அத்தியாயம் – 13
மன்னர் ரகூகணனுக்கும் மானுட பரதருக்கும்
இடையே மேலும் நடைபெற்ற உரையாடல்
பதம் 5.13.1 : பிரம்மத்தை முற்றிலும் உணர்ந்த மானுட பரதர் தொடர்ந்து கூறினார்; அன்பு மன்னர் ரகூகணனே, உலகின் பாதையில் உயிர்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை கடப்பதற்கு மிகவும் அரியதாகும். அதனால் உயிர் ஜனன மரணங்களை மீண்டும் மீண்டும் ஏற்றுக் கொள்கிறது. இயற்கையின் முக்குணங்களின் (சத்துவ, இரஜோ, தமோ குணங்கள்) பாதிப்பினால் உலகினால் மனிதன் ஆட்கொள்ளப்படுகிறான். இயற்கையின் மாயையினால் மனிதன் முச்செயல்களின் பலன்களை மட்டுமே காணக்கூடியவனாக இருக்கிறான். இப்பலன்கள், புண்ணியம், பாவம் மற்றும் இரண்டும் கலந்ததுவாகும். சமயம், பொருண்மை தத்துவம் (பரம் பொருளுடன் இணைதல்) போன்றவற்றின் மீது மனிதன் பற்றுடையவனாகிறான். ஒரு காட்டினுள் போய் அங்கு பொருட்களை இலாபத்திற்காகச் சேகரிக்கும் வணிகனைப் போல் அவன் இரவும் பகலும் மிகக் கடுமையாக உழைக்கிறான். ஆயினும் இந்த உலகில் அவனால் உண்மை இன்பத்தை ஒருக்காலும் அடைய முடியாது.

பதம் 5.13.2 : ஓ, மன்னர் ரகூகணனே, உலக வாழ்க்கை என்னும் காட்டில் மிகவும் வலிமை வாய்ந்த கொள்ளையர் அறுவர் உள்ளனர். கட்டுண்ட ஆத்மா சில உலக நன்மை வேண்டி இக்காட்டினுள் புகும்பொழுது இந்த அறுவரும் அவனைத் தவறான வழிக்கு ஆளாக்குகின்றனர். இவ்வாறு கட்டுண்ட வணிகன் தனது செல்வத்தை எவ்வாறு செலவிடுவது என்று அறியாது போவதினால் அவை இக்கொள்ளையர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. காட்டில் உள்ள புலிகள், நரிகள் போன்ற இரத்த வெறி பிடித்த மிருகங்கள் மேய்ப்பவரின் காவலிலிருந்து ஆட்டுச் குட்டியைக் கவர்ந்து செல்லக் காத்திருப்பது போல் அவனது மனைவியும் மக்களும் அவன் இதயத்தில் புகுந்து அவனைப் பல்வேறு வழிகளில் கொள்ளையடிக்கின்றனர்.

பதம் 5.13.3 : அக்காட்டில் புற்கள் மற்றும் கொடிகளினாலான அடர்த்தியான கொடிப் பந்தர்களும் புதர்களும் உண்டு. அக்கொடிப் பந்தர்களில் கட்டுண்ட ஆத்மா எப்போதும் கொசுக்கள் கடிப்பதினால் துன்பத்திற்காளாவான் (காழ்ப்புணர்ச்சி உடையவர்களினால்). சில நேரம் அங்கு வானில் உள்ள எரிமீன்களை ஒத்த பேய், பிசாசுகளின் கூட்டத்தைக் காண்பதில் அவன் குழப்பமடைவான்.

பதம் 5.13.4 : அன்பார்ந்த மன்னனே, உலகம் என்னும் காட்டுப் பாதையில் செல்லும் மனிதனின் புத்தியானது, வீடு, மனைவி, மக்கள், செல்வம் உறவினர் போன்றவர்களினால் பலியாகின்ற காரணத்தினால் அவன் வெற்றியினைத் தேடி ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஓடிக் கொண்டிருக்கிறான். சிலநேரம் அவனது கண்கள் சூறாவளிக் காற்றில் எழும் புழுதியினால் மறைக்கப்படுகின்றன. அதாவது அவனது காம இச்சையினால் அவனது அழகிய மனைவியால் குறிப்பாக அவளது மாதவிலக்கு நாட்களில் அதிகம் கவரப்படுகிறான். இவ்வாறு அவனது விழிப்புணர்ச்சி அப்போது மறைந்து போவதால் தான் எங்கே போகிறோம் என்ன செய்கிறோம் என்று அவனால் காண முடியவில்லை.

பதம் 5.13.5 : உலகில் அலைந்து கொண்டிருக்கும் கட்டுண்ட ஆத்மா சில நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத சில்வண்டுகளின் இரைச்சலைக் கேட்டு அவனது காதுகள் மிகுந்த இன்னலுக்காளாகின்றன. சில நேரங்களில் மலர்களும், கனிகளும் இல்லாத மரத்தைத் தஞ்சமடைகிறான். அவன் மிகுந்த பசியின் காரணமாகவே அந்த மரத்தை அணுகி பின்னர் இவ்வாறு துன்பமடைகிறான். தாகத்தினால் தண்ணீர் வேண்டி கானல் நீர் மீது மோகம் கொண்டு அவன் அதன் பின்னால் ஓடுகிறான்.

பதம் 5.13.6 : சில சமயம் கட்டுண்ட ஆத்மி ஆழமற்ற ஆற்றில் குதித்து விடுகிறான். அல்லது உணவு வேண்டி தானம் செய்யும் பண்பில்லாத மனிதர்களிடம் இரக்கிறான். சில நேரங்களில் காட்டுத் தீயைப் போல் தகிக்கும் இல்வாழ்க்கையில் கிடந்து இடர்ப்படுகிறான். சில நேரங்களில் தான் உயிராக மதித்த செல்வம் அனைத்தும் வருமானவரி என்னும் பெயரால் ஆள்வோரால் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு வருந்துகிறான்.

பதம் 5.13.7 : சில சமயம் தன்னைவிட வலிமையுடைய அல்லது அதிகாரமுடைய ஒருவனால் தோல்வியுற்றோ கொள்ளையடிக்கப்பட்டோ தனது உடைமைகளை இழக்கிறான். பிறகு அவன் மிகுந்த துயர்ப்படுகிறான். இழப்பினை எண்ணி சோகமுறுகிறான். சில சமயம் உணர்வின்றியும் போகிறான். சில நேரம் அவன் ஒரு கற்பனை நகரை உருவாக்கி அதில் தன் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியுடனும், செல்வங்களுடனும் வாழ்வதற்கு விரும்புகிறான். இது மட்டும் சாத்தியமானதென்றால் அவன் முற்றிலும் திருப்தியடைகிறான். ஆனால் அந்த மகிழ்ச்சியும் ஒரு கணம் மட்டுமே நீடிக்கிறது.

பதம் 5.13.8 : சில நேரம் காட்டிலுள்ள வணிகன் மலைகளின் மீதும் சிகரங்களின் மீதும் ஏறுவதற்கு விரும்புகிறான். ஆனால் அவனது காலணிகள் சரியாக இல்லாததினால் அவனது பாதங்கள் மலையிலுள்ள சிறு சிறு கற்களினாலும், முட்களினாலும் குத்திக் கிழிக்கப்படுகின்றன. இவ்வாறு கிழிபடுவதினால் அவன் பெருந்துயரத்திற்காளாகிறான். சில சமயம் தன் குடும்பத்தின் மீது மிகுந்த பற்றுடைய ஒருவன் பசிக்கு ஆட்படுகிறான். தனது துன்பநிலை காரணமாக அவன் தன் குடும்பத்தினர் மீது சீற்றங் கொள்கிறான்.

பதம் 5.13.9 : உலகில் உள்ள கட்டுப்பட்ட ஆத்மா சில சமயம் ஒரு மலைப்பாம்பினால் விழுங்கப்படலாம். அல்லது நொறுக்கப்படலாம். அச்சமயம் அவன் உணர்விழந்து காட்டில் ஒர் இறந்த மனிதனைப் போல் கிடக்கிறான். சில நேரம் பிறவகையான பாம்புகள் அவனைக் கடிக்கின்றன. அவனது உணர்வு குருடாகிப் போனதினால் அவன் நரக வாழ்க்கை என்னும் பாழுங்கிணற்றில் வீழ்ந்து தான் காப்பற்றப்படுவோம் எனும் நம்பிக்கையை இழந்து விடுகிறான்.

பதம் 5.13.10 : சிறிதும் முக்கியத்துவமற்றப் பாலியல் இன்பம் வேண்டி ஒருவன் பரத்தையரைத் தேடிப் போகிறான். இம்முயற்சியில் அவன் அப்பரத்தையரின் உறவினர்களால், அவமரியாதைக்கு ஆளாகி அவமானப்படுத்தப்படுகிறான். இது தேன் கூட்டில் தேன் எடுக்கப் போய் தேனீக்களால் கொட்டப்பட்டதை ஒக்கும். சில சமயம் ஏராளமான பணத்தைச் செலவிட்ட பிறகு ஒருவன் மேலும் புலனின்பம் வேண்டி மற்றொரு பெண்ணை வைத்துக் கொள்ளலாம். துரதிர்ஷ்டமாக புலனுகர்ச்சிப் பொருளான அப்பெண் மற்றொரு பரத்தனால் அபகரிக்கவோ அல்லது கடத்திச் செல்லவோ ஆட்படுகிறாள்.

பதம் 5.13.11 : இயற்கை உற்பாவங்களான கடுங்குளிர், கொதிக்கும் கோடை வெயில் பலத்த காற்று, கன மழை போன்றவற்றிலிருந்து விளையும் இன்னல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒருவன் தீவிர முயற்சி செய்கிறான். இதற்கு அவனால் இயலாதபோது அவன் மிகுந்த துன்பமடைகிறான். சில சமயம் வியாபாரத்தில் ஒருவன் மாற்றி மற்றொருவரால் ஏமாற்றப்படுகிறான். இவ்வாறு ஏமாற்றுவதினால் தங்களுக்குள் பகைமையினை உண்டாக்கிக் கொள்கின்றனர்.

பதம் 5.13.12 : உலக வாழ்க்கை எனும் காட்டுப் பாதையில் சில சமயம் ஒருவனிடம் செல்வம் இல்லாது போகிறது. இதனால் அவனுக்கு உறங்குவதற்கும், இருப்பதற்கும் ஒரு வீடு இல்லாமலும் முறையான குடும்ப மகிழ்ச்சி இல்லாமலும் போகிறது. அதனால் அவன் பொருள் வேண்டி பிறரிடம் பிச்சை எடுக்கிறான். இவ்வாறு பிச்சையெடுப்பதினால் அவனது விருப்பங்கள் நிறைவேறாத போது அவன் பிறருடைய செல்வத்தைத் திருடவோ, கடன் வாங்கவோ விரும்புகிறான். இவ்வாறு அவன் சமுதாயத்தில் அவமானத்திற்கு ஆளாகிறான்.

பதம் 5.13.13 : பண வரவு செலவு செய்வதின் காரணமாக உறவுமுறை சிக்கலாகி இறுதியில் பகைமையில் முடிகிறது. உலக வளர்ச்சிப் பாதையில் சில சமயம் கணவனும், மனைவியும் சேர்ந்து நடைபோடுகின்றனர். தங்கள் உறவைப் பாதுகாக்க அவர்கள் மிகக் கடினமாக உழைக்கின்றனர். சில சமயம் பணப்பற்றாக்குறையினாலோ அல்லது பிணி உபாதைகள் காரணமாகவோ அவர்கள் தொல்லைக்காளாகி பெரும்பாலும் இறந்து விடுகின்றனர்.

பதம் 5.13.14 : அன்பார்ந்த மன்னனே வாழ்க்கை எனும் காட்டுப்பாதையில் முதலில் ஒருவன் தன் தாய், தந்தையை இழக்கிறான். அவர்கள் இறந்த பிறகு அவன் தனக்குப் புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தைகள் மீது பற்றுடையவனாகிறான். இவ்வாறு அவன் சமூக வளர்ச்சிப் பாதையில் அலைந்து இறுதியில் தொல்லைப்படுகிறான். இருந்தும் இறக்கும் வரை இதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதை ஒருவனும் அறிவதில்லை.

பதம் 5.13.15 : அன்றும் இன்றும் ஏராளமான அரசியல், சமுதாய வீரர்கள் இருந்தனர். இருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு இணையான ஆற்றலுடைய எதிரிகளை வென்றவர்களாவர். இருந்தும் இந்த மண் நமதே என்று நம்புகின்ற அறியாமையினால் அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டு தங்கள் உயிர்களை யுத்தத்தில் இழக்கின்றனர். துறவு நெறியிலுள்ள பெரியோர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஆன்மீக நெறியினை அவர்களால் பின்பற்ற இயலவில்லை. அவர்கள் பெரிய வீரர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும் இருந்த போதிலும் ஆன்மீக உணர்வுப் பாதையினை அவர்களால் மேற்கொள்ள முடிவதில்லை.

பதம் 5.13.16 : சில சமயம் வாழ்க்கை என்னும் காட்டிலுள்ள உயிர்ப்பொருள் கொடிகளைத் தஞ்சமடைந்து, அக்கொடிகளின் மீதிருக்கும் பறவைகளின் கீச்சொலியைக் கேட்க விரும்புகிறான். காட்டிலுள்ள சிங்கங்களின் கர்ஜனை ஒலிக்குப் பயந்து அவன் நாரைகள், கொக்குகள், கழுகுகள் போன்றவற்றுடன் நட்பு கொள்கிறான்.

பதம் 5.13.17 : உலகமென்னும் காட்டிலுள்ள ஒருவன் போலி சுவாமிகள், யோகிகள் மற்றும் அவதாரங்களின் தொடர்பினைத் துண்டித்து உண்மையான பக்தர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றான். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக அவனால் ஆன்மீக குரு அல்லது உயர்ந்த பக்தர்களின் உபதேசங்களைப் பின்பற்ற முடியாமல் போகிறது; அதனால் அவன் புலனுகர்ச்சி மற்றும் பெண்கள் மீது விருப்பமுடைய குரங்குகளுடன் மீண்டும் தொடர்பு கொள்கிறான். அவன் புலன்களுக்கு மகிழ்ச்சியளிப்பவர்களுடன் கொண்ட தொடர்பின் மூலம் திருப்தியுற்று பாலியல் மற்றும் போதைக்கு அடிமையாகி அவன் தன் வாழ்க்கையினைக் கெடுத்துக் கொள்கிறான். புலன்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் பிறர் முகங்களைக் கண்டு அவன் மறதியுடையவனாகி, மரணத்தைத் தழுவுகிறான்.

பதம் 5.13.18 : கிளை விட்டுக் கிளை தாவும் குரங்கைப் போன்று உயிருடைய ஒருவன் இருக்கும் பொழுது அவன் பாலியலைத் தவிர வேறெந்தப் பயனுமில்லாத இல்வாழ்க்கை மரத்தில் இருக்கிறான். இதனால் அவன் ஒரு ஆண் கழுதையைப் போல் அவன் மனைவியினால் உதைத்துத் தள்ளப்படுகிறான். இந்த நிலையிலிருந்து விடுதலை பெற இயலாமல் அவன் அந்நிலையிலேயே இருக்கிறான். சில சமயம் மலைக்குகையினுள் வீழ்வது போன்ற, உயிர்க் கொல்லி நோய்க்குப் பலியாகிறான். அவன் அக்குகையின் முதுகைப் போன்றிருக்கும் மரணம் என்னும் யானைக்கு அஞ்சுகிறான். இவ்வாறு அவன் இக்கட்டிற்காளாகி ஒரு கொடியின் மிலார்களையும், கிளைகளையும் பற்றிக் கொள்கிறான்.

பதம் 5.13.19 : ஒ, பகைவரைக் கொல்லும் மகாராஜா ரகூகணனே, ஏதோ ஒரு வழியில் கட்டுண்ட ஆத்மா தனது ஆபத்தான நிலையிலிருந்து தப்பிவிட்டானென்றால் அவன் மீண்டும் பாலியல் இன்பத்தை அனுபவிக்கத் தன் இல்லறத்திற்குத் திரும்பி வருகிறான். ஏனெனில் அதுதான் பற்றுக் கொள்வதற்கான பாதையாக இருக்கிறது. இவ்வாறு பகவானின் உலகியல் ஆற்றல் எனும் மந்திரத்தில் கட்டுண்ட அவன் வாழ்க்கைக் காட்டில் தொடர்ந்து உழைக்கிறான். அவன் தனது உண்மை நலனை மரணம் வரும் வரையில் கூட அறிவதில்லை.

பதம் 5.13.20 : அன்பிற்குரிய மன்னன் ரகூகணனே! உலக இன்பத்தின் கவர்ச்சிப் பாதையில் அமைந்திருப்பதினால் நீயும் கூட வெளியுலக ஆற்றலுக்குப் பலியாகி இருக்கிறாய். ஆகையினால் நீ அனைத்து உயிர்களுக்கும் சமமான நண்பனாகலாம். நீ குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக வைத்திருக்கும் தண்டத்தைத் துறந்து உனது அரச நிலையினையும் துறக்க வேண்டுமென்று இப்போது உனக்கு நான் அறிவுறுத்துகிறேன். புலனுகர்ச்சிப் பொருட்களின் மீதான கவர்ச்சியினை விட்டொழித்து, பக்தித் தொண்டினால் கூர்மையானதாக இருக்கும் ஞானவாளினை எடுத்துக் கொள். பிறகு உன்னால் உலகியற் சக்தியின் வலிமையான முடிச்சைத் துண்டித்து அறியாமைக் கடலினைக் கடக்க முடியும்.

பதம் 5.13.21 : மன்னர் ரகூகணன் கூறினான். மானுடப் பிறப்பே அனைத்துப் பிறப்புக்களிலும் மிகச் சிறந்ததேயாகும். தேவ லோகத்தில் தேவர்களாகப் பிறப்பது கூடப் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறப்பதைக் காட்டிலும் பெருமையுடையதாகாது. ஒரு தேவரின் மேன்மையான நிலை என்ன? தேவலோகத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதினால் அங்கு பக்தர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அங்கே சாத்திய மில்லை.

பதம் 5.13.22 : உமது தாமரைத் திருவடி தூசியினால் மூடப்பட்டால் ஒருவன் அதோக்ஷஜரின் பக்தித் தொண்டின் தன்மையினை உடனே அடைகிறான் என்பதில் வியப்பேதுமில்லை. இது பிரம்மதேவன் போன்ற தேவர்களுக்குக் கிடைப்பதற்குரியதாகும். உம்முடன் கொண்ட கண நேரத் தொடர்பினால், நான் பெருமையிலிருந்தும் உலகில் சிக்கிக் கொள்வதற்கு ஏதுவான வேறுபாடுகள் இல்லாமலும் விடுதலை பெற்றிருக்கிறேன். இப்போது நான் இப்பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றிருக்கிறேன்.

பதம் 5.13.23 : மிகச் சிறந்த மகான்களுக்கு, அவர்கள் இப்பூமியில் குழந்தைகளாகவும், சிறுவர்களாகவும், அவதூதர்களாகவும், அந்தணர்களாகவும் இருந்த போதிலும், அவர்களுக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்துகிறேன். அவர்கள் பல்வேறு வடிவங்களில் மறைந்திருந்த போதிலும் கூட நான் அவர்களுக்கு உரிய மரியாதையினைச் செலுத்துகிறேன். அவர்கள் கருணையினால் அரச குலங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும். அக்குலப் பெருமை அரசர்களுக்கு தீமை செய்வதாகும்.

பதம் 5.13.24 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் ஒ, அன்னை உத்தலையின் மைந்தனான, அன்பு மன்னனே, பல்லக்கைத் தூக்க வைத்து மானுட பரதரை அவமதித்த காரணத்தினால் மன்னர் ரகூகணனின் மனதில் அதிருப்தி அலைகள் இருந்தன. ஆனால் பரதரோ அதனை உடனே மறந்துவிட்ட காரணத்தினால் அவரது மனம் மீண்டும் ஒரு கடலைப் போன்று அமைதியுடன் இருந்தது. மன்னர் ரகூகணன் அவரை அவமதித்த போதிலும் பரதர் மிகச் சிறந்த அமைதியே உருவானவர் ஆவார். அவர் ஒரு வைணவர் ஆதலினால் அவரது மனம் அன்புடையதாக இருந்தது. அதனால் அவர் அம்மன்னனிடம் ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினைப் பற்றி எடுத்துரைத்தார். பின்னர் அவர் தனக்கிழைக்கப்பட்ட அவமரியாதையினை மறந்து விட்டார். காரணம் மன்னர் ரகூகணன் அவரது தாமரைத் திருவடிகளிடத்து மனம் வருந்தி மன்னிப்பை வேண்டியிருந்தார். இதன் பிறகு அவர் முன்பு போல் இப்பூமி முழுவதும் சுற்றி வந்தார்.

பதம் 5.13.25 : சிறந்த பக்தரான மானுட பரதரிடமிருந்து உபதேசம் பெற்ற பின் சௌவீர நாட்டின் மன்னரான ரகூகணன் ஆத்மாவின் சட்ட பூர்வ நிலையினை முற்றிலும் உணர்ந்தவரானார். இவ்வாறு அவர் உலகியற் சிந்தனையை முற்றிலும் ஒழித்தார். அன்பார்ந்த மன்னனே பகவானின் தொண்டனை எவனும் சரணடைந்தால் கூட அவன் புகழடைவான். ஏனெனில் அவனால் சிரமமுமின்றி உலகியற் சிந்தனையை விட முடியும்.

பதம் 5.13.26 : பின்னர் பரீட்சித்து மன்னர் சுகதேவ கோஸ்வாமியிடம் கூறினார் போற்றுதலுக்குரியவரே, ஒ, பக்த மாமுனிவரே, நீர் எல்லாம் அறிந்தவர் ஆவீர். ஒரு காட்டில் உள்ள வணிகனோடு ஒப்பிடப்பட்டிருக்கும் கட்டுண்ட ஆத்மாவைப் பற்றி நீர் மிகவும் அழகாக விளக்கியுள்ளீர், இவ்வுபதேசங்களிலிருந்து அறிவாளிகள், உடற்கருத்துடைய மனிதனின் புலன்களே காட்டிலுள்ள துஷ்டர்கள் மற்றும் திருடர்களென்றும், அவனது மனைவி, மற்றும் குழந்தைகள் நரிகள் போன்ற கொடிய விலங்குகள் என்றும் புரிந்து கொள்வர். ஆயினும் இக்கதையின் உட்பொருளை மதி குறைந்தவர்களினால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வுருவகக் கதையின் உட்பொருளைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினமாகும். ஆகையினால் இதன் நேரடிப் பொருளை விளக்கி அருளுமாறு தங்களை நான் வேண்டுகிறேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare