அத்தியாயம் – 19
ஜம்புத்வீபம் பற்றிய ஓர் விளக்கம்
பதம் 5.19.1
ஸ்ரீ சுக உவாச
கிம்புருஷ வர்ஷே பகவந்தம் ஆதி-புருஷம் லக்ஷ்மணாக்ரஜம் ஸீதா
பிராமம் ராமம் தச்-சரண-ஸன்னிகர்ஷாபிரத பரம பாகவதோ ஹனுமான்
ஹை கிம்புருஷைர் அவிரத-பக்திர் உபாஸ்தே

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; கிம்புருஷேவர்ஷே—கிம்புருஷவர்ஷம் என்னும் நிலப்பகுதி; பகவந்தம்—முழுமுதற் கடவுள்; ஆதி-புருஷம்—காரணங்கள் அனைத்திற்கும் மூலகாரணர்; லக்ஷ்மண-அக்ர-ஜம்—இலக்குவனின் மூத்த சகோதரர்; ஸுதாஅபிராமம்—அன்னை சீதாதேவிக்கு அவர் மிகவும் இனியவர் அல்லது சீதாதேவியின் கணவர்; ராமம்—பகவான் இராமச்சந்திரமூர்த்தி; தத்-சரண-ஸன்னி-கர்ஷஅபிரத:—பகவான் இராமச்சந்திர மூர்த்தியின் திருவடித்தாமரைகளின் தொண்டில் எப்போதும் ஈடுபட்டிருப்பவர்; பரம-பாகவத:—பிரபஞ்சமெங்கணும் போற்றப்படும் பரமபக்தர்; ஹனுமான்—தெய்வத்திற்கு அனுமன் அவர்கள்; ஸஹ—உடன்; கிம்புருஷை:—கிம்புருஷம் என்னும் நிலப்பகுதி; அவிரத—தொடர்ந்து; பக்தி:—பக்தித் தொண்டினை உடையவர்; உபாஸ்தே—வழிபடுகிறார்.

ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார் அன்பார்ந்த மன்னனே, கிம்புருஷ-வர்ஷத்தில் பரம பக்தரான அனுமன், அங்கு வாழும் மக்களுடன் சேர்ந்து எப்போதும் இலக்குவனின் மூத்த சகோதரரும், அன்னை சீதாதேவியின் அருமைக் கணவருமான பகவான் இராமச்சந்திர மூர்த்தியின் பக்தித் தொண்டில் எப்போதும் ஈடுபட்டிருக்கிறார்.

பதம் 5.19.2
ஆர்ஷ்டிஷேணேன ஸஹ கந்தர்வைர் அனுகீயமானாம் பரம-
கர்யாணீம் பர்த்ரு-பகவத்-கதாம் ஸமுபஸ்ருணோதி ஸ்வயம் சேதம்
காயதி

ஆர்ஷ்டி-ஸேணேன—கிம்புருஷ வர்ஷத்தின் அரசரான ஆர்ஷிஷேனர்; ஸஹ—உடன்; கந்தர்வை:—கந்தர்வர்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர்; அனுகீயமானாம்—ஒதி; பரம-கல்யாணீம்—மிகுந்த மங்களம்; பர்த்ரு-பகவத்-கதாம்—முழுமுதற் கடவுளான தனது தலைவரின் பெருமைகள்; ஸமுபஸ்ருணோதி—அவர் மிக்க கவனத்துடன் கேட்கிறார்; ஸ்வயம் ச—தனிப்பட்ட முறையில்; இதம்—இந்த; காயதி—ஒதுதல்.

கந்தர்வர்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் எப்போதும் பகவான் இராமச்சந்திர மூர்த்தியின் பெருமைகளை ஒதிக் கொண்டிருப்பார். இவ்வாறு ஒதுவது எப்போதும் மங்களகரமானதாக இருக்கும். அனுமனும், கிம்புருஷ வர்ஷத்தின் தலைவரான ஆர்ஷ்டிசேனன் என்பவரும் தொடர்ந்து அப்பெருமைகளை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டிருப்பர். அனுமன் பின்வரும் மந்திரங்களை ஒதுகிறார்.

பதம் 5.19.3
ஓம் நமோ பகவதே உத்தமஸ்லோகாய நம ஆர்ய-லக்ஷண-ஸீல-
விரதாய நம உபஸிக்ஷிதாத்மன உபஸித-லோகாய நம: ஸாது-வாத
நிகஷணாய நமோ ப்ரஹ்மண்ய-தேவாய மஹா-புருஷாய மஹா ராஜாய
நம இதி

ஒம்—ஒ, எந்தன் பகவானே; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; உத்தம-ஸ்லோ-காய—அவர் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்டப் பண்களினால் வழிபடப்படுபவர்; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; ஆர்ய-லக்ஷண-ஸீல-வ்ரதாய—சிறந்த மகான்களின் நற்குணங்கள் அனைத்தும் தன்னிடம் வாய்க்கப் பெற்றவர்; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; உபஸிக்ஷித-ஆத்மனே—புலன்களை அடக்கியாளும் உமக்கு; உபாஸித-லோகாய—பல்வேறு வகையான உயிர்வாழிகளால் அவர் எப்போதும் நினைக்கப்படுகிறார், வழிபடப்படுகிறார்; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; ஸாது-வாத-நிகஷணாய—சாதுக்களின் நற்குணங்களை உரசிப்பார்க்கும் உரைகல் போன்றவர்; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; ப்ரஹ்மண்ய-தேவாய—தகுதிவாய்ந்த உயர்ந்த அந்தணர்களால் அவர் வழிபடப்படுகிறார்; மஹா-புருஷாய—பௌதீகப் படைப்பிற்கு அவர் காரணர் ஆதலினால் “புருஷ-ஸுக்தத்தினால் வழிபடப்படும் பரம புருஷ பகவானுக்கு; மஹா-ராஜாய—மகாராஜாவிற்கு அல்லது மன்னர் மன்னருக்கு; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; இதி—இவ்வாறு.

ஓம்கார பீஜ மந்திரத்தை ஒதுவதினால் எந்தன் பகவானே, நான் உம்மை மகிழ்ச்சியடையச் செய்வேனாக. உயர்ந்த மகான்களுக்கிடையில் மிக உயர்ந்தவராக விளங்கும் முழுமுதற் கடவுளுக்கு எனது மகிழ்ச்சிக்குரிய வந்தனங்கள் உரியதாகும். மேலாண்மை மிக்கத் தாங்களே ஆரியர்களின் அதாவது நாகரீக வளர்ச்சி பெற்றவர்களின் நற்குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமாக விளங்குகின்றீர். உமது தன்மையும், நடத்தையும் எப்போதும் நிலையானவையாகும். மேலும் நீர் எப்போதும் மனம் மற்றும் புலன்களை அடக்கியவரும் ஆவீர். எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கு பிறருக்கு நீர் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றீர். தங்கத்தை உரசிப்பார்த்து அதன் தரத்தைச் சொல்வதற்கு ஒர் உரைகல் உண்டு ஆனால் நீரோ நற்குணங்கள் அனைத்தையும் உரசிப்பார்க்கும் உரைகல் ஆவீர். பக்தர்கள் அனைவரிலும் மிகச் சிறந்த அந்தணர்களால் நீர் வழிபடப்படுகின்றீர். பரமபுருஷரான நீர் ஒருவரே மன்னர்களுக்கெல்லாம் மன்னர் ஆவீர். அதனால் நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்

பதம் 5.19.4
யத் தத் விஷுத்தானுபவ-மாத்ரம் ஏகம்
ஸ்வ-தேஜஸா த்வஸ்த-குண-வ்யவஸ்தம்
ப்ரத்யக் ப்ரஸாந்தம் ஸுதியோபலம் பனம்
ஹி அநாம-ரூபம் நிரஹம் ப்ரபத்யே

யத்—அது; தத்—அப்பரம மெய்ப்பொருளுக்கு; விஸுத்த—ஜடஇயற்கையில் மாசுபடாது உன்னதத் தூய்மையான; அனுபவ—அனுபவம்; மாத்ரம்—அந்த சச்-சித்-ஆனந்த உடல்; ஏகம்—ஒன்றே; ஸ்வ-தேஜஸா—அவரது சுய ஆன்மீகச் சக்தியினால்; த்வஸ்த—வெல்லப்பட்டது; குண-வ்யவஸ்தம்—ஜட இயற்கைக் குணங்களின் பாதிப்பு; ப்ரத்யக்—பௌதீக விழிகளினால் காணமுடியாத உன்னதமானது; ப்ரஸாந்தம்—பௌதீகக் கிளர்ச்சியினால் இடையூறு செய்யப்படாதது; ஸுதியா—கிருஷ்ண உணர்வினால் அல்லது பெளதீக ஆசைகள், பலன்தரும் செயல்கள், யூகத்தத்துவங்களினால் மாசுபெறாத தூய்மை உணர்வு; உபலம்பனம்—அவரால் அடையக்கூடியது; ஹி—உண்மையில்; அநாம-ரூபம்—பௌதீக நாமமும், உருவமும் இன்றி; நிரஹம்—பௌதீக ஆணவம் இன்றி; ப்ரபத்யே—எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கவிடுவீராக.

ஜட இயற்கைக் குணங்களினால் மாசுபெறாத பகவானின் தூய வடிவம் (சச்-சித்-ஆனந்த-விக்ரஹம்) தூய உணர்வின் மூலமே உணரக்கூடியதாகும். வேதாந்தத்தில் அவர் இரண்டற்ற ஒருவரே என்று குறிப்பிடப்படுகிறார், அவரது ஆன்மீகச் சக்தியின் காரணமாக ஜட இயற்கையின் மாசினால் அவர் தொடமுடியாதவராக இருக்கிறார். பௌதீகப் பார்வைக்கு அவர் ஆளாகாத காரணத்தினால் அவர் உன்னதமானவர் என்று அறியப்படுகிறார். அவருக்குப் பௌதீகச் செயல்களும் இல்லை. அதுபோல் பௌதீக உருவமும், நாமமும் அவருக்கு இல்லை. தூய உணர்வான கிருஷ்ண உணர்வினால் மட்டுமே பகவானின் உன்னத வடிவத்தை ஒருவனால் உணரமுடியும். பகவான் இராமச்சந்திர மூர்த்தியின் தாமரைத் திருவடிகளில் நாம் நிலைநிற்போமாக, மேலும் அவ்வுன்னதத் தாமரைத் திருவடிகளுக்கு நாம் நமது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிப்போமாக.

பதம் 5.19.5
மர்த்யாவதாரஸ் த்வ இஹ மர்த்ய-ஸிக்ஷணம்
ரக்ஷோ-வதாயவ ந கேவலம் விபோ:
குதோ ‘ன்யதா ஸ்யாத் ரமத ஸ்வ ஆத்மன:
ஸீதா-க்ருதானி வ்யஸனானீஸ்வரஸ்ய

மர்த்ய—ஒரு மனிதனாக; அவதார:—அவரது அவதாரம்; து—எவ்வாறேனும்; இஹ—இப்பௌதீக உலகில்; மர்த்ய-ஸிக்ஷணம்—எல்லா உயிர்வாழிகளுக்கும் குறிப்பாக மனிதர்களுக்குக் கற்பிப்பதற்காக; ரக்ஷ:-வதாய—இராவணன் என்னும் அரக்கனைக் கொல்வதற்காக; ந—இல்லை; கேவலம்—மட்டும்; விபோ:—பரம புருஷ பகவானின்; குத:—எங்கிருந்து; அன்யதா—இல்லையேல்; ஸ்யாத்—இருப்பது; ரமதி:—அனுபவிக்கும் ஒருவரின்; ஸ்வே—அவருக்குள்ளே; ஆத்மன:—பிரபஞ்சத்தின் ஆன்மீக அடையாளம்; ஸீதா—பகவான் இராமச்சந்திரனின் மனைவி சீதை; க்ருதானி—பிரிவின் காரணமாகத் தோன்றுவது; வ்யஸனானி—எல்லாத் துன்பங்களும்; ஈஸ்வரஸ்ய—முழுமுதற் கடவுளின்.

அரக்கர்களின் தலைவனான இராவணன், மனிதனைத் தவிர வேறு எவராலும் கொல்லப்பட முடியாதவன் என்று ஆணையிடப்பட்டிருந்தது. இக்காரணத்தினாலேயே முழுமுதற் கடவுளான பகவான் இராமச்சந்திர மூர்த்தி ஒரு மனிதனாக வடிவம் எடுத்து வந்தார். பகவான் இராமச்சந்திர மூர்த்தியின் வருகை இராவணனைக் கொல்வதற்காக மட்டுமன்று. அழிகின்ற உடலை உடைய மனிதர்களுக்குப் பாலியலை அடிப்படையாகக் கொண்ட பௌதீக இன்பம் அல்லது ஒருவனின் மனைவியை மையமாகக் கொண்ட பௌதீக இன்பம் பல துன்பங்களுக்குக் காரணமாகிறது என்று உபதேசிப்பதற்காகவும்தான். பகவான் இராமச்சந்திரமூர்த்தி சுய நிறைவுடைய முழுமுதற் கடவுள் ஆவார். அவருக்குத் துக்கமளிக்கக் கூடியது எதுவுமில்லை. ஆகையினால் அன்னை சீதையை அபகரித்துச் சென்றதற்காக அவர் ஏன் துன்பத்திற்கு ஆளாகப் போகிறார்?

பதம் 5.19.6
ந வை ஸ ஆத்மாத்மவதாம் ஸுஹ்ருத்தம:
ஸக்தஸ் த்ரி-லோக்யாம் பகவான் வாஸுதேவ:
ந ஸ்த்ரீ-க்ருதம் கஸ்மலம் அஸ்னுவீத
ந லஷ்மணம் சாபி விஹாதும் அர்ஹதி

ந—இல்லை; வை—உண்மையில்; ஸ:—அவர்; ஆத்மா—பரமாத்மா; ஆத்மவதாம்—விடுதலை பெற்ற ஆத்மாக்கள்; ஸுஹ்ருத்-தம—சிறந்த நண்பர்; ஸக்த:—பற்றுவைத்தல்; த்ரிலோக்யாம்—இம்மூவுலகங்களில் உள்ள எவற்றின் மீதும்; பகவான்—முழுமுதற் கடவுள்; வாஸுதேவ:—எங்கும் வியாபித்திருக்கும் பகவான்; ந—இல்லை; ஸ்த்ரீ-க்ருதம்—அவர் மனைவியின் காரணமாகப் பெற்றார்; கஸ்மலம்—பிரிவுத்துயர்; அஸ்னுவீத—கிடைக்கும்; ந—இல்லை; லக்ஷ்மணம்—அவரது இளைய சகோதரர் இலக்குவன்; ச—மேலும்; அபி—உறுதியாக; விஹாதும்—துறப்பதற்கு; அர்ஹதி—இயல்வது.

பகவான் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி முழுமுதற் கடவுளான வாசுதேவர் ஆனதினால் இப்பௌதீக உலகில் உள்ள எதன்மீதும் அவர் பற்றுடையவர் அல்லர். விடுதலை பெற்ற ஆத்மாக்கள் அனைவருக்கும் மிகவும் நேசிப்பிற்குரிய பரமாத்மா அவர். அவர்களின் சிறந்த நண்பரும் ஆவார். அவர் எல்லா வளங்களும் முற்றிலும் நிறைந்தவர். அதனால் தனது மனைவியைப் பிரிந்த காரணத்தினால் துன்பமடைந்திருக்கவும் முடியாது, அவர் மனைவி மற்றும் இளைய சகோதரன் இலக்குவன் இவர்களைத் துறப்பதும் அவரால் முயைாது. இவர்களில் ஒருவரைத் துறப்பது கூட நிச்சயம் சாத்தியமற்றதாகும்.

பதம் 5.19.7
ந ஜன்ம நூனம் மஹதோ ந ஸௌபகம்
ந வான் ந புத்திர் நாக்ருதிஸ் தோஷ-ஹேது:
தைர் யத் விஸ்ருஷ்டான் அபி நோ வனௌகஸஸ்
சகார ஸக்யே பத லக்ஷ்மணாக்ரஜ:

ந—இல்லை; ஜன்ம—வளமிக்க செல்வந்த குடும்பத்தில் பிறத்தல்; நூனம்—உண்மையில்; மஹத:—முழுமுதற் கடவுளின்; ந—இல்லை; ஸௌபகம்—சிறந்த அதிர்ஷ்டம்; ந—இல்லை; வாக்—நயத்தக்க முறையில் பேசுவது; ந—இல்லை; புத்தி:—புத்திக்கூர்மை; ந—இல்லை; ஆக்ருதி:—உடலின் தன்மைகள்; தோஷ-ஹேது:—பகவானுக்கு மகிழ்ச்சியளிப்பதின் காரணம்; தை:—மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் குணங்கள்; யத்—ஏனென்றால்; விஸ்ருஷ்டான்—புறக்கணித்தல்; அபி—இருந்த போதிலும்; ந:—நாங்கள்; வன-ஒகஸ:—வனத்தில் வாழ்கிறவர்கள்; சகார—ஏற்றுக் கொண்டது; ஸக்யே—நட்பில்; பத—அந்தோ; லக்ஷண-அக்ர-ஜ:—இலக்குவனின் மூத்த சகோதரரான பகவான் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி.

நற்குடிப்பிறப்பு, தனிப்பட்ட அழகு, நானலம் உடைமை, புத்திக் கூர்மை உயர்ந்த இனம் அல்லது தேசம் போன்ற பௌதீகத் தன்மைகளின் அடிப்படையில் ஒருவன் பரமபுருஷ பகவானான இராமச்சந்திர மூர்த்தியுடன் நட்பு வைத்துக் கொள்ள முடியாது. இத்தன்மைகளில் ஒன்று கூட பகவான் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியுடன் நட்புக் கொள்வதற்கான உண்மையான நிபந்தனையன்று, இல்லையேல், நாம் மேட்டுக்குடியினர் அல்லர், நாகரீகமற்றக் காட்டு வாசிகள்தான், நம்மிடம் உடல் அழகும் இல்லை, மேன்மை மிக்கவர்களைப் போல் நாம் பேசுபவர்களும் அல்லர் இருந்தும் பகவான் இராமச்சந்திர மூர்த்தி நமது நட்பினை ஏற்றுக் கொண்டிருக்கின்றாரே எப்படி இது சாத்தியமாயிற்று?

பதம் 5.19.8
ஸுரோ ‘ஸுரோ வாபி அதவானரோ நர:
ஸர்வாத்மனா ய: ஸுக்ருதாஜ்ஞம் உத்தமம்
பஜேத ராமம் மனுஜாக்ருதிம் ஹரிம்
ய உத்தரான் அனயத் கோஸவான் திவம் இதி

ஸுர:—தேவர்; அஸுர:—அசுரர்; வா-அபி—அல்லது; அத—ஆகையினால்; வா—அல்லது; அரை:—மனிதனைத் தவிர பிற (பறவை, விலங்கு போன்றவை); நர:—மனிதன்; ஸர்வ-ஆத்மனா—முழுமனதுடன்; ய:—இவர்; ஸு-க்ருதஜ்ஞம்—எளிதில் ஏற்றுக் கொள்ளத்தக்கவராகிறார்; உத்தமம்—மிகவும் உயர்ந்த; பஜேத—வழிபட வேண்டும்; ராமம்—பகவான் இராமச்சந்திரமூர்த்தி; மனுஜ-ஆக்ருதிம்—மனிதனாகத் தோன்றி; ஹரிம்—முழுமுதற் கடவுள்; ய:—இவர்; உத்தரான்—வட இந்தியாவின்; அனயத்—திருப்பிக் கொணர்தல்; கோஸவான்—கோசல நாடு என்னும் அயோத்தியில் வாழ்பவர்கள்; திவம்—ஆன்மீக உலகிற்கு, வைகுண்டத்திற்கு; இதி—இவ்வாறு.

அதனால் ஒருவன் தேவனோ, அசுரனோ, மனிதனோ அல்லது மனிதல்லாத விலங்கு, பறவையோ யார் வேண்டுமென்றாலும் இப்பூவுலகில் மனிதனைப் போல் தோன்றிய முழுமுதற் கடவுளான பகவான் இராமச்சந்திரமூர்த்தியை வழிபட வேண்டும். பகவானை வழிபடுவதற்குப் பெரிய தவங்கள், விரதங்கள் போன்றவையெல்லாம் தேவையில்லை. அவர் தனது பக்தன் அர்ப்பணிக்கும் சிறிய தொண்டினைக் கூட ஏற்றுக் கொள்கிறார். இவ்வாறு அவர் திருப்தியடைகிறார். அவர் திருப்தியடைந்தவுடன் பக்தன் வெற்றியடைகிறான். உண்மையில் பகவான் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி அயோத்தியிலுள்ள அனைத்துப் பக்தர்களையும் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடையச் செய்தார் (வைகுண்டத்திற்கு).

பதம் 5.19.9
பாரதே ‘பி வர்ஷே பகவான் நச-நாராயணாக்ய ஆகல்பாந்தம் உபதித
தர்ம-ஜ்ஞான-வைராக்யைஸ்வர்-யோபஸ மோபரமாத் மோபலம் பனம்
அனுக்ரஹாயாத்ம-வதாம் அனுகம்பயா தபோ ‘வ்யக்த-கதிஸ் சரதி

பாரதே—பாரதத்தில்; அபி—கூட; வர்ஷே—நிலப்பகுதி; பகவான்—முழுமுதற் கடவுள்; நர-நாராயண-ஆக்ய:—நர நாராயணர் என்றறியப்படுபவர்; ஆ-கல்ப-ஆந்தம்—கல்பத்தின் இறுதிவரை; உபசித—அதிகரித்தல்; தர்ம—சமயதர்மம்; ஜ்ஞான—ஞானம்; வைராக்ய—துறவு அல்லது பற்றின்மை; ஐஸ்வர்ய—தெய்வீகச் செல்வங்கள்; உபஸம—புலன்களின் கட்டுப்பாடு; உபரம—தவறான ஆணவத்திலிருந்து விடுதலை பெறுதல்; ஆத்ம-உபலம்பனம்—தன்னுணர்வு; அனுக்ரஹாய—அருள்பாலிப்பதற்கு; ஆத்ம-வதாம்—தன்னுணர்வு பெறுவதில் விருப்பமுடையோர்கட்கு; அனுகம்பயா—காரணமற்ற கருணையால்; தப:—தவம்; அவ்யக்த-கதி—அவரது பெருமைகள் கற்பனைக் கெட்டாதவை; சரதி—செய்தல்.

(சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்தார்:) முழுமுதற் கடவுளின் பெருமைகள் கற்பனைக் கெட்டாதவையாகும். அவர், தனது பக்தர்களுக்கு சமயதர்மம், ஞானம், துறவு, ஆன்மசக்தி, புலனடக்கம், தவறான ஆணவத்திலிருந்து விடுதலை போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பதின் மூலம் அவர்களுக்குத் தனது கருணையினைக் காட்டுவதற்காக பார்த வர்ஷத்தில் பத்திரிகாஸ்ரமம் என்னும் இடத்தில் நரநாராயணர் வடிவத்தில் தோன்றினார். அவர் ஆன்மீகச் செல்வங்களில் மிகுந்த வளர்ச்சி பெற்றிருந்தார். மேலும் அவர் இக்கல்பத்தின் இறுதிக்காலம் வரை தவம் செய்வதில் ஈடுபடுகின்றார். இதுவே தன்னுணர்வு பெறுவதற்கான வழிமுறையாகும்.

பதம் 5.19.10
தம் பகவான் நாரதோ வர்ணாஸ்ரமவதீபிர் பாரதீபி ப்ரஜாபிர் பகவத்-
ப்ரோக்தாப்யம் ஸாங்க்ய-யோகாப்யாம் பகவத்-அனுபாவோபவர்ணனம்
ஸாவர்ணேர் உபதேக்ஷ்யமாண: பரம-பக்திபாவேனோபஸரதி இதம்
சாபிக்ருணாதி

தம்—அவரை (நர நாராயணர்); பகவான்—சக்திமிக்கத் தெய்வீக மகான்; நாரத:—மாமுனிவர் நாரதர்; வர்ண-ஆஸ்ரம-வாதீபி:—நான்கு “வர்ணங்கள்” நான்கு ஆஸ்ரமங்களின் இயக்கத்தினைப் பின்பற்றுவோர்; பாரதீபி:—பாரத-வர்ஷம் (இந்தியா) என்றறியப்படும் நிலப்பகுதி; ப்ரஜாபி:—அங்கு வசிப்போர்; பகவத்-ப்ரோக்தாப்யாம்—முழுமுதற் கடவுளால் குறிப்பிடப்பட்ட; ஸாங்க்ய—சாங்கிய யோக முறை (பௌதீகப் பந்தம் பற்றிய ஆராய்ச்சிக் கல்வி); யோகாப்யாம்—யோகமுறைப் பயிற்சியினால்; பகவத்-அனுபாவ-உபவர்ணனம்—கடவுள் உணர்வு முறையினைப் பற்றி அது விளக்குகிறது; ஸாவர்ணே:—சாவர்ணி மனுவிற்கு; உபதேக்ஷ்யமாண:—உபதேசிக்க; பரம-பக்தி-பாவேன—பகவானுக்குரிய அன்புத் தொண்டில் தன்னை மறந்த நிலை; உபஸரதி—பகவானுக்குத் தொண்டு செய்தல்; இதம்—இந்த; ச—மேலும்; அபிக்ருணாதி—ஒதுதல்.

நாரத பாஞ்சராத்ரம் என்னும் அவரது சொந்த நூலில் பகவான் நாரதர் வாழ்வின் இறுதி லட்சியத்தினை—பக்தியை—ஞானம் மற்றும் யோக ஸித்தி முறையினால் எவ்வாறு எய்துவது பற்றி மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். அவர் முழுமுதற் கடவுளான, பகவானின் பெருமைகளையும் கூட விளக்கியிருக்கிறார். மாமுனிவர் நாரதர் இவ்வுன்னத இலக்கியத்தின் தத்துவங்களை, பகவானின் பக்தித் தொண்டினை எய்துவதற்காக வர்ணாஸ்ரம தர்மக் கொள்கைகளை கடுமையாகப் பின்பற்றும் பாரத-வர்ஷத்தில் வசிப்போர்க்குப் போதிப்பதற்காக, சாவர்ணீ மனுவிற்கு உபதேசித்தார். இவ்வாறு நாரதமுனிவர் பாரத வர்ஷத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து நரநாரயணரின் தொண்டில் எப்போதும் ஈடுபடுகின்றார். அவர் பின்வருமாறு ஒதுகின்றார்.

பதம் 5.19.11
ஓம் நமோ பகவதே உபஸம-ஸீலாயோபரதானாத்ம்யாய நமோ
‘கிஞ்சனவித்தாய ருஷி-ருஷபாய நர-நாராயணாய பரமஹம்ஸ-பரம-
குரவே ஆத்மாராமாதிபதயே நமோ நம இதி

ஓம்—ஒ, பரமபுருஷ பகவானே; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; உபஸம்-ஸீலாய—புலன்களை அடக்கியவர்; உபரத-அனாத்ம்யாய—இப்பௌதீக உலகில் எந்தவிதப் பற்றும் இல்லாதவர்; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; அகிஞ்சன-வித்தாய—பௌதீக உடைமைகள் இல்லாத மனிதர்கள் ஒரே சொத்தாகக் கருதும் முழுமுதற் கடவுளுக்கு; ருஷி-ருஷபாய—தெய்வீக மகான்களில் மிகச் சிறந்த; நர-நாராயணாய—நர-நாராயணர்; பரமஹம்ஸ-பரம-குரவே—பரமஹம்ஸர்கள் என்னும் விடுதலை பெற்றவர்கள் அனைவரின் மேன்மை மிக்க ஆன்மீகக்குரு; ஆத்மாராம-அதிபதயே—தன்னுணர்வு பெற்ற மனிதர்களில் சிறந்தவர்; நம: நம:—மீண்டும் மீண்டும் எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; இதி—இவ்வாறு.

தெய்வீக மகான்கள் அனைவரினும் மிகச்சிறந்தவரும், முழுமுதற் கடவுளுமான நர நாராயணருக்கு நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிப்பேனாக. அவர் சுயக்கட்டுப்பாடு மற்றும் சுய உணர்வில் மிகச்சிறந்தவராவார். அவர் தவறான ஆணவத்திலிருந்து விடுதலை பெற்றவர் என்பதோடு, பௌதீக உடைமைகள் இல்லாதவர்களுக்கு அவரே சொத்தாகவும் இருக்கிறார். அவருடையத் தாமரைத் திருவடிகளுக்கு நான் மீண்டும் மீண்டும் எனது மரியாதைக்குரிய வந்தனங்கள் அர்ப்பணிப்பேனாக.

பதம் 5.19.12
காயதி சேதம்
கர்தாஸ்ய ஸர்காதிஷு யோ ந பத்யதே
ந ஹன்யதே தேஹ-கதோ ‘பி தைஹிகை:
த்ரஷ்டுர் ந த்ருக் யஸ்ய குணைர் விதூஷ்யதே
தஸ்மை நமோ ‘ஸக்த-விவிக்த-ஸாக்ஷிணே

காயதி—அவர் பாடுகிறார்; ச—மேலும்; இதம்—இந்த; கர்தா:—கர்த்தா; அஸ்ய—இப்பிரபஞ்சத் தோற்றத்தின்; ஸர்க-ஆதிஷு—படைத்தல், காத்தல், அழித்தலின்; ய:—இவர்; ந பத்யதே—படைத்தவராக, தலைவராக அல்லது எஜமானராகப் பற்றுவைப்பதில்லை; ந—இல்லை; ஹன்யதே—பலியாவதில்லை; தேஹ-கத: அபி—மனிதராகத் தோன்றிய போதிலும்; தைஹிகை:—பசி, தாகம், சோர்வு போன்ற உடல் துன்பங்கள்; த்ரஷ்டு:—அவரே எல்லாவற்றையும் காண்பவர் ஆவார்; ந—இல்லை; த்ருக்—காணும் சக்தி; யஸ்ய—அவரின்; குணை:—பௌதீகக் குணங்கள்; விதூஷ்யதே—மாசுபடிகிறது; தஸ்மை—அவருக்கு; நம:—எனது மரியாதைக்குரிய வந்தனங்கள்; அஸக்த:—பற்றற்றப் பரமபுருஷ பகவானுக்கு; விவிக்த—பற்றின்றி; ஸாக்ஷிணே—எல்லாவற்றிற்கும் சாட்சியாக.

பின்வரும் மந்திரத்தை ஒதி மிகவும் சக்திபெற்ற நாரத மாமுனிவரும் நரநாராயணரை வழிபடுகின்றார். கண்ணுக்குப் புலனாகும் இப்பிரபஞ்சத் தோற்றத்தினைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றிற்கும் முழுமுதற் கடவுளே கர்த்தாவாக இருந்தபோதிலும் அவர் தவறான ஆணவத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றவராவார். மூடர்களுக்கு அவர் நம்மைப்போல் பௌதீக உடலைப் பெற்றவராகத் தோன்றிய போதிலும் அவர் பசி, தாகம், சோர்வு போன்ற உடற்பிணிகளினால் பாதிக்கப்படுவதில்லை. அவர் எல்லாவற்றையும் பார்க்கும் சாட்சியாக இருந்தபோதிலும் அவர் பார்க்கும் பொருள்களினால் அவரது புலன்கள் மாசடைவதில்லை. நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை பற்றற்றவரும், உலகின் தூய சாட்சியாகவும் விளங்கும் பரமாத்மாவாக முழுமுதற் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 5.19.13
இதம் ஹி யோகேஸ்வர யோக-நைபுணம்
ஹிரண்யகர்போ பகவான் ஜகாத யத்
யத் அந்த-காலே த்வயி நிர்குணே மனோ
பக்த்யா ததிதோஜ்ஜித-துஷ்கலேவர:

இதம்—இந்த; ஹி—உறுதியாக; யோக-ஈஸ்வர—ஒ, எந்தன் பகவானே, யோக ஸித்திகளின் நாயகரே; யோக-நைபுணம்—யோக விதிகளை நிறைவேற்றும் முறையில் தேர்ந்தவர்; ஹிரண்ய-கர்ப:—பிரம்மதேவன்; பகவான்—ஆற்றல் மிக்கவர்; ஜகாத—கூறினார்; யத்—எது; யத்—எது; அந்த-காலே—மரண வேளையில்; த்வயி—உம்மிடத்தில்; நிர்-குணே—எல்லாம் கடந்த உன்னதம்; மன—மனம்; பக்த்யா—பக்தி மனப்பான்மையுடன்; ததீத—ஒருவன் இடல் வேண்டும்; உஜ்ஜித-துஷ்கலேவர:—பௌதீக கடலுடனான தனது அடையாளத்தினை விடல் வேண்டும்.

ஒ, யோகஸித்திகள் அனைத்தின் தலைவரான எந்தன் பகவானே, தன்னுணர்வு பெற்றப் பிரம்மதேவனால் (ஹிரண்யகர்ப) கூறப்பட்ட யோக முறை விளக்கமாகும் இது. உமது தாமரைத் திருவடிகளில் தமது மனங்களை வைப்பதின் மூலம் அனைத்து யோகிகளும் மரணவேளையில் தங்கள் பெளதீக உடல்களை முற்றிலும் பற்றறுத்துத் துறக்கின்றனர். இதுவே யோகத்தின் நிறைவாகும்.

பதம் 5.19.14
யதைஹிகாமுஷ்மிக-காம-லம்பட:
ஸுதேஷு தாரேஷு தணேஷு சிந்தயன்
ஸங்கேத வித்வான் குகலேவராத்யயாத்
யஸ் தஸ்ய யத்ன: ஸ்ரம ஏவ கேவலம்

யதா—அதுபோல்; ஐஹிக—இன்றைய வாழ்வில்; அமுஷ்மிக—எதிர்பார்த்த வருங்கால வாழ்க்கை; காம-லம்பட:—உடல் இன்பத்திற்கான காம இச்சையில் அதீதப் பற்றுடையவன்; ஸுதேஷு—குழந்தைகள்; தாரேஷு—மனைவி; தனேஷு—செல்வம்; சிந்தயன்—சிந்தித்து; ஸங்கேத—அஞ்சுகிறான்; வித்வான்—ஆன்மீக ஞானத்தில் வளர்ச்சி பெற்றவன்; கு-கலேவர—மலமும், சிறுநீரும் நிரம்பிய இவ்வுடல்; அத்யயாத்—இழப்பின் காரணமாக; ய:—எவரேனும்; தஸ்ய—அவனது; யத்ன:—முயற்சிகள்; ஸ்ரம:—காலம் மற்றும் சக்தி வீணாவது; ஏவ—உறுதியாக; கேவலம்—மட்டும்.

லோகாயதவாதிகள் பொதுவாக அவர்களது இன்றைய உடல் வசதிகளிலும் அவர்கள் எதிர்பார்க்கும் எதிர்கால உடல் வசதிகளிலும் மிகுந்த பற்றுடையவர் ஆவர். இதனால் அவர்கள் எப்போதும் தமது மனைவி, மக்கள், செல்வம் போன்ற சிந்தனையில் மூழ்கி, மலமும், சிறுநீரும் நிரம்பிய தமது உடல்களைத் துறப்பதற்கு அஞ்சுகின்றனர். கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருப்பவன் கூடத் தனது உடலைத் துறப்பதற்கு அஞ்சினான் என்றால் சாத்திரங்களைக் கற்பதற்காக அவன் உழைத்த உழைப்பினால் என்ன பயன்? அது கால விரயமேயாகும்.

பதம் 5.19.15
தன் ந ப்ரபோ த்வம் குகலேவரார்பிதம்
த்வன்-மாயயாஹம்-மமதாம் அதோக்ஷஜ
பிந்த்யாம யேனாஸு வயம் ஸுதுர்பிதாம்
விதேஹி யோகம் த்வயி ந: ஸ்வபாவம் இதி

தத்—ஆகையினால்; ந:—எங்கள்; ப்ரபோ—ஒ, எந்தன் பகவானே; த்வம்—நீர்; குகலேவர-அர்பிதாம்—முற்றிலும் மலமும் சிறுநீரும் நிரம்பியிருக்கும் இந்த மோசமான உடலில் முதலீடு செய்து; த்வத்-மாயயா—உமது மாயா சக்தியினால்; அஹம்-மமதாம்—“நான்” “எனது” என்னும் எண்ணம்; அதோக்ஷஜ—ஒ, உன்னதமானவரே; பிந்த்யாம—துறக்கலாம்; யேன—இதனால்; ஆஸு:—மிக விரைவில்; வயம்—நாங்கள்; ஸுதுர்பிதாம்—விடுவதற்கு அது அரியதானது; விதேஹி—அருள்கூர்ந்து தருவீராக; யோகம்—யோக முறை; த்வயி—உமக்கு; ந—எமது; ஸ்வ-பாவம்—உறுதியான மனதினால் அது அடையாளமிடப்படுகிறது; இதி—இவ்வாறு.

ஆகையினால் ஒ, எந்தன் பகவானே, ஒ, உன்னதமானவரே, பக்தி யோகத்தினைப் பயில்வதற்கானச் சக்தியைக் கொடுப்பதின் மூலம் எமக்கு அன்புடன் உதவுவீராக. இதன் மூலம் நாங்கள் எங்கள் மனங்களை அடக்கி உம்மீது நிலை நிறுத்த முடியும். உமது மாயா சக்தியினால் நாங்கள் அனைவரும் பீடிக்கப்பட்டிருக்கின்றோம் அதனால் நாங்கள் மலம், சிறுநீர் நிரம்பிய உடலோடும், அவ்வுடலுக்குத் தொடர்புடையனவற்றோடும் மிகுந்த பற்றுடையவர்களாக இருக்கின்றோம். பக்தித் தொண்டு ஒன்றைத்தவிர வேறெந்த வழியிலும் இப்பற்றைத் துறக்க முடியாது. ஆகையினால் அருள் கூர்ந்து இந்த வரத்தினை எமக்கு அருள்வீராக.

பதம் 5.19.16
பாரதே ‘பி அஸ்மின் வர்ஷே ஸரிச்-சைலா: ஸந்தி பஹவோ மலயோ
மங்கல ப்ரஸ்தோ மைனாகஸ் த்ரிகூட ருஷப: கூடக: கோல்லக:
ஸஹ்யோ தேவகிரிர் ருஷ்யடூமூக: ஸ்ரீ-ஸைலோ வேங்கடோ மஹேந்த்ரோ
வாரிதாரோ விந்த்ய: ஸுக்திமான் ருக்ஷகிரி: பாரியாத்ரோ த்ரோணஸ்
சித்ரகூடோ கோவர்தனோ ரைவதக:
ககுபோ நீலோ கோகாமுக இந்த்ரகீல: காமகிரிர்
இதி சான்யே ச ஸத ஸஹஸ்ரஸ: ஸைலாஸ் தேஸாம் நிதம்ப-ப்ரபவா
நதா நத்யஸ் ச ஸந்தி அஸங்க்யாதா:

பாரதே—பாரத-வர்ஷத்தில் நிலத்தில்; அபி—கூட; அஸ்மின்—இதில்; வர்ஷே—நிலப்பகுதியில்; ஸரித்—நதிகள்; ஸைலா:—மலைகள்; ஸந்தி—அங்கே இருக்கின்றன; பஹவ:—பல; மலய:—மலயம்; மங்கல-ப்ரஸ்த:—மங்கலபிரஸ்தம்; மைனாக:—மைநாகம்; த்ரி-கூட:—திரிகூடம்; ருஷப:—ரிஷபம்; கூடக:—கூடகம்; கோல்லக:—கோல்லகம்; ஸஹ்ய:—சஹ்யம்; தேவகிரி:—தேவகிரி; ருஷ்ய-மூக:—ரிஷ்யமூகம்; ஸ்ரீ-ஸைல:—ஸ்ரீ சைலம்; வேங்கட:—வேங்கடம்; மஹேந்த்ர—மகேந்திரம்; வாரி:-தார:—வாரிதாரம்; விந்த்ய:—விந்தியம்; ஸுக்திமான்—சுக்திமான்; ருக்ஷ-கிரி:—ரிக்ஷகிரி; பாரியாத்ர:—பாரியாத்திரம்; த்ரோண:—துரோணம்; சித்ர-கூட—சித்திரகூடம்; கோவர்தன:—கோவர்தனம்; ரைவதக:—ரைவதகம்; ககுப:—ககுபம்; நீல:—நீலம்; கோகாமுக:—கோகாமுகம்; இந்த்ரகீல:—இந்திரகீலம்; காம-கிரி:—காமகிரி; இதி—இவ்வாறு; ச—மேலும்; அன்யே—பிற; ச—மேலும்; ஸத-ஸஹஸ்ரஸ:—நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில்; ஸைலா:—மலைகள்; தேஸாம்—அவற்றின்; நிதம்ப-ப்ரபவ:—அவற்றின் சரிவுகளில் பிறந்த; நதா:—பெரிய நதிகள்; நத்ய:—சிறிய நதிகள்; ச—மேலும்; ஸந்தி—இருக்கின்றன; அஸங்க்யாதா:—எண்ணற்ற.

இலாவ்ருத்-வர்ஷத்தைப் போல் பாரத-வர்ஷம் என்றறியப்படும் நிலப்பகுதியிலும் ஏராளமான மலைகளும், நதிகளும் இருக்கின்றன. அவற்றின் சில மலைகள், மலயம், மங்கல-பிரஸ்தம், மைநாகம், திரி கூடம், ரிஷபம், கூடகம், கோல்லகம், சஹ்யம், தேவகிரி, ரிஷ்யரகம், ஸ்ரீ சைவம், வேங்கடம், மகேந்திரம், வாரிதாரம், விந்தியம், சுக்திமான், ரிக்ஷகிரி, பாரியாத்திரம், துரோணம், சித்திரக்கூடம், கோவர்தனம், ரைவதகம், ககுபம், நீலம், கோகாமுகம், இந்திரகீலம், காமகிரி போன்றவையாகும். இவை தவிர பல்வேறு மலைகள் இருக்கின்றன. அவற்றின் சரிவுகளில் இருந்து பல பெரிய, சிறிய நதிகள் பெருகி ஒடுகின்றன.

பதங்கள் 5.19.17 – 5.19.18
ஏதாஸாம் அபோ பாரத்ய: ப்ரஜா நாமபிர் ஏவ புனந்தீனாம் ஆத்மனா
சோபஸ்ப்ருஸந்தி சந்த்ரவஸா தாம்ரபர்ணி, அவடோதா க்ருதமாலா
வைஹாயஸீ காவேரீ வேணீ பயஸ்வினீ ஸர்கராவர்தா துங்கபத்ரா
கிருஷ்ணாவேண்யா பீமரதீ கோதாவரீ நிர்விந்த்யா பயோஷ்ணீ தாபீ
ரேவா ஸுரஸா நர்மதா சர்மண்வதீ ஸிந்தூர் அந்த: ஸோனஸ் ச நதௌ
மஹாநதீ வேதஸ்மிருதிர் ரிஷிகுல்யா த்ரிஸாமா கௌஸிகீ மந்தாகினீ
யமுனாஸரஸ்வதீ த்ருஷத்வதீ கோமதி ஸரயூ ரோதஸ்வதீ ஸப்தவதீ
ஸுஷோமா ஸதத்ரூஸ் சந்த்ரபாகா மருத்வ்ருதா விதஸ்தா அஸிக்னீ
விஸ்வேதி மஹா-நத்ய:

ஏதாஸாம்—இவையெல்லாம்; அப:—நீர்; பாரத்ய—பாரத-வர்ஷத்தின் (இந்தியா); ப்ரஜா:—வசிப்பவர்கள்; நாமபி:—நாமங்களினால்; ஏவ—மட்டும்; புனந்தீனாம்—தூய்மை பெறுகின்றனர்; ஆத்மனா—மனதினால்; ச—மேலும்; உபஸ்ப்ருஸந்தி—தொடுதல்; சந்தர-வஸா—சந்திரவசாம்; தாம்ர-பர்ணீ—தாமிரபரணி; அவடோதா—அவடோதாம்; க்ருத-மாலா—கிருதமாலாம்; வைஹாயஸு—வைஹாயஸு; காவேரீ—காவேரி; வேணீ—வேணி; பயஸ்வினீ—பயஸ்வினீ; ஸர்கராவ்ருதா—சர்க்கராவ்ருதாம்; துங்க-பத்ரா—துங்கபத்ரா; க்ருஷ்ணா-வேண்யா—கிருஷ்ணவேண்யாம்; பீம-ரதீ—பீமரதீ; கோதாவரீ:—கோதாவரி; நிர்விந்த்யா—நிர்விந்தியா; பயோஷ்ணீ—பயோஷ்ணீ; தாபீ—தாபீ; ரேவா—ரேவா; ஸுரஸா—சுரஸா; நர்மதா—நர்மதை; சர்மண்வதீ—சர்மண்வதி; ஸிந்து—சிந்து; அந்த—அந்தம்; ஸோன—சோனம்; ச—மேலும்; நதௌ—இரு நதிகள்; மஹா-நதீ—மகாநதி; வேத-ஸ்மிருதி—வேதஸ்மிருதி; ருஷிகுல்யா—ரிஷிகுல்யை; த்ரி-ஸாமா—திரிசாமா; கௌஸிகீ—கெளசிகி, மந்தாகினீ—மந்தாகினி; யமுனா—யமுனை; ஸரஸ்வதீ—சரஸ்வதி; த்ருஷத்வதீ—திருஷத்வதி; கோமதீ—கோமதி; ஸரயூ—சரயு; ரோதஸ்வதீ—ரோதஸ்வதி; ஸப்தவதீ—சப்தவதி; ஸுஸோமா—சுஷோமா; ஸத-த்ரூ:—சதத்ரு; சந்த்ரபாகா—சந்திபாகை; மருத்வருதா—மருத்வ்ருதை; விதஸ்தா—விதஸ்தை; அஸிக்னீ—அசிக்னீ; விஸ்வா—விஸ்வா; இதி—இவ்வாறு; மஹா-நத்ய—பெரிய நதிகள்.

பிரம்மபுத்திரா மற்றும் சோனா—என்னும் இரு நதிகளும் முக்கிய நதிகள் என்றழைக்கப்படுகின்றன. பின்வருவன எல்லாம் மிக முக்கியமான மகாநதிகளாகும் அவை சந்திரவஸா, தாமிரபரணி, அவடோதா, கிருதமாலாம், வைஹாயஸ, காவேரி, வேணி, பயஸ்வினி, சர்கராவர்தா, துங்கபத்திரை, கிருஷ்ணவேண்யா, பீமரதீ, கோதாவரி, நிர்விந்தியை, பயோஷ்ணி, தாபீ, ரேவா, சுரஸை, நர்மதை, சர்மண்வதி, மகாநதி, வேதஸ்மிருதி, ரிஷிகுல்யை, திரிசாமா, கௌசிகி, மந்தாகினி, யமுனை, சரஸ்வதி, திருஷத்வதி, கோமதி, சரயு, ரோதஸ்வதி, சப்தவதி, சுஷோமா, சதத்ரூ, சந்திரபாகை, மருத்விருதை, விதஸ்தை, அசிக்னீ, மற்றும் விஸ்வா. பாரத-வர்ஷத்தில் வசிப்பவர்கள் தூய்மையடைகின்றனர் காரணம் அவர் எப்போதும் இந்த நதிகளை நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலசமயம் அவர்கள் இந்த நதிகளின் பெயர்களை மந்திரம் போல் ஜெபிக்கின்றனர். சிலசமயம் அவர்கள் இந்த நதிகளிடம் சென்று அவற்றைத் தொட்டு, நீராடுகின்றனர். இவ்வாறு பாரத-வர்ஷத்தில் வாழ்பவர்கள் தூய்மையடைகின்றனர்.

பதம் 5.19.19
அஸ்மின்ன ஏவ வர்ஷே புருஷைர் லப்த-ஜன்மபி: ஸுக்ல-லோஹித-
கிருஷ்ணவர்ணேன ஸ்வாரப்தேன கர்மணா திவ்ய-மானுஷ நாரக கத
யோ பஹ்வ்ய ஆதிமன ஆனுபூர்வ்யேண ஸர்வா ஹி ஏவ ஸர்வேஷாம்
விதீயந்தே யதா-வர்ண-விதானம் அபவர்கஸ் சாபி பவதி

அஸ்மின் ஏவ வர்ஷே—இந்நிலப்பகுதியில், (பாரத வர்ஷம்); புருஷை:—மக்களால்; லப்த-ஜனமபி—பிறந்தோர்; ஸுக்ல—சத்துவ குணத்தின்; லோஹித—இரஜோ குணத்தின்; க்ருஷ்ண—தமோ குணத்தின்; வர்ணேன—பிரிவுகளுக்கேற்ப; ஸ்வ—அவரால்; ஆரப்தேன—தொடங்கி; கர்மணா—செயல்களினால்; திவ்ய—திவ்வியமான; மானுஷ—மனிதன்; நாரக—நரகம்; கதய:—இலட்சியங்கள்; பஹ்வ்ய:—பல; ஆத்மன:—அவருக்குரிய; ஆனுபூர்வ்யேண—இதற்கு முன்பு செய்யப்பட்ட செயல்களுக்கேற்ப; ஸர்வா—எல்லாம்; ஹி—உறுதியாக; ஏவ—உண்மையில்; ஸர்வேஷாம்—இவர்கள் அனைவரின்; விதீயந்தே—நிர்ணயிக்கப்படுகின்றனர்; யதா-வர்ண-விதானம்—பல்வேறு இனங்களின் அடிப்படையில்; அபவர்க:—விடுதலைப் பாதையின்; ச—மேலும்; அபி—கூட; பவதி—சாத்தியமாகிறது.

இந்நிலப்பகுதியில் பிறப்பவர்கள், ஜட இயற்கைக் குணங்களின்- சத்துவகுணம், இரஜோகுணம், தமோகுணம்- அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர். பாரத-வர்ஷத்தில் பிறப்பவன் அவனது முன்வினைக் கர்மாக்களுக்கேற்ப சிலர் மேன்மக்களாகவும், சிலர் சாதாரண மனிதர்களாகவும், சிலர் வெறுக்கத்தக்கவர்களாகவும் பிறக்கின்றனர். ஒருவனது நிலைமை ஒரு உண்மையான ஆன்மீக குருவினால் உறுதிப்படுத்தப்பட்டு அவன் நான்கு சமூகப் பிரிவுகளுக்கேற்பவும் (அந்தண, சத்திரிய, வைசிய, சூத்திரர்) நான்கு ஆன்மீகப் பிரிவுகளுக்கேற்பவும் பிரம்மச்சாரி, கிரஹஸ்தன், வானப்பிரஸ்தன், சந்நியாசி) பகவான் விஷ்ணுவின் தொண்டில் ஈடுபட முறையாக பயிற்சியளிக்கப்பட்டானென்றால் அவனது வாழ்க்கை நிறைவுபெறும்.

பதம் 5.19.20
யோ ‘ஸௌ பகவதி ஸர்வ-பூதாத்மனி அனாத்ம்யே ‘னிருக்தே
‘னிலயனே பரமாத்னி வாஸுதேவ ‘னன்ய-நிமித்த-பக்தி-யோக-
லக்ஷணா நானா-கதி-நிமித்தாவித்யா-க்ரந்தி-ரந்தன-த்வாரேண யதா ஹி
மஹா-புருஷ-புருஷப்ரஸங்கா:

ய:—எவரேனும்; அஸௌ—அது; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; ஸர்வ-பூத-ஆத்மனி—உயிர்வாழிகள் அனைவரின் பரமாத்மா; அனாத்ம்யே—பற்றின்றி; அனிருக்தே—மனம் வாக்கிற்கு அப்பாற்பட்டவர்; அனிலயனே—எதனையும் சார்ந்திருப்பதில்லை; பரம-ஆத்மனி—பரமாத்மாவிற்கு; வாஸுதேவே—வசுதேவரின் மைந்தன் பகவான் வாசுதேவருக்கு; அனன்ய—வேறு எதுவுமின்றி; நிமித்த—காரணம்; பக்தி-யோக-லக்ஷண:—தூய பக்தித் தொண்டின் அடையாளங்கள் கொண்டு; நானா-கதி—பல்வேறு இலக்குகளில்; நிமித்த—காரணம்; அவித்யா-க்ரந்தி—அறியாமைக்கட்டு; ரந்தன—துண்டித்து; த்வாரேண—வழிகளினால்; யதா—எப்பொழுது; ஹி—உண்மையில்; மஹா-புருஷ—முழுமுதற் கடவுளின்; புருஷ—பக்தருடன்; ப்ரஸங்க:—ஒரு நெருங்கிய தொடர்பு.

பல்வேறு பிறப்புகளுக்குப் பின்னர் ஒருவனது புண்ணியச் செயல்களின் பலன்கள் கனியும் பொழுது ஒருவன் தூய பக்தர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பினைப் பெறுகிறான். பிறகு அவனது பல்வேறு பலன்தரும் செயல்களினால் அவன் கட்டப்படுவதற்குக் காரணமான அறியாமைக் கட்டின் முடிச்சினை துண்டிக்கும் திறனை ஒருவன் பெறுகிறான். பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பின் விளைவாக ஒருவன் பகவான் வாசுதேவர் உன்னதமானவர், பௌதீக உலகின் பற்றிலிருந்து விடுதலைபெற்றவர், மனம், வாக்குகளுக்கு அப்பாற்பட்டவர், எல்லாவற்றிலும் சுதந்திரமானவரும் ஆவார். வாசுதேவருக்குச் செய்யும் பக்தித் தொண்டான பக்தி யோகமே விடுதலைக்கான உண்மையான வழியாகும்.

பதம் 5.19.21
ஏதத் ஏவ ஹி தேவா காயந்தி –
அஹோ அமீஷாம் கிம் அகாரி ஸோபனம்
ப்ரஸன்ன ஏஷாம் ஸ்வித் உத ஸ்வயம் ஹரி:
யைர் ஜன்ம லப்தம் ந்ருஷு பாரதாஜிரே
முகுந்த-ஸேவௌப யிபகம் ஸ்ப்ருஹா ஹி ந:

ஏதத்—இந்த; ஏவ—உண்மையில்; ஹி—உறுதியாக; தேவா— எல்லாத் தேவர்களும்; காயந்தி—ஒதுகின்றனர்; அஹோ—ஒ; அமீஷாம்—பாரத வர்ஷத்தில் வாழ்பவர்கள்; கிம்—என்ன; அகாரி—செய்யப்பட்டது; ஸோபனம்—மங்களகரமான, அழகியச் செயல்கள்; ப்ரஸன்ன—மகிழ்ந்து; ஏஷாம்—அவர்கள் மீது; ஸ்வித்—அல்லது; உத—கூறப்படுகிறது; ஸ்வயம்—சுயம்; ஹரி—முழுமுதற் கடவுள்; யை:—அவரால்; ஜன்ம—பிறப்பு; லப்தம்—எய்துதல்; ந்ருஷு—மனிதசமுதாயத்தில்; பாரத-அஜிரே—பாரத வர்ஷத்தின் முற்றத்தில்; முகுந்த—முழுமுதற் கடவுள், இவரே விடுதலை அருள்பவர்; ஸேவர்-ஔபயிகம்—சேவை செய்வதற்கு அதுவே வழியாகும்; ஸ்ப்ருஹா—விரும்புதல்; ஹி—உண்மையில்; ந—எமது.

ஆன்மீக உணர்விற்கான மேதகு நிலை மானிட வடிவமாக இருப்பதினால் தேவலோகத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் பின்வருமாறு கூறலாயினர். இப்பாரத-வர்ஷத்தில் பிறந்த மனிதர்கள் எத்தனை பாக்கியசாலிகள். இவர்கள் முற்பிறவியில் விரதங்களின் புண்ணியச் செயல்களைச் செய்தவர்களாக இருத்தல் வேண்டும் அல்லது முழுமுதற் கடவுள் இவர்கள் மீது மகிழ்ச்சியடைத்திருக்க வேண்டும். இல்லையேல் இவர்களால் பல்வேறு வழிகளில் பக்தித் தொண்டில் எவ்வாறு முடியும்? பக்தித்தொண்டு செய்வதற்காகத் தேவர்களாகிய நாம் பாரத வர்ஷத்தில் மானிடப் பிறப்பு எய்த வேண்டும் என்று விரும்புகிறோம் ஆனால் இந்த மனிதர்களோ அங்கே ஏற்கனவே பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பதம் 5.19.22
கிம் துஷ்கரைர் ந: க்ரதுபிஸ் தபோ-வ்ரனதர்
தானாதிபிர் வா த்யுஜயேன பல்குனா
ந யத்ர நாராயண-பாத-பங்கஜ –
ஸ்ம்ருதி: ப்ரமுஷ்டாதிஸயேந்த்ரியோத்ஸவாத்

கிம்—என்ன மதிப்பு; துஷ்கரை—செய்வதற்கு மிகவும் கடினமானது; ந:—எங்கள்; க்ரதுபி:—வேள்விகள் செய்தல்; தப:—தவங்கள்; வ்ரதை:—விரதங்கள்; தான-ஆதிபி:—தானம் வழங்குதல் போன்றவை; வா—அல்லது; த்யுஜயேன—சொர்க்க இராஜ்ஜியத்தைப் பெற்றதுடன்; பல்குனா—இது முக்கியமற்றதாகும்; ந—இல்லை; யத்ர—இங்கே; நாராயண-பாத-பங்கஜ—பகவான் நாராயணரின் தாமரைத் திருவடிகள்; ஸ்ம்ருதி—நினைவு; ப்ரமுஷ்ட—இழந்து; அதிஸய—அதிகமான; இந்த்ரிய-உத்ஸவாத்—பௌதீகப் புலனுகர்ச்சியின் காரணமாக.


தேவர்கள் தொடர்ந்து கூறினர் செய்வதற்கு மிகவும் கடினமான வேள்விகளைச் செய்து, தவங்கள் மேற்கொண்டு, விரதங்கள் இருந்து, தானங்கள் அளித்து சொர்க்கலோகவாசிகள் என்னும் இந்நிலையினை நாம் அடைந்திருக்கின்றோம். ஆனால் இதனை எய்தியதின் மதிப்பு என்ன? இங்கே நாம் பௌதீகப் புலனுகர்ச்சியில் அதிகமாக ஈடுபட்டு அதன் காரணமாக பகவான் நாராயணரின் திருவடித் தாமரைகளை மிகவும் அரிதாகவே நினைக்கின்றோம். உண்மையில் நமது அதீதப் புலனுகர்ச்சியினால் நாம் சற்றேறத்தாழப் பகவானின் தாமரைத் திருவடிகளை மறந்தே போய்விட்டோம்.

பதம் 5.19.23
கல்பாயுஷாம் ஸ்தானஜயாத் புனர்-பவாத்
க்ஷணாயுஷாம் பாரத-பூஜயோ வரம்
க்ஷணேன மர்த்யேன க்ருதம் மனஸ்வின:
ஸனனன்யஸ்ய ஸம்யாந்தி அபயம் பதம் ஹரே:

கல்பா-ஆயுஷாம்—பிரம்ம தேவனைப்போல் பலநூறு கோடி ஆண்டுகள் ஆயுள் உடையவர்களும்; ஸ்தான-ஜயாத்-அதைவிட அடைவதற்குச் சிறந்த இடம் அல்லது உலகம்; புன:-பாவத்—பிறப்பு, இறப்பு மூப்பிற்குக் காரணமான; க்ஷண-ஆயுஷாம்—நுறு வருடங்கள் மட்டும் ஆயுள் உடையவர்கள்; பாரத-பூ-ஜய:—பாரத வர்ஷத்தில் பிறப்பது; வரம்—வரப்பிரசாதம் ஆகும்; க்ஷணன—இதுபோன்ற குறைந்த ஆயுளுக்கு; மர்த்யேன—உடலினால்; க்ருதம்—செய்யப்பட்டப் பணி; மனஸ்வின—வாழ்வின் மதிப்பினை உண்மையில் புரிந்து கொண்டவர்கள்; ஸன்ன்யஸ்ய—கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் சரணடைதல்; ஸம்யாந்தி—அவர்கள் எய்துகின்றனர்; அபயம்—எங்கே கவலை இல்லையோ; பதம்—இருப்பிடம்; ஹரே—முழுமுதற் கடவுள்.

பிரம்மலோகத்தில் கோடானுகோடி ஆண்டுகள் பெறுவதைக் காட்லும் பாரத-வர்ஷத்தில் குறுகிய ஆயுள் பெறுவது ஆயுளைப் சிறந்ததாகும். ஏனென்றால் பிரம்ம லோகத்திற்கு உயர்த்தப்பட்டவனும் மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு, இறப்பிற்கு திரும்பி வர வேண்டியவனாகிறான். பாரத-வர்ஷம் போன்ற கீழ் உலகங்களில் ஆயுள் மிகவும் குறுகியதாக இருந்த போதிலும், அங்கே வாழ்பவன் தன்னை முற்றிலும் கிருஷ்ண உணர்விற்கு உயர்த்திக்கொண்டு இக்குறுகிய ஆயுள் காலத்திலேயே பகவானின் திருவடித் தாமரைகளை முற்றிலும் சரணடைவதின் மூலம் உயர்நிறைவு நிலையினை எய்துகிறான். இவ்வாறு ஒருவன் கவலையற்ற, பௌதீக உடலில் மீண்டும் பிறப்பதற்குத் தேவையற்ற வைகுண்டலோகத்தை அடைகிறான்.

பதம் 5.19.24
ந யத்ர வைகுண்ட-கதா-ஸுதாபகா
ந ஸாதவோ பாகவதாஸ் ததாஸ்ரயா:
ந யத்ர யஜ்ஞேஸ-மகா மஹோத்ஸவா:
ஸுரேஸ-லோகோ ‘பி ந வை ஸ ஸேவ்யதாம்

ந—இல்லை; யத்ர—எங்கே; வைகுண்ட-கதா-ஸுதா-ஆபகா:—வைகுண்டம் என்றழைக்கப்படும் முழுமுதற் கடவுளைப் பற்றிய அமிர்த நதிகள், அல்லது எல்லாக் கவலைகளையும் விரட்டுபவர்; ந:—இல்லை; ஸாதவ—பக்தர்கள்; பாகவத:—பகவானின் பக்தித் தொண்டில் எப்போதும் ஈடுபட்டிருப்பது; தத்-ஆஸ்ரயா:—முழுமுதற் கடவுளால் அடைக்கலம் அளிக்கப்பட்டோர்; ந—இல்லை; யத்ர—எங்கே; யஜ்ஞ-ஈஸ-மகா:—வேள்விகளினால் பகவானுக்குப் பக்தித் தொண்டு செய்தல்; மஹா-உத்ஸவா:—இவையே உண்மையான திருவிழாக்கள்; ஸுரேஸ-லோக:—தேவர்கள் வாழும் இடம்; அபி—இருந்தபோதிலும்; ந—இல்லை; வை—உறுதியாக; ஸ:—அது; ஸேவ்யதாம்—அடிக்கடி நிகழ்தல்.

தூய கங்கை நதியைப் போன்று முழுமுதற் கடவுளின் செயல்கள் பற்றிய விஷயங்கள் பெருகி ஒடாத இடத்திலும் கடவுள்பற்று என்னும் அந்நதியின் கரைகளில் பக்தர்கள் தொண்டில் ஈடுபடாதிருக்கும் இடமாக அது இருந்தாலும் அல்லது பகவானைத் திருப்திப்படுத்துவதற்கான சங்கீர்த்தன யக்ஞ விழாக்கள் கொண்டாடப்படாத இடமாக அது இருந்தாலும், அந்த இடம் தேவலோகத்தில் இருந்த போதிலும்கூட புத்திமான் அதனை விரும்பமாட்டான்.

பதம் 5.19.25
ப்ராப்தா ந்ரு-ஜாதிம் த்வ இஹ யே ச ஜந்தவோ
ஜ்ஞான-க்ரியா-த்ரவ்ய-கலாப-ஸம்ப்ருதாம்
ந வை யதேரன்ன அபுனர்-பவாய தே
பூயோ வனௌகா இவ யாந்தி பந்தனம்

ப்ராப்தா:—நாம் பெற்றிருக்கின்றோம்; ந்ரு-ஜாதிம்—மனித சமுதாயத்தில் பிறந்தது; து—உறுதியாக; இஹ—இப்பாரத-வர்ஷத்தில்; யே—இவர்கள்; ச—மேலும்; ஜந்தவ—உயிர்கள்; ஜ்ஞான—ஞானத்துடன்; க்ரியா—செயல்களுடன்; த்ரவ்ய—பொருள்கள்; கலாப—சேகரித்ததுடன்; ஸம்ப்ருதாம்—முழுவதும்; ந—இல்லை; வை—உறுதியாக; யதேரன்—முயற்சி; அபுன:-பவாய—இறவாமை நிலைக்கு; தே—இவர்கள்; பூய:—மீண்டும்; வனௌகா:—பறவைகள்; இவ—போன்று; யாந்தி—செல்கின்றனர்; பந்தனம்—பந்தப்படுவதற்கு.

பக்தித் தொண்டு செய்வதற்கும், ஞானம் மற்றும் கர்மத்தின் விளைவுகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு முறையான நிலம் மற்றும் சூழ்நிலைகளை பாரத-வர்ஷம் அளிக்கிறது. சங்கீர்த்தன யக்ஞத்தைத் தெளிவானப் புலனேந்திரியங்களுடன் செய்வதற்காக மானிட வடிவத்தைப் பாரத-வர்ஷத்தில் ஒருவன் பெற்றிருந்தும் அவன் பக்தித் தொண்டு செய்யாதிருந்தால் அவன் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவனாவான். இதன் மூலம் அவன் மீண்டும் வேடனின் வலையில் சிக்கிக் கொள்கிறான்.

பதம் 5.19.26
யை: ஸ்ரத்தயா பர்ஹிஷி பாகஸோ ஹவிர்
நிருப்தம் இஷ்டம் விதி-மந்த்ர-வஸ்துத:
ஏக: ப்ருதன்-நாமபிர் ஆஹுதோ முதா
க்ருஹ்ணாதி பூர்ண: ஸ்வயம் ஆஸிஷாம் ப்ரபு:

யை:—அவர்களினால் (பாரத-வர்ஷ வாசிகள்); ஸ்ரத்தயா—சிரத்தையுடன்; பர்ஹிதி—வேத வேள்விகள் செய்வதில்; பாகஸ:—பிரிவினால்; ஹவி—அவிர்பாகம்; நிருப்தம்—அர்ப்பணித்தல்; இஷ்டம்—விரும்பும் தேவருக்கு; விதி—முறையான விதியினால்; மந்த்ர—மந்திரங்கள் ஒதுவதினால்; வஸ்துத:—உரியப்பொருட்களினால்; ஏக:—ஒருவரான அந்த முழுமுதற் கடவுள்; ப்ருதக்—தனியே; நாமபி:—நாமங்களினால்; ஆஹுத:—அழைத்தல்; முதா—மிகுந்த மகிழ்ச்சியுடன்; க்ருஹ்ணாதி—அவர் ஏற்றுக் கொள்கிறார்; பூர்ண:—தன்னில் பூரணத்துவம் பெற்றப் பரமபுருஷ பகவான்; ஸ்வயம்—தனிப்பட்ட முறையில்; ஆஸிஷாம்—அனைத்து வரங்களின்; ப்ரபு:—பிரபு ஆவார்.

இந்தியாவில் (பாரத-வர்ஷத்தில்) பல்வேறு காரியங்களுக்காகப் பரமபுருஷ பகவானால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்திரன், சந்திரன், சூரியன் போன்றவர்களைப் பலர் பல்வேறு வழிகளில் வழிபடுகின்றனர். பரமபுருஷ பகவான் என்னும் முழுப்பொருளின் பாகங்கள் என்று தேவர்களுக்கு, இவர்களை வழிபடுவோர் தங்கள் அவிர்பாகங்களை அர்ப்பணிக்கின்றனர். ஆகையினால் முழுமுதற் கடவுள் இந்த அர்ப்பணிப்புக்களை ஏற்றுக் கொண்டு இப்பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதின் மூலம் இவர்களைப் படிப்படியாக பக்தித் தொண்டின் உண்மைத் தரத்திற்கு உயர்த்துகிறார். பகவான் பூரணத்துவமுடையவர். ஆதலினால் அவர் தனது உன்னத உடலின் ஒரு பாகத்தினோடு வழிபடுவோர் விரும்பும் வரங்களைக் கூட அவர்களுக்கு அருள்கிறார்.

பதம் 5.19.27
ஸத்யம் திஸதி அர்திதம் அர்திதோ ந்ருணாம்
நைவார்ததோ யத் புனர் அத்திதா யத:
ஸ்வயம் விதத்தே பஜதாம் அனிச்சதாம்
இச்சாபிதானம் நிஜ-பாத-பல்லவம்

ஸத்யம்—உறுதியாக; திஸதி—அவர் அருள்கிறார்; அர்திதம்—வணங்கப்படுவதற்கானப் பொருள்; அர்தித—வழிபடுவதற்கு; ந்ருணாம்—மனிதர்களால்; ந—இல்லை; ஏவ—உண்மையில்; அர்த-த:—வரம் அருள்பவர்; யத்—இது; புன—மீண்டும்; அர்திதா—வரத்திற்கான ஒரு தேவை; யத:—இதிலிருந்து; ஸ்வயம்—சுயமாக; விதத்தே—அவர் அருள்கிறார்; பஜதாம்—அவரது தொண்டில் ஈடுபடுவோர்க்கு; அனிச்சதாம்—இதனை விரும்பாத போதிலும்; இச்சா-பிதானம்—அது அனைத்து வரங்களையும் நிறைவு செய்கிறது; நிஜ-பாத-பல்லவம்—அவரது தாமரைத்திருவடிகள்.

முழுமுதற் கடவுள் எக்காரணங்களுக்காக ஒரு பக்தன் தன்னை அணுகுகின்றானோ அவனது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார். ஆனால் அவர் அப்பக்தனுக்கு, அவன் மீண்டும் பல வரங்களை கேட்பதற்குக் காரணமாக எந்த வரத்தையும் அருள்வதில்லை என்ற போதிலும் பகவான் தானே விரும்பி அப்பக்தனுக்குத் தனது தாமரைத் திருவடிகளின் அடைக்கலத்தினை அளிக்கிறார். மேலும் அவரது அடைக்கலம் அவனது அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்கிறது இதுவே பரமபுருஷ பகவானின் தனிக் கருணையாகும்.

பதம் 5.19.28
யதி அத்ர ந: ஸ்வர்க-ஸுகாவ ஸேஷிதம்
ஸ்விஷடஸ்ய ஸுக்தஸ்ய க்ருதஸ்ய ஸோபனம்
தேனாஜனாபே ஸ்ம்ருதிமஜ் ஜன்ம ந: ஸ்யாத்
வர்ஷே ஹரிர் யத்-பஜதாம் ஸம் தனோதி

யதி—இவ்வாறு; அத்ர—இத்தேவலோகத்தில்; ந—நமது; ஸ்வர்க-ஸீக-அவஸேஷிதம்—சொர்க்க சுகங்கள் அனைத்தையும் அனுபவித்தப் பிறகு மீதமிருப்பது எதுவாயினும்; ஸு-இஷ்டஸ்ய—ஒர் நிறைவான யாகம்; ஸு-உக்தஸ்ய—வேத இலக்கியங்களைக் கற்பதில் தளரா ஊக்கம்; க்ருதஸ்ய—ஒருவகையானச் செயலைச் செய்தல்; ஸோபனம்—வினைப் பலன்கள்; தேன—அந்த வினைப் பயனால்; அஜனாபே—பாரத வர்ஷத்தில்; ஸ்ம்ருதி-மத்-ஜன்ம—பகவானின் திருவடித் தாமரைகளை நினைக்கச் செய்யும் ஒரு பிறப்பு; ந:—நமது; ஸ்யாத்—கிடைக்குமாக; வர்ஷே—அந்த நிலத்தில்; ஹரி:—முழுமுதற்கடவுள்; யத்—இதில்; பஜதாம்—பக்தர்களின்; ஸம் தனோதி—புனிதத்தினை அதிகரிக்கின்றார்.

சமயச் சடங்குகள் செய்தல், புண்ணியச் செயல்கள் மற்றும் வேள்விகள் செய்தல், வேதங்களைக் கற்றல் போன்றவற்றின் விளைவாக ஐயத்திற்கிடமின்றி நாம் இப்போது சொர்க்கலோகத்தில் இருக்கின்றோம். எது எப்படியாயினும் ஒரு நாள் நமது வாழ்வு இங்கே முடிந்து விடும். அச்சமயம் நமது புண்ணியச் செயல்களில் ஏதேனும் மிச்சம் மீதி இருந்ததென்றால் நாம் மீண்டும் பகவானின் தாமரைத்திருவடிகளை நினைப்பதற்கு இயலும். மனிதர்களாகப் பாரத-வர்ஷத்தில் மீண்டும் பிறக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். பகவான் தானே பாரத-வர்ஷத்திற்குத் தனிப்பட்ட முறையில் வந்து அங்குள்ள மக்களின் நல்லதிர்ஷ்டத்தினை மேலும் அதிகரிக்கச் செய்யும் அன்பின் கடலாவார்.

பதங்கள் 5.19.29 – 5.19.30
ஸ்ரீ-ஸுக உவாச
ஜம்பூத்வீபஸ்ய ச ராஜன்ன் உபத்வீபான் அஷ்டௌஹைக உபதி
ஸந்தி ஸகராமஜைர் அஸ்வான்வேஷண இமாம் மஹீம் பரிதோ நிகனத்பிர்
உபகல்பிதான்: தத் யதா ஸ்வர்ணப்ரஸ்தஸ் சந்த்ரஸுக்ல ஆவர்தனோ
ரமணகோ மந்தரஹரிண பாஞ்ச ஜன்ய ஸிம்ஹலோ லங்கேதி

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; ஜம்பூத்வீபஸ்ய—ஜம்புத்வீபம் எனப்படும் தீவு; ச—மேலும்; ராஜன்—ஓ அரசனே; உபத்வீபான்-அஷ்டெள—எட்டு துணைத்தீவுகள்; ஹ—நிச்சயமாக; ஏகே—சில; ஸகர-ஆத்ம-ஜை:—மகாராஜா சகரரின் புதல்வர்களால்; அஸ்வ-அன்வேஷணே—அவர்களது தொலைந்து போன குதிரையைத் தேட முயற்சிக்கும் பொழுது; இமாம்—இந்த; மஹீம்—நிலப்பகுதி; பரித—சுற்றிலும்; நிகனத்பி:—தோண்டுதல்; உபகல்பிதான்—உண்டாக்கப்பட்டன; தத்—அவை; யதா—பின்வருமாறு; ஸ்வர்ண-ப்ரஸ்த—சுவர்ணபிரஸ்தம்; சந்தர்-ஸுக்ல—சந்திர சுக்கிலம்; ஆவர்தன—ஆவர்தனம்; ரமணக—ரமணகம்; மந்தர-ஹரிண:—மந்தரஹரிணம்; பாஞ்ச-ஜன்ய:—பாஞ்ச ஜன்யம்; ஸிம்ஹல:—சிம்ஹலம்; லங்கா—லங்கா; இதி—இவ்வாறு.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த மன்னனே, கற்றறிந்த அறிஞர்களின் கருத்தின்படி ஜம்புத்வீபத்தைச் சுற்றி எட்டு சிறியத் தீவுகள் இருக்கின்றன. மகாராஜா சகரரின் மைந்தர்கள் தங்கள் தொலைந்துபோன குதிரையை இவ்வுலகமெங்கனும் தேடும்பொழுது அவர்கள் பூமியைத் தோண்டினர் அதன் மூலம் அருகருகே எட்டுத் தீவுகள் தோன்றின. இத்தீவுகளின் பெயர்கள் வருமாறு சுவர்ண பிரஸ்தம், சந்திரசுக்கிலம், ஆவர்தனம், ரமணகம், மந்தரஹரிணம், பாஞ்ச ஜன்யம், சிம்ஹலம், லங்கா.

பதம் 5.19.31
ஏவம் தவ பாரதோத்தம ஜம்பூத்வீப-வர்ஷ-விபாகோ யதோபதேஸம்
உபவர்ணித இதி

ஏவம்—இவ்வாறு; தவ—உனக்கு; பாரத-உத்தம—ஒ, பரத குலத்தில் சிறந்தோனே; ஜம்புத்வீப-வர்ஷ-விபாக:—ஜம்புத்வீபத்தின் பிரிவுகள்; யதா-உபதேஸம்—அதிகாரம் பெற்றவர்களால் எனக்கு உபதேசிக்கப்பட்டபடி; உபவர்ணித:—விளக்கினேன்; இதி—இவ்வாறு.

அன்பார்ந்த பரீக்ஷித்து மன்னனே, ஒ, பரத குலத்திற்சிறந்தோனே, பாரத-வர்ஷத் தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ளத் தீவுகள் பற்றியும் எனக்கு உபதேசிக்கப்பட்டபடி உனக்கு நான் விளக்கியுள்ளேன். இத்தீவுகளே ஜம்புத்வீபத்தை உருவாக்குகின்றன.


ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “ஜம்புத்வீபம் பற்றி ஒர் விளக்கம்” எனும் தலைப்பை கொண்ட பத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare