அத்தியாயம் – 16
ஜம்புத்வீபம் பற்றிய விளக்கம்
பதம் 5.16.1 : பரீக்ஷித்து மகாராஜா சுகதேவ கோஸ்வாமியிடம் கூறினார்: ஒ அந்தணரே, பூமண்டலத்தின் அரைவிட்டமானது சூரியனின் ஒளியும் வெம்மையும் பரவி இருக்கின்ற தூரம் வரையிலும், நிலவும், விண்மீன்களும் காணக் கூடியத் தூரம் வரையிலும் விரிவடைந்திருந்தாக ஏற்கனவே நீர் விளக்கியிருக்கின்றீர்.

பதம் 5.16.2 : போற்றுதற்குரிய ஐயனே, மகாராஜா பிரியவிரதனின் தேர்ச்சக்கரங்களினால் ஏற்பட்டப் பள்ளங்களிலேயே ஏழு கடல்கள் தோன்றின. இவ்வேழு கடல்களின் காரணமாகவே பூமண்டலம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவற்றின் பெயர், அளவு, தன்மை பற்றிப் பொதுவாகவே நீர் குறிப்பிட்டிருக்கின்றீர். அவற்றைப் பற்றி நான் விரிவாக அறிய விரும்புறேன். அருள் கூர்ந்து எனது விருப்பத்தினை நிறைவேற்றுவீராக.

பதம் 5.16.3 : மனமானது ஜட இயற்கையின் முக்குணங்களினாலான முழுமுதற் கடவுளின் புறத்தன்மையில் ஸ்தூல வடிவத்தில் நிலை நிறுத்தப்படும் பொழுது, அது சத்துவ குணத் தளமேடைக்குக் கொண்டுவரப்படுகிறது. இந்த உன்னத நிலையில் ஒருவன் தனது ஆன்மீக வடிவத்தில் சுய ஒளி பெற்றவராகவும், ஜட இயற்கைக் குணங்களைக் கடந்தவராகவும் விளங்கும் முழுமுதற் கடவுளான வாசுதேவரை அறிந்து கொள்ள முடியும். ஒ, எந்தன் தலைவரே, இப்பிரபஞ்சம் முழுவதையும் மூடியிருக்கும் அந்த வடிவம் எவ்வாறு உணரப்படுகிறது என்பதை விளக்கி அருள்வீராக.

பதம் 5.16.4 : மகரிஷி சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பிற்குரியமன்னனே, முழுமுதற் கடவுளின் பௌதீகச் சக்தியின் விரிவிற்கு எந்தவொரு வரைமுறையும் கிடையாது. இப்பௌதீக உலகமானது பௌதீகக் குணங்களின் (சத்துவகுணம், இரஜோகுணம், தமோகுணம்) ஒரு மாற்றமாகும். இருந்தபோதிலும் இதனை, ஒருவன் பிரம்ம தேவனைப் போல் நீண்ட ஆயுளை உடையவனாக இருந்தாலும் மிகச் சரியாக விளக்கமுடியாது. இப்பௌநீக உலகில் ஒருவனும் நிறையுடையவன் அல்ல. மேலும் குறைவுடைய மனிதன் தொடர்ந்து யூகித்தலுக்குப் பின்னரும் கூட இப்பௌதீகப் பிரபஞ்சத்தைச் சரியாக விளக்கிவிட முடியாது.ஒ, மன்னனே, இருந்தும் நான் பூ கோலகம் (பூலோகம்) போன்ற தலையாய இடங்களை அவற்றின் பெயர்கள், வடிவங்கள், அளவுகள் மற்றும் பல்வேறு அடையாளங்களுடன் உனக்கு விளக்க முயற்சிக்கிறேன்.

பதம் 5.16.5 : பூமண்டலம் என்னும் கிரஹமானது ஒரு தாமரை மலரைப் போன்றதாகும். அதன் ஏழு தீவுகளும் தாமரை மலரின் ஏழு இதழ்களை போன்றிருக்கின்றன. அதன் மையத்தில் அமைந்திருக்கும் ஜம்புத்வீபத்தின் நீளமும், அகலமும் பத்து லட்சம் யோஜனம் (எண்பது லட்சம் மைல்கள்) ஆகும். ஜம்புத்வீபமானது தாமரை மலரின் இலையைப் போன்று வட்டவடிவமாக இருக்கிறது.

பதம் 5.16.6 : ஜம்புத்வீபத்தில் ஒன்பது நிலப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றும் 9000 யோஜனம் (72,000 மைல்கள்) நீளமுடையனவாகும். இவற்றிற்கு எல்லையாக எட்டு மலைகள் இருக்கின்றன அவை இவற்றை நன்கு பிரித்திருக்கின்றன.

பதம் 5.16.7 : இப்பிரிவுகள் அல்லது வர்ஷங்களுக்கு மத்தியில் இலாவ்ருதம் என்னும் பெயருடைய வர்ஷம் ஒன்று உள்ளது. இது தாமரை மலரின் இதழ்களின் நடுஇதழாக அமைந்துள்ளது. இலாவ்ருத வர்ஷத்தின் நடுவில் பொன்னாலான சுமேரு மலை இருக்கிறது. தாமரை மலர் போன்ற பூமண்டலத்தின் மேலுறைபோல் சுமேரு மலை திகழ்கிறது. இம்மலையின் உயரம் ஜம்புத்வீபத்தின் அகலத்திற்குச் சமமானது அல்லது 100,000 யோஜனங்கள் (800,000 மைல்கள்) உடையதாகும். இதில் 16000 யோஜனங்கள் (128,000 மைல்கள்) பூமியினுள் புதையுண்டிருக்கிறது. அதனால் பூமியின் மேற்பரப்பிலிருந்து இம்மலையின் உயரம் 84,000 யோஜனங்கள் (672,000 மைல்கள்) ஆகும். இம்மலையின் அகலம், உயரத்தில் 32000 யோஜனங்களும் (256,000 மைல்கள்) அடிப்பகுதியில் 16000 யோஜனங்களும் ஆகும்.

பதம் 5.16.8 : இலாவ்ருத வர்ஷத்தின் வடபால் மேலும் வடதிசையில் ஒன்றை அடுத்து மற்றொன்றாக மூன்று மலைகள் உள்ளன அவை நீலம், சுவேதம், சிருங்கவான் ஆகும். இவை ரம்யகம், இரண்மயம், குரு என்னும் மூன்று வர்ஷங்களின் எல்லைகளைக் குறிப்பவையாகும். இம்மலைகளின் அகலம் 2000 யோஜனங்கள் (16,000 மைல்கள்) ஆகும். நீளவாக்கில் அவை கிழக்கிலும் மேற்கிலும் உப்பு நீர்க்கடலின் கரைகள் வரை விரிந்திருக்கின்றன. தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் ஒவ்வொரு மலையின் நீளமும் முந்தைய மலையின் பத்தில் ஒரு பகுதியாகும் அவற்றின் உயரம் எல்லாம் ஒன்றேயாகும்.

பதம் 5.16.9 : அதுபோல் இலாவ்ருத—வர்ஷத்தின் தென்பகுதியில் கிழக்கிலும் மேற்கிலும் மூன்று பெரியமலைகள் (வடக்கிலிருந்து தெற்காக நிஷதம், ஏமகூடம், இமாலயம் என்று இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் 10,000 யோஜனம் (80,000 மைல்கள்) உயரமுடையனவாகும். இவை ஹரி—வர்ஷம், கிம்புருட—வர்ஷம், பாரத—வர்ஷத்தின் (இந்தியா) எல்லைகளைக் குறிப்பிடுவனவாகும்.

பதம் 5.16.10 : அதேபோல் இலாவ்ருத வர்ஷத்தின் மேற்கிலும் கிழக்கிலும் மால்யவான், கந்தமாதனம் என்னும் இரண்டு பெரிய மலைகள் இருக்கின்றன. இவ்விரண்டு மலைகளும் 2000 யோஜனங்கள் (16000 மைல்கள்) உயரமும், வடக்கில் நீலமலை மற்றும் தெற்கில் நிஷதமலை வரை பரந்திருந்தது. இவை இலாவ்ருத—வர்ஷம், கேதுமாரவர்ஷம் மற்றும் பத்ராஸ்வ வர்ஷம் போன்றவற்றின் எல்லைகளைக் குறிப்பிடுகின்றன.

பதம் 5.16.11 : மிகப்பெரிய சுமேரு மலையின் நான்கு திசைகளிலும் மந்தரம், மேருமந்தரம், சுபார்ஸுவம், குமுதம் என்னும் மலைகள் இருக்கின்றன. இவை அதன் அரைக் கச்சுப்போல் அமைந்திருக்கின்றன. இம்மலைகளின் உயரமும், நீளமும் 10,000 யோஜனங்கள் (80,000 மைல்கள்) ஆகும்.

பதம் 5.16.12 : இந்நான்கு மலைகளின் மேல் உச்சியில் கொடிக்கம்பங்களைப் போல் ஒரு மாமரம், ஒரு நாவல்மரம், ஒரு கதம்பமரம், ஒர் ஆலமரம் இருக்கின்றன. இம்மரங்களின் அகலம் 100 யோஜனமும், (800 மைல்கள்) 1,100 யோஜனம் (8,800 மைல்கள்) உயரமும் உடையனவாகும். இவற்றின் விட்டம் 1100 யோஜனங்கள் ஆகும்.

பதங்கள் 5.16.13 – 5.16.14 : ஒ, பரீக்ஷித்து மகாராஜாவே, பரதகுலத்திற் சிறந்ததோனே, இந்நான்கு மலைகளுக்கும் இடையில் நான்கு குளங்கள் உள்ளன. முதல் குளத்தின் நீர் பாலைப்போன்று சுவையுடையதாகும். இரண்டாவது குளத்தின் நீர் தேனைப்போன்று சுவையுடையதாகும். மூன்றாவது குளத்தின் நீர் கரும்புச் சாற்றின் சுவையுடையதாகும். நான்காவது குளம் தூய நீர் நிரம்பியதாகும். தேவர்கள் எனப்படும் சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள் எல்லாம் இக்குளங்களின் வசதிகளை அனுபவித்து மகிழ்வர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சிறிதினும் சிறியதாகவும், பெரிதினும் மிகப் பெரியதாகவும் யோகஸித்திகளை இயற்கையிலேயேப் பெற்றிருந்தனர். அங்கே நந்தனம், சைத்ரரதம், வைப்ராஜகம் மற்றும் ஸர்வதோபத்ரம் என்னும் நான்கு தெய்வீக நந்தவனங்கள் இருக்கின்றன.

பதம் 5.16.15 : தேவர்களில் மிகச் சிறந்தோர் ஆபரணங்கள் போன்று தெய்வீக அழகுடைய தங்கள் மனைவியருடன் இணைந்து வந்து அந்த நந்தவனங்களில் விளையாடி மகிழ்வர். அப்போது அவர்களைவிடச் சற்றுத் தாழ்ந்த கந்தர்வர்கள் அவர்கள் பெருமைகளை பாடிக்கொண்டிருப்பர்.

பதம் 5.16.16 : மந்தர மலையின் தாழ்ந்த சரிவுகளின் மேல் தேவசூதம் என்னும் ஒரு மாமரம் இருக்கிறது. அதன் கனிகள் மலைச் சிகரங்களைப் போன்று பெரியன என்பதோடு தேவலோகத்தில் உள்ளோர் அனுபவித்து மகிழ்வதற்காக மரத்தின் மேலிருந்து அமிர்தம் ஒழுகுவது போன்று இனிய சுவையுடையதுமாகும்.

பதம் 5.16.17 : கனிந்த மாங்கனிகள் அவ்வளவு உயரத்திலிருந்து விழும்பொழுது அவை உடைந்து, சிதைந்து அதனுள்ளிருந்து நறுமணமிக்க இன்சுவைச்சாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் மணம் பிற நறுமணங்களுடன் கலந்து அதிக நறுமணத்தை வீசச்செய்யும். அச்சாறு மலையிலிருந்து அருவியென வீழ்ந்து அருணோதா என்னும் நதியாகப் பெருக்கெடுத்து ஒடுகிறது. இந்நதி இலாவ்ருத வர்ஷத்தின் கீழ்த்திசையில் இனிமையாக ஒடிக்கொண்டிருக்கிறது.

பதம் 5.16.18 : யட்சர்களின் புண்ணியமிக்க மனைவியர், சிவபெருமானின் மனைவி பவானிக்குப் பணிப்பெண்களாவர், அருணோதயா நதியின் நீரைப் பருகிய காரணத்தால் அவர்களது உடல்கள் நறுமணம் வீசும், காற்று அந்நறுமணத்தைச் சுமந்துகொண்டு எண்பது மைல் சுற்றளவிற்கு நறுமணம் கமழச் செய்யும்.

பதம் 5.16.19 : அதுபோல் ஜம்பு மரத்தின் கனிகள், சதைப்பற்றுமிக்கும், சிறிய கொட்டைகளை உடையதாகும். மிகுந்த உயரத்திலிருந்து வீழ்ந்து துண்டு துண்டாகச் சிதறிப்போகும். இக்கனிகள் ஒவ்வொன்றும் ஒரு யானையினைப் போல் பெரியதாகும். இவற்றின் சாறு ஆறாக ஜம்பூ நதி என்னும் பெயரில் ஒடுகிறது. இந்நதி மேரு மந்தர மலையின் சிகரத்திலிருந்து 10,000 யோஜனம் தூரத்தில் இலாவ்ருதத்தின் தென்பகுதியில் வீழ்கிறது. இது இலாவ்ருதத்தின் நிலப்பரப்பு முழுவதும் இனியசாற்றுடன் பாய்ந்தோடுகிறது.

பதங்கள் 5.16.20 – 5.16.21: ஜம்பூ—நதியின் இருகரைகளிலுமுள்ள மண் பாய்ந்து பெருகிவரும் சாற்றில் நனைந்து காற்று மற்றும் சூரிய ஒளியில் உயர்ந்து ஏராளமான தங்கத்தை உருவாக்குகிறது. இத்தங்கம் ஜம்பூ—நதம் என்றழைக்கப்படுகிறது. தேலோகத்தைச் சேர்ந்தவர்கள் இத்தங்கத்தை பல்வேறு ஆபரணங்கள் செய்யப் பயன்படுத்துகின்றனர். அதனால் தேவலோகத்தைச் சேர்ந்த ஆடவரும் அவர்களது என்றும் இளமை மாறாத மனைவியரும் பொன்னாலான கிரீடங்கள், கைவளைகள், ஒட்டியாணங்கள், போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு வாழ்வினை அனுபவித்து மகிழ்கின்றனர்.

பதம் 5.16.22 : அபார்ஸுவ மலையின் ஒரு பக்கத்தில் மிகவும் போற்றப்படும் மகா கடம்பம் என்றொரு மரம் இருக்கிறது. இம்மரத்தின் பொந்துக்களிலிருந்து ஐந்து தேனாறுகள் பாய்கின்றன. ஒவ்வொன்றும் ஐந்து வியாமங்கள் அகலமுடையன. பொங்கிவரும் இத்தேன் ஸுபார்ஸ்வ மலையின் உச்சியிலிருந்து இடைவிடாதுப் பிரவாகித்து, இலாவ்ருத வர்ஷத்தின் மேற்குப் பகுதியில் தொடங்கி அதைச் சுற்றிலும் ஒடுகிறது. இதனால் அந்நிலப்பகுதி முழுவதும் இனிமையான நறுமணத்தினால் நனைக்கப்பட்டிருக்கிறது.

பதம் 5.16.23 : இத்தேனைக் குடிப்பவர்களின் வாயிலிருந்து வரும் நறுமணத்தைக் காற்று சுமந்து கொண்டு நூறு யோஜனங்கள் தூரம் வரை நறுமணம் வீசச்செய்யும்.

பதம் 5.16.24 : அதுபோல் குமுதமலையின் மேல் ஒர் ஆலமரம் இருக்கிறது. இதற்கு சதவல்ஸம் என்று பெயர். காரணம் இதற்கு நூறு பெரிய கிளைகள் உண்டு. இக்கிளைகளிலிருந்து பல விழுதுகள் வளர்ந்திருக்கின்றன. அவற்றிலிருந்து பல ஆறுகள் பெருகி ஓடுகின்றன. இந்த ஆறுகள் மலை உச்சியிலிருந்து இலாவ்ருத வர்ஷத்தின் வடபகுதியில் அங்கு வாழ்பவர்களின் நன்மைக்காகப் பெருகி ஒடுகின்றன. இவ்வாறுகள் ஓடும் காரணத்தினால் மக்கள் அனைவரும் ஏராளமான பால், தயிர், தேன், நெய், சாறு, தானியங்கள், ஆடைகள், படுக்கைகள், இருக்கைகள், ஆபரணங்கள் போன்றவை கிடைக்கப்பெறுகின்றனர். அவர்கள் விரும்பும் பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு கிடைப்பதினால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடனிருக்கின்றனர்.

பதம் 5.16.25 : இந்நதிகளில் இருந்து உருவாகும் பொருட்களை அனுபவிக்கும் பௌதீக உலக மக்களுக்கு உடலில் நரை, திரை என்பது தோன்றுவதே இல்லை. அவர்களிடம் சோர்வு என்பதே ஏற்படுவதில்லை. வியர்வையினால் அவர்கள் உடலில் துர்நாற்றம் வீசுவதில்லை. அவர்கள் நரை, திரை, பிணி, மூப்பு, காலமற்ற காலத்தில் மரணம் போன்றவற்றிற்கு ஆளாவதில்லை. அவர்கள் கடுமையானக் குளிர் உஷ்ணம் போன்றவற்றினால் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் உடலின் மினுமினுப்பு என்றும் குறைவதில்லை. அவர்கள் எந்த விதமானக் கவலையுமின்றி மரணமடையும்வரை மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

பதம் 5.16.26 : மேருமலையின் அடிப்பகுதியைச் சுற்றிலும், தாமரை மலரின் இதழ்களைச் சுற்றியுள்ள நூலிழை போல் பிற மலைகள் மிகவும் எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் பெயர்கள், குரங்கம், குரரம், குஸும்பம், வைகங்கம், திரிகூடம், சிஸிரம், பதங்கம், ருசகம், நிஷதம், சினீவாஸம், கபிலம், சங்கம், வைடூர்யம், ஜாருதி, ஹம்ஸம், ரிஷபம், நாகம், காலாஜ்ஞாரம், நாரதம் என்பவையாகும்.

பதம் 5.16.27 : சுமேரு மலையின் கிழக்குப் பக்கத்தில் ஜடரம், தேவகூடம் என்னும் இரண்டு மலைகள் உள்ளன. இவை வடக்கிலிருந்து தெற்காக 18000 யோஜனங்கள் (144,000 மைல்கள்) நீண்டிருக்கின்றன. அதுபோல் சுமேரு மலையின் மேற்குப் பக்கத்தில் பவனம், பாரியாத்திரம் என்னும் இரண்டு மலைகள் இருக்கின்றன இவையும் வடக்கிலிருந்து தெற்காக அதே அளவு விரிந்திருக்கின்றன. சுமேரு மலையின் தென்பகுதியில் கைலாசம் மற்றும் கரவீரம் என்னும் இரண்டு மலைகள் இருக்கின்றன இவை கிழக்கிலிருந்து மேற்காக 18,000 யோஜனங்கள் விரிந்திருக்கின்றன. மேலும் சுமேரு மலையின் வடபகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக அதே அளவு நீண்டிருக்கும் திரிசங்கம் மற்றும் மகரம் என்னும் இரண்டு மலைகள் இருக்கின்றன. இம்மலைகள் அனைத்தின் அகலமும், உயரமும் 2000 யோஜனங்கள் (16000 மைல்கள்) ஆகும். நெருப்பைப் போல் ஒளிவீசும் கட்டித் தங்கத்தினாலான சுமேரு மலையைச் சுற்றி இந்த எட்டு மலைகளும் இருக்கின்றன.

பதம் 5.16.28 : மேருமலையின் உச்சிச்சிகரத்தின் நடுவில் பிரம்மதேவனின் நகரம் அமைந்திருக்கின்றது. அதன் நான்கு பக்கங்களில் ஒவ்வொரு பக்கமும் ஒரு கோடி யோஜனங்கள் (எட்டு கோடி மைல்கள்) நீளமுடையன. இது முற்றிலும் பொன்னாலானதாகும். அதனால் கற்றறிந்த அறிஞர்களும், முனிவர்களும் இந்நகர்த்தை சாதகெளம்பி என்று அழைக்கின்றனர்.

பதம் 5.16.29 : பிரம்மாபுரியைச் சுற்றிலும் தேவேந்திரன் தொடங்கி பல்வேறு உலகங்களின் எட்டு தலைமை ஆளுநர்களின் உறைவிடங்கள் உள்ளன. இந்நகரங்களும் பிரம்மா புரியைப் போன்றவையே ஆனால் அதில் நான்கில் ஒரு பங்கு அளவுடையனவாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare