகளாக; தே—அவர்கள்; ஆத்ம-வித்யாயாம்—உன்னத ஞானத்தில்; ஆர்ப-பாவத்—குழந்தைப் பருவத்திலிருந்தே; ஆராப்ய—தொடங்கி; க்ருத-பரிசயா:—தேர்ந்த அறிவுடையவர்களான; பாரமஹம்ஸ்யம்—மனித வாழ்வின் உயர்ந்த ஆன்மீக நிறைவினை; ஏவ—உறுதியாக; ஆஷ்ரமம்—வரிசையில்; அபிஜன்—செய்தனர்.

இப்பதின்மரில் மூவரான கவி, மகாவீரன், சவனன் என்போர் முற்றிலும் பிரம்மச்சாரியத்தினை மேற்கொண்டனர். இவ்வாறு பிரம்மச்சரியத்தினை குழந்தைப் பருவத்திலிருந்தே பயின்றதினால் “பரமஹம்ஸ ஆஷ்ரமம்” என்றும் உயர்நிறைவில் அவர்கள் ஆழ்ந்த ஞானமுடையவர்களாக விளங்கினர்.

பதம் 5.1.27
தஸ்மின்ன் உ ஹ வா உபஷம் ஷீவா: பரமர்ஷய ஸகல- ஜீவ
நிகாயாவாஸஸ்ய பகவதோ வாஸுதேவஸ்ய பீதானாம் ஷரண –
பூதஸ்ய ஸ்ரீமச்- சரணாரவிந்தாவ்ரத- ஸ்மரணாவிகி -பரம -பக்தி –
யோகானு -பாவேன பரிபாவிதாந்தர் ருதயாதிகதே பகவதி ஸர்வேஷாம்
பூதானாம் ஆத்ம -பூதே ப்ரத்யம் -ஆத்மனி ஏவாத்மனங் தாதாத்ம்யம்
அவிஷேஷேண ஸமீயு:

தஸ்மின்—அப் “பரமஹம்ஸ-ஆஷ்ரமத்தில்”; உ—உறுதியாக; ஹ—கொண்டாடப்பட்டு; வா—உண்மையில்; உபஷம்-ஷீலா:—துறவறவாழ்க்கையில்; பரம-ருஷய:—மாமுனிவர்கள்; ஸகல—எல்லாம்; ஜீவ—உயிர்களின்; நிகாய—மொத்தத்தில்; ஆவாஸன்ய—இருப்பிடம்; பகவத:—முழுமுதற் கடவுளின்; வாஸுதேவஸ்ய—பகவான் வாசு தேவர்; பீதானாம்—பௌதிக வாழ்வினைக் கண்டு அஞ்சுவோரின்; ஷரண-பூதஸ்ய—அடைக்கலமாக இருப்பவர் அவர் ஒருவர் மட்டுமே; ஸ்ரீமத்—முழுமுதற்கடவுளின்; சரண–அரவிந்த—தாமரைத் திருவடிகள்; அவிரத—தொடர்ந்து; ஸ்மரண—சிந்தித்து; அவிகவித—முற்றிலும் மாசின்றி; பரம—பரமம்; பக்தி-யோக—தெய்விகப் பக்தித் தொண்டில்; அனுபாவேன—வீரத்தினால்; பரிபாவித—தூய்மையடைந்து; அந்த:—உள்ளே; ஹ்ருதய—இதயம்; அதிகதே—உணர்ந்து; பகவதி—முழுமுதற் கடவுள்; ஸர்வேஷாம்—அனைவரின்; பூதானாம்—உயிர்கள்; ஆத்ம-பூதே—உடலினுள் அமர்ந்து; ப்ரத்யக்—நேரடியாக; ஆத்மனி—உயர்ந்த பரமாத்மாவுடன்; ஏவ—உறுதியாக; ஆத்மன:—தனது; தாதாத்ம்யம்—நிகரான குணம்; அவிஷேஷேண—வேற்றுமைகளின்றி; ஸமீயு:—உணர்தல்.

இவ்வாறு அவர்கள் மூவரும் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே துறவு நிலையில் இருந்து தங்கள் புலன்களின் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தி மாமுனிவர்களாயினார். தத்தம் உள்ளங்களை எப்போதும் முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகளின் மீதே வைத்திருந்தனர். அவர் ஒருவரே அனைத்து உயிர்களுக்கும் புகலிடமாக இருக்கின்றார். அதனால் அவர் வாசுதேவர் என்று போற்றப்படுகின்றார். உலகியல் வாழ்வினைக் கண்டு உண்மையில் அஞ்சுபவர்கள் அவர் ஒருவரே அடைக்கலாமாவார். அவரது தாமரைத் திருவடிகளைத் தொடர்ந்து சிந்தித்ததினால் பிரியவிரத மன்னரின் மூன்று புதல்வர்களும் தூய பக்தித் தொண்டில் முன்னேறியவர்களாயினர். அவர்கள் தனது பக்திதொண்டின் வலிமையினால் அனைவரின் இதயங்களிலும் பரமாத்மாவாக வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளை நேரடியாக உணரும் திறன் பெற்றனர். அவருக்கும் தங்களுக்கும் குணத்தில் எந்த வேறுபாடும் இல்லை என்றும் உணர்ந்தனர்.

பதம் 5.1.28
அன்யஸ்யாம் அபி ஜாயாயாம் த்ரய: புத்ரா ஆஸன்ன் உத்தமஸ்
தாமஸோ னரவத இதி மன்வந்தராதிபதய:

அன்யஸ்யாம்—மற்றொரு; அபி—கூட; ஜாயாயாம்—மனைவியினிடத்தில்; த்ரய:—மூன்று; புத்ரா:—புதல்வர்கள்; ஆஸன்—இருந்தனர்; உத்தம: தாமஸ: ரைவத:—உத்தமன், தாமஸன், ரைவதன்; இதி—இவ்வாறு; மனு-அந்தர—மன்வந்திர யுகம்; அதிபதய:—அரசர்கள்.

பிரியவிரத மன்னன் மற்றொரு மனைவியினிடத்தில் உத்தமன், தாமஸன், ரைவதன் என்னும் மூன்று புதல்வர்களைப் பெற்றெடுத்தார். இவர்கள் அனைவரும் பின்னர் மன்வந்திர யுகங்களின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர்.

பதம் 5.1.29
ஏவம் உபஷமாயனேஷு ஸ்வ—தனயே ஷ்வ அத ஜகதீ-பதில்
ஜகதீம் அர்புதானி ஏகாதஷ பரிவத்ஸரணாம் அவ்யாஹதாகில-புருஷ-
கார-ஸார-ஸம்ப்ருத-தோர்-தண்ட-யுகவாபீடித-மௌர்வீ-குண-
ஸ்தனித-விராமித-தர்ம-ப்ரதிபக்ஷோ பர்ஹிஷ்மத்யாஷ்-சானுதினம்
ஏதமான-ப்ரமோத-ப்ரஸரண-பௌஷின்ய-வ்ரிடா-ப்ரமுஷித-
ஹாஸா-வலோக-ருசிரா-க்ஷ்வேலி-ஆதிபி: பராயூயமான-விவேக
இவானவபுத்யமான இவ மஹாமனா-புபுஜே

ஏவம்—இவ்வாறு; உபஷம-அயனேஷு—எல்லாத் தகுதிகளுமுடைய; ஸ்வ-தனயேஷு—அவரது புதல்வர்கள்; அத—அதன் பிறகு; ஜகதீ-பதி—பிரபஞ்சத் தலைவர்; ஜகதீம்—பிரபஞ்சம்; அற்புதானி—அற்புதங்கள் (ஓர் அற்புதன் என்பது 100,000,000 ஆகும்); ஏதாஷ—பதினொன்று; பரிவத்ஸராணாம—வருடங்கள்; அவ்யாஹத:—எந்த இடையூறுமின்றி; அகில—அகிலம்; புருஷ-கார—வீரம்; ஸார—வலிமை; ஸம்ப்ருத—உடைய; தோ:-தண்ட:—வலிமையுடைய கரங்கள்; யுகல—இரண்டினால்; ஆபீடித—இழுக்கப்பட்டு; மௌர்வீ-குண—வில்லின் நாண்; ஸ்தனித—மிகுந்த ஓசை; விரமித—தோற்கடிக்கப்பட்டு; தர்ம—தர்மங்கள்; ப்ரதிபக்—எதிரிகளாயிருப்பவர்கள்; பர்ஹிஷ்மத்யா:—அவர் மனைவி ப்ரஹிஷ்மதி; ச—மேலும்; அனுதினம்—அனுதினமும்; ஏதமான—அதிகரித்து; ப்ரமோத—இனிமையான உறவு; ப்ரஸரண—காதலுக்குரிய; பௌஷிண்ய—பெண்மைத்தன்மை; வ்ரீடா—நாணத்தினால்; ப்ரமுஷித—தடுக்கப்பட்டு; ஹாஸ—புன்னகை; அவலோக—பார்வை; ருசிர—இனிமையான; க்ஷ்வேலி-ஆதிபி:—காதல் மனப்பாங்கினை, பரிமாறிக் கொள்வதினால்; பராயூயமான—தோற்கடிக்கப்பட்டு; விவேக:—அவருடைய விவேகம்; இவ—போன்று; அவையுத்யமான:—புத்தியில்லாதவன்; இவ—போன்று; மஹா-மனா:—மகாத்மா; புபுஜே—ஆண்டார்.

கவி, மகாவீரன், சவனன் எனும் மூவரும் “பரஹம்ஸ” நிலையில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்னர், மகாராஜா பிரியவிரத மன்னர் இப்பிரபஞ்சத்தினை பதினோரு அற்புத வருடங்கள் ஆட்சி செய்தார். எப்போதெல்லாம் அவர் தனது வலிமை மிக்கக் கரங்களினால் தன்னுடைய வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து நாண் ஏற்றுகிறாரோ அப்போதெல்லாம் சமய தர்மங்களுக்கு எதிராக இருக்கும் அனைவரும் அவர் கண்ணில் படாமல் ஓடிவிடுவர். காரணம் பிரபஞ்சத்தை ஆள்வதில் அவர் தன்னேரில்லாத வீரமுடையவராக விளங்கினார். அவர் தன் மனைவி பர்ஹிஷ்மதியை மிகவும் நேசித்தார். காலம் செல்லச்செல்ல அவர்கள் காதலும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. அரசி பர்ஹிஷமதி, ஆடை அணிமணிகளினால் அலங்கரித்தல், நடத்தல், பார்த்தல், புன்னகைத்தல் போன்ற தனது நளினமிக்கப் பெண்மையினால் அவரது ஆற்றலை அதிகரிக்கச் செய்தார். அவர் ஒரு மகாத்மாவாக இருந்தபோதிலும் தன் மனைவியின் பெண்மையிடத்துத் தன்னை இழந்தவராகவே காணப்பட்டார். அவர் ஒரு சாதாரண மனிதனைப் போலவே தன் மனைவியிடம் நடந்து கொண்டார். ஆயினும் உண்மையில் அவர் ஒரு மகாத்மாவே ஆவார்.

பதம் 5.1.30
யவாத் அவபாஸ்யதி ஸுர-கிரிம் அனுபரிக்ராமன் பகவான்-ஆதித்யோ
வஸுதா-தவம் அர்தேனைவ ப்ரதபதி அர்தேனாவச்சாதயதி-தா ஹி
பகவத்-உபாஸனோபசிதாதி-புருஷ-ப்ராபாவஸ் தத் அனபி-னந்தன்
ஸமஜவேன ரதேன ஜ்யோதிர்மயேன ரஜனீ அபி தினம் கரிஷ்யாமீதி
ஸப்த-க்ருத் வஸ்தரணீம் அனுபர்ய க்ராமத் த்விதீய இவ பதங்க:

யாவத்—நீண்டகாலமாக; அவபாஸ்பதி—ஒளிர்கின்ற; ஸுர-கிரிம்—சுமேடு மலை; அனுபரிக்ராமன்—சுற்றி வருவதினால்; பகவான்—சக்திமிக்க; ஆதித்ய:—சூரியதேவன்; வஸுதா-தவம்—கீழ் உலகம்; அர்தேன—அரைப்பகுதி; ஏவ—நிச்சயமாக; ப்ரதபதி—ஒளியுறச்செய்தல்; அர்தேன—அரைப்பகுதி; அவச்சாதயதி—இருளால் மூடப்பட்டு; ததா—அச்மயம்; ஹி—உறுதியாக; பகவத்-உபாஸனா—முழுமுதற் கடவுளை வணங்குவதினால்; உபசித—அவரை நன்கு திருப்திப்படுத்துவதினால்; ஆதி-புருஷ—உயர்ந்த மனிதர்; ப்ராபவ:—செல்வாக்கு; தத்—அந்த; அனபினந்தன்—பாராட்டாமல்; ஸமஜவேன—இணையான சக்தியினால்; ரதேன—ரதத்தின் மேல்; ஜ்யோபதி:-மயேன—ஜோதி மயமான; ரஜனீம்—இரவு; அபி—கூட; தினம்—தினமும் கரிஷ்யாமி—நான் செய்வேன்; இதி—இவ்வாறு; ஸ்ப்தக்ருத்—ஏழு தடவைகள்; வஸ்தரணிம்—சூரியனின் கோளப் பாதையினை சரியாகப் பின்பற்றி; அனுபர்ய-க்ராமத்—சுற்றிவந்து; த்விதீய:—இரண்டாவது; இவ—போன்று; பதங்க:—சூரியன்.

பிரியவிரத மன்னன் இப்பிரபஞ்சத்தினை நன்கு ஆட்சி செய்து கொண்டிருந்த பொழுது, மிகவும் சக்திமிக்க சூரியதேவனின் சுற்றில் ஒரு முறை மிகுந்த அதிருப்தியடைந்தார். தனது ரதத்தில் அவர் சுமேடு மலையினைச் சுற்றி வந்த பொழுது சூரியதேவன் தன்னைச் சுற்றியுள்ள கிரஹங்களையெல்லாம் ஒளிமயமாக்கிக் கொண்டிருந்தான். ஆயினும் சூரியன் மலையின் வடக்குப் பகுதியில் இருந்த பொழுது அதன் தென்பகுதி ஒளிமங்கி இருந்தது. வடபகுதி ஒளி குறைந்திருந்தது. பிரியவிரத மன்னனுக்கு இது பிடிக்கவில்லை. அதனால் பிரபஞ்சத்தில் இரவில் கூட பகல் ஒளி இருக்க வேண்டுமென்று அவர் தீர்மானித்தார். அவர் சூரியதேவனின் கோளப் பாதையில் ஓர் ஒளிமிக்க ரதத்தில் சுற்றி வந்து தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார். அவரால் இத்தகு வியத்தகு சாதனைகளைச் செய்ய முடிந்தது. ஏனென்றால் அவர் முழுமுதற் கடவுளை வழிபட்டதினால் மிகுந்த ஆற்றலுடன் விளங்கினார்.

பதம் 5.1.31
யே வா உ தத்-ரத-சரண-நேமி-க்ருத-பரிகாதாஸ் தே ஸப்த ஸிந்தவ
ஆஸன் ய ஏவ க்ருதா: ஸப்த புவோ த்வீபா:

யே—அந்த; வா உ ஹ—உறுதியாக; தத்-ரத—அவரது ரதம்; சரண—சக்கரங்களின்; நேமி—வளையங்களினால்; க்ருத—செய்யப்பட்ட; பரிகாதா:—பள்ளம்; தே—அவை; ஸப்த—ஏழு; ஸிந்தவ—சமுத்திரங்கள்; ஆஸன்—ஆனது; யத:—அக்காரணத்தினால்; ஏவ—உறுதியாக; க்ருதா:—செய்யப்பட்டன; ஸப்த—ஏழு; புவ:—பூமண்டலத்தில்; த்வீபா:—தீவுகள்.

பிரியவிரதன் தன்னுடைய இரதத்தினை சூரியனுக்குப் பின்னால் ஒட்டிச் சென்றபொழுது, இரதத்தின் சக்கரங்கள் பதித்த தடங்களிலிருந்து ஏழு சமுத்திரங்கள் தோன்றின. அவை பூமண்டலத்தினை ஏழு தீவுகளாகப் பிரித்தன.

பதம் 5.1.32
ஜம்பூ-ப்லக்ஷ-ஷால்மலி-குஷ-க்ரௌஞ்ச-புஷ்கர ஸம்ஜ்-ஞாஸ்
தேஷாம் பரிமாணம் பூர்வஸ்மத் பூர்வஸ்மத் உத்தர உத்தரோ யதா-
ஸாங்க்யம் த்வி குண-மானேன பஹி: ஸமந்தத உபக்லுப்த:

ஐம்பூ—ஜம்பூ; ப்லக்ஷ—பிலக்ஷ; ஷால்மலி—சால்மலி; குஷ—குஷ; க்ரௌஞ்ச—கிரௌஞ்ச; ஷாக—சாக; புஷ்கர—புஷ்கர; ஸம்ஸ்ஞர:—அறியப்படும்; தேஷாம்—அவற்றின்; பரிமாணம்—அளவு; பூர்வஸ்மாத்-பூர்வஸ்மாத்—முன்னர் இருந்த; உத்தர: உத்தர:—பின்வரும்; யதா—பொருத்து; ஸங்க்யம்—எண்ணிக்கை; த்வி-குண—இருமடங்கு; மானேன—அளவுடன்; பஹி:—வெளியே; ஸமந்தத:—சுற்றியுள்ள; உபகல்பித:—உருவாக்கப்பட்டன.

இத்தீவுகளின் பெயர்கள் ஜம்பூ, பிலக்ஷம், சால்மலி, குஷம், கிரௌஞ்சம், சாகம், புஷ்கரம் என்பவையாகும். அதற்கு முன்பிருந்ததைவிட ஒவ்வொன்றும் இருமடங்கு பெரியதாகும். ஒவ்வொரு தீவும் திரவப் பொருளினால் சூழப்பட்டிருந்தது. அதற்கும் அப்பால் அடுத்த தீவு இருந்தது.

பதம் 5.1.33
க்ஷாரோதேக்ஷு-ரஸோத-ஸுரோத-க்ருடோத-க்ஷுரோத-
ததி-மண்டோத-ஷுத்தோதா: ஸப்த-ஜலதய: ஸப்த த்வீப-பரிகா
இவாப்யந்தர-த்வீப-ஸமானா ஏகைகஷ்-யேன யதானுபூர்வம் ஸப்தஸ்வ
அபி பஹிர் த்விபேஷு ப்ருதக் பரித உபகல்பிதாஸ் தேஷு ஜம்ப்வ-அதிஷு
பர்ஹிஷ்மதீ-பதிர் அனுவ்ரதானாத்மஜான் ஆக்னீத்ரேத்ம-ஜிஹ்வ-
யஜ்ஞபாஹு-ஹிரண்யரேதோ க்ருதப்ருஷ்ட-மேதாதிதி வீதிஹோத்ர-
ஸம்ஜ்ஞான் யதா-ஸங்க்யேனனகை கஸ்மின்ன் ஏகம் ஏவாதி-பதிம் விததே.

க்ஷர—உப்பு; உத—தண்ணீர்; இக்ஷு-ரஸ—கரும்புச்சாறு; உத—தண்ணீர்; ஸுரா—மது; உத—தண்ணீர்; க்ருத—வெண்ணெய்; உத—தண்ணீர்; க்ஷுர—பால்; உத—தண்ணீர்; ததி-மண்ட—தயிர்; உத—தண்ணீர்; ஷுத்த-உதா:—குடி தண்ணீர்; ஸப்த—ஏழு; ஜல-தய:—சமுத்திரங்கள்; ஸப்த—ஏழு; த்வீப—தீவுகள்; பரிகா:—பள்ளங்கள்; இவ—போன்று; அப்யந்தர—உள்ளே; த்வீப—தீவுகள்; ஸமானா:—சமமாக; ஏக-ஏகஷ்யேன—ஒன்றையடுத்து மற்றொன்று; யதா-அனுபூர்வம்—கால வரிசைப்படி; ஸப்தஸு—ஏழு; அபி—இருந்த போதிலும்; பஹி:—வெளியே; த்வீபேஷு—தீவுகளில்; ப்ருதக்—பிரிந்து; பரித:—சுற்றிலும்; உபகல்பித—இருந்தன; தேஷு—அவற்றினுள்; ஜம்பூ-அதிஷு—ஜம்பூ தொடங்கி; பர்ஹிஷ்மதீ—பர்ஹிஷ்மதியின்; பதி:—கணவர்; அனுவ்ரதான்—தந்தையின் கொள்கைகளை உண்மையில் பின்பற்றுபவர்கள்; ஆத்ம-ஜான்—புதல்வர்கள்; ஆக்னீத்ர-இத்ம ஜிஹ்வ-யஜ்ஞபாஹு ஹிரண்யரேத:-க்ருத -ப்ருஷ்ட-மேதாதிதி -வீதிஹோத்ர -ஸம்ஜ்ஞான்—ஆக்னிதரன், இத்மஜீஹ்வன், யக்ஞபாஹு, இரண்யரேதன், கிருதப் புருஷ்டன், மேதாதிதி, வீதிஹோத்திரன் என்னும் பெயருடையவர்கள்; யதா-ஸங்க்யேன—அதே எண்ணிக்கையினால்; ஏக-ஏகஸ்மின்—ஒவ்வொரு தீவிலும்; ஏகம்—ஒருவர்; ஏவ—உறுதியாக; அதி-பதிம்—அதிபதியாக; விததே—அவர் நியமித்தார்.

ஏழு கடல்களும், உப்பு, கரும்புச்சாறு, மது, வெண்ணெய், பால், தயிர் மற்றும் இனிய குடிநீர் சம அளவில் கலந்தவையாக இருந்தன. இத்தீவுகள் அனைத்தும் இக்கடல்களினால் சூழப்பட்டிருந்தன. ஒவ்வொரு கடலும் தான் சூழ்ந்துள்ள தீவின் அகலத்தினை உடையதாக இருந்தது. மகாராணி பர்ஹிஷ்மதியின் கணவரான பிரியவிரத மன்னர் இத்தீவுகளை ஆளும் உரிமையினைத் தன் புதல்வர்களான அக்னீதரன், இத்மஜிஹ்வன், யக்ஞபாஹு, இரண்யரேதன், கிருதப்புருஷ்டன், மேதாதிதி மற்றும் விதிஹோத்திரன் என்பவர்களுக்கு அளித்தார். இவ்வாறு இவர்கள் அனைவரும் தங்கள் தந்தையினால் மன்னர்களாக்கப்பட்டனர்.

பதம் 5.1.34
துஹிதரம் சோர்ஜஸ்வதீம் நாமோஷனஸே ப்ராயச் சத் யஸ்யாம் ஆஸீத்
தேவயானீ நாம காவ்ய-ஸுதா.

துஹிதரம்—புதல்வி; ச—மேலும்; ஊர்ஜஸ்வதீம்—ஊர்ஜஸ்வதீ; நாம்—பெயர்; உஷனஸே—மாமுனிவர் உஷனே (சுக்கிராச்சாரியார்); ப்ராயச்சத்—அவர் அளித்தார்; யஸ்யாம்—அவருக்கு; ஆஸுத்—அங்கே இருந்தாள்; தேவயானீ—தேவயானீ; நாம—பெயர்; காவ்ய-ஸுதா— சுக்கிராச்சாரியாரின் புதல்வி.

மன்னர் பிரியவிரதன் தன் புதல்வி ஊர்ஜஸ்வதியை சுக்கிராச்சாரியாருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவளிடம் சுக்கிராச்சாரியார் தேவயானீ என்னும் புதல்வியைப் பெற்றெடுத்தார்.

பதம் 5.1.35
நைவம்-வித: புருஷ-கார உருக்ரமஸ்ய
பும்ஸாம் தத் -அங்க்ரி-ரஜஸா ஜித ஷட்-குணானாம்
சித்ரம் விதூர-விகத: ஸக்ருத் ஆததீத
யன் நாம தேயம் அதுனா ஸ ஜஹாதி பந்தம்

ந—இல்லை; ஏவம்-வித:—அதுபோல்; புருஷ-கார—தனிப்பட்ட செல்வாக்கு; உரு-க்ரமஸ்ய—முழுமுதற் கடவுளின்; பும்ஸாம்—பக்தர்களின்; தத்-அங்க்ரி—அவரது தாமரைத் திருவடிகளின்; ரஜஸா—தூசியினால்; ஜித-ஷட் குணானாம்—ஆறு வகையான பௌதிகக் குணங்களின் செல்வாக்கினை வென்று; சித்ரம்—விந்தையான; விதூர-விகத:—பஞ்சமன் அல்லது தீண்டத்தகாதவன்; ஸக்ருத்—ஒரே ஒரு தடவை; அததீத—அவள் உச்சரித்தால்; யத்—அவனது; நாமதேயம்—புனித நாமம்; அதுனா—உடனடியாக; ஸ:—அவர்; ஜஹாதி—துறத்தல்; பந்தம்—பெளதிகப் பந்தம்.

அன்பிற்குரிய மன்னனே, இறைவனது தாமரைத் திருவடிகளின் தூசியினைச் சரணடைந்தவன் ஆறுவகைப் பௌதீகக் குணங்களான பசி, தாகம், சோகம், மோகம், மூப்பு, மரணம் போன்றவற்றைக் கடந்த மனம் மற்றும் ஐம்புலன்களையும் வெல்லக் கூடியவனாகிறான். ஆயினும் பகவானின் தூய பக்தனுக்கு இது ஒன்றும் வியப்பானது அன்று. ஏனெனில் நான்கு வர்ணங்களின் எல்லைக்குள் வராத பஞ்சமன் அதாவது தீண்டத்தகாதவன் கூட பகவானின் புனித நாமத்தினை ஒரே ஒரு முறை உச்சரித்தான் என்றால் உடனடியாக அவன் உலக வாழ்க்கை என்னும் பிணிப்பிலிருந்து விடுதலை பெறுகிறான்.

பதம் 5.1.36
ஏவம் அபரிமித -பல-பராக்ரம ஏகதா து தேவர்ஷி-சரணானு
ஷயனானு-பகித-குண-விஸர்க-ஸம்ஸர் கேணானிர்-வ்ருதம் இவாத்
மானம் மன்யமான ஆத்ம-நிர்வேத இதம் ஆஹ

ஸ:—அவர்; (மகாராஜா பிரியவிரதன்); ஏவம்—இவ்வாறு; அபிரிமித—அபிரிமிதமாக; பல—பலம்; பராக்ரம—அவரது பராக்கிரமம்; ஏகதா—முன்னொரு காலத்தில்; து—பிறகு; தேவ-ர்ஷி—மாமுனிவர் நாரதர்; சரண-அனுஷயன—தாமரைத் திருவடிகளைச் சரணடைந்து; அனு—அதன்பிறகு; பதித—கீழே விழுந்து; குண-விஸர்க—உலக விஷயங்களுடன் (ஜட இயற்கையின் முக்குணங்களினால் உண்டாக்கப்பட்ட); ஸம்ஸர்கேண— தொடர்பினால்; அனிர்வ்ருதம்—திருப்தியடையாமல்; இவ—போன்று; ஆத்மானம்—தனது; மன்யமான:—அதுபோல் எண்ணி; ஆத்ம—தனது; நிர்வேத:—துறவறமுடைய; இதம்—இது; ஆஹ—கூறினார்.

அவர் தனது உலகச் செல்வங்களை முழுக்கத் துய்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் பிரியவிரத மன்னன் மாமுனிவர் நாரதரைத் தான் முற்றிலும் சரணடைந்து, கிருஷ்ண உணர்வுப் பாதையில் உண்மையில் இருந்த போதும், எவ்வாறோ மீண்டும் உலகியல் சிக்கல்களில் சிக்கிக் கொண்டேனே என்று சிந்திக்கத் தொடங்கினார். இதனால் அவர் மனம் நிம்மதி இழந்து அவர் முற்றும் துறந்த உணர்ச்சியில் பேசத் தொடங்கினார்.

பதம் 5.1.37
அஹோ அஸாத்வ அனுஷ்டிதம் யத் அபினிவேஷிதோ ‘ஹம்
இந்த்ரியைர் அவித்யா-ரசிதவிஷம-விஷயாந்த-கூபே தத் அலம்
அலம் அமுஷ்யா வனிதாயா வினோதம்ருகம் மாம் திக் திக் இதி கர்ஹயாம் சகார

அஹோ—அந்தோ; அஸாத்வ—நன்மையில்லை; அனுஷ்டிதம்—செய்வது; யத்—ஏனென்றால்; அபினி வேஷித:—முற்றிலும் ஆழ்ந்து; அஹம்—நான்; இந்த்ரியை:—புலனுகர்ச்சிக்காக; அவித்யா—அறியாமையினால்; ரசித—செய்தல்; விஷம—துன்பத்திற்குக் காரணம்; விஷய—புலனுகர்ச்சி; அந்த-கூபே—பாழுங்கிணறு; தத்—அது; அலம்— முக்கியமற்ற; அலம்—முக்கியத்துவம் இல்லாதது; அமுஷ்யா:—அதன்; வனிதாயா:—மனைவி; வினோத-ம்ருகம்—கூத்தாடும் குரங்கினைப்போல்; மாம்—எனக்கு; திக்—அனைத்துக் கண்டனங்களும்; திக்—அனைத்துக் கண்டனங்களும்; இதி—இவ்வாறு; கர்ஷயாம்—குறைகூறல்; சகார—அவர் செய்தது.

மன்னர் இவ்வாறு தன்னையே தனக்குள் குறை கூறிக் கொண்டார். அந்தோ, என்னுடைய புலனுகர்ச்சியின் காரணமாக நான் எத்துணைக் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறேன். நான் இப்போது உலக இன்பம் என்னும் பாழுங்கிணற்றினுள் வீழ்ந்திருக்கின்றேன். நான் பட்டதெல்லாம் போதும்; இனியும் நான் இதனை அனுபவிக்கப் போவதில்லை. என் மனைவியின் கையில் ஆடும் குரங்கினைப் போல் நான் எப்படி ஆகிவிட்டேன் என்று பார். இதுபற்றியே நான் கண்டிக்கப்படுகிறேன்.

பதம் 5.1.38
பர-தேவதா-ப்ரஸாதாதிகதாத்ம-ப்ரத்யவமர்ஷேனானுப்ர-
வ்ருத்தேப்ய: புத்ரேப்ய இமாம் யதா-தாயம் விபஜ்ய புக்த-போகாம்
ச மஹிஷீம் ம்ருதகம் ஸஹ மஹா-விபுதிம் அபஹாய ஸ்வயம் நிஹித
நிர்வேதோ ஹ்ருதி க்ருஹீத-ஹரி-விஹாரானுபாவோ பகவதோ
நாரதஸ்ய பதவீம் புனர் ஏவானுஸஸார

பர-தேவதா—முழுமுதற்கடவுளின்; ப்ரஸாத—கருணையினால்; அதிகதா—எய்தப்பெற்று; ஆத்ம-ப்ரத்யவமர்ஷேன—தன்னுணர்வினால்; அனுப்ர-வ்ருத்தேப்ய:—அவர் பாதையினைச் சரியாகப் பின் பற்றி; புத்ரேப்ய:—அவருடைய புத்திரர்களுக்கு; இமாம்—இப்பூமி; யதா-தாயம்—வாரிசு உரிமைக்கேற்ப; விபஜ்ய—பிரித்து; புக்த-போகாம்—பல்வேறு வழிகளில் அவர் அனுபவித்த அவளை; ச—மேலும்; மாஹிஷீம்—மகாராணி; ம்ருதகம் இவ—பிணத்தினைப் போல்; ஹை—உடன்; மஹா-விபூதிம்—சிறந்த வளம்; அபஹாய்—விட்டுவிடுதல்; ஸ்வயம்—அவரது; நிஹித—சரியாக மேற்கொண்டு; நிர்வேத:—துறவு; ஷ்ருத—இதயத்தில்; க்ருஹீத—ஏற்றுக்கொண்டு; ஹரி—முழுமுதற்கடவுளின்; விஹார—லீலைகள்; அனுபாவ:—இதுபோன்ற மனப்பான்மையில்; பகவத:—மாமுனிவரின்; நாரதஸ்ய—நாரத முனிவரின்; பதவீம்—நிலையினை; புன:—மீண்டும்; ஏவ—உறுதியாக; அனுஸஸார—பின்பற்றத் தொடங்கினார்.

முழுமுதற்கடவுளின் அருளினால் பிரியவிரத மன்னன் தன்னுடைய சுய உணர்விற்கு மீண்டும் வந்தார். அவர் தனது செல்வங்கள் அனைத்தையும் தன் மைந்தர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அவர் யாரிடம் புலனுகர்ச்சியை அதிகமாகத் துய்த்து மகிழ்ந்தாரோ அந்த மனைவி மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆட்சி போன்ற அனைத்தையும் துறந்தார். எல்லாப் பற்றுக்களையும் நீங்கி முற்றிலும் துறவியானார். அவரது இதயம் தூய்மையடைந்தவுடன், முழுமுதற் கடவுளின் திருவிளையாடலுக்கான இடமாக அது மாறியது. இவ்வாறு அவரால் ஆன்மீக வாழ்க்கையென்னும் கிருஷ்ண உணர்வுப் பாதைக்குத் திரும்பி வர முடிந்தது. மேலும் நாரத முனிவரின் கருணையினால் தான் ஏற்கனவே எய்தியிருந்த நிலையினையும் அவரால் மீண்டும் அடைய முடிந்தது.

பதம் 5.1.39
தஸ்ய ஹ வா ஏதே ஷ்லோகா:
ப்ரியவ்ரத-க்ருதம் கர்ம கோ நு குர்யத் வினேஷ்வரம்
யோ நேமி-நிம்னைர் அகரோச் சாயாம் க்னன் ஸப்த வாரிதீன்

தஸ்ய—அவரது; ஹ-வா—உறுதியாக; ஏதோ—இவையெல்லாம்; ஷ்லோகா—சுலோகங்கள்; ப்ரியவ்ரத—மன்னர் பிரியவிரதனால்; க்ருதம்—செய்யப்பட்ட; கர்ம—செயல்கள்; க—யார்; நு—பின்னர்; குர்யாத்—செய்யக் கூடும்; வினா—இன்றி; ஈஷ்வரம்—முழுமுதற் கடவுள்; ய:—அவர்; நேமி—அவரது ரதத்தின் சக்கரத்திலுள்ள வளையங்களினால்; நிம்னை:—அழுத்தினால்; அகரோத்—செய்தார்; சாயாம்—இருளினை; க்னன்—நீக்கினார்; ஸப்த—ஏழு; வாரதீன்—கடல்கள்.

பிரியவிரதனின் மன்னன் செயல்களைப் பற்றிய சுலோகங்கள் ஏராளமாக இருக்கின்றன:
“பிரியவிரத மன்னன் செய்ததை முழுமுதற் கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. மகாராஜா பிரியவிரதன் இரவின் இருளை நீக்கினார். அவர் தனது இரதத்தின் சக்கரங்களினால் ஏழு கடல்களை உண்டாக்கினார்”.

பதம்5.1.40
பூ-ஸம்ஸ்தானம் க்ருதம் யேன ஸரித்-கிரி-வனாதிபி:
ஸீமா ச பூத-நிர்வ்ருத்யை த்வீபே த்வீபே விபாகஷ:

பூ-ஸம்ஸ்தானம்—பூமியின் இருப்பினை; க்ருதம்—செய்யப்பட்டது; யேன—அவரால்; ஸரித்—நதிகளின்; கிரி—மலைகளினால்; வனஆதிபி:—காடுகள் போன்றவற்றினால்; ஸீமா—எல்லைகள்; ச—மேலும்; பூத—பல்வேறு நாடுகளின்; நிர்வ்ரதயை—சண்டையினை நிறுத்துவதற்கு; த்வீபே த்வீபே—பல்வேறு தீவுகளின் மீது; விபாகஷ:—தனியே.

“பல்வேறு மக்களிடையே நிலவிய சண்டை சச்சரவுகளை நிறுத்துவதற்காக பிரியவிரத மன்னன் நதிகள், மலைகள், வனங்களுக்கிடையே எல்லைகளை உண்டாக்கினார். அதன்பின்னர் ஒருவர் சொத்தின்மீது மற்றொருவர் சொந்தங் கொண்டாட முடியாது போயிற்று”.

பதம் 5.1.41
பெளமம் திவ்யம் மானுஷம் ச மஹித்வம் கர்ம-யோகஜம்
யஷ் கச்ரே நிரயௌ பம்யம் புருஷானுஜன-ப்ரிய

பெளமம்—கீழுலகங்கள்; திவ்யம்—மேலுலகம்; மானுஷம்— மனிதர்களின்; ச—மேலும்; மஹித்வம்—எல்லா வளங்களும்; கர்ம—பலன் தரும் செயல்களினால்; யோக—யோகசக்தியினால்; ஜம்—பிறந்து; ய—ஒருவன்; சக்ரே—செய்தல்; நிரய—நரகத்துடன்; ஒள பம்யம்—ஒப்பிடல் அல்லது சமம்; புருஷ—முழுமுதற்கடவுளின்; அனுஜா—பக்தனுக்கு; ப்ரிய:—மிகவும் பிரியமானவர்.

“மாமுனிவர் நாரதரின் சிறந்த அடியவரும் சிறந்த பக்தருமான பிரியவிரத மன்னன் மேல் உலகிலோ கீழ் உலகிலோ அல்லது மனிதர்கள் வாழும் பூமியிலோ பலன் தரும் செயல்களின் மூலம் தான் எய்திய வளங்கள் அனைத்தையும் நரகத்திற்குச் சமமாகவே கருதினார்.


ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “மகாராஜா பிரியவிரதனின் செயல்கள்” எனும் தலைப்பை கொண்ட ஒன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare