அத்தியாயம் – 14
பௌதிக உலகம் இன்பத்தின் மிகப் பெருங்காடு
பதம் 5.14.1 : மன்னர் பரீக்ஷித்து சுகதேவ கோஸ்வாமியிடம் பௌதீகக்காட்டின் நேரடியான பொருள் என்னவென்று கேட்டதற்கு, சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதில் கூறினார்; அன்பிற்குரிய மன்னனே வணிக சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் எப்போதும் பொருளீட்டுவதிலேயே ஆர்வமுடையவனாக இருப்பான். சிலசமயம் அவன் காட்டிற்குச் சென்று மிகவும் மலிவானப் பொருட்களான விறகு, மண் போன்றவற்றைச் சேகரித்து அவற்றை நகரத்தில் நல்ல விலைக்கு விற்பான். அதுபோல் பேராசையுடைய பந்தப்பட்ட ஆத்மா பௌதீக நன்மைக்காகப் பௌதீக உலகினுள் நுழைகிறான். படிப்படியாக அவன் காட்டின் அடர்ந்த பகுதிக்குள் போய் பிறகு அங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என்று தெரியாமல் திணறுவான். பெளதீக உலகினுள் நுழையும் தூய ஆத்மா பௌதீகச் சூழ்நிலைகளினால் கட்டப்படுகிறான். இது பகவான் விஷ்ணுவின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள புறச்சக்தியினால் உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறு உயிர்வாழி தைவமீயா என்னும் புறச்சக்தியின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறான். சுதந்திரமாக வாழ்தல் மற்றும் காட்டில் குழப்பமடைந்திருப்பதினாலும் எப்போதும் பகவானின் தொண்டிலேயே ஈடுபட்டிருக்கும் பக்தர்களின் தொடர்பினை அவனால் அடைய முடிவதில்லை. உடற்கருத்தில் ஒருமுறை இருப்பதினால் அவன் பல்வேறு உடல்களை ஒன்றையடுத்து மற்றொன்று என்று பௌதீகச் சக்தியின் பாதிப்பின் கீழ் ஜட இயற்கையின் முக்குணங்களின் (சத்துவ, இரஜோ, தமோ குணங்கள்) தூண்டுதலினால் பெறுகிறான். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் மேலுலகிற்கும், சிலசமயம் பூவுலகிற்கும், சிலசமயம் கீழுலகங்களில் இழிந்த ஐந்துக்களிடையே பிறப்பதுவுமாக அலைந்து கொண்டிருக்கிறான். இவ்வாறு அவன் பல்வேறு வகை உடல்களின் காரணமாகத் தொடர்ந்து துன்பம் அனுபவிக்கிறான். இந்த இன்பமும் துன்பமும் சில சமயம் கலந்தும் வரும். சிலசமயம் அவை கடுமையாக இருக்கும், சிலசமயம் அவ்வாறு இருப்பதில்லை. இவ்வுடல் பந்தப்பட்ட ஆத்மாவின் மனயூகத்தினால் விளைவதாகும். அவன் தனது மனம் மற்றும் அறிவுப் புலன்கள் ஐந்தினைப் பயன்படுத்துகிறான். இவையே பல்வேறு உடல்களையும் பல்வேறு பந்தங்களையும் கொண்டு வருகின்றன. மாயை என்னும் புறச்சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் இப்புலன்களைப் பயன்படுத்துவதினால் பௌதீகத் தோற்றத்தின் துன்ப நிலைகளை உயிர்வாழி அனுபவிக்கிறான். அவன் உண்மையில் இதிலிருந்து விடுதலையினையே தேடுகின்றான், அவ்வாறு அவன் மிகுந்த சிரமத்தின் பேரில் விடுதலை பெற்றப்பிறகும் பொதுவாக அவன் குழப்பமே அடைகிறான். வாழ்க்கைக்கு இவ்வாறு போராடியும் கூட பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளின் அன்புத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் பக்தர்களின் அடைக்கலத்தினை அவனால் பெற முடிவதில்லை.

பதம் 5.14.2 : பௌதீக வாழ்க்கைக் காட்டில் அடக்கமுடியாதப் புலன்கள் கொள்ளைக்காரர்களைப் போன்றவையாகும். கிருஷ்ண உணர்வில் வளர்ச்சி பெறுவதற்காக பந்தப்பட்ட ஆத்மா சிறிது பணம் சம்பாதிக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கட்டுப்படுத்தமுடியாத புலன்கள், புலனுகர்ச்சியின் மூலம் அவனது பணத்தைக் கொள்ளையடிக்கின்றன. புலன்கள் கொள்ளைக்காரர்கள் ஆவர். ஏனெனில் அவை காண்பது, முகர்வது, சுவைப்பது, தொடுவது, கேட்பது, விரும்புவது, எண்ணுவது போன்றவற்றிற்காகத் தேவையின்றி ஒருவனை அப்பணத்தைச் செலவிடச் செய்யும். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா அவன் புலன்களின் நுகர்ச்சிக்குக் கட்டுப்படுகிறான். இதன்மூலம் அவனது பணம் செலவிடப்படுகிறது. இப்பணம் உண்மையில் சமய தர்மங்களை நிறை வேற்றுவதற்காகச் சேமிக்கப்பட்டதாகும். ஆனால் அது கொள்ளையிடும் புலன்களினால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பதம் 5.14.3 : அன்பார்ந்த மன்னனே, பௌதீக உலகிலுள்ள குடும்ப உறுப்பினர்கள், மனைவி மக்கள் என்பது பெயருக்குத்தானே தவிர அவர்கள் உண்மையில் புலிகளையும், நரிகளையும் போன்று நடந்து கொள்கின்றனர். மேய்ப்பவன் தனது ஆடுகளைத் தன்னால் முடிந்த அளவிற்குப் பாதுகாக்கிறான், ஆனால் புலிகளும், நரிகளும் அவற்றைப் பலாத்காரமாக எடுத்துக்கொண்டு ஒடிவிடுகின்றன. அதுபோல் ஒரு கஞ்சன் தன் பொருளையெல்லாம் மிகவும் கவனமாகப் பாதுகாக்க விரும்பினாலும் அவனது குடும்ப உறுப்பினர்கள், அவன் என்னதான் கண்காணித்தப் போதிலும் அவனது செல்வங்கள் அனைத்தையும் பலவந்தமாகப் பறித்துக் கொள்கின்றனர்.

பதம் 5.14.4 : நிலத்தை ஒவ்வொரு வருடமும் உழவன் உழுகிறான், அதிலுள்ள வேர்களையும், களைகளையும் முற்றிலும் ஒழிக்கிறான். இருந்த போதிலும் அதிலுள்ள முளைக்காத விதைகள், மீண்டும் விதை விதைக்கும்போது அவற்றுடன் சேர்ந்து முளைத்து விடுகின்றன. என்ன தான் ஆழமாக உழுதபோதிலும் களைகளும் அடர்த்தியாக முளைக்கின்றன. அதுபோல் க்ரஹஸ்த ஆஸ்ரமும் (இல்லற வாழ்க்கை) பலன்தரும் செயலின் களமாக இருக்கிறது. இல்லறவாழ்க்கையினை மகிழ்ந்தனுபவிக்கும் ஆசை முற்றிலும் வேரறுக்கப்படவில்லையெனில் அது மீண்டும் மீண்டும் முளைக்கிறது. பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த கற்பூரம் முழுவதையும் எடுத்துவிட்டப்பிறகும் பாத்திரத்தில் கற்பூர வாசனை இருந்து கொண்டே இருக்கிறது. ஆசை என்னும் விதைகள் அழிக்கப்படாதவரை பலன்தரும் செயல்களும் அழிக்கப்படுவதில்லை.

பதம் 5.14.5 : பௌதீக வளங்கள் மற்றும் உடைமைகள் மீது பற்றுடையவனாக இருக்கும் பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் உண்ணிகள், கொசுக்கள், வெட்டுக்கிளிகள், பிறஉயிர்களைத் தின்னும் பெரிய பறவைகள் மற்றும் எலிகளினால் துன்பத்திற்காளாகிறான். இருந்தும் அவன் பௌதீக வாழ்க்கைப் பாதையிலேயே இன்னும் நடைபோட்டுக் கொண்டிருக்கிறான். அறியாமையின் காரணமாக அவன் காமவசப்பட்டு பலன்தரும் செயலில் ஈடுபடுகிறான். அவன் மனம் இச்செயல்களில் ஆழ்ந்திருக்கும் காரணத்தினால், அவன் வானத்திலுள்ள மாளிகையைப்போல் பொய்ம்மைத் தோற்றமுடைய பௌதீக வாழ்வினை நிரந்தரமானதாகப் பார்க்கிறான்.

பதம் 5.14.6 : சிலசமயம் வானத்திலுள்ள மாளிகையில் (கந்தர்வ—புரம்) பந்தப்பட்ட ஆத்மா உண்ணவும், பருகவும் பாலுறவு கொள்பவனாகவும் இருக்கிறான். இவற்றின் மீது அதீதப் பற்றுடையவனானாதினால் அவன் பாலைவனத்தில் கானல் நீரைத்தேடி மான் ஒடுவதைப் போல் புலனுகர்ச்சிப் பொருட்களின் பின்னே ஒடிக்கொண்டிருக்கிறான்.

பதம் 5.14.7 : சிலசமயம் உயிர்வாழி தங்கம் என்னும் மஞ்சள்நிற மலத்தின் மீது ஆசை கொண்டு அதன் பின்னே ஒடுகிறான். இத்தங்கம் பௌதீகவளம் மற்றும் காழ்ப்புணர்ச்சிக்கு மூலாதாரமாக இருப்பதோடு, இது ஒருவனை தவறானப் பாலுறவு, சூது, மாமிசம் உண்பது, மதுவருந்துவது போன்றவற்றிலும் ஈடுபடுத்தும் திறனுடையதாகும். காட்டிலுள்ள சதுப்புநிலத்தில் எரியும் பாஸ்பரஸ் ஒளியினை நெருப்பென்று எண்ணி குளிரால் வாடுபவன், அதில் குளிர்காய ஒடுவதைப் போன்று இரஜோ குணத்தினால் வெல்லப்பட்ட மனமுடையவர்கள் தங்கத்தின் மஞ்சள் வண்ணத்தினால் கவரப்படுகின்றனர்.

பதம் 5.14.8 : சிலநேரம் பந்தப்பட்ட ஆத்மா தன் உடலைப் பேணுவதற்காக தான் வசிப்பதற்குரிய ஒரு வீடு, குடிநீர் வசதி மற்றும் செல்வம் போன்றவற்றைக் கண்டுபிடிப்பதில் ஆழ்ந்திருக்கிறான். இவ்வாறு பல்வேறு அத்தியாவசியத் தேவைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் ஆழ்ந்திருப்பதினால் அவன் எல்லாவற்றையும் மறந்து பௌதீக வாழ்க்கை என்னும் காட்டைச் சுற்றி நித்தியமாக ஒடிக் கொண்டிருக்கிறான்.

பதம் 5.14.9 : சிலசமயம் சூறாவளிக் காற்றின் புழுதியினால் கண்கள் குருடாவதைப் போன்று ‘ப்ரமதா’ என்றழைக்கப்படும் எதிர் பாலியலின் அழகினை பந்தப்பட்ட ஆத்மா பார்க்கிறான். இவ்வாறு குழப்பமடைவதினால் அவன் ஒரு பெண்ணின் மடிமீது உயர்த்தப்படுகிறான். அப்போது அவனது நல்லுணர்வுகள் இரஜோ குணத்தின் வலிமையால் வெல்லப்படுகின்றன. இவ்வாறு அவன் காம இச்சையினால் பெரும்பாலும் குருடனாகிறான். மேலும் பாலியல் வாழ்க்கைக்கான ஒழுங்குமுறை விதிகளையும் புறக்கணிக்கிறான். தான் இவ்வாறு புறக்கணிப்பதை பல்வேறு தேவர்கள் சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறியான். எதிர்காலத்தில் தனக்குக் கிடைக்கக் கூடியத் தண்டனையினை மறந்து அவன் இரவின் நடுச்சாமத்தில் தவறான பாலுறவினை அனுபவித்து மகிழ்கிறான்.

பதம் 5.14.10 : பந்தப்பட்ட ஆத்மா சில சமயம் பௌதீக உலகிலுள்ள புலனின்பத்தின் பயனற்றத் தன்மையினைச் சுயமாகப் பாராட்டுகிறான். சில சமயம் பௌதீக இன்பம் துன்பம் நிறைந்ததாகும் என்றும் கருதுகிறான். ஆயினும் அவனது உறுதியான உடற்கருத்தின் காரணமாக அவனது நினைவு அழிக்கப்படுகிறது. அதனால் அவன், பாலைவனத்தில் உள்ள கானல் நீரின் பின்னே விலங்கு ஒன்று ஒடுவதுபோல் பௌதீக இன்பத்தின் பின்னே ஒடுகிறான்.

பதம் 5.14.11 : சில சமயம் பந்தப்பட்ட ஆத்மா தன்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் கடிந்துரைகளினால் தனது பகைவர்களும் அரசு அதிகாரிகளும் கண்டிப்பது கண்டு மிகுந்த துக்கமுறுகிறான். அச்சமயம் அவனது காதுகளும், இதயமும் மிகவும் வருந்துகின்றன. இக்கண்டனமானது ஆந்தைகள் மற்றும் சில்வண்டுகளின் இரைச்சலுடன் ஒப்பிடக்கூடியதாகும்.

பதம் 5.14.12 : முந்தைய பிறப்புக்களில் செய்த புண்ணியச் செயல்களினால் பந்தப்பட்ட ஆத்மா இப்பிறப்பில் பௌதீக வசதிகளைப் பெறுகிறான். இவ்வசதிகள் தீர்ந்து விடும்பொழுது அவன் தனது இப்பிறப்பிற்கோ, மறுபிறப்பிற்கோ ஒருநாளும் உதவாத செல்வங்களையும், வளங்களையும் தஞ்சமடைகிறான். இதன் காரணமாக அவன் இவ்வளங்களையுடைய செத்தாரைப் போன்றிருக்கும் மனிதர்களை அணுகுகிறான். இம் மனிதர்கள் தூய்மையற்ற மரங்கள் கொடிகள் மற்றும் நச்சு நீர்க் கிணற்றுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றனர்.

பதம் 5.14.13 : சிலசமயம் பௌதீக உலகம் என்னும் காட்டிலுள்ளத் துன்பங்களை நீக்குவதற்காகப் பந்தப்பட்ட ஆத்மா நாத்திகர்களிடமிருந்து மலிவான ஆசிகளைப் பெறுகிறான். பின்னர் அவன் தனது புத்தியனைத்தையும் அவர்களின் தொடர்பினால் இழக்கிறான். இது தண்ணீரில்லாத ஆற்றில் குதிப்பது போன்றதாகும். இதன் விளைவாக அவன் தன் தலையை உடைத்துக் கொள்கிறான். அவன் வெம்மையினைக் குறைத்துக் கொள்வதற்கும் இயலாதவனாகி இரு வழிகளிலும் துன்புறுகிறான். தவறான வழிக்கு ஆளானப் பந்தப்பட்ட ஆத்மா, வேதத்திற்குப் புறம்பாகப் பிரச்சாரம் செய்யும், சாதுக்கள் மற்றும் சுவாமிகள் என்போரை அணுகுகிறான். அவர்களிடமிருந்து அவன் இப்போதும் சரி, எதிர் காலத்திலும் சரி எந்தவிதமான நன்மையும் அடையமுடியாது.

பதம் 5.14.14 : இப்பௌதீக உலகில் பந்தப்பட்ட ஆத்மா பிறரைச் சுரண்டிய பின்னரும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கின்றான். முக்கியமற்ற ஒரு சிறு துரும்பாக இருப்பினும் தனது உறவினர்களின் உடைமைகளை எடுத்துக் கொள்கிறான். தனது தந்தை, தனயன், உறவினர்களிடமிருந்து அவனால் பொருள்களைப் பெறமுடியவில்லையென்றால் அவன் அவர்களுக்கு எல்லாவிதமானத் தொல்லைகளையும் தரத்தயாராகிறான்.

பதம் 5.14.15 : இவ்வுலகில் இல்லற வாழ்க்கையானது உண்மையில் காட்டில் கொழுந்து விட்டெரியும் நெருப்புப் போன்றதாகும். இங்கு சிறிது மகிழ்ச்சியும் இல்லை. மகிழ்ச்சியற்ற நிலையில், படிப்படியாக ஒருவன் மேலும் மேலும் சிக்கிக் கொள்கிறான். இல்லறவாழ்க்கையில் நித்திய மகிழ்ச்சிக்கு சாதகமாக எதுவும் இல்லை. இல்வாழ்வில் சிக்கிக் கொண்டதினால் பந்தப்பட்ட ஆத்மா சோகத்தீயினால் எரிக்கப்படுகிறான். சிலசமயம் தான் துரதிர்ஷ்டசாலியென்று அவன் தன்னையே நொந்து கொள்கிறான். சிலசமயம் தான் தனது முற்பிறப்பில் புண்ணியச் செயல்கள் எதுவும் செய்யாததினால் தான் இவ்வாறு துன்புறுவதாகக் கூறுகிறான்.

பதம் 5.14.16 : அரசாங்கத்தினர் எப்போதும் இரத்தம் குடிக்கும் ராட்சதர்கள் என்று (நர மாமிசம் தின்போர்) அழைக்கப்படுகின்றனர். சிலசமயம் இந்த அரசாங்கத்தினார் பந்தப்பட்ட ஆத்மாவிற்கு எதிராக மாறி அவன் சேர்த்துவைத்திருந்த செல்வம் அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். தான் உயிராகப் போற்றிய செல்வத்தை இழந்துவிட்டதினால் பந்தப்பட்ட ஆத்மா ஆர்வம் அனைத்தையும் இழந்து விடுகிறான். உண்மையில் இது அவன் உயிர் இழந்தது போன்றதாகும்.

பதம் 5.14.17 : சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா தன் தந்தையோ அல்லது தாத்தாவோ தன் மைந்தன் வடிவத்தில் மீண்டும் வந்திருப்பதாகக் கருதுகிறான். இவ்வாறு அவன் சிலசமயம் கனவில் அனுபவித்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். பந்தப்பட்ட ஆத்மா இதுபோன்ற மனக்கற்பனைகளில் இன்பமடைகிறான்.

பதம் 5.14.18 : இல்லற வாழ்க்கையில் ஒருவன் பல்வேறு யக்ஞங்கள் மற்றும் பலன் தரும் செயல்கள் அதிலும் சிறப்பாக விவாஹ யக்ஞம் (திருமணச்சடங்கு) மற்றும் முப்புரிநூல் அணியும் சடங்கு செய்வதற்கு ஆணையிடப்படுகிறான். இவையெல்லாம் விரிவானது என்பதோடு நிறைவேற்றுவதற்குச் சிரமமானதும் கூட. இவையெல்லாம் ஒருவன் பௌதீகச் செயல்களிடத்துப் பற்றுடையவனாக இருக்கும்பொழுது தாண்டியே தீர வேண்டிய பெரிய மலையுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றன. இச்சடங்குகள் அனைத்தையும் கடக்க வேண்டுமென்று விரும்புபவன், மலை ஏறும்பொழுது அதிலுள்ள முட்கள் மற்றும் கற்கள் போன்றவைக் குத்திக் கிழிப்பதினால் ஒருவன் என்ன வேதனை அடைவானோ அந்த வேதனையினை அனுபவிக்கிறான். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா அளவின்றி துன்பமுறுகிறான்.

பதம் 5.14.19 : சிலசமயம் உடல் சார்ந்த பசி மற்றும் தாகத்தினால் பந்தப்பட்ட ஆத்மா மிகுந்த இடருற்று பொறுமை இழந்து தனது பாசத்திற்குரிய மனைவி, மகன், மகள் போன்றோரிடம் கூட சினம் கொள்கிறான். இவ்வாறு அவர்களிடம் அன்பில்லாதவனாகி மேலும் அதிகமாகத் துன்புறுகிறான்.

பதம் 5.14.20 : சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித்து மகாராஜாவிடம் தொடர்ந்து கூறினார்: அன்பிற்குரிய அரசனே, உறக்கம் என்பது ஒரு மலைப்பாம்பு போன்றதாகும். பௌதீக வாழ்க்கை என்னும் காட்டில் அலைந்து கொண்டிருப்பவன் உறக்கம் என்னும் மலைப்பாம்பினால் எப்போதும் விழுங்கப்படுகிறான். இப்பாம்பினால் கடிக்கப்படுவதினால் அவன் எப்போதும் அறியாமையின் அடர்ந்த இருட்டினுள் எப்போதும் இருக்கிறான். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மாக்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.

பதம் 5.14.21 : பௌதீக வாழ்க்கைக் காட்டில் பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் காழ்ப்புணர்ச்சியுடைய எதிரிகளினால் கடிக்கப்படுகிறான். இவர்கள் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றனர். பகைவனின் சூழ்ச்சிகளினால் பந்தப்பட்ட ஆத்மா தனது கெளரவமான நிலையிலிருந்து வீழ்கிறான். ஆர்வத்தின் காரணமாக அவனால் சரியாக உறங்கக் கூட முடிவதில்லை. இவ்வாறு அவன் மேலும் மேலும் மகிழ்ச்சியற்ற நிலைக்கு ஆளாகி படிப்படியாகத் தனது புத்தி மற்றும் உணர்வினை இழக்கிறான். இந்நிலையில் அவன் பெரும்பாலும் நித்தியமாக அறியாமை என்னும் பாழுங்கிணற்றினுள் வீழ்ந்திருக்கும் குருடனைப் போல் இருக்கிறான்.

பதம் 5.14.22 : பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் புலனுகர்ச்சியின் மூலம் கிடைக்கும் சிறிதளவு இன்பத்தில் கவர்ச்சியடைகிறான். இவ்வாறு அவன் தவறான பாலுறவு கொள்வதோ அல்லது பிறர் பொருளைத் திருடவோ செய்கிறான். இதுபோன்ற நேரத்தில் அவன் அரசாங்கத்தினால் கைது செய்யப்படவோ அல்லது அப்பெண்ணின் கணவன் அல்லது பாதுகாவலரால் கண்டிக்கப்படுகிறான். இவ்வாறு ஒரு சிறிய பௌதீகத் திருப்திக்காக அவன் நரகநிலையினுள் வீழ்கிறான் என்பதோடு கற்பழிப்பு, கடத்திச்செல்லுதல், திருட்டு போன்றவற்றிற்காகச் சிறையிலிடப்படுகிறான்.

பதம் 5.14.23 : அதனால்தான் கற்றறிந்த அறிஞர்களும் உன்னதமானவர்களும் பலன் தரும் செயலின் பௌதீகப் பாதையினை நிந்திக்கின்றனர். ஏனென்றால் அது பௌதீகத் துன்பங்களுக்கு மூலதாரமாகவும், விளைநிலமாகவும் இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் இருக்கின்றது.

பதம் 5.14.24 : பணத்திற்காகப் பந்தப்பட்ட ஆத்மா அடுத்தவனை ஏமாற்றவோ அல்லது அவனிடமிருந்து திருடவோ செய்கிறான். இப்பணத்தை அவன் தன்னிடம் பத்திரமாக வைத்துக் கொண்டு தண்டனையிலிருந்து எப்படியோ தப்பித்து விடுகிறான். பிறகு தேவதத்தன் என்பவன் அவனை ஏமாற்றி அவனிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறான். அதுபோல் விஷ்ணுமித்திரன் என்பவன் தேவதத்தனிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறான். எது எப்படியாயினும் பணம் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதில்லை. அது ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறிக் கொண்டே இருக்கிறது. இறுதியில் பணத்தை யாரும் அனுபவிக்க முடியாது போகவே அது முழுமுதற் கடவுளின் சொத்தாகவே இருக்கிறது.

பதம் 5.14.25 : மும்முனைத் துன்பங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இயலாத பந்தப்பட்ட ஆத்மா மிகுந்த துக்கமுற்று சோகத்தில் வாழ்கிறான். இம்மும்முனைத் துன்பங்கள், தேவர்களின் காரணமாக (குளிர்ந்த காற்று கொதிக்கும் வெய்யில்) மனத்துன்பத்தினால் அனுபவிக்கப்படும் துன்பங்கள், பிற உயிர்வாழிகளால் உண்டாகும் துன்பங்கள், மேலும் மனம் மற்றும் உடலிலிருந்து உண்டாகும் துன்பங்கள் ஆகும்.

பதம் 5.14.26 : பணம் வரவு செலவு முறையினைப் பொருத்தமட்டில் ஒருவன் மற்றொருவனை ஒரு சிறிய செப்புக்காசு அல்லது அதற்குக் குறைந்த அளவு ஏமாற்றினால் கூட இருவரும் பெரிய பகைவர்களாகிவிடுவர்.

பதம் 5.14.27 : இப்பௌதீக வாழ்வில் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஏராளமானத் தொல்லைகள் இருக்கின்றன. இவையனைத்தும் கடப்பதற்கரியதாகும். இதற்கும் மேல் இன்னல்கள், சுகம், துக்கம், பற்று, துவேசம், பயம், போலிக் கெளரவம், காழ்ப்புணர்ச்சி, அவமானம், பசி, தாகம், துன்பம், நோய், பிறப்பு, முதுமை, இறப்பு போன்றவற்றிலிருந்தும் வருகின்றன. இவையனைத்தும் ஒன்று சேர்ந்து பௌதீகப் பந்தப்பட்ட ஆத்மாவிற்கு துன்பத்தைத் தவிர வேறெதையும் அளிப்பதில்லை.

பதம் 5.14.28 : சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா மாயையின் உருவங்களினால் (மனைவி, மக்கள், நண்பர்) கவரப்பட்டு, ஒரு பெண்ணால் மார்புறத் தழுவி அணைக்கப்படுவதில் ஆர்வமுடையவனாகிறான். இவ்வாறு அவன் தனது புத்தி மற்றும் வாழ்க்கை இலட்சியத்திற்கான அறிவு போன்றவற்றை இழக்கிறான். அச்சமயம் ஆன்மீக வளர்ச்சிக்கான முயற்சி ஏதும் செய்யாது அவன் தனது மனைவி அல்லது காதலியிடம் அதிகப் பற்றுடையவனாகி அவள் வசிப்பதற்கு அழகிய இல்லம் ஒன்றை அமைத்துக் கொடுக்க முயற்சிக்கிறான். மீண்டும் அவன் அந்த வீட்டின் அடைக்கலத்தின் கீழ் மிக்க ஈடுபாடு கொண்டு தன் மனைவி மக்களின், பார்வை, பேச்சு போன்றவற்றினால் வசப்படுத்தப்படுகிறான். இதனால் அவன் தனது கிருஷ்ண உணர்வை இழந்து பௌதீக வாழ்வின் அடர்ந்த இருளினுள் தன்னைத் தானேத் தூக்கிக் கொள்கிறான்.

பதம் 5.14.29 : பகவான் கிருஷ்ணர் பயன்படுத்தும் அவரது ஆயுதமான சக்கரம் ஹரி சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இச்சக்கரம் காலத்தின் சக்கரமாகும். இது அணுவின் காலம் தொடங்கி பிரம்மதேவனின் மரண காலம் வரை விரிகிறது. இது அனைத்துச் செயல்களையும் கட்டுப்படுத்துகிறது. இது எப்போதும் சுழன்று கொண்டு பிரம்மதேவனிலிருந்து கடைப்பட்ட ஒரு புல்வரை உயிர்வாழிகளின் உயிர்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு இளமை பருவத்திலிருந்த ஒருவன் முதியவனாகவும் மாறி வாழ்வின் இறுதியினை அடைகிறான். இக்காலச் சக்கரத்தின் சுழற்சியைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றதாகும். இச்சக்கரம் குறி தவறாததாகும். ஏனென்றால் இது முழுமுதற் கடவுளின் சொந்த ஆயுதம் ஆகும். சில சமயம் மரணத்திற்கு அஞ்சும் பந்தப்பட்ட ஆத்மா தன்னை மரணத்திலிருந்து காக்கக் கூடிய ஒருவரை வணங்க வேண்டுமென்று விரும்புகிறான். அதனால் இடையறாது சுழலும் காலத்தை தன் வசம் வைத்திருக்கும் முழுமுதற் கடவுளைப்பற்றி அவன் கவலைப்படுவதில்லை. பந்தப்பட்ட ஆத்மா அதற்குப் பதிலாக அதிகாரப்பூர்வமற்ற சாத்திரங்கள் குறிப்பிடும் மனிதனால் உருவாக்கப்பட்டக் கடவுளைத் தஞ்சமடைகிறான். இக்கடவுள் பருந்துகள், கழுகுகள், நாரைகள், காக்கைகள் போன்றோர் ஆவர். வேத இலக்கியங்கள் இவர்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. தவிர்க்க முடியாத மரணம் என்பது ஒரு சிங்கத்தின் தாக்குதலைப் போன்றதாகும். அத்தாக்குதலிலிருந்து கழுகுகளும், பருந்துகளும், காக்கைகளும், நாரைகளும் ஒருவனைக் காக்க முடியாது. மனிதனால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்றக் கடவுள்களைத் தஞ்சமடைந்தவனை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாது.

பதம் 5.14.30 : முழுமுதற் கடவுள் மீது நம்பிக்கையற்ற போலி சுவாமிகளும், யோகிகளும், அவதாரங்களும் பாஷண்டீக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்குள் அடைப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு ஆன்மீக வளர்ச்சியின் உண்மையான பாதை எதுவென்று தெரியாது. மேலும் யார் அவர்களிடம் சென்றாலும் அவன் முறை வரும்பொழுது அவன் ஏமாற்றப்படுகிறான். இவ்வாறு ஒருவன் ஏமாற்றப்படும் பொழுது அவன் சிலசமயம் வேதநெறிகளை உண்மையில் பின்பற்றுபவர்களைச் சரணடைகிறான். (அந்தணர்கள் அல்லது கிருஷ்ண உணர்வுடையோர்). இவர்கள் வேத நெறிகளுக்கேற்ப எவ்வாறு முழுமுதற் கடவுளை வழிபடுவது என்று அனைவர்க்கும் கற்றுக் கொடுக்கின்றனர். ஆயினும் இந்நெறிகளில் உறுதியாக நிற்கும் திறனில்லாத இந்த துஷ்டர்கள் மீண்டும் கீழே வீழ்ந்து, பாலியல் தூண்டுதலுக்கு ஏற்பாடுகள் செய்வதில் மிகவும் தேர்ந்தவர்களான சூத்திரர்களைச் சரணடைகின்றனர். பாலியலானது குரங்குகளுக்கு மத்தியில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாகும். பாலியல் மூலம் புத்துணர்ச்சி பெறுவோர் குரங்குகளின் சந்ததியினர் என்று அழைக்கப்படலாம்.

பதம் 5.14.31 : இவ்வாறு குரங்குகளின் சந்ததியினர் ஒருவரோடொருவர் இணைகின்றனர். இவர்களே பொதுவாக சூத்திரர்கள் என்று அறியப்படுகின்றனர். வாழ்க்கை இலட்சியம் என்னவென்று அறியாது எந்த விதத்தயக்கமுமின்றி அவர்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். அவர்கள் ஒருவர் மற்றவரின் முகத்தைக் காண்பதினால் கவர்ச்சியடைகின்றனர். முகங்களே அவர்களின் புலனுகர்ச்சியை நினைவுறுத்துகின்றன. “க்ராம்ய காம” எனப்படும் பௌதீகச் செயல்களிலேயே அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். இவ்வாறு அவர்கள் ஒருநாள் தமது குறைந்த ஆயுள் முடிவுறும் என்பதை முற்றிலும் மறந்தவர்களாகி அவர்கள் பரிணாம வளர்ச்சியின் சுழற்சியில் இழிவடைகின்றனர்.

பதம் 5.14.32 : குரங்கு எவ்வாறு ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவுகிறதோ, அது போல் பந்தப்பட்ட ஆத்மா ஒருடலிலிருந்து மற்றோர் உடலிற்குத் தாவுகிறான். இறுதியில் குரங்கு வேடனால் பிடிக்கப்பட்டு வெளியேற முடியாமல் போகிறது. பந்தப்பட்ட ஆத்மாவும் கணநேரப் பாலியல் இன்பத்தினால் பிடிக்கப்பட்டு பல்வேறு உடல்களின் மீது பற்றுடையவனாகி இல்வாழ்க்கையில் சிறைப்படுகிறான். இல்லற வாழ்க்கை, பந்தப்பட்ட ஆத்மாவிற்கு கணநேர பாலியல் இன்ப விழாவினை அளிக்கிறது. இதனால் அவன் பௌதீகப் பிடியிலிருந்து வெளிவருவதற்கு முற்றிலும் இயலாதவனாகிறான்.

பதம் 5.14.33 : இப்பௌதீக உலகில் பந்தப்பட்ட ஆத்மா முழுமுதற் கடவுளுடன் தனக்குள்ள உறவினை மறந்தவனாகி கிருஷ்ண உணர்வில் அக்கறையின்றி இருக்கும் பொழுது அவன் பல்வேறு வகையான தீச்செயல்களிலும் பாவச்செயல்களிலும் ஈடுபடுகிறான். பிறகு அவன் மும்முனைத் துன்பங்களுக்கு ஆளாகிறான். பின்னர் மரணம் என்னும் யானைக்கு அஞ்சி மலைக்குகையின் இருளில் வீழ்கிறான்.

பதம் 5.14.34 : பந்தப்பட்ட ஆத்மா கடுமையான குளிர் மற்றும் சூறாவளிக் காற்று போன்றவற்றினால் பாதிக்கப்படும் பல்வேறு உடல் துன்பங்களை அனுபவிக்கிறான். அவன் பிற உயிர்களின் செயல்களினாலும் இயற்கை உத்பாவங்களினாலும் துன்பமுறுகிறான். இவற்றிற்கு எதிராக அவனால் செயல்பட முடியாத பொழுது அவன் இயற்கையிலேயே மிக்க விசனப்படுகிறான். ஏனென்றால் அவன் பௌதீக வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறான்.

பதம் 5.14.35 : சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா பணம் வரவு செலவு செய்கிறான். ஆனால் உரிய காலத்தில் ஏமாற்றுவதின் காரணமாகப் பகைமை உண்டாகிறது. சிறிது இலாபம் கிடைத்த போதிலும் பந்தப்பட்ட ஆத்மாக்கள் தமது நட்பை முறித்துக் கொண்டு பகைவர்களாகின்றனர்.

பதம் 5.14.36 : சிலசமயம் பணம் இல்லாததினால் பந்தப்பட்ட ஆத்மா வசதியான இருப்பிடத்தைப் பெறமுடியாமல் போகிறான். சிலநேரம் தான் உட்காருவதற்கும், பிற தேவைகளுக்காகவும் கூட இடமின்றி தவிக்கிறான். அதாவது அவன் வறுமையில் வீழ்கிறான் அப்போது நேரான வழியில் தனது தேவைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாமற்போகும் பொழுது அவன் அநியாயமான வழியில் பிறர் சொத்தை அபகரிக்க முடிவு செய்கிறான். அவனால் அவன் விரும்பும் பொருள்களை அடைய முடியாமற் போகும்பொழுது அவன் பிறரிடம் அவமானப்பட்டு அதனால் மிகுந்த துக்கத்திற்கு ஆளாகிறான்.

பதம் 5.14.37 : மக்கள் பகைவர்களாக இருந்தபோதிலும் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் சிலசமயம் திருமணம் செய்து கொள்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக இத்திருமணங்கள் நீண்டநாள் நிலைத்திருப்பதில்லை. இதில் ஈடுபட்டவர்கள் விவாகரத்து அல்லது வேறு வழிமுறைகளினால் பிரிகின்றனர்.

பதம் 5.14.38 : பௌதீக உலகின் பாதையானது பௌதீகத்துன்பங்கள் நிறைந்ததாகும். மேலும் பல்வேறு துன்பங்கள் பந்தப்பட்ட ஆத்மாவை இடையூறு செய்கின்றன. சிலசமயம் அவன் நஷ்டமடைகிறான். சிலசமயம் இலாபமடைகிறான். இரண்டிலும், பாதை முழுவதும் ஆபத்தே நிறைந்திருக்கிறது. சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா மரணம் அல்லது வேறு வழியில் தன் தந்தையிடமிருந்து பிரிக்கப்படுக்கிறான். அவரை விட்டு வந்தவுடன் அவன் படிப்படியாக தன் குழந்தைகள் போன்ற பிறரிடம் பற்றுடையவானகிறான். இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் மோகத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகிறான். சிலசமயம் அவன் அச்சங்கொண்டு கூக்குரலிட்டு அழுகிறான். சிலசமயம் தன் குடும்பத்தைக் காப்பதினால் மகிழ்ச்சியடைகிறான். இம்மகிழ்ச்சி அதிகரிக்கும் பொழுது சிலசமயம் இனிமையாகப் பாடுகிறான். இவ்வாறு காலாகாலமாக முழுமுதற் கடவுளுடன் தனக்கிருந்த உறவினை மறந்து சிக்கிக் கொள்கிறான். இவ்வாறு அவன் ஆபத்து நிறைந்த பௌதீக வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்கிறான். இப்பாதையிலும் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை. ஆபத்து நிறைந்த பௌதீக வாழ்க்கைப் பாதையிலிருந்து வெளிவர உணர்வு பெற்றோர் முழுமுதற் கடவுளைச் சரணடைய வேண்டும். பக்தித் தொண்டுப் பிடியிலிருந்து மீளமுடியாது. இதன் முடிவு பௌதீக வாழ்க்கையில் ஒருவன் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பதேயாகும். ஒருவன் கிருஷ்ண உணர்விற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

பதம் 5.14.39 : உயிர்வாழிகள் அனைவரிடமும் நண்பர்களாக இருக்கும் முனிசிரேஷ்டர்களிடம் அமைதியான உணர்வு இருக்கும். இவர்கள் தங்கள் மனத்தையும் புலன்களையும் அடக்கியவர்கள் என்பதோடு கடவுளிடம் திருப்பிச் செல்லும், விடுதலைப் பாதையினை இவர்கள் மிக எளிதில் எய்தப் பெறுகின்றனர். துரதிர்ஷ்டத்தினாலும், துன்பமிக்கப் பௌதீக நிலைகளில் பற்றுடைமையினாலும் ஒரு லோகாயத மனிதனால் இவர்களுடன் தொடர்பு கொள்ள முடிவதில்லை.

பதம் 5.14.40 : ஏராளமான ராஜரிஷிகள் மிகப்பெரிய வேள்விகள் செய்வதில் தேர்ந்தவர்களாகவும் பிற தேசங்களை வெல்லும் திறனுடையவராகவும் இருந்தனர், அச்சக்திகள் பெற்றிருந்தும் அவர்கள் முழுமுதற் கடவுளின் அன்புத் தொண்டினைப் பெற முடியாதவர்களாயிருந்தனர். அது எதனாலென்றால் அந்த மாமன்னர்கள் “நான் இந்த உடல், இது என் சொத்து” என்கின்ற தவறான உணர்வினை வெல்ல முடியாதவர்களாக இருந்தனர் என்பதினாலேயாம். இதனால் அவர்கள் பிற மன்னர்களுடன் பகைமை கொண்டு, யுத்தம் செய்து வாழ்க்கையின் உண்மை இலட்சியத்தினை நிறைவேற்றாது மாண்டுபோயினர்.

பதம் 5.14.41 : பந்தப்பட்ட ஆத்மா பலன்தரும் செயலின் கொடியினை அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளும்பொழுது அவன் தனது புண்ணியச் செயல்களினால் மேலுலகத்திற்கு உயர்த்தப்பட்டு நரக நிலையிலிருந்து விடுதலை பெறலாம். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக அவன் அங்கே நிலைத்து இருக்க முடியாது. அவன் தனது புண்ணியச் செயல்களின் பலனை அனுபவித்துப் பிறகு அவன் கீழுலகத்திற்கு வரவேண்டியதிருக்கிறது. இவ்வாறு அவன் தொடர்ந்து மேலும் கீழும். அலைந்து கொண்டிருக்கின்றான்

பதம் 5.14.42 : ஜடபரதரின் உபதேசங்களைச் சுருக்கி சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பிற்குரிய மன்னனே, ஜடபரதரால் குறிப்பிடப்பட்டிருக்கும் பாதையானது பகவானின் வாகனமான கருடன் பின்பற்றியப் பாதையைப் போன்றதாகும். மேலும் சாதாரண அரசர்கள் ஈக்களைப் போன்றோராவர். கருடனின் பாதையினை ஈக்களால் பின்பற்ற முடியாது. இன்றுவரை சிறந்த அரசர்களும், வெற்றி பெற்றத் தலைவர்களும் மனதினால் கூடப் பக்தித் தொண்டுப் பாதையைப் பின்பற்ற முடியாதவர்களாவர்.

பதம் 5.14.43 : வாழ்வின் உச்ச நிலையில் இருந்தபொழுது பரத மகாராஜா எல்லாவற்றையும் துறந்தார். ஏனென்றால் அவர் முழுமுதற் கடவுளான உத்தம சுலோகருக்குத் தொண்டு புரிவதில் பெருவிருப்பமுடையவராக இருந்தார். அவர் தனது அழகிய மனைவி, ஆருயிர் குழந்தைகள் உயிர் நண்பர்கள் மற்றும் வளம்மிக்க பெரிய இராஜ்ஜியத்தைத் துறந்தார். இவையனைத்தும் துறப்பதற்கு மிகவும் அரிதானவை என்ற போதிலும் கூட பரத மகாராஜா மிகவும் உயர்ந்தவர் ஆதலினால் இவற்றையெல்லாம் இழிந்த மலத்தைப் போல் எண்ணித் துறந்தார். இதுவே அவரது மேன்மையின் சிறப்பாகும்.

பதம் 5.14.44 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே பரத மகாராஜாவின் செயல்கள் அனைத்தும் வியப்பிற்குரியவையாகும். பிறர் துறப்பதற்கு அரியதாகக் கருதும் அனைத்தையும் அவர் தனது நாடு, மனைவி, மக்கள், குடும்பம் போன்ற எல்லாவற்றையும் துறந்தார். அவரிடமிருந்த வளங்கள் கண்டு தேவர்கள் கூடப் பொறாமை கொண்டனர், இருந்தும் அவர் அவற்றைத் துறந்தார். சிறந்த பக்தராவதற்கு அவரைப் போன்ற மகானுக்கு இது பொருத்தமானதேயாகும். அவரால் எல்லாவற்றையும் துறக்க முடிந்தது. ஏனென்றால் கிருஷ்ணரின் அழகு, வளம், புகழ், ஞானம், வலிமை மற்றும், முழுமுதற் கடவுளின் துறவு போன்றவற்றினால் அவர் மிகவும் கவரப்பட்டிருந்தார். அவருக்காக தான் விரும்பிய அனைத்தையும் துறக்கும் ஒருவன் மீது கிருஷ்ணரும் அதிகக் கவர்ச்சியுடையவராகிறார். உண்மையில் பகவானின் அன்புத் தொண்டின் மீது கவர்ச்சியுடையோர்க்கு விடுதலை என்பது கூட முக்கியத்துவமற்றதாகவேபடுகிறது.

பதம் 5.14.45 : மானின் உடலில் இருந்தபோதிலும் மகாராஜா பரதர் முழுமுதற் கடவுளை ஒரு போதும் மறந்தாரில்லை ஆகையினால் அவர் மானின் உடலைத் துறந்தபொழுது பின்வரும் பிரார்த்தனையை உரத்த குரலில் கூறினார்: “முழுமுதற் கடவுள் வேள்வியின் வடிவமாவார் சமயச் சடங்குகளின் பலன்களை அவரே அளிக்கிறார். சமய முறைகளைப் பாதுகாப்பவரும், யோகஸித்தியின் வடிவமும், அனைத்து ஞானங்களுக்கும் ஆதாரமாக இருப்பவரும், முழுப்படைப்பின் நெறியாளராகவும், ஒவ்வொரு உயிர்வாழியின் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும் அவரேயாவார். அவர் கவர்ச்சியும் அழகும் உடையவர். எனது உடலை இப்போது துறக்கிறேன், அவருக்கு எனது வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றேன். நான் எப்போதும் அவரது உன்னத அன்புத் தொண்டில் நித்தியமாக ஈடுபடுவேன் என்று நம்பிக்கை கொள்கின்றேன். இவ்வாறு கூறிய பின்னர் பரதமகாராஜா தன் உடலைவிட்டுப் பிரிந்தார்.

பதம் 5.14.46 : கேட்டல், ஒதுதல் (ஸ்வரணம் கீர்த்தனம்) போன்றவற்றில் ஆர்வமுடைய பக்தர்கள் தொடர்ந்து பரத மகாராஜவின் தூய குணங்களைப் பற்றிப் பேசவும் அவரது செயல்களைப் புகழ்ந்து போற்றவும் செய்கின்றனர். ஒருவன் மிகவும் பணிவுடன் புண்ணியங்கள் அனைத்தும் நிறைந்த பரத மகாராஜாவைப் பற்றி கேட்கவும், ஒதவும் செய்தால் அவனது ஆயுட்காலமும், பௌதீக வளமும் அதிகரிக்கின்றன. ஒருவன் மிக்கப் புகழ் பெற்று சொர்க்கலோகத்தை எளிதில் அடைகிறான் அல்லது பகவானின் தோற்றத்துடன் இணைவதன் மூலம் விடுதலை பெறுகிறான். பரத மகாராஜாவின் செயல்களை கேட்பது, ஒதுவது, புகழ்வதின் மூலம் ஒருவன் விரும்பிய அனைத்தையும் அடையலாம். இவ்வழியே ஒருவன் தனது பௌதீக மற்றும் ஆன்மீக ஆசைகளை நிறைவு செய்து கொள்ளலாம். இவைகளை ஒருவன் பிறரிடமிருந்து கேட்டுப் பெறவேண்டியதில்லை, பரத மகாராஜாவின் செயல்களை ஒருவன் படித்தால் போதும் ஒருவன் தான் விரும்பிய அனைத்தையும் எய்தப் பெறுவான்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare