அத்தியாயம் – 10
மானுட பரதருக்கும் மன்னர் ரகூகணருக்கும் நிகழ்ந்த உரையாடல்
பதம் 5.10.1
ஸ்ரீஷுக உவாச
அத ஸிந்து- ஸௌவீர- பதே ரஹுகணஸ்ய வ்ரஜத இக்ஷு மத்யாஸ்
தடே தக்குல-பதினா ஸிபிகா-வாஹ-புருஷான்வேஷண ஸமயே
தைவேனோபஸாதித: ஸத்விஜ-வர உபவப்த ஏஷபீவா யுவா
ஸம்ஹனைங்கோ கோ-கரவத் துரம் வோடும் அலம் இதி பூர்வ-விஷ்டி –
க்ருஹீதை ஸஹ க்ருஹீத: ப்ரஸபம் அதத்-அர்ஹ உவாஹ ஸிபிகாம்
மஹானுபாவ

ஸ்ரீ- ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; அத—இவ்வாறு; ஸிந்து-ஸௌவீர-பதே:—சிந்து ஸௌவீரப் பகுதிகளின் மன்னர்; ரஹுகணஸ்ய—ரகூகணன் என்னும் அரசன்; வ்ரஜத—சென்று கொண்டிருக்கும்பொழுது (கபிலரின் ஆஸ்ரமத்திற்கு); இக்ஷு-மத்யா-தடே—இட்சுமதீ என்னும் நதியின் கரையில்; தத்-குல-பதினா—பல்லக்குத் தூக்கிகளின் தலைவனால்; ஸிபிகா-வாஹ—பல்லக்கைத் தூக்கும் ஒருவராக; புருஷ அன்வேஷண ஸமயே—ஒருவனைத் தேடும் பொழுது; னதவேன—சந்தர்ப்பத்தினால்; உபாஸாதித—அருகில்; ஸ—அது; த்விஜ-வர—ஓர் அந்தணரின் மைந்தரான மானுட பரதர்; உபவப்த—கிடைத்தார்; ஏஷ—இந்த மனிதன்; பீவா—மிக்க உறுதியும், பருமனும் வாய்ந்தவர்; யுவா—இளைஞர்; ஸம்ஹனை-அங்க—உறுதி மிக்க அங்கங்களை உடையவர்; கோ-கர-வத்—ஒரு பசுமாடு அல்லது கழுதை போன்று; துரம்—ஒரு பாரம்; வோடும்—தூக்குவதற்கு; அலம்—திறன்; இதி—இவ்வாறு நினைத்து; பூர்வ-விஷ்டி-க்ருஹீதை—இதனைச் செய்வதற்கு முன்னர் பலவந்தப்படுத்தப்பட்டவர்கள்; ஸஹ—உடன்; க்ருஹீத—எடுத்துக் கொண்டனர்; ப்ரஸபம்—பலவந்தத்தினால்; அ-தத்-அர்ஹ—பல்லக்கைத் தூக்குவதற்குப் பொருத்தமானவராக இல்லாத போதும்; உவாஹ—சுமந்தார்; ஸிபிகாம்—பல்லக்கு; ஸ—அவர்; மஹா-அனுபாவ—ஒர் மகாத்மா.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே, அதன் பிறகு, சிந்து மற்றும் சௌவீர பகுதிகளை ஆண்ட மன்னர் ரகூகணன் கபிலாஸ்ரமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். மன்னரின் தலைமைப் பல்லக்குத் தூக்கிகள் இட்சுமதி நதியின் கரையினை அடைந்தபொழுது அவர்களுக்கு மற்றொரு பல்லக்குத் தூக்கி தேவைப்பட்டான். அதனால் அவர்கள் யாராவது ஒருவன் கிடைப்பானா என்று தேடினர். சந்தர்ப்பத்தினால் அவர்கள் மானுட பரதர் இருக்கும் இடத்திற்கு வந்தனர். ஜடபரதரின் இளமை, வலிமை மற்றும் உறுதியுடைய அங்கங்களைப் பார்த்தனர். மாடுகளைப் போன்றும், கழுதைகளைப் போன்றும் அவரும் பாரம் தூக்குவதற்குப் பொருத்தமாக இருந்தார். மகாத்மா மானுட பரதர் இச்செயலுக்குப் பொருத்தமானவர் இல்லை என்றபோதிலும், பல்லக்குத் தூக்கிகள் அவரை கட்டாயமாகப் பல்லக்கைத் தூக்க வைத்தனர்.

பதம் 5.10.2
யதா ஹி த்விஜ-வரஸ்யேஷு-மாத்ராவலேகானுகதேர் ந ஸமாஹிதா
புருஷகதிஸ் ததா விஸம-கதாம் ஸ்வ-ஸிபிகாம் ரஹுகண உபதார்ய
புருஷான் அதிவஹத ஆஸ ஹே வோடார ஸாத்வ அதிக்ரமத கிம் இதி
விஷமம் உஹ்யதே யானம் இதி

யதா—அப்பொழுது; ஹி—உறுதியாக; த்விஜ-வரஸ்ய—ஜடபரதரின்; இஷுமாத்ர—ஒர் அம்பின் அளவு (மூன்று அடிகள்) முன்னால்; அவலோக-அனுகருத—பார்த்தபிறகே செல்வது; ந-ஸமாஹிதா—இணையாகவில்லை; புருஷ-கதி—பிற பல்லக்குத் தூக்கிகளின் வேகத்தோடு; ததா—அச்சமயம்; விஷம-கதாம்—சீராக இன்றி; ஸ்வ-ஸிபிகாம்—அவரது பல்லக்கு; ரகூகண—மன்னர் ரகூகணன்; உபதார்ய—புரிந்துகொண்டு; புருஷான்—மனிதர்களுக்கு; அதிவஹத—பல்லக்குத் தூக்கிகள்; ஆஹ—கூறினார்; ஹே—ஒ; வோடார—பல்லக்குத் தூக்கிகள்; ஸாது-அதிக்ரமத—சீராக நடக்கவும் அப்போது தான் தூக்கிப் போடாது; கிம்-இதி—எக்காரணத்திற்காக; விஷமம்—சீரின்றி; உஹ்யதே—தூக்கப்பட்டு; யானம்—பல்லக்கு; இதி—இவ்வாறு.

மானுட பரதர் வன்முறை ஏதும் இல்லாதவர். ஆயினும் பல்லக்கை ஒழுங்கின்றி சுமந்து கொண்டிருந்தார். அவர் பல்லக்கைத் தூக்கி நடந்து கொண்டிருக்கும் பொழுது மூன்றடிகளுக்கு ஒருதரம் நின்று தான் எறும்பு போன்ற சிற்றுயிர்களை மிதித்து விட்டோமா என்று பார்ப்பார். எனவே இதனால் பிற பல்லக்குத் தூக்கிகளின் நடை வேகத்தோடு அவரது நடை இணையவில்லை. இதன் காரணமாகப் பல்லக்கு தூக்கிப் போட்டது. அதனுள்ளிருந்த மன்னர் ரகூகணன் பல்லக்குத் தூக்கிகளிடம் “ஏன் பல்லக்கினை ஒரே சீராகத் தூக்கமாட்டேனென்கிறீர்கள்? ஒழுங்காகத் தூக்குங்கள்” என்று கூறினார்.

பதம் 5.10.3
அத தாஈஸ்வர வச ஸோபாலம்பம் உபாகர்ண்யோ-பாய-துரீயாச்
சங்கித மனஸஸ் தம் விஜ்ஞாபயாம் பபூஷ

அத—இவ்வாறு; தே—அவர்கள் (பல்லக்கு தூக்கிகள்) ஈஸ்வர-வச—தங்கள் தலைவரான மன்னர் ரஹுகணனின் வார்த்தைகள்; ஸ-உபாலம்பம்—கடிந்துரையினை; உபாகர்ண்ய—கேட்டு; உவாய—வழி; துரீயாத்—நான்காமாவனிடத்து; ஸங்கித-மனஸ—அவர்கள் மனம் அச்சங்கொண்டது; தம்—அவரது (மன்னரின்); விஜ்ஞாபயாம் பபூஷ—தெரிவித்தனர்.

மகாராஜா ரகூகணனின் கடிந்துரையினைக் கேட்ட பல்லக்குத் தூக்கிகள் அவர் அளிக்கும் தண்டனையினை நினைத்து மிக்க அச்சங்கொண்டு அவரிடம் கூறத் தொடங்கினர்.

பதம் 5.10.4
ந வயம் நா-தேவ ப்ரமத்தா பவன்-நியமானுபதா: ஸாத்வ ஏவ
வஹாம: அயம் அ துனைவ நியுக்தோ ‘பி ந த்ருதம் வ்ரஜதி நானேன ஸஹ
வோடும் உ ஹ வயம் பார்யாம இதி

ந—இல்லை; வயம்—நாங்கள்; நர-தேவ—நர தேவரே (மன்னர் முழுமுதற் கடவுளின் தூதராகக் கருதப்படுகிறார்); ப்ரமத்தா—எங்கள் கடமையில் தவறுதல்; பவத்-நியம்-அனுபதா—தங்கள் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவர்கள்; ஸாது—முறையாக; ஏவ—உறுதியாக; வஹாம—நாங்கள் சுமப்பது; அயம்—இந்த மனிதன்; அதுனா—இப்போதுதான்; ஏவ—உண்மையில்; நியுக்த—எங்களோடு பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறான்; அபி—இருந்த போதிலும்; ந—இல்லை; த்ருதம்—மிகவிரைவில்; வ்ரஜதி—உழைப்பது; ந—இல்லை; அனேன—அவரது; ஸஹ—உடன்; வோடும்—சுமப்பதற்கு; உ ஹ—ஒ; வயம்—நாங்கள்; பாரயாம—இயல்வது; இதி—இவ்வாறு.

பிற பல்லக்குத் தூக்கிகள் சூத்திரர்கள். ஆனால் மானுட பரதரோ ஓர் உயர்ந்த அந்தணர் சிறந்த பக்தரும் ஆவார். சூத்திரர்கள் பிற உயிர்களின் மீது கருணை காட்டுவதில்லை. ஆனால் ஒர் வைணவன் சூத்திரனைப் போல் நடக்க முடியாது. ஒரு சூத்திரனும், அந்தண வைணவனும் இணைந்தால் அவர்களது செயல் நிச்சயம் சீராக இருக்காது. பல்லக்கைத் தூக்கும் சூத்திரர்கள் வழியில் உள்ள எறும்புகளைப் பற்றிக் கவலைப்படமாட்டார். ஆனால் பரதரோ அச்சூத்திரர்களைப் போன்று செயல்பட முடியாது. அதனால் இடையூறு நேர்ந்தது.

பதம் 5.10.5
ஸாம்ஸர்கிகோ தோஷ ஏவ நூனம் ஏகஸ்யாபி ஸர்வேஷாம்
ஸாம்ஸர்கிகாணாம் பவிதும் அர்ஹதீதி நிஸ்சித்ய நிஸம்ய க்ருபண-வசோ
ராஜா ரஹுகண உபாஸித வ்ருத்தோ ‘பி நிஸர்கேண பலாத் க்ருத ஈஷத்-
உத்தித—மன்யுர் அவிஸ்பஷ்ட-ப்ரஹ்ம-தேஜஸம் ஜாத- வேதஸம் இவ
ரஜஸாவ்தே-மதிர் ஆஹ

ஸாம்ஸர்கிக—நெருங்கிய தொடர்பிலிருந்து விளையும்; தோஷ—தவறு; ஏவ—உண்மையில்; நூனம்—உறுதியாக; ஏகஸ்ய—ஒருவனின்; அபி—இருந்தபோதிலும்; ஸர்வேஷாம்—மற்ற அனைவரின்; ஸாம்ஸர் கிகாணாம்—அவனோடு தொடர்புடையவர்கள்; பவிதும்—ஆவதற்கு; அர்ஹதி—இயல்வது; இதி—இவ்வாறு; நிஸ்சித்ய—உறுதியுடன்; நிஸம்ய—கேட்பதினால்; க்ருபண-வச—தண்டனைக்கு அஞ்சும் ஏழைப் பணியாளர்கள்; ராஜா—மன்னர்; ரகூகண—ரகூகணன்; உபாஸித வ்ருத்த—பணி செய்தல் மற்றும் உயர்ந்த முனிவர்களிடம் கேட்டல்; அபி—அதற்குப் பதிலாக; நிஸர்கேண—சத்திரியரான அவரது தனிப்பட்ட குணத்தினால்; பலாத்—பலாத்காரமாக; க்ருத—செய்யப்பட்ட; ஈஷத்—மெதுவாக; உத்தித—விழிப்புற்று: மன்யு—அவரது சினம்; அவிஸ்பஷ்ட—தெளிவாகத் தோன்றவில்லை; ப்ரஹ்ம-தேஜஸம்—அவரது (ஜட பரதரின்) ஆன்மீக ஒளி; ஜாத-வேதஸம்—வேள்வித் தீ சாம்பலில் மூடப்பட்டிருத்தல்; இவ—போன்று; ரஜஸா ஆவ்ருத—இரஜோ குணத்தினால் மூடப்பட்டு; மதி—அவரது மனம்; ஆஹ—கூறினார்.

தண்டனைக்காளாவோம் என்று அஞ்சிய பல்லக்குத் தூக்கிகளின் வார்த்தைகளை மன்னர் ரகூகணனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு மனிதன் செய்யும் தவறினால் பல்லக்கு சீராக சுமக்கப்படவில்லை என்பதையும் அவர் அறிந்தார். இதனை நன்கு அறிந்துகொண்டதினாலும் அவர்களது வேண்டுகோளைக் கேட்டதினாலும் அவரது சினம் சிறிது தணிந்தது. அவர் அரசியல் முதிர்ச்சி பெற்றவர். நல்ல அனுபவசாலியும் ஆவார். உண்மையில் மன்னர் ரகூகணனின் மனம் இரஜோ குணத்தினால் மூடப்பட்டிருந்தது. ஆகையினால், சாம்பலினால் மூடப்பட்டிருக்கும் நெருப்புப் போன்று பரதரின் பிரம்ம ஜோதியும் தெளிவாகத் தெரியாததினால் அவரிடம் மன்னர் பின்வருமாறு கூற ஆரம்பித்தார்.

பதம் 5.10.6
அஹோ கஷ்டம் ப்ராதர் வியக்தம் உரு-பரிஸ்ராந்தோ தீர்கம்
அத்வானம் ஏக ஏவ ஊஹிவான் ஸுசிரம் நாதி-பீவா ந ஸம்
ஹனனாங்கோ ஜரஸா கோபத்ருதோ பவான் ஸகே நோ ஏவாபர
ஏதே ஸங்கட்டின இதி பஹு- விப்ரலப்தோ ‘பி அவிதியயா ரசித-
த்ரவ்ய-குண-கர்மாஸய-ஸ்வ-சரம-கலேவரே ‘வஸ்துனி ஸம்ஸ்தான
விஸேஸே அஹம் மமேதி அனத்யாரோபித-மித்யா ப்ரத்யயோ ப்ரஹ்ம –
பூதஸ்தூஷ்ணீம் ஸிபிகாம் பூர்வத் உவாஹ

அஹோ—அந்தோ; கஷ்டம்—எத்தனை துன்பகரமானது இது; ப்ராத—எனதன்புச் சகோதரனே; வ்யக்தம்—தெளிவாக; உரு—மிகவும்; பரிஸ்ராந்த—களைப்புற்று; தீர்கம்—நீண்ட; அத்வானம்—பாதை; ஏக—தனியே; ஏவ—உறுதியாக; ஊஹிவான்—நீ சுமந்திருக்கின்றாய்; ஸு-சிரம்—நீண்ட நேரமாக; ந—இல்லை; அதிபீவா—மிகுந்த வலிமையும் பருமனும்; ந—இல்லை; ஸமஹனை அங்க—உறுதியான எதையும் தாங்கும் உடல்; ஜரஸா—முதுமையினால்; ச—மேலும்; உபத்ருத—துன்புற்று; பவான்—உனது; ஸகே—என் நண்பனே; நோ ஏவ—நிச்சயமாக இல்லை; அபரே—மற்றவர்; ஏதே—இவர்களெல்லோரும்; ஸங்கட்டின—உடன் உழைப்பவர்கள்; இதி—இவ்வாறு; பஹு—மிகவும்; விப்ரலப்த—கேலியாக விமர்சித்தார்; அபி—இருந்தபோதிலும்; அவித்யாய—அறியாமையினால்; ரசித—உருவான; த்ரவ்ய குண கர்ம ஆஸய—உலகியற் பொருட்கள் போன்றவற்றின் கலப்பினால்; ஸ்வ சரம-கலேவரே—நுண் பொருட்களினால் (மனம், புத்தி, ஆணவம்) செயல்படும் உடலில்; அவஸ்துனி—இதுபோன்ற உடல்களில்; ஸம்ஸ்தான விஸேஷ—ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைதி பெற்று; அஹம்மம—நான், எனது; இதி—இவ்வாறு; அனத்யாரோபித—இடைச்செருகலின்றி; மித்யா—தவறான; ப்ரத்யய:—நம்பி; ப்ரஹ்ம-பூத—பிரம்ம நிலையில் நிற்கும் தன்னுணர்வு பெற்றவர்; தூஷ்ணீம்—அமைதியுடன்; ஸிபிகாம்—பல்லக்கினை; பூர்வ வத்—முன்பு போலவே; உவாஹ—சுமந்தார்.

மானுட பரதரிடம் மன்னர் ரகூகணன் கூறினார்: எத்தனை துன்பகரமானது இது, எனது சகோதரனே, நீ மிகவும் களைப்படைத்திருக்கிறாய், ஏனென்றால் நீ யாருடைய துணையுமின்றி நீண்ட நேரமாக இந்தப் பல்லக்கைத் தனியே சுமந்து வந்திருக்கிறாய். மேலும் உனது முதுமையினால் நீ மிகவும் இடர்ப்படுகின்றாய். அன்பு நண்பனே! வலிமை உடையவனாக, உறுதி, திடகாத்திரம் உடையவனாக நீ எனக்குத் தோன்றவில்லை. உடன் வரும் பல்லக்குத் தூக்கிகள் உனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லையா? இவ்வாறு மன்னர் மானுட பரதரைக் கேலியானப் பேச்சுக்களினால் வினவினார். இவ்வாறு விமர்சிக்கப்பட்டபோதிலும் அச்சூழ்நிலையில் உலகியற் கருத்து ஜட பரதரிடம் கிஞ்சிற்றும் இல்லை. அவர் தனது ஆன்மீக நிலையில் எய்தியிருந்தமையினால், அவர் தான் இந்த உடல் அல்ல என்பதை நன்கறிவார். தோற்றத்தில் பருமனாகவோ, மெலிந்தவராகவோ இல்லை. பஞ்சபூதங்கள் மற்றும் மூன்று நுண் பொருட்களினாலான இந்த பரு உடலில் அவர் செய்ய வேண்டியதும் எதுவும் இல்லை. உடலோடு இணைந்திருக்கும் இரு கரங்கள், இரு கால்களுடனும் அவர் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. அவர் முற்றிலும் தனது ஆன்மீக நிலையை உணர்ந்தவராக விளங்கினார். (அஹம் ப்ரஹ்மாஸ்மி) ஆகையினால் மன்னர் செய்த கேலியான விமர்சனத்தினால் அவர் பாதிக்கப்படவில்லை. அவர் எதுவும் பதில் கூறாது முன்பு போலவே பல்லக்கைத் தொடர்ந்து சுமந்தார்.

பதம் 5.10.7
அத புன: ஸ்வ-ஸிபிகாயாம் விஷம-கதாயாம் ப்ரகுபித உவாச
ரஹுகண: கிம் இதம் அரே த்வம் ஜீவன்-ம்ருதோ மாம் கதர்தீ-க்ருதய
பர்த்ரு ஸாஸனம் அதிசரஸி ப்ரமத்தஸ்ய ச தே கரோமி சிகித்ஸாம் தண்ட-
பாணிர் இவ ஜனதாய யதா ப்ரக்ருதிம் ஸ்வாம் பஜிஷ்யஸ இதி

அத—அதன்பிறகு; புன—மீண்டும்; ஸ்வ-ஸிபிகாயாம்—அவரது பல்லக்கு; விஷம-கதாயாம்—பரதர் முறையாக நடக்கவில்லை ஆதலினால் பல்லக்கு சீராக சுமக்கப்படவில்லை; ப்ரகுபித—மிகுந்த சினங்கொண்டு; உவாச—கூறினார்; ரகூகண—மன்னர் ரகூகணன்; கிம் இதம்—என்ன இது முட்டாள்தனம்; அரே—ஓ, முட்டாள்; த்வம்—நீங்கள்; ஜீவத்—வாழும்; ம்ருதோ—இறந்தவர்; மாம்—நான்; கத்-அர்தீ-க்ருத்ய—புறக்கணித்து; பர்த்ரு-ஸாஸனம்—தலைவனால் தண்டிக்கப்படுதல்; அதிசரஸி—நீ மீறி நடக்கின்றாய்; ப்ரமத்தஸ்ய—சற்றேறத்தாழப் பைத்தியம் பிடித்தவன் போலும்; ச—மேலும்; தே—உனது; கரோமி—நான் செய்வேன்; சிகித்ஸாம்—சரியான சிகிச்சை; தண்ட—பாணி; இவ—யமராஜனைப் போல்; ஜனதாயா—பொது மக்களின்; யதா—ஆகையினால்; ப்ருக்ருதிம்—இயற்கை நிலை; ஸ்வாம்—உனக்குரிய; பஜிஷ்யஸே—நீ அடைவாய்; இதி—இவ்வாறு.

இதன் பின்னரும், பல்லக்கு முன்பு போல் சீராக இன்றி தூக்கிப் போடுதல் கண்டு மன்னர் மிகுந்த சினமுற்றார். ஏய், முட்டாள், என்ன செய்துகொண்டிருக்கின்றாய்? உடலில் உயிர் இருந்தும் நீ இறந்துவிட்டாயா? நீ எனது கட்டளையை நிறைவேற்றாமல் என்னை அவமதித்து விட்டாய். மரண தேவனான யம ராஜன் எவ்வாறு பாவிகளைத் தண்டிப்பாரோ அதுபோல் பணிவில்லாத உன்னையும் நான் தண்டிக்கப்போகிறேன். இப்போது உனக்கு நான் அளிக்கும் சிகிச்சையினால் நீ உன்னை உணர்ந்து சரியாகச் செய்யப் போகிறாய் பார்.

பதம் 5.10.8
ஏவம் பஹ்வ அபத்தம் அபி பாஷமாணம் நர-தேவாபி-மானம் ரஜஸா
தமஸா நுவித்தேன மதேன திரஸ்க்ருதாஸேஷ-பகவத்-ப்ரிய-நிகேதம்
பண்டித-மானினம் ஸ பகவான் ப்ரஹ்மணோ ப்ரஹ்ம-பூத-
ஸர்வ-பூத ஸுஹ்ருத்-ஆத்மா யோகேஸ்வர-சர்யாயாம் நாதி-வ்யுத்பன்ன-மதிம்
ஸ்மய-மான இவ விகத-ஸ்மய இதம் ஆஹ

ஏவம்—இவ்வாறு; பஹு—மிகவும்; அபத்தம்—அறிவின்றி; அபி—இருந்தபோதிலும்; பாஷமாணம்—பேசுவது; நர-தேவா-அபிமானம்—தன்னை ஆள்பவனாக எண்ணிக் கொண்ட மன்னர் ரஹுகணன்; ரஜஸா—இரஜோ குணத்தினால்; தமஸா—அதுபோல் தமோ குணத்தினாலும்; அனுவித்தேன—அதிகரிக்கப்பட்டு; மதேன—புத்தியின்மையினால்; திரஸ்க்ருத—கடிந்துரைகள்; அஸேஷ—எண்ணிலடங்கா; பகவத்-ப்ரிய-நிகேதம்—பகவானின் பக்தர்கள்; பண்டித மானினம்—தன்னைப் பெரிய அறிஞனாகக் கருதி; ஸ—அது; பகவான்—ஆன்மீகத்தில் மிகச் சிறந்த; (ஜட பரதர்); ப்ராஹ்மண—முற்றிலும் தகுதி வாய்ந்த ஓர் அந்தணர்; ப்ரஹ்ம-பூத—முற்றிலும் தன்னுணர்வு பெற்ற; ஸர்வ-பூத-ஸ்ருதி-ஆத்மா——அவர் இவ்வாறு உயிர்கள் அனைவரின் நண்பராவார்; யோக-ஈஸ்வர—மிகச் சிறந்த யோகிகளின்; சர்யாயாம்—நடத்தையில்; ந-அதி-வ்யுத்-பன்ன-மதிம்—அனுபவமில்லாத மன்னன் ரகூகணனுக்கு; ஸ்மயமான—சிறிது புன்னகையுடன்; இவ—போன்று; விகத-ஸ்மய—ஆன்மீகப் பெருமைகள் அனைத்திலுமிருந்து விடுதலை பெற்றவர்; இதம்—இவ்வாறு; ஆஹ—கூறினார்.

அரசன் என்று தன்னைக் கருதிய மன்னர் ரகூகணன் உடற்கருத்துடையவராகவும், இயற்கையின் இரஜோ மற்றும் தமோ குணங்களினால் பாதிக்கப்பட்டவராகவும் விளங்கினார். புத்தியில்லாத காரணத்தினால் அவர் மானுட பரதரை வழக்கில்லாத முரண்பட்ட வார்த்தைகளினால் திட்டினார். மானுட பரதர் பக்தரின் உயர்ந்த பக்தரும் அவரது உறைவிடமும் ஆவார். தான் பெரிய அறிவாளி என்று நினைத்த காரணத்தினால் மன்னர், பக்தித் தொண்டில் நிலைபெற்றிருக்கும் ஒரு உயர்ந்த பக்தனின் நிலைமை என்னவென்று அறியவில்லை. அதுபோல் அவரது தன்மைகளும் என்னவென்று அறியவில்லை. மானுட பரதர் முழுமுதற் கடவுளின் இருப்பிடமாவார். அவருக்கு எப்போதும் பகவானின் வடிவத்தைத் தன் இதயத்தில் சுமந்தார். அவர் எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பராக இருந்தார், மேலும் அவர்தன் உடற்கருத்திற்குச் சிறிதும் இடம் தராதவர். ஆகையினால் அவர் பின்வரும் மொழிகளைக் கூறினார்.

பதம் 5.10.9
ப்ராஹ்மண உவாச
த்வயோதிதம் வ்யக்தம் அவிப்ரலப்தம்
பர்து: ஸ மே ஸ்யாத் யதி வீர பார:
கந்துர் யதி ஸ்யாத் அதிகம்யம் அத்வா
பீவேதி ராஸெள த விதாம் ப்ரவாத:

ப்ராஹ்மண உவாச—கற்றறிந்த அந்தணராகிய பரதர் கூறினார்; த்வயா—உன்னால்; உதிதம்—சொல்லப்பட்ட; வ்யக்தம்—மிகத் தெளிவாக; அவிப்ரலப்தம்—முரண்பாடுகள் இன்றி; பர்து—சுமப்பவன் உடல்; ஸ—அது; மே—எனது; ஸ்யாத்—இருந்திருக்கும்; யதி—அவ்வாறிருந்தால்; வீர—ஓ சிறந்த வீரனே (மகாராஜா ரகூகணன்); பார—பாரம்; கந்து—செல்பவனின் உடலும் கூட; யதி—அவ்வாறு; ஸ்யாத்—இருந்தது; அக்கம்யம்—எய்துதற்குரிய இலட்சியம்; அத்வா—பாதை; பீவா—மிக்க உறுதியும் வலிமையும் உடைய; இதி—இவ்வாறு; ராஸெள—உடலில்; ந—இல்லை; விதாம்—தன்னுணர்வு பெற்றோரின்; ப்ரவாத—கலந்துரையாடுவதற்குரிய விஷயம்.

ஓர் உயர்ந்த அந்தணராகிய பரதர் கூறினார்: அன்பார்ந்த மன்னன் மற்றும் சிறந்த வீரனே, நீ கேலியாகக் கூறியவை எல்லாம் நிச்சயம் உண்மையே ஆகும். உடல் சுமப்பவனாக இருக்கும்போது இவ்வார்த்தைகள் எல்லாம் உண்மையில் நிந்தனைக்குரியவையன்று. உடலினால் சுமக்கப்படும் பாரம் என்னைச் சேர்ந்ததல்ல. நான் ஆத்மா ஆவேன். உனது கூற்றுக்களில் முரண்பாடுகள் இல்லை. ஏனென்றால் நான் உடலிலிருந்து வேறானவன். பல்லக்கை உண்மையில் தூக்குபவன் நான் அல்லன்; எனது உடலேயாகும். நீ கோடிட்டுக் காட்டியபடி பல்லக்கைத் தூக்குவதினால் நான் சிரமப்படவில்லை. நான் உடலிலிருந்து தனியே பிரிந்திருக்கிறேன். நான் திடகாத்திரமும் உறுதியும் இல்லாதவன் என்று நீ கூறினாய். இவ்வார்த்தைகள் உடலிற்கும் ஆத்மாவிற்கும் வேறுபாடு தெரியாதவனுக்குப் பொருந்துவதாகும். உடல் பெருத்தோ, மெலிந்தோ இருக்கலாம். ஆனால் கற்றறிந்தவன் இவை ஆத்மாவிற்கானது என்று ஒருபோதும் கூறமாட்டான். ஆத்மாவைப் பொறுத்த மட்டில் நான் தடித்தவனுமல்லன் மெலிந்தவனுமல்லன்; ஆகையினால் நான் பருத்தவன் இல்லையென்று நீ கூறியது உண்மையேயாகும். மேலும் இப்பயணத்தின் இலட்சியமும், அதை அடையும் பாதையும் எனக்குரியதென்றால், எனக்குப் பல துன்பங்கள் நேரிடக் கூடும். ஆயினும் அத்துன்பங்கள் எனக்குத் தொடர்புடையனவல்ல. உடலிற்கு மட்டுமே தொடர்புடையன. ஆதலினால் துன்பம் என்பதே எனக்கு இல்லை.

பதம் 5.10.10
ஸ்தெளல்யம் கார்ஸ்யம் வ்யாதய ஆதாயஸ் ச
க்ஷுத் த்ருட் பயம் கலிர் இச்சா ஜராச
நித்ரா ரதிர் மன்யுர் அஹம் மத: ஸுசோ
தேஹேன ஜாதஸ்ய ஹிமே ந ஸந்தி

ஸ்தௌல்யம்—மிக்க உறுதியும், பருமனும் உடைய; கார்ஸ்யம்—மெலிந்து பலஹீனமாக இருத்தல்; வ்யாதய—பிணி போன்ற உடல் உபாதைகள்; ச—மேலும்; ஆதாயஸ்—மனத்துன்பம்; க்ஷுத்-த்ருட்பயம்—பசி, தாகம், அச்சம்; கலி—இருவருக்கிடையே நடைபெறும் சண்டை சச்சரவுகள்; இச்சா—இச்சைகள்; ஜரா—முதுமை; ச—மேலும்; நித்ரா—நித்திரை; ரதி—புலனுகர்ச்சிக்கானப் பற்று; மன்யு—சினம்; அஹம்—தவறான அடையாளம் (உடற் கருத்துடைய வாழ்க்கை); மத—மதம்; ஸுச—சோகம்; தேஹேன—இவ்வுடலுடன்; ஜாதஸ்ய—பிறவி எடுத்திருக்கும் ஒருவன்; ஹி—உறுதியாக; மே—எனது; ந—இல்லை; ஸந்தி—வெளிப்படுதல்.

பருத்தல், மெலிதல், உடல் மற்றும் மனத் துன்பங்கள், தாகம், பசி, அச்சம், கருத்து வேற்றுமை, உடல் இன்பத்திற்கான ஆசை, முதுமை, நித்திரை, பௌதீக உடமைகளின் மீதான பற்று, சினம், சோகம், மதம் மற்றும் தன்னோடு காணும் உடலின் அடையாளம் போன்றவை எல்லாம் ஆத்மாவை மூடியிருக்கும் உடலின் மாறுபாடுகளாகும். உடற் கருத்தில் ஆழ்ந்திருப்பவன் இவைகளினால் பாதிக்கப்படுகிறான். ஆனால் நானோ உடற்கருத்துக்களிலிருந்து விடுதலை பெற்றவன். அதனால் நீ குறிப்பிட்டபடி நான் மெலிந்தவனோ அல்லது தடித்தவனோ, வேறெதுவுமோ அல்லன்.

பதம் 5.10.11
ஜீவன் ம்ருதத்வம் நியமேன ராஜன்
ஆத்யந்தவத் யத் விக்ருதஸ்ய த்ருஷ்டம்
ஸ்வ-ஸ்வாம்ய-பாவோ த்ருவ ஈட்ய யத்ர
தர்ஹி உச்யதே ‘ஸௌ விதிக்ருத்ய-யோக:

ஜீவத்-ம்ருதத்வம்—உயிரோடிருக்கும் பொழுதே இறந்திருக்கும் தன்மை; நியமேன—இயற்கை விதிகளினால்; ராஜன்—ஒ, மன்னனே; ஆதி-அந்த-வத்—பௌதீகமான எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு; யத்—ஏனென்றால்; விக்ருதஸ்ய—மாறுகின்ற பொருள்களின்; அதாவது உடல் போன்றவை; த்ருஷ்டம்—காணப்படுகிறது; ஸ்வ-ஸ்வாம்ய பவ:—எஜமான், சேவகன் என்னும் நிலை; த்ருவ—மாற்றமில்லாதது; ஈட்ய—ஒ வழிபடப்படுகின்ற நீ; யத்ர—இதனில்; தர்ஹி—பின்னர்; உச்யதே—கூறப்படுகிறது; அஸென—அது; விதி-க்ருத்ய-யோக—கட்டளை மற்றும் கடமையின் பொருத்தம்.

அன்பிற்குரிய மன்னனே, உயிரோடு இருந்தும் இறந்தவனாக இருக்கிறேன் என்று நீ என்னைக் குற்றம் சாட்டினாய். இது குறித்து நான் கூறுவது என்னவென்றால் எங்கும் இதே நிலைதான் என்பதுவே. ஏனெனில் உலகியல் ரீதியான எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் உண்டு அதுபோல் முடிவும் உண்டு. உன்னை அரசனாகவும் எஜமானனாகவும் நினைத்துக் கொண்டு நீ எனக்குக் கட்டளையிட முயற்சிக்கும் வரை, இதுவும் தவறாகவே முடியும் காரணம். இந்நிலைமைகள் நிரந்தரமானவையன்று. இன்று நீ அரசன், நான் சேவகன், நாளை இந்நிலை மாறலாம். நீ எனது சேவகனாகவும் நான் உனக்குத் தலைவனாகவும் ஆகலாம். இவை தெய்வத்தினால் உருவாக்கப்படும் தற்காலிகச் சூழ்நிலைகளேயாகும்.

பதம் 5.10.12
விஸேஷ-புத்தேர் விவரம் மனாக் ச
பஸ்யாம யன் ந வ்யவஹாரதோ ‘ன்யத்
க ஈஸ்வரஸ் தத்ர கிம் ஈஸிதவ்யம்
ததாபி ராஜன் கரவாம கிம்தே

விஸேஷ-புத்தே—எஜமானன், சேவகன் என்பதற்கிடையிலான வேறுபாட்டுக் கருத்தின்; விவரம்—நோக்கம்; மனாக்—ஒரு சிறிய; ச—மேலும்; பஸ்யாம—நான் காண்கிறேன்; யத்—அது; ந—இல்லை; வ்யவஹாரத—தற்காலிக மரபு அல்லது வழக்கத்தை விட; அன்யத்—பிறிதொன்று; க—யார்; ஈஸ்வர—எஜமானன்; தத்ர—இதில்; கிம்—யார்; ஈஸிதவ்யம்—கட்டுப்படுதல்; ததாபி—பதிலாக; ராஜன்—ஒ, மன்னனே (நீ இன்னும் உன்னை எஜமானனாகவும் என்னை சேவகனாகவும் நினைத்தால்); கரவாம—நான் செய்யலாம்; கிம்—என்ன; தே—உனக்காக.

அன்பார்ந்த மன்னனே, நீ இன்னும் உன்னை அரசனாகவும், என்னை அடிமையாகவும் கருதினாயென்றால் நீ எனக்குக் கட்டளையிடலாம். நானும் உனது கட்டளைக்குக் கீழ்ப்படிவேன். இந்த வேறுபாடு தற்காலிகமானது. மரபாக வருகின்ற ஒன்று என்றும் என்னால் கூற முடியும். இதைத் தவிர வேறு எந்தவொரு காரணமும் நான் காணவில்லை. அப்படியாயின் யார் எஜமானன் யார் வேலைக்காரன்? அனைவருமே இயற்கை விதிகளினால் கட்டாயப்படுத்தப்படுகிறோம். இருந்தும் நீ உன்னை எஜமானனாகவும் என்னை வேலைக்காரனாகவும் நினைத்தால் அதனை ஏற்றுக் கொள்கிறேன். எனக்குக் கட்டளையிடு. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?

பதம் 5.10.13
உன்மத்த –மத்த-ஜடவத் ஸ்வ-ஸம்ஸ்தாம்
கதஸ்ய மே வீர சிகித்ஸிதேன
அர்த: கியான் பவதா ஸக்ஷிதேன
ஸ்தப்த-ப்ரமத்தஸ்ய ச பிஷ்டபேஷ:

உன்மத்த—உன்மத்தம்; மத்த—ஒரு குடிகாரன்; ஜட-வத்—அறிவீனன்; ஸ்வ-ஸம்ஸ்தாம்—எனது உண்மைச் சட்டபூர்வமான நிலையில் இருத்தல்; கதஸ்ய—எய்தப்பெற்றிருக்கும் ஒருவன்; மே—எனது; வீர—ஒ, அரசனே; சிகித்ஸிதேன—உனது நிந்தனையினால்; அந்த பொருள் அல்லது நோக்கம்; கியான்—என்ன; பவதா—உன்னால்; ஸக்ஷிதேன—அறிவுறுத்தப்படுவதன் மூலம்; ஸ்தப்த—மந்தமான; ப்ரமத்தஸ்ய—ஒரு பைத்தியக்காரனின்; ச—மேலும்; பிஷ்ட-பேஷ—அரைத்த மாவைப் போன்று.

அன்பார்ந்த மன்னனே, நீ என்னைப் பார்த்து “ஒ மூடனே, ஜடமே, பைத்தியக்காரனே நான் உன்னைத் தண்டிக்கப்போகிறேன் அப்போதுதான் உனக்குப் புத்தி வரும்” என்று கூறினார். இது தொடர்பாக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நான் ஜடமாகவும் செவிட்டு ஊமையாகவும் இருந்தபோதிலும் உண்மையில் நான் தன்னுணர்வு பெற்ற மனிதனாவேன் என்பதுவேயாகும். என்னைத் தண்டிப்பதால் நீ அடையும் நன்மை என்ன? உனது கணக்கின்படி நான் பைத்தியக்காரன் என்பது உண்மையானால் பிறகு உனது தண்டனை செத்த குதிரையை அடிப்பது போன்றதாகும். அதனால் பயனொன்றுமில்லை. ஒரு பைத்தியக்காரனைத் தண்டிக்கும்பொழுது, அவனது பைத்தியம் நீங்கிவிடுவதில்லை.

பதம் 5.10.14
ஸ்ரீ ஸுக உவாச

ஏதாவத் அனுவாத-பரிபாஷயா ப்ரத்யுதீர்த முனி-வர உபஸம-
ஸீல உபரதானாத்ம்ய-நிமித்த உபபோகேன கர்மாரப்தம் வ்யபனயன்
ராஜயானம் அபி ததோவாஹ

ஸ்ரீஸுக உவாச—சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; ஏதாவத்—அதே அளவு; அனுவாத-பரிபாஷயா—மன்னரால் முன்பு திரும்பத் திரும்பக் கூறப்பட்ட வார்த்தைகள்; ப்ரத்யுதீர்ய—ஒன்றன் பின் ஒன்றாக அளிக்கப்பட்ட பதில்கள்; முனி-வர—மாமுனிவர் ஜட பரதர்; உபஸம-ஸீல—தன்மையில் அமைதியும் சாந்தமும் உடையவராக இருந்தார்; உபரத—நிறுத்தப்பட்டது; அனாத்ம்ய—ஆத்மாவுடன் தொடர்பில்லாத விஷயங்கள்; நிமித்த—ஆத்மாவுடன் தொடர்பில்லாத பொருட்களின் அடையாளத்திற்கான அவரது காரணம் (அறியாமை); உபபோகேன—கர்மத்தின் விளைவுகளை ஏற்றுக்கொள்வதினால்; கர்ம-ஆரப்தம்—இப்போது எய்தப்பெற்ற செயலின்பயன்; வ்யபனயன்—முடிந்து; ராஜ-யானம்—அரசரின் பல்லக்கினை; அபி—மீண்டும்; ததா—முன்போலவே; உவாஹ—தொடர்ந்து சுமந்தார்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார் பரீட்சித்து மன்னரே! மன்னர் ரகூகனன் மிகச் சிறந்த பக்தரான மானுட பரதரைக் கடுமையான மொழிகளால் கண்டித்தபோது அமைதிமிக்க அம்மாமுனிவர் அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு முறையாகப் பதில் கூறினார். அறியாமை என்பது உட்கருத்தின் விளைவாக வருவது, பரதர் இத்தவறானக் கருத்தினால் பாதிக்கப்படவில்லை. அவரது இயற்கையான பணிவினால் அவர் தன்னை ஒருபோதும் உயர்ந்த பக்தனாகக் கருதியதே இல்லை. மேலும் அவர் தனது முன்னையக் கர்மவினைப் பயன்களை அனுபவிப்பதற்கும் தயாரகவே இருந்தார். பல்லக்கைத் தூக்குவதின் மூலம் தனது கடந்தகால தவறான செயல்களின் பலன்களைத் தான் அழித்துவிட்டதாக ஒரு சாதாரண மனிதனைப் போல் அவர் எண்ணினார். இவ்வாறு நினைத்தபடி அவர் அப்பல்லக்கைத் தூக்கிச் சென்றார்.

பதம் 5.10.15
ஸ சாபி பாண்டவேய ஸிந்து-ஸௌவீர-பதிஸ் தத்த்வ ஜிஜ்ஞா ஸாயாம்
ஸம்யக் ஸ்ரத்தயாதிக்ருத்தாதிகாரஸ் தத் த்ருதய-க்ரந்தி-மோசனம் த்விஜ –
வச ஆஸ்ருத்ய பஹு-யோக-க்ரந்த-ஸம்மதம் த்வரயாவருஹ்ய ஸிரஸா
பாத மூலம் உபஸ்ருத: க்ஷமாபயன் விகத-ந்ருப தேவ-ஸம்ய உவாச

ஸ—அவர் (மாமன்னன் ரகூகணன்); ச—மேலும்; அபி—உண்மையில்; பாண்டவேய—ஒ, பாண்டவ குலத்தில் சிறந்தோனே (பரீட்சித்து மகாராஜா); ஸிந்து ஸௌவீர-பதி—சிந்து மற்றும் சௌவீரப் பகுதியின் மன்னர்; தத்த்வ-ஜிஜ்ஞாஸாயாம்—முழு மெய்ப்பொருளைப் பற்றி வினவி அறிதல்; ஸம்யக்-ஸ்ரத்தயா—புலன்கள் மற்றும் மனதினை முற்றிலும் அடக்கியதிலான நம்பிக்கையினால்; அதிக்ருத-அதிகார—சரியான தகுதியை அடைந்தவர்; தத்—அது; ஹ்ருதய-க்ரந்தி—இதயத்திலுள்ள தவறானக் கருத்துக்களின் முடிச்சு; மோசனம்—அது நீக்குகிறது; த்விஜ-வச—அந்தணரின் (ஜட பரதரின்) வார்த்தைகள்; ஆஸ்ருத்ய—கேட்டு; பஹு-யோக-க்ரந்த-ஸம்மதம்—அனைத்து யோக முறைகள் மற்றும் அவர்களது சாத்திரங்களினால் அனுமதிக்கப்பட்ட; த்வரயா—மிக விரைந்து; அவருஹ்ய—கீழிறங்கி (பல்லக்கிலிருந்து); ஸிரஸா—தனது தலையினால்; பாத-மூலம்—தாமரைத் திருவடிகளில்; உபஸ்ருத—வணங்குவதற்காக பாதங்களில் வீழ்ந்து; க்ஷமாபயன்—தனது குற்றத்திற்காக மன்னிப்பு வேண்டினார்; விகத-ந்ருபதேவ-ஸ்மய—அரசன் என்னும் தவறான ஆணவத்தை விட்டு அதனால் வணங்கத் தக்கவராக; உவாச—கூறினார்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; ஒ, பாண்டவ குலத்தில் சிறந்தவனே! (பரீட்சித்து மன்னனே!) சிந்து மற்றும் சௌவீரப் பகுதியின் மன்னர் (மகாராஜா ரகூகணன்) முழு மெய்ப்பொருளைப் பற்றிய கலந்துரையாடலில் மிகுந்த விருப்பமுடையவர். இத்தகுதி கொள்கை உடைமையினால், பரதரிடமிருந்து, யோகஸித்தி முறைக்கான அனைத்து சாத்திரங்களினாலும் அங்கீகரிக்கப்பட்ட தத்துவார்த்தக் கொள்கைகளைக் கேட்டறிந்தார். இவையே இதயத்திலுள்ள முடிச்சின் இறுக்கத்தைத் தளர்த்துகிறது. தன்னை மன்னனாகக் கருதிய அவரது உலகியல் உணர்வு அழிந்தது. அவர் உடனே தனது பல்லக்கிலிருந்து விரைந்து இறங்கி, தான் ஒரு சிறந்த அந்தணருக்கு எதிராகக் கூறிய கடுமையான மொழிகளுக்கு இரங்கி மன்னிப்பு பெறுவதற்காக பரதரின் தாமரைத் திருவடிகளில் தனது தலை படுமாறு நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். பின்னர் அவர் பின்வருமாறு வழிபட்டார்.

பதம் 5.10.16
கஸ் த்வம் நிகூடஸ் சரஸி த்விஜானாம்
பிபர்ஷி ஸுத்ரம் கதமோ ‘ வதூத:
கஸ்யாஸி குத்ரத்ய இஹாபி கஸ்மாத்
க்ஷேமாய நஸ் சேத் அஸி நோத ஸுக்ல:

க த்வம்—யார் நீர்; நிகூட—நன்கு மறைத்துக் கொண்டு; சரஸி—இவ்வுலகில் திரிகின்றீர்; த்விஜானாம்—அந்தணர்கள் மற்றும் முனிவர்கள் மத்தியில்; பிபர்ஸி—நீரும் அணிந்திருக்கின்றீர்; ஸுத்ரம்—முதல் தர அந்தணர்கள் அணியும் முப்புரி நூல்; கதம—அது; அவதூத—உயர்ந்த மகான்; கஸ்ய-அஸி—யாருடையவர் (யாருடைய சீடன் அல்லது மைந்தன்); குத்ரத்ய—எங்கிருந்து; இஹ-அபி—இங்கு இந்த இடத்தில்; கஸ்மாத்—எந்த நோக்கத்திற்காக; க்ஷேமயா—நன்மைக்காக; ந—எமது; சேத்—அவ்வாறு; அஸி—நீர்; நஉத—அல்லது இல்லையா; ஸுக்ல—தூய சத்துவகுணம் நிறைந்தவர்; (கபில தேவர்).

மன்னர் ரகூகணன் கூறினார் ஒ, அந்தணரே பிறருக்கு யாரென்று தெரியா வண்ணம் நீர் உம்மை நன்கு மறைத்துக் கொண்டு இந்த உலகில் திரிந்து கொண்டிருக்கின்றீர். நீவிர் யாவர்? நீர் ஒரு கற்றறிந்த பிராமணரா? அல்லது முனிவரா? உமது மார்பில் முப்புரிநூல் உள்ளது. நீர் விடுதலை பெற்ற உயர்ந்த தத்தாத்ரேயர் மற்றும் அவரைப் போன்ற அறிஞர்களுள் ஒருவரா? நீர் யாருடைய சீடர் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? நீர் எங்கே இருக்கின்றீர்? எதற்காக இங்கு வந்தீர்? உமது இலட்சிய பயணம் எமக்கு நன்மை அளிப்பதற்காகவா? அருள் கூர்ந்து நீர் யாரென்பதை எனக்கு அறிவிப்பீராக.

பதம் 5.10.17
நாஹம் விஸங்கே ஸுர-ராஜு-வஜ்ரான்
ந த்ரயக்ஷ-ஸுலான் ந யமஸ்ய தண்டாத்
நாக்னி-அர்க-ஸோமானில-வித்தபாஸ்த்ராச்
சங்கே ப்ருஸம் ப்ரஹ்ம-குலாமனாத்

ந—இல்லை; அஹம்—நான்; விஸங்கே—அஞ்சுவது; ஸுர-ராஜ-வஜ்ராத்—தேவேந்திரனின் வஜ்ராயுதம்; ந—இல்லை; த்ரயக்ஷ-ஸுலாத்—சிவபெருமானின் கூர்மையான திரிசூலம்; ந—இல்லை; யமஸ்ய—மரணத்தின் அதிபதி யமராஜன்; தண்டாத்—தண்டனைக்கு; ந—இல்லை; அக்னி—அக்கினி; அர்க—சுட்டெரிக்கும் சூரிய ஒளி; ஸோம—சந்திரன்; அனில—காற்று; வித்தப—செல்வந்தனின் தலைவன் குபேரன்; தேவர்களின் பொக்கிஷதார்; அஸ்த்ராத்—ஆயுதங்களிலிருந்து; ஸங்கே—நான் அஞ்சுவது; ப்ருஸம்—மிகவும்; ப்ரஹ்ம-குல—அந்தணர்களின் கூட்டம்; அவமானாத்—குற்றம் செய்வதிலிருந்து.

போற்றுதற்குரிய ஐயனே, இந்திரனின் வச்சிராயுதத்திற்கோ அல்லது பாம்புபோல் வளைந்த கூர்மையான முனைகளையுடைய சிவபெருமானின் சூலாயுதத்திற்கோ நான் அஞ்சுவதில்லை. அதுபோல் மரண தேவனான யமராஜனின் தண்டனைக்கோ, தீ, காற்று, சூரியன், சந்திரன் மற்றும் குபேரனின் ஆயுதங்களுக்கோ கூட நான் அஞ்சுவதில்லை. ஆனால் ஒரு அந்தணரிடத்துக் குற்றம் செய்வதற்கே நான் மிகவும் அஞ்சுகிறேன்.

பதம் 5.10.18
தத் ப்ருஹி அஸங்கோ ஜடவன் நிகூட
விஜ்ஞான-வீர்யோ விசரஸி அபார:
வசாம்ஸி யோக-க்ரதிதானி ஸாதோ
ந ந: க்ஷமந்தே மனஸாபி பேத்தும்

தத்—ஆகையினால்; ப்ரூஹி—அருள் கூர்ந்து உரைப்பீராக; அஸங்க—பௌதீக உலகோடு தொடர்பில்லாதவர்; ஜட-வத்—செவிட்டு, ஊமை போன்று காட்சியளித்தவர்; நிகூட—முற்றிலும் மறைத்துக் கொண்டு; விஜ்ஞான-வீர்ய—ஆன்மீக அறிவியலில் முழு ஞானம் பெற்று அதனால் மிகுந்த சக்தியுடையவர்; விசரஸி—நீர் அலைவது; அபார—அளவற்ற ஆன்மீகப் புகழ் நிறைந்தவர்; வசாம்ஸி—உம்மால் உரைக்கப்பட்ட வார்த்தைகள்; யோக-க்ரதிதானி—யோக ஸித்தியின் முழு அர்த்தம் நிறைந்தது; ஸாதோ—ஒ, மாமுனிவரே; ந—இல்லை; ந—எமது; க்ஷமந்தே—இயல்பவர்கள்; மனஸா அபி—மனதினால்கூட; பேத்தும்—ஆராய்ந்து தெரிந்து கொள்வது.

வணங்குதற்குரிய ஐயனே, உமது மிகச் சிறந்த ஆன்மீக ஞானத்தின் பாதிப்பானது மறைத்து வைக்கப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. உண்மையில் நீர் உலகத் தொடர்புகள் அனைத்தையும் தொலைத்து விட்டு இறைச் சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கின்றீர். இதனைத் தொடர்ந்து ஆன்மீக ஞானத்தில் நீர் அளவற்று வளர்ந்திருக்கின்றீர். அப்படியிருக்க ஏன் ஒரு ஜடத்தைப் போல் அலைந்து கொண்டிருக்கின்றீர் என்பதை எனக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக. ஓ மாமுனிவரே யோக ஸித்திகள் அங்கீகரிக்கும் வார்த்தைகளையே நீர் பேசியிருக்கின்றீர். ஆயினும் நீர் கூறியவற்றை அறிந்து கொள்வது எமக்கு சாத்தியமல்ல. அதனால் அருள்கூர்ந்து அவற்றை விளக்குவீராக.

பதம் 5.10.19
அஹம் ச யோகேஸ்வரம் ஆத்ம-தத்த்வ-
விதாம் முனீனாம் பரமம் குரும் வை
ப்ருஷ்டும் ப்ரவ்ருத்த கிம் இஹாரணம் தத்
ஸாக்ஷாத் தரிம் ஜ்ஞான-கலாவதீர்ணம்

அஹம்—நான்; ச—மேலும்; யோக-ஈஸ்வரம்—யோக ஸித்திகள் தலைவர்; ஆத்ம தத்த்வ-விதாம்—ஆன்மீக விஞ்ஞானத்தை நன்கறிந்த அறிஞர்களின்; முனீனாம்—இம்மாமுனிவர்களின்; பரமம்—சிறந்த; குரும்—குரு; வை—உண்மையில்; ப்ரஷ்டும்—வினவுவதற்கு; ப்ரவ்ருத்த—ஈடுபடுதல்; கிம்—என்ன; இஹ—இவ்வுலகில்; அரணம்—மிகப்பாதுகாப்பான அடைக்கலம்; தத்—அது; ஸாக்ஷாத்-ஹரிம்—நேரடியாக முழுமுதற் கடவுளை; ஜ்ஞான-கலா-அவதீர்ணம்—அவரது முழு ஞானத்தின் அம்ச அவதாரமான கபிலதேவராகப் பிறந்திருக்கின்றவர்.

யோக ஸித்திகளின் தலைவராக நான் உம்மையே கருதுகிறேன். ஆன்மீக அறிவியலை நீர் நன்றாக அறிந்திருக்கின்றீர். கற்றறிந்த முனிவர்களுள் நீரே மிகச் சிறந்தவர். மனித சமுதாயம் அனைத்தின் நன்மைக்காகவும் நீவிர் பிறந்து ஆன்மீக ஞானத்தை அருள்வதற்காகவே நீர் வந்திருக்கின்றீர். நீரே கடவுளின் அவதாரமும், ஞானத்தின் அம்சமுமான கபில தேவரின் நேரடியான தூதரும் ஆவீர். ஆகையினால் நான் கேட்கின்றேன், ஒ, ஆன்மீக குருவே இவ்வுலகில் மிகவும் பாதுகாப்பான அடைக்கலம் எது?

பதம் 5.10.20
ஸ வை பவாம்லு லோக-நிரீக்ஷணார்தம்
அவ்யக்த-லிங்கோ விசரதி அபி ஸ்வி
யோகேஸ்வராணாம் கதிம் அந்த-புத்தி:
கதம் விசக்ஷித க்ரஹானுபந்த:

ஸ—முழுமுதற் கடவுள் அல்லது அவரது அவதாரமான கபிலதேவர்; வை—உண்மையில்; பவான்—நீவிர்; லோக-நிரீக்ஷண-அர்தம்—இவ்வுலகிலுள்ள மக்களின் தன்மைகளைக் கற்பதற்காக; அவ்யக்க லிங்க:—உமது உண்மை அடையாளத்தைக் காட்டாது; விசரதி—இவ்வுலகில் பயணித்துக் கொண்டிருக்கின்றீர்; அபிஸ்வித்—இவ்வாறோ; யோக-ஈஸ்வரணாம்—சிறந்த யோகிகள் அனைவரினும்; கதிம்—தன்மைகள் அல்லது உண்மை நடத்தைகள்; அந்த புத்தி—மாயைக்கு ஆளாகி ஆன்மீக ஞானக் குருடர்களானவர்கள்; கதம்—எவ்வாறு; விசக்ஷித—அறியலாம்; க்ருஹ-அனுபந்த—உலகத்து இல்வாழ்க்கையில் பற்றுடையவனாக நான் இருக்கின்றேன்.

முழுமுதற் கடவுளின் அவதாரமான கபிலதேவரின் நேரடிப் பிரதிநிதியாக நீர் இருப்பது உண்மையில்லையா? மக்களில் உண்மையான உண்மையற்ற மனிதர் யார் என்பதைச் சோதிப்பதற்காகவே நீர் உம்மை ஒரு செவிட்டு, ஊமை போல் ஆக்கிக் கொண்டுள்ளீர். இவ்வழியில் நீர் உலகில் திரிவதில்லையா? நான் இல்லற வாழ்வு மற்றும் உலகச் செயல்களில் மிகுந்த பற்றோடும் ஆன்மீக ஞானத்தில் குருடனாகவும் இருக்கிறேன். இப்போது ஒளி பெற வேண்டும் என்பதற்காக நான் உமது முன்னே நிற்கின்றேன். ஆன்மீக வாழ்வில் நான் எவ்வாறு வளர்ச்சி பெற முடியும்?

பதம் 5.10.21
த்ருஷ்ட: ஸ்ரம: கர்மத ஆத்மனோ வை
பர்துர் கந்துர் பவதஸ் சானுமன்யே
யதாஸதோதானயனாதி-அபாவாத்
ஸமூல இஷ்டோ வ்யவஹார மார்க:

த்ருஷ்ட—அனைவராலும் உணரப்படுகிறது; ஸ்ரம—சிரமம்; கர்மத—சிலவழிகளில் செயல்படுவதிலிருந்து; ஆத்மன—ஆத்மாவின்; வை—உண்மையில்; பர்து—பல்லக்கைத் தூக்கிக் கொண்டிருக்கும் ஒருவன்; கந்து—செல்லும் ஒருவனின்; பவத—உமது; ச—மேலும்; அனுமன்யே—நான் யூகிக்கிறேன்; யதா—அவ்வளவு; அஸதா—உண்மையல்லாத சிலவற்றுடன்; உத—தண்ணீரின்; அனயன ஆதி—கொண்டுவருவதின் மற்றும் இதுபோன்ற பிற செயல்களின்; அபாவாத்—இல்லாததிலிருந்து; ஸ-மூல—ஆதாரத்தின் அடிப்படையில்; இஷ்ட—மதிக்கப்படுதல்; வ்யஹார-மார்க—உணரக் கூடியது.

நீர் கூறியிருக்கின்றீர் “நான் இவ்வேளையினால் சிரமப்படவில்லை என்று. ஆத்மா உடலிலிருந்து வேறானதாக இருந்த போதிலும், உடல் உழைப்பினால் சிரமம் இருக்கத்தான் செய்யும். அதனால் அது ஆத்மாவின் சிரமமாகத் தோன்றுகிறது. நீர் பல்லக்கைத் தூக்கும்பொழுது ஆத்மாவிற்கும் நிச்சயம் உழைப்பு இருக்கிறது. இது எனது யூகமாகும். மேலும் எஜமானனுக்கும், சேவகனுக்கும் இடையே வெளிப்படும் புறத்தன்மைகள் உண்மையானதன்று என்றும் நீர் கூறியிருக்கின்றீர். அதனால் நடப்பு உலகத்தில் இவை உண்மையாக இல்லை என்ற போதிலும் இயலுலகின் உற்பத்திகள் உண்மையில் பாதிக்கக் கூடியவையே ஆகும். இது காணவும் உணரவும்படுகின்றது. புற உலகச் செயல்கள் நிலையற்றவை என்றாலும் அவை உண்மையல்ல என்று கூற முடியாது.

பதம் 5.10.22
ஸ்தாலி-அக்னி – தாபாம் பயஸோ ‘பிதாபஸ்
தத் – தாபதஸ் தண்டுல-கர்ப-ரந்தி:
தேஹேந்த்ரியாஸ்வாஸய-ஸன்னிகர்ஷாத்
தத் – ஸம்ஸ்ருதி: புருஷஸ்யானுரோதாத்

ஸ்தாலி—சமைக்கும் பாத்திரத்தில்; அக்னி-தாபாத்—நெருப்பின் உஷ்ணத்தினால்; பயஸ—பாத்திரத்தில் இடும் பால்; அபிதாப—சூடாகிறது; தத்தாபத—பால் சூடான காரணத்தினால்; தண்டுல கர்பரந்தி—பாலின் மத்தியில் இருக்கும் அரிசி வேகிறது; தேஹ-இந்த்ரிய அஸ்வாஸய—உடற்புலன்கள்; ஸன்னிகர்ஷாத்—உடன் தொடர்பிருக்கின்றதிலிருந்து; தத்-ஸம்ஸ்ருதி—சிரமம் போன்ற பிற துன்பம் அனுபவிப்பதின்; புருஷஸ்ய—ஆத்மாவின்; அனுரோதாத்—உடல், புலன்கள், மனம் என்று மொத்தமாக இணைவதின் காரணமாக உடன்படுவதிலிருந்து.

ரகூகணன் தொடர்ந்து கூறினார்: போற்றுதற்குரிய பெரியீரே, உடலின் பருமன், மெலிவு போன்ற இயல்புகள் ஆத்மாவின் தன்மைகள் அல்ல என்று நீர் கூறியிருக்கின்றீர். இது சரியன்று. ஏனெனில் வேதனை, இன்பம் என்னும் இயல்புகள் ஆத்மாவினால் நிச்சயம் உணரப்படுகிறது. ஒரு பானையில் பால் ஊற்றி அதில் அரிசியைப் போட்டு நெருப்பில் வைத்தால் ஒன்றையடுத்து மற்றொன்று தானே சூடேறுகிறது. அதுபோல் உடலின் வேதனை, சுகம் ஆகியவற்றால் புலன்கள், மனம், ஆத்மா போன்றவையும் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையிலிருந்து ஆத்மா முற்றிலும் தனித்து இருக்க முடியாது.

பதம் 5.10.23
ஸாஸ்டாவிகோப்தா நருபதி: ப்ரஜானாம்
ய: கிங்கரோ வை ந பினஷ்டி பிஷ்டம்
ஸ்வ-தர்மம் ஆராதனம் அச்யுதஸ்ய
யத் ஈஹமானோ விஜஹாதி அகெளகம்

ஸாஸ்தா—ஆளுனர்; அபிகோப்தா—தனயனின் நலன் விரும்பியாக தந்தை இருப்பது போல் குடிமக்களின் நலன் விரும்புபவர்; நரு-பதி—அரசர்; ப்ரஜானாம்—குடிமக்களின்; ய—அவர்; கிங்கர—கட்டளையை மேற்கொள்வோன்; வை—உண்மையில்; ந—இல்லை; பினஷ்டி-பிஷ்டம்—அரைத்த மாவையே அரைத்தல்; ஸ்வதர்மம்—சுதர்மம்; ஆராதனம்—வழிபடுதல்; அச்யுதஸ்ய—முழுமுதற் கடவுளின்; யத்—அது; ஈஹமான—செய்தல்; விஜஹாதி—அதிலிருந்து அவர்கள் விடுதலை பெறுதல்; அக-ஒகம்—எல்லாவிதமான பாவச் செயல்கள் மற்றும் தவறான செயல்கள்.

போற்றுதற்குரியப் பெரியவரே, நீர் அரசனுக்கும் குடிமகனுக்கும் உள்ள உறவு அல்லது எஜமானனுக்கும் சேவகனுக்கும் இடையிலுள்ள உறவு நிரந்தரமானதன்று என்கிறீர். ஆனால் அவ்வுறவு தற்காலிகமானதே எனினும், ஒருவன் அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அவனது கடமை மக்களை ஆட்சி செய்து சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்களை தண்டிப்பதாக இருக்கிறது. இவர்களைத் தண்டிப்பதன் மூலம் அவன் குடிமக்களை சட்டத்திற்குக் கீழ்படிய வைக்கிறான். மேலும், செவிட்டு ஊமையாக இருக்கும் ஒருவனை தண்டிப்பது தின்றதையே மீண்டும் தின்னுவது போலும், அரைத்த மாவையே அரைத்தது போலும் என்றும் அதனால் பயன் ஒன்றுமில்லையென்றும் முழுமுதற் கடவுளின் கட்டளைக் கிணங்க ஒருவன் அவனது சுதர்மத்தில் ஈடுபடும் பொழுது அவனது பாவச் செயல்கள் நிச்சயம் குறையும், ஆகையினால் ஒருவன் அவனது சுதர்மத்தில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட போதிலும் அவன் நன்மையே அடைகிறான். ஏனென்றால் அவன் தனது பாவச் செயல்கள் அனைத்தையும் இவ்வழியே வென்று விடுகிறான்.

பதம் 5.10.24
தன் மே பவான் நர-தேவாபிமான
மதேன துச்சீக்ருத-ஸத்தமஸ்ய
க்ருஷீஷ்ட மைத்ரீ-த்ருஷம் ஆர்த-பந்தோ
யதா தரே ஸத்-அவத்யானம் அம்ஹ:

தத்—ஆகையினால்; மே—எனக்கு; பவான்—நீவிர்; நர-தேவ-அபிமான-மதேன—அரசனின் உடல் பெற்றதினால் விளைந்த மதியீனத்தாலும், பெருமையினாலும்; துச்சீக்ருத—அவமதித்திருக்கிறாரா; ஸத்-தமஸ்ய—மனிதர்களிற் சிறந்த நீர்; க்ருஷீஷ்ட—அருள் கூர்ந்து காட்டுவீராக; மைத்ரீ-த்ருஷம்—ஒரு நண்பனைப் போல் கருதி உமது அளவற்ற கருணையினை; ஆர்த-பந்தோ—ஒ, துன்புறுவோரின் நண்பனே; யதா—ஆகையினால்; தரே—நான் அதிலிருந்து நிம்மதி பெறுவது; ஸத்-அவத்யானம்—உம் போன்ற மகானைப் புறக்கணித்து; அம்ஹ—பாவம்.

ஒ, துன்புற்றோரின் சிறந்த நண்பரே, நீர் கூறிய அனைத்தும் எனக்கு முரண்பாடாகவே தோன்றுகின்றது. உம்மை அவமதித்ததின் மூலம் மாபெரும் குற்றம் செய்துள்ளேன். ஒர் அரசனின் உடலைப் பெற்ற காரணத்தினால் நான் வீண் பெருமை, கர்வத்தோடு இருந்தேன். இதனால் நான் நிச்சயம் குற்றவாளியே ஆவேன். ஆகையினால் உமது அளவற்றக் கருணை நிறைந்த பார்வையினைக் காட்ட வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். எனக்காக இதனைச் செய்தால் உம்மை அவமதித்ததினால் விளைந்த பாவத்திலிருந்து நான் விடுதலை பெறுவேன்.

பதம் 5.10.25
ந விக்ரியா விஸ்வ-ஸுஹ்ருத்-ஸகஸ்ய
ஸாம்யேன வீதாபிமதேஸ் தவாபி
மஹத்-விமானாத் ஸ்வ-க்ருதாத் ஹி மாத்ருன்
நங்க்ஷ்யதி அதூரத் அபி ஸுலபானி:

ந—இல்லை; விக்ரியா—பொருள் மாற்றம்; விஸ்வ-ஸுஹ்ருத்—அனைவரின் நண்பரான முழுமுதற் கடவுள்; ஸகஸ்ய—உன்னுடைய நண்பனான; ஸாம்யேன—உமது மனதின் நடுநிலை நோக்கின் காரணமாக; வீத-அபிமேத—உடற் கருத்தினை முற்றிலும் துறந்தவர்; தவ—உமது; அபி—உண்மையில்; மஹத்-விமானாத்—ஒரு சிறந்த பக்தனை அவமதித்ததின்; ஸ்வ-க்ருதாத்—எனது செயலிலிருந்து; ஹி—உறுதியாக; மாத்ருக்—என்னைப் போன்ற ஒருவன்; நங்க்ஷ்யதி—அழிக்கப்படும்; அதூரத்—மிகவிரைவில்; அபி—நிச்சயமாக; ஸுலபாணி—சிவபெருமானைப் போன்று (ஸுலபாணி); ஆற்றல் மிக்கவரேனும்.

போற்றுதற்குரிய பெருந்தகையீர், நீரே, அனைத்து உயிர்களின் நண்பராக விளங்கும் முழுமுதற் கடவுளின் நண்பராவீர். நீர் அனைவரிடத்தும் சமநோக்குடையவர் என்பதோடு உடற்கருத்திலிருந்தும் விடுதலை பெற்றிருக்கின்றீர். உம்மை அவமதித்ததின் மூலம் நான் பெருங்குற்றம் செய்திருக்கின்றேன். உம்மை அவமதித்ததினால் நீர் எந்தவிதமான நன்மையோ அல்லது தீமையோ அடைந்துவிட மாட்டீர். நீர் உமது தீர்மானத்தில் உறுதியுடன் இருக்கின்றீர். ஆனால் நானோ ஒரு குற்றம் இழைத்திருக்கின்றேன். ஒரு வைணவனின் தாமரைத் திருவடிகளுக்கு இழைத்த குற்றத்தின் காரணமாக நான் சிவபிரானை ஒத்த ஆற்றல் பெற்றிருந்தாலும், தங்கள் முன் தோற்று விடுவேன்.


ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “மானுட பரதருக்கும் மன்னர் ரகூகணருக்கும் நிகழ்ந்த உரையாடல்” எனும் தலைப்பை கொண்ட பத்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare