அத்தியாயம் – 17
கங்கை நதி கீழே இறங்கி விடுதல்
பதம் 5.17.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பிற்குரிய மன்னனே வேள்விகள் அனைத்தையும் அனுபவிப்பவரான பகவான் விஷ்ணு பலி மகாராஜாவின் வேள்விச் சாலையில் வாமனதேவராகத் தோன்றினார். பின்னர் அவர் தனது இடது கால் முன் பாதத்தினை பிரபஞ்சத்தின் இறுதியில் எடுத்து வைத்து நகத்தினால் பிரபஞ்சத்தின் மேலுறையைத் துளைத்தார். அத்துளையின் வழியாக காரணக்கடலின் தூய நீர் இப்பிரபஞ்சத்தினுள் கங்கை நதியாகப் புகுந்து பகவானின் சிவந்த தாமரைத் திருவடிகளைக் கழுவி வருவதினால் கங்கை நதியின் நீரும் அழகிய சிவந்த நிறம் பெற்றது. ஒவ்வொரு உயிர்வாழியும் கங்கை என்றும் புனித நதியின் உன்னத நீரைத் தொடுவதின் மூலம் பௌதீக அழுக்கினாலான மனதினை உடனடியாகத் தூய்மை செய்து கொள்ள முடியும் இருந்தும் அதன் நீர் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றது. இப்பிரபஞ்சத்தினுள் இறங்கிவிடுவதற்கு முன்பு கங்கை பகவானின் தாமரைத் திருவடிகளை நேரடியாகத் தொடுவதின் காரணமாக அவள் விஷ்ணுபதி என்றழைக்கப்படுகிறாள். பிறகு அவள் ஜாநவி, பாகிரதி என்றும் பெயர்களைப் பெற்றாள். ஒராயிரம் வருடங்களுக்குப் பிறகு கங்கை நீர் இப்பிரபஞ்சத்திலேயே மிக உயரத்தில் இருக்கும் துருவலோகத்தில் இறங்கியது. ஆகையினால் அனைத்துக் கற்றறிந்த அறிஞர்களும் முனிவர்களும் துருவலோகத்தை விஷ்ணுபதம் என்று அறிவித்தனர் (“பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளில் அமைந்திருக்கின்றது”).

பதம் 5.17.2 : மகாராஜா உத்தானபாதனின் புகழ்மிக்கப் புதல்வரான துருவ மகாராஜா முழுமுதற் கடவுளின் மிகச் சிறந்த பக்தராவார். ஏனென்றால் பக்தித் தொண்டு செய்வதில் அவருக்கிருந்த அடக்க முடியாத உறுதியே அதற்குக் காரணமாகும். பகவான் விஷ்ணுவின் திருவடித் தாமரைகளைப் புனித கங்கை நீர் நீராட்டுகிறது என்பதை நன்கு அறிந்தமையினால் அவர் தனது உலகில் இருந்து கொண்டு, அதே நாளில் கங்கை நீரினை மிகுந்த பயபக்தியுடன் தனது தலையினால் தாங்கிக் கொண்டார். தனது இதயத்தில் உள்ள பகவான் கிருஷ்ணரைப் பக்தியுடன் அவர் தொடர்ந்து தியானிக்கும் காரணத்தினால் அவர் உணர்ச்சிப் பெருக்கினால் தன்னை மறந்த நிலை எய்துவார். அவரது பாதி திறந்த விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடும். அவரது உடல் முழுவதும் உணர்ச்சிப் பெருக்கின் அடையாளம் தோன்றும்.

பதம் 5.17.3 : சப்தரிஷிகள் (மரீசி, வஸிஷ்டர், அத்ரி போன்றோர்) துருவலோகத்தின் அருகில் உள்ள உலகில் வசிக்கின்றனர். கங்கை நதியின் செல்வாக்கினைப் பற்றி நன்கு அறிந்த காரணத்தினால் அவர்கள் இந்த நாளில் தங்களது ஜடா முடியில் கங்கை நீரைத் தாங்கிக் கொண்டனர். இதுவே இறுதியானச் செல்வம், தவங்களின் நிறைவு, உன்னத வாழ்க்கைக்கானச் சிறந்த வழி என்று முடிவு செய்தனர். முழுமுதற் கடவுளுக்கான பக்தித் தொண்டினை எந்தவிதமான இடையூறும் இன்றி எய்தியதினால் அவர்கள் சமயதர்மம், பொருளாதார வளர்ச்சி, புலனுகர்ச்சி, பரம் பொருளுடன் இணைவது போன்ற நன்மைக்குரிய பிற முறைகளை புறக்கணிக்கின்றனர். ஞானிகள் பகவானுடன் இணைவதே உயர்ந்த உண்மை என்று கருதுவதுபோல் இந்த ஏழு முனிவர்களும் நிறைவுடை வாழ்க்கை என்று பக்தித் தொண்டினை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

பதம் 5.17.4 : துருவலோகத்தின் (வடமீன்) அருகிலுள்ள சப்தரிஷி மண்டலத்தைத் தூய்மை செய்தபிறகு, கங்கை நீரானது தேவர்களால் கோடிக்கணக்கான தெய்வீக விமானங்களில் விண்வெளிப் பாதையில் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அது சந்திர மண்டலத்தில் பாய்ந்தோடி இறுதியில் மேரு மலையின் உச்சியிலுள்ள பிரம்ம தேவனின் நகரத்தை அடைகிறது.

பதம் 5.17.5 : மேரு மலையின் உச்சியில் கங்கை நான்கு கிளைகளாகப் பிரிகின்றது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு திசைகளில் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு) பெருக்கெடுத்து ஒடுகின்றன. இக்கிளை நதிகளான சீதா, அலகனந்தா, சக்ஷு, பத்ரா என்பவை கடலை நோக்கிப் பாய்ந்தோடுகின்றன.

பதம் 5.17.6 : கங்கையின் கிளைநதியான சீதாநதி மேருமலையின் உச்சியிலுள்ள பிரம்மாபுரியில் பெருகி ஓடி அங்கிருந்து மலையைப் போன்றே உயரமுடைய அருகிலுள்ள கேசராசவ மலைகளில் சிகரங்களில் ஒடுகின்றது. இம்மலைகள் எல்லாம் மேரு மலையைச் சுற்றியுள்ள நூலிழைக் கொத்துப் போன்றவையாகும். கேசராசல மலையிலிருந்து கங்கைநதி கந்தமான மலையின் உச்சியில் வீழ்ந்து பின்னர் பத்ராஸ்வ வர்ஷத்தின் நிலப்பகுதியில் பாய்ந்தோடுகிறது. இறுதியில் அது மேற்கிலுள்ள உப்பு நீர்க்கடலை அடைகின்றது.

பதம் 5.17.7 : கங்கையின் கிளை நதியான சக்ஷுநதி மால்யவான் மலையின் உச்சி மீது விழுகின்றது. அங்கிருந்து நீர்வீழ்ச்சியாக கேதுமால வர்ஷத்தின் நிலப்பகுதியில் வீழ்ந்து ஒடுகின்றது. கங்கை கேது மால-வர்ஷத்தில் தொடர்ந்து ஓடி மேற்குத் திசையில் உள்ள உப்புநீர்க் கடலை அடைகின்றது.

பதம் 5.17.8 : கங்கையின் கிளை நதியான பத்ராநதி மேருமலையின் வடக்குப் பகுதியிலிருந்து பெருக்கெடுத்து ஒடுகின்றது. இதன் நீர் குமுத மலை, நீலமலை, சுவேதமலை, சிருங்கவான் மலைச் சிகரங்களின் மீது அடுத்தடுத்து வீழ்கிறது. பின்னர் அது குரு நிலப்பகுதியில் ஒடி அதனைக் கடந்து வடக்கிலுள்ள உப்பு நீர்க்கடலில் கலக்கின்றது.

பதம் 5.17.9 : அதுபோல் கங்கையின் கிளைநதியான அலகானந்தம் என்னும் நதி பிரம்மாபுரியின் (ப்ரஹ்ம—ஸதன) தென்பகுதியிலிருந்து பெருகி ஒடுகிறது. பல்வேறு நிலங்களிலுள்ள மலைகளைக் கடந்து இது மிகுந்த வேகத்துடன் ஏமகூடம், இமகூடம் என்னும் மலைச் சிகரங்களில் வீழ்கின்றது. இம்மலை உச்சிகளில் பெருகி ஒடி கங்கை பாரத வர்ஷம் என்னும் நிலப்பகுதியில் பெருக்கெடுத்து ஒடுகின்றது. பின்னர் கங்கை தெற்கிலுள்ள உப்புநீர்க் கடலில் கலக்கின்றது. இந்நதியில் நீராடுபவர்கள் பாக்கியசாலிகள். இவர்கள் தமது ஒவ்வோர் அடியிலும் இராஜசூய யாகம், அசுவமேத யாகம் போன்ற யாகங்களைச் செய்வதினால் வரும் பலன்களை எளிதில் அடைவர்.

பதம் 5.17.10 : மேரு மலையின் உச்சியிலிருந்து சிறிதும் பெரிதுமாக ஏராளமான நதிகள் பிரவகித்து ஒடுகின்றன. இந்நதிகள் எல்லாம் மலையின் புதல்விகள் போன்றவையாகும். மேலும் அவைப் பல்வேறு நிலப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானக் கிளை நதிகளாக ஒடுகின்றன.

பதம் 5.17.11 : இவ்வொன்பது வர்ஷங்களில் பாரத—வர்ஷம் என்னும் நிலப்பகுதியே செயல்களின் களமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. பிற எட்டு வர்ஷங்களும் மிகவும் உயர்ந்த புண்ணியம் செய்தவர்களுக்கு உரியதென்று கற்றறிந்த அறிஞர்களும், மாமுனிவர்களும் அறிவிக்கின்றனர். சொர்க்க லோகங்களிலிருந்து அவர்கள் திரும்பி வந்த உடன் மீதமிருக்கும் தங்கள் புண்ணியச் செயல்களின் பலன்களை இந்த எட்டு வர்ஷங்களிலும் அவர்கள் அனுபவிக்கின்றனர்.

பதம் 5.17.12 : இந்த எட்டு வர்ஷங்கள் அல்லது நிலப்பகுதிகளில் வாழ்பவர்கள் பூமியிலுள்ள மனித வருடத்தின்படி பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்கின்றனர். அங்கே பத்தாயிரம் யானைகளின் உடல் பலத்தை உடையவர்களாவர். உண்மையில் அவர்கள் உடல் வஜ்ராயுதம் போன்று உறுதிமிக்கவையாகும். அவர்கள் வாழ்வின் இளமைக்காலம் மிக்க இனிமையுடையதாகும். ஆணும் பெண்ணும் பாலியல் உறவில் இணைந்து நீண்டகாலம் மிகச்சிறந்த இன்பம் அனுபவிப்பர். ஏராளமான வருடங்கள் புலனின்பத்திற்குப் பிறகு—ஆயுளின் ஒராண்டுக்காலம் மீதம் இருக்கும் பொழுது மனைவி கருவுகிறாள். இவ்வாறு இம்மேலுலகவாசிகளின் இன்பத்தின் தரமானது திரேதா யுகத்தைச் சேர்ந்த மனிதர்களைப் போன்றதேயாகும்.

பதம் 5.17.13 : அந்நிலப்பகுதி ஒவ்வொன்றிலும், ஏராளமான நந்தவனங்கள் உண்டு அவற்றில் பருவகாலத்திற்கேற்ப மலர்களும், கனிகளும் நிறைந்ததிருக்கும். அங்கே அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆஸ்ரமங்களும் உண்டு. அந்நிலங்களின் எல்லைகளைக் குறிக்கும் பெரிய மலைகளுக்கு இடையில் தெளிந்த நீருடையப் பெரிய பெரிய குளங்கள் உண்டு அவற்றில் புத்தம் புது தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும். அன்னம், வாத்து, நீர்க்கோழி, நாரை போன்ற நீர்நிலைப் பறவைகள் தாமரை மலர்களின் நறுமணத்தில் ஆர்வம் தூண்டப்பெறும். வண்டுகளின் மயக்கும் இனிய ஓசை எங்கும் நிறைந்திருக்கும். அந்நிலப் பகுதிகளில் வசிப்போர் தேவர்களின் முக்கியத்தலைவர்கள் ஆவர். அவர்கள் எப்போதும் தமது பணியாட்களினால் பணிவிடை செய்யப்பட்டு குளத்தின் அருகில் உள்ள நந்தவனங்களின் தங்கள் வாழ்க்கையினை அனுபவிப்பர். இந்த இனிமையானச் சூழ்நிலையில் தேவர்களின் மனைவியர் தங்கள் கணவன்மாரை நோக்கிக் குறும்புப் புன்னகை பூத்துக் காமப் பார்வைகளை வீசுவர். தேவர்கள் மற்றும் அவர்தம் மனைவியர் தங்கள் பணியாளர்களால் தொடர்ந்து சந்தனமும், மலர் மாலைகளும் வழங்கப்பட்டுக் கொண்டே இருப்பர். இவ்வாறு எட்டு சொர்க்க வர்ஷங்களிலும் உள்ளவர்கள் எதிர்பாலினரின் செயல்களினால் கவரப்பட்டு மகிழ்ந்திருப்பர்.

பதம் 5.17.14 : இவ்வொன்பது நிலப்பகுதிகளிலுமுள்ள தனது பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக முழுமுதற் கடவுள் நாராயணர் தன்னை வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்நர், அநிருத்தர் என்று நான்கு தத்துவங்களாக விரித்துக் கொண்டார். இவ்வாறு அவர் தனது பக்தர்களின் தொண்டினை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் அருகிலேயே இருக்கின்றார்.

பதம் 5.17.15 : இலாவ்ருத—வர்ஷம் என்னும் நிலப்பகுதியில் இருக்கும் ஒரே ஆண்மகன் மிகவும் சக்தி பெற்றத் தேவரான சிவபெருமான் ஆவார். சிவபெருமானின் மனைவியான துர்க்கை அந்நிலத்தில் எந்த ஆணும் நுழைவதை விரும்புவதில்லை. யாரேனும் ஒரு மூடன் அத்து மீறி நுழைந்தானென்றால் அவன் உடனே பெண்ணாக மாறுவான். இதனை நான் பின்னர் விளக்குவேன். (இதன் விளக்கம் ஸ்ரீமத்—பாகவதம் ஒன்பதாம் காண்டத்தில் உள்ளது).

பதம் 5.17.16 : இலாவ்ருத—வர்ஷத்தில் சிவபெருமான் அவர் மனைவி துர்க்கை உடனிருக்கப்பத்துக்கோடி பணிப்பெண்களினால் எப்போதும் பணிவிடை செய்யப்படுகிறார். பரமபுருஷ பகவானின் நான்கு விரிவுகள் வாசுதேவர், பிரத்யும்நர், அநிருத்தர் மற்றும் சங்கர்ஷணர் ஆவார். சங்கர்ஷணர் என்னும் நான்காவது விரிவு நிச்சயம் உன்னதமானவரே ஆவார். ஆயினும் பௌதீக உலகில் அழிவிற்குக் காரணமான அவரது செயல்கள் தமோ குணத்தைச் சேர்ந்தவையாதலினால் அவர் தமஸீ அதாவது தமோகுண வடிவம் என்றறியப்படுகிறார். சங்கர்ஷணரே தனது மூலகாரணர் என்பதை சிவபெருமான் அறிவார். ஆதலினால் அவர் எப்போதும் அவரை சமாதி நிலையில் பின்வரும் மந்திரத்தை ஒதி தியானித்துக் கொண்டிருக்கின்றார்.

பதம் 5.17.17 : சக்திமிக்க சிவபெருமான் கூறினார்: ஒ, முழுமுதற் கடவுளே, நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை பகவான் சங்கர்ஷணரின் வடிவத்தில் இருக்கும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். நீர் அளவில்லாதவர் என்ற போதிலும் பக்தரல்லாதாரிடத்து நீர் தோன்றுவதில்லை.

பதம் 5.17.18 : ஒ, போற்றுதற்குரிய பகவானே, நீர் முழுமுதற் கடவுளானதினால் நீரே, வணங்குதற்குரியவர் என்பதோடு அனைத்து வளங்களின் உறைவிடமும் ஆவீர். உமது பாதுகாப்பானத் தாமரைத்திருவடிகளே உமது பக்தர்களின் ஒரே பாதுகாவலாகும். அவர்களைத் திருப்திப்படுத்த நீர் உம்மை பல்வேறு வடிவங்களாக விரித்துக் கொள்கின்றீர். ஒ, எந்தன் பகவானே நீர் உமது பக்தர்களை பௌதீக வாழ்க்கைப் பிடியிலிருந்து மீட்கின்றீர். ஆயினும் பக்தரல்லாதார் உமது விருப்பத்தின்பேரில் பௌதீக வாழ்க்கையில் நித்தியமாக சிக்கிக் கொண்டிருக்கின்றனர். உமது நித்தியத் தொண்டனாக என்னை அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்வீராக.

பதம் 5.17.19 : நமது சினத்தின் வேகத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆகையினால் நாம் பௌதீகப் பொருட்களைப் பார்க்கும்போது நமது விருப்பு, வெறுப்பு உணர்வுகளை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் பரமபுருஷ பகவான் இவ்வாறு பாதிக்கப்படுவதில்லை. படைத்தல், காத்தல், அழித்தலுக்காக அவர் பௌதீக உலகினைப் பார்க்கின்றனர், அவர் துளியளவு கூடப் பாதிக்கப்படுவதில்லை. ஆகையினால் புலன்களின் சக்தியை வெல்ல விரும்பும் ஒருவன் பகவானின் தாமரைத் திருவடிகளைக் கண்டிப்பாகச் சரணடைய வேண்டும் பிறகு அவன் வெற்றி பெறுவான்.

பதம் 5.17.20 : தூய்மையற்றப் பார்வை உடையவர்க்கு பரமபுருஷ பகவானின் கண்கள் அளவின்றி மது குடித்தவனின் கண்களைப் போல் தோன்றும். இவ்வாறு குழப்பமுறும் மூடர்கள் பரமபுருஷ பகவான் மீது சினம் கொள்கின்றனர். அவர்களது சினத்தின் காரணமாக பகவானும் அவர்களுக்கு சினம் மிக்கவராகவும், அச்சம் தருபவராகவும் தோன்றுகிறார். ஆயினும் இது மாயையேயாகும். நாகாசுரனின் மனைவியர் பகவானின் தாமரைத் திருவடிகளின் ஸ்பரிஸத்தினால் கிளர்ச்சியடைந்து அவரைத் தொடர்ந்து வழிபடமுடியாத நிலைக்கு ஆளாகினார். ஆனால் அவர்களின் ஸ்பரிஸத்தினால் பகவான் எந்தவிதமானக் கிளர்ச்சியும் அடையவில்லை காரணம் பகவான் எல்லாச் சூழ்நிலைகளிலும் சமத்துவம் உடையவர். ஆவார். அதனால் முழுமுதற் கடவுளை வழிபடாமல் எவர் இருப்பர்?

பதம் 5.17.21 : சிவபெருமான் தொடர்ந்து கூறினார்: படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலுக்கும் பகவானுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாதபோதிலும் மாமுனிவர்கள் அனைவரும் பகவானே இவற்றிற்கு மூலகாரணர் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆகையினால் பகவான் அளவில்லாதவர் என்றழைக்கப்படுகிறார். அவரது அவதாரமான சேஷன் தனது பாம்புப்படங்களின் மீது எல்லாப் பிரபஞ்சங்களையும் சுமந்து கொண்டிருக்கின்றார், ஆயினும் ஒரு பிரபஞ்சம் அவருக்கு ஒரு சிறு கடுகு போன்றதேயாகும். ஆகையினால் நிறைவினை விரும்பும் எந்தவொரு மனிதன் அவரை வணங்காதிருப்பான்?

பதங்கள் 5.17.22 – 5.17.23 : முழுமுதற் கடவுளிடமிருந்து பிரம்மதேவன் தோன்றினார். அவரது உடலோ மொத்தப் பௌதீகச் சக்தியினால் ஆகி ஜட இயற்கையின் இரஜோ குணம் நிரப்பப்பட்டு ஞானத்தின் உறைவிடமாக விளங்குகிறது. பிரம்ம தேவனிடமிருந்து, தவறான கர்வத்தின் பிரதிநிதியான ருத்திரன் என்னும் நான் பிறந்தேன். நானே பிற தேவர்களையும், பஞ்ச பூதங்களையும், புலன்களையும் படைக்கின்றேன். ஆகையினால் எங்கள் எல்லோரையும் விட சிறப்புமிக்கவரும், பறவைகள் கயிற்றினால் கட்டப்பட்டிருப்பதைப்போல், அனைத்துத் தேவர்கள், பஞ்சபூதங்கள், புலன்கள், ஏன், பிரம்மதேவன், நான் உள்ளிட்ட அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முழுமுதற் கடவுளை நான் வணங்குகிறேன். பகவானின் கருணையினாலேயே எங்களால் பௌதீக உலகைப் படைக்கவும், காக்கவும் அழிக்கவும் முடியும். ஆகையினால் நான் முழுமுதற் கடவுளுக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களை சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 5.17.24 : முழுமுதற் கடவுளின் மாயாசக்தி பந்தப்பட்ட ஆத்மாக்களான நம் அனைவரையும் பௌதீக உலகில் கட்டிப்போடுகின்றது. ஆகையினால் அவரது கருணையின்றி நம்மைப் போன்றவர்கள் மாயாசக்தியிடமிருந்து எவ்வாறு வெளிவருவது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் படைத்தலுக்கும், அழித்தலுக்கும் காரணமாக இருக்கும் பகவானுக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare